களியாற்றுப் படலம் – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

0 comment

எழுத எழுத அழிந்து கொண்டே இருக்கும் அந்தக் கதை குழப்பமாக இருந்தது அவளுக்கு. காற்றின் திசைக்கு இழுபடும் கூந்தலின் வேகமும், பனியடர்ந்த இரவில் பற்றியெரியும் சிதையின் வெம்மையும் மிக மோசமான பயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. இதற்குமுன் எழுத முயன்ற கதைகள் எழுதப்படும் முன்னரே அழிக்கப்பட்டதால் அவை குறித்தெழும் கவலையில், தன் சிந்தனைகளைத்தொலைக்க விரும்பியதில்லை. ஆனால், இந்தக் கதை அப்படியில்லை. இதுவரை நிகழப் பெற்றிராத, எழுதப்பட்டிராத தர்க்கங்களின் முடிவுகளாக உருப்பெறும் ஒன்று.

அற்புதக் கணம் ஒன்றினை கருக்கொண்டதன் சாட்சியாக்கம் இந்தப் படைப்பு. இது வெளியாகும் பட்சத்தில் இதன் மூலம் கிடைக்க இருக்கும் வெளிச்சம் முக்கியமானது. அந்த வெளிச்சத்தின் தொடர்ச்சியாய் எழுதயிருக்கும் அடுத்த படைப்பும், அதற்கடுத்த படைப்புகளும் அவளுக்கானவை. உலகின் மேன்மையை ஒருபடி உயர்த்த இருப்பவை. உன்னத கணங்களின் உச்சக்கலவையை ஒருவீதம் புனிதப்படுத்த இருப்பவை.

தன்னெழுச்சியின் தீவிரங்கொண்டு அடுக்கப்படும் இந்தக் கதையின் மையப் பிரச்சனையாக அவள் கருதுவது, இந்தக் கதையைப் புரிந்துகொள்வார்களா, ஒருவருக்கேனும் புரியுமா, புரியவில்லை என்றால் யார் வாசிப்பார்கள், பின் எப்படி தன்மீதும் கதைகளின் மீதும்‌‌ வெளிச்சம் விழுவது போன்றவை தான். தன்னையே ஒப்புக்கொடுத்து தன்னைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட, உலகிற்குப் புதுஒளி பாய்ச்சவிருக்கும் இந்தக் கதையை முதலில் ஓர் அறிவியல் கட்டுரையாகவே எழுத நினைத்திருந்தாள் அவள். கட்டுரைகள் ஞானத்தின் திறவுகளுக்கானது.

ஞான வித்துகள் தத்துவங்களைப் பரப்புபவர்கள். உலகுக்கு எடுத்துத் தருபவர்கள். ஞானிகளை விடவும் மேலானவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களே தர்க்கங்களை உருவாக்குபவர்கள். அவர்களே தர்க்கங்களின் சூட்சுமத் தடம் அறிந்தவர்கள். அவர்களுக்கு இந்தக் கதை உதவக்கூடும். புது வெளிச்சத்தைத் தரக்கூடும், புது உண்மைகளைப் பேசக்கூடும் என்பதையே தன் முதலெழுத்தை எழுதத் தொடங்கும்முன் அவளிடம் தோன்றிய எண்ணமாக இருந்தது.

ஞானத்தின் மீதிருக்கும் பயத்தைவிட ஞானிகளின் மீதான பயம் அவளை அச்சுறுத்தியது. அந்த அச்சுறுத்தல் அவளை அவள் கரங்களின் மூலமாகவே கொன்று புதைக்கக் கூடுமென்று பயமுறுத்தியது. பயத்தை வெல்வதே சுதந்திரம். பயத்தை வெல்வதே கலகம். தனக்கு எதிரான கலகக்காரியாக தன்னை வார்த்தெடுத்தாள். சம்காரியாக உயர்ந்து எழுந்தாள். இப்போதெல்லாம் அவளைப் பார்ப்பதற்கே பயமாய் இருப்பதாக அம்மா சொன்னது ஞாபகத்தில் வந்தது. சிரித்துக் கொண்டாள்.

