கூடு விட்டு … – வண்ணதாசன்

by வண்ணதாசன்
0 comment

இப்போதுதான் மேற்கொண்டு கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது.

பாக்கி இருந்த தச்சு வேலையை எல்லாம் முடித்துக் கொள்ளலாம் என்று, பால் காய்ச்சிக் குடிவந்து இரண்டு ஆவணி வந்த பிறகுதான் கொஞ்சம் தெம்பு வந்திருக்கிறது. இப்படி உருண்டு புரண்டு எல்லோருக்கும் இருக்கிற வீடு கட்டும் ஆசைதான். கட்டி ஆயிற்று. அதற்கு முன்னால் இருந்த அதே உடம்புதான். சில சமயம் கை நீளமாகி விடுகிறது அல்லது கால் குட்டையாகி விடுகிறது. முகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சிரிக்க நினைத்தால் சிரிப்பு கோணிக்கொண்டு போகிறது. கன்னத்துத் தோலை யாரோ இழுத்துப் பிடித்து பனஞ் சிராய் மாதிரி ஆகிவிடுகிறது. ஊருக்கு எவ்வளவு தள்ளி வீடு கட்டி உட்கார்ந்தாலும் அதற்கு முந்தி வாடகை வீட்டில் இருந்த சமயத்தில் எல்லோருக்கும் இருந்த முகம் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக வர இவ்வளவு நாள் ஆகிவிட்டது.

எத்தனை தடவை கண்ணாடியைப் பார்த்தாலும் இது நம்முடைய முகம் தானா? பார்க்கிறவர்கள் முகத்தை விட்டு விட்டு வேறு யார் முகத்தையோ காட்டுகிறதே. அப்படி எல்லாமா ஒரு கண்ணாடி  சேட்டை பண்ணும்? இதே கண்ணாடியைத் தானே செம்பகம் பிள்ளை வீட்டுத் தெரு சுவரிலும் தொங்க விட்டிருந்தோம். அப்போது எல்லாம் என் முகம், சரசு அப்பா முகம், சரசு முகம், கைலாசம் முகம் எல்லாம் நன்றாகத் தானே இருந்தன? இப்போது என்ன வந்தது?

வீடு கட்டும் போது தச்சுவேலைக்குக் கையாளாக வந்திருந்த செவல் பையன்கள் மாரியப்பனும் செல்லப்பனும் தான் இப்போதும் வேலைக்கு நிற்கிறார்கள். மூன்று அறையிலும் சேந்திக்கு எல்லாம் கதவு போட வேண்டும். கைலாசம் அப்பா வீட்டுப் பூர்வீக மர பீரோ செக்கு மாதிரி கனக்கும். ஒரு ஆளாக நகட்ட முடியாது. அதன் பலகையைப் பிரித்து ஒரு சின்னப் புத்தக அலமாரி. இதைத் தவிர, மிச்சம் இருப்பதைப் பொறுத்து, கூடக் குறைய மரம் எடுத்து, நான்கு பேர் உட்கார்ந்து சாப்பிடுகிற மாதிரி ஒரு சின்ன மேஜை. அதே போல கைலாசம் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுத ஒரு சாய்வு மேஜை. எல்லாவற்றையும் செய்ய முடியுமா என்று உறுதியில்லை. ஒரு ஆசை.

பையன்கள் என்று சொன்னேனே தவிர இரண்டு பேரும் கல்யாணம் ஆனவர்கள் தான். மாரியப்பனுக்கு ஐந்தும் மூன்றுமாக இரண்டு பெண் பிள்ளைகள். அவன் தான், ‘பாப்பா என்ன படிக்கு? யே யப்பா. அதுக்குள்ளே எட்டாங் கிளாஸ் போயாச்சா? தம்பி சாப்பிடுதானா இல்லையா? ரெண்டு பேருக்கும் முட்டை கிட்டை கொடுங்க’ என்று பிள்ளைகளைப் பற்றிப் பேசுவான்.

செல்லப்பாவுக்குக் காதல் கல்யாணம் போல. வீடு கட்ட ஆரம்பித்த சமயத்தில் பெரிய ஆசாரி ‘ஃபோனைப் பிடுங்கி வாருகாலிலே எறிஞ்சிருவேன்.. ஒழுங்கா வேலையைப் பாரு. இல்லை அவ இதை மோந்து பாத்துக்கிட்டு பிராஞ்சேரிக் குளத்துக்குள்ளேயே கிட. இங்கே வராதே’ என்று திட்டுவார். ஆனால் நுணுக்கமான வேலையை அவனைத்தான் பார்க்கச் சொல்வார்.

மாரியப்பன் அவன் உண்டு அவன் வேலை உண்டு இருப்பான். வெளிக் கதவில் தொங்க விட்டிருக்கிற தபால் பெட்டி அவன் செய்ததுதான். பழைய சாதிக்காய்ப் பெட்டியின் மரப்பட்டையில் இருந்து செய்யப்பட்டதாக அதைப் பார்த்தால் தெரியாது. அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். பழைய மரச் சாமான்கள் பலகைகளை வீணாக்காமல் அதிலிருந்து சன்னல் சட்டங்கள், பிறழி எல்லாம்  விருப்பத்துடன் செய்வதால் பொதுவாக வேலை நடக்கிற இடத்தில் எல்லோருக்கும் அவனைப் பிடித்துப் போகும்.

கொஞ்ச நேரத்திற்கு ஒருதடவை அவனுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒரு நேரத்துக்கு ஒரு செம்பாவது குடிப்பான். நல்ல வார்த்தைகளாகச் சொல்வான். குடிக்கிற தண்ணீர் மேலே எல்லாம் சிந்த, ஒரு மடக்குத் தண்ணீரை விழுங்கின அண்ணாந்த கழுத்தோடு, ‘ உங்களுக்கும் சாருக்கும்  யோகம் மா. ஆத்துத் தண்ணியை விட போர் தண்ணி எவ்வளவு டேஸ்ட்டா இருக்கு பாருங்க.’

அவனுக்குக் கொஞ்சம் கூச்சமான சுபாவம், ’போன தடவைக்கு இந்தத் தடவை பார்க்க என்னமோ மாதிரி இருக்கீங்க அம்மா’ என்று நான் தண்ணீர்ப் பானையை இறக்கிவைத்து ஒரு தட்டைப் போட்டு மூடும் போது என்னிடம் சொன்னான். நடமாடும் போது மாரியப்பன் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றும். அவன் சொல்வது சரியாக இருக்கலாம். இந்தச் சமயத்தில் என்னுடைய கூச்சம் ஒன்றையும் சொல்ல வேண்டும். இரண்டு பேரில், மாரியப்பன் முன்னால் நடமாடும் போது மட்டும் நான் ’வீட்டுக்குத் தூரமாக’ இருப்பது அவனுக்குத் தெரியுமோ என்று நினைத்திருக்கிறேன். அதிகம் அந்தப் பக்கம் போக மாட்டேன்.

செல்லப்பன் அப்படி இல்லை. வேறு மாதிரியாக நேரடியாகச் சொல்வான். ’அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. பால் காய்ச்சிக் குடி வந்த ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்படித்தான் எல்லா வீட்டு சாருக்கும் அவங்கவங்க வீட்டம்மாவுக்கும் இருக்கும். அப்புறம் சரியாப் போயிரும்’ என்று என்னிடம் சொல்பவன் மாரியைப் பார்த்து, ’நின்னுக்கிட்டே விதைச்சிரலாம். குனிஞ்சுகிட்டே தானே அறுக்கணும். குனியிரதுக்கு கொஞ்ச நேரம் ஆச்சுண்ணா, நிமிருறதுக்கு அதை விடக் கூடக் கொஞ்ச நேரம் ஆகத்தானே செய்யும் மாரி’ என்பான்.

எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று செல்லப்பனுக்குத் தெரிந்து இருந்தது. அதனால் தான் அவனுக்குப் பூ வேலைகள் அவ்வளவு சரியாகச் செய்யவந்தது. தலை வாசல் கதவு மட்டும் தான் தேக்கு. அதில் நடுவில் இரண்டு பக்கமும் இருக்கிற தாமரைப் பூ, தாமரையா, சூரிய காந்தியா?, அவன் வேலைப்பாடுதான்.

அந்தக் கதவை அவன் சேர்த்து ஓரமாய் நிறுத்திய சமயம் கைலாசத்துடைய அப்பா அவனிடம் கேட்டார். ’இது என்ன பூ டே?’

‘உங்களுக்கு எப்படித் தெரியுது சார்?” – செல்லப்பா கேட்டான்.

