துயரில் அமிழ்ந்த சிறுமலர் – இஸபெல் அயாந்தே – தமிழில்: லதா அருணாச்சலம்

0 comment

சேற்றுக் குழியிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபெண்ணின் முகத்தையும் தன் கண்களை அகல விரித்தபடி ஓசையின்றி அவள் குரல் கொடுத்துக் கொண்டிருந்ததையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சமய வழிபாட்டுச் சடங்குகளோடு அவளுக்கு இடப்பட்ட முதல் பெயர் அஸூசேனா. அதன் பொருள் லில்லி மலர். கல்லறைத் தோட்டம் போல இருந்த அவ்விடத்தின்  மரண வாசம் உயரப் பறந்து கொண்டிருக்கும் வல்லூறுகளின் கவனத்தை ஏற்கெனவே கவர்ந்து கொண்டிருந்தது. அனாதையாகிப் போன குழந்தைகளின் அழுகுரலும் காயமடைந்தவர்களின் ஓலமும் காற்றை நிரப்பிக் கொண்டிருக்கையில் இந்தச் சிறுபெண் பிடிவாதத்துடன் வாழ்க்கையை விடாமல் பற்றிக்கொண்டிருந்த காட்சியானது துயரத்தின் சின்னம் போல இருந்தது.

சேற்றிலிருந்து மேலெழும்பிய உருண்டை போலிருந்த காணச் சகியாத அவள் உருவத்தை தொலைக்காட்சியின் புகைப்படக் கருவி அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அங்குள்ள யாருமே அவள் முகத்தையோ, அவள் பெயரையோ அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு முறை திரையில் அவளைக் காணும் போதும், அவள் பின்னே ரோஃப் காஹலா தெரிந்தான். பணிநிமித்தம் அங்கு சென்றிருந்த அவனுக்கு, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தன்னுடைய கடந்த காலத்தின் ஒரு துணுக்கை அங்கு காணப் போகிறோம் என்று அப்போது துளியளவு கூட அனுமானம் இருந்திருக்காது.

முதலில் நிலத்தின் அடியில் எழுந்த மெல்லிய அசைவு, பருத்தி வயல்களில் அதிர்வை ஏற்படுத்தி, அதைச் சுற்றி நுரையலைகள் போல சூழ்ந்தன. பல வாரங்களுக்கு முன்பே நில அதிர்வை அளக்கும் கருவியை அங்கு கொண்டு வந்து நிறுவிய புவியியல் வல்லுனர்கள், அந்த மலை மீண்டும் விழித்துக் கொண்டதை அறிந்து வைத்திருந்தனர். எரிமலையின் வெடிப்பு மலைச் சரிவில் நிரந்தரமாகப் படிந்திருக்கும் பனிப் பாளங்களைத் துண்டித்து விடுமென்று அவர்கள் கணித்து எச்சரித்ததை யாருமே கண்டுகொள்ளவில்லை. பயந்த மூதாட்டி கதையென்றே நினைத்தனர். வழக்கம் போல தங்கள் சாதாரண வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டார்கள். பூமியின் முனகலை காதில் கேளாத செவிடர்கள் போல இருந்தவர்கள், நவம்பர் மாத சாபம் பீடித்த அந்த புதன்கிழமை இரவில், நெடுங்காலமாகத் தொடர்ந்த அதன் கர்ஜனை, அவர்களின் உலகம் முடிவுறுவதை அறிவிக்கும் நாள் வரை அப்படியே தான் இருந்தனர். மலையில் படிந்துள்ள பனிப் பாளங்கள் உடைந்து சிதறி களிமண்ணோடும் கற்களோடும் பனிப்புயலென பிரவாகமெடுத்து ஓடி வந்தது.

நிலம் ஓங்கரித்து வாரியிறைத்த அந்தச் சேற்றுக் குழம்பில் ஆழங்காண முடியாத தொலைவில் கிராமத்து மக்கள் புதைந்து போயினர். மோசமான முதல் தாக்குதலின் அதிர்விலிருந்து தப்பிப் பிழைத்த மக்கள்,  தங்கள் வீடுகள், கடைகள், தேவாலயங்கள், வெள்ளை வெளேரென்ற பருத்திப் பயிர்த்தோட்டங்கள், காப்பி பயிர்க் காடுகள், மேய்ச்சல் நிலங்கள் என யாவும் அழிந்து விட்டதைக் கண்டனர். நெடுநேரம் கழித்தே ராணுவத்தினரும் தன்னார்வலர்களும் அவ்விடத்தை அடைந்து  அவர்களை மீட்டு, அந்தப் பிரளயம் ஏற்படுத்தியிருந்த அழிவின் அளவை அறிய முயன்றனர். சகதிக்கு அடியில் ஏறத்தாழ இருபதாயிரம் மனிதர்களும் கணக்கற்ற எண்ணிக்கையில்  கால்நடைகளும் அழுகிப் பிசுபிசுப்பான திரவக் குழம்பாக படிந்துள்ளன என மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். காடுகளும் நதிகளும் கூட அடித்துச் செல்லப்பட்டு அங்கு சகதியின் பரந்த பாலையாக மாறிப்போன நிலத்தைத் தவிர வேறெதுவும் கண்ணில் தென்படவில்லை.

விடியலுக்கு முன்பாகவே நிலையத்திலிருந்து ரோஃப் காஹ்லாவிற்கு அழைப்பு வந்த போது நான்  அவனுடன் தான் இருந்தேன். அவன் அவசர அவசரமாக ஆடை அணிந்து தயாராகையில் நான் படுக்கையிலிருந்து தவழ்ந்து இறங்கி அரை மயக்கத்தில் காஃபி தயாரிக்கச் சென்றேன். தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் எப்போதும் அவன் எடுத்துச் செல்லும் பச்சை வண்ண முதுகுப் பையில் திணித்துக்கொண்டு, வழக்கம் போல விடைபெற்றுச் சென்று விட்டான். எனக்கு எந்தவிதமான உள்ளுணர்வுகளும் முன் உணர்தலும் இல்லை. சமையலறையில் அமர்ந்து கொண்டு, காஃபியை உறிஞ்சியவாறு அவனில்லாத நீண்ட நேரத்தை எப்படிக் கழிப்பது எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். எப்படியும் அடுத்த நாள் அவன் வந்துவிடுவான் என உறுதியாக  இருந்தேன்.

