நிலவின் மகள்கள் – இடாலோ கால்வினோ

by எஸ்.கயல்
0 comment

காற்றின் மேற்படலம் பாதுகாப்புக் கவசமாகச் செயலாற்ற மறுத்து வந்ததால் ஆதியில் இருந்தே விண்கற்களின் தொடர் தாக்குதல்களுக்கும் சூரியக் கதிர்களின் சிதைக்கவல்ல செயல்களுக்கும் உள்ளாகி வந்திருக்கிறது நிலா. கோர்ணல் பல்கலையின் தாமஸ் கோல்டைப் பொருத்தவரை விண்கற்களின் தொடர் தாக்குதல்களால் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறைகள் பொடிப் பொடியாகிவிட்டன. நிலவின் வெப்பம் நிறைந்த பாறைக் குழம்பில் இருந்து வெளியேறிய வாயுக்கள் செயற்கைக்கோளுக்கு ஒரு ஒளியை, நுண்துளைகள் கொண்ட பியூமிஸ் கல்லின் திண்மையைத் தந்திருக்கலாம் என்பது சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஜெரார்ட் கியூப்பரின் கருத்து.

துளைகள் உருவாக்கிய குழிகளோடு முழுதும் சேதமுற்ற நிலையில் இருக்கும் நிலா முதுமை எய்திவிட்டது என்பதை qfwfq ஏற்றுக்கொள்கிறார். அது மேகங்களின் ஊடே ஆடையின்றித் திரிந்து, படிப்படியாக அரிக்கப்பட்டு, கடித்து அரைபட்ட எலும்பைப் போலத் தன் சதையை இழக்கிறது. இது இவ்வாறு நிகழ்வது முதல் முறையல்ல. இதைவிட முதிர்ந்த, இதைவிட தோற்றப் பொலிவிழந்த நிலாக்களை நான் அறிவேன். ஏகப்பட்ட நிலாக்களை நான் பார்த்திருக்கிறேன். புதிதாய்ப் பிறந்து வானத்தின் குறுக்கே ஓடி இறந்துபோன, எரிநட்சத்திரங்களின் கூர்முனைத் தாக்குதலால் ஓட்டையான ஒன்று, எரிமலையின் வாயிலிருந்து வெடித்த இன்னொன்று, கசிந்து ஒழுகுகிற கோமேதக வண்ண வியர்வைத் துளிகள் அடுத்த நொடியே ஆவியான பிறகு பச்சை நிற மேகங்கள் போர்த்தப்பட்ட அவை, பிரகாசமற்ற மென்மையான கிளிஞ்சல்கள் அளவுக்குச் சிறுத்துப்போகும் வேறொன்று என ஏகப்பட்ட நிலாக்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நிலவு இறக்கும்போது பூமியில் என்ன நிகழ்கிறது என்பதை விளக்குவது அவ்வளவு எளிதல்ல. என் நினைவில் இருக்கும் இறுதி நிகழ்வில் இருந்து அதை நான் செய்ய முயற்சிக்கிறேன். மிக நீண்டகாலப் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்துதான் பூமி இப்போது நாமிருக்கும் நிலையை எட்டியிருக்கிறது. வேறு விதமாகச் சொல்லவேண்டுமெனில், காலணிகளின் அடிப்பகுதியை விட வேகமாக கார்கள் தேய்மானமுறும் காலகட்டத்துக்குள் அது நுழைந்திருக்கிறது. பெயரளவில் மனிதர்களாக இருக்கிற உயிரினங்கள் பொருட்களை உற்பத்தி செய்து, வாங்கி, விற்றனர். நகரங்கள் கண்டங்களை இருளில் ஒளிவீசும் வண்ணங்களால் போர்த்தின. வடிவங்களில் கண்டங்கள் எவ்வளவு வேறுபட்டிருந்தாலும் ஏறத்குறைய நம் நகரங்கள் இப்போது வளர்கின்ற அதே இடங்களில்தான் அந்த நகரங்களும் அவற்றின் கண்டங்களில் வளர்ந்தன. உங்கள் அனைவருக்கும் மிகப் பரிச்சயமான நியூயார்க்கை எதோ ஒரு விதத்தில் ஒத்திருந்த ஒரு நியூயார்க் நகரம் கூட  அங்கு இருந்தது. ஆனால் மிகப் புதியதாக அல்லது புதிய பொருட்களால் பெருமளவு மூழ்கடிக்கப்பட்ட, புதிய பற்குச்சிகள், வானுயர்ந்த கட்டிடங்கள் மிகப் புதிய பற்குச்சிகளின் இழைகள் போலப் பளபளக்கிற நகரம். அடர்த்தியான பரந்துபட்ட மன்ஹாட்டனைச் சொந்தம்  கொண்டாடும் புதிய நியூயார்க்.

உடைந்துவிடுவதற்கான மிகச் சிறிய அறிகுறியை வெளிக்காட்டுகிற அல்லது பழையதாகத் தோற்றமளிக்கிற ஒவ்வொரு பொருளும் முதன்முறை சேதமடைந்ததும் அல்லது முதல் முறை அதில் கறை ஏற்பட்டதும் தூக்கி வீசப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய பொருத்தமான வேறொரு பொருளால் நிரப்பப்படுகின்ற இந்த உலகில், ஒரே ஒரு பொய்யான குறிப்பு, ஒரு நிழல் மட்டுமே இருந்தது. அது நிலா. இங்கிருக்கும் இந்த உலகத்துடன் தனக்கிருக்கும் பெரும் அந்நியத்தன்மையுடன், காலாவதியாகிவிட்ட பண்டைய வழிமுறைகளில் இப்போது மிச்சமிருக்கிற ஒன்றாக இருந்த அது, வான் முழுதும் நிர்வாணமாக, உருக்குலைந்து, சாம்பல் நிறத்துடன் உலவியது.

முழு நிலா, வளர்பிறை, தேய்பிறை போன்ற புராதனச் சொற்கள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன. ஆனால் உண்மையில் அவை பேச்சின் இடையே குறிப்பிடப்படும் வெற்று வடிவங்கள் ஆகிவிட்டன. நம் தலைகளின் மீது உடைந்த கற்களின் துண்டங்களை மழையாகப் பொழிவிக்கக் கூடிய நிலையில் எப்போதுமுள்ள ஒன்றை, முழுதும் வெடிப்புகளாலும் துளைகளாலும் ஆன ஒரு வடிவை ‘முழு வடிவம்’ என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும்! நிலவு தேய்வுறுகையில் நிகழ்பவற்றைச் சொல்லவே தேவையில்லை. கொறித்துத் தின்ற பாலாடைக் கட்டியின் தோல் போல சிறுத்துப் போய்விடும் அது, நாம் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே மறைந்துவிடும். ஒவ்வொரு முறை நிலவு உதிக்கும் போதும் அது மறுபடியும் வருமா என்று நாங்கள் யோசித்து இருக்கிறோம். (ஒருவேளை அது அப்படியே மறைந்து போய் விடும் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ?) பற்களை இழந்த சீப்பு போல அது மறுபடியும் தோன்றியபோது நாங்கள் அதிர்ச்சியால் ஏற்பட்ட நடுக்கத்துடன் எங்கள் கண்களை அதனின்று விலக்கிக்கொண்டோம்.

