அமைதி என்பது… – எம். கோபாலகிருஷ்ணன்

0 comment

பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி நின்றேன். வலதுபக்கமாய் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் நீண்ட கட்டடம். சுவரையொட்டிய அடர்ந்த புதர்களில் நனைந்த டேலியா பூக்கள். இலைகளில் ஈரம். கட்டடத்துக்குப் பின்னால் நெருப்பைக் கண்டதும் அருகில் விரைந்தேன். தரையில் கிடந்த சுள்ளிகளையும் கட்டைகளையும் தாண்டி நின்றேன். தீயின் கதகதப்பு குளிரை விரட்டியது. அடுப்பில் விறகு எரிந்து கொண்டிருந்தது. பையை ஓரமாக வைத்து விட்டு தீயில் கைகளைக் காட்டி கன்னத்தில் வைத்துக் கொண்டதும் நடுக்கம் மட்டுப்பட்டது.

செந்தழல் விறகில் பற்றி எரிகிறது. மஞ்சளும் சிவப்பும் நீலமுமாய் நிறங்கள் எரிவதைப் பார்த்த போது புகைக்க ஆவல் கிளர்ந்தது. மறுகணமே எழுந்தேன். நெற்றியில் வடிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு பாதைக்கு வந்தேன். இன்னும் பனியின் அடர்த்தி குறையவில்லை. இடதுபக்கமாய் ஓடுகள் வேய்ந்த கட்டடம். சாத்திக் கிடந்த கதவுடனான வாசலில் பனியில் கரைந்த மஞ்சள் வெளிச்சம். நேரெதிரில் பேரிமரம் அசையாது நின்றது. சற்றே தள்ளி இடதுபக்கமாய் சிவப்பு வண்ணத்துடன் அழகிய கட்டடம். பெரிய கண்ணாடி ஜன்னல்களுக்குப் பின்னே வெண்திரைகள். கூரையின் முகப்பில் மர வேலைப்பாடுகள். கொடிகள் அடர்ந்த வாசலிலும் மஞ்சள் வெளிச்சம்.

எங்கே போவது?

யாரும் விழித்திருக்கவில்லை போலும். படிகளில் ஏறி நீண்ட கட்டடத்தின் முகப்புக்கு வந்தேன். கண்ணாடி ஜன்னல்களுடன் அறுகோண வடிவில் அழகிய முன்பகுதி. கதவைத் தள்ளினேன். திறந்தது.

சட்டென உள்ளே புகுந்து கதவை அடைத்தேன். பையை மேசையில் போட்டுவிட்டு உள்ளங்கைகளைத் தேய்த்தபடியே எட்டிப் பார்த்தேன். நீண்ட கூடத்தின் இருபுறமும் அறைகள். மெல்ல நடந்தேன். அறைக் கதவுகள் சாத்திக் கிடந்தன. கடைசியில் தண்ணீர்த் தொட்டி. இருபுறமும் கழிப்பறைகள். தண்ணீர்த் தொட்டியின் மூடியை நீக்கியதும் ஆவி பறந்தது. வெந்நீர் அடுப்பு இந்தத் தொட்டியைத் தான் சூடேற்றுகிறதோ? கோப்பையில் நீரை அள்ளி மெல்ல முகத்தைக் கழுவினேன்.

எதிரில் சுவரில் பதித்த முகம்காட்டும் சிறு கண்ணாடி. தலையைக் கோதிக்கொண்டே முகத்தைப் பார்த்தேன். தூக்கக் கலக்கம் இன்னும் விலகாத கண்கள். ஒருமணி நேரம் தூங்க முடிந்தால் தேவலை.

கூடத்துக்கு வந்து இருக்கையில் அமர்ந்தேன். யாரும் வரும்வரையிலும் காத்திருக்கத் தான் வேண்டும். உடலைச் சரித்து கால்களை நீட்டிக்கொண்டதும் அலுப்பு கண்களை மூடச் செய்தது.

இந்தக் குளிர்காலையில் எதற்காக இங்கே காத்திருக்கிறேன்? எதைத் தேடி இத்தனை தொலைவு வந்திருக்கிறேன்? இத்தனை காலமும் கால்களின் பின்னோடி வரும் எல்லா துரதிர்ஷ்டங்களையும் துயரங்களையும் தோல்விகளையும் இப்படியொரு இடத்துக்கு வந்திருப்பதால் தவிர்த்துவிட முடியுமா? கதவுக்கு வெளியே உடலைத் தீண்டக் காத்திருக்கும் குளிரைப் போல அவை அனைத்துமே நிதானத்துடன் காத்திருக்கவே செய்யும்.

விளம்பர நிறுவனத்தில் கிடைத்த அந்த வேலையைத் தொடர முடிந்திருந்தால் இங்கே வந்திருக்கத் தேவையில்லை. மாயவரத்தைச் சேர்ந்த நண்பரின் பரிந்துரையுடன் ஜெயன் ஏற்பாடு செய்து தந்த வேலை. பழவந்தாங்கலில் இருந்து மின்சார ரயிலேறி கிண்டியில் இறங்கி பதினைந்து நிமிடங்கள் நடந்தால் போதும். பதினோரு அடுக்குகள் கொண்ட கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் வெளியுலக ஓசைகளை அனுமதிக்காத குளிரூட்டப்பட்ட அலுவலகம். அரைவட்ட மேசைக்கு அப்பால் கணிணியைப் பார்த்தபடி தொலைபேசியில் உரையாடிக் கொண்டே தலையை அலட்சியமாகத் திருப்பி கண்களால் விசாரிக்கும் அழகிய இளம்பெண்கள். அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட தடுப்புக்குள் அவரவர் வேலைகள். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ஊடகத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவில் பொருத்தமான படங்களையும் கச்சிதமான வாசகங்களையும் வசீகரமாக அமைப்பது தான் வேலை. கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்பதைத் தவிர நேரக்கட்டுபாடு எதுவும் கிடையாது என்பது எனக்கு தோதான ஒன்றுதான்.

மதிய உணவும் இரவு சிற்றுண்டியும் இடையிடையே தேநீரும் தரப்படுகிற வசதியும் பசித்துக் கிடக்கும் என் அன்றாடத்துக்கு அற்புதமான வரம்தான். இதைவிட வேறென்ன வேண்டும்? சித்திரம் எழுதுவதும் கவிதை போல் பொருத்தமான வாசகங்களை எழுதுவதும் எனக்குப் பிடித்தமானது தானே? பிறகு ஏன் ஒரு வாரம்கூட அங்கே என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை? இரண்டாவது நாள்தான் எனக்கு வேலையே தரப்பட்டது. அந்த வாரத்தின் கடைசி நாள் வரையிலும் என்னால் எதையுமே செய்யமுடியவில்லை. மனம் வெறுமையில் ஆழ்ந்திருந்தது. ஒரு கோடுகூட வரையாத போதும் யாரும் எதுவும் கேட்கவில்லை. பார்வையிலோ புன்னகையிலோ மாற்றமில்லை. நானேதான் தீர்மானித்தேன். புறப்படும் போது மேசையில் சிறு குறிப்பாக என் விடைபெறலை எழுதிவிட்டு வந்துவிட்டேன்.

தொலைபேசியில் சொன்னபோது ஜெயனுக்கு சற்று வருத்தம்தான். ஆனால் அவரிடம் சொன்னதுமே மனத்தில் அதுவரையில் இல்லாததொரு அமைதி.

இரண்டு மாதத்துக்குப் பிறகு மீண்டும் ஜெயன்தான் குருகுலத்துக்கு வந்து சிலநாள் தங்கியிருக்கலாம் என்று ஆலோசனை சொன்னார். ‘உலகளவிலான கலை, இலக்கிய மேதைகளின் ஓவிய வரிசை ஒன்றை குரு சைதன்யா திட்டமிட்டிருக்கிறார். அவருடன் இணைந்து நீங்களும் சில ஓவியங்களை வரையலாம்’ என்று சொல்லியிருந்தார்.

கூரையில் எதுவோ விழுந்து உருளும் சத்தம் கேட்டு கண்விழித்தேன். என்னை மூடியிருந்த கம்பளிப் போர்வையை விலக்கினேன். எங்கிருந்து வந்தது இது? ஜன்னல் கண்ணாடிகளில் நீர்த் துளிகள் வழியும் தடம். பனி விலகியிருந்தது. குதூகலமான இளவெயில். சுவரிலிருந்த படத்தில் திபெத்திய சிறுமி இடுங்கிய கண்களுடன் மலரச் சிரித்தாள். எழுந்து வெளியே வந்தேன். ஈர இலைகள் வெயிலில் மின்னி அசைந்தன. அடர்த்தியான வண்ணங்களுடன் கையகல டேலியா பூக்கள். தாமரை வடிவத்தில் சாம்பல் பச்சையுடன் கள்ளியைப் போல் தரையில் இருப்பது மலரா செடியா? பனியில் கரைந்த ஒளி படர்ந்த தேயிலைச் சரிவுக்கு அப்பால் யூகலிப்டஸ் மரங்கள்.

