“இங்க‌ யாரும் சொல்லிக் கொடுக்காதத செய்ய ஆரம்பிக்கறப்பத் தான் உள்ளுக்குள்ள நாம யாரோ அதா ஆகத் தொடங்குறோம்”. ஒரு கூரிய வாக்கியத்தை அல்லது ஒரு கருத்தை கூறிவிட்டதன் உத்வேகத்தில் கிளாசின் முக்காலளவு திரவத்தை வெங்கடாச்சலம் வாயில் கவிழ்த்துக் கொண்டார். குடிக்கும் போது எப்போதும் வரும் இடம் ஒன்றுண்டு. அங்கு தான் குடி நம்மை தூக்கிக் கொள்ளத் தொடங்குகிறது. அவருக்கு அது பொதுவாக இரண்டாம் ரவுண்டின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ. அந்த இடத்திற்கான முஸ்தீபாகத் தான் முதல் ரவுண்ட் உதட்டில் அளவாக தொட்டு மீளும். சண்டை முடிந்து சமாதானம் கொள்ளும் தருணத்தின் உதிரி சொற்களைப் போல.  உண்மையில் முற்றாக அச்சண்டையை மறக்கும் பிரயத்தனம் மட்டும் தான் அச்சொற்கள் என்பது மீண்டும் அந்த பழைய லயத்திற்கு வரும் போது நாம் உணருவதைப் போல.

“ஆனா ஒருவகையில அது ஒரு சாபமும் கூட. எல்லாரும் செய்றவற்றுக்குத் தக்கபடி தான், அதுக்கு ஏற்றபடி தான்  நம்மள சுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கு. இந்த ஒழுங்குக்கு எதிரா நின்னு தான் ஒன்னோட சுயத்த காப்பாத்திக்க வேண்டிருக்கு”. பக்கவாட்டு நரைத்த கிருதாவின் சொட்டி வழியும் வியர்வைக் கோட்டினை வழித்துக் கொண்டே சொன்னார். தடித்த கைகளின் மயிர்க்கால்களில் வியர்வை ஈரங்கள் மஞ்சள் வெளிச்சம் பட்டு மின்னின. இரண்டு நீள் வரிசைகளாக போடப்பட்ட டேபிள்களின் நடுவில் அந்த வெளிச்சத்திற்கான காரணம் எரிந்து கொண்டிருந்தது. கூம்பாக குவிக்கப்பட்ட அந்த கருக்குவியல்களின்  நுனியில் விரக்திப் பெருக்காக அந்நெருப்பு கதறிக்கொண்டிருந்த்து.

பல்வேறு நிலைகளில் குதறப்பட்ட சிக்கன் துண்டுகளும் தன் நோக்கம் நிறைவேறப்படாத ஆற்றாமையின் தடயமாக வழிந்து கிடக்கும் ஆஃப்பாயில் மஞ்சள் திரவங்களும் தொடப்படாமலே பல வண்ணக் குவியல்களாக அம்மேசைகளில் சிதறிக் கிடந்தன. சிறுசிறு கும்பல்களாகக் குவிந்து பேசிக்கொண்டிருக்கும் சத்தம் அந்த வெளியை நிறைத்திருந்தது. குடிச்சூழலில் இரைச்சல் என்ற பதம் கிடையாதென்பதால் அனைத்தும் சத்தம் என்ற ஒரு வகைமையில் மட்டுமே அடங்கும்.

அவ்வோசைகளுக்கு ஒட்டாமல் எழும் வெங்கட்டின் அடங்கிய கூரிய குரலை நவீன் உன்னித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். இன்னும் முழுமையாக வளராமல் தீவுத் திட்டுக்களாக வளர்ந்திருக்கும் தாடி மயிர்களை அவன் கை தடவிக்கொண்டிருந்தது. அவன் முன்னிருந்த பியர் கோப்பையின் திரவத்தை சூழலின் மஞ்சல் ஒளி மேலும் அடர்த்தியாக்கியிருந்தது.

