பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 2)

by மானசீகன்
0 comment

தாத்தா இறந்த பிறகும் அவர் நினைவாக ஒரு பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் தான் விஜயராணி அக்காளின் படம் இருக்கிறது. விஜயராணி அக்காளை நான் நேரடியாகப் பார்த்ததில்லை. புகைப்படத்தில் இருக்கிற அந்த பிம்பத்திற்கு பதினாறு வயசிருக்கும். கருப்பு வெள்ளைப் புகைப்படம். சற்றே தலையைச் சாய்த்தது போலவே அக்கா நின்றிருப்பார். ஃபோட்டோவில் சுமார் தான். ஒருவேளை நேரில் பார்க்க அழகாய் இருக்கலாம். அது ஏதோ ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படமாகவே இருக்கக் கூடும். கொஞ்சம் அழுக்கேறியிருந்தது. நன்னிமா அதை அடிக்கடி எடுக்கச் சொல்லிப் பார்ப்பார். உறவினர்களோ, தெரிந்தவர்களோ வந்தால் எங்கள் வீட்டில் ‘விஜயராணி அக்காளும்’ பேசுபொருளாகி விடுவார். தாத்தாவுக்குத் தெரியாமல் பெட்டியைத் திறந்து படத்தை எடுத்து அவர்களிடம் காட்டுவார்கள். தெரியாமல் எடுத்துப் பார்த்ததை தாத்தா எப்படியாவது கண்டுபிடித்து விடுவார். புகைப்படத்தை பெட்டியில் அவர் வைக்கிற கோணத்திலிருந்து 10 டிகிரி மாறியிருந்தால் கூட அவரால் கண்டுபிடித்து விட முடியும்.  அவர் எதற்காக இந்தப் புகைப்படத்தை தன் பெட்டியில் வைத்திருந்தார் என்பதை இன்று வரை என்னால் உணர முடியவில்லை. அவரிடம் இருந்தது இரண்டே இரண்டு புகைப்படங்கள் தான் . ஒன்று அவருடைய தந்தையுடையது. இன்னொன்று விஜயராணி அக்காவுடையது. ஆச்சாரமான  இஸ்லாமிய குடும்பங்களில் உருவப்படம் “ஹராம் ‘ என்பதால் புகைப்படங்களை சுவரில் மாட்ட மாட்டார்கள். இத்தனைக்கும் அவர் விஜயராணி அக்காவின் குணச்சித்திரத்தை மற்றவர்களைப் போல் கதையாக விரித்துப் பேசுகிறவரோ, அவருடனான தன் உறவைப் பற்றிப் பிறரிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் சிந்துகிறவரோ இல்லை. ஆனால் மற்றவர்கள் பேசுவதைத் தடுக்க மாட்டார். விஷேஷங்களுக்காக ஒன்று கூடும் போது நன்னிமாவும், சித்திமார்களும் , மாமாவும் விஜயராணி அக்கா குறித்துப் பேசாமலிருக்க மாட்டார்கள். சமயத்தில் அம்மாவும் இந்த ஜோதியில் சேர்ந்து கொள்வார். அந்த ஊரில் இருக்கும் போது நான் பிறக்கவேயில்லை என்பதாலும், கடைசிச் சித்தி அப்போது குட்டிப் பெண் என்பதாலும் இருவரும் வெறுமனே கேட்டுக் கொண்டிருப்போம். எப்போதாவது தாத்தா ‘ரொம்ப நல்ல பொண்ணு. அவ விதி இப்பிடி ஆயிருச்சு’ என்று ஒரு சில வார்த்தைகளோடு முடித்துக் கொள்வார்.

தாத்தா அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதால் அவ்வப்போது இட மாறுதல் இருக்கும். அவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாற்றல் கிடைத்த போது குடும்பமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. காரணம் அது ஒரு குக்கிராமம். அது மட்டுமல்ல. அந்த  ஊரில் பேருக்கு ஒரு முஸ்லிம் கூடக் கிடையாது. மத நம்பிக்கைகளில் ஊறிப்போன நன்னிம்மாவிற்கு இது பேரதிர்ச்சி. வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள் வேறு. அது 70 களின் பிற்பகுதி. அந்த  ஊரில் இரண்டே இரண்டு சமூகங்கள்தான். ஒன்று ஒக்கலிக கவுண்டர். இன்னொன்று நாயக்கர்.  அந்த ஊர் பற்றிய கதைகளைக் கேட்கும் போதுதான் நான் முதன்முதலாக சாதிப்பெயர்களை அறிந்தேன். ‘கவுண்டர்னா?’ன்னு  குறுக்குக் கேள்வி கேட்பேன். ‘அது ஒரு சாதி’. ‘சாதின்னா?’ .  ‘இந்துக்கள்ல ஒரு  பிரிவு’. ‘இந்துன்னா?’ ‘போய் புஸ்தகத்தை எடுத்துப் படிடா. சும்மா வாய் பாத்துக்கிட்டு..’ அதோடு அமைதியாகி விடுவேன்.

ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை இந்தச் சமூகம் தந்து கொண்டிருந்த காலகட்டம் அது . அந்த ஊர்ப் பள்ளியில் மூன்றே ஆசிரியர்கள்தான் . ஹெச். எம்.மும், ரகுபதி சாரும் உள்ளூர்க்காரர்கள். தாத்தா போஸ்டிங் புதுசு. முதன்முதலாக அந்த  ஊருக்கு வந்த வெளியூர் வாத்தியார் தாத்தாதான். ஊருக்குக் குடிவந்த முதல் வெளியூர்வாசியும் அவர்தான். அந்த  மக்கள் அவ்வளவு நல்லவர்கள். வீட்டுக்கு வாடகை கிடையாது. பெரிய வீடாகப் பார்த்து ஊரே திரண்டு வந்து குடியேற்றியிருக்கிறது. காய்கறிகளெல்லாம் ஓசிதான். பெரும்பாலும் அரிசி வந்து விடும்.  சம்பளத்தை அப்படியே மிச்சப்படுத்திதான் அம்மாவுக்கும், சித்திகளுக்கும் நகையெல்லாம் சேர்த்திருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தின் இஸ்லாமியப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு தீராத  ஆச்சர்யம். நன்னிம்மாவோ, அம்மாவோ தொழுதால் எல்லோரும்  வீட்டில் வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்களாம். தாத்தா அப்போது தொழமாட்டார். நோன்பு காலங்களில் சித்திமார்களையும், மாமாவையும் பார்த்து எல்லோரும் அப்படிப் பரிதாபப்படுவார்களாம். ‘பாரு இந்தப் புள்ளைக முகமெல்லாம் எப்டி வாடிருக்குன்னு. ஒரு டம்ளர் தண்ணி குடிச்சா கூட அந்த  அல்லா அடிச்சு போடுவானுக்கும்மா? அப்டி என்னம்மா புதுமையான சாமியாயிருக்கு அது? மனுஷ மக்க பசி அறியாத துலுக்கச் சாமி’ என்று  யாராவது அலுத்துக் கொண்டால் அடுத்த நிமிஷமே ‘ந்தா.. அல்லாச் சாமியைத் திட்டாதே. ரொம்பத் துடியான சாமி. இப்படியெல்லாம் நோம்பு வச்சு மனோபலத்தோட இருந்ததாலதான் இவக ராசாக்கமாரு நம்மள ஜெயிச்சாக. நாமளும் பொண்டு புள்ளைகள காப்பாத்த இங்கிட்டு ஓடியாந்திட்டோம்’ன்னு காட்டுநாய்க்கரு சொல்லுவாராம் . ரம்ஜான் பண்டிகைக்கு பலபேருக்கு இங்கதான் சாப்பாடு. அவுங்க யாரும் எங்க வீட்டுக்கு சாப்பாடு கொடுக்க நினைச்சா கோழியவோ, சேவலவோ தூக்கிட்டு தாத்தா கிட்ட வந்திருவாங்க.’ ராவுத்தமாருக ஓதி அறுத்துதான் சாப்பிடுவாஹ ‘ என்று ஏற்கனவே அவுங்களுக்குத் தெரியும் போல. கவுண்டர்களும் ,நாயக்கர்களும் கூட சண்டை போட்டுக் கொள்ளாமல் தாயாப் புள்ளையாய்தான் பழகுவாகளாம்.’ நாங்க ஆந்திர ராச வம்சம். இவுஹ கன்னட ராசா வம்சம்.  ஒங்க  தாத்தன், பூட்டன்லாம் டெல்லிக்காரவுக. நாம மூணு ஆளுகளுமே ராசாக்கமாருதான்’ என்று தாத்தாவிடம் அடிக்கடி வேலு நாயக்கர் சொல்லுவாராம் . ‘திப்பு சுல்தான்ந்தேன் எங்க பூட்டன்னு சொன்னாக்க அந்தாளு உடனே நம்பிட்டு பண்ணை அருவாள வாளு மாதிரி நினைச்சிக்கிட்டு  மண்டி போட்டு முழங்கால்ல வச்சு ராசவணக்கம் வச்சுருவாருன்னு’ அடிக்கடி இதைச் சொல்லி தாத்தா பயங்கரமா சிரிப்பார். கன்னடம் பேசும் முஸல்மானான திப்பு சுல்தானை விட தமிழ் பேசும் முதலியாரான அண்ணாத்துரைதான் தாத்தாவுக்கு நெருக்கமானவர் என்பதை அவர்கள் கொஞ்ச நாளில் புரிந்து கொண்டனர் .