“வாங்க”, உற்சாகத்துடன் எதிரில் வந்தார் மணி.

“எப்ப வந்தீங்க? உங்களைத் தான் தேடிட்டிருந்தேன்”. எப்போதும் போல நான் சற்றே விலகி நின்றேன்.

“கொஞ்ச நேரமாச்சு. பாத்தேன். நீங்க நல்லா தூங்கிட்டிருந்தீங்க. அதான் எழுப்பலை.” கருப்பு ஜெர்கினை கழற்றி சுருட்டி மரத்தடியில் நின்ற வாகனத்தில் வைத்தார்.

“டீ சாப்பிடலாமா?” ஓட்டுக் கட்டடத்தை நோக்கி சரிவில் இறங்கினார். மெதுவாகப் பின்தொடர்ந்தேன். கேரட் தோட்டத்தில் நீர்தெளிப்பான் சுழன்றுகொண்டிருந்தது. துளிகள் வெயில்பட்டு மணிகள் போல் தெறித்து விழுந்தன.

“மணி, யாரையுமே காணோம்?” தயக்கத்துடன் கேட்டேன். பள்ளத்திலிருந்த வீட்டின் கான்கிரீட் கூரை மீதிருந்து பொமரேனியன் குரைத்தது.

“இருக்காங்களே. காலையிலே நீங்க வந்தபோது யாரையும் பாத்துருக்க முடியாது. குரு வாக்கிங் கௌம்பிட்டார். மத்தவங்களும் போயிருக்காங்க”. மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். குப்பென்ற பச்சை வாசனை.

“வணக்கம் சாமி”. மணி கைகூப்பியபோது அடுப்பெதிரிலிருந்தவர் திரும்பினார்.

“ஓ மணி… வரணும். வரணும்” வெண்தாடி அடர்ந்த முகம் முழுக்க சிரிப்பு. வெள்ளை உடுப்பின் மீது பழுப்பு ஸ்வெட்டர். சற்றே உயரம் குறைவான திடமான தோற்றம்.

“இவர்தான்…” மணி என்னை அறிமுகப்படுத்துவது போலத் தொடங்கினார். அதற்குள் அவரே சற்றே பெரிய வெண்பற்கள் தெரியச் சிரித்தார். “ஞான் கண்டிட்டு… நல்ல தூக்கம். தணுப்பு வேற. வரணும். வணக்கம்” என்று கைகூப்பினார்.

நானும் கைகூப்பினேன். கண்களிலும் முகத்திலும் பேச்சிலும் தொனித்த நெருக்கம் என்னை ஈர்த்தது.

கெட்டிலிலிருந்து சூடான தேநீரை கண்ணாடித் தம்ளர்களில் வார்த்தார். “கட்டன் சாயா.”

பெஞ்சில் உட்கார்ந்து தேநீரைப் பருகத் தொடங்கியதும் அவர் பீன்ஸ்களை நறுக்கலானார். “யாரோ உக்காந்திருக்காங்கன்னு உள்ளே வந்து பாத்தேன். யார்னு தெரியலை. எழுப்பலாம்னு பாத்தா நல்ல உறக்கம். அதான் கம்பளியைப் போர்த்திட்டு வந்துட்டேன்.”

கூச்சத்துடன் நிமிர்ந்தேன். அவரது முகத்தில் அதே மாறாத சிரிப்பு.

“மணி, இவரை ரூமுக்கு அழைச்சிட்டு போங்கோ. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். எட்டு மணி பிரார்த்தனைக்கு வந்தா போதும். குருவைப் பாத்துடலாம்.” அவரது கைகள் வெகு இயல்பாக காய்களை நகர்த்தி அடுக்கி வெட்டிக்கொண்டிருந்தன.

“உங்க ரூமுக்கு பின்னாடி இருக்கறதுதானே சொன்னிங்க…” மணி எழுந்தார்.

“இவர் ஆர்டிஸ்ட் அல்லே. அங்க இருக்கறதுதானே செரி” கேரட்டை எடுத்து நறுக்கினார்.

“ஆர்டிஸ்ட் மட்டும் இல்லை. கவி. தமிழ்ல பிரசித்தியான கவி”. மணி என் தோளைத் தட்டினார். நான் ஒடுங்கினேன்.

“ஓ. அது விசேஷம். அப்ப அங்க இருக்கறதுதான் செரி.” சிரித்தபடியே என் முகத்தைப் பார்த்தபோது நான் அவர் கண்களைப் பார்க்கமுடியாமல் தலை கவிழ்ந்தேன்.

பிரார்த்தனை கூடத்தின் சிவப்புக்கூரையும் முகப்பில் படர்ந்திருந்த கொடிகளின் இலைகளும் நீலப்பூக்களும் கனிந்த வெயிலில் ஒளிர்ந்திருந்தன. குருகுல வளாகம் கதிரின் ஒளியில் திளைத்துக் கிடந்தது. இக்லூ வடிவிலான சிறு வீட்டின் முன்னால் மரங்களுக்கிடையே கட்டியிருந்த கொடியில் உலர்ந்திருந்தன காவி உடைகள். வாசலெங்கும் ஜாக்ரெண்டா பூக்கள். தென்புற மேட்டில் அடர்ந்த பைன் மரக் காட்டுக்கு நடுவே இரண்டு மரவீடுகள். ஒன்றின் முகப்பில் மஞ்சள் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கிழக்கு நோக்கிச் சென்ற ஒற்றையடிப் பாதையில் சற்றே சரிந்திறங்கியதும் ஓவியக்கூடம். அதற்குக் கீழே கிழக்கிலும் மேற்கிலுமாய் வாசல்களைக் கொண்ட அறைகள். கிழக்கு வாசல் அறையைத் திறந்தார் மணி. வெயில் அறைக்குள் தாவி நுழைந்தது. காற்றில் புழுக்கத்தின் நெடி. ஜன்னலைத் திறந்து வெளிர்நீலத் திரைச்சீலையை விலக்கினார். அறை நடுவே மரக்கட்டில். தலையணை அருகில் மடித்து வைக்கப்பட்ட ரஜாய். இடது பக்கம் மூன்றடுக்கு அலமாரி. மேல்தட்டில் சில மலையாளப் புத்தகங்கள். கொடியில் இரண்டு ஸ்வெட்டர்கள். வலது மூலையில் சிறிய முக்காலியின் மீது தம்ளர் கவித்து வைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில். வாசலுக்கு எதிரே ஒரு ஓவியம். புத்தரின் மூடிய விழிகள். அந்த விழிகளைத் திறக்க முயல்வது போல ஓவியத்தின் மீது சரிந்திருந்தது வெயில்.

“இப்ப யாரும் இங்க தங்கலை. நீங்க இருந்துக்கலாம். நைட்ல இந்த ஸ்வெட்டரை போட்டுக்குங்க. குல்லா இருக்கா?”

நான் எதையும் கொண்டுவரவில்லை. சிரித்தேன். மணி புரிந்துகொண்டார். “அப்பறமா நான் கொண்டு வந்து தர்றேன்.”

தரையில் இன்னும் குளிர் விடுபட்டிருக்கவில்லை. கட்டிலின் மீது கால்மடக்கி அமர்ந்தேன். வாசலை அடுத்து கம்பி வேலி. வெள்ளைப்பூக்களுடன் புதர்ச் செடிகள். மறுபக்கம் தேயிலைச் சரிவு. அதையடுத்து குன்றின்மேல் ஒரு வீடு. அதன் இருபக்கமும் அடர்ந்த மரங்கள். வளைந்தேறும் செம்மண் மலைப்பாதை. பாதையின் முடிவில் இடதுபக்கமாய் ஓடுகளும் ஆஸ்பெஸ்டாஸ்களும் வேய்ந்த வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதி. கூரைகளில் ஆண்டெனாக்கள். பின்னிக்கிடந்த வயர்கள். நடுவில் சிறு கோபுரம். உச்சியில் காவிக்கொடி.

“கிச்சன்ல பாத்தமே அவர்தான் டாக்டர் அனந்தன் சாமி. ஜெயன் சொல்லிருப்பாரே”. மணி தலையணையை முதுகுக்குக் கொடுத்து சாய்ந்தார்.

எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் தலையாட்டினேன்.

