தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்

0 comment

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது.

*

சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே அவருடைய கதைகளைத் தொடர்ந்து வாசிக்கச் செய்தது.

நவீன தொழில்நுட்ப வசதிகளினாலும் இணைய இதழ்களாலும் சிறுகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. ஒவ்வொரு மாதமும் இணைய இதழ்களின் வழியாக நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கதைகளின் எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது. எல்லாக் கதைகளையும் படிக்க வாய்க்காமல் போகிறது என்பதைவிட நல்ல கதையைத் தவறவிடுகிற வாய்ப்பு அதிகம் என்ற எண்ணமே அதிகமும் சோர்வைத் தருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு சிறுகதையாளராக தன்னை அடையாளப்படுத்துவதும் பிறகு அதைத் தக்கவைப்பதும் பெரும் சவால். பிற சிறுகதை ஆசிரியர்களுக்கு இல்லாத, ‘யுவ புரஷ்கார்’ எனும் இன்னொரு கூடுதல் சுமையின் அழுத்தத்தையும் சமாளிக்கும் பொறுப்பு சுனில் கிருஷ்ணனுக்கு உண்டு.

இதுவரையிலும் அவர் எழுதியுள்ள கதைகள், குறுங்கதைகளை வைத்து அவரை எந்த வகைமைக்குள்ளும் வரையறுத்து நிறுத்த முடியாது. எல்லாவிதமான கதைகளையும் அவர் எழுதிப் பார்க்கிறார். வடிவம் சார்ந்த மொழி சார்ந்த உத்திகளையும் கொண்டு புதிய பாணியில் கதைகளைச் சொல்ல அவர் தயங்குவதில்லை. இவ்வாறு அவர் எடுத்துக்கொண்டுள்ள சுதந்திரம் அவருக்கு தன்னிச்சையான வாய்ப்புகளை சாத்தியப்படுத்துகிறது. அந்த வாய்ப்புகளைக் கொண்டு அவர் தன் புனைவுத் தளத்தை குறிப்பிட்ட வகைமைக்குள் நிறுத்திவிடாதபடி விரிவுபடுத்தியபடியே இருக்கிறார், அதில் சில அபாயங்கள் இருந்தபோதும்.

சுனில் கிருஷ்ணன் அடிப்படையில் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நோய்மைக்கான ஊற்றை அறிந்து அதனை நீக்குவதற்கான மருத்துவமுறைகளைக் குறித்த நேரடி அனுபவங்களை அவர் கதைகளாக ஆக்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய நோய்களை, நோயாளிகளின் போக்குகளை, அவர்களது உறவினர்களின் மனச்சாயல்களை அறிந்துகொள்ள முடிகிற அவரால் அவற்றைக் கதையாக்கவும் முடியும். ‘வாசுதேவன்’, ‘அம்புப் படுக்கை’, ‘இந்திர மதம்’ போன்ற கதைகள் இத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தபோதும் இந்த மூன்றிலும் அவர் மனத்தின் வெவ்வேறு திரிபுகளையே மையப்படுத்தியிருக்கிறார்.

பெற்ற மகனேயானாலும் நோய்ப்படுக்கையில் கிடப்பவனை எதுவரையிலும் பராமரிக்க முடியும் என்ற கேள்விக்கு உணர்ச்சியின் பலத்தில் பதிலளிப்பது சிரமம். ஆனால், அறிவின் பலத்துடன் அணுகும் போது வேறு சாத்தியங்கள் தென்படும். பெரிய கோடாக நினைத்திருக்கும் போது அதனருகில் விழும் கோடு அதனையும்விட பெரிதாக அமைந்துவிட்டால் முதல்கோடு சிறிதாகி விடும் யதார்த்தத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் ‘வாசுதேவன்’ கதையில் தொழிற்படும் அதே மனம் வேறுவிதமான திசையில் திரும்பும் சாத்தியத்தை ‘அம்புப் படுக்கை’ சுட்டுகிறது. மரணத்தின் மேல் மனிதன் கொண்டிருக்கும் அச்சமும் வாழ்வின் மீதான தீராப் பற்றும் அனைவரையும் இறுதிக் காலத்தில் அம்புப் படுக்கையில்தான் கிடத்துகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் மாறாக உண்டதைச் செரிக்காமல் புதியதை எடுக்காமல் சுருண்டிருக்கும் அட்டையின் நோய்மையைக் காட்டுகிறது, ‘இந்திர மதம்’.

