உரு

by ப.தெய்வீகன்
0 comment

1

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகாலமாக அந்தக் கோயில் அங்குள்ளது. நவாலி வேலக்கை பிள்ளையார் கோவில் கொடியேறும் காலப் பகுதியில் அந்தக் கோயிலுக்கு காவடி எடுக்க நேர்த்தி வைப்பவர்களை இந்தக் காளி கோவிலுக்கு அழைத்து வந்து இங்கு தான் முள்ளு குத்துவார்கள். பின்னர் அவர்களை ஆடி ஆடி சங்கரப்பிள்ளை வீதிக்கு அழைத்துச் சென்று லோட்டன் வீதி வழியாக வேலக்கை பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிப் போவார்கள்.

எனக்கு பத்து வயதாக இருக்கும் போது இந்தக் காளி கோவிலில் தான் முதல் தடவையாக காவடிக்கு முள்ளுக் குத்துவதைப் பார்த்தேன். அன்றைய தினம் வேலக்கைப் பிள்ளையார் கோவில் தேர் என்று ஞாபகம். மதியம் தாண்டி காவடிக்காரர்கள் அனைவரையும் காளி கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். முள்ளுக் குத்துவதை பார்ப்பதற்காக ஆவலோடு ஐஸ்கிறீமை சூப்பிக் கொண்டு காவடிக்காரர்களுக்கு பின்னாலேயே நானும் ஓடினேன். என்னைப் போல எனது வயது ஒத்தவர்கள் பலர் பின்னுக்கும் முன்னுக்கும் ஓடி ஓடி முள்ளுக் குத்துவதைப் பார்க்க அவதிப்பட்டதில் எனது ஐஸ்கிறீம் கீழே விழுந்து விட்டது. கையை காற்சட்டையில் துடைத்துக் கொண்டு கோயிலைச் சூழ நின்று கொண்டிருந்த பெரியவர்களின் வேட்டிக் கால்களை விலத்தி விலத்தி ஒருவாறு நன்றாக அருகே சென்று – முள்ளுக்குத்தும் இடத்துக்கு முன்பாக – நின்று கொண்டிருந்தேன். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

வேலக்கை பிள்ளையார் கோவில் தேருக்கு விசேடமாக அமர்த்தப்பட்ட மேளகாரர்களின் ஒரு கூட்டம் இங்கே காவடிக்காரர்களை அழைத்துப் போவதற்கு வந்திருந்தது. காளி கோவில் சுற்றுப் பிரகாரம் அவர்களது அடியில் அதிர்ந்து கொண்டிருந்தது. பக்தியைத் தாண்டி ஒரு பரபரப்பு அங்கு நிலவியதற்கு அந்த மேள அடியும் ஒரு காரணமாக இருந்தது. வெற்றிலையைச் சப்பிக் கொண்டு வாய் முழுவதும் இரத்தச் சிவப்பாக அவர்கள் மூசி மூசி மேளம் அடித்துக் கொண்டிருந்தது அங்கு ஆக்ரோஷமானதொரு சூழலை ஏற்படுத்தி என்னைப் போல விடுப்புப் பார்க்க நின்றவர்களுக்கும் உரு ஏற்றிக் கொண்டிருந்தது.

குட்டித்தம்பியைத் தான் முதலாவது ஆளாக அழைத்து வந்தார்கள்.

குட்டித்தம்பியைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. வேலக்கை பிள்ளையார் கோவில் உள்வீதியில் சாமி வலம்வரும் போது குடை பிடிக்கும் எனக்கு கை வலித்தால் உடனடியாக என்னை மாற்றி விடுவது குட்டித்தம்பி தான். அண்ணன் மாதிரி. என்னுடன் நல்ல நெருக்கம். மேவி இழுத்த தலைமுடி. கோயில் பிரகாரத்தில் அவன் மேலாடை இல்லாமல் திரியும் போது எவரையும் திரும்பிப் பார்க்கத் தோன்றும் அழகு. புடைத்த புஜங்கள் கை நரம்புகள் வெளித்தள்ளியிருக்கும். அவனைப் பார்த்து நானும் மேலாடை இல்லாமல் வீட்டில் கண்ணாடிக்கு முன்பாக நின்று கையை அழுத்தி நன்றாக மடக்கிப் பார்ப்பேன். நரம்புகள் தெரிவதே இல்லை. கிள்ளிப் பார்ப்பேன். அப்போதும் தெரியாது. அவனது சிவந்த உடம்பில் நரம்புகள் நதிபோல கிளை பரப்பியோடிக் கிடக்கும்.

குட்டித்தம்பியை முதலாவதாகக் கொண்டு வந்து குப்புற கிடத்தினார்கள். முதுகில் விபூதி அடித்தார்கள். பெரிய கூரான கொழுக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு தாடி வைத்த மதவடிச் சாமியார் குட்டித்தம்பிக்கு அருகாக வந்தார். தனது இரண்டு கால்களுக்கும் இடையில் குட்டித்தம்பியை குப்புற வைத்துக் கொண்டு  தனது முடியை சிலுப்பினார். மதவடிச்சாமியார் அநேகமாக கோவிலில் சாமி வெளிவீதி வரும் போது தீவெட்டிக்கு எண்ணை விட்டபடி நடந்து செல்வதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். கொழுந்துவிட்டு எரியும் தீவெட்டிகளுக்கு பக்கத்தில் மதவடிச்சாமி தனது சிவப்பு நிற வேட்டியோடு நின்று கொண்டிருக்கும் போது பயமாக இருக்கும். நீண்ட தாடியும் அதை விட நீண்ட மீசையும் கறுத்த – பெருத்த கண்களும் பார்ப்பதற்கு அகோரமாக காட்சியளிப்பார்.