’அது தெரியாமத்தான உன் கிட்டே கேக்கேன். பார்க்க நல்லா இருக்கு, ஆனால் என்ன ‘பூ’ன்னு தெரியலை’

‘உங்களுக்கு மட்டும் இல்லை. எனக்கும் அது ‘பூ’ன்னுதான் தெரியும். என்ன ‘பூ’ன்னு தெரியாது. நீங்களே சொன்ன மாதிரி அது நல்லா இருக்குல்லா சார்? அப்ப அது பூ தான்’ என்று சொல்லிவிட்டு அவனே கதவின் நடுச் சட்டத்தில் இருந்த அந்தப் பூவின் ஒவ்வொரு இதழ்களையும் தடவிக்கொண்டு இருந்தான். தடவின விரல்களை முகர்ந்து பார்த்துக் கொண்டு, மாரியப்பன் மூக்கில் கொண்டு போய் வைத்து, ‘உனக்கு என்ன வாசம் அடிக்கு?’ என்றான். மாரியப்பன் பதில் சொல்லவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ‘அப்படிப் பார்த்தா, ஒவ்வொருத்தருக்கும் ஒரு வாசம் அடிக்கும். ஏன்னு சொன்னா, அது ஒவ்வொருத்தருக்கும் ஒரு பூ’ என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த இழைப்புச் சுருளை எல்லாம் கூட்டிப் பெருக்க ஆரம்பித்து விட்டான். கைலாசம் அப்பா அங்கே நிற்பதையே அவன் அப்புறம் கவனத்தில் வைக்கவில்லை. செல்லப்பாவிடம் பேச்சுக்கொடுக்க அப்புறம் அவர் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்தார்.

இப்போதுள்ள வேலைக்கு மரம் என்ன ஆகும், கூலி என்ன ஆகும் என்று கலந்து பேச இரண்டு பேரும் வந்து நிற்கிறார்கள். இந்தச் சமயத்தில் கூட, மாரியப்பனிடம் தான் வந்ததும் வராததுமாக சரசு அப்பா கிண்டல் பண்ண ஆரம்பித்தார். ‘என்ன மாரியப்பா, உன்னைத் தபால் பெட்டி செஞ்சு தரச் சொன்னா, குருவிக் கூடு செஞ்சு கொடுத்துட்டுப் போயிருக்கே?’

புரியாத முகத்துடன் மாரியப்பன் தபால் பெட்டி தொங்குகிற வாசல் கதவைப் பார்த்தான். மாரியப்பன் வந்திருக்கிற சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளே இருந்து சரசுவும் கைலாசமும் ஓடி வந்தார்கள்  சரசு போய் அப்பா பக்கத்தில் நின்று கொண்டாள். அப்பா கையைப் பிடித்துக் கொள்ளாமல், அவருடைய புறங்கை ரோமத்தை இழுத்து விளையாடாமல் அவளுக்கு இருக்க முடியாது. நல்ல வளர்த்தி. சதைதான் போடமாட்டேன் என்கிறது.

கைலாசம் மாரியப்பனிடம் போய், ’குருவி நாலு முட்டை போட்டிருக்கு’ என்று வாசல் பக்கம் கையைக் காட்டினான். சின்னப் பிள்ளைகளுக்கு என்ன? அவை எந்தப் பக்கம் கையைக் காட்டினாலும், காட்டின திசையில் எல்லாம் தபால் பெட்டிகள் குருவிக் கூடுகளாகத் தொங்குகின்றன. கூட்டுக்குள் குருவி முட்டைகள் நிரம்பி வழிகின்றன.

மாரியப்பன் உடனே கைலாசம் வயதுக்குப் போய்விட்டான். ‘நான் பத்து முட்டையில்லா போடச் சொல்லியிருந்தேன்? சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா எல்லாக் கலர்லேயும் போடு. கைலாசத்துக்குப் பிடிக்கும்னு அதுகிட்டே சொல்லியிருந்தேனே? அது நாலு தான் போட்டிருக்கா?’ கைலாசத்தை தன் இடுப்புக்குக் கீழ் உடலோடு அமுக்கி நகர்த்திக்கொண்டு  வாசல் கதவுக்குப் பக்கம் போனவன். ’வேட்டி அவுந்திரப் போகுது’ என்று தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டான்.

செல்லப்பன் தபால் பெட்டியை பூப்போலத் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுடைய முகம் அவனுடைய முகத்தை விட வெளிச்சமாகி இருந்தது. ‘நாலு முட்டை இருக்கு மாரி’, என்றான். ‘எல்லாம் வேப்ப இலைக் குச்சி. ஒன்னுக்கு மேல ஒன்னா தோணி மாதிரி அப்படி அடுக்கியிருக்கு.’ செல்லப்பன் கையைக் காற்றில் வளைவாகப் படகு செய்து காட்டினான். அதன் கட்டுமான நுணுக்கம் முழுவதையும் அவன் படித்துவிட்ட அசைவாக இருந்தது அது.

சரசு அப்பா செல்லப்பனிடம் உரச விரும்பினார். ‘விட்டால், நீயே ஒரு கூடு கட்டீருவ போலயே’ என்றார். செல்லப்பன் சிறிது நேரம் எடுத்து பதில் சொன்னான். அந்தச் சிறிது நேரத்தில் அவருடைய குரலில் இருந்த இளக்காரத்தை எல்லாம் வடியவிட்டான். அவன் முகம் மிகச் சாந்தமாக இருந்தது. ‘பத்து மாடி, நூறு மாடிக்கு அந்தரத்தில நிலைக்கதவு விடு செல்லப்பான்னு சொல்லுங்க சார். தலை கீழே நின்னாவது விட்டிருவேன். ஒரு குருவி கூடு என்ன, அதுல இருக்க ஒரே ஒரு குச்சியைக் கூட என்னால அப்படி வளைசலா வைக்க முடியாது.’ செல்லப்பாவின் கைகள் அரைக் கும்பிடாக அவனுடைய நெஞ்சிற்குக் கீழ் பொருந்தியிருந்தன.

’சும்மா சொன்னேன் டே’, சரசு அப்பா அவனிடம் தணிவாகச் சொன்னார். அது  போதாது என்று தோன்றியது போல, ‘நீ சொல்லுதது புரியுது’ என்றார்.

செல்லப்பா நகர்ந்து பப்பாளி மரத்துக்குப் பக்கம் போய் அமைதியாக நின்றான். அது பூ விட ஆரம்பித்திருந்தது. சம்பங்கிப் பூ போல வெள்ளையிலும் இளம் பச்சையிலும் உதிர்ந்து கிடந்த பூவைக் கையில் வைத்துப் பார்த்தபடி நின்றான். செல்லப்பாவால் ஒரு பப்பாளிப் பூவைச் செதுக்கிவிட இனி முடியலாம்.

பப்பாளி ஒன்றுதான் சமீபத்தில் வைத்தது. வடக்குச் சுவரோரம் காய்ப்புக்கு வருகிற அளவுக்கு வளர்ந்துவிட்ட முருங்கை வீட்டு வேலை ஆரம்பத்தில் நடக்கிற சமயத்தில் செவலில் அவன் வீட்டு மரத்தில் இருந்து வெட்டிக் கொண்டுவந்து மாரியப்பன் ’ஊணி’யது தான். இன்னும் கூட அதன் உச்சியில் அப்பியிருந்த சாணி காய்ந்து பொருக்காடியதும் பட்டாணி பட்டாணியாய் அது கீழ்ப்பக்கம் துளிர்க்க ஆரம்பித்ததும், சரசு அதே வேலையாய்க் காலையில் பல் தேய்க்கும் போது போய் அதைப் பார்த்துக்கொண்டு நிற்பதுமாக இருப்பாள். செம்பருத்திக் குச்சி சரசுவுடைய அப்பாச்சி நட்டது. ‘ரெண்டு வைப்போம். ஒன்னு பட்டுப் போச்சுன்னாலும் ஒன்னு துளுக்கும் லா’ என்று அத்தை சொன்னார்கள். ஆனால் இரண்டுமே துளிர்த்துப் பெரியதாகி மொட்டு வைக்க ஆரம்பித்து விட்டது. எப்போது மொட்டு வைக்கும், எப்போது பூக்கும் என்பது எல்லாம் நம் கையிலா இருக்கிறது? அந்தந்தச் செடியே அதைத் தீர்மானம் பண்ணிக் கொள்ளுமோ என்னமோ?

’அதை எதுக்குடே நீ திறந்து பார்த்தே? சும்மா இருக்க மாட்டியா?’ – மாரியப்பன் செல்லப்பனைப் பார்த்துச் சொன்னான். கைலாசம் அப்பாதான் முதலில் திறந்து பார்த்தவர். இதை அவன் நேரடியாக கைலாசம் அப்பாவிடம் சொல்லாமல் செல்லப்பாவிடம் சொல்வது போல இருந்தது. இடுப்போடு ஒட்டிக்கொண்டு நிற்கிற கைலாசத்தின் உச்சி முடியை விரல்களைக் கொடுத்துக் கோதிவிட்டபடி மாரியப்பன் என்னைப் பார்த்தான்.

‘நாம திறந்து பார்த்தது லேசாத் தெரிஞ்சு அம்மைக்காரி கள்ளப்பட்டுப் போயிட்டுதுன்னா அப்புறம் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காது’ – இதைச் சொல்லும் போது மாரியப்பனே ஒரு பறவை போல இருந்தான்.

