பொன்முகலி கவிதைகள்

by பொன்முகலி
0 comment
நீ என்னை காதலித்திருக்க வேண்டும்.
நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒருவனை
கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன்.
கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை
கருணைக்கொலை செய்பவனின்
அனுதாபத்துடன்.
முற்றிலும் இலைகள் உதிர்ந்த
ஒரு கருவேலமரத்தைப்போல,
எவரையும் கிழித்துவிடும்
கூரிய வன்மத்தின் முட்களோடு
நான் இருந்திருந்தாலும்,
கனிந்த முகத்தோடு
தனது மேடிட்ட வயிற்றை
பரிவோடு வருடுகிற
ஒரு கர்ப்பிணியைப் போல
நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும்.
__________________________________________________________
விண்மீன்கள் உன் கண்களாய் மாறி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற
இவ்விரவில்,
நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?
அந்தியின் வழி நடந்து
ஆதவன் அடைகிறான்.
நிலவு ஒரு தும்பை பூவைப் போல
வானத்தில் மலர்கிறது.
நீயும் நானும்
காலத்தின் ஓயாத பாடலில்
ஒலிக்கத் துவங்குகிறோம்.
__________________________________________________
எல்லாவற்றுக்கும் விடையறிவது
உன்னை எந்த விதத்தில்
ஆற்றுப்படுத்தப் போகிறது?
உன் இரவுகளுக்கென நிலா வளர்க்கும்
பிரத்யேகமான இரு கண்களை
தேடிக் கண்டடை.
எல்லாவற்றுக்கும் பதில்
நீ புரிகிற காதலில் இருக்கிறது.
__________________________________________________
நான் உன்னை ஒரு சொல்லில் வைப்பேன்.
பிறர் அறியாதபடி…
பிறர் திருடாதபடி…
யாரும் கண்டடைய முடியாத ஒரு
புதிர்ச் சொல்,
யாரும் தீண்டிவிட முடியாத
ஒரு முட் சொல்,
யாரும் நினைத்துவிட முடியாத
ஒரு மாயச் சொல்…
பின், அச்சொல்லை
ஒரு வெண்ணெல்லி மலரில் வைத்து,
அம் மலரைக் குழலில் வைத்து,
அலைவேன் இக் கானகமெங்கும்.
______________________________________________________
கர்ப்பகிரகத்தின் இருள்
மூலையில்
எரிந்துகொண்டிருந்த
அகல் விளக்கின்
சுடரொன்றிலிருந்து
அவள் எழுந்து வந்தாள்.
அகிற்புகை வான்தழுவி முயங்கும்
மலைநாட்டின் அருவிக்
கரையொன்றில்
அவளை செதுக்கி முடித்த தச்சன்
ஒரு கணம் மயங்கி,
தான் செதுக்கி முடித்தது ஒரு
பேரழிவின் அழகை
எனப் புலம்பியபடியே
அங்கிருந்த அணையாச்
சுடரொன்றின் வெம்மைக்குள்
அவளை அடைத்து
வைத்திருந்தான்.
செந்நிறச் சேலை மார் நழுவ
நீள் உறக்கம் கலைந்து
வெளி வருகிற அவள்
காலம் என்பது நீண்ட சொப்பனம்
எனக் கூறி சோம்பல் முறிக்கிறாள்.
____________________________________________________
நான் நினைவு கொள்வேன்
எல்லாக் காலங்களுக்குமான பாடல் ஒன்றை.
நமது துயர காலத்தின் ஒரு வரி அதில்
ஒளிந்திருக்கிறது.
ஒரு கவிதை இருக்கிறது …
எல்லா நேரங்களிலும்
நாம் நம்மைக் கைவிடுகிற கவிதை.
அந்தக் கவிதை நினைவுகூர்கிறது,
கனிவு நிறைந்த புன்னகையொன்றை;
நமக்கு எல்லாக் காலங்களிலும்
அளித்துக்கொண்டிருப்பவனை.
