ஒரு பீப்பாய் நிறைய அமோண்டில்லாடோ – எட்கர் ஆலன் போ – தமிழில்: கார்குழலி

by கார்குழலி
0 comment

ஃபார்ச்சுனேட்டோ எனக்கு இழைத்த ஆயிரம் காயத்தையும் இயன்றவரை நன்றாகவே பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவன் என்னை அவமானப்படுத்திய போது அவனைப் பழிதீர்க்க சபதம் எடுத்தேன். என் ஆன்மாவின் இயல்பைப் பற்றி நன்றாக அறிந்த உனக்கு இந்த அச்சுறுத்தலை நான் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதும் தெரியும். எத்தனை காலம் ஆனாலும் நிச்சயம் எனக்கு நியாயம் கிடைத்தே தீரும். தீர்வு கிடைக்கும் என்ற உறுதியான நிலைப்பாடே அது நடக்காமல் போகலாம் என்ற நிச்சயமின்மையைத் தள்ளி வைத்தது. தண்டிக்க மட்டும் மாட்டேன், தக்க பாதுகாப்போடு தண்டிப்பேன். பழிதீர்க்கும் செயலானது பழிதீர்ப்பவனை மிஞ்சிவிட்டால் தவறு சரி செய்யப்படுவதில்லை. அதைப் போலவே, பழிதீர்ப்பவன், தவறு செய்தவனுக்குத் தன்னைப் புரிய வைக்கத் தவறினாலும் தவறு சரி செய்யப்படுவதில்லை.

ஃபார்ச்சுனேட்டோ அவன்பால் எனக்கிருக்கும் நல்லெண்ணெத்தைச் சந்தேகப்படுவதற்கு சொல்லாலோ செயலாலோ எந்தக் காரணத்தையும் நான் தரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எப்பொழுதும் போல அவனைப் பார்த்தால் சிரிப்பதை நான் நிறுத்தவில்லை. நான் சிரிப்பது அவனை பலியிடப் போவதை நினைத்துத்தான் என்பதை அவனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மற்ற விஷயத்தில் எல்லோரும் மரியாதை தரக்கூடியவனாகவும் ஏன் பயப்படக் கூடியவனாகவும் இருந்தாலும் ஃபார்ச்சுனேட்டோவுக்கு ஒரு பலவீனம் இருந்தது. வைன் சுவைப்பதில் தானொரு தேர்ந்த கலைஞன் என்று பெருமிதப்பட்டுக் கொண்டான். மிகச் சில இத்தாலியர்களே அந்தத் துறையில் உண்மையிலேயே திறமைசாலிகளாக இருந்தார்கள். கைவசம் இருந்த நேரத்தையும் வாய்ப்பையும் பெரும்பாலும் ஆங்கிலேய ஆஸ்திரேலியக் கோடீஸ்வரர்களை ஏமாற்றுவதற்காக பயன்படுத்திக் கொள்ளும் வகையில்தான் அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

ஓவியத்திலும் விலைமதிப்புமிக்க இரத்தினக் கற்களிலும் அவன் நாட்டவர்களைப் போல போலியானவனாக இருந்தாலும் வைன் விஷயத்தில் நேர்மையானவனாகவே இருந்தான். இந்த விஷயத்தில் நானும் அவனைப் போலவேதான் இருந்தேன், இத்தாலிய திராட்சைப் பருவத்தின் தரமான வைன்களை தேர்ந்தெடுப்பதில் திறமை படைத்தவனாக இருந்ததால், இயன்றபோதெல்லாம் பெரிய அளவில் அவற்றை வாங்கியும் வைத்தேன்.

திருவிழாக்கால உச்சகட்ட களேபரத்தின் அந்திசாயும் வேளை ஒன்றில் என் நண்பனைச் சந்தித்தேன். அதிகமாகக் குடித்திருந்ததால் என்னிடம் அளவுக்கு மீறிய அதிகாரத்துடனும் நெருக்கத்துடனும் பழகினான். வண்ணங்களின் கலவையாக இருந்தான். இறுக்கிப் பிடிக்கும் பலவண்ண வரி போட்ட உடையை அணிந்திருந்தான். தலையின் உச்சியில் கூம்பு வடிவத் தொப்பியும் அதில் மணிகளும் இருந்தன. அவனைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அவன் கையைக் குலுக்குவதை நான் நிறுத்தவே இல்லை.