ஆனாலும் தாத்தாவை ‘ராவுத்தர்’ என்று அழைப்பதை மட்டும் மாற்றவேயில்லை. அந்த
ஊரைப் பற்றிக் கேள்விப்படும் விஷயங்களெல்லாம் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். ஏதேன் தோட்டத்தின் அடுத்த மாடலாய் கடவுள் படைத்த மாதிரி கிராமமோ அது என்று யோசிக்கிற அளவுக்கு எல்லாமே ‘ரொம்ப நல்லவுங்களா’ இருந்தனர் . விக்ரமன் அப்போது இயக்குநர்  ஆகியிருந்தால் எல்லாப் படங்களையும் அந்த ஊரிலிருந்தே எடுத்திருப்பார். அந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்தது நான் கேள்விப்பட்ட விஜயராணி அக்கா கதைதான் .

‘விஜயராணி அக்கா ரகுபதி வாத்தியாரின் ஒரே மகள். ரகுபதி சாருக்கு கல்யாணமாகி பத்து வருஷம் குழந்தை பாக்கியம் இல்ல. குலசாமிக்கு கடுமையான விரதங்களை நேந்துக்கிட்டு பெத்த குழந்தை அது. அவங்க பெரியப்பாவுக்கு கல்யாணம் ஆகி 30 வருஷம் ஆகியும் இன்னமும் புள்ள கிடையாது. சித்தப்பா கல்யாணத்துப் பக்கமே போகலை. அதுக்காக அவரை பிரம்மச்சாரி என்றும் சொல்லி விட முடியாது. பெரும்பாலும் நாயக்கர் வீடுகளில் கடைக்குட்டி ஆம்பளையா  இருந்தா இப்பிடித் திரிவதுண்டு. விஜயராணி அக்காவின்  அம்மா கூடப் பொறந்த ரெண்டு தங்கச்சிகளுக்கும் எல்லாமே ஆம்பளப் புள்ளைகதேன். மொத்தக் குடும்பத்துக்கும் இந்த ஒத்த பொம்பள வாரிசுதான். அதனால இரண்டு பக்கமும் செல்லம்னா செல்லம் அப்டி ஒரு செல்லம்.  அந்தக் காலத்துலயே விசேஷங்களுக்கு அவுஹ அய்யா சேலத்துக்கோ, மதுரைக்கோ போய்தான் புள்ளைக்குத் துணிமணி எடுப்பாராம். ஊரே விஜயராணி அக்காவை வளர்த்தது. கொண்டாடியது. கவுண்டர் வீடுகளிலும், நாயக்கர் வீடுகளிலும் மாறி மாறி தொக்கும், களியும் திண்டு அக்கா கொழுகொழுன்னு வளந்துருச்சு. அது பெரிய பொண்ணான போது வாத்தியார் ஊரடைக்க விருந்து போட்ருக்கார். எங்க வீட்லயும் அது கிடையா கிடக்குமாம். நன்னிமா சொல்லும். அம்மா, சித்திமார் கூடச் சேர்ந்து தொழுது நோம்பெல்லாம் வைக்குமாம். 4 மணி வரைக்கும்தான் பசி தாங்கும் போல.  4 மணிக்கு எங்க வீட்லயே நீசத்தண்ணிய வாங்கிக் குடிச்சுட்டு பெருமாள் கோயிலுக்கு போயி அல்லாச் சாமிட்ட உக்கி போட்டு மன்னிப்பு கேக்குமாம். ரம்ஜான் நோம்புக்கு தாத்தா விஜயராணி அக்காவுக்கும் புதுத்துணி எடுத்துத் தருவாராம். புதுத்தாவணி பாவாட கட்டி துலுக்க வீட்டு புள்ளைஹ மாதிரி தலைக்கு ஓருணியெல்லாம் போட்டுட்டு நிக்குமாம். அரபி வார்த்தைகள் கூட சரளமாய் வரும் போல. அதைப்பாத்த ஊர்நாயக்கர் ‘துலுக்க ராசாக்கமாருக்கு பயந்துதான் நாம  இங்க வந்தோம். உன் பொண்ணு அவளே துலுக்க ராசா வீட்டுக்குப் போற மாதிரி இல்ல மினுக்கிக்கிட்டு திரியுறா’ன்னு சொல்லிச் சிரிப்பாராம் .

