கனவு இல்லம் – லிடியா டேவிஸ்

by எஸ்.கயல்
0 comment

மலையின் பக்கவாட்டில் இருந்த சாலையிலிருந்து அந்த நிலம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பார்த்த உடனே அதை நான் வாங்க விரும்பினேன். நில விற்பனை முகவர் அதிலிருக்கும் குறைபாடுகளாக  எதைச் சொல்லியிருந்தாலும் அந்த நேரத்தில் எனக்குக் கேட்டிருக்காது. பருவம் தப்பிய கோடை மழையால் பாதி வெள்ளம் சூழ்ந்த இரத்தச் சிகப்பு நிறத்து திராட்சைத் தோட்டங்கள் பரவிக் கிடந்த நீண்ட பள்ளத்தாக்கு, களைகளும் முட்செடிகளில் மலர்ந்துள்ள பூக்களும் நிரம்பி வழிந்த மஞ்சள் வயல்களின் பின்னிருந்த குன்றை மறைக்கும் செழித்த காடுகள், பள்ளத்தாக்கின் நடுவே வயல்களை விட உயர்ந்து காணப்பட்ட பாழடைந்த பண்ணை வீடு, அதன் தோட்டத்துச் சுவரிலிருந்த உடைந்த கல்லின் விரிசல் வழியே ஊடுருவி வளர்ந்திருந்த ஒரு மல்பெரி மரம், அழகிய பழங்களால் உருவான பழுப்பு நிறக் கம்பளத்தின் குறுக்கே விழும் முதிர்ந்த பேரிக்கனி மரத்தின் நிழல் என இவற்றின் அழகைப் பார்த்து நான் அசந்து போய் பேச்சற்று நின்றேன்.

“பயன்படுத்தும் வகையில் ஒரு அறை மட்டுமே மீதம் இருக்கிறது. பல வருடங்களாக அதில் விலங்குகள் வசித்ததால் அசுத்தமாக இருக்கிறது” என்று முகவர் தன்னுடைய மகிழுந்தின் மீது சாய்ந்தபடி சொன்னார். நாங்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்தோம்.

தரையில் பதிக்கப்பட்டிருந்த வில்லை ஓடுகளின் மீது சாணம் அடர்ந்து கிடந்தது. கற்களின் வழியாக காற்றை உணர்ந்தேன்; சூரிய வெளிச்சத்தை உயரமான கூரை வழியாகப் பார்க்க முடிந்தது. இவை எதுவும் என் உற்சாகத்தைக் கெடுக்கவில்லை. அன்றே நிலப் பத்திரப் பதிவு தொடர்பான தஸ்தாவேஜுகளை நான் எழுதி முடித்தேன்.

ஒரு நிலத்தில் வீடு கட்டவேண்டும் என்று நான் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்தது இந்த நிலத்தைத் தான். நான் இந்த உலகில் பிறந்ததே இந்தக் காரணத்துக்காகத் தான் என எனக்கு சில சமயங்களில் தோன்றும். இந்த ஆசை எனக்குள் உருவான பிறகு என் மொத்த ஆற்றலும் அதைத் திருப்திப்படுத்தும் நோக்கில் வளைந்து கொடுத்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும் கிடைத்த வேலை எனக்கு களைப்பு தருவதாகவும் என் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் இருந்தது. ஆனால் அது நிறைய பணத்தையும் பொறுப்புகளையும் சேர்த்தே எனக்கு அளித்தது.

செலவுகளை முடிந்த அளவு குறைப்பதற்காக பரபரப்பற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததுடன், புதிய நட்பு உருவாவதைத் தவிர்த்தும், எவ்விதமான கொண்டாட்டங்கள் இல்லாமலும் இருந்தேன். பல வருடங்கள் கழிந்த பிறகு வேலையை விடும் அளவுக்கு என்னிடம் பணம் சேர்ந்ததும் நிலத்தைத் தேடத் துவங்கினேன். வீட்டு மனைகளை விற்பனை செய்யும் முகவர்கள் ஒவ்வொரு இடமாகக் காண்பித்து என்னை அலைக்கழித்தனர்.  நிறைய இடங்களைத் தொடர்ந்து பார்த்து வந்த எனக்கு எதைத் தேடுகிறேன் என்பதிலேயே குழப்பம் தோன்ற ஆரம்பித்தது. அந்தப் பள்ளத்தாக்கு கண்ணில் பட்டதும் என் மீதிருந்த ஒரு பயங்கரமான சுமை நீங்கியது போல நிம்மதியாக உணர்ந்தேன்.

கோடையின் வெம்மை படர்ந்திருந்த நிலத்தில் கம்பீரமாக கருத்த நிறத்தில் இருந்த என் அறையில் திருப்தியாக வாழ்ந்தேன். அதைச் சுத்தப்படுத்தி, மரச் சாமான்களால் நிறைத்து அறையின் ஒரு மூலையில் படம் வரையும் பலகையை அமைத்து அந்த வீட்டை மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டங்களைத் தீட்டினேன். என்னுடைய பணியின் இடையே நான் எட்டிப் பார்த்தால் ஆலிவ் மர இலைகளின் மீது விழும் சூரியனின் கதிர்கள் என்னை வெளியே வரச் சொல்லி என் மனதை ஈர்க்கும். நான் அந்த வீட்டின் அருகே இருந்த புல்லின் மீது நடக்கையில் நறுமணச் செடிகளின் குறுக்கு நெடுக்காக குண்டுக் கரிச்சான் பறவை பறப்பதையும், பல்லிகள் ஓடிச் சென்று சுவர்களில் மறைவதையும் வாழ்நாள் முழுவதும் நகரத்தில் வாழ்ந்து களைப்புற்ற, எதிர்பார்ப்பு  நிறைந்த ஒரு மனிதனின் கண்களுடன் கவனித்தேன். என் ஜன்னல் பக்கத்தில் இருந்த ஊசி இலை மரம் புயல் நேர வானிலையில் காற்றின் முன் தலை குனிந்தது.

