உச்சக்காட்சியைத் தவிர்த்து ஆதி முதல் அந்தம் வரை கதையை எழுதி வைப்பது ஒரு வகை. அதற்கு விக்கிப்பீடியாவும் தமிழும் தெரிந்தால் போதுமானது. படம் பார்க்கும் போது இன்ன இன்ன உணர்ச்சிகளும் சிந்தனைகளும் தோன்றின என எழுதுவது இன்னொன்று. சிந்தனைகள் கூட அல்ல, எண்ணச் சிதறல்கள். அவை அந்தப் படத்திலிருந்து பெற்றுக் கொண்டவையாகவோ நமது நனவிலியின் கூட்டுத் தொடர்ச்சியாகவோ கூட இருக்கலாம்.

கதையல்ல, காட்சித்துளிகளின் (shots) ஒருங்கிணைவே திரைப்படம். நிகழ்வுகளின் (incidents) தொகுப்பாக ஒரு திரைப்படத்தை அணுகுவதைக் காட்டிலும் தருணங்களின் (moments) மோதல்களாக அறிந்துணர்வதே தரமான அனுபவத்தை அளிக்கும். ஒரு சிறந்த படைப்பைக் குறித்து உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது தான். ஆனால் அதில் இருந்து பெற்றுக் கொண்ட உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தர்க்க ஒழுங்குடன் ஆராயலாம் அல்லது பரிபூரணத்தை நெருங்கி விடத் துடிக்கும் உன்னத கலைச்செயல்பாட்டில் அமிழ்ந்து கரைந்தும் போகலாம். ஒரு நல்ல விமர்சனத்தில் சிந்தனையும் உணர்ச்சியும் ஒன்றை ஒன்று நிகர் செய்பவை என்பது குறித்த தெளிவிருக்கும். சுருக்கமாக, படம் தந்த நிறைவை மொழியின் துணை கொண்டு மீட்டெடுத்தலே விமர்சனச் செயல்பாடு. கலையை பொருத்தமட்டில் நிறைவு என்பது சிதறடிப்பு.

நோவா பவ்ம்பாக் (Noah Baumbach) இயக்கிய அமெரிக்கத் திரைப்படம். 2012இல் வெளியானது என்றாலும் கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டது. ஒரு பெண்ணின் Quarter life Crisis குறித்த பொய்யான பிதற்றல்கள் மற்றும் பாவனைகள் ஏதுமின்றி அசலாய் எடுத்து வைத்திருக்கிறார்கள். இளமை நழுவியவாறு இருக்க கனவுகளைத் தடுமாற்றங்களுடன் துரத்திக் கொண்டிருப்பவளின் அல்லாட்டம் படம் முழுக்கத் தளும்புகிறது. வாழ்க்கை தீர்ந்துகொண்டிருக்கிறதே என இருபதுகளின் முடிவில் தொடங்கும் பதற்றத்தை எவராலும் எதனாலும் தணித்து வைக்க முடிவதில்லை. எதைச் செய்தாலும் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும் திருப்தியின்மை தீராத உளச்சோர்வை தர வல்லது. நம்முடைய  இலட்சியமும் கனவுகளும் வாழ்வுடனான சமரசத்திற்கு இணங்கி உயிரின் அலை ஓய்ந்து ஒழியும் காலம். வெகுளித்தனங்களின் இடத்தை  துளி இடமில்லாது பொறுப்புகள் நிரப்பிக் கொள்கின்றன. பறத்தலுக்கான யத்தனங்கள் அத்தனையும் சிறிய வட்டத்திற்குள் அடைக்கப்படுகின்றன. கற்பனைகளின் மன விரிவைப் புரிந்து கொள்ளாத சுற்றமும் நட்பும் அவற்றை வெறும் கற்பிதங்கள் எனக் கேலி செய்யும் போது நமது நம்பிக்கைகளில் தத்தளிப்பு உண்டாகிறது. ‘இது போதும்’ என்பவர்களையும் நிறைவின்றி அலைபவர்கள் நெருக்கித் தள்ளுகிறார்கள். போதும் என்பது தேக்கம் தான் என்பவர்கள் சரியாகத் தான் சொல்கிறார்களா எனச் சந்தேகமாக உள்ளது. படத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

எதிலாவது முழுமை கிடைத்து விடாதா எனும் நப்பாசையினால் தான் ஏதேதோ விஷயங்களை மனிதர்கள் முயன்றபடியே இருக்கிறார்கள். ‘செட்டில்’ ஆகி விட்ட மயக்கத்தில் உழல்பவர்களுக்கு எத்தகைய  மாயங்கள் புரிந்தாலும் இந்த வாழ்க்கை குறைபாடுடையது எனும் அறிதல் பீதியூட்டக் கூடியது. அதனாலேயே நவீன வாழ்வின் விரைவுக்கு தம்மை ஒப்புக்கொடுக்காமல் ஓர் இறகு போல மிதந்து வருபவர்கள் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள். இறகின் அலைக்கழிப்புகள் சாதாரணமானதல்ல. அது அசைந்தாடி அடங்கி ஆசுவாசம் கொள்ளும் நிலமும் நிரந்தரமற்றது என்கிற பட்சத்தில் மனம் விழுந்தால் எல்லாம் சரிந்து புதையும் நிலை. இழந்தவை ஏற்படுத்தும் மன உளைச்சலை விட இழக்கப் போகிறோம் எனும் தன்னுணர்வு தரும் நடுக்கம் தாள முடியாதது. இருக்கின்ற ஒரே பற்றுகோளும் கை நழுவிப் போகும் பதற்றத்தில் கொப்பளித்து பீறிடும் அழுத்தம் மண்டைக்குள் ஓராயிரம் கடப்பாரைகளை சொருகுகிறது. முட்டுச்சந்தில் தடுமாறி நிற்கிறவனை இழுத்துக் கொண்டு போய் முச்சந்தியில் அம்மணமாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதாவது அமைந்து விடுவது தான். அது இளமையில் வேண்டாம் என்பது மட்டுமே நம்முடைய பிரார்த்தனையாக இருக்க முடியும்.