அது மனதைச் சோர்வுறச் செய்யும் காட்சி. இரவும் பகலும் திறந்திருந்த பெரிய பல்பொருள் அங்காடிகளுக்குள் கூட்டத்தின் இடையே நுழைந்து கைகளில் பளு நிறைந்த பொட்டலங்களைச் சுமந்துகொண்டு வெளியேறினோம். வானளாவிய கட்டிடங்களையும் கடந்து மிகுந்த உயரத்தில் ஏறியிருந்த நியான் விளக்குகளில் புதிய பொருட்களின் அறிமுகம் குறித்த தொடர் அறிவிப்பு தோன்றும். அதை நாங்கள் உற்று நோக்கிக்கொண்டிருக்கையில், கண்களைக் கூசச் செய்யும் அந்த வெளிச்சத்தின் இடையே நிறம் மங்கி, மெதுவாக, நோயுற்று, அது முன்னேறிச் செல்வதை நாங்கள் திடீரெனப் பார்ப்போம். சிறிது நேரத்துக்கு முன்னர் நாங்கள் வாங்கியிருந்த ஒவ்வொரு புதிய பொருளும், புதிய தயாரிப்பும் அதனைப் போலவே நைந்து, சீரழிந்து, நிறம் மங்கிப் போய்விடும் என்ற சிந்தனை எங்களை விட்டு அகலவேயில்லை. பித்துப் பிடித்தாற்போல உழைத்து ஓடியோடி பொருட்களை விலை கொடுத்து வாங்கும் உற்சாகத்தை நாங்கள் இழந்தோம். இதனால் ஏற்படும் நட்டத்தின் விளைவுகள் வணிகத்திற்கும் தொழிற்துறைக்கும் இல்லாமல் இல்லை.

எங்கள் விருப்பத்திற்கு நேர்மாறான விளைவை ஏற்படுத்தவல்ல இந்தச் செயற்கைக் கோளின் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இப்படியாகத்தான் நாங்கள் பரிசீலிக்கத் துவங்கினோம். அதனால் எந்தப் பயனும் இல்லை. வீணான கடும் சேதமடைந்த நிலை. தன் எடை குறைந்ததும் அது தன்னுடலை வளைத்து, பூமியை நோக்கிய ஒரு வட்டப் பாதையில் சுற்றத் துவங்கியது. மற்ற எல்லாவற்றையும் விட அது அபாயகரமானது. நெருக்கம் அதிகரித்த அளவுக்கு அது தன்னுடைய பயண வேகத்தைக் குறைத்தபடி இருந்தது. அதனுடைய முன்னேற்றப் படிநிலைகளை எங்களால் இதற்குமேல் கணக்கிட முடியவில்லை. மாதங்களின் சீரான தாளத்தை வெளிப்படுத்தும் நாட்காட்டி கூட வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து நொறுங்கிவிடுவது போன்ற தடுமாற்றத்துடன் நிலா முன்னேறியது.

பூமிக்கோளத்தின் தென்பகுதியில் நிலா குறைவாகத் தெரிகிற இரவுகளில் நிலையற்ற குணநலம் கொண்ட மக்கள் விசித்திரமான செயல்களில் ஈடுபடத் துவங்கினர். உறக்கத்தில் நடக்கும் வழக்கமுள்ள எவரோ வான்வரை உயர்ந்து நிற்கிற கட்டிடங்களின் கைப்பிடிச் சுவரின் விளிம்பை ஒட்டி நடந்து நிலவை எட்டிப்பிடித்துவிட தம் கைகளை அதனை நோக்கி நீட்டியபடி நிற்பதோ, அல்லது டைம்ஸ் ஸ்கொயரின் நடுவே முழுநிலவில் ஓநாயாக மாறும் தன்மைகொண்ட மனிதன் ஊளையிடத் துவங்குவதோ, அல்லது எதையும் தீயிட்டுக் கொளுத்தும் அதீத ஆசை பீடித்த நோயுடைய ஒருவர் துறைமுகக் கிடங்குகளுக்குத் தீ மூட்டுவதோ எப்போதும் நிகழ்ந்தபடி இருந்தன. இதற்குள் இயல்பான நிகழ்வுகளாகிப் போன இவை, வழக்கமான பராக்கு பார்க்கும் கும்பலை இப்போதெல்லாம் ஈர்ப்பதில்லை. ஆனால் முழு நிர்வாணமாக ஒரு பெண் செண்ட்ரல் பூங்காவின் இருக்கையில் அமர்ந்து இருப்பதைப் பார்த்ததும் நான் நிற்க வேண்டியதாயிற்று.

அவளைப் பார்ப்பதற்கு முன்பே எதோ மர்மமாக நிகழப்போகிறது எனும் உணர்வு எனக்குள் தோன்றியது. மேற்கூரையை மடக்கும் வசதிகொண்ட என் காரை செண்ட்ரல் பூங்காவின் வழியே நான் ஓட்டிச் சென்றபோது முழுதாக ஒளிரத் துவங்குமுன்பு சில நொடிகளுக்கு வெளிர்நீல வண்ணத்தில், மினுக் மினுக்கெனக் கண்சிமிட்டி, பிறகு எரிகிற ஒரு மெர்குரி விளக்கினுடையதைப் போன்ற வெளிச்சத்தில் நான் குளித்திருந்ததை உணர்ந்தேன்.

நான் நின்றிருந்த இடம் பார்வைக்கு நிலாக் கோளத்தின் பள்ளத்திற்குள் புதையுண்ட தோட்டம் போலிருந்தது. நிர்வாணமாக இருந்த அந்தப் பெண் ஒரு குளத்திற்கு அருகே நிலவின் துண்டைப் பிரதிபலித்தாள். நான் பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்தினேன். சிறிது யோசித்ததும் அவளை எனக்கு அடையாளம் தெரிந்தது. ஆனால் காரிலிருந்து இறங்கி அவளை நோக்கி ஓடிய நான் இப்போது உறைந்துபோய் நின்றேன். அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்காக அவசரமாக நான் எதாவது செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

அந்த இருக்கையைச் சுற்றி அவளுடைய ஆடைகள், அரைக் காலுறை ஒன்று, ஒற்றைக் காலணி ஆகியவை ஒரு பக்கமாகவும், அவளுடைய காதணிகள், கழுத்தணி, காப்பு, பணப்பை ஆகிய மற்ற பொருட்கள் வேறொரு பக்கமுமாகவும் சிதறிக் கிடந்தன. அவள் கடைகளில் ‌வாங்கிய பொருட்களை வைத்திருந்த பையில் இருந்து எண்ணற்ற பொருட்கள் அகன்ற வில் போன்ற வடிவில் சிதறிக் கிடந்தன. அவள் இந்த உலகத்துடன் பிணைக்கப்பட்டிருந்த எல்லாப் பொருட்களில் இருந்தும், அடையாளங்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்த அந்தப் பொருட்களிடும் பை, அவள் கணக்கின்றிப் பணம் செலழித்து மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கிக் குவித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தானே அவளை அழைத்து எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டது போலிருந்தது. அவள்  நிலவின் வட்ட வடிவிற்குள் நுழைவதற்காகக் காத்திருப்பது போல இப்போது பாவனை செய்துகொண்டிருந்தாள்.

“என்னாயிற்று?” என்று கேட்டு நிறுத்தி பிறகு நிதானமாக, “நான் எதாவது உதவி செய்யவா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

“உதவி?” என்று கேட்ட அவளுடைய கண்கள் மேற்புறம் வெறித்தன. “யாருமே உதவ முடியாது. யாருமே எதுவும் செய்ய முடியாது”. அவள் தன்னைப் பற்றிப் பேசாமல் நிலவைப் பற்றித் தான் பேசுகிறாள் என்பது தெளிவாக தெரிந்தது.