மூர்க்கம் நிறைந்த தன் கண்களில் பிரதிபலிக்கும் தீயின் ஜுவாலையைப் பெரிதும் விரும்பினாள். அந்தத் தழலின் மூர்க்கத்தை நாசியில் கொணர்ந்து தன்னைப் பரிகசிக்கும் எதையும் அழித்தாள். எரிந்து அடங்கும் தன்னை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்தாள். வேடிக்கையான அந்த விளையாட்டை கதவின் இடுக்கு வழி நோக்கும் அம்மையைப் பார்த்துப் புன்னகைத்தாள். ‘தயவுசெய்து சிரிக்காதே, அதுதான் உச்சகட்ட பயமாய் இருக்கிறது’ என்றாள் அம்மா. ‘என் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறேன் அம்மா. நம்மை ஏமாற்றும் ஒன்றை நல்வழிப்படுத்த இருக்கிறேன் அம்மா’ என்றாள்.

தலையிலடித்துக் கொண்டு நகரும் அம்மாவின் நிழல் தன்னை வழிநடத்தும் சக்தி என்பதை அறிந்தவள் அவள். அம்மையின் நிழல் அவளை நோக்கி ஏளனமாகச் சிரிப்பதைப் போல் இருந்தது. கலகக்காரியின் கலகத்தை எள்ளி நகையாடி வெறுப்பேற்றுவதைப் போல் இருந்தது. பற்றியெரியும் தழலின் வேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதைப் போல் இருந்தது. ஞானத்தைத் திறக்கும் திறவுகோலைத் தன்னிடம் வீசியெறிவதைப் போல் இருந்தது. அம்மை. அவளே சக்தி. அவளே திறவுகோல்.

தெரிந்துகொள்வதை நிறுத்துமிடத்தில் ஞானிகள் தேங்கத் தொடங்கிவிடுகிறார்கள் என்ற சிந்தனை உறுதியான நாட்களில் ஞானிகளின் மீதிருக்கும் பயமும் அதிகமாகி இருந்தது. அறிவதற்கு ஏதுமற்ற அவர்களது ஞானம் தன்னைத் துரத்துக்கூடும், மூர்க்கம் தேங்கிய கண்கள் தன்னைத் துரத்தி அழிக்கக்கூடும். அதற்குமுன் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருகின்றன என்பதை எண்ணி, தன் வேகத்தை அதிகப்படுத்தினாள். இனியொரு போதும் தன் கதைகளை அழிப்பதில்லை, கதைகள் அழிய இடங்கொடுப்பதில்லை என்று உறுதியாக முடிவு செய்ததும் அந்த இரவில் தான்.

எரிந்து கொண்டிருக்கும் பிணமும், அதிலிருந்து வெளிப்படும் வெக்கையும் உள்ளுக்குள் உருகும் பெரும் போதையைத் தூண்டிவிட்டன. பெருங்கோபமும் ஆவேசமும் நிறைந்த தீராக் களியாட்டத்தைத் தீர்க்கச் செய்யும்படி தன்னுள் நிலைபெறும் உணர்வுகளை, உடலின் ஒவ்வொரு அணுவினுள்ளும் செலுத்தி, அவை தரும் உச்சநிலையிலிருந்து எழுதிக் கொண்டிருந்தாள்.

சுடலையின் மீது எரியும் தீ, மாடனாக உருக்கொள்வதும் அவனே தன்னுள் உருக்கொள்ளும் கருதுகோளாக மாறுவதையும் தன் எழுத்துகளின் மீது வந்து படரும் சுடலைச் சாம்பலின் மூலம் உணர்ந்து கொண்டிருந்தாள். காற்றின் பேரோலத்தில் தன்னை மறந்திருந்தாள். உறைந்து முறுக்கும் காற்றின் குளுமை ஒருபுறமும் சுடலையின் வெப்பம் மறுபுறமுமென குளிர்ந்தும் வெடித்தும் தணிந்து கொண்டிருந்தாள். தன் கதையின் தன் இருப்பின் பன்னிரெண்டாவது பக்கத்தை முடிக்கும் வரையிலும் தன்வேகத்தைச் சிறிதும் குறைந்திருக்கவில்லை அவள்.

எவ்விதத் தயக்கமும் இல்லாமல் குவியல் குவியலாக வந்தமரும் வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து களியாடிக் கொண்டிருந்த இடைவெளியில் தன் பலவீனத்தை மறந்திருந்தாள். அழிந்து கொண்டிருக்கும் கதையின் அழிவை அறிய மறந்திருந்தாள். கண்களில் பற்றியெரியும் சுடலையின் நெருப்பு, தன் பலவீனத்தைக் குறைசொல்லி எக்காளமிட்டுச் சிரிக்கும் சத்தம் கேட்டு வெருண்டாள். திடீரென ஒரு குழப்பம். பெருங்குழப்பம். கதை அழிக்கின்றதா? அழிக்கப்படுகிறதா? ஏமாற்றப்படுகிறேனா? காலத்தின் மீது நகர்ந்து ஓடி, படைப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி, பின்னகர்ந்து பார்க்கலாமா?