அப்பவெல்லாம் லெவன்த் ட்வெல்த் எல்லாம் கிடையாது. பெரிய பத்து, சின்ன பத்துதான். அக்கா ரெண்டையும் தாண்டிருச்சு. முதமுதல்ல பஸ்ஸேறி திண்டுக்கலுக்குப் படிக்கப் போனது அக்காதேன். அது PUC படிக்கப் போனதை ஊரே திருவிழாவா கொண்டாடிருக்கு. அக்கா டாக்டராயிட்டதா நினைச்சு சிலபேரு சாயங்காலம் புள்ள குட்டிய தூக்கிட்டு வந்துருவாஹளாம். அந்த ஊர்க்கார பயபுள்ளைகளுக்கு பெரிய படிப்புன்னா டாக்டர் படிப்பு மட்டுந்தேன். எல்லாம் ஆறு மாசந்தேன். திடீர்னு நாயக்கர் வீட்ல படிப்பை நிப்பாட்டிட்டாஹ. ஊருக்குள்ள பலவிதமா பேச்சு.  காலேஜ்ல படிச்ச ஒரு வாத்யாரோட மகனை அக்கா காதலிச்சிருச்சாம். அவரும் வாத்யார்தான். ஒருதடவை அந்த பெரிய வாத்யார் ஊருக்கு வந்திருக்கார். நல்லா கருகருன்னு கட்டை குட்டையா இருந்திருக்கார். அய்யர் வாத்யாரும், ஒரு கருப்புச் சட்டைக்காரரும் கூட துணைக்கு வந்திருக்காஹ. நாயக்கர் வீட்ல உக்காந்து ஏதோ கூடிக் கூடி பேசிருக்காஹ. திடீர்னு பேச்சு வழுத்திருச்சு போல. இளவட்டங்கெல்லாம் அந்தாளு மேல பாஞ்சிட்டாங்க. ஊர் நாய்க்கர் தான் தடுத்திருக்காரு. கறுப்புச் சட்டைக்காரர் ஆவேசமாய் ஏதேதோ சொல்லி அவரைக் கைத்தாங்கலாக கூட்டிட்டுப் போயிட்டாராம். வாத்யாரும், ஊர்நாயக்கரும் தாத்தாவிடம் வந்து சொல்லியிருக்காஹ ‘பாத்தீங்கள்ல ராவுத்தரே! இந்தப் பயகளுக்கு எப்டி துளிர் விட்டுப் போச்சுன்னு. எல்லாம் கலிகாலம். படிப்புங்கற பேர்ல எல்லா வரமுறயும் தாண்டி ஏறி மேயப்பாக்கிறனுஹ. அய்யர்ஹ சொன்னது தான் சரி. பூனை வீட்ல இருக்கனும். யானை காட்ல இருக்கனும். எங்காளு ஈரோட்டு நாயக்கரு ஐயருக டவுசரை அவுத்து தராட்ல விட்டுட்டு எல்லவனையும் அத்து மீற விட்டுட்டாரு. அதது இடம் மாறிப் போனா பிரளயம்ல வந்துரும். இந்தா வந்துருச்சுல. ஒங்களுக்கு தெரிஞ்ச பையனாம்ல ராவுத்தரே! நீங்களும் கொஞ்சம் அமட்டி வைய்ங்க’. தாத்தா அமைதியாகக் கேட்டுக் கொள்வாராம். கொஞ்ச நாளில் அக்காவை சொந்த பந்தந்துல விஜயகுமார்ன்னு ஒரு ஆளுக்கு பேசி முடிச்சிருக்காஹ. அந்த வாத்யார் குடும்பத்தோடு மாத்தல் வாங்கிட்டு வெளியூர் போயிட்டாரு போல. ‘ஏதோ ஒரு ஈனஜாதிப் பையன். கவர்மண்டு காசுல படிச்சு வேல வாங்கிட்டான்னு’ பொட்டச்சிக குசுகுசுத்துக்குவாஹ.’ அந்தப் பய நல்ல சிவப்பாம்ல. ம்க்கும்…அங்க என்ன இழவு நடந்துச்சோ? யாரு கண்டது? அங்கிட்டு எல்லாம் எந்த வரைமுறையும் கிடையாது. தவிச்சவன் தண்ணி குடிச்சிக்கலாம்’ என்று அதுக்கும் அவங்க அம்மாகாரிய இழுத்து ஏதோ கதை பேசியிருக்காஹ. அந்த விஜயகுமார் ரகுபதி சார் குடும்பத்துக்கு தூரத்துச் சொந்தம். தோட்டத்துல புருஷன் இல்லாத ஒரு கவுண்டம்மார் பொம்பளயோட அவனுக்குத் தொடுப்பு உண்டு. (தொடுப்புன்னா என்னான்னு கேட்டு ஒருதடவை அடி வாங்கியிருக்கிறேன். அவர்கள் அடித்த காரணத்தினாலேயே எனக்குச் சொல்லாமலே சகலமும் புரிந்து விட்டது) ஊருக்கே எல்லாக் கதையும் தெரியும். யாரும் எதும் தெரியாத மாதிரி ‘ஏழு கழுத வயசாச்சி. இன்னும் பொண்ணு கட்டாம திரியறான் லூசுப்பயல்’ என்று சலித்துக் கொள்வார்கள். அவனுக்கும் விஜயராணி கதை தெரியும். ஆனா சொத்து பத்துன்னு ஆசை காட்டி வாய அடக்கிட்டாஹ. பரிசம் போட அவன் வீட்டோட வந்த போது அக்கா தைரியமா வந்து ‘நான் ஏற்கனவே வாத்தியாருக்கு முந்தானை விரிச்சேன்னு’ தெனாவட்டா சொல்லியிருக்கு. ( இதைச் சொல்லும் போது எங்கள் வீட்டில் ‘அது உண்மையா இருக்காது. அவ நெருப்பு . ஒருபய நெருங்க முடியாது. ஆனா ராங்கிக்காரி. தனக்குப் பசிக்கலன்ன உடனே சோத்துப் பானைய  இழுத்துப் போட்டு ஒடைக்கிற ஆங்காரம். நாயக்கர் குடும்பத்தை தலைகுனிய வைக்கனும்னே இப்டி பேசியிருக்கா. அவன் மேல உள்ள பாசத்தை விட இவுஹள பழி வாங்கிப் போடனும்னு ஒரு வெறி. அதான் அப்டி செஞ்சா’ என்று ஒரு சமாதானத்தை அவர்களாகவே சொல்லிக் கொள்வார்கள் ) வந்தவுஹ ஆடிப்போயிட்டாஹ. சீரோடு ஒரே ஓட்டம்.  வீடு முழுக்க இரவெல்லாம் தெலுங்கில் பேசுகிற சத்தம், அழுகைக் குரல். அடிக்கிற, தள்ளி விடுகிற சத்தம். தாத்தாவும், சித்திமார்களும் தூங்கி விட அம்மாவும், நன்னிம்மாவும் இரவெல்லாம் விழித்திருந்து பொழுது கூப்பிடவும் தான் சற்று அசந்திருக்கிறார்கள். அந்த ஒப்பாரிச் சத்தம் சகலரையும் எழுப்பி விட்டிருக்கிறது. அக்கா அரளி விதையை தின்னு போட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். எல்லோரும் போய் பார்த்த போது விஜயராணி அக்கா அரைத்தூக்கத்தில் சிரிச்ச மாதிரி பொணமா கெடந்துருக்கா. வாயில வயித்துல அடிச்சு அழுதாலும் ஊர்ல எல்லோருக்கும் விஷயம் தெரியும். இருந்தும் யாரும் நாயக்கர் குடும்பத்தை குறை, குத்தம்னு பேசிக்கலை. அந்தப் பையனுக்கு எப்பிடியோ விஷயம் தெரிஞ்சு போலிஸ்ட்ட போயிட்டான்.  ஊருக்குள் வந்த ஒரே ஒரு ஏட்டு ஊர் நாயக்கரிடமும், ஊர்க் கவுண்டரிடமும் காய்கறி, தேங்கா, பழமெல்லாம் வாங்கிட்டு சல்யூட் வச்சுட்டுப் போயிட்டான். ஆனா நினைச்ச போதெல்லாம் மஹ போட்டோவ எடுத்து வச்சு அந்தம்மா அழுகுமாம். பலநாளு அன்னந் தண்ணி இல்லாம பூஜ ரூம்ல கிடக்குமாம். அந்தப் பொண்ணு செத்தப்புறம் அவுஹளுக்கு குலதெய்வமாவே ஆயிப்போயிட்டா. இப்பவும் கூட பூஜை ரூம்ல அவ ஃபோட்டோ ஒன்னு இருக்கும். மூனு அண்ணந் தம்பியும் அதுக்குப் பெறகு சிரைக்காம தாடி மசுரோடதான் திரிஞ்சிருக்காஹ. ‘மக நினைப்புல சிங்கம் மாதிரி திரிஞ்ச மூனு நாயக்கரும் நடபொணமாயிட்டாஹ. ராங்கிக்காரி இப்டி செஞ்சுட்டாளேன்னு ஊர் அவளை மறந்துட்டு அவுஹள நினைச்சுதான் வருத்தப்பட்ருக்கு. கொஞ்ச நாள்ல தாத்தா மாறுதல் வாங்கிட்டு குச்சனூர் வந்துட்டார்.

