மரணத்தைக் கடத்தல் ஆமோ

0 comment

துர்மரணம். இரத்த பலி கேட்கும் அகால மரணம். விசுவநாத ஐயர் தன் முன்னே விழுந்திருந்த கட்டங்களை நம்ப முடியாமல் பார்த்தார். காறைக்கட்டியிருந்த சுண்ணாம்பை நன்றாகக் குழப்பி விட்டு, செல்லத்திலிருந்து எடுத்த வெற்றிலையில் தடவினார். மடித்த பின்னர் கையில் நீவியபடி ஏதோ யோசனையில் இருந்தார். அவசரமாக கைவிரலை வேஷ்டியில் துடைத்தபடி மீண்டும் கட்டத்தை உற்றுப்பார்த்தார். அன்று மாலையிலிருந்து நிரந்தரப் பைத்தியக்காரனைப் போல மனம் குழம்பிக் கிடந்தது. காற்றாட வெளியே சென்று வரலாம் என்றால் மேல் வேஷ்டியைப் போட்டுக்கொள்ள வீட்டுக்குள் போக வேண்டும். கமலத்திடம் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும். சனியன் பயப்படுவாள்.

அறை பாதி இருட்டில் இருந்தது. விளக்குத் திரியைச் சுற்றிவிட்டு வெளியே எடுத்து வெளிச்சத்தை அதிகப்படுத்தினார். உதறலோடு அவரது நிழல் துலங்கி வந்தது. நரசிம்ம ஸ்தோத்திரத்தைச் சொல்லிக் கொண்டு மீண்டும் கட்டத்தைப் பார்த்தார். வெளிச்சம் வைத்ததில் கட்டங்கள் மாறியிருக்குமா? ஒன்றில் குருவும் நான்கில் கடகமும் கூட பரவாயில்லை. கூடவே ஆறில் சூரியனும் இருக்கிறானே. கட்டங்கள் மீதிருந்த சிறு குச்சியை தேவைக்கதிகமாகவே தள்ளி விட்டார். ‘ஹானி வந்துடாம இருக்கணுமே. சர்வேசுவரா!’ அவர் கைகள் நடுங்கின. சட்டென அக்குள் வாடை அளவுக்கதிகாக வந்ததில் முகம் சுளித்தார்.

தலையைக் குறுக்காக அசைத்துக் கொண்டார், கட்டங்களைத் திருத்துவது போல. அவர் எழுதிப்போட்ட கணக்குகள், ராசிக்கோலங்கள், நட்சத்திர கோணக் குறிப்புகள், யோக சித்தி கட்டுகள் எல்லாம் போக்குக் காட்டின. எங்கோ எவரோ எழுதி வைத்த கணக்குகள் இதுவரை வராத காலத்தை நிருணயித்துவிட முடியுமா? கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் நாராயணியத்திலிருந்து மன்னிப்பு கேட்கும் தொனியில் வேகமாக ரெண்டு வரிகளைச் சொல்லி விட்டு மீண்டும் கணக்குகளில் மூழ்கினார்.

*

காந்தி அட்டகாசமாகச் சிரித்தார்.

பழுப்பு அங்கி அணிந்திருத ராஜேந்திர சர்மா அவரது சிரிப்பை உதாசீனப்படுத்தி விடாமல் அதே சமயம் கவலை தோய்ந்த முகத்தோடு அவரைப் பார்த்து நின்றார்.

“இதுவும் ஒருவிதத்தில் நல்ல விஷயம் தான். மகாத்மாவுக்கும் சாவு நிச்சயம் என்பது என் வாழ்வின் இன்னொரு செய்தியாக இருக்கட்டும். குறைந்தபட்சம் நான் மகாத்மா இல்லை என்றாவது இவர்களுக்குத் தெரிய வரட்டும்”, சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தார்.

உடலெங்கும் வியர்வை வழிய விசுவநாத ஐயர் அவர் முன்னே நின்று கொண்டிருந்தார்.

“அப்படியில்லை. இரத்த பலி கேட்கும் மரணம்னு கட்டம் சொல்றது..இதுக்குப் பரிகாரம் நிச்சயமா இருக்கும்.”

கூடி இருந்தவர்கள் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தனர்.

“..இன்னும் நான்கு மாதங்கள் சுற்றாமல் சீக்கிரம் முடித்துக்கொண்டு ஊருக்குச் சென்றுவிடலாமே”, தேசாய் பவ்வியமாக நின்றிருந்த போதும் தீர்க்கமாகச் சொன்னார்.

“நான் நேற்று முழுவதும் தூங்கவில்லை தெரியுமா? கடவுளிடம் மன்றாடிக் கொண்டு கேட்டேன். நான் உண்மையென உள்ளளவில் நம்பும் ஒன்றையாவது என் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடு என. நீ உண்மையில் இறப்பாய் என இதோ இங்கே ஐயர் கூறுகிறார். அதுமட்டுமல்ல, சாதாரண இறப்பு அல்ல. வன்முறையில் இறப்பு. இன்னொரு குழப்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றி விட்டார் கடவுள். இதை எல்லாரும் நம்பித்தானே ஆகவேண்டும்”, என அவர் தேசாய் சொன்னதைக் கேட்காதது போலச் சொல்லிவிட்டு குறும்புப் புன்னகையுடன் திரும்பினார்.

“அதுக்கில்லை. ஏற்கனவே நிறைய சி ஐ டி நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது?”

“நான் இறந்துவிட்டால் சி ஐ டிகளுக்கு வேறு என்ன வேலை இருக்கும்? அப்படியெல்லாம் தங்கள் வேலைக்கு குறைவு வைக்க மாட்டார்கள்..”

