இரட்டையர்களில் ஒருவர் – அம்ப்ரோஸ் பியர்ஸ் – தமிழில்: கார்குழலி

by கார்குழலி
0 comment

மறைந்த மார்டிமர் பர்ரின் காகிதங்களுக்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடிதம்.

இரட்டையர்களில் ஒருவராக இருந்த அனுபவத்தால், நமக்கு அறிமுகமான இயற்கையின் விதிகளால் விவரிக்கப்பட முடியாத ஏதேனும் ஒன்றைப் பார்த்திருக்கிறேனா என்று என்னைக் கேட்கிறீர்கள். நம் எல்லோருக்கும் ஒரேவிதமான இயற்கை விதிகளைப் பற்றித் தெரிந்திருக்க முடியாதல்லவா? தீர்ப்பை நீங்கள்தான் சொல்லவேண்டும். எனக்குத் தெரியாதவை சில உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், விதிகளுக்கு உட்படாதவை என்று நான் நினைப்பவை உங்களுக்குத் தெளிவாகப் புரியலாம்.

என் சகோதரன் ஜானை உங்களுக்குத் தெரியும் – அதாவது, நான் இல்லை என்று தெரிந்தபோது அவனைத் தெரியும். ஆனால் ஒரே மாதிரி தோன்றவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டால், எங்கள் இருவரில் யார் எவர் என்பதை நீங்களோ வேறு யாருமோ கண்டுபிடிக்க முடியாது என்று நம்புகிறேன். எங்கள் பெற்றோர்களால் முடியவில்லை. எனக்குத் தெரிந்த வகையில் நாங்கள் மட்டும்தான் அவ்வளவு நெருக்கமான உருவ ஒற்றுமை கொண்டவர்கள். என் சகோதரன் ஜான் என்று சொன்னாலும், அவன் பெயர் ஹென்றி இல்லை என்பதும் என்னுடையது ஜானில்லை என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. வழக்கம்போலத்தான் எங்களுக்கும் பெயர்சூட்டு விழா நடந்தது. ஆனால், அதற்குப் பிறகு எங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக சின்ன குறிகளைப் பச்சைகுத்தும்போது அதைச் செய்பவர் பிசகிவிட்டார். என்னுடைய முன்கையில் ஒரு சின்ன ‘H’-உம், அவன் கையில் ‘J’-யும் இருந்தாலும் அந்த இரண்டு எழுத்துகளும் இடம்மாறிக் குத்தப்பட்டனவா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.

சிறுவர்களாக இருந்தபோது உடையைக் கொண்டோ வேறு எளிய வழிமுறையிலோ எங்களை வேறுபடுத்துவதற்கு பெற்றோர் முயற்சி செய்தனர். ஆனால் நாங்கள் அடிக்கடி உடையை மாற்றிப் போட்டுக் கொள்வோம் அல்லது எதிரிகளின் முயற்சியைத் தோற்கடிப்போம். அவர்களும் அந்தப் பயனற்ற வழிமுறைகளைக் கைவிட்டனர். நாங்கள் ஒரே சமயத்தில் வீட்டில் இருந்த வருடங்கள் எல்லாம் இந்தச் சூழலின் சிரமத்தை உணர்ந்த அனைவரும் எங்கள் இருவரையும் ‘ஜென்றி’ என்று அழைப்பது மூலம் ஒரு வகையாகச் சமாளித்தனர். பார்த்தவுடன் தெரியும் வகையில் புருவத்துக்கிடையே சூடு போடாமல் எப்படி இருந்தார் என்று அப்பாவின் பொறுமையைப் பலமுறை வியந்திருக்கிறேன். நாங்கள் ஓரளவுக்கு நல்ல பையன்களாகவும் குறும்பையும் அவமானமூட்டும் செயல்களையும் குறைவாகவே செய்ததாலும்தான் சூடு போடுவதில் இருந்து தப்பித்தோம். அப்பா இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர், இயற்கையின் எதார்த்தமான நகைச்சுவையை அமைதியாக ரசித்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