மதவடிச்சாமியார் மிகக் கொடூரமானதொரு பார்வையுடன் காளி கோவிலின் மூல ஸ்தானத்தை பார்த்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே விரித்து வைத்துக்கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டார். தனது அடர்ந்த தாடிக்குள் ஒளிந்திருந்த வாயினால் ஏதோ வேகமாக உச்சரித்தார். அப்போது கோயில் மணியை ஒருவர் வேகமாக குலுக்கியபடியிருந்தார். மேளகாரர்கள் பஞ்சாராத்தி காட்டும் போது ஆரோகணித்து அடிப்பது போல தாளத்தின் வேகத்தை கூட்டிக் கொண்டு போனார்கள். அதில் நிற்பவர்கள் அனைவரையும் அறியாத ஏதோ ஒரு சக்தி உந்தி உந்தி தள்ளுவது போல இருந்தது. எல்லோரும் ஓடிச் சென்று அந்த முள்ளை எடுத்து தங்களுக்குத் தாங்களே குத்திக் கொண்டால் என்ன என்பதுபோல விரிந்த வழிகளோடு வித்தியாசமாக தெரிந்தார்கள்.

எனக்கோ காற்சட்டையோடு மூத்திரம் போகப் போகிறது என்பது முக்காற்கட்டம் உறுதியாகி விட்டது. அப்போது மேலே கையை தூக்கிக் கும்பிட்டுக் கொண்டிருந்த மதவடிச்சாமியார் பளார் என்று அப்பிடியே தேங்காய் விழுந்த வேகத்தில் கீழே குனிந்து குட்டித்தம்பியின் முதுகுச் சதையை கொத்தாகப் பிடித்தார். ஒரு கையில் கூரான கொழுக்கியோடு மறுகையால் சதையை இழுத்து இழுத்து பதம் பார்த்தார். கொழுக்கி மினுங்கியபடியிருந்தது. அடுத்த கணம் அது குட்டித்தம்பியின் சதையைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து வெளியே வரப்போகிறது என்பதை என்னை அறியாமலேயே எனது முகம் முன்னுக்குத் தள்ளி பார்த்துக் கொண்டிருந்தது. எனது காதுகள் சூடாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. நான் சாதுவாக அசைவது எனக்கே தெரிந்தது. மேள அடி இன்னும் இன்னும் பெரிய சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது. மணிச் சத்தமும் பயங்கரமாக ஒலித்தது.

சங்கரப்பிள்ளை வீதியிலுள்ள கடையின் முன் சீமேந்து கட்டில் எனக்கு நினைவு தெளிந்து எழுந்த போது அப்பா கையில் ஐஸ்கிறீம் ஒன்றுடன் எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்.

“காவடி எங்க” என்று கேட்ட போது ஐஸ்கிறீமை கையில் தந்து –

“நாங்கள் வீட்ட போவம்” – என்றார் அப்பா.

எனக்கு காற்சட்டையெல்லாம் ஈரமாகக் கிடந்தது.

வீட்டுக்குப் போன போது நான்தான் காவடி எடுத்து விட்டு வருவது போல அம்மா ஓடி வந்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். பக்கத்திலுள்ள வைரவர் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய் திருநீறு பூசி விட்டார்.

குட்டித்தம்பிக்கு முதலாவது முள்ளுக்குத்தும் போதே நான் அங்கு நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு இராஜேஸ்வரி அக்காவின் கற்பூரச்சட்டிக்கு மேல் மயங்கி விழுந்து எல்லோரும் என்னை வெளியில் தூக்கிக்கொண்டு வந்து வேப்பிலையால் அடித்து விசுக்கி விட்டதாகவும் பிறகு அப்பா தான் சங்கரப்பிள்ளை வீதிக்கு தூக்கி வந்ததாகவும் அம்மா கூறினார்.

அது எனக்குப் பெரும் கிலுசை கேடாகப் போனது மாத்திரமல்லாமல் முள்ளுக்குத்துவதை பார்ப்பதற்கு கனநாட்களாக நான் காத்திருந்தது கூட வீணாகி விட்டது என்ற ஏமாற்றத்தைத் தந்தது. அன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே போவதற்கே வெட்கமாக இருந்தது.

அடுத்த நாள் தீர்த்தத் திருவிழா நடந்து கொண்டிருந்த போது நான் கோவில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் குட்டித்தம்பியை தேடித் திரிந்தேன். கடைசியாக சாமியை கோயில் கேணிக்குள்ளிருந்து வெளியில் தூக்கிக் கொண்டு வரும் போது வேட்டியை மடித்துக் கட்டியபடி மற்றவர்களுடன் சேர்ந்து பின் கொம்பைத் தாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். கொம்பை தோளில் காவாமல் பின் கழுத்தில் தாங்கியபடி உள்பக்கமாக பார்த்துக் கொண்டு நின்றதால் அவனது முதுகினை வெளியே தெளிவாக காணக் கூடியதாக இருந்தது. அதில் முதல்நாள் காவடிக்காக குத்திய காயங்கள் அப்படியே தெரிந்தன. பார்த்த மாத்திரத்தில் எனக்கு ‘சுருக்’ என்று காலில் முள் தைத்தது போலிருந்தது. ஓடிச் சென்று சாமிக்கு பின்னால் நான் மிக மெதுவாக நடந்து நடந்து குட்டித்தம்பியின் முதுகையே பார்த்துக் கொண்டு போனேன். இடப்பக்கம் மூன்று இடங்களிலும் வலப்பக்கம் மூன்று இடங்களிலுமாக ஆறு இடங்களில் மதவடிச்சாமி குத்தியிருக்கிறார். உள்ளே குத்தி வெளியில் இழுத்திருப்பதால் பன்னிரண்டு இடங்கள் இரத்தப் பொட்டுக்களாகக் கிடந்தன. குட்டித்தம்பி அந்த காயங்களைப் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாமல் சாமியை காவியபடி போய்க் கொண்டிருந்தான். காயங்களுக்கு அருகில் வியர்வை வழிந்து விலகியோடிக் கிடந்தது.