வெளிப்புறமாக வளைந்த அரைவட்ட வடிவோடு, எங்களைக் கிட்டதட்ட நொறுக்கிவிடுமளவு சேதமுற்ற ஒரு கூரையுடன், துளைகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணெய் துருவும் கருவி போல, நிலா எங்கள் தலைகளுக்கு மேல் இருந்தது.

“இதுதான் முடிவா?” எனக்கே அதன் பொருள் என்னவென்று தெரியாமல் இயந்திரத்தனமாகக் கேட்டேன்.

“இது ஆரம்பம்” என்று பதில் சொன்னாள் அல்லது அது போல் எதையோ சொன்னாள். (பெரும்பாலும் தன் உதடுகள் பிரியாமல் பேசினாள்)

“நீ சொல்வதற்கு என்ன அர்த்தம்? இது ஒரு முடிவின் துவக்கமா அல்லது வேறு எதாவது ஒன்று துவங்குகிறதா?” என்று கேட்டேன்.

அவள் எழுந்து புல்லின் குறுக்கே நடந்தாள். தாமிர வண்ணத்தில் இருந்த அவளுடைய தலை முடி தோள்கள் வரை தவழ்ந்தது. யாரும் எளிதில் ஊறு விளைவித்துவிடக் கூடிய நிலையில் இருந்த அவளை எப்படியாவது காப்பாற்றிவிட, அவளைப் பாதுகாக்க, அவள் கீழே விழுந்து விட்டாலோ அல்லது அவளுக்குத் தீங்கு செய்யக்கூடிய எதோ ஒன்றை விரட்டியடித்தோ அவளைப் பாதுகாத்து, தாங்கிப் பிடிக்கத் தயாராக இருப்பது போல என் கைகளை அவளை நோக்கி நீட்டினேன். ஆனால் என் கைகள் அவளைப் பார்க்கக் கூட அஞ்சி அவளுடைய உடலை விட்டு சில அடிகள் விலகியே நின்றன. தோட்டத்துப் பூக்களைக் கடந்து இப்படியே நான் அவளைப் பின்தொடர்ந்து சென்றபோது அவளுடைய அசைவுகள் என்னுடையதைப் போலவே இருந்ததை உணர்ந்தேன். அவளும் உறுதியற்ற, கீழே விழுந்து உடைந்து தூளாகக் கூடிய ஒன்றை, அது அமைதியாகக் குடியேறி வாழக்கூடிய ஒரு இடத்தை நோக்கி அதனை வழிநடத்திச் செல்லவேண்டிய தேவையுணர்ந்து, அதைப் பாதுகாக்க முயற்சி செய்வதையும் நான் உணர்ந்தேன். தொட முடியாத, ஆனால் தன் சைககளால் மட்டும் அவளால் வழிகாட்ட முடிந்த ஒன்றாக இருந்த அது, நிலா.

நிலா வழிதவறி விட்டதாகத் தெரிந்தது. தன்னுடைய சுற்றுவட்டப் பாதையைத் துறந்த பின் இதற்கு மேல் எங்கு போவது என்று அதற்குத் தெரியவில்லை. ஒரு சருகைப் போல தன்னுடலைப் பயணப்பட அனுமதித்தது. சில சமயங்களில் திடீரென பூமியை நோக்கி விரைந்து சென்று கீழே விழுந்துவிடுவது போலக் காட்சியளித்தது. மற்ற நேரங்களில், குப்பிகளுடைய தக்கைகளைத் திருகி அகற்றும் கருவியைப் போல, ஒரு மையப் புள்ளியில் துவங்கி அதிலேயே முடியும் தொடர் அசைவுகளைச் செய்துகொண்டு இருந்தது. சில நேரங்களில் வெறுமனே எவ்வித நோக்கமும் இன்றி அசைந்துகொண்டிருப்பது போல இருந்தது. அது தன் உயரத்தில் இருந்து தாழ்ந்துகொண்டிருந்தது என்பது உறுதி. அது ப்ளாசா உணவகத்திற்குள் விழுந்து நொறுங்கிவிடுவது போல ஒரு கணம் தோன்றியது. ஆனால், அதற்குப் பதில் இரண்டு வானளாவிய கட்டிடங்களின் இடையே காணப்பட்ட வழியில் நழுவி ஹட்சனின் திசை நோக்கிச்சென்று பார்வையில் மறைந்துவிட்டது. சிறிது நேரத்தில் நகரத்தின் எதிர்திசையில் ஒரு மேகத்தின் பின்னிருந்து துள்ளியெழுந்து ஹார்லமையும் ஈஸ்ட்  நதியையும் மங்கலான ஒளியில் குளிப்பாட்டியபடி மறுபடி தோன்றியது.

புயற்காற்றில் அகப்பட்டதைப் போல ப்ரோங்ஸ் நகர்ப்பகுதியை நோக்கி உருண்டோடியது.

“அதோ அங்கிருக்கிறது” என்று கூச்சலிட்டேன். “அதோ‌…. இப்போது நின்று விட்டது” என்றேன்.

“அது நிற்கக் கூடாது” என்று உணர்ச்சிவசப்பட்ட அந்தப் பெண் வெறுங்காலுடன் நிர்வாணமாக புல்லின் மீது ஓடினாள்.

“நீ எங்கே போகிறாய்? நீ இவ்வாறு இங்கு சுற்றிக்கொண்டிருக்க முடியாது. நில். ஏய், நான் உன்னிடம்தான் பேசுகிறேன். உன் பெயர் என்ன?”

அவள் டயானா அல்லது டியானா என்று எதோ ஒரு பெயரை சத்தமாகச் சொன்னாள். அது ஒரு இறையின் பெயரை விளிப்பதாகவும் இருக்கலாம். பிறகு அவள் மறைந்து விட்டாள். அவளைத் தொடர்ந்து செல்வதற்காக என் காருக்குள் குதித்த நான் செண்ட்ரல் பூங்காவின் பாதைகளைத் தேடத் துவங்கினேன்.

என்னுடைய காரின் முகப்பு விளக்குகளில் இருந்த வந்த ஒளிக்கீற்றுகள் மரவேலிகள், குன்றுகள், சதுரத் தூபிகள் ஆகியவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சின. ஆனால் அந்தப் பெண் டயானாவை எங்கும் காணவில்லை. இதற்குள் நான் வெகுதொலைவு வந்து விட்டேன். அவளைக் கடந்து வந்து விட்டிருக்கக்கூடும் என நினைத்து நான் வந்த வழியே திரும்பி செல்வதற்காகக் காரை திருப்பினேன். அப்போது பின்னால் இருந்து ஒரு குரல், “இல்லை, அது அங்கு இருக்கிறது. போய்க்கொண்டே இரு” என்று ஒலித்தது.

அந்தக் குரல் என்னுடைய காரின் பின்புறமிருந்த மடக்கு இருக்கையில் அமர்ந்து, நிலவை சுட்டிக் காட்டிக்கொண்டு இருந்த, அந்த நிர்வாணப் பெண்ணுடையது.

