தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம்விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்கு அளிப்பதற்காக புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். தடித் தடியான புத்தகங்களை எடுத்து இடம் மாற்றி வைப்பதே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில்பட்டது.

அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக பெயரிட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்காலத்தில் பிழைப்புக்காக சென்னை வந்து சேர்ந்திருந்தனர். அப்பாவுடன், அவருடைய நண்பர் அடைந்திருந்த உயரத்தை ஒப்பிடவே முடியாதது. அப்பாவுக்கு அரிசி மில் ஒன்றில் குமாஸ்தா வேலை. நண்பரோ அந்த மில்லைவிட பல மடங்கு பெரிய நிறுவனங்கள் சிலவற்றை தனதாக ஆக்கியிருந்தார்.

அப்பா இறந்த சமயம் தவிர்த்து, அதற்கும் முன்பாக, என்னுடைய சிறு வயதுகளில் ஓரிரு முறை எங்கள் வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார். அப்படியான பொழுதுகளில் நாங்கள் வசிக்கும் சிறிய தெருவை அடைத்துக்கொண்டு நிற்கும் அவருடைய பெரிய கார் கொடுக்கும் தனித்த மரியாதை அடுத்த ஒரு வாரத்துக்கு என் நண்பர்கள் மத்தியில் அமலில் இருக்கும். அவர் வரும் பொழுதுகளில் வீட்டில் மெல்லிய பதற்றம் தொற்றிக்கொள்ளும். வீட்டின் வறுமையைக் காட்டி பல் இளிக்கும் ஒவ்வொரு பொருளையும் மறைக்க அம்மாவும் அக்காக்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பார்கள். அதிகம் உபயோகப்படுத்தாத, இருப்பதிலேயே புதியது போல் தோற்றமளிக்கும் டம்ளரில் அவருக்கு காபி போகும்.

அவரின் தூய கதராடையும், தாட்டியமான உருவமும், சுத்தமாக ஒட்ட நறுக்கப்பட்டு பளபளக்கும் நகங்களும், எல்லாச் செய்கையிலும் மிளிரும் ஒருவித நளினமும் என் கண்களை அவரைவிட்டு நகர்த்த அனுமதிக்காது. அவருக்கு எதிரே கைவைத்த பனியன்போட்டு குச்சி குச்சியான கைகால்களுடன் அப்பா பூஞ்சையாக புன்னகைத்தப்படி அமர்ந்திருப்பார்.

அப்பாவிடம் தன் வறுமை குறித்த அயர்ச்சியோ, வீட்டின் ஒழுங்கின்மை குறித்த அவமானமோ துளியும் வெளிப்படாது. வரதராஜன் சார் என்றில்லை, பொதுவாக நண்பர்களிடம் அதுவும் குறிப்பாக தன் பால்யகால ஸ்நேகிதர்களிடம் பேசும்போது பதின்களில் அவர் விட்ட இடத்திலிருந்தே தொடர்வதைப் போன்ற பாவனை அவரிடத்தில் வெளிப்படும். எதிலும் பற்றற்றிருக்கும் ஒருவித ஒட்டாத தன்மையும், அதே வேளையில் அவர் குரலில் ஆத்மார்த்தமாக வெளிப்படும் வாஞ்சையும்தான் அவருடைய ஸ்நேகிதர்களை அவர் பக்கமாக ஈர்க்கும் வஸ்துகளாக இருக்க வேண்டும்.

அப்பாவின் இறப்புக்கும் வரதராஜன் சார் வந்திருந்திருந்தார். விடைபெற்றுச் செல்லும்போது என் கைகளைப் பற்றி மெதுவாக அழுத்தியபோது உணர்ந்த குளுமையும் மென்மையும் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து இப்போதும் அவரின் வருகையைத் தனித்து நினைவில் இருத்தப் போதுமாக இருக்கிறது.

கல்லூரி முடித்து வீட்டிலிருந்த சமயம். புத்தகங்கள் வாசிப்பதும் அவ்வப்போது எழுதிப் பழகுவதுமாய் பொழுது கழிந்துகொண்டிருந்தது. என்னுடைய ஓரிரு கதைகள் எழுத்து, கலைமகள் போன்ற சிற்றிதழ்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றிருந்தன. எழுதிப் பிழைக்க முடியாது என்று இதோ என் எண்பதுகளில் வந்திருக்கும் தெளிவு அப்பாவுக்கு அவருடைய ஐம்பதுகளிலேயே இருந்திருக்கிறது.

