இவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி! – மானசீகன்

by மானசீகன்
0 comment

பாரதிய ஜனதா பிடுங்குகிற எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை பிடுங்கியிருப்பது ஆணியல்ல. நெடுநாட்களாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த மிக நீண்ட துளையை! அதன் வழியாய் நடந்து வரப்போவது டயனோசராகக் கூட இருக்கலாம். யார் கண்டது?

பாஜக இப்போது மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. முதல் தடவை வாஜ்பாய் ஆட்சி நடத்திய போது அது சர்க்கஸ் புலியாகத் தான் நடந்து கொண்டது. அவ்வப்போது உறுமும்‌. முறைத்துப் பார்க்கும். பிறகு மாட்டுக்கறிக்கும் சங்கிலிக்கும் கட்டுப்பட்டு அமைதியாகி விடும். 2014-ல் ஆட்சிக்கு வந்த போது புலி கூண்டை விட்டு வெளியே வந்து விட்டது. மக்களைத் துரத்தியது… பிறாண்டி வைத்தது. கடிக்க முயன்றது.. மிகப் பெரிய அளவில் ஆபத்து நிகழவில்லை என்றாலும் கூட நாம் ஒரு நொடி கூட நிற்காமல்  ஓடிக்கொண்டேயிருந்தோம். தப்பித்த புலியொன்று மனிதர்களை வைத்து நடத்திய வித்தியாசமான சர்க்கஸ் அது. இப்போது புலி நிஜமாகவே வனத்திற்குத் திரும்பி விட்டது. முழுக்க முழுக்க வேட்டையின் மூர்க்கத்தோடு புலி பாய்வதற்காகக் காத்திருக்கும் தருணம் இது. நாம் ஓடப்போகிற பாதை நம்மை விட புலிக்கு நன்கு தெரியும். நாமும் ஓரணியாக அன்றி தனித்தனியாக நிற்கிறோம். எல்லா ஆயுதங்களும் இப்போது பழையதாகி துருப்பிடித்துக் கிடக்கின்றன. நாம் போராடி இரையாகப் போகிறோமா? சத்தமில்லாமல் புலியின் வயிற்றுக்குள் போகப் போகிறோமா? என்கிற இரு வாய்ப்புகள் மட்டுமே நம்முன் இருக்கின்றன.

ஆட்சிக்கு வந்த ஈரம் காய்வதற்கு முன்பே பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, முத்தலாக் தீர்ப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய மூன்றையும் பாஜக வெறி கொண்டு நிகழ்த்திக் காட்டிய போது கடுமையாகப் போராடியிருக்க வேண்டிய பொது சமூகம், தன் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு  அமைதியாக இருந்ததற்காக இஸ்லாமியர்களைப் பாராட்டிக் கொண்டிருந்தது. எந்த எதிர்ப்புமே இல்லாத அந்த மலர்ப்பாதையே பாஜகவை தைரியமாக நரகத்தின் வாசலைத் திறந்து விட வைத்திருக்கிறது‌.

இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின்படி பாஜக மிக நுட்பமாக விளையாடியிருக்கிறது. காரணம், ‘நான் இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக அறிவிக்கிறேன்’ என்று வெளிப்படையாக அறிவிக்காமல் அதை நோக்கி  ஒட்டுமொத்த சமூகத்தையே நகர்த்தியிருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நடுத்தர வர்க்க மனநிலையில் நின்றபடி, ‘இது நியாயம்தானே?’ என்று வாதிடுவதற்குரிய அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இருக்கின்றன. ஏனென்றால் பொது இந்து சமூகத்தை தன் பக்கம் வளைப்பதற்கு வழக்கமாக பாஜக பயன்படுத்துகிற பாகிஸ்தான், தேசப் பாதுகாப்பு ஆகிய இரண்டு அம்சங்களும் இந்தச் சட்டத்திற்குள் ஒளிந்திருக்கின்றன. நம் தேசத்தின் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டுதான் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். போதாக்குறைக்கு ‘மோடி குசுவிடுவது கூட காற்றை சுத்தப்படுத்துவதற்காகவே’ என்கிற அவர்களின் அசட்டு நம்பிக்கையும் சேர்ந்து கொள்கிறது. பாஜக நூறு ஆண்டுகளாக பொய்யாக வளர்த்து வைத்திருந்த ‘இந்துக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்’ என்கிற லாஜிக்கே இல்லாத தீ இப்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. நகர்ப்புற நடுத்தர இந்துக்களை, தாங்கள் வஞ்சிக்கப்படுவதாய் நெடுங்காலமாய் நம்ப வைத்து கடந்த முறை ‘மீட்பன்’ என்கிற பெயரில் வந்து உண்டியல் காசை பறித்தவர் தானே மோடி? அதை இன்னும் கூட பலரும் உணரவில்லை.