நாங்கள் கலிஃபோர்னியாவுக்கு வந்து சான் ஹொஸேயில் குடியேறிய பிறகு (உங்களைப் போன்ற நண்பர் ஒருவரைச் சந்தித்தது மட்டுமே எங்களுக்கு அங்கே காத்திருந்த நல்லதிர்ஷ்டம்) ஒரே வாரத்தில் பெற்றோர் இருவரும் இறந்ததில் உடைந்து போனோம். இறக்கும்போது தந்தை கடனால் நொடித்துப் போயிருந்தார். அவருடைய கடன்களை அடைப்பதற்காக வீட்டை விற்றோம். கிழக்குப் பகுதியில் இருந்த உறவினர்களின் வீட்டுக்கு எங்கள் சகோதரிகள் திரும்பிச் சென்றார்கள். உங்களுடைய அன்பின் காரணமாக அந்தச் சமயத்தில் இருபத்தியிரண்டு வயது நிரம்பியிருந்த ஜானுக்கும் எனக்கும் சான் பிரான்சிஸ்கோவில், நகரின் வெவ்வேறு பகுதிகளில், வேலை கிடைத்தது. சூழ்நிலை காரணமாக நாங்கள் இருவரும் ஒன்றாக வசிக்க முடியவில்லை. ஒருவரையொருவர் அடிக்கடி பார்த்துக்கொள்ளவுமில்லை. சில சமயம் வாரம் ஒருமுறை மட்டுமே பார்த்துக்கொண்டோம். இருவருக்கும் வேறுவேறு நண்பர்கள்தான் என்பதால் நாங்கள் வியக்கத்தக்க வகையில் ஒரே போல இருப்பது ஒருவருக்கும் தெரியவில்லை. நீங்கள் கேட்ட விஷயத்தைப் பற்றி இப்போது சொல்லப் போகிறேன்.

இந்த நகரத்துக்கு நாங்கள் வந்த கொஞ்ச நாளில், ஒரு மதிய நேரத்தில், மார்க்கெட் தெருவின் வழியே நான் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, நன்றாக உடை உடுத்தியிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் நட்புறவோடு வணக்கம் சொன்னார். பின்னர், “ஸ்டீவன்ஸ், நீங்கள் அதிகம் வெளியே செல்ல மாட்டீர்கள் என்று தெரியும். என் மனைவியிடம் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். உங்களை வீட்டுக்கு வரச் சொன்னார். என் வீட்டுப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என நானும் நினைக்கிறேன். என் வீட்டுப் பெண்களுடன் பேசி அலுத்து விட்டதெனில் நாமிருவரும் பில்லியர்ட்ஸ் விளையாடலாம்”, என்றார்.

பிரகாசமான புன்னகையுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அவர் இதைச் சொன்னதால் மறுக்க மனமில்லை. இதற்குமுன் அந்த மனிதரை என் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை என்றாலும் உடனே பதில் சொன்னேன். “நீங்கள் மிகவும் நல்லவராக இருக்கிறீர்கள். உங்களுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் திருமதி. மார்கோவனிடம் சொல்லிவிடுங்கள். நான் நிச்சயமாக கலந்துகொள்கிறேன் என்றும் தெரிவித்துவிடுங்கள்”.

கைகுலுக்கி இனிமையான சொற்களுடன் விடைபெற்றுக்கொண்டார் அந்த மனிதர். என்னுடைய சகோதரன் என்று என்னைத் தவறுதலாக எண்ணிவிட்டார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அப்படிப்பட்ட ஒரு பிழைக்குப் பழக்கப்பட்டிருந்தேன். மேலும் முக்கியமான விஷயம் என்றால் ஒழிய அதை சரிசெய்யும் வேலையை நான் செய்வதில்லை. ஆனால், இந்த மனிதரின் பெயர் மார்கோவன் என்பது எப்படித் தெரிந்தது? சரியாகத்தான் இருக்கும் என்ற நிகழ்வாய்ப்பின் சாத்தியத்தை நம்பி, போகிறபோக்கில் ஒரு மனிதரைப் பார்த்துச் சொல்லிவிடக் கூடிய பெயரில்லை அது. உண்மையில், அந்த மனிதரைப் போலவே அந்தப் பெயரும் எனக்கு அறிமுகமில்லாத ஒன்று.

