அழிந்துபோன நூல்களும் நகரங்களும்

by கணியன் பாலன்
0 comment

அழிந்துபோன நூல்கள்:    

பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, பரிபாடல், சிற்றிசை, பேரிசை, சிற்றிசைச்சிற்றிசை, பண்டைய இசை நுணுக்கம், பேரிசை, யாழ்நூல், அகத்தியம், பரதம், செயிற்றியம், முறுவல், கூத்துவரி, கூத்தநூல், நுண்ணிசை, குருகு ஆகிய 20 நூல்களும் அழிந்து போயின. இவை சங்க செவ்வியல் இலக்கியகால, சங்கம் மருவியகால நூல்கள் எனலாம். காமவிண்ணிசை, மகிழிசை, குணநூல், சயந்தம், பிந்தைய இசை நுணுக்கம், இசைத்தமிழ் 16 படலம், மதிவாணர் நாடகத்தமிழ், பஞ்சபாரதீயம், வியாழமாலை அகவல், பரதசேனாபதீயம், வெண்டாளி, இந்திரகாளியம், பன்னிருபடலம் ஆகிய 13 நூல்களும் அழிந்து போயின. இவை பிற்கால நூல்கள் எனலாம். பண்டைய நூல்களில் பஞ்சமரபு மட்டுமே கிடைத்துள்ளது. இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு ஆகும்(1).

அழிந்துபோன கலை, இலக்கிய நூல்கள் குறித்தத் தரவுகள் ஓரளவு கிடைக்கின்றன. ஆனால் அழிந்துபோன தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் குறித்து எதுவும் அறிய இயலவில்லை. பண்டைய காலப் பூதவாதம், எண்ணியம், சிறப்பியம், நியாயவாதம், ஆசிவகம் போன்ற பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் சார்ந்த நூல்கள் அனைத்தும் அழிந்து போயின. பண்டைய காலத்தில் தமிழில் இருந்த பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப நூல்களும் இல்லாதுபோயின. இந்நூல்கள் அனைத்தும் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. சான்றாக சரக சம்கிதை என்கிற மருத்துவ நூலும், பரத நாட்டிய சாத்திரம் என்கிற பரதநாட்டிய நூலும் வடமொழியில் உள்ளன. இவை தமிழில் இருந்து வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட  வழிநூல்கள் ஆகும்(2). ஆனால் இந்நூல்கள் தற்பொழுது தமிழில் இல்லை. பொருள்முதல்வாத மெய்யியல் குறித்துப் பேசியதால் தமிழில் இருந்த இந்நூல்களின் மூலநூல்கள் அழிந்து போயின. இந்நூல்கள் போன்றே தமிழில் இருந்த பல அறிவியல், தொழில்நுட்ப நூல்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. தொல்காப்பியத்தில் வைதீகம் சார்ந்த பல இடைச் செருகல்கள் இருந்ததால் அந்நூல் அழியாது தப்பியது எனலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6ஆம் நூற்றாண்டுக்குள் தமிழில் இருந்த பெரும்பாலான பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவ நூல்களும், பண்டைய பல்வேறுபட்ட அறிவியல், தொழில்நுட்ப நூல்களும் இல்லாது போயின. இவைகள் அழிந்து போயின என்பதற்குச் சான்றாக “அகத்தியத் தருக்கச் சூத்திரம்” என்கிற 20 நூற்பாக்கள் அடங்கிய ஒரு தருக்கக் குறுநூல் கிடைத்துள்ளது. இந்நூற்பாக்கள் குறள் போன்று இரு அடிகளைக்கொண்டவை. இக்குறுநூல் பண்டைய தமிழர்களின் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் குறித்துப் பேசுகிற ஒரு அரிய தத்துவ நூல் ஆகும்(3). இந்நூலின் காலத்தை அறிய இயலவில்லை. பண்டைய காலத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் தத்துவ நூல்கள் தமிழில் இருந்தன என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாக உள்ளது எனலாம்.