பிறகு இலையுதிர் காலத்துக் குளிர் துவங்கியது. வேட்டைக்காரர்கள் என் வீட்டருகே முகாமிட்டனர். அவர்களிடமிருந்த துப்பாக்கிகளின் வெடிச் சத்தம் என்னை அச்சமூட்டியது. பக்கத்து நிலத்தில் இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் குழாய்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஒரு மோசமான துர்நாற்றம் காற்றில் பரவியது. நான் என்னுடைய கனப்பு அடுப்பில் நெருப்பு மூட்டினேன். ஆனால் ஒரு போதும் அதன் வெம்மையை என்னால் உணர முடியவில்லை.

ஒரு நாள் வேட்டையாடும் இளைஞனின் நிழலுருவால் என் ஜன்னலின் நிறம் கறுத்தது. தோல் ஆடையை அணிந்திருந்த அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. என் வீட்டின் நியூயார்க் வகைக் கதவைத் தட்டாமல் திறந்தவன், என்னை ஒரு விநாடி உற்றுப் பார்த்து, கதவின் நிழலில் நின்றபடி என்னை முறைத்துப் பார்த்தான். அவன் கண்கள் வெளிர் நீல நிறத்தில் இருந்தன. அவனுடைய சிகப்பு நிறத் தாடி அவன் தோலை சிறிதளவே மறைத்தது. அவன் பிரச்சினைக்குரியவன் என நான் உடனே முடிவு செய்ததனால் அவனைப் பார்த்து அச்சம் கொண்டேன். அறையில் உள்ள பொருட்களைப் பார்த்தவன், எதுவும் செய்யாமல் அறைக் கதவை மூடிவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.

அவன் ஒரு உயிரியல் பூங்காவில் ஏகாந்தமாக உலாவுவது போலவும் நான் அடைத்து வைக்கப்பட்டுள்ள வேலியிட்ட தொழுவத்தில் என் கூண்டின் அருகே வந்து முரட்டுத்தனமாக என்னை ஆராய்வது போலவும் எனக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்துடன் நான் அறையில் முன்னும் பின்னுமாக நடந்தேன். நான் நகரத்தை விட்டு வெகு தூரத்தில் இங்கு தனித்திருக்கிறேன். அவன் என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டான். சில நாட்கள் கழிந்தன. நான் அவனைப் பார்ப்பதற்காகக் கவலையோடு காத்திருந்தேன்.

அவன் மறுபடி வந்தான். முன்பு போல் கதவருகே தயங்கி நிற்காமல் இம்முறை நேரே உள்ளே வந்தவன், நாற்காலியில் உட்கார்ந்து என்னிடம் பேசினான். அவனுடைய வட்டார உச்சரிப்பு எனக்குப் புரியவில்லை. அவன் ஒரே வரியை மறுபடி மறுபடி திருத்தமாக மூன்று முறை சொன்ன பிறகும் அதனுடைய அர்த்தத்தை என்னால் யூகிக்க மட்டுமே முடிந்தது. அவனுக்கு நான் பதில் உரைக்க முயன்றபோது என்னுடைய நகரத்து உச்சரிப்பைப் புரிந்து கொள்வதில் அவனுக்கும் சிக்கல் இருந்தது. நான் அதைக் கைவிட்டு ஒரு கோப்பை மதுவை அவனிடம் நீட்டினேன். அவன் அதனை ஏற்கவில்லை. நம்பிக்கையற்ற ஒரு தோரணையில் நாற்காலியில் இருந்து எழுந்தவன் அறையிலிருந்த என் பொருட்களை நெருங்கி நின்று ஆராயும் வண்ணம் பார்க்கத் துவங்கினான்.

சுவரின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த என் புத்தக அடுக்கு எனக்குப் பிடித்த வீடுகளின் சட்டமிட்ட புகைப்படங்களால் நிறைந்திருந்தது. அந்த வீடுகளில் ஒன்று ஃபிரான்ஸின் வெஸ்காசிலும் இன்னொன்று மாண்ட்பர்ணசேவில் மலிவான குடியிருப்பு ஒன்றிற்குப் பின்னாலும் இருந்தது. இவற்றைப் பார்வையிட்ட பிறகு இறுதியாக படம் வரையும் பலகை அருகே வந்தவன் சில நொடிகள் நின்று தன் விரல்களை காற்றில் சுழற்றி அது என்ன என்று நான் விளக்குவதற்காகக் காத்திருந்தான். ஒவ்வொரு கோடாக ஒரு வீட்டை நான் திட்டமிடுகிறேன் என்பதைப் புரிந்து கொள்ள அவனுக்கு நீண்ட நேரம் பிடித்தது. அது புரிந்ததும் வீட்டின் ஒவ்வொரு சுவரையும் தன் விரல்களால் நிழற்படத் திட்ட வரைவின் மீது சில இன்ஞ்சுகள் தன் விரல்களால் தொட்டுத் தொடர்ந்தான். எல்லாக் கோடுகளையும் ஆய்ந்து முடித்த பின் என்னைப் பார்த்து உதடு விரிய புன்னகை புரிந்தான். பக்கவாட்டில் ஒருவித தந்திரத்துடன் அவன் பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு திடீரென அவன் வெளியேறினான்.

