கலையும் பித்தும்

by போகன் சங்கர்
0 comment

சமீபத்தில் சிற்பி தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை‘ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அறுபதுகளில் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. தமிழ் வெளியில் முதன்முதலாக ஓவியம், சிற்பம் போன்றவற்றில் ஈடுபடுகின்ற நுண்கலைஞர்களின் வாழ்க்கை குறித்தான திறப்பு என்று சொல்லலாம். காலச்சுவடு தற்போது இதை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக, கலைஞர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கை உடையவர்கள் அல்லது மனநிலை சிதறியவர்கள் என்பது போன்ற மனப்பதிவு நம்மிடம் உண்டு. தனபாலின் சுயசரிதையைப் படிக்கும் போது இந்த மனப்பதிவிற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்குக் கிடைக்காது. அவர் கலைஞர் தான் எனினும் சமூகத்தின் எல்லைகளைத் தாண்டி எங்கும் சென்றுவிட்டதாகத் தோன்றவில்லை. ஆனால், நமது சித்திரங்களுக்கு இயைந்து கொடுக்கிற இன்னொரு நபர் அதில் வருகிறார்.

ஓவியர் ராமனுஜம் பற்றி அவருடன் சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றவர்கள், பழகியவர்கள் நிறைய சித்திரங்களை அளித்திருக்கிறார்கள். சிற்பி தனபாலின் புத்தகம் தவிர, எழுத்தாளர் சி. மோகன் ‘விந்தை மனிதனின் உருவச் சித்திரம்’ (நற்றிணை பதிப்பகம்) என்று அவர் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். இது தவிர, கேரளத்தின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான கே.எம்.வாசுதேவன் நம்பூதிரியின் தன்வரலாற்றுப் புத்தகத்தில் ராமானுஜன் பற்றிய அவதானங்கள் உள்ளன. ஆர்டிஸ்ட் நம்பூதிரியின் இந்தப் புத்தகம் அந்தக் காலத்தின் கலைச் சூழல் குறித்த முக்கியமான ஆவணங்களுள் ஒன்றாகும். (Sketches, The Memoir of an Artist, Penguin Books)

சற்றே வழி தப்பியவர்களாகக் கருதப்படும் தங்களிடையே கூட ராமனுஜம் புரிந்துகொள்ள முடியாத மனிதராக இருந்தார் என்று நம்பூதிரி கூறுகிறார். ராமானுஜத்துக்கு ஓவியத்தைத் தவிர வேறு திறமைகளே இல்லை. அவரால் சரியாக உடை உடுத்த முடியவில்லை. தன்னைப் பேணிக் கொள்ள முடியவில்லை. பிறருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் ஊமையில்லை. ஆனால் திக்குவாய் இருந்தது. பிறருடன் பேசும் போது கூட கையில் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக் கொண்டு சித்திரங்கள் மூலம் பேசுவார். அவர் வாயிலிருந்து எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. அவர் கோமாளியா அப்படி நடிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. தொடர்ச்சியாக சார்மினார் சிகரெட்டுகளைப் பிடிக்கவும் குடிக்கவும் செய்தார். அவருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களின் பழக்கமும் இருந்திருக்கலாம். அவர் தொடர்ச்சியாக கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளானார். ஆனால், அவருக்கு ஒரு பெண் துணை வேண்டுமென்ற ஆவல் இருந்தது. ஒருமுறை கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அலைகளைப் பார்த்து தன்னை அணைக்க வரும் பெண்கள் என்று சொன்னதாக நம்பூதிரி எழுதுகிறார்.

ஆனால் நிஜத்தில் அவரை அணைக்க எந்த ஒரு பெண்ணும் முன்வரவில்லை. சி. மோகனின் ‘விந்தை மனிதனின் உருவச் சித்திரம்‘ நூல் அவரது வாழ்க்கையை ஒரு நாவல் வடிவத்தில் விவரிக்கிறது. ஒருவகையில், அது ஓவியர் பால் கோகினின் வாழ்க்கையை ஒற்றி சாமர்செட்மாம் எழுதிய ‘The Moon and Sixpence’ நாவலைப் போன்ற ஒன்றாகும்.