மறுநாள் காலை, முதல் வேலையாக என் சகோதரன் பணிபுரியும் இடத்துக்குச் சென்றேன். அவன் வசூல் செய்யவேண்டிய பில்களுடன் ஆஃபீசில் இருந்து வெளியே வரும்போது எதிர்கொண்டேன். அவன் சார்பில் ஒத்துக்கொண்டுவிட்டேன் என்றும் அவனுக்குப் போக விருப்பமில்லை என்றால் அவன் பெயரில் நானே சென்று வருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சிதான் என்றும் சொன்னேன்.

“இது விநோதமா இருக்கே”, என்று யோசனையுடன் சொன்னான். “இந்த அலுவலகத்தில் எனக்கு நன்றாக அறிமுகமானவரும் பிடித்தமானவரும் மார்கோவன் மட்டும்தான். இன்று காலை வழக்கமான விசாரிப்புகளைக் கேட்டு முடித்ததும் ஏதோ ஒரு உந்துதலில் அவரிடம் இப்படிச் சொன்னேன், ‘ஓ, திரு. மார்கோவன், மன்னிக்க வேண்டும். உங்களது முகவரியை கேட்டுக்கொள்ள மறந்துவிட்டேன்’. அவரது முகவரியை வாங்கிக்கொண்ட பிறகும் அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன் என இப்போது வரைக்கும் தெரியவில்லை. உன்னுடைய அகம்பாவத்தின் பலனை நீயே அனுபவிக்கப் போவதாய்ச் சொன்னதில் மகிழ்ச்சி. இருந்தாலும், உனக்கு ஆட்சேபனை இல்லையெனில் அந்த விருந்தை நானே சாப்பிட்டுக்கொள்கிறேன்”.

அதே இடத்தில் பல விருந்துகளில் சாப்பிட்டான் – அவனது தேவைக்கும் அதிகமாக, அவற்றின் தரத்தைத் தாழ்த்திப் பேசப் போவதில்லை. செல்வி மார்கோவனைக் காதலிக்க ஆரம்பித்து, திருமணம் செய்துகொள்ள விரும்புவதைத் தெரிவித்து அது ஏற்றுக்கொள்ளவும்பட்டது.

இந்தத் திருமண நிச்சயத்தைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்திய பல வாரங்களுக்குப் பிறகுதான் அந்த இளம் பெண்ணையும் அவளுடைய குடும்பத்தையும் சந்தித்து அறிமுகம் செய்துகொள்வதற்கு அவகாசம் கிடைத்தது. அதற்கு முன்னால், கியர்னி தெருவில் ஒரு நாள், அழகான – ஆனால் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுபவனைப் போலத் தோற்றம் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவனைத் தொடரவும் நோட்டம்போடவும் ஏதோ ஒன்று என்னை உந்தியது. இதைக் கொஞ்சமும் தடுமாற்றமோ வெட்கமோ இல்லாமல் செய்தேன். அவன் கியரி தெருவில் திரும்பி யூனியன் சதுக்கம் வரை நடந்தான். அங்கே தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு சதுக்கத்துக்குள் நுழைந்தான். பாதையில் இங்குமங்கும் கொஞ்சநேரம் திரிந்தான், யாருக்காகவோ காத்திருக்கிறான் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

சிறிது நேரத்தில், நாகரிகமாக உடையணிந்த அழகான இளம் பெண்ணொருத்தி அவனோடு சேர்ந்துகொண்டாள். இருவரும் ஸ்டாக்டன் தெருவழியே நடந்துபோனார்கள், நானும் பின்தொடர்ந்தேன். மாறி மாறித் திரும்பி, ஒரு தெருவிலிருந்து மற்றொன்றுக்குச் சென்றார்கள். இறுதியில் தங்களைச் சுற்றியும் அவசர அவசரமாக நோட்டமிட்டபடி – அந்தச் சமயத்தில் நான் சட்டென ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன் – ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்கள். அது இருந்த இடத்தைப் பற்றிச் சொல்வதில் எனக்கு இஷ்டமில்லை. அது இருந்த இடம் அதன் குணநலனைக் காட்டிலும் சிறப்பாகவே இருந்தது.

இந்த இரண்டு முன்பின் அறியாதவர்களையும் பின்தொடர்வதில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் செயலாற்றினேன் என்று சொல்லமாட்டேன். இதுகுறித்து நான் அவமானப்பட்டேனா இல்லையா என்பது அதைப் பற்றித் தெரிந்துகொள்பவரின் குணநலனைச் சார்ந்தது என்று சொல்வேன். உங்களின் கேள்வியால் துவங்கிய இந்தப் பகிர்தலில் தயக்கமோ வெட்கமோ இல்லாமல் அதுகுறித்து சொல்லப்போகிறேன்.

