1

இப்படி வந்து உட்கார்ந்திருக்க நேருமென்று சண்மு எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றுமொரு வெற்றுநாள் என்பதாகத்தான் புறப்பட்டிருந்தான். கடைசியில் இப்படி கொண்டு வந்து விட்டிருக்கிறது. அடர்த்தியாக இருட்டிவிட்டிருந்தாலும், எந்தவோர் அமானுஷ்ய அறிகுறிகளும் இல்லாமல்தான் அந்த இடம் இருந்தது. முன்னிரவிற்கான சம்பிரதாய சப்தங்கள் தாண்டிய சிலவும் கேட்டுக்கொண்டிருந்தன. அடுத்த வளைவிலிருந்த டீக்கடைகளிலிருந்து மனநிலைக்குத் துளியும் ஒவ்வாத பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவை இல்லாவிடினும் அவ்விடத்தில் தனிமையில் உட்கார்ந்திருக்க முடியாதுதான். தனித்துவிடப்பட்டதன் துயரத்தை, உயிரற்றுக் கிடந்த அலைபேசி பெரிதாக்குவதாக தெரிந்தது.

‘இந்தா வந்துர்றேன்’ என்று போன காக்கிச் சீருடைக்காரர் மிக நீண்ட அரைமணி நேரம் கழித்து ஒருவழியாக வந்துசேர்ந்தார். வந்தவர் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு எதிரிலிருந்த திண்டில் அமர்ந்த தினுசில் தன்னைக் கண்டுகொண்டதாகக்கூட அவனுக்கு படவில்லை.

‘ச்சார்ஜ் போட சுச்சு போர்டு எதும் இருக்குதா?’

‘அம்பது ரூவா கொடு, நா போட்டுவிட்றேன்’

ஓர் அறையைத் திறந்துவிட்டார். மங்கலான குண்டு பல்ப் ஒளியில் படுக்கையொன்று விரிக்கப்பட்டிருந்தது. தலையணையோரத்தில் கொசுவர்த்திச் சுருளொன்று எரிந்து அடங்கிய வட்டமான சாம்பல் அச்சுமாறாமல் கிடந்தது. நிற்கவே முடியாத அளவிற்கு பிணவாடை. இங்கேயா படுத்துக்கொள்வான்? அலைபேசியை இணைப்பில் பொருத்திவிட்டு சண்மு சட்டென வெளியே வந்துவிட்டான். அந்த மனிதரிடம் ஒரு பீடியை வாங்கிக்கொண்டால் தேவலாம் என்றிருந்தது. கேட்க நா வரவில்லை. உள்ளுக்குள்ளிருக்கும் அலைச்சல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

‘போலீஸ் சொல்லிட்டா பாடிய அப்புடியே கொடுத்துருவாங்கல்ல’, குரலில் ஏக்கம் இருந்தது.

‘ஆங்.. மார்ச்சுவரி சீட்டு தர்றேன். போயி கேட்டுப் பாரு’, சட்டைப்பையில் மடித்துவைத்திருந்த மூன்று மஞ்சள் காகிதங்களில் ஒன்றையெடுத்து சண்முவிடம் இதுவா என்பதுபோல கேட்டார். பெயர் – பழனிவேல்.. ‘இந்தச் சீட்டுதான்’. சண்மு வாங்கிக்கொண்டான்.

‘செத்தவரு ஒனக்கு அண்ணனா?’

‘மாமா’

‘செறு வயசாட்டு இருக்கு. அம்மாவோட தம்பிக்காரா?’

கேள்வி காதில் விழாததைப் போலெல்லாம் இல்லை என்றாலும் பதில் வராமலிருக்க, காக்கி இன்னொரு முறை அதையே கேட்டார்.

‘அத்த வீட்டுக்காரரு’ பெருமூச்சை விட்டுக்கொண்டு வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.

2

சண்முவிற்கு வருத்தமாகவெல்லாம் இருக்கவில்லை. வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என்ற பதைபதைப்பு மட்டும்தான். இத்தனைக்கும் மாமாவிற்கு முப்பத்தியொன்பது வயதுதான். காலை காசாக்குடியிலிருந்து கிளம்பும்போது அவனை முந்திக்கொண்டு ஓடிப்போய் பேருந்தில் தவ்விக்கொண்டவர்தான் இப்போது இப்படிக் கிடக்கிறார். ‘ஒங்க வம்சமே மூட்டு செத்த வோளிகடா’. அவர் சொன்னதையெல்லாம் சட்டையே செய்யவில்லை. பழகிப்போய்விட்டது. இந்த நாளை இந்த விரும்பத்தகாத மனிதனுடன்தான் செலவிடவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு ஒப்புக்கொடுத்தபோதே சுரணையை உதறிப்போட்டாகிவிட்டது.

ஏதோ அடகிலிருந்த பத்திரத்தை மீட்டுக்கொள்ளப் புறப்படுகிறோம் என்பது மட்டும்தான் சண்முவிற்கு தெரிந்திருந்தது. தஞ்சாவூரில் வந்திறங்கிய கையோடு பத்திர வேலை முடிந்தாகிவிட்டது. மீட்ட கையோடு கிளம்பியிருக்கலாம். கூட்டாளி ஒருவரின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனவர், மதியம் நெடுக்க நிரம்ப நிரம்ப குடித்தார். நடுநடுவே ‘தேவ்டியா முண்ட’ என்று சொல்லிக்கொண்டவரின் கடைக்கண் அப்போதேல்லாம் தன்னையொருமுறை பார்த்துக்கொள்வதை சண்மு கவனிக்காமலில்லை. சலிப்பும் வெறுப்புமாக சகித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பொழுது சாய்வதற்குள் மாமனை எழுப்பி ஊருக்கு கிளப்புவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது. அவ்வளவு குடியிலும் ஆள் தெளிவாக இருப்பதாகத்தான் தெரிந்தார். வரும்போது குழப்பிக்கொண்ட சிடுக்கான சந்துவழிகள் இப்போது சுலபமாகி விட்டதைப்போல கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்க, அவருக்கு ஈடுகொடுக்க சண்மு நடையை ஓட்டமாக்க வேண்டியிருந்தது.