இந்தக் கதை அந்த வயசில் எனக்கு ஆச்சர்யம்தான். இப்போது சாதாரணமான ஒன்றாக மாறி  இருக்கலாம். ஆனால் எனக்கு வேறொரு விதத்தில் இது அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வயசில் கொலைதான் பெரிய பாவம் என்று நான் புரிந்து வைத்திருந்தேன். என் வீட்டில் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள். கோழி அறுக்கும் போது கூட முகத்தை திருப்பிக் கொள்வார்கள். ஆனால்  இந்தக் கொலையை அவர்கள் எப்படிச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்? எது அவர்களை அப்படி  எடுத்துக் கொள்ள வைத்தது? என்று அந்த வயசிலேயே யோசித்திருக்கிறேன். மூஞ்சியை சுளித்து வைத்துக் கொண்டு சித்திமார்கள் விஜயராணி அக்காவத் திட்டிக் கொண்டே இதைப் பேசுவதும்,  ‘தாய் தந்தைக்கு தலைகுனிவ உண்டாக்குற பொட்டப்புள்ளய வெட்டிப் போட்டாலும் தப்பில்லை . குமருக கவனமா இருக்கனும். கண்ட சாதிப்பயலும் வாயில எச்சிய ஒழுக விட்டு ஊர்ல சுத்துரானுஹ’ என்று நன்னிமா சித்திகளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே எவரிடமாவது இதே கதையைச் சொல்வதும், இது மாதிரியான வார்த்தைகளைக் கேட்க நேர்கிற போது தாத்தாவிடம் குடியேறி விடுகிற பிரத்யேகமான இறுக்கமும் முடிவில்லாத நாடகங்களாக என்னைக் குழப்பிக் கொண்டிருந்தன. ஒருவகையில் எனக்கு ஏற்பட்ட முதல் கலாச்சார அதிர்ச்சியே அது தான். தாத்தாவும் ஏன் நாயக்கர் குடும்பத்தைக் குறை கூறவில்லை? இத்தனைக்கும் அந்த சின்ன  வாத்யார் தாத்தாவுக்குத் தெரிஞ்சவர். வயசு கம்மியா இருந்தாலும் ஆசிரியர் சங்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பாராம். தாத்தாவோடு சங்க விஷயமாய் நெருக்கமான பழக்கம்.