“அன்பு ஃபார்ச்சுனேட்டோ, உன்னைச் சந்தித்தது என் அதிர்ஷ்டம். இன்னைக்குப் பார்க்கவே ரொம்ப விசேஷமா இருக்கியே? ஒரு பீப்பாய் நிறைய அமோண்டில்லாடோன்னு சொல்லி அனுப்பி வைச்சிருக்காங்க. ஆனா எனக்குச் சந்தேகமா இருக்கு,” என்றேன்.

“எப்படி?” என்றான். “அமோண்டில்லாடோவா? ஒரு பீப்பாயா? சாத்தியமில்லையே! அதுவும் திருவிழாக் காலத்துக்கு நடுவுலயா!”

“எனக்கும் சந்தேகமாத் தான் இருக்கு,” என்றேன். “உன்னைக் கேட்காம அதுக்கான முழுப்பணத்தையும் வேற முட்டாள்தனமா கொடுத்துட்டேன். நீ எங்கே இருக்கேன்னு தெரியலை. சரி, நல்ல விலைக்கு வந்ததை விட்டுடக் கூடாதேன்னு ஒரு பயம்.”

“அமோண்டில்லாடோ!”

“”எனக்குச் சந்தேகமா இருக்கு.”

“அமோண்டில்லாடோ!”

“நான் அதைத் தீர்த்துக்கனும்.”

“அமோண்டில்லாடோ!”

“நீ வேலையா இருந்ததால லூக்ரேஸியைப் பார்க்கலாம்னு போறேன். ஆமாம் இல்லைன்னு யாராவது சொல்ல முடியும்னா அது அவன் தான். அவன் சரியாச் சொல்லிடுவான்…”

“லூக்ரேஸிக்கு அமோண்டில்லாடோவுக்கும் ஷெர்ரிக்கும் வித்தியாசம் தெரியாது.”

“அப்படியிருந்தும் சில முட்டாளுங்க உன்னை மாதிரியே அவனும் தேர்ந்த சுவைஞன்னு சொல்லிட்டு இருக்காங்க.”

“வா, போகலாம்.”

“எங்கே?”

“உன்னோட நிலவறைக்கு.”

“இல்லை, நண்பா. உன்னோட நல்ல குணத்தை எனக்கு சாதகமாக்கிக்கக் கூடாது. உனக்கு வேற ஏதோ வேலை இருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. லூக்ரேஸி…”

“எனக்கு வேற வேலை எதுவும் இல்லை, வா…”

“இல்லை நண்பா. உன்னுடைய வேலையைப் பற்றிக்கூட இல்லை. உனக்குக் கடுமையான சளி பிடிச்சிருக்காப் போலத் தெரியுதே. நிலவறை ஓதமா இருக்கும். உள்ளே முழுக்க வெடியுப்புப் பூத்திருக்கும்.”

“பரவாயில்லை போகலாம், வா. இந்தச் சளியெல்லாம் ஒன்றுமில்லை. அமோண்டில்லாடோ! உன்மேல திணிச்சுட்டாங்க. அந்த லூக்ரேஸிக்கு அமோண்டில்லாடோவுக்கும் ஷெர்ரிக்கும் சுத்தமா வித்தியாசம் தெரியாது.”

இப்படிப் பேசியபடி ஃபார்ச்சுனேட்டோ என் கையைப் பிடித்துக் கொண்டான். கறுப்புப் பட்டினால் ஆன முகமூடியைப் போட்டுக்கொண்டு தரையில் புரளும் அங்கியை இழுத்துப் பிடித்துக்கொண்டு என்னுடைய மாளிகைக்கு விரைவாக அழைத்துக்கொண்டு போகுமாறு அவனிடம் சொன்னேன்.

வேலையாட்கள் யாரும் வீட்டில் இல்லை. திருவிழாவைக் களிப்போடு கொண்டாடுவதற்காக ஓடிப்போய் விட்டிருந்தார்கள். நான் காலையில்தான் திரும்புவேன் என்றும், அது வரையிலும் யாரும் எங்கேயும் போகக்கூடாது என்றும் ஆணையிட்டிருந்தேன். என் தலை திரும்பியதும் ஒருத்தர் விடாமல் மாயமாக மறைவதற்கு இந்த ஆணையே போதும் என்பதும் எனக்குத் தெரியும்.