காந்தி சொல்வதைப் பொருளற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் விசுவநாத ஐயர். அவருக்கு இதைவிட வேறொன்றும் சொல்ல இருந்தது. ஆனால் சொல்லவில்லை. வெளியே நாதஸ்வரமும் தவிலும் இணைந்து கொண்டு காந்தி வருகைக்காக இசைக்கத் தொடங்கியிருந்தன. கூட்டம் ஒன்று காந்தியைத் தள்ளிக்கொண்டு உள்ளிருந்து வெளியே மிதந்து சென்றது. சிறிது நேரத்தில் ஐயர் மட்டும் தனியே கூடத்தின் நடுவே நின்றிருந்தார். தவில் வழியாக உருண்டு உருண்டு வந்தது தாளம். அவரது மனம் கணக்குகளின் ஆட்ட விதிகளுக்கு ஒப்புகொடுக்கத் தொடங்கியது. அதிசயமாக அது தவிலின் தாளத்தோடு ஒத்துப்போனதை அவரது உள்ளம் உணர்ந்தது. நிலையில்லாது விழப்போனவர் கூடத்தில் செயலிழந்து உட்கார்ந்தார்.

*

நான் உன்னிடம் சொல்லாமல் விடப்போகும் விஷயம் அநேகமாக இது ஒன்று மட்டுமாகத் தான் இருக்கும். என் நேரம் இப்படித்தான் முடியும் எனத் தெரியும். முதலிலேயே சொல்லி விடலாம் என்றாலும் உன்னிடம் சொல்வதினால் முடிவு ஏதேனும் விதத்தில் மாறிவிடுமா என்று தான் யோசிப்பேன். அப்படியே மாறிவிட்டால் என்ன செய்வது? ஒரு முறை தேசாய் கிட்டத்தட்ட உன்னிடம் சொல்ல வருவார். அவரது கையை அழுத்தமாகக் கிள்ளிவிடுவேன்.

*

விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல மூன்றாவது நாளாகக் கனவு வந்தது. படுத்திருந்த சிறு பாயின் ரேகைகளைக் கையில் தோளில் தடவிக்கொடுத்துத் திரும்பப் படுத்தார் காந்தி. தொடர்ந்து மூன்றாம் ஜாமம் வரை தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்தார். காலையில் அவர் கைத்தவறி அடித்த பூரான் ஒன்று புரண்டு புரண்டு உயிரைத் தக்க வைத்துக்கொள்ளப் பார்த்தது. கால்களை உதைத்துத் திரும்பும் போது அதன் முகம் எங்கோ பார்த்த மனித முகம். வலியின் ரேகைகளைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இயல்பாக இருப்பதை விட முற்றிலும் வேறொன்றாக மாறியிருந்தது அந்த முகம். வலி மட்டுமேயான முகம். கை கால்களுக்குத் துடிப்பைப் போல முகத்துக்கு விகாரம்.

கைத்தவறித்தான் அடிக்க நேர்ந்தது என கத்தினார். வாய் மட்டுமே அசைந்தது. சத்தம் வரவில்லை. அதற்குள் பூரான் சிறு பச்சை இரத்தம் தோய்ந்த இடத்திலிருந்து சற்று நகர்ந்திருந்தது. மூச்சு விட்டால் திணறிவிடுமோ என கவனமாக மூச்சு விடாமல் இருந்தார்.

இல்லை, துன்புறுத்துவதற்காக செய்யவில்லை. கைத்தவறிதான் என மீண்டும் உதடுகளைக் குவித்துச் சொன்னார்.

பூரான் திரும்பிப் படுத்துக் கிடந்தது.

*

“எனது நண்பர்களில் கூட சிலர் முன்வினைப்பயனை அசூசையோடு எதிர்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் கடவுள் மீது இளக்காரமாகப் பார்க்கப்படுவதால் வருவதல்ல. தங்கள் அறிவின் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருப்பதால். இதைச் சொல்வதால் நமது அறிவின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது எனச் சொல்வதாக நினைக்கக் கூடாது.”

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த சில கதர் தொப்பிகள் சங்கடமாக நெளிந்தன.

“கர்ம பலன்களைப் பற்றிப் பேசும்போது நமது ஜன்ம பூமியில் விளைந்த அறிவு முதிர்ச்சியைப் பற்றி யோசிக்கிறேன். ஒருவன் இப்போது இருக்கும் நிலைமை அவனாலேயே சீர் செய்ய முடியும் எனும் நம்பிக்கையைக் கொடுக்கும் வினை தான் இது. சூழலோ, அவனது சொந்தமோ, நண்பர்களோ திருத்தக்கூடியது அல்ல. பாவப் புண்ணியக் கணக்கு என்பது நாம் மேலெழுந்து செல்ல வேண்டிய பாதை.”

திரள் திரளாக திடலில் கூடியமடிய இருந்தனர் மக்கள். சற்று இடைவெளி விட்டு காந்தி சொல்வதை ஒலிபெருக்கியில் தமிழாக்கிக் கொண்டிருந்தார் ராஜன்.

“எதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்? கர்மவினையின் பயனாக அனுபவிக்கும் இன்றைய நிலையைக் கொண்டு ஒரு மனிதனை கீழ்மைப்படுத்துவதை காணும் போது வெட்கப்பட வேண்டும். கலக்கும் அசுத்தத்தை எண்ணி நதி என்றும் வருத்தப்பட்டதில்லை.”