வடமொழி நூலான தமிழ்ப் புராணநூல்கள்:

பண்டைய தமிழகத்தில் மாபுராணமும், பூதபுராணமும் இருந்ததாக இறையனார் களவியலுரைப் பாயிரம் கூறுகிறது. அத்தமிழ்ப் புராண நூல்கள் குறித்து எதுவும் அறிய இயலவில்லை. தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட வடமொழி நூல்கள் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டதென்று சொல்ல முடியாதவாறு மாற்றப்பட்டுள்ளன. மேலும் அதன் மூலநூல்களைப்பற்றி அவை குறிப்பிடுவதே இல்லை. சான்றாக இரு தமிழ் நூல்கள் வடமொழியானது குறித்து உல. பாலசுப்ரமணியன் சொல்வதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். “சேக்கிழார் தனது பெரியபுராணத்தை இரண்டாம் குலோத்துங்கச் சோழமன்னன் காலத்தில்(கி.பி. 1129-1140) இயற்றினார். பிற்காலத்தில் இந்நூலைச் சுருக்கி இரு சமற்கிருத சாத்திரிகள் வடமொழியில் இரு நூலை எழுதினார்கள். ஒன்று ‘அகத்திய சிவபக்த விலாசம்’ என்ற பெயரை உடையதாகும். இந்நூல் அகத்தியர் காஞ்சியிலிருந்த முனிவர்களுக்குச் சொல்லியது எனவும் வியாச மகரிசியின் தயைக்குப் பாத்திரமான கரிகர சர்மாவினால் செய்யப்பட்டது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது ‘உபமன்னியு பக்த விலாசம்’ என்ற பெயரைக் கொண்டதாகும். பெரியபுராணம் என்பது உபமன்னியு முனிவர் பிற முனிவர்களுக்குச் சொல்லியது என்றுதான் இதில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்காங்கு நாயன்மார் பாடல்களையே அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது. நாயன்மார் பெயர்களை இரு சாத்திரிகளும் பொருள் தெரியாமல் விசித்திரமாக மொழி பெயர்த்துள்ளார்கள். பெரிய புராணம் நூலை எழுதிய சேக்கிழார் குறித்தோ, அதன் பெயர் குறித்தோ இரு நூல்களிலும் எத்தகவலும் இல்லை. கதாகாலட்சேபம் செய்வோர் அனைவரும் வடமொழியே மூலம் எனவும் அதைத்தழுவியே தமிழ்நூல் எழுந்தது எனவும் சொல்கிறார்கள்.

பரஞ்சோதி முனிவர் கி.பி. 1720 வாக்கில் தமிழில் செய்த திருவிளையாடற் புராணத்தின் வடமொழி மொழிபெயர்ப்பு நூல்தான் ‘காலாசுய மகாத்மியம்’ என்பதாகும். இதுவும் அதே போன்று தான் வடமொழி நூலாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தமிழ்ப் புராணங்கள் வடமொழி சுகந்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படும். சில வடமொழிப் பிரம்மாண்ட புராணத்திலிருந்தும், பவிசிய புராணத்திலிருந்தும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும். உண்மையில் வட மொழியில் இப்படிப்பட்ட புராணப்பகுதியே இல்லை. வடமொழி தேவபாசை எனக் கருதப்படுவதால் அதிலிருந்து எடுக்கப்பட்டது எனச்சொல்லுவதுதான் பெருமை எனவும், தமிழ்தான் மூலம் எனச்சொல்லுவது இழுக்கு எனவும் கருதப்பட்டது. அதன் காரணமாக இதுபோன்ற போலிக் கருத்துக்கள் வலிமை அடைந்தன”(4).

தமிழிலிருந்து வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டதற்கான அனைத்துக் கூறுகளும் இவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டு, பல தமிழ் மூல நூல்கள் வடமொழியின் வழி நூல்களாக ஆக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. பின் தமிழ் நூல்கள் அனைத்தும் வடமொழியிலிருந்து வந்தன என்கிற கதை கட்டி விடப்பட்டது. இதனை அன்றைய ஆய்வு அறிஞர் முதல் இன்றைய ஆய்வு அறிஞர் வரை நம்புவதோடு அதனைப் பெருமையாகவும் பிரகடனப் படுத்துகின்றனர். தமிழ் நூல்களின் காலத்தைப் பிற்காலத்ததாக மதிப்பிடுவதும், வடமொழி நூல்களின் காலத்தை மிகவும் முற்காலத்ததாக மதிப்பிடுவதும் நடக்கிறது.