ஒரு வாரம் கழித்து, தன்னுடைய வருங்கால மாமனாரின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றான் ஜான். அந்த மானக்கேடான சாகசத்தின் கதாநாயகி செல்வி மார்கோவன்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். இதை நீங்கள் ஏற்கனவே ஊகித்திருப்பீர்கள் என்றாலும் எனக்கு அளவுகடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மானக்கேடான சாகசத்தின் புகழ்பெற்ற அழகான கதாநாயகி என்று சொல்வதுதான் சரி. அந்த உண்மை இதனால் முக்கியத்துவம் பெறுகிறது. அவளுடைய அழகு என்னை எப்படிப்பட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால், முன்னர் நான் பார்த்திருந்த இளம்பெண்ணின் அடையாளத்தைச் சந்தேகப்பட வைத்தது. அந்த நேரத்தில் அவளுடைய முகத்தின் அற்புதமான ஈர்ப்பை எப்படி என்னில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனது? ஆனால், இல்லை – தவறு ஏற்பட வாய்ப்பே இல்லை. உடை, ஒளி, சுற்றுப்புறம் இவற்றால்தான் வேறு யாரோ போலத் தெரிந்தது.

அந்த வீட்டில் அந்த மாலைப்பொழுதை நானும் ஜானும் எங்களின் உருவ ஒற்றுமையால் ஏற்பட்ட அனுபவத்தை நுட்பமான கேலிப்பேச்சுகளுடன் பகிர்ந்தபடி கழித்தோம். அந்த இளம்பெண்ணும் நானும் தனித்து விடப்பட்ட சில நிமிடங்களில் அவளின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து திடீரென ஒருவிதத் தீவிரத்துடன் பேச ஆரம்பித்தேன். “செல்வி மார்கோவன், உங்களுக்கும் ஒரு இரட்டையர் இருக்கிறார். சென்ற வாரம் செவ்வாய்க் கிழமையன்று யூனியன் சதுக்கத்தில் பார்த்தேன்”.

பெரிய சாம்பல் நிற விழிகளால் என்னை ஒரு நொடி உற்றுப்பார்த்தாள். ஆனால் என் பார்வையைவிடவும் சில புள்ளிகள் நிலையற்றதாக இருந்தது அவளது பார்வை. உடனே பின்வாங்கி அவளுடைய காலணியின் நுனியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“அவள் அச்சுஅசலாக என்னைப் போலவே இருந்தாளா?” என்று கேட்டாள். அதில் தொனித்த விட்டேற்றித்தனம் கொஞ்சம் அதிகப்படியாக இருப்பது போலத் தெரிந்தது.

“அப்படியொரு ஒற்றுமை”, என்றேன். “அவளை மிகவும் ரசித்ததால், தவறவிட விருப்பம் இல்லாததால், பின்தொடர்ந்து சென்றேன். செல்வி மார்கோவன், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியுதா?”

வெளுத்துப் போயிருந்தாலும் அமைதியாகவே இருந்தாள். மீண்டும் கண்களை உயர்த்தி, கொஞ்சமும் தயக்கமில்லாத ஒரு பார்வையால், என்னுடையதைப் பார்த்தாள்.

“நான் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டாள். “உங்கள் நிபந்தனைகளைச் சொல்லத் தயங்க வேண்டாம். அவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன்”.

யோசிப்பதற்குக் கிடைத்த சிறிய அவகாசத்தில் இந்தப் பெண்ணைச் சமாளிக்க எளிய சாதாரணமான வழிமுறைகளோ எதிர்பார்ப்புகளோ போதாது என்பது தெளிவாகத் தெரிந்தது.

“செல்வி மார்கோவன்”, என் மனதில் இருந்த கருணை குரலில் தொனித்தது. “கொடூரமான கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. உங்களின்மீது புதிய அவமானங்களைச் சுமத்துவதற்குப் பதில், நீங்கள் விடுதலை பெறுவதற்காக உதவத் தயாராக இருக்கிறேன்”.

