இறப்பின் நடனம் – குஸ்தாவ ஃப்ளாபெ

by எஸ்.கயல்
0 comment

முன்குறிப்பு:

இறைவன் தனக்களித்திருக்கிற கருணையற்ற பணியைப் பற்றி ‘இறப்பு’ புலம்புவதாக எழுதப்பட்ட கதை. இறப்பு முதலில் சாத்தானிடம் உரையாடி, பிறகு சாத்தானின் முதல் காதலனான நீரோவிடம் பேசத் துவங்குகிறது. தன்னையும் சாத்தானையும் ஒப்பிட்டால் தங்கள் இருவரில் தவிர்க்க முடியாத சக்தி சாத்தானே என்றும் தன் வேலை ஒரு நாள் முடிவுற்ற பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என்றும் கூறுகிறது. குஸ்தாவ ஃப்ளாபெ (Gustave Flaubert) இதனை எழுதிய போது அவருடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்த ரொமாண்டிஸிஸமே வனப்பும் அலங்கார நடையும் கொண்ட இக்கதை முழுதும் நிறைந்திருக்கிறது.

மரணம் பேசுகிறது

சொர்க்கத்திலிருந்து விழுகின்ற பெரிய வெண்ணிறக் கண்ணீர்த் துளிகளைப் போல குளிர்கால இரவுகளில் பனித் திவலைகள் உருகி விழுகையில், நான் என்னுடைய குரலை உயர்த்துகிறேன்; அதன் அதிர்வுகள் சைப்ரஸ் மரங்களைக் கிளர்ச்சி அடையச் செய்து அவற்றில் புதிய மொட்டுகளை மலர்த்துகின்றன.

பூமியின் மீதான என்னுடைய துரிதமான பயணத்தை நான் சிறிது நிறுத்துகிறேன். குளிர்ந்த கல்லறைகளின் கீழ் என்னை வீசுகிறேன். கறுத்த இறகுடைய பறவைகள் திடீரென என் அருகிருந்து அச்சத்தோடு படபடத்தெழ, இறந்தவர்கள் அமைதியாக உறங்க, சைப்ரஸ் மரக்கிளைகள் என் தலையின் கீழே தொங்க, என்னைச் சுற்றி இருக்கும் அனைத்தும் அழுதபடியோ அல்லது ஆழ்ந்த உறக்கத்திலோ இருக்க, தகிக்கின்ற என்னுடைய கண்கள் பரந்த வெண்ணிற மேகங்களின் மீது படிகிறது. பிரம்மாண்டமான முறுக்குத் தாள்கள் தங்களுடைய நீளத்தை முழுவதுமாக சொர்க்கத்தின் மீது விரித்தன.

எத்தனை இரவுகள், எத்தனை வருடங்கள், எத்தனை காலங்கள் நான் இவ்வாறு பயணித்திருக்கிறேன்! உலகம் முழுதும் பிறப்புக்குப் போலவே அழிவுக்கும் ஒரு சாட்சியாக! எண்ணிக்கையில் அடங்காத தலைமுறைகளை என்னுடைய வாளின் மூலம் அடைந்திருக்கிறேன். கடவுளைப் போல நானும் நித்தியம். பூமியின் செவிலி. ஒவ்வொரு இரவும் நான் அதை மென்மையுடனும் வெப்பத்துடனும் தொட்டிலில் இடுகிறேன். தொடர்ச்சியாக அதே விருந்துகள்; அதே முடிவுறாத கடுமையான உழைப்பு. ஒவ்வொரு காலையில் நான் பிரியும் போதும் ஒவ்வொரு மாலை நான் திரும்ப வரும்போதும் போதுமான உறைகளை என் வாள் சேகரித்திருக்கும். பிறகு நான் அவற்றை சொர்க்கத்தின் நான்கு திசைகளிலும் சிதறடிப்பேன்.

2

பெரும் கடல் அலைகள் வீசுகையில், சொர்க்கம் அழுகையில், காற்று கிரீச்சிடும் சப்தத்துடன் சமுத்திரத்தை பைத்தியக்காரத்தனமாக பலம் கொண்டு மோதுகையில், இந்தக் கொந்தளிப்பிலும் அமளியிலும் அங்கு கூடும் அலைகளுக்கு மேலாக நான் என்னை வீசுகிறேன். ஆகா! அந்த உக்கிரமான காற்று தூங்கும் மஞ்சத்தில் ராணி அசைவதைப் போல என்னை மென்மையாகத் தூளியிலிட்டு ஆட்டுகிறது. என்னுடைய காலடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வீண் முயற்சியில் ஈடுபட்ட எண்ணற்ற தலைமுறைகளுக்குப் பழக்கமான கண்ணீரில் குளித்து, எரிச்சலுற்று என் பாதங்கள் களைத்து விட்டன. அவற்றை நுரைத்த கடல் குளுமைப்படுத்தியது. பிறகு புயல் நின்றுபோய் அதன் உறுமல் என்னைத் தாலாட்டு போல அமைதிப்படுத்தியதும் நான் என் தலையைத் தாழ்த்திக் கொண்டேன். ஒரு கணத்துக்கு முன், கோபத்துடன் கொந்தளித்த சூறாவளி உடனடியாக மரிக்கிறதே அது போலவே. ஆண்களும், கப்பல்களும், சமீபத்தில் கடலின் மார்பில் துடுப்பிட்டுச் சென்ற கடற்படையினர் என யாவருமே. நான் பார்த்த அறிந்த அனைத்திலும் – மக்கள், சிம்மாசனங்கள், காதல், பெருமைகள், துயரங்கள், நல்லொழுக்கங்கள் என நான் எதை நேசித்து இருக்கிறேன்? எதையும் இல்லை. என்னை மறைத்துள்ள கவசத்தைத் தவிர.