இந்தச் சட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. CAA, NRC, NPR என்பதை எல்லோரும் அறிந்திருப்போம். CAA மற்றும் NRC-யை இணைத்துப் புரிந்து கொள்கிறவர்கள் ஒரு தரப்பிலும்,  இரண்டுமே தனித்தனி என்று வாதிடுகிறவர்கள் வேறோரு தரப்பிலும் நின்று வாதங்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைக் கழித்து விட்டு யோசித்தால் கூட இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே சில தவறுகள் இருக்கின்றன

1. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுடன் நம்மோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத நாடான ஆப்கானிஸ்தானையும் வேண்டுமென்றே இணைத்திருப்பது ஏன்?

2. ‘மத ரீதியாக ஒடுக்கப்படுகிறவர்கள் மட்டுமே அகதிகள்’ என்கிற எங்குமே இல்லாத குறுகிய புரிதலை இச்சட்டம் கொண்டிருப்பது ஏன்?

3. இந்த மூன்று நாடுகள் தவிர பிற நாடுகளில் மத ரீதியான ஒடுக்குமுறைகள் இல்லையா? பர்மாவின் ரோஹிங்யா இனத்தவரை, சீனாவின் வூபர் இனத்தவரை இந்தப் பட்டியலில் சேர்க்காமலிருப்பது ஏன்?

4. இன்னொரு அண்டை நாடான இலங்கையில் மத ரீதியாக பௌத்தப் பேரினவாதத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளான இந்துக்களாகிய இலங்கைத் தமிழர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருப்பது ஏன்?

5. மதரீதியான ஒடுக்குமுறை என்று கூறி, அதில் இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், சமணம் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டு இஸ்லாத்தை மட்டும் தவிர்த்திருப்பது ஏன்?

இவற்றில் நான்காவதைத் தவிர்த்து விட்டு மற்ற அனைத்துக் கேள்விகளையும் இணைத்து யோசித்துப் பாருங்கள். ‘ஆமாடா, எனக்கு முஸ்லீம்னா ஆகாது. அதுக்கு என்னான்ற நீ?’ என்கிற தொனி அதற்குள் ஒளிந்திருப்பதை உணர முடியும். இந்தத் தொனிதான் முற்போக்கு சக்திகளை இரண்டு சட்டங்களையும் இணைத்துப் பார்த்து அச்சம் கொள்வதற்குரிய நியாயங்களைத் தந்து விடுகிறது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை, ‘பிஜேபிகாரர்களின் பார்வையில், தமிழர்கள் இந்துக்கள் இல்லை’ என்கிற தொனியில் நான் பொருள் கொள்ளவில்லை. அது நம் ஆசைகளை அவர்களின் மீது ஏற்றி வைத்துப் பார்த்து, போலியாக பரவசப்படும் சிறுபிள்ளை மனநிலையாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனை இந்திய ஒன்றியத்தின் வழக்கமான வெளியுறவு சார்ந்த ராஜதந்திரமாகவோ, சிங்கள லாபியின் இன்னொரு வெற்றியாகவோ தான் கருத இடமிருக்கிறது.

இந்த விவகாரம் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஏனென்றால் மதச்சார்பற்ற ஒரு தேசம் தன்னுடைய சட்டத்தில் மத ரீதியான பாகுபாட்டை வெளிப்படையாக முன்வைக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கைத்  தானே முன்வந்து விசாரித்து அமீத் ஷாவின் நரித்தனத்தை அம்பலப்படுத்தி, இந்தச் சட்டத்தைக் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்திருக்க வேண்டும். ஆனால் மாண்புமிகு
நீதிபதிகள் எழுத வேண்டிய தீர்ப்புகளின் எழுதுகோல்களை இரண்டு குஜராத்திகளும் தங்கள் சட்டைப் பையில் அல்லவா பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்?