மெழுகுவர்த்தி வைக்கும் இடத்திலிருந்து இரண்டு பெரிய மெழுகுவர்த்திகளை எடுத்துக் கொண்டேன். ஒன்றை ஃபார்ச்சுனேட்டோவிடம் கொடுத்துவிட்டு வழிகாட்டியபடியே பல பெரிய அறைகளைத் தாண்டி நிலவறைக்குச் செல்லும் வளைவுக்கு அழைத்துச் சென்றேன். அவனைக் கவனமாக வரச் சொன்னபடியே நீளமான வளைந்து செல்லும் படிக்கட்டில் இறங்கினேன். கடைசிப் படியிலிருந்து இறங்கி, நிலத்தைக் குடைந்து அமைக்கப்பட்ட மாண்ட்ரேஸார்களின் கல்லறைத் தொகுதியிருந்த, ஈரமான நிலத்தில் கால்பதித்து நின்றோம்.

என் நண்பனின் நடை தடுமாற்றத்தோடு இருந்தது. அவன் நடக்கும் போது தொப்பியிலிருந்த மணிகள் கணகணவென ஒலித்தன.

“பீப்பாய்,” என்றான்.

“இன்னும் கொஞ்ச தூரம் போகணும்,” என்றேன். “இந்தக் குகையின் சுவரில் இருக்கும் பளிச்சிடும் வெள்ளை நிற வலைப் பின்னலை கவனமாப் பாரு.”

என்னைத் திரும்பிப் பார்த்தான். போதையில் மிதந்த நீர்ப்படலம் படர்ந்த இரண்டு பெரிய வட்டங்கள் என் கண்களைச் சந்தித்தன.

“உப்பா?” என நீண்ட நேரத்துக்குப் பிறகு கேட்டான்.

“வெடியுப்பு,” என்றேன். “எத்தனை நாளா இந்த இருமல் இருக்கு?”

“அஹ்!அஹ்!அஹ்! -அஹ்!அஹ்!அஹ்! -அஹ்!அஹ்!அஹ்! -அஹ்!அஹ்!அஹ்!”

பாவம், பதில் சொல்ல பல நிமிடங்கள் ஆனது என் நண்பனுக்கு.

“அது ஒன்னுமில்ல,” என்றான் கடைசியில்.

“வா,” என்றேன் ஒரு முடிவுக்கு வந்தவனாக. “திரும்பிப் போகலாம். உன் உடம்புதான் முக்கியம். நீ பணக்காரன், எல்லோருடைய மரியாதைக்கும் போற்றுதலுக்கும் அன்புக்கும் உரியவன். ஒரு காலத்துல நான் இருந்தது போலவே மகிழ்ச்சியா இருக்கிறவன். நீ இல்லேன்னா எல்லாரும் உன்னைத் தேடுவாங்க. எனக்கு இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை. நாம திரும்பிப் போயிடலாம் வா. உனக்கு உடம்பு சரியில்லாமப் போனா, அதுக்கு நான் பொறுப்பு எடுத்துக்க வேண்டி வரும். அதுவுமில்லாம, லூக்ரேஸி தான் இருக்கிறானே…”

“போதும், இந்த இருமல் எல்லாம் ஒன்னுமில்ல. இதுனால என் உயிர் போயிடாது. இருமலினால நான் சாகப் போறதில்லை,” என்றான்.

“உண்மை, உண்மை,” என்றேன். “உன்னைத் தேவையில்லாம பயமுறுத்த வேண்டாமேன்னு நினைச்சேன். ஆனாலும் நீ கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது. இந்த மெடாக் வைனை ஒரு மிடறு குடிச்சாக்க இந்த ஈரத்துல இருந்து கொஞ்சம் பாதுகாப்பு தரும்.”

சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நீண்ட வரிசையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதன் கழுத்தை உடைத்தேன்.

வைனை அவனிடம் கொடுத்து, “குடி” என்றேன்.