வாய் சற்று கோணலாக இழுபட, சூழ அமர்ந்திருக்கும் தன் சக பணியாளர்களைச் சுட்டி மேலும் தொடர்ந்தார். “இந்த ஒவ்வொரு சிறு கூட்டத்துக்குள்ளயும் போய் பாத்தின்னா ரெண்டே விசயந்தான் நடக்கும். ஒண்ணு நானும் அறிவாளிதான்னு காட்டுறதுக்கு ஏதோவொன்னுக்கு எதிரா மூர்க்கமா சண்ட போடுறது. இல்லன்னா எல்லாமே நக்கலும் நையாண்டியுந்தான் எனக் காட்டிக்கிடறது. ரெண்டுமே ஒண்ணுல இருந்து கிளைவிடறது தான். தான் காலியானவங்கிறத அவனுக்கே மறச்சிக்க செய்றது. ஒரு கிராமத்தோட புழங்காத இருட்டுப் பகுதியப் போல யாரும் தொட பயப்படுற இடம் அது. பொழங்க ஆரம்பிச்சா என்னென்ன எந்திருச்சி வரும்னே தெரியாதுங்குற பயம். இந்த அவுட்டிங்கே எதுக்கு? அப்படியான ஒண்ணப் பத்தின நெனப்ப மனசிலருந்து எடுக்குற முயற்சி தான? கோயில் வாசல்ல ரணத்தோட உக்கார்ந்திருக்குற பிச்சக்காரன கவனிக்காம இருக்க எதிர்ப்பக்கமிருக்க பொம்ம கடைய சுட்டிக்காட்டுற அப்பாவோட செயல் மாதிரிதான?” பேச்சின் வேகத்தில் மூச்சிரைக்க அவரின் பெரிய வயிறு மெல்ல ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த சிகரெட் பெட்டியை அவனிடம் பேசிக்கொண்டே தடவி எடுத்து வாயில் அமர்த்தி பற்றவைத்தார். உரசிய நெருப்புக் குச்சி கண நேரப் பிரகாசத்தை அவர் முகத்தில் ஏற்படுத்திவிட்டு மறைந்தது. அதன் தடயமான நெருப்புக் கங்கை ஒவ்வொரு இழுப்பின் மூலமாகவும் ஒளிரச் செய்தார்.

அவரின் இந்த வேகத்தை நவீன் ஒரு சிறு ஆச்சிரியத்துடனே கவனித்து வந்தான். இந்த அமைதியான ஆழ்ந்த குரலின் பின்னுள்ள கோபத்தை எரிச்சலை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த நான்கு மாதங்களாகத் தான் அவன் தினசரி வாழ்வின் புதிதாய்ப் புகுந்துள்ளதும் பெரும் பகுதியை ஆட்கொண்டதுமான அலுவலகச் சூழலை அனுபவித்து வருகிறான். அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்பதும் எந்தச் செயலுக்கும் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை என்பதும் அவனுக்கு ஒரு பெரிய விடுதலையை அளித்தது.

முதல்முறை பார்த்தபோது வெங்கடாசல‌த்தை தன்னுடைய மேலாளராக இருக்கக் கூடும் என்றே நினைத்தான். சூழ இருந்தவர்களில் அவரின் வயதான தோற்றமும் அதற்கேற்ற உடையும் தனித்துக் காட்டியது. தயங்கி அருகே சென்று ” ஸார். நான் நவீன். ந்யூ ஜாயினி” எனக் கூற திரையிலிருந்து கண்களை விலக்கியவர் எந்த உணர்வு மாற்றமுமிலாமல் ” என்னை வெங்கட்‍‍னே கூப்புடலாம்” எனக்கூறி வலப்புற எதிர்மூலையைச் சுட்டி “ஹரீஷ போய்ப் பாருங்க” என்றார். ஹரீஷ் அவரைவிட 8 வயது இளையவர். எங்கள் அனைவருடைய மேலாளர். பின்னர் தான் தெரிந்தது வெங்கட் தன்னை விட இரு படிநிலைதான் உயர்ந்தவர் என. எந்த முயற்சியுமில்லமல் 6 வருட அனுபவத்தில் எளிதாக அடையக்கூடிய இடமது. இதுகுறித்து ஒரு சமயம் கேட்ட போது “ஒரு விஷயத்த வேணாம்னு சொல்றதுல இருக்குற விடுதலை மிகப்பெரியது” என்றார். வெங்கட் பேசும் பாணி எப்போதும் அப்படித்தான். அனைத்தைக் குறித்தும் எண்ணி அதை ஒரு கூற்றாக அல்லது கருத்தாக மாற்றிக்கொள்வார்.