“நீங்க எது வேணும்னாலும் அவரைக் கேக்கலாம். அவருக்கு தமிழ் நல்லா தெரியும். மத்தவங்க நெறைய இருக்காங்க. தமிழ் புரியும். பதில் சொல்லத் தெரியாது. இந்த ரூமுக்கு மேலதான் ஸ்டூடியோ. பிரேயர் முடிஞ்சதும் பாக்கலாம். சாப்பாடு தான் உங்களுக்கு சிரமம்னு நெனக்கறேன். காலையில கஞ்சி இல்லை கிச்சடி மாதிரி ஏதாவது கிடைக்கும். மத்தியானம் சிவப்பு அரிசி சோறும் குழம்பும். பப்படம் இருக்கும். ராத்திரி அதுமாதிரிதான். பழக்கமிருக்காது. சமாளிப்பீங்கல்ல?” குருகுலத்தை பலவருடங்களாக அறிந்தவர் மணி.

பசியை மட்டுமே அறிந்தவனுக்கு இதெல்லாம் பொருட்டா என்ன? நான் பதில் சொல்லவில்லை. புகைக்க முடியாது என்பது பெரும் நெருக்கடியாகத் தோன்றியது. மணியிடம் கேட்க நினைத்தேன்.

“நீங்க ஸ்மோக் பண்ணணும்னா பஸ் ஸ்டாப் பக்கத்துல கடை இருக்கு. அங்கதான் போகணும். இங்க வேணாம்”, சற்றே தயக்கத்துடன் சொன்னார்.

அப்போதே அந்தக் கடைக்குப் போக நினைத்தேன். ஆனால் கடிகாரத்தைப் பார்த்தபடியே மணி சொன்னார். “குளிச்சு ரெடியானீங்கன்னா பிரேயருக்கு போயிடலாம். நான் சாமியைப் பாத்துட்டு வர்றேன்.”

பிரார்த்தனைக் கூடத்தில் பேரமைதி. ஆட்கள் தரையில் அமர்ந்திருந்தனர். புத்தக அலமாரி அருகே மணி அழைத்துச் சென்றார். தரையில் கிடந்த சிறு குஷன் மேல் உட்கார்ந்தேன். கூடத்தின் நடுவில் விசாலமான நாற்காலி. இருக்கையிலும் முதுகுப் பக்கமும் மெத்தைகள். காலடியில் சிறிய பலகை. வடக்குமுகமாய் படிகளுடனான சிறுமேடை. படிகளில் கொலுவைப் போன்று பலவிதமான பொம்மைகள். நீலமும் வெண்மையுமாய் சீன பொம்மைகள். பீங்கான் பறவைகள். அதற்கடுத்து ஆப்பிரிக்க சுடுமண் சிற்பங்கள். தொங்கு மீசையுடனான ஜப்பானிய பொம்மை சிவப்பும் நீலமுமான உடையுடன் தலைசாய்த்து நின்றது. வாத்தியங்களுடன் நடனப் பெண்கள். வீணையேந்திய சரஸ்வதி சிலையில் செம்பருத்தி மாலை. நடுவில் வெண்கலத்தாலான விநாயகர் சிலை. இருபக்கமும் நின்ற உயரமான குத்துவிளக்கின் சுடர்கள் ஒளிர்ந்திருக்க காலடியில் பூக்கள். மேடையில் அங்கங்கே சுடரேந்தி விளக்குகள் ஒளிர்ந்தன.

தென்புற அறையின் திரைச்சீலையை யாரோ விலக்க மெல்ல நடந்துவந்தார் குரு சைதன்யா. சிறு குழந்தைபோல சின்னஞ்சிறு அடிகள். உயரக் குறைவும் பருமனும் அவரது நடைக்கு அழகூட்டின. தலையில் வட்டத்தொப்பி. காவி உடுப்பின் மீது வெளிர்மஞ்சள் கம்பளி ஸ்வெட்டர். வெண்தாடி கழுத்திற்கும் கீழே அசைந்தது. சிவந்த முகத்தில் உதடுகள் தனித்து பளிச்சிட்டன.

அனைவரும் எழுந்து வணங்க நானும் எழுந்தேன். கையை உயர்த்தியதும் எல்லோரும் இருக்கையில் அமர்ந்தனர். நான் நின்றுகொண்டேயிருந்தேன். அவர் நிமிர்ந்து ஒருகணம் என்னைப் பார்த்தார். அகலமான கண்ணாடிக்குள் இடுங்கிய சிறுகண்களின் கூரிய பார்வை என்னைத் தொட்டு மீண்டது. உட்கார்ந்தேன்.

இருக்கையில் அமர்ந்த கணத்தில் மணியொலித்தது.

“ஒவ்வொண்ணாய் தொட்டெண்ணி…” நாராயணகுருவின் பிரார்த்தனைப் பாடலை அனைவரும் சேர்ந்திசைத்திருக்க நான் கண்களை மூடியிருந்தேன். சொற்கள் அர்த்தமின்றி செவிகளில் மோதியிருக்க எனக்குள் அந்தப் பார்வை மட்டுமே தளும்பியிருந்தது.

பாடல் முடிந்ததும் கண்களைத் திறந்தபோது தீபங்களில் ஒளியில் அவர் முகத்தைக் கண்டேன். ஆழ்ந்த யோசனையுடன் உற்றுப் பார்த்திருந்தவரின் உதடுகள் மெல்ல அசைந்தன.

“இன்று காலையில் ராபர்ட் ஃபிராஸ்டின் ஒரு கவிதையைப் படித்தேன். ‘வேலியைச் சரிசெய்தல்’ என்பது தலைப்பு” கரகரப்பான குரல். உற்றுக் கவனிக்காமல் போனால் சொற்களை தவறவிட நேரும். பிறகு அதைத் தொடர்வது கடினம். அவர் நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். காலடியில் அமர்ந்திருந்த இளம் துறவி ஒருவர் அவர் சொல்வதை எழுதிக்கொண்டிருந்தார். சிறு அசைவுமின்றி அனைவரும் அவரது சொற்களிலேயே கவனத்தைக் குவித்திருந்தனர்.

மெல்ல மெல்ல அந்தச் சொற்கள் மந்திரம் போல் ஒலித்தன. கண்களை மூடிக்கொண்டேன். ஒவ்வொரு சொல்லும் உள்ளிறங்கி எனக்குள் மோதின. வெறும் ஒலியாக, சிந்தும் துளியாக, உதிரும் இலையாக, சொட்டும் பனியாக மட்டுமே உணர்ந்தேன் நான். கண்ணுக்குள் சொற்கள் சுழன்று ஆழத்தில் நிறமாகிக் கனிந்து மறைந்தன.

“நம்மோடுள்ள தமிழ்க் கவிக்கு இது கூடுதலாயி அர்த்தப்படும். அல்லே?” அந்தச் சொற்கள் என்னைக் குறித்தே என்று நான் உணர்ந்த கணத்தில் அனைவரும் என்னைப் பார்த்தனர். நான் விழித்துக் கொண்டேன். புன்னகைக்கும் அவரது முகத்தையே ஏறிட்டேன். வெறுமனே தலையாட்டினேன்.

பிரார்த்தனை முடிந்து எழுந்தபோது அனைவருமே எனக்கு அறிமுகமானவர்கள் போல என்னருகில் வந்து புன்னகைத்து விடைபெற்றனர். குரு சைதன்யா அறைக்குள் நகர்ந்தார்.

மரப்படிகளில் ஏறி ஓவியக் கூடத்தில் நுழைந்தபோது அறை இருண்டிருந்தது. கூடத்தை இரண்டாகப் பிரித்திருந்த மரச்சுவரில் ஒரு கதவு. மறுபுறமும் இதே போன்று இன்னொரு அறை. கிழக்கு நோக்கி இருந்த ஜன்னலின் திரையை விலக்கினேன். காத்திருந்தது போல் வெளிச்சம் அறையைத் தாவி நிறைத்தது. ஆளுயர கண்ணாடி ஜன்னலின் புறத்தே வேலிக்கப்பால் பசுந்தழைகள் மின்னும் தேயிலைத் தோட்டம். அங்கங்கே வெள்ளி இலைகளை அசைக்கும் சில்வர் ஓக் மரங்கள். காற்றில் அசையும் மரங்களும் நீல வானமுமாய் இயற்கையின் ஓவியம். தென்புறத்தில் நீளமாய் சற்றே உயரக்குறைவாய் பைன் மரக்காடுகளைக் காட்டும் சாளரம். அறையின் இடது மூலையில் கித்தானுடன் ஓவியச் சட்டம். அருகில் இடுப்பளவு உயரத்தில் முக்காலி. அதன்மேல் வண்ணத் தைலங்களும் நீர்வண்ணக் குவளைகளும் கிண்ணத்தில் பலவிதமான தூரிகைகளும் வைக்கப்பட்டிருந்தன. சட்டத்தின் ஓரத்தில் உலர்ந்த துணித் துண்டுகள்.

