குணா கந்தசாமி கவிதைகள்

0 comment

நீண்ட பெருமூச்சொன்று வெளியேறுகிறது 

துயரமிக்க ரணங்களை
தன்னில் சுமந்தவாறே
முடங்கிக் கிடந்த
மனசின் சிறகுகள்
மெல்ல விரிந்து மேலெழும்புகின்றன
தழும்புகள் தந்திருக்கிறது
தாங்கும் தினவு
பாழ் நிறைந்த காலத்தை
எழுதி முடிக்கிறேன்
என் நாட்குறிப்பில்
ஆசுவாசக் கண்ணீர்
அழகாய்த் தான் வைக்கிறது
முற்றுப்புள்ளி.

கணிதம் வியாபித்த உறவுகள் 

லாபமிட்ட வெறிகொண்டலைய
வெளியெங்கும் தூசிப்படலமாய்
சூத்திரங்கள் மிதக்கின்றன
சொற்கள் இடையில்
கணிதக்குறிகள்
புன்னகையாய்த் தளும்புகின்றன
எல்லாமே வகுபட்டுக் கொண்டிருக்கின்றன
எண்களால்
மாயச்சரடாய்
காற்றையும் திசைகளையும்
சூழ்ந்திருக்கிறது முடிவிலி
எப்போதும் என் கணக்கில்
பூஜ்யத்தை மட்டும்
விடையாய்ப் பெறுபவன்
அதன் வளையத்திற்குள்
அலைந்து கொண்டிருக்கிறான்
வெளியேற முடியாத எலிக்குட்டியாய்.

நித்ய பயணம் 

தன்
வாலைத்
தான்
உண்ண
அரவம்
அலைப்படும்போது
உருவாகும்
நித்யத்தின்
சுழியப்பாதையில்
முயல்
உறங்க
ஆமை
நடக்கிறது.

சரணம் 

ஒரு பேரழகான முரட்டுக்குதிரையைப் போல
துள்ளிப் பாய்ந்திருந்த
காதலின் வேகம் தணிந்துவிட்டது
அதன் கருங்கால வேட்கைகள்
தணியும் இப்பருவத்தில்
இது நம் சமவெளி நடைப்பயணம்
அதியலங்காரத்திலிருந்து
சாதாரணத்தை நோக்கி
நம் சொற்கள் நடக்கின்றன
நமது மூர்க்கங்களும் உக்கிரங்களும்
பழக்கப்படுத்தப்பட்ட நாய்க்குட்டிகளாய்
நம்மைத் தொடர்கின்றன
ஒரு இலை பச்சையடையும் போதே
தொடங்கிவிடும் பழுப்படைதலின் விதியை
எதிர்கொள்ளும் நமக்கு
அடையவேண்டிய திசையும் தூரமும்
தெளிவாகவே இருக்கின்றன
காவியத்தின் மகிழ்ச்சிகரமான இறுதிக்காட்சியை நோக்கி
இப்போது நடக்கையில்
கோர்த்திருக்கும் கரங்களுக்குள்
மிகப் பத்திரமாகவே இருக்கிறது
இழக்காமல்
நாம் காப்பாற்றி விட்ட
அந்த அபூர்வம்.

அ 

பிரார்த்தனையின்
பழமையான நூலகத்தில்
ஒரே ஒரு
நூல் மட்டும் மிச்சமிருக்கிறது
அதன்
ஒற்றைத்தாளில் இருக்கும்
ஒரேயொரு சொல்லின்
இறுதி இரண்டு எழுத்துகள்
உதிர்ந்துவிட்டன
மிச்சமிருக்கும்
ஒரேயொரு எழுத்தின் பலத்தில்தான்
இப்பரந்த பெருவெளி
தொங்கிக்
கொண்டிருக்கிறது.

துயரம் என்னும் செல்லக்குட்டி  

இந்தச் செல்லக்குட்டியை நான் தேர்ந்தெடுக்கவில்லை
அதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருந்தது
பால்மணப் பருவத்தில் அதன் முதற்கீறல்கள் சில
மறையாத் தழும்புகளாக மாறின
நான் வாழ்வுக்குள் நுழைந்தபோது
இதேவகைச் செல்லக்குட்டிகள்
பலருடைய தலைகளிலேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்
சற்றே அச்சத்தோடு திரும்புகையில்
இது எங்கோ ஓடியிருந்தது
இடையில் சிலகாலம்
மகிழ்வின் செல்லக்குட்டிகளோடு
சுகமாய் சயனித்திருக்கையில்
திடீரென்று எதிரே குதித்து
அவற்றைக் குதறிக் கொன்றது
அப்படித்தான் அதன் இயல்பு
வரும் போகும்
முரட்டுச்செல்லம் கொஞ்சும்
முதுகில் குத்தும் முகத்தில் அறையும்
கண்ணீரைக் கேட்கும்
குன்றாத இளமைக்கு வரம் வாங்கியிருக்கும்
அதனுடன் போராடியதில்
திரண்ட நரையின் வெளிச்சத்தில்
இப்போது நான்
புதிர்களுக்கு வெளியே வந்துவிட்டேன்
ஹோய்… ஹோய்…
இதோ என் செல்லக்குட்டியின் மேலேறி
குதிரைச்சவாரி போகிறேனே.

நடுப்பொழுது 

நடுப்பகலில் பனியைப்போல்
வெயில் பொழிகிறது
செய்வதற்கு ஏதுமற்ற எனக்கும்
வெயிலுக்குமிடையே
ஜன்னலின் இரும்புக்கம்பிகள்
எப்போதுமான மோனத்திலிருக்கின்றன
வியர்வையில் வழியும்
மின்விசிறியை நிறுத்திய பின்னும்
சுழலும் முனகலோசைக்கு
அறையைத் திறந்து ஓடிவிடலாமென்றால்
வெயில் பூட்டிவிட்ட கதவைத்
திறப்பதற்கு யாருமில்லை
ஜன்னலின் இடைவெளிகளின் வழி
காலைகளின் ஈரத்தையும்
மாலைகளின் அமைதியையும் கற்பித்து
நான் தணிகையில்
வெயிலின் உடலின் மீது
ஒரு தட்டான் வந்தமரும் இடத்தில்
பெருகிய குளத்தைக்
கடக்கும் சிறுகாற்று
திறந்துவிட்டுப் போகும் அறைக்கதவை
நான் ஏன்
உட்தாழ் இடுகிறேன்
இப் பொழுது?