அவள் மிக எளிதாக மற்றவர் கண்களில் பட்டுவிடக்கூடிய இந்த நிலையில் காருக்குள் அமர்ந்திருக்கும் போது நான் நகருக்குள் பயணிக்க முடியாது என்பதை விளக்குவதற்காக அவளை காரிலிருந்து கீழே இறங்கச் சொல்ல நினைத்தேன். ஆனால் வண்டி சென்றுகொண்டிருந்த இருளான பாதையின் முடிவில் மறைந்தும் தோன்றியவாறும் இருந்த ஒளியை, தன் கண் பார்வையை விலக்காமல் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய கவனத்தை திசைதிருப்ப நான் துணியவில்லை. எது எப்படியானாலும் அந்த வழியில் எங்களைக் கடந்து சென்றவர்கள் யாருமே என் காரின் பின்புறமிருந்த மடக்கு இருக்கையில் அமர்ந்திருந்த இந்தப் பெண் உருவத்தைக் கவனிக்கவில்லை என்பது இன்னும் விசித்திரமாக இருந்தது.

மன்ஹாட்டனை பிரதான நிலப்பரப்புடன் இணைத்த பாலங்களில் ஒன்றை நாங்கள் கடந்தோம். இப்போது நாங்கள் நெடுஞ்சாலை ஒன்றின் பல்வழிப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தோம். எங்களருகே சென்றுகொண்டிருந்த மற்ற கார்களில் இருந்தவர்கள், எங்கள் இருவரையும் பார்த்தால், அதி நிச்சயமாக தூண்டப்பட்டிருக்கக் கூடிய நகைப்புக்கும் அருவருப்பான விமர்சனங்களுக்கும் பயந்த என் கண்கள் சாலையின் முன்புறமாகவே நிலைத்து இருந்தன. ஆனால் ஒரு செடான் வகை கார் எங்களை முந்திச்சென்றபோது, ஒரு பெண் தன் கூந்தல் காற்றில் அலைபாய அதன் மேற்கூரையின் மீது கால்களை வளைத்து நிர்வாணமாக நிற்பதைக் கண்டு அதிர்ந்தேன். என்னால் அதற்குமேல் வண்டியை ஓட்ட முடியவில்லை. என் காரில் இருந்த அந்தப் பெண் பயணிதான் விரைவாகப் பயணிக்கும் ஒரு காரிலிருந்து இன்னொன்றுக்குத் தாவியிருக்கிறாள் என ஒரு விநாடி நினைத்தேன்.

இதை உறுதிப்படுத்த நான் செய்ய வேண்டியதெல்லாம் மிக லேசாக என் தலையைத் திருப்பிப் பார்ப்பதுதான். அப்படிப் பார்த்தபோது டயானாவின் கால்கள், இப்போதும் அங்கு இருப்பது என் மூக்குக்கு நேராகத் தெரிந்தது. இப்போது என் கண் முன்னே ஒளிர்ந்தது அவளுடைய ஒரு உடல் மட்டுமல்ல. விரைந்து சென்றுகொண்டிருந்த கார்களின் கதவுகளையும், ரேடியேட்டர்களையும், சக்கரங்களின் அருகேயுள்ள ஃபெண்டர்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விசித்திரமான தோற்ற நிலைகளில் பெண்கள் சென்றுகொண்டிருந்ததை எல்லா இடங்களிலும் என்னால் இப்போது பார்க்க முடிந்தது. இளஞ்சிவப்பிலோ அல்லது கறுத்தோ இருந்த அவர்களுடைய தோலின் நிறத்துடன் பொன்னிறமாகவோ அல்லது கறுத்தோ இருந்த அவர்களுடைய குழற்கற்றைகள் தெளிவாக வேறுபட்டுத் தெரிந்தன. தன் உடலை முன்னோக்கிச் சாய்த்து தத்தமது ஓட்டுனரிடம் நிலவைத் தொடர்ந்து செல்லுமாறு வற்புறுத்திக்கொண்டிருந்த ஒரு மர்மமான பெண் பயணி எல்லா கார்களிலும் இருந்தாள்.

அழிந்துவிடும் ஆபத்திலுள்ள நிலவுதான் அவர்களை அங்கு வருமாறு கட்டளையிட்டிருந்தது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். இப்படி எத்தனை பேர் இருந்தனர்? நிலாப் பெண்களைக் கொண்டுசெல்லும் கார்கள் இன்னும் அதிகமாகி, நகரின் பல்வேறு திசைகளில் இருந்த அனைத்துப் பகுதிகளில் இருந்தும், எல்லா சாலைச் சந்திப்புகளிலும் பயணித்து, நிலவு நின்றுவிட்டதாகத் தோற்றமளித்த இடத்தில் திரண்டன. நகர எல்லையில் இருந்த தானியங்கி வாகனங்களின் ஓட்டை உடைசற் கிடங்கின் முன் நாங்கள் நின்றிருந்தோம்.

அந்தச் சாலை சிறிய சந்துகள், குன்றுகளூடே அமைந்த உயரமான நிலப் பகுதிகள், குன்றுகள், சிகரங்கள் கொண்ட பகுதிகளின் வழியே படிப்படியாகப் பயணித்து இறுதியாக முடிந்தது. ஆனால் அந்த நிலத்தின் இயற்கையான புறவடிவம் சமனற்ற இந்த மேற்பரப்பை உருவாக்கவில்லை. மாறாக, வீசியெறியப்பட்ட பொருட்களால் உருவான அடுக்குகளால் அவ்வாறாக அது உருமாறி இருந்தது. இந்த நகரத்தின் நுகர்வுக் கலாச்சாரம் புதிய பொருட்களை உடனடியாகக் கைக்கொள்வதில் உள்ள சுகத்தைத் துய்க்க விரும்பியது. பயன்படுத்திப் புறந்தள்ளிக்கொண்டே இருந்த பொருட்களால், விரும்பத் தகாத தோற்றமுடைய ஒரு நகர்ப்பகுதி இவ்வாறு உருவானதில்தான், அது இறுதியில் வந்து முடிந்தது.

ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுக் கிடக்கும் பழுதான குளிர்பதனப் பெட்டிகள், மக்கி மஞ்சள் நிறமாகிக் கொண்டிருந்த லைஃப் நாளிதழின் பிரதிகள், பயனற்றுப் போன குமிழ்விளக்குகள் ஆகியவை, பற்பல வருடங்களாக சேதமடைந்த பொருட்கள் இட்டு வைக்கப்படும் அந்த மிகப் பெரிய கிடங்கு முழுதும் குவிந்து கிடந்தன. இந்தக் கூர்முனைகளுடைய கரடுமுரடான துருப்பிடித்த பகுதியில்தான் இப்போது நிலவு தெளிவற்ற தோற்றத்தில் காட்சியளித்தது. தகர்ந்து சுருண்டு கிடந்த உலோகங்களால் உருவான அந்தப் பரந்தவெளி உயர்ந்தெழும் பெரும் கடல் அலைகளால் கொண்டு செல்லப்படுவது போன்று உப்பிக் காணப்பட்டது. முதுமையால் தளர்ச்சியுற்றிருந்த நிலவும், சிதிலங்களை உருக்கி இணைத்த உலோகக் கூட்டால் உருவான பூமியின் மேற்புற ஓடும் ஒன்றுபோலவே தோற்றமளித்தன. பயனற்ற உலோகத் துண்டுகளின் மலைகள் தமக்குள்ளேயே தாம் முடிகிற வட்ட வடிவ அரங்கைப் போன்ற ஒரு சங்கிலியை உருவாக்கின. நிலா இந்த நிலப் பரப்பில் தாழ்வாகத் தொங்கியது. கோளும் அதனுடைய செயற்கைக்கோளும் தத்தமது கண்ணாடிகள் பிரதிபலிக்கிற மற்றவருடைய உருவங்களாகத் திகழ்ந்தன.