ஆகமம் – மறைக்கப்பட்ட தமிழர் அறிவுச்செல்வம்:

ஆகமங்கள் வடமொழியில் உள்ளன. மதவழிபாடு குறித்தான விதிமுறைகளை அவை கொண்டுள்ளன. ஆகவே தமிழுக்கும், தமிழர் மரபுகளுக்கும் அவை தொடர்பற்றவை என்கிற பொதுக்கருத்து நிலவுகிறது, அது ஒரு பெருந்தவறான கருத்தாகும். உண்மையில் ஆகமங்கள் என்பன பண்டைய தமிழர்களின் மரபு வழிபட்ட அறிவைப் பாதுகாத்து வந்த தொகுப்புகள் ஆகும். தொன்றுதொட்டு இருந்துவந்த பழந்தமிழ் அறிவு அனைத்தும் ஆகமங்கள் மூலம்தான் பாதுகாக்கப் பட்டு வந்தன.  நூற்றுக் கணக்கான ஆகமங்களும் உப ஆகமங்களும் உள்ளன. ஆகமங்கள் கடல் போன்ற பரப்பை உடையன. அதன் அளவு அளவிட முடியாதது. சான்றாக காமிக ஆகமத்தில் உள்ள கிரியா பாகம் 12000 செய்யுள்களை உடையது. ஒவ்வொரு ஆகமும் 4 பாகங்களை உடையது. அதில் ஒன்றுதான் கிரியா பாகம். “சாத்திர அடிப்படையிலான கலைநெறிகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஆகமங்களில் இடம்பெற்றுள்ள கலைகளுக்கு மூலமாய் அமைந்த சாத்திர நெறிகளும், ஆகமங்களின் அடிப்படையிலான சிற்ப, சாத்திர வழிபாடுகளும் தமிழர் நெறி சார்ந்தவை; வட இந்தியாவில் இந்த சிற்ப சாத்திர வழிபாடுகள் இல்லை. இந்த ஆகமங்கள் தமிழ்ச் சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்டன” என்கிறார் உல. பாலசுப்ரமணியம்(5).

ஆகமங்களும் சித்தர்களும்:

“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?”  – (பா. எண்-125)

என்கிறார் பத்திரகிரியார் என்கிற சித்தர்(6). அதாவது தொல்கபிலர் சொன்ன தத்துவம்தான் ஆகமம் எனவும் அத்தத்துவத்தில் சாதிபேதம் என்பது இல்லை எனவும் பத்ரகிரியார் கூறுகிறார். சிவவாக்கியார் என்கிற சித்தர்,

“பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்” -(பா. எண்-461)

எனப் பாடியுள்ளார். பூதத்தத்துவம் என்பது தொல்கபிலருடைய எண்ணியம் என்கிற எண்ணியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். ஆகமத்தில் உள்ள விடயங்கள் இந்த பூதத்தத்துவத்தோடு பொருந்திப்போகின்றன எனக் கூறுகிறார் சிவவாக்கியர் என்கிற சித்தர். ஆகவே ஆகமம் என்பது தமிழராகிய தொல்கபிலர் உருவாக்கிய தத்துவக்கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சாத்திரங்களின் தொகுப்பு என சித்தர்கள் கருதி வந்துள்ளனர் எனத் தெரிகிறது. பத்ரகிரியார் அரசராக இருந்து பட்டினத்தாரைக் குருவாக ஏற்று சித்தர் ஆக ஆகியவர் எனக்கருதப்படுகிறது.  இவர்களின் காலம் கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டு ஆகும். 18 சித்தர்களில் பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் முதல் இரு சித்தர்கள் ஆவர். அதன்பின் மூன்றாவதாக வருபவர்தான் சிவவாக்கியார் ஆவார். அவரது காலம் தெரியவில்லை. ஆக இவர்கள் மூவரும் சித்தர்களில் தலைமையானவர்கள் ஆவர்.

ஆகமம் – தமிழர்களின் கலைக்களஞ்சியம்:

ஆகமம் என்பது தமிழ்ச் சொல். ஆகமம் என்பதில் உள்ள ஆ என்பதற்கு பசு, ஆன்மா, நினைவு, என்ற பொருள்களையும், கமம் என்பதற்கு நிறைவு, வழி, வயல் என்ற பொருள்களையும் கூறுகிறது கழகத்தமிழ் அகராதி. ஆன்மா, நிறைவு ஆகியவற்றை இணைத்து ஆன்மநிறைவு என இன்று சமயச்சார்பான பொருள் கொள்ளப் படுகிறது. வழி, நினைவு ஆகிய இரண்டையும் இணைத்து நாம் பண்டைய நினைவுகளை வழி வழியாகப் பாதுகாத்து வரும் ஒரு தொகுப்புமுறை எனக் கொள்ளலாம். வயல் என்பது வளங்களின் இருப்பிடம். ஆகவே ஆகமம் என்பதற்கு, “பண்டைய தமிழர்களின் மரபு வழிப்பட்ட அறிவு வளங்களின் தொகுப்பு” எனலாம். வடமொழியிலும் ஆகமம் என்பதற்கு ‘தொன்றுதொட்டு இருந்துவரும் அறிவு’ என்ற பொருள் சொல்லப்படுகிறது.  இப்பொருள் தமிழில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகும். இதன் மூலம், ‘தொன்றுதொட்டு இருந்து வருகிற பண்டைய தமிழ் அறிவு வளங்களின் தொகுப்புதான் ஆகமம்’ என்கிற கருத்து மேலும் உறுதிப்படுகிறது. தமிழர்கள் பாதுகாத்து வந்த ஓவியம், சிற்பம், நாட்டியம், இசை, மருத்துவம், மெய்யியல், கட்டிடக்கலை, வானவியல், நகர அமைப்பு, வேளாண்மை போன்ற பல விடயங்களை ஆகமங்கள் பேசுகின்றன. ஆனால் அவை பண்டைய தமிழகத்தில் மதச்சார்பற்றவைகளாக, பொருள் முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டனவாக இருந்தன.