என் அறைக்குப் படையெடுத்து வந்து என் இரகசியங்களை அறிந்து விட்டதாக எனக்கு மறுபடியும் அவன் மீது கோபமேற்பட்டது. ஆனால் என் கோபம் குறைந்தபோது நான் அவன் திரும்பி வருவதையே விரும்பினேன். காற்றின் வேகம் அதிகமாக இருந்தபோதும் அடுத்த நாளும் அதற்குப் பிறகு வந்த சில நாட்களும் அவன் இங்கு வந்தபடி இருந்தான். நாட்கள் செல்லச் செல்ல நான் அவன் வரவை எதிர்பார்க்கக் துவங்கினேன். அவன் ஒவ்வொரு நாளும் காலை நேரத்திலேயே விரைவாக வேட்டையை முடித்தான். வாரத்தின் பல நாட்களில் தன் வேட்டையை முடித்த பின், சூரியன் வெள்ளைக் களிமண்ணை நிறமேற்றத் துவங்கும்போது, முகம் மின்ன அவன் நிலத்தில் இருந்து வெளியே வருவான். கட்டுப்படுத்த முடியாத ஆற்றல் அவனிடம் தளும்பிக் கொண்டிருக்கும். விநாடிகளுக்கொரு முறை நாற்காலியில் இருந்து தாவி, கதவை நோக்கி நடந்து சென்று வெளியே எட்டிப் பார்த்து, அறையின் மையப் பகுதிக்குத் திரும்பி, இசையற்று சீழ்க்கையடித்து, பிறகு மறுபடியும் நாற்காலியில் அமர்வான். இந்த உற்சாகம் சிறிது நேரத்தில் மெல்ல வடிந்த பிறகு அவன் அங்கிருந்து சென்றுவிடுவான். உண்பதற்கும் குடிப்பதற்கும் எதைத் தந்தாலும் அவன் ஏற்றுக் கொண்டதில்லை. உணவையும் மதுவையும் பகிர்வது ஏதோ நெருங்கியவர்களுக்கு இடையே மட்டுமே நடக்கும் செயல் என்பது போல, நான் அவனுக்கு அவற்றைத் தந்தபோது அவன் வியப்படைந்தான்.

எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் நிகழ்வது எளிதான காரியமாக இல்லை. ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படக் கூடிய பற்பல புதிய விசயங்களைக் கண்டுபிடித்தோம். நான் குளிர்காலத்தை எதிர்கொள்ள, சுவர்களில் இருந்த சிறு துளைகளை நிரப்பியும் கனப்பு அடுப்புக்கான மரக்கட்டைகளை சீராக அடுக்கிவைத்தும், எனக்கு உதவினான். வேலைகளை முடித்த பிறகு நாங்கள் வயல்களுக்கும் பிறகு காட்டுக்கும் செல்வோம். இளஞ்சிவப்பு நிறமுடைய முட்பழங்கள் நிறைந்த சோலை, முயல் வளைகள் அடர்ந்த பகுதி, மலைப் பக்கம் இருந்த ஒரு குகை என தான் பார்க்க விரும்பும் இடங்களை எல்லாம் என் நண்பன் எனக்குக் காட்டினான். நான் அவனுக்குக் காண்பிக்க எனக்கு ஒரே ஒரு இடம் தான் இருந்தது என்றாலும் அது என்னைப் போலவே அவனுக்கும் மர்மமானதாகவும் மனதைக் கவர்வதாகவும் இருந்தது.

அவன் என்னைச் சந்திக்க வரும் ஒவ்வொரு முறையும் முன்பிருந்ததை விட ஒரு அறையை அதிகரித்தோ அல்லது என் ஓய்வறையின் அளவை அதிகரித்தோ வைத்துள்ள திட்ட வரைபடத்தை நோக்கியே நாங்கள் முதலில் செல்வோம். எப்போதுமே அதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். ஏனெனில் நான் என் திட்டத்தை மேம்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என நான் அதைச் செம்மைப்படுத்துவேன். சில சமயங்களில் அவன் என் பென்சிலை எடுத்து மோசமாக எதையாவது வரைவான். நான் நினைத்துப் பார்க்காத ஒன்றாக, இறைச்சியை பதப்படுத்தும் அறையாகவோ அல்லது பாதாள அறையாகவோ அது இருக்கும்.

