புத்துயிர் அமுதம்! – பால்ஸாக்

by ராஜேந்திரன்
0 comment

டான் யுவான் பெல்விடாரோ ஒரு குளிர்கால மாலையில், பகட்டான ஃபெராரா மாளிகையில் எஸ்தே குடும்பத்தைச் சார்ந்த இளவரசருக்கு விருந்தளித்தார். அக்காலத்தில் மாளிகை விருந்தோம்பல் என்பது மலைக்க வைக்கும் நிகழ்வாகும். அதற்கு மிதமிஞ்சிய பெரும் செல்வம் அல்லது அதிகாரமிக்க பெரும் பதவி போன்றவை இன்றியமையாதவை.

விருந்தினர் அறையிலிருந்த சுவர்களில் சிகப்புக் காரை பூசப்பட்டிருந்தது. அவற்றிலிருந்த வியத்தகு ஓவியங்களில் காணப்பட்ட பளிங்குக் கற்களின் வெண்மை எடுப்பாகத் தோற்றமளித்தது. விலையுயர்ந்த துருக்கிய தரை விரிப்புகளிலிருந்து மாறுபட்ட அழகை அந்த ஓவியங்கள் தந்தன. அங்கிருந்த மேஜையில் மணம் கமழும் மெழுகுவர்த்திகள் எரிந்தன. மேஜையைச் சுற்றிலுமிருந்த நாற்காலிகளில் அமர்ந்தவாறு இன்பமான மனமகிழ்வை விரும்புகிற ஏழு பெண்கள் ஆரவாரமாக வம்பளந்து கொண்டிருந்தனர். அவர்கள் உடுத்தியிருந்த தங்க நிறப் பட்டாடைகள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. அவற்றில் இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அக்காரிகைகளின் கண்களில் காணக் கூடிய ஒளியை விடவும் அக்கற்களின் பிரகாசம் சற்று குறைவாகவே இருந்தது. அவர்களின் அழகைப் போலவே அவர்களது கண்களும் விதவிதமான மோகக் கதைகளை வெளிப்படுத்தின. அப்பெண்மணிகளின் பேச்சிலும் கருத்திலும் எவ்வித மாற்றமுமில்லை. வரையறைக்குட்படாத வெளிப்படையான பார்வைகள், முகபாவங்கள், அங்க அசைவுகள், வார்த்தைகளில் அவ்வப்போது காணப்பட்ட அழுத்தங்கள் ஆகியன அவர்களின் மனச் சோர்வை அல்லது மனக் கிளர்ச்சியை வெளிப்படுத்தின.

அவர்களில் ஒரு யுவதி, “வயதாகி உணர்ச்சிகள் உறைந்து போன உள்ளங்களில் கூட கிளர்ச்சியைத் தோற்றுவிக்கக் கூடியது என் அழகு!” என்றார். மற்றொரு யுவதி, “எனது அழகைப் போற்றி மெச்சுகிறவர்களை எண்ணியவாறே மிருதுவான மெத்தையில் படுத்திருந்து, ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவது எனக்கு மிகவும் பிடித்தமான காரியம்” என்றார்.

அவ்வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வாறான விருந்துகளுக்குப் புதியவரான மூன்றாவது பெண்மணிக்கு நாணத்தால் முகம் சிவந்தது. “எனது ஆழ்மனதில் சஞ்சலம் தோன்றி உறுத்துகிறது. நான் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவள். நரகம் குறித்து அச்சப்படுபவள். ஆனால் உங்கள் எல்லோரையும் மனமுவந்து நேசிக்கிறேன். எனவே உங்களுக்காக எதையும் தியாகம் செய்ய நான் தயார்” என்றார்.

நான்காவது பெண்மணி ஒரு கோப்பை சியன் ஒயினைக் காலி செய்தவாறே மகிழ்ச்சியுடன் பெருங்குரலில், “இன்பங்களைப் போற்றுவோமாக! ஒவ்வொரு நாள் காலையிலும் நான் புத்துயிர் பெறுகிறேன். முந்தைய நாளின் உன்னத இன்பங்களின் போதையில் மிதந்தவாறே பழையதை மறக்கிறேன். மேலும் அதி உன்னத இன்பங்களை வழங்கக் கூடிய புது நாளின் வாழ்வை மோகத்துடன் அரவணைக்கிறேன். அத்தகைய புது வாழ்வில் காதல் நிறைந்திருக்கட்டும்” என்றார்.

பெல்விடாரோவின் அருகே அமர்ந்திருந்த பெண்மணி ஒளிரும் கண்களால் அவரைப் பார்த்தாள். எனது காதலன் என்னைக் கைவிட்டால் அவரைக் கொல்ல எந்தக் கொலையாளியையும் நான் நாட வேண்டியதில்லை.” இவ்வாறாக உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய அவரது விரல்கள் நடுங்கியதால், மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய, இனிய திண்பண்டங்கள் நிறைந்தத் தட்டு, கீழே விழுந்து நொறுங்கியது.

“எப்போது நீங்கள் பெரும் கோமகனாகப் போகிறீர்கள்?” என்று ஃபெராராவின் இளைய கோமகனிடம் கேட்டார் ஆறாவது பெண்மணி. அப்போது அப்பெண்மணியின் உதடுகளில் எக்களிப்பும், கண்களில் குடி வெறியும் நிறைந்திருந்தது.

“உங்கள் தந்தை எப்போது மடியப் போகிறார்?” என்று கேட்ட ஏழாவது பெண்மணி சிரித்தவாறே தனது கையிலிருந்த மலரை டான் யுவானிடம் வீசினார். அவள் ஆண்களை மயக்கிச் சொக்க வைப்பதில் தேர்ந்தவள். சற்று வெகுளியான இளம் வயதினள். ஆயினும் புனிதமான காரியங்களிலும் விளையாட்டாகவே ஈடுபடும் வழக்கமுடையவள்.

“ஓ! அது குறித்து ஏதும் பேசாதீர்கள்!” என்றார் அழகும், இளமையும் நிறைந்த டான் யுவான். “சாகாவரம் பெற்ற ஒரே ஒருவர் தான் இந்த உலகத்தில் உள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவர் எனக்குத் தந்தையாக வாய்த்து விட்டார்.”

ஃபெராரா மாளிகைக்கு வந்திருந்த ஏழு பெண்களும், டான் யுவானின் நண்பர்களும், சிறப்பு விருந்தினரான இளவரசரும் கூட அந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போய் ‘ஆ’வென எதிர்ப்புக் குரலெழுப்பினர். இருநூறு வருடங்களுக்குப் பின்னர், பதினைந்தாம் லூயியின் ஆட்சியின் கீழ் வாழும் மேட்டுக் குடியினர் திடுமென வெளிப்பட்ட அத்தகைய பதிலைக் கேட்டு எவ்வித அதிர்ச்சியுமின்றி நகைத்திருப்பர். ஆயினும் களியாட்டம் துவங்குவதற்கு முன்னர் விருந்தினர்களின் மனம் அசாதாரணத் தெளிவுடன் சற்று மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் வழக்கம்தானே!

மெழுகுவர்த்திகளின் வெப்பம், தங்க வெள்ளிக் குவளைகள், மதுபானங்களின் வாடை, உணர்ச்சிகளின் தீவிரம், கவர்ச்சிகரமான பெண்மணிகளின் ஒளிரும் கண்கள் போன்றன அந்த அறையில் நிறைந்திருந்தாலும் புனிதமான பண்பிற்கும், மனிதாபிமானத்திற்கும் ஒருவரது ஆழ்மனதில் சிறிதளவேனும் இடமிருந்தது. ஆயினும் வெள்ளமெனப் பொங்கிப் பொழிகிற மதுபானங்கள் அத்தகைய நல்ல உணர்வுகளை மூழ்கடிக்காத வரையில் மட்டுமே அவை நீடிக்கும். எனினும் ஏற்கெனவே பூங்கொத்துக்கள் நசுங்கியிருந்தன. விருந்தினர்களின் கண்கள் குடி போதையில் ஆழ்ந்திருந்தன. ராப்லேய்ஸின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் போதை கால் மிதியடி வரை ஊடுருவியிருந்தது.

பின் தோன்றிய சிறிது நேர இடைவெளியில் அறைக் கதவு திறக்கப்பட்டது. பால்தஸாரின் விருந்தில் நிகழ்ந்தது போன்றே கடவுள் அவதரித்து அவ்வறைக்குள் நுழைந்தார். தற்போது அவர் மூப்படைந்தவராக, வெண்மையான தலை முடி கொண்ட பணியாளாகத் தோற்றமளித்தார். அவர் ஆழ்ந்த புருவங்களுடன் தள்ளாடும் நடையில் உள்ளே நுழைந்தார். அவரது முகபாவம் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தியது. அறையிலிருந்த பூங்கொத்துக்களையும், மாலைகளையும், குவிந்திருந்த பழங்களையும், சிவப்பு மாணிக்கங்கள் பதிக்கப்பட்டிருந்த கிண்ணங்களையும், விருந்தினர் மகிழ்வையும், மலைத்து நிற்கும் முகங்களின் ஒளியையும், பெண்மணிகளின் வெண்மையான கைகளால் கசங்கிய திண்டுகளையும் அவர் கண்டார். அவை எல்லாவற்றையும் சோகம் ததும்பும் அவரது பார்வை வாட்டமுறச் செய்தது. பின் அறையில் நிகழும் அனைத்தையும் ஏளனப்படுத்தும் விதமாக ஆழ்ந்த குரலில், “ஐயா, உங்களது தந்தை இறந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

டான் யுவான் எழுந்தார். விருந்தினர்களுக்கு ஒருவித சைகையைக் காண்பித்தார். ஒவ்வொரு நாளும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சியல்ல இது என்பதை உணர்த்துவது போன்றிருந்தது அச்சைகை. வாழ்வை முழுக் களிப்புடன் அனுபவிக்கும் வேளையில் இளைஞர்களுக்கு அவர்களது தந்தை இறக்கும் தருவாயில் இருக்கிறார் என்கிற செய்தி கிட்டுவது அவ்வப்போது நடப்பதில்லையா என்ன? மரணம் நம்ப இயலாத தருணத்தில், எதிர்பாராத வகையில் நேர்கிறது. அது பெண்களின் விசித்திரமான குணாம்சத்திற்கு நிகரானது. எனினும் அவர்களைக் காட்டிலும் உண்மையானது. அது எவரையும் ஏமாற்றியதேயில்லை.

டான் யுவான் விருந்தினர் அறைக் கதவை மூடி வெளியேறினார். நடைக்கூடம் இருட்டாகவும், குளிர்ந்தும் இருந்தது. மகனுக்குரிய கடமையை எண்ணியதும், தனது மகிழ்ச்சியான மனநிலையைக் களைந்து வேறொரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். இரவு கறுத்திருந்தது. இளைஞரை மரண அறைக்கு அழைத்துச் செல்லும் அமைதியான முதிய பணியாள் நடைபாதையில் குறைந்தளவு விளக்குகளையே எரிய விட்டிருந்தார். அச்சமயம் நிலவிய அமைதி, குளிர், சோகம் போன்றவை மரணம் நிகழ்வதற்குத் தோதாகவே இருந்தன. இளைஞரோ களியாட்ட போதையை எதிர்த்துத் தெளிவாக இயங்க வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு வேளை அதன் காரணமாகவோ அல்லது அங்கு நிலவிய சூழல் காரணமாகவோ, ஊதாரியான அந்த இளைஞர் தனது ஆன்மாவைக் குறித்து எண்ண வேண்டிய நிலைக்குள்ளானார். தனது வாழ்வை பரிசீலனை செய்யும் ஆழந்த சிந்தனையில் ஈடுபட்டார். வழக்கில் சிக்கிக் கொண்ட ஒரு மனிதன் நீதிமன்றத்தை நாடும் வேளையில் ஆழ்ந்து ஆலோசிப்பது போல அவர் தனது வாழ்வைக் குறித்த எண்ணங்களில் மூழ்கினார்.

டான் யுவானின் தந்தையான பெர்த்தலோமியோ பெல்விடாரோ தொண்ணூறு வயது நிறைந்த முதியவர். அவர் தனது பெருமளவு வாழ்வை வியாபாரத்திற்கு அர்ப்பணித்திருந்தார். கீழ்த்திசை நாடுகளில் அதிகமாகப் பயணம் செய்து வியாபாரத்தில் பெரும் பணம் ஈட்டியிருந்தார். அதே சமயம் பல விஷயங்களையும் கற்றிருந்தார். அதன் காரணத்தால் தங்கம், வைரங்களைக் குறித்து அவர் லட்சியம் செய்வதேயில்லை. “வைடூரியங்களை விட ஆரோக்கியமான பல் மேலானது!” என்பார் அவர். மேலும் புன்னகைத்தவாறே, “அறிவை விடவும் ஆற்றலே மேலானது!” என்றும் கூறுவார்.

அந்த நல்ல தந்தை டான் யுவானின் இளமைக்குரிய சாகசங்களை விவரிக்கச் சொல்லி விரும்பிக் கேட்டு மகிழ்வார். பின் மேலும் பணத்தை அள்ளி வழங்கி வேடிக்கையாகச் சொல்வது, “என் அன்பு மகனே! நன்றாக அனுபவி!” எந்த முதியவரும் தனது மகனின் சாகசச் செயல்பாடுகளைக் குறித்து அந்தளவு சந்தோஷம் அடைந்ததேயில்லை. இளைஞனின் மகிழ்வான வாழ்வை எண்ணிப் பெருமிதம் கொண்ட தந்தையின் பாசம் அவரது மூப்பின் பயங்கரங்களையும் மறக்கச் செய்தது.