அரசியல் சாசனத்தையே கேலி செய்யும் கறுப்புச் சட்டம் இது. அவர்கள் மொழியிலேயே உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ‘கருவறையிலேயே நிகழும் சாஸ்திர விரோதம்’. பிறகெப்படி இதனை படித்தவர்களும் ஆதரிக்கிறார்கள் என்கிற கேள்வி வரலாம். மோடியும் அமீத்ஷாவும் இப்போது திறந்து வைத்திருப்பது வரலாற்றின் கதவுகளை. நாம் யாரிடமாவது கேள்வி கேட்டால் அவர்களுடைய பதில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து வரும். அமீத் ஷா மேடையிலேயே இரண்டு சட்டங்களையும் இணைத்துப் பேசினாரே, பிறரைக் குறிக்க ஒரு சொல்லும், இஸ்லாமியர்களைக் குறிக்க வேறோரு சொல்லும் பயன்படுத்தினாரே என்று கேட்டால் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை. மாறாக கஜினி ஏன் சோமநாதபுரம் கோவிலை கொள்ளையடித்தார் என்று திருப்பிக் கேட்பார்கள். பிரதமரும், உள்துறை அமைச்சரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்களே என்று சுட்டிக் காட்டினால், கில்ஜி ராஜபுத்திரப் பெண்கள் தீக்குளிப்பதற்கு காரணமாக இருந்ததைச் சொல்லி வாதிடுவார்கள். ஆப்கானிஸ்தான் இந்திய எல்லையைப் பகிர்கிறதா என்று கிடுக்கிப்பிடி போட்டால் நம் கைகளை உதறி விட்டு, ஔரங்கசீப் விதித்த ஜிஸ்யா வரியை நம்மை ஜிஎஸ்டியாக கட்டச் சொல்வார்கள். ஆம்; வரலாற்றின் குடுவைகளுக்குள் புகுந்து ஆவியாகி விட்ட மனிதர்களிடம் தான் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முடிவில் ‘D’ என்று கட்டம் கட்டப்பட்டு, ஆதாரங்களை சரிவர சமர்ப்பிக்க முடியாமல், டிரிப்யூனல் கோர்ட்டாலும் கைவிடப்படுகிற கோடிக்கணக்கானவர்களின் கதி என்ன? அவர்களை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? அவர்கள்  வாழ்வாதாரங்களுக்கு என்ன செய்வார்கள்? அண்டை நாடுகள் எந்த அகதிகளையும் ஏற்க முடியாது என்று அறிவித்து விட்ட பிறகு அரசாங்கம் இந்தப் பொருளாதார இழப்பை எப்படி சமாளிக்கப் போகிறது? நிரூபிப்பதற்கான கால இடைவெளியில் லஞ்சம், ஊழல் மலிந்த நம் நாட்டில் அரசு எந்திரத்தை எப்படிக் கையாளப்போகிறோம்? என்று நாம் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருக்காது. காரணம் அது குறித்து அவர்கள் யோசிக்கவே இல்லை. ‘அந்த பஸ்ஸ மலை உச்சில நிப்பாட்டி தள்ளி விட்டுட்டு, நீ இந்தப் பக்கம் குதிச்சிடு’ என்று எவனோ ஓட்டுநருக்கு அலைபேசுவதைப் போல் தான் சகலமும் நிகழப் போகிறது. பணமதிப்பிழப்பு விவகாரத்தில் நிகழ்ந்ததை விடவும் பல மடங்கு குளறுபடிகள் இந்த தேசத்தில் நிகழக் காத்திருக்கின்றன. நியாயமாகப் பார்த்தால் 2014-ல், ‘மோடியை குஜராத் கலவரத்தை வைத்துப் பார்க்காதீர்கள். அதை  மறந்து விட்டு வளர்ச்சியின் நாயகனாகப் பாருங்கள்’ என்று சொன்ன ஒவ்வொரு நபரும் தன் செருப்பை எடுத்துத் தானே அடித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. காரணம் ஏற்கனவே சு. சாமி எனும் கரடியே காறித்துப்பிய இந்தியப் பொருளாதாரம், இந்தச் சமூகவியல் பேரழிவு நிகழ்ந்தால், அதற்குப் பிறகு எழவே முடியாத பாதாளத்திற்குள் போய் புதைந்து விடும்.