வீடு கட்டுவதற்கான ஒரு திட்டத்தைக் கைவசம் வைத்திருப்பதன் உற்சாகமும் இப்படியொரு நட்பு கிடைத்ததன் மகிழ்ச்சியும் ஒரு பயங்கரமான உண்மையைக் காணமுடியாது என் கண்களைக் கட்டி வைத்துவிட்டன. காலத்தைக் கடத்தியபடி எவ்வளவு அதிக நாட்கள் இந்த நிலத்தில் வாழ்கிறேனோ அந்தளவுக்கு நான் வீடு கட்டக் கூடிய சாத்தியங்கள் மங்கி வருகின்றன என்பது தான் அந்த உண்மை. என்னிடமிருந்த பணம் துளித் துளியாக செலவாகிக் கொண்டிருந்தது. என் கனவும் அதனுடன் கரைந்து சென்று கொண்டிருந்தது. சந்தையில் இருந்து வெகுதூரம் தள்ளி இருந்த இந்த கிராமத்தில் உணவுப் பொருட்களின் விலை நகரத்தில் இருந்ததைவிட இரு மடங்காக இருந்தது. ஏற்கனவே ஒடிசலான உடல்வாகு கொண்ட என்னால் அதற்கும் குறைவாக உண்ண முடியாது. திறமையான மேஸ்திரிகளும் தச்சர்களும் மட்டுமின்றி மோசமானவர்களும் கூட இங்கு கிடைப்பது அரிது. அத்துடன் அவர்கள் அதிக பணத்தைக் கோருபவர்களாக இருந்தனர். அவர்களில் ஓரிவருவரை சில மாதங்களுக்கு பணியமர்த்தினால், அதற்குப் பிறகு, என் வாழ்க்கையை நடத்துவதற்கு என்னிடம் பணமே இல்லாமல் போகக் கூடும். இதையறிந்து நான் மனம் தளராமல் இருந்தாலும் தொடர்ந்து என்னை அச்சுறுத்திய கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

ஆரம்பத்தில் திட்ட வரைபடத்தில் இருப்பது போலவே கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்திருந்ததால் அது என் முழு நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக் கொண்டது. நாட்கள் செல்லச் செல்ல வீட்டை விட தெள்ளத் தெளிவாக அந்தக் கட்டிட வரைவு என் மனதில் பதிவாகியிருந்தது. என் விருப்பத்திற்கேற்ப மாறிக் கொண்டே இருந்த பென்சிலால் வரையப்பட்ட கோடுகளுடன் கற்பனையில் மிக அதிகமான நேரத்தைச் செலவிட்டேன். ஒருவேளை அந்த வீட்டைக் கட்டுவதற்கான வாய்ப்பே இனி இல்லை என்பதை நான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருந்தால் கட்டிடத்தின் திட்ட வரைபடம் தன் அர்த்தத்தை இழந்திருக்கும். ஆகவே நான் வீட்டின் மீதான என் நம்பிக்கையைத் தொடர்ந்தேன். ஆனால் அதைக் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் என் நம்பிக்கையில் இருந்து தொடர்ந்து நிதானமாக அரித்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

சில மாதங்களில், நிறைய வீடுகள் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் முளைத்து, நிலைமையை இன்னும் மோசமாக்கி, என் மன அமைதியைக் குலைத்தன. நான் அந்த நிலத்தை வாங்கிய போது பள்ளத்தாக்கில் இருந்தவை கல்லால் ஆன சில குடிசை வீடுகள் மட்டுமே. உழுத நிலத்தின் இடையே சம்மணமிட்டு அமர்ந்திருந்த அவை மண் தரைகளோடு உட்புறத்தில் குகைகளைப் போல கறுத்துக் காணப்பட்டன. பத்திரத்தில் கையொப்பமிட்ட பிறகு வீடு திரும்பிய நான் கைவிடப்பட்ட  பல ஏக்கர் திராட்சைத் தோட்டங்களை, அடிவானம் வரை செழிப்புடன் வளர்ந்திருக்கிற பண்ணை வயல்களை, அங்கிருக்கும் சிறு குன்றின் மீது குவிந்தமர்ந்து அரண்மனை போலத் தோற்றமளிக்கிற கிராமத்தை, அதன் உச்சியில் கொத்துகளாகத் தெரிகிற தேவாலயத்தின் ஊசிக் கோபுரத்தைத் திருப்தியுடன் பார்க்கிறேன். காயமடைந்த பூமியின் பச்சை மண் கண்ணுக்குத்  தெரிந்த சில வாரங்களில், உறைந்த குருதிப் பொருக்கு போல, நிலப்பரப்பின் மீது ஆங்காங்கே ஒரு புது வீடு எழும்பி விடுகிறது. இத்தகைய மாற்றங்களை கிரகிக்கக் கூட நிலப்பரப்புக்கு நேரமில்லாத அளவுக்கு, ஒரு வீட்டைக் கட்டி முடிவதற்குள் இன்னொன்றைக் கட்டுவதற்காக உயிருள்ள ஓக் மரங்கள் இடதும் வலதுமாக வெட்டப்படுகின்றன.

குறிப்பாக ஒரு வீடு கட்டப்படும் போது அதன் வேகமான முன்னேற்றத்தைப் பார்த்து திகிலும் குழப்பமும் அடைந்தேன். ஏனெனில் அது என் வீட்டிலிருந்து சில அடிகள் நடந்தால், நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் தான் இருந்தது. நன்கு திட்டமிடப்பட்ட வேகத்துடன் அது வளர்ந்து வருவது என்னை அதிர்ச்சி அடைய வைத்து, என் நிலைமையைக் கேலி செய்வதாகத் தெரிந்தது. இளஞ்சிவப்பு நிறச் சுவர்களும், ஜன்னல்களின் மீது மலிவான இரும்புச் சட்டங்கள் வைத்துக் கட்டப்பட்டதுமான ஒரு மோசமான வீடு அது. கட்டி முடிக்கப்பட்டு அந்த வீட்டின் பின்புறமுள்ள புழுதியில் கடைசிச் செடி நடப்பட்டதும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் நகரத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தனர். சொர்க்கத்திலிருக்கும் அனைத்து துறவிகளுக்கான நாளை அங்கு கழித்த அவர்கள், மாடியில் அமர்ந்து பள்ளத்தாக்கை பார்த்துக் கொண்டு இருந்தது ஏதோ பிரத்யேக அரங்கில் அமர்ந்து ஓபராவை ரசிப்பது போலிருந்தது. அதன் பிறகு வானிலை நன்றாக இருந்த ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்கள் தம் வீட்டிற்கு வந்து இந்தக் கிராமத்தைத் தங்கள் ரேடியோ இரைச்சலால் நிறைத்தார்கள். நான் மனச் சோர்வுடன் அவர்களை என் ஜன்னலின் வழியே பார்த்தேன்.