வெங்கட்டை முதலில் சந்தித்த போதிலிருந்து விளக்க முடியாத ஒரு சிரிய மர்மத்தை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். இத்தனைக்கும் புறத்தோற்றத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லாதவர். நெற்றியில் அழுத்தமாக படிந்திருக்கும் கருந்தீற்றலும் கண்களின் நிழல்களான கருவளையங்களும் அவருக்கு மேலும் சாதாரணத்தையே அளித்தன.

ஆனால் ஈடுபட்டு பேசும் போது அவர் வேறொருவர். அலுவலகம் அருகிலுள்ள பேக்கரியில் சந்திக்க நேர்ந்த ஒரு மாலைவேளையில் ஆன்லைனில் வாங்கிய பார்சலை அவனிடம் கண்டு “வாசிப்பீங்களா?” என மெல்லிய ஆர்வத்துடன் கேட்டார். உறையிலிருந்த வெளிவந்த புத்தகம் அவரை மேலும் உத்வேகம் கொள்ளச் செய்தது. புத்தகத்தின் அட்டையில் கண்களை ஓட்டிய அவர் முகத்தின் தசைகள் மெல்லிய அலைகளாக மேலெழுந்து அடங்கின. ”ஜானகிராமன் என்னோட இருபதுகள்ல பெரிய பாதிப்பை செலுத்தியவர். அவரோட அற நிலைப்பாடுல ஒரு பெண்தன்மை இருக்கும். துரோகிகளைப் பார்த்து பரிதாபப்பட்டவர். லௌகிகவாதிகளை கருணையுடன் பார்த்தவர். ஆனா பெண்களை அதிகம் மிஸ்டிஃபை பண்ணிட்டாரோன்னு தோணுது. அவங்களோட கீழ்மைய அவர் கண்ணு பாக்கல.” கடகடவென தன் எண்ணங்களைப் பொழிந்தார்.

எல்லாவற்றைப் பற்றியும் திடமான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார். அதே வேளையில் பொருந்தாத இடத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் மாட்டார். மதிய உணவு மேசைகளில் சக பணியாளர்களிடம் எழும் விவாதங்களில் மோவாயை இடக்கைத் தாங்கிப் பிடிக்க கண்கள் அவர்களனைவரிடமும் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் ஒரு படலமாக சிரிப்பு படர்ந்திருப்பதாக நவீனுக்குத் தோன்றும். அதிலிருந்த எள்ளல் அவனைச் சீண்டியது. ஊர்ந்தேறும் வண்டைச் சுண்டி விடும் அலட்சியத்தை ஒத்ததென்று அதை நினைத்தான். ஒருமுறை அதுகுறித்து ஆவேசமாக “எந்த நேரமும் கிரீடத்தோடயே ஏன் அலையுறீங்க? இந்த அற்ப சராசரிகள்ல ஒருத்தர் தான உங்க மனைவியும். அங்கயும் இதே தோரணை தானா?” கேட்கும்போதே எல்லை மீறிவிட்டதை உணர்ந்தான். ஆனால் எந்த மாற்றமும் இன்றி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர் நிதானமாக அவன் கண்களை நோக்கி “அப்படியில்லை. கைக்கு சிக்குற சாமான்கள வச்சு வெளையாடுற குழந்தைங்ககிட்ட ஏற்படுற வாஞ்சையோடத் தான் இவங்களப் பாக்குறேன்”என்றவர், சற்று நேரம் அமைதியாகி, “தோரணை எல்லா இடத்துலயும் ஒன்னா அமையுற குடுப்பினை இல்ல” என உதடு கீழ் நோக்கி சுழிக்கக் கூறினார்.