தீர்த்தம் முடிந்து நாலாவது நாள் ஒரு மாலை நேரம் அப்பாவுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது சங்கரப்பிள்ளை வீதியின் இருமருங்கிலும் இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தார்கள். கடைகளில் நின்ற சனம் கடை வாசலில் தொடங்கிக் கொண்டிருந்த வாழைக்குலைகளுக்கு நடுவால் பூந்து பூந்து பார்த்துக் கொண்டு நின்றார்கள். வீதியின் நடுவில் குட்டித்தம்பியை நான்கு சிப்பாய்கள் நடத்திக் கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். வீதியின் இருமருங்கிலும் பத்து பதினைந்து மீற்றர் இடைவெளியில் ஒவ்வொரு சிப்பாயும் கைகளில் துப்பாக்கியுடன் மிகக் கோபமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நடுவில் குட்டித்தம்பியை நடத்திக் கூட்டிக்கொண்டு போன சிப்பாய்களில் ஒருவனின் கைகளில் நீண்ட தடியொன்றிருந்தது. அதன் நுனிப்பகுதி வெடித்து தும்பு தும்பாக காணப்பட்டது.

குட்டித்தம்பியின் முகத்தில் எந்தப் பரபரப்பையும் காணவில்லை. என்னையும் அப்பாவையும் எதிரில் பார்த்தவுடன் குட்டித்தம்பி சாதுவாக புன்னகைக்க எத்தனித்தான். ஆனால் நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படியும் யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்றும் அப்பா மெதுவாக எனக்கு சொல்லியபடி தொடர்ந்து சைக்கிளை மிதித்தபடியிருந்தார். நான் தலையை கீழே குனிந்திருந்தாலும் அப்பாவின் உத்தரவையும் மீறி குட்டித்தம்பியை மேல் கண்களால் பார்த்தேன். கனிந்த அதே கண்கள் எப்போதும் போலவே என்னைப் பார்த்துச் சிரித்தன. நான் உதடுகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு கண்களை கீழே விழுத்திக் கொண்டேன்.

அடி வயிற்றில் எதோ செய்தது. குட்டித்தம்பியை ஏன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? எத்தனையோ கேள்விகள் மனதிற்குள் உரு ஆடியது. தலை கடித்தது. குட்டித்தம்பிக்கு மதவடிச்சாமியார் முள்ளுக்குத்தும் போது ஏற்பட்ட அதே பயம் மீண்டும் எனக்குள் வந்து நின்றாடியது. ஆனால் அப்பா கூடவே இருந்தது ஒருவித தெம்பைத் தந்தது. அந்தக் கொடூரமான கண்களை அணிந்து கொண்டு கைகளில் துப்பாக்கியுடன் போகின்ற இராணுவத்தினரின் மத்தியில் குட்டித்தம்பி கரப்பில் அடைபட்ட கோழிக்குஞ்சினைப் போல நடந்து சென்று கொண்டிருந்ததை என்னால் மறக்க முடியவில்லை. வீடு சென்று சேர்ந்த பின்னரும் அந்த நினைவுகளால் அகல முடியவில்லை. அன்றிரவு நித்திரையிலும் அது பெரும் தொந்தரவாக இருந்தது.

அடுத்த நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தபோது குட்டித்தம்பியை இராணுவத்தினர் விடுதலை செய்து விட்டார்கள் என்ற செய்தியை அம்மா சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. நானே விடுதலையானது போன்ற திருப்தி கிடைத்தது.

அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்காவது நாள் மானிப்பாய் மாத்திரமல்லாமல் பக்கத்து ஊர்களும் களேபரமானது. காலை வேளை பாண் வாங்குவதற்காக சந்தியடிக்குப்போன அப்பா வேகமாக வீட்டுக்குள் சைக்கிளைக் கொண்டு வந்து விட்டார். அம்மாவை அழைத்துச் செய்தியை சொன்னார்.

“மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள ஆர்மி செக் பொய்ண்டில் நிற்கிற ஆர்மிக்காரியைக் கூட்டிக்கொண்டு குட்டித்தம்பி ஓடிவிட்டானாம்”

எனக்கு மேளமும் மணிகளும் ஆரோகணித்துக் கொண்டு போகின்ற சத்தம் மண்டைக்குள் கேட்டது. கண்கள் சாதுவாக இருட்டிக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடத்துக்கு சீருடை அணிந்து கொண்டிருந்த நான் அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன்.

அன்று மாலை மதவடிச்சாமியார் தொடக்கம் குட்டித்தம்பியின் குடும்பத்தினர் அனைவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பிரதான முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

மானிப்பாய் மாத்திரமன்றி அருகிலுள்ள நகரங்களும் இராணுவத்தினரின் தேடுதலுக்கு உள்ளானது. வேலிகளை வெட்டிக் கொண்டு பெருந்தொகையான இராணுவத்தினர் எல்லா வீடுகளுக்கும் நுழைந்து குட்டித்தம்பியைப் பற்றி விசாரித்தனர். குட்டித்தம்பியின் தூரத்து சொந்தக்காரர்களும் சுற்றி வளைக்கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டார்கள். புலிகளிடம் தாங்கள் முகங்கொடுத்த ஆபத்தை விட குட்டித்தம்பி செய்த காரியம் முகத்திலடித்தது போலாகி விட்டது என்பது சுற்றி வளைப்புக்கு வந்த ஒவ்வொரு ஆர்மிக்காரனின் கண்களிலும் தெரிந்தது.

கைது செய்யப்பட்டு மானிப்பாய் முகாமில் கொண்டு போய் வைத்து விசாரிக்கப்பட்ட மதவடிச்சாமியார் ஆமிக்காரனிடம் – “எங்கட பெடியனில மாத்திரம் பிழையில்ல. இதில உங்கட பெட்டையும் சம்பத்தப்பட்டிருக்கிறாள்” – என்கின்ற ரீதியில் ஏதோ பஞ்சாமிருத நியாயம் பேசப் போன போது அவருக்குப் பச்சை மட்டையால் பயங்கர அடி விழுந்திருக்கிறது. இரண்டு நாட்களின் பின்னர் சாமியார் விடுவிக்கப்பட்டதை அறிந்து அப்பா பயந்து பயந்து அவரது வீட்டுக்குப் போய் பார்த்து விட்டு வந்தார். முதுகு முழுவதும் புக்கை கட்டியிருப்பதாகவும் கதிரையில் எழும்ப முடியாமலிருக்கிறார் என்றும் இரவு மெதுவான குரலில் அம்மாவிடம் அப்பா சொன்னது எனக்கு படுக்கையறை ஜன்னல் வழியாகக் கேட்டது.