கூட்டம் ஆரவாரத்துடன் கைத் தட்டியது. அப்போது காந்தி அவரது அடுத்த வரியை பேசிக்கொண்டிருந்தார்.

*

“முழு இருட்டில் பார்க்கும் திறன் கிடைத்து விட்டால் நாம் ஆந்தையாகி விட முடியுமா?”, ராஜாஜியின் தொண்டைக் குழி அசைவதை விநோதமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் காந்தி. அவரது கை இராட்டினத்தைச் சுற்றியபடி இருந்தாலும் மனம் வேறெங்கோ இருந்தது.

“இப்போது இந்த நேரத்தில் நான் முன்வினைப் பற்றி பேசிக்கொண்டிருப்பேன் என முன்னரே முடிவெடுத்து என் மனதில் எழுதப்பட்டிருக்கும் என நம்புகிறீர்களா?”

காந்தி மையமாகத் தலையசைத்தார். “என் மனம் எனக்கு அதைத்தான் சொல்கிறது. உங்கள் தத்துவம் என்ன சொல்கிறது?”

“தத்துவம் மன இச்சையை ஒரு கயிறு என்கிறது. கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு. இறுக இழுத்து ஒரு வட்டம் வரை சுதந்திரமாகச் சுற்றி வரலாம்..”

“..என உங்கள் வினை அனுமதித்திருக்கிறது”, என ராஜாஜியின் வாக்கியத்தை முடித்தார்.

“அந்த ஜோசியன் சொன்னதை முழுவதுமாக நம்பி விட்டீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியாதது இல்லை. அவனது பிழைப்பு அது. உங்க ஜாதகத்தைக் கணித்து விட்டானென பிசினஸைக் கூட்டியிருப்பார்”, என ராஜாஜி சிரித்தார்.

“என்னைத் தவிர யாரோ ஒருத்தருக்கு என் முடிவு தெரிந்திருக்கிறது. மற்றவர்கள் நம்புவது மகாத்மாவாக எனக்கு மதிப்பிழப்பு தான்”, எனச் சொல்லிச் சிரித்தார்.

“சரி, இப்போதைக்கு அப்படியே வைத்துக் கொள்வோம். ஒரு விளையாட்டு ஆடலாம்”

இராட்டினத்தை நிறுத்தி விட்டு தன் முன்னே மண்டியிட்டு அருகே வந்த ராஜாஜியை உற்றுப் பார்த்து அவர் சொல்வதைக் கேட்டார். காந்தியின் கண்களில் குழந்தையின் குறும்புத்தனம்.

“உங்களை ஒருவன் கொல்லப் போகிறான். அதற்குப் பின் இறக்கப் போகிறீர்கள். இந்த ரெண்டு செயல்களைத் தடுக்கும் சாத்தியம் வட்டத்தில் சுற்றும் உங்களுக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன்”, ராஜாஜி காந்திக்கு மட்டுமே கேட்கும் விதமாக மிக மெல்லிய குரலில் தொடர்ந்தார்.

“இப்போது ரெண்டு சாத்தியங்கள் தான் இருக்கின்றன. நீங்கள் அந்த ஜோதிடர் சொன்னதை நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம். அவர் சொல்வதை நம்பினால் ரெண்டு செயல்களில் அதைக் காட்டலாம். கொலையுண்டு இறப்பதைத் தடுக்கும் செயலில் ஈடுபடலாம் அல்லது எதுவும் நடக்காதது போல, இது பற்றித் தெரியாதது போல நடந்து கொள்ளலாம்.”

“தத்துவவாதியின் தர்க்கக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டு விட்டேன் என நினைக்கிறேன். ஆனால் நான் என்னுள் இருக்கும் கடவுளின் ஆணைப்படி நடப்பவன். ஜோதிடத்தை நம்புவது எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த ஜகத்தை ஒரு சுழற்சியில் அமைத்து வைத்தவனின் மீது நம்பிக்கை வைப்பது போன்றது”, என காந்தி புன்னகைத்தார்.

“நீங்கள் இதைத்தான் சொல்லுவீர்கள் எனத் தெரியும். கொலையிலிருந்து தப்பிக்கும் வழியை எடுத்தால், ஜோதிடத்தின் மீது உங்கள் நம்பிக்கை பொய் என்றாகி விடும். எதுவும் செய்யாமல் இருப்பது உங்களைப் போன்ற கர்ம வீரரின் வாழ்வை முழுமையாக்காது”, என ராஜாஜி காந்தியை சிக்க வைப்பது போலப் பார்த்தார்.

“ஆமாம். உண்மை. ஜோதிடன் சொன்னதை நம்பாமல் இருந்துவிடலாம். ஆனால்..”, என இழுத்தார்.

“ஜோதிடம் என்பது விதிவழி அவன் போட்ட கணக்குகளை அடி பிழறாமல் உடனிருந்து நடந்து பார்ப்பது. ஜோதிடத்தைப் பயில்பவன் அதன் வழியில் இருக்கும் இருளையும் தீவினைகளையும் கடந்து முக்காலத்தை ஒரு சேரப் பார்ப்பவன் ஆகிறான் என்கிறது நமது ஜோதிட சாஸ்திரம். அவனோடு பயணம் செய்பவர்களும் வேறு வகையான அறிதலை அடைகிறார்கள். காலம் என்பது ஒரு அலையாகிறது. கடந்த காலம், எதிர்காலம் என அனைத்தையும் அலையாக்குகிறது. ஜோதிடத்தை நெருங்கிப் பார்ப்பவன் நினைவிலிருந்து எதிர்காலத்தை மீட்கிறான். அதை நீங்கள் நம்பாமல் போனால், உள்ளுணர்வின் மீதும் அண்டத்தை உருவாக்கினவன் மீதும் இருக்கும் உங்கள் அடிப்படை நம்பிக்கை பொய் என்பதாகும். நீங்களே ஒரு பொய் என்றாகும்”

“நீங்க நம்புகிறீர்களா, சி.ஆர்?”