தந்தை பெல்விடாரோ அறுபது வயதை எட்டிய போது சாந்தமும், அழகும் நிறைந்த தேவதூதன் போன்றிருந்தார். மிகத் தாமதமாகவே பிறந்த ஒரே மகனான டான் யுவான் அவரது அளவற்ற பாசத்திற்குரியவராகத் திகழ்ந்தார். அவரது மனதிற்கினிய யுவானாவை இழந்த பின் பதினைந்து வருடங்கள் அந்த நல்ல மனிதர் துயரத்தில் மூழ்கியிருந்தார். அந்தக் கவலையே அவரது வித்தியாசமான பழக்க வழக்கங்களுக்குக் காரணமென மகனும், அவரது மாளிகையில் பணிபுரிந்த பலரும் எண்ணியிருந்தனர். அவரது விசாலமான மாளிகையில் வசதிகள் மிகக் குறைவாயிருந்த பகுதியில்தான் அவர் தங்கினார். வெளியே செல்வதும் மிக அபூர்வமாகத்தான். டான் யுவான் கூட முன் அனுமதியின்றி அவரது அறைக்குள் நுழைவதில்லை. சுயமாகவே முடிவெடுத்து தனித்து வாழ்ந்து வந்தார். எப்போதேனும் மாளிகையின் உள்ளேயோ, வெளியேயோ தென்பட்டாலும் சரி, அல்லது ஃபெராராவின் தெருக்களில் தென்பட்டாலும் சரி, அப்போதெல்லாம் கிடைக்க இயலாத ஏதோவொன்றை தேடிக் கொண்டிருப்பதைப் போலவே காணப்படுவார். நடந்து செல்லும் போதும் ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பார். கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருப்பார். ஏதோவொரு எண்ண அலையோடு போராடிக் கொண்டிருப்பார். அவர் கனவுலகில் வாழ்வதைப் போலவும், திட சித்தமில்லாத மனநிலையில் நடமாடுவதாகவும் அவரைக் காண்போருக்குத் தோன்றும்.

டான் யுவான் ஆடம்பரமான விருந்துகளை வழங்கிய போது, மாளிகையில் அவரது களியாட்டங்களின் சப்தங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும். முற்றத்தில் குதிரைகள் தங்களது கால்களை தரையில் தட்டிக் கொண்டிருக்கும். மாடிப்படிகளில் பணியாட்கள் பகடைக் காய்களை உருட்டி விளையாட்டில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இத்தனை களேபரங்கள் நிகழும் போதும் பெர்த்தலோமியோ எதையும் கண்டுக் கொள்வதில்லை. ஒரு நாளைக்கு ஏழு அவுன்ஸ் ரொட்டியும் சிறிது தணிணீரும் மட்டுமே அவரது ஆகாரமாயிருந்தது. எப்போதேனும் கோழி இறைச்சியைக் கேட்பார். அதற்கு முக்கியக் காரணம், விசுவாசமிக்க அவரது உற்ற துணையான கருப்பு ஸ்பானியல் இன நாய்க்கு அதிலுள்ள எலும்புகளைப் போடலாம் என்பதுதான்.

விருந்தினர்கள் எழுப்பும் சப்தங்கள் குறித்து அவர் ஒரு போதும் முறையிட்டதேயில்லை. அவர் உடல் நலக் குறைவாயிருந்த போதும் நாய்கள் குரைத்து, வாகனத்தின் ஒலிகளால் அவரது நித்திரை குலைந்தாலும் கூட, “ஆஹ்! டான் யுவான் வந்து விட்டான்!” என்ற வார்த்தைகள் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்படும். மனம் போன போக்கில் வாழ விடுகிற, ஒரு போதும் தொல்லையே அளித்திராத அவரைப் போன்றதொரு தந்தை ஒருபோதும் இப்புவியில் இருந்ததே கிடையாது. எனவே இளைஞரான பெல்விடாரோ செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட மகனுக்குரிய குணங்களையே கொண்டிருந்தார். தந்தைக்குரிய மரியாதையை செலுத்துவதும் அவருக்கு வழக்கமாயில்லை. அடிக்கடி மாறுகிற மனப்போக்கு கொண்ட ஒரு பெண்மணி வயது முதிர்ந்த காதலரிடம் வாழ்க்கை நடத்துவதைப் போன்றே டான் யுவான் தந்தை பெர்த்தலோமியோவிடம் உறவு கொண்டிருந்தார். அவரது திமிரான போக்கை புன்னகையால் மறைத்து, நகைச்சுவைப் பேச்சால் கவர்ந்து, பணிந்து குழைவது போல் நடித்து, தந்தையின் அன்பிற்கு பாத்திரமாய் இருந்தார்.

டான் யுவான் தனது இளமைப் பருவத்தை எண்ணிப் பார்த்தார். தந்தை ஒரெயொரு முறை கூட அவர் விரும்பியதை நிறைவு செய்யாமல் இருந்ததில்லை என்பதையும், எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஒரேயொரு நிகழ்ச்சியைக் கூட குறிப்பிட இயலாத வகையில் அவரது நல்ல உள்ளம் அமைந்திருந்ததையும் டான் யுவான் உணர்ந்தார். கூடத்தைக் கடந்து செல்கையில் ஆழ் மனதில் புதியதோர் உறுத்தல் தோன்றி, தந்தை நீண்ட காலம் வாழ்ந்திருந்ததையும் கூட கிட்டத்தட்ட மன்னித்து விடும் நிலைக்குள்ளானார். பெற்றோரை பயபக்தியுடன் மதிக்க வேண்டும் என்கிற உணர்வுகளைத் திரும்ப வரவழைத்துக் கொண்டார். திறமையாகக் களவாடிய லட்சங்களை மனமார அனுபவிப்பதற்காக திருந்தி நல்லவனாக வாழ முயலும் திருடனுக்கு ஈடானது டான் யுவானின் அப்போதைய மனநிலை.

டான் யுவான் விரைந்து தந்தையின் குடியிருப்புப் பகுதியில் நுழைந்தார். அங்கிருந்த விசாலமான, உயரமான அறைகள் மிகக் குளிராயிருந்தன. அதில் நிலவிய ஈரப்பதமான சூழலை உணர்ந்தார். கனமான காற்றை சுவாசித்தார். தூசு படிந்த திரைகளும், இதர சாதனங்களும், மேஜை நாற்காலிகளும் பழையதொரு பூஞ்சைக் காளான் வாடையை நாசிக்கு வழங்கின.

முதிய தந்தையின் பழமையான அறைக்குள் தானிருப்பதை உணர்ந்தார். நோய்வாய்ப்பட்டிருந்தவரின் படுக்கைக்கு முன்பாக நின்றிருந்தார். அருகிலிருந்த கணப்பின் நெருப்பும் அணையும் தருவாயிலிருந்தது. மேற்கு ஐரோப்பிய பழங்கால மேஜையில் எரிந்து கொண்டிருந்த ஒரு விளக்கு அவ்வப்போது குறைந்தும், நிறைந்தும் ஒளிக்கதிர்களை படுக்கைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. அந்த சீரற்ற ஒளியானது முதியவரை பல்வேறு கோணங்களில் மாறிக் கொண்டேயிருக்கும் நிலைகளில் வெளிப்படுத்தியது. குளிர்க் காற்று பாதுகாப்பற்ற ஜன்னல்களின் ஊடாக ஓலமிட்டுக் கொண்டிருந்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகளில் உறைபனி விழும் மெல்லியதோர் ஒலி செவிகளை எட்டியது.

டான் யுவான் வெளியேறிய விருந்தினர் அறைக்கு முற்றிலும் முரணானதொரு சூழல் அந்த பழமையான அறையில் நிலவியதால் தவிர்க்க இயலாதவாறு அவரது உடல் நடுக்கமுற்றது. கட்டிலை நெருங்கும் வேளையில் திடீரென வீசிய காற்றினால் சிதறிய ஒளிப்பிழம்பு தந்தையின் முகத்தில் ஒளிர்ந்த போது அவரது உடல் மேலும் நடுங்கியது. முக உறுப்புகள் சிதைந்திருந்தன. தோல் எலும்போடு கெட்டியாக ஒட்டியிருந்தது. தோலிலிருந்து மங்கலான பச்சை நிறம் வெளிப்பட்டது. முதியவர் தலை சாய்த்திருந்த தலையணையின் வெண்ணிறம் அவரது தோற்றத்திலிருந்து மாறுபட்டு சூழலின் பயங்கரத்தை அதிகரித்தது. வலியைத் தாங்க இயலாத உடல் சுருங்கிக் குறுகியிருந்தது. பற்களற்ற வாய் பிளந்திருந்தது. வேதனையுடன் வெளியேறும் பெருமூச்சின் ஒலி அதிகமாக இருந்தது. அறைக்கு வெளியே வீசிக் கொண்டிருந்த சூறாவளிக் காற்றும் கூட அந்த மூச்சொலியைப் பின்பற்றி வருத்தமுறுவது போன்று பெரும் ஓலமிட்டது. அழிவைக் குறிக்கும் இத்தகைய அபசகுனங்கள் தோன்றியும் கூட, நம்ப முடியாத வகையில் முதியவரின் முகபாவனையில் ஆற்றல் மிக்கதோர் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

கண்கள் நோயினால் புனிதத்துவம் அடைந்தது போல தளராத உறுதியுடன் நேராக விழித்துப் பார்த்த வண்ணமிருந்தன. வலிமை வாய்ந்த மேன்மையான ஆத்ம பலம் மரணத்தோடு அங்கு போராடிக் கொண்டிருந்தது. கட்டிலின் ஓரத்தில் அவரது காலருகே யாரோ ஓர் எதிரி அமர்ந்திருப்பது போலவும், அவரைக் கொன்று விட பெர்த்தலோமியோ எத்தனிப்பது போலவும் தோன்றியது. அவரது தலை ஆடாது அசையாது நிலை பெற்றிருந்ததால் கூரிய அவரது பார்வை திகைப்பூட்டுவதாய் இருந்தது. அது மருத்துவரின் மேஜையில் காணக் கூடிய மண்டை ஓடு விழித்துப் பார்ப்பதைப் போலிருந்தது. அவரது உடல் போர்வையால் மூடப்பட்டிருந்ததால் சில பகுதிகளை மட்டுமே காண முடிந்தது. சாகும் தருவாயிலுள்ள அந்த மனிதரது அனைத்து அங்கங்களும் கூட விறைத்திருந்தன. கண்களைத் தவிர்த்து உடலின் மற்ற பகுதிகள் யாவும் செயலிழந்திருந்தன. அவரது வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் ஒருவித இயந்திரத்தன்மை புலப்பட்டது.

விலைமாதின் மலரை மார்பில் ஏந்தியவாறு தந்தையின் மரணக் கட்டிலுக்கு வந்ததை எண்ணி டான் யுவான் வெட்கினார். தவிர விருந்தின் மணமும், மதுபான வாடையும் அவரிடமிருந்து வெளிப்பட்டன.

மகனைப் பார்த்ததும், “இன்பக் களிப்பில் மிதக்கிறாய்!” என்றார் முதியவர்.

அதே சமயம் விருந்தினர்களை மகிழ்விக்க வந்திருந்த ஒரு பாடகியின் குரல் இன்னிசையுடன் சேர்ந்து வலுப்பெற்று, சூறாவளியின் சப்தத்திற்கும் மேலாக எழும்பி, மரண அறைக்குள் ஊடுருவியது. தந்தையின் வார்த்தைகளை உறுதிப்படுத்துவதைப் போல ஒலித்த அந்தக் குரல்வளையை டான் யுவான் சந்தோஷமாக நெரித்திருப்பார்.

“மகனே! உனது இன்பமான வாழ்வை நான் வெறுக்கவில்லை!” என்றார் பெர்த்தலோமியோ.

கனிவுடன் மென்மையாகக் கூறப்பட்ட அந்த வார்த்தைகள் டான் யுவானை நோகச் செய்தன. அத்தகைய பண்பை வெளிப்படுத்திய தந்தையை டான் யுவானால் தாங்க இயலவில்லை.

“என்ன ஒரு துக்கத்தை எனக்குத் தருகிறீர்கள் தந்தையே!” என்றார் டான் யுவான் பெரும் குரலில்.

“வருத்தப்படாதே மகனே!” என்று பதிலுரைத்தார் முதியவர். “நீ என் மரணத்தை விரும்பக் கூடாது என்பதற்காகவே உன்னிடம் நான் எப்போதும் பரிவாயிருந்தேன்.”

“ஓ!” என்று ஓலமிட்டார் டான் யுவான். “உங்களது வாழ்வை நீடிக்கச் செய்யக் கூடுமானால் எனது ஆயுளின் ஒரு பகுதியைக் கூட உங்களுக்கு நான் வழங்குவேன்.” (ஆனால் மனதிற்குள்ளாக ‘இப்படி எல்லாம் சொல்வது வழக்கம்தானே’ என்றும் காதலியிடம் ‘உனக்காக எதையும் செய்வேன் என உறுதியளி;ப்பது போலத்தானே’ என்றும் எண்ணிக் கொண்டார் அந்த ஊதாரி.)

இவ்வாறான எண்ணம் டான் யுவானின் மனதில் தோன்றி முடிவதற்குள்ளாக வயதான ஸ்பானியல் நாயின் குரல் ஏங்கி அழுவதைப் போல் ஓலித்தது. புத்திக் கூர்மை வாய்ந்த அந்த நாயின் குரலானது டான் யுவானை திடுக்கிடச் செய்தது. நாய் அவரைத் தெளிவாகப் புரிந்து கொண்டதாகவே எண்ணினார்.