சரசுவும் கைலாசமும் சின்னப் பிள்ளைகள். அவர்களுக்கு மாரியப்பன் என்ன சொல்கிறான் என்று கூடப் புரிந்திருக்காது. செல்லப்பன் உட்பட, நான், கைலாசம் அப்பா எல்லோரும் ‘அப்படியா?’ என்பது போல, சத்தம் காட்டாமல் நின்றோம். ‘இம்புட்டுப் போல கண்ணு, மூக்கு. அதுக்கு என்ன தெரியவா போகுதுன்னு நினைப்போம். பட்சி, பறவை, புழு பூச்சிக்கு எல்லாம் எட்டுப் பக்கமும் கண்ணு. எட்டுப் பக்கமும் காதுல்லா.’ மாரியப்பன் நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனான்.

‘எந்த எச்சத்தை எது போட்டுது, எந்த மரம் பழுத்திருக்கு, எந்த வேரு உழுத்திருக்குன்னு ஆத்துக்கு அந்தப் புறத்திலே இருந்தே அது சொல்லீரும் தெரியுமா? வெயில் வாசம் அடிக்கும்னு உங்களுக்கும் எனக்கும் தெரியாது. அதுகளுக்குத் தெரியும்.’ மாரியப்பன் யார் முகத்தையும் பார்க்கவில்லை. நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் ஒவ்வொரு தடவையும் சிவசைலம் ஆற்றில் இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளி முகர்ந்து பார்த்திருக்கிறேன். எனக்குத் தண்ணீர், அதுவும் சிற்றாற்றுத்  தண்ணீர், எப்படி வாசம் அடிக்கும் என்று சொல்ல முடியும். அப்படி என்றால் எனக்கும்  சிறகுகள் உண்டா? இந்த நான்கு முட்டைகளையும் நான் தான்  தபால் பெட்டிக்குள் இட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் எல்லோர் கூடவும் நிற்கிறேனா?

இன்னும் பப்பாளி மரத்துக்குப் பக்கத்திலேயே நின்று எங்கேயோ வெளியில் பார்வையை வீசியிருந்த செல்லப்பனைத் தன் பக்கத்தில் வரவைக்கிற மாதிரி, ’செல்லப்பா, நீதான் ஒரு தடவை எதைப் பார்த்தாலும் டக்குன்னு சொல்லீருவியே? உனக்குத் தெரியுதா அது எதோட முட்டைன்னு?’ – என்று கேட்டு, ஒரு பதிலைத் துவக்கிக் கொடுப்பது போல, அவன் பக்கம் ஒரு எட்டு வைத்தான். ‘அடைக்கலாங் குருவி கிடையாது. தவிட்டுக் குருவியா இருக்குமோ?’

செல்லப்பன் பப்பாளி மரத்துக்குக்குப் பக்கம் காம்பவுண்டு சுவரில் கையை ஊன்றிக்கொண்டு நின்றவன், ‘போற வாற வழியில் ஆவாரஞ்செடி மூட்டில் செம்போத்துக் கிடக்கு பார்த்திருக்கேன். சர்ச் கெட்டுமானம் ஆகுதுல்லா, அந்த இடத்தில எப்பவும் ஒரு ஒத்தை செம்போத்து சத்தம் போட்டுக்கிட்டு இருக்கும். போன தீவாளியை ஒட்டி இது வழியா தென்றல் நகருக்கு ஒரு ஜோலியாகப் போகும் போது, இங்கேயெல்லாம் மழைத் தண்ணீ ஓடை மாதிரி ஓடின தடம். வரிசையா நூத்துக் கணக்கில போஸ்ட் கம்பி பூராம் ஒன்னுபோல பஞ்சுருட்டான் உக்காந்திருந்தது. அது இங்கே இருக்கது இல்லை. வரத்துப் பறவை. மற்றப்படி தவிட்டுக் குருவியை இந்தப் பக்கம் பார்த்தது இல்ல.’

செல்லப்பன் சொல்கிற அந்தச் செம்போத்தை நானும் பார்த்திருக்கிறேன். வீடு கட்டின புதிதில் இந்தப் பக்கம் என்னதான் இருக்கிறது என்று கொஞ்ச தூரம் சரசு அப்பாவுடன் நடந்து போன போது அது அங்கே ஆவாரஞ் செடிக்கு அடியில் இருந்தது. செலவு கணக்கு எல்லாம் பேசிக்கொண்டு கொஞ்சம் இறுக்கமாக நடந்து கொண்டு இருந்தாலும், சரசு அப்பா அவரை அறியாமல் நிறைய ஆவாரம் பூவைப் பறித்து வைத்தபடியே நடந்தார்.  நம்மை அறியாமல் நாம் செய்கிற இந்த மாதிரி சில விஷயங்கள் எவ்வளவு சந்தோஷம் உண்டாக்கிவிடுகிறது!

மழை வருகிற மாதிரி அடைத்துக் கிடந்தது. தூரத்தில் தெரிந்த வாட்டர் டேங்க்கில் இருந்து டி.வி.எஸ் 50-இல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குடம் தொங்க நைட்டி போட்ட ஒரு பெண் எங்களைப் பார்த்தபடியே போனார். ‘இந்த வண்டிக்குன்னு ஒரு சத்தம் இருக்கு பாரு’ என்று சரசு அப்பா சிரித்தார். அவர் ஸ்ப்லெண்டர் வைத்திருக்கிறவர்.

செல்லப்பன் மட்டும் ஒரு செம்மண் காட்டில் நிற்கிறது மாதிரியும் அவனைச் சுற்றி செல்லப்பனின் முட்டு, இடுப்பு வரை தெரியாதபடி ஒரே மஞ்சளாகப் பூத்துக்கிடப்பது போலவும், அவன் ஒரு செம்போத்தை, சுதந்திர தினத்தில் புறாவைப் பறக்கவிடுவது மாதிரி எல்லாம் காட்டுவார்களே அதைப் போல, உயரத் தூக்கின கைகளுக்குள் வைத்துக்கொண்டு வெயிலுக்குச் சுருங்கின கண்ணும் முகமுமாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

அப்பா பக்கத்தில் நின்ற சரசு, மூக்கைச் சுருக்கிக் கொண்டு, ‘என்னமோ நாத்தம் அடிக்கு’ என்றாள். அடிக்கிற காற்றில் அவளுடைய நெற்றியில் முடி விழுந்து பறப்பதை அவளே ஒதுக்கிவிட்டாள். மறுபடியும் அது அதே இடத்தில் விழுந்து நெற்றியைத் தடவியது.

‘ஆட்டுக் கிடா வாடை அடிக்கு’ என்று சரசுவைத் தன் பக்கத்தில் இருந்து விலக்கிவிட்டு சரசு அப்பா வாசல் பக்கம் போனார். எனக்கும் தெரிந்தது. அது ஆட்டுக் கிடா வாடைதான். நான் படித்த முனிசிபல் ஸ்கூல் போகும் போது ராயல் ஸ்டோர் தாண்டித்தான் போக வேண்டும். ராயல் ஸ்டோர் பாய் கடை முன் அவர் வளர்க்கிற வெள்ளாட்டுக் கிடா எப்போதும் நிற்கும். அந்த வயதில் அந்த வாடை பிடித்தும் இருந்தது. பிடிக்கவும் இல்லை. பழுக்கக் காய்ச்சினது போல் திமிறிக் கொண்டு இருக்கிற அதன் அடிவயிற்றைப் பார்க்கக் கூடாது என்றுதான் நானும் முத்துலட்சுமியும் நினைப்போம். ஆனால் பார்க்காமல் இருக்க முடியாது. முத்துலட்சுமி என் முதுகில் ஒரு அடிவைத்து தலையைக் குனிந்து கொள்வாள். நான் வாயைப் பொத்திக்கொண்டே போவேன்.

எங்களை அறியாமல் எல்லோரும் வாசல் பக்கம் வந்துவிட்டோம். சரசு அப்பா கேட் கதவைத் திறந்துகொண்டு தெருவுக்கே போய்விட்டார். காலையில் நான் போட்ட கோலத்திற்கு மேல் சரசு அப்பா, கைலியை மடித்துக் கட்டியபடி நிற்பது நன்றாக இருந்தது. இடது கால் ஆடு சதையில் புளியங்கொட்டை கனத்திற்கு மேடாக ஒரு தழும்பு உண்டு. அந்தத் தழும்பு வரை, கோலத்தில் இருந்த புள்ளிகளும் கம்பிகளும் ஏறிப் போனால் எப்படி இருக்கும்?

