வரலாற்று நினைவேக்கங்கள்

by வெ.சுரேஷ்
0 comment

பாலகுமாரனின்  உடையார் நாவலில் ஒரு அழகான  இடம் உண்டு. ராஜராஜன் இறந்து விடுகிறான், தந்தையிடம், சற்றே பிணக்கு கொண்ட ராஜேந்திரன், இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வருகிறான். அங்கே அந்தப் பிணக்கைப் பற்றி நேரடியாக எதுவும் சொல்லாமல் ராஜ ராஜனின் மனைவி, பஞ்சவன் மாதேவி பாத்திரத்தின் மூலம் அதை கொணர்ந்திருப்பார் பாலா. அதில்,  பஞ்சவன் மாதேவி, ராஜேந்திரனிடம் கேட்கிறாள், “அப்பனே , இந்த வீட்டுக்கு நீ மூத்தவன் ஆனாயா” என்று, ராஜேந்திரன்  “இல்லை அம்மா இந்த வீட்டுக்கும் நாட்டுக்கும் அவரே என்றும் மூத்தவர்” என்று உடைந்து அழுகிறான். தமிழகத்தின் இந்த இரு மாபெரும் மன்னர்களுக்கிடையேயான உறவு, எப்போதும் சுமூகமாக இருந்ததில்லை என்ற ஊகம் உண்டு. அதை உருசுப்படுத்த நம்மிடம் மேலதிகத் தகவல்கள் இல்லை. ராஜராஜன் நீண்டகாலம் இளவரசுப் பட்டத்தில் இருந்தே ஆட்சிக்கு வந்தவன். ராஜேந்திரனுக்கும்  அப்படியே வாய்த்தது. ராஜேந்திரன், இளவரசனாக இருந்த காலகட்டத்தில், ராஜ ராஜனுக்கும் அவனுக்குமிடையே எந்த வகையான உரையாடல்கள் இருந்தன என்பதெல்லாம் நமக்கு தெரியவே தெரியாது. இவர்கள் என்றில்லை, மிகப் பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள், ஏன் உலக அளவிலேயே கூட அப்படித்தான். பாபர் நாமாவில் பாபர், ஹுமாயூனுக்கு சில அறிவுரைகள் வழங்குகிறார் என்று படித்த ஞாபகம் உள்ளது.

ஆனால், இதற்கெல்லாம் ஒரு அற்புதமான விதி விலக்காக அமைந்ததுதான், “Memoirs of Hadrian” எனும் நாவல். ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஹாட்ரியன் , தமக்கு சகோதரன் முறை ஆனவரும்,, பிற்காலத்தில் ரோமப் பேரரசின் தத்துவ ஞானிகளில் ஒருவராகவும் பேரரசனாகவும் இருந்தவருமான மார்கஸ் அரீலியஸுக்கு (Marcus Aurelius) எழுதிய கடித வடிவிலான அவரது சுய சரிதை. தம் வாழ்வின் அந்திமம் நெருங்குகிறது என்பதை அறிந்து கொண்ட ஹாட்ரியன் தன்னைப் பற்றி, கிரேக்க ரோம வரலாற்றைப் பற்றி, தத்துவங்கள், கலை, இலக்கியம்,நண்பர்கள் எதிரிகள், படையெடுப்புகள் ,வெற்றிகள் தோல்விகள்,தம் காதல்கள் என்று எதையும் மறைக்காமல், தம் அரசியல் வாரிசுக்கு எழுதிய கடிதமே Memoirs of  Hadrian  என்ற தலைப்பில்,மார்கரெட் யூர்செனர் (Marguirite Yourcenar) என்ற பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டு  சென்ற நூற்றாண்டில் பெரும் புகழ் பெற்றது.