என்னுடைய குதிரை. ஆமாம். என்னுடைய குதிரை. நான் அதை நேசிக்கிறேன். எவ்வளவு வேகத்துடன் உலகின் மீது ஓடுகிறது. அதன் வெள்ளியாலான பெரும் குளம்படி வேகமாய் நடக்கின்ற பாதங்களை உடையவர்களின் தலையின் மீது உரசியபடி இருக்கிறது. அதன் வால் நேராக, மிருதுவாக, கண்கள் துள்ளும் பிழம்புகளாக, கழுத்தின் பிடரி மயிர் காற்றில் பறக்க, எங்கள் பித்து நிறைந்த பயணத்தில் நாங்கள் மோதி முன்னேறுகிறோம். நாங்கள் ஓய்வெடுப்பதோ உறங்குவதோ இல்லை. அதன் கணைப்பு யுத்தத்தின் குறியீடு. அதன் நாசித் துவாரங்களில் இருந்து புகையாய்ப் பரவும் தொற்று நோய் மூடுபனியாக பூமியின் மீது மிதக்கிறது. எங்கெங்கு என்னுடைய அம்புகள் பறக்கின்றனவோ அங்கெல்லாம் அவை பிரமிடுகளையும் ராஜ்‌ஜியங்களையும் வீழ்த்துகின்றன. தன்னுடைய குளம்புகளின் கீழ் கிரீடங்களை மிதித்துத் துவைக்கின்றன. எல்லா மனிதர்களும் உன் மீது மதிப்பு கொண்டுள்ளனர். இல்லை, அவர்கள் உன்னைத் தொழுகிறார்கள்.

தங்கள் வழிபாட்டுக்கான என்னுடைய சாதகமான பதிலைப் பெற, போப் ஆண்டவர்கள் தங்களுடைய மூன்று கிரீடங்களைப் படையலிடுகிறார்கள்.

அரசர்கள் தங்கள் செங்கோல்களை. மக்கள் தங்கள் ரகசிய துயரங்களை. கவிஞர்கள் தங்கள் புகழை. அனைவரும் உன்னிடம் அஞ்சுகிறார்கள். உன் முன் மண்டியிடுகிறார்கள் ஆனால் தலைகுனிந்து இருக்கிற அவர்களின் வடிவங்களின் மீது நீ வேகமாக ஓடுகிறாய்.

ஆ! உன்னதமான போர்க் குதிரையே! சொர்க்கத்தின் ஒற்றைப் பரிசே. உன்னுடைய தசை நாண்கள் இரும்பால் ஆனவை, தலை வெண்கலத்தால் ஆனது. கழுகுகளின் சிறகுகளால் செய்யப்பட்டது போல, பல நூற்றாண்டுகள் தொடர்ந்து உன்னால் வேகமாக பயணிக்க முடியும். ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தவிர்க்க முடியாது பசிக்கிற போது உன்னுடைய உணவு மனித மாமிசம். உன் பானம்  மனிதர்களின் கண்ணீர். என் போர்க் குதிரையே! வெளிறிய மரணம் மட்டுமே நேசிப்பது போல் நான் உன்னை நேசிக்கிறேன்.

ஆ! நான் நெடுங்காலம் வாழ்ந்து விட்டேன். எனக்கு எவ்வளவு விஷயங்கள் தெரியும்! பிரபஞ்சத்தின் எத்தனை மர்மங்கள் என்னுடைய நெஞ்சத்தில் பொத்தி வைக்கப்பட்டிருக்கின்றன!

