மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

0 comment

சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில்.

இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளைத் தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.

எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரையறுக்கலாம். அதற்கு மாறாக உணர் புலன்களின் தர்க்கத்துக்கு வெளியே நிகழச் சாத்தியமுள்ள ஒன்றை மாற்றுமெய்மை என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

அப்படியானால் இதற்கும் மாய யதார்த்தத்துக்கும் என்ன வேறுபாடு? மாய யதார்த்ததில் சொல்லப்படுவது முழுவதும் கற்பனை என்ற தெளிவு எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் உண்டு. அங்கே உருவகங்கள் மற்றும் படிமங்களின் வாயிலாக ஒரு கதையின் வழியே மற்றொரு கதை சொல்லப்படுகிறது.

மறுபக்கத்தில், மாற்றுமெய்மையை முழுவதும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. அது, நடைமுறை வாழ்வின் வெளித்தெரியாத பரிமாணமொன்றை சற்றே கீறிக் காட்டுகிறது. அதிலிருக்கும் உண்மையின் சதவீதம் குறித்த கேள்விகளை வாசகனிடத்தில் எழுத்தாளன் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறான். அவ்விதம் சேகரமான கேள்விகளின் வழியாக, தான் கூற விழைவதின் அர்த்தத்தைச் செறிவுபடுத்த விழைகிறான்.

வெளியேற்றம் நாவலின் பின்னுரையில் யுவன் இப்படிக் குறிப்பிடுகிறார் – இந்த நாவலில் வருகிற மாய நிகழ்வுகள் நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டவையாகத் தென்படுகிறவை அனைத்துமே நிஜமாக நிகழ்ந்தவை. வலுவான சாட்சியங்களும் சான்றுகளும் உள்ளவை. தன்னியல்பான, நடைமுறை சாத்தியம் உள்ள நிகழ்வுகள் அனைத்துமே கற்பனையானவை.’

வெளியேற்றம் நாவலை குள்ளச்சித்தன் சரித்திரத்தின் தொடர்ச்சியாகவே தான் எழுத முற்பட்டதாகவும், முதல் சில அத்தியாயங்களுக்குப் பிறகு அது முற்றிலும் வேறொன்றாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது என்று பொருள்படும்படி ஓரிடத்தில் கூறியிருப்பார். இருந்தாலும், இவ்விரண்டு நாவல்களையும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்றை வாசிப்பதற்கான திறப்புகள் இவ்விரண்டு நாவல்களிலுமே நிறைந்து இருக்கின்றன.

இவ்விரு நாவல்களின் அடிச்சரடும், அதைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டுள்ள மாற்று மெய்மை என்னும் உத்தியும் இவற்றை இணைத்து வாசிப்பதற்கும் விவாதிப்பதற்குமான வாய்ப்புகளை அளிக்கின்றன.

குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் யோகீஸ்வரரும் குள்ளச் சித்தரும் வெளியேற்றம் நாவலில் வரும் வேதமூர்த்தியும் வேறு வேறு அல்லர். அதே போலவே முன்னதில் ஹாலாஸ்யம் என்றால் பின்னதில் சந்தானம்.

இவ்விருவரையும் ரிஷி மூலம் தேடி அலையத் துரத்தியது எது? பென்க்வின், புலி, குள்ளச்சித்தர், யோகீஸ்வரர், முத்துச்சாமி, தாமஸ் மன்றோ, வேதமூர்த்தி என எல்லோரும் ஒருவரே. அவர்கள் புழங்கும் கால-வெளி முற்றிலும் வேறானது. அது, இன்றைய அறிவியல் பார்வைக்குத் தென்படாததாகவும் அதன் வரையறைக்குள் அடங்காததாகவும் இருக்கிறது. இந்த ஒன்றை மட்டும் வைத்து இவை மாய மந்திர நாவல்கள் என்றோ ஆன்மிகத்தை விதந்தோதும் நாவல்கள் என்றோ புறமொதுக்கி விட முடியாது. கலிலியோ கண்டறிந்து சொல்லும் வரை அன்றைய அறிவியல், பூமியை மையமாகக் கொண்டு சூரியன் சுற்றி வருவதாகவே நம்பிக் கொண்டிருந்தது. இதோ இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாளில் புதியதாக இருபது நிலவுகள் சனிக்கிரகத்துக்கு இருப்பதாக கண்டறிந்து சொல்லியிருக்கிறது அறிவியல். இத்தனைக்கும் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் ஒரு கோள் அது. அப்படியானால் அவை புதிதாக தோன்றிய நிலவுகளா? இல்லை. அவை எப்போதிலிருந்தோ இருந்துகொண்டே தான் இருக்கின்றன. அறிவியலின் பார்வை வெளிச்சத்துக்கு இப்போதே வந்துள்ளன என்பதே உண்மை. எனவே அறிவியலின் அறிதலுக்கு மேற்பட்டு இருக்கும் மற்றொரு புலத்தை குறைந்தபட்சம் கற்பனையாவது செய்ய முடிந்தால் மட்டுமே இந்நாவல்களின் உள்ளே செல்லவியலும்.