“மகனே! உன்னிடம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார் இறந்து கொண்டிருந்த முதியவர். “நீ முழுமையாக மன நிறைவடையலாம். நான் நிரந்தரமாக உயிர் வாழ்வேன். நீயும் உனது ஆயுளின் ஒரு நாளைக் கூட இழக்க வேண்டியதில்லை.”

“ஏதோ பிதற்றல்,” என்று தனக்குள்ளாக டான் யுவான் சொல்லிக் கொண்டார். பின் உரக்க அவர் கூறியது, “ஆம்! என் ஆருயிர்த் தந்தையே! நான் உயிரோடு இருக்கும் வரையிலும் என் உள்ளத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.”

“நான் குறிப்பிட்டது அவ்விதமான வாழ்வை அல்ல” என்றார் அந்த உயர்ந்த மனிதர். பின் மரணப் படுக்கையில் இருப்பவருக்கே ஏற்படக் கூடிய சந்தேகம் அவர் மனதில் எழும்பியதும், தனது முழு பலத்தையும் பயன்படுத்தி முதுகை உயர்த்தி, சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். “கேள் மகனே!” என்று இறுதி முயற்சியாக மேலும் தொடர்ந்த போது பலவீனமான அவரது குரல் மேலும் கம்மியது. “உனது பணம், குதிரைகள், நாய்கள், பருந்துகள், மது பானங்கள், ஆசை நாயகிகள் ஆகியவற்றை நீ இழக்க விரும்பாததைப் போலவே எனக்கும் சாக விருப்பமில்லை…”

“அதை நானும் உணர்கிறேன்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட மகன் தலையணை அருகே குனிந்து சவம் போல் வெளிறியிருந்த தந்தையின் ஒரு கையில் முத்தமிட்டார். “ஆனால் எனதருமைத் தந்தையே!” என்று உரத்த குரலில் கூறிய அவர், “கடவுளின் ஆணைக்குக் கீழ்ப்படியத்தானே வேண்டும்.”

“கடவுள்! நானும் கூட கடவுள்தான்” என முணங்கினார் அந்த முதியவர்.

தந்தையின் முகத்தில் பரவிய அச்சுறுத்தும் முகபாவனையைக் கண்ட இளைஞர், “கடவுளைப் பழிக்காதீர்கள்!” என்றார். “வார்த்தைகளை கவனமாகப் பேசுங்கள். கடவுளின் பரிபூரண அருள் உங்களுக்குக் கிட்டியுள்ளது. நீங்கள் பாவத்தில் மரிப்பது ஒருபோதும் எனக்கு ஆறுதலைத் தராது.”

பற்களற்ற தாடைகளை நெரித்தபடி இறந்து கொண்டிருந்த முதியவர் கத்தினார், “நான் சொல்வதைக் கேட்கப் போகிறாயா, இல்லையா?”

அதன் பின் டான் யுவான் அமைதியானார். அறையில் நிசப்தம் நிலவியது. உறைபனிப் பொழிவின் ஓசைக்கிடையே, மெல்லப் புலரும் காலைப் பொழுதைப் போல, பாடகியின் தெய்வீகக் குரலும், இன்னிசை நாதமும் மென்மையாக ஒலித்தன.

இறந்து கொண்டிருக்கும் முதியவர் புன்னகைத்தார். “இன்னிசைக் கலைஞர், பாடகி ஆகியோரை வரவழைத்ததற்கு நன்றி. பெரு விருந்து, கருங் கூந்தல் கொண்ட நங்கைகள் கூடியுள்ள வாழ்வின் அனைத்து இன்பங்களும் தொடரட்டும். நான் மீண்டும் புத்துயிர் பெறப் போகிறேன்.”

“பிதற்றல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது” என்று தனக்குள்ளாக கூறிக் கொண்டார் டான் யுவான்.

“புத்துயிர் பெறுவதற்கான வழிமுறையை நான் கண்டுபிடித்துள்ளேன். மேஜையில் அந்த அறையைத் திறந்து பார். அந்த சிலையில் மறைந்துள்ள பொத்தானை அழுத்தினால் அந்த அறை திறக்கும்.”

“திறந்து விட்டேன் தந்தையே!”

“நல்லது! அதிலுள்ள சிறிய கண்ணாடிக் குப்பியை எடு!”

“இதோ! என் கையில் உள்ளது!”

“நான் இருபது வருடங்களாக…”

இந்தக் கட்டத்தில் தனது முடிவு நெருங்குவதை முதியவர் உணர்ந்தார். முழு சக்தியையும் திரட்டி, “எனது இறுதி மூச்சை விட்டதும், அந்தக் குப்பியிலுள்ள திரவத்தை எடுத்து என் உடலில் தேய்த்து விடு. நான் மீண்டும் உயிர் பெறுவேன்.”

“இதில் சிறிதளவே உள்ளது” எனப் பதிலுரைத்தார் இளைஞர்.

பெர்த்தலோமியாவால் அதற்கு மேல் பேச இயலவில்லை. ஆனால் அவரால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. மகனின் வார்த்தைகளைக் கேட்ட உடனே வலிந்து தலையைத் திருப்பினார். அவரது கழுத்து திரும்பிய நிலையிலேயே நின்று விட்டது. சிற்பி தனது விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கும் பளிங்குச் சிலையிலுள்ள தலை நிலையாகத் திரும்பியிருப்பதைப் போல, முதியவரது தலையும் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று நிலை பெற்று நின்று விட்டது. கூர்ந்து நோக்கும் அவரது கண்கள் பயங்கரமாய் விழித்த நிலையில் இருந்தன. அவரது தலை முடியும் பயங்கரமாக விறைத்து நின்றிருந்தது. ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது விழிகள் இன்னமும் ஏதோ சொல்ல விரும்புவதைப் போலவே தோற்றமளித்தன.

இறப்பிலிருந்து உயிர்த்தெழத் துடித்த, கடும் சீற்றத்துடன் கடவுளைப் பழி வாங்க விரும்பிய முதியவர் அவர். தற்போது அவர் மரித்து விட்டார். அவருக்கிருந்த ஒரே இறுதி மாயையையும் இழந்த நிலையிலேயே அவர் இறந்து விட்டார். மகனது உள்ளத்தில் நெருக்கமான இடத்தைப் பெற்று நிரந்தர பாதுகாப்பை நாடியவர் அவர். இருப்பினும் அவரது மகனது இதயத்தில் அவர் கண்டடைந்தது வெறுமையைத்தான். மனிதர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இறந்த பின் புதைப்பதற்கு வெட்டும் சவக்குழியை விடவும் அதிக ஆழமான வெறுமையைக் கொண்டிருந்தது மகனின் உள்ளம்.

“இதோ! இந்த நல்ல மனிதரின் கதை முடிவடைந்தது!” கூக்குரலிட்டார் டான் யுவான்.

உண்ட பின் தான் அருந்திய மதுக் குப்பியை கையில் எடுத்துப் பார்க்க விரும்பும் குடிகாரனைப் போல, அந்த மாயக் குப்பியை விளக்கினருகே கொண்டு சென்றார் டான் யுவான். அச்சமயம் தந்தையின் கண்கள் மங்கி வெளிறியதை அவர் காணவில்லை. அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த நாய் இறந்த எஜமானரையும், குப்பியையும் மாறி மாறி பார்த்தது. அதைப் போலவே டான் யுவான் தந்தையையும், குப்பியையும் மாறி மாறி பார்த்தார். சுடர் விட்டெரியும் விளக்கு சூழலுக்குப் பொருந்தும் வகையில் ஒளிக் கதிர்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அறையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. இசைக் கருவியின் ஒலியும் அடங்கி விட்டது. தனது தந்தை அசைவது போல பெல்விடாரோவுக்குத் தோன்றி உடல் நடுக்கமுற்றது. குற்றம் சாட்டுவது போல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த கண்களைக் கண்டு பயந்து, இலையுதிர் கால இரவில், ஜன்னல் திரையை கீழே இழுத்து விடுவதைப் போல அக்கண்களை அவர் மூடினார். ஆடாது அசையாது நின்றவாறு ஆலோசனையில் மூழ்கினார்.

துருப்பிடித்த இரும்புச் சுருள்வில்லில் இருந்து எழுந்த ‘கிறீச்’ எனும் சப்தம் திடீரென ஒலித்து அறையின் அமைதியைக் குலைத்தது. டான் யுவான் திடுக்கிட்ட நிலையில், கையிலிருந்த குப்பி நழுவிக் கிட்டத்தட்ட கீழே விழுந்து நொறுங்கியிருக்கும். எஃகு வாளை விடவும் குளிர்ந்த வியர்வை அவரது உடலில் சுரந்து வழிந்தது. சுவர்க் கடிகாரத்திலிருந்து மரத்தினாலான வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சேவல் வெளிவந்து மூன்று முறைகள் கூவியது. அக்காலத்திய அறிஞர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்து வேலையைத் துவங்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட அற்புத சாதனம் அது. டான் யுவான் தந்தைக்கு ஆற்றும் கடமையை விட அந்தப் பழங்கால சுவர்க் கடிகாரம் அதிக விசுவாசத்துடன் தனது வேலையைச் செய்தது. அந்தச் சாதனம் மரம், சக்கரம், கம்பி, கயிறு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இளைஞரோ மானிடனுக்கே உரித்தான இதயம் என்கிற நூதன கருவியைத் தன்னகத்தே கொண்டிருந்தார்.

புலரியின் சிகப்பு வண்ணம் ஜன்னல்களில் படர ஆரம்பித்தது. மர்மமான அந்தத் திரவம் கீழே சிந்தி வீணாவதைத் தவிர்க்க அந்தப் பழங்கால மேஜையின் அறையில் பத்திரமாகத் திரும்ப வைத்தார் சந்தேகப் புத்தியுடைய டான் யுவான். புனிதமான அத்தருணத்தில் அறையின் வெளிப்புறத்தில் பெரும் அமளிக் கூச்சலைக் கேட்டார் அவர். குழப்பம் நிறைந்த குரல்கள், கமுக்கமான சிரிப்புகள், மென்மையான காலடிகள், சலசலவென ஒலிக்கும் பட்டாடைகளின் சப்தங்கள் ஆகிய அனைத்தும் அவரது காதுகளில் விழுந்தன. ஆரவாரமாகப் பொங்கி எழும் கிளர்ச்சியில் திளைக்கும் மாந்தர்கள் தங்களுக்குள் ஓர் ஒழுங்கமைவை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதை டான் யுவான் உணர்ந்தார்.

கதவு திறந்தது. முக்கிய விருந்தினரான இளவரசர், இன்னிசைக் குழுவினர், ஏழு பெண்மணிகள், டான் யுவானின் நண்பர்கள் ஆகிய அனைவரும் உள்ளே நுழைந்தனர். அந்திப் பொழுதில் அற்புத நடமிடும் விருந்தினர்கள் வைகறையின் துவக்கத்தால், மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்திற்கு முரணான ஆதவனின் ஒளியால் எதிர் கொள்ளப்பட்டு களியாட்டத்தை முடித்துக் கொள்ளும் நிலையிலிருந்தனர். எனவே இளைய கோமகனின் துயரில் பங்கு கொள்ளும் மரபுச் சடங்கை நிறைவேற்ற வந்திருந்தனர்.

“ஓ! தந்தையின் மரணத்தினால் டான் யுவான் உண்மையாகவே துக்கப்படுகிறாரா?” என்று இளவரசர் கிண்டலாக லா ப்ரம்பிலாவின் காதுகளில் கிசுகிசுத்தார்.

“அவரது தந்தை நல்ல மனிதராயிற்றே!” என்று அப்பெண்மணி பதிலளித்தார்.

ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய டான் யுவானின் முகபாவனை விருந்தினர்களை அமைதியடைய வைத்தது. அவர்கள் அசையாது நின்றிருந்தனர். அருந்திய மதுபானத்தால் உதடுகள் உலர்ந்த நிலையிலிருந்த பெண்மணிகள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்யத் துவங்கினர். கோலாகலம், அழகு, பகட்டு போன்றவை கொந்தளிக்கும் இளமையின் அவதாரங்களாகிய அவர்கள் மரணத்துக்கு இவ்வாறாகப் போலி அஞ்சலி செலுத்துவதைக் கண்டு தவிர்க்க இயலாதபடி டான் யுவான் பதறி நடுங்கினார். ஆனால் போற்றுதலுக்குரிய இந்த இத்தாலியில் மதமும் கேளிக்கையும் ஒட்டி உறவாடி நெருக்கமாகக் கலந்திருந்தது. அதன் காரணமாக மதம் ஒழுக்கக் கேடாகவும், ஒழுக்கக் கேடே மதமாகவும் ஆகியிருந்தது.

இளவரசர் டான் யுவானின் கைகளைப் பரிவுடன் பற்றினார். அங்கு கூடியிருந்த அனைவரும் இளவரசரின் அதே முகபாவனையை ஒரே விதமாக வெளிப்படுத்தினர். பிறகு பாதி அனுதாபமும், பாதி அலட்சியமும் கொண்டிருந்த அந்த மாய உருவங்கள் மறைந்ததும் அறை வெறுமையானது. அவர்கள் துக்கத்தை விரும்பாத, உயிரோட்டமிக்க இன்பமான சுக வாழ்வை வெளிப்படுத்தும் மெய்யான பிம்பங்கள்.