நிறைய காலி மனைகளுடன் திறந்து கிடக்கிற, எங்கள் வீட்டைப் போல அங்கங்கே ஒன்று இரண்டாக  வீடு வர ஆரம்பித்திருக்கிற இந்தப் பெரிய செம்மண் மைதானத்தில் அவர்கள் வந்துகொண்டு இருந்தார்கள். குத்துக் குத்தாக முளைத்திருக்கும் ஆவாரஞ்செடிகளுக்கு ஊடாக மூன்று பேரும், அவர்களுடன் ஒரு ஆட்டுக் கிடாவும், மூன்று வெள்ளாடுகளும் ஒரு குட்டியும் வருவதைப் பார்த்து செல்லப்பன், ’சினிமால வார மாதிரி இருக்கு’ என்றான்.

நான், ’அது ஒரு வரைந்த படம் போல இருக்கிறது’ என்று நினைத்தேன். செல்லப்பா அதை விட அழகாக, ‘சினிமா மாதிரி’ என்று சொல்லிவிட்டதும் அவனைப் பார்த்தேன். செல்லப்பாவை இப்போதுதான் பார்ப்பது போல இருக்கிறது. அவனுக்கு இவ்வளவு சுருட்டை முடியா?

அவர்கள் எங்கே போய்க்கொண்டு இருந்தார்களோ? நாங்கள் எல்லோரும் இப்படி வாசலில் நிற்பதைப் பார்த்ததும் எங்களைப் பார்க்கத் திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். எங்கள் வீட்டுக்கு வருவதற்கென்று ஏற்கனவே ஒரு ஒற்றையடிப் பாதை கண்ணுக்குத் தெரியாமல் அங்கே விழுந்துகிடப்பது போலவும் அதில் அவர்கள் வரப்பு நடையாக நடந்துவருவது போலவும் பக்கவாட்டு அகலத்தைக் குறைத்து ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டு இருந்தார்கள்.

வழி தெரிந்தது போல அல்லது வழிகாட்டுவது போல, அந்த ஆட்டுக்கிடா முன்னால் வந்துகொண்டு இருந்தது. தூரத்தில் வரும் போது மூக்கை நெருடிய அந்த வாடை, இப்போது பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒருவேளை எங்களுடைய வாடை அதற்குப் பிடிபட்டதும், இரண்டு பக்கத்து வாடையும் காணாமல் போயிருக்குமோ என்னவோ!

கிடா முன்னால் வந்து கொண்டு இருந்தது. அந்த ஆள் இடது தோளில் முன் பக்கமும் முதுகுப் பக்கமும் காலைப் போட்டுக்கொண்டு ஒரு நான்கு ஐந்து வயது அளவுப் பையன் உட்கார்ந்திருந்தான். பையனின் கை இரண்டும் அவர் தலைமேல் பெரிய கட்டாக இருந்த வாதாம் இலைகளுக்குள் புதைந்து இருந்தன. அந்தப் பெண் வடக்கத்திக் களையில் இருந்தாள். தடித்த ஈயக் காப்புகள் வளையம் வளையமாக அணிந்த கைகள். பிள்ளை உண்டாகி இருக்கிறாள். ஏழு மாதமாவது  இருக்கும். இடுப்பிலும் தலையிலும் துணிமூட்டை இருந்தது. இரண்டு வளர்ந்த முந்தின ஈற்றுக் குட்டிகள் தவிர ஒரு குட்டியும் தாய் ஆடும். பின் கால்களுக்கு இடையே செம்பு போல மடுவும், நீண்டு தொங்கும் காம்புகளும்.

பத்தடி தூரத்துக்குள் வரும் போதே கைகளை உச்சிக்கு உயர்த்தி ஒரு முறையும் நெஞ்சுக்கு அருகில் வைத்து ஒரு தடவையும் அவர் கும்பிட்டார். இத்தனைக்கும் தோளில் பையன் இருந்தான். ஒரு சுரைக் குடுக்கை இடது பக்கம் தொங்கியது. தலையில் வாதாம் இலைக்கட்டு இருந்தது.

செல்லப்பன் பப்பாளி மரத்துக்குக்குப் பக்கம் இருந்து அவசரமாக வெளியே வந்தான். தோளில் இருக்கிற சின்னப் பையனை இறக்கிவிட்டான். அவர் இலேசாகக் குனிந்ததும் தலையில் இருந்ததை அப்படியே ஏந்தி வாங்கி தரையில் வைத்தான். தாய் ஆட்டைத் தவிர மற்ற இரண்டு குட்டியும் ஓடிவந்து வாதாம் தழையைக் கடிக்க ஆரம்பித்தன. அவர் மிகக் கவனமாகத் தோளில் இருந்து கழற்றி வைத்த சுரைக் குடுக்கையில் ஒரு செப்புக்காசு பதிக்கப்பட்டிருந்தது. முதலில் சுரைக்குடுக்கையை வைத்த இடத்தை மாற்றி, இன்னொரு இடத்திலிருந்து மண்ணை அள்ளி முகர்ந்து பார்த்துவிட்டு, ஒரு குழி போலப் பறித்து, நடுவில் வைத்து சாயாமல் மண்ணால் அண்டை கட்டினார். செப்புக்காசு ஒரு கண் போலப் பார்த்தது.

குழந்தை உண்டாகியிருந்த பெண் சற்று பின்தங்கி வந்துகொண்டு இருந்தாள். அவள் பக்கம் போன செல்லப்பன் தான் நிறுத்தியிருந்த சைக்கிளை நகர்த்தி வைத்துவிட்டு அவளைப் பக்கத்தில் இருந்த பூவரசு மரத்தின் நிழலில் உட்காரச் சொன்னான்.

அதிகம் அப்படி ஒன்றும் நிழல் இல்லை. கொப்பு எல்லாவற்றையும் அரக்கிவிட்டு அதற்குப் பின் தானாகத் தழைந்திருந்த மரம். அங்கங்கே இலையும் பூவுமாய் நன்றாகவே இருந்தது. அவளை அங்கே உட்காரச் சொன்னது கூடப் பொருத்தம் தான். அவள் ஒரு பொட்டலத்தின் மேல் உட்கார்ந்து, இன்னொரு பெரிய பொட்டலத்தின் மேல் சாய்ந்து கொண்டது அவ்வளவு அழகாக இருந்தது. நானும் அவள் பக்கத்தில் போய் நின்றோ, அவளைப் போல அந்தப் பொட்டலத்தில் சாய்ந்து கொண்டு அவளுடன் பேச்சுக் கொடுக்க வேண்டும். நான் பேசினால் அவளுக்குப் புரியுமோ என்னவோ. சில சமயங்களில் எல்லாம் புரியும்படி தானே இருக்கிறது.

தலைப்பாகையை அவிழ்த்து அவர் உடம்பு எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டிருந்தார்.  காயப் போட்ட நெல் அளக்கும் களத்தில் அடிக்கிற பட்டுப் போல ஒரு புழுதி வாடை அந்த இடத்தில் உண்டாயிற்று. நான் பூவரச மரத்துப் பக்கம் போவதற்கு முன் சரசுவிடம் ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வா என்று சொல்லியிருந்தேன். ‘நான் கொண்டு வாரேன்’ என்று சரசுவை முந்திக்கொண்டு கைலாசம் உள்ளே ஓடினான். சரசு கொண்டுவந்து கொடுத்த செம்புத் தண்ணீரோடு நான் அவளைப் பார்க்க நடக்கும் போது அவர் என்னைக் கும்பிட்டார்.

‘எனக்கும் கிடைத்தால் நல்லது. இவனுக்கும் ஒரு பாத்திரம் நிரம்ப வேண்டும்’ என்றார். அவர் இவன் என்று சொன்னது அந்த ஆட்டுக் கிடாயை. அவருக்குத் தமிழ் பேச வந்தது. எழுத்துக் கூட்டிப் புத்தகத்தில் படித்துவிட்டு வந்த வெளியூர்க்காரன் பேசுவது போல சொற்கள் முன் பின்னாக ஒவ்வொரு உச்சரிப்பிலும் வெற்றிலைக் காவியோ புகைப் பழுப்போ படிந்து இருந்தது. நான் கைலாசம் அப்பாவைத் திரும்பிப் பார்ப்பதற்குள் செல்லப்பன் வீட்டுக்குள் போனான்.

இதுவரை செல்லப்பன் வீட்டிற்குள் வேலை நடக்கிற இடம் தவிர வேறு எங்கும் வந்தது கிடையாது. மாரியப்பன் அப்படியில்லை. டீ அல்லது தின்பண்டங்கள் கொடுத்த ஏனங்களை அடுப்படியில் கொண்டு வந்து வைப்பான். தண்ணீர்ப் பானை காலியாகப் போயிருந்தால் அவனே உள்ளே வந்து குழாயில் பிடித்துக் கொள்வான். செல்லப்பனுக்கு எது எது எந்த இடத்தில் இருக்கும் என்று எப்படித் தெரியும்? மாரியப்பன் முற்றிலும் இந்தக் காட்சியிலிருந்து ஒதுங்கி, எல்லாம் செல்லப்பனால் நிகழ்த்தப்படட்டும் என்று முடிவு செய்தது போல நிற்கிறான்.