நினைவுகள் மேகங்களைப் போலக் கலைகின்றன.
ஆதித்தாயின் முலைகளிலிருந்து
நமக்கான அமுதம் சுரக்கிறது.
நுழையும் முன் கண்ட மலை
நுழைந்து விட்ட மலையைக் காட்டிலும்
மிகச் சிறியது.
பருவங்களை மலர வைக்கிற ஒருவன்
நம் கைகளை பற்றியபடி இதைச் சொல்கிறான்.
நான் அவனை இறைவன் என்கிறேன்.
______________________________________________
சொற்கள்
கவிதைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சொற்கள்
நான்கு திசைகளிலும் ரப்பரைப் போல் வளைகிறது.
உப்பிப் பருத்து வெடிக்கத் துடிக்கிறது…
காற்புள்ளி, அரைப்புள்ளி, இடைவெளிகளில்
தப்பிச் செல்ல முண்டியடிக்கிறது…
பிறகு தன்னிரக்கம் பொங்க
கவிஞனின் சட்டையை உலுக்கி
ஒரு போன்சாய் மரத்தைப் போல்
இப்படி மூச்சடைக்க மூச்சடைக்க
என்னை வளர்க்கிறாயே
என்று அழுகிறது…
__________________________________________________
எழுதுகிறபோது சொற்கள் அலறுகின்றன.
என்னை முறித்துப் போடு.
உடைத்து எறி…
கிழித்து வீசு..
நெருப்பில் வாட்டு…
பெருக்கி அள்ளி சாக்கடையில் கொட்டு…
கொட்டிலில் மட்டும் அடைக்காதே….
பரல்களிலிருந்து சிதறிய முத்துக்களைப்போல
என்னை நாற்புறமும் சிதற விடு…
என் இரக்கமுள்ளவளே…
___________________________________________
நான் இந்நாட்களில் உன்னுடனே இருக்கிறேன்.
நீருக்குள் மீன்கள் இருப்பதைப் போல
___________________________________________
சொற்கள் எங்குள்ளன?
அவை இருளடைந்த குகைகளில் வவ்வால்களைப் போல தொங்கிக் கொண்டிருக்கின்றன.
____________________________________________

மத்தியானம்

இரை விழுங்கிய மலைப்பாம்பென கிறங்கிக் கிடக்கிறது பின்மதியம்.
கல்லெறிந்தால் உடைந்துவிடக் கூடிய அமைதியை,
அடிக்காத காற்றில்
வீழாத இலையொன்று
வேடிக்கை பார்த்தபடியிருக்கிறது.
***
யாருமற்ற இந்நீண்ட பகலில் கரையுமென் காகமே…
கரையுமென் காகமே.
***
மின்விசிறி காற்றை வெட்டி வெட்டி வெளியை உண்டுபண்ணுகிறது.
காற்று மின்விசிறியை
வெட்டி வெட்டி
வெளியை உண்டுபண்ணுகிறது.
***
வெயிலில் பொன்போல் மினுங்கும்
மண்சாலையின் பிரிவில்,
ஒரு மனிதனை உதிர்த்துவிட்டு,
அந்தமில்லா வழியில் பயணிக்கிற ஆன்மாவைப் போல போய்க் கொண்டிருக்கிறது பேருந்து.
_______________________________________________
உடைக்கப்பட்ட பீங்கான் பாத்திரத்தைப்போல
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகளில்
எது நீ?
எது நான்?
எது நாம்?
________________________________________________
தீயைப் போல் வளராத ஓர் உடல்
என்னிடம் இருக்கிறது.
பஞ்சைப் போல் எழும்பிப் பறக்காத
ஒரு மனமும். நெடிய காலம்
பெருமூச்சுக்களால் நிரம்புகிறது.