எங்கள் காரின் விசைப் பொறிகள் அணைந்தன. தங்கள் இடுகாட்டை தங்கள் கண்களால் பார்ப்பது போல கார்களை வேறு எதனாலும் பயமுறுத்த முடியாது. டயானா கீழே இறங்கினாள். மற்ற எல்லா டயானாக்களும் அவளைப் பின் தொடர்ந்தனர். ஆனால் இப்போது அவர்களுடைய வலிமை மெல்ல குறையத் துவங்கியது போலத் தெரிந்தது. ஓட்டை உடைசலான இரும்புத் துண்டுகளின் குவியலின் இடையே தங்களைக் கண்டவர்கள், தங்கள் நிர்வாணத் தன்மை குறித்து திடீரென பீடிக்கப்பட்ட விழிப்புணர்வால் எங்கு செல்கிறோம் என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையுடன் நடந்தனர். தங்கள் மார்புகளை மறைப்பதற்காக குளிரால் நடுங்குறுவது போல அவர்களுள் நிறைய பேர் தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டனர். இவ்வாறு செய்தபடியே பரவிய அவர்கள் பயனற்ற பொருட்களால் உருவான மலைகளின் மீதேறி, வட்ட வடிவ அரங்கினுள் இறங்கி, அதன் நடுவே ஒரு பெரிய வட்ட வடிவில் குழுமினர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கள் கைகளை ஒன்றாக உயர்த்தினர்.

அவர்களின் இந்தச் சைகைகளால் பாதிப்படைந்ததைப் போல நிலவு நகரத் துவங்கியது. சில நொடிகளுக்கு அது தன் சக்தியைத் திரும்பப்பெற்று மறுபடி உயரத்தை எட்டுவது போலிருந்தது. பெண்களின் அந்த வட்டம், வெளிப்புறமாக நீட்டப்பட்ட  கைகளுடன் தங்கள் முகங்களையும், மார்புகளையும் நிலவை நோக்கித் திருப்பியவண்ணம் நின்றது. இதைத்தான் நிலா அவர்களிடம் செய்யச்சொல்லிக் கேட்டதா? வானத்தில் அவர்களின் உதவி அதற்குத் தேவைப்பட்டதா? இந்தக் கேள்விகளைப் பற்றித் தீவிரமாக சிந்திக்க எனக்கு நேரமில்லை. அந்த நொடியில்தான் ஒரு சுமைதூக்கிக் கருவி அங்கே நுழைந்தது.

வானத்தின் அழகற்ற சுமையை அகற்றி அதனைத் தூய்மையாக்க முடிவெடுத்த அதிகார வட்டத்தினால் அந்தச் சுமைதூக்கி தயாரிக்கப்பட்டிருந்தது. நிலத்தை சமன்செய்யும் பொறியில் இருந்து ஒரு நண்டின் கொடுக்கு மேலெழுந்தது. கம்பளிப் பூச்சியைப் பிடிப்பதற்குமுன், தன் பாதங்களை அழுத்தி வைத்து, சம்மணமிட்டு, உருவில் குட்டையாக இருப்பினும் உறுதியாக முன்னேறும் நண்டைப் போலவே அது முன்னோக்கி வந்தது. செயற்பாட்டுக்குத் தயாராக இருந்த இந்த இடத்தை அது அடைந்தபோது பூமியின் மொத்தப் பரப்பையும் உறுதியாகப் பற்றிக் கொள்வதற்காக இன்னும் அதிகமாகப் பருத்தும் குட்டையானதுமாக மாறியது போல் அது தோற்றமளித்தது. இழுவைப் பொறி வேகமாகச் சுழன்றது. சுமைதூக்கி தன்னுடைய கைகளை வானை நோக்கி உயர்த்தியது.

Photograph by Ryan Mcginley Fireworks Hysteric Courtesy Team Gallery NY

அவ்வளவு பெரிய கைகளைக் கொண்ட சுமைதூக்கி ஒன்றை உருவாக்க முடியும் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. மொத்தப் பற்களையும் வெளிக்காட்டியபடி அதன் பக்கட் இப்போது திறந்தபோது நண்டின் கொடுக்கு என்பதைவிட சுறாவின் வாய் போல் அது பெரியதாக இருந்தது. நிலா மிகச் சரியாக அதே இடத்தில்தான் இருந்தது. தப்பிக்க விரும்புவது போல் அது அலைபாய்ந்தது. ஆனால் சுமைதூக்கி காந்தத்தால் ஆனது போலிருந்தது. தன்னுடைய தாடைகளுக்கு இடையே நிலா இறங்கியதும், ‘க்ராக்’ எனும் வறண்ட சத்தத்துடன் சுமைதூக்கி தன் வாயை மூடிக்கொள்ள, எங்கள் கண்முன்னே நிலா முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டது. ஒரு விநாடி நிலா இனிப்பு அப்பம் போல நொறுங்கிவிட்டதாகக் காட்சியளித்தது. ஆனால் அதற்கு மாறாக பக்கட்டின் தாடைகளுக்கு உள்ளே ஒரு பாதியும் வெளியே மற்றொன்றுமாக அது அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. நீள்சதுர வடிவில் தட்டையாக்கப்பட்ட அது, பக்கட்டின் பற்களுக்கு இடையே நீட்டிக்கொண்டிருக்கும் வெண்சுருட்டைப் போலிருந்தது. வானம் சாம்பல் நிறத்து மழையைப் பொழிந்தது.

சுமைதூக்கி இப்போது அதன் வட்டப் பாதையில் இருந்து நிலவை வெளியே இழுக்க முயற்சி செய்தது. இழுவைப் பொறி பின்புறமாக சுழலத் துவங்கியது. இந்தக் கட்டத்தில் சுழல்வதற்கு பெருமளவு முயற்சி தேவை. இந்த மொத்த விஷயங்களும் நடந்துகொண்டிருந்த போது டயானாவும் அவள் தோழிகளும் தங்கள் கைகளை உயர்த்தியபடி அசையாது நின்றிருந்த காட்சி, எதிரியின் சினத்தைத் தங்கள் வட்டத்தால் வென்றுவிடும் நம்பிக்கை அவர்களிடம் இருப்பது போலிருந்தது. சுக்குநூறாக உடைந்த நிலவில் இருந்து அவர்கள் முகத்தின் மீதும் மார்புகளின் மீதும் சாம்பல் மழையாகப் பொழிந்தபோதுதான் அவர்கள் கலைய ஆரம்பித்தனர். டயானாவிடமிருந்து வலியில் தோய்ந்த ஒரு கதறல் வெளிப்பட்டது.

