ஆதிரை

by சயந்தன்
0 comment

யாரோ கதவைத் தட்டுகிறார்கள். கனவை ஊடறுக்கிற ஒலி. இரண்டாவது தட்டலில் சத்தம் பலமாகக் கேட்டது. மலருக்கு விழிப்பு வந்துவிட்டது. நள்ளிரவு தாண்டியிருக்கும். கடிகார ரேடிய முள் ஒன்றே கால் என்றது. கட்டிலில் படுத்திருந்த அம்மா “யாரு?” என்று உரக்கக் கேட்டாள். “நான்தான் அம்மா” என்றதொரு பெண்குரல். மலர் கதவைத் திறந்தாள். “பாம்பு கடிச்சிட்டுது” என்று பதறிக்கொண்டு சொன்னாள் வள்ளியம்மாக் கிழவி. மலர் ஓடிப்போய் ரோர்ச் லைட்டை எடுத்து வந்து வள்ளியம்மையின் கணுக்காலில் சேலையைத் தூக்கிப் பார்த்தாள்.

“தவிட்டை மரத்தடியில வந்து தூக்கக் கலக்கத்தில ஒண்டுக்கு இருந்தனான். கொத்திட்டு சரசரண்டு போயிட்டது. விரியனோ என்னவோ. இருட்டுல இனம் தெரியல. நீளந்தான். அவர எழுப்பி என்ன செய்யிறதெண்டுதான் உன்னைத் தேடி ஓடி வந்தனான்.” குதிகாலுக்கு மேல் மொளிக்கு அருகே இரண்டு ரத்தப் பொட்டுகள் இருந்தன.

அம்மா ஊன்றுகோலை ஊன்றியபடி வாசலுக்கு வந்து விட்டாள். “அம்மா மிளகை எடுங்கோ” என்று சொல்லிக் கொண்டே ஓடிப் போய் வில்லுக்கத்தியையும் கயிறையும் எடுத்து வந்தாள் மலர். வள்ளியம்மாவின் குதிக்காலில் இறுக்கிக் கட்டினாள். எதற்கும் இருக்கட்டுமென்று மீதிக்கயிறை அறுத்து சற்றே மேலே கட்டினாள். கத்தியை விரித்து கடிவாயில் கீறினாள். அழுத்தி உருவ உருவ கட்டுக்கு கீழிருந்த விஷமேறிய இரத்தம் வெளியேறியது.

வள்ளியம்மாக் கிழவிக்கு எழுபதுக்கு மேலிருக்கும். தேகம் வற்றிக் கறுத்துக் கருவாடு போலிருந்தாள்.

அம்மா மிளகு டப்பாவை எடுத்து வந்தாள். மலர் திறந்து பத்திருபது மிளகுகளைக் கொட்டினாள். “இதை நல்லா மென்னு முழுங்குங்கோ.” “பல்லில்லை.” உள்ளே ஓடிப்போய் வெற்றிலை யிடிக்கும் உரலை எடுத்து வந்து நுணுக்கினாள்.

“அம்மா, நான் இவவை நெடுங்கேணி ஆஸ்பத்திரிக்கு சைக்கிள்ல கொண்டுபோறன். ஐம்பது நிமிஷந்தான் வேகமா மிதிச்சா. உசுரைக் காப்பாத்திப் போடலாம். நீங்கள் இருங்கோ. ஊரைக் கூட்டவேண்டாம்.”

“இந்நேரத்தில நீ என்னெண்டு பிள்ள… அந்தக் கற்பகம் வீட்டுக் கிழவன் சைக்கிள் ஓடுற ஆளல்லே…”

“அவரால முடியாதம்மா” என்றவாறே வள்ளியம்மாவின் வாயைத் திறக்கச் சொல்லி மிளகுப்பொடியை அப்படியே கொட்டினாள்.

உள்ளே ஓடும்போதே முழுச்சட்டையை உரிந்து எறிந்தாள். உள்ளாடைகளையெடுத்து அணிந்து கொண்டாள். பாவாடையைக் கட்டிவிட்டு முழுக்கைச் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே வெளியே ஓடினாள். மாட்டுக் கொட்டிலிலிருந்து சைக்கிளை எடுத்து வந்து ஸ்டாண்ட் போட்டாள். கிழவியை ஹேரியரில் இரண்டுபக்கமும் காலைப் போட்டவாறு ஏற்றி சீற்றின் கீழ் ஸ்பிரிங் கம்பியை இரண்டு கையாலும் பிடித்துக் கொள்ளச் செய்தாள்.

“வாறனம்மா” என்றவாறே சைக்கிளை உருட்டி மிதித்து ஏறினாள்.

“பாத்து, பத்திரம்…” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்த போதே முற்றத்தைக் கடந்திருந்தாள்.

பாதி நிலாவின் வெளிச்சத்தில் பாதை நன்றாகத் தெரிந்தது. ‘நாப்பது நிமிசத்தில போயிடலாம்…’ வேகவேகமாக மிதித்தாள்.

“ஆத்தை, நித்திரை கொள்ளக் கூடாது. கதைச்சுக்கொண்டு வாங்கோ. ராத்திரி என்ன சாப்பிட்டியள்?”

“மரவள்ளிக் கிழங்கு அவிச்சித் திண்டம். ஊறுகாய்தான். உறைப்பாக் குழம்பு வச்சுத் தரேல்லயெண்டு அவர் சினந்தவர்.”

“பேத்திமாரெல்லாம் சுகமே?”

கிழவி பெருமூச்சோடு கதையைத் தொடங்கினாள்.

இன்றைக்கென்று சோதனையாய் இராக் காற்று பலமாய் வீசுகிறது. மலர் உன்னி உன்னி மிதித்தாள்.

இந்தக் கிழவியோடு மலருக்கு அவ்வளவு நெருக்கமான பழக்க மில்லை. மலரின் காணிகளில் முன்பு அவ்வப்போது கூலி வேலைக்கு வருவாள். வேலைகளில் கெட்டிக்காரி. கரிச்சான் மாதிரி. விறுவிறென்று செய்வாள். கதிரறுத்தாலும் களையெடுத்தாலும் அவளுடைய நிரை முன்னேதான் போகும். அம்மாவிடம் வந்து அடிக்கடி முன்பணம் கேட்டு நிற்பாள். இப்போது ஐந்தாறு வருஷமாய் வேலைக்கு வருவதில்லை. வயதாகிவிட்டது. முன்னேயும் அவளால் கனத்த வேலைகள் செய்ய முடிந்ததில்லை. கட்டுத் தூக்க முடியாது. ஆனால் களத்தில் நன்றாகப் பொலி தூற்றுவாள். சுளகில் அள்ளி காற்று வாட்டத்தில் வாகாய்ச் சுழற்றி வீசிவிடுவாள், பதர்கள் பறந்துபோக மணிகள் பொலியில் மேடாய்க் குமியும்.

மலர் வாகையடிப் பாலத்தைக் கடந்தாள். ‘நாலு மைல் முடிஞ்சுது.’

எல்லாரும் தூக்குவாளிக்கு மாறிய பின்னும் வள்ளியம்மா கடைசிவரை மாறவில்லை. கலயத்தில்தான் கஞ்சி கொண்டு வருவாள். வெங்காயம் மிளகாய் வெட்டிப்போட்ட நீர்மோர் அல்லது புளிச்ச தண்ணியில் கம்பு, குரக்கன் உருண்டைகள் நாரத்தைக்காய் மாதிரி மிதக்கும். கலயத்தின் வெளிப்புறம் கொள்ளுத் துவையல் ஒட்டியிருக்கும். வெயிலில் கறுத்து கலயத்தில் தவளை நிற்பது போலிருக்கும். மலர் காணிக்கு சாப்பாடு எடுத்துப் போவ தில்லை. வெயிலேறி விட்டால் வீட்டுக்கு வந்துவிடுவாள். காலை எட்டரைக்கெல்லாம் மரத்தடியில் இருந்து எல்லாரும் சாப்பிடும் போது ஆளாளுக்கு ஒரு கை வாங்கித் தின்பாள். கரைத்த கஞ்சியென்றால் இரு கை குவித்து வாங்கிக் கொள்வாள். காணிக்காரி என்பதாலா? இல்லை, அது ஒரு செல்லம். கஞ்சிதான் அவளுக்கு இஷ்டம். சில கூலித்தொழிலாளர்கள் அடுத்த மரத்தடியில் தனியே இருந்து சாப்பிடுவார்கள். “இஞ்ச வந்திருந்து சாப்பிடுங்க” என்று அழைத்தால் தயங்குவார்கள். மலர் அவர்களிடமும் வாங்கிச் சாப்பிடுவாள். ஒருநாள் அழகம்மா அக்கா அதற்காக அவளைத் தனியே கூப்பிட்டுக் கண்டித்தாள். மலர் சிரிப்பால் கடந்தாள். “போங்க… நீங்கள் எந்தக் காலத்திலயிருக்கிறீங்கள்?”

“ஊர் பல்லுக்குமேல நாக்கப்போட்டுக் கதைக்கும்…”

“அக்கா, நான் நிறையப் படிச்சிட்டன்.”

அழகம்மா அக்காதான் மலர் வீட்டுக்கு நிரந்தர மேலாள். ஆள்களைத் திரட்டிக்கொண்டு போவது, வேலை வாங்குவது எல்லாம் அவள்தான். கணக்குவழக்குக்கு மட்டும்தான் அம்மா. வள்ளியம்மாக் கிழவியின் கொள்ளுத் துவையல் பயங்கர உறைப்பாகவிருக்கும். செத்தல் மிளகாயைக் கூடுதலாய்ப் போட்டு அரைத்திருப்பாள். நாக்கில் சுள் என்று பிடிக்கும். ஏன் என்று கேட்டால் அப்பதான் கஞ்சி இழுக்கும் என்பாள். முன்பொருமுறை இலுப்பைக் காணியில் எள்ளுச்செடி பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஓடையில் ஒதுங்கிய இந்தக் கிழவி அவசரமாய் வந்து ஒரு எள்ளுமாருக் கட்டைத் தூக்கிப் போய் நுழைவாயை அடைத்து விட்டுக் கத்தினாள். “நரி… நரி…” எல்லாரும் ஓடிப்போய்ப் பார்த்தார் கள். நரியின் பொந்து அடைபட்டிருந்தது. தடி பொல்லுகளைத் தூக்கிக்கொண்டு தயாரானார்கள். “நரி உங்கள என்ன செஞ்சது. பாவம் அது போகட்டும்” என்று மலர் கட்டைத் தூக்கிக் கலைத்து விட்டாள். வெளியே பாய்ந்த நரி விரண்டு தெறித்து ஓடியது. அடுத்து ஒரு நரி. பின்னால் ஓடியதுதான் பெண்ணாய் இருக்கும் என்று மலர் நினைத்தாள்.