ஹாட்ரியன் ரோமாபுரியின் ஐந்து  நல்ல சக்ரவர்த்திகளிலொருவர் என்று பெயர் பெற்றவர். அவரது காலம், ரோமபுரியின்  வரலாற்றில், ஏன்  உலக வரலாற்றிலேயே கூட மிக முக்கியமான ஒரு காலகட்டம். அதில் ரோமாபுரியின் கடவுள்கள் மீதான நம்பிக்கை வெகுவாக குறைந்திருந்த அதே சமயம் கிறித்தவமும் முழுமையாக வேரூன்றாத சமயம். கிறித்தவர்களை ரோமப் பேரரசு அணுகும் முறையில் மாற்றம் வந்த காலகட்டம். இந்த மாற்றத்தையும் ஹாட்ரியன் கொண்டுவருகிறார். அவர் காலத்துக்கு முன் மிகவும் துன்புறுத்தப்பட்டு வந்த கிறித்தவர்களுக்கு ஹாட்ரியன் சில சட்டங்கள் மூலம் நிவாரணம் அளிக்கிறார். உருசுவின்றி தண்டனை பெற்று வந்தவர்கள் தற்போது சந்தேகத்தின் பலனை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். ரோமப்பேரரசின், விரிவடையும் (Expansionist) பேராவலை சற்றே தணித்தவர் ஹாட்ரியன். வென்ற இடங்களில் மக்களை வெல்வதில் ஆர்வம் காட்டியவர்.

அவர்  தம் காலத்தில் சந்தித்த சவால்களை, அரசாள்வதில் உள்ள சிக்கல்களை, மனிதர்களை வென்றடுப்பதை, அதில் ஏற்படும் தோல்விகளை ரோமப்பேரரசின் எதிர்காலத்தை, அது மானுடகுலத்துக்கு விட்டுச் செல்லக்கூடிய விஷயங்களை தம் அரசியல் வாரிசிடம் பகிர்ந்து கொள்வதே இந்த கடித வடிவிலான நாவல். வரலாற்று ஹாட்ரியன் எழுதிய சுய சரிதை, உண்மையில் நமக்கு கிடைக்கவில்லை. அதைப்பற்றிய குறிப்புகளே கிடைத்துள்ளன. இந்நாவலை எழுதிய பெல்ஜிய பெண் எழுத்தாளர் மார்கரெட் யூர்சனர் (Margurite Yourcenar)  இந்நாவலுக்கு Historia Augusta மற்றும்  Historia Romana ஆகிய இரு புத்தகங்களையே வெகுவாக பயன்படுத்தியுள்ளார். இதைப்பற்றி சொல்லும் போது பழங்காலத்தைப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, அதன் உண்மைத்தன்மை மாறாமல் தருவதும் தம் நோக்கம் என்கிறார்.

ஹாட்ரியன் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த இன்றைய ஸ்பெயினின் இத்தாலிக்கா  எனும் இடத்தில் பிறந்து அங்கேயே தம் இளமைக் காலத்தைக் கழித்தவர். பின் கல்விக்காக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்கு சென்றவர். அதிலிருந்து அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஏதென்ஸின் காதலராகவே இருக்கிறார். ரோமாபுரியின் சக்கரவர்த்தியாக  இருந்தும் தம்மை ஒரு கிரேக்கராகவே அதிகம் உணர்ந்தவர் என்று கூடச் சொல்லலாம். தம் 60 ஆண்டுகால வாழ்வில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏதென்சு நகரத்துக்கு செல்கிறார். துவக்கத்தில், ஆரூடத்தில் (Astrology) நம்பிக்கையம் ஆர்வமும் கொண்டவராக இருந்த ஹாட்ரியன் பின், கிரேக்கக் கலாச்சாரம், கலைகள், தத்துவம் மீது பெரும் ஆர்வம் கொண்டு தம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்தவர். ரோம ராணுவத்தில் சேர்ந்து, முதன் முதலாக தார்ஸியா எனும் பகுதியை வெல்வதற்கான போரில் ஈடுபடுகிறார். அதிலிருந்து பேரரசர் ட்ராஜனுக்கு நெருக்கமானவராக ஆகிறார். அடுத்து, சர்மாஷியா (இன்றைய ஈரானின் ஒரு பகுதி) எனும் பகுதி. போர் அவருக்கு மிகக்  கசப்பான அனுபவங்களைத் தருகிறது. இதற்கு அடுத்து பார்த்தியா (இதுவும் இன்றைய இரான் மற்றும் ஈராக்கின்  ஒரு பகுதி) எனும் பகுதியை கைப்பற்ற நடக்கும் போரில் டிராஜனின் ரோமப் படைகள் தோல்வியடைகின்றன. அந்தப் போரின் தோல்விக்குப் பின்னே ட்ராஜன் ஹாட்ரியனைத் தம் வாரிசாக அறிவிக்கிறார். கொஞ்ச காலத்திலேயே இறந்தும் விடுகிறார்.