அறுதியிட்டு வகுக்க முடியாத மனத்தின் புதிர்வழிகளை ஆயுர்வேதத்தின் பின்னணியிலிருந்து விலக்கி கிராமங்களின் மரபான சடங்குகள், குல வரலாறுகள் ஆகியவற்றின் பின்புலத்தில் புனைவாக மாற்றும்போது அவை ‘குருதிச் சோறு’, ‘சிதல்’ போன்ற கதைகளாக உருமாற்றம் கொள்கின்றன. கிராமந்தோறும் உள்ள குலசாமிகள் குறித்த கதைகள் இயற்கைக்கும் மானுட வாழ்வுக்கும் உள்ள நெருக்கமான உறவை பின்னிக் காட்டுபவை. கட்டற்ற மனத்தின் அலைவுகளை ஒருமுகப்படுத்தவும் நிலைநிறுத்தவுமான வழிமுறைகளை சடங்குகளாக முன்வைப்பவை. மனிதன் தன் வசதிக்காக இவற்றில் மேற்கொள்ளும் விலக்கங்கள் மாறுதல்கள் ஏதோவொரு விதத்தில் சிதைவுகளாக மாறி தொடர்ந்தபடியே இருப்பதைச் சொல்கின்றன இவ்விரு கதைகளும்.

அன்றாட நிகழ்வுகளால் சீண்டப்படும் அகம் தன்னை சரிகட்டிக்கொள்ள மேற்கொள்ளும் புறவயமான நாடகங்கள் அந்தரங்கமானவை. சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே அதன் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். சராசரி மனித வாழ்வின் இத்தகைய அன்றாடங்களைக் கொண்டு அகம் தன்னை வெளிப்படுத்த முனையும்போது திரண்டெழும் கதைகளாக ‘இயல்வாகை’, ‘களி’ ஆகியவை அமைந்துள்ளன.

ஆயுர்வேதம், கிராமியப் பழங்கதைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகிய மூன்று பின்னணிகளில் சுனில் கிருஷ்ணன் அறியத்தருகிற மனம் நேரடியானது. தர்க்கங்களைக் கொண்டு அளக்க முடிவது. ஆனால், அவ்வாறன்றி தன்னிச்சையாகப் புரண்டு கைகெட்டாது தனக்கான அலைந்திருக்கும் பித்துநிலையில் மனம் கொள்ளும் போக்குகளையும் ‘காளிங்க நர்த்தனம்’, ‘லித்தியம்’ ஆகிய இரண்டு கதைகளில் எழுதிக் காட்டுகிறார். துறவுமில்லாமல் முழு பித்துமல்லாமல் வாழ்வின் ஏதோவொரு அலைவில் திரியும் மனிதனை, சாதாரண கண்கொண்டு காணும் கதையாக, ‘காளிங்க நர்த்தனம்’ அமைந்திருக்க, மனைவியின் மனநிலைத் திரிபினால் நிலைதடுமாறும் கணவனின் அலைதல்களாக ‘லித்தியம்’ எழுதப்பட்டிருக்கிறது.

ஒருவிதத்தில் இதுவரையிலும் சொல்லப்பட்ட கதைகள் அனைத்தும் தமிழின் சிறுகதை மரபையொட்டியே எழுதப்பட்டவை என்று சொல்ல முடியும். இந்தக் கதைகளை வாசிக்கும்போதே இக்கதைகளுக்கான மாதிரிகளை நம் மனம் தேடி எடுத்து ஒப்பிட்டுக் கொள்ளும். உதாரணமாக, ‘வாசுதேவன்’ கதை நாஞ்சில் நாடனின் ‘சாலப் பரிந்து’ கதையையும், ‘குருதிச்சோறு’ கதை உடலிச்சையை மழையுடன் இணைத்த ‘ரிஷ்யசிருங்கனி’ன் கதையையும் சொல்லலாம்.