குள்ளச்சித்தன் சரித்திரத்தில் ஒரு பகுதி வரும். பழனியப்பனின் மனைவி சிகப்பி, எறும்பு மொய்க்கும் பலகாரத்தை வெளியே கொண்டு போய் தட்டுவாள். அதைப் பற்றி நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் அவர் எறும்புகளின் பிரபஞ்சத்தில் சிகப்பி என்ற மனுசியோ, அவளது கையோ கிடையாதில்லையா?” என்பதாகக் குறிப்பிடுவார். இது வால்டேர் மைக்ரோமெகாஸில் முன்வைத்த பார்வையல்லவா? நாம் எப்போதும் மனித மையமாகக் கொண்டே இப்பிரபஞ்சத்தைப் பார்த்துப் பழகி விட்டோம். யதார்த்த கதைகள் மனித மைய வாதத்தையே திரும்பத் திரும்ப முன்வைக்கின்றன. அதில் குறையொன்றும் கிடையாது என்ற போதும் பிரபஞ்சத்தின் பார்வையில் மனிதனை வைத்துப் பார்க்கும் போது இந்த வாழ்வும், அதை முன்வைத்து நிகழ்த்தப்படும் அத்தனை ஆர்பாட்டங்களும் எத்தனை அற்ப விசயங்கள் என்ற தரிசனம் புலப்படக் கூடும். எறும்பின் உலகிலிருந்து மனிதனுடைய உலகைக் காண்பதைப் போல் இப்பிரபஞ்சத்தின் பார்வையிலிருந்து மனிதனைப் பார்த்தால்? மைக்ரோமெகாஸில் வரும் வேற்றுகிரகவாசிக்கு மனிதனே பாக்டீரியா போன்ற நுண்ணுயிரியாக இருக்கும் போது, அவனுடைய லெளகீகப் பிரச்சனைகள் எத்தனை அற்பமானதாய் இருக்கும்?

இப்படியானதொரு மாற்றுப் பார்வையைத் தான் இவ்விரு நாவல்களும் முன்வைக்கின்றன. அறிவியல் யதார்த்தமற்ற எல்லாவற்றையும் கேள்வி கேட்கும். கலைஞனும், தத்துவவாதியும் அந்த அறிவியலையே கேள்வி கேட்கிறார்கள். யுவனும், எல்லாவற்றையும் மூளை தான் நடத்தி வைக்கிறது என்றால் மூளையை நடத்தி வைப்பது எது?” என்று கேட்கிறார்.

வாழ்வின் மீது, வாழ்தலின் அடிப்படை மீது எழுப்பப்படும் கேள்விகள் சிலரை அவர்களுடைய வேர்களிலிருந்து வெளியேற்றுகிறன. அவற்றிற்கான விடை தேடிப் புறப்படும் பயணங்கள், கடைசியில் மீண்டு நிலைத்து எஞ்சி நிற்பதென்னவோ கேள்விகள். இங்கே கேள்விகள் எவ்வளவு முக்கியமானவையோ அதே அளவுக்கு முக்கியமானவை அவற்றின் பதில் தேடிச் செல்லும் பயணங்களும், வெளியேற்றங்களும். வரலாற்றில் விடையைத்தேடி எத்தனையோ சித்தார்த்தன்கள் வெளியேறியிருப்பார்கள் ஆனால் நமக்குக் கிடைத்தது ஒரே ஒரு புத்தன் மட்டுமே. எனவே வெளியேறும் அத்தனை சித்தார்த்தன்களும் புத்தர்களாக ஆவதில்லை என்றபோதும் ஒருமுறை வெளியேறியபின் அவர்கள் யாரும் பழைய சித்தார்த்தன்களாக இருப்பதில்லை.