சிகரெட்டின் கடைசி இழுப்பை ஆழ உட்செலுத்தி அக்கனல் துண்டை வீசியெரிந்தார். புகையை மெல்ல வெளியேற்றி எளிதானார். அக்கணம் வரை இருந்த பதற்றம் மெல்ல வடிந்தது. எப்போதும் ஆசுவாசமாக இருக்கும் இயல்பிற்கு நேர்மாறாக அவர் கொண்டுள்ள இச்சீற்றத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை போதை அவர் முடிச்சுகளை நெகிழச் செய்கிறதா? எண்ணிக் கோர்த்தெடுத்து வரைந்த பிரஞ்ஞையை கரைக்கிறதா? இப்போது தான் முதன்முறையாக அவரோடு சேர்ந்து குடிக்கிறான். தன் போதையும் தளை தாண்டுவதை உணர்ந்தான். தன் கை கால்கள் மெல்ல கணமாவதை புற சப்தங்கள் மெல்ல தேய்ந்து வருவதை உணர முடிந்தது. கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இழுத்துக் கட்டியிருந்த போதம் தன் எல்லையைக் குறுக்கிக் கொண்டு அக்கணத்தில் மட்டும் நிலைகொண்டது. அறிவின் சிந்தனையின் பாரத்தை அது கழற்றி விட்டுக் கொண்டது. கருவறை மீண்ட குழவி போல வெறுமொரு பிராணியாக தான் மாறுவதாக உணர்ந்தான்.

அப்படியென்றால் பின்னோக்கிச் செல்வது அத்தனை எளிதானதா? கண்டுகொள்ள மறுக்கும் காலின் நிழல் போன்றது தான் போல. தனது ஆளுமை என மனிதன் நினைப்பது வெறும் கறையென மேலே படிந்திருப்பது மட்டும் தானா? மேற்கொண்டு அவனால் முன் செல்ல முடியவில்லை. மெல்ல தன் உடல் முன்னால் இழுக்கப்படுவதாக உணர்ந்தான். இக்கணம் இப்படியே நீடித்தால் அது மயக்கமாக மாறிவிடுமென உணார்ந்திருந்தான். அதிலிருந்து விடுபட அவனுக்குத் தெரிந்திருந்தது. உணர்வை உச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும். எளிமையான வழி தொடர்ந்து உரையாடுவது. கிண்டலடித்து சிரித்தோ அல்லது சண்டைபிடித்து கோபித்தோ. அவனின் அப்போதைய மனநிலைக்கு இரண்டாவதையே தேர்ந்தெடுத்தான்.

அவரைச் சீண்டும் விதமாக “பரிதாபம் அவங்களைப் பாத்து பட வேண்டியதில்ல வெங்கட். உங்களப் பாத்து தான். அவங்க தங்களுக்காக இந்த உலகத்தையே படச்சு வச்சுருக்காங்க. இங்க புழங்குற ஒவ்வொன்னும் அவங்களுக்கானது. ஃபோன்லயிருந்து சினிமா வரை. சட்டை துணியிலயிருந்து கிரிக்கெட் வர. அத்தனையும் அவங்களுக்காக அவங்கள நோக்கித் திரும்பியிருக்கு. ஆனா உங்களுக்கு? எத்தன நாளைக்கு தான் ஒரு பார்வையாளனா அத்தனையையும் வெளில இருந்து பாத்துட்டு மட்டுமே இருப்பீங்க. இந்த வாழ்க்கை வாழுறதுக்கு குடுத்துருக்கு. வேடிக்கை பாக்கயில்ல” என்றான். சொல்லும் போதுதான் தெரிந்தது எவ்வளவு அந்த வாழ்க்கைக்கு ஏங்குகிறான் என்பது.