படிகளில் இறங்கும் போது இளவரசர் லா ரிவபெரல்லாவிடம், “தந்தையிடம் பயபக்தி இல்லாதது போல் டான் யுவான் நம்மிடம் பேசியது வெறும் தம்பட்டம் என யாரால் எண்ணியிருக்கக் கூடும்? உள்ளபடியே அவர் தந்தையிடம் பாசம் கொண்டிருக்கிறார்” என உரைத்தார்.

“அறையிலிருந்த அந்தக் கருப்பு நாயைக் கவனித்தீர்களா?” என்று கேட்டார் லா ப்ரம்பிலா.

“இப்போது அவர் பெரும் பணக்காரர்” என்று பெருமூச்சு விட்டவாறே உரைத்தார் பயான்கா கவடோலினி.

“அதனால் எனக்கென்ன?” என்றார் கர்வமிக்க வெரோனிஸ். தின்பண்டத் தட்டை உடைத்தவர் அவர்தான்.

“சரிதான்! அதனால் உனக்கென்ன?” உரத்துக் கூவினார் இளவரசர். “தற்போது அவருக்கு சொந்தமாகக் கூடிய தங்க நாணயங்களினால் என்னைப் போன்றே அவரும் இளவரசருக்குரியத் தகுதியைப் பெறுவார்.”

டான் யுவானின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றித் தடுமாறினார். பல்வேறு தீர்மானங்கள் அவரை அலைக்கழித்தன. முதல் காரியமாகத் தந்தை சேர்த்துள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை கணக்கிட்டுத் தெரிந்து கொண்டார். பயங்கர கர்வமும், தன்முனைப்பும் ஒருங்கே சேர்ந்து அவரது ஆன்மாவைப் பெருமிதம் கொள்ளச் செய்தன.

பின் மாலையில் தந்தையின் மரண அறைக்குத் திரும்பினார். அந்த முதியவரின் அபூர்வமான ஈமச் சடங்கைக் காண ஃபெராராவின் அனைத்து மக்களும் திரளாக வந்து மரியாதை செலுத்துவர். எனவே மாளிகையின் அனைத்து பணியாட்களும் பல்வேறு ஆபரணங்களைச் சேகரித்து ‘என் தெய்வமே’ என்கிற வார்த்தைகளைப் பதித்து ராஜ மரியாதைக்குரிய வகையில் மரணப் படுக்கையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அறையில் நுழைந்த டான் யுவான் சைகை காட்டியதும், அனைத்து பணியாட்களும் பேச்சு மூச்சற்று நடுக்கத்துடன் ஸ்தம்பித்து நின்றனர்.

“என்னை இங்கு தனியாக விடுங்கள்” என்றார் அவர் வித்தியாசமான அதிகாரத் தொனியில். “நான் வெளியேறும் வரையில் யாரும் உள்ளே நுழைய வேண்டாம்.”
முன்னாள் இரவில் அவரை மரண அறைக்கு அழைத்து வந்த முதியப் பணியாளரே இறுதியாக அந்த அறையை விட்டு வெளியேறினார். கல் தரையில் நடந்து சென்ற அவரது காலடிகளின் சப்தம் ஓய்ந்ததும் விரைந்து அறைக் கதவை மூடித் தாழிட்டார் டான் யுவான். தனித்திருப்பதை உறுதி செய்து கொண்ட அவர், “இப்போது சோதிப்போம்” என்று கூவினார்.

நீண்ட மேஜையில் பெர்த்தலோமியோவின் உடல் அறையின் நடுவில் கிடத்தப்பட்டிருந்தது. முதுமையின் தளர்ச்சியால் அவரது உடல் மெலிந்து வெறும் எலும்புக் கூடு போலத் தோற்றமளித்தது. பார்வையாளர்கள் அதைக் கண்டதும் அருவருப்படையக் கூடும் என்பதால் தலை மட்டும் தெரியும்படியாக உடல் துணியால் மூடப்பட்டிருந்தது. போர்த்தியிருந்தத் துணி அவரது உடலோடு ஒட்டியிருந்தது. மெலிந்து விறைத்த உருவத்தை அது ஓரளவே வெளிப்படுத்தியது. உடலில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு நறுமணம் வீசம்படியாகச் செய்திருந்தனர். அவசர அவசரமாக பூசப்பட்டதால் முகத்தில் ஆங்காங்கே கறைகள் தென்பட்டன.

டான் யுவான் மனதில் பெரும் சந்தேகம் எழும்பியது. கண்ணாடிக் குப்பியின் மூடியைத் திறக்கும் வேளையில் அவர் நடுக்கமுற்றார். தலைக்கருகே நின்ற போது தேகம் அதிக நடுக்கமுற்றதால் சற்று நேரம் தயங்கி நின்றார். ஒழுங்கு முறை தவறியவர்களோடு பழகி வந்ததால், அவரது உள்ளமும் சீர் கெட்டு நெறி தவறியிருந்தது. அச்சமயம் அவருக்கு அபூர்வமானதொரு யோசனை தோன்றியது. அதன் காரணமாக ஆவல் மிகுந்து, அச்சம் குறைந்து, துணிவு ஏற்பட்டது. ஏதோ ஒரு தீய சக்தி ‘ஒரு கண்ணில் மட்டும் தடவிப் பார்’ என்று காதுகளில் உரைத்த சொற்கள் அவரது மனதிலும் எதிரொலித்தன. உடனே ஒரு துணியை எடுத்து விலை மதிப்பற்ற அந்த திரவத்தில் சிறிதளவே நனைத்தார். அதை வலது கண்ணின் மேல் மென்மையாகத் தடவினார். உடனே கண் திறந்தது!

“ஆ!”வென அலறிய டான் யுவான் இறுக்கமாக அந்த மாயக் குப்பியைப் பிடித்துக் கொண்டார். சில நேரங்களில் நமது கனவில் செங்குத்தான பள்ளத்தாக்கில் விழும் போது, ஒரு மரக்கிளையை இறுகப் பற்றிக் கொள்வோம். அதைப் போலவே டான் யுவான் அந்தக் குப்பியைப் பிடித்துக் கொண்டார்.

தந்தையின் கண்களில் உயிரோட்டம் மிகுந்திருந்ததைக் கண்டார். மரித்தத் தலையில் குழந்தையின் கண் தோன்றியிருந்தது. உயிர்த் துடிப்புடன் கூடிய இளம் கண்ணில் சுடரொளி வீசியது. அழகிய கருத்த முடிகள் அக்கண்ணின் இமையை அலங்கரித்தன. குளிர்ந்த மாலையில் தனிமையான இடங்களில் பயணம் செய்பவர்கள் காணக் கூடிய ஒற்றை விளக்கு மின்னுவதைப் போல அக்கண் மின்னியது. ஓளி வீசும் அக்கண் டான் யுவானை துளைத்து விடுவது போல் பார்த்தது. அது சிந்தித்தது, பேசியது, இகழ்ந்தது, மிரட்டியது, குற்றம் சாட்டியது, நீதி கேட்டது, சினந்து சீறியது, பின் அழுதது. வெகுக் கனிவுடன் கெஞ்சி இறைஞ்சியது. பெரும் அதிகாரத் தோரணையில் கோபத்தை வெளிப்படுத்தியது. தூக்கிலிடப் போகும் கொலைஞர்களிடம் பணிவன்புடன் மன்றாடும் இளநங்கையைப் போன்ற பாவனையை வெளிப்படுத்தியது. இறுதியாகத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் மனிதன் சக மனிதர்களை பார்வையிடுவதைப் போன்ற பயங்கரமான ஒரு பார்வையை வெளிப்படுத்தியது.

உடலின் ஓர் அங்கத்தில் ஒளிர்ந்த பெரு வாழ்வு தோற்றுவித்த அதிர்ச்சியில் டான் யுவான் பின் வாங்கினார். அறையின் மேலும் கீழும் நடந்தார். அக்கண்ணை எதிர் நோக்கும் தைரியம் அவருக்கில்லை. ஆனால் அக்கண் அறை முழுவதும் வியாபித்து, கூரையிலிருந்தும், ஜன்னல் திரைகளிலிருந்தும் அவரைக் கூர்ந்து நோக்கியது. அறை முழுவதும் விவேகமும், உயிரோட்டமும் மிகுந்திருக்கும் வகையிலான கலைப் பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தீப்பிழம்பாக ஒளிர்ந்தன. எங்கெங்கும் பளிச்சிட்ட கண் அவரிடம் கதறியது.

பேய்த்தனமான ஒரு தூண்டுதலால் உந்தப்பட்டு தந்தையின் முன் நின்றார். சுடாராக ஒளிரும் கண்ணைக் குறித்த எண்ணங்களில் மூழ்கியிருந்த டான் யுவானிடமிருந்து, “இவர் இன்னும் நூறு வருடங்கள் கூட வாழ்வார்!” என்கிற வார்த்தைகள் அனிச்சையாக வெளிப்பட்டன.

அறிவார்ந்த அக்கண் மூடித் திறந்தது. “ஆம்!” என அது ஒப்புதலளித்துக் கூவியது போலிருந்தது. டான் யுவானுக்கு அதை விடவும் அதிக அதிர்ச்சியைத் தரக் கூடியது வேறொன்றுமில்லை.

“என்ன செய்வது?” எனக் கூவியபடியே அவர் சிந்தித்தார்.

வெண்மையான அக்கண்ணின் இமையை மூடுமளவிற்கு அவருக்குத் தைரியமிருந்தது. ஆனால் அவரது முயற்சிகள் வீணாயின.

“நான் அதைச் சிதைத்து விடலாமா? ஒருக்கால் அது தந்தையைக் கொல்வதாகுமா?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.

“ஆம்!” என அக்கண் சிமிட்டி ஆமோதித்தது.

“ஆ! இதில் ஏதோ மாயமிருக்கிறது!” எனக் கூவினார் டான் யுவான்.

நசுக்கி சிதைப்பதற்காக அதனருகே அவர் சென்றார். கண்ணீர்த் துளி ஒன்று பெருகி பிணத்தின் கன்னங்களில் வழிந்து பெல்விடாரோவின் கையில் விழுந்தது.
“என்னை அது புண்படுத்துகிறது” என ஓலமிட்டு அமர்ந்தார். அப்போராட்டம் அவரைச் சோர்வடையச் செய்தது. யாக்கோபு தேவதூதரோடு போராடுவது போலிருந்தது அந்நிகழ்வு.

இறுதியாக அவர் எழுந்தார். “ரத்தம் சிந்தாத வரையில்…” என்றுரைத்தார்.

கோழைத்தனமான அக்காரியத்தைச் செயல்படுத்துவதற்கான தைரியத்தை முழுமையாகத் திரட்டிக் கொண்டார். அக்கண்ணின் மீது பார்வையைச் செலுத்தாமல் கையிலிருந்த துணியால் அதை நசுக்கினார். அதிர்ச்சியூட்டும், பயங்கரமான ஓர் ஆழ்ந்த வேதனைப் புலம்பல் அவரது காதில் கேட்டது. அதே கணத்தில் மரித்த பரிதாபத்திற்குரிய ஸ்பானியல் நாயின் இறுதி ஊளை அது.

“நாயும் இந்த மர்மத்தோடு தொடர்புடையதோ?” என்று விசுவாசமாயிருந்த மிருகத்தை நோட்டமிட்டபடியே அவர் எண்ணினார்.

டான் யுவான் கடமை தவறாத மகனாகக் கருதப்பட்டார். தந்தையின் கல்லறையில் வெண் பளிங்கினாலான நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினார். அக்காலத்தில் பிரபலமாயிருந்த முக்கியக் கலைஞர்களை வரவழைத்து அதில் சிற்பங்களைச் செதுக்கச் செய்தார். மிகுந்த எடையுடன் கூடிய அவரது தந்தையின் பெரும் சிலை ஒன்றை அக்கல்லறையில் நிறுவினார். அதை மதக் குறியீடுகளின் முன்பாக மண்டியிட்டிருக்கும்படி வடிவமைக்கச் செய்தார். அச்சிலை நிறுவப்பட்டதன் பிறகே அவரது மனம் சிறிது ஆறுதலடைந்தது. எடை மிகுந்திருந்த அந்தச் சிலையின் பாரத்தில் அவரது இதயத்தைத் தொட்ட ஒரேயொரு மன வேதனையைப் புதைத்தார். அந்த வேதனையும் கூட எப்போதேனும் அவரது உடல் தளர்ந்திருக்கும் கணங்களில் மட்டுமே தலை தூக்கியது.

கீழை நாடுகளில் பயணம் செய்து செல்வத்தைக் குவித்திருந்த தந்தையின் அளவற்ற சொத்துக்களை மதிப்பீடு செய்த டான் யுவான் மேலும் அதிக செல்வத்தைத் திரட்டும் பேராசைக் கொண்டவரானார். இரட்டை ஆயுள் வாய்த்திருக்கிற காரணத்தினால் அவருக்கு அதிகப் பணம் தேவையிருக்காதா என்ன? சமூக வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ள கோட்பாடுகளை அவர் ஊடுருவிப் பார்த்தார். அவரது மனதில் முக்கிய இடம் பெற்றிருந்த கல்லறையின் மீதிருந்து பார்வையைச் செலுத்தியதால், உலகை அவரால் வெகு தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனைய மனிதர்களையும், தனது மனப் போக்கையும் சீர் தூக்கிப் பார்த்தார். கடந்த கால சரித்திர நிகழ்வுகளை முன்மாதிரியாகக் கொண்டு, நிகழ் காலத்தை சட்டங்கள் வரையறுத்துள்ளபடியும், எதிர்கால நிகழ்வுகளை சமயம் புலப்படுத்தியிருந்த வகைகளிலும் பரிசீலித்தார். ஆன்மாவையும், ஜடப் பொருட்களையும் மூளையின் கொதிக்கலத்திலிட்டு பரிசோதித்தார். பின் அவற்றில் ஒன்றுமேயில்லை என்பதை அவர் முழுக்க முழுக்க உணர்ந்தார். அதன் பின் மேதைகளின் கற்பனையில் உருவாக்கப்பட்ட டான் யுவானாகவே வாழ்ந்தார்.