அந்த ஆட்டுக் கிடா இங்கே உள்ள வெள்ளாட்டுக் கிடா போல இல்லை. அதன் செம்பழுப்பு நிறமே இந்தப் பக்கத்தில் பார்த்திருக்க முடியாது. தாடி வளர்ந்திருந்தது. உள் மடங்கிய நீளமும் வெள்ளையுமாக. கழுத்தை வெகுதூரம் பார்ப்பது போல் நிமிர்த்தியே வைத்திருந்தது. மலையிலிருந்து சரிவிற்கு இறங்குவதற்கு உடல் பாரத்தை சமன் செய்து தயாராக இருக்கும் தோற்றம். தவிர, ஒரு சிரிப்பை முகவாயில் வைத்திருந்தது என்றும் சொல்ல வேண்டும்.

நான் ராயல் ஸ்டோர்ஸையும் முத்துலட்சுமியையும் நினைத்துக் கொண்டே அதன் அடிவயிறைப் பார்த்தேன். அதன் கனத்துத் தொங்கும் விதைப் பைகளைப் பார்ப்பதில் இந்த வயதில் என்ன கூச்சம் இருக்கப் போகிறது எனக்கு? முத்துலட்சுமி இப்போது எங்கே எதைப் பார்த்துக் கொண்டு இருப்பாள்?

கைலாசத்துக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அவனை விட ஒன்றிரண்டு சின்னவனாகத்தான் இருக்கும் இந்தப் பையனுக்கு. தலைமுடி முழுக்க செம்பட்டையாகவும் கண் ரெப்பை முடிகள் முதற்கொண்டு அதே நிறத்தில் இருந்ததும் அவன் இதுவரை ஒன்றும் பேசாததும் காரணமாக இருக்கும். கைலாசம் அப்பா அவனைத் தன் பக்கம் வரச் சொல்லிக் கூப்பிட்டார். ‘வரமாட்டேங்கான் பா’ என்று கைலாசம் அப்பாவிடம் சொன்னான். ‘அதெல்லாம் இப்போ வந்திருவான் பாரு’ என்று சொன்னார். ‘நீ கூப்பிடு உடனே வந்திருவான்’ என்றார்.

குனிந்து செம்பட்டை முடிப் பையனை அவனுடைய அப்பா கைகளில் எடுத்துக் கொண்டு வேற்று பாஷையில் ஏதோ சொல்ல ஆரம்பித்தார். மகனுடைய நெற்றியில் முட்டி மூக்கை நிமிண்டி விட்டார். கைலாசத்தின் அப்பாவைப் பார்த்து கும்பிடச் சொன்னார். கைலாசத்தை அறிமுகம் செய்வது போல், ’அவன் உன் சகோதரன்’ என்று சொல்லியிருக்க வேண்டும். அவர் நெருங்கி வருவதைப் பார்த்து மாரியப்பன் அவரைக் கும்பிட்டான். பின்னால் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் எங்கோ இருந்து பதற்றமாக சத்தம் கொடுப்பது முட்டையிட்ட பறவையாகவே இருக்கும். விடாமல் சிறகுகளையும் சத்தத்தையும் உதறுவது தெரிந்தது.

வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குடத்தையும் ஒரு வாளி நிறையத் தண்ணீரையும் செல்லப்பன் கொண்டுவந்து வாசலில் வைத்தான். ‘தண்ணி குடிங்க’ என்று சைகை காட்டியும் சொல்லவும் செய்தான். அவர் குடத்துத் தண்ணீரை உள்ளங்கைக் குழிவில் வாங்கி, தன்னுடைய உச்சியிலும் மகனுடைய உச்சியிலும் தெளித்தார். செல்லப்பன் மேல் தெறித்திருக்க வேண்டும். புட்டார்த்தி அம்மன் கோவில் பூசாரி ‘தண்ணி எறியும்’ போது அப்படித்தான் சுளீர் என்று இருக்கும். அவன் உடம்பைத் தெறிப்பில் இருந்து பின்னுக்கு இழுத்துச் சிரித்தான்.

மீண்டும் மீண்டும் தன் கண்களையும் அவனுடைய கண்களையும் தண்ணீரால் அப்புவது போல பொத்திவிட்டார். செல்லப்பன் பிளாஸ்டிக் கோப்பையில் தண்ணீரை அவரிடம் நீட்டிக்கொண்டு நின்றான். அவர் உள்ளங்கைக் குழிவில் தண்ணீரைச் சரித்து மகனுக்குப் புகட்டினார். ஒரு முறை சிரித்தார். ‘ரொம்ப நேரமாகக் கையில் எனக்காக வைத்திருக்கிறீர்கள், நன்றி’ – அவர் சொல்வதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். பனிக்கட்டியால் செய்த ஒரு கூர்வாளை விழுங்குவது போல் முகம் உயர்த்தி வாயைப் பிளந்திருந்தவர், முழுக் கோப்பைத் தண்ணீரையும் அருந்தி முடித்தார். ‘அமிர்தம்’ என்று சொல்லி மறுபடியும் ஈர விரல்களை மகன் கண்களில் புதைத்தார்.

மரத்தடியில் இருந்தவளுக்குப் பசியாக இருக்க வேண்டும். நான் போகும் போது காய்ந்த சப்பாத்திகளை அவள் பிய்த்துத் தின்பதற்குத் துவங்கியிருந்தாள். வெங்காயம் கூட இல்லாத வெறும் கருகிய துண்டுகள். மடியில் வைத்திருந்த நான்கைந்து வாதாம் பழங்களில் ஒன்றைக் கடிக்கும் போது நான் பக்கத்தில் போனேன். கடித்த சதைப் பற்றைக் கைக்குழிவுக்கு அவசரமாக மாற்றியபடி சிரித்தாள். அவளுக்குத் தண்ணீர் தேவையாக இருந்தது. செம்புக்காக அடுத்த கையை நீட்டியதில் தெரிந்தது.

கைலாசத்தை அவனுடைய அப்பா தூக்கிக் கொண்டார். ‘தம்பிக்குக் கை கொடு’ என்று அவரே கை கொடுக்கப் போவது போல கைலாசத்தின் கையைப் பிடித்து முன்னால் நீட்டினார். கீழே நின்ற மகனை அவரும் கையில் எடுத்துக் கொண்டு, அவனுக்குப் புரிகிற வகையில் கைலாசத்திற்குக் கை கொடுக்கச் சொல்வது போல இரண்டு அடி நெருக்கத்துக்கு வந்தார். பையன்கள் கொடுத்தார்களோ இல்லையோ அப்பாக்கள் இரண்டு பேரும் அப்படிச் சிரித்தார்கள். கைலாசம் எடுத்த எடுப்பில், ‘குருவி முட்டை போட்டிருக்கு அங்கே. நாலு முட்டை’ என்று வாசலில் தொங்கிக்கொண்டு இருந்த தபால் பெட்டியைக் காட்டினான்.

செம்பட்டை முடிக்காரனுக்கு எப்படிப் புரியும்? அவனுடைய அப்பாவுக்கு ஒரே சந்தோஷம். ‘அப்படியா நாலு முட்டையா?’ என்று கைலாசத்திடம் நான்கு விரல்களை அகட்டிக் காட்டினார். அதை உடனே மகனுக்கு மொழிபெயர்த்துச் சொல்வது போல, அதே நான்கு விரல் விரிப்புடன் இரகசியம் போலச் சொன்னார். இப்போதும் முத்தம் கொடுத்தார். அவருடைய நீள மூக்கு நுனி மடங்கி கன்னத்தில் புரண்டது. எதையோ உறிஞ்சிய வாக்கில் பேசுகிற சத்தம் அந்த அமுங்கிய குரலுக்கு.

மாரியப்பனால் திறந்து பார்க்காதீர்கள் என்று அவரிடம் தடுத்துச் சொல்ல முடியவில்லை. அவர்  தபால் பெட்டியை நிதானமாகத் திறந்து அந்தப் பையனிடம் தங்க சவரன்களைக் காட்டுகிற பரவசத்துடன் காட்டினார். அந்தப் பையன் விரலை நீட்டித் தொட்டுவிடுவானோ என்று மாரியப்பனுக்கு இருந்தது. பதறிப் பதறி அந்தப் பறவை போடும் சத்தம் அவர்களுக்குக் காதிலேயே விழவில்லையா? அதில் கைலாசத்தை வேறு சாய்த்த வாக்கில் தூக்கி எட்டிப் பார்க்கவைத்து. ‘எத்தனை முட்டை இருக்கு? ஒன், டூ, த்ரீ, ஃபோர்’ என்று அவனுடைய அப்பா எண்ணிக் காட்டுவார் என்று மாரியப்பன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாது..

