நீண்ட நெடிய போரின் தொடக்கம் – அழகேசப் பாண்டியன்

0 comment

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து   நாடெங்கும் நடக்கும் போராட்டங்களின் தாக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த போதும், சில குறிப்பிடத்தக்க மாறுதல்களை உருவாக்கி இருக்கின்றன. திரில்லர் திரைப்படம் ஒன்றின் இறுதிக் காட்சியில் முடிச்சுகள் விறுவிறுவென அவிழ்வதைப் போலவும், அவிழ்ந்து கொண்டிருக்கும் போதே பார்வையாளன் தான் இருக்கும் அறை விஷ வாயுவால் நிரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்டு, வெளிக்காற்றை சுவாசிப்பதற்கு ஒப்பான பீதியும், நிம்மதியும் ஒன்றாய்க் கலந்த உணர்வு. இன்னும் பிழைத்திருக்கிறோம் என்கிற நிம்மதி, கூட்டுப் புரிதலின் வழியே உருவான சக குடிமக்கள் மீதான நம்பிக்கை, மக்கள் மனநிலையில் ஏற்பட்ட மாறுதல்கள், NRC-க்கு ஆதரவாக இருந்த மாநில அரசுகளின் நிலைப்பாட்டையும் மாற்றி இருக்கிறது.

இத்தகைய போராட்டங்களின் நீண்ட காலப் பலன் என்ன, எதுவரை செல்லும் என்பது போன்ற கேள்விகள் அவசியமானவை என்ற போதிலும், ஒரு அளவுக்கு மேல் அர்த்தமற்றவை. இந்தப் போராட்டங்கள் தன்னளவில் வரலாற்றுத்தன்மை வாய்ந்தவை. ஏனென்றால் பெரும் அரசியல் ஆளுமைகள் எவருமின்றி சாமானியர்கள் நீதியுணர்வாலும், சகோதரத்துவத்தாலும், மோடி அரசின் மீதான ஏமாற்றத்தாலும் பிணைக்கப்பட்டு போராடுகிறார்கள். இதுவரை வெளிப்பார்வையில் புலப்படாத இந்தியாவின் இணைப்புச் சக்தியாக இருக்கும் மதச்சார்பின்மைக்கு பிரிவினை காலக்கட்டத்திற்குப் பிறகு, முதன் முதலாக நாடளாவிய உருவம் கிடைத்திருக்கிறது.  போராட்டங்களின் வழியே அரசியல் மயப்படுத்தப்படும் தலைமுறை எத்தகைய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது என்பது இப்போதைக்கு தெளிவில்லாத போதும், இந்தியாவில் பாசிசத்திற்கெதிரான முதல் போர் இது என்றே வரலாறு பதிவு செய்யும்.

வெறுப்பும் அடக்குமுறையும் புதிதா என்ன? முந்தைய அடக்குமுறைகளில் இல்லாத எந்த அம்சம்  நம்மை இந்த நிலைக்கு தள்ளியது? இருவகையான வேறுபாடுகள் மேம்போக்கான பார்வையில் தென்படுகின்றன. முதலாவதாக, குடியுரிமைச் சட்டத்திருத்தம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சார்ந்த முன்னெடுப்புகளில், முந்தைய நடவடிக்கைகள் போல முகமூடிகள் எதுவும் இன்றி, வெறுப்பும் பாகுபாடும் நேரடித்தன்மையோடு செயல் வடிவம் கொள்கின்றன. இரண்டாவதாக, வெறுப்பை முன்னெடுத்துச் செல்ல இதுவரை பயன்படுத்தப்பட்ட உதிரி அமைப்புகள், குழுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டு, மையப்படுத்தப்பட்ட தலைமையின் நேரடி பார்வையில், அரசு எந்திரம் வழியாக, சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மையப்படுத்தலாலும், நேரடித்தன்மையாலும் (brazenness) வலுவான எதிர்ப்புக்கான அறம் மற்றும் நீதியுணர்வு சார்ந்த காரணங்களை மோடி அரசே போராட்டங்களுக்கு வழங்கி இருக்கிறது.

