கே.என்.செந்திலின் ‘அகாலம்’

0 comment

சமீபத்தில் என் நண்பர் ஒருவர், பதினைந்து வருட வாசிப்புப் பழக்கம் கொண்டவர், இலக்கியம் சூழியல் வாழ்க்கை வரலாறு எனப் பல தளங்களில் வாசிக்கக் கூடியவர் ‘போரும் வாழ்வும்’ வாசிப்பதற்கு மிகுந்த அயர்ச்சியைத் தருவதாகச் சொல்லி இருந்தார். அதேநேரம் வாசிக்காமலும் விட முடியவில்லை என்றும் சொன்னார். போரும் வாழ்வும் அளவுக்கே இணையாக சலிப்பூட்டக்கூடிய படைப்புகளைச் சொல்ல முடியும். பூமணியின் ‘பிறகு’ ஓர் உதாரணம். ஆனால் இந்தச் சலிப்பு எழுத்தாளனின் திறனின்மையால் பிரதியில் ஏற்படுவதல்ல. ஒருவகையில் இந்தச் சலிப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுவது. சலிப்பினை உருவாக்குவது யதார்த்தவாத எழுத்தின் குணங்களில் ஒன்றும் கூட. ஏன் சலிப்படையச் செய்ய வேண்டும்? பொதுவாக ஒரு பிரதியில் நாம் கண்டு கொள்ளும் கலைத்தருணங்கள் பிரதியில் நிகழும் உச்சக்கட்ட உணர்வு மோதல்களினால் அடையப்படுகிறவையாக இருக்கும். யதார்த்தம் என்று நாம் நம்பும் ஒன்றை மீறிய உணர்ச்சி நெகிழ்வுகளும் குரூரங்களும் கொண்ட கணங்களாக அவை வெளிப்படும். கற்பனாவாதம், மந்திரவாதம், மாய யதார்த்தம் என அனைத்து வகைமையிலும் ஒரு இயல்பு மீறிய தன்மையை எழுத்தில் நம்மால் அடையாளம் காண முடியும்.

ஆனால், இயல்புவாதம் வாழ்வு அளவுக்கு சலிப்பினை அளிக்கக் கூடியவை உத்சேத்தை கொண்ட ஒரு எழுத்து முறை. வாழ்வின் அன்றாடத் தருணங்களின் மீது ஒளிபாய்ச்சக் கூடியவை. ஆகவே இயல்புவாத படைப்புகளை வாசிக்கநேரும் ஒரு வாசகர் இச்சலிப்பினை அடைவது இயல்பானதும் கூட. ஏனெனில் பெரும்பாலும் ஆரம்ப நிலை வாசகர் புதுமையை எதிர்பார்க்கிறவராகவே எழுத்துக்குள் வருகிறார். அறியாத களங்கள், பழக்கமில்லாத மொழிச்சூழல் என்று அன்றாடத்தை கடந்த ஒன்றை ஒரு வாசகர் எதிர்பார்த்து அவை எதுவும் இல்லாமல் அவர் அன்றாடத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் வழியாக, வாழ்க்கைத் தருணங்கள் வழியாக ஒரு ஆக்கம் கட்டமைக்கப்படுவது அவரை விலகலடையச் செய்து சலிப்படையச் செய்யும். ஆனால் பெரும்பாலும் இப்புள்ளியில் வாசகர் கவனிக்கத் தவறுவது இயல்புவாதம் என்பதும் ஒரு புனைவு பாவனையேயன்றி அது “உள்ளதை உள்ளபடிச்” சொல்லும் ஒரு எழுத்துமுறை அல்ல என்பதையே.