பஸ் ஸ்டாண்ட்டுக்கு போக ஆட்டோ பிடித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவனின் தோளில் ஒரு மாதிரி திணறலாக கை வைத்து அழுத்தியவர், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி செய்கைகாட்டி இறங்கிக்கொண்டார். வாந்திக்காக என்று புரிந்ததும் சண்மு தலையிலடித்துக்கொண்டான். இறங்கி இரண்டடிகள் எடுத்து வைத்திருப்பார். இரத்த இரத்தமாக வாந்தி. மயங்கி விழப்போகிறாரென சண்முவிற்கு புரிந்துவிட்டது. சுதாரித்து பிடிப்பதற்குள் கீழே விழுந்து – மொட்ட்ட் என சத்தம் – பின்னந்தலையில் அடி. வழுக்கைக்கு கீழேயுள்ள மயிர்கள் இரத்தப் பிசுப்பாகிவிட்டன. ஆட்டோக்காரர், அரை சுயநினைவில் கிடந்தவரின் வாயில் தனக்கு வைத்திருந்த தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தார். சண்முவிற்கு நிதானமே புரியவில்லை. பார்வை மெல்ல மறைப்பதைப் போல இருந்தது. கீழே கிடந்தவர் சடுதியில் மொத்தமாக சுயநினைவு தவறியிருந்தார். ஒன்றுமே புரியவில்லை.

மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த நெரிசலைப் பார்த்தபோதே மாமா பிழைக்கமாட்டார் என்பது சண்முவிற்கு தெரிந்துவிட்டது. கையில் ஊசியேற்றப்பட்ட போது, உடலில் துளியும் சலனமிருக்கவில்லை. தனக்குத் தெரிந்த அளவிற்கு உயிர் இருக்கிறதாவென கை நாடியைப் பிடித்துப்பார்த்தான். துடிப்பு இருந்தது. அவன் கையை அவசரமாகத் தட்டிவிட்ட மருத்துவரொருவர் அதே நாடியைப் பிடித்தார். வயிற்றை அழுத்திப் பார்த்தார். மார்க்காம்பினைக் கிள்ளிப்பிடித்துத் திருகினார். எந்த அசைவுமில்லை. சற்று நேரத்திற்குள் மாமாவின் தொண்டையிலொரு குழாய் செருகப்பட்டு, அதன் வழியாக பலூன் போன்ற ஏதோவொன்றை வைத்து காற்றை அழுத்த ஆரம்பித்திருந்தார்கள். சண்மு மனதளவில் தயாராகிவிட்டிருந்தான். ஆட்டோவில் வரும்போதிலிருந்து முயற்சித்துக்கொண்டிருந்த அப்பாவின் நம்பரிலிருந்து அழைப்பு – தகவலைச் சொல்லியதும்தான் சண்முவிற்கு பாரம் கூடிவிட்டதைப்போல இருந்தது.

ஸ்கேன் எடுத்துக்கொண்டு வந்து நெடுநேரமாகியும் யாருமே ஏதும் சொல்லாமல் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தனக்கே தெரிந்திருந்ததை மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்வதை எதுவோ தடுத்தது. அவர்கள் அந்த அளவிற்கு தங்களை அந்நியப்படுத்திக்கொண்டிருந்தார்கள் அல்லது அவன் அந்த நேரடி உண்மைக்கு இன்னும் முழுமையாகத் தயாராகியிருக்கவில்லை. அழுத்தம் பிடுங்கித் தின்றது.

வார்டுபாய் வந்து, ‘பழனிவேலு அட்டெண்டர் யாருப்பா?’ என்று கேட்ட வேகத்தில் கூட்டத்திலிருந்து முந்திக்கொண்டு உள்ளே போனான். ட்யூப்லைட் வெளிச்சத்திலிருந்து ஸ்கேனை இறக்கிய மருத்துவர், முகத்தில் எந்தக் குறிப்புமின்றி, ‘அவருக்கு மூள தண்டுல ரத்தக்கசிவு இருக்கு.. பக்கவாதம் மாதிரி.. பொழைக்கறது கஷ்டம்’ என்றார். தகவலைச் சொன்னபோது அப்பா வீட்டிலிருந்து கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது. மறுமுனையில் குரல் தழுதழுத்தது. சண்முவிற்கும் அடுத்த வார்த்தை தொண்டைக்குழிக்கு வந்துவிட்டது. கணநேர மெளனம். ‘அத்தகிட்ட ஒடனே சொல்லவேணாம்’ – இருவரும் ஏகநேரத்தில் சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னோமென்றே சண்முவிற்கு புரியவில்லை. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

3

சுகந்தி அத்தை, சண்முவின் தாத்தாவுடைய இரண்டாந்தாரத்திற்குப் பிறந்தவள். அப்பாவை விட இருபது வயதேனும் கம்மி. தாத்தாவின் காலத்திற்குப் பிறகு சின்னப்பத்தாவும் அத்தையும் அப்பாவிடம் வந்து தஞ்சமடைந்துவிட்டார்கள். சண்மு பிறந்த வருடத்தில் சின்னப்பத்தாவும் செத்துப்போனது. அப்போது ஏழு வயதிலிருந்த சுகந்திதான் இவனுக்கு சண்முகப்பிரியன் என்று பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறாள். எங்கிருந்து பிடித்தாளெனத் தெரியவில்லை. முறைக்குத்தான் தங்கையேயொழிய சண்முவின் அப்பாவிற்கு அவள் மூத்த மகளேதான். படிக்க வைக்கத்தான் நினைத்தார் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமையால் அவளே படிப்பைத் தொடர விரும்பவில்லை. அப்படி ஆனதில் அம்மாவிற்கு கொஞ்சம் சந்தோஷம் என்பது போலத்தான் தெரிந்தது. அம்மாவுக்கும் அத்தைக்குமான உடன்பாட்டில் சண்முவிற்கு எப்போதும் குழப்படிதான். ஒரு நேரம் மகாராணியைப் போல நடத்துவாள், சில நேரங்களில் வேலைக்காரியைப் போல, சமயங்களில் சம்பந்தமேயில்லாமல் சக்களத்தி போலவும். அது அவர்களுக்கிடையிலான ஒட்டல் விரிசல். அப்பாவும் தலையிட்டுக்கொள்ள மாட்டார்.