அந்த வாத்யாரை ‘கீழ்சாதி பையன்’ என்று தான் இதைப் பற்றிப் பேசுகிற போது வீட்டில் சொல்லிக் கொள்வார்கள். எனக்கு சாதி ஏதோ ஒரு விதத்தில் புரிந்திருந்தது. சொந்தக்காரவுஹ ஒன்னா ஒரே தெருவுல ஒரே சாமிய கும்புட்டுக்கிட்டு சொந்தத்துல கல்யாணம் காச்சிய பண்ணிட்டு இருப்பாங்க போல. அதுதான் சாதியாயிருக்கும். நான் இந்தப் புரிதலுக்கு வந்திருந்தேன். ஆனால் இந்த ‘கீழ்சாதி தான்’ என்னவென்று புரியவில்லை. வீட்டில் கேட்டால் சொல்ல மாட்டார்கள். தாத்தாவிடம் கேட்க பயம். கனகராஜ் அண்ணனிடம் கேட்டேன். என்னை ஆச்சர்யமாய் பார்த்தார். அவர் ஆண்டுவிழா பேச்சுப் போட்டியில் நான் பேசுவதை அடிக்கடி பாராட்டுவார். எப்பவும் கறுப்புச் சட்டை போட்டு மடித்து விட்ருப்பார். தாத்தாவும், அவரும் வில்லங்கமாகப் பேசிக் கொள்வார்கள். ஒரே நேரத்தில்  அவர்களது பேச்சு நண்பன் மாதிரியும் இருக்கும். எதிரி மாதிரியும் இருக்கும். என்கிட்ட ‘நீ பெரியார படிக்கனும்டா. வாசக சாலைப் பக்கம் வா’ என்று சந்திக்கிற போதெல்லாம் சொல்வார்.