______________________________________________
சிறிய நொடி, இந்த நெடிய வாழ்விற்குப் போதுமானது. உங்களுடைய மனம்
மேகங்களைத் தாண்டி
விண்மீன்களுக்கு ஓடுகையில்,
நீங்கள் உங்கள் கால்களை
மண்ணுக்குத் துரத்துவதில்
என்ன பயன்?
______________________________________________
மௌனங்கள் கூரிய மலைமுகடுகளுக்கு
என்னைச் செலுத்துகின்றன.
அங்கே நான் தன்னந்தனி.
திரும்புவதற்கான பாதைகள் என்பவை அங்கே
எப்போதும் நீர்த்தடங்களே.
____________________________________________
வாழ்க்கை என்பது
உண்மையில் ஓர் எளிய உண்மை.
நீ பார்க்காத உலகத்தில்,
நீ பார்க்காத சூரியன்கள்,
தினம், தினம்
வெடித்துச் சிதறுகின்றன.
எல்லாவற்றையும் மிதக்க வைக்கிற கடலொன்று,
உன் கண்களுக்குப் புலப்படாமல்,
உன் பக்கவாட்டில் பொங்கிக்கொண்டிருக்கிறது.
புலங்களின் அச்சிலிருந்து
தவறி விழுகிற கிரகங்கள்,
நீயறியாத இடங்களில் ஆயிரம்
பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.
என்றாலும், இந்த வாழ்க்கை, நீ பற்றியிருக்கிற
என் விரல்களைப்போல
ஓர் எளிய உண்மைதான் இன்னமும்.
________________________________________________
நான் புசிக்க நினைக்கிற மாமிசம்
நான் குடிக்க விழைகிற குருதி
நான் செய்ய விரும்புகிற துரோகம்
நான் வழங்க விரும்புகிற மன்னிப்பு
எல்லாம் நீயே.
தெப்பத்தில் மிதக்கிற என் சிறு இலையே
இனி நீ வழிபட வேண்டிய கடவுள்
நானே.
_________________________________________________
நிமிர் நன்முலைகள் வளர்கிற யாகம்
சிதறித் தெறிக்கும் காட்சிகள்
தோற்றப்பிழைகள்
கரைகளில் இடையே பொங்கும் கடல்
முடிவின்மை, அமைதி….
மயக்கம்,
அர்த்தமிழக்கிற சொற்கள்,
புரிய விரும்புகிற கலவி.
_______________________________________________
அன்பு எப்போதும்
நுனி மரத்தில் அமர்ந்தே
அடி மரத்தை வெட்டுகிறது.
மழை நீருக்குச் செழித்து தழைக்கிற
கோவைக் கொடிகளுக்கு
இந்தக் கவலைகளுண்டா?
______________________________________________
ஒரு அணைப்பின்றி, ஒரு முத்தமின்றி
நிறைந்து விடுவதில்லை நம் ஆன்மா.
இந்த உலகம் உடல்களால் ஆனது.
உடல்களைக் கடந்து
எங்கும் போக இயலாதது.
________________________________________________
எனது வாழ்க்கை
எனது குழந்தைப் பருவத்தோடு
முடிந்து போனது. பின்னர் என் வாழ்க்கையை
நான் வாழவேயில்லை.
காற்றின் ஸ்பரிசம் படாத
நீர்க்குமிழி போல் இருக்கிறது
அதைப் பற்றிய என் துக்கம்.
_______________________________________________
குறித்துக்கொள்ள எதுவுமில்லாத
எத்தனையோ நாட்கள்
என் நாட்குறிப்பில் இருக்கின்றன…
இந்த உலகம் வெறுமைகளால்
சூழப்பட்டு இருப்பதை
அவை நிரூபிக்கின்றன…
ஆனால்
குறித்து வைக்கக்கூடாத
குறிப்புகளுக்குள் அடங்காத ஒன்றுதான்
வாழ்க்கையாய் இருக்க முடியும்…
அந்த உலகம்
வெறுமைகளால் சூழப்பட்டது இல்லை…
அது தனக்கான மொழியை
தனக்கான இசையை
தனக்கான நளினத்தை
தானே கொண்டுள்ளது…
அதை குறித்து வைக்க இயலாது…
அது அத்தனை இயல்பானது.