ஓரப்பார்வை ஒன்றைப் பார்த்தபடி அதைக் குடித்தான். சிறிது யோசித்துவிட்டு, எல்லாம் புரிந்தவன் போல என்னைப் பார்த்து தலையை ஆட்டியபோது, மணிகள் கணகணவென ஒலித்தன.

“நம்மைச் சுற்றியும் புதைக்கப்பட்டிருப்பவர்களுக்காகக் குடிக்கிறேன்,” என்றான்.

“உன்னுடைய நீண்ட ஆயுளுக்காக நான் குடிக்கிறேன்.”

மறுபடியும் என் கையைப் பிடித்துக்கொண்டான், இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.

“இந்த நிலவறைகள் ரொம்பப் பெரிசா இருக்கே,” என்றான்.

“மாண்ட்ரேஸார்களுடையது பெரிய குடும்பம். நிறைய உறுப்பினர்களைக் கொண்டது,” என்று பதில் சொன்னேன்.

“உன்னுடைய குடும்பத்தோட முத்திரைச் சின்னத்தை மறந்துட்டேன்.”

“நீலமயமான பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய மனிதக் கால் ஒன்று, குதிங்காலில் பற்களைப் பதித்திருக்கும் பாம்பை நசுக்குவது தான்.”

“உங்களோட குறிக்கோள்?”

“தாக்கியவர் எவரும் தண்டனையின்றித் தப்பமுடியாது.”

“நல்லது!” என்றான்.

அவன் கண்களில் வைன் ஒளிர்ந்தது, மணிகள் கணகணத்தன. மெடாக்கினால் என் கற்பனையும் சூடேறியது. குவியலாகக் கிடந்த எலும்புக் கூடுகளும் பீப்பாய்களும் முட்டுக்கொடுக்கும் கம்புகளும் இருந்த நீண்ட சுவர்களைத் தாண்டி நிலவறைத் தொகுதியின் உள்ளடங்கிய பகுதிக்குப் போனோம். மறுபடியும் நான் தயங்கி நின்றேன். இந்த முறை தைரியமாக ஃபார்ச்சுனேட்டோவின் முழங்கைக்கு மேலே இறுக்கிப் பிடித்தேன்.

“வெடியுப்பு! பாரு, அதிகமாயிட்டே போகுது. நிலவறைக்கு மேலே பாசி மாதிரி படர்ந்திருக்கு. நாம ஆற்றுப் படுகைக்கு கீழே இருக்கோம். ஈரம் எலும்புகளுக்கு இடையே கசியும். வா, ரொம்ப நேரமாகிறதுக்குள்ளே இங்கே இருந்து போயிடலாம். உன்னோட இருமல்…”

“அது ஒன்னுமில்லே. நாம முன்னே போகலாம். அதுக்கு முன்னாடி ஒரு மிடறு மெடாக் வேணும்.”

மூடியை உடைத்து ஒரு சீசா டி க்ரேவை அவனிடம் கொடுத்தேன். ஒரே மூச்சில் அதைக் குடித்து முடித்தான். அவனுடைய கண்களில் குரூரமான ஒளி வீசியது. சிரித்துக்கொண்டே எனக்குப் புரியாத ஏதோ ஒரு சைகையைச் செய்தபடி பாட்டிலை மேலே தூக்கி வீசினான்.

ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தேன். மறுபடியும் அதே செயலைச் செய்தான் ⎯ அருவருப்பூட்டும் ஒன்று.

“உனக்குப் புரியலை?” என்றான்.

“இல்லையே,” என்றேன்.

“அப்போ நீ சகோதரத்துவத்தைச் சேர்ந்தவனில்லை.”

“எப்படி?”

“நீ மேசனில்லை.”

“ஆமாம், ஆமாம்,” என்றேன். “ஆமாம், ஆமாம்.”

“நீயா? இருக்கவே முடியாது. மேசனா?”

“மேசன் தான்,” என்றேன்.

“ஒரு அடையாளம்,” என்றான், “ஒரு அடையாளம்.”

“இதுதான் என்று,” பதில் சொல்லியபடி, அங்கியின் மடிப்பிலிருந்து கொத்துக்கரண்டி ஒன்றை எடுத்துக் காண்பித்தேன்.

“நீ வேடிக்கை செய்யறே,” என்று கத்தியபடி சில அடிகள் பின்னால் நகர்ந்தான். “நாம அமோண்டில்லாடோவைப் பார்க்கப் போகலாம்.”