3

சில சமயங்களில் நான் எண்ணற்ற ஈட்டிகளை தூக்கி வீசிய பிறகு, என்னுடைய வெளிர் நிற குதிரையில் உலகத்தின் மீது பயணித்து, நிறைய உயிர்களைச் சேகரித்த பிறகு களைப்பு என்னை தீவிரமாகத் தாக்குகையில் நான் ஓய்வெடுக்க விரும்புவேன். ஆனால் என்னுடைய வேலையைத் தொடர வேண்டும். நான் என் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அது முடிவற்ற வெளியையும் எல்லா உலகங்களையும் தலைமை ஏற்றுச் செல்லும். நான் மனிதர்களின் திட்டங்களை வெற்றிகளோடு, காதலைக் குற்றங்களோடு, அவர்களின் அனைத்தையும் சேர்த்துத் துடைத்து அப்புறப்படுத்தி விடுவேன். நான் என்னுடைய சவச் சீலையைப் போர்த்துவேன். ஒரு நச்சுப் பாம்பு இடைவிடாது தாக்குவது போல ஒரு பயம் நிறைந்த ஆவல் என்னை நிரந்தரமாக சித்திரவதை செய்கிறது. நான் திரும்பிப் பார்க்கிறேன்.

எஞ்சியிருக்கிற இடிபாடுகளில் இருந்து வரும் புகையை, இரவின் கறுமையை, உலகத்தின் துயரத்தை, என் கரங்களினால் விளைந்த கல்லறையை, இறந்த காலத்தின் பின்னணியை அதன் ஒன்றுமற்ற தன்மையைப் பார்க்கிறேன். என் களைப்புற்ற உடல், கனத்த தலை, சோர்வான கால்கள், யாவும் மூழ்குகின்றன; ஓய்வைத் தேடுகின்றன. என்னுடைய கண்கள் ஒளிர்கின்ற எல்லையற்ற மகத்தான அடிவாரத்தை நோக்கித் திரும்புகின்றன. அது உயரமாகவும் ஆழமாகவும் வளர்ந்து கொண்டே இருப்பதாகத் தெரிகிறது. மற்ற எல்லாவற்றையும் நுகர்ந்ததைப் போலவே நான் அதை நுகர்வேன். எப்போது கடவுளே! என்னுடைய முறை வரும்போது நான் தூங்க வேண்டுமா? எப்போது நீங்கள் படைப்பதை நிறுத்துவீர்கள்? எப்போது எனக்கான கல்லறையை நான் தோண்டி அதனுள் நீட்டிப் படுத்துக்கொண்டு, உலகின் மீது ஊஞ்சலாடியபடியே இறந்துபோய்க் கொண்டிருக்கின்ற இயற்கையின் மூச்சுத்திணறலை, கடைசி மூச்சை பட்டியல் இடுவேன்?

அந்த நிகழ்கணத்தில் நான் என்னுடைய ஈட்டியையும் முகமூடியையும் தூக்கி வீசி எறிவேன். பிறகு என்னுடைய குதிரையை நான் விடுவிப்பேன். அவன் பிரமிடுகளின் மீது வளர்கின்ற புல்லை மேய்வான். சக்கரவர்த்திகளின் மாளிகைகளில் உறங்குவான். கடலின் கடைசித் துளி நீரைப் பருகுவான். மெல்ல விழுகின்ற இறுதித் துளி ரத்தத்தின் வாசனையை முகர்ந்து தும்முவான். பகல் இரவு எனக் கணக்கற்ற காலங்களின் வழியே நித்தியமான வயல்களில் கற்பனையால் செலுத்தப்பட்டதாக அவன் திரிவான். உலக வரைபடத்திலிருந்து இமயமலைக்கு ஒரு துள்ளல்; தன் துடுக்கான பெருமையுடன் சொர்க்கத்திலிருந்து பூமிக்குப் பயணிப்பான். பொடியாகிப் போன ராஜ்ஜியங்களைச் சுற்றிக் களிப்புடன் நடனமாடுவான். காய்ந்துபோன கடல் மணலின் மீது வேகமெடுத்து ஓடுவான். அழிந்துபோன மகத்தான நகரங்களைச் சுற்றி எல்லை வகுப்பான். வெற்றிடத்தை நெஞ்சு முட்ட சுவாசித்து வசதியாகத் தன்னுடலைக் கிடத்தி உருளுவான்.

பிறகு நம்பிக்கைப் பாத்திரமான நீ, என்னைப் போலவே களைப்புற்ற நீ உன்னைக் கிடத்தும் பொருட்டு சில செங்குத்துப் பாறைகளைத் தேடி அவற்றில் தங்கி மர்மமான முடிவற்ற கடலின் முன் ஒதுங்குவாய். பிறகு நுரை தள்ளும் வாயுடன் விரித்த நாசியுடன் அடிவாரத்தை நோக்கி கழுத்தை நீட்டுகிறாய். நித்திய உறக்கத்தை விரும்பும் நான் எரிச்சலுற்ற உன் பாதங்கள் இளைப்பாற புல்லால் ஆன படுக்கையை வேண்டுகிறேன்.