அத்தனை ஆக்ரோஷமானது.
அத்தனை அற்புதமானது.
________________________________________
சலிப்பூட்டக் கூடிய பழைய குரல்
சலிப்பூட்டக் கூடிய பழைய உடல்
சலிப்பூட்டக் கூடிய பழைய முத்தம்
சலிப்பூட்டக் கூடிய பழைய காதல்
சலிப்பூட்டக் கூடிய பழைய காமம்
புதிதாக எதுவும் இல்லையா?
______________________________________
வாழ்க்கை எப்படி இருக்கிறது
என்று என்னைக் கேள்.
நான் சொல்வேன்.
அது இருக்கிறது…
ஒரு ரசம் போன கண்ணாடியைப் போல்,
இற்றுக் க்றீச்சிடுகிற
ஒரு இரும்புக் கதவைப் போல்,
மூத்திர வாடையடிக்கிற
பேருந்து நிலையங்களைப் போல்,
பிற்பகல் கோடையின் புழுக்கம் போல்…
மஞ்சள் வெயில் அடிக்கிற
எதாவது ஒரு மழைநாளில் வந்து
திரும்பவும் என்னிடம் கேள்..
வாழ்க்கை எப்படி இருக்கிறது என.
நான் சொல்வேன்…
அது இருக்கிறது…
சூடு ஆறிய தேநீர் கோப்பையைப் போல
மழையில் நசநசக்கிற தெருவைப் போல…
________________________________________________________
பூக்களைப் போல் இருக்கிறார்கள் குழந்தைகள்…
அவர்களைக் கொய்தல் சுலபமாய் இருக்கிறது.
மிகப் பரிசுத்தமாக இருக்கும் அவர்களை
நம்மால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை.
கர்ப்பகிரகத்தின் விளக்கொளியில் ஒளிர்கிற
தேவியின் புன்னகை போலிருக்கிறது அவர்கள் மனம்
அவர்கள் எல்லாவற்றையும் மன்னித்துவிட்டு
புன்னகையோடு உயிர்தெழுந்து விடுகிறார்கள்…
இது நம் ஆன்மாவைச் சீண்டுகிறது.
அவர்கள் எது குறித்தும் எப்போதும்
அவநம்பிக்கை கொள்வதில்லை.
யார் கைகளையும் தயக்கமின்றி
பற்றிக்கொண்டு
சிரித்துவிட அவர்களால் முடிகிறது…
இத்தனை களங்கமற்றிருப்பது
எத்தகையதொரு பாவமென்பதை அவர்கள் உணராது
இருக்கும்போதுதான்
நாம் அவர்களைக் கொய்கிறோம்.
மிகச் சுலபமாய் கால்களில் போட்டுத் தேய்கிறோம்.
அதன் பின்னும்
அவர்கள் விட்டுச் செல்லும் வாசனையை
வெல்லமுடியாது அரற்றிக்கொண்டே போரிடுகிறோம்.
___________________________________________________________
ஒரு சிறிய கண்ணீர் துளிக்குள்
ஒரு கடல் இருந்தது…
ஒரு சிறிய வெளிச்சக் கீற்றுக்குள்
ஒரு சூரியன் இருந்தது…
ஒரு சிறிய பனித்துளிக்குள்
ஒரு பனிமலை இருந்தது…
ஒரு சிறு துளி ரத்தத்தில்
அந்தியின் செஞ்சிவப்பு இருந்தது…
நான் காற்றை, மலையை, கதிரை விழுங்கி
கடலை, அலையை, புயலை விழுங்கி
திரையை, மறையை, கரையை விழுங்கி
எரிந்துகொண்டேயிருக்கும்
சிறு நெருப்புப் பழமானேன்…