எல்லாவற்றிலும் மோசமானது வாரத்தின் இறுதி நாட்களில் என் நண்பன் என்னைச் சந்திக்க வருவதில்லை என்பது தான். என்னுடைய அண்டை வீட்டாரால் அவன் என்னிடமிருந்து விலகிப் போனதை நான் அறிவேன். ஒரு நாள் அந்த வீட்டின் முற்றத்தில் அவர்களிடையே அவன் அமைதியாக நின்று கொண்டிருப்பதைத் தொலைவிலிருந்து பார்த்தபோது எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. என் நிலை எவ்வளவு நம்பிக்கை அற்றதாக இருக்கிறது என்பதை இறுதியில் நான் ஏற்றுக் கொண்டேயாக வேண்டியிருக்கிறது. அப்போது தான் இந்த நிலத்தை விற்றுவிட்டு மறுபடி மொத்த விசயத்தையும் முதலில் இருந்து வேறெங்காவது துவங்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இந்த நிலத்திற்கு நகரத்து மக்களிடம் இருந்து நல்ல விலை கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் நில விற்பனை செய்யும் முகவரிடம் சென்றபோது அவர் ஒரு உணர்ச்சியற்ற குரலில் பக்கத்து நிலத்தில் ஒரு கால்வாய் இருப்பதாலும் என் வீடு குடியேறுவதற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதாலும் என்னுடைய சொத்தை விற்பனை செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றார். அதை வாங்குவதற்கு விருப்பமுடைய ஒருவர் உண்டெனில் அது என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் என்றும் இவ்வளவு நாட்களாக அவர்கள் என்னுடைய இருப்பை வெறுத்ததாகவும் என்னிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்த நிலத்தை சொற்ப பணம் தந்து வாங்கிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

அவர்கள் வீட்டின் முன்புறம் என்னுடைய வீடு இருப்பது கண் திருஷ்டியாக இருப்பதாகவும், நண்பர்கள் தம் பொழுதைக் கழிக்க தங்களுடைய வீட்டுக்கு வந்தபோது என் வீடு அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவாகவும் அவர்கள் ரகசியமாக சொன்னதாகச் சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் நிச்சயமாக அவர்களுக்கு மட்டும் என்னுடைய வீட்டை விற்கக் கூடாது என்று உறுதியாக முடிவு எடுத்தேன். அவர்கள் இதில் வெற்றி பெறக் கூடாது என்றெண்ணி முகவரிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினேன். நான் வாசலை நோக்கிச் செல்லும்போது முகவர் இன்னொரு அறைக்குச் செல்வதையும் தன் மனைவியிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் இருவரும் சத்தமாக சிரிப்பதையும் கேட்டேன். இது என் வாழ்வின் இருளான ஒரு நிகழ்கணமென உணர்ந்தேன்.

என் நண்பன் என்னைப் பார்க்க வராததற்கான எந்தக் காரணத்தையும் கூறாது சில வாரங்களுக்குப் பிறகு முற்றிலுமாக தன் வருகையை நிறுத்திக் கொண்டபோது கசப்பு என் மனதை முழுமையாக ஆக்கிரமித்தது. கடும் மனச்சோர்வுக்குள் மூழ்கிய நான் இனி அந்த வீட்டைக் கட்ட வேண்டாம் என்றும் மீண்டும் என்னுடைய வேலையைத் தொடர நகரத்திற்குச் செல்லவும் முடிவெடுத்தேன். என்னுடைய நிறுவனத்தின் இயக்குனர்களால் என்னைப் போன்று நிறைய நேரம் உழைக்கிற, உண்மையாக இருக்கிற, முடிவில்லாத சிக்கல்களைச் சகிக்கிற வேறொருத்தியைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர்கள் திரும்ப வந்துவிடும்படியும் நிறைய பணம் தருவதாகவும் பல முறை எனக்குக் கடிதம் எழுதினர்.

நான் என் பழைய வாழ்க்கை முறைக்கு எளிதாக திரும்பிச் செல்லலாம். அப்போது இந்தக் கிராமத்தில் நான் தங்கியிருந்தது ஒரு நீண்ட விடுமுறையாக என் மனதளவில் மாறிவிட்டிருக்கும். அதிக வேலை காரணமாக களைப்பு மிகுந்திருந்த நாட்களில், எனக்கு மது வாங்கித் தந்த சில அலுவலகப் பணியாளர்களுக்காக, நகர வாழ்க்கைக்காக நான் ஏங்கியதாக ஒரு நொடி என்னை நானே நம்பச் செய்து அதில் வெற்றி கண்டேன். முகவரிடம் நான் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு வீட்டை விற்க விரும்புவதாக அவர்களிடம் சொல்லச் சொன்னேன். நான் செய்வது சரியானது தான் என்று சிந்திக்க முயற்சி செய்தேன். என்னுடைய பொருட்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பும் போது வேறொரு புதிய மனுஷியாக என்னை உணர்ந்தேன். என் நிலத்தின் குறுகலான எல்லைகளைச் சுற்றி கடைசியாக ஒரு முறை நடந்தேன்.