துயரத்துடனும் நம்பிக்கையே இல்லாமலும் தலையை அசைத்தாள். மன உளைச்சலுடன் நான் தொடர்ந்தேன். “உங்கள் அழகு என்னை நிலைகுலைய வைக்கிறது. உங்களுடைய வெளிப்படையான பேச்சும் வேதனையும் என்னை ஆற்றலற்றவன் ஆக்குகிறது. மனசாட்சியின்படி நடக்க உங்களுக்குச் சுதந்திரமிருந்தால், எது சிறந்தது என்று தோன்றுகிறதோ அதைக் கட்டாயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் – அந்த வானுலகம்தான் நம் எல்லோரையும் காப்பாற்றவேண்டும்! ஆனால், என்னால் நியாயப்படுத்தக் கூடிய வேறு நிலைப்பாடுகளால் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பேன் என்பது தவிர என்னிடம் பயப்படுவதற்கு உங்களுக்கு ஒன்றுமில்லை.”

இதே சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றாலும், இதுதான் நான் சொன்னதின் சாராம்சம். திடீரெனவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் இருந்த என்னுடைய உணர்வுகள் அனுமதித்த வரையில் அவற்றை வெளிப்படுத்தினேன். அவளை மறுபடியும் பார்க்காமல் அங்கிருந்து எழுந்து செல்லும்போது, அறைக்குள் நுழைந்த மற்றவர்களைப் பார்த்து, “செல்வி மார்கோவனுக்கு என்னுடைய மாலை வணக்கத்தைச் சொன்னேன். நான் நினைத்ததை விடவும் நேரமாகி விட்டது”, என்று முடிந்த வரையில் சலனமின்றியும் அமைதியாகவும் சொன்னேன்.

ஜானும் என்னுடன் கிளம்ப முடிவு செய்தான். ஜூலியா பழகும் விதத்தில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்ததா என்று தெருவில் இறங்கி நடக்கும்போது என்னிடம் கேட்டான்.

“அவளுக்கு உடம்பு சரியில்லாததுபோலத் தோன்றியது. அதனால்தான் கிளம்பிவிட்டேன்,” என்று பதில் சொன்னேன். நாங்கள் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மறுநாள் மாலை, என் இருப்பிடத்திற்குத் தாமதமாக வந்தேன். முந்தைய மாலையின் நிகழ்வுகள் எனக்குப் படபடப்பையும் உடல்நலக் குறைவையும் ஏற்படுத்தி இருந்தது. காற்றோட்டமான வெட்டவெளியில் நடப்பதன் மூலம் தெளிவான சிந்தனையைப் பெறவும் உடல்நலத்தை சரிசெய்து கொள்ளவும் முயன்றேன். கொடூரமான கேடு விளையப்போகிறது என்ற உள்ளுணர்வின் அழுத்தத்தில் துவண்டேன் – என்ன நடக்கப்போகிறது என்பதை முழுவதுமாக உணர முடியவில்லை. கடுங்குளிருடன் மூடுபனி சூழ்ந்த இரவாக இருந்தது. என் ஆடையும் தலைமுடியும் ஈரமாக இருந்ததால் குளிரில் நடுங்கினேன். இரவு அங்கியும் செருப்பும் அணிந்துகொண்டு கனன்று எரியும் கரியடுப்பின் முன்னால் உட்கார்ந்து இருந்தது மேலும் அசௌகரியத்தைத்தான் ஏற்படுத்தியது. இப்போது எனக்கு நடுக்கமேற்படவில்லை, ஆனால் தூக்கி வாரிப்போட்டது – இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏதோ பெரிய துரதிர்ஷ்டம் நிகழப்போகிறது என்ற பயம் வலுவாக இருந்தது. அந்த எண்ணம் உள்ளத்தைப் பலவீனப்படுத்தியது. உண்மையான சோகத்தை வரவழைத்துக் கொள்வதன் மூலம் அதை விரட்ட முயன்றேன்.