“அப்படியே செய்யலாம்,” என்றபடி அந்தக் கருவியை அங்கிக்கு அடியில் வைத்துவிட்டு கையை நீட்டினேன். அவன் பாரத்தை முழுவதும் என் மேல் போட்டு சாய்ந்து கொண்டான். அமோண்டில்லாடோவைத் தேடிப் பயணத்தைக் தொடர்ந்தோம். தாழ்வான சில வளைவுகளைத் தாண்டி கீழே இறங்கினோம். இன்னும் சிறிது தூரம் நடந்து, மீண்டும் கீழே இறங்கினோம். ஆழமான பள்ளம் ஒன்றை அடைந்தோம். காற்றிலிருந்த மாசு, மெழுகுவர்த்தியின் சுவாலையை மங்கலாக ஒளிரும்படிச் செய்தது.

பள்ளத்தின் கடைக்கோடியில் இன்னொரு அகலம் குறைவான பள்ளம் இருந்தது. அதன் சுவர் முழுவதும் பாரீஸில் உள்ள பெரும் நிலவறைத் தொகுதிகளைப் போலவே மனித உடலின் சிதைவெச்சங்கள் உச்சி வரையிலும் குவித்து வைக்கப்பட்டிருந்தது. உள்புறமிருந்த பள்ளத்தின் மூன்று பக்கமும் இதுபோலவே அலங்கரிக்கப்பட்டிருந்தது. நான்காம் பக்கத்திலிருந்து எலும்புகள் உள்ளே வீசப்பட்டிருந்தன. அவை நிலத்தில் தாறுமாறாக எறிந்து கிடந்ததால் ஒரு கட்டத்தில் சிறிய குன்றுபோல உருவாகி இருந்தது. சுவரிலிருந்த எலும்புகளை நகர்த்தி வைத்தபோது உள்ளே சுமார் நான்கடி ஆழமும் மூன்றடி அகலமும் ஆறு அல்லது ஏழு அடி உயரமும் கொண்ட இன்னொரு பள்ளமோ மாடக்குழியோ இருப்பது தெரிந்தது. எந்த விதமான சிறப்பான பயனுக்காகவும் கட்டப்பட்டது போல தெரியவில்லை. நிலவறைத் தொகுதியின் கூரையைத் தாங்கிப் பிடிக்கும் பிரம்மாண்டமான தூண்களுக்கிடையே அது இருந்தது. அதன் பின்னால் உறுதியான கருங்கல் சுவரொன்று அமைக்கப்பட்டிருந்தது.

மங்கலான மெழுகுவர்த்தியை உயர்த்தி மாடக் குழியின் ஆழத்தை அளக்க ஃபார்ச்சுனேட்டோ எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அது எங்கே முடிந்தது என்பதை மங்கலான ஒளியின் மூலம் பார்க்க முடியவில்லை.

“முன்னே போகலாம்,” என்றேன். இங்கே தான் அமோண்டில்லாடோ இருக்கு. லூக்ரேஸி…”

“அவன் அறிவில்லாதவன்,” என்று இடைமறித்த என் நண்பன் தள்ளாடியபடியே முன்னே எட்டி வைத்தபோது, அவன் காலடியை ஒற்றி, கூடவே நடந்தேன். ஒரு தனியிடத்தில், அந்த இடத்தின் இறுதியை அடைந்துவிட்டோம் என்று உணர்ந்த மறு கணமே, தான் முன்னேறிச் செல்வது ஒரு பாறையின் மூலம் தடைபட்டுவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டு மனம் குழம்பி முட்டாளைப் போல நின்றான். அடுத்த கணமே அவனை அந்தக் கருங்கல்லில் சங்கிலி போட்டு பிணைத்து விட்டேன். அதன் மேற்பரப்பில் ஒரே வரிசையில் இரண்டு அடி தூரத்தில் இரண்டு இரும்புக் கொக்கிகள் இருந்தன. ஒன்றிலிருந்து சின்னச் சங்கிலியும் மற்றதிலிருந்து பூட்டும் தொங்கியது. சங்கிலியை அவன் இடுப்பைச் சுற்றிப் பிணைக்க ஓரிரு நொடிகளே ஆனது. எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாதபடி திகைத்துப் போயிருந்தான். சாவியைக் கையில் எடுத்தபடியே தனியிடத்தில் இருந்து மேலே ஏறினேன்.