சண்முவிற்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதிற்கெல்லாம் அத்தை சினிமா ஸ்டார் போல இருப்பாள். இத்தனைக்கும் சிரத்தையெடுத்து ஜோடித்துக்கொள்ளும் போக்கெல்லாம் இல்லை. பாண்ட்ஸ் பவுடரே கழுத்தில் திட்டுத்திட்டாகத்தான் ஒட்டியிருக்கும். தாவணி பாவாடை நாட்களில் அத்தையை இடதுபுரத்திலிருந்து பார்க்க, தெருவெங்கும் மேயும் கண்களை அவன் அறியாமலில்லை.

பள்ளியிலிருந்து வந்து சோற்றையும் திருக்கை கருவாட்டு குழம்பையும் போட்டு வாயில் வைக்கும்போதே தெரிந்துவிடும் ஆக்கியது யாரென்று. அம்மாவின் கையிலேயே ஒரு காந்தல் ஒட்டிக்கொண்டிருக்கும். தொண்டை காட்டிக்கொடுத்துவிடும். ஒரே பிள்ளையெனினும் அம்மாவோடு அவனுக்கு இணக்கமே இருந்ததில்லை. தூங்கி விழித்ததிலிருந்து கண்ணை மூடும் வரை அத்தையின் வியர்வை நெடிதான் நாசிக்குள்ளிருக்கும். அதிகாலையில் வேலியோரம் ஒதுங்கும்போது அத்தைதான் துணைக்கு வந்து நின்று கால் அலம்பிவிட்டுப் போகவேண்டும். அத்தையின் தோழியான மலரக்கா ஒரு முறை, ’சுகந்தீ.. இவ்வள பெரிய பயலுக்கு ஆய் கலுவிட்டிருக்க..’ என்ற கேட்டதற்கு ஆத்திரத்தில் கல்லை எடுத்து விரட்டிக்கொண்டு ஓடியதும் அத்தை வயசுக்கு வந்ததும் தனியாகப் படுக்கச் சொன்னதற்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்ததுமெல்லாம் சண்முவிற்கு பிணவறை வாசலில் உட்கார்ந்திருந்தபோது நினைவுக்கு வந்தன.

வயக்கொல்லை போர்செட்டில், மாரளவில் உள்பாவாடையைக் கட்டிக்கொண்டு சுகந்தி குளிக்கும்போது தண்ணீரில் பாவாடை உடம்போடு ஒட்டிப்போயிருப்பதும், அவ்வப்போது மாரோடு ஒட்டும் ஈரப்பாவாடை காட்டிக்கொடுக்கும் கருப்பு வட்டங்களும் உறுத்தலாகத் தெரிய ஆரம்பித்த நாளில், அத்தையோடு குளிக்கவே போகக்கூடாது என்று யோசித்திருக்கிறான். அதைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தான். ‘யார்ரா இருக்கா இங்க.. நிக்கர போட்டுட்டே குளிக்கிற.. கவட்டில அலுக்கு கோத்து நைட்டு பூரா பிராண்டிக்கிட்டேயிருக்க.. கெலட்டிவிட்டு நல்லா தேச்சு கலுவு..’ – அத்தை சொல்வதோடு நிறுத்தமாட்டாள்.

உறவுமுறைகளையெல்லாம் புரிந்துகொள்ள முயன்ற பருவத்தில், எதிர்வீட்டு அக்காளுக்கும் அவளது தாய்மாமனுக்கும் நடந்த திருமணத்தை கணக்கில் வைத்து சண்மு நீண்ட நேரம் யோசித்தான். முடிவில், பெரியவனானதும் அத்தையை தானே கல்யாணம் செய்துகொள்ளலாமா என ஒரு போடு போட்டான். தலைமயிரைக் கொத்தாக இழுத்துப்போட்டு அடிப்பதற்காக தாவிய அம்மாவிடமிருந்து சண்முவை இழுத்து மீட்டுக்கொண்டாள் சுகந்தி. தன் பக்கவாட்டில் அவனை அணைத்துக்கொண்டு சிரிப்பை அடக்கமுடியாமல் உச்சந்தலையில் முத்தமாகக் கொடுத்தாள். கலகலவென நெடுநேரம் சிரித்துக்கொண்டேயிருந்தவளின் பிடிக்குள் அத்தனை வாஞ்சையாக உணர்ந்தான் சண்மு. தூக்கிக் கொஞ்சும் வயதுவரை உதட்டில்தான் முத்தம் கொடுப்பாள். விவரம் புரியும் வயதில் அதுவெல்லாம் வேண்டாமென்று நினைத்து நிறுத்திவிட்டாளாக இருக்கும். ஆனால், அந்தச் சிறுபிரயாத்தின் முத்தங்களை சண்மு மறந்திருக்கவேயில்லை. அத்தையின் கைக்குள் அந்த வளராத பொடியனாகவே இருந்திருக்கலாம். நினைவிலிருக்கும் வரை அம்மா அவனுக்கு முத்தமே கொடுத்ததில்லை அல்லது அத்தை அந்த ஸ்தானத்தை அம்மாவிற்கு விட்டுக்கொடுக்கவேயில்லை.

சண்மு பத்தாவது படிக்கும்போது அத்தைக்கு கல்யாணம் பேசிவிட்டார்கள். மாமா மேலக்காசாகுடிக்காரர். சைக்கிளில் போகக்கூடிய தூரம்தான். அன்றிரவு முழுவதும் அழுகையினூடாக ஏதாவது செய்து கல்யாணத்தை நிறுத்தமுடியுமா என்றுதான் மடத்தனமாக யோசித்துக்கொண்டிருந்தான். அதில் அத்தனை மடத்தனம் இருக்கவில்லை என்று இப்போது இந்தப் பிணநாற்றம் சொல்கிறது. அலங்கார அறையில் சிவப்பு ரவிக்கையோடு பாதி உடுத்தியிருந்த சேலையுடன் நின்றுகொண்டிருந்த சுகந்திக்கு கூரைப்புடவை முந்தியை தன் அம்மா மடித்துக்கொண்டிருப்பதை, வீங்கிய முகத்துடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் சண்மு. அம்மாவே இரண்டொரு முறை வெளியே போகச் சொல்லி கண்ணைக் காட்டினாள். மலர் அக்காதான் கேலி செய்து விரட்டிவிட்டது. அத்தைக்கும் தனக்கும் நடுவில் இவர்களெல்லாம் எங்கிருந்து முளைத்து வந்தார்கள் என்று அழுது பொருமினான். அழைத்துக்கொண்டு போன நாளில், அத்தை தன்னைக் கட்டிக்கொண்டு அழுத நொடியிலேயே காலம் உறைந்துபோயிருக்க வேண்டும் – அப்பாவிடம் மாமன் செத்துப்போய்விட்ட சேதியைச் சொல்லும்போது சண்முவிற்கு இதுதான் தோன்றியது.