வரவிருந்த கொடூரமான எதிர்காலத்தை வலிமிகுந்த கடந்த காலத்தின் நினைவுகளால் இடம் மாற்ற முயன்றேன். என் பெற்றோரின் இறப்பைப் பற்றி நினைத்துக்கொண்டு அவர்களுடைய படுக்கையின் அருகிலும் சவக்குழியின் பக்கத்திலும் விரிந்த துயரமிகு காட்சிகளில் மனதைப் பொருத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன். பல காலத்துக்கு முன்னால் வேறு யாருக்கோ நடந்தவைபோல அவை தெளிவில்லாமலும் உண்மையில்லை என்ற உணர்வையும் தந்தன. திடீரென, இழுத்துக் கட்டப்பட்ட கம்பியைக் கடினமான உலோகம் தாக்கினால் விட்டுப்போவது போல என்னுடைய எண்ணங்களுக்குள் ஏதோ ஒன்று நுழைந்தது – வேறு எந்த ஒப்பீடும் தோன்றவில்லை – உயிர்போகும் வலியில் அலறும் குரல் ஒன்றைக் கேட்டேன். அந்தக் குரல் என் சகோதரனுடையது. ஜன்னலுக்கு வெளியே தெருவில் இருந்து ஒலிப்பதுபோல இருந்தது.

பாய்ந்து சென்று ஜன்னலை வேகமாகத் திறந்தேன். நேரெதிரே இருந்த தெருவிளக்கு ஒன்று ஈரமான நடைபாதையிலும் வீட்டின் முகப்புகளிலும் மங்கலான அச்சமூட்டும் ஒளியை வீசியது. சட்டையின் காலரை மேல்நோக்கி மடித்துவிட்டுக் கொண்டு வாயிற்கதவின் தூணொன்றின் மீது சாய்ந்து நின்றபடி அமைதியாக சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தார் அந்த ஒற்றை போலீஸ்காரர். வேறு யாரும் கண்ணில்படவில்லை. ஜன்னலை மூடி, திரைச்சீலையை கீழே இழுத்துவிட்டு, நெருப்பின் முன் உட்கார்ந்து, என் சுற்றுப்புறத்தின்மீது மனதை ஒருமிக்க முயன்றேன். அதற்கு ஒத்தாசையூட்டும் வகையில் பழக்கமான செயல் ஒன்றைச் செய்வதற்காக என்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பதினொன்றரை மணி காட்டியது.

மறுபடியும் அந்த அச்சமூட்டும் அலறலைக் கேட்டேன்! அறைக்குள் இருந்து வந்ததுபோல இருந்தது – எனக்கு அருகில் இருந்து. நான் பயந்துபோனேன், சில நொடிகள் நகரக்கூட சக்தியில்லாமல் போனது. சில நிமிடங்கள் கழித்து – இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நினைவுக்கு வரவில்லை – இதுவரை பார்த்திராத தெருவொன்றின் வழியே என்னால் இயன்றவரை வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். நான் எங்கே இருக்கிறேன் என்றோ எங்கே போகிறேன் என்றோ தெரியவில்லை. ஆனால், வாயிலில் இரண்டு மூன்று குதிரை வண்டிகள் நின்றுகொண்டிருந்த, உள்ளே அங்குமிங்கும் விளக்குகள் நகர்ந்துகொண்டிருந்த, குழப்பமான மங்கலான குரல்கள் கேட்ட, ஒரு வீட்டின் படியில் திடீரென குதித்தேறிச் சென்றேன். அது திரு. மார்கோவனின் வீடு.

அங்கே நடந்தது என்ன என்பது உனக்குத் தெரியுமா, என் நல்ல நண்பனே! ஜூலியா மார்கோவன் ஒரு அறையில் கிடத்தப்பட்டிருந்தாள். விஷத்தினால் அவள் இறந்து பல மணி நேரமாகி இருந்தது. இன்னொரு அறையில், தன் கையில் இருந்த துப்பாக்கியினால் குண்டு துளைத்த நெஞ்சில் இருந்து இரத்தம் கசியக் கிடந்தான் ஜான் ஸ்டீவன்ஸ். நான் அறைக்குள் வேகமாக நுழைந்தேன். மருத்துவர்களை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு அவனுடைய நெற்றியில் என் கையை வைத்ததும் கண்ணைத் திறந்தான். என்னைப் பார்த்துவிட்டு, அவற்றை மீண்டும் மூடி, எந்தவித அறிகுறியுமின்றி இறந்து போனான்.