அவன் மட்டும் அனைவருக்கும் முன்பாக முதலில் அந்த இடத்தை அடைந்து விட்டான். மற்ற நிருபர்கள் அனைவரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணித்து சேற்றுக் குவியலான அந்தச் சதுப்பு நிலத்தை அடைய போராடிக் கொண்டிருக்கையில், தொலைக்காட்சி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ரோஃபோவை மட்டும் ஏற்றிக்கொண்டு நிலச் சரிவைப் பறந்து கடந்து இறக்கி விட்டு விட்டது. அவனுடைய புகைப்பட கலைஞர் அவனைப் படமெடுத்துக் கொண்டிருந்தார். கூச்சல் குழப்பங்களுக்கு இடையே, வழி தொலைத்த குழந்தைகளுக்கிடையே, சடலங்கள் சிதிலங்களுக்கிடையே தனது முழங்கால்கள் சேற்றுக் குட்டைக்குள் மூழ்கியிருக்க, கையில் ஒலிவாங்கியைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான் ரோஃப். அவனுடைய சலனமற்ற குரலில் செய்திகள் எங்களை வந்தடைந்தன. இது போன்ற பேரிடர்களையும், யுத்த கள நிலவரத்தையும் திடமான மனநிலையில் செய்திகளைச் சேகரித்து சிறப்பாக நேரலை ஒளிபரப்பு செய்வதில் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவனாக இருந்தான்.

அவனை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. ஆபத்தான சூழல்களிலும், கடினமான நிலையிலும் கூட தன்னிலை பிறழாத அவனுடைய சீரான மனநிலையை எண்ணி மிக வியந்திருக்கிறேன். அவனுடைய உள வலிமையையும் ஆர்வத்தையும் எதுவுமே அசைக்க இயலாதெனத் தோன்றும். பயம் அவனைத் தொட முடியாத தொலைவில் இருப்பதாகத் தெரியும். ஆனால் அவனே பலமுறை, தான் அவ்வளவு தைரியசாலி இல்லை என்று என்னிடம் வெளிப்படையாக ஒத்துக்கொள்வான். புகைப்படக் கருவியின் லென்ஸை பார்க்கையில் அது அவனுள் ஒரு விசித்திரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்று நினைக்கிறேன். அது அந்த இடத்திற்குத் தொடர்பில்லாத வேறிடத்திற்கு அவனைக் கடத்தி, சம்பவங்களில் பங்கு கொள்ளாமலேயே அவற்றைப் பார்வையிட அவனால் முடிகிறது என்பது போல இருக்கும். அவனைப் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின், நிகழ்வுகளிலிருந்து  ஏற்படுத்திக் கொள்ளும் அந்தக் கற்பனையான தொலைவு, உணர்ச்சிவசப்படுவதிலிருந்து அவனைப் பாதுகாக்கிறது என அறிந்து கொண்டேன்.

அஸுசேனாவின் கதையில் துவக்கத்திலிருந்தே ரோஃப் காஹ்லா அவளுடனிருந்தான். அவளைக் கண்டுபிடித்த தன்னார்வலர்களையும், அவளிருக்கும் இடத்திற்கு முதன் முதலாகச் சென்றவர்களையும் அவன்தான் படம் பிடித்தான். அந்தச் சிறுமியின் கருத்த முகத்தை, தனிமை ததும்பிய அகன்ற விழிகளை, எண்ணெய் அப்பி சிக்குப் பிடித்திருந்த கூந்தலை, அவனது புகைப்படக் கருவிதான் பெரிதுபடுத்திக் காட்டியது. அவளைச் சுற்றித் தேங்கியிருந்த சகதி புதைகுழி போல இருந்தது. அவளை நெருங்கும் எவரும் அதில் புதைந்து போகும் அபாயமிருந்தது. அவளை நோக்கி ஒரு கயிறை வீசி அதைப் பற்றிக் கொள்ளுமாறு கத்திச் சொல்லும் வரை அந்தக் கயிறைப் பிடிக்க அவள் எந்த வகையிலும் பிரயத்தனப்படவில்லை. அதன் பின் சேற்றுக் குவியலிலிருந்து ஒரு கையை இழுக்க முயன்ற போது மேலும் சற்று ஆழத்தில் மூழ்கினாள். ரோஃப் இப்போது தனது முதுகுப் பையையும், மற்ற உபகரணங்களையும் வீசி எறிந்து விட்டு புதைகுழிக்குள் இறங்கி நடந்துகொண்டே, தனது உதவியாளரின் ஒலிவாங்கியில், அவன் நிற்குமிடம் மிகவும் குளிராக இருப்பதாகவும் பிணங்களின் நாற்றத்தை உணர்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.

“உன் பெயர் என்ன?” அந்தச் சிறுமியிடம் கேட்டான். அவள் தன்னுடைய மலர்ப் பெயரைச் சொன்னாள். ”நகராதே அஸுசேனா”. அவளுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே, என்ன பேசுகிறோம் என்று கூடத் தெரியாமல் அவள் கவனத்தைத் திசை திருப்ப உரையாடிக் கொண்டே, மெல்ல முன்னேறிச் சென்று இடுப்பளவு சகதிக்குள் நின்று கொண்டிருந்தான் ரோஃப் காஹலா. அவனைச் சூழ்ந்திருந்த காற்றும் கூட அந்தச் சகதியைப் போலவே இருளார்ந்திருப்பதைப் போலத் தெரிந்தது.

அவன் நடந்து செல்லும் இடத்திலிருந்து அந்தப் பெண்னை அடைவது இயலாத காரியமெனப் பட்டதால், சற்று பின்னே நகர்ந்து, கால்களால் துழாவி வட்டமிட்டுக் கொண்டே, பாதங்களை அழுத்தமாகப் பதித்துக் கொள்ள முடிகிற இடத்தைத் தேடித் தேடி நகர்ந்தான். இறுதியில் ஓரளவு அந்தப் பெண்ணின் அருகாமையில் சென்றதும் கயிறை எடுத்து அவளுடைய கைகளுக்குக் கீழே சுற்றிக் கட்டினான். அப்போதுதான் அவளை வெளியே இழுக்க முடியும். அவளைப் பார்த்து கண்ணைச் சுருக்கிச் சிரித்த போது அவனும் ஒரு சிறுபிள்ளையைப் போலத் தோற்றமளித்தான். தான் வந்து விட்டதால் எல்லாமே சரியாகி விடுமென்றும், கவலைப்பட வேண்டாமென்றும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். கயிறை இழுக்குமாறு அவன் சமிக்ஞை கொடுத்ததும், மற்றவர்கள் அதை இழுத்தனர். கயிறு கொஞ்சம் இறுகி அவளை இழுக்க ஆரம்பித்ததும் அந்தப் பெண் அலறினாள். அவர்கள் மேலும் முயற்சி செய்ய அவளது தோளும், அக்குள் வரை கைகளும் மேலே தெரிந்தன.ஆனால் அதற்கு மேல் அவர்களால் இழுக்க முடியவில்லை. ஏனென்றால் அவள் சகதிக்குள் சிக்குண்டிருந்தாள். இடிந்து விழுந்திருந்த அவளுடைய வீட்டின் இடிபாடுகளுக்குள் அவள் கால்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் கட்டிடத்தின் சிதிலங்கள் மட்டுமல்ல, தன் சகோதர சகோதரிகளின் உடல்களும் அவளுடைய காலைச் சுற்றிப் பிணைந்திருக்கின்றன என்று அவள் கூறினாள்.