தமிழில் அதிகமாக முயன்று பார்க்கப்படும் இலக்கிய வடிவம் கவிதை என்றாலும் அதிகமாக வாசிக்கப்படும் வடிவமாக சிறுகதையே இருக்கிறது. அதோடு சிறுகதையிலும் பல்வேறு வகையான சாத்தியங்கள் தமிழில் முயன்று பார்க்கப்பட்டு விட்டன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் சிறுகதை தொகுப்புகளின் எண்ணிக்கையும் வெளிவந்த சில மாதங்களில் எந்தத் தடயமும் இன்றி அவை மறக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நெரிசலில் நல்ல தொகுப்பினைக் கண்டறிவது வாசகருக்கு சவாலானதாகவே இருக்கிறது. புது முயற்சிகள் என்ற பெயரில் நடந்தேறும் அசட்டுத்தனங்கள் எந்த சுவாரஸ்யமும் நுட்பமும் இல்லாமல் வெறுமனே அன்றாடத்தைக் கோர்த்து எழுதிச் செல்லும்படியான கதைகள், போலியான உணர்ச்சிகள் மேலிட்டக் கதைகள் என தமிழின் சிறுகதை மரபை ஒப்பிட மிக விரைவாக சலிப்பும் ஏமாற்றமும் அளிக்கக்கூடிய கதைகள் அதிகமும் இப்போது எழுதப்பட்டு வருகின்றன. (நான் முன்பு சொன்ன சலிப்பில் இருந்து இறுதியாக குறிப்பிட்ட சலிப்பு முற்றிலும் வேறானது)

இப்படியான சூழலில் யதார்த்தவாதத்தை மையப்படுத்தும் கதைகள் – அத்தகைய கதைகள் ஏற்கனவே நிறைய வந்துவிட்ட சூழலில் – சந்திக்கும் சவால்கள் அதிகம் என்று தோன்றுகிறது. முதலில் அவை ஏற்கனவே இங்கு எழுதி நிறுவப்பட்ட கதைகளில் இருந்து மேலெழுந்திருக்க வேண்டும் மற்றும் சொல்லி அலுத்துப் போன வடிவங்களில் இருந்து தங்களை பிரித்து நிறுத்திக் கொள்ளவும் வேண்டும். கே.என்.செந்திலின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான ‘அகாலம்’ இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

செந்திலின் அரூப நெருப்பு தொகுப்பை ஏற்கனவே வாசித்து இருப்பதால் அவருடைய எழுத்துப்பாணி மற்றும் அவர் எழுத விரும்பும் களங்கள் குறித்த அவதானிப்பாக இக்கட்டுரை அமையும்.

முதலில் செந்தில் அமைக்கும் பின்னலான கதை வடிவத்தினை குறிப்பிட வேண்டும். தொடக்கம் முடிச்சு முதிர்வு என்ற செவ்வியல் சிறுகதை வடிவத்திற்கும் காலத்தை கலைத்துப் போட்டு எழுதப்படும் தன்மை கொண்ட மாற்று சிறுகதை வடிவத்திற்கும் இடையேயான ஒரு வடிவம் என்று செந்திலின் கதைகளை வரையறுக்கலாம். ஒரு தீர்மானமான முன் வடிவத்தினை இக்கதைகள் அனைத்துமே கொண்டிருக்கின்றன. கதைகள் அனைத்துமே கதையின் முக்கியப் பாத்திரம் ஒருவர் ஒரு அசாதாரண கைவிடப்பட்டச் சூழலை எதிர்கொள்ளும் இடத்தில் இருந்தே தொடங்குகின்றன. இத்தொகுப்பின் முதல் கதையான இரண்டாம் இடம் மகனின் நோய்க்காக மருத்துவரிடம் பார்த்த மருந்துச் சீட்டுகள் நொய்ந்து போவதைத் தாய் பார்ப்பதுடனும் இறுதிக்கதையான இல்லாமல் போவது மனம் பிறழ்ந்த ராஜாம்மாள் தன் முன்னே நிற்கும் உருவெளித் தோற்றங்களை துரத்துவதுடனும் தொடங்குகின்றன.

