பாரத மாலைகள்

0 comment

130 கோடி நபர்களோடு  மக்கள் தொகையில் உலகத்தின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா தான் பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் நாடு என்று இராய்ட்டர்சு அறிக்கை அறிவிக்கிறது. போரால் அடியுண்டு கிடக்கும் ஆப்கானிசுத்தானமும் சிரியாவும் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றனவாம்.

அறிக்கை வெளிவந்த பிறகு, ‘அது ஒன்றும் ஆதாரத் தகவல்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அறிக்கையில்லை; மேம்போக்கான கருத்துக் கணிப்புதான்; ஆகவே செல்லாது செல்லாது’ என்று பதறுகிறது நடுவண் அரசு.

2007இலிருந்து 2016க்குள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 83 விழுக்காடு உயர்ந்திருக்கிறதாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நான்கு வன்புணர்வுப் புகார்களாம். 2014-16க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பெருநகரங்களில், மற்ற குற்றங்களெல்லாம் 3-5% என்ற அளவே உயர்ந்திருக்கையில், வன்புணர்வுக் குற்றங்கள் 12-15% என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றனவாம். 18 வயதுக்கு முன்பாகத் திருமணம் செய்துவைக்கப்படும் குழந்தை மணப்பெண்கள் உலகத்திலேயே இந்தியாவில்தான் மிகக் கூடுதலாம்.

புள்ளிவிவரங்கள் இருக்கட்டும். இராய்ட்டர்சு அறிக்கை இல்லாமலும், புள்ளிவிவரக் குறிப்புகள் இல்லாமலும்கூட இவற்றை நாம் அறிவோம்தானே? நடப்பு என்ன என்பதென்ன நமக்குத் தெரியாததா? புள்ளிவிவரங்கள் பதிவுக்கு வந்த குற்றங்களை மட்டுமே கணக்கில் வைக்கின்றன. கணக்கில் வராத, புகார் செய்யப்படாத குற்றங்கள்? உள்ளூர் நாட்டாண்மைகளைத் தாண்டிப் பாதிக் குற்றங்கள் பதிவுக்கே வரமுடிவதில்லை. புகார் செய்யப்பட்ட குற்றங்களிலும் தண்டனை வாங்கித் தரப்படுவதில் முனைப்புக் காட்டப்படுவதில்லை. 2016ஆம் ஆண்டில் தண்டனை வாங்கித் தரப்பட்ட வழக்குகள் வெறும் 18.9%-தான்.

‘பாரத் மாத்தாக்கீ ஜே’ போடும் நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஒரு பொருட்டாகவே இல்லை. இந்தக் குற்றங்கள் தன்னில் ஒரு பகுதியை அழுகச் செய்துவிடும் என்ற சுரணை சமூகத்துக்கு இல்லை. உலகத்தின் மிகப்பெரிய சனநாயகத்தில், சட்டத்தை நெருங்கவிடாமல் பெண்களைத் தூரம் பாராட்டித் தள்ளி வைக்கிற அரசியல், சமய, சமூக அமைப்புகள் சிதைக. பொதுச் சுரணை பொலிக.

புள்ளிவிவரத்தோடு புள்ளிவிவரமாக மற்றொன்று: சுவிசு வங்கியில் ஒளிக்கப்பட்டிருக்கும் இந்தியப் பணத்தின் அளவு 50% அதிகரித்திருக்கிறதாம். மகிழ்கிற மாதிரி எதுவும் அதிகரிப்பதாகத் தெரியவில்லை.

பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஏறத்தாழ 500 ஏக்கர் காப்புக் காடுகளை அழித்தும் 20,000 ஏக்கர் வேளாண் நிலத்தை அழித்தும் நடு, மாநில அரசுகள் கொண்டு வரத் திட்டமிடும் பசுமைப் பாதைக்கு—பசுமைப் பாதையாம்; கண்ணில்லாதவனுக்குக் கண்ணுச்சாமி என்று பெயர் வைத்ததைப்போல—எதிர்ப்புகள் வலுக்கின்றன. எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நிறைவேற்றாமல் விடுவதில்லை என்று தமிழக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் கெடும், வேளாண்மை நிலைகுலையும் என்று யார் என்ன கதறினாலும் வளர்ச்சி என்ற பெயரில் முரட்டாட்டம் ஆடுகிறது தமிழக அரசு. நிற்க.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாகக் காரைக்குடிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிலம் எடுப்பதைச் சுற்றுச்சூழல் சீரழிவுக் காரணங்கள் காட்டித் தமிழக அரசு கடுமையாக மறுத்துரைத்திருக்கிறது. அத்தோடு நில்லாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நில எடுப்பு முயற்சிகளைத் தடைப்படுத்தும் விதத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது.