‘வர்ணாசிரமம்னா உனக்குப் புரியாதேடா. சரி! ஒனக்கு புரிஞ்ச மாதிரி சொல்றேன்.’

‘ஒங்க  வகுப்புல நீ எத்தனாவது ரேங்க்?’

‘ ஃபர்ஸ்ட் ரேங்க்’

‘நாலாவது யாரு? ‘

‘ராமர் ‘.

‘கால்பரிட்சைல?’

‘நான் ஃபர்ஸ்ட் . ரங்கராஜன் நாலாவது ரேங்க் ‘.

‘சரி இப்ப ரங்கராஜன் எத்தனாவது ரேங்க்?

‘செகண்ட்’ .

‘எப்டி செகண்ட் வந்தான்?’

‘நல்லா முயற்சி பண்ணி படிச்சான். வந்துட்டான் ‘ .

‘குட். பாயிண்ட்டுக்கு வந்துட்ட. படிப்புல ஒவ்வொருத்தனும் ஒரு ரேங்க்ல இருப்பான். முயற்சி பண்ணுனா மேல வந்துடலாம். மேல இருக்கிறவன் கீழ போயிருவான். ஆனா சாதி அப்டி இல்ல. சில சாதிக்கு எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க்தான். முட்டாளாவே இருந்தாலும். சில சாதிக்கு எப்பவுமே லாஸ்ட் ரேங்க்தான். அறிவாளியா இருந்தாலும். பச்சை அயோக்கியத்தனமில்ல இது. இரண்டு கைகளையும் செங்குத்தாக சிறிது இடைவெளி விட்டு வைத்து ‘சாதி இப்டி இல்லடா. இப்டி. .இப்டி இருக்கு’ இப்போது கைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக வைத்திருந்தார். ‘அஞ்சு பேரு இருக்கான்னு வய்யி. கீழ இருக்கிறவனுக்கு ரொம்ப வலிக்கும்ல. ஆனா மேல இருக்கிறவனுக்கு வலிக்காது. இதான் வர்ணாஸ்ரமமம்’ மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார்.

‘ஆமா எதுக்கு இதெல்லாம் கேட்ட? நான் விஜயராணி அக்கா கதையை ஒப்பித்தேன். அதைச் சொல்லும் போது என்னையறியாமல் அழுகை வந்து விட்டது. அந்த  அக்காவை பார்க்காமலே ரொம்ப நேசித்திருந்தேன். அந்த மரணத்தை என் வீட்டில் சாதாரணமாய் எடுத்துக் கொண்டதையும் அவரிடம் சொல்லி விட்டு ‘கொலை பண்றது தப்பில்லையா?’ன்னு கேட்டேன். அவர் என்னருகே அமர்ந்து கொண்டார். மெல்ல என் தலையைத் தடவினார்.  அவர் மீது ஏதோ ஒரு பீடி நாத்தம் அடித்தது.

‘கொலை யாரு செய்வாங்க?’

‘கெட்டவுங்க ?’

‘கெட்டவுங்கன்னா யாரு?’

எனக்கு டக்கென்று பதில் சொல்லத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் யோசித்தேன்.