ஆனால் இன்று அவைகள் சிதைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, இடைச் செருகல்களால் நிறைக்கப்பட்டு, மதச்சாயம் பூசப்பட்டு மீட்டெடுக்கமுடியாத அளவு மாறுபட்டுப் போயுள்ளன. “சைவ ஆகம வரிசையில் உள்ள புரோக்கீதம் என்ற 21 ஆவது மூலாகமத்தில் 16 உப ஆகமங்கள் உள்ளன எனவும் அதில் ஒன்று பரதம் எனவும், இது பரத சாத்திரம் குறித்த நூல் எனவும் அதன் மூலம் ‘தமிழ்’ எனவும் இந்த ‘பரதம்’ என்பது நாடகத்தமிழ் என்கிற இசை, நாட்டியம் ஆகிய பண்டைய தமிழர் கலைகள் குறித்த நூல் எனவும், அந்நூலில் உள்ள விடயங்கள்தான் பரதம் என்ற பெயரில் உப ஆகமமாகச் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், நெதர்லாந்து நாட்டு ‘பிரில்’ என்பவர் பரதம் என்பது தமிழர் கலை எனக் கூறியுள்ளார் எனவும் தமிழ் இசை இலக்கண நூல் ஆசிரியர் மு.அருணாசலம் குறிப்பிடுகிறார்(8). சைவ ஆகமத்தில் ஒன்றான காமிகா ஆகமத்தில் உள்ள கிரியா பகுதியின், பூர்வபாகத்தில் உள்ள 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பக்கலை குறித்த விடயங்களைப் பேசுகின்றன. கட்டிடக்கலை & சிற்பக்கலை குறித்த மயமதம், மானசாரம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வரலாற்று ஆய்வாளர் புருனோ டாகென்சு (BRUNO DAGENS) என்பவர் ஆகமங்கள் மிகப்பெரிய அளவில் இடைச் செருகல் களால் நிரப்பப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகிறார். அவர் தென்னிந்திய(தமிழர்) கட்டிடக் கலைதான் மயமதம் என்கிறார். ஆகமத்தில் ஒரு பிரிவு யாமளைகள் ஆகும். யாமளம் என்பதற்கு சாத்திரம் எனக் கழகத்தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ஆகமத்தில் உள்ள யாமளைகள் வானவியல், கணிதம், பரிணாம வளர்ச்சி முதலியன குறித்துப் பேசுகிறது.  ஆகவே இசை, நாட்டியம், சிற்பம், கட்டிடக்கலை, கணிதம், வானவியல் போன்று ஆகமங்களில் இடம்பெற்றுள்ள பலவும் தமிழர் கலைகள் ஆகும். ஆகமங்களில் பௌத்த, சமண ஆகமங்களும் உண்டு.