இளமையும் அழகும் நிறைந்த வாழ்வில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதன் மாயைகளில் வல்லுநராகத் திகழ்ந்தார். வாழ்வை ஏளனமாகக் கருதிய அதே சமயம் அதனைக் கையகப்படுத்தியும் கொண்டார். டான் யுவானது மன மகிழ்ச்சி ஒரு போதும் பூர்ஷ்வா மக்களினுடையது போன்றதல்ல. அத்தகைய மனப்பாங்குள்ள மக்கள் நன்றாகச் சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி, மாரிக் காலத்தில் வயிற்றுக்கு கதகதப்பூட்டக் கூடிய நல்விருந்து, இரவில் ஒளிரும் விளக்குகள், விதவிதமான புதுக் காலணிகள் போன்றவற்றிலேயே திருப்தியடையக் கூடியவர்கள். ஆனால் டான் யுவான் அவ்வாறில்லை. குரங்கு தனக்குக் கிடைத்த கொட்டையை விடாது இறுகப் பற்றிக் கொண்டு, கரடுமுரடான அதன் ஓட்டைப் பிளந்து உள்ளிருக்கும் சுவையான மூலப் பகுதியை ரசித்து உண்பதைப் போல டான் யுவான் வாழ்வை முழுமையாக அனுபவித்தார். மனித மோகத்தின் உச்சத்திலும், கவிதை போன்ற அதன் ஆழத்திலும் அவரை விடவும் மேலாக யாரும் அனுபவித்திருக்க இயலாது.

அதிகார பலமிக்க மனிதர்கள், சர்வ வல்லமையுள்ள ஒருவரை நம்பியே சாமானிய ஆத்மாக்கள் வாழ்வதாகக் கற்பனை செய்கின்றனர். ஆகையால் வாழ்வைக் குறித்த அவர்களது கருத்துக்களுக்கு மாற்றாக, எதிர்காலத்திற்குரிய உயர்வான சிந்தனைகளை ஒரு சில காசுகளுக்காகப் பரிவர்த்தனை செய்கின்றனர். டான் யுவான் ஒரு போதும் அத்தவறைச் செய்யவில்லை. அவர்களைப் போலவே அவரும் பூமியில் கால் பதித்தபடி நடந்து, தலையை மேகங்களுக்கிடையே வைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் ஒரேயொரு மென்மையான, இனிமையான புத்திளம் பெண்ணைக் காட்டிலும், பலப்பலப் பெண்களின் இதழ்கள் உலர்ந்து வற்றும்படியாக முத்தமிட்டபடி இலகுவாக, சொகுசாக வாழ்வதையே அவர் விரும்பினார். எனவே மரணத்தைப் போலவே சென்ற இடத்தில் எல்லாம் எவ்வித பழி பாவத்திற்கும் அஞ்சாது, பேராவலுடன் அனைத்து இன்பங்களையும் அனுபவித்தார். அவர் நாடியது கீழ்த்திசை நாடுகளில் காணக் கூடியதைப் போன்ற மோகமுள்ள பெண்களையே. அவ்வகையான மோக இன்பங்கள் அவருக்கு எளிதாகவே கிடைத்தன. பெண்களில் பெண்மையை மட்டுமே அவர் நாடியதால், அவரது ஆன்மா இயல்பாகவே முரணானப் பாதையில் சென்றது.

அவரது காதலிகள் பேரின்பத்தில் திளைத்து, ஆனந்தப் பரவசத்தின் உச்சி வானில் மிதந்த போது, டான் யுவானும் தீவிரமாகத் தங்கு தடையின்றி அவ்வுணர்வைப் பின்பற்றிப் பகிர்ந்து கொண்டார். ஆயினும் அந்நிலையிலும் அவர் வெளிப்டுத்தியது “நான்!”. ஆனால் காதலியோ “நாம்!” என மடத்தனமாக உரைத்தாள். பெண்மையின் ஆதிக்கத்திற்கு இசைந்து பணிவதில் அவர் அலாதித் திறன் பெற்றிருந்தார். நடன விருந்தில் பங்கு கொள்ளும் கல்லூரி மாணவன், முதன் முறையாக ஒரு பெண்ணிடம் தயக்கத்துடன் நடுங்கியவாறே, “உனக்கு ஆடப் பிடிக்குமா?” என்று கேட்பது போலவே அவர் பழக விரும்பும் பெண்களிடம் பேசி நடித்தார். அவர்களும் அதை நம்பி விடும்படியாக புத்திசாலித்தனமாக நடந்துக் கொண்டார். தேவைப்படும் சமயத்தில் பயங்கரமாகவும் அவரால் செயலாற்ற இயலும். வாளை உருவித் திறன் வாய்ந்த வீரர்களையும் அவரால் வீழ்த்த முடியும்.

டான் யுவான் வெளிப்படுத்திய எளிமையிலும் பகட்டான ஒரு ஏளனமிருந்தது. அவரது கண்ணீரிலும் ஒரு கேலிச் சிரிப்பு மறைந்திருந்தது. ஒரு பெண்மணி கணவரிடம், “எனக்கு இப்போதே ஒரு வாகனம் வாங்கித் தந்தாக வேண்டும். இல்லையெனில் நான் செத்து மடிவேன்” என்று நச்சரித்து அழுவதைப் போன்றே டான் யுவானாலும் அவசியமேற்படுகிற சமயத்தில் கண்களில் நீரைப் பெருக்கி அழ முடியும்.

ஒரு வியாபாரியின் உலகம் என்பது சரக்கு மூட்டைகள் அல்லது பலரின் கைகளில் சுற்றி வரும் பணம். பல இளைஞர்களுக்கு பெண். ஒரு சில பெண்களுக்கு ஆண். வேறு வகையான சில மனிதர்களுக்கு சுற்றம், சமூகம், நாடு, பதவி போன்றவை. டான் யுவானுக்கோ உலகமே அவரது காலடியின் கீழ். உயர்குடிப் பிறப்பும், கவர்ச்சிகரமானத் தோற்றமும் ஒருங்கிணைந்த அழகின் வடிவமாகவே அவர் திகழ்ந்தார். அனைத்து நதிகளிலும் அவர் தனது படகைச் செலுத்தினார். அனைவரிடமும் நயமாகப் பழகினாலும் அவருக்கு விருப்பமான இடங்களுக்கே சென்றார்.

அவரது வாழ்வில் எந்தளவு பரந்த பார்வையைச் செலுத்தினாரோ, அந்தளவு மேன்மையான குணங்களில் நம்பிக்கை அற்றவரானார். மனிதர்களின் இயல்பை ஊன்றிப் பார்த்த அவர், ஈகைக் குணத்தை பலனை எதிர்பார்த்துத் திட்டமிட்டு ஆற்றும் செயலாக எண்ணினார். பின் விளைவுகளைக் குறித்து ஆலோசித்து விழிப்புணர்வுடன் ஆற்றும் செயலை கோழைத்தனமாகக் கருதினார். மென்மையான பண்பை அச்சத்தின் பின் விளைவாக நினைத்தார். இயல்பான நேர்மை குணத்தை ஒரு கோட்பாட்டை மனதிலிருத்தி வலிந்து செய்யப்படும் செயலாக நம்பினார். நெஞ்சார்ந்த துணிவை துடுக்காகவும், நீதியை குற்றமாகவும் அவர் தீர்மானித்தார். நேர்மை, மென்மை, நியாயம், ஈகை, விழிப்புணர்வு, துணிவு ஆகிய பண்புகளுடன் வாழும் மனிதர்களை அவரது சுற்றத்தாரே மதிப்பதில்லை என்று அவராகவே முடிவெடுத்துக் கொண்டார்.

“இது என்னவொரு வேதனையான வேடிக்கை! இந்த உலகம் கடவுளால் அமைக்கப்பட்டதல்ல!” என்று அழுத்தந் திருத்தமாகக் கூறிக் கொண்டார்.

அதன் பின்னர் மேல் உலகம் என்ற கருத்தையே முற்றிலுமாகத் துறந்தார். புனிதம் என்று கருதக் கூடிய எதையும் அவர் மதிக்கவில்லை. தேவாலயங்களில் காணக் கூடிய புனிதர்களின் பளிங்குச் சிலைகளை வெறும் கலைப் படைப்புகளாகவே கண்டார். மனித சமூகம் எவ்வாறாக இயங்குகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். வழக்கத்திலுள்ள தவறான அபிப்பிராயங்களை அவர் அதிகமாக விமர்சிப்பதில்லை. ஏனெனில் அவற்றை நிர்மாணிப்பவர்கள் அவரை விடவும் கூடுதலான அதிகாரமுடையவர்கள். ஆனால் சமூக சட்டத் திட்டங்களை தனது விருப்பம் போல அழகாகவும் நுட்பமாகவும் நகைப்புக்குரிய விதமாகவும் வளைத்தார்.

டான் யுவானின் இத்தகைய செயல்களை ஒரு நாடகக் காட்சியில் நன்றாக விவரித்திருக்கிறார் எம். டிமான்ச்சே. சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமானால், மோலியரின் டான் யுவான், கதேவின் ஃபாஸ்ட், பைரனின் மேன்ஃபிரட், மட்டூயுரின் மெல்மாத் போன்ற பாத்திரங்களின் திருவுருவமாகவே அவர் திகழ்ந்தார். அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் ஐரோப்பாவின் ஆகச் சிறந்த மேதைகளால் புனையப்பட்ட பெருஞ் சித்திரங்கள். அதற்கு சற்றும் குறைவானதல்ல மொஸார்ட்டின் இன்னிசையும், ரோஸினியின் உணர்ச்சிகரமான பாடல் வரிகளும். அந்த உன்னத மேதைகள், மனிதனில் உள்ள தீமைகளின் ஆற்றலை அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளனர். அவை என்றென்றும் அழியாது நிலைத்து நிற்கக் கூடிய பெருஞ் சித்திரங்கள்.

மனிதனில் நிறைந்திருக்கும் தீமைகள் ஒரு நூற்றாண்டிலிருந்து மற்றொரு நூற்றாண்டிலும் திரும்பத் திரும்பத் தொடர்கிறது. அவ்வகைத் தீமைகள் மிரப்யூவின் உருவமாக வடிவெடுத்து, மனித இனத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலுமா? அல்லது போனபார்ட் போல அமைதியாக தீமை அதன் வேலையைத் தொடருமா? அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய ராப்லேய்ஸ் குறிப்பிடுவது போல தீமை தனது வலிமையான ஆற்றலால் உலகையே ஏளனம் செய்து, அனைவரையும் அதன் பாதையில் செல்லத் தூண்டுமா? அல்லது மார்ஷல் டி ரிச்லியூ போன்று பொருட்களைத் தவிர்த்து மனிதர்களை நகைப்புக்குரியவர்களாக்குமா? அல்லது புகழ் பெற்ற நமது அரசுத் தூதர் செயலாற்றுவது போல மனிதர்கள், பொருட்கள் ஆகிய அனைத்தையுமே கேலிக்குரியதாக்குமா? அதுவும் ஒரு வகையில் மேலானதுதான்.

டான் யுவானின் மேதமை மேற் குறிப்பிட்ட அனைத்து வகைகளுக்கும் முன்னோடியாகவே திகழ்ந்தது. அவரது வாழ்வில் பங்கேற்ற மனிதர்கள், பொருட்கள், கருத்துக்கள், மரபுகள் ஆகிய அனைத்தையும் அவமதிக்கும் விதமாகவே செயல்பட்டார். எல்லாவற்றையுமே துச்சமாக எண்ணி விளையாட்டாகவே அவர் செயலாற்றினார். அவரது வாழ்க்கையே போலியாக இருந்தது.

என்றென்றும் அழியாது நிலைத்து நிற்கக் கூடிய பேருண்மையைக் குறித்து இரண்டாம் போப் ஜுலியஸிடம் அரை மணி நேரம் உரையாடினார். அதன் இறுதியில் அவர் கூறியது: “கடவுள் அல்லது சாத்தான் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டால் நான் கடவுளையே தேர்வு செய்வேன். தீய சக்திகளை விடவும், நன்மையோடு கூடிய சக்தியின் பயன்பாட்டிற்கான சாத்தியங்கள் எப்போதுமே அதிகம்தான்!”

“ஆம்! ஆனால் ஒருவர் செய்த பாவத்திற்கு இவ்வுலகில் பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்!”

“எப்போதும் உங்களது பாவங்கள் குறித்தே எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?” என்றார் பெல்விடாரோ. எனது முதல் ஆயுளின் தவறுக்கு வருந்த, மற்றுமொரு முழு வாழ்வு எனக்கு விதிக்கப்பட்டுள்ளது!”

“ஓ! முதுமையைக் குறித்த உங்களது கருத்து அது என்றால், நீங்கள் புனிதர் வரிசையில் வைக்கப்படுவதற்கான அபாயமுள்ளது!”

“நீங்கள் போப்பாக இருப்பதால், என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பது எதிர்பார்க்கக் கூடியதே!”

