அஞ்சலி – அஞ்சுகச் செல்வன்

0 comment

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி காலமாகிவிட்டார். மிக எளிய பின்புலத்தினர்; சமூக, அரசியல் இயக்கங்களில் பலன் சார்ந்து அல்லாமல் உணர்வு சார்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவற்றாலேயே தன்னைக் கூடுதலாகவும் கூர் தீட்டிக் கொண்டவர். போராட அஞ்சாதவர். மூலபலம் காக்கப் பின்வாங்கத் தயங்காதவர். இராக் கொத்திக் கூகையைப் பகல் வெல்லும் காக்கை போலக் காலம் கருதிக் காத்திருக்கத் தெரிந்த அறிவினர்.

எப்போதும் ஒற்றைமையே பேசுகிற இந்தியத் தேசியத்துக்கு மாற்றாகத் திராவிடத் தேசியம் பேசி மற்றைமை முன்வைத்தவர். திராவிடத் தேசியம் என்ற பெயரில் பேசினாலும் தமிழ்நாட்டின் கரைகளுக்குள்ளேயே ததும்பிக் கொண்டிருந்தவர். தமிழ் அடையாளத்தையே தன் அடையாளமாகப் பூண்டு கொண்டவர்; மற்றவர்க்கும் அதையே பரிந்துரைத்தவர். தமிழ் மறுமலர்ச்சி இயக்கக்காரர்கள் ஆறுமுக நாவலர் வழியில் தமிழைச் சைவ சமயக் கற்றூணோடு கட்டிப் பிணைக்க முயன்று கொண்டிருந்தபோது, அண்ணாவழித் திராவிட இயக்கம் தமிழைச் சமயத்திடமிருந்து விடுவித்துப் பொது நிலைக்குத் தூக்கியது. அதற்குக் கருவி நூல்களாகத் தமிழ்த் தேசியம் பேசும் முதல் நூலாகிய சிலப்பதிகாரத்தையும் தமிழ்ப் பண்பாடு காட்டும் சங்க இலக்கியத்தையும் பயன்படுத்தியவர். பூம்புகார் செய்தவர்; சங்கத் தமிழுக்கு உரை செய்தவர்.

பகவற் கீதையை இந்தியா மொத்தத்துக்குமான அரசியல் நூலாக வடக்கு முன்மொழிந்து கொண்டிருந்தபோது, அதை வழிமொழிய மறுத்துத் தமிழகத்தின் அரசியல் நூலாகத் திருக்குறளை முன்மொழிந்தவர். அந்த முயற்சியில் குறளோவியம் வரைந்து குறளுக்கு உரை எழுதியவர். வள்ளுவர் கோட்டம் நிறுவியவர். வள்ளுவனை குமரியில் ஐயனாக்கியவர்.

அரசியலில் பல்வேறு சாதனைகள் செய்தவர், தமிழ்நாட்டைப் பல்வேறு வழிகளில் முன்னேற்ற முயன்றவர் என்பதைத் தாண்டி, எல்லாச் சமூகத்தினரும் அதிகாரத்தில் பங்குபெறுவதை உறுதிப்படுத்தித் தமிழ்ச் சமூகம் பதற்றப்படாமல் சனநாயகப்படுமாறு செய்தவர்.

செவி கைக்கும் சொல் பொறுத்தவர். ‘கருவின் குற்றம்’ என்று நாஞ்சில் மனோகரன் எழுதியதையும், ‘இதைவிடக் கலைஞர் வேறு தொழில் செய்து பிழைக்கலாம்’ என்று வைகோ பேசியதையும் பொறுத்துக்கொண்டவர். எவர் எவ்வளவு ஏசினாலும் ஏசியவர்களோடு தொடர்ந்து பேசியவர். கூசுதலும் குனிதலும் அல்ல, பேசுதலும் பெறுதலுமே சனநாயகம் என்று கண்டு வைத்திருந்தவர்.

‘பிறப்பின் அடிப்படையில் எதிரிகளால் மட்டுமல்ல, நண்பர்களாலும் மிக அதிகமாகக் கசையடிபட்டவர் கலைஞர். இந்த இழிவுக்கு எதிராக, இந்தச் சமூகத்தால் தவிர்க்க முடியாத வரலாறாகத் தன்னை மாற்றிக்கொள்ள முற்பட்டவர் அவர். தந்தையைக் காட்டிலும் தாயையே அவர் அதிகம் முன்னிறுத்தியிருக்கிறார். அதன்மூலம் இந்தச் சமூகத்துக்கு அவர் சொல்ல நினைத்த செய்திகள் நிறைய’ என்று ஸ்டாலின் ராஜாங்கம் ஓர் அஞ்சலிக் குறிப்பு எழுதியிருக்கிறார். கச்சிதம்.

‘இனத்துக்கே இடைஞ்சல் வந்த வேளைகளில் இணங்கிப் போக முயன்றவர் இல்லையா அவர்?’ என்று குற்றம் சாட்டப்படலாம். ‘இணங்கிப் போதல் சனநாயகத்தின் பண்பு’ என்று அமைதி சொல்லாக்கப்படலாம். ‘இணங்கிப் போனது இனநலத்துக்காகவா? தனிநலத்துக்காகவா?’ என்று எழும் புறுபுறுப்பைப் புறங்கையால் தள்ளிவிட முடியாது தான். மனிதர்கள் எப்போதும் பிழை மலிந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதற்குக் கலைஞர் கருணாநிதி விலக்கில்லை. ஆனால் விட்ட பிழைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தாலும், பிழைகளை மீறிப் பெரிய ஆளுமை அவர். அடித்தளத்திலிருந்து எழுந்து வந்து, தன்னைத் தானே வடிவமைத்துக்கொண்டு, தானும் தான் நேசித்த சமூகமும் பெற வேண்டிய எல்லாவற்றையும் போராடிப் பெற்றவர். போற்றுவார் போற்றுக.