ஆனால் செந்திலின் கதைகள் தொடக்கத்தில் இருந்து வளர்ந்து செல்கிறவை அல்ல. முதல் சித்தரிப்பு பெரும்பாலும் மொத்தக் கதை நிகழ்வின் மத்தியில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. அவ்விடத்தில் இருந்து இடைவெளி இல்லாமல் குறைந்த சொற்களில் ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகம் செய்து கொண்டே செல்கிறார். வாசக மனதில் பாத்திரங்களைக் குறித்த முன் ஊகங்களைத் தோற்றுவித்து அதற்கு இசைவாகவோ மாற்றாகவோ அப்பாத்திரங்களுக்கும் கதையின் பிற பாத்திரங்களுக்கும் இடையேயான உறவினை வெளிப்படுத்துவது அனைத்துக் கதைகளிலும் பயின்று வரும் ஒரு உத்தியாக இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பின்னிருக்கும் வாழ்க்கையை பத்திகளின் இடைவெளியை மட்டுமே கொண்டு சொல்லிச் செல்கிறார். செந்திலின் கதைகளில் நாம் உணர்வுகளை அடைவதும் கதை நமக்கு புரியக் கிடைப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ஒரு சுருள் அவிழ்தல் போல. அவர் புனைவுகளின் கலைப் பெறுமானத்தை உருவாக்கும் முக்கியமான அம்சம் இது.

செந்திலின் அனைத்து கதைகளிலும் இறுக்கமான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. ஆகவே அவற்றில் உள்ள ‘கதை’ குறித்துப் பேச வேண்டிய அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏனெனில் இத்தொகுப்பில் உள்ள ஐந்து கதைகளின் களமும் நமக்கு அந்நியமானவையோ காணக் கிடைக்காதவையோ முன் அறிமுகம் செய்து கொண்டு வாசிக்கக் கட்டளை இடுகிறவையோ அல்ல. ஆகவே கதைகளின் பொதுக்கூறுகள் குறித்தும் அவற்றின் பெறுமானம் குறித்தும் விவாதிப்பதே சரியாக இருக்கும். அனைத்து கதைகளிலும் ஒரு வீழ்ச்சியின் சித்திரம் உள்ளது. ஆனால் யாரும் செழிப்பான நிலையில் இருந்து வீழ்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அன்றாடத்தின் இயல்போட்டத்தில் மகிழ்ச்சியைக் கண்டுகொண்ட மனிதர்களாக இக்கதாமாந்தர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிறு பிசகு அல்லது இயல்பு மீறி வாழ்வில் நடக்கும் சம்பவம் ஒன்று வாழ்வின் இயல்போட்டத்தை குலைத்துப் போடுகிறது. அந்தக் குலைவை எதிர்கொள்ளத் தெரியாமல் கையறு நிலையில் அவர்கள் திகைத்து நிற்கும் கணத்தைத் தொட்டெடுப்பதே செந்திலின் பலமாக இருக்கிறது.