“காதலைக் குலைக்க வெளிக்கிட்டினயோ!” என்றாள் ஒரு குமரி.

“அதுகள் கலியாணம் முடிச்ச குடும்பமடி” என்றாள் ஒருத்தி.

“அது இனிமேதான். நரிக்கும் நரிக்கும் கலியாணமாம். இண்டைக்கு மழை வருமாம்.”

ஜோதிமலர். அது சோதிமலர் என்றாகிவிட்டது. வெள்ளை யக்கா என்ற பட்டப்பேர் எப்போது வந்து ஒட்டிக்கொண்டது என்றே தெரியவில்லை. சின்னப்பிள்ளைகள் கூப்பிட்டு அப்படியே நிலைத்துவிட்டதுபோல. மலர் என்ற பேர்தான் அவளுக்கு வெகு பிடித்தம். முருகேஸ்வரி டீச்சர் “உனக்குத்தானடி பொருத்தமாய்ப் பெயர் வைச்சிட்டாங்கள்” என்று சொல்வாள். அவன் ஒருநாளும் இப்படியெல்லாம் சொன்னதில்லை. மலருக்கு நிறம் அழகா மணம் அழகா? அவளுக்கு உடல் அழகா உள்ளம் அழகா? மலர் என்றாலே அழகுதான். எல்லா மலர்களுமே அழகுதான். அவளுக்கு வெங்காயப் பூவைக் கூடப் பிடிக்கும். கொத்துமல்லிப் பூப்போல. மயில் கொண்டை போல. கிள்ளி எடுக்க மாட்டாள். இளமை பூரிக்கும் அதன் நீள்தண்டோடு சேர்த்துக் கையில் வைத்திருப்பதுதான் பிடிக்கும். இந்த உலகமே அழகுதான். எல்லாச் செடிகளும் கொடி களும் மயில்களும் மான்களும் நீரோடைகளும் குளங்களும்… அழகை ரசிக்காமல் யாரும் இருப்பார்களா? இருக்கிறார்கள். சிறுமிகளையும் கிழவிகளையும் தவிர பெண்கள் யாருக்கும் மலரைப் பிடிக்கவில்லை. அவளைக் கண்டதும் அவர்கள் கண்கள் துளிமின்னலில் மாறிவிடும். ஒரு தினையளவு எரிச்சல்… நிராசை… பதற்றம்… பரிதவிப்பு… ஏக்கம். ஒருநாள் பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் போதுதான் மலர் சட்டென்று உணர்ந்தாள். ஒருவேளை அழகாக இல்லாமல் இருந்திருந்தால் அவனுடைய தாய்க்காரி மருமகளாக ஏற்றுக்கொண் டிருப்பாளோ… அது மிகையான கற்பனையாகவும் தோன்றிற்று. எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்; ஆனால் அதுதான் ஆதாரமான காரணம் என்று நம்பினாள். மனதின் சுவரில் கரும்புகை போலப் படிந்திருக்கும் அது என்னவென்று அவன் தாய்க்கே சொல்லத் தெரியாது; புரிந்துகொள்ளக் கூட முடியாமலும் போகலாம். ‘மனசின் சேட்டைகள்!’

நாரைமடு ஆலமரம் தெரிந்தது. ‘ஐஞ்சரை மைல் தாண்டி யாச்சு.’ வேர்த்துக் கொட்டியது. வேகத்தைக் குறைக்காமல் மிதித்தாள். மரநிழல் பாதையை இருளாய்க் கவ்வியிருந்தது. விழுதுகள் கூடத் தெரியவில்லை. இருட்டில் கண் பழகுவதற்காக பெடலை மிதிக்காமல் வேகத்தைக் குறைத்து மெதுவாகப் போனாள். கடந்தாள். ‘இன்னும் ஒண்டரை மைல்தான்.’

பனையடிப் புங்கமரத்தைத் தாண்டினாள். நெடுங்கேணி ஆஸ்பத்திரி இன்னும் ஒரு மைல்தான்.

எப்படி உலாஞ்சியதென்று தெரியவில்லை, சைக்கிள் வலப்பக்கம் சாய்ந்தது. வலக்காலை ஊன்றமுயன்றும் முடியாமல் சரிந்துவிட்டது. கிழவியோடு கீழே விழுந்தாள். காலை உருவி எடுத்துவிட்டு கிழவியைப் பார்த்தபோதுதான் அந்தச் சந்தேகம் எழுந்தது. மூக்கில் விரல் வைத்துப் பார்த்தாள். மூச்சில்லை. நாடி பிடித்துப் பார்த்தாள். துடிப்பில்லை. ‘ஐயோ! கிழவி போட்டுதா!’

இவ்வளவு பாடுபட்டும் அநியாயமாய் ஒரு உயிரைச் சாகக் கொடுத்தாகிவிட்டது. எப்போது செத்திருப்பாள்? ஆரம்பத்தில் பேசிக்கொண்டுதான் வந்தாள். காற்றில் சரியாய்க் கேட்கவில்லை. மலரின் முதுகோடு சாய்ந்துதான் வந்தவள். அப்புறம் அனக்க மில்லை. ‘ஏலுதில்லை போல’ என்று மலர் நினைத்துவிட்டாள். சைக்கிள் மிதிப்பதையே மறக்க வேறுவேறு நினைவுகளில் மூழ்கியபடியே வந்துவிட்டாள். வாகையடிப் பாலத்துக்கு முன்பே செத்திருக்குமோ? இருக்கலாம். அதுக்குள் விஷம் ஏறிவிட்டதா? கட்டு விரியனோ!

மலர் இதற்குமுன் பிணத்தை இவ்வளவு கிட்டத்தில் பார்த்த தில்லை. சா வீடுகளுக்குப் போனாலும் ஒதுங்கியே இருப்பாள். மூன்றாவது படிக்கையில் அய்யா இறந்தபோது பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். பத்தாவது படிக்கையில் தாத்தியின் சாவீட்டில் கூட உள்ளே போகாமல் கொட்டிலிலும் கிணற்றடி யிலும்தான் சிநேகிதிகளோடு பேசிக்கொண்டிருந்தாள். விதிதான்! இப்படி அர்த்தராத்திரியில் இவ்வளவு தூரத்தில் கிழவியோடு அநாதரவாய் சிக்கவைத்துவிட்டது.

சைக்கிளிலிருந்து விலகிப் பாதையோரம் வந்தாள். அவளுக்குப் பேய் பயமெல்லாம் ஒன்றுமில்லை. மசங்கிய பிறகுகூட காணியிலிருந்து வருவாள். ‘ம்… இப்ப என்ன செய்யிறது…’ கிழவியைப் பாதையோரம் கிடத்திவிட்டு நெடுங்கேணிக்குப் போய் ரக்டரோ வண்டிலோ பிடித்துக்கொண்டு வரலாம். அங்கே ரக்டர்காரர்கள் யாரையும் அவளுக்குத் தெரியாது. தேத்தண்ணிக்கடை சின்னமணி யக்கா வீடு தெரியும். போய் எழுப்பலாம். யாரையாவது பிடித்து ஏற்பாடு பண்ணுவாள். அவர்களும் இந்நேரத்துக்கு வரமாட்டார்கள். காலையில்தான் வருவார்கள். அதிலும் தனிக்கல்லடி என்றால் மிரள்வார்கள். ஆமி காம்ப் அடித்திருக்கிற ஊர். பயம். காசு கொடுத் தாலும் எதுக்கு வம்பு என்கிற தயக்கம். கிழவியை விட்டுவிட்டுத் தனியே இப்போது நெடுங்கேணி போய்விட்டால் அது சரியா? நியாயமா? நாய் நரி ஏதாவது கடித்துவிட்டால்? விடியும் வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான். பிறகு ஆட்கள் வரத் தொடங்குவார்கள். ஆளும் பேருமென்றால் உதவியாய் இருக்கும். ஏன் இப்போதே யாராவது தற்செயலாய் வர நேர்ந்தால்… ஆமி இரவில் வெளியே வாறது குறைவுதான். இப்ப கொஞ்சநாளா பெடியங்களிட்டை முறையா அடி வாங்கிறாங்கள். ஒருவேளை பெடியங்கள் வருவாங்களோ… வந்தால் நல்லது… எப்பிடியாவது சைக்கிளில் கட்டி ஊர் எல்லைக்குக் கொண்டுபோய் விடுவார்கள்… இயலுமா அது? புலிப்பெட்டையள் இரவிரவாய் ஆமிக் காம்ப்பையே அடிக்கிறாளவை. ரெண்டு வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில இந்தியன் ஆமி பரசூட்டில இறங்க இறங்க கீழ நிண்டு குருவி சுடுற மாதிரியாம் சுட்டாளவை. ஒருத்தரும் உயிரோடை இறங்கேல்லயாம். அவளவைக்கு இதெல்லாம் ஒரு விஷயமா?’ பெண்புலிகளைப் பற்றி நினைத்தவுடன் தன்னுடைய இந்த இக்கட்டு ஒரு பொருட்டேயில்லை என்று தோன்றிவிட்டது. ஒருவேளை தானும் ஒரு புலிப்பெட்டையாயிருந்து அப்போது இப்படியொரு பிரச்சினை வந்திருந்தால்…

சரி, இதைச் சமாளிக்கலாம் என்ற தெம்பு வந்துவிட்டது. நிதானமடைந்தவுடன் சலம் முட்டுவதை உணர்ந்தாள். பாதை விளிம்புக்குப் போனாள். சரிவில் ஒரு ஆவரஞ்செடி மஞ்சள் மொட்டுகளோடு இருந்தது. சிள்வண்டுகளின் இரைச்சல் காதில் விழவில்லை. நிலவொளியில் மஞ்சள் மொட்டுகள் மின்னின. எழவும் மீண்டும் சிள்வண்டுகளின் இரைச்சல் காதில் கேட்டது.