அடுத்த ஆறு வாரங்களில் நடந்தது எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. அழகான உங்கள் வீட்டில், தெய்வத்தன்மை பொருந்திய உங்கள் மனைவி, நான் மீண்டும் உயிர்பெற்று நடமாடும் அளவுக்கு என்னைக் கவனித்து உடலைத் தேற்றினார். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும், ஆனால் உங்களுக்குத் தெரியாதது இதுதான். உங்களின் உளவியல் ஆய்வுகளின் உரிப்பொருளுடன் தொடர்பற்றது. உங்களுக்கே உரித்தான பண்புநயமும் அக்கறையும் கொண்டு நான் அளித்திருப்பதைக் காட்டிலும் குறைவான உதவியையே நீங்கள் கேட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அந்தக் கிளையைச் சார்ந்ததில்லை இது.

பல வருடங்களுக்குப் பிறகு, நிலவொளி வீசும் ஓர் இரவில், யூனியன் சதுக்கத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தேன். காலம் தாழ்ந்திருந்தது. சதுக்கத்தில் யாருமே இல்லை. நான் முன்னர் கண்டிருந்த விதிவசமான சந்திப்பு நடந்த இடத்துக்கு வந்தபோது, கடந்த காலத்தின் குறிப்பிட்ட நினைவுகள் மனதில் இயல்பாகத் தோன்றின. மிகுந்த மனவலியைத் தரும் எண்ணங்களையே சிந்திக்க உந்தும் விவரிக்க முடியாத விபரீதப் பண்பினால் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்.

சதுக்கத்துக்குள் நுழைந்த ஒரு மனிதன் நடைபாதையில் நடந்து என்னை நோக்கி வந்தான். கைகளைப் பின்புறம் கோர்த்திருந்தான், தலை கவிழ்ந்திருந்தது. எதையுமே கவனிக்காதது போல இருந்தான். நான் அமர்ந்திருந்த நிழலை நோக்கி அவன் வருகையில், பல ஆண்டுகளுக்கு முன்னர், இதே இடத்தில் ஜூலியாவுடன் நான் பார்த்திருந்த மனிதன் என்புதைத் தெரிந்துகொண்டேன். அச்சமூட்டும் வகையில் மாறியிருந்தான் – நரைமுடியுடன் நசிந்து, மெலிந்து, சோர்ந்து போயிருந்தான். கேளிக்கைகளில் ஈடுபட்டதாலும் தீயொழுக்கத்தினாலும் அவனுடைய ஆரோக்கியம் பாழாகி நோயுற்று இருந்ததும் தெளிவாகத் தெரிந்தது. உடை சீர்கலைந்து போயிருந்தது. நெற்றிமீது கலைந்து விழுந்திருந்த முடியைப் பார்க்கும்போது அமானுஷ்யமாகவும் அதே சமயத்தில் கவர்ச்சியாகவும் இருந்தது. அவனைப் பார்த்தால் இப்படிச் சுதந்திரமாகச் சுற்றவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுபோலத் தெரிந்தது – ஏதாவது ஒரு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில்.

குறிப்பிட்ட எந்த நோக்கமும் இல்லாமல், எழுந்துபோய் அவன் எதிரில் நின்றேன். தலையை உயர்த்தி என் முகத்தை முழுமையாகப் பார்த்தான். அவன் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான மாற்றத்தை விவரிக்க சொற்களே இல்லை. வாய்விட்டுச் சொல்லமுடியாத ஒரு திகிலைத் தேக்கிய பார்வை அது. நேருக்கு நேர் ஒரு பேயைப் பார்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டான். ஆனால், அவன் தைரியமுள்ள ஆண்மகன். “நாசமாய் போ, ஜான் ஸ்டீவன்ஸ்!” என்று அலறியபடி நடுங்கும் கையை உயர்த்தி வலுவற்ற முஷ்டியால் என் முகத்தைக் குத்த முயன்றான். நான் அங்கிருந்து நடக்க ஆரம்பித்ததால் தலைகுப்புற சரளைக்கல்லின் மீது விழுந்தான்.

யாரோ அவனைக் கண்டுபிடித்தார்கள், உயிரே அற்ற அவனுடைய உடலை. அதற்கு மேல் அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை, அவன் பெயர்கூடத் தெரியவில்லை. அவனைப் போன்ற ஒருவன் இறந்துவிட்டான் என்ற செய்தி மட்டுமே போதுமானது.

*

ஆங்கில மூலம்: One of Twins by Ambrose Bierce