செல்லப்பனும் சரசுவும் இதைக் கவனிக்கவில்லை. பூவரசு மரத்துப் பக்கமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். சரசுவுக்கு அம்மாவிடம் போக வேண்டும் என்று அப்போதே தோன்றிவிட்டது. அந்தப் பெண்ணின் கனத்த, திறந்து கிடந்த வயிறு பக்கத்தில் போய்ப் பார்த்தால் எப்படி இருக்கும்? சரசுவின் அம்மா அந்தப் பெண்ணுடைய கையை எடுத்துத் தன் மடியில் வைத்திருந்தது செல்லப்பனுக்குப் பிடித்திருந்தது. ‘அம்மாகிட்டே போவுமா?’ என்று அவன் சரசுவிடம் கேட்டான்.

’என்ன குருவின்னு தெரியலை. அனேகமா நேத்துதான் முட்டை போட்டிருக்கும்’ என்று கைலாசத்தை இறக்கிவிட்டுக்கொண்டே எதிரே இருப்பவரிடம் சொல்லும் போது, மாரியப்பன் குறுக்கிட்டான். ‘அப்பதையே புடிச்சு விடாமல் கீச் கீச்சுன்னு பக்கத்தில எங்கையோ இருந்து சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு சார் பாவம். நாம இருக்கதால இங்கே வரமாட்டேங்கு’.

மாரியப்பன் இதைச் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, உதட்டின் மீது விரலை வைத்து எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, பதற்றமான அந்தப் பறவைச் சத்தத்தை உற்றுக் கேட்கச் சொல்லி, செம்பட்டை முடிச் சுருளின் பக்கம் குனிந்து காதில் உபதேசிப்பது போல மகனிடம் ஏதோ சொன்னார் வந்தவர். முன்னிலும் அடர்த்தியாகிவிட்ட அமைதியில் அந்தப் பையன் அந்தச் சத்தத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான். ஒரு நெளிவு நெளிவான அலை போல அந்தப் பறவைச் சத்தம் அவனுக்குள் இறங்கிக்கொண்டிருப்பது போல பையனின் முகம் இருந்தது. வெளியே கேட்காமல் அதே ஏற்ற இறக்கத்துடன் உச்சரிப்பது போல அவனுடைய உதடுகள் சொல்லிப் பார்த்துக் கொண்டன.

இவ்வளவையும் ஒன்று விடாமல் கவனித்து குறிப்பெடுப்பது போல, வாளியில் இருக்கிற தண்ணீரைக் குடித்த தலையை நிமிர்த்தி ஆட்டுக் கிடா பார்த்துக் கொண்டிருந்தது. இறுக்கமும் மினுமினுப்பும் நிறைந்த புழுக்கைகள் தரையில் சிதறலாக.

‘கொஞ்சம் பொறுங்கள்’ என்று பேச்சில் சொல்வதை, ‘நாம் கொஞ்சம் பொறுத்திருப்போம்’ என்று சொல்கிறதான வாக்கிய அமைப்பில் கைலாசம் அப்பாவிடம் அவர் சொன்னார். அவரிடமிருந்து உடம்போடு உடம்பாக வழுகி, இறங்கியவனின் நனைந்த சட்டையை அவர் கழற்றினார். கருப்புக் கயிறில் கிடந்த தாயத்துடன் அவன் அம்மாவைப் பார்க்க எதையோ சற்று உரக்கச் சொல்லிக் கொண்டு ஓடினான்.

‘தாய்ப்பால் ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு’ என்று சிரித்தார். ‘இன்னும் அவனுக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது. வெள்ளாட்டுக் குட்டி போல மடியை முட்டிவிட்டு வருவான்’ என்று சிரித்தார்.  அவன் ஓடி வருகிற தினுசே அவனுடைய அம்மைக்குத் தெரியும் போல. சரசு இருக்கிறாள். நான் இருக்கிறேன். செல்லப்பன் ஓரமாக நிற்கிறான். ‘வா, வா, வா’ என்பது போல கைகளை அகல விரித்து, வேகத்தை மட்டுப்படுத்தி, அவனை இழுத்து மடியில் வைத்துக் கொள்கிறாள். இரவிக்கையை ஒதுக்கி வலது மார்பை அவனுக்கு ஊட்ட ஆரம்பிக்கிறாள். அவன் வலது கை அவளுடைய கழுத்துப் பாசியைப் பிடித்து உருட்டுகிறது. அவள் அவனுடைய செம்பட்டை உச்சி முடியைத் துளாவிக் கொடுக்கிறாள். ஐந்து நிமிடம் இருக்காது. எழுந்து ஓடுகிறான். அது ஓட்டம் இல்லை. ஒரு துள்ளல். தொடைச் சதையைக் கவ்விய சல்லடத்தின் மணிகள் குலுங்க சாமியாடி ஓடுவது போல இருந்தது.

சாய்ந்திருந்த பொட்டலத்தில் கை ஊன்றி எழுந்திருக்கப் போனவளின் கையைப் பிடித்து நான் தூக்கிவிட்ட சமயம் இலேசாக என்னிடம் ஒரு முக்காரம் உண்டாயிற்று. அவளுடைய நெஞ்சு, இரவிக்கையின் வியர்வை ஈரத்தோடு என் விரல்களில் படத்தானே செய்யும்? நானும் படவேண்டும் என விரும்பியிருந்தேன். அவள் ஒருவிதமான மடங்கலில் இருந்து தன்னை அவிழ்ப்பது போல எழுந்திருப்பதை சரசு பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘குட்டிப் பாப்பா இருக்கு’ என்று நான் சரசுவின் கையைப் பிடித்து அந்த வயிற்றில் வைத்தேன். சரசு சிரிப்பதைப் பார்த்து தொலி உரிந்திருந்த உதடுகளுடன் அவளும் சிரித்தாள். செல்லப்பன் எங்கள் மூன்று பேரையும் இதுவரை பார்த்துக்கொண்டிருந்தவன் எங்களோடு நடக்க ஆரம்பித்தான். பூவரச மரத்தடியில் இதுவரை அந்தப் பெண் உட்கார்ந்திருந்த பொட்டலம், நாங்கள் இவ்வளவு தூரம் வந்தபின் ஒருபக்கமாகச் சரிகிறது எப்படி?

பின்பக்கம் இருந்து நாங்கள் பார்க்கும் போது செம்பட்டை முடிதான் பாம்பைப் போல அவன் முதுகில் கிடந்தது. ஒரு புல்லாங்குழல் வாசிப்பது போன்ற துண்டு துண்டான சத்தம் அவனிடமிருந்து வந்துகொண்டு இருந்தது. கைலாசம் அப்பா, கைலாசம், மாரியப்பன் மூன்று பேரும் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவன் கால் பக்கத்தில் நகர்ந்து போய்க் கொண்டிருந்த சிவந்த வாதாம் இலையைக் குனிந்து எடுத்த கையோடு ஒரு சிறிய தூரத்தில் நிற்கிற கணவர் பக்கம் போய் அந்தப் பெண் நின்றுகொண்டாள். அவளுடைய உச்சிச் சிகையைத் தட்டிக் கொடுத்து அவளுடைய தலையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டதைப் பார்த்து, நானும் அனிச்சையாக காற்றில் தலையைச் சாய்த்துக்கொண்டேன். கைலாசம் அப்பா எனக்கு இடம் கொடுப்பது போல நகர்ந்து நின்றார்.

தபால் பெட்டி இருக்கிற திசையையோ, அதற்குள் பிசுபிசுப்போடு இருக்கிற நான்கு முட்டைகளையோ அல்லது எதிரே இருக்கிற வெட்ட வெளியையோ பார்ப்பது போல அவன் முகம் உயர்ந்திருந்தது. சிறிய சிறிய இடைவெளிகளோடு அவன் புல்லாங்குழலை விசில் போல அடித்துக் கொண்டே இருந்தான்.

‘இப்போது பறவைகள் வந்து விடும்’ என்று சொன்னபடியே மகனின் பக்கத்தில் கால் மடக்கி உட்கார்ந்து அவனுடைய இடுப்பை அணைத்த வாக்கில் ஏதோ சொன்னார். கைலாசம் அப்பாவை அங்கிருந்தே பார்த்து, ‘எனக்கு மூன்று பறவைகளின் உத்தேசம் உண்டு’ என்றார். முட்டை இட்டது அவற்றில் ஒன்றாக இருக்கும் என்பதை அவர் அப்படிச் சொன்னார்.

முதலில் இட்டுக்கொண்டு இருந்த சத்தத்தை மாற்றி, உதட்டை வேறு விதமாகக் குவித்து அவன் விசில் அடிக்கையில் அந்த இடம் பூராவும் மைனாக்களின் சத்தம் நிரம்பியிருந்தது. இது ஒரு அதிகாலை போலவும், வேப்ப மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒன்றிரண்டாக மைனாக்கள் அசைந்து அசைந்து நடப்பது போலவும் இருந்தது. வேப்பம் பழத்தின் மஞ்சள் பழுப்புத் தோல் நசுங்கி, பாதி பிதுக்கப்பட்டு ஒரு வேப்ப முத்து எட்டிப் பார்த்தது மனதுக்குள்.