தங்களில் கை வைத்தவர்களுக்கு இது தான் நடக்கும் என்பதை ஊர் மக்களுக்குக் காட்டுவதற்குத் தான் மதவடிச்சாமியாரை இராணுவம் விடுவித்ததே தவிர குட்டித்தம்பியின் குடும்பத்தினர் எவரையும் அவர்கள் விடுதலை செய்யவில்லை. எல்லோரையும் மானிப்பாய் முகாமிலிருந்து வேறு முகாமுக்கு மாற்றி விட்டார்கள் என்று ஊருக்குள் ஒரு தகவல் பரவியது.

இப்போது ஊரே தேடித் திரிந்து ஒருவாறு குட்டித்தம்பியைப் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அச்சத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டு திரிந்தது. பொழுது மங்கும் நேரத்தில் யார் வீட்டுக்கு முன்னால் வந்து இராணுவத்தின் வாகனம் நிற்கும் என்று தெரியாதளவுக்கு நகரின் பெருந்தெருக்கள் முதல் குச்சொழுங்கைகள் வரை அனைத்தும் கலக்கத்திலிருந்தன. குட்டித்தம்பியின் நண்பர்கள் உறவினர்கள் உட்பட கோயில் ஐயர் கூட முகாமுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால் எனக்கு மாத்திரம் குட்டித்தம்பி செய்த காரியத்தில் ஊராரும் இராணுவமும் சிந்திப்பது போன்று எந்தப் பயமும் இல்லாமல் அவன் மீது மிகப்பெரிய மதிப்பும் பொறாமையும் அன்பும் கரைபுரண்டு ஓடியது. எனக்குத் தெரிய குட்டித்தம்பியை கோயிலுக்குள் குறைந்தது ஐந்தாறு அக்காமார் கண்களாலேயே காதலித்துக் கொண்டு திரிந்தார்கள். கேணியடி, வைரவர் கோவில், இலுப்பமரம், மடப்பள்ளி கிணற்றடி என்று பல இடங்களில் குட்டித்தம்பியைப் பார்த்து நெளிந்து குழைந்து கொண்டு அவனுடன் பேசுவதற்கு வளைய வளைய வந்த அக்காமார் அனைவரையும் எனக்குத் தெரியும். அவர்கள் எல்லோரும் எந்த விதத்திலும் குறைகூறி விடமுடியாத மானிப்பாய் மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்த தேர்ந்தெடுத்த அழகிகள். அவர்களில் ஒருவர் என்னுடைய பள்ளிக்சுட ரீச்சர் வேறு.

அப்படிப்பட்ட குட்டித்தம்பி எல்லோரையும் தவிர்த்து விட்டு ஒரு ஆர்மிக்கார பொம்பிளையை கூட்டிக் கொண்டு ஓடியிருக்கிறான் என்றால் அவளை இவன் எவ்வளவு தூரம் விரும்பியிருக்க வேணும்? பின்விளைவுகளை தெரிந்து கொண்டும் அவளைக் கூட்டிக் கொண்டு ஓடுவதற்கு எவ்வளவு தெம்பு வேணும்.? உண்மையிலேயே அவன் ஆம்பிளை.

ஊரே குட்டித்தம்பியைத் தேடிக்கொண்டு திரிந்தாலும் எனக்கென்னவோ குட்டித்தம்பியை மாத்திரமல்லாமல் அந்த ஆமிக்கார அக்காவையும் பார்க்க வேணும் போலிருந்தது.

இரண்டு வாரங்களாக எந்தத் தகவலும் இல்லாமல் குட்டித்தம்பி ஓடிப்போன கதை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது. தெருக்களில் முன்பு போல ஆர்மி நடமாட்டம் குறைந்தது. சுற்றி வளைப்புக்களும் குறைந்தன. இரவில் நாய்கள் குரைப்பதை குறைத்திருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாயிற்கு கொண்டு வரப்பட்ட குட்டித்தம்பியின் குடும்பம் விடுவிக்கப்பட்டார்கள். ஆனாலும் மானிப்பாய் சந்தியிலும் அவ்வப்போது ரோந்து செல்லும் போதும் தென்படும் ஆர்மிக்காரர்கள் குட்டித்தம்பி குறித்து சிநேகமாக சிலரை மறித்து கேட்டுக்கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு உள்ளுக்குள் அடங்காத ஆத்திரம் இருப்பது தெரிந்தது.

ஒருநாள் பாடசாலை விட்டு வரும்போது வழியிலுள்ள விளாத்திக்குளத்துக்கு அருகாமையில் பெருந்தொகையானவர்கள் கூடி நின்று கொண்டிருந்தார்கள். நான் தூரத்தில் வரும்போதே பலர் தங்கள் சைக்கிளை வீதிக்கரையில் நிறுத்திவிட்டு குளக்கரைக்கு அண்மையாக உள்ள பற்றைக்குள் ஓடிப் போய் எட்டி எட்டி பார்த்துக் கொண்டு நின்றார்கள். சிலர் ஓட்டமும் நடையுமாக என்னைத் தாண்டியும் குளத்தடியை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களின் பின்னால் ஓடினேன்.

அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களின் கால்களை விலத்திக் கொண்டு உள்ளே நுழைந்து சென்று பார்த்த போது திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டேன். எனது உதடுகள் விறைத்து எச்சிலால் ஈரப்படுத்த முடியாமலிருந்தது. எந்த அங்கத்தையும் அசைக்க முடியாதபடி உறைந்து போயிருந்தேன்.