“கவலைப்படாதே, உன்னை இங்கிருந்து வெளியே கொண்டு வந்து விடுவோம்”, ரோஃப் வாக்கு கொடுத்தான். ஒலிபரப்பின் தரம் குறைவாக இருந்த போதும் அவனுடைய குரல் உடைவதை என்னால் கேட்க முடிந்தது. எப்போதுமில்லாத அளவுக்கு அவன் மீது காதல் பொங்கியது. அஸுசேனா அவனைப் பார்த்தாள். ஆனால் ஏதும் பேசவில்லை.

அந்த முதல் சில மணி நேரங்களில், அவனது அறிவுக்கெட்டிய அத்தனை வழிமுறைகளையும் உபயோகித்துப் பார்த்து விட்டான் ரோஃப். கம்பத்தோடும் கயிறோடும் இயன்றவரை போராடினான். ஆனால் ஒவ்வொரு முறை இழுக்கும் போதும் சிறைப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அது தாள முடியாத வேதனையைக் கொடுத்தது. கம்பம் ஒன்றை நெம்புகோல் போல பயன்படுத்த எண்ணினான். பின் அதனால் எந்தப் பலனும் கிட்டாத போது அதையும் கைவிட்டவன், சற்று நேரம் தன்னுடன் ஒத்துழைக்குமாறு இரு ராணுவ வீரர்களைக் கேட்டுக் கொண்டான். ஆனால் பாதிக்கப்பட்ட பலரும் உதவியை நாடிக் கூக்குரலிட்டதால் அவர்களுக்கும் அங்கிருந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணால் நகரக் கூட முடியவில்லை. மூச்சு விடவும் சிரமப்பட்டாள்.

ஆனால் சற்றும் மனம் தளராமல், ஏதோ முன்னோர்கள் கொடையாக அளித்த பொறுமை தன் விதியை ஏற்றுக்கொள்ள அனுமதித்தது போலத் தோன்றினாள். அதற்கு மாறாக, அந்த நிருபர் மரணத்தின் பிடியிலிருந்து அவளைப் பறித்து வர உறுதி பூண்டார். யாரோ ஒரு டயரை கொண்டு வந்து தர அதை அவளுடைய கைகளுக்குக் கீழே மிதவை போல வைத்தான். அவனுடைய எடையைத் தாங்குமாறு அந்தக் குழிக்கருகே ஒரு மரப்பலகையைப் போட்டு அவளுக்கு மிக அருகில் தான் நிற்குமாறு பார்த்துக் கொண்டான். அந்த இடிபாடுகளைப் பார்க்காமல் அப்படியே நீக்குவது சாத்தியமில்லாத காரணத்தால், ஓரிரு முறை அவள் பாதங்களை நோக்கி தலையை முழுகி முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் மண்ணை அப்பிக்கொண்டு, வாயிலிருந்து சரளைக் கற்களைக் கொப்பளித்துத் துப்பிக் கொண்டே விரக்தியுடன் மேலெழும்பி வந்தான். இறுதியில் அந்தத் தண்ணீரை உறிஞ்சி இறைக்க மோட்டார் பம்ப் வேண்டுமென்பதை உறுதிசெய்து, அதற்கான வேண்டுகோளை விடுத்தான். தற்சமயம் எந்த விதமான போக்குவரத்தும் இல்லாததால், மறுநாள் காலை தான் அதை அனுப்ப முடியும் எனத் தகவல் வந்து சேர்ந்தது.

“அதுவரை நாம் காத்திருக்க முடியாது” எனக் கத்தினான் ரோஃப். ஆனால் இது போன்ற பேரிடர் சமயத்தில் இரக்கம் காட்ட யாரும் தலைப்படவில்லை. நேரம் தேங்கிக் கிடப்பதையும், மீளவே முடியாத அளவு  நிலைமை சிதைந்து போயிருப்பதையும் அவன் ஒத்துக்கொள்வதற்கு முன்பு பல மணி நேரங்கள் கடக்க வேண்டியிருந்தன.

ராணுவ மருத்துவர் ஒருவர் வந்து அந்தப் பெண்ணைப் பரிசோதித்து விட்டு அவள் இதயம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறதென்றும், அவளுக்கு மேலும் குளிர் அடிக்காமல் இருக்கும் பட்சத்தில் அந்த இரவு அவள் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

“இப்படியே இரு அஸுசேனா, நாளை காலை நீரை உறிஞ்சும் மோட்டார் குழாய்கள் வந்து சேர்ந்து விடும்”. அவளுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்துகொண்டிருந்தான் ரோஃப்.

“என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய் விடாதீர்கள்”. அவள் இறைஞ்சினாள்.

“இல்லை, இல்லவே இல்லை, நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்”

யாரோ ஒருவர் காஃபி கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்தச் சிறுமியைச் சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடிக்க வைத்தான். அந்த வெதுவெதுப்பான திரவம் அவளுக்கு சிறிது புத்துணர்ச்சியை ஊட்ட, அவள் பேசத் துவங்கினாள். தன்னுடைய சிறிய வாழ்வைப் பற்றி, அவள் குடும்பத்தை, பள்ளியைப் பற்றி, எரிமலை வெடிக்கும் முன் அந்தச் சின்னஞ்சிறு கிராமம் எப்படி இருந்தது என்றெல்லாம் விவரித்தாள். அவளுக்குப் பதிமூன்று வயதாகிறது. ஆனால் அந்த கிராமத்தை விட்டு அவள் வெளியே எங்குமே சென்றதில்லை. ஒரு அவசர நம்பிக்கையால் உந்தப்பட்டு எல்லாமே சரியாக நடந்து முடிந்து விடும் என ரோஃப் நம்பினான். நீரை வெளியேற்றும் மோட்டார் பம்ப் விரைவில் வந்து அனைத்து சேற்று நீரையும் உறிஞ்சிய பின், இடிபாடுகளை விலக்கி அஸுசேனாவை மீட்டு ஹெலிகாப்டரில் ஒரு மருத்துவமனைக்கு இட்டுச் சென்றால் அங்கு அவள் விரைவில் குணமாகி விடுவாள்.

அவன் அவளைச் சந்தித்து பல அன்பளிப்புகளை அளிக்கப் போகிறான். அவள் பொம்மைகளோடு விளையாடும் வயதைக் கடந்து விட்டதால் அவளுக்கு எது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும் என அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை நல்ல ஆடைகள் பிடிக்கக் கூடும். இறுதியில் பெண்களைப் பற்றி தனக்கு அவ்வளவாகத் தெரியாது எனும் முடிவுக்கு வந்தான். பல பெண்கள் அவன் வாழ்க்கையில் இருந்திருந்தாலும் இது போன்ற விவரங்களை அவர்கள் சொன்னதில்லை என நினைத்துப் பார்க்கையில் வேடிக்கையாக உணர்ந்தான். நேரத்தைக் கடத்துவதற்காக, தன்னைப் பற்றிச் சொல்லத் துவங்கினான். அவனுடைய பயணங்களை, செய்திகளுக்காக ஓடிய சாகசம் மிகுந்த நாட்களைப் பற்றி, பின் அவன் நினைவுகள் தீர்ந்து போன போது அவள் மனதை உற்சாகப்படுத்தும் என எண்ணி கற்பனைக் கதைகளையும் உருவாக்கிச் சொன்னான். அவ்வப்போது அவள் தூங்கி விழுந்தாள். ஆனால் தான் அவளருகிலேயே இன்னும் இருக்கிறோம் என்றும், அச்சுறுத்தும் அந்த நிச்சயமின்மையை வென்று விடுவோம் எனும் உத்திரவாதத்தை அளிக்கும் நிமித்தமாகவும் அவன் அந்த இருளில் பேசிக்கொண்டே இருந்தான்.