“தத்துவத்தில் நம்பிக்கைக்கு இடமே இல்லையே குருஜி”, என ராஜாஜி சிரித்தார்.

“என் முன் இருக்கும் நிச்சயமான வழி எது சி.ஆர்? நீங்களே சொல்லுங்கள்”

“கயிறின் நீளத்தை சோதிப்பது தான்”, ராஜாஜி முறுவலித்தார்.

*

பா, தேசாயிடம் நீ சொல்வதை நான் கேட்பேன். “அவரது உடல் நலம் பற்றிய கவலை எப்போதும் என்னைத் தூங்க விடுவதில்லை”, என்பாய். என் நலத்தைப் பற்றி நான் அக்கறை படாமலா பலவித சொந்த மருத்துவங்களை நான் செய்யத் தொடங்குவேன்? நான் ஒரு சுயநலக்காரன். என் வாழ்வு கீழானது என நிரூபிக்க நினைக்கும் எதிர்காலம் பற்றி மட்டுமே நான் கவலைப்படுவேன்.

*

ஒரு மணல் குன்றை மீள மீள ஏறி உச்சி அடைகிறேன். உச்சி மதியமானாலும் மந்தமான காற்று வீசிக் கொண்டிருந்தது. ஏறிய வேகத்தில் உயரத்தின் அலைபாய்தலில் தலை இறகு போலானது. என் உடலின் பாரம் கொஞ்சமும் தெரியவில்லை. உடலே இருப்பது போலவும் இல்லாதிருப்பது போலவும் மிதப்பு. அதே சமயம் என் மேல் கீழ் பகுதிகள் வெதுவெதுப்பான ஆடையால் மூடப்பட்ட உணர்வு. ஏதோ ஒரு சாமியாரைத் தேடி எளிதில் வந்து சேர்ந்து விட்ட மன உவகை ஏற்பட்டது.

தள்ளாடியபடி நிலப்பகுதியின் விரிவைக் கண்டேன். நாற்புறமும் விரிந்து சென்றது. வேறொரு காலத்தின் மனிதன் என்னுடன் பேச நினைத்தவற்றின் வார்த்தைகள் போல மணல் வரிகள் விரிந்திருந்தன. அவன் என்னோடு ஏன் வார்த்தைகளால் பேச வேண்டும்? எக்காலத்திய மனிதன் வந்தாலும் அவனை முழுவதுமாக உடனே புரிந்து கொண்டு விடுவேன் எனும் நிமிர்வு தோன்றியது. உடனே அதை சமன் செய்யும் வகையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த மணல் வரிகள் தீராத விடாய் போல மனப்பாரத்தை அளித்தது.

தூரத்தில் தெரிந்த குடிசை அருகே செல்லச் செல்ல சிறிதானது. சட்டென என் முன் தெரிந்த சிறு வாயில்குடில் பெரிய பனை குடிலாக மாறியது. மூங்கில் கதவைத் தட்டலாமா என நினைத்திருந்த போது, “திறந்துவிட்டது. வா”, எனும் மெல்லிய குரல் காற்றின் ஓலத்தை மீறிக் கேட்டது.

உள்ளே ஒரே ஒரு புள்ளி. இரத்தச் சிவப்புப் புள்ளி. உலகின் சிவப்பு அனைத்தின் மூலம். தாய்ப்புள்ளி.

உற்றுப் பார்த்தால் அதன் விளிம்பில் வெடிப்புகள். நிலக்குழி போல புகை விட்டுக்கொண்டிருந்தது.

நான் இன்னும் உற்றுப்பார்த்தேன். அதன் விரிப்பில் அறுந்துபோன சிறு நரம்புகளும் தசைகளும் பல்லுயிர்ப்பூச்சிகள் போல சிவப்பை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. உயிர்ப்புள்ள பொட்டு. வாயுள்ள சிறு சிவப்பு கொப்பூழ் நுணுக்கமாக மூச்சுவிடுவது போல.

“என்னை எதிர்பார்த்தாயா?”

ஒரு விதத்தில் இந்தச் சந்திப்பை எதிர்பார்த்ததினால் மட்டுமே இப்பயணத்தை மேற்கொண்டேன் எனத் தோன்றியது. அதைச் சொல்லாக மாற்றிக்கொள்ள தடுமாறினேன்.

“எப்படி ஒரு கச்சிதமான வட்டம் பார்த்தாயா? பிரக்ரதியைப் போல எளிமையானது வேறேதுமில்லை. வட்டம் அதில் கச்சிதமான ஒழுங்கு”

“உன்னை ஜோதிடர் சொன்ன சமயத்திலிருந்து எதிர்பார்த்தேன். சில சமயம் சிறு வயதிலேயே தெரியும் என்று கூடத் தோன்றுகிறது”

“எப்போதிலிருந்து?”

“சின்ன வயது அனுபவம் தெரியலை. ஆனால் முதல் முறை நடாலில்”

“சொல்”

காந்திக்கு அதை நினைக்கும் போதே உதறல் எடுத்தது. கை நடுங்கிற்று.