மணமாகிப் போன பின்னரும் அத்தை தன்னை நினைத்து அழுதுகொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு, கறிவிருந்துக்கு வந்திருந்த நாளில், சுகந்தியும் புருசனும் இரவு தனி அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டதும் குமட்டிக்கொண்டு வந்தது. அடுத்த நாள் காலை சுகந்தியின் முகத்தைக் கண்ணெடுத்துப் பார்க்கவே சண்முவிற்குப் பிடிக்கவில்லை. உடனமர்ந்து அவனது தோள்களைச் சுற்றி இறுக்கிக்கொண்டு சுகந்தி ஏதேதோ பேசிக்கொண்டிருந்த போது அவனுக்கு அத்தனை அருவருப்பு. அத்தையும் கூட தன்னை ஆற்றுப்படுத்தத்தான் அப்படி செய்திருப்பாளோ என்னவோ என்று இப்போது யோசிக்கத் தோன்றுகிறது.

பாலிடெக்னிக் படிக்கப் போய்விட்ட பிறகு சண்மு அத்தையைப் பற்றி யோசிப்பது குறைந்து போனது. மனமுதிர்ச்சி என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை. அத்தையிடமிருந்து மெல்ல அறுந்து விடுபட்டுக்கொண்டதைப் போலத்தான் உணர ஆரம்பித்திருந்தான். அது வெறும் பால்ய மோகம் என்று சிறுமைப்படுத்தி யோசித்துப் பார்த்தான். அதுவாகத்தான் இருக்க முடியும் என்று ஓரளவிற்கு நம்பவும் செய்தான். ஊருக்கு போய்வரும் நாட்களில் மேலக்காசாக்குடி பக்கம் சைக்கிள் திரும்பவேயில்லை.

மலருடைய திருமண சமயத்தில் சுகந்தி சேர்ந்தாற்போல இரு வாரங்கள் வீட்டில் வந்துதங்கினாள். சண்முவால் சரியாக முகங்கொடுத்துக்கூடப் பேசமுடியவில்லை. பெரும்பாலும் வீடு தங்காமல் கிளம்பி எங்காவது போய்க்கொண்டிருந்தான். பெண்ணழைப்பு இரவில் பெய்த கனமழைக்கு, வந்திருந்த சனத்தால் நிற்கவே முடியவில்லை. கோணியைத் தலையில் போட்டுக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். மழைக்கொட்டும் அடங்குவதாக இல்லை. அம்மாவோடும் அத்தையோடும் பந்தலுக்குள் ஒதுங்கி நின்றபோது, கூட்டாளிகள் சிரித்தபடி கடந்துபோனதில் பரிகாசம்தான் பளிச்செனத் தெரிந்தது. ‘நா போறேன்.. நீங்க ரெண்டு பேரும் மழ விட்டதும் பொறப்பட்டு வாங்க..’ – நகரப்போன நேரத்தில், காற்று வலுத்து பந்தல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியது. கூட்டம் அலறலும் தள்ளுமுள்ளுமாகத் திணறி அலைந்தது. இளவட்டங்கள் இழுத்துக்கட்டப் போராடியதில் சண்முவும் ஒரு கையாகப் போய் சேர்ந்துகொண்டான்.

அவன் முன்பு நின்றிருந்த ஓரத்துப் பந்தக்கால் உருவிக்கொண்டு சரியத்தொடங்கியதும் கூட்டத்தின் ஓலம் மழையை மீறிக்கொண்டு வெடித்தது. விலகி ஓடிய பெண்களுக்கு நடுவில் சுகந்தி மட்டும் பந்தக்கால் கயிறை இழுத்துப்பிடித்துக்கொண்டதை சண்மு பார்த்தான். கையில் சுருட்டிக்கொண்டு காலை முன்பின்னாகப் பரப்பி ஒரே மூச்சிலான இழுவையில் பந்தக்காலை தரைக்குக் கொண்டுவந்தாள். அருகில் நின்ற அத்தனை சனமும் அப்படியே ஒரு கணம் திகைத்துப் போனது. வீட்டிற்குத் திரும்பும்போது தன் அரை ட்ரவுசர் காலப் பழக்கத்தின்படியே சண்மு சுகந்தியின் கைகளை இறுக்கிப் பற்றிக்கொண்டு நடந்துவந்தான்.

டீக்கடை பாடலைக் கேட்டபடி உள்ளங்கையையே உணர்வற்று பார்த்துக்கொண்டிருந்தான். ‘ஊர்லேந்து ஆள் யாரும் வரணுமா? நைட்ல பாடிய பாக்கணும்.. அதுயிதுன்னுட்டு..’ காக்கி சொல்லிக்கொண்டிருந்தது சண்முவின் காதிலேயே ஏறவில்லை.