அதன் பின்னர் அவர்கள் பணியாட்கள் வேலை செய்வதைப் பார்வையிடச் சென்றனர். அவர்கள் புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரண்மனை போன்ற தேவாலயத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

“புனித பீட்டரே எங்களுக்கு இரு வகையிலான அதிகாரத்தை வழங்கிய மேதை!” என்றார் போப் டான் யுவானிடம். இந்த நினைவுச் சின்னத்திற்கு அவர் முற்றிலும் தகுதியானவர். ஆனால் ஒரு பிரளயம் தோன்றி இவை எல்லாவற்றையும் அழித்து விடும் என சில சமயம் இரவு நேரத்தில் எனது கற்பனையில் தோன்றுகிறது. பின் அனைத்தையும் மீண்டும் துவங்க வேண்டியிருக்கும்.”

போப் இவ்வாறாக உரைத்த பின் சிரித்தார். டான் யுவானும் அவரோடு சேர்ந்து சிரித்தார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தனர். ஒரு முட்டாளாக இருப்பவன் அடுத்த நாளும் போப் இரண்டாம் ஜுலியஸிடம் சென்று ராஃபேல் இல்லத்திலோ அல்லது இன்பமூட்டும் மடாமா மாளிகையிலோ கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டிருப்பான். ஆனால் போப் பதவிக்குரிய கடமையை எவ்வாறு ஆற்றுகிறார் என்பதைக் காண அவரது அலுவலகத்திற்குச் சென்றார் பெல்விடாரோ. அதுவும் அவரது மனதில் எழும்பிய ஒரு ஐயத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவே அங்கு சென்றார். போப் ஒயின் அருந்தித் தன்னையே மறந்த நிலையில் இருந்தார். அந்நிலையில் அவர் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறுதிப் பேரழிவையும் கூட மறுத்திருக்கக் கூடும்!”

டான் யுவானுக்கு அறுபது வயதான நிலையில் அவர் ஸ்பெயினில் வாழச் சென்றார். அங்கு வயது முதிர்ந்த நிலையில் கவர்ச்சிகரமான ஒரு இளம் அண்டலுசியப் பெண்ணை மணந்தார். ஆனால் அவர் வேண்டுமென்றே நல்லதொரு கணவனாகவோ, நல்ல தந்தையாகவோ இருக்கவில்லை. ஒருவரால் உதாசீனம் செய்யப்படும் பெண்மணியே அவர் மீது மிகுந்த கனிவோடு, பேரன்பு கொண்டிருப்பாள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

சான் லூக்காஸிலிருந்து பல மைல்கள் தொலைவில், அண்டலுசியாவின் மையப் பகுதியிலுள்ள ஒரு மாளிகையில், சமயப் பற்றுள்ள வயது முதிர்ந்த அத்தையால் பேணி வளர்க்கப்பட்டவர் டானா எல்விரா. எனவே அவர் கணவரிடம் மிகுந்த பற்றுடனும், பணிவன்புடனும் வாழ்ந்திருந்தார். மோகத்திற்கு அடிபணிவதை விட அதனோடு நீண்ட போராட்டம் நடத்தக் கூடிய பெண் என்று மனைவியைக் குறித்து அறிந்து வைத்திருந்தார் டான் யுவான். எனவே தான் சாகும் வரையிலும் அப்பெண் தன்னிடம் மட்டுமே அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்த்தார். அது ஒரு ஆபத்தான விளையாட்டு. சதுரங்க ஆட்டம் போன்றது. இருப்பினும் இறுதிக்கால பொழுதுபோக்கிற்காக அதை ஒதுக்கி வைத்திருந்தார்.

அவரது தந்தையின் தவறுகளால் அவர் எச்சரிக்கை அடைந்திருந்தார். வயது முதிர்ந்த நிலையில் சிறிய விஷயங்களில் கூட கூர்ந்த கவனம் செலுத்த முற்பட்டார். மரணப் படுக்கையில் நிகழவிருக்கும் நாடகம் வெற்றி பெறும் விதமாகவே அவர் திட்டமிட்டு செயலாற்றினார். அவர் தனது செல்வங்களின் பெரும் பகுதியை ஃபெராரா மாளிகையிலுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார். பெரும்பாலும் அங்கு அவர் போவதேயில்லை. மீதியுள்ள செல்வத்தை ஆண்டு தோறும் வருமானம் வரும் வகையில் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்திருந்தார். அதன் காரணமாக மனைவியும் பிள்ளைகளும் அவர் நீண்ட காலம் வாழ்வதையே விரும்புவார்கள் என்றும் எதிர்பார்த்தார். இவ்வகை புத்திசாலித்தனமான வழக்கங்களை அவரது தந்தை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த மாக்கியவெல்லி திட்டங்கள் அவரது விஷயத்தில் தேவையற்றதாகி விட்டன.

இளம் ஃபிலிப் பெல்விடாரோ ஸ்பெயின் நாட்டவராகவே வளர்ந்தார். தந்தை எந்தளவு மதப்பற்று இல்லாதவராக இருந்தாரோ, அதற்கு நேர் முரணாக அதிகமான கடவுள் பக்தியைக் கொண்டிருந்தார் மகன். ‘தந்தை கஞ்சனாக இருந்தால் மகன் ஊதாரியாக இருப்பான்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்தார்.

பெல்விடாரோ தனது மனைவிக்கும், மகனுக்கும் ஆன்ம வழிகாட்டியாக விளங்க சான் லூக்காஸிலுள்ள மதகுருக்களுக்குத் தலைமை வகித்த மதகுருவை தேர்வு செய்தார். அந்தத் தலைமை மதகுரு அப்பழுக்கற்ற புனிதமானவர். நற்குடியில் பிறந்தவர். நேர்த்தியான உடல்வாகும், கருத்த அழகான விழிகளும் கொண்டவர். தலை டைபீரியஸ் தலையின் சாயலை ஒத்திருக்கும். அதிகபட்ச உண்ணா நோன்பினால் சோர்வுற்றவர் போல காணப்பட்டார். தளர்ந்தும் வெளிறியும் காணப்பட்ட அவர் அனைத்துத் துறவிகளையும் போலவே மோகக் கவர்ச்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்.

ஒரு வேளை முதிய டான் யுவான் தனது முதற்கட்ட ஆயுள் முடிவதற்குள்ளாக ஒரு மதகுருவைக் கொல்லவும் விரும்பியிருக்கக் கூடும். ஆனால் அந்த மதகுருவும் டான் யுவானைப் போலவே புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஸ்பெயின் தேசத்தவர் பொதுவாகப் பெண்களைக் குறித்துக் கொண்டுள்ள கருத்துக்கு மாற்றாக டானா எல்விரா மேலான நன்னடத்தையும், கணவரிடத்தில் அதிக விசுவாசமும் மிக்கவராய் இருந்திருக்க வேண்டும். எனவே டான் யுவான் புறநகரில் பணியாற்றும் பாதிரியார்களைப் போல, அவரது இறுதி நாட்களை எவ்வித அவதூறுக்கும் ஆளாகாமல் கழித்து வந்தார்.

சில வேளைகளில் அவரது மனைவியும் மகனும் மதச் சம்பிரதாயங்களில் சற்று அசட்டையாக இருந்தால், அதைக் கவனித்து சீர் செய்வதில் தனி இன்பம் கண்டார். சமய சம்பிரதாயங்கள், சடங்குகள் குறித்து நம்பிக்கைக் கொண்டவர்கள் ரோமானிய சட்டங்களுக்கேற்ப அனைத்து நியதிகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென அவர் அதிகாரத்துடன் நிர்பந்தித்தார். அவர் எந்த மரபுகளையும், கோட்பாடுகளையும் இகழ்ந்து பழித்தாரோ அதை மனைவியும், மகனும் முழு நம்பிக்கையோடு பின்பற்றுமாறு செய்தார். இது அவர் நிகழ்த்திய இறுதி கேலிக்கூத்து. சான் லூக்காஸின் கம்பீரமான மதகுரு, டானா எல்விரா, ஃபிலிப் ஆகிய மூவரும் சேர்ந்து மன விசாரங்களைக் குறித்து விவாதிப்பதைக் கேட்கும் போது, முன் எப்போதும் கிட்டியிராத ஆனந்தத்தை டான் யுவான் பெற்றார்.

பெல்விடாரோவின் குடும்பத்தைக் காக்கும் தெய்வம், டான் யுவானிடம் மிகுந்த அக்கறை செலுத்தி வந்த போதிலும் முதுமையின் தளர்ச்சி அவரை அண்டியது. தாங்க இயலாத வலியும் வேதனையும் அவரை வருத்தியது. ஆயினும் ஒன்றும் செய்ய இயலாத நிலைக்குள்ளாகி ஓலமிட்டார். தீவிர மோகத்தில் ஆழ்ந்து களித்த முதிரா இளமையும், பின் கிட்டிய முதிர்ந்த பக்குவமும் அவரது நினைவில் தோன்றி மேலும் அதிகமாக அவரை ஓலமிட வைத்தன. தற்போது ஏதும் செய்ய இயலாது, தளர்ந்து ஓய்ந்த நிலையில், நம்பிக்கையின்மை ஏற்படுத்திய கலக்கம் அவரை இரவில் வாட்டி வதைத்தது.

உயர்குடியில் பிறந்து முன்மாதிரியாக வாழ்ந்த கோமகன். ஆடல் பாடல் எனக் களிப்புடன் வாழ்ந்தவர். பெண்களிடம் இன்முகம் காட்டி தன்வசப்படுத்தக் கூடியவர். காதலில் தலை சிறந்தவர். உழவன் சாட்டையைச் சுழற்றுவது போல பெண்களின் மனதைக் கவர்ந்து அவர்களது இதயங்களை சுழற்ற வைத்த மேதை. ஆனால் அவர் இப்போது குணப்படுத்த முடியாத இருமலினால் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தார். தவிரவும் தொல்லை அளிக்கும் இடுப்பு நரம்பு சார்ந்த வலியும், கீல்வாத நோயும் சேர்ந்துக் கொண்டன.

மாலை முடியும் தருவாயில், அற்புத ஆடை தரித்த அழகிய நங்கைகள் ஒவ்வொருவராக வெளியேறி நடன அறையை வெறுமையாக்குவது போல, அவரது பற்கள் அவரை விட்டு அகல்வதைக் கண்டார். அவரது எடுப்பான கைகள் நடுங்கின. கால்கள் தள்ளாடின. பின் ஒரு நாள் இரவில் வந்த வலிப்பு நோய் தனது குளிர்ந்த கரங்களால் அவரது மென்னியைப் பிடித்தது. அன்றிலிருந்து கடுமையாகவும், சிடுசிடுவென எரிந்து விழுபவராகவும் ஆனார். மனைவியும் மகனும் அவருக்கு விசுவாசமாக இல்லை எனப் பழித்தார். பணத்தை ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்துள்ளபடியால்தான் அவரது உடல் நலத்தில் கனிவோடு அக்கறை செலுத்துகின்றனர் என அவர்களைக் குற்றம் சாட்டினார்.

எல்விராவும், ஃபிலிப்பும் மனம் வருந்தி அழுதனர். தொல்லையளிக்கும் அந்த முதியவருக்கு அவர்களது பணிவிடையை இரட்டிப்பாக அதிகரித்தனர். பின் அவர் பலவீனமான குரலில் அன்புடன், “என் இனிய மனைவியே! அருமை மகனே! என்னை மன்னிப்பீர்கள் இல்லையா? சில வேளைகளில் நான் உங்களை சித்திரவதை செய்கிறேன். ஆ! கடவுளே! தேவதைகள் போன்ற இந்த இருவருக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன்? அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய என்னை அவர்களுக்குச் சுமையாக ஆக்கி விட்டாயே!” என்று புலம்புவார்.

இவ்வாறாகத்தான் அவர்களை அவர் தன் படுக்கை அருகிலேயே இருக்கும்படியாகச் செய்தார். அவரது மாத முழுவதுமான பொறுமையின்மையையும், கொடூரத்தையும் ஒரு மணி நேரப் பாசமிகு பேச்சால் மறக்கச் செய்தார். மிகுந்த கரிசனத்துடன் புதுப்புது ஆசை வார்த்தைகளைப் பேசி, போலிக் கனிவை வெளிப்படுத்தினார். குடும்பத் தலைவரின் இவ்விதமான வழிமுறை காலவரையற்ற நல்ல பலனைத் தந்தது. அவரது தந்தை அவரிடத்தில் கடைப்பிடித்த வழிமுறையை விடவும் இது அதிகப் பலனைத் தருவதாயிருந்தது. இறுதியாக அவரது உடல் நிலை வெகுவாக சீரழிந்தது. சிறியதொரு படகை அபாயகரமான நீரோடையில் சிரமப்பட்டு செலுத்துதைப் போல அவரை அமைதியாகப் படுக்கையில் கிடத்த அரும்பாடு பட வேண்டியதாயிற்று.

பின் அவரது மரணத்துக்குரிய நாள் வந்தது. அனைத்து விஷயங்களையும் சந்தேகிக்கிற குணமுடைய, புத்திக் கூர்மை வாய்ந்தவரின் உடல் நலம் கெட்டுச் சீரழிந்த நிலையில், அவரது அறிவாற்றல் மட்டுமே பழுதின்றி இயங்கியது. ஒரு மருத்துவரும், பாவ மன்னிப்பிற்குரிய இறுதிச் சடங்கைச் செய்ய வந்திருந்த மதகுருவும் அப்போது உடனிருந்தனர். இயல்பாகவே அவர்களை அவர் வெறுப்பவராயினும் அவர்களுடன் சகஜமாக சிரித்துப் பேசி உரையாடினார். ஏனெனில் எதிர்காலம் என்னும் திரைக்குப் பின்னால் பிரகாசமானதோர் ஒளி அவருக்கெனவே காத்திருந்ததுதானே! ஏனையோர் பார்வையைச் செலுத்த இயலாத வகையில், அவருக்கு மட்டுமே புலனாகும் நிலையில் அத்திரை அமைந்திருந்தது. அதில் கவர்ச்சிகரமான, இன்பமயமான இளமைக்கால நினைவுகள் நிழலாடின.