கதைகளின் இடையே நிகழும் எந்தவொரு குறுக்கீட்டையும் அவள் விரும்புவதில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. நிமிடமுள் நகர்வதைப் போல எவ்விதத் தடையுமில்லாமல் எழுதப்படும் எழுத்துகளையே தன் கதைகளாக உருமாற்றம் செய்தாள்.

நிமிடமுள் நகர்வதால் காலம் நகர்கிறதா இல்லை காலத்தை நகர்த்தாமல் நிமிடமுள் மட்டும் நகர்கிறதா என்ற தர்க்கவாதத்தையும் சேர்த்தே எழுப்புவதாக இருக்க வேண்டும் தன் கதைகள் என்பதை உறுதியாக நம்பினாள். தர்க்கம் இல்லாமல் கதைகள் தோன்ற முடியுமா? தர்க்கங்களைக் கொண்டிராத கதையெல்லாம் ஒரு கதையா? காலம் தர்க்கம் போன்றது. தர்க்கம் போன்று நிலைபெற்று நிற்பது. நகராமல் நிலைபெற்றுத் திரண்டு நிற்பது. ஆம் காலம் ஒருபோதும் நகர்வதில்லை. சொல்லப்போனால், நாம்தான் நகர்கிறோம். நகரும் நமக்குத் தோதுவாக, காலத்தை நம் காலில் கட்டி இழுத்துச் செல்கிறோம் என்று சண்டையிட்ட நாளில், அவள் அண்ணன் அவள் தலையை உடைத்த நாளில், வீட்டிலிருந்து வெளியேறி விட்டாள் – இப்போது தன் எழுத்துகள் அழிந்து கொண்டிருப்பதை கண்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பவள்.

காலம் பற்றிய கருதுகோளை அவள் மனதில் ஊன்றியவன் மூத்த சகோதரன். வீட்டை விட்டு வெளியில் துரத்திய சதிகாரன். ஞானத்தின் ஆல விழுது. கரம் பிடித்து எழுதக் கற்றுக்கொடுத்தவன். ஆபத்துக் காலங்களில் எல்லாம் காக்கும் அரணாக நின்றவன். இன்று வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். வீட்டை விட்டுத் துரத்தியவன் எழுத்தையும் பிடுங்கிக் கொண்டானா? ஆலமே ஆலமாகிப் போனதா?

படைப்பின் உருவாக்க கணங்களில், எழுதும் பக்கங்களின் முன் சென்று பார்க்கும் பழக்கம் அவளுக்கு இருந்ததில்லை. காலத்தின் புள்ளியிலிருந்து விலகி, படைப்பின் வேகத்தை மட்டுப்படுத்தி பின்னோக்கி நகர்வதில் என்றுமே அவளுக்கு விருப்பம் இருந்ததில்லை. நிலைபெற்று நிற்கும் எழுத்துகள் யாவும் அங்கேயே தான் இருக்கப் போகின்றன, அவற்றை அழிக்கும் சக்தி தன்னைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறவள் அவள். ஆயினும், தன்னைச் சுற்றி நிகழும் சில விசித்திர நிகழ்வுகளை கவனிக்காமலும் இல்லை. விடாது ஞானத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களிடம் சில விநோத குணங்கள் அமைவதுண்டு. அந்த விநோதமே தன் பலவீனமாகிப் போனதோ என்ற அச்சம் ஏற்பட்டது அவளுக்கு. எத்தனை முயன்றும் தன்னை அதிலிருந்து வெளியேற்ற முடிந்ததில்லை, அதே நேரம், அதை எண்ணி வருத்தமும் கொண்டதில்லை என்பதை அவள் அறிவாள்.