ஹாட்ரியன் தம் 40வது வயதில் ஆட்சிப் பீடத்தில் ஏறி கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ஆட்சி செலுத்துகிறார். சர்மாஷியப் போரின் போது  அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் போரின் கொடூரங்களில் வெறுப்புற்று தம் ஆட்சிக் காலத்தில், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பை நிறுத்தியே வைத்திருந்தார். வென்ற பகுதிகளில் அமைதி நிலவவும் மக்களின் மனதை வெல்லவும் தம் கவனத்தை செலுத்தினார். இங்கிலாந்தில் இன்றும் இருக்கும் ஹாட்ரியன் சுவர் இவரால் கட்டப்பட்டது தான். ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும் என்ற (The Decline and Fall of Roman Empire) மிகப்பிரபலமானதும் கொண்டாடப்படுவதுமான புத்தகத்தை எழுதிய எட்வார்ட் கிப்பன் (Edward Gibbon) பரந்த அறிவும் பொறுமையும் நிதானமும் அறிவுசார் வேட்கையும் அமையப் பெற்ற ஹாட்ரியனின் அரசாட்சிக் காலம், மனிதகுலம் அனுபவித்த மகிழ்ச்சி மிகுந்த குறுகிய காலங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகிறார்.

இந்த நாவலில் இவையெல்லாம் நேரடியாக செல்லப்படுவதில்லை. இந்த நிகழ்வுகளின் மூலமாக தாம் பெற்ற அனுபவங்களை, மன உணர்வுகளை, அவர் தம் வாரிசான, மார்கஸ் அரீலியஸுடன் பகிர்ந்து கொள்ளும் கடிதம் மூலம் சொல்லப்படுகிறது. தன்  இளம் காதலனான ஆன்டினுஸ் (Antinous ) (ஆம் காதலன் தான். கிரேக்கத்திலும் ரோம சாம்ராஜ்யத்திலும் ஓரின உறவுகள் தவறாகப் பார்க்கப்படவில்லை. மாறாக மிக இயல்பான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் இடையே தான் அறிவுப்பூர்வமான முழுமையான உறவு அமைய முடியும் என்றும் பெண்ணுடனான உறவு வெறுமனே சந்ததி வளர்க்க மட்டுமே என்று எண்ணம் மேலோங்கி இருந்த  காலம் அது) நைல் நதியில் மூழ்கி இறந்த பின் அவனது பிரிவால் இவர் அடையும் துயர் பின் ஆன்டினூஸை தெய்வமாக்கி அவனுக்கு வழிபாடுகள் அமைப்பது என்று ஹாட்ரியனின், வாழ்வின் அத்தனை அம்சமங்களும் இதில் சொல்லப்படுகிறது. ரோமப்பேரரசரின் ஐந்து நல்ல பேரரசரர்களிலொருவராக ஹாட்ரியன் மதிக்கப்படுபவராக இருந்தாலும் தாம் ஆட்சிக்கு வந்த புதிதில் தம் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள, சில செனட்டர்களை கொல்ல  வேண்டியிருப்பதையும் தம் இறுதிக்காலத்தில், தாம் விரும்பிய ஆன்டினினஸ் பயஸ்,மற்றும் மார்கஸ் அரீலியஸ் (Antininus Pius Marcus Auerilies) இருவரும் தமக்குப் பின் ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர்களாக வருவதற்காகவும் சில கொலைகளை செய்ய வேண்டியவருவதையும் வதையும் மறைக்காமல் குறிப்பிடுகிறார்.

முடியாண்ட மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர் எனும்படி தம் உடலை வாழ்நாள் முழுவதும் கவனித்துப் பேணி வந்த ஹாட்ரியன் முதுமையாலும் போர்களினாலும் இதர பழக்கங்களினாலும் அது மெல்ல மெல்ல சீரழிவதையும் உடலைத்  தாண்டிய  ஒன்று அதை நுட்பமாக கவனிப்பதையும் அழகாகப் பதிவு செய்கிறார்.

இந்த நாவலின் இணைப்பாக இது எழுதப்பட்ட நோக்கத்தையும் விதத்தையும் விவரிக்கும் ஆசிரியர் உரையான Reflections on the Composition இணைந்திருப்பது மிகச் சிறப்பான அம்சம். 1951ல் ஃபிரெஞ்சு மொழியில் வெளியான இந்த நாவல், உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் இது படிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து எந்த தமிழ் எழுத்தாளரும் இந்த நாவலைக் குறிப்பிட்டு பேசியோ எழுதியோ நான் பார்த்ததில்லை. வரலாற்று நாவல்களை பற்றிய சில விவாதங்கள் முகநூலில் எழும்போதெல்லாம் எனது அமெரிக்க நண்பர், திரு.அரவிந்தன் கண்ணையன் ஒருவர் மட்டும்தான் இந்த நாவலைப் பற்றி தொடர்ந்து குறிப்பிட்டு வருபவர். (அவரேதான் இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பியும் வைத்தவர். அவருக்கு என் நன்றிகள்) இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு அற்புதமான ஒன்று என்றே சொல்ல வேண்டும். பல வரிகள் கவித்துவம் மிகுந்தவை. ஆழமாக சிந்திக்க தூண்டுபவை.சில வரிகளை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்.