முகம் போலவும் கூந்தல் இழைபோலவுமான தோற்றத்தில் மரச்சுவரிலும் வண்ணக்கோடுகள். வலதுபக்கச் சுவரில் காற்றாடிகள் சுற்றும் சூரியகாந்தி வயலின் பின்னணியில் காதறுந்த வான்காவின் படம்.

குரு சைதன்யா ஓவியம் வரைவதற்கு மேற்கு அறையைத்தான் பயன்படுத்துகிறார். அவர் வரைந்த நீர்வண்ண அரூப ஓவியங்கள் நூலகத்தில் உள்ளன. இந்த அறை இப்போது எனக்கே எனக்கானது. எத்தனை நாள் கனவு? கித்தானில் ஓவியம் எழுதி சட்டமிட்டு காட்சிப்படுத்துவது பற்றி என்னவெல்லாம் யோசித்திருக்கிறேன். இதுவரையிலும் இப்படியொரு கித்தானில் ஓவியத்தை எழுத வாய்த்ததில்லை. சட்டமிட்டு மாட்டி அழகுபார்க்க முடிந்ததில்லை.

வெப்பத்தைத் தேக்கிய ஓடுகள் வேய்ந்த பழவந்தாங்கல் அறைக்குள் அட்டைகளில் எழுதிய ஓவியங்களையும் கூட கரையான்கள் விட்டுவைத்ததில்லை. மழையில் நனைந்து வண்ணம் கரைந்து நைந்த ஓவியங்கள்தான் எத்தனை? பத்திரிக்கைகளுக்கு வரையும் ஓவியங்கள் வயிற்றுப்பாட்டுக்கானவை. கேட்டதற்கு ஏற்ப அல்லது அந்த நேரத்தில் நினைப்புக்கேற்ப வரையப்பட்ட கோடுகள். பொருந்துகிறதோ இல்லையோ கரிசனம்கொண்ட நண்பர்கள் கிடைக்கும் சிறு ஊதியத்துக்கென அவற்றைப் பயன்படுத்துவார்கள்.

ஓவியனென இத்தனை நாள் சொல்லிக்கொண்டதில் உருப்படியாய் கித்தானில் ஒன்றை வரைந்தவனில்லை நான். இப்போது என் முன்னே வெண்ணிற கித்தான். என் கோடுகளுக்காகக் காத்திருக்கிறது. நான் எழுதும் வண்ணங்களுக்காக நிற்கிறது.

பட்டையான தூரிகையை எடுத்து சிவப்பில் குழைத்தேன். கித்தானின் நடுவே சுழற்றி இழுத்தேன். கை நடுங்கியது. தூரிகையை குவளையில் வைத்துவிட்டு ஜன்னலருகே நகர்ந்து நின்றேன். புகை கக்கியபடி ஓசையில்லாமல் ரயில் வருவது தெரிந்தது. மலை மடுப்பிலிருந்து சிறு புழுவைப்போல ஊர்ந்து வருகிறது. நீலப் பெட்டிகள் உடலென அசைய அடர்ந்த மரங்களுக்கிடையே புகை கக்கி நெளிகிறது. பள்ளத்தில் அது மறைந்தபோது புகைமட்டும் தடம் காட்டியது.

திரும்பவும் தூரிகையை எடுத்து நீல வண்ணத்தை இழைத்தேன். எதுவோ தடுத்தது. கைகள் இணக்கமின்றி இறுகின. கோடுகளை நினைத்ததுபோல் இழுக்க முடியவில்லை. இந்த அமைதி என்னைத் தடுமாற வைக்கிறது. இந்த நாள் என் வழக்கமான அன்றாடத்தைப் போலில்லை. குளிர்தொடாத அறைக்குள் கம்பளிப் போர்வையில் முடங்கிக்கொண்டு தூங்கியிருக்கிறேன். சிரித்த முகத்துடன் கவிதை சொல்லும்படி கேட்டுக்கொண்டே டாக்டர் சாமி தந்த கட்டன்சாயாவைப் பருகியிருக்கிறேன். சுடச்சுட கிச்சடியை சுவைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் விட கருணை ஒளிரும் புன்னகையுடன் குரு சைதன்யாவுடன் நடந்திருக்கிறேன்.

இப்போது என்னால் எழுத முடியவேண்டும். வரைய முடியவேண்டும். இப்படியொரு சூழல்தானே கலைஞனுக்குத் தேவை. ஆனால், என்னால் எதுவுமே முடியவில்லை.

பைன்மரக் காடு காற்றில் அசைந்து கொண்டிருந்தது. மரங்களுக்கிடையில் நுழைந்து கசிகின்றன வெயில் கற்றைகள். உதிர்ந்த சருகுகளுக்கு நடுவே கம்புகள் நட்டி அமைத்த மரவீட்டின் வாசலில் அந்த இளம்துறவி எழுதிக்கொண்டிருக்கிறான். பிரார்த்தனை நேரத்திலும் வகுப்பின்போதும் குரு சொல்வதை வேகமாய் எழுதியதை இப்போது நிதானமாக படியெடுக்கிறான். அவன் எதையும் பேசுவதில்லை. எதையும் கேட்பதுமில்லை. படியெடுத்ததை மறுபடி குருவிடம் காட்டி திருத்தங்களைப் பெற்று கணிணியில் ஏற்றுவான். அச்சிட்ட பிரதியை திரும்பவும் குருவிடம் காட்டி ஒப்புதல் பெறுவான். அவனது வேலை இதுதான். அவனால் எப்படி முடிகிறது?

மரப்படிகளில் ஓசையெழாமல் இறங்கி வந்தேன். இக்லூ வீட்டுக்கு முன்னால் காவி உடையணிந்த ஜப்பானிய மங்கை தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். இந்தியச் சிந்தனை மரபைக் கற்றுக்கொள்ளவென டோக்கியோவிலிருந்து வந்திருக்கிறாள். வளைந்த புருவங்களுக்குக் கோடிழுத்தாற் போன்ற கண்கள். சிறிய மூக்கு. தலையைத் தாழ்த்தி வணங்கினாள்.

நான் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன்.

“காலையில் குரு சொன்ன உன்னுடைய கவிதை நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது” அவள் ஆங்கிலத்தில் சொன்னது ஓரளவு புரிந்தது. மீண்டும் புன்னகைத்துத் தலையாட்டினேன். எனக்கு ஆங்கிலத்தில் பதில்சொல்லத் தெரியவில்லை.

பிரார்த்தனையின் போது குரு சைதன்யா என்னுடைய கவிதையொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். அதை மலையாளத்திலும் விளக்கினார்.

“எனக்கொரு பாஷை தெரியும். வரைவது, கவிதை எழுதுவது என இரண்டு வேலைகளைத் தனித்தனியாக செய்ய வேண்டாம். என்னுடைய பாஷையில் கவிதையை அப்படியே வரைந்துவிட முடியும்”, அவள் சிரித்தாள். எனக்குச் சரியாகப் புரியவில்லை.

“அந்த மொழியில் எழுத்துகளே சித்திரங்கள்தான். இதோ பார்” என்று சிறு குச்சியை எடுத்து மண்ணில் எழுதினாள். சிறுகூட்டிலிருந்து பறவை வெளியே பறப்பதுபோல சில கோடுகளை போட்டுவிட்டு நிமிர்ந்தாள். “புரிகிறதா?”.

நான் இல்லையென்று தலையாட்டினேன். “இது புலர்காலை” என்றாள்.

எனக்கு ஏதோ புரிவது போலிருந்தது. அதனருகே இன்னொரு படத்தை வரைந்தாள். இப்போது பறவை கூட்டுக்குள் புகுவதுபோலிருந்தன கோடுகள். தலையை உயர்த்திப் பார்த்தாள்.

“அந்திப்பொழுது?” கேள்வியுடன் சொன்னதும் அவள் சிரித்துக்கொண்டே கைகளைப் பற்றிக் குலுக்கினாள். சட்டென்று கூச்சத்துடன் விலகினேன். அவள் உதிர்ந்த இலைகளைச் சேர்த்து கூடைக்குள் போட்டாள்.

இரவுப் பிரார்த்தனை முடிந்ததும் அனைவரும் உணவருந்த நகர்ந்தார்கள். சாப்பிடத் தோன்றவில்லை. அறைக்குத் திரும்பினேன். மணி எட்டரை. கதவை அடைத்துவிட்டு படுக்கையில் விழுந்தேன். குளிரின் ஈரம் உடலில் படர்ந்தது. உடலின் வெப்பம் படுக்கையில் ஏறும் வரையிலும் குளிராகத்தான் இருக்கும். இந்த நான்கு நாட்களில் பசியே மறந்தது போலிருந்தது. விநோதம்தான்.