சகோதரிகள் மற்றும் இரண்டாம் இடம் என்ற இரு கதைகள் நீங்கலாக மற்ற மூன்று கதைகளிலும் பிறன்மனை விழைவு பேசப்படுகிறது என்றாலும் மூன்று கதைகளும் வெவ்வேறு தளங்களில் நகர்கின்றன. சிறையில் இருக்கும் கணவனுடன் உடனிருந்த சசியை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வளர்மதி (போக்கிடம்), கணவனின் தம்பியை தன்னுடன் வலுக்கட்டாயாகப் பிணைத்துக் கொள்ளும் கீதா (அகாலம்), கணவனை இழந்த பிறகு ரத்னத்தின் மீது காதல் கொள்ளும் இரண்டு குழந்தைகளின் தாயாகிவிட்ட கௌசல்யா (இல்லாமல் போவது) என குடும்பங்களில் வாழ நேர்ந்த பெண்களின் துயர்களும் விருப்பங்களும் மூழ்கியும் வெளித்தெரியும்படியும் இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இயல்வுவாதக் கதைகளைப் பொறுத்தவரை சமூகம் தனிமனிதன் மீது செலுத்தும் கண்ணுக்குப் புலப்படாத அழுத்தத்தினால் அவர்களுக்குள் நேரும் சிதைவுகள் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். இம்மூன்று கதைகளிலும் இந்த மணம் கடந்த உறவு வெவ்வேறு வகையான சிதைவினை அவர்கள் மீது உருவாக்குகிறது. அகாலத்தில் கீதாவுக்கும் அவள் கணவனுக்கும் பிறந்த மகளான யசோதவை இந்தப் பிறழ்வு தாக்குகிறது. இல்லாமல் போவது கதையில் ரத்னத்தின் அம்மாவின் மீதான மூத்த மகனின் வன்மமாக திரும்புகிறது. போக்கிடம் கதையில் இப்பிறழ்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது போன்ற தோற்றமிருந்தாலும் சசி வளர்மதியின் கணவன் இல்லை என்ற காரணமும் அவனுக்குக் கட்சியில் கிடைத்த ஒரு வாய்ப்பு கைநழுவிப் போகச் செய்கிறது.

இரண்டாம் இடம் கதையில் தன் மீது குவிந்திருந்த பெற்றோர்களின் அன்பு தம்பியியை நோக்கித் திரும்புவதைச் சொல்லும் கதை என்றாலும் குழந்தையின்மை அளிக்கும் பதற்றம் குழந்தையின் உடல் குறைபாடு பெற்றோரிடம் உண்டாக்கும் எரிச்சலும் மன விலகலும் என பல தளங்களைத் தொடுகிறது. சகோதரிகள் கதையில் காலங்கடந்து பெற்றோருக்குப் பிறக்கும் ஒரு குழந்தையால் மணமாகாத இரண்டு சகோதரிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள் பேசப்படுகின்றன.

இக்கதைகளில் பேசப்படும் சிக்கல்களும் நெருக்கடிகளும் நம் அன்றாடத்தில் அறிந்தவையாக இருக்கும் போது இக்கதைகள் குறித்துப் பேச வேண்டிய தேவையை உருவாக்கும் அம்சம் எது என்பது ஒரு முக்கியமான கேள்வியாகிறது. வாழ்வின் மீதான பிடிப்பினை விட்ட பிறகு வாழ நேர்வதன் அவதியைச் சொல்லும் கதைகளாக இவற்றை வகைப்படுத்தலாம். முதல் கதையான இரண்டாம் இடம் நீங்கலாக மற்ற அனைத்திலும் வாழ்வு அளிக்கும் வஞ்சங்களையும் அர்த்தமின்மையையும் தங்கள் மீது உணர்ந்தபடியே ஒவ்வொருவரும் வாழ்ந்து கடக்கின்றனர். ராஜாம்மாளும் யசோதாவும் மனம் பிறழ்கிறார்கள் எனில் ரத்னம் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறான். திலகா உள்ளொடுங்கியவளாகிறாள். (சகோதரிகள்) வசந்தி வாழ்வு அளிக்கும் கசப்பினை ஏற்றுக் கொண்டு வாழத் தயாராகிறாள். இவர்களை இத்தகைய இக்கட்டு நோக்கித் தள்ளும் ஈரமும் சுரணையும் அற்றுப் போய்விட்ட ஒரு காலகட்டத்தை நோக்கிய வலுவான கேள்வியை முன்வைக்கின்றன இக்கதைகள்.