முதலில் அம்மாவிடம் சொன்னார். பின்பு அக்காக்களிடம். ஒரு நாள், என்னிடமும். எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு வேறு வேலை ஏதாவது எடுத்துப் பார்க்கச் சொன்னார். எதுவும் பலிக்கவில்லை. ஒரு நாள், என்னைக் கொண்டுபோய் அவர் நண்பர் வரதராஜனின் அலுவலகத்தில் நிறுத்தினார். அடுத்த நாளிலிருந்து அவருடைய நிறுவனத்தின் குமாஸ்தாக்களில் ஒருவனானேன். வேலைக்கு வரச் சொல்லி அவர்கள் அனுப்பிய கடிதம் வந்துசேர்ந்தபோது நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அக்கடிதத்தில் அக்கவுண்டன்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அக்கவுண்ட்ஸிலிருந்து ஆபிஸ் பாய் வரை எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அது குறித்து சிறு சலிப்பும் வருத்தமும் இருந்தாலும், அந்தப் பெரிய நிறுவனமும் அது கொடுத்த பொருளாதாரப் பாதுகாப்பும் என்னை மெதுமெதுவாக ஒரு புதைமணல் போல உள்ளிழுத்துக்கொண்டது.

அங்கு வேலைக்குச் சேர்ந்தும் எழுதுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. எழுதுவதற்கு எனக்கு பிரத்தியேக மனநிலை எதுவும் தேவைப்படவில்லை. அது மட்டுமே அன்றாடத்தின் சலிப்புச் சுழலில் இருந்து தப்பிக்கும் ஒரு வழியாய் இருந்தது. என்னைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் எனக்கு நிறைய கதைகள் இருந்தன. எழுதிய கதைகள் சிற்றிதழ்களில் வந்து கொஞ்சம் கவனத்தைப் பெற்றன. எளிமையான என் மொழி சில விமர்சனங்களையும் பெற்றது என்றாலும் அதுகுறித்து பெரிய வருத்தம் எதுவுமிருக்கவில்லை. என்னுடன் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருந்தவர்களின் மொழியிலிருந்தும் அவர்களுடைய உலகிலிருந்தும் நான் நிறைய விலகியிருந்தேன்.

மொழி எளிமையாக இருக்கிறது என்றார்கள். கதைகள் உணர்வுப்பூர்வமாக அன்றி ஒருவித செய்தித்தாள் தன்மையில் இருப்பதாக விமர்சித்தார்கள். அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். ஆனால், அப்போதும் விற்பனைச் செல்வாக்கற்ற என் கதைகளையும் புத்தகமாகப் போடுவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி போடப்பட்டவையும் ஆயிரம் பிரதிகள் விற்பதற்கு முழுதாகப் பத்து ஆண்டுகள் பிடித்தன. இதோ, இப்போது புதிதாக வாசிக்க வருபவர்கள் அவற்றைத் தேடி வாசிக்கிறார்கள். அதே கதைகளை மெச்சுகிறார்கள். எனக்கு இரண்டும் ஒன்றாகத்தான் தெரிகிறது.

என்னுடைய கம்பெனியில் இருப்பவர்களுக்கு நான் எழுதுவது பற்றித் தெரியும். ஆனால், அது குறித்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. அப்பாவின் வழியாகவோ சக ஊழியர்களின் மூலமாகவோ அப்பாவின் நண்பரும் என்னுடைய முதலாளியுமான வரதராஜன் சாரும் நான் எழுதுவது குறிந்து தெரிந்து வைத்திருந்தார். அவ்வப்போது ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. தமிழைவிட அதில் இன்னும் தரமாகவே என் எழுத்து வெளிப்பட்டதாக நினைவு. ஆங்கிலப் பத்திரிக்கைகளில் கதைகள் வந்தால் மட்டும் அடுத்தமுறை பார்க்க வாய்க்கும்போது விசாரித்துக்கொள்வார். அடுத்த நிமிடமே ஒரு மெல்லிய புன்னகையுடன் நகர்ந்துவிடுவார்.

என் எழுத்து கண்டுகொள்ளப்படாதது குறித்தோ உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது பற்றியோ இன்றுவரை எனக்கு எந்தப் புகாருமில்லை. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதற்காகவே எழுதுகிறேன். மேலதிகமான எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு இல்லை. இப்போது கூப்பிட்டு விருது கொடுக்கிறார்கள். விருதுகள் பெற்றுக்கொள்வதில் எனக்கு ஒரே பிரச்சினைதான். பெரிய அரங்கங்களில் விழாக்களை வைக்கிறார்கள். அதைப் போய் வாங்குவதற்கு மூட்டு வலியோடு இருபது படிகள் ஏறி இறங்க வேண்டும். சமயங்களில் அரங்கங்களில் ஏ.சி.யை வேறு கூட்டி வைத்துவிடுகிறார்கள். அதே நேரம், மறக்காமல் பொன்னாடையும் போர்த்திவிடுகிறார்கள்.