இந்த நேரத்துக்கெல்லாம் வயிறில் சிறிய வலி தொடங்கியிருக்கும். காலையிலிருந்து தேநீராலும் புகையினாலும் சமாளித்தது இப்போது தலைதூக்கியிருக்கும். நெரிசலான ரங்கநாதன் தெருவில் அவசரத்துடன் இடிபட்டு நகரும் மனிதக்கூட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி புத்தகக்கடை மாடியில் காத்திருப்பது தான் வழக்கம். நண்பர்கள் வரத்தொடங்கும் போது கூடவே சிறு நம்பிக்கையும் எழும். சிலவேளைகளில் வெறும் தேநீரோடு பகிர்ந்துகொள்ளும் சிகரெட்டோடு முடிந்து போகும். பத்திரிக்கைகளில் ஏதும் காசு தேறும் நாட்களில் சற்றே ஆசுவாசமாய் இருக்கும்.

கிருபா தான் பாவம். நானில்லாமல் தடுமாறுவான். அவன் என்னைவிட நொந்தவன். நிழலன்றி ஏதுமற்றவன். பலநாட்களில் என்னுடன் அறையையும் வெறுமையையும் பகிர்ந்துகொள்பவன். இப்போது என்ன செய்கிறானோ தெரியவில்லை. அறையில் வந்துத் தங்கிக்கொள்ள முடியும். ஆனால் நானில்லாமல் அவன் மட்டும் அங்கே வருவது அத்தனை பாதுகாப்பானதில்லை. வீட்டுக்காரர் காலையில் வந்து கழிப்பறை வாசலிலேயே காத்திருப்பார். அவரைச் சமாளிப்பது சிரமம். அதைவிட இரவில் சுதந்திரமாய் சுற்றிக்கொண்டிருக்கும் கரப்பான்களையும் எலிகளையும் கண்டு பயப்படுவான்.

இதோ இப்படியொரு அறையும் கதகதப்பும் அவனுக்குத் தேவை. அதைவிட சொற்கள் கனிந்து அவன் விரல்களில் கவிதையென இறங்கும் அற்புதத் தருணங்களைக் காப்பாற்றுவது முக்கியம். அதற்காகவேனும் அந்த விளம்பர நிறுவன வேலையில் இருந்திருக்கலாம். ஒருமாதம் சமாளித்து ஓட்டியிருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும். பிறகு அதுவே பழகிப் போயிருக்கும்.

ஆனால் என்னால் முடியவில்லை. அது முற்றிலுமாய் வேறொரு உலகம். வேறொரு வாசனை. அதன் அமைதியும் பாசாங்கான உடல்மொழியும் என்னைத் தொந்தரவு செய்தன. என்னால் அதில் பொருந்திக்கொள்ள இயலவில்லை.

அடுத்தவேளையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லாத இதுபோன்ற நாட்கள் அவனுக்கும் வாய்க்குமா?

யாரேனும் அவனை அழைத்துப் போயிருப்பார்கள். குடிக்கத் தந்திருப்பார்கள். போதையின் உச்சத்தில் அவன் நிறுத்தாமல் கவிதை சொல்வான். அனைவரும் புரண்டு தூங்கும்போது அவன் பித்துற்றவன் போல் தாள்களில் எழுதிக்கொண்டிருப்பான். மறுநாள் காலையில் அனைவரும் எழுந்து அவரவர் பாடுகளைத் தேடிப் போய்விட்ட பின்பு இவன் மதியத்தில் கண்விழிப்பான். அவன் எழுதிய தாள்கள் அருகில் கசங்கிக் கிடக்கும்.

கதவைத் தட்டும் ஓசை. மணி ஒன்பதைத் தொட்டிருந்தது.

வாசல் விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறந்தான். டாக்டர் சாமிதான் புன்னகையுடன் நின்றார். தலைகுல்லா அடையாளத்தை மாற்றியிருந்தது.

“ஊணு கழிச்சில்லே?”

“பசிக்கலை சாமி. அப்பிடியே இருந்துட்டேன்.”

“ஏய். கதவடைச்சிட்டு வாங்கோ. கஞ்சிதான். குடிச்சிட்டு வந்து கெடக்கு”, சிரித்தபடியே நின்றார்.

கட்டிலின்மேல் கிடந்த கம்பளிச் சால்வையை போர்த்திக்கொண்டு நடந்தேன். குளிர்க்காற்று ஆவேசத்துடன் மரங்களை அசைத்துக்கொண்டிருந்தது.

மாலையின் மஞ்சள் வெயில் மரங்களை ஊடுருவிச் சரிந்திருந்தது. வெல்பேக் குடியிருப்பை நோக்கிச் சென்றது பாதை. ஓடுகள் வேய்ந்த வீடுகளைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு நாளும் உடன் நடக்கும் யாராவது தோளில் கைபோட்டுக் கொள்வார் குரு சைதன்யா. இன்று என்னுடைய தோளில் கைபோட்டிருந்தார். நான் ஒடுங்கி உடன் நடந்தேன். உள்ளுக்குள் நடுக்கம். நெருக்கமான அவரது தைல வாசனையும் சருமத்தின் மென்மையும் என்னைக் குறுகச் செய்தது. இத்தனை நெருக்கமாக அவருடன் இருப்பது என்னைக் கூசச் செய்தது. அவரது அண்மைக்கு நான் முற்றிலும் தகுதியற்றவன். விலகி நிற்கவும் பார்வையிலிருந்து நழுவி விடவுமே விரும்பினேன். எங்கிருந்தாலும் அவர் என்னையே உற்றுப் பார்ப்பது போலொரு உணர்வு. அவர் என்றால் அவரல்ல. அவரது தூய்மையே என் அழுக்குகளைக் காண்கிறது. இருட்டைத் துழாவுகிறது. என்னால் அதைத் தாள முடியவில்லை. முடிந்தமட்டும் பார்வையைத் தவிர்க்கும் கோணத்தில் உட்கார்ந்து கொள்வேன். நடக்கும்போது அவருக்குப் பத்தடி பின்னாலேயே பதுங்கி நகர்வேன். இன்று குருகுலத்திலிருந்து வெளியே வந்த கணத்திலேயே என்னை அழைத்துக்கொண்டார்.

தினமும் நடக்கும் அதே பாதைதான். ஆனால் ஒருபோதும் அவரிடம் உற்சாகம் குறைந்ததில்லை. அன்றைக்குத் தான் முதன்முதலாக அதில் நடப்பதுபோன்ற உற்சாகத்துடன் மெல்ல அடியெடுத்து நடந்தார். மூக்குத்தி போன்ற சிறு மலர்களை, முட்களும் சாம்பல் இலைகளும் கொண்ட செடியின் மஞ்சள் பூவை, மாரியம்மன் கோயில் வாசலின் வேல்கம்புகளை, சரிவில் தென்படும் வீடுகளின் கலைந்த வரிசையை, மேயும் குதிரைகளை, நுரைத்தோடும் ஓடையோர மரங்களை என யாவுமே தினமும் அவர் காண்பதுதான். சிறிதும் ஆர்வம் தணியாது இப்போதும் பார்க்கிறார். முகத்தில் அதே பரவசம். அதே மகிழ்ச்சி.

அன்றாடமும் காண்பதுதானே, ஏன் இந்த வியப்பு என்ற கேள்வி மனத்தில் எழுந்தது. அதே கணத்தில் ஒடுங்கியது.

“மேயும் இந்தக் குதிரையின் வாலசைவு நேற்று நாம் பார்த்ததில்லை. இதோ இந்தக் கணத்தில் நிகழ்வது. இங்கு நாம் காண்பது எதுவுமே ஏற்கெனவே நாம் கண்ட காட்சிகள் அல்ல. அவை நம் நினைவில் அறிவைக் கொண்டு நாம் பார்ப்பவை. இரண்டும் வேறு வேறு”, கரகரத்த குரலில் அவர் சொல்லிவிட்டு கைத்தடியால் இலையொன்றை வருடினார்.

முதுகில் வேர்வை வழிவதை உணர்ந்தேன். யாரேனும் இந்த பாரத்தைத் தாங்கினால் பரவாயில்லை. இந்த அண்மை நெருப்பென சுடுகிறது. இருண்ட என் அகத்தைப் பொசுக்குகிறது. இதன் வெம்மையை என்னால் தாங்க முடியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் வண்ணத் தோரணங்கள். சாலையோரத்தில் ‘HAPPY NEW YEAR 1997‘ எழுதப்பட்டிருந்தது. பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்த கிராமத்துச் சிறுவர்கள் குருவைக் கண்டதும் ஓடி வந்தனர். “வணக்கம் சாமி.”

சந்தனப் பொட்டிட்ட சிறுவன் கையை நீட்டினான். “ஹேப்பி நியூ இயர் சாமி.”

குரு அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினார். “ஹேப்பி நியூ இயர்.”