குட்டித்தம்பியின் சடலம் குப்புறக் கிடந்தது. கண்கள் திறந்தபடி முகம் இடப்பக்கம் திரும்பியிருந்தது. மேற்சட்டை இல்லை. காவடி எடுத்த போது குத்திய முள்ளுக்காயங்கள் அப்படியே இருந்தன. அதைத் தவிர உடம்பில் வேறு எந்தக் காயங்களையும் காணவில்லை. சடலத்தை இலையான் மொய்த்தபடியிருந்தது. கழுத்துப் பக்கம் வீங்கி பொங்கி பொக்களம் போலிருந்தது. சடலத்தின் கால்வாசிப் பகுதி பற்றைக்குள் மறைந்து கிடந்தது. கைகளில் ஒன்று உடம்புக்கு கீழேயும் மற்றையது தலைக்கு கீழேயும் நசிந்தபடி கிடந்தது.

குட்டித்தம்பியின் தாயார் அப்போது தான் மதவடிச்சாமியோருடன் குழறிக் கொண்டு குளத்தடியை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார். அவர்களுக்குப் பின்னால் அப்பாவும் சைக்கிளை கரையில் நிறுத்தி விட்டு வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. நான் பயத்தில் அப்பாவை நோக்கி ஓடினேன். எனக்கு பக்கத்தில் நின்றவர்கள் குட்டித்தம்பியின் தாயை நோக்கி –

“சொர்ணமக்கா……”  – என்று கத்திக்கொண்டு ஓட –

“என்ர அப்பு………….” – என்று குழறியபடி குட்டித்தம்பியின் தாயார் ஓடிவந்து பற்றைக்குள் விழுந்து குழறியழத் தொடங்கினார். மதவடிச்சாமியாரும் உரத்த குரலெடுத்து ஒப்பாரியிட்டார்.

அப்பா ஓடி வந்து எனது கைகளைப் பிடித்துக் கொண்டு வேகமாக சைக்கிளை நோக்கி நடந்தார்.

“பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டுக்கு நேரா வரவேணும்” – என்று மெதுவாக தழதழத்த குரலில் எனது காதுகளில் குனிந்து சொல்லியபடி என்னை வேகமாக சைக்கிளடிக்கு அழைத்துச் சென்றார். நான் கையை அப்பாவிடம் கொடுத்து விட்டு பின்னுக்குத் திரும்பி குட்டித்தம்பியின் சடலம் கிடந்த இடத்தையே பார்த்தபடி போய்க் கொண்டிருந்தேன். அப்பாவின் சைக்கிள் லோட்டன் வீதியை தாண்டும் போது பெருந்தொகையான ஆர்மிக்காரர்கள் வீதியின் இருமருங்கிலும் நடந்து போய்க் கொண்டிருக்க நடுவில் பெரிய இராணுவ வாகனம் ஒன்று மிக மெதுவாக அவர்களுடன் ஆமை போல அசைந்து கொண்டு விளாத்திக்குளத்தடி ஒழுங்கைக்குள் திரும்பியது.

2

கொழும்பு வெள்ளவத்தை விகாரை வீதிக்கு அருகாமையிலிருந்த அடுக்குமாடி ஹோட்டலில் வைத்து அன்று மதியம் என்னைக் கைது செய்தார்கள்.

“பொலிஸ் பதிவு இல்லாமல் கொழும்பில் தங்கியிருந்தது குற்றம்” – என்று காக்கியில் வந்திருந்த ஐவரில் ஒருவர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னிடம் கூறினார். அதை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஓரளவுக்கு புரிந்து கொண்டேன். தங்களுடன் பொலீஸ் நிலையத்துக்கு வருமாறு அவர்கள் கூறி முடிக்கும் முன்னரே – அதுவரை எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்த – அம்மா குழறத் தொடங்கினார். எனக்கு உள்ளுக்குள் பயமிருந்தாலும் இயன்றளவு வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேற்றுடையை அணிந்து கொண்டேன். கைது செய்ய வந்த ஐவரோடும் ஹோட்டலின் வாசலை நோக்கிச் சென்றேன்.

வியர்த்து வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்டேன். ஐந்து காக்கியுடனும் நான் முன்னே நடக்க அன்று காலை எனக்காக வாங்கி வந்த இட்லிப் பொதியையும் எடுத்துக் கொண்டு அம்மா எனக்குப் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். எம் வாழ்வில் நடைபெறும் எந்தக் காரியம் பிசகினாலும் அதற்கு மாற்றுத்திட்டம் ஒன்றை உடனடியாக மூளையிலிருந்து உருவியெடுத்து விடலாம். ஆனால் அந்தக் கணத்தில் எனக்கோ அம்மாவுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. எனக்கென்னவோ அப்போதைக்கு அந்த இட்லிப் பொதியை வாங்கி ஒரு வெட்டு வெட்டினால் என்ன என்று இருந்தது.

என்னை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துப் போவதாக வாசலில் நின்று கொண்டிருந்த ஹோட்டல் மனேஜரிடம் சொன்னார்கள்.

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது மங்களா பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாக இரண்டு இளைஞர்கள் – என் வயதொத்த தோற்றத்தவர்கள் – எமக்கு எதிராக வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து காக்கிகள் சமேதராக – நடுவில் – நான் வந்து கொண்டிருந்த கோலம் என்ன பதற்றத்தை ஏற்படுத்தியதோ தெரியவில்லை. திடீரென்று அருகிலிருந்த செருப்பு தைப்பவருக்கு முன்னால் குந்தியிருந்து தாங்கள் அணிந்து வந்த செருப்பை தைப்பதற்குக் கொடுத்து விட்டு எங்கள் ஆறு பேரிடமிருந்தும் முற்றுமுழுதாக தங்களை மறைத்துக் கொள்ளும் பாவனையிலிருந்தார்கள்.

அவர்கள் நடந்து வந்த விதமும் பொலீஸைக் கண்டதும் உடனடியாக தப்பியோட முடியாமல் குந்தியிருந்து செருப்பைத் தைக்கக் கொடுத்த வேகமும் அவர்களுக்கு வேண்டுமானால் சாதுரியமான காரியமாக இருந்திருக்கலாம். ஆனால் அதனைப் பார்த்த எனக்கே பயங்கர சந்தேகமாக இருந்தது. காக்கிகளுக்கு எப்படியிருந்திருக்கும்?