அதில் இங்கிலாந்தில் மத்திய வயது வரை ஓவியம், இலக்கியம் போன்ற கலைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாது ஒரு மத்தியவர்க்க ஸ்டாக் புரோக்கராக இருந்த சார்லஸ் ஸ்டிரைக்லேண்ட் (Charles Strickland) திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாரிசுக்குப் போய் ஒரு ஓவியராக வாழ்ந்ததையும் அங்கிருந்த ‘டம்பச் சந்தை‘ மனநிலை பிடிக்காமல் தாஹிதி தீவுகளுக்குச் சென்று ஒரு காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து தொழுநோய் வந்து விரல்கள் ஒவ்வொன்றாய் உதிரும் வரை ஓவியம் வரைந்து மறைந்ததை விவரிக்கும் நாவல் அது.

அந்தக் காலக்கட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நாவல் அது. சிறுவயதில் அதைப் படித்துவிட்டு நான் அடைந்த கிளர்ச்சி இன்னமும் உண்டு. “கலை என்பது ஒருவனின் ஆன்மாவில் ஊறியிருக்கிற ஒரு நிரந்தர அழைப்பு” என்று அதைப் படிக்கையில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதைத் தள்ளிப் போடலாம். ஆனால் அது தன் இறுதி அழைப்பை விடுக்கும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டுச் சென்றாக வேண்டும். ராமானுஜத்தை சார்லஸ் ஸ்டிரைக்லாண்ட் என்றே அவரை இறுதி வரை போஷித்த கே.சி.எஸ்.பணிக்கர் அழைத்தார் என்று சொல்கிறார்கள். அதாவது பால் கோகின் என்று.

ஆனால் பால் கோகினின் வாழ்க்கை சாமர்செட் நாவலில் ஒரு வகைமாதிரியாகவே காட்டப்பட்டிருக்கிறது. அவரது வாழ்க்கையை மிகக் கவனமாகப் பின்பற்றி எழுதப்பட்ட நாவல் என்றால் Mario Vargas Llosa எழுதிய ‘The Way to Paradise’ நாவலைத் தான் சொல்ல வேண்டும். இதில் பால் கோகின் கோகினாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பால் கோகினுக்கு அவரது பாட்டி வழியாக பெரு நாட்டுடன் ஒரு தொடர்புண்டு. அவரது பாட்டியின் பெயர் Flora Tristan. ப்ளோரா தொழிலாளர் நலம் மற்றும் பெண்ணிய விடுதலை குறித்து அந்தக் காலத்திலேயே சிந்தித்து அதற்காக ஐரோப்பாவிலும் பெருவிலும் அலைந்து திரிந்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்த செயல்பாட்டாளர்களில் ஒருவராவார்.

ஃப்ளோரா ட்ரிஸ்டன்

இந்த நாவல் பாட்டி பேரன் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி மாற்றிச் சொல்கிறது போல் பின்னப்பட்டிருக்கிறது. இருவரும் நேர் எதிரான ஆளுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி ஒரு பெண்ணியவாதி எனில் கோகின் பெண்களை தசைப் பாண்டங்களாக பாவித்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. பால் கோகினின் வரலாறு அவரது ஓவியங்கள், வரையப்பட்ட பின்னணிகளின் மூலமாக நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. பால் கோகினுக்கு ஏற்பட்டது சிபிலிஸ் என்கிற பால்நோய். அது முற்றித்தான் அவர் இறந்தார் என்று நாவல் விவரிகிறது. தூய அல்லது கட்டுப்பாடற்ற கலையை நாடிச் செல்கையில் அவர் தூய கட்டுப்பாடற்ற காமத்தையும் அடைவார் என்பது பால் கோகினின் கருத்தாக இருந்தது. (பால் கோகினுக்கு இருந்த நோய் சிபிலிஸ் அல்ல என்று இப்போது சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்)

இது கலைஞர்கள் அதிகக் காமமுடையவர்களா என்கிற கேள்வியை எழுப்புகிறது. காமமும் கலையும் ஒரே ஊற்றிலிருந்து தான் எழுகின்றனவா? கலை ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்டதா? சிபிலிசினால் துன்புற்ற இன்னொரு பெரிய ஆளுமை மாப்பசான். நீட்ஷேவின் மன உடைவு சிபிலிசினால் ஏற்பட்டதே.