4

உன்மீது வசதியாக சாய்ந்திருக்கிற இலைகளால் எரிகின்ற உன் விழிகளை என்றென்றும் மூட இயலாது. அசைவற்று விளிம்பில் காத்திருக்கிற நீ ஒரே அடியில் கொல்வதற்கு உன்னை விட வலிமையான சத்தியைப் பெற விரும்புகிறாய். புயலுடன், அழுகிப் போன மலருடன், சுருங்கிய பிணத்துடன் இணைய உன்னை விட வலிமையான சக்தியைப் பெற வேண்டுகிறாய். நீ உறக்கத்தைத் தேடுகிறாய். ஏனெனில் நித்திய வாழ்வென்பது சித்திரவதை; கல்லறையே அமைதி.

நாம் ஏன் இங்கிருக்கிறோம்? எந்தச் சூறாவளி நம்மை இந்தப் பள்ளத்தாக்கில் வீசியது? நாம் ஆதியில் வந்த மறந்துபோன கிரகங்களை நோக்கி எந்தக் காற்று நம்மை விரைந்து தாங்கிப் பிடிக்கும்? புகழ்பெற்ற என் போர்க் குதிரையே! அதுவரை நீ உன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிரு; உன் பாதங்களில் மிதிபட்ட தலைகள் நொறுங்கும் ஓசை உன் காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். உன் பயணம் நீண்டது. ஆனால் துணிவானது. நீ என்னைச் சுமந்து வெகு காலமாகி விட்டது; இன்னும் நீண்ட காலம் கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நாம் முதுமை எய்துவதில்லை. விண்மீன்கள் குளிரலாம், மலைகள் தூளாகலாம், இறுதியாக பூமி தன்னுடைய வைரத்தின் அச்சுப் பாதையை விட்டு விலகலாம். என்றென்றும் தொட்டுணர முடியாத வாழ்வில் நாம் இருவர் மட்டுமே நித்தியமானவர்கள். ஆனால், இன்று நீ என் பாதத்தில் கிடக்க இயலாது. பாசி வளர்ந்திருக்கும் கல்லறை மீது உன் பற்களைத் தேய்த்து மெருகேற்ற இயலாது; ஏனெனில் சாத்தான் என்னைக் கைவிட்டுவிட்டது; நான் அறிந்திடாத ஒரு சக்தி அதனுடைய விருப்பத்துக்குக் கீழ்ப்படியச் சொல்லி என்னை வற்புறுத்துகிறது. அந்தோ! இறந்தவர்கள் தங்கள் கல்லறைகளிலிருந்து எழக் கோருகிறார்கள்.

சாத்தானே, நான் உன்னை நேசிக்கிறேன்! என்னுடைய இன்பங்களையும் மன உளைச்சல்களையும் நீ புரிந்துகொள்வதில்லை. ஆனால், என்னைவிட அதிர்ஷ்டம் மிக்க நீ, பூமி இல்லாது போகும் எதோ ஒரு நாளில் பெருவெளியின் உலகில் சாய்ந்து உறங்க முடியும். ஆனால் இவ்வளவு காலம் முடிவற்று உழைத்த, புனிதமான  காதல்களுடன், பவித்திரமான எண்ணங்களுடன் மட்டும் வாழ்ந்த நான் இறப்பற்ற தன்மையை சகித்துக் கொள்ள வேண்டும். மனிதனுக்கு அவனுடைய கல்லறை இருக்கிறது; புகழுக்கு மறதி; பகல் இரவுக்குள் மரித்துப்போகிறது. ஆனால் நான் …!

நீடிக்கிற தனிமையால் சபிக்கப்பட்டிருக்கிற என் பயண வழியெங்கும் சிதறிக் கிடக்கிற மக்களின் எலும்புகளின் மீது அழிவு குறியிடப்பட்டுள்ளது. தேவதைகளுக்கு சக தேவதைகள் உள்ளன; பேய்களுக்கு இருள் எனும் துணை இருக்கிறது. ஆனால் எனக்கோ வாளின் பலத்த ஓசையும், என் அம்புகளின் சீழ்க்கையும், வேகமெடுக்கிற என் குதிரையின் ஒலியுமே கேட்கிறது. வேகத்துடன் பாய்கிற கடல்களின் எதிரொலி மனித குலத்தை எப்போதும் முழுதாக அள்ளி ஆட்கொள்கிறது.

சாத்தான்

5

சொர்க்கத்தில் வாழும் பேரதிர்ஷ்டமுள்ள நீயா புகார் சொல்கிறாய்? அற்புதமான, உயர்ந்த, மாற்ற முடியாத, நித்தியமான – கடவுளைப் போன்ற, உனக்கு நிகரான அந்த ஒற்றை உயிர் யார்? பிரபஞ்சத்தை உன் குதிரையின் பாதத்தில் வைத்து நொறுக்கி விட்ட பிறகு பிறிதொரு நாளில் உன் முறை வருகையில் என்றென்றும் நிரந்தரமாக மறையப் போகிற நீயா மனக்கவலையுற்று இருக்கிறாய்?