“சுவருக்கு மேல உன் கையைக் கொடு,” என்றேன். “வெடியுப்பின் வாசனையை நுகராம இருக்க முடியாது. ரொம்ப ஈரப்பதமா வேற இருக்கு. திரும்பி வந்துடுன்னு உன்னை இன்னொரு தடவை கெஞ்சிக் கேட்டுக்கிறேன். வரமாட்டியா? அப்ப உன்னை இங்கேயே விட்டுட்டு போய்த்தான் ஆகணும். அதுக்கு முன்னாடி என் சக்தியினால முடிஞ்ச எல்லாத்தையும் உனக்குச் செய்யணும்.”

“அமோண்டில்லாடோ!” என்று இன்னமும் வியப்பிலிருந்து மீளாத என் நண்பன் திடீரெனக் கத்தினான்.

“உண்மை, அமோண்டில்லாடோ,” என்று பதில் சொன்னேன்.

இதைச் சொல்லியபடியே முன்னர் குறிப்பிட்டிருந்த எலும்புக் குவியலுக்குள் தேட ஆரம்பித்தேன். அவற்றை ஓரமாகத் தள்ளியதும் அடியில் கொஞ்சம் கல்லும் கலவையும் இருப்பது தெரியவந்தது. அந்தப் பொருட்களையும் கொத்துக் கரண்டியையும் கொண்டு தனியிடத்தின் வாயிலை அடைக்கும் சுவரை எழுப்ப ஆரம்பித்தேன்.

சுவரின் முதல் வரிசையைத்தான் கட்டி முடித்திருந்தேன், அதற்குள்ளாக ஃபார்ச்சுனேட்டோவின் போதை பெருமளவில் தெளிந்துவிட்டிருந்தது. பள்ளத்தின் ஆழத்தில் இருந்து மெல்லிய முனகலாகக் கேட்ட அழுகையொலிதான் முதல் அறிகுறி. ஒரு குடிகாரனின் அழுகையைப் போலவே இல்லை. பிறகு நீண்ட நேரம் பிடிவாதமான மௌனமொன்று நிலவியது. இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வரிசைகளைக் கட்டி முடித்தேன். அப்போதுதான் சங்கிலியை வேகமாகக் குலுக்கும் சத்தம் கேட்டது. சத்தம் பல நிமிடங்கள் நீடித்ததால் அதை வேண்டுமளவுக்குக் கேட்டுத் திருப்தியடைய வேண்டும் என்பதற்காகச் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு எலும்புக் குவியலின் மீது உட்கார்ந்தேன். ஒருவழியாக, சங்கிலியின் சலசலக்கும் ஒலி நின்றதும் கொத்துக் கரண்டியை எடுத்து ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது வரிசைகளைத் தங்குதடையில்லாமல் கட்டி முடித்தேன். சுவர் இப்போது என் நெஞ்சு வரை உயர்ந்திருந்தது. மீண்டும் ஒரு முறை வேலையை நிறுத்திவிட்டு, கட்டிமுடித்த சுவருக்கு மேலே மெழுகுவர்த்தியைத் தூக்கிப்பிடித்து உள்ளே இருக்கும் உருவத்தின்மீது மங்கலான வெளிச்ச ரேகையைப் பாய்ச்சினேன்.

சங்கிலியால் கட்டப்பட்ட உருவத்தின் தொண்டையிலிருந்து அடுத்தடுத்து வெடித்த உரத்த அலறல்கள் என்னை வன்முறையோடு பின்னுக்குத் தள்ளின. ஒரு கணம் தயங்கினேன், நடுங்கினேன். குத்துவாளை உறையிலிருந்து உருவி தனியிடத்துக்குள் துழாவினேன். ஆனால் ஒரு விஷயம் மீண்டும் நம்பிக்கையூட்டியது. நிலவறைத் தொகுதியின் கடினமான பரப்பின்மீது கையை வைத்துப் பார்த்து திருப்தியடைந்தேன். மீண்டும் சுவருக்குத் திரும்பிச் சென்று உள்ளேயிருந்து அலைமோதிய அவனுடைய அலறல்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் நானும் எதிரொலித்தேன், அக்கறை காட்டினேன், ஓசையிலும் பலத்திலும் விஞ்சினேன். நான் இதைச் செய்ததும் உள்ளிருந்து அலைமோதியவன் அடங்கிவிட்டான்.