எழுதிக் கொண்டிருக்கும் கதையின் பன்னிரெண்டாம் பக்கத்தின் முடிவை நெருங்க நெருங்க கைகள் நடுங்கத் தொடங்கின. சுடலையின் உள் வெடிக்கும் ஒலி தன்னை நோக்கிச் சிரிப்பதைப் போலவும், தன்னைக் கண்டு  எக்களாமிடுவதைப் போலவும் தோன்றிய உணர்வுகளைத் தவிர்க்கப் போராடினாள். எழுதுவதை நிறுத்தி சுடலையோடு சண்டையிடலாமா என்பதை கற்பனை செய்து பார்த்தாள். கற்பனையின் குறுக்கீடுகள் தடுமாறச் செய்தன. இதுவரை எழுதிய அத்தனைக் கதைகளையும், அதன் பதிமூன்றாவது பக்கத்தில் கிழித்துத் தூர எறிந்த தன்செயல், தற்செயலான ஒன்று இல்லையா? மீண்டுமொரு முறை வாசிக்கப்படும் முன் தங்கள் தடயத்தைத் தொலைத்தது தன் விருப்பத்தின் குறுயீடுகள் இல்லையா? எழும் கேள்விகளின் பின்னும், அழிந்துபோன தன் எழுத்துகளைத் துரத்தியும் ஓடத்தொடங்கினாள். எண்ணங்களின் தொடர்ச்சி பேருருக் கொண்டு அச்சத்தை அதிகரிக்கச் செய்தன. உள்ளுக்குள் அமிழ்ந்து கிடக்கும் தன் பலவீனத்தைச் சீண்டிப் பார்த்தன.

தன்னுள் பெருகும் பயமனைத்தும் பக்கம் பதிமூன்றையும், அதே பதிமூன்று என்ற எண்ணையும் நோக்கிக் குவிவதை கவனமாகப் பின்தொடர்ந்தாள். ஒவ்வொருமுறை இந்த எண் தன்னைத் துரத்தும் போதும் விலகி ஓடியவள், இன்று எதிர்த்து நிற்பது என்று முடிவு செய்ததை காலம் மட்டுமே கவனிக்கத் தொடங்கியிருந்தது. கலகக்காரியின் கையில் சிக்கிய பெருங்கலமாகத் திரண்டு நிற்கும் காலம் இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. சொல்லப் போனால், காலத்தின் மீதான ஆராய்ச்சி தீவிரமானது இந்த நிகழ்விற்குப்பின் தான்.

அவளுக்கு இப்போதும் நம்பிக்கை இருக்கிறது, காலம் நகர்வதில்லை என்று. பூமி தன்னைத் தானே சுற்றுகிறது எனபதையும், பூமி தனக்கான வட்டத்தில் பிசகாமல் சுழல்கிறது என்பதையும் கணிதத்தின் துணைகொண்டு ஏற்றுக்கொள்ள முயன்றவளால், காலம் அங்கேயே தான் நிற்கிறது என்பதை நிறுவும்வழி தெரியவில்லை. தற்காக்கும் கணிதமும் தன்னை கவனிப்போரும் துணை நிற்கவில்லை. கணிதத்தை பிறகு கவனித்துக் கொள்ளலாம். முன்முடிவுகளுடன் அணுகும் அதர்க்கவாதிகளிடம் தன் சொற்களைக் கொண்டுசேர்க்க முடியவில்லை என்ற தன் கோபமே பெருந்தீயென எழுந்து சுடலையின் மீது ஆடிக் கொண்டிருப்பதாக நினைத்தாள்.

தன்னைச் சுற்றிலும் நெருப்பையும் வெக்கையையும் உறைபனி குளிரையும் உருவாக்கும் வல்லமை படைத்தவள் அவளே. காற்றின் திசை எப்படி இருக்க வேண்டும், எத்தகைய பரிமாணத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவெடுப்பவள் அவள். ஆயினும் இந்த அதர்க்கவாதிகள்? அவர்களும் லேசுபட்டவர்கள் இல்லை என்பதை அறியாதவள் இல்லை. அவர்கள் தனக்கு இணையானவர்கள். இல்லை, தன்னைக் காட்டிலும் உயர்நிலையில் இருப்பவர்கள். கேள்விமேல் கேள்விகேட்டுத் துளைப்பவர்கள். கற்றறிந்த ஞானிகள். தனக்கான ஞானத்தைக் கொடுத்த ஞானத் தந்தைகள்.