தொல்ஸ்தோய்க்கும் இள வயதில் சிபிலிஸ் இருந்து குணமடைந்ததாகவும் பிறகு அவர் கடும் ஒழுக்கவாதியாக மாறியதற்கு அதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மாப்பசானின் புகழ்பெற்ற ‘Horla’ கதை சிபிலிஸ் அவர் மூளைக்கு ஏறிய பிறகு எழுதப்பட்டது என்கிறார்கள். மிகப் பயங்கரமான கதை அது. அதில் அவரது மரணம் பற்றிய ஒரு சூசகம் இருந்தது. ஒருவகையில் அந்தக் கதையே அவரது நோய் பற்றி அவர் மூளை அவருக்குக் கொடுத்த எச்சரிக்கை தான். மாப்பசான் தனது கடைசி நாட்களில் நாய்கள் போல ஊளையிட்டு இறந்து போனார்.

ஃபிரஞ்சு வியாதி என்று பொதுவாக அழைக்கப்பட்ட இந்த வியாதி அறிவுஜீவிகளின் வியாதி என்றும் ஒருகட்டத்தில் கருதப்பட்டது. அவர்களது சுதந்திர சிந்தனையின் பெருமைமிக்க அடையாளமாக. லோசாவின் நாவல் பால் கோகினின் நோய் அவரது சிந்தனையை, உடலை, கலையை எப்படி பாதித்தது என்று கோடிட்டுக் காட்டுகிறது. சிபிலிஸ் அன்றைய சூழலில் கலாச்சரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் படிக்கச் சிறந்த நூல் ‘Pox: Genius, Madness and the Mysteries of Syphilis’ என்பதாகும்.

ராமானுஜத்தின் ஓவியம்

தமிழில் இது போன்ற கட்டுப்பாடற்றதொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் ஜி.நாகராஜன். ஆனால் ராமானுஜம் அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் என்று சொல்ல முடியாது. பாரிஸில் கலைஞர்களிடையே இருந்ததுக்கு மாறாக இங்கு நிலவியது கடும் பாலியல் வறட்சி. ஒரு மனிதனுக்கு இயல்பாகத் தேவைப்படும் உடல்ரீதியான வடிகால்கள் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. சி. மோகனின் நாவலில் அவர் பெண்துணைக்காக ஏங்கியதைப் பதிவு செய்திருக்கிறார். அவர் சரோஜாதேவி நூல்களை வாசிப்பவராக இருந்தார். ஆனால் பெண்களை அணுக முடியாதவராகவும் இருந்தார். அவர் ஒருகட்டத்தில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுக்கிறார். அதைப் பார்த்துவிட்டு சோழ மண்டலத்தில், கலைஞர்களுக்காக பணிக்கர் அமைத்த கிராமத்தில் அவரைத் தேடி வரும் ஒரு பெண்ணின் தந்தை அவரது தோற்றம் கண்டு அதிர்ச்சியடைகிறார். பிராமணராக பிறந்திருந்தாலும் குடிப்பவராகவும் மாட்டுக்கறி உண்பவராகவும் மிக அலங்கோலமான தோற்றமும் திக்கித் திக்கிப் பேசுகிறவருமான ராமானுஜம் தான் அவருக்குத் தெரிந்தாரே தவிர ராமானுஜன் என்கிற ஓவியனை அவரால் பார்க்க முடியவில்லை. அவர் தனது பெண்ணைத் தர மறுத்ததோடு மிகக் கடுமையாக அவரை வசைபாடி விட்டுச் செல்கிறார். அதன் பிறகே ராமானுஜம் மனம் உடைந்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து இறந்து போகிறார். வாழும் போது அவரால் அச்சமின்றி தொடர்புகொள்ள முடிந்த அவரது ஒரே ஒரு தோழனான நாயும் அவருடன் இறந்து போகிறது.

ராமானுஜத்துக்கு மனப்பிளவு நோய் இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த அவரது ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரையில் அவ்வாறு தான் எழுதியிருந்தார்கள். ராமானுஜத்தின் விழிப்புல உணர்வு மிகக் கூர்மையாக இருந்தது என்று நம்பூதிரி சொல்கிறார். அவரால் தனது கனவுகளை வரைய முடிந்தது. சர்ரியலிசம் போன்ற போக்குகள், அலைகள் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது எனச் சொல்ல முடியாது. கனவுகளை வரைவது அவருக்கு இயல்பிலேயே இருந்தது. ஒருவகையில் அவருக்கும் கனவுக்கும் விழிப்புக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. இதை மனப்பிளவு நோய் என்று கருத வேண்டியதில்லை. அவர் சிறு வயதிலிருந்தே அப்படித் தான் இருந்தார். இன்றைய மருத்துவம் அவரை ‘high functioning autism’ உள்ள நபராகவோ அல்லது ‘Asperger syndrome’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவராகவோ வகைப்படுத்தக் கூடும். இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு துறையில் அளவுக்கதிகமான கவனம் செலுத்துகிறவர்களாகவும் மற்ற விஷயங்களில் சராசரி திறமை கூட இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் பிறருடன் பழகும் திறமைகள் அற்றவராக தொடர்புகொள்ள முடியாதவராகவும் இருப்பார்கள்.