உடனே அனைவரும் உற்சாகத்துடன், ‘ஹேப்பி நியூ இயர்’ என்றபடி கைகளை நீட்டினர்.

ஒவ்வொருவரின் முகத்தையும் சிரிப்புடன் ஏறிட்டார், “நல்லா படிக்கணும். நெறைய வெளையாடணும்” என்றபடியே பையில் கைவிட்டு சாக்லெட்டுகளை எடுத்துத் தந்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நகர்ந்தவர்களை ஊன்றிப் பார்த்தபடியே நின்றார்.

“ஒவ்வொரு குழந்தையும் அதிசயந்தான், இல்லையா?” கரகரத்த அவர் குரலில் வியப்பு. அவரது இடதுபக்கமாய் உடன் நடந்த ஜப்பானிய பெண் தலையசைத்தாள். கழுத்து வரையிலான அவளது தலைமுடி கொத்தாய் அசைந்தது.

குருவின் கைத்தடியின் முனையில் இரும்புப் பூண் உண்டு. கல்லில் மோதும்போதெல்லாம் ஓசையெழுந்தது. இடதுபக்கமாய் கம்பியிட்ட வேலியின் மேல் ஆடு தாவி நின்றது. அகலமான இலையுடனான கொடியைப் பற்றி இழுத்தது. அருகில் நின்ற குட்டி ஆடும் தாவ முயன்று காற்றில் கால்களை உயர்த்தியபடி கத்தியது. வேலியின் கீழடுக்கிலும் இலைகள் படர்ந்திருந்தன. ஆனாலும் அது கால்களை எம்பி மேலேயிருந்த இலைகளையே பற்றிக்கொள்ள எத்தனித்தது.

“வணக்கம் சாமி”, ஸ்வெட்டர் அணிந்த இரு பெண்கள் குருவின் முன்னால் நின்றனர். கன்னத்து மேட்டில் மங்குத்தடங்கள். களைத்திருந்த முகத்தில் சிரிப்பு.

“வேலை முடிஞ்சுதா?”

“ஆமா சாமி. வீட்டுக்குத்தான் திரும்பறோம்.”

“போங்க. குழந்தைங்க வீட்ல பாத்துட்டிருக்கும். இந்தாங்க. இதைக் குடுங்க’‘ என்று சாக்லெட்டுகளை எடுத்து நீட்டினார்.

கைகூப்பி வணங்கிவிட்டு இறங்குதடத்தில் ஓட்டமாய் நடந்தனர்.

இடதுபக்கத்தில் தேயிலைச் சரிவையொட்டி பாதையோரமாய் நின்றார். தோளிலிருந்து கையை விலக்கினார். பெருமூச்சுடன் சற்றே பின்னகர்ந்து நின்றேன். இரண்டு கைகளாலும் கைத்தடியை இறுகப்பற்றியபடி நின்றார். அடுத்திருந்த குன்றுக்கு அப்பால் இன்னொரு மலை. அதையடுத்து தொலைவில் நீண்டிருந்தது மலைத்தொடர். அந்தி வானத்தின் ஒளியில் அடுக்கடுக்காய் நின்றது. இலைகளின் நுனிகளில் வெளிச்சம் படிந்திருக்க சரிவு மொத்தத்திலும் சரிந்திருந்தது மஞ்சள் ஒளி. மேகத்தின் விளிம்புகள் சுடர்ந்தன.

பசுமையும் ஒளியுமான மலைச்சரிவைப் பார்த்தார். வானில் சிதறிய சிவப்பை பொன்னொளியைக் கண்டார். தூரமெங்கும் மடிந்து நீண்டு உயர்ந்து சரிந்த மலைத் தொடரைப் பார்த்தார். அடர்ந்த சிவப்பும் ஆரத்தில் பொன்னிறமுமாய் சுழன்ற ஆதவனைப் பார்த்தார். ஆகாயத்தில் மிதந்து திரும்பிய பறவைக் கூட்டத்தைப் பார்த்தார். குன்றின் உச்சியிலிருந்து ஒளிர்ந்த விளக்கைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் அவர் பார்வை தொட்டு மீண்டது. அந்தியின் நிறங்கள் ஒவ்வொன்றையும் தொட்டெடுத்தார். தனக்குள் நிறைத்தார். கண்களை மூடி நின்றார். உதடுகள் மெல்ல அசைந்தன.

அவரது அன்றாட பிரார்த்தனை இது. மாலைச் சூரியனை வழியனுப்பும் வேளை. அன்றைய இரவு அனைவருக்குமான அமைதியான இரவாக வேண்டி விண்ணப்பம். மழையற்ற நாட்களில் அவர் இந்த வழிபாட்டைச் செய்யத் தவறுவதில்லை.

“எத்தனை வருஷமா பாக்கறேன். ஒருநாள் கூட அலுப்பு ஏற்படலை”. குச்சியைத் தட்டிக்கொண்டு அடியெடுத்தார்.

“இதைப் பாத்ததுக்கு அப்பறமா எதையும் வரையவோ பெயிண்ட் பண்ணவோ தோணறதேயில்லை. இதைவிட நாம் வேறென்ன பிரமாதமாய் வரைந்திட முடியும்?” திரும்பி நின்று என்னைப் பார்த்தார். நகர்ந்து அவரருகில் பணிவுடன் நின்றேன். தோளை அணைத்துக்கொண்டார்.

நிதானமான மதியப்பொழுது. இப்போதும் ஓவியக்கூடத்தில் வெறுமனே நிற்கிறேன். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. தூரிகையை எடுப்பதும் கோடுகளை இழுப்பதுமாய் நின்றேன். கண்ணாடியின் வழியே அசையும் மரங்களைக் கண்டேன். நிறம் மாறாத பூக்களைப் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்திருந்தேன். காற்றுடன் கூடிய லேசான மழை. பைன் மரக்காட்டுக்குள் காற்று மழையைத் துரத்தி விளையாடியது. மனம் வெறுமையில் சுழன்றது. எதிலும் நில்லாது தாவித் தாவி ஓடியது. ஒருகணம் அமைதி. மறுகணம் ஓலம். இப்படியொரு மழைப்பொழுதில் நண்பர்கள் சூழ ரங்கநாதன் தெரு புத்தகக் கடையில் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. பெருநகரில் பூட்டப்படும் வரை அமர்ந்திருக்க அனுமதிக்கிற புத்தகக் கடை அது. அலைந்து களைத்துப் போய் வருபவனுக்கு இளைப்பாற இடம் கொடுக்கும் நிழல்தரு. அன்றைய நாளில் அனைத்துக் கசப்புகளையும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் சற்றேனும் ஒதுக்கிவிட்டு ஓரமாய் அமர்ந்து கண்மூடித் தலைச் சாய்க்கலாம். பருக தேநீர் கிடைக்கும். மனம் குவியும்போது படிக்க புத்தகங்களும்.

மாத இறுதியில் ஒரு சனிக்கிழமை மாலையில் கனத்த மழை. நகரின் இரக்கமற்ற வெம்மையை விரட்டி காற்றில் குளிர் சேர்ந்திருந்தது. சாரலுக்கு முகம்கொடுத்து நின்றபோது புன்னகைத்தபடியே கிருபா சிகரெட்டை நீட்டினான். காரலும் வெம்மையுமாய் புகை இதமாக உள்ளிறங்கிய கணம் உலகம் மிக அழகாகத் தென்பட்டது. அவனது அருகாமையும் மழைக்குளிரும் சிகரெட் புகையுமாய் அந்தப் பொழுது ஆசிர்வதிக்கப்பட்டிருந்தது. பெருங்காதலுடன் பூரண சாந்தத்துடன் மழை பார்த்து நின்றோம். அன்றைக்கு துரதிர்ஷ்டம் அவனைத் துவட்டி மிதித்திருந்தது. வெகு நம்பிக்கையுடன் காத்திருந்த திரைப்பட வாய்ப்பு பறிபோயிருந்தது. அவனுக்கு உதவிய நண்பர் அழைத்த கணத்தில் கிருபா தன்னிலையில் இல்லை. நேற்றைய இரவின் போதையின் மிச்சம் அவனை வீழ்த்தியிருந்தது. பின்மதியத்தில் எழுந்து தவறிய அழைப்பைக் கண்டு திரும்பக் கூப்பிட்டபோது வரிசையில் இருந்த இன்னொருவனின் கையில் அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. என்னிடமிருந்து சிகரெட்டை வாங்கி உறிஞ்சியபோது அவன் முகத்தில் சிறிதும் வருத்தமில்லை. ‘போன் அடிச்சதுகூட தெரியலையா உனக்கு?’ என்று கடிந்துகொண்டபோது கிருபா தெருவில் புரண்டிருந்த மழைவெள்ளத்தைப் பார்த்து நின்றான். காலைப் பொழுதுகளை காண விரும்பாதவன் அவன். வயிறுக்குச் சோறிடவேண்டும் என்பதால் காலையில் அவன் எழுந்துகொள்வதில்லை.