நேரே போய் தோளில் தட்டி மூவரையும் எழுப்பி “பொலீஸ் பதிவு இருக்கிறதா” என்று கேட்டார்கள்.

இப்போது என்னோடு நடப்பதற்கு மேலும் இருவர் துணை.

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்ததும் ‘பெல்ட்’ முதல் சகல தஸ்தாவேஜூக்களையும் களைந்து ஒரு லாச்சியில் போட்டு வைத்தார்கள். வெள்ளவத்தை மக்கள் எல்லோரும் ஒன்றாக ‘ஆய்’ போய் விட்டு கழுவாமல் விட்ட மலசலக்கூடம் ஒன்று எப்படி நாறுமோ அப்படியொரு கழிவறையுடன் கூடிய கூண்டு. அதற்குள் போயிருக்கச் சொன்னார்கள். ‘பெல்ட்’ இல்லாத பாண்ட்ஸ்’ பயங்கர லூஸாகக் கிடந்தது. ஒருகையால் மூக்கையும் மறுகையால் பாண்ட்ஸையும் இழுத்துக் கொண்டு அந்தக் கூண்டின் ஒரு மூலையில் போய் நின்று கொண்டேன்.

இரண்டு மூன்று மணிநேரத்தில் கூண்டைத் திறந்து என்னை விசாரணைக்கென்று கூறி அழைத்துச் சென்ற காக்கி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் பின்பாக உள்ள அலுவலகத்துக்குள் கொண்டு போய் இருத்தினார்.

அங்கு என்னை விசாரிப்பதற்கென்று சிவில் உடையில் பேப்பருடன் ஒருவர் காத்திருந்தார். அந்த உருவம் என்னைப் பார்த்து ‘வணக்கம்’ சொன்னவுடன் அதுவரை பொத்திவைத்திருந்த பயம் அனைத்தும் நெஞ்சுக்குள் ‘குபீர்’ என்று பாய்ந்தது. அந்தக் காலப்பகுதியில் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் நிலைகொண்டிருந்த தமிழ் அதிகாரி ஒருவன் தமிழ் இளைஞர்களை பிடித்து வந்து உரித்தெடுப்பானாம் என்று யாழ்ப்பாணத்திலிருக்கும் போதே கேள்விப்பட்டிருக்கிறோம்.

அவருக்கு பக்கத்தில் சீருடையில் ஒரு பெண் நான் சொல்வதை தட்டச்சு செய்வதற்கு ஆயத்தமாக இருந்து கொண்டிருந்தாள்.

அவளது உருவம் நிச்சயமாக பொலீஸ் தொழிலுக்கு ஏற்றதில்லை என்பது அவளது உடல் முழுவதிலும் தெரிந்தது. அந்த இடத்தில் எனது பதற்றத்தை ரசிப்பது போல அவளது கண்கள் என்னில் எதையோ தேடியது. எனக்கு அந்தச் சூழ்நிலையில் பரவியிருந்த பயத்திலும் கூட அவளது பார்வை வித்தியாசமானது என்பதை மனம் உணர்த்தியது. உரிக்கப் போகும் அதிகாரியினால் எனக்குள் இறங்கவிருந்த அச்சம் அவள் பார்வையினால் சாதுவாக வெளியேறிக் கொண்டிருந்தது. அளவெடுத்து தைத்து விட்டது போல கண் இமைகள். ஒப்பனையே இல்லாத முகம். காதணி கூட அணியாத அலங்காரமற்ற எடுப்பான தோற்றம் என்று அழகின் எல்லா கணிதங்களும் அந்தக் காக்கிச் சீருடைக்குள் நேர்த்தியாக அமிழ்ந்து ததும்பிக்கொண்டிருந்தன. எதையோ வாசித்துக் கொண்டிருந்த உதடுகளின் கீழ்ப்பாதி எந்தச் சுருக்கங்களும் இல்லாமல் இறங்கி இறங்கி ஏறியது. காதடியில் சாதுவாக இறங்கிய வியர்வை கழுத்தை நோக்கிச் சென்று இடையில் காய்ந்து போயிருந்தது.

சட்டென்று நினைவுகளை குழப்பிக் கொண்டு அதிகாரியைப் பார்த்த போது அவர் தெய்வாதீனமாக ஏதோ ஒரு கோப்புக்குள் தலையை விட்டு துளாவிக் கொண்டிருந்தார். பிறகு நான் பிறந்த நாளிலிருந்து அன்று வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு வந்த கணம் வரை எனது மொத்த வரலாறையும் கேட்டார். அவள் அதனை வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்தாள். எனது இதயம் பயத்துக்கும் பக்திக்கும் இடையில் வேகமாக துடித்தவாறு அந்தத் தட்டச்சு சத்தத்துக்கு சுருதி சேர்த்துத் துள்ளியது.

பிறகு அவர் –

“சரி. அஞ்சு இயக்கப்பாட்டு சொல்லு” – என்றார்.

“இயக்கப்பாட்டு……..” – என்று இழுக்க –

“டேய்! அங்க அவங்கள் போடுறது இஞ்ச கேக்குது. என்ன நடிக்கிறாய். சொல்லு…..ம்”

“இந்த மண் எங்களின் சொந்த மண்”

“ம்”

“எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம்”

“ம்ஹ்ம்…”

“கடலதை நாங்கள் வெல்லுவோம்”

“வேற”

“குயிலே பாடு” – என்று ஒருவாறு அவன் கேட்ட அஞ்சுக்கு கூடாமலும் குறையாமலும் சொல்லி முடித்தேன். ஆனால், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” – என்ற மாதிரியான – அவனை சினப்படுத்தும் – பாட்டுக்களை மாத்திரம் சொல்வதில்லை என்பதில் வலு அவதானமாக நடந்து கொண்டதாக கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

திரும்பவும் கூண்டில் கொண்டு வந்து அடைத்து விட்டு அடுத்தவனை அழைத்துச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் அவள் எனது கூண்டைத் தாண்டிப் போவதைக் கண்டேன். அலுவலகத்திலிருந்த லாச்சியை திறந்து ஏதோ ஒரு கோப்பை எடுத்துப்பார்த்து விட்டு அந்தக் கோப்பின் இரண்டு மட்டைகளின் இடையால் என்னைப் பார்த்தாள். நான் அவ்வளவு நேரமும் அவளையே பார்த்துக் கொண்டிந்திருப்பேன் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ந்து போனவளாக பார்வையை எங்கையோ திருப்ப எத்தனித்தாள். அதற்குள் சாதுவாக சிரித்தேன். ஆனால் அதனை பார்ப்பதற்கு முன்னரே கீழே குனிந்து விட்டாள். பிறகு அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.