நவீன் எதிர்பார்த்த விளைவு அவரில் ஏற்படவில்லை. தன் வழக்கமான குரலில் “சரிதான். உனக்கு இப்போதான் மொளைக்க ஆரம்பிக்கிற தாடி எனக்கு வளந்து மண்டி நரச்சுருச்சு. எத்தன தடவ யோசிச்சுருப்பேன் இதப்பத்தி. ஆமா. திரும்புற இடெமெல்லாம் சராசரிகளுக்குத் தான். சிலந்தி மாதிரி ஒருத்தன் எல்லா முனையிலிருந்தும் எடுத்து பின்னி தன்னோட உலகத்த உருவாக்கிக்க ஏகப்பட்ட சரடுகள் இருக்கு. சிலந்திகளோட உலகந்தானிது. மெல்லிய நீண்ட கால்களின் கவசங்களுக்குள்ள கருந்துளியா இருக்குற பாவப்பட்ட உயிர். எட்டு பக்கமும் அவனோட கால்கள் அழைக்கழிக்கிற வாழ்க்கை வாழ்றவன். மனுசனோட மனசு ஆத்துக்கடியில இருக்குற கூழாங்கல்லு மாதிரி. ஆறா ஓடுற அன்றாடத்தோட தேவையே அந்தக் கல்ல மெறுகேத்துறது தான். தன்னோட கல்லப் பத்தின அறிவே இல்லாதவனுக்கு அந்த ஓட்டத்தோட தன்மையப் புரிஞ்சிக்கவும் முடியாது. தனக்கேத்த மாதிரி அத மாத்திக்கவும் தெரியாது. தல மண்ணுல விழுகிற வர தினந்தோறுமான போராட்டமாத் தான் இருக்கும்” என்றார். இழந்திருந்த நிதானத்தை இந்த தர்க்கக் கட்டுமானம் வழியாக மீட்டுவிட்டிருந்தார். அவ்வார்த்தைகளை தனக்கே மீண்டுமொரு முறை கூறிய நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது.

அத்தெளிவு நவீனுக்கு மேலும் எரிச்சலைத் தந்தது. இன்னும் கீழிறங்கினான். “எவ்வளவு தெளிவான சொற்கள். வாழ்க்கையையே சொற்கள்ல கட்டுப்படுத்த முடியிறது மாதிரி எவ்வளவு எளிமையா இருக்கு. அவ்வளவு எளிமையானவனா மனுஷன்? நான் சொல்லவா நெஜம் என்னன்னு? உங்களோட தோல்வியைத் தான் இத்தன அழகான சொற்கள்ல மறச்சு வச்சுருக்கீங்க. இந்தத் தர்க்கக் கட்டுமானத்துக்குப் பின்னாடி இழந்த உங்களோட வாழ்க்க இருக்கு. அத உங்ககிட்ட இருந்து மறச்சுக்கத் தான் இதப் பண்றீங்க. ஆமா. சிலந்தி தான் மனுஷன். எவ்வளவு சரியான உதாரணத்த சொன்னீங்க. ஏன்னா உள்ளுக்குள்ள தெரியும் நீங்களும் ஒரு சிலந்தி தான்னு. வித்தியாசம் என்னன்னா உங்க சரடுகள் கண்ணுக்கு தெரியாதவை. அதுக்கு ஸ்தூல வடிவம் கெடையாது. உங்க பின்னல் எல்லாம் உங்க கனவுக்குள்ள மட்டுந்தான். நிஜ உலகத்துல நீங்க எப்பவும் தூங்கிட்டிருக்குற எதையும் செய்யாத சிலந்தி. செத்த சிலந்தி. பொணம் மாதிரி” கீழிறங்க முடிவு செய்துவிட்டால் போதும் மனிதன் எத்தனை ஆழத்துக்கும் சென்றுவிடலாம். அந்த முதல் அசைவே அதற்கடுத்தடுத்த நகர்வுகளை கவனித்துக் கொள்ளும்.

இருட்டில் எடுத்த வைத்த காலில் தட்டுப்பட்ட கைக்குழந்தைப் போல அவர் அகம் ஒருகணம் விதிர்த்தது. பிறகு ஒரு அசைவு வழியாகத் தன்னை மீட்டெடுத்துக் கொண்டார். எப்போதும் விவாதம் தன் எதிர்த்தரப்பின் அளவுக்கு இறங்கினால் மட்டுமே வெல்ல முடியும். வேறொரு தருணம் என்றால் தன்னை உள்ளிழுத்துக் கொள்பவர் இப்போது அச்சூழலில் இருந்து வெளிவர விரும்பவில்லை.

அக்கணம் அவரை முழுவதுமாக எடுத்துவிட்டிருந்தது. அதன் இலக்கு நோக்கி அவரை மேலும் நகர்த்திச் சென்றது. “பொணம் கிடையது. இது தவம். செயலின் அபத்தத்தை உணர்ந்து இருக்குற தவம். செய்ய முடியாததுனால இல்ல, செய்ற விரும்பாத்துனால இருக்குறது. சரி. இப்ப செய்யணும் தோணுது. உனக்கு நிரூபிக்கிறதுக்கில்ல. செய்றதும் செய்யாததும் ஒண்ணுதான்னு எனக்கே காமிக்கிறதுக்கு. நம்ம சுத்தி இருக்குறவங்க எவ்வளவு நொய்மையானவங்கனு காமிக்கிறேன்” என்றவர், படாரென தன் இருக்கையிலிருந்து எழுந்தார். அவ்வசைவில் நவீன் தனக்கு அப்பாற்பட்டதைத் தொட்டுவிட்ட விபரீதத்தை உணர்ந்தான்.