இப்போதும் அங்கே மழை பெய்யுமா? எனக்கான பாதி சிகரெட்டுடன் சாரலுக்கு முகம்காட்டி நின்றிருப்பானா? சிலுவையில் அறையப்பட்ட தேவனைப் போல் கிருபாவின் முகம் துலங்கியெழுந்தது. தாங்க முடியாமல் தூரிகையை எடுத்து கித்தானில் ஆத்திரத்துடன் விசிறினேன். நிறத்துளிகள் தெறித்து பின் மெல்ல வழிந்தன.

மேலும் அங்கிருக்க முடியாமல் விரைந்து வெளியில் வந்தபோது மழை ஓய்ந்திருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெட்டிக் கடையில் சிகரெட்டுகளை வாங்கினேன். புகையை உள்ளிழுத்து நிறைத்த நொடியில் மனம் அடங்கியது. உள்ளுக்குள் எழுந்த ஓலத்தை நிறுத்தியது போல நிம்மதி. இன்னுமொரு முறை புகையை இழுத்தேன். கண்களில் எரிச்சல். இலேசாக இருமல். சுடரும் நெருப்புக் கங்கை உற்றுப் பார்த்தேன். புகையை உள்ளிழுத்து நிறைத்துக்கொண்டு குருகுலத்தைப் பார்த்தேன். மழைநீர் சிறு ஓடையாகி செம்மண் பள்ளத்தில் வழிந்து இறங்கியது. இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்து நின்றபோது மினி பஸ் வந்து நின்றது. இலேசான தூறல். அவசரமாக இறங்கி முந்தானையால் தலையை மூடிக்கொண்டு விரைந்து நடந்தவள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தாள். கைகளை முதுகுக்குப் பின்னால் இறுகக் கோர்த்துக்கொண்டு நடக்கலானேன்.

பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த நாராயண குருவின் வெண்கலச் சிலையில் ஈரப் பளபளப்பு. மழை ஓய்ந்திருந்தது. சைப்ரஸ் மர இலைகளிலிருந்து துளிகள் சொட்டி நின்றன. உட்கார்வதற்கென அமைக்கப்பட்ட அடிமரத் துண்டில் அமர்ந்திருந்தேன். அங்கங்கே அடிமரத்துண்டுகள். நடுவே சற்றே உயரமாக மேசை போல பெரிய மரத்துண்டு. தேங்கிய நீரிலிருந்து தாவியது தவளை. ஒன்றுமில்லாத எதையோ யோசிக்கிறேன். அறையின் மூலையில் சிலந்திக்குக் காத்திருக்கும் மரப்பல்லியை உன்னிப்பாகக் கவனிப்பது போல சிலையை உற்றுப் பார்த்திருந்தேன். தொடர்ந்து பொருக்கைச் சுற்றிச் சொரியும் விரல்களென உள்ளுக்குள் எதையோ தேடியபடியே இருந்தேன்.

நூலகத்துக்குப் போகும் பாதையில் டாக்டர் சாமிகள் விறுவிறுவென இறங்குவது தெரிந்தது. அவர் கண்ணில்படாதிருந்தால் நல்லதென்ற எண்ணம் கிளர்ந்த கணத்தில் குறுகி அமர்ந்தேன். தேங்கிய நீரில் தெளிந்த வானம். கருஞ்சிறகுகளுடனான சிறு மஞ்சள் பறவை சரிந்து இறங்கியது.

“ஏய்… சாயா குடிக்கான் வந்தில்லே சாரே?” மூலிகை வாசனையுடன் காலடியோசை நெருங்கியது.

நிமிர்ந்து சிரித்தேன். முகம் முழுக்க பரவசச் சிரிப்புடன் எதிரில் அமர்ந்தார். சிறு கூடையை அருகில் வைத்தார். வெண்டைகளும் கத்தரிகளும் தக்காளியும் கிடந்தன. தோளில் கிடந்த சிவப்பு சால்வையைக் கழுத்தைச் சுற்றிப் போட்டவர் அண்ணாந்து வானம் பார்த்தார்.

“இப்ப தணுப்பு தொடங்கும். ராத்திரியில சாக்ஸ் போடாம படுத்துறாதீங்க சாரே”. முகத்தை உற்றுப் பார்த்தார்.

ஒவ்வொரு நாள் இரவும் அவரது அறைக்கு வரும்போது என்னுடைய அறையை எட்டிப் பார்ப்பதுண்டு. ஓசைப்படாமல் பூனையைப் போல வருவார். சரியாக போர்த்தியிருக்கிறேனா, தலையில் குல்லா அணிந்திருக்கிறேனா, ஜன்னல்களை ஒழுங்காக சாத்தியிருக்கிறேனா என்று ஒவ்வொன்றாய் சரிபார்ப்பார். கம்பளிப் போர்வையை காதுவரையிலும் போர்த்தி காற்று புகாவண்ணம் ஓரங்களை படுக்கையில் செருகுவார். விழித்திருந்த போதும் எதுவும் பேசாமல் சிரித்துக்கொண்டே தலையாட்டி விடைபெற்றுக்கொள்வார்.

வானில் பொழியத் தயாராய் மழை மேகங்கள்.

“இன்னிக்கு வாக்கிங் போக வாய்க்காது. கிச்சனுக்கு வாங்கோ. கட்டன் சாயா குடிக்கலாம்” பையை எடுத்துக்கொண்டு எழுந்தார்.

நாராயண குருவின் சிலையை ஏறிட்டவர் தாடியை சொரிந்தபடியே சொன்னார். “இங்க வந்து உக்காந்திருக்கிற சமயத்துல குரு இந்த சிலையைப் பாத்துட்டே இருப்பார். ஒரு தடவை சொன்னார் ‘குரு எல்லாத்தையும் பாக்கற மாதிரியிருக்கு. சமயத்துல எதையுமே பாக்காத மாதிரியும் இருக்கு.’ இப்பவும் அப்பிடித்தான் தோணுது. அல்லே?”

நேற்றிரவே புறப்பட்டு விடுவதென தீர்மானித்திருந்தேன். கருக்கலில் வானம் மெல்லத் தெளிவதைப் பார்த்தபடியே ஜன்னலருகில் காத்திருந்தேன். விடிகாலையில் எப்போதும் போல வெந்நீர் அடுப்பை மூட்டி நின்ற டாக்டர் சாமியிடம் சொன்னேன். “சாமி, ஊருக்குப் போயிட்டு வர்லாம்னு தோணுது.”

“போயிட்டு வாங்கோ.” அவர் வேறெதுவுமே கேட்கவில்லை. தனக்கேயுரிய உற்சாகத்துடன் சமையல் கூடத்துக்கான சரிவில் இறங்கினார். ஓரத்தில் கிடந்த வாரியலை எடுத்து வாசலில் தேங்கிய நீரை ஒதுக்கித் தள்ளினார். கதவைத் திறந்தார். “ஒரு கட்டன் சாயா குடிச்சிட்டு போலாமே.”

சூடான தேநீரின் துவர்ப்பை விழுங்கியபடி கேட்டேன். “குருகிட்ட சொல்லணும்.”

“சொல்லிக்கலாமே. அஞ்சு மணிக்கே எழுந்தாச்சு. படிச்சிட்டிருக்கார். போங்கோ.” தேநீர் கோப்பைகளை நீரில் அலசியபடியே சிரித்தார்.

விடிகாலையில் கழிவறைக்குச் செல்ல நேரும்போது குரு சைதன்யாவின் படிப்பறையில் விளக்கெரிவதை கவனித்திருக்கிறேன். அறையை நெருங்கி தயக்கத்துடன் மெல்ல எட்டிப் பார்த்தேன். அறையின் எல்லாப் பக்கமும் புத்தக அடுக்குகள். மேசை விளக்கின் குவி ஒளியில் அவரது வெண்தாடியும் கண்ணாடிச் சட்டமும் ஒளிர்ந்திருந்தன. கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். எதுவும் பேசாமல் ஒருகணம் நின்றேன். என் சுவாசத்தை அவர் அறிந்திருக்க வேண்டும்.

தலை நிமிர்த்தினார். காதுகளை மூடி கருப்புக் குல்லாவின் கழுத்துப் பகுதியை சற்றே மேலே இழுத்துவிட்டார். புன்னகையுடன் முகம் பார்த்தார். “காலையிலேயே புறப்பட்டாச்சா?”

வாயெழாமல் தலையை மட்டும் ஆட்டினேன்.

கண்களைச் சிமிட்டியபடி சிரித்தார். “அந்த கான்வாஸில நீ இன்னும் ஒப்பிடலை. அது உனக்கான கான்வாஸ். சித்திரத்தை நீதான் எழுதி முடிக்கணும். மறக்க வேண்டாம்.”