நள்ளிரவு ஆகியிருந்தது, என்னுடைய வேலையும் முடிந்து கொண்டிருந்தது. எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது வரிசைகளைக் கட்டி முடித்து, கடைசி வரிசையான பதினோராவதின் ஒரு பகுதியைக் கட்டி முடித்திருந்தேன். பொருத்துவதற்கு இன்னும் ஒரே ஒரு கல்தான் பாக்கியிருந்தது. அதைத் தூக்கமுடியாமல் சிரமப்பட்டேன். ஓரளவுக்கு அதனுடைய இடத்தில் பொருத்தி வைக்க முனைந்தேன். ஆனால், அப்போது அந்தத் தனியிடத்திலிருந்து வந்த மெல்லிய சிரிப்பொலி என் தலைமுடியை குத்திட்டு நிற்கச் செய்தது. அதைத் தொடர்ந்து கேட்ட சோகமான குரல் பெருமகன் ஃபார்ச்சுனேட்டோவுடையது தானா என்பதைத் தெரிந்துகொள்ளச் சிரமப்பட்டேன். அந்தக் குரல் சொன்னது⎯

“ஹா! ஹா! ஹா! ⎯ ஹி! ஹி! ஹி! ⎯ நல்ல வேடிக்கை ⎯ சொல்லப்போனா அருமையான வேடிக்கை. இது பத்தி மாளிகையில நிறைவாகச் சிரிக்கலாம் ⎯ ஹி! ஹி! ஹி! ⎯ நாம வைன் அருந்தும்போது ⎯ ஹி! ஹி! ஹி!”

“அமோண்டில்லாடோ!” என்றேன்.

“ஹி! ஹி! ஹி!⎯ ஹி! ஹி! ஹி! ⎯ ஆமாம், அமோண்டில்லாடோ. ஆனா தாமதமாகுதே. பெருமாட்டி ஃபார்ச்சுனேட்டோவும் மத்தவங்களும் நமக்காக மாளிகையில காத்துக்கிட்டிருப்பாங்களே. நாம போகலாம் வா.”

“ஆமாம், போகலாம் வா,” என்றேன்.

“கடவுளிடன் அன்புக்காக, மாண்ட்ரேஸார்!”

“ஆமாம். கடவுளின் அன்புக்காக!” என்றேன்.

இந்தச் சொற்களுக்குப் பதில் வரும் என்று காத்திருந்தும் பலனில்லை. பொறுமையிழக்கத் துவங்கினேன். உரக்கக் கூப்பிட்டேன் ⎯

“ஃபார்ச்சுனேட்டோ!”

பதிலேயில்லை. மீண்டும் கூப்பிட்டேன்.

“ஃபார்ச்சுனேட்டோ!”

இன்னமும் பதிலில்லை. திறந்திருந்த துளையின் வழியே மெழுகுவர்த்தியொன்றை உள்ளே நுழைத்து கீழே போட்டேன். மணியின் கணகணக்கும் ஒலி மட்டும்தான் கேட்டது. என் இதயம் சோர்வடைந்தது. நிலவறைத் தொகுதியின் ஈரப்பதம் தான் அப்படிச் செய்தது. என்னுடைய வேலையை வேகமாக முடிக்க நினைத்தேன். கடைசிக் கல்லையும் அதனுடைய இடத்தில் சிரமப்பட்டு பொருத்தினேன். கலவையைப் பூசினேன். புதிதாகக் கட்டப்பட்ட சுவருக்கு முன் மீண்டும் எலும்புகளைக் குவித்து வைத்தேன். அடுத்த அரை நூற்றாண்டுக்கு எந்த மனிதனும் அதைத் தொந்தரவு செய்யவில்லை. அமைதியில் ஓய்வெடு!

*

மூலம்: The Cask of Amontillado by Edgar Allan Poe, https://www.poemuseum.org/the-cask-of-amontillado