மெதுவாகக் கிழவியின் அருகே வந்து பார்த்தாள். ஊதா கண்டாங்கிச் சேலை விலகிக் கிடந்தது. ஒருக்களித்துக் கிடந்தாள். கயிறு சுற்றிய பெரிய சைக்கிள் ஹேரியர். யோசனை ஒன்று மின்ன லாய் வெட்டியது. சட்டென உற்சாகமடைந்தாள்.

நின்ற நிலையிலேயே அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். மேகங்கள் நிலவை விட்டு வெகுதூரத்தில் திரிந்தன. மிளகாய்க் காணியில் இரவில் மலரும் பூக்களாய் வெள்ளிகள் பூத்திருந்தன. பெரிதாய் பிரகாசமாய் ஒன்று மினுங்கியது. ஆதிரை. வளர்பிறை நிலா. பத்தாம் நாளோ! சுற்றிலும் ஒளிவட்டம். நிலாவுக்குள் கிழவி. வடை சுடுவதற்காக இந்தக் கிழவி இந்நேரம் அங்கே போய்ச் சேர்ந்திருப்பாளா?

மீண்டும் கிழவியைப் பார்த்தாள். இனி தாமதம் கூடாது. கிழவியின் சேலை முந்தானையைத் தூக்கிக் கிழித்துப் பார்த்தாள். முடியவில்லை. ஓரத்தில் பல்லால் கடித்துக் கிழித்தெடுத்தாள். அதையும் நாலு நீளத்துண்டுகளாகக் கிழித்தாள். மிகக் கவனமாக சைக்கிளோடு சேர்த்தே கிழவியைத் தூக்கினாள். ஸ்டாண்ட் போட்டாள். கிழவியை முன்னே கவிழ்த்தாள். வயிறு சீட்டோடு அழுந்த உடல் முன்னே சாய்ந்தவாறு அப்படியே இருந்தது, மடங்கவில்லை. ‘சரி வராது.’

சைக்கிளோடு கிழவியை விட்டுவிட்டு விலகி நின்று பார்த்தாள். கிழவி சாயவில்லை. ஒரு பெரிய கல்லைத் தேடி எடுத்துத் திரும்பிப் பார்த்தாள். கிழவி சைக்கிளில் சமர்த்தாய் உட்கார்ந் திருந்தாள். போய் கிழவியை நிமிர்த்திப் பிடித்தவாறு சைக்கிள் சீட்டின் முனையில் கல்லால் ஓங்கியடித்தாள். இடவலமாய் அடித்தாள். ஏழெட்டு அடிக்கே ஆட்டம் கண்டது. மேலும் நாலு போட்டாள். ‘இனி கழண்டு விடும்’.

சீட்டைப் பிடுங்கிக் கீழே போட்டாள். கிழவியைக் குப்புறச் சரித்தாள். பார் கம்பியோடு உடல் தணிவாய்ப் படிந்தது. இதில் எப்போதும் நீளக்கயிறு சுற்றியிருக்கும். மூடை, கூடை, கட்டுகளைக் கட்டி எடுத்துப் போகவர. ஹேரியர், பார் முக்கோணம், கிழவி எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றோடொன்றை இறுக்கிக் கட்டினாள். அதற்கே முழுக் கயிறும் சரியாய்ப் போயிற்று. எதிர்பார்த்ததுதான். இரண்டு சேலைக் கிழிசலை எடுத்து முடிச்சிட்டுவிட்டு, கீழ் தாங்கு கம்பியோடு பாதங்களைப் பின்னவைத்துக் கட்டினாள். மீதி சேலைத் துண்டுகளால் கைகளை முதுகில் வைத்துக் கட்டிப் பிறகு பார் கம்பியோடு முடிச்சிட்டாள். ‘அவ்வளவுதான். வேலை முடிஞ்சுது. இனி எல்லாம் சுளு.’

ஸ்ரான்டைத் தட்டிவிட்டாள். சைக்கிளைத் திருப்பினாள். ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு சைக்கிளைத் தள்ளினாள். ஊரை நோக்கி நடந்தாள். ‘பெட்டையள் ஆமி ராங்கியைக் கவிழ்த்துப்போட்டு ஏறி நிக்கிறாளவை. இது வெறும் சைக்கிள்.’

பனையடிப் புங்கமரத்தைத் தாண்டினாள். தாகம் விடாய்த்தது. நாரைமடுவில் போய் இறங்கிக் குடிக்கலாம்.

ஆலமர இருளுக்குள் நுழைந்ததும் ‘கர்… கர்… கொற கொற…’ என்ற கொடூரமான பெருங்குழறல். மயிர்க்கால்கள் குத்திட்டு விட்டன. ‘பிரேதத்தைக் கண்டு ஆந்தை அலறும் என்பது உண்மையோ! பெண்புலிக்கு ஆந்தையாவது மரநாயாவது.. எதுவென்றாலும் என்ன’ என்று தோன்றியதும் நின்றாள். ‘இதை விடக்கூடாது.’ சைக்கிளை நிறுத்தினாள். ஒரு கல்லைத் தேடி எடுத்து குரல் எழுந்த திசையில் உத்தேசமாய் ஓங்கி எறிந்தாள். சடசடவென இலைகளைக் கிழித்துக்கொண்டு போனது கல். அமைதி. வேறு வேறு பறவைச் சிணுங்கல்கள் கேட்டன. இறக்கையடித்துக் கொண்டு ஆந்தையொன்று பறந்து போனது. தண்ணீர் குடிக்கலாமென்று கரையேறி மடுவைப் பார்த்தாள். நீர் வற்றிக் கிடங்குகளில்தான் கிடந்தது. ‘கலங்கலாய் இருக்கும். சேறு வேறு. வாகையடியில் குடிக்கலாம்.’

திரும்பி வந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தாள். வலது கையால் மட்டும் ஹேண்டில்பாரைத் தள்ளியவாறு இடதுகை வீசி நடந்தாள். ‘பிணம் கனக்கும் என்பார்கள். இது ஒண்டும் கனக்கேல்ல.’

இன்னும் ஒன்றரை மணி நேரம் நடக்கவேண்டும். ‘விளையாட்டுகளைப் பற்றி யோசித்துக்கொண்டே போகலாமா அல்லது கமத்தைப் பற்றி? ம்ம்… பாட்டுதான் சரி.’ மலர் என்று ஆரம்பிக்கும் பாட்டுகள் பல நினைவில் நின்றன. வானொலியின் சேவை. “மலருக்குத் தென்றல் பகையானால்…” பாடிக்கொண்டே நடந்தாள்.

தூரத்தில் வாகைமரம் தெரிந்தவுடன் தாகம் தோன்றி நாவறண்டது. பாட்டு நின்றுபோனது. பாலத்தின் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தினாள். சரிவில் இறங்கித் தாழம்புதரைத் தாண்டி ஓடைக்குள் போனாள். நீர் ஓரமாய் சலசலத்தோடியது. ஒரு பாறை யில் குந்தி உள்ளக்கையில் நீரை அள்ளினாள். தெளிந்த தண்ணீர். சில்லென்றிருந்தது. நான்காவது கை குடிக்கும்போது பின்னிருந்து ஒரு குரல் “ராசாத்தி… எனக்கும் தண்ணி…” தண்டுவடம் சில்லிட்டது. அனிச்சையாய்த் திரும்ப உடல் எத்தனிக்கையில் மனதால் கட்டுப் படுத்தினாள். ஐந்தாவது கை நீரை அள்ளி மெதுவாக அருந்தினாள். மனப் பிராந்தி. ‘மனசின் சேட்டைகளுக்கு அளவேயில்லையா! குழந்தைப் பிள்ளை அழ ஆசைப்படுவதுபோல மனசு பயப்பட ஆசைப்படுகிறது. எதைக் கண்டாலும் பயம். சாமிக்குப் பயம். நாய்க்குப் பயம். பேய்க்கும் பயம்.’

எழுந்து திரும்பிப் பார்த்தாள். கிழவி சைக்கிளில் காத்திருப்பது தெரிந்தது. ‘பகடிக் கதையாலதான் இந்த வெருளியைக் கடக்க வேணும். அந்தக் காலத்தில் இரும்பைக் கண்டே நடுங்கிய பேய் இப்ப துவக்கைக் கண்டால் அலறி ஓடும். எண்டாலும் பேய்க்குக் கண்ணிவெடி வைக்கேலாது. மிதிச்சால்தானே வெடிக்க! பாவம், முன்னயே காலில்லாத சீவன்.’

ஒன்பதாம் வகுப்பில் வனிதா சொன்னாள் “எடி, நான் பேயக் கண்டனான்.’

“எங்கை?”

“கனாவில…”

“எப்படியிருந்துச்சு?”

“வெள்ளையாப் புகைபோல மிதந்து…”

“எடி அது பேய் இல்லையடி. சினிமா ஹீரோயின். வெள்ளை உடுப்பில ஸ்லோமோஷனில வவுனியாத் தியேட்டரில் கண்டிட்டு கனவெண்டு பொய் சொல்லுறாய்.”

பிள்ளைகள் சிரித்துவிட்டார்கள்.

சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தாள். மீண்டும் பாட்டு. “மலரே என்னிடம் நெருங்காதே. நீ நினைக்கும் மனிதன் நானில்லை.”

மலர் ஊரை நெருங்கியபோது தலைக்கோழி கூவியது. தொடர்ச்சியாய்க் கூவல்கள்.