அஸ்ஸாமில் முன்னாள் ஜனாதிபதி குடும்பம், முன்னாள் துணை முதல்வர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்று சகலரையும் காவு வாங்கி விட்டு,  43 லட்சத்தில் தொடங்கி 19 லட்சம் பேரை தெருவில் நிறுத்தி, பல ஆயிரம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிற இந்தச் சட்டத்தின் அபாயத்தை இன்னும் இந்தியர்களை உணர விடாமல் செய்து கொண்டிருப்பது மதவெறியன்றி வேறென்ன? அஸ்ஸாமில் நிகழ்ந்த சமூகவியல் பேரழிவை அமீத் ஷா ஒரே வரியில், ‘அது ஃபெயிலியர் மாடல்’ என்று கடந்து செல்கிறார். தண்டனை கொடுக்க வேண்டியவனுக்குப் பதிலாகக் கூட்டி வந்த காவலனைச் சுட்டு விட்டு சலனமே இல்லாமல் கெக்கெக்கன்னு சிரித்து விட்டு, ‘பழைய துப்பாக்கி  இல்ல மாப்ள.‌‌ குறி தவறிருச்சு..இப்ப பாரேன்’ என்று மீண்டும் குறிபார்க்கும் சினிமா வில்லனை அல்லவா உள்துறை அமைச்சராக்கித் தொலைத்து வைத்திருக்கிறோம்?

இதே சட்டம், ‘அதெல்லாம் தெரியாது. எல்லாவனும் ஆவணம் காட்டனும்.. அப்பனோட பிறந்த சான்றிதழ் தரனும். வீட்டுப் பத்திரம் காட்டனும்… இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன்.. எல்லாவனும். எவனுக்கும் விதிவிலக்கு கிடையாது’ என்று கூறியிருந்தால் பொது சமூகத்தில் இந்த மயான அமைதி நிலவியிருக்குமா? நம்மைப் பற்றித் தெரிந்தே அல்லவா அந்தப் பாகுபாட்டை அமீத் ஷா பிஸ்கெட்டாகத் தூக்கிப் போட்டிருக்கிறார். முஸ்லீம் அல்லாத பிறர் போராடுகிறார்கள். உண்மை தான். ஆனால் அவர்கள் எல்லோரும் யார்? நம் வீட்டு பாத்ரூமில் குண்டி கழுவ தண்ணீர் வரவில்லை என்று லேசாக சத்தம் போட்டாலும் கூட ஓடிப்போய் முனிசிபாலிட்டி முன்னால்  நிற்கும் கம்யூனிஸ்டுகள். இனத்திற்காகவும், மொழிக்காகவும் எப்போதும் ரத்தம் சிந்தத் தயாராய் இருக்கிற நேர்ந்து விடப்பட்ட திராவிட, தமிழ்த்தேசிய ஆடுகள், எவன் வீட்டு வாசலில் காக்கிச் சட்டையைப் பார்த்தாலும் அன்றைக்கு தன் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டு காவல் நிலையத்திலேயே பொழுதைக் கழிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இவர்கள் தானே? ஆனால் குடிமைச் சமூகம்?

இதுவரை வீதியிலேயே நாம் பார்த்திராத ஆயிரக்கணக்கான பெண்கள் புர்காவுடனும் கைக்குழந்தையுடனும் போராட்டக் களத்திற்கு வந்து காவல்துறை அடக்குமுறையைச் சந்தித்து இந்த இரண்டு மாதங்களில் வீதிகளையே வீடுகளாக்கிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய சகோதரர்களுடன் எப்போதும் இருக்கிற சிலர் தானே இருக்கிறோம்? மத ரீதியான ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற ஓட்டுப் போட்டு விட்டு, சட்டமன்றத்தில் தீர்மானம் கூட நிறைவேற்ற முடியாது என்று அடம் பிடித்து விட்டு, உக்கிரமாக எதிர்க்காமல் லேசாக முணுமுணுத்து விட்டு, அவர்களே போராடட்டும் என்று வேடிக்கையும் பார்த்து விட்டு, இப்போது ‘மத ரீதியாக கோஷம் போடுறது தப்பு ப்ரோ’ என்று இலவச அறிவுரைகளை மட்டும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?