அது ஒரு நீண்ட இரவு.

பல மைல் தொலைவுக்கப்பால் ரோஃப் காஹ்லாவையும் அந்தப் பெண்ணையும் தொலைக்காட்சித் திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டில் காத்திருக்க முடியாமல் தேசிய தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்று விட்டேன். பல இரவுகள் முழுவதும் அங்கு தங்கி படத் தணிக்கை வேலைகளில் நாங்கள் ஈடுபட்டதுண்டு. அங்கே அவனுடைய உலகத்துக்கு நெருக்கத்தில்  இருந்தேன். குறைந்தபட்சம், அந்த முக்கியமான விதியைத் தீர்மானம் செய்யும் மூன்று நாட்களில் அவன் அனுபவித்ததை என்னால் உணர முடிந்தது. அங்கிருந்து, செனேட்டர்கள், ஆயுதப் படையின் அதிகாரிகள், வட அமெரிக்காவின் தூதுவர், தேசிய பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் போன்ற நகரின் முக்கியப் பிரமுகர்களை அழைத்து தேங்கிய சேற்று நீரை உறிஞ்சி எடுக்கும் மோட்டார் பம்ப்பை அனுப்ப ஏற்பாடு செய்யச் சொல்லிக் கெஞ்சினேன். ஆனால் மழுப்பலான உறுதிமொழிகளே கிடைத்தன. வானொலியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் அவசர உதவி கோரி வேண்டுகோள் விடுக்கத் துவங்கினேன். அழைப்புகளுக்கிடையே செய்தி அறைக்குச் சென்று அந்தப் பேரிடர் பற்றிய புதிய விவரங்களை அவ்வப்போது தரும் செயற்கைக் கோள் ஒளிபரப்பையும் கண்காணிப்பேன். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செய்தி அறிவிப்புகளை அங்குள்ள நிருபர்கள் தேர்வு செய்து கொண்டிருக்கையில், நான் அஸூசேனாவின் சேற்றுக் குழி பற்றிய காட்சிகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.

நிகழ்ந்து முடிந்த பேரழிவை தன் சிறிய சதுரப் பரப்பில் அந்தத் திரை சுருக்கி, ரோஃப் காஹ்லாவையும் என்னையும் பிரித்திருக்கும் மிகப்பெரும் தொலைவை மேலும் அதிகப்படுத்திக் காட்டியது. இருப்பினும் நான் அவனுடன் அந்த இடத்தில் இருந்தேன். அந்தச் சிறுமி படும் ஒவ்வொரு சிரமமும் அவனைப் போலவே எனக்கும் வேதனையை ஏற்படுத்தியது. அவனுடைய இயலாமையை, அவனுடைய விரக்தியை நானும் உணர்ந்தேன். அவனுடன் தொடர்புகொள்ளச் சாத்தியமற்ற நிலையில் ஒரு அற்புதமான உபாயம் என் மனதில் தோன்றியது. முயற்சி செய்தால் , மன வலிமையின் உந்துதலால் அவனை அடைந்து, அதன் மூலம் அவனுக்கு உத்வேகத்தை அளிக்க முடியும். மயக்கம் வரும் அளவு மனதை ஒருமுகப்படுத்தினேன் – பயனற்ற பைத்தியகாரத்தனமான செயல். சில சமயம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு மனம் தாளாமல் அழுதேன். மற்ற வேளைகளில் ஏதோ பல கோடி ஆண்டுகளுக்கு முன் இறந்து போய் விட்ட ஒரு நட்சத்திரத்தை தொலைநோக்கி வழியாகப் பார்ப்பது போல மனது உலர்ந்து போய்க் கிடந்தேன்.

உருகிய பனிக்கட்டிகளால் ஒரே இரவில் உருவாகிய ஆறுகளின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மனித மற்றும் விலங்குகளுடைய பிணங்களின் கொடுங்காட்சியை காலையின் முதல் ஒளிபரப்பில் பார்த்தேன். சகதிகளுக்கு மேற்பரப்பில் தெரிந்த மரத்தின் உச்சிக் கொம்புகளிலும் தேவாலயத்தின் மணிக் கூண்டிலும் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீட்புப் படையினருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும் தன்னார்வலர்களும் இடிபாடுகளினூடே கிளறியவாறு தப்பிப் பிழைத்தவர்களைத் தேடிக் கொண்டிருந்த போது, நீண்ட வரிசையில் கந்தலாடையில் உயிருள்ள ஆவி போலிருந்தவர்கள் ஒரு கோப்பை உணவுக்காகக் காத்திருந்தனர்.

அனாதையான குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகிறோம் என முன் வந்த குடும்பங்களின் தொலைபேசி அழைப்புகளால் தங்கள் தொலைபேசிகளே செயலிழந்து விட்டதாக வானொலி நிலையங்கள் அறிவித்தன. குடிநீருக்கும் மண்ணெண்ணெய்க்கும் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மயக்க மருந்து இல்லாமலேயே கைகளையும் கால்களையும் வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த மருத்துவர்கள், குறைந்தபட்சம் வலிநீக்கி மாத்திரைகளையும் கிருமித் தொற்றுத் தடுப்பு மருந்துகளையும்  தாருங்கள் எனக் கெஞ்சிக் கேட்டனர். பெரும்பாலான சாலைகள் பயணம் செய்வதற்கு சற்றும் ஏற்றதாக இல்லாமலிருந்தன. அது போதாதென்று அரசமைப்புகள் சார்ந்த தடைகள் அதை விட மோசமாக இருந்தன. இவையனைத்துக்கும் மேலாக, அழுகிய உடல்களால் கெட்டுப் போன களிமண் நிலத்தினால் உயிருடன் இருப்பவர்களுக்கும் பெரும் தொற்று நோய் பரபரவக்கூடும் எனும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

நீர்ப்பரப்புக்கு மேலே அவளது உடலைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் டயருக்கு உள்ளே அஸூசேனா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். நகர முடியாத நிலையும், பதட்டமும் அவளை மிகவும் பலவீனத்தில் ஆழ்த்தியிருந்தாலும் அவள் தன் நினைவுடன் இருந்தாள். அவள் முன் ஒலிவாங்கி நீட்டப்படும் போதெல்லாம் அது சொல்வதைக் கேட்க முடிந்தது. அவள் குரல் பணிவாகவும் அங்கு நடக்கும் குழப்பங்களுக்கு மன்னிப்பு கேட்பது போன்ற தொனியிலும் இருந்தது. ரோஃப் காஹ்லாவின் முகத்தில் ஒரு நாள் தாடியும், கண்களின் கீழே கருவளையமும் தெரிந்தன. மிகக் களைப்படைந்தவனாகக் காணப்பட்டான். இந்த மிகப்பெருந் தொலைவுக்கப்பாலும் அவனிடம் இருந்த இந்த வகையான சோர்வு மற்ற சாகசப் பயணங்களில் ஏற்படும் அயர்ச்சியை விட மாறுபட்டதாக இருப்பதை என்னால் உணர முடிந்தது.