குள்ளச்சித்தன் சரித்திரம் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடை தேடிப் போன பயணங்களாக வெளியேற்றத்தைப் பார்க்க முடிகிறது. ஒளிதேடி முளைத்து வரும் கிளை போல வாழ்வின் அபத்தங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கான விடையைத் தேடி இந்நாவல்களில் வரும் மனிதர்கள் தொடர்ந்து  வெளியேறிக் கொண்டும் பயணப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். தற்தம் வேர்களிலிருந்து நகர்ந்து தப்பியோடும் விழைவு எல்லோருக்குள்ளும் ஓடக் கூடும். அதன் வீரியம் எத்தனை என்பது இங்கே கேள்வி! எது உங்களை வெளியேற்றுகிறது என்பது இங்கே மிக முக்கியமான கேள்வி?

தாயைப் போல் இருந்த அண்ணியின் மறைவு ஒருவனை அலைக்கழிக்கிறது. அந்தக் குடும்பத்தையே சிதைப்போடுகிறது. அதிலிருந்து அவன் வெளியேறுகிறான். மற்றொருவன் தன் தாயின் மறுபிறப்பாக தன் அண்ணனின் மகளைப் பார்க்கிறான். அதைத் தாங்கிக் கொள்ளவியலாமல் வெளியேறுகிறான். தன் விருப்பம் போல் பிச்சையிடக் கூட உரிமையில்லாத வீட்டிலிருந்து கோபத்தில் ஒருவன் வெளியேறுகிறான். தோட்டியின் மகன், கண் பார்வையற்ற சிறுவன் என ஒவ்வொருவருக்கும் வெளியேறுவதற்கு ஒரு காரணம்.

வெளியேற்றம் நாவலில் முதல் வாசிப்புக்கு எல்லோரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அத்தனை கண்ணிகளையும் இணைக்கும் ஒரு சரடாகப் பார்க்க முடிந்தாலும், அதற்கும் மேல் அவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள் என்ற கேள்விகளை அடுக்கும் போதே நாவலை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.

யுவன் தமிழின் தலை சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர். வாசிப்பவனை தன் கண்களை விட்டு அகலாமல் நிறுத்தி வைக்கும் வித்தை தெரிந்த கதைசொல்லி. அவர் நாம் நம்பும் காலத்தை அதன் வழியே நிஜத்தை அழித்து கதை சொல்லிச் செல்கிறார். கொடூரமான நினைவென்னும் ஒரு கரைக்கும், அக்கொடூரத்தைச் சொஸ்தப்படுத்தும் கனவென்னும் மறுகரைக்கும் இடையில் தன் புனைவுச்சுழலில் வாசிப்பவனை நிறுத்தி, துடுப்பைத் தூக்கி எரிந்துவிட்டுப் போகிறார். பின்பு, அங்கிருந்து தப்பிக் கரையேறுவது அவரவர் சாமர்த்தியம்.

இவ்வித்தையை, வாசித்தவரை உள்ளிழுக்கும் தன் புதைச்சேற்று மொழியின் வழியாகவும், உதிரிப்பூக்களைத் தொடுத்துச் சரமாக்கிக் கொடுப்பதைப் போல சிறு சிறு கதைகளாகக் கோர்த்து அளிக்கும் உத்தியின் மூலமாகவும் சாத்தியப்படுத்துகிறார்.

மிகப்பெரிய தத்துவத்தையும், தரிசனத்தையும் கூற அவருக்கு சாதாரண வார்த்தைகள் போதுமாயிருக்கிறன. பகடையாட்டத்தில் வரும் ஒரு வரி இது – ‘ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொன்றுக்கும் உள்ள அதே அளவு இடைவெளி ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையிலும் உள்ளது’. வெளியேற்றம் நாவலில் வீட்டை விட்டு ஓடி வந்து தவறானதொரு இடத்தில் மாட்டிக் கொள்ளும் சிறுவனை, தனக்கு நேரக் கூடிய துன்பங்களைப் பொருட்படுத்தாமல் அங்கிருக்கும் பெண்ணொருத்தி காப்பாற்றித் தப்புவிப்பாள். அப்போது ஆதுரமாக “போய் வா” என்று சொல்லி அவனின் கையைப் பற்றுவாள். அவளின் உள்ளங்கை ஈரம் அவனைத் தீண்டும் அக்கணத்தை, ‘அது வியர்வையின் ஈரமல்ல, பிரதிபலன் பார்க்காத பிரியத்தின் ஈரம்’ என்று சொல்லியிருப்பார். அதற்கு மேல் நகர அனுமதிக்காமல் அங்கேயே நிறுத்திப் பிடிக்கும் மொழியல்லவா இது?