எனக்கும் குடும்பத்துக்கும் வயிறுக்குப் பங்கம் வைக்காத அளவுக்கு கம்பெனியிலிருந்து சம்பளம் வந்துகொண்டிருந்தது. அப்படியே கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. இடையில் கேட்டுக்கொண்டதற்காக பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்தேன். அதில் சொற்பமாகக் கொஞ்சம் காசு வந்தது. அங்கு காசு விசயமில்லை. யாராவது வேண்டி கேட்டுக்கொண்ட பிறகு மறுப்பதற்கு கஷ்டமாயிருக்கிறது. அவ்வப்போது, முன்னுரை கேட்டு சில புத்தகங்கள் வரும். வாசித்து ஒரு பக்கமோ இரு பக்கமோ எழுதிக் கொடுத்துவிடுவேன். அதில் கறாராக இருப்பதில்லை. விதவிதமான புத்தகங்கள் வரும். அப்புத்தகங்களில் எங்கேயாவது ஏதாவது ஒரு பொறி கிடைக்கும். அதை எடுத்துக்காட்டி எழுதிவிடுவேன். அதேபோல என்னுடைய கதைகள் இன்னின்ன இதழ்களில்தான் வரவேண்டும் என்பது போன்ற வரையறையெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. கசடதபறவில் கதைகள் வந்த அதே காலகட்டத்தில்  குமுதத்திலும் என் கதைகள் வெளியாகின.

குமாஸ்தாவாகச் சேர்ந்து பதிமூன்று வருடங்களில் அஸிஸ்டண்ட் மானேஜராகி, மானேஜராகவும் ஆகியிருந்தேன். பதவியின் பெயர் மாறியது. கொஞ்சம் சம்பளம் கூடியது. வேலை என்ற அளவில் பெரிய மாறுதல் ஒன்றும் இருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மேஸ்திரிக்கான வேலை.

முதலாளிக்கு வேண்டப்பட்டவன் என்ற பிம்பம் உடன் வேலைபார்க்கும் மற்றவர்களிடத்தே உருவாகி வந்திருந்தது. சில சமயங்களில் அப்படியான பிம்பம் சற்று உதவினாலும் பல நேரங்களில் அது அவர்களிடமிருந்து என்னை விலக்கியே வைத்திருந்தது. எத்தனை எத்தனை அவர்களிடத்தே நான் இளகிப் போகிறேனோ அது அவர்களை அத்தனை அத்தனை விலக்கி நிறுத்தியது. அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்கூட அவர்களுக்குச் சிக்கல் இருக்கவில்லை. ஆனால், அன்பை வெகுவாகச் சந்தேகித்தார்கள்.

நானோ முதலாளிக்கு வேண்டப்பட்டவன் என்பதைவிட அவர்களில் ஒருவனாக இருக்கவே நிறையமுறை ஆசைப்பட்டிருக்கிறேன். உண்மையில், அவர்கள் நினைக்கும் அளவுக்கு நான் வரதராஜன் சாருக்கு நெருக்கமாகவும் இல்லை. எப்போதாவது சந்திக்கும் வேளைகளில் அப்பாவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் விசாரிப்பார். அவ்வளவுதான். அவரைப் பொருத்தமட்டில் நான் அவர் நிறுவனத்தின் மற்றுமொரு வேலையாள்.

அன்று, அவர் அறைக்குக் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். அவருடனான அதற்கு முந்தைய சந்திப்பும் நல்லபடியாக அமையவில்லை. கனிவாக இல்லையென்றாலும்கூட கடுமையாகப் பேசுபவர் அல்லர். ஆனால், அன்று கொஞ்சம் கடுப்படித்தபடியே பேசினார்.

“தியாகு, எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்.”

எப்போதும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்துக்கு வந்துவிடுவார். பல நேரங்களில் விசயம் விளங்குவதற்கே ஒரு சில நிமிடங்கள் எடுக்கும்.

“இன்னிக்கு என் வண்டி வரும்போதே, ஒருத்தன் ஹாயா பீடி குடிச்சிட்டு இருக்கிறான். அப்படியே மரத்துமேல கங்கு அணைச்சுட்டு கொஞ்சம்கூட கூச்சம் இல்லாம பீடித் துண்ட கீழே போட்டுக்கிறான். இதையெல்லாம் நீங்க ஒரு வார்த்தை கேக்கிறதில்ல. இல்லியா?”