“நடால் பண்ணையில் திருத்தவே முடியாமல் முரண்டு பிடித்த ஒரு பதினேழு வயது மாணவனை அடித்த அந்தக் கழி. கழியைப் பற்றியிருந்த தன் கரங்கள். என்னைத் தள்ளிவிட முன்னே வந்த அவனது வேகம். இன்று வரை அந்த ஆக்ரோஷத்தோடு என் முன்னே வருபவர்களைத் தான் மனதின் அடி ஆழத்தில் பார்க்கிறேன். அந்தப் பையன் முதலில் காட்டிய வெறி. அவன் கலாட்டா செய்து கொண்டிருந்த இடத்தை நோக்கி நான் வருவதைப் பார்த்தவன் கண்களில் தெரிந்த விலங்குப் பார்வை. இறைத்தன்மை முற்றிலும் காணாமல் போன நொடி அது. மனிதனின் எந்த சாயலும் அதில் படியவில்லை. என்னைத் தள்ளிவிடுவதற்கு அவன் முன்வந்த வேகத்தில் ஒரு  தோட்டாவின் குறிக்கோள் தெரிந்தது. சாரமற்ற கண்கள்.”

“இது மட்டும் தானா?”

மூச்சிழுப்பதை நிறுத்தி சிவப்பு அவரை உற்றுப் பார்த்தது. ஒரு சிறு துளை. ஒரே ஒரு துளி இரத்தம் அமைதியாகக் காத்திருந்தது.

காந்தி தடுமாறினார்.

“என் கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன. கழியைப் பற்றிய கணம் முதல். எங்கிருந்தோ வந்த ஒரு மிருகக் கோபம். அந்த நடுக்கத்தைக் கூட என் கை இன்னும் மறக்கவில்லை. என் கையின் மற்றொரு இயல்பாக அது மாறிவிட்டது. அந்த மிருகத்தோடு தான் ஒவ்வொரு நிமிடமும் போராடுகிறேன். ஆனால், என் கை நடுங்கியபடி கழியைப் பிடித்திருந்த போது வேகமாகத் திமிறிய சிறுவன் ஒரு கணம் தடுமாறினான். என்னையும் நடுங்கும் கையையும் மாறி மாறிப்பார்த்தான். அவன் முகத்தில் சிறு ஏளனம்”

அவரால் தொடர முடியவில்லை. இப்போது நினைத்தால் கூட உச்சகட்ட பதற்றம் தோன்றிவிடுகிறது. காந்தி குனிந்து தனது கரங்களைப் பார்த்தார். வியர்வை பொங்கிய கரங்கள். ஒரு சிறு கத்தி போதும். அந்த விரல்களைத் துண்டாக்கிக் கொள்ள.

“என் அடிமனதின் ஆசை ஒன்று நிறைவேறியது போன்ற குதூகலிப்பு. என் செயலுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்ட திருப்தி. அதுவரை தெரிந்த கோபம் குற்ற உணர்வு கூடிய ஒன்று. அவன் முகத்தில் பார்த்து விட்ட சிரிப்பு அந்தக் குற்ற உணர்வைப் போக்கிவிட்டது. அவன் கதறல் கேவலாக மாறும் வரை தொடர்ந்து அடித்தேன். என் பலம் எனக்கே வியப்பூட்டியது. ஆஸ்ரமத்தில் இதை நெருங்கி வந்து பார்த்தவர்கள் ரெண்டடி பின்னே சென்றனர். பல முகங்களில் ஏமாற்றம். சிலர் மகிழ்ச்சியை மட்டுப்படுத்தி கடுமையாக முகத்தை வைத்திருந்தனர்.

அடுத்த ஐந்து நாட்கள் தூங்காமல் இருந்தேன். மூளை விளையாட்டுகளுக்கு எல்லையே இல்லை. சடசடவென என் கோபத்துக்குக் காரணங்களைத் தொகுத்துக் கொள்ளத் தொடங்கினேன். பையனால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடால் ஆஸ்ரம நிர்வாகிகள் என் பக்க நியாயங்களை அடுக்கி என் மனக் குழப்பங்களை மூடப்பார்த்தனர். இப்போது நினைத்தால் மிகக் கேவலமாக இருக்கிறது. ஆனால் அப்போது அந்த நியாயங்களைப் போன்ற களிம்பு வேறேதுமில்லை. அவர்கள் தெய்வங்களாகத் தெரிந்தனர். அவர்களுக்கும். குற்றங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாதபடி புகைமூட்டம். இந்த நியாயத் தரப்புகளின் சடங்கு இல்லாவிட்டால் உலகம் எப்போதோ மனிதர்களற்ற இடமாகியிருக்கும். வளரும் முன்பே மனிதன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.”

“பத்து நாட்களுக்குப் பிறகு நிம்மதி திரும்பியதா?”

“தெரியவில்லை. அடுத்த பத்து நாட்களுக்கு நான் பாவின் முகத்தைப் பார்க்கவில்லை.”

சிவப்பு சட்டென பூரண வெளிச்சமானது. காந்தி முதல் வெளிச்சத்தின் கீற்று ஜன்னலை மீறி விழிப்பு தட்டிவிட்டதை நிம்மதியுடன் வரவேற்றார்.

*

சேலம், தஞ்சாவூர் என நாகப்பட்டிணத்தை விசுவநாத ஐயர் அடைந்தபோது அதிகாலையாயிருந்தது. காந்தியுடன் வந்த கோஷ்டியினருடன் காய்கறி நறுக்கி சமையலில் உதவியாக இருப்பது ஓரளவு  நிறைவைத் தந்தது. இனி ஜோதிடக் கட்டுக்கள் இல்லை. காந்தியுடனேயே பயணம் செய்யலாம். மனதில் ஒரே எண்ணம் தான். காந்தியைப் பாதுகாக்க வேண்டும்.