‘கெட்டவுங்கன்னா ..ம். .நம்பியார். அசோகன். .வீரப்பா. .அப்றம் எல்லாரையும் கட்டி வச்சு ரூம்ல  அடைச்சு வப்பாங்கள்ல…அவங்க. சேலை உடுத்தின அக்காக்கள விரட்டுவாங்கள்ல அவுங்க.  இவுங்க எல்லாந்தான் கெட்டவுங்க’

அண்ணன் பயங்கரமாய் சிரித்தார். நாம் ஏதும் தப்பா பேசிட்டமோ? என்று எனக்கு பயம் வந்து விட்டது.

‘ஏன்டா உங்க எம்ஜிஆரு, ரஜினி, விஜயகாந்தெல்லாம் யாரையும் கொல்ல மாட்டாங்களோ? கிண்டலாகக் கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஒரு வீம்போடு சொன்னேன். ‘அவுங்க  எல்லாம் நல்லவனைக் கொல்ல மாட்டாஹ. கெட்டவனைத்தான் கொல்வாங்க’

‘லேய் இந்தா நிறுத்து. நல்லவன், கெட்டவன்லாம் ஒன்னும் கிடையாது. யாருக்கு நல்லவன்?  யாருக்கு கெட்டவன்? இப்டி கேட்டுப்பாரு. எதைக் கேட்டாலும் எம்ஜிஆரு, நம்பியாரு…..கருமம்.  நாடாடா இது? அய்யா சொன்ன மாதிரி பூரா தியேட்டரையும் வச்சுக் கொளுத்தனும். சரி, இந்தக் கதை சொல்றப்ப உங்க தாத்தா ஒன்னுஞ் சொல்லலையா ?’

‘இல்ல. அவர் கம்முன்னு இருப்பார்.’ ‘அதானே பாத்தேன். பெருசு அண்ணாத்துரை ஆளு. சாதி சரின்னும் சொல்ல மாட்டாரு. தப்புன்னுஞ் சொல்ல மாட்டாரு. சரி அத விடு. ஒங்க விஜயராணி அக்காவுக்காஹ உருகுறியே. அந்த வாத்யார நினைச்சுப் பாத்தியா? நினைக்க மாட்டியே. ஆமா அவர் பேரென்னன்னாவது தெரியுமா?’, ‘இல்லை’ தலையாட்டினேன். ‘போயி ஒங்க தாத்தா கிட்ட கேட்டுட்டு வா.’

வீட்டிற்கு வந்ததும் தாத்தாவிடம் கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால் அண்ணனுடன் பேசியதற்காகத் திட்டுவார். ஏற்கனவே ‘வயசுக்கு மீறுன குசும்புன்னு’ அவர்கிட்ட திட்டு வாங்கிட்டிருக்கேன். மல்லாக்கப் படுத்து விஜயராணி அக்கா பற்றிப் பேசும் போது தாத்தா கூறியவற்றை நினைவுபடுத்திப் பார்த்தேன். ம்ஹூம்…அந்த வாத்யார்  பேர் சொன்னதே இல்லை.  ஆனால் அவருக்கு அந்தப்  பெயர் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஆனால் ஒரு தடவை கூடச் சொன்னதில்லை. ‘அந்த தாழ்த்தப்பட்ட பையன்’, ‘ஹரிஜனப் பையன்’ , ‘காலணிப் பையன்’ இப்படித் தான் சொல்லியதாக ஞாபகம். ‘சாதிகள் இல்லையடி பாப்பாவை’ வகுப்பில் போய் படிப்பதற்கு முன்பாகவே தனியாகச் சொல்லிக் கொடுத்த தாத்தா ஏன் இப்படிச் செய்தார்?

‘பாபுஜி! எங்களுக்கென்று நாடு இல்லை. வரலாறு இல்லை. நாங்கள் நிலமற்றவர்கள். பெயரற்றவர்கள். நீங்கள் சுட்டும் அடையாளங்களால் மட்டுமே நினைவுகூரப்படுகிறவர்கள்’ என்று  அம்பேத்கர் காந்தியைப் பார்த்துச் சொன்னதை,  நான் பார்த்தே இருக்காத அந்த வாத்யார் செத்துப் போன என் தாத்தாவிடம் ஏதோ ஒரு கனவில் சொல்லிக் கொண்டிருந்தார்.

-தொடரும்.