புகைப்படக் கருவியை முற்றிலும் மறந்து விட்டான். அவனால் அதன் லென்ஸ் வழியாக மேலும் அவளைப் பார்க்க இயலவில்லை. இப்போது கிடைக்கும் அஸூசேனாவின் புகைப்படங்கள் அவனுடைய உதவியாளருடையது அல்ல. அங்கு நடந்த அத்தனை பயங்கர நிகழ்வுகளுக்கும் அடையாளச் சின்னாமாகும் பொறுப்பை அவள் மீது ஏற்றி மற்றவர்கள் எடுத்தனுப்பும் புகைப்படங்களே கிடைத்தன. காலை முதல் வெளிச்சம் பட்டவுடன் அசையா நிலையிலிருந்து அவளை விடுவிக்கும் பொருட்டு சில இடர்பாடுகளைத் தன் கைகளைக் கொண்டே களைய முயற்சி செய்தான் ரோஃப். ஏனென்றால் அவளுக்கு மேலும் காயங்கள் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தும் தைரியம் வரவில்லை.

ராணுவப் படையினர் அளித்த ஒரு கோப்பை மக்காச்சோள உணவையும் வாழைப் பழத்தையும் அவளுக்கு ஊட்டி விட்டான். ஆனால் அதை உடனே வாந்தியெடுத்து விட்டாள். அவளுக்கு காய்ச்சல் இருப்பதாகச் சொன்ன மருத்துவர், அந்த நிலையில் தன்னால் எந்த உதவியுமே செய்ய முடியாதென்றும் உறுப்புகள் அழுகிப் போகும் நிலையிலிருப்பவர்களுக்கு மட்டுமே கைவசம் தடுப்பு மருந்துகள் வைத்திருப்பதாகவும் கூறினார். அந்த வழியே வந்த மதபோதகர் ஒருவரும் அவளுக்காகப் பிரார்த்தனை செய்து ஆசிர்வதித்து விட்டு தூய அன்னையின் முத்திரை பதித்த மணி மாலையை அவள் கழுத்தில் மாட்டி விட்டுச் சென்றார். மாலை நேரமாகையில் மெல்லிய சாரல் விழத் துவங்கியது.

“வானம் அழுகிறது”, முணுமுணுத்த அஸூசேனா தானும் அழ ஆரம்பித்தாள்.

‘தயவு செய்து பயந்து விடாதே’, ரோஃப் கெஞ்சினான். ‘உன் துணிவையும் பலத்தையும் கை விடாது அமைதியாக இருக்க வேண்டும். எல்லாம் சரியாகி விடும், நான் உன்னுடன் இருக்கிறேன், உன்னை எப்படியாவது வெளியே கொண்டு வந்து விடுவேன்.’

நிருபர்கள் மீண்டும் அஸூசேனாவிடம் திரும்பினர். அவளைப் படமெடுத்துக் கொண்டே அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல அவள் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே வேளை, பல தொலைக்காட்சி நிலையங்களும், படப்பிடிப்புக் குழுவினரும் தங்களுடைய தந்திக் கம்பிச் சுருள்கள், பதிவு நாடாக்கள், ஒளிச் சுருள்கள், நுண்ணொளி வில்லைகள், ஒலிப் பேழைகள், பதிவீடுகள், விளக்குகள், பிம்பத் திரைகள், துணை மோட்டார்கள், உதிரிப் பொருள் பெட்டிகள், மின்னியல் வல்லுநர், ஒலிப்பதிவுப் பொறியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் சகிதமாக அவ்விடத்தை வந்தடைந்தனர். உலகெங்கும் உள்ள கோடானு கோடி திரைகளில் அஸூசேனாவின் முகம் மின்னியது. இவையனைத்துக்கும் நடுவே நீரை உறிஞ்சும் மோட்டார் பம்ப்பை விரைவில் வரவழைக்கச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டே இருந்தான் ரோஃப் காஹ்லா.

மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் நல்ல பலனைத் தந்தன. தேசியத் தொலைக்காட்சிகள் தெளிவான படத்தையும், துல்லியமான ஒலியையும் பெறத் துவங்கின. தொலைவு சட்டென சுருங்கி விட்டது போலத் தோன்றியது. ரோஃப், அஸூசேனா இருவரும் எனது அருகில் இருப்பது போலவும் உட்புக முடியாத கண்ணாடித் தடுப்புதான் எங்களைப் பிரித்து வைத்திருக்கிறது போன்ற அதிர்ச்சியான உணர்வு தோன்றியது. அங்கு நடக்கும் ஒவ்வொரு கணத்தின் நிகழ்வுகளையும் என்னால் பின்பற்ற முடிந்தது. அந்தப் பெண் சிக்குண்டு இருக்கும் சிறையிலிருந்து அவளை வெளியே இழுக்கவும் அவளது கஷ்டங்களை தாங்கிக் கொள்ளவும் எனது அன்பன் எவ்வளவு  உதவி புரிகிறானென்று புரிந்தது. அங்கிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதைத் துண்டு துண்டாகக் கேட்டு, அடுத்து அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதைக் கூட என்னால் கற்பனை செய்ய முடிந்தது. அவள் அவனுக்கு பிரார்த்தனை செய்யக் கற்றுக் கொடுத்தபோது அங்கிருந்தேன். எங்கள் படுக்கையின் வெண்ணிற மெல்லிய கொசுவலையின் கீழ் ரோஃப் காஹ்லோவுக்கு நான் கூறியியிருந்த ஆயிரத்தொரு இரவுகள் கதைகளை, அவன் அஸூசேனாவின் மனதைத் திசை திருப்பும் பொருட்டு அவளுக்குச் சொல்கையிலும் நான் அங்குதான் இருந்தேன்.

இரண்டாம் நாள் இரவு கவியும் வேளையில், ரோஃப் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்ட ஆஸ்திரிய நாட்டுப்புறப் பாடலைப் பாடி அஸூசேனாவை உறங்க வைக்க முயற்சி செய்தான். ஆனால் அவளோ உறக்கத்திற்கு வெகு தொலைவில் இருந்தாள். பெரும்பங்கு இரவை, குளிரில் நடுங்கிக் கொண்டே தூக்கம் மற்றும் பசி மயக்கத்தோடே பேசிக் கழித்தார்கள். பல வருடங்களாக கடந்த கால நினைவுகள் புதைந்திருந்த ரோஃப் காஹ்லோவின் இதயத்தின் கடினமான வாயில்கள் அன்றிரவு அவனது கட்டுப்பாடின்றி திறக்கத் துவங்கின. நினைவுகளின் ஆழமான, ரகசியமான படிமங்களில் மறைந்து கிடந்த அனைத்தும் மடை திறந்த வெள்ளம் போலப் பாய்ந்து, இதுவரை அவனது மனசாட்சியை அடைத்துக் கொண்டிருந்த தடைகளை உடைத்து சமன் செய்தது.