மரபின் தொடர்ச்சியான ஒரு கண்ணியாக அல்லாமல் சுனில் கிருஷ்ணனை ஒரு தனித்துவமான கதைசொல்லியாக அடையாளப்படுத்தும் கதைகளாக அமைந்தவை – ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’, ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய மூன்று கதைகள். நவீன வாழ்வுக்கும் பாரம்பரியமான மதிப்பீடுகளுக்கும் இடையேயான முரண்களையும் மோதல்களையும் அதனூடாக முளைக்கும் சமரசங்களையும் மிகவும் எளிமையான முறையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்…’ என்கிற கதை. உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் மெல்லிய கோடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் இன்றைய சூழலில் எழுதப்பட்டிருப்பதாலும் தலைமுறைகளுக்கு நடுவிலான பிணைப்புகள் அறுபட்டுவிடும் அபாயத்தைச் சுட்டுவதாலும் முக்கியமான கதையாக அமைந்து விடுகிறது.

இன்றைய செய்தித்தொடர்பு கருவிகளும் ஊடகங்களும் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்களாகியுள்ளன. உலகளாவிய அளவில் கண்ணிமைக்கும்பொழுதில் தகவல்களைச் சென்று சேர்க்கும் இவற்றின் வல்லமை, இன்று மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் தன்னிச்சையாக இடம்பெறும் தகுதியை வழங்கியுள்ளது. இவற்றின் வழியாக, குறிப்பிடத்தகுந்த ஆதாயங்களைப் பெறமுடிகிற அதே சமயத்தில், அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தொழில்நுட்பத்தைச் சரியாகவும் தேவைக்கு உட்பட்டும் கையாளாமல் இருப்பதன் காரணமாக, மனிதர்கள் தம் வசம் இழந்து உறவுகளையும் மனிதர்களையும் இழக்க நேரும் அவலங்களைக் காண்கிறோம். பலநேரங்களில் மனநிலை பிறழ்வுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ இரண்டு கதைகளும் கைபேசிகளும் அவற்றின் செயலிகளும் அன்றாட வாழ்வில் நிகழ்த்தும் ஆக்கிரமிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஊடகங்களின் வழியாகவும் செயலிகள் மூலமும் எந்தவிதத் தணிக்கையுமின்றி யாரும் தகவல்களை, செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய சுதந்திரத்தின் பாரதூரமான எதிர்விளைவுகளையும் அதனால் பொதுவாழ்வில் ஏற்படும் நல்லதும் அல்லதுமான தாக்கங்களையும் அன்றாடம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த இரு கதைகளும் அவ்வாறான பின்னணியைக் கொண்டிருப்பதன் காரணமாக புனைவுகள் என்பதைக் கடந்து உளவியல் ஆக்கங்கள் என்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏற்கெனவே சொன்னது போல, யுவ புரஷ்கார் பரிசு சுனில் கிருஷ்ணனுக்கு ஏற்படுத்தியிருக்கும் கூடுதல் அழுத்தத்தின் காரணமாக வெவ்வேறு வடிவிலும் நோக்கிலும் கதை சொல்ல முயல்கிறார். அந்த அழுத்தத்தைத் தணிக்கும்பொருட்டு அவர் தேர்ந்திருக்கும் வடிவம் பகடி. பழுவேட்டரையரையும் கிடாரம்கொண்டானையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் கதைகள் இன்றைய நவீன இலக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றி எள்ளி நகையாடுகின்றன. கூரிய விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றன. போலித்தனங்களை சாடுகின்றன.