கோழிகளுக்குக் குறைவில்லை. நாய்கள் ஒன்றுகூட இல்லை. ஆட்களோடு போய்விட்டன. ஆடுமாடுகள்தான் காட்டு விலங்குகள் போல கேட்பாரின்றித் தம் விருப்பத்திற்கு மேய்ந்து திரிந்துவிட்டு வந்து வீட்டில் அடைந்து கொள்கின்றன. ஆள்களில் கிழவிகள் இருபத்துமூன்று பேர். கிழவர்கள் பதினான்கு பேர். மலர் மட்டும்தான் குமரி. இருபத்தாறு வயசுக்காரியைக் குமரி எனலாமோ?

ஊருக்குள் நுழைந்தாள். வடக்குத் தெருவில் திரும்பி கிழவியின் வீட்டை நெருங்கினாள். விறாந்தையிலிருந்து ஏழெட்டுப் பேர் சைக்கிளைப் பார்த்ததும் பரபரப்பாய் வந்தார்கள். “நெடுங் கேணிக்குக் கிட்டப் போயிட்டேன். அதுக்குள்ள முடிஞ்சுது” என்று சொல்லிவிட்டு சைக்கிளை நிறுத்தினாள்.

விறுவிறுவென்று பக்கத்து வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினாள். தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அப்படியே விறாந்தையில் படுத்துவிட்டாள். கரைசலான குரலொலிகள். சற்று நேரத்தில் பெண்களின் ஒப்பாரிக்குரல் எங்கோ தொலைவில் கேட்பதான உணர்வோடு அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

“எழும்பம்மா. விடிஞ்சு போட்டுது. பக்கத்தில ஆக்கள் கூடி நிக்கினம். எழும்பி வீட்ட போய்ப் படு.”

விழித்தபோது முதலில் எதுவும் புரியவில்லை. முழித்தாள். ஓலைப்பாயில் கிடந்தாள். இது எந்த இடம்? கண்கள் எரிந்தன. சிந்தை தெளிந்து நினைவுகள் நிரல்பட்டன. தரையில் படுத்திருந்த வளை வீட்டுக்காரி பாயை விரித்துக் கிடத்தியிருக்கிறாள். மலர் எழுந்து பின்பக்கம் போனாள். செடி மறைவில் ஒன்றுக்கிருந்துவிட்டு நீரள்ளி முகம் அலம்பிவிட்டு வந்தாள். அந்த வீட்டுக் கிழவி கொடுத்த தேத்தண்ணியைக் குடித்துக்கொண்டே விறாந்தையில் நின்றாள். சாவீட்டு முற்றத்தில் ஆண்குரல்கள். கிழவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“…அதான் சொல்லுறன். வேற வழியில்லை. குழியத் தோண்டிட்டு அப்படியே போட்டு அமுக்க வேண்டியதுதான்.”

“உம் பொண்டாட்டியயும் மாமிக்கிழவியயும் அப்படிப் போட்டு அமுக்குடா. என்னிட்டச் சொல்லாத.”

“அநாதப் பிணமா ஆயிப் போச்சி. இனி என்ன செய்யிற…”

“சீ… வாய மூடு நாயே” கிழவர் எழுந்து அடிக்கப் போனார். “தம்பி எண்டும் பாக்கமாட்டன். மிதிச்சுப் போடுவன். உன்ர குணம் அறிஞ்சுதானடா இத்தன காலம் பேச்சுவார்த்த இல்லாமல் இருந்தன். இப்பக் கிளம்பி வந்துட்டான் பெரிய மயிர் மாதிரி. அநாதைப் பிணமாம். நாலு பிள்ளையளைப் பெத்து வளத்தவளடா. பதிமூண்டு பேரப் பிள்ளைகளையும் ரெண்டு கொள்ளுப்பேத்திகளையும் கண்டவளடா.”

ஆட்கள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள். எல்லாரும் வராமல் அவளைத் தூக்குவதில்லை என்று வெகுநேரமாய் அவர் பிடிவாதம் பிடிப்பதாக இந்த வீட்டுக் கிழவி சொன்னாள். செத்தவளின் பிறந்த ஊரில்தான் பிள்ளைகள் இப்போது போய் இருப்பதாகச் சொன்னாள். குளவிசுட்டான். அது நெடுங்கேணியைத் தாண்டி நாலு மைலாம். அங்கே யார் எப்படிச் போய்ச் சொல்வது? இரண்டு மணி நேரமாக இந்தப் பிரச்சனைதான் இழுபடுகிறது.

கிழவர் கடைசியாய் ரோஷத்துடன் எழுந்து கிளம்பினார். “இவள் இங்க கிடக்கட்டும். நான் பையப் பைய நடந்து நெடுங் கேணிக்குப் போயிடுவன். அங்க கணேசர் கடையில சொன்னால் அங்கயிருந்து சைக்கிள்ல யாராவது போய் சொல்லுவினம். மக்கமார் எப்படியாவது வருவினம். அவங்களோட நானும் வருவன். அதுவரை இவளை யாரும் தொடக்கூடாது.” உடுத்தியிருந்த கிழிஞ்ச சாரத்தோடு கிழவர் கிளம்பிவிட்டார்.

மலர் டம்ளரைக் கொடுத்துவிட்டுப் போய் அவரை மறித்தாள். “ஐயா, வீட்ட போங்க. குளவிசுட்டான்தானே. நான் போய்ச் சொல்லிக் கூட்டியாறன்.”

கிழவர் திகைத்தார். எல்லாரும் எழுந்து வந்தார்கள். “நீ எதுக்குப் பிள்ள…” “சைக்கிளும் சீட் போயிட்டுது.” “இரவைக் கெல்லாம் அலைஞ்சு பாடுபட்டவள்” ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள்.

“போய் குழிய மட்டும் வெட்டி வையுங்கோ. மத்தியானத்துக்கு வந்திடுவம்.”

சைக்கிளைத் தள்ளிக்கொண்டே “சிவகாமி ஆச்சி, என்னோட வாங்க” என்று அழைத்தாள்.

வீட்டுக்கு வந்ததும் கோடிக்கு ஓடினாள். பின் தாழ்வாரத் தோடு அடைக்கப்பட்டிருந்த மரச்சட்டக் கொட்டிலின் வாசலை மறித்துக்கொண்டு இரண்டொரு நெற்சாக்குகள். சாக்கின் அடியில் பூஞ்சணம் ஏறித்தொடங்கியிருந்தது. தெற்கோரத்தில் துருப்பிடித்துத் தூசியடைந்து கிடந்தது அந்தச் சைக்கிள். பள்ளிக்கூடக் காலத்தின் ஞாபகார்த்தமாக அப்படியே போட்டு வைத்திருந்த லேடீஸ் சைக்கிள். அதைப் பார்த்ததும் அவனுடைய ஞாபகமும் வருகிறது. சினத்தோடு சைக்கிளை இழுத்தாள். தட்டுமுட்டுச் சாமான்களை விழுத்திக்கொண்டு வெளியே வந்தது. உருட்டிக்கொண்டு வெளியேறினாள்.

தாயிடம் படுத்திருந்த இரண்டு ஆட்டுக்குட்டிகள் மலரைக் கண்டதும் எழுந்து ஓடி வந்தன. ‘பெகேகக’ என்று கத்திக்கொண்டு ஒன்று துள்ளியது. எகிறித்துள்ளும் போது உடலை அகத்திப்பூ மாதிரி வளைத்துக் கழுத்தைச் சொடுக்கும். ஆடு மூன்று குட்டிகள் ஈன்றிருந்தது. பால் பத்தாமல் போகவே பசும் பாலை போச்சிப் போத்தலில் அடைத்துப் பருக்கினாள். ‘இன்னொன்று எங்க? அங்க தாய்க்குப் பின்னால தூங்குது.’ குட்டிகள் காலைச் சுற்றின. “போங்கடி. வேலை கெடக்கு.”

மலர் சுத்தியல், கம்பி, குறடு முதலானவற்றை எடுத்து வந்து தட்டிக் கொட்டி சீட்டைக் கழற்றினாள். வீட்டுக்குள் போய் கயிறுகளையும் பழைய சீலையையும் எடுத்து வந்தாள். தாழ்வாரத்தில் தொங்கிய மூங்கில் சிப்பம் ஒன்றையும் வில்லுக் கத்தியையும் எடுத்து வந்தாள். இந்த சீற் அந்தத் தாங்கு குழாயில் பொருந்தாமல் சின்னதாக இருந்ததால் ஆடியது. பழைய சைக்கிள் ரியூப்பைக் கத்தரித்து உள்ளே சொருகினாள். மூங்கில் சிம்பைப் பட்டையில் சுண்டு விரல் நீளத்தில் கூர்மையாய்ச் சீவி மூன்று ஆப்புகளாக்கி ஓரத்தில் அறைந்தாள். கயிறால் பிணைத்தாள். ‘இனி நிக்கும்.’ சீற் உறுதியாய் நின்றது. ‘எண்டாலும் நிச்சயமில்ல.’ மேலே பழைய சீலையை சீற்றுக்கு அளவாய் மடித்துப் போட்டு அதோடு சேர்த்து மறுபடி இன்னொரு கயிற்றால் முன்னைப் போலக் கட்டினாள். ‘இப்ப சரி.’ அம்மா வாசலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். “குளிச்சிட்டு வாறனம்மா.”

கிணற்றுக் கட்டில் நின்று நீரிறைத்துத் தலையில் வார்த்தாள்.

சிவகாமி ஆச்சியோடு அம்மா பேசிக்கொண்டிருப்பது கேட்டது. “இவளப் பாக்கப் பாக்க எனக்குப் பயமாய்க் கிடக்கு ஆச்சி. உங்களோடை நான் இங்க இருக்கிறன். நீ அந்த ராணி ஆக்களோட போய் இரு எண்டு நிறையத்தரம் சொல்லிப் பாத்திட்டன். கேக்குறாளில்லை. என்னை விட்டுப் போகாளாம். சரி, நாங்களாவது அங்க போய் ஒரு கொட்டிலைப் போட்டு இருப்பம் எண்டுறன். எங்கட நிலத்தை விட்டுட்டு ஏன் போகவேணும் எண்டுறாள்.”