மொழி இவர் சொன்னபடியெல்லாம் சுழல்கிறது. மதுரை, காரைக்குடி, கும்பகோணம் என்று கதை விரியும் இடங்கள் அத்தனைக்கும் தகுந்தாற் போல தன்னை வளைத்துக்கொள்கிறது. தீவிர இலக்கியங்கள் சுவாரஸ்யமாக இருக்காது என்பது தமிழில் தீவிரமாக நம்பப்படும் ஒரு விதி. யுவன் அதற்கு விலக்கு. சிறு சலிப்பும் தட்டாத சுவாரஸ்யமான கதைமொழி அவருக்கு வாய்த்திருக்கிறது. அற்புதமான தத்துவங்களைக் கூட மிகச் சாதரணமாக ‘அந்தச் சேரை நகர்த்திப் போடுங்கள்’ என்பது போல போகிற போக்கில் சொல்லிப் போய் விடுகிறார்.

யுவன் தன்னுடைய சிறுகதைகளில் கூட ஆற்றொழுக்காக ஒரு கதை, ஒரு மையம் என்று சொல்வதில்லை. ஆதி கிராமமொன்றின் மூத்த கதைசொல்லியைப் போல கதைக்குள் கதை, அதற்குள் மேலும் கதைகள் என்று கதைகளை அடுக்குகிறார். நாவல்களைப் பொருத்தமட்டில் தனித்த மலரொன்றின் மகரந்த அடுக்குகளாகக் கதைகள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கலைத்துப்போட்டு கதைசொல்லுதலை தன் படைப்புகளில் தொடர்ந்து செய்கிறார்.

எங்கள் ஊரில் நான் சிறுவனாய் இருந்த போதும் நம் தாமோதர ஆசானைப் போன்ற கதைசொல்லி ஒருவர் இருந்தார். திருமணமே செய்து கொள்ளாத பெண்மையின் சாயல் மிளிரும் முதிர் கிழவன். அவர், எங்களுக்குப் பல நூறு கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு கதையையேனும் சொல்லிய அன்றே முடித்தாரில்லை. ஒரு கதையை ஆரம்பித்து, மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று அதன் உச்சகட்டத்தில் நிறுத்திவிட்டு, “மிச்சத்தை நாளைக்குச் சொல்றேன்” என்று சொல்லிக் கிளம்பிவிடுவார். “தாத்தா.. தாத்தா.. மிச்சத்தச் சொல்லுங்க. மிச்சத்தச் சொல்லுங்க” என்று சிறுவர்கள் நாங்கள் அவரைச் சுற்றி படுத்திக்கொண்டிருப்போம். மறுநாள் அந்தக் கதையைத் தொடரமாட்டார். புதிதாக வேறொன்றை ஆரம்பிப்பார். அது முந்தைய வாரம் பாதியில் விட்ட கதையினோடு சென்று இணையும். இப்படிக் கலைப்பதும், பின் சென்று இணைப்பதும் ஓர் அலாதியான கதைசொல்லல் உத்தி. யுவன் தன் நாவல்களில் இதையே செய்கிறார். இதை நம் கதைசொல்லல் மரபின் தொடர்ச்சி என்றே பார்க்கிறேன்.

சிறிய கதைகளின் வழியே அன்றாடத்தில் நாம் கவனிக்கத் தவறும் அற்புதத் தருணங்களை தன் படைப்புகளில் காட்சிப்படுத்துகிறார். சேரும் இடத்தை விட செல்லும் பாதையைக் கொண்டாடும் படைப்பாளி யுவன். வாசகனின் கூரிய கவனத்தைக் கோரும் படைப்புகள். முதல் வாசிப்பில் பிடிபடாத பல முடிச்சுகள் அடுத்தடுத்த வாசிப்புகளில் திறப்பதை உணர முடியும்.

அவர் தமிழ் மின்னிதழுக்கு அளித்த பேட்டியில் “ஒரு சீரிய வாசகன், எனது பெயரைப் பத்திரிகையில் காணும் போது அதைத் தாண்டிப் போகக் கூடாது என்னும் ஆசை. இது நியாயமானது என்றே இப்போதும் படுகிறது” என்று கூறுகிறார். ஒரு முறை அவரின் ஏதேனும் ஒரு புனைவை வாசித்த ஒருவன் மறுமுறை அவர் பெயரைக் கண்டதும் வாசிக்காமல் அவ்வளவு எளிதில் கடந்து போக மாட்டான். அதற்கு இவ்வரங்கில் கூடியிருக்கும் அத்தனை பேரும் சாட்சி!