ரத்னத்துக்கும் கௌசல்யாவுக்கும் இடையேயான அழகான காதலை மகளின் பிடிவாதமும் அப்பிடிவாதமாக அவள் மேல் வந்து அமர்ந்த ஊர் அலருமே தடுத்து விடுகிறது. ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாமல் பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து மாமாவின் செயலால் சிறைக்குச் சென்று திரும்பி வந்து பழிவாங்க நினைத்த இடத்தில் மாமாவும் இறந்து போக சிறையில் உடன் இருந்தவன் மனைவிக்கு கணவனாகி வாழ்வு மெல்ல மெல்ல மேலேற்றும் என்று நம்பும் புள்ளியில் அனைத்தும் சரிந்து போக வெறித்துப் பார்த்தவனாக அமர்ந்திருக்கும் சசியைப் பார்த்து திகைப்பே ஏற்படுகிறது. இப்படி ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பின்னிருக்கும் அவலங்களைத் தொடர்ச்சியாகச் சொல்வதன் வழியாக வாழ்வின் அர்த்தமின்மையை பௌதீக ரீதியாக இக்கதைகள் சென்று தொடுகின்றன. அனைத்து கதைகளிலும் வறுமை ஒரு முக்கிய கூறாகிறது. ஒரு கட்டத்தில் வறுமைதான் செந்திலின் பாத்திரங்களை கொந்தளிப்பும் பதற்றமும் கொண்டவர்களாகவே எந்நேரமும் வைத்திருக்கிறதோ என்று எண்ணச் செய்கிறது.

கதாப்பாத்திரங்களில் வெளிப்படும் ஒரேமாதியான தன்மை கதைகளின் பலகீனமான அம்சமாகத் தென்படுகிறது. உச்சக்கட்ட உணர்வுக் கொந்தளிப்பின் ஒரு புள்ளியில் உறைந்து போனவர்களாகவே பெரும்பாலானவர்கள் வருகின்றனர். அன்பின்மையும் முரட்டுத்தனமும் கொண்டவர்கள் தீர்க்கமானவர்களாகவும் அன்பு நிறைந்தவர்கள் தடுமாறுகிறவர்களாகவுமே சித்தரிக்கப்படுவது இக்கதைகளின் முக்கியமான குறை. பாத்திர உருவாக்கத்திலும் அவர்களின் அகச்சலனங்களை பதிவு செய்வதிலும் அபாரமான நுண்மை வெளிப்படும் செந்திலின் எழுத்துமுறையில் புறச்சித்தரிப்பிற்கான கூறுகள் வலுவாகத் தென்படாமல் இருப்பது கதையின் அழகியல் முழுமையைக் குலைப்பதாக உள்ளது. உதாரணமாக, இல்லாமல் போவது கதையில் வரும் ராஜாம்மாளின் வாழ்வும் போக்கிடம் கதையில் வரும் சசியின் வாழ்வும் மிகப்பெரியவை. கடுமையான அலைச்சலும் கொந்தளிப்புகளும் நிறைந்தவை. ஆனால் குறைபாடான புறச்சித்தரிப்புகளாலேயே அவர்கள் “சொல்லிக் கேட்ட” பாத்திரங்களாக மனதில் நின்று விடுகின்றனர். எனினும் விற்கப்பட்ட மாட்டினை திரும்பிப் பார்க்காமல் நடப்பது (இல்லாமல் போவது) எந்நேரமும் சண்டையிடும் மாமியாரிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் (இரண்டாம் இடம்) என்ற சொல்லின் வழியாக உருவாகி விட்ட பிரியத்தை வெளிப்படுத்துவது என சில சித்தரிப்புகளை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக தமிழ்ச் சிறுகதை வெளியில் சில புதிய வடிவ சாத்தியங்களை உருவாக்கும் விதமாக இத்தொகுப்பில் உள்ள கதைகள் எழுதப்பட்டுள்ளன. அதே நேரம், இயல்புவாதப் போதமும் ஒருங்கே வெளிப்படுவது இத்தொகுப்பின் தரத்திற்குச் சான்று.

வெளியீடு : காலச்சுவடு

விலை : ரூ. 175