கணிதம் என்பது பூமி சுழல்வதன் ஆதாரவித்து என்ற போதனையைத் தந்தவர்கள் – இவளிடம் எழுப்பிய கேள்வி ஒன்றேயொன்று தான். காலம் நகரவில்லை என்ற உன் கூற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அம்மையே. பின் ஏன் காலம் நகர்வதற்கான குறியீடுகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் நம்மிலும் மூத்தவர்கள்? அவர்களுக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமானதா உனக்குத் தெரிந்துவிடப் போகிறது? ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள். காலத்தால் பின்னோக்கி நகர முடியாதே தவிர, அதனால் முன்னோக்கி நகர முடியும். காலம் என்பது எதிர்திசை என்ற ஒன்றில்லாத நேர்திசையை மட்டுமே கூறும் திசைக்கருவி. அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை வெறுத்தாள்.

தன்னிடம் திணிக்க முயன்ற இந்தக் கருத்துகளை மிகத் தீவரமாக எதிர்த்தாள். காலம் குறித்த என் புரிதலை இவர்கள் நம்பவில்லை என்றால் என்ன? எனக்குத் தெரிகிறதே காலம் நகரவில்லை என்று. அதுபோதும். நேர்திசையாம். அதுவும் எதிர்திசையல்லாத நேர்திசையாம். எத்தனை எளிதாக ஞானத்தைக் கையிலெடுக்கிறார்கள். அதைக்கொண்டே கசையடி கொடுக்கிறார்கள். ஓ ஞானிகளே! கேட்டுக்கொள்ளுங்கள். உங்களால் பாதிக்கப்பட்டவள். நான் சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள், ஞானம் ஓர் அமுத விஷம். அதை தூர எறிந்துவிட்டு நன்றாகக் கேளுங்கள். காலம் எங்கும் நகரவில்லை என்று நான் சொல்வது முற்றிலும் உண்மை. அதர்க்கம் நிறைந்த சூழ்ச்சிக்காரர்களே, நன்றாகக் கேளுங்கள். நீங்கள் நிரப்பி வைத்திருக்கும் கோப்பையில் பொங்கி வழிவது மொத்தமும் விஷம். நஞ்சு. பகை.

தன்னுள் எழும் கோபக் கனல்களின் வழியே கொதித்துக் கொதித்து அடங்கினாள். உருவில்லாத கணிதத்தைக் கொண்டு தன்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள். முற்றிலும் வடிவம் பெறாத இந்தக் கணிதம் தனக்கென ஒரு வடிவத்தை அடையும் வரைக்கும் ஏமாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்.

எந்தக் கணிதத்தைக் கையிலெடுத்து காலம் அசையவில்லை என்று வாதிட்டாளோ அதே கணிதத்தை அவர்களும் கையிலெடுத்து காலம் நகர்கிறது பார் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய்யில்லை. உண்மையுமில்லை என்பதுதானே முக்கியம்? குறைபட்ட கணிதத்தை மீட்காத வரையிலும் தனக்கொரு மீட்சியில்லை என்று நம்பினாள். தன்னிடமிருந்து எழும் தொடர்வாதமாக விடாப்பிடியாக அதையே மீண்டும் மீண்டும் கூறினாள். இப்படியோர் உரையாடலின் இடையே தான் அவள் அண்ணன் தனது கையில் இருந்த முப்பரிமாண உருளையைத் தூக்கி அவள் மீது எறிந்தான். அது காலத்தின் வழியாக நகர்ந்து வந்து, இடது கண்ணின் ஓரத்தில் பட்டு, சதையைக் கிழித்து இரத்தத்தை வெளியே எடுத்தபோதும்கூட அவள் அதனைத் துடைத்துக் கொண்டே தனது அண்ணனை நோக்கிக் கூறிய பதில் ஒன்றேயொன்று தான்.

‘அறிவு பெருகி வழியும் மூடனே, இப்போதாவது புரிந்துகொள், அந்த உருளை காலத்தின் ஊடாக நகர்ந்து வந்ததே தவிர, காலம் நகர்த்தி வரவில்லை. இதைப் புரிந்துகொள்ளும்போது காலமும் நீ செய்து வரும் ஆராய்சிகளும் முப்பரிமாணத்தின் மூன்றாவது அச்சையும் மீறிய ஒன்றை உன் கண்ணெதிரில் காட்டக்கூடும். அப்போது காலம் பெருகி நிற்பதைக் கண்கொண்டு பார்க்க முடியும்’ என்று கூறிவிட்டு, தன் வீட்டின் படிகளில் இருந்து கீழே இறங்கும் போது காலம் அகாலமாகிக் கொண்டிருந்தது.