‘கொஞ்சம் சிறுசா’, ‘அந்த 9 பேர்’, ‘பெரும் படம் காணல்’, ‘அதுக்கு என்ன இப்போ’, ‘தேய்விளக்கு’, ‘லட்சிய இலக்கிய வாசகன்’ ஆகிய கதைகளில் வெளிப்படும் நக்கலும் சாடலும் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்குகள் குறித்து ஆழமாக சிந்திக்கச் செய்வதாக அமைந்துள்ளன. சிரித்துக் கொண்டே அவற்றை வெறுமனே கடந்துவிட முடியாது. கும்பமுனியையும் தவசிப் பிள்ளையையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு நாஞ்சில்நாடன் மேற்கொள்ளும் விமர்சனப் போக்கின் அடுத்த படிநிலையாகவே பழுவேட்டரையரும் கிடாரனும் அமைகிறார்கள்.

சமகால நிகழ்வுகளை புனைவுக்குள் கொண்டுவர சுனில் கிருஷ்ணன் யோசிப்பதில்லை. ‘பேசும் பூனை’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளின் வரிசையில் அமைந்த ‘இச்சாதாரி’ அப்படிப்பட்ட கதையே. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19ன் உத்தரவாதமற்ற நிலையை பிரதியெடுத்தது போன்ற பின்னணியைக் கொண்ட இந்தக் கதையின் முடிவு வலுவாக அமையாமல் போனது துரதிர்ஷ்டமே.

உரையாடல்களிலும் சொல்முறையிலும் பகடியைப் பயன்படுத்துவது சுனில் கிருஷ்ணனுக்கு இயல்பாகவே கைவந்திருப்பதால் தனது குறுங்கதைகளில் அவற்றை வெகு சாதாரணமாகவே பயன்படுத்த முடிகிறது. ‘திருமிகு.பரிசுத்தம்’, ‘அரசின்மைவாதி’, ‘934‘ ஆகிய குறுங்கதைகள் புன்னகைக்கச் செய்பவை. அந்த வரிசையில் அமைந்துள்ள ‘தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி’ அடர்த்தியான புனைவு மொழியையும் உள்ளடுக்கையும் கொண்டிருக்கிறது.

சுனில் கிருஷ்ணன், புனைகதைகள் அல்லாது விமர்சனங்கள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழியாக்கங்கள் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாகப் பங்களித்து வருபவர். பிற துறைகளில் நேரமும் கவனமும் குவிவதன் காரணமாக புனைகதைகளில் எண்ணியபடி செயலாற்றும் வாய்ப்புகள் அமையவில்லை. ‘நீலகண்டம்’ நாவலும் தன் பங்குக்கு நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக் கொண்டது. இருபதுக்கும் மேற்பட்ட கதைகள், ஒரு நாவல், சில குறுங்கதைகள் என்றுள்ள அவரது புனைவுப் பரப்பை வைத்துக்கொண்டு அவரது அடுத்த நகர்வை உத்தேசமாகக் கூட அனுமானிக்க முடியவில்லை.

ஆனால், வடிவம் சார்ந்த பரிசோதனைகளில் அவருக்குள்ள ஆர்வத்தை ‘லித்தியம்’, ‘திமிங்கிலம்’ ஆகிய கதைகளிலும் ‘நீலகண்டம்’ நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார். போலி மதிப்பீடுகளை சற்றும் தயக்கமின்றி கலைத்துப் போடும் முனைப்புடன் பழுவேட்டரையரையும் கிடாரம் கொண்டானையும் இறக்கி விட்டிருக்கிறார். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள முறைமையிலிருந்து விலகி, புதியனவற்றை முயல்பவர்களுக்கு ஏற்படுகிற சந்தேகமும் குழப்பமும் சுனிலுக்கும் இருக்கக் கூடும். அத்தகைய தயக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிய கவலையின்றி தான் உத்தேசித்திருக்கும் புனைவுக் களத்தை தன்னுடைய பாணியில் முயல்வதன் வழியாகவே தனது எழுத்தை அவர் அடையாளம் காண முடியும். அதுவே அவரது தனித்துவமாகவும் நிலைபெறும்.

*

சுனில் கிருஷ்ணனின் இணைய தளம்: http://suneelwrites.blogspot.com/