சிவகாமி ஆச்சி அமைதியாக இருந்தாள். சற்றுநேரம் கழித்து மௌனத்தைக் கலைத்துக்கொண்டு “இவள் இங்கே கேக்கிற ஆக்களுக்கெல்லாம் குழம்பும் கறியும் கொண்டுபோய்க் கொடுக் கிறாள்… அண்டைக்குக் கூனியக்கா சொல்லுறாள் ‘ஊருக்கே உதவுறாள் அன்னபூரணி மாதிரி. தான் பால் கொடுக்க கொடுப்பினை இல்லயே. இவளுக்கு எண்டைக்கு நல்லவழி பிறக்குமோ’ எண்டு மனசுருகிச் சொன்னவள்” என்றாள்.

“பாப்பம். அந்த இத்திமரத்தாள் ஒரு வழி காட்டுவாள்.”

தலை துவட்டிய துண்டைச் சுற்றித் தொங்கவிட்டு, இன்னொரு துண்டை உடலில் சுற்றிக்கொண்டு மலர் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தாள். சிவகாமி ஆச்சி குசினியில் உளுந்தம்களி கிண்டும் வாசம் வந்தது.

“ஆச்சி ஒண்டும் வேண்டாம். நேரமாகிப் போடும். நெடுங்கேணியில் பாத்துக் கொள்ளுறன்.”

“இந்தா முடிஞ்சுது. பொறு.”

இந்த ஆச்சி தனியாள். புருஷனில்லை. பிள்ளையள் விசுவமடு வுக்குப் போய்விட்டார்கள். இவள் வரமாட்டேன் என்று சொல்லி இங்கேயே இருந்துவிட்டாள். மலர் வீட்டோடு நல்ல ஒட்டுதல். பேருக்குத் தன்னுடை வீட்ட போவாள். எந்நேரமும் இங்கேதான். சாப்பாடும் இங்கேதான். வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வாள். மலருக்கு உதவியாள் போல.

உடையணிந்து கொண்டு மலர் மணியைப் பார்த்தாள். ஏழு இருபது. தலையைச் சீவிக் கற்றையை முன்னாலிட்டுப் பின்னிக் கொண்டே குசினிக்குள் போனாள். வெந்தய வாசனை. கூடுதலாய்ப் போட்டுவிட்டாள் போல. திரும்பிப் போய் கண்ணாடி பார்த்துப் பொட்டு வைத்தாள். புருவ மையத்திற்கு சற்று மேலே ஸ்ரிக்கர் பொட்டு. பெரிய மச்சம் போல. இந்தியப் படங்களில வருகிற தமிழ்க் கதாநாயகிகள் போல..

சிவகாமி தட்டில் களியை வைத்து நடுக்குழியில் நல்லெண்ணெயை நிரவி பெரிய பனங்கட்டி வட்டை வைத்திருந் தாள். மலர் கூடத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கும்போது அம்மா வாசலில் இருந்தே உள்ளே பார்த்தவாறிருந்தாள். களி கொதித்தது. சிவகாமி பக்கத்தில் உட்கார்ந்து பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தாள்.

அம்மாவைக் கடந்து படியிறங்கும்போது மலர் சொன்னாள் “அம்மா, ஒண்டும் யோசியாதீங்கோ. ஏழும் நாலும் பதினோரு மைல். ராணியைப் பாக்க இதைவிட ரெண்டு மடங்கு தூரம் சைக்கிள் ஓடினன். இது ஒண்டுமில்லை. நித்திரை கொண்டனான்தானே, அலுப்பில்லை. நீங்கள் சாப்பிடுங்கோ. நான் மத்தியானத்துக்கு வருவன்.” சைக்கிளில் ஏறிக்கொண்டு அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள். திரண்டிருந்த கண்ணீர் வழிந்தது.

நெடுங்கேணி  பாண்கடை முன்னே சைக்கிளை நிறுத்தினாள். “அக்கா, ஊரிலை ஒரு சாவீடு. அவசரம். நான் உங்கட சைக்கிளை எடுத்துக்கொண்டு குளவிசுட்டான் வரைக்கும் போட்டு வாறன். நீங்கள் என்ர சைக்கிளை பழுதுபாத்து வைக்கச் சொல்லி அந்தக் கடை திறந்தாப்பிறகு குடுத்துவிடுங்கோ. புது சீற், இல்லாட்டி இந்தப் பழைய சீற்றயே போடச் சொல்லுங்கோ” என்று கையிலிருந்ததைக் கொடுத்தாள். கடைக்காரி மேலும் பேச முற்பட்டபோது “நான் வந்து சொல்றன்” என்று சொல்லிவிட்டு கடைக்குப் பின்னேயிருந்த அவளுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

குளவிசுட்டானில் வீட்டை விசாரித்துப் போய் வாசலில் நின்றாள். இரண்டு சின்னக் கொட்டில்கள் புதிதாய் முளைத் திருந்தன.

பிள்ளைகள் காணிவேலைக்குப் போயிருந்த தாய்தந்தையரைக் கூப்பிட ஓடினார்கள்.

அண்ணனும் தம்பியும், மனைவிமார்களும் வந்து சேர்ந்தார் கள்.

அவர்களுடைய தங்கச்சிகளை இங்கேதான் பக்கத்து பக்கத்து ஊர்களில் கட்டிக் கொடுத்திருந்தது. தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தார்கள். இருக்கிற நிலைமையில் அண்ணனும் தம்பியும் மட்டும்தான் தங்களுடைய சைக்கிள்களில் கிளம்ப முடியும் போலிருந்தது. மனைவிமாரும் சொந்தக்காரர்களும் தாங்களும் வருவதுதான் முறை என்றார்கள். தங்கச்சிகள்? “பொம்பிளையள என்னெண்டு அவ்வளவு தூரம்…”

“ரக்ரர் பிடிப்பம்” என்றாள் மலர்.

மௌனமாய் இருந்தார்கள். பிறகு அண்ணன்காரர் மெதுவாக இழுத்தார் “அவை கடன் சொன்னா வருவினமோ தெரியா.”

“உங்கட அய்யாதான் என்னிட்ட ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டவர். ரக்டர் பிடிச்சு, புதுத்துணி வாங்கிக்கொண்டு வரச் சொன்னவர்” என்றாள் மலர்.

“அவரிட்ட எங்கால காசு?”

மலர் சுதாகரித்தாள். “தன்ர செத்தவீட்டுக்கு எண்டு ஆருக்கும் தெரியாமச் சேத்து வச்சிருந்தவராம். அவள் முந்திட்டாள் எண்டு ஒரே புலம்பல்.”

“முசுட்டுக் கிழவனெண்டு நினைச்சிருந்தம். ஆளப் பாரடா!” என்று பெருமைப்பட்டார் தம்பிக்காரர்.

“பிள்ளையளோட நாங்கள் அந்தரிச்சித் திரியிறம். கிழவன் ஒரு சல்லி கைவிட்டதில்லை. கிழவியும் கள்ளிதான்” என்று புறுபுறுத்தாள் மூத்தவருடைய மனைவி.

அண்ணனும் தம்பியும் ஆளுக்கொரு திசையில் தங்கச்சிகளின் குடும்பத்தைக் கூட்டிவரக் கிளம்பினார்கள்.

மலர் சொன்னாள் “அலுப்பாக் கிடக்கு. வேம்படியில சாயிறன். எல்லாரும் பெட்டியில ஏறின பிறகு என்னை எழுப்புங்கோ.”

விழித்தபோது ரக்ரர் பெட்டியில் முக்கால்வாசிக்கு ஆணும் பெண்ணும் குஞ்சி குளுவான்களோடு உட்கார்ந்திருந்தனர். அவளுடைய சைக்கிளும் ஏற்றப்பட்டிருந்தது. வாளித் தண்ணீரில் முகம் கழுவிவிட்டு கை லேஞ்சியை உருவி முகம் துடைத்துக் கொண்டே பெட்டியில் கால்களை வெளியே தொங்கப்போட்டு இருந்தாள். ‘இந்தப் பாதையில எப்பிடியும் குலுக்கி எடுக்கும். நாளைக்குச் சுகமில்லாமல் வரும்… மூண்டுநாளும் கொதியை ஆரில காட்டுறதெண்டு தெரியாமலிருக்கும்.’

நெடுங்கேணி கடைவீதியில் ரக்ரர் நின்றது. “எல்லாரும் இறங்கி நில்லுங்கோ. இங்கயே சாமான்களெல்லாம் வாங்கிக் கொண்டு போவம். நான் இந்தச் சைக்கிளைக் குடுத்திட்டு வாறன்.”

கிழக்கு வீதியில் கிராமிய வங்கியிருந்தது. இரண்டாயிரம் ரூபாய் எடுத்துவந்தாள். மூத்தவரிடம் ஐநூறைக் கொடுத்து “புதுச்சீலை மற்றது தேவையான சாமான்களையெல்லாம் வாங்குங்கோ. பொடியங்கள் என்னோடை வாங்க” என்று நாலைந்து சிறுவர்களைக் கூட்டிக்கொண்டு பாண்கடைக்குப் போனாள். புதுசீற்றோடு அவளுடைய சைக்கிள் நின்றிருந்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் கைவிட்டு ஏழெட்டுப் பணிஸ்களை எடுத்து சிறுவர்களிடம் கொடுத்தாள். “அக்கா, ரக்ரரில் ஒரு முப்பது பேரைக் கூட்டிக்கொண்டு போறன். அங்க ஏற்கனவே முப்பத்தேழு பேர். குழந்தைப் பிள்ளைகள் வேற இருக்கு. அவைக்கு பால்மா பாக்கெற்றுகள் வாங்குங்கோ. கடையில உள்ளது எல்லாத்தையும் மொத்தமா மூட்டை கட்டினாலும் இது காணாது. வாழப் பழக் குலைகள், பப்பாளிப் பழங்களை வாங்குங்கோ. இந்தப் பெடியள்ட்ட குடுத்து விடுங்கோ. ரக்டரில ஏத்தட்டும். நான் கடையில நிக்கிறன்” என்று நான்கு தாள்களை உருவிக் கொடுத்தாள். “அக்கா, வேம்படியில விசரி நிண்டவள். ஒரு பாணைக் கொடுத்துட்டுப் போங்கோ.”