அவனால் அனைத்தையும் அஸூசேனாவிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. இந்தக் கடலுக்கப்பால் ஒரு உலகம் இருப்பதும், அவளுக்கும் முன்பாக ஒரு காலம் இருந்ததும் அவளுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். யுத்த கால ஐரோப்பாவை கற்பனை செய்யும் திறனற்றவளாக அவள் இருந்தாள். அதனால் அவளிடம் தோல்வி என்பதைப் பற்றியோ, ஒரு மதிய வேளையில் ரஷ்யர்கள் அவர்களைப் பட்டினியால் இறக்கும் கைதிகளைப் புதைக்கும் சிறை முகாமுக்கு அழைத்துச் சென்றதையோ கூற முடியாது. விறகு மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்த நிர்வாண சடலங்கள் உடைந்து போகக் கூடிய மெல்லிய பீங்கான் போல தோற்றமளித்ததை ஏன் அவளுக்கு விவரிக்க வேண்டும்? இறந்து கொண்டிருக்கும் இந்தப் பெண்ணிடம் தூக்கு மேடைகளைப் பற்றியும் எரியூட்டும் அடுப்புகளைப் பற்றியும் எப்படிச் சொல்ல முடியும்? அவனுடைய அன்னையை நிர்வாணக் கோலத்தில் பார்த்ததையும் சிவப்பு நிற குதிகால் காலணியை மட்டும் அணிந்திருந்தவள் அவமானத்தில் தேம்பி அழுது கொண்டிருந்ததையும் அந்த இரவைப் பற்றியும் அவன் ஏதும் கூறவில்லை.

அவன் சொல்லாமல் விட்டது அதிகம். அவன் மனது எவற்றையெல்லாம் அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்ததோ அவற்றை அந்த நேரத்தில் முதன்முறையாக மீண்டும் வாழ்ந்து கொண்டிருந்தான். அஸூசேனா தனது அச்சங்களையெல்லாம் அவனிடம் அர்ப்பணித்து விட்டாள். அதனால் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் ரோஃப் காஹ்லாவை அவனது அச்சங்களை எதிர்கொள்ளப் பணித்தாள். அங்கே, அந்த சேற்றின் நரகக் குழிக்கு அருகே தன் மனதிடமிருந்து  தப்பியோடுவது அவனுக்குச் சாத்தியமில்லை. அவனுள்ளிருந்து வெடித்துக் கிளம்பிய பால்ய வாழ்வின் பயங்கரம் அவனை முழுவதும் ஆக்கிரமித்தது. அவன் அஸூசேனாவின் வயதிலும் அதை விடவும் இளையவனாக இருந்த காலத்துக்கு திரும்பிச் சென்றான். இதே போல தப்பி வர இயலாத ஒரு குழிக்குள் அவன் சிக்கி வாழ்வில் புதைந்து போயிருக்க, அவனுடைய தலை மட்டும் நிலத்திற்கு மேலே சற்று தெரிந்தது. இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டை அவிழ்த்து கையில் வைத்துக் கொண்டு, அவனால் ஒருபோதும் மறக்கவியலாத தீண்டத் துடிக்கும் சர்ப்பம் எழுப்பும்  ஹிஸ்ஸ் என்ற ஓசையோடு பெல்ட்டைக் காற்றில் சுழற்றியவாறு நடந்து கொண்டிருந்த தந்தையின் சப்பாத்துகளும் கால்களும் கண் முன்னே தெரிந்தன.

உடையாமல் கிடந்த நுட்பமான துயரம், காத்திருந்தது போல, இப்போது அவனுள் பரவியது. ஒருமுறை அவனது தந்தை தானே உருவகித்த மோசமான நடத்தையின் பழியை அவன் மீது சுமத்தி அலமாரியில் அவனைப் பூட்டி வைத்த நாளில் இப்போது ரோஃப் இருந்தான். இருட்டைப் பார்க்காமலிருப்பதற்காகக் கண்களை இறுக மூடி, கால்களைக் குறுக்கி அமர்ந்து கொண்டு, தனது இதயத் துடிப்பே தனக்குக் கேட்கக் கூடாதென்று காதுகளையும் பொத்திக் கொண்டு நடுங்கியபடி பிடிபட்ட விலங்கைப் போல முடிவற்ற காலத்துக்கு மீண்டும் அடைந்து கிடந்தான். ஞாபகங்களில் அலைந்து கொண்டிருக்கையில் அதன் நடுவே அவனது சற்றே மூளை வளர்ச்சி குன்றிய இனிய சகோதரி காத்தரீனாவையும் கண்டான். அவள் பிறந்ததின் அவமானத்தை தந்தை மறப்பார் என்னும் நம்பிக்கையில் அவரிடமிருந்து ஒளிந்து கொள்வதிலேயே வாழ்வைக் கழித்தவள். இரு குழந்தைகளும் உணவு மேசைக்கு அடியில் ஊர்ந்து சென்று, நீண்ட அதன் விரிப்புகளின் கீழே எப்போதும் அணைத்தவாறு மறைந்து அமர்ந்து கொண்டு, காலடி ஓசைகளுக்கும் குரலுக்கும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். காத்தரீனாவின் வாசனைத் தைலத்துடன் அவனுடைய வியர்வை வாசமும், அதனோடு சமையலின் நறுமணம், பூண்டு, சூப், புதிதாக சுடப்பட்ட ரொட்டி, எதிர்பாராத வகையில் ஒரு விதமான அழுகும் களிமண்ணின் துர்நாற்றமும் சேர்ந்து கலந்து கொள்ளும்.

அவனுடைய சகோதரியின் கை அவன் கைகளுக்குள் பொதிந்திருக்க, அவளுடைய அச்சம் நிறைந்த சுவாசங்கள், அவனுடைய கன்னத்தில் உரசும் பட்டு போன்ற அவளுடைய கேசம், அவளது கண்களின் கபடமற்ற பார்வை… ஓ காத்தரீனா! காத்தரீனாவின் உருவம் அவன் முன் தோன்றியது. காற்றில் அசைந்தாடும் கொடி போல.. வெண்ணிற உணவு மேசை விரிப்பைப் போர்த்திக் கொண்டு.. இப்போது பிணங்களுக்குச் சுற்றப்படும் துகிலைப் போர்த்திக் கொண்டு.. இறுதியாக அவனால் அவளுடைய இறப்புக்காகவும் அவளைக் கைவிட்டு விட்டதன் குற்ற உணர்வுக்காகவும் இன்று அழ முடிந்தது. செய்தியாளர் என்று சொல்லிக் கொண்டு அவன் செய்த செயல்களும், பெயரும் புகழும் வாங்கித் தந்த சாகசங்கள் யாவும் அவனது பழைய அச்சங்களைத் தூர விலக்கி வைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியாகவே இருந்தது. உள்ளம் இனங்காட்டும் பார்வையையை விட, நிதர்சனம் சகித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதா என்பதை அறிய புகைப்படக் கருவியின் லென்சுக்கு பின் அவன் தஞ்சமடைந்ததும் ஒரு உபாயம்.