அன்று மாலைக்கிடையில் எனது உறவினர்கள் ஏதேதோ எல்லாம் செய்ய என்னை விடுதலை செய்ய பொலிஸ் இணங்கி விட்டதாக அறிந்தேன். மாலை ஆறரை ஏழு மணியிருக்கும். என்னை கூண்டுக்குள்ளிருந்து வெளியில் அழைத்து வந்து விடுவிப்பதாக கூறினார்கள்.

பொலீஸ் நிலையத்துக்கு வெளியே அழுது கொண்டு நின்ற அம்மா நான் வெளியே போனவுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டார். நான் அம்மாவை அணைத்தபடி பொலீஸ் நிலையத்தை திரும்பிப் பார்த்தேன். அவள் உள் ஜன்னலடியில் நின்றுகொண்டு என்னைப் பார்த்தவாறிருந்தாள்.

3

“உனக்கு எத்தனை தடவை இந்த வாகனத்தில் இஞ்ச வர வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்”

கோபமாக கேட்டு முடிக்கும் முன்னரே வாசலில் நின்று கொண்டிருந்த எனது ரீசேர்ட் கொலர் இரண்டையும் ஒரு கையினால் கொத்தாகப் பிடித்து இழுத்து வைத்து முத்தமிட்டாள். அதன்பிறகு எனது கொலரிலேயே தனது உதடுகளை துடைத்தாள்.

எனக்கோ பரபரப்பு தீராமல் வாசலில் நின்ற பொலீஸ் வாகனத்தை எட்டிப் பார்த்தேன். கீழ் வீட்டிலிருக்கும் ஜயரட்ணவின் நான்கு வயது பெடியன் வாகனத்தின் டயரில் கையில் தடியொன்றை வைத்து ஏதோ கீறி விளையாடிக் கொண்டிருந்தான்.

மழை சாதுவாக பெய்து ஓய்ந்திருந்தது. வெளியில் வாகனப் போக்குவரத்து சத்தம் அப்படியே தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது. மொட்டை மாடியில் குளிர்காற்று நன்றாகவே அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

அவளது முடி காற்றுக்கு ஏற்றவாறு முகத்துக்கு முன்பாக வந்து கும்மியடிக்க அதை அவள் கற்றையாக எடுத்து மேலே விட்டபடி எனது முகத்தையே பார்த்துக் கொண்டு வாசலில் சப்பாத்துக்களை கழற்றி வைத்துவிட்டு அறைக்குள் வந்தாள்.

“இதெல்லாம் பொலீஸ் நிலையத்துக்குள்ளேயே வைத்து சைட் அடிப்பதற்கு முதல் யோசித்திருக்க வேணும். அதுவும் பக்கத்தில ஒரு மகா என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டை வைத்துக் கொண்டு சைட் அடிக்கும் போது இன்னும் தெளிவாக யோசிச்சிருக்க வேணும். இல்லாட்டிக் கூட பரவாயில்லை. மயூராபதி அம்மன் கோவிலில வச்சு சார் பிறகு எதுக்கு லவ் பண்ண கேட்டீங்களாம்”

திரும்பவும் அருகில் வந்து உதடுகளில் அழுத்தி முத்தமிட்டுக் கொண்டு மேசையிலிருந்த கேத்தலில் தண்ணீர் இருக்கிறதா என்று தூக்கிப் பார்த்துவிட்டு ஆழியைத் தட்டிவிட்டாள்.

“ஜெயா நான்காவது தடவையாக அந்த பொலிஸ் இன்ரலிஜன்ட்காரன் என்னட்ட வந்து பேசியிருக்கிறான். எனக்கும் இயக்கத்துக்கும் தொடர்பிருக்குதா எண்டு திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறான். உனக்கே தெரியும், அவங்களுக்கு வடிவா தெரியும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை எண்டு. எனக்குள்ளால உன்னை நோட்டம் விடத்தான் அவங்கள் திரும்பத் திரும்ப விசாரிக்கிறாங்கள். அப்படியிருக்கும் போது நாங்கள் ஏன் அவங்களுக்கு பிடி குடுக்கிற மாதிரி இப்பிடியிருக்க வேணும். உனக்கு நான் சொல்லிறது விளங்குதா இல்ல விளங்காத மாதிரி நடிக்கிறியா?…..”

சாதுவான சினத்தோடு நான் கேட்டு முடிக்கும் முன்னரே –

“டேய் சிறிலங்கா பொலீஸில காதலிக்கிறது ஒண்டும் தேசத் துரோகமில்லை. அங்க இருக்கிற அத்தனை பேரும் லவ்-மரேஜ் தான். அவளவை அங்க இருக்கிற பொலீஸ லவ் பண்ணி கட்டுறாளவை. நான் பொலீஸ் பிடிச்சுக் கொண்டு வந்தவனை லவ் – பண்ணி கட்டப் போறன். அவ்வளவு தான். நீ ஒண்டுக்கும் பயந்து சாகாதை. எத்தனையோ தரம் சொல்லீட்டன். எங்கட வீட்டில எங்கட விஷயம் தெரியும். நீ உன்ர வீட்டில் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி ஆக வேண்டியதைப் பார்”

எனக்கு எந்தச் சமாதானமும் மனதுக்கு ஒத்துவரவில்லை.