பொடியன்களைக் கூட்டிக்கொண்டு ஆவுடையக்கா கடை வீதிக்குப் போனாள். மலர் உள்ளே போய் விசுக்கோத்தை எடுத்துக் கடித்துக்கொண்டே ஸ்ரூலில் உட்கார்ந்தாள். கண்ணாடி அலமாரி யில் சொருகியிருந்த ‘வீரகேசரி’ பேப்பரை எடுத்து விரித்தாள். ‘பரந்தன் தாக்குதலில் இருபத்தாறு பேர் மரணம்.’

பாண் கடைப் பார்சல்களைக் காவிக்கொண்டு பிள்ளைகள் முன்னே நடக்க, மலர் தன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனாள். வேம்பு மரத்தடியில் விசரியைக் காணோம். மலர் உயர்தரம் படித்த காலத்திற்தான் திடீரென்று இங்கே விசரி முளைத்தாள். அப்போதே ஐம்பது வயதிருக்கும். ’இஞ்சருங்கோ.. என்னங்கோ..’ என்று யாழ்ப்பாணத்துக் கதையில் புலம்பிக் கொண்டேயிருப்பாள். ‘இந்தப் பக்கத்திலும் அப்படித்தானே கதைக்கினம்’ என்று மலருக்குத் தோன்றும். ‘இல்லை.. யாழ்ப்பாணக் கதைக்கும் வன்னிக்கதைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. என்ன வித்தியாசம்.. ஆ.. அது சரியாப் பிடிபடுகுதில்ல…’ அந்தக் கிழவியை யாரோ கூட்டி வந்து இரவில் இங்கே கைவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்று கதையடி பட்டது. மலர் அவ்வப்போது தன்னுடைய பழைய சட்டைகளைக் கொண்டுவந்து பாண்கடை அக்காவிடம் தருவாள். அவள்தான் கிழவியை மறைவாய் இழுத்துப்போய் ஊத்தை நாறும் பழையதை உரிந்துவிட்டுப் புதிதை மாட்டி விடுவாள். தினமும் விசரிக்கு பாண் கொடுக்குமாறும் அதுக்குப் பணம் தான் கொடுத்து விடுவதாகவும் மலர் சொன்னாள். “அதுக்கு ஆளாளுக்கு ஏதோ தருவினம். நானும் குடுப்பன். கடையடியில படுக்கும். என்ன.. ஆமிக்காரங்களை நினைச்சாத்தான் கலக்கம்… அவங்கள் குமரு, கிழடு, விசரெண்டெல் லாம் பிரிச்சா பாக்கிறாங்கள்.. நாயள்…” இதோ புளியமரத்தடியில் விசரி படுத்துக் கிடக்கிறாள். மார்பில் பாண் பொதி. கடல்நீலச் சட்டை சாம்பல் நிறத்திலிருந்தது. வெள்ளைப் பூக்களையே காணோம். அந்தப் பூ வேலைப்பாடு பிடித்துப் போய்தான் மலர் அதை வாங்கியிருந்தாள். முன்பொருநாள் அவன் சொன்னான். “பழைய உடுப்புக் குடுக்கிறது சரி. பாண் வேண்டக் காசு குடுக்கிறதெல்லாம் கூடிப்போச்சு. பெரிய கர்ண மகாராணியெண்டு நினைப்பு…”

‘விசரன்… கஞ்சப்பயல்… காசைத் தவிர வாழ்க்கையே இல்லை யெண்டு நினைக்கிறவன். கட்டிச் சீரழிஞ்சிருப்பன். நல்லவேளை தப்பித்தது நாகதம்பிரான் புண்ணியம்.’

விசர்க்கிழவி வெயில் தாங்காமல் தூங்குகிறாள் போல. விலங்கு போலத்தான். குளிப்பதேயில்லை. எந்த வியாதியும் வந்ததில்லை. வந்திருக்கலாம். அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. சுற்றிலும் நிகழும் நடப்புகளோடு அவளுக்குத் தொடர்பேயில்லை. முந்தைய நினைவுகள் வயல் தொளியடிச் சேற்றில் புதையுண்ட பசுந்தழைகள் போலச் சிக்குப்பட்டனவா? பின் எப்படி ஓர்மையோடு புலம்புகிறாள்? இவள் இப்படியாகுமாறு சபித்தது யார்? கைவிட்டது யார்? பாலூட்டி வளர்த்த பிள்ளைகளுக்கு அம்மாவின் நினைவே வரவில்லையா? இவள் இருப்புக்கான அர்த்தம் என்ன? பிறந்து விட்டாள். இடையில் என்ன நடந்ததோ! இதோ இன்னும் இருக்கிறாள். உண்டு உயிரோடிருக்கிறாள். இருக்கட்டும். ‘இவளும் வாழத்தானே வேண்டும்.’

வாகையடிப் பாலத்தைக் கடந்து ரக்ரர் ஒரு மைல் போனதும் எதிரே ஆமி ட்ரக் தனிக்கல்லடி முகாமிலிருந்து வந்தது. கைகாட்டி நிறுத்தினார்கள். என்ன ஏது என்ற கேள்விகள். ஊரில் சாவீடு என்றதும் சரி என்று விட்டுவிட்டார்கள். ‘யாரோ நல்லவங் களாக்கும்’ என்று மலர் நினைத்தாள். தனிக்கல்லடி முகாமில் ஒரு அதிகாரி இருந்தான். இருக்கின்றானா அல்லது வந்துபோகிறவனா தெரியவில்லை. பெயர் என்னவோ ஒரு மேனன் என்று சொன்னார்கள். மலையாளியாக்கும். பார்வையில் கண்ணியம்தான். ஆனால் வாயைத் திறந்தால் நஞ்சுக் கேலி. “உங்க ஊர்ல என்னதான் பிரச்சின… எல்லாரும் தனித்தனியா நிலம் வைச்சிருக்கிறீங்க.. ஆளுக்கொரு கிணறு வைச்சிருக்கிறீங்க… வயல் இருக்கு… விவசாயம் பண்ணுறீங்க… யாழ்ப்பாணத்தில ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியா டாய்லெட்டே இருக்கு… அப்புறமும் என்னதான் பிரச்சினை…” என்று ஒருநாள் கேட்டான். முறுவலோடு கடந்துவிட்டாள். ‘ஏனடா, எங்களுக்கு என்ன பிரச்சினையெண்டு தெரியாமலே இங்க வந்தீங்களா?’ மனது கேட்டது.

இருபதடி போன ட்ரக் மறுபடி ரிவேர்ஸில் வந்து நின்றது. குதித்து இறங்கினார்கள். சிலருக்குத் தாடி தலைப்பாகை. சிலருக்கு யப்பானிய முகம். ரக்ரிலிருந்தவர்களை இறங்கச் சொன்னார்கள். உடலைத் தடவிச் சோதித்தார்கள். கடுகெண்ணெய் வீச்சம் குமட்டி யது. “குண்டு இருக்கா?” மலர் கொதிப்பை அடக்கமுடியாமல் தத்தளித்தவாறு தலைகுனிந்திருந்தாள். மூத்தவருடைய மனைவி முனகினாள் “பாடையில போவாங்கள்.” ரக்ரரின் கீழேயும் குனிந்து தேடி விட்டுப் பிறகு போகச் சொன்னார்கள்.

ரக்டர் சாவீட்டில் நின்றபோது மணி மூன்றிருக்கும். அம்மா அங்குதான் இருந்தாள், அதனால் மலர் வீட்டுக்குப் போகவில்லை.

அழுகைகள் ஓய்ந்து பிணம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

மலர் ரக்ரர்காரரிடம் கேட்டாள் “அண்ணை, எவ்வளவு?”

“இதுக்கு என்னெண்டு…”

“சும்மா சொல்லுங்கோ.”

“எண்ணெய்க்கும் ஓடுறதுக்கும்தான். ஒரு அறுநூறெண் டால்…” மலர் எதுவும் சொல்லாமல் எண்ணத் தொடங்கவும் “சரி தங்கச்சி. ஐநூறு குடு” என்றான்.

வேற்று சனத்தைக் கண்டதும் ஆட்கள் ஆவலாகப் பேச்சைத் தொடங்கிவிட்டனர்.

ஊரே உளுத்துப் போய் குப்பையாய்க் கிடக்கிறது; தெருவெல்லாம் செத்தை கூளம் சாணி புளுக்கைகள்; வாசல்கள் கூட்டாமல் தெளிக்காமல் கோறையாய்க் கிடக்கின்றன; இடுகாடு போலாகிவிட்டது; பேய் நடமாடும் பாழ்நிலம் போல – என்றார்கள் வந்தவர்கள்.

இத்திமரத்தை அறுத்து ஆமி தடுப்புச் சுவர் வச்சதோட ஊர் இப்படிப் போட்டுது என்றார்கள் இவர்கள்.

ஆள் அசுமாத்தமில்லாததால் காட்டு விலங்குகள் ஓடைக்கரை வரை வருகின்றன; தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஓர் ஆட்டை ஒரு சிறுத்தை கழுத்தைக் கவ்விக் காவிக்கொண்டு போனதைத் தான் பார்த்ததாக ஒருவர் சினிமாப் படம் போலச் சொல்லிக் கொண்டிருந்தார். புளுகிறாரோ…

ஆண்கள் பாடையைத் தூக்கிச் சென்றதும் மலர், அம்மா, சிவகாமி மூவரும் வீடு திரும்பினார்கள். மலர் கிணற்றடியில் பப்பாளி மரத்திற்குப் பக்கத்தில் கிடாரத்தில் தண்ணீர் இறைத்து சுட வைத்தாள். அம்மா கிணற்றுக்கட்டின் விளிம்பில் உட்கார்ந் திருந்தாள். சிவகாமி பச்சைத்தண்ணீரையள்ளித் தலைக்கு வார்த்தாள். “ஆச்சி, தலை தோய்ஞ்சபிறகு உள்ள போய் எண்ணெய் போத்தலை எடுத்துக்கொண்டு வாங்கோ. இண்டைக்குத் தேச்சு முழுகப் போறன்” என்றாள் மலர்.