இதென்ன அபத்தமான எண்ணம்? கணக்குக் கட்டுகளைத் தூக்கிப் போட்டு அவர் பின்னால் செல் என என் முன்வினைப் பயனில் எழுதியிருக்கோ? என் ஜாதகத்தில் இல்லை என்றால் கமலத்தின் கணக்குகளில் இருந்திருக்கும்.

கூடாரத்தை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்துப் படுத்தார். இரவு நேரத்தின் கண்கள் மெல்ல துலங்கத் தொடங்கின. உள்ளே ஏதேதோ எண்ணங்கள். எத்தனையோ நபர்களின் விதிக் கணக்கை கண்டு சொல்லியிருக்கிறேன். ஏதோ ஒரு கரம் கணக்கையும், மற்றொரு கரம் அவர்களையும் அரவணைத்துக் கிடந்திருக்கிறது. எதிர்காலத்தைத் தெரிந்து கொண்டு நொடிந்து போனவர்களையே நிறைய பார்த்திருக்கிறேன். என் முன்னே கரைந்து அழுத எண்ணற்ற பெண்களும் வயதான ஆண்களும் எந்த விதிக்கு ஒப்புக்கொடுத்து இந்த வாழ்வை கழித்துப் போக வந்திருக்கிறார்கள்? அவர்களது செயலுக்கும் சிந்தைக்கும் தொடர்பு கொடுக்கும் தத்துவத்தைத் தேடிக் களைத்தவர்கள்.

பிரயாண கால மானஸோ சலேன

பக்தியா யுக்தே யோக பலேன சைவ

பலவாறு உடைந்த செயலுக்கு மூலத்தைத் தேடிப் போவது சக்தி விரயம். எதிர்நிலை இச்சாசக்தி.

மாலை பஜனையின் போது காந்தி சொன்ன கீதை மந்திரம் தனக்காகச் சொல்லப்பட்ட ஒன்று என ஒரு கணம் நினைத்தார்.  அன்று இரவு முழுவதும் மனம் வழுக்கி அந்த வரியிலேயே விழுந்து கிடந்தது.

*

இம்முறை சிவப்புக்கண் மிகத் தெளிவாகப் பல நிறமிழமிகளோடு தெரிந்தது. ஒரு பொட்டுத் துளை. சகஜமாக உரையாடத் தொடங்குவதும் பின்னர் தன்னையே நொந்து கொள்வதுமாக கனவு உரையாடலின் நான்காவது நாள் என காந்தியின் தர்க்கம் ஒரு பக்கம் கணக்குப் போட்டுக்கொண்டது.

“சபாஷ்”

“என்னது?”

“கனவையும் கனவு பற்றிய சிந்தையையும் தெளிவாக ரெண்டாகப் பிரித்துக்கொண்டு விட்டாய்.”

காந்தியின் நெற்றி சுருங்கியது.

“உன் பயிற்சியின் விளைவு அது. அகத்துக்கும் புறத்துக்கும் நடுநிலையான இடத்தில் சஞ்சரிக்க முடிகிறது உன்னால். சி ஆருடனான விவாதம் எப்படி இருந்தது?”

“அவர் என்னைக் குழப்பிவிட்டார்”

“தத்துவவாதிகளின் இயல்பு அதுதான். அந்தப் பையனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது நழுவிவிட்டாய்”

தன் பார்வை துடிப்பதை காந்தி உணர்ந்தார்.

“உண்ணாவிரத்தோடு கீதையை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். யோகங்களைக் கடக்கும் தோறும் சாட்டையின் நுனியால் சொடுக்கப்பட்டது போலிருந்தது.”

வெளியே வெக்கை இன்னும் அதிகரித்துவிட்ட மாதிரி தோன்றியது. வெக்கை எங்கிருந்து வருகிறது? அந்தச் சிவப்புப் பொட்டிலிருந்தா, வெளியிலிருந்தா, தன்னிலிருந்தா? கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து விட்ட நெருப்பின் திசையைக் காண முடியாது திகைத்தார் காந்தி.

“அந்தச் செயலிலிருந்து இன்னும் நீ விடுபடாதது தெரிகிறது. முழுமையடையாதது உன் செயல்”

புதிராகச் சொடுக்கப்பட்டு நிற்கும் இந்த இடத்திலிருந்து விடுதலையை உத்தேசிக்கும் பாணியில் காந்தி பதற்றத்துடன் குடிலைச் சுற்றிப் பார்த்தார். எங்கும் இடைவெளியற்ற இருள்.

“அந்தக் கொடுங்கனவிலிருந்து விடுதலை பெறும் வழி தெரியலியா?”

காந்தியின் நெஞ்சு ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது. எண்ணங்கள் இல்லாத மனம் திளைப்பது போல வானில் பறக்கும் கூட்டமொன்றைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

“யாகங்களில் இடும் அவிசாக உன் மனம் ஆக வேண்டும். தீக்கடை கோல் மட்டுமே தீயை முழுமையாக்க முடியும்”

“எத்தனை யோசித்தாலும் அந்த நொடியின் கோபத்தைத் தாண்டி எதையும் சிந்திக்க முடியவில்லை”, காந்தி குடிலின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.

தன்னுள் ஏதோ ஒன்று கூர்ந்து கவனித்தால் தலை தாழ்த்தி விலகிவிடும் என்பதை உணர்ந்தார். அடுத்த சில நாட்களில் மெளன விரதம் இருந்த போது சமையலில் வேலை பார்த்த அந்தச் சிறுவனை மீண்டும் பார்க்க நேர்ந்தது. ஏமாற்றத்தோடு காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தான்.