மேதமைக்கும் கலைக்கும் பித்துக்கும் மனநலனுக்கும் உள்ள தொடர்பு நீண்டது. சர்ச்சைக்குரியது. சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள் மனநோய்களால் துன்புற்றிருக்கிறார்கள். வான்கோ புகழ்பெற்ற உதாரணம். கோகினின் மேதமையில் பித்துக்கும் பால்வினை நோய்க்கும் எவ்வளவு பங்கிருந்தது என்பது சர்ச்சைக்குரியது. இந்த வரிசையில் எனக்குப் பிரியமான ஓவியர் Louis Wain ஆவார்.

லூயிஸ் வெயின் அவரது பூனை ஓவியங்களுக்காகப் புகழ்பெற்றவர். அவர் பூனைகளை மட்டும் ஆயிரக்கணக்கான ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஓவியங்களில் மனிதர்களை வெளியே துரத்தி விட்டு பூனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அவர் பூனைகளைப் பல்வேறு மனித உணர்ச்சிகளுடன் வரைந்தார். அவரது பூனைகள் ஏறக்குறைய மனிதர்கள். பூனைகளை வரைய அவர் மனிதர்களைத் தான் மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ் கொண்டாடும் பூனை, மார்க்கெட்டுக்குப் போகும் பூனை, பூனைக் குட்டிகளுக்குப் பாடம் சொல்லித் தரும் பூனை..

பூனைகள் குறித்த லூயிஸ் வெயினின் மிகுபற்றுதலுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவரது சகோதரி நோய் வாய்ப்பட்டு இறந்த போது ஒரு பூனை தான் அவருக்கு ஒரே ஆறுதலாக இருந்தது என்றும் வெயினின் மனதில் அது ஆழமாகப் பதிந்தது என்றும் சொல்லப்படுகிறது. தாயாகவும் செவிலியாகவும் தோழியாகவும் ஒரு பூனை…

இன்னொரு காரணம் பூனைகள் குறித்த அவரது மிகுகவனமும் அவரது மனச்சிதைவு நோயும் பூனைகளிடமிருந்தே வந்திருக்கலாம் என்பதே. அதாவது பூனைகளின் வயிற்றிலிருக்கும் ஒரு கிருமி, பூனைகளின் கழிவுகளில் இருக்கும் ஒரு ஒட்டுண்ணி (Toxoplasma gondii) எலிகளிலும் மனிதர்களிலும் நடத்தை மாற்றங்களை உண்டுபண்ணுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்த ஒட்டுண்ணியால் தாக்கப்பட்ட எலிகள் பூனைகள் நடமாடும் இடங்களில் தன்னிச்சையாகச் சென்று நின்றன.! பூனைகளுக்கு இரையாகின. மனிதர்களில் இந்தக் கிருமியினால் தாக்கப்பட்ட ஆண்களின் டெஸ்டோடிரான் அளவு கூடி அவர்களை மிகுந்த கோபமும் காமமும் உடையவர்களாக மாற்றி விடுகிறது என்று இந்த ஆய்வுகள் சொல்கின்றன. அதே வேளை, பெண்களை இந்தக் கிருமி இன்னும் சற்று அமைதியானவர்களாக மாற்றி விடுகிறதாம். ஆனால் மனச்சோர்வையும் தற்கொலை எண்ணங்களையும் கூட்டி விடுகிறதாம்.

இவற்றை வாசிக்கையில் லூயிஸ் வெயினின் மூளைக்குள் புகுந்து கொண்டு ஆக்கிரமித்து பூனைகளாக வரைந்து கொண்டிருந்தது ஒரு பூனையாகவே இருக்கலாம்.

லூயிஸ் வெயினுக்குள் மாட்டிக்கொண்ட அந்தப் பூனை மீண்டும் ஒரு முழுப் பூனையாக மாற எடுத்துக்கொண்ட முயற்சிகளா அவரது ஓவியங்கள்?