“Like everyone else I have at my disposal only three means of evaluating human existence: the study of self, which is the most difficult and most dangerous method, but also the most fruitful; the observation of our fellowmen, who usually arrange to hide secrets where none exist; and books, with the particular errors of perspective to which they inevitably give rise.

My hunger for power was like the craving for love, which keeps the lover from eating or sleeping, from thinking or even from loving as long as certain rites remain unperformed. The most urgent tasks seemed vain when I was not the free master over decisions affecting the future; I needed to be assured of reigning in order to recapture the desire to serve.

Of all our games, love’s play is the only one which threatens to unsettle our soul, and is also the only one in which the player has to abandon himself to the body’s ecstasy. …Nailed to the beloved body like a slave to a cross, I have learned some secrets of life which are now dimmed in my memory by the operation of that same law which ordained that the convalescent, once cured, ceases to understand the mysterious truths laid bare by illness, and that the prisoner, set free, forgets his torture, or the conqueror, his triumph passed, forgets his glory.”

ஹாட்ரியனுக்கும் ஆன்டினூஸுக்குமான உறவை விவரிக்கும் விதம் இந்த நாவலின்  மிகச்சிறந்த பகுதி  என்று சொல்வேன். ஆன்டினூஸின் இறப்பு,  மிகப் பூடகமாகவும் நுட்பத்துடனும் சொல்லப்படுகிறது. கிரீஸில் ஒரு ஒராக்கிளின் முன்கணிப்பு ஹாட்ரியனுக்கு கவலை தரும் விதத்தில் அமைகிறது. ஹாட்ரியன், அவருடைய மனநிலைக்கேற்ப ,அதை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. ஆனால், இளைஞனான ஆன்டினூஸ் அதை பூரணமாக நம்பி விடுகிறான். ஹாட்ரியனுக்கு வரவிருக்கும் ஆபத்தை தன்  உயிர்த்தியாகத்தின் மூலம் தவிர்க்க விழைந்து, நைல் நதியில் விழுந்து உயிர்த்தியாகம் செய்கிறான். அந்நிகழ்ச்சி நடந்தவுடன் ஒருவித  சமநிலையுடன் அதை எதிர்கொள்ளும் ஹாட்ரியன், நாட்கள் செல்லச் செல்ல  ஆன்டினுஸின் பிரிவை தாள முடியாமல் தவித்து, ஆன்டினுஸ்ஸையே ஒரு தெய்வமாக்கி கோவில் எடுப்பிக்கிறார். இதில் நம் முன்னே உள்ள கேள்வி ஆன்டினுஸினால் ஹாட்ரியனுக்கு வரவிருந்த துன்பத்தைத் (இச்சம்பவத்துக்குப் பின் ஹாட்ரியனும் அதிக நாட்கள் வாழ்வதில்லை) தவிர்க்க முடிந்ததா என்பதே. உண்மையில், அவனது பிரிவுதான் ஹாட்ரியனுக்கு நேரும் அப்பெரும் துன்பம் என்பதைத்தான் ஓராக்கிள்  கூறியதோ எனும் கோணத்தை படிப்பவரின் மனதுக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர்.