சைவ ஆகமங்கள் 28 எனவும், வைணவ ஆகமங்கள் 108 எனவும், சாக்த ஆகமங்கள் 64 எனவும் சொல்லப்படுகிறது. இவை போக கணக்கற்ற உப ஆகமங்கள் இருக்கின்றன. சைவ ஆகமங்களில் ஒன்றான சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில் 165-&272 பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்ற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகிறது. கடற்கோளால் குமரி நிலப்பரப்பில் இருந்து அழிந்து போன நகரங்கள் குறித்தும், நகர அமைப்பு குறித்தும் அவை பேசுகின்றன. திருமூலரின் திருமந்திரம் ஒன்பது ஆகமங்களில் உள்ள கருத்துக்களின் தொகுப்புதான் என அதன் சிறப்புப்பாயிரம் சொல்கிறது. சைவ சித்தாந்த நூல்கள் 14உம் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன எனக்கருதப்படுகிறது. மயமதம், மானசாரம் போன்ற கட்டிடக்கலை, சிற்பக்கலை நூல்கள் ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டவை. உபநிடதங்கள் பல ஆகமங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவை. ஆகவே ஆகமம் என்பது மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், பல்வேறுகலைகள் முதலியன குறித்தப் பண்டையகாலத் தமிழர்களின் மரபு வழிப்பட்ட அறிவு ஆகும். இதனை பக்திக்காலகட்டத்தில், கோயில் வழிபாட்டுக்கானதாக அன்றைய சமயங்கள் மாற்றியமைத்துக்கொண்டன. இதனைச் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமல்ல சமண, பௌத்த சமயங்களும் பயன்படுத்திக் கொண்டன. ஆகமங்களில் வைதீகமோ, வர்ணங்களோ, சாதிகளோ இல்லை.

கி.மு. 1000 அல்லது அதற்கு முன்பிருந்து தமிழகத்தில் இருந்த பலதரப்பட்ட அறிவியல் விடயங்களும் எண்ணியம் என்கிற எண்ணியத் தத்துவ மூலவர் தொல் கபிலர் காலம் முதல் சேகரிக்கப்பட்டு ஆகமங்களாகத் தொகுக்கப்பட்டு வந்தன எனக் கருதலாம். அதனால்தான் சிவவாக்கியார், பத்ரகிரியார் ஆகிய சித்தர்கள் தொல்கபிலர் சொன்ன தத்துவம்தான் ஆகமம் எனக் குறிப்பிடுகின்றனர். ஆகமங்கள் கோயில் வழிபாட்டுக்காக உருவாக்கப் படவில்லை. அவை தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியமாக (Encyclopedia) இருந்தன. கலைக்களஞ்சியங்கள் ஒரு சில மேம்போக்கானத் தரவுகளையே கொண்டிருக்கும். ஆனால் ஆகமங்கள் ஒவ்வொன்றையும் குறித்து முழுமையாகவும் ஆழமாகவும், விரிவாகவும் பேசின.  தமிழ்க்கல்வி முறையும், தொழிற்பயிற்சி முறையும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. பழந்தமிழகத்தில் ஒவ்வொருதுறைக்கும் தனித்தனி நூல்கள் பல இருந்த போதிலும் அனைத்துத் துறைகளையும் கொண்ட தொகுப்பாக ஆகமங்கள் உருவாகின.

கப்பல் கட்டுதல் முதல் வேளாண்மை வரையும் ஆன பல்வேறு உற்பத்தி தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப அறிவும் அனுபவ அறிவும் முழுமையாகவும் விரிவான அளவிலும் ஆகமங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதுபோன்றே கணிதம், வானவியல் போன்ற அறிவியல்களும் சிற்பம் ஓவியம், இசை நாட்டியம் போன்ற கலைகளும், சித்தமருத்துவம், உணவு, யோகப் பயிற்சிகள் போன்ற உடலையும் மனதையும் பாதுகாக்கும் கலைகளும், வர்மக்கலை, சிலம்பம் வாள்பயிற்சி போன்ற போர்க்கலைகளும் வரலாறு, புவியியல் போன்றவைகளும் ஆகமங்களில் சேகரிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் பெரும்பாலானவை அழிந்து சிதைந்து போனபின்னும்கூட குமரி நிலப்பரப்பில் கடற்கோளால் அழிந்துபோன நகரங்கள் குறித்தும் நகர அமைப்பு குறித்தும் அவை பேசுகின்றன. சங்கம்மருவிய காலம்வரை இச்சேகரிப்பு நடந்து வந்தது. சங்கம்மருவிய காலத்தின் இறுதியில் அதில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

சங்கம் மருவிய காலத்திற்குப்பின் நடந்த களப்பிரர் படையெடுப்பும் அதனைத் தொடர்ந்து நடந்த சமற்கிருத மயமாக்கமும் இந்த ஆகமங்களில் மாபெரும் அழிவையும் சிதைவையும் கொண்டு வந்தன. களப்பிரர் காலத்தில் ஆகமங்களைப் பாதுகாப்போரும் பராமரிப்போரும் இல்லாது போனதால் பெரும்பாலான ஆகமங்கள் அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளாயின. பின்னர் மீதியுள்ளவைகள் சமயம் சார்ந்தவர்களால் சமற்கிருதமாக ஆக்கப்பட்டு பாதுகாக்கப்படலாயின. கி.பி. 3ஆம் 4ஆம் நூற்றாண்டில் தமிழில் இருந்த ஆகமம் போன்ற நூல்களை சமற்கிருதத்துக்கு மாற்றுவதற்காகவே கிரந்த எழுத்துமுறை தமிழ் எழுத்து முறையில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகமங்கள் இன்று கூட கிரந்த எழுத்தில் தான் உள்ளன. அதன்பின் மூலத் தமிழ் ஆகமங்கள் பராமரிப்போரோ, பாதுகாப்போரோ இன்றி அழிந்து போயின.

கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப்பின் அனைத்தும் சமற்கிருதமயமாயின. சமற்கிருதத்தில் இருப்பதே சிறப்பு என்ற கருத்து உருவாக்கப்பட்டது. தமிழ் அறிவர்கள் அனைவரும் சமற்கிருதத்தில்தான் எழுதினர். சமற்கிருதம் மெய்யியல், அறிவியல் மொழியாக ஆனது. தமிழ் வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே இருந்தது. நாளடைவில் தமிழில் மெய்யியல், அறிவியல் விடயங்களைப்பேசுவது இழுக்கானதாக ஆகிப்போய், தமிழ் அதற்குத்தகுதி இல்லாத ஒரு மொழி எனக் கருதும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஆதலால் தமிழில் இருந்ததெல்லாம் பாதுகாப்போர் இன்றி அழிவுக்குள்ளாயின. தமிழ்ச் சமூகம் ஆகமங்கள் என்கிற தனது பண்டைய மரபு வழிப்பட்ட அறிவுச் செல்வத்தை இழந்து போனது. சமற்கிருதம் அதில் பலவற்றைக் களவாடிக் கொண்டது. அவைகளை சமயச்சார்பானதாக மாற்றியமைத்துக் கொண்டது. ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு பல அறிவியல் தொழில் நுட்ப நூல்கள் சமற்கிருதத்தில் உருவாயின. ஆகமங்களில் திரிபுகளும், இடைச்செருகல்களும் பெருமளவில் உருவாகின. புதிய புதிய சமயச் சார்பான பல விடயங்கள் தொடர்ந்து ஆகமங்களாகச் சேர்க்கப்பட்டு ஆகமம் என்பது சமயச் சார்பானதாக ஆகிப்போனது. ஆகமங்கள் அனைத்தையும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது, பண்டைய தமிழ்ச் சமூகத்தின் மெய்யியலை, அறிவியலை, தொழில்நுட்பங்களை, கலைகளை ஓரளவாவது மீட்டெடுக்க இயலும். ஆகமங்களில் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செல்வம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆகமங்களில் உள்ள சமயச்சாரத்தை, இடைச்செருகல்களை, திரிபுகளை, அப்புறப்படுத்தி பழந்தமிழர்களின் அறிவுச் செல்வத்தை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

அழிந்து போன நகரங்கள்:

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அதன் காலத்தைக் கி.மு. 2000 வரை கொண்டு செல்கிறது எனவும், கி.மு. 1500 வாக்கில் அது ஒரு தொழில் நகராக இருந்தது எனவும் நிலவியல் அறிவியலாளர்கள் தரும் கருத்தையும், இடோப்பா செயற்கைக்கோள் தரும் காலக்கணக்கீட்டையும் கொண்டு கி.மு. 3000 வாக்கில் தென்மதுரையும், கி.மு. 1500 வாக்கில் கபாடபுரமும் கடற் கோள்களால் அழிந்து போயிருக்கலாம் எனவும் முனைவர் இராமசாமி அவர்கள் கூறியுள்ளார்(9). தமிழர்கள் குறியீடுகளை, கி.மு. 1000 அல்லது அதற்கு முன்பிருந்தே ஒருவகை எழுத்து வடிவமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர் என முனைவர். கா. இராசன், முனைவர் இராசுபவுன்துரை ஆகியோர் கூறுகின்றனர். பழங்குறியீடுகளுடன் கிடைத்த மயிலாடுதுறை கைக்கோடாலியின் காலம் கி.மு. 1500 முதல் கி.மு. 2000 வரை என்கிறார் ஐராவதம் மகாதேவன்(10). பண்டைய ஆகமங்கள் குமரி நிலப்பரப்பில் இருந்த, கடற்கோளால் அழிந்து போன பல்வேறு நகரங்கள், துறைமுகங்கள், கோட்டைகள் குறித்தும், நகர அமைப்புகள் குறித்தும் விரிவாகப் பேசுகின்றன. தென்மதுரை, கபாடபுரம் போன்ற பண்டைய தமிழ் நகரங்கள் குறித்து இறையனார் களவியல் உரை போன்ற தமிழ் நூல்களும், மகாபாரதம், இராமாயணம் போன்ற சமற்கிருத நூல்களும், இலங்கையின் மகாவம்சம் போன்ற பாலி நூல்களும் பேசுகின்றன.