அவன் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். வாசல் கதவில் தொங்கிய தபால் பெட்டியைப் அவ்வப்போது பார்த்தான். அமைதியாக இருந்தான். மாரியப்பனுக்கு, தான் தபால் பெட்டி இருக்கிற திசையை மறைக்கிறோமோ என்று தோன்றியிருக்கும் போல. தள்ளி நின்றுகொண்டான்.

நீண்ட சுவாசமாகக் காற்றை உள்ளே இழுத்ததில் அவன் வயிறு எக்கியது. அவன் இப்போது தவிட்டுக் குருவிகளின் குரலை எழுப்பினான். தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் குருவி விற்பவன் பொருட்காட்சியில் உண்டாக்குகிற நீர்மை நிரம்பிய சத்தம் போல அவனுடைய உதடுகளில் இருந்து தவிட்டுக் குருவிகள் கீச்சிட்டபடி இருந்தன. எனக்கு எங்கள் பழைய வாடகை வீட்டு முன்னால் இருந்த நந்தியா வட்டைச் செடியும் காம்பவுண்ட் சுவர் மீது தத்தித் தத்திப் போகும் தவிட்டுக் குருவிகளும் இங்கே வந்துவிட்டது போல் இருந்தது. அதில் ஒரு குருவி அடி வயிறு அதன் கால்களில் இறங்குவது போல பெருத்திருக்கும். ‘என்ன குண்டம்மா, சாப்பாட்டைக் குறைச்சுச் சாப்பிடு’ என்று அதனிடம் நான் பேசுவது உண்டு. எதிரே நிற்கிறவள் குண்டு எல்லாம் இல்லை. ஆனால் அந்தச் சூலி வயிறு அப்படித்தான் இருக்கிறது. ஈயக் காப்புகளுடைய கையை வயிறு முடிகிற இடத்தில் நாபிக்குக் கீழ் வைத்தபடி அவள் நிற்கிறாள்.

காற்றை அந்தச் சிறுவனால் பார்க்க முடிவது போல அவனுடைய கண்கள் அகன்று இருந்தன. செம்பட்டையான கண் ரெப்பை மயிர்கள் தங்கள் வளைவை விரைப்பாக்கி மினுமினுத்தன. இளம் தளிரிலை போன்ற நாக்கைத் தட்டையாக வெளியே நீட்டி இரண்டாக மடித்தவாக்கில் உள்ளே சுருட்டுவது போல இருந்தது. உதடுகளில் சாறில் நனைந்தது போல ஒரு ஈரம். சிரிக்கிறானா, சிரிக்கப் போகிறானா?

முதன் முறையாக அந்த ஆட்டுக் கிடா சத்தம் கொடுக்க ஆரம்பித்தது. ஒரு மலை உச்சியில் நின்று தாபத்தில் கத்துவது போல் அது போட்ட சத்தம் அடுக்கடுக்காக அதனிடமே திரும்பி வந்தன. பால் காய்ச்சுவதற்கு முன் ஒரு தடவை கட்டுமானம் முடிந்த வீட்டில் நின்றுகொண்டு சத்தம் கொடுத்து அது எதிரொலிப்பதைக் கேட்டிருக்கிறேன். பழகிப் புழங்கின வீட்டில் ஏன் அந்த எதிரொலி ஒருபோதும் மறுபடி கேட்பதில்லை? ஆட்டுக்கிடாவின் குழறலான சத்தத்தோடு வீச்சமும் இப்போது நாலா பக்கத்திலும். பீறிட்டுச் சிவந்து கொண்டிருந்த அதனுடைய அந்தக் கோலத்தை சரசு பார்த்துவிட வேண்டாம் என நினைத்தேன். பார்த்துக்கொண்டு இருந்தாள்.

மிகத் தணிவாகவும் துல்லியமாகவும் அந்த உதடுகளில் இருந்து வந்த முதல் சத்தத்திலேயே  மாயத்திலிருந்து தன்னை உருவிக்கொண்டு பறந்து வந்தது போல இரண்டு மாம்பழக் குருவிகள் அவனுடைய தலைக்கு மேல் வட்டமிட்டன. ஒரு சிறு கிளையை அமரத் தருவது போல, கீச் கீச் என்ற அந்தச் சிறு சத்தத்தை நிறுத்தாமல், அவனுடைய இடது கையை நீட்டியதும் அந்த இரண்டு மாம்பழக் குருவிகளும் அவனுடைய முழங்கையில் அமர்ந்தன. வெளிப்புறமாக உட்கார்ந்த உடலை அவன் முகத்தைப் பார்க்கத் திருப்பி, அவனுடன் பேசுவது போல, அலகு திறந்து அவை கூப்பிட ஆரம்பித்தன. அவன் வலது கையை உயர்த்தியதும் கிளை மாறுவது போல, வலக்கையில் வந்து உட்கார்ந்து சிறகை உதறி சந்தோஷம் காட்டின.

ஒரு வளையத்தில் நடப்பது போல, இரண்டு மாம்பழக் குருவிகளும் அமர்ந்திருக்கிற வலது கையை உயர்த்தியபடி, தடையற்ற பறவை ஒலியுடன் அவன் வட்டமாக நடந்துகொண்டே போய், துவங்கிய இடத்தில் வந்ததும், பத்து முப்பது மாம்பழக் குருவிகள் அவன் வளையமாக வந்த இடத்திற்கு நேர் மேலே வானத்தில் பறப்பதும், தாழ இறங்குவதும், மேலே மறுபடி எவ்வுவதுமாகக் கலைந்து கலைந்து ஒன்றின. எதுவும் எதனோடும் மோதிக் கொள்ளாமல், ஒன்றின் சிறகு நுனியை இன்னொன்றுடன் கோர்த்தது போல வெவ்வேறு விதமான சித்திரங்களில் தங்களை விசிறிக் கொள்வதையும் அள்ளிக் கொள்வதையும் என் அடிவயிற்றில் உணர்ந்தேன். சரசு எப்போது என் பக்கத்தில் வந்து நின்றாள் என்பதே எனக்குத் தெரியவில்லை. சரசு மட்டும் அல்ல. யார் பக்கத்தில் யார் இருக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

வெயில் மங்கி நிலம் தெளிவது போல, அவன் மெதுவாகத் தன் ஒலியைத் தணித்துக்கொண்டே வந்து, தன் உதடுகளில் ஒரு சிரிப்பை மட்டும் வைத்த போது எல்லாக் குருவிகளும் பறந்து போக, ஒரு மாம்பழக் குருவி அவன் செம்பட்டைத் தலையிலும் இன்னொன்று அவன் தோளிலும் அமர்ந்திருந்தன. அதற்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது போல, அவை இரண்டும் தபால் பெட்டியின் மேல் பறந்து போய் உட்கார்ந்தன. ஒன்று வெளியே காவல் இருக்க இன்னொன்று தபால் பெட்டியின் வாய்வழியாக உள்ளே போய் முட்டை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியே வந்தது. அது உட்கார்ந்து நான்கு திசையையும் அவதானிக்க, அடுத்த குருவி உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்தது.

இதுவரை தபால் பெட்டிப் பக்கமே பார்த்துக்கொண்டு நின்ற சிறுவன் கைகளை விரித்தபடியே ஓடி அவனுடைய அம்மையைக் கால் பக்கமாகக் கட்டிக்கொண்டான். அவனுடைய அப்பா கைலாசத்தின் அப்பா பக்கம் கும்பிட்டுக் கொண்டே வந்தார். இரண்டு பேரும் முதலில் கும்பிட்டார்கள். அது போதாது என்பது போல அப்படியே தழுவிக்கொண்டார்கள்.

‘நல்லது. எங்கள் திசைக்கு நாங்கள் புறப்படுகிறோம்’ என்று அவர் சிரித்தார். வெற்றிலைக் காவியும் புகைப்பழுப்பும் உள்ள சிரிப்புதான் உலகத்திலேயே அழகான சிரிப்பு என்று எனக்குத் தோன்றியது. நான் போய் அந்தப் பெண்ணிடம் ’சமைக்கிறேன், சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று சாப்பிட்டுக் காட்டிக் கேட்டேன். செம்பட்டை முடியை அளைந்து கொடுத்து, அவனுக்கு ஏதாவது தின்பண்டம் தரட்டுமா என்ற சைகைக்கும் வேண்டாம் என்று சொல்கிற சிரிப்புதான் பதில்.