ஓர் அற்புதமான வேனிற்கால மாலைப் பொழுதில் டான் யுவான் மரணம் நெருங்குவதை உணர்ந்தார். ஸ்பானிய வானம் பேரழகுடன் பிரகாசமாக ஒளிர்ந்தது. காற்றில் ஆரஞ்சு மரங்களின் வாசம் மணந்தது. வானெங்கும் நட்சத்திரங்கள் புத்தம் புதிய ஒளியை வீசிக் கொண்டிருந்தன. இயற்கையே அவரது புத்துயிர்ப்பை உறுதி செய்வது போலக் காணப்பட்டது. சமயப் பற்றுள்ள மகனும் தந்தையை மரியாதைக்குரியவராகவும், பாசத்திற்குரியவராகவும் போற்றுகிறவர். இரவு பதினொரு மணிக்கு விசுவாசமான அந்த மகனோடு தனித்திருக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

“ஃபிலிப்,” என மிகுந்த கனிவான குரலில் பாசத்தோடு பேசத் துவங்கினார். அதைக் கேட்ட மகன் நடுங்கி உருகி அழுதார். ஏனெனில் அத்தகைய நெகிழ்வுடன் ஒரு போதும் அவர் ஃபிலிப் என உரைத்ததில்லை. “நான் சொல்வதைக் கேள் மகனே!” என மேலும் தொடர்ந்தார் இறந்து கொண்டிருக்கும் முதியவர். “நான் பெரும் பாவியாக வாழ்ந்திருந்தேன். வாழ்நாள் முழுக்கவும் மரணம் குறித்து சிந்தித்தேன். புகழ் பெற்ற போப் இரணடாம் ஜுலியஸ் கூட எனக்கு நண்பராக இருந்தார்.

அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்படுகிற நான் இறக்கும் தருவாயில் ஏதேனும் கொடூரமான பாவத்தை செய்து விடக் கூடும் என எண்ணிய மேன்மைமிகு போப்பாண்டவர் எனக்கு ஆசி வழங்கிப் புனித நீர் அடங்கிய ஒரு குப்பியைப் பரிசாக அளித்தார். அது பாலைவனத்திலுள்ள ஒரு பாறையிலிருந்து பீறிட்டொழுகிய புனித நீராகும். தேவாலயத்தின் பொக்கிஷத்திலிருந்து எடுத்துத் தரப்பட்ட அதை ரகசியமாக வைத்திருந்தேன். ஆனால் அந்த மர்மத்தை மகனிடம் தெரிவிக்க எனக்கு அதிகாரமுள்ளது. அதுவும் மரணம் நெருங்கும் சமயத்தில் மட்டுமே. எனது படுக்கையின் அருகேயுள்ள அந்தப் பழங்கால மேஜையின் அறையில் அந்தக் குப்பியை நீ காணலாம். எனதருமை ஃபிலிப்! அதிலுள்ள பெரும் மதிப்பு வாய்ந்த புனித நீர் உனக்கும் கூட பயன்படலாம். நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வேன் என உறுதி அளிப்பாயா?”

ஃபிலிப் தந்தையைப் பார்த்தார். மனித முகபாவங்களை புரிந்து கொள்வதில் டான் யுவான் வல்லவர். விசுவாசமான அந்தப் பார்வையினால் நிம்மதியாக மரணமடையலாம் என்பதை உணர்ந்தார். ஆனால் டான் யுவானின் தந்தையோ இவரது முகபாவனையைக் கண்டு கசப்புடன் மனமுடைந்து இறந்தவர்.

“உனக்கு வேறு விதமான தந்தை வாய்த்திருக்க வேண்டும்,” என்ற டான் யுவான் மேலும் தொடர்ந்தார். மரியாதைக்குரிய சான் லூக்காஸ் மதகுரு இறுதிப் பிராயச்சித்தச் சடங்கை எனக்குச் செய்த போது ஓர் எண்ணம் என் மனதில் தோன்றியது. கடவுள், சாத்தான் எனப் பரந்தளவில் உலகம் முழுவதும் பரவியுள்ள இரு முரணான சக்திகள் ஒத்திசையவே முடியாது.”

“ஓ! தந்தையே!”

“மேலும் எனக்குள்ளாக நான் எண்ணியது ஒரு வேளை சாத்தான் கடவுளோடு சமரசமாகும் நிலையில் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் சேர்த்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்று வாதிட வேண்டும். அவ்வாறில்லை எனில் சாத்தான் பெரும் முட்டாளாயிருக்க வேண்டும். இவ்வாறான சிந்தனைகள் என்னை வாடடுகின்றன. எனது விருப்பங்களை நீ நிறைவேற்றவில்லை எனில் நான் நரகத்திற்குத்தான் செல்வேன்.”

“ஓ! இப்போதே சொல்லுங்கள் தந்தையே! நான் என்ன செய்ய வேண்டும்?”

“இன்னும் ஒருசில நிமிடங்களில் நான் கண்ணை மூடி விடுவேன்,” என பதிலுரைத்தார் டான் யுவான். வெப்பமாயிருக்கும் எனது உடலை இந்த அறையின் மையத்தில் இருக்கும் மேஜையில் கிடத்த வேண்டும். பின் விளக்கை அணைத்து விடு. நட்சத்திரங்களின் ஒளி போதுமானது. எனது ஆடைகளைக் களைந்து விடு. பின் கடவுளை மனதிலிருத்தி உன் பிரார்த்தனையை ஜெபிக்கும் வேளையில் எனது கண்கள், உதடுகள் தலை முதலாக, பின் உடல் முழுவதும் புனித நீரால் துடைத்து விடு. ஆனால் அருமை மகனே! கடவுளின் சக்தி எல்லையில்லாதது. என்ன நிகழ்ந்தாலும் நீ திகைத்து விடக் கூடாது.”

அக்கட்டத்தில் டான் யுவான் மரணம் நெருங்குவதை உணர்ந்தார். “குப்பியைக் குறித்து கவனமாயிரு!” என்ற இறுதி வார்த்தைகளை பயங்கரமாய் கூவினார். பின் மகனின் கைகளில் அமைதியாக இறந்து போனார். மகனின் கண்ணீர்த் துளிகள் தந்தையின் வெளிறிய முகத்தில் விழுந்தன. டான் ஃபிலிப் பெல்விடாரோ தந்தையின் உடலை மேஜையில் கிடத்திய போது கிட்டத்தட்ட நடுநிசியானது. தந்தையின் நெற்றியிலும், நரைத்தத் தலை முடியிலும் முத்தமிட்ட பின் விளக்கை அணைத்தார். நிலவு வெண்மையான ஒளிக் கதிர்களை அறையில் வீசியது. அதன் மூலம் பக்திமானாகிய ஃபிலிப் தந்தையின் உடலை மங்கலாகக் காண முடிந்தது. இருளின் நடுவே அது வெண்மையாக இருந்தது.

புனித நீரை இளைஞர் ஒரு துணியில் தொட்டு நனைத்தார். ஆழ்ந்த பிரார்த்தனையில் மூழ்கி போற்றுதலுக்குரிய தலையில் பூசினார். அறையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. பின் இன்னதென்று விளக்க முடியாத சலசலப்புகள் காதில் விழுந்தன. மரங்களின் உச்சியை வருடிச் செல்லும் காற்றின் ஒலி என எண்ணிக் கொண்டார். வலது கையை நனைத்த போது, அவரது பின் கழுத்தை ஒரு கை முரட்டுத்தனமாக இறுக்கிப் பிடிப்பதை உணர்ந்தார். இளமையும், வலிமையுமிக்க அவரது தந்தையின் கை! ‘வீல்’ என அலறி குப்பியை நழுவ விட்டார். அது கீழே விழுந்து உடைந்தது. அதிலிருந்த திரவம் வெளியேறி தரையில் சிந்தி வழிந்தது.

வீட்டிலிருந்த அனைவரும் தீப்பந்தங்களோடு ஓடி வந்தனர். நடுநிசியில் கேட்ட அலறல் அவர்களை பீதியடையச் செய்தது. இறுதித் தீர்ப்பின் எக்காள முழக்கம் உலகையே உலுக்கியதாக அவர்கள் எண்ணினர். குழுமிய கூட்டத்தால் அறை நிறைந்தது. திரண்டிருந்த கூட்டத்தினர் டான் ஃபிலிப் மயங்கிச் சாய்வதை நடுக்கத்துடன் கண்டனர். ஆனால் கழுத்தை இறுக்கமாகப் பிடித்தவாறிருந்த தந்தையின் கை அவரைக் கீழே விழாமல் தடுத்து நிறுத்தியது. பின் இயற்கைக்கு மாறான ஒரு காட்சியைக் கண்டனர். கிரேக்கத்து ஆண்டினஸ் போல அழகும், இளமையும் மிக்கதாயிருந்தது டான் யுவானின் தலை. கருத்தத் தலைமுடியும், ஒளிரும் கண்களையும், சிவந்த இதழ்களையும் கொண்டிருந்தது. ரத்தத்தை உறையச் செய்யும் வகையில் அவரது தலை இங்குமங்குமாகத் திரும்பியது. ஆனால் எலும்புக் கூடாயிருந்த உடலை அசைக்க முடியவில்லை.

முதிய பணியாள் ஒருவர், “அதிசயம்! அற்புதம்!” எனக் கூவினார்.

கூடியிருந்த ஸ்பானியர்கள் அனைவரும் “அற்புதம்!” எனக் கூவினர்.

கடவுள் பக்தி மிகுந்த எல்விராவால் அதை மாய மந்திரம் என எண்ணி விட இயலாத நிலையில், சான் லூக்காஸின் தலைமை மதகுருவை அழைத்து வரச் செய்தார். டான் யுவானை கண்கூடாகக் கண்ட மதகுரு அந்த அற்புதத்தை ஆதாயமாக்கிக் கொள்ளத் தீர்மானித்தார். சான் லூக்காஸின் மதகுருவாகவும், புத்திசாலியாகவும் இருந்த அவர் இந்த நிகழவின் மூலமாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதே உசிதமானது எனத் திட்டமிட்டார். டான் யுவான் கண்டிப்பாகப் புனிதர் வரிசையில் இடம் பெற வேண்டுமென அறிவித்தார். தனது மடத்தின் மூலமாக டான் யுவானைப் புனிதராக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து அவரது மடத்தை “சான் யுவான் டி லூக்காஸ்” என்பதாகப் பெயர் சூட்டினார். இதைக் கேட்டதும் டான் யுவான் வெறுப்புடன் முகம் சுளித்தார்.

இவ்வாறான முக்கியச் சடங்குகளில் ஸ்பானியர்கள் எத்தகைய ஆர்வமிக்கவர்கள் என்பதைப் பலரும் அறிவர். எனவே சான் லூக்காஸ் மதகுரு அவ்விழாவை எவ்வளவு சிறப்பாக நடத்தியிருப்பார் என்பதை ஊகிப்பது சிரமமல்ல. “புனிதர் டான் யுவான் பெல்விடாரோ” எனப் பெயர் சூட்டும் விழாவை அவரது தேவாலயத்தில் வெகு விமரிசையாக நடத்தினார் மதகுரு.

புகழ் பெற்ற அக்கோமகன் இறந்த பின் அவரது உடலின் ஒரு பகுதி புத்துயிர் பெற்ற அற்புதம் ஒரு சில நாட்களில் கிராமம் கிராமமாக, சுமார் நூற்றி ஐம்பது மைல்கள் வரையிலும் பரவியது. சாரி சாரியாக தெருக்களில் திரண்ட அலாதியான கூட்டத்தினரைக் காண்பது நாடகம் பார்ப்பது போலிருந்தது. அனைத்து பக்கங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து குழுமினர். எரியும் தீப்பந்தங்களைப் பிடித்தவாறு ‘ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறோம்!’ என்னும் கிறிஸ்துவ சமயப் பாடலை உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தனர் சிலர். அவர்களால் கவரப்பட்ட அனைவரும் ஒன்று கூடினர்.

சான் லூக்காஸின் மடம் மூர்களால் நிர்மாணிக்கப்பட்ட பழங்கால மசூதி. அது ஓர் அழகிய கட்டிடம். ஆயினும் அது தேவாலயமாக மாறி, முந்நூறு வருடங்களுக்கும் மேலாக அங்கு அல்லாஹ்விற்கு பதிலாக யேசுவின் நாமமே போற்றப்பட்டு வருகிறது. விழாவைக் காணத் திரளான மக்கள் கூடியதால் தேவாலயத்தில் போதிய இடமே இல்லை. கூடியிருந்த ஸ்பானியக் கனவான்கள் வெல்வெட் அங்கி அணிந்து தங்களது மேன்மையான வாளுடன் காணப்பட்டனர். அவர்கள் எறும்புக் கூட்டத்தைப் போல மிக மிக நெருக்கமாகத் தூண்களைச் சுற்றிலும் நின்றிருந்தனர். தேவாலயத்தைத் தவிர்த்து வேறெங்கும் மண்டியிடாத அந்த ஸ்பானியர்கள், தங்களின் முட்டியை மடித்து முழங்காலிடவும் இடமில்லை.