“சிங்களத்திய கட்டப்போறியா எண்டு உன்ர அம்மா கத்துறதுக்கு முதல் வெள்ளவத்தை பொலீஸ்காரியம்மா நல்லா தமிழ் கதைப்பாள் என்று முதலே சொல்லிப் போடடா” –

தேனீர் போடுகின்ற கரண்டியை ஆட்டிக் கொண்டே குறும்பாகச் சிரித்தாள். அந்த உதடுகள் பேசிய உபநிடதம் நெஞ்சுக்குள் உற்சவம் செய்தது.

அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு ஜெயாவுடன் சென்று யூ.எஸ். ஹோட்டலில் இருவரும் தங்கினோம். லீவு எடுத்துக் கொண்டு என்னுடன் பயங்கர சந்தோசத்துடன் வந்திருந்தாள். நான் வீட்டுக்கு எந்தத் தகவலும் கொடுக்கவில்லை. ஹோட்டலில் இரண்டு நாள் தங்கிவிட்டு ஆறுதலாக வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று திட்டமிட்டு அவளை வரும் போது இரண்டு நல்ல சேலைகளை எடுத்துவரச் சொல்லியிருந்தேன். அம்மாவின் இரண்டு சேலைகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்று சொல்லி அவற்றை அவள் எடுத்து வந்திருந்தாள்.

அன்று புதன்கிழமை மாலை அவளைச் சேலையில் தயாராகும்படி கூறியிருந்தேன்.

அரை மணிநேரத்தில் அலங்காரச் சிலை போல வந்து நின்றாள்.

“பூவெல்லாம் வைத்து கற்பூரச்சட்டி ஒன்றையும் எடுத்துக் கொண்டு வரவா” – என்றாள்.

அப்போது தான் பொறி தட்டியது.

வீட்டுக்குப் போவதற்கு முன்னர் மானிப்பாய் காளி கோவிலடிக்கு போய் கும்பிட்டு விட்டுப் போகலாம் என்று வாடகைக்கு எடுத்த வாகனத்தை நேரே காளி கோவிலடிக்கு விட்டேன். அவள் மிகுந்த மகிழ்ச்சியில் கார் ஜன்னல் கண்ணாடியை சற்று கீழே இறக்கி விட்டு உள்ளே வந்த காற்றில் முடியைப் பறக்கவிட்ட படி வெளிக்காட்சிகளை பார்த்துப் பரவசமடைந்தபடி வந்தாள்.

காளி கோவிலடியில் காரை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே கும்பிடுவதற்கு இறங்கிப் போனோம். நான் வெளியில் நின்று கண்களை மூடிக் கும்பிட்டபடி நின்ற போது அவள் நேரே உள்ளே சென்றாள். சடைத்த ஆலமரத்தின் காற்று அந்தப் பகுதியில் சாதுவானதொரு குளிர்மையைத் தந்து கொண்டிருந்தது. அண்ணாந்து மரத்தின் தடித்த கிளைகளைப் பார்த்தேன். நெருக்கமான இலைகளின் வழியாக சூரிய ஒளி உள்ளே இறங்கியபடியிருந்தது.

கோயிலின் உள்ளே நான் ஏறிச்செல்ல ஜெயா உள்ளங்கையில் திருநீற்றை அள்ளியபடி எனக்கு பூசி விடுவதற்கு குடுகுடுவென்று வேகமாக நடந்து வந்தாள். அப்பா – அம்மாவைப் பார்ப்பதற்கு அவள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் அதற்கான நேரம் நெருங்கியிருப்பதால் அவள் கொண்டுள்ள பரவசத்தையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

திருநீறை என் நெற்றியில் அளவாகப் பூசிவிட்டாள். கண்களுக்கு மேல் கையைக் குடை போல பிடித்து திருநீற்றை சாதுவாக ஊதி விட்டாள். அதன்பிறகு வெளி மண்டபத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்டேன். இந்த நல்ல காரியம் நினைத்தது போல நடந்திட வேண்டும் என்று காளியிடம் மன்றாட்டமாக கேட்டுக்கொண்டேன்.

வேண்டுதலை முடித்துக் கொண்டு எழுந்த போது கண்ட காட்சியால் திடுக்குற்றுப் போனேன்.

மதவடிச்சாமியார் எனக்கு முன்பாகவிருந்த கோயில் தூணடியில் நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நன்றாக வயது போயிருந்தது. மேலாடை அணியாமல் அதே சிவப்பு வேட்டியிலிருந்தார். தீவெட்டி மட்டும் தான் அருகில் இல்லையே தவிர அவரது கண்களில் மிகப்பெரியதொரு அகோரம் தெரிந்தது. முதுகு சாதுவாக கூனியிருந்தது. கீழ் இமைகள் துடித்தபடியிருந்தது. இடது கை நடுங்கிக் கொண்டிருந்தது.

“டேய் என்னடா அந்தக் கிழவனை பார்த்துக் கொண்டு நிக்கிறாய்” – என்று எனது கன்னத்தைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பினாள் ஜெயா.

“போவம் வா” – என்று கூறியபடி என் கையைப் பிடித்துக் கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

அவளோடு நிற்பதால் உடனடியாக மதவடிச்சாமியோடு எனக்கு பேசுவதற்கு எதுவுமே வாயில் வரவில்லை. ஆறுதலாக பேசலாமே என்று அவரைத் தெரியாதது போலவே அவளோடு காரை நோக்கி நடந்தேன்.

மதவடிச்சாமி நேரே கோயிலின் உட்பிரகாரத்துக்குள் போய் அங்கிருந்த கொத்து மணியை வேகமாக உலுப்பினார். மிக வேகமாக உலுப்பிக் கொண்டேயிருந்தார். ‘யாருமில்லாத கோவிலில் பூசையும் நடவாத இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு சத்தமாக இந்தச் சாமி மணியைப் போட்டு ஆட்டுது’ – என்று எண்ணியவாறே நான் காருக்குள் ஏறினேன்.

அந்நேரம் அந்தக் கோவில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் அந்த மணிச் சத்தத்தில் அதிர்ந்தபடியிருந்தது.