ஆம், அவளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை காலம் அகாலமாகக் கூடும் என்பது மட்டுமே. அப்படியோர் எண்ணம் எழுந்த நாளில் அவளால் இதனை நம்ப முடியவில்லை. காலம் எப்படி அகலாமாக மாறக்கூடும்? தொடர்ந்த ஆராய்ச்சியில் உண்மையைக் கண்டுகொண்டிருந்தாள். அது குறித்தக் கதை ஒன்றினை எழுத ஆரம்பித்ததும் அதன் தொடர்ச்சியாகவே.

நெடுநாள் கேள்விகளுக்கு விடையாக அமையவிருக்கும் அந்தக் கதையை சுடுகாட்டில் அமர்ந்து எழுதும்பட்சத்தில் சில தெளிவுகள் கிடைக்கக்கூடும் என்று நம்பினாள். கிழிந்த சதையின் வழியே பெருகும் இரத்தத்தின் திட்டுகள் சாலையில்படிய, வீட்டை விட்டுக் கீழே இறங்கிய முதல் வேலையாக அவள் நடக்கத் தொடங்கியது, விடுதலையைக் கொண்டாடும் ராக தாளங்களுடன் பிரேதம் ஒன்று எரிந்து கொண்டிருக்கும் சுடுகாட்டை நோக்கி. அன்று அவள் ஊரில் இறப்பேதும் நிகழ்ந்திருக்கவில்லை என்பதால் பிரேதம் எரிந்து கொண்டிருக்கும் சுடுகாட்டைக் கண்டுபிடிப்பதற்குள் காலத்தின் மீது நள்ளிரவு ஏறியிருந்தது. காலம் அகலாமாக மாறுவது சுடலையினிடத்தில் என்பதை அவள் ஆராய்சிக் குறிப்புகள் உறுதி செய்த வேளையின் மீது காலம் கூடிக் கொண்டிருக்கிறது. குளுமையும் வெம்மையும் கலக்குமிடத்தில் காலமும் அகாலாமும் கூடிக் களிக்கிறது.

அம்மா சொன்ன கதைகளில் பேய்கள் அகாலத்தில் உலவுகின்றன என்ற சொல் தான் காலத்தை ஒருபுள்ளியில் நிலைபெறச் செய்யவும் அந்தப் புள்ளியின் வெளியே உலவும் அகாலத்தின் சூட்சுமத்தைக் கண்டுகொள்ளவும் உதவியது என்று நம்பினாள். எதையுமே கற்காத தன் அம்மாவே இந்த உலகத்தின் ஞானி என்று புகழத் தொடங்கினாள். இதுவரையிலும் தனக்கு ஞானம் கொடுத்த அத்தனை ஆசான்களையும் வெறுத்து, தன் அம்மையை வழிபடத் தொடங்கினாள். அம்மை சக்தியின் வடிவம். பேச்சியின் பிள்ளை சுடலைக்கு உயிர்கொடுக்க ஈசனை அனுப்பிய சக்தியின் வடிவம். அகாலத்தின் தலைமகனுக்குத் தலையன்னையாகி நிற்பவள். அந்த சக்தி, தன் அம்மாவாக, தன் வீட்டில் இருக்கிறாள் என்பதற்காக மட்டுமே இத்தனை நாட்களும் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் வலிகளையும் பொறுத்துக்கொண்டு வதைபடும் சிறு உயிராக அங்கே வாழ்ந்து வந்தாள்.

அகாலத்தின் மீதெழும் நம்பிக்கை, இப்போது வீட்டைவிட்டு வெளியே இழுத்து விட்டிருந்தது. காலத்தில் நான் இருக்கிறேன். அகாலத்தில் சக்தியும் ஈசனும் இருக்கிறார்கள். இணைக்கும் புள்ளியாக சுடலை இருக்கிறான் என்றெழுதிய வார்த்தைகள் பன்னிரண்டாம் பக்கத்தின் முடிவாக வந்து நிற்பதை அச்சத்தோடு கவனிக்கத் துவங்கினாள். தடுமாறி நின்ற கணத்தில் காற்றின் வேகம் பக்கங்களையும் சேர்த்தே புரட்டி விட்டிருந்தது.