சிறைப்பட்டிருந்த நிலா தன்னிடம் மீதமிருந்த சிறிதளவு ஒளியையும் அந்தக் கணத்தில் இழந்து, கறுத்த வடிவங்குன்றிய பாறையாக மாறியது. பக்கட்டின் பற்கள் அதனைப் பற்றிக்கொண்டு இருந்திராவிடில் அது பூமியின் மீது மோதி நொறுங்கிப் போயிருக்கும். சுமைதூக்கி மெல்ல தன்னுடைய சுமையைக் கீழே இறக்கிக்கொண்டிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலத்தின் மீது நீண்ட ஆணிகளை அறைந்து, அவற்றின் மீது ஓர் உலோக வலையைப் பொருத்தி வைத்திருந்தனர் வேலையாட்கள். நிலத்தை வந்தடைந்த உடன் மங்கிய நிறமும், ஒளிபுக வாய்ப்பற்றும், அம்மைத் தழும்புகள் போன்ற வடிவமும் கொண்ட மணற்பாறை போல நிலா மாறியது. முன்பு வான் முழுவதையும் தன் பளபளப்பான பிரதிபலிப்பால் ஒளியூட்டியது இதுதான் என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது.

சுமைதூக்கும் கருவியினுடைய பக்கட்டின் தாடைகள் திறந்தன. பளு குறைந்ததில் தன் கம்பளிப்பூச்சி பிடிக்கும் நடையுடன் பின்வாங்கிய அது கிட்டதட்ட தலைகீழாகப் புரண்டுவிட்டிருக்கும். வலையுடன் தயாராக இருந்த வேலையாட்கள் நிலவை அதனுள் வைத்து மூடி, வலைக்கும் நிலத்துக்கும் இடையேயான பொறியில் அதை இட்டனர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்தப் பயன்படும் நீள்கைகளை உடைய சட்டைக்குள் இருந்தபடி நிலா போராடியது. நிலநடுக்கம் ஏற்பட்டது போன்றதோர் அதிர்வு, காலியான கொள்கலன்களை கழிவு மலையில் இருந்து பனித்திரள் வழுக்கி விழுவது போல் விழச் செய்தது. பிறகு மறுபடி எல்லாம் அமைதியானது. நிலவற்ற வானம் பெரிய விளக்குகளின் வெளிச்சத் தெறிப்பில் முழுதாக நனைந்தது. ஆனால் இருள் எப்படியும் முன்பே குறைந்துகொண்டிருந்தது.

முழுதுமாகச் சேதமடைந்த இன்னொரு பொருளையும் கார்களின் இடுகாடு தன்னகத்தே கொண்டிருந்ததை விடியல் பார்த்தது. அது –  நிலா. பயனற்றதால் தூக்கியெறியப்பட்டிருந்த மற்ற பொருட்களின் நடுவே தப்பிக்க வழியற்றுக் கிடந்த நிலா, அவற்றின் அதே நிறத்துடனும், இவை முன்னெப்போதோ புதியதாக இருந்தன எனக் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு அதே மோசமான தோற்றத்துடனும் இருந்ததால், நிலவுக்கும் அந்தப் பொருட்களுக்கும் இப்போது பெரிய வேறுபாடுகள் தெரியவில்லை.

பூமியின் குப்பை இருந்த குழி முழுவதும் மீண்டும் ஒரு மெல்லிய முணுமுணுப்பு ஒலித்தது.

விடியலின் வெளிச்சம் பெருந் திரளான உயிரினங்கள் மெதுவாகக் கண் விழிப்பதைப் புலப்படுத்தியது.

உறுமலும் உயிரும் இழந்த டிரக்குகளின் உடல்கள், நிலைகுலைந்த சக்கரங்கள், சுருண்டு கிடந்த உலோகங்களுக்கு இடையே உடல் முழுதும் மயிர்கொண்ட உயிர்கள் முன்னேறிக்கொண்டிருந்தன.

புறக்கணிக்கப்பட்ட பொருட்களின் இடையே புறக்கணிக்கப்பட்ட மக்களாலான ஒரு சமூகம் வாழ்ந்தது. மற்றவர்களால் ஓரங்கட்டப்பட்ட அல்லது மனவிருப்பத்துடன் தங்களைத் தாங்களே ஒதுக்கிக்கொண்ட மக்கள். முன்பெழுதப்பட்ட ஊழினால் இயக்கப்படுபவர்கள். வாங்கிய அடுத்த கணமே காலாவதியாகும் புதிய பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நகர் முழுக்க விரைந்தோடிக் களைத்த, வீசியெறியப்பட்ட பொருட்கள் மட்டுமே உலகின் உண்மையான செல்வம் என்று முடிவெடுத்த மக்கள்.

நிலவைச் சுற்றிலும், வட்ட வடிவ அரங்கு முழுதும், தாடியும் ஒழுங்கற்ற தலைமுடியுமான முகத்துடன், உயரமும் ஒல்லியுமான தோற்றமுடைய இந்த உருவங்கள் நின்றும் அமர்ந்தும் இருந்தன. நைந்த கந்தலும், முற்றிலும் விநோதமான ஆடைகளும் அணிந்திருந்த கும்பலின் நடுவே டயானாவும் நேற்றைய இரவின் மற்ற பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். முன்னோக்கி வந்த அவர்கள், நிலத்தோடு சேர்த்து அடிக்கப்பட்டிருந்த ஆணிகளில் இருந்து வலையின் இரும்புக் கம்பிகளைத் தளர்த்தி விடுவிக்கத் துவங்கினர்.

பிணைத்திருந்த சங்கிலியில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறிய விண்கலக் கப்பல் போல எழுந்த நிலவு, பெண்களின் தலைகளுக்கு மேல், நாடோடிகளால் நிறைந்திருந்த விளையாட்டு அரங்கத்துக்கு மேலே மிதந்தது. உட்புறமாக இழுத்தும், சில சமயங்களில் வெளியே விட்டும் டயானாவும் அவள் தோழிகளும் கைகளில் வைத்திருந்த இரும்பு வலையில் தொங்கியது.  கம்பிகளின் முனைகளை கைகளில் பிடித்தபடி பெண்கள் ஓடத் துவங்கியதும் நிலவு அவர்களைப் பின்தொடர்ந்தது.

நிலா நகர ஆரம்பித்ததும் சிதிலங்களின் பள்ளத்தாக்குகளில் இருந்து ஒரு விதமான அலை எழுந்தது. அகார்டியன் இசைக் கருவியின் வடிவில் நசுங்கிக் கிடந்த பழைய கார்களின் உடல்கள் கரடுமுரடான சத்தத்துடன் தங்களை ஊர்வலத்தில் இணைத்துக்கொண்டு அணிவகுக்கத் துவங்கின. உருக்குலைந்த கொள்கலன்கள் யாவும் இடி போன்ற ஓசையை ஏற்படுத்தியபடி அந்த இடம் நெடுகிலும் நதியென உருண்டோடின. ஆனால் அவை தாமாக உருண்டனவா அல்லது அங்கிருந்த அனைத்துப் பொருட்களாலும் உருட்டி விடப்பட்டனவா என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது. தாம் மூலையில் வீசியெறியப்படப் போவதைத் தம்மால் மாற்ற இயலாது என்பதை அறிந்து, அதனை ஏற்றுக்கொண்ட எல்லாப் பொருட்களும், மக்களும், ஓட்டை உடைசற் பொருட்குவியலில் இருந்து காப்பாற்றப்பட்ட நிலவைப் பின்தொடர்ந்து, சாலையில் இறங்கி, நகரத்தின் செல்வந்தர்கள் வாழும் பகுதியை நோக்கித் திரண்டனர்.