கைகூப்பி நின்றபோது அவரை நெருங்கி கைகளைத் தொட வேண்டும் போலிருந்தது. ஒன்றும் சொல்லாமல் சட்டென விலகி வெளியே வந்தேன்.

ஒருமணி நேரத்தில் வியப்புடனும் ஏமாற்றத்துடனும் மணி வந்தபோது நான் தயாராக நின்றேன். பேருந்து நிலையத்துக்கு வரும்வரையிலும் எதுவும் சொல்லவில்லை.

புறப்படத் தயாராக இருந்த கோவை பேருந்தில் ஏறி இடதுபுற ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்த போது பாரமிறங்கி மனம் விடுபட்டிருந்தது. கீழே நின்ற மணி அருகில் வந்து மெல்லக் கேட்டார். “கையில பணம் இருக்கில்ல?”

சிரித்தபடியே தலையாட்டினேன். “ஊருக்குப் போயிட்டு போன் பண்றேன்.”

டீசல் மணத்துடன் பேருந்து நகர்ந்தபோது இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினேன்.

இரவு எட்டரை மணிக்கு ரங்கநாதன் தெருவில் நடந்தபோது உடலின் எடை குறைந்து மிதப்பது போலிருந்தது. வண்ணங்களுடன் மின்னின ஒளி விளக்குகள். உயிர்ப்புடன் காதுகளில் மோதிய ஓசைகள். ‘நாலு பத்து ரூபா, நாலு பத்து ரூபா’, ‘இன்னிக்கு வுட்டா கெடைக்காது’. முன்னும் பின்னுமாக கால்கள் நகர்ந்தன. தோள்கள் இடிபட்டன. எல்லோருக்கும் அவசரம். அனைவருமே அவரவர் இலக்கை நோக்கி ஓடினர். வியர்வை நெடியுடனான புழுக்கத்தின் வாசனை.

மாடிப் படியேறியபோது இனந்தெரியாத உற்சாகம். நாட்கணக்கில் பிரிந்திருந்த ஒன்றைக் கண்டு வாரியணைக்கப் போகிற எதிர்பார்ப்பு. புத்தகக் கடையின் வெளிச்சத்தைக் கண்டதும் ஒருகணம் நின்றேன். எனக்கான தேநீரும் என் பங்கு சிகரெட்டும் இதோ இங்கேதான் இருக்கிறது என்று எனக்குள் உரக்கச் சொல்லிக்கொண்டேன். உல்லாசத்துடன் நடந்து வாசலில் நின்றேன்.

கிருபா எதையோ படித்துக்கொண்டிருந்தான். பெரியவர் கால்மேல் கால்போட்டபடி ஆழ்ந்த யோசனையிலிருந்தார். மோகனும் சுந்தரமும் பால்கனியருகில் நின்று தீவிர விவாதித்துக் கொண்டிருந்தனர்.

காலியான இருக்கையில் அமர்ந்தேன். மின்விசிறியின் சூடான காற்று முகத்தில் மோதியதும் சிரித்தேன். கிருபாவும் முகம்பார்த்துச் சிரித்தான். மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தான்.

மாம்பலம் நிலையத்தில் கடைசி ரயில் வந்து நின்றது. இருவரும் உள்ளே ஏறி மறுபக்க வாசலருகில் சென்று நின்றபோது கிருபா சொன்னான். “சாப்டீங்களாண்ணே.”

ஒளிப்புள்ளிகள் பின்னோடிய இருளை வெறித்துப் பார்த்து நின்றேன். காலையில் பேருந்தில் ஏறியதிலிருந்து அதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை. தேநீரும் சிகரெட்டுமாய் அன்றைய நாளின் பயணம் முடிந்திருந்தது.

கிண்டியை அடைந்தபோது கிருபா காலி இருக்கையில் சென்று உடல்சுருட்டி உட்கார்ந்தான். பசியின் குளம்படிகள் குடலை மிதித்தோடும் போது அப்படித்தான் சுருண்டுகொள்வான். ஒரு மிடறு தேநீரோ அல்லது சிகரெட் புகையோ தற்காலிகமாய் சிறு ஆறுதலைத் தரக்கூடும்.

பையைத் தொட்டுப் பார்த்தேன். மடங்கிக் கிடந்த தாளை எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். இருபது ரூபாய்த் தாள். தெருமுனையில் வண்டிக்கடை இருக்கும் என்று யோசித்தபடியே தாளைத் திருப்பினேன். தாளின் நடுவில் டேப் பளபளத்தது. உற்றுப் பார்த்தேன். கிழிசல் சாமர்த்தியமாக ஒட்டி மறைக்கப்பட்டிருந்தது. மீண்டும் பையைத் துழாவினேன். தட்டுப்பட்ட நாணயத்தை எடுத்துப் பார்த்தேன். ஐந்து ரூபாய்.

வண்டி பழவந்தாங்கலை நெருங்கியது. கிருபாவை எழுப்பி அழைத்துக்கொண்டு இறங்கினேன். ரயில் நிலையம் ஓய்ந்திருந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. படிகளுக்குக் கீழே உடைமைகளை பத்திரப்படுத்திக் கொண்டு பீடி வலித்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். நடைபாதையின் விளக்குகள் ஒளிர்ந்து தனிமையில் நின்றன. தண்டவாளங்களைக் கடந்து வெளியே வந்தோம். கிருபா நடக்க முடியாமல் திணறினான். இடதுகை வயிறை இறுகப் பற்றியிருந்தது. வண்டிக்கடையில் மங்கலாக விளக்கெரிந்தது. அடுப்பு அணைக்கப்பட்டிருந்தது. அவள் பாத்திரங்களை துலக்கிக்கொண்டிருந்தாள்.

“இட்லி கெடைக்குமா?”

நிமிர்ந்து விநோதமாகப் பார்த்தவள் “காசு இருக்கா?” என்றாள்

எங்களைத் தெரிந்தவள் தான். ஒன்றிரண்டு முறை காசு இல்லாமல் சாப்பிட நேர்ந்ததுண்டு. கையில் பணம் வந்தவுடன் பாக்கியை சரிசெய்ததும் உண்டு.

பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினேன். “இதான் இருக்கு.”

“அஞ்சு ரூவாய்க்கு என்னா தரது?” முணுமுணுத்தபடியே பிளாஸ்டிக் தட்டில் ஜவ்வுத்தாளைப் பரப்பி இரண்டு இட்லிகளைப் போட்டாள். கிண்ணத்திலிருந்து சாம்பாரையும் காரச் சட்னியையும் இட்டாள்.

குடத்திலிருந்து பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீரை எடுத்து கிருபாவிடம் நீட்டினேன். கையைக் கழுவிக்கொண்டவன் ஒரு மடக்கு நீரைக் குடித்தான்.

“நீங்கண்ணே” என்று தட்டை நீட்டினான்.

“நீ சாப்புடு தம்பி” என்று பையிலிருந்து தேடி எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன்.

காற்றில் வெம்மை குறைந்திருக்க வானில் நிலவு எழுந்திருந்தது. முக்காலியில் அமர்ந்தேன். கிருபாவைப் பார்த்தேன். பையில் கிடந்த சிகரெட் பெட்டியின் அட்டையைப் பிரித்து கருப்பு மசிகொண்ட பேனாவினால் கோடுகளை வரையலானேன்.

கையைக் கழுவிக்கொண்டு அருகில் வந்த கிருபாவிடம் மீதி சிகரெட்டை நீட்டினேன்.

“என்னண்ணே இது, பறவை கூட்டுக்குத் திரும்பற மாதிரி இருக்கு.”

புகைநெடி காற்றில் அலைய அவன் முகத்தைப் பார்த்தபடி சொன்னேன் “இது படமில்ல தம்பி. ஒரு பாஷை. இப்பிடி கோடுபோட்டா அதுக்கு அர்த்தம் இரவு.”

“இரவு”, முணுமுணுத்தபடியே அட்டையை வாங்கிக் கூர்ந்து பார்த்தான்.

“கையெழுத்துப் போடுங்கண்ணே” அட்டையை நீட்டியபடி சிரித்தான். உயிர்த்தெழுந்த தேவனின் அமைதியான முகம்.

அட்டையை வாங்கிப் பார்த்தேன். பனிபெய்யும் விடிகாலையின் மந்தமான வெளிச்சத்தில் அறை நடுவே நின்ற சட்டகத்தில் வண்ணங்கள் இறைத்தக் கித்தானைக் கண்டேன். இப்போது ஓவியம் பூர்த்தியாகியிருந்தது. வலது ஓரத்தில் நிதானமாகக் கையெழுத்திட்டேன்.