படத்தில் வழக்கமான காதல் இல்லை. ஆனால் ஒவ்வொரு சட்டகத்திலும் பிரியத்தில் தோய்ந்த இலயிப்பு மின்னுகிறது. ஃபிரான்செஸும் சோஃபியும் அர்த்தப்பூர்வ சிநேகத்துடன் ஒருவரை ஒருவர் கண்டு கண்களை விலக்கிக் கொள்ளும்  தருணங்களில் அவ்வளவு உயிர்ப்பு! ஒரு பார்வையில் நமக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஒரே சட்டகத்தினுள் அடைபட்டுக் கிடக்கும் இருவரும் அவர்களுக்கிடையேயான மன விலக்கத்திற்குப் பின்னர் தனித்தனி ஃபிரேம்களில் காட்டப்படுகிறார்கள். அந்த விலகலில் வெளிப்படும் நுட்பமும் உணர்வுப் பரிமாற்றங்களும் சமீபத்தில் பார்த்திராதது. அப்போதும் ஃபிரான்செஸ் எவர் மீதும் குற்றஞ்சாட்டுவதில்லை. மனிதர்கள் இப்படித்தான் என்கிற சலிப்பு கூட ஏற்படாத பரிசுத்தம். அவளது சிரிப்பூட்டும் முயற்சிகளுக்குப் பின்னால் எப்போதும் மென்சோகம் மந்தகாசப் புன்னகையுடன் நம்மை ஆரத்தழுவிக் கொள்ள காத்திருக்கிறது. இந்தப் படம் வாழ்வின் அர்த்தமின்மையை காரணமாகக் காட்டி அதன் மீது பழிகள் சுமத்தி தப்பித்துக் கொள்வதில்லை. மாறாக, ஓயாது அனலடிக்கும் விதியுடனான சமரில் நிழலை அரவணைத்து எழுகிறது. பெரிய பெரிய கனவுகள் முன் நிதர்சனத்தின் போதாமையை உணர்ந்தவாறு உள்ளுக்குள் வெப்பத்தைச் சுமந்தலையும் மனிதர்களின் மாதிரி வடிவம் ஃபிரான்செஸ் ஹா!

கிரேட்டாவின் (Greta Gerwig) கதாபாத்திரத்தை எப்படியெல்லாம் வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பதை ஆச்சரியத்துடனேயே கவனித்துக் கொண்டிருந்தேன். எதிலும் பிணைத்துக் கொள்வது குறித்து அலட்டிக் கொள்ளாத இந்தத் தலைமுறை ஆட்களின் மனப்பான்மையை சரியாகத் தொட்டிருந்தார்கள். அது வெறும் பாவனை தான் என்பதால் விலகுந்தோறும் நெருங்கி வரும் விந்தையையும் உள்ளடக்கி இருந்தது. தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் முன்பு ஃபிரான்செஸால் தன்னை மறந்து ஆட முடிகிறது. மார்ஸல் ப்ரூஸ்ட்டின் நாவலை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக பாரீஸுக்கு கிளம்பிச் செல்லும் அவளது இலகுவான மனதின் விசையை பொறாமையுடன் தான் உணர்ந்தேன். அவள் விரும்பியது பாரீஸில் நடக்கவில்லை. தெருக்களில் இலக்கின்றி அலைந்து விட்டு சோர்வுடன் நியூ யார்க் திரும்பிய வேளையில் தாமதமாக ஒலிக்கும் எதிர்பார்த்திருந்த அழைப்பும் அதை உணர்ச்சியின்றி ஃபிரான்செஸ் எதிர்கொள்ளும் விதமும் தூக்கமற்ற இரவுகளின் விவரிக்க இயலாத வெறுமை.

பின்னணியில் Every 1’s  a winner பாடல் ஒலிக்க தனது கையாலாகத்தனத்தையும் தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தையும்  எதிர்கொள்ளத் தெரியாமல் செயலிழந்த பற்று அட்டையை வைத்துக் கொண்டு அவள் அங்குமிங்கும் ஓடும் பதைபதைப்பை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. கருப்பு வெள்ளை படங்களில் மட்டுமே திரண்டு வரக்கூடிய ஒரு காவிய சோகம் நியூயார்க் நகர வீதிகளில் உசாவுகிறது. அவளுக்கு இறுதியில் கிட்டியது வெற்றியா தோல்வியா என்பது அவரவர் நிலைப்பாடுகளைப் பொறுத்து மாறுபடும்.

எடுத்துக் கொண்டதை விட்டு இம்மியும் விலகாத கதை. இனி நெடுங்காலம் திரும்ப முடியாது என்பதை உணர்ந்து எங்கோ விடைபெற்றுக் கிளம்புகையில் மனசில் கவியும் துக்கம் இந்தப் படம்.