‘ஒம்மாமன் குடிச்சுட்டு அங்க கெடந்தாரு.. இங்க கெடந்தாரு..’ என்பதெல்லாம் அவ்வப்போது அவன் காதுக்கு வந்திருக்கிறதுதான். பொங்கல் தலைவரிசைக்கு சண்மு அங்கு போயிருந்த மதியத்தில், குடித்து வாந்தியெடுத்துவிட்டு, பக்கத்திலேயே திண்ணை வெறுந்தரையில் சுகந்தியின் புருசன் படுத்துக்கிடந்தான். பார்த்துக்கொண்டு வாசலிலேயே நின்றிருந்தவனை சுகந்தி கையைப் பிடித்து உள்ளே அழைத்துப்போனாள். அத்தையின் மாமியார் மாமாவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தை வீட்டுக்குள்ளிருந்து சண்மு கேட்டுக்கொண்டிருந்தான். சாப்பாட்டு இலை விரிக்கப்பட்ட போது அந்த மனிதன் தள்ளாடியபடியே உள்ளே வந்தான். இவனை மயிராகக் கூட மதித்ததாகத் தெரியவில்லை. வந்தவன் நேராகப் போய் சுகந்தியிடம் ஏறினான், ‘புளுத்த சிறுக்கி.. காளிதாசு வீட்டு வாசல்ல போயி காலேல வாசாப்ப போட்டியாம்.. ஆத்தா கற்புக்கரசி… ஆமாடீ… நா அவம் பொண்டாட்டி கூட பொழங்கிட்டிருக்கன்… அவ்சாரி முண்ட… இங்க பேசுறீ…’ என்று சொல்லிக்கொண்டே அவளிடம் தன் மாரை முன்னே தள்ளிக்கொண்டு எகிறினான்.

சண்முவிற்கு நடுக்கமெடுத்துவிட்டது. கையில் சோறோடு எழுந்துகொண்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருப்பது நிஜமா என்று புரியவிடாமல், இரண்டடி முன்னே எடுத்துவைத்த சுகந்தி, புருசனின் நடுமாரில் எட்டி உதைத்தாள். சண்மு ஒரு நொடி திடுக்கிட்டு அப்படியே நின்றுவிட்டான். நிலைகொள்ளாமல் சுவரில் போய் சாய்ந்த சுகந்தியின் புருசன் சுவரோடே சரிந்தான். அத்தை அடித்தொண்டையிலிருந்து ஓங்கரித்து அந்த ஆளுடைய முகரையில் அழுத்தமாகத் துப்பியதைக் கண்ணெடுக்காமல் பார்த்தான் சண்மு. விழுந்தவன் மயங்கியே கிடந்தான். நிகழ்ந்ததெல்லாம் உள்ளே ஒரு நிலைக்கு வரும் கணத்தில், அத்தை தன் மடியில் சாய்ந்தபடி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த சண்மு திக்கற்று விழித்தான். இதுவெல்லாம் அப்பாவுக்கு தெரிந்துவிட வேண்டாம் என்பது மட்டும்தான் சுகந்தியின் ஒரே கேவல். ‘ஏன்த்த இப்புடி ஊருக்கு நாடகம் போடுற.. வந்துரு எங்கூடவே..’ என்று சொல்லிவிடத்தான் அந்தக் கணத்தில் துணிச்சல் இருக்கவில்லை.

ஓரிரு மாதங்கள் கழித்து காளியம்மன் கோவிலில் வைத்து சுகந்தியையும் புருசனையும் ஜோடியாகப் பார்த்தபோது சண்முவால் இம்மியளவும் சந்தோஷப்பட முடியவில்லை. அத்தையின் அனுசரிப்பை உள்ளுக்குள் ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியாமல் விசனப்பட்டான். மூன்று வருடங்கள் கழித்து, அவன் சென்னையில் இருக்கும்போது காளிதாஸின் மனைவி தீயிட்டுக் கொளுத்திக்கொண்டதாக சேதி. எப்படியோ அத்தை நன்றாக வாழ்ந்தால் போதும் என்று அந்த மரணம் அவனுக்கு ஆறுதலாகத்தான் இருந்தது. கூடவே தோன்றிய, ‘இதனால் மட்டும் என்னவாகிவிடப் போகிறது’ என்ற அலுப்பு அந்த அமைதியை முளையிலேயே மழுங்கடித்தது. இப்போதுவரை திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் சுகந்திக்கு குழந்தை இல்லை. மாமா இன்னொரு கல்யாணத்திற்குத் தயாராகி வருவதாக சமீபத்தில் கூட குரலில் சுரத்தேயில்லாமல் சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறாள் சுகந்தி. சில வருடங்களாவே அந்தச் சிரிப்பு களையற்றுதான் போய்விட்டது; ரோகங்கண்டு மீண்டதைப் போல, அந்தப் பழைய சிரிப்பு மறந்தே போய்விட்டது.

போன வாரத்தில், ஐந்து நாட்களாக சுகந்திக்கு அம்மை போட்டிருப்பதாக, சண்முவின் அப்பா போய் கார் வைத்து கூட்டிக்கொண்டு வந்தார். ‘புள்ளய அப்டியே படுக்கப்போட்டுட்டு ஆத்தாளும் மொவனும் ஊர்மேய போயிருவாய்ங்க’ பதைப்போடே அவர் போனபோதும் சண்முவிற்கு போகப் பிடிக்கவில்லை. அந்த வீடு வேண்டாம். அவளுக்கு அந்த ஊரே கூடத்தான் வேண்டாம். அத்தை வீட்டுக்கு வரட்டும். அனுப்பாமல் இங்கேயே வைத்துக்கொள்ளலாம் என்று அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்.

சுகந்தி வந்ததே போதும். சண்முவின் அம்மா வேப்பிலை படுக்கை போட்டுவைத்தாள். மூன்று வேளையும் கொல்லையிலிருந்து இளநீருக்காக தேங்காய் பறித்துவர தானே போய்வந்தாள். மஞ்சள் தண்ணீர் தெளித்துவைப்பது, காலையும் மாலையும் வீட்டை மெழுகி சுத்தமாக வைப்பது, அதிகாலையில் தலைக்கு முழுகிவிட்டு காளியம்மன் கோவிலுக்குப் போய் வருவது என தன் வயதிற்கான சோர்வையும் மீறி அத்தைக்காக அக்கறைபட்டதைப் பார்க்கும்போது சண்முவிற்கு அம்மாவை முதன்முறையாக பொருட்படுத்தி யோசித்து நெகிழ முடிந்தது. ஆமாம், கொஞ்ச காலத்திற்கு மட்டுமேனும் அம்மாவால் நல்லவளாக இருக்கமுடியும் தான்.