எந்தக் கூடுகையிலும் அதிகாரப் படிநிலைகளுக்கு ஏற்றவாறு தன்னியல்பாக பிரிவுகள் ஏற்படுகின்றன. இடப்புறமாக உயர் நிர்வாகப் பணியாளர்கள் மட்டும் தனியாக குழுமியிருந்தனர். அந்தக் குழுவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க அவரின் பார்வை கூர்மைகொண்டது. தனக்கான ஆயுதத்தை அது துழாவிக் கொண்டிருந்தது. கண்ணில் சிறு ஒளி மின்ன அவர்களருகே போடப்பட்டிருந்த வட்ட வடிவ மூங்கில் இருக்கை நோக்கிச் சென்றார். சென்று கொண்டே அங்கிருந்த ஹரீஷின் கைப்பேசியை சுட்டிக்காட்டி நவீனிடம், “என்னோட செல்ஃபோனும் அதே மாடல் தான். அவனோட பேக்கேஸ என்னதுல மாத்தி குடுக்கப்போறேன்” எனக் கூறி தன் ஃபோனை விமான இயங்குமுறைக்கு மாற்றி ஒரு புது தொடர்புக் கணக்கை ஏற்படுத்தி அதற்கு சுலோச்சனா எனப் பெயரிட்டார். அதைப் பார்த்ததும் எல்லாம் தெளிவானது. ஒரு கணம் அவர் அருகில் நிற்க அவன் அகம் நடுங்கியது. 30 வருடமாக கணம் கணமாகி தீட்டிய அறிவின் அடிப்படலமாக‌ வெளிப்படாமலிருந்த இந்த நரித்தனம் தனக்கான நேரத்திற்காக காத்திருந்தாக அவனுக்குப் பட்டது.

அக்கணம் அறிவின் மேல் பெரும் அச்சம் எழுந்தது. மானுடன் வென்று முன்செல்லவும் தடைகளைக் கடக்கவும் தன் உச்சபட்சத்திற்கு செல்ல வேண்டியதற்காக அவனின் விடுதலைக்காக பயன்படும் இவ்வறிவின் அருகிலேயே இருளில் அதன் இணையும் கரந்திருக்கிறது. தீமையும், வஞ்சமும், கீழ்மையும் ஆக உருப்பெறும் இணை. ஒருவேளை இதற்கு அஞ்சித்தான் சாதாரண மக்கள் இத்தனை பெரிய உலகை சமைத்து வைத்திருக்கிறார்களா? அத்தனை நீண்ட கால்களுடன் அந்த கருந்துளி பதுங்கியிருக்கிறதா? எண்ண எண்ண அவன் சித்தம் மேலும் பிசகியது.

சுலோச்சனாவையும் ஹரீஷையும் இணைத்து அலுவலகத்தில் பொதுவாகப் பேசப்பட்டது. ஒரு டீமில் பணிபிரியும் இருவரும் அதிக நேரம் செலவிடுபவர்கள் என்பதற்கப்பால் அதற்கான முகாந்திரம் இல்லை. அது ஹரீஷுக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்ததால் பெரிதாக அந்த பிம்பத்தை மாற்றவும் அவர் முயலவில்லை. அந்த ஃபோனிலிருந்து நவீனால் கண்ணை விலக்க முடியவில்லை. ஃபோனின் மீதும் விரையும் வெங்கட்டின் விரல்களை ஒருவித மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று ”உண்மையிலேயே ரெண்டு பேருக்கும் தொடர்பிருக்கா?” எனக் கேட்டான். விரைந்த நடையின் மூச்சிளைப்புடன் வெங்கட், “எனக்கும் தெரியாது. ஆனா அது முக்கியமேயில்லை. சுதாகர் பக்கத்தில இருக்குறதே போதும். அவனை நெலகுலைய வச்சுரும். இந்நேரத்தில அவரோட மனைவியிடமிருந்து தனக்கு ஃபோன் வருதுங்குற நெனப்பு குடுக்குற நடுக்கமே அவன சரிச்சுடும்” எனக் கூறினார். “இவனுக இவ்வளவு தான். அடுத்த கண நிச்சயமினமை கொடுக்குற பயத்தோட சண்டபோடுறதிலேயே இவனுக வாழ்க்க முடிஞ்சுடும். எந்நேரமும் ஒரு அசம்பாவிதத்த எதிர்பாத்திட்டிருக்குற மனசு அது நடக்கிறதுக்கு சின்ன சாத்தியம் இருந்தாலும் அதைக் கெட்டியா புடுச்சிக்கும்”. அவர் கூறும் போதே அது உண்மை தான் என்றும் அப்படியே நடக்குமென்றும் நவீனுக்கு உறுதியாக தெரிந்தது.