அதீதமான இடர்களை எதிர்கொள்வதை துணிச்சலான செயல்களாக எண்ணினான். இரவுகளில் அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சாத்தான்களை வெல்வதற்காக பகலில் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டான். ஆனால் இப்போது உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தருணத்தை அடைந்து விட்டான். கடந்த காலத்திலிருந்து அவனால் இனிமேலும் தப்பியோட முடியாது. அவன் தான் அஸூசேனா. அந்தக் களிமண்ணில் புதைந்து கிடந்தான். அவனுடைய பயமெல்லாம் ஏறக்குறைய அவன் மறந்துவிட்ட பால்யத்தின் மங்கிய உணர்வுகள் பற்றியது அல்ல. அது தொண்டையிலிருந்து விழுங்கிச் சீரணித்து விட்ட கூரிய முள். பெருகும் கண்ணீரின் வெள்ளத்தில் அவன் தன் தாயைக் காண்கிறான். கருப்பு நிற ஆடையில், போலி முதலைத் தோலால் செய்த அட்டை போட்டிருந்த சிறிய புத்தகத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, தென் அமெரிக்கா செல்லும் கப்பலில் அவனை அனுப்ப வந்திருந்தாள். அவனுடைய கண்ணீரைத் துடைக்க அவள் வரவில்லை, மாறாக அவனிடம் ஒரு மண் வாரியை எடுத்துக் கொள்ளுமாறு சொன்னாள. யுத்தம் முடிந்து விட்டது, மாண்டதைப் புதைக்க வேண்டும் இனி.

”அழாதே, எனக்கு இப்போது வலியில்லை, நான் நன்றாக இருக்கிறேன்.” புதிய காலை புலரும் வேளையில் அஸூசேனா சொன்னாள்.

“நான் உனக்காக அழவில்லை, எனக்காக அழுகிறேன். எல்லா இடத்திலும் நான் காயம் பட்டிருக்கிறேன்”

பேரிடர் சிதைவுகளின் பள்ளத்தாக்கு, புயல் மேகங்களுக்கிடையே ஒளிர்ந்த மங்கலான வெளிச்சத்துடன் தன் மூன்றாம் நாளைத் துவங்கியது. நாட்டின் அதிபர் தன்னுடைய சஃபாரி பகட்டாடையில் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்ட பின் இந்த நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவு என்று உறுதி செய்தார். நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது, அண்டை தேசங்கள் நிவாரண உதவி அளித்தன, அந்த இடத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. யாராவது திருடும் போதோ அல்லது மற்ற குற்றங்கள் புரியும் போதோ பிடிபட்டால் கருணையின்றி அவர்களைக் கண்டவுடன் சுட்டு விடும் உத்தரவும் இடப்பட்டது. இறந்த உடல்கள் அனைத்தையும்  அப்புறப்படுத்துவதும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களை எண்ணுவதும் இயலாத காரியம் என்பதையும் சேர்த்துச் சொன்னார்.

அந்தப் பள்ளத்தாக்கு முழுவதுமே புனித இடமாக அறிவிக்கப்படும் என்றும் பாதிரியார்கள் வந்து பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மாவுக்காக ஒரு சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார். பின் ராணுவ முகாமுக்குச் சென்று அங்கு தங்கியிருந்த மீட்கப்பட்டவர்களிடம் நிவாரணம் என்ற பெயரில் தெளிவற்ற வாக்குறுதிகளை அளித்தார். அதன் பின், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனையைப் பார்வையிட்டு, பல மணி நேரங்களாக அயராது உழைத்து அயர்ச்சியில் தோய்ந்திருந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் பேசினார்.

உலகமே பார்த்துக்கொண்டிருந்த சிறுமி அஸூசேனாவைக் காண்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவளை நோக்கி, அரசாங்க அதிகாரி போல, மெல்ல கையசைத்தார். அவளுடைய துணிவு தேசத்திற்கே ஒரு உதாரணமாக விளங்குகிறது எனும் உணர்ச்சி மிக்க குரலையும், தந்தையைப் போல ஒலிக்கும் வாஞ்சையான தொனியையும் ஒலிவாங்கிகள் பதிவு செய்தன. அவரை இடைமறித்து மோட்டார் பம்ப் வேண்டுகோளை ரோஃப் வைத்தபோது, தானே தனிப்பட்ட முறையில் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்போவதாகவும் உறுதி கூறினார்.

சேற்றுக் குழியினருகே மண்டியிட்டு அமர்ந்திருந்த ரோஃப் காஹ்லோவை சில விநாடிகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மாலை நேர ஒளிபரப்பின் போதும் அதே நிலையில் தான் இருந்தான். தொலைக்காட்சித் திரையை, கையிலிருக்கும் ஸ்படிகப் பந்தை நோக்கி சோதிடம் சொல்லும் பெண்ணைப் போல நான் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த போது, அவனுள் அடிப்படையான ஏதோ  ஒன்று உருமாறி விட்டது என என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்த இரவில் அவனது மனக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உடைந்து சிதறி துக்கத்தின் வசம் தன்னை அவன் ஒப்படைத்துக் கொண்டான். இறுதியாக அவன் கையறு நிலையில் இருந்தான். அவனே நுழைய முடியாத, ஒருபோதும் என்னிடம் கூடப் பகிர்ந்திராத அவனுடைய ஆழ்மனதின் ஏதோ ஒரு பகுதியை அந்தப் பெண் தொட்டு விட்டாள். அஸூசேனாவுக்கு ஆறுதல் சொல்ல நினைத்தான் ரோஃப். மாறாக அவள் இப்போது அவனுக்கு ஆறுதல் வழங்கினாள்.