பேசிக்கொண்டிருக்கலாமென அருகில் போய் சண்மு உட்காரும் போதெல்லாம், ‘அம்மெ ஒட்டிக்கும், எந்திரிச்சு போ’ என சொல்லிக்கொண்டேயிருந்தாள் சுகந்தி. துணி உரசி கொப்புளங்கள் உடையுமென்பதால் அணிந்திருந்த ஒற்றைப் பாவாடையை நாடா கட்டாமல் பெரும்பாலும் வாயில் கவ்விப்பிடித்தபடிதான் உட்கார்ந்திருப்பாள். ‘முதுகு அரிக்குது, அம்மாவ வேப்பில கொத்த வெச்சு நீவச் சொல்லி வரச் சொல்லேன்..’ என்றவள் சொன்னபோது, ‘நானே ஒடிச்சிட்டு வரவாத்த..’ சண்மு ஓர் உந்தலில் கேட்டான். அப்படி அத்தையிடம் உரிமை எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் தோன்றியது. பிடித்திருந்தது. அதற்கும், ‘நீ போ, ஒட்டிக்கும்..’ – மீண்டும் அவள் சொன்னதும், அம்மை பரவிவிடும் என்பதற்காக மட்டும் தன்னை விரட்டவில்லையோ என்று சண்முவிற்கு அவமானம் பிடுங்கித் தின்றது. சுகந்தி எதற்கென்றே தெரியாமல் அவ்வப்போது தேம்பித் தேம்பி அழுவதை அவன் பார்த்திருக்கிறான். முகத்தில் எப்போதும் கவலைப் பூச்சு. மாமாவைத் தவிர அவளுக்கு அழுதிட என்ன காரணம் இருக்கப்போகிறது?

இந்தச் சவத்தைத் தவிர.. வாழும்போதே சவமாகத்தான் இருந்தான் இவன்.

காலை தஞ்சாவூருக்கு கிளம்புவதற்குமுன் தான் புருசன்காரன் வந்து சுகந்தியைப் பார்த்திருந்தான். அதுவும்கூட அப்பாவிடம் பத்திரங்களின் ஜெராக்ஸ்களை வாங்கிக்கொள்வதற்காகத் தான் இருக்கும். சண்முவைக் கூப்பிட்டு, ‘கூட போ நீயும்.. அந்த மனுசன போற எடத்துல குடிக்க விட்றாத..’ சுகந்தி சொல்லித்தான் அனுப்பியிருந்தாள். இதெல்லாம் இப்படித்தான் நடக்குமென்று அத்தைக்குத் தெரிந்திருக்கிறது. எப்போதும் எல்லாமும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்திருக்கிறது.

4

இரவு எட்டரை மணிக்கு பழனிவேல் இறந்துவிட்டதாக சண்முவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். ஐந்து நிமிடங்கள் வரை விசும்பிக்கொண்டுதான் இருந்தான். சுகந்தியோடு நிறுத்தித்தான் அதுவும். அப்பா வந்துசேர இன்னும் ஒன்றரை மணிநேரம் ஆகும் போலத் தெரிந்தது. காக்கிச் சட்டைக்காரர் உடலைப் பொட்டலமாகக் கட்டி பிணவறைக்கு கொண்டுபோக ஆயத்தப்படுத்தினார். அப்பா வந்ததும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போதுதான் அடுத்த இடியை இறக்கினார்கள் – ஆக்ஸிடெண்ட் என்பதால் போஸ்ட்மார்ட்டம் செய்தபின்தான் உடல் வழங்கப்படும். அந்த வார்த்தைக்கென்றே பிரத்யேக அச்சுறுத்தும் வலிமை இருக்கிறது. ஒரு வினாடியில் வெலவெலத்துப் போய்விட்டான்.

முதலில் வந்து சேர்ந்த அவசர சிகிச்சை வார்டுக்கு ஓடிப்போய், ஆக்ஸிடெண்ட்டெல்லாம் ஆகவில்லை, மயக்கம் போட்டுத்தான் விழுந்தாரென்று யார் யாரையோ பிடித்து சொல்லிப்பார்த்தும் பிரயோஜனப்படவில்லை. ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து விழுந்திருப்பதாக போலீஸ் கேஸ் பதிவாகி இருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் பண்ணாமல் தர முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். அதைப் பதிவு செய்த பெண் மருத்துவரையும் காணவில்லை. அவர் இருந்தாலும் அதையெல்லாம் மாற்ற முடியாது என்றும் போலீசுக்கு தகவல் போய்விட்டது என்றும் சொன்னார்கள். சண்மு அப்பாவை அழைத்து சொல்லலாம் என்று பார்த்தபோதுதான் அலைபேசி செயலற்று கிடந்தது. எங்கு இருக்கிறார், வந்து சேர்ந்துவிட்டாரா என எதுவுமே தெரியவில்லை.

கேஷுவாலிட்டியிலிருந்த நர்ஸ் அம்மையார்தான், சண்முவை அவுட்போஸ்ட் போலீசிடம் கேட்டுப்பார்க்கச் சொன்னார். காக்கியும் அதையேதான் சொன்னார். அப்பா வந்துவிடட்டும். மறுநாள் காலைக்குள் எப்படியாவது போஸ்ட்மார்ட்டத்தை தவிர்க்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் ஏன் அப்படி நினைத்தான் என்பது அவனுக்கே விளங்கவில்லை. தன்னுடைய மடியில் நிகழ்ந்த மரணம் என்பதற்கான பொறுப்பைத் தாண்டி எவ்வளவு யோசித்தும் எதுவுமே அதிலில்லை.

மொபைல் சார்ஜ் ஆனதும் அப்பாவை அழைத்து பிணவறைக்கு வந்துவிடுமாறு சொன்னான். தட்டிலிருந்த உடலைக் கண்டதும் தலையில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு அழுதவரை சண்மு கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான். தானும் அழவேண்டும் என்று அவனுக்கு தோன்றாமலில்லை. அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். எதற்காக இப்போது அழுகிறார்? பொறுப்பில் தவறிவிட்டதற்கா? தோற்றுப்போய் விட்டதற்கா? உதறிவிட்ட பொறுப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள போகிறதே என்றா அல்லது நிஜமாகவே அந்த ஆள் செத்துக் கிடப்பதற்கா? அழுகையை அவர் நிறுத்திக்கொண்டால் தேவலாம் என்பதைப் போல உட்கார்ந்துகொண்டான்.