கடவுளின் படைப்பு முடிவுறும் போது, சொர்க்கங்கள் மறைந்த பிறகு, விண்மீன்கள் தாகத்தைத் தணித்த பிறகு, ஆவிகள் தங்களுடைய ரகசிய இடங்களில் இருந்து எழுந்து வந்து பெருமூச்சுடனும் புலம்பலுடனும் ஆழங்களில் உலவுகையில் உனக்கு அது கற்பனைக்கு எட்டாத எத்தகைய ஒரு ஆனந்தம்! பிறகு நித்தியமான சொர்க்கத்தின் – நரகத்தின் அரியணைகளில் அமரலாம். கிரகங்களை, விண்மீன்களை, உலகங்களை வீழ்த்தலாம். உன்னுடைய போர்க் குதிரையை பவழங்களின் வைரங்களின் வயல்களில் அவிழ்த்துவிடலாம். நேர்மையின் அங்கியால் அதனைப் போர்த்தலாம். தேவதைகளின் சிறகுகளைப் பிய்த்து அதனருகே குப்பைக் கூளங்களாக எறியலாம். சொர்க்கத்தின் விண்மீன்களால் அதன் சேணத்தை நெய்து அலங்கரிக்கலாம். பிறகு நீ அதனை அழித்து விடுவாய்.

எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி வெறுமையைத் தவிர வேறெதுவும் இல்லை என்றான பிறகு, உன்னுடைய சவப்பெட்டி நொறுங்கி உன் அம்புகள் உடைந்ததும் சொர்க்கத்தின் உயரமான குன்றில் இருக்கின்ற கிரீடத்தின் கல்லாகச் சமைந்தபடி மறதியின் பள்ளத்தாக்கில் உன்னைக்  கிடத்துவாய். உன் வீழ்ச்சி பத்து லட்சம் யுகங்களுக்கு நீடித்திருக்கும். ஆனால் இறுதியில் நீ இறப்பாய். ஏனெனில் உலகம் முடிவுக்கு வர வேண்டும். எல்லோரும் இறக்க வேண்டும்; சாத்தானைத் தவிர. கடவுளை விடவும் நித்தியத் தன்மை! மற்ற உலகங்களில் குழப்பத்தைக் கொண்டுவர நான் வாழ்கிறேன்.

மரணம்!

ஆனால் நீ என்னைப் போல உன் முன்னால் இருக்கின்ற நித்தியமான வெறுமையைப் பார்ப்பதில்லை. இறப்பைப் போன்ற இந்தக் குளிர்ச்சியால் நீ பாதிக்கப்படுவதில்லை.

சாத்தான்

இல்லை, கொடுமையான தளர்ச்சியுற்று இருக்கிற உருகிய எரிமலையின் கீழே நான் நடுங்குகிறேன். சபிக்கப்பட்டவர்களை எரிக்கிற அதிலிருந்து நானும் கூட தப்பிக்க முடியாது.  உனக்கு அழிப்பது மட்டுமே கூடப் போதுமானது. ஆனால் நானோ பிறப்பைக் கொண்டு வருகிறேன். சாம்ராஜ்ஜியங்களை இயக்குகிறேன்; நாடுகளின் பல விஷயங்களைப் பரிபாலிக்கிறேன். நான் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். விலை உயர்ந்த உலோகங்கள் உருகி வழிவதும் ரத்தினங்கள் ஒளிர்வதும் மக்களின் பெயர்களிலுள்ள புகழும் என்னுடைய ஆணைக்கு இணங்கியே. பெண்களின், கவிஞர்களின், அரசியல்வாதிகளின் காதுகளில் நான் ரகசியமாய் காதலை, பெருமையை, லட்சியத்தைப் பேசுவேன். மெசலினாவோடும் நீரோவுடனும் பாரீசிலும் பாபிலோனாவிலும் அதே தற்கணத்தில் நான் இருப்பேன். ஒரு புதிய தீவு கண்டுபிடிக்கப்படட்டும். நான் அத்தீவுக்குப் பறப்பேன். அதுவரை அங்கு மக்களின் பாதம் படாதிருக்கட்டும். கடலால் சூழப்பட்ட பாறையாக நான் அங்கு இருப்பேன்.

6

அதன் உரிமைக்காக சர்ச்சை செய்கிற மக்கள் முன்னேறிப் போகிறார்கள். அதே நேரத்தில் நான் ஒரு விலைமகளின் மஞ்சத்திலும் நறுமணம் ஊட்டப்பட்ட அரசர்களின் படுக்கையிலும் ஓய்வெடுப்பேன். நான் பேசும்போது வெறுப்பும் பகையும், பெருமையும் துயரும் ஒரே சமயத்தில் என்னுடைய உதடுகளிலிருந்து பொழிகிறது. இரவும் பகலுமாக நான் வேலை செய்கிறேன். மக்கள் கூட்டம் கிறித்துவர்களை எரித்துக் கொண்டிருந்தபோது நான் சிற்றின்பக் களியாட்டங்களில் திளைத்து ரோஜாக்களால் நறுமணம் ஊட்டப்பட்ட நீரில் குளித்தேன். ரதங்களில் பெருவேகத்தில் பயணித்தேன். விரக்தியில் நெகிழ்ந்தேன் அல்லது புகழைப்பற்றி சத்தமாகத் தற்பெருமை அடித்தேன்.

