கோ யுன் கவிதைகள் – தமிழில்: வே.நி. சூர்யா

0 comment

இவர் தென் கொரியாவின் முன்னணி கவிஞர். முன்னாள் பெளத்த துறவி. ஆசிய நிலக்காட்சிகள், பெளத்தம், கொரிய யுத்தத்தின் எதிரொலிகள் போன்றவற்றால் ஆனது இவருடைய கவியுலகம். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் அவருடைய “First Person Sorrowful” மற்றும் “What?: 108 Zen Poems” ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

கோ யுன் (1933- )

பனிப்பொழிவு

ஓராயிரம் வருடங்களுக்கு முன்பு நான் நீயாக இருந்தேன்.
ஓராயிரம் வருடங்களுக்குப் பின்பு நீ நானாக இருப்பாய்.
எல்லா காதுகளாலும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பனி விழுந்து கொண்டிருக்கிறது பின்னிரவில்.
மௌனமாய்.
மிக மௌனமாய்.
நாமிருவரும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

*

வெள்ளை வண்ணத்துப்பூச்சி

கவனி.
ஒரு வெள்ளை வண்ணத்துப்பூச்சியும் ஞானத்தின் ஆவியும்
முட்டாள் சமுத்திரத்தின் மேலே
பறந்து கொண்டிருக்கிறது.
உலகத்தின் எல்லா புத்தகங்களும் மூடிக்கொள்கின்றன.

*

இரண்டு பிச்சைக்காரர்கள்
தங்களுக்கு அளிக்கப்பட்ட உணவை
பகிர்ந்து கொள்கிறார்கள்.
உக்கிரமாய் ஒளிர்கிறது
புது நிலவு.

*

குழந்தை

நீ பிறப்பதற்கு முன்பு
உன் தந்தைக்கு முன்பு
உன் தாய்க்கு முன்பு
அங்கே உன் இரைச்சல் இருந்தது.

*

ஆந்தை

ஆந்தையே
மதிய வேளையில்
பளபளக்கும் கண்களுடன்
ஒன்றையும் பார்க்க முடியாது.
பொறு,
உன்னுடைய இரவு நிச்சயமாக வரும்!

*

தக்லாமகான் பாலைவனம்

நான் ஏன் தக்லாமகான் பாலைவனத்திற்கு செல்கிறேன்
நான் ஏன் அங்கே போகிறேன்
பதினாறு வயது கனவிலிருப்பவனை மாதிரி
நான் ஏன் தக்லாமகான் பாலைவனத்திற்கு செல்கிறேன்
அங்கே சூன்யம் உள்ளது
நான் ஏன் தக்லாமகான் பாலைவனத்திற்கு செல்கிறேன்
எழுபந்தைந்து வயதில் பிரகாசமான பகல் வெளிச்சத்தில்
எல்லா பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் விட்டுவிட்டு
அங்கே மகத்தான சூன்யத்தின் அழுகை உள்ளது
நான் ஏன் தக்லாமகான் பாலைவனத்திற்கு செல்கிறேன்
இனிமேலும் என்னால் தாக்குப்பிடிக்க இயலாது
உலகத்தின் பேராசையையும் என்னுடையதையும்
அங்கே சகவாசத்திற்கு ஓராயிரம் வருடப் பழைய மண்டையோடு உள்ளது.

*

முணுமுணுப்பு

மழை பெய்து கொண்டிருக்கிறது
நான் என் மேசையில் அமர்ந்திருக்கிறேன்
மேசை மென்மையாகப் பேசுகிறது:
முன்பு நானொரு மலராகவும் இலையாகவும் தண்டாகவும் இருந்தேன்.
தரையினடியில் நீண்ட வேராக இருந்தேன்.
பாலைவனச்சோலை வரை நீண்டு கிடந்தேன்.
மேசை மீதிருந்த இரும்புத்துண்டு சொன்னது:
நான் நிலவொளிரும் இரவுகளில் தனித்திருந்து
ஊளையிடும் அமைதியின் உள்நாக்காக இருந்தேன்.
மழை நிற்கிறது.
நான் வெளியே செல்கிறேன்.
முழுமையாய் நனைந்த புல் என்னிடம் பேசுகிறது:
முன்பு நான் உன்னுடைய மகிழ்ச்சியாகவும் துக்கமாகவும் இருந்தேன்.
நானே உன் வரலாறாகவும் பாடல்களாகவும் இருந்தேன்.
இப்போது நான் சொல்கிறேன்
மேசையிடமும்
இரும்பிடமும்
பூமியிடமும்:
முன்பு நான் நீயாக இருந்தேன்..
ஆனால் இப்போதோ நான் நீயாக இருக்கிறேன்.

*