அவளுக்குத் தெரிந்த கதையொன்று உண்டு. அந்தக் கதையில் சுடலை ஒரு சித்திரக்காரன். காலத்தின் கணக்குகளை நிர்மானிக்கும் கட்டாயத்தின் பேரில் தன்னை ஓர் ஓவியனாக உருமாற்றியிருந்தான். எண்களின் உருவாக்கக் கணங்களுக்கு முன் சூன்யமே நிலைபெற்று நின்றதை அவன் வெறுத்தான்.

எண்களின் வடிவத்தைக் கொண்டு தன் இருப்பிடத்தைக் கட்டமைப்பதற்காக அவன் எடுத்த அவதாரத்தில் அவனே இருவேறு வடிவம் கொண்டிருந்தான். சுடலையே காலமாகவும், சுடலையே அகாலமாகவும் மாறிப் போனதன் காரணத்தை அறிந்த முதல் உயிர் அவள் மட்டுமே.

சுடலை தன்னை ஓர் ஓவியனாகக் கொண்ட அவதாரத்தில் எண் ஒன்றில் தொடங்கி பன்னிரெண்டை நெருங்கும் சமயத்தில் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டிருந்தான். அதுவே சுடலை செய்த சதி. அதுவே அவன் செய்த பிழை. காலத்தை அளவீடாகக் கொண்டு தன் இடத்தை நிர்மாணிக்க முயன்றதும் எண் பன்னிரெண்டை நெருங்கும்போது தன் அவதாரத்தை முடித்துக் கொண்டதும் எத்தனை பெரிய சூழ்ச்சி?

காலமும் அகாலமும் சந்திக்கும் புள்ளி எதற்காகப் பன்னிரெண்டில் தொடங்கி சூன்யமாகி மீண்டும் பன்னிரெண்டை நோக்கி நகர வேண்டும்? அகாலத்தில் சுடலையாக சுடலைமேட்டிலும், காலத்தில் கருப்பனாக ஊர்மேட்டிலும் வலம் வரும் திட்டத்தை யார் கொடுத்தது அவனுக்கு? பன்னிரெண்டிற்கும் சூன்யத்திற்குமான இடைவேளையில் எதற்காக இரத்தவெறி கொண்டு அலைகிறான்? உயிர்ப்பலி கேட்டுத் துடிக்கிறான்?

இதுவரை கேட்கப்படாத கேள்விகளின், எழுதப்படாத கதையின் முதல் பக்கத்தை எழுத ஆரம்பித்த கணத்தில் சுடலை, சுடலைமேட்டின் மீது ஆடிக்களித்தபடி அவள் எழுதும் கதையை வாசித்துக் கொண்டிருந்தான். பக்கங்கள் நகர நகர, தன்னைப் பற்றிய இரகசியங்கள் வெளிப்படுவதை விரும்பாத அவன் கோபம் வெக்கையாக அவளைத் தாக்கத் தொடங்கிய நிலையில், தன்னைக் குளிர்விக்கும் பொருட்டு அவள் உருவாக்கிக் கொண்ட குளிர்ந்த காற்று நெருப்போடு சண்டையிடுவதை எதிர்கொள்ள முடியாத சுடலை, சுடலைமேட்டை சுற்றிச்சுற்றி அரற்றத் தொடங்கியதை கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

தன்னை அடக்கிய, தன்னைச் சிறைபடுத்திய, தன் வீட்டைவிட்டு வெளியேற்றிய சம்பவத்தில் அவள் கற்றுக்கொண்ட பாடம், இனி யாருக்கும் எதற்கும் ஒருபோதும் அடங்கிப் போவதில்லை. சுடலையின் சூட்சுமம் புரிந்த நாளில் அவன் கணக்கைத் தீர்க்கும்பொருட்டு சுடலைமேட்டைத் தேர்வு செய்திருந்தாள். காலத்தின் கணக்கை பன்னிரெண்டுடன் நிறுத்தியவன், கணக்கின் வடிவத்தையும் பன்னிரெண்டுடன் நிறுத்திவிட்டான் என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்ற தன் எழுத்துகளை பதிமூன்றாவது பக்கத்தில் எழுத நினைத்திருந்தாள்.