சில சமயங்களில் நான் தான் உலகின் மொத்த உருவம்; நான் பார்த்த யாவுமே உண்மையாக நிகழ்ந்தது; அது மெய்மை; என் இருப்புக்குள் நடந்தது என்றும் நம்பினேன். சில சமயங்களில் நான் களைத்து, என்னுடைய பகுத்தறியும் திறனை இழந்து பித்துப்பிடித்த அறிவீனமற்ற செயல்களில் ஈடுபடும் போது, சிறிதும் தகுதியற்ற என் கூட்டாளிகள் என்னைக் கேலி செய்து பரிதாபமும் கொள்வார்கள். எந்த உயிரினமும் என்மீது அக்கறை கொள்வதில்லை. நான் எங்கும் நேசிக்கப் படவில்லை. நான் மகனாக இருக்கக்கூடிய சொர்க்கத்திலும் இல்லை, அரசனாக இருக்கும் நரகத்திலும் இல்லை. என்னைக் கடவுளாக கருதக்கூடிய பூமியிலும் இல்லை.

கட்டுப்படுத்த முடியாத கொடுஞ்சினம், குருதியோடும் நதி, பித்தேறிய வெறி. இவற்றைத் தவிர நான் எதையும் பார்ப்பதில்லை. என்னுடைய இமைகள் உறக்கத்தில் மூடுவதில்லை. என்னுடைய ஆன்மா ஓய்வு கொள்வதில்லை. நீயாவது குளிர்ந்த பசுமையான கல்லறைகளின் மீது தலை வைத்து ஓய்வெடுக்கலாம். நானோ கண்ணைக் கூசும் அரண்மனைகளில் வசிக்க வேண்டும், பசித்தவர்களின் சாபங்களைக் கேட்க வேண்டும். சொர்க்கத்திடம் சத்தமாக அழும் குற்றங்களின் துர்நாற்றத்தை நுகர வேண்டும்.

கடவுளே, நான் யாரை வெறுக்கிறேனோ அவர்கள் தான் என்னை நிச்சயமாகத் தண்டித்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய ஆன்மா இறைவனின் கோபத்தை விட உயர்வானது. என்னுடைய ஒரு பெருமூச்சில் நான் மொத்த உலகத்தையும் என்னுடைய மார்புக்குள் இழுக்க முடியும். அங்கு அது என்னைப் போலவே நித்தியமாக எரியும். இறைவா, உங்களுடைய பறை எப்போது ஒலிக்கும்? பிறகு கடலையும் மலையையும் ஒரு பேரமைதி சூழும். நான் மனிதத் தன்மையால் பாதிக்கப்பட வேண்டுமெனில் அவர்களுடைய அழுகையும் தேம்பலும் என்னுடைய குரலை மூழ்கடிக்க வேண்டும்.

(எண்ணிலடங்கா எலும்புக்கூடுகள் மகிழ்ச்சியின் வெற்றியின் கூக்குரலோடு துரிதகதியில் ரதங்களில் பயணித்து முன்னேறிச் செல்கின்றன. பழுத்த மஞ்சள் நிற இலைகள் தொடர்ந்து காற்றிலும் புழுதியிலும் விழுந்தபடி இருக்கிற உடைந்த கிளைகளையும் வெற்றிச் சின்னங்களையும் தங்களுடன் இழுத்துச் செல்கின்றன).

அது நித்திய நகரான ரோமை ஒரு வெற்றி சூழ்வது. முன்பு பீடமாக இருந்த அவளுடைய விளையாட்டு அரங்கமும் ஜூபிடரின் கோயிலும் இப்போது மணலின் இரு துகள்கள். ஆனால் மரணம் தன்னுடைய குறுவாளை வீசி விட்டது. நினைவுச் சின்னங்கள் வீழ்ந்து விட்டன. நிறுத்துங்கள்! அவற்றின் தலைவன், பூமியின் ஆகச்சிறந்த கவிஞன், என்னுடைய இதயத்தின் பெருமை, நீரோ வருகிறான்!