விடிகாலையிலேயே பயணப் பெட்டிகள் அனைத்தும் வீட்டு வாசலில் தயாராக இருந்தன. நான் வாடகைக்கு அமர்த்தியிருந்த கார் என் மீது புழுதியை வாரித் தூற்றிக் கொண்டிருந்தது. உண்மையில் நான் கிளம்புவதற்குத் தயாரான அந்த நொடியில் தான் நான் அவசரப்படுகிறேனோ என்று எனக்குத் தோன்றியது. என் நண்பன், அந்தப் பெயர் அறியாத இளைஞனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்புவது தவறு என்று நினைத்தேன். வாடகை கார் ஓட்டுனருக்கு பணம் தந்து, அடுத்த நாள் இதே நேரத்துக்கு வரச் சொல்லி, திருப்பி அனுப்பினேன். என்னை நோக்கி ஒரு சந்தேகப் பார்வை பார்த்தவன், தன் வண்டியை எடுத்துக் கொண்டு சாலையில் மறைந்தான். அங்கு கிளம்பிய புழுதி சுழன்றெழுந்து பின் அடங்கியது.

நான் பயணப் பெட்டிகளை உள்ளே கொண்டு சென்றேன். என்னுடைய நண்பனை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த சிறிது நேரத்துக்குப் பின் காரணமின்றி இன்னும் ஒரு நாள் இந்த வீட்டில் தங்கவேண்டிய நிலையை முட்டாள்தனமாக நானே உருவாக்கிக் கொண்டதையும், விரோதம் மிக்க இந்த சுற்றுப்புறச் சூழலில் அவனை நான் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் உணர்ந்தேன். நான் அலுவலகத்துக்கு வராததால் எரிச்சலடைந்த இயக்குனர்கள், என்னைப் பற்றி கவலை கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, அது இயலாதபோது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

நேரம் செல்லச் செல்ல மோசமான ஒரு தவறைச் செய்துவிட்டதாக எண்ணி அமைதியிழந்து என் மீதே எனக்கு கோபம் வரத் துவங்கியது. அடுத்த நாள் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என்பது மட்டுமே சிறிது ஆறுதல் தருவதாக இருந்ததுடன், இறுதியில் இப்படி ஒரு நாளைக் கடந்ததே கூட நினைவில்லாமல் போகலாம் என்றும் தோன்றியது.

வெப்பம் மிகுந்த நீண்ட மதியப் பொழுதில் சிறு பறவைகள் முட்புதர்களில் சிறகடிக்க, மண்ணிலிருந்து ஒரு இனிய நறுமணம் எழுந்தது. வானம் மேகங்களற்றுத் தெளிவாக இருக்க, கதிரவன் தன் கரிய நிழல்களை பூமியின் குறுக்கே படர விட்டான். விமானத்தின் முதல் வகுப்பு இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில் சுவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னால் நிலத்தின் அழகை ரசிக்க முடியவில்லை. என் எண்ணங்கள் யாவும் நகரத்தில் இருக்க, இந்தக் கிராமத்தில் சிறைப்பட்டிருப்பது எனக்கு எரிச்சலைத் தந்தது. இரவு உணவுக்கென்று எதுவும் இல்லாத போதும் கிராமத்திற்கு நடந்து செல்ல விருப்பமின்றி உறக்கம் வரும் வரை பல மணிநேரங்கள் குளிரிலும் பசியிலும் விழித்தபடி படுத்துக் கிடந்தேன்.

விடியலுக்கு முன்பே எழுந்துவிட்ட எனக்கு பசியில் என் வயிற்றில் கற்கள் இருப்பது போலிருந்தது. புகைவண்டி நிலையத்தில் சிற்றுண்டி எதாவது சாப்பிட நினைத்துக் காத்திருந்தேன். என்னுடைய ஜன்னலுக்கு வெளியே அனைத்தும் கறுத்திருந்தன.

சூறைக்காற்று இலைகளை அசைக்கத் துவங்க கறுத்த புதர்களுக்குப் பின்னே வானம் வெளுக்க ஆரம்பித்தது. இலைகள் மீண்டும் மெல்ல தம்முடைய நிறம் பெற்றன. காட்டிலும் வீட்டின் அருகிலும் பறவைகளின் இசை எல்லா திசைகளிலும் எழுவதும் அடங்குவதாகவும் இருந்ததைக் கூர்ந்து கவனித்தேன். சூரியனின் கதிர்கள் புதர்களை அடைந்தபோது நான் வெளியே சென்று வீட்டின் பக்கத்தில் அமர்ந்தேன். எனக்குள் ஏற்பட்ட ஆழமான மன அமைதியால், வாடகை கார் வந்த போது, அந்த வீட்டை விட்டு என்னால் வெளியேற முடியவில்லை. சில கோபமான சொற்களை வீசிய பிறகு காரின் ஓட்டுனர் திரும்பச் சென்றார்.