ராமச்சந்திர குஹா கைது

இதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களை முன்னெடுப்பவர்கள், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையின் பாதுகாவலர்களாகவும், போராட்டங்களை எதிர்க்கும் அரசு பிளவு சக்தியாகவும் பொதுப்பார்வையில் பதிந்து விட்டது. உண்மையும் இது தான் என்பதால், மோடி அரசிடம் அடக்குமுறைக்கான தார்மீக காரணங்கள் எதுவும் மீதம் இருக்கவில்லை. “துக்குடே துக்குடே கேங்” – இப்போது அரசும், அதைச் சார்ந்திருக்கும் பாசிச சக்திகளும் தான். அடுத்தடுத்து அரசால்  பரப்பப்படும் பொய்யுரைகளும், அரச பயங்கரவாதமும், சுய அழித்தொழிப்புக்கு ஆளாகி இருக்கும் நீதித்துறையும் போராட்டங்கள் தொடர்வதற்கான எரிபொருளை ஓயாது வழங்கி வருகின்றன.

மக்களிடையே ஏற்பட்ட பரவலான எதிர்ப்பின் காரணமாக தேர்தல் களத்திலும் அன்றாட கருத்தியல் தளங்களிலும் பாசிச சக்திகளுக்கு ஓரளவு பின்னடைவு என்ற போதிலும், பாசிசத்திற்கு எதிரான நீண்ட கால போராட்டங்கள், பாசிஸத்தின்  உட்கூறுகளாகிய வெறுப்பரசியலையும், கார்ப்பரேட் நல பொருளியல் கொள்கைகள் அல்லது நியோ-லிபரல் கொள்கைகள் என இரண்டு தரப்புகளை எதிர்கொள்ள வேண்டும். உலகம் முழுக்க பாசிஸத்தின் வடிவம் வேறுபட்ட போதிலும், இந்த இரு அடிப்படை அம்சங்களும் பொதுவாய் இருக்கின்றன. இந்தப் பொதுத்தன்மைக்கு காரணம் இரண்டு தரப்புக்கும் இடையேயான ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உறவு [1,2]. வெறுப்பு மற்றும் அடக்குமுறை அரசியல் தனக்குத் தேவைப்படும் பொருளாதார பலத்தை கார்ப்பரேட் அமைப்புகளிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது.

நியோ-லிபரல் கொள்கைகள் எப்போதுமே பொது மக்கள் மத்தியில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற முடியாது என்பதால், நியோ-லிபரல் கொள்கைகளை நிறைவேற்ற தேவையான முதல் (கேப்பிடல்), அனைத்தும் வெறுப்பரசியலில் பெரும் வெற்றிகள் வழியாகவே திரட்டப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணங்களாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். இரண்டு நடவடிக்கைகளும் பொருளாதார பலத்தையும், சேமிப்பையும் சாமானியனிடம் இருந்து பிடுங்கி கார்ப்பரேட் அமைப்புகளுக்கும், நிதி சந்தைக்கும் அளித்த நடவடிக்கைகள். தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கும் பங்குச்சந்தைக்கு தேவைப்படும் முதலீடு சாமானியனிடம் இருந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் வழியாக பெறப்பட்டது என்பதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

வெறுப்பரசியலும் கார்ப்பரேட் நல அரசியலும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், வெறுப்பரசியலை முன்னெடுக்க முடியாத சூழல் உருவாகும் போது, அது கார்ப்பரேட் நலனை அடிப்படையாகக் கொண்ட நியோ-லிபரல் கொள்கை முன்னெடுப்புகளையும் பாதிக்கிறது. வெறுப்பரசியலுக்கு எதிரான எதிர்ப்பு அலை மக்கள் மத்தியில் உருவாகும் பட்சத்தில், வெறுப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு நேரடியாக நியோ-லிபரல் முதலாளித்துவ கொள்கைகள் முன்னிலைபடுத்தப்படுமானால், ஏற்கனவே உருவாகி இருக்கும் மக்கள் எதிர்ப்பு நியோ லிபரல்  முதலாளித்துவ கொள்கைகளை நோக்கித் திரும்பவும் வாய்ப்பு உருவாகிறது. இத்தகைய எதிர்ப்புகளுக்கு உதாரணமாக மன்மோகன் ஆட்சியின் போது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது எழுந்த எதிர்ப்புகளைக் கூறலாம்.