(பன்னிரெண்டு எலும்புக்கூட்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில் நீரோ முன்னேறிச் செல்கிறான். தன்னுடைய கைகளில் செங்கோலை ஏந்தி எலும்பு துருத்துகிற தன் போர்க் குதிரைகளின் முதுகில் தட்டுகிறான். நிமிர்ந்து நிற்கிற அவனுடைய சவச் சீலை கடல் அலையைப் போல அவனுக்குப் பின்னால் மடிப்புகளாக சிறகடிக்கிறது. தான் ஏதோ குதிரைப் பந்தயத்தில் இருப்பது போல அவன் திரும்புகிறான். அவனுடைய கண்கள் தழல் உமிழ, அவன் சத்தமாக அழுகிறான்)

நீரோ

விரைவு! விரைவு! இன்னும் வேகமாக அதாவது உங்கள் பாதங்கள் சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு மூட்டுவது வரை, உங்களுடைய நாசித் துவாரங்கள் உங்கள் மார்புகளை நுரையால் நிரப்பும் வரை, துரிதமாக நகருங்கள். என்ன சக்கரங்கள் இன்னும் புகையவில்லையா? ஆஸ்ட்டியா வரை சென்று சேர்ந்துவிட்ட விசிறிகளின் சத்தத்தை, கைத்தட்டலை, மகிழ்ச்சிக் கூக்குரலைக் கேளுங்கள்.  மக்கள் எப்படி பாறையின் மீது குங்குமப் பூக்களை பொழிகிறார்கள் எனப் பாருங்கள். எப்படி என்னுடைய பாதை ஏற்கனவே நறுமணத் திரவியங்களால் ஈரமாகியுள்ளது என்பதைப் பாருங்கள். என்னுடைய தேர் சுழல்கிறது. நான் தங்கத்தாலான அதன் கடிவாளத்தை உலுக்கும் போது அதன் வேகம் காற்றை விட அதிகமாக இருக்கிறது. வேகம்! வேகம்! புழுதி மேகங்கள் எழுகின்றன. என் கவசம் தென்றலின் மீது தவழ்கிறது. அது என் காதில் வெற்றி வெற்றி எனப் பாடுகிறது. வேகம்! வேகம்! மகிழ்ச்சிக் கூக்குரலைச் செவிமடுத்து அழுந்த ஊன்றுகிற பாதங்களையும் பரிசுக் கூட்டத்தையும் பட்டியலிடுங்கள். சொர்க்கத்திலிருக்கிற வெள்ளி நட்சத்திரம் கூட நம்மைக் குனிந்து பார்க்கிறது. ஆம். வேகமாக, இன்னும் வேகமாக.

(நீரோவின் ரதம் இப்போது பேய்களால் இழுக்கப்படுவதாகத் தெரிகிறது. புழுதியாலான ஒரு கரு
மேகமும் புகையும் அவனைச் சூழ்கிறது. அவனுடைய வேகமான பயணத்தில் கல்லறைகளின் மீது அவன் மோதுகிறான். மீள எழுப்பப்பட்ட பிணங்கள் அவனுடைய ரதத்தின் சக்கரத்தில் நசுக்கப்படுகின்றன. அந்த ரதம் இப்போது திரும்புகிறது. முன்னேறி வந்து பிறகு நின்றுவிட்டது.)

நீரோ

இப்போது என் மனைவியரில் அறுநூறு பேர் என் முன் கிரேக்க நடனத்தை மௌனமாக ஆடிக் கொண்டிருக்க, அணிகலன்கள் செய்யப் பயன்படும் வெண்மையும் சிகப்பும் கலந்த பாறையொன்றில் நான் ரோஜாக்களுடன் நீராடுகிறேன். வசீகரமான பரிணாம வளர்ச்சியின் காரணமாக உருவாகும் பளிங்கின் வடிவம் போல, தங்களுக்குள் பின்னப்பட்ட கரங்களை நான் எல்லாப் பக்கங்களிலும் பார்க்கும்படி அசைத்து, உயர்ந்த நாணல்கள் மோகம் கொண்ட குளத்தை நோக்கிக் குனிவதைப் போல, அவர்கள் என்னை வட்டமிடட்டும். எவள் என்னை ஆரத் தழுவுகிறாளோ, எவளுடைய இதயம் என்னுடைய இதயத்துக்குக் கீழே துடிக்கிறதோ, எவள் தன் அலைபாயும் கூந்தலில் என்னைச் சிக்க வைக்கிறாளோ, என்னை நோக்கி எவள் இன்பமாகப் புன்னகைக்கிறாளோ, மிகுந்த கதகதப்புடன் என்னைத் தன் பிடிக்குள் இருத்துகிறாளோ, காதல் பாடல்களால் என் மனதுக்கு ஆறுதல் தருகிறாளோ, பேரானந்தத்தின் உச்சியில் என்னைத் துயில் எழுப்புகிறாளோ, அவளுக்கு நான் ராஜ்ஜியத்தை, கடலை, ஆட்சிக்குழுவை, ஒலிம்பஸ் மலையை, ஜூபிடர் தெய்வத்தின் கோயிலை அளிப்பேன். தொல்லைகள் அற்ற கண்ணாடியாலான நிலவைப் பார்ப்பதும் அதன் மீது மிதக்கும் பெண்களின் குரலைக் கேட்பதும் என்னுடைய விருப்பமாக இருப்பதால் ரோம் இன்றிரவு அசைவற்று இருக்கும்; எந்த மரக் கலமும் கைபரின் கடலை நெருங்காது. அவ்வாறே ஆகட்டும்.