“நான் சொல்லி வைக்கிறேன்.”

“அப்போ இதுவரைக்கும் எதுவும் சொல்லல. அப்படித்தானே?”

“அப்படியில்ல சார். இன்னும் கொஞ்சம் வலுவா சொல்லி வைக்கிறேன்.”

“என்னவோ பண்ணுங்க. இன்னொரு தடவ இப்படி ஒரு காட்சி என் கண்ணுல படக்கூடாது” என்றார்.

‘சரி’ என்பதாக தலையாட்டி நின்றேன். அன்று தபாலில் கொண்டுசேர்க்க வேண்டிய கடிதங்களை என்னிடம் கொடுத்துவிட்டு அருகிலிருந்த டெலிபோனை எடுத்து ‘கர்க் கர்க்’ என்று ஓசையெழ ஒவ்வொரு எண்ணாகச் சுழற்றினார். பின்பு, அங்கிருந்து நான் கிளம்பலாம் என்பதாக சைகை காட்டினார். மருந்துக்கும் புன்னகைக்கவில்லை.

அவரும் புகைபிடிப்பவர்தான். பொதுவாக புகைப்பவர்களுக்கிடையே சற்றென்று சிநேகம் முளைத்துவிடுவதைக் கண்டிருக்கிறேன். அவருக்கு இங்கே பீடி குடித்தது பிரச்சினையில்லை. அவர் கார் வருவதைப் பார்த்தும் குடித்துக்கொண்டிருந்ததே குற்றம். அது அவருடைய கார் என்று தெரியாத ஒருவனாகவே இருக்க வேண்டும். அதுவும் புதிதாகச் சேர்ந்த ஒப்பந்தக் கூலியாட்களில் ஒருவனாக இருக்கக்கூடும்.

மறுநாள் எனக்குக் கீழ் இருந்த அத்தனைபேரையும் அழைத்து இதைச் சொன்னேன். அவர்களுக்கு அதில் கொஞ்சம் வருத்தம். எனக்கும்கூட அவர்களிடத்தில் அப்படிச் சொல்வதில் விருப்பமிருக்கவில்லை. நாள் முழுவதும் பழியாய்க் கிடந்து உழைப்பவர்களுக்குக் கிடைக்கும் இது போன்ற எளிய ஆசுவாசங்களுக்கான வழிகளையும் அடைப்பது சரியில்லை. தொழிலாளர்களைப் பொருத்தமட்டில் முதலாளியின் விருப்பம் என்றோ, ஆணை என்றோ சொல்லப்படும் எதுவும் முதலாளியின் பெயரைச் சொல்லி நான் எடுக்கும் முடிவுகளே.

அன்றிலிருந்து அவர்களிடத்தே என் மீது மிச்சமிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது. இதுகுறித்து எனக்கு வருத்தமே. முதலாளி நல்ல மனநிலையில் இருக்கும் ஒருநாளில் இது பற்றி அவரிடம் எடுத்துப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்னால் அவரே கூப்பிட்டு அனுப்பிவிட்டார். அத்தனை எச்சரிக்கையையும் மீறி மறுபடியும் யாராவது பீடி பிடித்து அவர் கண்ணில் மாட்டிக்கொண்டார்களா? என்னுடைய அறையிலிருந்து அவர் அறைக்கு நடக்க ஆகும் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் அவர் கூப்பிட்டு அனுப்பச் சாத்தியமிருக்கும் அத்தனை காரணங்களையும் மனது ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கியது.

ஆனால், அத்தனை சாத்தியங்களையும் மீறி மற்றொன்றின் பொருட்டே அவருடைய அழைப்பு இருந்தது.

“நம்மோட காண்ட்ராக்ட் லேபர்ஸ்ல ஒரு ஏழு பேரை மட்டும், அடுத்த மூணு மாசத்துக்கு கூடுதலா இரண்டு மணி நேரம் வேலை பார்க்கச் சொல்லணும். புதுசா ஒரு ஆர்டர் வந்துருக்கு. அதை நேரத்துக்கு முடிச்சு கொடுத்தா நமக்கு அடுத்தடுத்து ஆர்டர்ஸ் கிடைக்கும். அதனால ஆள் பார்த்துச் சொல்லிடுங்க. ஆட்கள முடிவு பண்ணிட்டு அதுக்கான கூலிய சம்பளத்துல சேர்த்துப் போடச் சொல்லி அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மண்ட்டுக்கும் தகவல் கொடுத்திடுங்க.”