ரோஃப் தனது போராட்டங்களைக் கைவிட்டு, அந்தப் பெண் இறந்துகொண்டிருக்கும் அவலத்தைப் பார்ப்பதற்குத் தன்னை ஒப்புவித்துக் கொண்ட துல்லியமான அந்தக் கணத்தை என்னால் அடையாளம் காண முடிந்தது. அவர்களுடனே நான் இருந்தேன்.. மூன்று பகல்கள், இரண்டு இரவுகள். வாழ்க்கையின் மறுபுறத்திலிருந்து அவர்களை வேவு பார்த்துக் கொண்டிருந்தேன். தனது பதிமூன்று வயது வரை எந்தப் பையனும் தன்னைக் காதலிக்கவில்லையென்றும் காதலென்பதையே அறியாமல் இந்த உலகத்தை விட்டு நீங்கிச் செல்வது எவ்வளவு பரிதாபமானது என்றும் அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் நான் அங்கு இருந்தேன். இந்த உலகத்தில் வேறெவரையும் விட அவள் மீதுதான் அதிகப் பிரியம் கொண்டிருப்பதாக ரோஃப் அவளுக்கு உறுதி அளித்தான். அவன் அன்னையை விட, சகோதரியை விட, அவனுடன்  இரவைக் கழித்து அவனைத் தழுவி உறங்கிய அனைத்து பெண்களையும் விட, என்னை விட – வாழ்க்கைத் துணையாகிய நான் அவளுடைய இடத்தில், அந்தக் குழிக்குள் சிக்கி இடம் மாற்றிக்கொள்ள எந்த விலை வேண்டுமானாலும் கொடுக்கக்கூடிய என்னை, அஸூசேனாவின் உயிருக்கு மாற்றாக உயிரை விடத் தயாராக இருக்கும் என்னை விட – அவளை அதிகமாக நேசிப்பதாகக் கூறினான்.

அவன் குனிந்து, பெயரிடவியலாத இனிய துயரம் ததும்பும் உணர்வுகளுடன், அவள் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில், எப்படி அவர்கள் தங்களின் துயரங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு, எப்படி அந்தக் களி மண்ணிலிருந்து விடுதலை பெற்று, பறக்கும் வல்லூறுகளுக்கும் ஹெலிகாப்டர்களுக்கும் மேலே உயர்ந்து, எப்படி வெற்றுப் புலம்பல்களின், ஊழல்களின் பெரும் சகதிக் குவியலுக்கும் மேலே பறந்து சென்றார்கள் என உணர்ந்தேன். இறுதியில் எப்படி மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் உணர்ந்தேன். அவள் விரைவில் மரணத்தைத் தழுவ வேண்டுமென்று ரோஃப் காஹ்லோ அமைதியாக பிரார்த்தித்தான். ஏனென்றால் தாள முடியாத வலியில் அவள் துடித்துக் கொண்டிருந்தாள் என்பதை அவன் அறிவான்.

அந்த நேரத்தில் எப்படியோ மோட்டார் பம்ப் கிடைத்து விட்டது. ஒரு ராணுவ ஜெனெரலை தொடர்புகொள்ள, அவரும் அடுத்த நாள் காலை இராணுவச் சரக்கு விமானத்தின் மூலம் அனுப்பிச் சேர்ப்பித்து விடுவதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அதே மூன்றாம் நாளின் இரவில், சற்றும் சிமிட்டாமல் அவளையே காட்சிப்படுத்திக் கொண்டிருந்த பளீர் வண்ண விளக்குகளின் வெளிச்சத்திற்கும் நூறு புகைப்படக் கருவிகளின் ஆடிகளுக்கும் கீழே அஸூசேனா, இறுதி வரை அவளைத் தாங்கிப் பிடித்த தோழனின் கண்களைப் பார்த்தவாறே மூச்சை நிறுத்தினாள். மிதவையை நீக்கிய ரோஃப் காஹ்லோ அஸூசேனாவின் இமை மடல்களை மூடிய பின், சில கணங்கள் அவளை எடுத்துத் தனது மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டு, அதன்பின் அவளைச் செல்ல அனுமதித்தான். அவள் மெல்ல மெல்ல மூழ்கிப் போனாள். சேற்றில் ஒரு மலர்.

நீ என்னிடம் திரும்ப வந்து விட்டாய். ஆனால் நீ முன்பு போல இல்லை. அடிக்கடி உன்னுடன் தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்து, நாமிருவரும் அஸூசேனாவின் காணொளியை மீண்டும் பார்ப்போம். அதை உன்னிப்பாகப் பார்த்து, அவளைக் காப்பாற்ற ஏதாவது செய்திருக்க முடியுமா, அந்த நேரத்தில் மனதில் தோன்றாத ஏதவது வழிமுறை இருந்ததா என்று தேடுவாய் அல்லது உன்னை நீயே கண்டுகொள்ள அதில் ஏதாவது பார்க்கக்கூடும். கண்ணாடி முன் நிர்வாணத்தைப் பார்ப்பது போல. உனது புகைப்படக் கருவி அலமாரியில் கைபடாமல் இருக்கிறது. நீ பாடுவதோ, எழுதுவதோ இல்லை. நீண்ட நேரம் ஜன்னல் முன் அமர்ந்து மலைத்தொடர்களை வெறித்துப் பார்க்கிறாய். உன்னருகில் நின்றபடி, நீ உனக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பயணத்தை நிறைவு செய்வதற்காக, உனது காயங்கள் ஆறுவதற்காக நான் காத்திருக்கிறேன். எனக்குத் தெரியும், உனது துர்க்கனவுகளிலிருந்து நீ மீண்டு திரும்பி வருகையில், நாம் மறுபடியும் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடப்போம்.. முன்பு போலவே..

*

ஆசிரியர் குறிப்பு: இஸபெல் அயாந்தே (1942- ) சிலே நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர். இதுவரை நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் உட்பட இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார். தனது படைப்புகளுக்காக சிலே தேசிய இலக்கிய விருது, American Book Awards, Common Wealth of Distinguished Service Award, Award for Outstanding Achievement in Literature, Presidential Medal for Freedom உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர்.

இஸபெல் அயாந்தே

அவரது நாவல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுய அனுபவங்கள், அவர் பார்த்தறிந்த சொந்த நாட்டின் அரசியல் நிலையாமை, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட துயர்கள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. ‘நிதர்சனம் என்பது நாம் மேலோட்டமாக பார்ப்பது மட்டுமல்ல, அது தனக்கான ஒரு மாயத் தன்மையையும் கொண்டது. நாம் விரும்பினால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் துயரென்று நினைக்காமல் அழகாக்கிக் கொள்ளலாம்’ என்று இவரது அன்னை இவரிடம் கூறியதன் பாதிப்பை இவருடைய எழுத்தில் காணலாம். புனைவுகளில் மாய யதார்த்தம் இணைத்து எழுதுவதென்பது இவரது தனிப்பட்ட எழுத்து வகைமை. அதேவேளையில், பெண்களின் அடையாளம் பற்றிய கருத்துகளையும் இவரது எழுத்தில் தீர்க்கமாகக் காணலாம்.

Omayra Sánchez

1985ஆம் வருடம் கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது நிகழ்ந்த பேரிடர் சம்பவங்களின் பின்னணியில் பெரும் சேதமும் இருபத்து மூவாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்பும் ஏற்பட்டது. அப்போது, சகதிக் குவியலில் சிக்குண்ட ஒரு சிறுமியை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்தின. அந்தச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவே இந்தச் சிறுகதை.

https://en.wikipedia.org/wiki/Omayra_S%C3%A1nchez

Original story:And of Clay are We Created‘ taken from the short story Collection, ’The Stories of Eva Luna‘ by Isabel Allende.