கடைசியாக மோடி, அமீத் ஷா எதிர்பார்த்தது தான் நிகழ்ந்து விட்டது. மாணவர்கள், இடது சாரிகள் என்று தொடங்கிய இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இஸ்லாமிய குடிமைச் சமூகம் என்பதையும் தாண்டி இயக்கங்கள் தங்கள் ஆலாபனையைத் தொடங்கி விட்டன. வரலாற்றுப் பெருமிதங்களை சில மார்க்கப் புலிகள் உளறி வைக்க, மீசை கூட முளைக்காத வயதில் ஜெயில் பறவையாகத் துடிக்கும் சில பொடியன்கள் வாய்க்கு வந்ததைப் பேச, வாட்ஸ்அப் வீடியோக்கள் தீயாகப் பரவி அவர்கள் நினைத்ததைச் செய்து கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு நம் முதலமைச்சர் காந்தியவாதிகளான காவல்துறையினரின் பெருமைகளை சட்டமன்றத்தில் இயேசுநாதரின் மலைப்பொழிவைப் போல விளக்கிக் கொண்டிருக்கிறார். நியூட்டன் பார்த்த ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்த கேஸையும் திமுக மீது எழுதுகிற ஒருபோதும் வயதுக்கு வராத அறிவுஜீவிகள் இந்த வாழ்வாதாரப் பிரச்சினையை திமுக X பிஜேபியாகத் திரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லோருடைய கனவுகளிலும்,சொற்களிலும் வரலாறு நுரைத்துக் கொண்டேயிருக்கிறது. வரலாற்றின் பழி தீர்த்தலை அமீத் ஷா எனும் சாமியாடி சகலரின் மீதும் தெளித்து விட்டிருக்கிறார். அங்கங்கு கிடைக்கும் வேப்பிலைகளோடு பலரும் சாமியாடிக் கொண்டிருக்கின்றனர். 56 இன்ச் மார்பால் எந்த நன்மையும் நிகழப் போவதில்லை என்று தெரிந்து விட்ட பிறகும் தம் நம்பிக்கை தோற்று விட்டதாய் இருக்கக் கூடாது என்கிற வறட்டு பிடிவாதத்தாலேயே அவர்கள் கண்ணை மூடியபடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவிழ்ந்து விழும் வேட்டிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. தீர்த்தம் செய்யும் வேலை அது. எவர் கண் அவிந்தால் என்ன? நம் கண்தான் மூடிக் கிடக்கிறதே? அதுவே போதும்.

இந்தப் போராட்டங்கள் இவ்வளவு இடங்களில், இத்தனை நாட்கள்  நீடித்தும் நான் ஒரு இன்ச் கூட போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றதாகக் கருதவில்லை.

அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

1. இந்தப் போராட்டங்களை மட்டுமல்ல; இதன் விளைவாகக் கலவரங்களும் நிகழ வேண்டும் என்கிற கணக்குடன் தான் பிஜேபி இந்தச் சட்டத்தையே கொண்டு வந்திருக்கிறது. இந்து சிவில் சமூகத்தின் அமைதியே தாங்கள் செய்யும் அனைத்திற்குமான உந்துவிசை என்று அது கருதுகிறது. அவர்களின் எண்ணப்படியே இதுவரை சகலமும் நிகழ்ந்திருக்கின்றன.

2. எப்போதுமே இந்துத்துவாவினர் பிறருடன் உரையாடவே விரும்பாத தரப்பு. அவர்கள் பாணி இரண்டு தான். ஒன்று சுவடே இல்லாமல் ஒளிந்திருப்பார்கள். இல்லையென்றால் ஊரையே கொளுத்த ஆயத்தமாவார்கள். தலைமறைவுக் காலத்தில் அவர்கள் வேலையே  மண்ணெண்ணெய், தீப்பந்தம் ஆகியவற்றைத் தேடித் தேடி சேர்த்து வைப்பது தான். இது அவர்களுக்கு இரண்டாம் காலம்.