இதில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அநேகமாக இந்தப் புத்தகம் வெளியான காலகட்டத்தில்தான் தமிழில் பிரமாண்டமான வரலாற்றுத் தொடர்கள்  எழுதப்பட்டன. பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகியவை இந்த நாவலுக்கும் முன்னால் 1941-46 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. பொன்னியின் செல்வன் நாவலை இதற்கு சமகாலத்தது என்று சொல்லலாம் (1951-54). சாண்டில்யன் மற்றும் இன்னும் பல சரித்திர நாவலாசிரியர்களின்  படைப்புகள் இதற்கு பின்பு வந்தவை. அவை அனைத்துக்கும் இந்த நாவலுக்கும் உள்ள வேற்றுமைகள் பிரமிக்கத்தக்கது. நம் வரலாற்று நாவல்கள் அனைத்துமே விதி விலக்கின்றி, கேளிக்கை வகையில் அமையும் சாகசக் கதைகள். கட்டிளம் காளைகளும் கட்டழகிகளும் தமிழர் வீரம், மானம், பெருமை என்று பேசும் தன்மையுடையவை. இந்த நாவலில் வருவது போல ஏதாவது ஒன்றிலாவது ஒரு பேரரசை நிறுவதையும் அதைக் கட்டி காப்பதையும் அதில் உள்ள சவால்களையும் பற்றிய ஒரு பேரரசனின் அக உணர்வுகள் பதிவாகியுள்ளனவா என்று நினைத்துப் பார்க்கிறேன். ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பொன்னியின் செல்வனில் சில இடங்களில் இம்மாதிரி பகுதிகளுக்கான எத்தனம் இருப்பதை பார்க்க முடியும். ஆனால், முழுமையாக இல்லை. அதே போல, சாண்டில்யனின் பல்லவ திலகம் நாவலில் வரும் தந்தி வர்ம பல்லவனில் ஹாட்ரியனின் சாயல் இருப்பதை நான் காண்கிறேன். ஆனால், அந்த நாவல்களின் நோக்கமே வேறு. இந்த நாவலின் நோக்கம் வேறு, இதில் இருப்பது கடந்த காலத்தைப் பற்றிய நேர்மையான மறு உருவாக்கம் மட்டுமல்ல. அதைப் பற்றிய ஒரு அசலான பிரதிபலிப்பும் தான் வாழ்ந்திருந்த , உலகப் போர்களுக்குப் பின்னான ஐரோப்பியாவில் நிகழ்காலம் தன்னில் உருவாக்கிய மனநிலையும் ஆகும். ஆனால், நமது வரலாற்று நாவல்கள்  நம் கடந்த கால  பெருமையை மட்டுமே முன்வைப்பதாகவும் அதில் உள்ள வரலாற்று உண்மைகளைக் கூட சமரசங்களுடன் சித்தரிப்பதாகவுமே அமைந்துவிட்டன. குபரா எழுதிய சில வரலாற்று சிறுகதைகள் (ஆத்ம சிந்தனை தொகுப்பு) இந்தப் போக்குக்கு சற்று மாறாக அமைந்திருக்கின்றன . அவற்றை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று நினைத்த்துக் கொள்கிறேன்..

இங்கே நான் முதலில் சொன்ன பாலகுமாரனின் உடையார் நாவலை நினைவு கூர்வோம். தமிழின் வரலாற்று நாவல்களின் காலம் முடிந்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் பாலகுமாரன், தமது உடையார் நாவலில், ஹாட்ரியனின் நினைவுகள் நாவலில் உள்ள சில அம்சங்களைத் தொட முனைந்திருக்கிறார். (அவர் Memoirs  of Hadrian நாவலை படித்திருக்கிறாரா  என்று தெரியவில்லை. படித்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. கல்கியும் சாண்டில்யனும் கூட) ஆனால், இந்த நாவலோடு ஒப்பிடுகையில், அது ஒரு அரை மனதான தோல்வியடைந்த முயற்சி என்று தான் சொல்லவேண்டும். அங்கு ராஜ ராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் உள்ள மனத்தாங்கல் கோடிக் காட்டப்படுகிறது. ஆனால், அதை மட்டுமே வைத்து மிக அற்புதமாக வந்திருக்கக்கூடிய தருணங்களை பாலகுமாரன் தவறவிட்டுவிடுகிறார். (அது அவரது நோக்கம் அல்ல என்பதும் உண்மைதான். ஆனால், இப்போது நான் ஹாட்ரியனின் நினைவலைகளைப் படிக்கும்போது, நம் வரலாற்று நாவலாசிரியர்கள் தவறவிட்டதை (குறிப்பாக பாலகுமாரன்) எண்ணத் தோன்றுகிறது.

இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. அசோகச் சக்ரவர்த்தியையோ, ராஜ ராஜனையோ, ராஜேந்திரனையோ வைத்து இது போன்ற ஒரு நாவலை நம் நாவலாசிரியர்கள் முயற்சிக்கலாம். அதற்கு முன் இந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது முக்கியமானது. இதுவரை மொழிபெயர்ப்பு வந்ததாக எனக்குத் தெரியவில்லை. அது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.