கவர்ச்சிகரமான கிராமியப் பெண்களின் ஆடைகள் அவர்களது அற்புதமான உடலமைப்பை எடுத்துக் காட்டின. அவர்கள் வெள்ளைத் தலைமுடியுடன் காணப்பட்ட முதியவர்களோடு கைக் கோர்த்தபடி நின்றிருந்தனர். ஒளிரும் விழிகளைக் கொண்டிருந்த இளைஞர்கள், விழாவிற்கென சிறப்பான ஆடை அணிந்திருந்த முதிய பெண்மணிகளின் அருகே நின்றிருந்தனர். தம்பதிகள் பெரு மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கியவாறு நின்றிருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஆடவரும், பெண்டிரும், புதுமணத் தம்பதிகளும் விழாவைக் காண ஆவலுடன் வந்திருந்தனர். தவிரவும் ஒருவித பயத்துடன் காணப்பட்ட சிறுவர்கள் ஒருவரது கையை மற்றொருவர் பிடித்தபடி நின்றிருந்தனர். ஆக, அனைத்து மக்களும் அங்கே ஒருங்கே சேர்ந்திருந்தனர். பூக்களுடன் காணப்பட்ட அற்புதமான வண்ண ஆடைகள் உடுத்தியிருந்த அந்த மக்கள் இரவின் அமைதியில் மென்மையாக ஆரவாரம் செய்தவாறே இருந்தனர்.

தேவாலயத்தின் பெரும் கதவுகள் திறக்கப்பட்டன. தாமதமாக வந்திருந்தவர்கள் கதவிற்கு வெளியே நிற்கும்படி நேர்ந்தது. அவர்கள் திறந்திருந்த மூன்று பெரிய கதவுகளின் வழியாக தூரத்திலிருந்தே விழாவைக் கண்டனர். ஒப்பெரா எனப்படும் நவீன இசை நாடகங்கள் வெற்றுப் பகட்டுடன் வழங்கும் மலிவானக் காட்சிகள் கூட, தற்போது நிகழவிருக்கும் விழாக் காட்சியானது எவ்வாறாக இருக்கக் கூடும் என்பதைக் குறித்து குறைந்தளவு ஊகத்தையே தரக் கூடும்.

புதிய புனிதரின் ஆசியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் குவிந்திருந்த பக்திமான்களும், பாவிகளும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரம்மாண்டமான அந்தத் தேவாலயத்தில் ஆயிரக் கணக்கான மெழுகுவர்த்திகளை எரிய விட்டிருந்தனர். அவற்றின் ஒளிச் சுடர்கள் கம்பீரமான அக்கட்டிடத்திற்கு மாயத் தோற்றத்தைத் தந்தன. வரிசையாக அமைக்கபட்டிருந்தத் தூண்கள், அவற்றின் உச்சியிலிருந்த சதுரங்கள், தூண்களிடையே மேலே அமைந்திருந்த கருமையான வளைவுகள் ஆகியன அற்புத அழகை அள்ளி வழங்கின. தனிமையில் வழிபடுதற்கென கட்டப்பட்டிருந்த மாடக் குழிகள், அவற்றில் மின்னிய தங்கங்கள், வெள்ளிகள், மூர்களின் சித்திர வேலைப்பாடுகள், அவற்றில் நுட்பமாகச் செதுக்கப்பட்டிருந்த நுண்ணிய சிறப்பம்சங்கள் ஆகிய அனைத்தும் எரியும் தீயின் ஒளியினால் அற்புத வடிவெடுத்து, கண் கூசும் விதமாக மின்னின. கடல் போன்று பரந்தளவு வெளிச்சம் தேவாலயத்தை நிறைத்திருந்தது. அதன் கடைசியில் பாடற் குழுவினருக்குரிய பகுதி பொன் முலாம் பூசப்பட்டு மேன்மையாகத் தோற்றமளித்தது. அதன் மேற்புறத்தில் உயரே இருந்த திருப்பலி பூசைப் பீடம் உதய சூரியனுக்கே அறைகூவல் விடும் வகையில் காணப்பட்டது.

உன்னதமான தங்க விளக்குகள், வெள்ளி மெழுகுவர்த்திச் சட்டங்கள், வண்ணக் கொடிகள், அலங்காரக் குஞ்சங்கள், சங்கற்பம் மேற்கொள்ளும் மக்கள் அதன் அடையாளமாகத் கட்டித் தொங்க விட்டிருந்த வண்ணத் துணிகள் போன்ற யாவும் டான் யுவான் கிடத்தப்பட்டிருக்கும் பேழையின் முன் சோகையாகக் காணப்பட்டன. கடவுளை நிந்திப்பவரின் உடல் வைரங்கள், ரத்தினங்கள், தங்க ஆபரணங்கள், பல வண்ணப் பூக்கள், தேவ தூதர்களின் வெண்மையான சிறகுகளுக்கு ஈடான வெண்ணிறக் குஞ்சங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு சுடரொளி வீசிக் கொண்டிருந்தது. பலிபீடத்தின் மேலிருந்த கிறிஸ்துவின் உருவத்திற்கு நேர்மாறாக அவர் திகழ்ந்தார். அவரைச் சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் ஒளிக் கதிர்களை வீசிக் கொண்டிருந்தன.

சான் லூக்காஸின் நற்குணமுடைய மதகுரு போப்பிற்குரிய ஆடைகளை அணிந்திருந்தார். ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தத் தலைப்பாகையுடன் தளர்ந்த வெண்ணிற அங்கியை உடுத்தியிருந்தார். தங்கச் சிலுவைக் கோலை கையில் ஏந்தியவாறு உயர்ந்த சிம்மாசனம் போன்ற நாற்காலியில் பாடற் குழுவினர் போற்றும் அரசனைப் போல வீற்றிருந்தார். திருச்சபையின் ஏனைய குருமார்கள் அவரருகே அமர்ந்திருந்தனர். அவர்கள் நரைத்த தலைமுடியுடன் எவ்வித உணர்ச்சியுமற்ற மனிதர்களாய் காணப்பட்டனர். தேவனின் அருகே பாவ மன்னிப்பைக் கோரியவாறு அமர்ந்திருக்கும் புனிதர்களை ஓவியர்கள் எவ்வாறாக வரைவார்களோ, அவ்வாறாகவே அந்தக் குருமார்களும் காட்சி அளித்தனர்.

இசைக்குழுவின் தலைவரும், திருச்சபையின் உயர் பதவியாளர்களும், தங்களின் தற்பெருமையைக் குறிக்கும் வகையில் மின்னுகிற சின்னங்கள் பதித்த ஆடை அலங்காரத்துடன் இங்குமங்குமாக நடமாடிக் கொண்டிருந்தனர். மேகமாய் எழும்பிக் கொண்டிருந்த நறுமணப் புகையின் ஊடாக, விண்வெளியில் கோள்கள் சுற்றி வருவதைப் போல அவர்கள் வலம் வந்து கொண்டிருந்தனர்.

புனிதத்துவம் வழங்கும் விழா வெற்றியடையவிருக்கும் இறுதி நேரத்தில் எழுந்த தேவாலய மணியோசைகள் புறநகரின் எதிரொலிகளை உலுக்கி எழுப்பின. கூடியிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தினர், முதலாவதாக ‘ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறோம்!’ எனத் துவங்கும் தேவனுக்குரிய ஸ்தோத்திரப் பாடலை ஒருமித்த குரலில் முழங்கினர். இரவில் திடீரெனத் தோன்றும் மின்னலின் ஒளியைப் போன்றும், நிசப்தம் திடுமென குலையும் இடி முழக்கத்தைப் போன்றும் தேவாலயத்தின் மையத்திலிருந்து அப்பாடல் வெடித்தெழுந்தது. மேகம் போன்றெழுந்த நறுமணப் புகை நேர்த்தியுடன் கட்டப்பட்டிருந்த அந்தப் பழங்கால தேவாலயத்தை தெள்ளத் தெளிவான நீலத் திரையால் மூடியது. அந்தப் புகையோடு சேர்ந்து பாடலும் மேலெழும்பியது. அனைத்தும் நாதமும், நறுமணமும், ஒளியும், செல்வமும் கொண்டுத் துலங்கின.

ஆனந்தப் பரவசமும், பயபக்தியும் பொங்கிப் பரவின! பாடியவர்களின் குரல்கள் தூயதாகவும், உச்சமாகவும் எழுந்தன. பரவச நிலையில் பாடிய பெண்களின் குரல்கள், கணீரென ஒலிக்கும் ஆண்களின் குரல்களோடு இணைந்தன. ஆயிரக் கணக்கான மக்கள் இணைந்து உணர்ச்சிகரமாக பெருங் குரலெடுத்துப் பாடியதால், இசைக் கருவிகளின் நாதத்தை சரியாகக் கேட்க முடியாமல் போனது. ஆராதனை பாடல்களைப் பாடும் சிறார் குழுவினரின் உச்சஸ்தாயிக் குரலும், சற்றே தாழ்ந்து ஒலித்த இசைக் கருவிகளின் லயமும் ஒருங்கிணைந்து இளமையும், பலமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளைத் தோற்றுவித்தன. மனிதர்களின் இனிமையான குரல்களில் பொங்கிப் பெருகிய பேரன்பும் பெரும் மனமகிழ்வை அளித்தன.

டான் யுவான் மிகுந்த பண்புடையவர். அவரால் நன்றியுணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. மிகுந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அவரால் நிகழும் வேடிக்கையை பாராட்டாமல் இருக்கவும் முடியாது. எனவே கூட்டத்தினரின் பேரன்பும், நன்றியுணர்வும் இணைந்து பெருகி பலிபீடத்தை எட்டிய அதே தருணத்தில் பயங்கரமாகச் சிரித்தவாறே பேழையில் படுத்திருந்தவர் நிமிர்ந்தார். ஆனால் புனிதரிலிருந்து சாமான்ய மனிதராக மாறுவதில் நிகழக் கூடிய அபாயத்தை சாத்தான் அவருக்கு ஏற்கெனவே ஜாடையாகத் தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் மக்கள் வெளிப்படுத்திய பேரன்பை இடைமறித்து வீறிட்டுக் கத்தினார். அக்குரலோடு நரகத்திலிருந்த பல்லாயிரக் கணக்கான குரல்களும் சேர்ந்து ஒலித்தன. மண்ணுலகம் புகழ்ந்தது. விண்ணுலகம் இகழ்ந்தது. திருச்சபையின் அஸ்திவாரம் நிலைகுலைந்து நடுங்கியது.

“ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறோம்!” என்று தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தது கூட்டம்.

“காட்டுமிராண்டிகளே! வெளியேறுங்கள்! போய்த் தொலையுங்கள் சாத்தானிடம்! மூடர்களே! நீங்களும் உங்கள் கடவுளும்!” என்று இகழ்ந்த டான் யுவான் தொடர்ந்து வெசுவியஸ் மலையில் எரிமலை வெடித்து தீப்பிழம்பு வெளியேறுவதைப் போல, நீரோடையாக சாபங்களைப் பொழிந்தார்.

“பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே! பிதாவே!” என அலறினர் கிறிஸ்துவர்கள்.

பின் உயிராயிருந்த கை பேழையிலிருந்து வெளிப்பட்டுக் கூடியிருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் சைகைக் காட்டியது.

“புனிதர் நம்மை வாழ்த்துகிறார்!” என்றனர் எதையும் எளிதில் நம்புகிற முதிய பெண்மணிகள், இளம் பணிப்பெண்கள், சின்னஞ் சிறார்கள். அன்புடன் நேசிப்பவர்களால் அவ்வப்போது நாம் இவ்வாறாகவே வஞ்சிக்கப்படுகிறோம். உயர் நிலையிலுள்ள மனிதன் தன்னை புகழ்கிறவர்களை இகழ்கிறான். ஆனால் ஆழ்மனதில் இகழ்கிறவனைப் போற்றிப் புகழ்கிறான்.

தலைமை மதகுரு பலிபீடத்தின் முன்னே குனிந்து, சிரம் தாழ்த்தி ஜெபித்தார். “புனித ஜான் அவர்களே! எங்களுக்காக ஜெபியுங்கள்!” என்றார். அப்போது, “போடா மடையா!” என்கிற வார்த்தைகள் தெளிவாக அவரது செவிகளில் விழுந்தன.

“அங்கு என்ன நிகழ்கிறது?” என்று கேட்டார் வேறொரு மதகுரு பேழை அசைவதைப் பார்த்து.

“புனிதர் சாத்தானாக மாறியிருக்கிறார்!” என்றார் தலைமை மதகுரு.

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் டான் யுவானின் தலை பலவந்தமாக உடலிலிருந்து பிய்த்துக் கொண்டு தலைமை மதகுருவின் மீது பாய்ந்தது.

“டானா எல்விராவை ஞாபகமிருக்கிறதா?” என்று கத்தியவாறே தனது பற்களை மதகுருவின் தலையில் ஆழமாகப் பதித்தது.

அவர் பயங்கரமாக வீறிட்டதும் கூட்டத்தினர் பீதியுற்றனர். ஏனைய மதகுருக்கள் தலைமை மதகுருவிற்கு உதவ ஓடினர்.

“மூடனே! கடவுள் இருக்கிறார் என்பதை இப்போது சொல்!” என்று அந்தக் குரல் கத்திய அதே கணம் தலைமை மதகுருவின் உயிர் பிரிந்தது.