ஒன்றின் பின்ன்னடைவு மற்றொன்றை பாதிப்பதால், இரு தரப்பும் தங்களை காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கத் துவங்குகின்றன. ஒரு பக்கம் NRC-ஐ நிறைவேற்றவும் மக்களை திசை திருப்பவும் புதிய வழிமுறைகளைத் தேடும் இதே சமயத்தில் ஐஎம் எஃப் நிறுவனம் இந்திய பொருளாதாரம் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறும் இந்த அறிக்கை, இன்று இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் நுகர்வின் வீழ்ச்சியைப் (fall in consumption and demand) பற்றியோ அதை எதிர்கொள்ள அரசு எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியோ எதுவும் கூறாமல், “அமைப்பியல் சீர்திருத்தங்கள்” (structural reforms) உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.

என்ன அமைப்பியல் சீர்திருத்தங்கள்? கார்ப்பரேட் அமைப்புகளுக்குச் சாதகமான நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களில்  தளர்வுகள், துரிதமான தனியார்மயமாக்கல் என்று நீளும் பட்டியல். ஏறக்குறைய அனைத்து நியோ-லிபரல் பொருளாதார நிபுணர்களும் இதே கருத்தை முன்மொழிகிறார்கள். இவை எதுவும் மக்களிடையே வரவேற்பை பெறப் போவதில்லை, பொருதாரத்தை மேம்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சமீபத்தில் சிலி, ஈராக், லெபனான், கொலம்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும்  போராட்டங்கள் அனைத்தும் நியோலிபரல் முதலாளித்துவ கொள்கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள்.

முந்தைய நூற்றாண்டின் தொடக்கத்தில் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து உருவான பாசிச அலை, உலகப் போர்களால் அழிந்தது போன்ற சூழல் இப்போது இல்லை என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். அதே காலக்கட்டத்தில் முதலாளித்துவத்தை எதிர்த்து நின்ற கம்யூனிச அலையும் இப்போது இல்லை. இவற்றோடு புவி வெப்பமயமாதலைத் தொடர்ந்து ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள், அவை உண்டாக்கும் அழிவுகள் என மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

இன்று இந்தியாவில் பரவலாக நடைபெறும் போராட்டங்கள் அடையாள அளவில், குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றதை போலவே, பல்வேறு நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் யாவும் சிறு சிறு வெற்றிகளைப் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சிலி நாட்டின் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருந்த அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக மாற்றியெழுதப்படவிருக்கிறது. லெபனான், ஈராக் போன்ற நாடுகளில் பிரதமர்கள் பதவி விலகி இருக்கிறார்கள். ஆனால் இந்த வெற்றிகள் யாவும் பாசிசத்தையும் அத்துடன் இணைந்த நியோ லிபரல் முதலாளித்துவதையும், சுற்றுச்சூழல் சீரழிவையும் தடுக்கப் போதுமானவை அல்ல. எதிர்காலத்திற்கான பெரும்போரின் தொடக்க காலக்கட்டத்தில் இருக்கிறோம். நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) அடிக்கடி குறிப்பிடுவது போல, மானுட சமுதாயம் பிழைத்திருக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் போர் இது.

குறிப்புதவி நூல்கள்:

  1. Prabhat Patnaik (1993), The Fascism of our times. Social Scientist. Vol. 21, No. 3/4 (Mar. – Apr., 1993), pp. 69-77
  2. Utsa Patnaik and Prabhat Patnaik (2019). Neo-liberal Capitalism at a Dead End. Monthly Review.