காலை முழுதும் மதியவேளை துவங்கிய பின்னும் கூட நேற்று நான் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். ஆனால் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்று நேற்று இருந்த பொறுமையின்மையோ ஆவலோ எனக்கு இப்போது இல்லை. என்னைக் கடந்து சென்ற பறவைகள் புதர்களில் மறைவதை, சிறு பூச்சிகள் கற்களைச் சுற்றி ஊர்வதைக் கண்டு அந்தக் காட்சியில் மூழ்கியிருந்தேன். கண்ணுக்குத் தெரியாமல் நான் மறைந்து போனதைப் போலவோ அல்லது நானே அங்கு இல்லாமல் ஒரு சாட்சியாக இவற்றைப் பார்ப்பது போலவோ இருந்தது. அல்லது நான் இருக்கக் கூடாத ஒரு இடத்தில், நான் அங்கிருப்பேன் என எவரும் எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து, ஒரு கணம் பின்னடைந்து வெறுமனே என் நிழலாக நான் நிற்கையில் வெளிச்சம் எனைச் சூழ்ந்தது. விரைவில் கட்டு இறுகும். நான் என்னைத் தேடும் பயணத்தில் அங்கிருந்து பறந்து சென்றிருப்பேன். இப்போதைக்கு விடுதலையடைந்த உணர்வில் நான் இருக்கிறேன்.

மாலை வந்தும் எனக்குப் பசியே தெரியவில்லை. மனநிறைவினால் தலை லேசாகி நான் அங்கேயே அசையாது அமர்ந்து காத்திருந்தேன். பிறகு குளிரும் இருட்டும் என்னை வீட்டுக்குள் செலுத்த, உள்ளே சென்று படுத்துறங்கிய எனக்கு, தூக்கத்தில் பயங்கரக் கனவுகள் தோன்றின.

அடுத்த நாள் காலை கண் விழித்த போது பக்கத்து நிலத்தின் கடையோரம் ஒரு உருவம் மிக மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்தேன். நீண்ட காலமாக வெறுமையாக இருந்த எதோ ஒன்று நிறைந்ததாக என் கண்கள் உணர்ந்தன. என்னை அறியாமலேயே நான் என் நண்பனுக்காகக் காத்திருந்தேன். ஆனால் அவனை நான் உற்றுப் பார்க்கத் துவங்கியதும் அவனிடம் ஏற்பட்ட தயக்கம் எனக்கு செயற்கையாகத் தோன்றியது. பிறகு அது என்னை அச்சுறுத்தியது. முன் நெற்றியை முன்னும் பின்னுமாக அழுத்தித் தேய்த்து, மூக்கை மேல் நோக்கி வைத்து வேட்டை நாய் போல காற்றை உள்ளிழுத்தான். அவன் எங்கே போகிறான் என்று அவனுக்கே தெரியாதது போலிருந்தது. சற்று முன்னேறி அருகில் சென்றபோது அவனுடைய முன் நெற்றி வெண்ணிறத் துணியால் கட்டப்பட்டிருந்ததையும் அவனுடைய முகத் தோலின் நிறம் மோசமான சாம்பல் நிறத்தில் மாறியிருந்ததையும் பார்த்தேன்.

அவனை நெருங்கிய என்னை, முன் பின் அறியாத அந்நியரைப் பார்ப்பதைப் போல, குழப்பத்துடன் முறைத்துப் பார்த்தான். அவனுடைய கைகளைப் பிடித்து நிலத்தைக் கடக்க உதவினேன். நாங்கள் வீட்டை அடைந்ததும் அவன் என்னைத் தூரமாகத் தள்ளிவிட்டு என் படுக்கையில் போய்ப் படுத்தான். சோர்வில் அவனுடைய உடல் நடுங்கியது. மிக மெலிந்திருந்த அவன் கன்னங்கள் குழிகளைப் போலவும் கைகள் விலங்கின் நகங்களைப் போலவும் காட்சியளித்தன. அவன் கண்களில் தெரிந்த காய்ச்சலைக் கண்டதும் அந்தக் கிராமத்தில் ஒரு மருத்துவரைத் தேடிப் போகும் அளவுக்கு என் புத்தி பேதலித்துப் போய் யோசித்தது. ஆனால் நன்றாக மூச்சு விட முடிந்ததும் அவன் மிக அமைதியாகப் பேசத் துவங்கினான். விலாவரியாக அவன் எதையோ விளக்கிக் கொண்டிருக்க எதுவும் புரியாது கட்டிலருகே அமர்ந்து நான் அதைக் கவனித்துக் கொண்டு இருந்தேன். அவன் கைகளால் பல விதமான அசைவுகளைச் செய்தான். வேட்டையாடும் போது அவன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதை இறுதியில் உணர்ந்தேன். இத்தனை வாரங்களாக நான் அவனை அவ்வளவு கசப்புடன் நிந்தித்துக் கொண்டிருந்தபோது அவன் எங்கோ ஒரு மருத்துவமனையில் படுத்துக் கிடந்திருக்கிறான்.