1991, 1993 ஆகிய ஆண்டுகளில் கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகம் பூம்புகார்க் கடற்கரை அருகே கடலில் அகழாய்வை மேற்கொண்டு, “இலாட வடிவில்(U) உள்ள கட்டிட அமைப்பு பூம்புகார்க் கடற்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் 23 மீட்டர் ஆழத்திலும் காணப்பட்டது. இந்த அமைப்பின் மொத்த நீளம் 85 மீட்டர்; இரண்டு சுவர்களுக்கு இடையே 13 மீட்டர் இடைவெளி, சுவர்களின் அதிக அளவு உயரம் 2 மீட்டர்” என்ற அறிக்கையை வெளியிட்டது எனவும்,  பின் 2001ஆம் ஆண்டு கிரகாம் ஆன்காக் என்கிற இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர் பூம்புகார்க் கடல்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அந்த இலாட வடிவில் உள்ள கட்டிட அமைப்பு படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது எனவும், இந்த ஆய்வின் போது 100 அடிகள் ஆழத்தில் மேலும் 20 பெரிய கட்டுமான அமைப்புகளைக் கண்டதாக கிரகாம் ஆன்காக் அவர்கள் தெரிவித்துள்ளார் எனவும் 11000 ஆண்டுகளுக்குமுன்பு பூம்புகாரில் ஒரு நகரநாகரிகம் இருந்தது என கிரகாம் ஆன்காக் சொல்லியுள்ளார் எனவும் இங்கிலாந்து டர்காம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சியாளர் கிளீண் மில்னே அவர்கள், கிரகாம் ஆன்காக் அவர்களின் கருத்து  சரியானதுதான் என்கிறார் எனவும் கிளீண் மில்னே, கிரகாம் ஆன்காக் ஆகியோர் பூம்புகார் நகரநாகரிகம் மெசபடோமியாவில் இருந்த சுமேரிய நாகரிகத்திற்கும் முற்பட்டது எனக்கூறுகின்றனர் எனவும் கூறுகிறார் முனைவர் இராமசாமி(11)    .

இவைகளை வைத்துப்பார்க்கும்பொழுது 11000 ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் இருக்கவில்லை எனக்கொண்டாலும் குறைந்தபட்சம் கி.மு. 1500க்கு முன்பிருந்து பூம்புகார் நகரம் இருந்ததாக உறுதியாகக் கூற முடியும். கலிங்க மன்னன் காரவேலனின் கி.மு. 2ஆம் நூற்றாண்டு அத்திக்கும்பா கல்வெட்டு 1300 ஆண்டுகளாக இருந்த தமிழரசுகளின் கூட்டணி குறித்துப்பேசுகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டுக் கபிலர், இருங்கோவேளின் முன்னோர்கள் 49 தலை முறைகளாகத் துவரை என்ற நகரை ஆண்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவைகளின் கணக்குப்படி கி.மு. 1500வாக்கில் தமிழரசுகளும் தமிழக நகரங்களும் இருந்ததாக ஆகிறது.

எண்ணியம் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனவும் மகாபாரதத்திலேயே எண்ணியம் சநாதமானது(காலங்கடந்தது) என்று கூறப்பட்டுள்ளது எனவும், உபநிடதங்கள் கூட எண்ணியம் அவற்றுக்கு முந்தையது எனக்காட்டுகின்றன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். தொல்கபிலரான தமிழர் உருவாக்கிய எண்ணியம் மிகப்பண்டைய காலத்தைச்சேர்ந்தது என மகாபாரதமும், உபநிடதங்களும் கூறுவதால்தான் நாம் அதன் காலத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கணித்தோம். பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்ததின் விளைவே எண்ணியம் போன்ற எண்ணிய மெய்யியல் தோன்றக்காரணமாகும். ஆகவே தமிழக நகரங்கள் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உருவாகியிருக்க வேண்டும்.