சிவகாமி தலையைத் துவட்டிக்கொண்டே உள்ளே சென்று வேறு சேலை உடுத்திக்கொண்டு போத்தலை எடுத்து வந்தாள். மலர் பாவாடையை உயர்த்திக் குறுக்காகக் கட்டியிருந்தாள். கையை நீட்டி எண்ணெயை வாங்கினாள்.

“நான் தேய்ச்சு விடுறன்.”

“வேண்டாம் ஆச்சி. குடுங்கோ.”

“இஞ்ச விடு… அலைஞ்சு அலுத்துப்போனாய்…” சிவகாமி ராங்கியோடு எண்ணெயைக் கையிடுக்கில் ஊற்றி கழுத்தில் வழித்து இரு தோளோடும் உருவிவிட்டாள். மினுமினுத்த தேகத்தைத் தாய்க்காரி பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் ஏனென்றறியாத துயரம்.

கால்மணி நேரத்தில் தண்ணீர் சுட்டு ஆவி பறந்தது.

“ஆச்சி, தேய்ச்சது போதும். ரெண்டு வாளி தண்ணி அள்ளி கிடாரத்தில ஊத்துங்க.”

தண்ணீர் பதத்துக்கு வந்தபிறகு தாயை அழைத்தாள் “அம்மா, வாங்கோ.”

அம்மாவுக்கு முடியாமல் போனதிலிருந்து மலர்தான் தினமும் குளிக்கவார்ப்பாள். அம்மாவுக்கு மட்டும் சுடுதண்ணி. மலருக்கு எந்தக் குளிரிலும் மழையிலும் கிணற்றுநீர்தான். அம்மாவின் வாதத்துக்கு தைலம் தேய்த்துவிடுவதும் மலர்தான். நீவி நீவி ஆரம்பத்தில் ஐந்தாறு மாதத்திலேயே முக்கால்வாசி சரியாக்கி விட்டாள். கக்கத்தைத் தாங்கும் ஊன்றுகோலோடு தாய்க்காரியால் நடக்கமுடிந்தாலும் இன்னொருவரின் துணையும் வேண்டும். முற்றாகக் குணமாகாமல் இத்தனை வருஷமாய் இழுத்துக் கொண்டிருக்கிறது.

அம்மாவுக்குத் தலை துவட்டினாள். சட்டை அணிவித்து சிவகாமியைக் கூட்டிச்செல்லச் சொன்னாள். “கூட்டிக்கொண்டு போங்க. நான் குளிச்சிட்டு வாறன்.”

மஞ்சள் தூள் டப்பாவைத் திறந்து உள்ளங்கையில் கொட்டி நீர்த்துளி சொட்டிக் கரைத்தாள். மூன்று விரல்களில் அப்பி நெற்றி யிலும் கன்னங்களிலும் அழுத்திப் பூசினாள். மஞ்சள் வாசத்தை மூச்சிழுத்து முகர்ந்து பார்த்தாள். கிணற்று வேலியில் அணிலொன்று துள்ளி ஓடியது. கீச் கீச் என்ற சத்தம். வேலியிலிருந்து தென்னைக்குப் பாய்ந்தது. வால்குஞ்சத்தை அசைத்தபடி வட்டுக்குள் ஏறி மறைந்தது.

மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் பாத்தியில் தேங்கிநின்ற நீர் மினுங்கியவாறு வழிந்தோடியது. மேற்கில் செஞ்சுடர். நெல்லிமரத்திலிருந்து ஒரு குயில் ‘குக்கூவ்’ என்றது. அது அக்கா என்று கூப்பிடுவதுபோலவே கேட்டுப்பழகிவிட்டது. தலையைத் துவட்டித் துவாயில் முடிந்தாள். பிடித்த சந்தன நிறச்சட்டையை தலைக்குள் நுழைத்து கீழே இழுத்துவிட்டுக்கொண்டாள். ஈரப்பாவாடையை கால்களில் வழித்துக் கழற்றி முறுக்கினாள். படக் படக் என்று காற்றில் அறைந்து நீர்போக்கிவிட்டு நெல்லிமரத் துக்கும் பப்பாளிக்கும் இடையில் கட்டியிருந்த கொடியில் காயவிட்டாள். நெல்லி இலைகளும் தகதகத்தன. குயிலைத் தேடினாள். ’இந்தப்பக்கமிருந்துதானே கூவினது…’ “குக்கூவ்…” எதிர்க் குரல் கொடுத்துப் பார்த்தாள். பப்பாளிப் பழங்கள் மஞ்சள் வெயி லேறிப் பொன்னிறத்திலிருந்தன. தலைமயிரை விரித்து அகப்பைப் பிடியால் அடித்து விசிறினாள். குயில் எங்கிருந்தோ கூவியது.

பின்வாசலில் நின்று மலரையே பார்த்துக்கொண்டிருந்த சிவகாமி நிலத்தைப் பார்த்து மூன்று முறை துப் துப் என்று துப்பிக்கொண்டாள். மலர் அப்படியே மஞ்சள் நதியில் மிதப்பதைப் போன்ற பொலிவு. கண்கள் பொங்க முன்திண்ணைக்கு ஓடினாள். “மாலை வெயிலுக்கும் மஞ்சள் பூச்சுக்கும் தங்கச்சிலை போல நிக்கிறாளடி. பாத்துப் பாத்து எனக்கு கண் நிறைஞ்சு போச்சு” என்று அம்மாக்காரியிடம் சொன்னாள்.

அம்மாவுக்குக் கண்கள் மின்னின.

தண்ணீர் கொதித்த அடுப்பிலிருந்து தணல் கங்குகளைத் தட்டியெடுத்துத் தட்டில் நிறைத்துச் சாம்பிராணிப் பவுடரைத் தூவிக் கையால் விசுக்கியவாறு வந்தாள் சிவகாமி. “இதில இரு பிள்ள” மலர் அமரவும் கேசத்தை விரித்துக் கைகளில் தாங்கியவாறு புகை காட்டினாள். கூந்தலின் இழைகளில் புகுந்த வெண்புகை நெளிந்து வெளியேறியது.

மலர் சுவரிலிருந்த சிவன் பார்வதி படத்தின் முன்னே நின்றாள். பறித்துவந்த இரண்டு செம்பருத்திகளில் ஒன்றைப் பார்வதியின் காலடியில் வைத்தாள். சற்றுக் கீழே மரத்தாங்கியி லிருந்த சிறிய பஞ்சமுகக் குத்துவிளக்கை ஏற்றினாள். மஞ்சள் சுடர்கள் பற்றி எழுந்து வேப்பமுத்துப் போல நின்றன. ஊதுபத்தியை ஏற்றி ஆராதனை காட்டிவிட்டு தாங்கியில் செருகினாள். மணம் புகையாய் எழுந்து கலைந்து அலையலையாய் விரிந்து வளைந்து கரைந்தது; கூடத்தில் இன்னும் எஞ்சியிருந்த சாம்பிராணி வாசனையோடு கலந்தது. கை கூப்பி நெஞ்சில் ஒற்றினாள். நெற்றியில் கீற்றாய்த் திருநீறை இட்டுப் பொட்டும் வைத்தாள். செம்பருத்திப் பூவைத் தலையில் சூடினாள். உடல் இலகுவாகியது. மனம் மிதந்தது. ஒரு கணம் வீடு என்ற உணர்வு மறைந்து செடிகளெல்லாம் மலர் களாகிப் பூத்து நிறைந்த நிலவெளியில் இருப்பதாகத் தோன்றியது. இரு கன்னத்தையும் தொட்டுக்கொண்டாள். வெளியே வந்து அம்மாவிற்குப் பக்கத்தில் அமர்ந்தாள்.

“நான் இத்திமரத்துக்கு விளக்கேத்திட்டு கயிறு மந்திரிச்சுக் கொண்டு வாறன்” சிவகாமி ஆச்சி கடந்துபோனாள். முன்னரென் றால் மலர்தான் போவது வழமை. அந்த வெட்டையை அடைத்துக் கொண்டு ஆமிகாம்ப் வந்தபிறகு போவதில்லை.

“குளவிசுட்டானுக்குப் போட்டு வந்தன் அம்மா… வள்ளி யம்மைக்குப் பிள்ளை குட்டியெண்டு முப்பது முப்பத்தைஞ்சு சொந்தம். ரக்ரர் பிடிச்சுத்தான் வந்தவை.”

அம்மா பெருமூச்சு விட்டாள். “நான் செத்தா எனக்கு நீ மட்டும்தான்… வேற ஆர்… கொள்ளி போட பேரப்பிள்ளைகளா இருக்கு?”

“அவ்வளவு கெதியா அதெல்லாம் நடக்காது. என்னோடை காலாகாலத்துக்கு இருப்பீங்கள்.” மலர் தாயின் தோளைக் கட்டியணைத்தாள்.

இருட்டுப் பரவிய நேரத்தில் சிவகாமி திரும்பிவந்தாள். மலரின் இடது மணிக்கட்டில் கயிற்றைச் சுற்றி முடிச்சிட்டாள். “இனி எந்தப் பேய் முனியும் கிட்ட நெருங்காது.”

ஏழரை போல கதவைத் திறந்துகொண்டு குளவிசுட்டான் காரர்கள் வந்தார்கள். முற்றத்தில் குழுமி நின்றார்கள். மலர் “வாங்க” என்றவாறு எழுந்துபோனாள். மூத்தவர் கையெடுத்துக் கும்பிட்டார். கண்ணீர் எட்டிப்பார்த்திருந்தது. “அந்தச் சாமியே வந்து சேதி சொன்னமாதிரி…” மலருக்குக் கூச்சமாயிருந்தது. “உள்ள வாங்க. தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்க” என்றாள். “இல்ல… நாங்கள் வெளிக்கிடப்போறம்.” “சரி. கவனமாப் போட்டு வாங்க.”