எதோ ஒரு புள்ளியினுள் நுழைந்து தன் சிந்தனையைக் குழப்பி விட்டான் இந்த சுடலை. பாவி. மா பாவி. அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவனோடு சேர்த்து உலகத்திற்கும் சொல்ல வேண்டும். பதிமூன்று விடுதலையின் எண். விடுதலையின் குறியீடு. சுதந்திரத்தின் சின்னம். கலகக்காரியின் தனித்த அடையாளம். அடைபட்டுக் கிடக்கும் கணிதத்தையும், அடைபட்டுப் போன காலத்தையும் மீட்டெடுக்க இருக்கும் ஜென்ம செயல்.

சுடலையின் மூர்க்கம் ஆவேசமடைவதை இரசிக்கத் தொடங்கினாள். சுடலைமேட்டின் வெப்பமும், காற்றின் வேகமும் பேரோலத்துடன் சண்டையிட்டுக் கொள்ள, சுடலைமேட்டைச் சுற்றி எழும் சாம்பல் அந்த ஊரின் மொத்தப் பகுதியையும் சூழ்ந்து மறைக்கத் தொடங்கிய கணத்தில் கொண்டாட்டமாக ஆடத் தொடங்கினாள். பெருங்காற்றும் பெருவெக்கையும் அவள் மூர்க்கத்தை மேலும் அதிகரித்தன.

சர்ப்ப உருக்கொண்ட சுடலைச் சாம்பல், தன் எழுத்தை மொத்தமாக உறிஞ்சிக் குடிப்பதைக் கண்டு வெருண்டெழுந்தாள். சுடலைக்கும் அவளுக்கும் இடையே நிகழும் சண்டை அதன் உச்சத்தைத் தொடும் சம்பவமாக உருக்கொண்டு அலைந்தது. சுடலைக்காடு போர்க் காடாக மாற்றம் கொண்டது. அடித்து வீசும் காற்றின் திசைகள் அதன் எதிர் திசைகளோடு போராடின. மேகங்கள் வெருண்டு கலைந்தன. சமரின் முடிவில் சுடலைமேட்டின் மாடத்தில் வெறிகொண்டெரியும் பிரேதம் நீண்ட மூச்சொன்றை இழுத்து வெளியேற்றிய தருணத்தில் அதன் முட்டியும் கையும் சுருங்கி விரிவதைப் போல், இரண்டு சிறிய மலைக்குன்றுகளைப் போல் எழுந்து அடங்குவதைப் போல், உறைந்து நின்ற கணத்தை அவனும் அவளும் பார்த்தார்கள்.

காலமும் அகாலமும் சந்தித்துக் கொள்ளும் அந்தப் புள்ளியில் சுடலை மேட்டின் மீது எழுந்து அடங்கிய அந்தப் பிரேதம் எண் பதிமூன்றைப் போல் சித்திரம் கொண்டு நிற்பதை அவளும் அவளோடு சேர்ந்து சுடலையும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நின்றுபோன கணிதத்தின் புதுவடிவம் மீட்டெடுக்கப்பட்ட உற்சாகத்தில் காற்றோடு காற்றாக இணைந்து பேரோலம் எழுப்பினாள். ஆனந்தக் களியாடினாள். கூந்தல் விரிய சுழன்றுச் சுழன்று பெருங்கூத்தொன்று நிகழ்த்தினாள். பெருங்களிப்பில் திளைக்கும் மோகினி ஒன்றின் களிப்பாற்றும் ஆட்டமாக நிகழ்ந்து கொண்டிருந்தது அந்த ஆட்டம். நின்றுபோன எண்களுக்கு புது வடிவம் கொடுத்தவளின் களியாட்டம். விடுதலையின் எழுச்சி கொண்ட அந்தக் கணத்தில், அடங்கிப்போன இடத்தில், அடக்கப்பட்ட இடத்தில், உயிர்ப்பெறும் மீட்பராக, தன் கதை நிறைவுக்கு வந்த பெருவேட்கையுடன் காலத்திற்கும் அகாலத்திற்கும் இடையே துள்ளித் துள்ளிக் குதித்தாள்.

செய்வதறியாத மாடன், புதுவடிவம் கொண்ட சுடலைமேட்டுச் சாம்பலில் இறங்கி, தன் அவதார உடலினுள் புகுந்து கொண்டான். உயிரற்ற ஒன்று உயிர்ப்பெறும் அந்த இடத்தில் காலம் நிலைகொண்ட அபூர்வ கணத்தில் அவளும் நிலைகொள்ளத் தொடங்கினாள். யட்சியாக, மோகினியாக, சுடலை மாடனுக்கு உயிர் கொடுத்த அம்மையாக.