‘ஏதாவது பணம் கொடுத்து அனுப்புங்க சார். வாங்கிக்கிடுவாங்க’ சரசு அப்பாவைத் தனியாகக் கூப்பிட்டு ஓரமாகப் போய் மாரியப்பன் சொன்னான். ‘துணிமணி கூடக் கொடுக்கலாம் மா’ என்று என்னிடம் சொன்னான். இதைச் செல்லப்பன் கவனித்திருப்பான் போல. வேகமாக மாரியப்பனிடம் சண்டைக்குப் போவது போல் போய்ச் சொன்னான். ‘விளையாடுதயா? அவங்களை யாருன்னு நினைச்சுட்டே?’ என்றான். ‘இவ்வளவு நேரம் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தானே இருந்தே? அப்புறம் என்ன துட்டைக் கொடுங்க, துணியைக் கொடுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்க? உனக்கு என்ன கிறுக்கா?’ என்று கோபப்பட்டான். ‘முப்பது நாப்பது குருவி எப்படி அந்தப் பையன் தலைக்கு மேல சுத்திச் சுத்தி வட்டம் போட்டுது. பார்த்தே இல்ல?‘ – செல்லப்பன் அப்படிச் சொல்லும் போது எனக்கு மறுபடியும் அந்த இடத்தில் எல்லாம் பறக்கிறது போல இருந்தது.

அவர்கள் புறப்படுவதற்கு ஆயத்தமாகி விட்டது போல இருந்தது. பூவரச மரத்துப் பக்கத்தில் இருந்து இரண்டு பொட்டலங்களையும் எடுத்து வாசல் பக்கம் வைத்திருந்தார்கள். வரிசையில் வருவது போல ஆட்டுக் கிடாவும் தாய் ஆடும் குட்டிகளும் நின்றன. ’பக்கத்தில் ஒரு மரம் நிற்கிறது. இன்னும் கொஞ்சம் வாதாம் தழை பறித்து வருகிறேன்’ என்று செல்லப்பன் சைக்கிளை ஸ்டாண்டில் இருந்து விடுவித்தான். அதற்கும் அவரிடமிருந்து ஒரு சிரிப்புதான். ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ‘போதும்’ என்று அந்தச் சிரிப்பு சொன்னது.

மடியில் வைத்திருந்த வாதாம் பழங்களை எடுத்தவள் சரசுவும் கைலாசமும் நிற்கிற இடத்தைக் காட்டி, ‘அவர்களுக்குக் கொடுத்துவிட்டு வா’ என்று சொன்னதும் இரண்டு கைகளிலும் வாங்கிக் கொண்டு செம்பட்டை ரெப்பை முடிக்குக் கீழ் கண்கள் அகல அவன் வந்தான். கைகளில் நான்கைந்து வாதாம் பழங்கள். இப்போது அவனுடைய அப்பா, வாதாம் இலையைக் கட்டி முடித்து, குதிங்காலில் உட்கார்ந்த வாக்கில் சொல்கிறார். ‘மகனே. மரியாதை செய். கொடுக்காதே. உன் கைகள் அவர்கள் முன் நீண்டு இருக்கட்டும். அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.’

சரசு என்னை ஏறிட்டுப் பார்க்கிறாள். நான் எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன். கைலாசம் ஏற்கனவே இரண்டை எடுத்துக்கொண்டு இருந்தான். நான் ஒன்றை எடுத்துக் கொண்டேன். மாரியப்பன் பக்கம் கை நீண்டிருந்தது. ’எடுத்துக்க மாரி’ என்று செல்லப்பன் சத்தம் கொடுத்தான்.

மண்ணில் சாயாமல் அணைவாக வைத்திருந்த சுரைக்குடுக்கைக்குப் பக்கத்தில் நின்ற அவர் என்னைப் பார்த்துக் கும்பிட்டார். ‘அம்மணி. உங்கள் கையால் தண்ணீரும் உப்பும் கொண்டு வருகிறீர்களா?’ என்றார். ‘ஏற்கனவே பிடித்து வைத்தது அல்ல. புதிதாகக் குழாயில் நேரடியாகப் பீச்சியது. உலோகச் செம்பில் பிடித்து வாருங்கள்.’

நான் சரி என்று தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டேன்.

‘அப்புறம் இரண்டு கை கொள்ளும் அளவு உப்பை அள்ளி எடுத்து வாருங்கள். மாவு உப்பு அல்ல. கல் உப்பு’ என்று கேட்டுக்கொண்டார். தானியத்தை அள்ளுவது போல அவர் கைகளால் அள்ளிக் காட்டினார்.

நான் உள்ளே போகும் போதும் என்னுடனே சரசுவும் கைலாசமும் கூடவே வந்தார்கள்.  வரும் போது சரசு கையில் தண்ணீர்க் குடம் இருந்தது. சின்னக் குடம் தான். அவள் அதை இடுப்பில் வைத்துக் கொண்டு வர வேண்டும் என நான் விரும்பினேன். அவன் அழக் கூடாது அல்லவா? சமாதானமாக கைலாசம் கையிலும் ஒரு தண்ணீர்ச் செம்பைக் கொடுத்திருந்தேன். வருகிற வழியெல்லாம் அவன் சிந்திக்கொண்டே வந்தான்.  நான் ஒரு சுளகில் உப்பைக் கொண்டு வந்திருந்தேன்.

இடுப்பில் இருந்தே இரண்டு கைகளையும் ஒன்றாக ஒடுக்கி, முதலில் அவர் சரசுவிடம் இருந்து தண்ணீர்க் குடத்தை வாங்கிக் கீழே அந்த சுரைக் குடுக்கைப் பக்கம் வைத்தார். சுளகோடு உப்பை வாங்கி அதன் முன்னால் வைத்தார். சுரைக் குடுக்கையைக் கும்பிட்டபின் அதைச் சரித்தார். ஒற்றை அட்சரத்தில் ஏதோ சொன்னார். சுரைக் குடுக்கைக்குள் இருந்து நகர்ந்து தலை நீட்டி வெளியே வருவது என்ன என்று எங்களால் நிதானிக்க முடியவில்லை.

எண்ணெய் தேய்க்கப்பட்டது போல், பாக்கு நிறத்தில் மிகக் குறைந்த அசைவுடன் வெளிவந்த இருதலை மணியனை அவர் கைகளில் எடுத்துத் தரையில் இட்டார். உடைந்த வளையல் துண்டு போல, ஒரே ஒரு சிறு  வளைவுடன், ஆனால் அந்த இடத்தைப் பிரகாசம் ஆக்குவது போல் இருந்த அதன் மேல் செம்புத் தண்ணீரை ஊற்றினார். அதன் முந்திய பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கு நகர்வதற்கும் இடையிலான அசையாமையில் அப்படியே இருந்தது. கல் உப்பு இருந்த சுளகை அதன் முன் நகர்த்தி வைத்துக் கும்பிட்டார். எல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள். தரையில் வாடின துண்டுச் சரம் போல இருந்த அதை எடுத்து மறுபடியும் சுரைக் குடுக்கைக்குள் இட்டார். தொட்டுக் கண்ணில் ஒற்றிய பின், சுளகில் இருந்த உப்பு முழுவதையும் ஒரு கனத்த துணிப்பையில் தட்டி முடிந்துகொண்டார்.

சுரைக் குடுக்கையை முதலில் தோளில் மாட்டினார். பையனை முன்பு போல முன்னும் பின்னும் கால் தொங்கத் தோளில் ஏற்றிவைத்தார். செல்லப்பன் அந்த வாதாம் தழைக்கட்டை, இறக்கியது போலவே, அவர் தலையில் ஏற்றிவைத்தான். எல்லோரையும் தலைக்கு மேல் கையை உயர்த்திக் கும்பிட்டார். முன்னால் ஆட்டுக்கிடா நகர ஆரம்பித்திருந்தது. அடுத்து இவர். துணிப் பொட்டலங்களும் கனத்த வயிறும் ஈயக்காப்புகளுமாக நடக்கிறவளுக்குப் பின்னால் ஆடும் குட்டிகளும்.

’கொஞ்ச தூரம் வரைக்கும் போய் அவங்களை அனுப்பிவிட்டு வாரேன்’ என்று சைக்கிளை மிதித்துக்கொண்டு செல்லப்பன் போனான்.

எங்களுக்கும் கொஞ்ச தூரமாவது நடக்க வேண்டும் போல இருந்தது. அப்பா கையை சரசு பிடித்திருந்தாள். நடந்து சென்றபடியே எனக்கு அவர் தோள் மேல் சாய்ந்துகொள்ள வேண்டும் போல இருந்தது.

‘நீ வரலையா?’ என்று பின்னால் திரும்பி கைலாசத்தைக் கேட்டேன்.

’நான் மாமா கூட வாதங்கொட்டை சாப்பிடப் போறேன்’ என்று மாரியப்பனைக் காட்டினான். அவன் கையில் இரண்டு வாதம் பழங்கள் இருந்தன. மாரியப்பன் ஏற்கனவே ஒரு கருங்கல்லை எடுத்து நடையில் குனிந்து உட்கார்ந்து வாதாங்கொட்டையை உடைக்க ஆரம்பித்திருந்தான். ’நான் தம்பியைப் பார்த்துக்கிடுதேம்மா. நீங்க போயிட்டு வாங்க’ என்று சொல்வது சதைப் பற்றிலிருந்து கருநீலமாகத் தெறித்தது.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக நான்கு மாம்பழக் குருவிகள் தபால் பெட்டிக்குள் இருந்து பறந்து போவதை யாருமே கவனிக்கவில்லை.