அன்று காலை, நுகர்வோர் நன்றியறிவிப்பு தினத்தை நகரம் கொண்டாடிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் ஏதோவொரு நாளில் அது நிகழ்ந்தது. தங்கள் ஒவ்வொரு ஆசையையும் ஓய்வின்றி நிறைவேற்றும் உற்பத்திக் கடவுளுக்கு தங்கள் நன்றியுணர்வை நுகர்வோர் பறைசாற்றுவதற்காக அது ஏற்பாடு செய்யப்பட்டது. நகரின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி ஒவ்வொரு வருடமும் இதற்காக ஒரு அணிவகுப்பை ஏற்பாடு செய்தது. பளபளப்பான வண்ணங்கள் நிறைந்த பந்தின் வடிவில் மிகப்பெரிய பலூன் ஒன்று நகரின் முக்கிய சாலைகள் வழியாக அந்த அணிவகுப்பில் சென்றது. ஒளிரும் தகடுகளாலான உடையணிந்த பெண்கள், அந்தப் பலூனைக் கட்டும் நீண்ட இழைப்பட்டைகளை தங்கள் கைகளில் வைத்தபடி இசைக்குழு ஒன்றின்பின் அணிவகுத்துச் சென்றனர்.

அன்றைய தினம், ஊர்வலம் ஐந்தாவது அவென்யூவில் இருந்து வந்துகொண்டு இருந்தது. இசைக்குழுவைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் பெண், தன் கையிலிருந்த சிறு கோலை காற்றில் விரைவாகச் சுழற்றினாள். பெரிய முரசுகள் கொட்டி முழங்கின. திருப்தியுற்ற வாடிக்கையாளரின் பிரதிநிதியாக இருந்த பலூன் பூதம், வானளாவ உயர்ந்த கட்டிடங்களின் இடையே பறந்தது. ஃபிரெஞ்சு ராணுவத் தொப்பிகளும், அலங்காரச் சுங்குகளும், படைத்துறையினருடைய சீருடையின் தோற்பகுதிச் சின்னங்களும் அணிந்து, பளபளக்கும் சிறு பொருட்களால் ஆன இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த பெண்களின் கைகளில் இருந்த, நாய்கள் கழுத்தில் அணிவிக்கப்படும் தோல்வாருக்குக் கீழ்ப்படிந்து அந்த பலூன் முன்னேறியது.

அதே சமயத்தில் இன்னொரு ஊர்வலம் மன்ஹாட்டனைக் கடந்து கொண்டு இருந்தது. பூசணம் போலவும், எளிதில் துண்டாகி உதிர்ந்துவிடக் கூடிய ஒன்றாகவும் இருந்த நிலவும், நிர்வாணப் பெண்களால் இழுக்கப்பட்டு பெரிதுயர்ந்த கட்டிடங்களின் இடையே நீந்தி முன்னேறியது. மெல்ல அதிகரித்துக்கொண்டிருந்த அமைதியான அந்த மக்கள் கூட்டத்தின் பின்வரிசையில், அதிகப் பயன்பாட்டால் இனி உதவாது எனுமளவுக்குச் சேதமுற்றிருந்த கார்களும் டிரக்குகளின் எலும்புக் கூடுகளும் வந்தன. அதிகாலையில் இருந்து நிலவைப் பின்தொடர்ந்து திரண்டிருந்த பெருங்கூட்டத்துடன் இப்போது ஆயிரக்கணக்கான மக்களும் சேர்ந்துகொண்டனர். குறிப்பாக ஹேர்லமின் ஜனநெருக்கடியான கறுப்பின மற்றும் ப்யூர்டோரீகன் பகுதிகளை ஊர்வலம் கடந்த போது, அனைத்து நிறத்தவரும் எல்லா வயதுக் குழந்தைகளும் உள்ள குடும்பங்களும் அதில் இணைந்தனர்.

நிலா ஊர்வலம் நகரின் மேட்டிமை மிகுந்த மக்கள் வாழும் பகுதியை எதிரும் புதிருமாக சுற்றிவந்தது. பிறகு ஐந்தாவது அவென்யூவில் பலூனை இழுத்துச் சென்றுகொண்டிருந்த அந்த இன்னொரு ஊர்வலத்துடன் இணைவதற்காக, விரைவாகவும் சத்தமின்றியும் பிராட்வே அரங்கிற்குள் நுழைய ஆரம்பித்தது.

மேடிசன் சதுக்கத்தில் ஒரு ஊர்வலம் மற்றொன்றைச் சந்தித்தது அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமெனில் அவை இரண்டும் ஒன்றாகக் கலந்து ஒரே ஊர்வலமாக மாறின. திருப்தியடைந்த வாடிக்கையாளர், நிலவின் கூர்முனைகளுடைய பரப்புடன் மோதிக்கொண்ட காரணத்தால் காற்று இறங்கிப் போய் வெற்று நெகிழிப் பையாக மாறிப்போனார். இப்போது இருசக்கர வாகனங்களின் மீது அமர்ந்திருந்த டயானாக்கள் பலவண்ண நீள இழைப்பட்டைகளால் நிலவை இழுத்துக்கொண்டு இருந்தனர் அல்லது நிர்வாணப் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்ததால், பெண் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் சீருடைகளையும் ஃபிரெஞ்சு ராணுவத் தொப்பிகளையும் தூக்கி எறிந்துவிட்டிருக்கலாம். அணிவகுப்பில் இருந்த வாகன ஓட்டிகளிடமும் கார்களிடமும் இது போன்றதோர் உருமாற்றம் நிகழ்ந்தது. எவை புதிய கார்கள் எவை பழையன என்று இப்போது ஒருவராலும் சொல்ல முடியாது. வளைந்த சக்கரங்களும், துருப்பிடித்த ஃபெண்டர்களும், கார்களின் வண்ணப்பூச்சுடைய உலோக வெளிப்புறப் பகுதிகளோடு கலந்து பளபளத்த காட்சியைப் பார்ப்பதற்கு எனாமல் போல ஒளிரும் கண்ணாடியும் சாயமும் போல் இருந்தது.

அந்தக் கடைகளை அணிவகுப்பு கடந்தபின் அவற்றின் ஜன்னல்கள் ஒட்டடையும் பூசணமும் போர்த்தப்பட்டனவாக மாறின. வான்வரை உயர்ந்த கட்டிடங்களின் மின்தூக்கிகள், கிரீச்சிடவும் முனகவும் துவங்கின. குளிர்பதனப் பெட்டிகளின் முட்டை வைக்கும் சட்டங்கள், அடைகாக்கும் பொறிகள் போல, கோழிக் குஞ்சுகளால் நிரம்பின. தொலைக்காட்சிகள் சுழன்றடிக்கும் வளிமண்டலப் புயல்கள் பற்றிய அறிவிப்புகளைச் செய்தன.

இந்த நகரம் ஒரேயடியாக தன்னைத் தானே அழித்துக்கொண்டது. பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கியெறியப்படும் தன்மை கொண்ட இந்த நகரம், இப்போது நிலவின் இறுதிப் பயணத்தில் அதைப் பின்தொடர்ந்தது.

காலியாக இருந்த வாயு நிரப்பும் உலோகக் கொள்கலன் மீது இசைக்குழு எழுப்பிய ஓசையுடன் ஊர்வலம் ப்ரூக்ளின் பாலத்தை வந்தடைந்தது. இசைக்குழுவின் இயக்குனராக அதைத் தலைமேயேற்று நடத்திச் சென்றுகொண்டிருந்த டயானா, தன்னுடைய கையில் இருந்த சிறிய கோலை உயர்த்தினாள். அவளுடைய தோழிகள் தங்களிடமிருந்த நீள இழைப்பட்டைகளை காற்றில் விரைவாகச் சுழற்றினர். நிலவு இறுதியாக ஒருமுறை பாய்ந்து, பாலத்தின் வளைந்த கம்பிப் பின்னலில் பயணித்து, கடலை நோக்கிச் சாய்ந்து, ஒரு செங்கல் போல நீருக்குள் மோதி, நூற்றுக்கணக்கான குமிழ்களை மேற்பரப்பில் அனுப்பி மூழ்கியது.