8

நறுமணம் ஊட்டப்பட்ட தென்றல் என்னுடைய எல்லா ஆடைகளையும்  கடந்து செல்கிறது. ஆ! சிற்றின்ப போதையால் நான் இறந்து விடுவேன். பிறகு நான் மட்டுமே ருசிக்கக் கூடிய சில அரிய வகை மாமிசத்தை நான் உண்ணும் போது யாராவது சிலர் பாடவும் மெல்லிய ஆடை அணிந்த அழகிகள் பொன்னாலான தட்டுகளில் இருந்து எனக்கு உணவு அளிக்கவும் நான் ஓய்வெடுப்பதைக் கூர்ந்து நோக்கவும் வேண்டும். ஒரு அடிமை அவள் சகோதரியின் கழுத்தை வெட்ட வேண்டும். ஏனெனில் அது எனக்கு இன்பம் தருவது – கடவுள்களுக்குப் பிடித்தமானது – குருதியின் வாசனையை உணவுடன் கலப்பது, பலியானவர்களின் அழுகுரல் என்னுடைய நரம்புகளை ஆற்றுப் படுத்துகிறது.

இன்று இரவு, நான் ரோமை எரித்து விடுவேன். அதன் தழல் சொர்க்கத்தை ஒளியேற்றும். டைபர் நெருப்பு அலைகளில் புரளும். இத்தாலியக் கடலின் மீது இதற்காக மரத்தால் செய்யப்பட்ட ஒரு மேடையை நான் அமைப்பேன். ரோமானிய மக்கள் என்னுடைய புகழைத் துதித்தபடி அங்கு  கூடுவார்கள். அதனுடைய திரைச்சீலைகள் ஊதா நிறத்தில் இருக்கும். அதன்மீது கழுகுகளின் இறகுகளால் செய்யப்பட்ட மஞ்சம் ஒன்றை உருவாக்குவேன். அனைத்து உலகங்களும் இறைவனின் சாதனைகளுக்காகக் கைகளைத் தட்ட நான் அதில் அமர்ந்திருப்பேன். ராஜ்ஜியத்தின் மிக அழகிய பெண்கள் என்னருகே அமர்ந்திருப்பார்கள். சூறாவளியின் கர்ஜனை என்னுடைய பாதங்களுக்குக் கீழ் எப்போதும் அணைந்து விடும். இசையொலி அலைகளின் ஆரவாரத்தைக் கடந்து நிற்கும்.

நீ என்ன சொன்னாய்? வீரர்கள் புரட்சி செய்வர். படையணிப் பிரிவுகள் கலைந்து விடும், என் மனைவியர் அச்சத்தில் ஓடுவர் என்றா? மௌனமும் கண்ணீரும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. நான் இடியோசையை மட்டுமே கேட்கிறேன். நான் இப்போது இறந்தாக வேண்டுமா?

மரணம்

உடனடியாக! நீரோ!

நான் என்னுடைய விருந்து தினங்களை, மகிழ்ச்சியை, கண்ணாடியை, என் வெற்றிகளை, என் ரதங்களை, மக்களின் கைத்தட்டல்களைக் கைவிட வேண்டுமா?

மரணம்

எல்லாம்! எல்லாம்! சாத்தான்

அவசரம் உலகத்தின் எஜமானன். உன்னைக் குறுவாளுக்குத் தருகிற அது வருகிறது. ஒரு சக்ரவர்த்திக்குத் தெரியும் எப்படி இறப்பது என்று.

9

இறந்து போ! எனக்கு வாழ்வில் பற்றாக்குறை உள்ளது. ஓ! நான் எவ்வளவு சாதனைகளைச் செய்ய வேண்டும்! ஒலிம்பஸ் மலையை, நடுங்கச் செய்யும் செயல்களைச் செய்ய வேண்டும். கடலின் பெரும் ஆரவாரமான படுக்கையை நான்  நிறைத்து வெற்றி ரதத்தில் பெரு வேகத்துடன் அதைக் கடப்பேன். மறுபடி ஒருமுறை சூரியனை, கைபரை, காம்பாக்னாவை, பொன்னாலான மணல் துகள்களின் மீது நிகழும் சர்க்கஸைப் பார்ப்பேன். என்னை வாழ விடுங்கள்.

மரணம்

கல்லறைக்கு ஒரு கவசத்தையும் அரசனின் ஊர்தியை விட மென்மையும் அமைதியும் நிறைந்த ஒரு படுக்கையையும் நானுனக்குத் தருவேன்.

நீரோ

ஆனால் நான் இறக்கத் தயங்குகிறேன்.

மரணம்

அப்படியானால் இறந்து போ!

(தனக்கு அருகில் நிலத்தில் கிடந்த சவச் சீலையை எடுத்தான். அது நீரோவைத் தாங்கி தன் மடிப்புகளுள் அடக்கிக் கொண்டது.)