முகத்தில் ஒரு வெற்றிச் சிரிப்பு ஒரு நொடி வந்து சேர்ந்ததை இப்போது உணர்ந்து துணுக்குற்றார் காந்தி. அதுவரை இருந்த செயலில் தெரிந்த வெப்பம் சட்டென குளிர்ந்ததை உணர்ந்தார்.

“உன் செயல் எல்லாம் ஒரு கற்பனை எதிரியைக் கொண்டே வளர்ந்திருக்கின்றன”

காந்திக்கு ஒரு உதறல் எடுத்தது. யாரோ கையை இழுப்பது போல.

பாய்க்கு அருகே  குனிந்து காந்தியின் முகத்தைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பா. நல்ல குளிர் இரவில் அவர் முகம் வியர்த்து வெளிறியிருந்தது.

*

உன்னிடம் அந்த முரட்டுச் சிறுவனைப் பற்றிக் கேட்பேன். வழக்கமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் இருக்கும் குறுகுறுப்பு இன்றி நிதானமாக, மிக இயல்பாக அந்தக் கேள்வியை உன்னிடம் தொடுத்திருப்பேன். நீ பட்டும் படாமல் ஒரு பதிலைச் சொல்வாய். பிளவுபடாமல் ஒன்றை ஒன்று சுற்றிவரும் இரு வளையங்கள் போல நம்மிடையே பொதுவான உணர்ச்சிகள் இல்லாமலானது போல எனக்கு தோன்றும். மணிலால் மீதான என் கோபத்தைக் கண்ட உன் எதிர்வினையாக அது இருக்கலாமென்றும் அப்போது நினைப்பேன். ஒரே ஒரு நொடி தான். மீண்டும் என் பா மீதான மரியாதை கலந்த பிரியம் என்னை மீட்டு விடும். முரட்டுப் பையனைப் பற்றி நீ சொன்னவை எதுவும் என் நினைப்பில் தங்காது.

*

சி.ஆர் அறைக்குள் நுழைந்த போது எனக்கு அது தெரிந்திருக்க வேண்டும். தெரிந்தது. ஆனால் நானாக அதைப் பற்றிப் பேசக்கூடாது என இருந்தேன். அன்றைய பயணத்திட்டம், காலை பிரிட்டோவிடம் எழுதச் சொன்ன கடிதங்களின் சாரம் எனப் பேசினோம். உள்ளுக்குள் ஒரு எண்ணம் குமட்டலாகச் சுழன்று கொண்டே இருந்தது. சி ஆரும் எங்களுக்குள் இருந்த இடைவெளியை உணர்ந்திருந்தார்.

பின் மதியம் நான் அறையில் தனித்திருந்தேன். இப்போது கனவு வரக்கூடாதா என இருந்தது. யங் இந்தியாவுக்கான குறிப்புகளைச் சேகரித்து வழக்கத்துக்கு மாறாகத் தெரிந்த மொழிகளிலெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். மதராஸுக்கு அடுத்த வாரம் திரும்பி விடுவோம். அங்கிருந்து பூனா. மொழிகளுக்குள் புகுந்து இறுகத் தைக்கும் ஊசி போல ஊடுருவியபடி சென்றேன். மிக நொய்மையானது அந்தச் சிந்தனை.

அந்த ஜோசியனை சந்திக்கச் செல்லலாம் என சமையலறை பக்கம் சென்றேன். செம்மண்ணாலான பெரிய முற்றம். அதைத் தாண்டிய கீத்துக்கொட்டகையில் பெரிய அண்டாக்களை கழுவும் சத்தம். அன்றைய சமையல் பற்றி, சாப்பிட்டுச் சென்றவர்களின் பசி பற்றிய கிண்டலும் கேலியுமாக சமையற்கூடம் சத்தமிட்டது. பெரிய பாத்திரங்களின் மீது படிந்த பிசினை நீக்குவதற்காக அண்டாக்களில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தார் அவர். அவரது கவனம்  அதில் முழுமையாகப் படிந்து கிடந்தது. கண்கள் அரைவாசி மூடியிருந்தன. அவரைச் சுற்றி நான்கு பக்கமும் தண்ணீர். பழுப்பும் சாப்பாட்டு மிச்சமுமான நிற வெளி. அவர் என்னைக் கவனிக்காது நீரை நிரப்புவதும், சாப்பாட்டு மிச்சங்களை ஒதுக்குவதுமாக இருந்தார்.

நான் பின்னால் இருப்பதைத் தெரிந்துகொண்டு தான் திரும்பாமல் இருக்கிறார் என என் உள் மனது சொன்னது. இல்லை, அவர் திரும்பிச் சிரித்தால் அந்தப் பார்வையை என்னால் சந்திக்க இயலாது. அவரது குலத் தொழிலை மறந்து தேச சேவைக்காகத் திரும்ப வைத்திருக்கும் ஜாதகக்காரன் நான் என்பதை அவரது ஜாதகத்தில் கணித்திருப்பாரோ? அப்படியே கணித்திருந்தாலும் அதை ஏன் தொடர வேண்டும்? ஆனால் இன்னொன்றும் தோன்றியது. என்னைத் திரும்பிப் பார்த்தால் அவரது முழங்கால்கள் மீது மோதி, “என்னைக் கொல்லு..கொல்லு”, என்று அழுது அரற்றி விடுவேன். அவரது உடல்மொழி அதை எனக்குச் சொன்னது. அந்த முகத்தைப் பார்க்க விரும்பாதவன் போல வேகமாக என் அறைக்குத் திரும்பினேன்.