அவர் அபிப்பிராயமோ ஆலோசனையோ கேட்கவில்லை. மேலும் அவர் முகத்தில் வெளிப்பட்ட பரபரப்பு இடையில் வேறு எதையும் பேச அனுமதிக்கவில்லை. நிரந்தரத் தொழிலாளிகளை ஒப்பிட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏற்கனவே ஒரு மணி நேரம் அதிகமாகத்தான் வேலை பார்க்கிறார்கள். அதுவும் அவர்களைவிட குறைவான ஊதியத்துக்கு. எல்லா இடங்களிலும் அவர்களுக்குரிய சலுகைகளில்வேறு பாகுபாடு. போதாத குறைக்கு உள்ளே பீடி குடிக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டதில் அவர்களுக்கு என் மேல் கோபம்.

பதிலேதும் பேசாமல் நின்றுகொண்டிருந்தேன்.

“தியாகு, நான் சொன்னது புரிஞ்சது இல்லியா?”

“யெஸ்.. யெஸ் சார்.. ஆனா”

“என்ன? சொல்லுங்க.”

அவர்களுக்கு இருக்கும் சங்கடங்களையும் பிரச்சனைகளையும் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொன்னேன். புகைபிடிப்பதற்காக வெளியில் போய் வர வேண்டிய சிரமம் குறித்தும் சொன்னேன்.

“இதையெல்லாம் சமாளிக்கத்தானே நீங்க மானேஜரா இருக்கீங்க?”

“சரிதான் சார். மானேஜர்ன்னு பேரளவுக்குச் சொல்லிக்கிட்டாலும்கூட இங்க நான் பார்க்கிற வேலை எதுவும் அப்படியில்ல. நானே ஆபிஸ் பாய். நானே மானேஜர். அப்புறம், ஆட்களை கட்டி மேய்க்கிற ஒரு மேஸ்திரி!”

“இருக்கட்டுமே. அதனால் என்ன?” என்றார்.

எதையும் பேசிக்கொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியேறினேன். அதன்பிறகு, ஆறு மாதங்கள் கழித்து அப்பாவின் இறப்பின் போதுதான் அவரைப் பார்த்தேன். நான் வேலையை விட்டு நின்றது குறித்து அவருக்கு வருத்தம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அதுபற்றி ஒரு வார்த்தையும் அவர் பேசாதது குறித்து எனக்கு நிறைய வருத்தம் இருந்தது. கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்காக உழைத்திருக்கிறேன். வேலை பார்த்தவரை என் மனதுக்கு நேர்மையாகவும் வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாகவும் இருந்திருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி இன்னும் மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் கூடுதலாக வேலையில் இருந்திருந்தால் அத்தனை வருடங்கள் உழைத்தற்கான பணப் பலன்கள் எனக்குக் கிடைத்திருக்கும். பதினான்கு வருட பணப் பலன். என்னுடைய பொருளாதாரச் சூழலுக்கு அது கணிசமான தொகை. அது அவருக்கும் தெரியும். மூன்று மாதங்கள் மட்டுமாவது பொறுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அதைச் சொல்லவில்லை.

அப்பாவின் இறப்பின்போது வந்தவர் அக்காவிடம் ‘நான் என்ன செய்கிறேன்?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது காலை மாலை என்று இரண்டு வேளையும், பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டை மாடியில் வைத்து கணிதம் மற்றும் ஆங்கிலத்துக்கு டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அதன்பின் ஒரு மாதம் கழித்து இந்தக் கடிதம் வந்திருந்தது. எனக்கு விருப்பமிருந்தால் மீண்டும் தன் நிறுவனத்தில் வந்து சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்.

இப்போது, மூப்பின் காரணமாக நிறைய விசயங்கள் நினைவில் தங்குவதில்லை. பத்து பக்கங்கள் தொடர்ந்து வாசித்தால், மூன்றாம் பக்கம் வாசிக்கும்போது முதல் பக்கம் வாசித்தது மறந்துவிடுகிறது. ஆனால், இது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இந்தக் கடிதத்துக்கு நான் பதில் எதுவும் எழுதவில்லை.

நான் வேலையை விட்டு வந்து அப்பா உயிரோடிருந்த ஆறுமாத காலமும் அவர் வரதராஜன் சாரை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அப்போதும் அவர் அப்பாவின் ஸ்நேகிதராகத்தான் இருந்தார்.