தன் துறைத்தலைவருக்கு முன்னால் ஹரீஷ் நெளிந்து குறுகப் போகும் கணத்தை தன் அகத்தில் கண்டான்.  ஒருகணமும் அத்தருணத்தின் சாத்தியமின்மையை ஹரீஷ் எண்ணிப் பார்க்கப் போவதில்லை. அக்குறுவட்டப் பார்வையிலிருந்து வெளிவர இத்தனை வருட உழைப்பும் வெற்றியும் உதவவில்லை என்பதைக் கூட‌ அவரால் உணர முடியாது. அடுத்த கணத்தைப் பற்றிய இந்த எச்சரிக்கையோடே வாழ்ந்து இந்த புழுக்கள் மண் நீங்க வேண்டியது தான்.

அக்குழுவை நெருங்க நெருங்க கலங்கல்கள் மறைந்து தெளிந்துவரும் நீரின் அடியாழம் போல ஹரீஷின் ஓசை வலுத்து வந்தது. “காரிடார்ல நடந்து போறப்பவே எல்லா பொண்ணுங்களும் ரூம் வாசல்ல நிப்பாங்க. எல்லா நாட்டுப் பொண்ணுங்களயும் பாக்கலாம். உள்ளூர் சரக்குல இருந்து அகதியாக வந்தது வரை எல்லாம் இருக்கும். இத்தனைக்கும் ஊர் நடுவுல அந்தக் கட்டிடம் இருக்கு. ஜெர்மனில புறந்துருக்கனும். அங்க இருந்த 20 நாளும்..” எனத் தொடர்ந்து விவரிக்க சட்டென வெங்கட் உடலசைவில் ஒரு மாற்றம் தெரிந்தது. செல்பேசியின் உறையை மாற்றக் குனிய‌ மூங்கில் இருக்கையிலிருந்த ஹரீஷின் ஃபோன் திடீரென வெளிச்சம் பெற்றது. “ஹோம் காலிங்” என்ற வாசகத்தைக் கண்டதும் சிறு தயக்கமுமின்றி அதை இயக்கிவிட்டு வெங்கட் நகர்ந்தார். அதைக் கண்ட நவீன் ஒருகணம் உறைந்துவிட்டான். அவன் நாக்கு வறண்டு எச்சில் விழுங்கவே சிரமமாகி விட்டது. ஒரு மென்வெளிச்சத்துடன் அந்தக் கருவி ஹரீஷின் உரையாடலை அமைதியாக‌ கேட்க ஆரம்பித்தது.

அவ்விடத்திலிருந்து வெங்கடாச்சலம் நகருந்தோறும் அவர் உடல் மெல்ல தளரத் தொடங்குவதை நவீன் கண்டான். அந்தத் தீவிறகின் நெருப்பொளியில் அவர் காலடியிலிருந்து நிழலுருவம் புகையாக எழுந்து வந்தது. அவர் நடையின் விசை வடியுந்தோறும் அதைப் பெற்று அக்கருநிழல் கூர் கொண்டு எடை ஏறியது. அவ்வெளிச்ச வட்டத்திலிருந்து வெளியேறிய இறுதியடியில் அவ்வுருவம் நீண்டு மரங்களில் படர்ந்தேறி விண்ணுயர வளர்ந்து நெளிந்தாடியது.