காக்கி கொடுத்த மஞ்சள் சீட்டை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு போனபோது, நிமிடத்திற்கொருமுறை, ‘ஒடம்ப கூறு போட்டானுவன்னா அத்த தாங்காதுய்யா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படி அவர் சொல்லும்போதெல்லாம் அவனுக்கு சுருக்கென்று இருந்தது. அவுட்போஸ்ட் காவல் நிலையத்தில், சம்பவத்தைக் கேட்டுவிட்டு, ஆக்ஸிடெண்ட் நடந்த இடம் எந்த லிமிட்டில் வருகிறது என்று ஏதோ பேசிக்கொண்டிருக்க, சண்மு குறுக்கே புகுந்து, ‘அது ஆக்ஸிடெண்ட் இல்லை’ என்று சொல்லியதை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. மாதாக்கோட்டை காவல் நிலையத்தில் கேட்குமாறு சொல்லியனுப்பினார்கள்.

மாதாக்கோட்டையில் ஒரு கான்ஸ்டபிள் அத்தனையையும் எழுதி வாங்கிக்கொண்டு, ‘பெரியய்யா வரட்டுமென்று’ இருவரையும் இரண்டு மணி நேரங்கள் அங்கேயே உட்கார வைத்தார். அப்பா இடையிடையே தலையில் அடித்துக்கொண்டார். கண்ணைக் கசக்கிக்கொண்டார். வெளியே போய் ஏதோ மொபைலில் தகவல் சொல்லியவாறு இருந்தார். ‘ஊரே வீட்டுல கூடியிருக்கு’ என்றார். ‘அத்தைக்கு சொல்லியாச்சா?’ என்று கேட்க மட்டும் சண்முவிற்கு தைரியமே கைகூடவில்லை. சற்று நேரங்கழித்து அவரே, ‘போஸ்ட்மாடமுன்னு அத்தைக்கு யாரோ சொல்லிட்டாவ போல.. எப்புடியாச்சும் இல்லாம கொண்டுபோயிறனும்’ என்று கைத்துண்டை வைத்து வாயைப் பொத்திக்கொண்டார்.

அத்தையைத் தவிர எதைப்பற்றியும் சண்முவிற்கு சிந்தனை ஓடவில்லை. இந்த மனிதனைக் கட்டிக்கொண்டதற்கு அவளுக்கு என்ன கிடைத்தது? அவளுக்கு குழந்தைகளை ரொம்பவே பிடிக்கும். அவனை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் போட்டோ ஒன்று வீட்டில் இருக்கிறது. கண்களில் அத்தனை பூரிப்பு தெரியும். அண்டை வீடுகளில் குழந்தை பிறந்தால், இவள்தான் பாதி நேரம் பிள்ளை வைத்திருப்பாள். இந்தக் குடிகாரனுக்குத்தான் ஏதோ குறை இருந்திருக்க வேண்டும். குடிப்பான், அத்தையைப் போட்டு அடிப்பான், அடி வாங்குவான், சொல்லச் சகிக்காத வார்த்தைகளால் கொச்சைப்படுத்துவான். ‘மலட்டு முண்ட’ என்று இத்தனை நாள் பேசிய அவளது மாமியார் இனி, ‘மொட்டச் சிறுக்கி’ என்பாள். என் மனக்கோட்டையின் மகாராணியை இந்த நாய்களெல்லாம் குதறியே கொன்றுவிட்டன;

அத்தை இந்த மனிதன் செத்துப்போனதற்கு நிஜமாகவே அழுவாளா? இந்த மரணத்தில் அவளுக்கு ஓர் அமைதிதானே கிடைக்கமுடியும்? இப்போது வீட்டில் வந்துதானே இருக்கிறது? அப்படியே இருந்துவிடட்டும் என்று நான் விரும்பியதுதான் இந்த விதத்தில் நடந்திருக்கிறது போல. அங்கு போகவேண்டுமென்ற எந்த அழுத்தமும் இனி அவளுக்கு இல்லை. சம்பிரதாயமாக ஊருக்காக இரண்டு நாட்கள் அழுதுவிட்டு நிம்மதியாக இருந்துவிடலாம். அப்பாவிற்குப் பிறகு, என்னுடைய பொறுப்பு. என் பேரொளி. சீரழிக்கப்பட்ட என் பேரரசி. சண்மு கலக்கமின்றி அமர்ந்திருந்தான். முக ரேகைகளில் புது உறுதி.

நேரம் ஆக ஆக பேசாமல் போஸ்ட்மார்ட்டம் நடந்தாலே பரவாயில்லை என்று கூடத் தோன்றியது. மதியம் குடித்துக்கொண்டிருக்கும் போது அத்தையை அவன் ‘தேவடியா முண்டை’ என்று சொன்னது, சண்முவிற்கு மீண்டும் மீண்டும் காதில் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்காகவாவது அவனது இறந்த உடலைத் துண்டுத் துண்டாக வெட்டவேண்டும் போல இருந்தது. குறைந்தபட்சம் அந்த நாவை மட்டுமேனும் வெளியே இழுத்து அறுத்துப்போட வேண்டும். குளிரில் உடம்பு நடுங்க ஆரம்பித்த நேரத்தில், கண்களை மூடிக்கொண்டு அவனே அந்த உடலை குத்திக் கிழிப்பதைப் போல கனவு கண்டான். தூணில் தலைவைத்து சாய்ந்திருவனை அப்பா உலுக்கி, ‘போலாம்’ என்றார். போஸ்ட்மார்ட்டம் தேவையில்லை என்று அறிக்கை கிடைத்துவிட்டதாம். ஏமாற்றத்தையும் எரிச்சலையும் சண்மு விழுங்கிக்கொண்டான்.