இதற்கிடையில், கைகளில் இருந்து நீண்ட இழைப்பட்டைகளை விடுவிப்பதற்குப் பதிலாக,  அவற்றுடன் தங்களைப் பிணைத்துக்கொண்டனர் பெண்கள். நிலவு அவர்களைத் தூக்கி, சுற்றுச்சுவர் மீதும் பாலத்தின் கீழேயும் தள்ளி, பறக்கவிட்டது. நீர்ப்பரப்புக்கு அடியில் நீந்துபவர்கள் போல வளைகோடு வடிவத்தைக் காற்றில் வரைந்துகாட்டி விளக்கிய பிறகு அவர்கள் நீரில் மறைந்து விட்டனர்.

எங்களுள் சிலர் ப்ரூக்ளின் பாலத்தின் மீதும் துறைமுக அணைக் கரைகளின் மீதும் திகைத்து நின்றபடி வெறித்துப் பார்த்தோம். அவர்களைப் பின்தொடர்ந்து நாங்களும் நீரில் குதித்துவிடலாம் எனும் வேட்கைக்கும், முன்போலவே அவர்கள் மறுபடி தோன்றுவதை நிச்சயமாகப் பார்ப்போம் என்கிற நம்பிக்கைக்கும் இடையே சிக்கித் தவித்தோம்.

நாங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. அலைகளுடன் அதிர்வுறத் துவங்கிய கடல், வட்ட வடிவமாகப் பரவியது. அந்த வட்டத்தின் நடுவில் ஒரு தீவு தோன்றி மலை போல் வளர்ந்தது. அது பூமியின் ஒரு பாதி போல, நீரின் மீது ஓய்வெடுக்கும் பூமி போல இருந்தது. இன்னும் சிறிது மேலெழுந்தது. இல்லை, வானில் எழும் நிலவு போல இருந்தது. சில நொடிகளுக்கு முன்பு ஆழங்களுக்குள் கீழ்நோக்கிப் பாய்கிறபோது நாங்கள் பார்த்த அந்த நிலவைப் போல இது இல்லை என்றாலும், நான் இதனை நிலவு என்றே சொல்கிறேன். ஆனாலும் இந்தப் புதிய நிலவு வித்தியாசத்திலும் அதிவித்தியாசமாக இருந்தது. கடலில் இருந்து பச்சை நிறத் தடம் ஒன்று சொட்டியபடி தோன்றிய அது, ஒளிரும் கடற்பாசி. மரகதத்தின் பட்டொளியைக் கடனாகத் தந்த நிலங்களுக்கு, குழாய்களின் வாய் வழியே தண்ணீர் நீரூற்றுகளாகப் பாய்ந்தது. கிளர்ச்சியூட்டும் ஒரு காடு அதைப் போர்த்தி இருந்தது. ஆனால், அது தாவரங்களால் ஆனதல்ல. நகரும் இயல்புடைய ஒளிர் வண்ணங்களும், உடல் முழுதும் கண்கள் கொண்ட மயிற்தோகையாலும் நெய்யப்பட்டது போல அந்தப் போர்வை காட்சியளித்தது.

அந்த உருண்டை வடிவப் பொருள் அதிவிரைவாக வானுக்குள் மறைவதற்குமுன், இன்றுதான் நாங்கள் அந்த நிலப்பரப்பைச் சிறிது நேரமாவது பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நுணுக்கமான விவரங்கள் மலர்ச்சியையும் செழிப்பையும் குறித்து மனதிலெழும் பொதுவான எண்ணங்களில் மறைந்துவிட்டன. விடியல். ஒப்பீட்டளவில் வேறுபட்டுக் காணப்பட்ட வண்ணங்கள், ஒளியும் நிழலுமாக ஒளிர்கிற ஓவியக் காட்சிகளாக மங்கின. நிலவிலிருந்த நிலங்களும் காடுகளும் இறுக்கமான பளபளக்கும் பூமிக் கோளத்தினுடைய நிலப்பரப்பின் மீது வெறும் வரைகோடுகளாக மட்டுமே இப்போது கண்ணுக்குத் தெரிந்தன. ஆனால், சில மரக்கிளைகளின் மீது தொங்கிக்கொண்டிருந்த தூங்கு மஞ்சங்கள் கொண்ட ஊஞ்சல்கள், காற்றில் முன்னும் பின்னும் உந்தப்படுவதை எங்களால் காண முடிந்தது. எங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்த பெண்கள் அவற்றில் பாதுகாப்பாகவும் மறைவாகவும் படுத்திருப்பதை நான் பார்த்தேன். டயானாவை என்னால் அடையாளம் காண முடிந்தது. இறுதியில் அமைதியுற்றிருந்த அவள், இறகுகளால் செய்யப்பட்ட சாமரத்தால் தனக்குத் தானே விசிறிக்கொள்வதைக் கண்டேன். ஒருவேளை என்னை அவள் அடையாளம் கண்டுகொண்டதற்கான சமிக்ஞையாகவும் அது இருக்கலாம்.

“அவர்கள் இங்கு இருக்கிறார்கள். இதோ அவள் இங்கிருக்கிறாள்” என்று நான் கூச்சலிட்டேன். நாங்கள் அனைவரும் கூச்சல் போட்டோம். அவர்களை மறுபடி கண்டுபிடித்த மகிழ்ச்சி, இப்போது நிரந்தரமாக அவர்களை இழந்துவிட்ட வலியால் அதற்குள் பாழாகிவிட்டது. இருண்ட வானில் எழுந்த நிலவு அங்கிருந்த ஏரிகள், நிலங்களின் மீது சூரியனின் பிரதிபலிப்புகளை மட்டுமே தந்தது.

மூர்க்கமடைந்த நாங்கள் பூமியை இயல்பு நிலைக்கு மீட்டுத் தந்த தரிசுநிலங்கள், காடுகள் ஊடாக அந்தக் கண்டத்தின் ஒரு மூலையில் இருந்து மற்றொன்றுக்குப் பாய்ந்து சென்றோம். நகரங்கள், சாலைகளைப் புதைத்து, அங்கு இதற்குமுன் எதுவும் இருந்ததற்கான தடமே இல்லாமல் முழுதாக அழித்தோம். கடும் மனவேதனையால் பீடிக்கப்பட்டு, வன்முறை உணர்வுடன் கொம்புகளை ஊதி, எங்கள் தும்பிக்கையையும், நீண்ட மெல்லிய தந்தங்களையும் வான்வரை உயர்த்தி, பின்புறத் தொடைகளின் புதர் போன்ற அடர்முடியைக் குலுக்கினோம். இந்த உலகின் அழிந்துபட்ட ஆதிப் பெருயானை இனத்தைச் சேர்ந்த இளங்கன்றுகளாகிய எங்கள் வாழ்வு இப்போதுதான் துவங்கியுள்ளது என்பதை உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் ஆசைப்பட்டவை எங்களுக்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது.

*

ஆங்கில மூலம்: The Daughters of the Moon by Italo Calvino