3. ‘என்ன ஆனாலும் ஒங்களுக்கு குடியுரிமை உண்டு’ என்கிற சட்டத்தின் ஓட்டை அவர்களுக்கே தெரியாமல் ஆழ்மனதிற்குள் ஊடுருவி பொது இந்து சிவில் சமூகத்தை அமைதியாக்கி விட்டது. மனசாட்சி உள்ள நல்லவர்கள் ‘ச்சே பாவம்’ என்று அனுதாபப்பட்டு கொஞ்ச நேரம் கோஷம் போட்டோ, சப்பாத்தி சுட்டுத் தந்தோ தம் குற்ற உணர்வை சாந்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

4. இதை எதிர்கொள்வதற்கு காந்தி போன்ற பொதுத் தலைமையோ, ஆசாத் போன்ற சமூகத் தலைமையோ இங்கில்லை. இதை அடித்து நொறுக்குவதற்கு ஒத்துழையாமையை விட மிகப்பெரிய ஆயுதம் இல்லை.

5. பல இஸ்லாமியர்களின் மனதில் அவர்களையும் அறியாமல் வஹாபியர்களாலும் முல்லாக்களாலும் விதைக்கப்பட்ட, ‘அரசியல் இஸ்லாமும் அதன் விளைவாக நிகழ்ந்த கலாச்சாரத் துண்டிப்புகளும்’ இந்த இக்கட்டான தருணத்தில் மிகப்பெரிய பூதமாகி அவர்களின் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறது.

6. தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கத் தலைமைகளின் குழுவாதமும், சுயநலமும், தொலைநோக்கற்ற செயல்பாடுகளும், உணர்ச்சியைத் தூண்டும் தவறான பேச்சுகளும் அவர்களை இன்னும் பிறரிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

7. நிறைய இடங்களில் போராடினாலும் கூட எதிர்க்கட்சிகள் தேர்தல் அரசியலைத் தாண்டி இப்பிரச்சினையின் ஆழத்தை உணரவேயில்லை. ஒருவகையில் நம் தேர்தல் அரசியலின் தோல்வி அது. பொது சிவில் சமூகம் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் சூழலில் தாங்கள் ஓரளவுக்கு மேல் இங்கு ஈஸிக் கொண்டிருப்பது சரியாகுமா என்கிற கணக்கு தார்மீக ரீதியாக தவறுதான் என்றாலும் தேர்தல் அரசியல் கோணத்தில் சரிதானே? தெரிந்தே கிணற்றில் விழ யார் யோசிப்பார்கள்?

நாம் எவ்வளவு முற்போக்காகப் பேசினாலும் இந்தப் பிரச்சினையின் வலியை இஸ்லாமியனைப் போல் பிறரால் உணர முடியாது. தீண்டாமை குறித்த தலித் சகோதரனின் ஊமை வலிக்கு நிகரானதே இது.