5

காலை எட்டே முக்காலுக்கு அமரர் ஊர்தியில் ஏற்றிவிட்டார்கள். அப்பா சோர்ந்துபோயிருந்தார். சண்முவிற்கு மாமாவின் லேசாக உப்பிய முகத்தைப் பார்க்கும்போது அத்தை அதில் காரித்துப்பியது தான் நினைவிற்கு வந்தது. தன் உச்சந்தலையில் ஒரு முத்தத்தின் ஈரம் குளிர்வதைப்போல தெரிந்தது. இரவெல்லாம் விழித்திருந்தும் கண்ணில் தூக்கமே ஒட்டவில்லை. அத்தையை எதிர்கொள்ளும் கணத்திற்காக பயந்துகொண்டோ தவித்துக்கொண்டோ காத்திருந்தான். பிணப்பெட்டிக்கு அருகிலேயே படுத்து கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டான்.

ஊருக்குள் நுழையும்போது அப்பா எழுப்பிவிட்டார். அதற்குள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களெல்லாம் ஒட்டியிருந்தார்கள். அப்பா ஃபோன் போட்டு, ‘உள்ள வந்துட்டோம்’ என யாருக்கோ தகவல் சொல்லியபோது பதைப்பு அதிகமாக ஆரம்பித்தது.

மாமா வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலையொட்டி வண்டி போய் நின்றதும் அக்கம்பக்கத்தினர் ஒப்பாரிக் கூச்சலிட்டபடி உடலை இறக்கிவைக்க முன்னே வந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, வீட்டு வாசலை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தபோது அவனுக்கு கால் வெடவெடக்க ஆரம்பித்தது. கண்கள் அத்தையை மட்டும்தான் தேடிக்கொண்டிருந்தன. ஊர்தியை நோக்கி தலையிலும் மாரிலும் மாறிமாறி அடித்துக்கொண்டவாறே சுகந்தியின் மாமியாரும் ஊர்க் கிழவிகளும் வந்ததைப் பார்த்து ஒதுங்கப்போனவனின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கட்டிப்பிடித்து அழுதாள் பழனிவேலின் அம்மை. வின்செண்ட் வாத்தியார் வீட்டு மதிலோரத்தில் வைக்கோலை கொளுத்திப்போட்டு தப்பட்டை மேளத்திற்கு புகைபோட்டுக் கொண்டிருந்ததில் அவனாலும் கண்களைக் கசக்கிக்கொள்ள முடிந்தது. கசக்கி நிறுத்தியபோதுதான் அத்தையைப் பார்த்தான்.

மஞ்சள் நிற உள்பாவாடையை மாரளவிற்கு கட்டிக்கொண்டு முகத்திலும் கழுத்திலும் மேல்மாரிலும் கைகளிலும் அம்மைப் பருக்களுடன் கூட்டத்திலிருந்து வெளியேறி சுகந்தி வந்துகொண்டிருந்தாள். உடன் இருவர் அவளைத் தாங்கிப்பிடிக்க வேண்டியிருந்தது. சரியாக அந்த நேரத்தில் சங்கொலி இரைய, தப்பட்டைகளை அடிக்க ஆரம்பித்தார்கள். நின்றவர்களின் ஒப்பாரிச் சத்தம் அதையும் தாண்டி அதிர ஆரம்பித்தது. ஒரு மாதிரியாக உதறலெடுக்க சண்மு அப்படியே நின்றுவிட்டான். சுகந்தி அவனை நெருங்கிய கணத்தில் ஏதோவொரு குற்றவுணர்ச்சி போட்டு அழுத்துவதைப் போல இருந்தது.

அத்தனை நேரம் அப்படியெதுவும் அவனுக்குள் இருக்கவேயில்லை. அவளது கண்களிலிருந்துதான் எதுவோ அவனைத் துளைத்திருக்கவேண்டும். ஆனால், சுகந்தி அவனது பார்வையைச் சந்திக்கவேயில்லை. இவனொருவன் அங்கு நிற்பதே கூட கண்ணுக்குத் தெரியாதைப் போல, கால்களைத் தொய்வாக அகட்டி அகட்டித் தேய்த்துவைத்து கடந்து போய்க்கொண்டிருந்தாள். கால்களைத் தரையில் ஊன்றியதாகக் கூடத் தெரியவில்லை. உடனிருப்பவர்கள் ஏதோ இழுத்துக்கொண்டு போவதைப் போலத்தான் தெரிந்தது.

உடலை வண்டியிலிருந்து இறக்கி கீழே வைத்த நொடியில், அத்தையின் நடை ஓட்டமாக மாறுவதை சண்மு பார்த்துக்கொண்டே நின்றிருந்தான். நடக்கவே வலுவற்றவளாய்த் தெரிந்தவளுக்கு எங்கிருந்தது இத்தனை ஆங்காரம்? விரட்டிக்கொண்டு ஓடிய அம்மா தடுக்கியடித்து கீழே விழுந்தெழுந்தாள். சுற்றிநின்ற பெண்கள் கலவரப்பட்டார்களேயொழிய சுகந்தியைப் பிடித்து நிறுத்த முடியவில்லை. தன்னருகில் தப்பட்டையடி வீரியமாகிக் கொண்டிருக்க சண்முவிற்கு கிறுகிறுவென வந்தது. இரண்டு மூன்று பேர் பிடித்து இழுத்ததில் அத்தையின் அம்மைப் பருக்கள் உடைந்து ரத்தம் கசிவதைப் பார்த்துவிடும் தூரத்தில்தான் நின்றிருந்தான். அசையவே வரவில்லை.

திமிறிக்கொண்டு தாவியவளின் பாவாடை முடிச்சு அவிழ்ந்து விழ, அம்மாவும் சுற்றியிருந்த மற்ற பெண்களும் அதை அள்ளிமுடிச்சிடத் தவித்தார்கள். பிடித்துக்கொண்டிருந்த அத்தனை பேரையும் அத்தை பெருங்குரலெடுத்து தள்ளிவிட்டு, ஓடிப்போய் சவப்பெட்டியின் மீது நிர்வாணமாக சரிந்தாள். அந்தக் கணம், தானொரு பேரழிவின் சாட்சியாகி விட்டதைப் போல சண்முவிற்கு இருந்தது. சிவந்து, அகல விரிந்திருந்த காதுகளில் அவனுக்கு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. தனித்து நிற்கவே உடல் கூசியது. கூட்டத்திற்குள் போய் குறுகிச் சிறுத்து யாரோ போல பதுங்கிக்கொள்ள வேண்டுமென இருந்தது. யாரோ போல.