எட்டரைக்கெல்லாம் சிவகாமி இரண்டு தட்டுகளில் புட்டைப் போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். “என்னால உங்களுக்குத் தான் வீண் கரைச்சல்…” மலர் தட்டை வாங்கினாள். “ரெண்டு சுண்டு மாவைக் கொத்திறதில என்ன கரைச்சல்…” சிவகாமி அடுப்படிக்குள் சென்று தனக்கான தட்டுடனும் செம்பில் தண்ணீரோடும் வந்தாள். மூன்று பேரும் மெதுவாகச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

“ராத்திரி போகேக்க உனக்குப் பயமில்லையா பிள்ளை?” சிவகாமி வாய்க்குள் புட்டைக் குதக்கிக்கொண்டு கேட்டாள்.

“என்ன பயம்… பாடிக்கொண்டு வந்தன்.”

“என்ர ஆச்சியும் இப்படித்தான் துணிஞ்ச கட்டை. ஆனால் அப்ப காலம் சரியாயிருந்திச்சு. இப்ப கந்தறுந்து கிடக்குது.”

“அந்தக் காலம் திரும்ப வரும்” மலர் குறும்பாகப் புன்னகைத்தாள்.

ஒன்பது மணிக்குக் கண் சொருகத் தொடங்கிவிட்டது. நேற்றிரவிலிருந்து ஒழுங்கான நித்திரையில்லை. “சரி நான் படுக்கப்போறன்.”

“ஓ.. நேரத்திற்குப் படுங்க” சிவகாமி அடுப்படிக்குச் சென்றாள். மலர் தாயின் தட்டை வாங்கிக்கொண்டு எழுந்தபோது வெளியே வந்தாள். “சரி. நான் போட்டு நாளைக்கு மத்தியானம் வாறன்.”

“ம். கடவையைக் கட்டிட்டுப் போங்க.” தாயைத் தூக்கித் தாங்கி நடத்தினாள். ஊன்றுகோலைச் சுவரில் சாய்த்துவிட்டு மரக்கட்டிலில் உட்கார்த்தினாள். கீழே தனக்குப் பாய் விரித்தாள். “லாம்பை திரிகுறைச்சு எரியவிடு பிள்ளை” என்றாள் அம்மா.

சுவர் மூலையில் லாம்பை வைத்துவிட்டு தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டு சரிந்தவள்தான் கணநேரத்தில் தூங்கிவிட்டாள். தலையணை இருந்தாலும் வலது கையை மடித்து அணையாக்கிக்கொண்டு படுக்கிற பழக்கம். அம்மா வாஞ்சையோடு பார்த்தாள். ‘வீறாப்பா நினைச்ச காரியத்தைச் செய்து முடிக்கிறவள் என்றாலும் குழந்தைபோல்தான்.’ மலருக்குச் சிறுவயதில் விரல் சூப்புகிற பழக்கமிருந்தது. அதை மறக்கடிக்கத் தாய்க்காரி எவ்வளவோ செய்துபார்த்தாள். வேப்பம் எண்ணெயை பத்து விரல்களிலும் நீவிவிட்டுத்தான் நித்திரைக்குக் கொண்டுசெல்வாள். ஒருநாள் இரவு விழித்துப்பார்த்தால் அம்மாவின் விரல்களைச் சூப்பிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்திருந்தாள். இப்பொழுதும் அப்படித்தான், உடலை வளைத்துக் குறண்டிக்கொண்டு படுப்பாள்.

அம்மா அவளைப் பார்த்தவாறு கட்டிலில் சாய்ந்தாள்.

மலர் சைக்கிள் ஓடிக்கொண்டு போகிறாள். ஆள் நடக்கும் வரப்பில் சைக்கிள் ஓடுகிறது. இருபுறமும் வயல்வெளி. இப்போது தான் வேர்பிடித்த நெற்பயிர்கள். எங்கும் பசுமையின் தளிர்க்கோலம். ஊடே வெண்புள்ளிகள் இட்டதுபோலக் கொக்குகள்.

வரப்பு நேர்தடமாய் நீண்டுகொண்டே போகிறது. சூரியன் விடைபெறுகிறான். மஞ்சள் வெயில். வயல் எல்லாம் கதிர் முற்றி அப்படியே நெற்பயிர் சாய்கிறது. பயிர்த்தோகைகள் பொன்னொளி பட்டுத் தங்கமாய்த் தகதகக்கின்றன. பயிர்களுக்குள்ளிருந்து எழுந்து தோகைகளை மீறித் திமிறிக்கொண்டு கொக்குகள் வானில் பறக்கின்றன.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று தடவை ஓங்கித்தட்டுகிறார்கள்.  மலருக்கு விழிப்பு வந்துவிட்டது. எழுந்தாள். கடிகாரத்தின் பச்சை முள் 3.10 என்றது. ‘வள்ளியம்மைக் கிழவியின்ர ஆவியா’ என்று நினைத்தபோதே புன்முறுவலித்தாள்… “யார் எண்டு கேள். திறக்காதை” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்த வரைக்கும் தாமதிக்கவில்லை, தாழ்ப்பாளை நீக்கிவிட்டாள். விசையோடு கதவு தள்ளுப்பட்டது. கடுகுநெய்யின் வீச்சம் குப் என்றது. பின்னால் வளைத்து மலரின் வாயைப் பொத்தினான் ஒரு ஆமிக்காரன். திமிறிக்கொண்டு கையைக் கடித்தாள். உள்ளங்கையில் பற்கள் வழுக்கின. அவளை உதைந்து தரையில் விழுத்திப் பாய்ந்தான்.

அம்மா ஓவென்ற முன்னரே ஆமிக்காரன்கள் துணியைத் திரட்டி அவளுடைய வாய்க்குள் அடைந்துவிட்டார்கள். மின்சாரக் கம்பியால் கடவாயில் அழுத்தி இழுத்துப் பிடரில் சுற்றினார்கள். அவள் திமிறி எழப்பார்த்தாள். இயலவில்லை. பாதம் வழுக்கியது. விழுந்தாள். ஒருவன் அவளைத் தூக்கி கட்டிலில் எறிந்தான். கைகள் மேலே விசிறிக்கிடக்கச் சரிந்தாள். அவளது இரு மணிக்கட்டுக்களை யும் முரட்டு விரல்களால் நெரித்தவாறு மேலே வந்தான். காட்டெருமையின் மூஞ்சை. உடலைப்புரட்டி அலைவித்தாள். முகத்தில் அறைந்தான். காதில் கிண்ணென்றது. ஓய்ந்தாள். நான்கு கரங்கள் கால்களைப் பிரித்தன. நிலம் பிளந்துவிட்டது. கரும்பாறை கள் உருண்டு விழுந்து அவளை மூடின. கீழே கீழே கீழே… கருங்குளம். மூச்சுத் திணறத் திணற மூழ்கினாள். மலர்… மலர்…

“அம்மாவையாவது விடுங்கடா நாயளே…” மலருடைய திணறும் குரல் எங்கோ அடியாழத்தில் கேட்டது. மயக்கமாயிருந்தது. உடல் மிதந்துகொண்டு மேலே வந்தது.

காலை வெளிச்சத்தில் மலருடைய அனுங்கலான குரல் கேட்டது. இரவிரவாக மேலே விசிறுப்பட்டுக் கிடந்த கைகள் அப்படியே கிடந்திருக்கின்றன. தாய் விழித்ததும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த மலர் எழுந்து வந்தாள். இடது கால் நொண்டியிழுத்தது. தொப்புள் கொடியிலிருந்து சொட்டுவதைப் போல ரத்தத்துளிகள் தரையிற் சிந்தின. அம்மாவின் அழுதுவழிந்த கண்கள் ரத்தச் சொட்டுகளில் நிலைகுத்தி நின்றன. ஓவென்று அழுதாள். கருப்பையில் நெருப்புச் சூடு. செந்தீ ஆங்காரமாய் விளாசி எரிந்தது. மலர் அழவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீரும் இல்லை. அம்மாவைத் தூக்கி இருத்தினாள். அடிவயிற்றில் கனக்கும் வலி. மலர் கால்களை விந்தி விந்திப் பின்வாசலுக்கு நடந்தாள்.

அவள் போனதும் அம்மா எழுந்தாள். ஊழிக்காற்று. மூச்சுக்காற்று புயலைப்போல வெளியேறியது. ஊன்றுகோலை ஊன்றி வெளியே வந்தாள். உடலைக் கிழிக்கின்ற நோவு. விறாந்தை யில் நேற்று மலருக்கு மந்திரித்துக் கட்டிய கயிற்று முடிச்சை வெட்டிவிட்டு சிவகாமி வைத்துப்போன வில்லுக் கத்தியிருந்தது. எடுத்தாள். தேகம் விதிர்த்தது. ஆங்கார வெறி. காலை இழுத்துத் தெருவில் இறங்கினாள். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு கலையாடியைப்போல வெட்டையை நோக்கிப் பாய்ந்து நடந்தாள். மறித்துக்கொண்டு ஆமி காம்ப். செக் போஸ்ற் கூண்டுக்குள் இரண்டு பேர் நீட்டிய துப்பாக்கியுடன் என்ன என்பதைப்போலப் பார்த்தார்கள். அம்மாவின் தேகம் வெறிகொண்டாடியது. ஊன்றுகோல் நழுவி விழுந்தாள். மண்ணில் அரக்கி அரக்கி முன் நகர்ந்தாள். கூண்டுக்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தார்கள். “ஸ்டாப்.. ஸ்டாப்..” என்றார்கள். அம்மா அவர்களை எரித்து விடுவதைப்போலப் பார்த்தாள். மண்ணைப் பிராண்டி காற்றில் வீசினாள்… அலறல்… சாபத்தின் பேரொலி. “பெத்த தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்…” வில்லுக் கத்தியைக் கையில் ஓங்கி விதுக் என்று இடது மார்பில் ஏற்றினாள். கீச்சிட்ட கேவல் ஒலி அவளிடமிருந்து பிரிந்தது. “இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா…” கத்தியை உருவி மறுபடியும் குத்தினாள். தேகம் துள்ளியது. இத்திமரத்துப்பக்கம் திரும்பினாள். கைகளைத் தலைக்குமேலே உயர்த்திக் கும்பிட்ட கணத்தினில் உடல் சுருண்டு குப்புற விழுந்தது.