‘இது என்ன முரண்? காரைக்குடிக்கு ஒரு நிலைபாடு, சேலத்துக்கு ஒரு நிலைபாடா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உயர்நீதிமன்றம். இது கவனத்திற்கு.

‘பாரதமாலை பரியோசனைத் திட்டம்’ (Bharatmala Pariyojana Scheme) என்பது பாரத மாதாவுக்குச் சாலைகளால் மாலையிடும் நடுவண் அரசுத் திட்டம். 1,900 கிலோ மீட்டர் அளவுக்குச் சாலை நீட்டும் திட்டத்தில் முதல் பகுதி 800 கிலோ மீட்டர். இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு இல்லவே இல்லை. எந்தப் பகுதி பெரும் போக்குவரத்துக்கு உரியதோ அந்தப் பகுதிக்குத்தான் சாலை என்கிற மாலை சூட்டப்படும். அந்த வகையில் மிக அதிகமாகச் சரக்குகளை இறக்கிக்கொள்கிற மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டவை ஐதராபாத், புதுச்சேரி, பெங்களூரு, பெல்லாரி. மிக அதிகமாகச் சரக்குகளை ஏற்றிவிடுகிற மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டவை ஐதராபாத், புதுச்சேரி, பெங்களூரு, விசயவாடா, மும்பை ஆகியன. இதில் சேலம் இல்லை.

சென்னைப் மையப் போக்குவரத்து என்று கணக்கில் கொண்டாலும், சென்னையிலிருந்து கொல்கத்தா நெடுஞ்சாலையில் 48% போக்குவரத்து, மதுரை நெடுஞ்சாலையில் 14% போக்குவரத்து, பெங்களூரு நெடுஞ்சாலையில் 37% போக்குவரத்து. இதிலும் சேலம் இல்லை. எனில் சென்னை-சேலம் தடம் எப்படிக் கணக்கில் எடுக்கப்பட்டது? முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்; நடுவண் அரசின் அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றுக்கொண்டார் என்று திறந்து வைக்கிறார் சவுக்கு சங்கர். இருக்கட்டும்.

பெருமளவு நிலம் எடுக்க வேண்டியிருக்கிற இந்த மாதிரியான விவகாரங்களில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு வேண்டாமா? எடுத்தது கண்டார் இற்றது கேட்டார் என்று இராமன் வில்லொடித்த கதையாக வேலை செய்வது நியாயமா? என்று ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராசன் தொடுத்த வழக்கும், சாலைத் திட்டத்தின் காரணமாக ஏற்படப் போகிற சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் நில எடுப்பின் காரணமாக உருவாகப் போகிற வேலையிழப்பையும் ஆராயக் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் தொடுத்த வழக்கும் தொடர்ந்து கேட்கப்பட இருக்கின்றன.

சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. சாலைக்கு எதிராகக் கண்டனக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரியபோது காவல் துறை மறுத்ததால் அனுமதி வழங்க ஆணையிடக் கோரி உயர்நீதி மன்றத்தில் தமிழ் மாநிலக் காங்கிரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் ‘பசுமைச் சாலைத் திட்டத்தின் நோக்கம் தெரியாமல் அதை எதிர்க்கக்கூடாது; இந்தச் சாலை பட்டி, தொட்டியையெல்லாம் பெருநகரங்களுடன் இணைக்கும்; போக்குவரத்துக் காலத்தையும் குறைக்கும்’ என்று கருத்துரைத்து, அனுமதி வழங்கமுடியாது என்று வழக்கைத் தள்ளியிருக்கிறது உயர்நீதிமன்றம்.

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் சாவகாசமாக மிக்சர் தின்கிற கல்லுளிமங்கத்தனத்துடன் பேசாதிருக்கிறது மாநில அரசு. கேள்வி கேட்கிற உரிமை ஏதும் மக்களுக்கு இல்லை என்றும், மீறிக் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டிய கடமை ஏதும் தனக்கு இல்லை என்றும் கருதுகிற அரசு மக்களுக்கான அரசுதானா?