மேடைகளில் எல்லோரும் மோடியைத் திட்டி விட்டுப் போய்விடுவார்கள். நாடகங்கள், பட்டிமன்றங்கள், உரை வீச்சுகள் எல்லாம் மெல்ல மெல்லத் தேயும். சட்டமன்றம், நாடாளுமன்றம் எதை முற்றுகையிட்டாலும் அவர்கள் அசரப் போவதில்லை. அவர்கள் காத்திருப்பது ஒரே ஒரு கலவரத்திற்கு. அந்த முதல் பெரிய கலவரம் இஸ்லாமியர்களால் நிகழ வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அப்படி நிகழ்ந்தால் தான் அதைக் காட்டிக் காட்டியே பேரழிவுகளை நிகழ்த்த முடியும். டயனோசரோடு பேசுவதற்கு திருக்குறள் என்ன? புறநானூறு என்ன? எல்லாம் ஒன்றுதான்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், வீடுகளுக்கு  வரப் போகிற அரசு ஊழியர் குறித்த பதட்டம் ஒரு இஸ்லாமியனுக்கும் இந்துவுக்கும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை. இங்குள்ள மாநில அரசு முழுமையாக டெல்லியின் காலில் விழுந்து கிடக்கிறது. இப்படி தொடர் போராட்டம் செய்கிற ஜமாத் அமைப்புகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எப்படி ஜமாஅத்தாக எதிர்கொள்வது? சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு எப்படி பதில் தருவது? என்கிற ரீதியில் இன்னும் யோசிக்கவேயில்லே. ஆம்; ஒத்துழையாமையைத் தவிர மற்ற எல்லா ஆயுதங்களும் இங்கு தோற்றுத்தான் போகும். தேசம் முழுவதும் ஒத்துழையாமையை நிகழ்த்துகிற அளவிற்கான தலைமையும், மன வலிமையும், உணர்ச்சிவசப்படாத நிதானமும், அறிவுப்பூர்வமான தொடர் செயல்பாடுகளும் இஸ்லாமிய சமூகத்திடம் இருக்கின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

1980-ல் பிறந்த எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. நான் தாத்தா வீட்டில் வளர்ந்தவன். என் தந்தை, தாய் குறித்த எந்தச் சான்றிதழும் என்னிடம் கிடையாது. வருகிறவர்களிடம் பத்திரத்தை எடுத்துக் காட்டுவதற்கு சொந்த வீட்டைக் கூட என் தாத்தனோ, தந்தையோ கட்டி வைக்காமல் நட்டாற்றில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். உணர்வோடு படித்த கல்விச் சான்றிதழ்கள் இருக்கின்றன. அலைந்து அலைந்து வாங்கிய ஆதாரும், ரேசன் கார்டும் இருக்கின்றன. கொஞ்சம் கஷ்டப்பட்டு வாங்கிய வங்கிக் கணக்கு புத்தகமும், ஸ்மார்ட் கார்டும், PAN கார்டும் இருக்கின்றன. போலீசுக்கு கொஞ்சம் மொய் அழுத பிறகு வந்து சேர்ந்த கடவுச்சீட்டு இருக்கிறது. ஆனால் குடியுரிமைக்கு இவையெல்லாம் செல்லாதாமே என்கிற கேள்வி இந்த நொடியில் என்னை அறைய, எழுதும் விரல்கள் மெல்ல நடுங்குகின்றன. என்னை அடைக்கப் போகும் கேம்ப்பில் எழுத அனுமதிப்பார்களா? எழுதுவதற்காக  அலைபேசியையாவது என்னிடம் விட்டு வைப்பார்களா? இந்தியாவில் மானசீகனின் அடையாளமாக எஞ்சப் போவது அவன் எழுதிய நூல்களோ, ஆற்றிய உரைகளோ, வகித்த பதவியோ அல்ல.. முகம் தெரியாத முள்வேலி முகாமின் ஏதாவது ஒரு எண்தானா?

ஊரறிந்த எனக்கே இப்படி ஒரு அச்சம் வருகிறதென்றால் பள்ளிக்கூடத்துக்கு போகாத கறிக்கடை பாயும், புரோட்டா மாஸ்டர்களும், பீடி சுற்றுகிறவர்களும், ஆட்டோக்காரர்களும், குடை ரிப்பேர் பண்ணுகிறவர்களும், ஜவுளிக் கடை சிப்பந்திகளும் என்ன விதமான அச்சத்தில் ஆழ்ந்திருப்பார்கள்? ஒருவனை ஊரறியச் சுடுவதோ, தூக்கில் போடுவதோ மட்டுமே கொலை அல்ல. அவன் பிறந்த மண்ணில் அந்நியனாக உணர வைத்து அச்சத்தின் மடியில் கிடத்தி விடுவதும் கொலைதான்.

சாவதற்கு முந்தைய கடைசி மணித்துளிகளிலும் இந்த மண்ணில் தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்காக யோசித்த பேரன்புக் கிழவா! நீ அவதரித்த அதே மண்ணில் அசிங்கங்களாக முளைத்து வந்த இருவரும் எங்களை மொத்தமாகக் கொன்று விட்டதை நீ எங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்?