*

அறையின் வாசலிலிருந்து அவனைப் பார்த்தார். நடாலின் குரூர வெயில் மதியம். கூடி நின்ற அனைவரும் வெறி பிடித்த அவனது உடலை இறுகப் பிடிக்க முயன்றனர். கை கால்களை உதறி அவன் திமிறிக் கொண்டிருந்தான். அவன் வாரியிறைத்த காய்கறிகளும், பழங்களும் கூடையிலிருந்து சரிந்து அங்கே தரையில் கிடந்தன. ஒரு வயதானக் கிழவி அங்கே நடக்கும் நாடகத்தைப் பாராது சிதறிய பழங்களை கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தார்.

மீண்டும் அந்தக் காட்சி அரங்கேறப் போகிறது. தனது கை தசைகள் துடிப்பதை உணர்ந்தார்.

வேகமாக ஓடி வந்து சொன்ன நடால் கறுப்பன் காந்தியுடன் கூட கோபமாக நடந்து வந்தான். அவனது மூச்சு வேகமாக  காற்றின் மீது அறைந்தது. அவர் நடந்து செல்லும் போது சுற்றிலும் இருந்தவர்களின் எதிர்பார்ப்பு அவரது செயல் மீது விழுந்தது. ஆழக்கிடக்கும் ஏரியில்  நீர்பாசி அடர்ந்திருப்பது போல மர்மமான சித்திரங்கள் அங்கே உருவாயின.

காந்தி அந்த உருவெளித் தோற்றத்தை தான் பார்ப்பது போல உணர்ந்தார். தன் அசைவுகளை விலகி நின்று பார்ப்பதை விட கூசச் செய்யும் செயலில்லை.

இதுதான் உன் கனவில் வரும் காட்சி என தனக்கே சொல்லிக் கொண்டார். அவரது அலுவலக வாசலிலிருந்து அந்த சிறுவனைச் சென்றடையும் வழியை பலமுறை பார்த்திருந்தார். இப்போது போல. வழியில் தெரிந்த முகங்கள் அனைத்திலும் ததும்பும் அலைவெளி. அவரது நடையின் அதிர்வை இப்போதும் உணர்ந்தார்.

“என்ன செய்யப்போகிறாய்? கயிறின் நீளத்தைச் சோதிக்கலாமா?”

“சி.ஆர்?”

திரும்பிப் பார்த்தார். சி.ஆர் இல்லை.

நடையில் எடையின்மையை உணர்ந்தார். சிறுவனைச் சென்றடையும்போது ரத்தத் துளியுடன் துளையை மின்னலெனக் கண்டார். சுற்றிலும் கன்றிப்போன ஆஸ்ரம வாசிகள். அந்தச் சிறுவன் மீது முழு வெறுப்பைக் காட்டும் கண்கள். முழு எதிர்பார்ப்போடு காத்திருந்தன.

காந்தி அவர்கள் கண்களில் தெரிந்த வெறுப்பின் அலை தன் மீது படாமல் காத்ததைப் பார்த்தார்.

அது யார் பா வா? கீழே குனிந்து பழங்களை பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்த கிழவி காந்தியைத் திரும்பிப் பார்க்கவில்லை. எல்லோரும் ஒரு புகைப்படம் போல காந்தியை நோக்கிக் கொண்டிருக்க அவள் மண் மீது கவனத்துடன் அசைந்தாள். ஒரு நொடியில் அவள் மிதப்பது போலிருந்தது. அவள் எடுக்க எடுக்க சாரி சாரியாக பழங்களும், காய்கறிகளும் தரையில் சிதறியபடி இருந்தன.

அவனருகே சென்றார். அந்தச் சிறுவனின் முகத்தில் ஏளனம் தெரிந்தது. நம்ப முடியாமல் கைகளைக் குனிந்து பார்த்தார். அவரது கைகளில் நடுக்கமில்லை.

நடுக்கமற்ற கைகளைப் பார்த்தேன் பா என நான் உனக்கு எழுதுவேன்.

அருகே இருந்த குச்சியை எடுத்தேன். அவனது கண்கள் என்னை ஊடுறுவின.

இருவரும் கீழே சிதறிய பழங்களையும் காய்கறிகளையும் பொறுக்கிக் கொண்டிருந்த கிழவியின் வளைந்த கூனையும் பார்த்து நின்றோம். நானும் அந்த கோபக்காரச் சிறுவனும். கையிலிருந்த குச்சி நழுவி விழுந்தது.

*

பா, நீ எங்கிருக்கிறாய்?

*

சி.ஆர், கயிறின் நீளம் எத்தனை எனும் தத்துவக் கணக்குகள் எத்தனை எத்தனை! வினைப்பயனும், நாமாக எடுக்கக்கூடிய முடிவுகளின் பயனும் எதிர் எதிர் தத்துவங்கள் அல்ல என்பதே இப்போதைக்கு என் எண்ணம். இரண்டும் ஒன்றை ஒன்று இறுக்கும் முடிச்சுகள் கொண்டவை. இந்த முடிச்சுகளை நோக்க நோக்க மனம் பேதலித்துப் போகிறது. அதனால் அதிலிருந்து தப்பிக்கும் வழியே என் தத்துவம். என் வாழ்க்கை.

இன்னொன்று சொல்ல மறந்தேன். நான் சென்னையிலிருந்து கிளம்பும் போது தேடிப் பார்த்தேன். அந்த ஜோசியர் தன் தொழிலுக்குத் திரும்பி விட்டதாகச் சொன்னார்கள்.