பூம்புகார் கடலாய்வும், நிலவியல் அறிவியலாளர் தரும் கருத்துக்களும், இடோப்பா செயற்கைக்கோள் தரும் காலக்கணிப்பும், பண்டைய ஆகமங்கள் தரும் நகரங்கள், நகர அமைப்புகள் குறித்தக் குறிப்புகளும், தென்மதுரை, கபாடபுரம் குறித்துப் பண்டைய தமிழ், சமற்கிருத, பிராகிருத, பாலி நூல்கள் தரும் தரவுகளும் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பூம்புகார், தென்மதுரை, கபாடபுரம் போன்ற பல நகரங்கள் இருந்துள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தின் தென் பகுதியிலும், அதன் கிழக்கு மேற்குப் பகுதியிலும் கி.மு. 1500க்கு முன்பே பல நகரங்கள் இருந்து, பின் அவை கடற்கோள்களால் அழிந்துபோயின எனக் கருத இடமுள்ளது.

கிரேக்கர் நாகரிக நிலையை அடைவதற்கு 1000(கி.மு.1500) ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழர்கள் தங்கள் சொந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிக மைய மாகக் கொண்டு எகிப்தோடும், ஆப்பிரிக்காவோடும், பாரசீக வளைகுடா நாகரிகங்களோடும் வணிகம் செய்வதற்கான ஒரு வணிகமுறையைக் கொண்டிருந்தனர் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சுகாப்(12). ஆகவே கி.மு. 1500 வாக்கில் தமிழகம் நகர்மைய வணிக நாகரிகமாக வளர்ச்சி பெற்று உலக நாடுகளோடு பெருமளவில் கடல் வணிகத்தை மேற்கொண்டிருந்தது எனலாம். மயிலாடுதுறை கைக்கோடாலி, கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் குறியீடுகள் இருந்து வந்தன என்பதையும் அவை கருத்துக்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களாகப் பயன்படுத்தப்பட்டன என்பதையும் உறுதிப்படுத்துகிறது. கடற்கோள்களால் அழிந்துபோன தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த தென்மதுரை, கபாடபுரம், போன்ற நகரங்களிலும், ஆகமங்கள் குறிப்பிடும் நகரங்களிலும், பூம்புகார் போன்ற நகரங்களிலும் இக்குறியீடுகள் எழுத்துக்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன எனக்கருத இடமுள்ளது. இப்பண்டைய தமிழர் நாகரிகம் என்பது நகர்மைய வணிக நாகரிகமாகவே இருந்தது. பண்டைய தமிழகத்தின் இந்நகரங்களில், கி.மு. 1500 அல்லது அதற்கு முன்பிருந்து ஏற்பட்ட பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியின் விளைவாகத்தான் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் எண்ணியம் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த மெய்யியல் சிந்தனைப்பள்ளி உருவாக முடிந்தது எனலாம்.

பண்டைய நூல்களும், பண்டைய நகரங்களும் அழிந்து போனதால் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்தத் தரவுகளை இன்று முழுமையாக அறிய இயலவில்லை. பூம்புகார் கடலாய்வும், ஆதிச்சநல்லூர் அகழாய்வும், மயிலாடுதுறை கற்கோடாலிக் குறியீடுகளும் தமிழர் நாகரிகம் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளாலும், கடலாய்வுகளாலும்தான் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த ஓரளவு முழுமையான தரவுகளை வெளிப்படுத்த இயலும்.

பார்வை:

  1. தமிழ் இசை இலக்கிய வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்: 73. & தமிழ் இசை இலக்கண வரலாறு, பக்: 13-19.
  2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், சூன்-2016 எதிர் வெளியீடு, பக்: 839-840, 868.
  3. தமிழர் இயங்கியல், முனைவர் க. நெடுஞ்செழியன், பாலம், 2009, பக்: 54,55.
  4. தமிழ் இசை இலக்கண வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்: 4.
  5. மு. அருணாசலம்,  தமிழ் இசை இலக்கிய வரலாறு, கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பதிப்புரை – உல.பாலசுப்ரமணியன்.
  6. சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர் அரு. இராமநாதன், பிரேமா பிரசுரம், சென்னை-24, ஏப்ரல் – 2012. பக்:127 & 202.
  7. மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கண வரலாறு, கடவு பதிப்பகம், அக்டோபர்-2009. பக்: 119-122.
  8. தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, முனைவர் இராமசாமி, NCBH, TISAMPAR- 2013, பக்: 62, 20-22.
  9. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், சூன்-2016 எதிர் வெளியீடு, பக்: 87-88, 91.
  10. தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, முனைவர் இராமசாமி, NCBH, TISAMPAR- 2013, பக்: 22-25.
  11. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், சூன்-2016 எதிர் வெளியீடு, பக்: 120.