அவன் பேசிக் கொண்டே போனான். ஆனால் அதில் கவனம் செலுத்துவது எனக்குக் கடினமாக இருந்தது. நான் அமைதியையும் பொறுமையையும் இழந்தேன். சிறிது நேரத்துக்குப் பின் அதை மேற்கொண்டு தாங்க முடியாது அறையின் முன்னும் பின்னும் நான் விரைப்பாக நடக்கத் துவங்கினேன். இறுதியில் பேசுவதை நிறுத்தியவன் அறையின் ஒரு மூலையை, ஜன்னலுக்குக் கீழே எதையோ சுட்டிக் காட்டினான். எனக்கு எதுவும் புரியவில்லை. அங்கு ஜன்னலைத் தவிர எதுவுமில்லை. பிறகு தான் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்ட வரைபலகையைத் தான் அவன்  சுட்டுகிறான் என்பதையும் கட்டிட அமைப்பின் வரைபடத்தைப் பார்க்க விரும்புகிறான் என்பதும் புரிந்தது. பெட்டியிலிருந்து அதை வெளியே எடுத்து அவனிடம் தந்தேன். அவன் அப்போதும் திருப்தியுறவில்லை. என்னுடைய பாக்கெட்டில் இருந்த ஒரு பென்சிலை எடுத்து அவனிடம் தந்தேன். அவன் வரைபடத்தின் மீது வரைய ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் அந்தக் காகிதத்தின் ஓரங்கள் வரை நிரப்பி சிக்கலான ஒரு தோற்றத்தை அவன் வரைந்து முடித்திருந்தான். அவனருகே நின்று உற்றுப் பார்த்ததில் ஒரு கோபுரத்தையும் சிக்கலான கோடுகள் இடையே வாசல் போலத் தெரிந்த ஒன்றையும் இறுதியில் அடையாளம் கண்டேன். அவன் அந்தப் பக்கத்தை நிரப்பி முடித்ததும் நான் அவனுக்கு இன்னும் சில காகிதங்களைத் தந்தேன். அவன் கைகள் நிற்காமல் தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தன. அவன் வரைந்தது எதோ பல நாட்கள் தொடர்ந்து  தனிமையில் யோசித்து கருக்கொண்ட ஒன்றைப் போல மிக நுணுக்கமாக இருந்தது. பென்சிலை நகர்த்தவே முடியாத அளவுக்கு களைப்படைந்த அவன் அப்படியே உறங்கிப் போனான். முன் அந்தியில் அவனை அங்கேயே விட்டுவிட்டு நான் உணவுக்காக உள்ளே சென்றேன்.

வீட்டினருகே இருந்த வயல்களுக்குத் திரும்பிய நான் அந்தச் சிகப்பு நிலப்பரப்பைப் பார்த்த போது அது எனக்கு மிக நன்றாக பரிச்சயமான ஒன்றாக, நான் அதைப் பார்ப்பதற்கு முன்பே எனக்குச் சொந்தமான ஒன்றாகத் தோன்றியது. அதை விட்டுப் போவது என்பது அர்த்தமற்ற ஒன்று. சில நாட்களில் என் சினமும் ஏமாற்றமும் குறைந்த பிறகு, முன்பிருந்தது போல, அங்கிருக்கும் எல்லாமே எதோ ஒன்றின் ஓடு அல்லது புறத் தோல் போல கண்களுக்குக் காட்சியளித்தன. அவை அந்த மேல் தோலை உதிர்த்து ஒரு நிறைவான கனியைப் பிறகு வெளிப்படுத்தும் என்று எனக்குப் பட்டது.

நான் களைப்படைந்து இருந்தாலும் என்னுடைய புத்தி அதிவேகமாகச் செயல்பட்டது. வீட்டின் அருகே இருந்த ஒரு துண்டு நிலத்தை சுத்தப்படுத்தி அங்கு ஒரு தொழுவத்தை உருவாக்கினேன். கறுப்பு வெள்ளை நிறத்திலான பசுக்களை அங்கு அடைத்தேன். பதற்றத்துடன் என் கால்களுக்கிடையே நடந்து கோழிகள் அதனுள்ளே சென்றன. என்னுடைய நிலத்தின் ஓரத்தில் ஊசியிலை மரங்களை வரிசையாக நட்டேன். அவை என்னுடைய பக்கத்து வீட்டை முழுவதுமாக மறைத்தன. சேதமடைந்து இருந்த சுவரை இடித்துவிட்டு அதே கற்களால் என்னுடைய பண்ணை வீட்டை நான் எழுப்பினேன். அதைக் கட்டி முடித்த பிறகு, மெச்சக் கூடிய ஒரு காட்சியை பார்க்கும், யாவரின் பொறாமையையும் தூண்டும் ஒன்றை நான் பார்த்தேன். முன்பே நிகழ்ந்து இருக்க வேண்டிய என்னுடைய கனவு இனி நிஜமாகும்.

அது என்னுடைய பிரமையாக  இருக்கலாம். விஷயங்கள் இப்படி முடிவது சாத்தியமில்லை. ஆனால் நிலத்திலிருந்த வளைகளில் ஒன்றில், காலை ஒரு அடி தாழ வைத்தும் பாளமாக இருந்த நிலப் பகுதியில் இன்னொரு அடியை உயர்த்தி வைத்தும் நான் இடறிய போது, என் இயலாமையும் ஏமாற்றமும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் போல வானத்தைக் கருமையாக்கி, மறுபடி என் மீது எந்த நொடியிலும் கவிந்துவிடும் என்பதைக் குறித்துச் சந்தேகம் கொள்ளாமல் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். மாலை அமைதியாகவும், ஒளி மென்மையாகவும் மிருதுவாகவும், பூமி முடங்கிக் கிடக்க, அங்கு அசைகிற ஒற்றை உயிரினமாக நான் மட்டுமே இருந்தேன்.

*

மூலம்:  The House Plans, The Collected Stories of Lydia Davis, Picador Publications, First Edition (2010)