புழுதிவீணைமீட்டல்: Rectify நெடுந்தொடரை முன்வைத்து

0 comment

வாட்கூர்மையின் பதத்தினை தொடுவுணர்வின் மூலம் அறியலாம். அதற்கும் முன்பே அது ஒளியைத் தாள்போல இரண்டாய்க் கிழித்து நம் விழியைக் கூசவைக்கும் எனில் தொட்டாயும் தேவையே இல்லை. அத்தன்மை கொண்ட புனைவுகளே இலக்கியத் தரத்தின் பீடங்களுக்கு இலாயக்கானவை. துய்த்து முடித்ததுமே சுடர்களை அணைத்துக்கொண்ட கனமும் பனிவீழலில் கால்புதைந்த உணர்வின்மையும் ஒன்றாய்ப் பொங்கும் நிலை.

அத்தகைய மகோன்னத இலக்கியப் படைப்புகளுக்கு இயல்பாகவே சில பண்புகள் உண்டு. அரிதாய் நிகழ்வது, நிகர்வாழ்வுத் தருணங்களால் நிறைந்திருப்பது, போலியற்றிருப்பது. வாசகர் மனதில் நீண்டகாலத் தாக்கத்தினை அவை ஏற்படுத்தக்கூடியவை, போலவே அது எழுப்பும் அதிர்வலைகளும் செறிவுமிக்கவை. எழுத்திலக்கியத்தில் மட்டுமே இது நிகழும் என்று நினைப்பது பொருளற்ற சுயதடையிடல். எழுத்தை அடிப்படையாய்க் கொண்டெழும் திரையிலக்கியத்தில், அதிலும் இன்றைய வெகுஜன ஊடகத்தின் முதன்மை தேர்வாக இருக்கும் திரைத்தொடர்களில், இத்தகைய இலக்கிய அனுபவம் அரிதாய் நிகழ்ந்தபடியே இருக்கிறது.

Rectify (2013-2016) தொடரை முழுமையாக பார்த்துமுடித்த பிறகு நினைவில் ஒரு குமிழ்மிட்டாயை அசைபோடுவதைப் போல சில நினைவுகளை மீட்டெடுக்க நினைத்தேன். எண்ணத்தினை மிகுந்து பல காட்சிகளும் மேன்மையான தருணங்களாய் நிரைவகுத்து வந்தபடி இருந்தன. சில இடர்களை எதிர்நோக்கி அஞ்சி வாழ்ந்தபடி இருக்கையில், அச்சமெனும் உருப்பெருக்கி கண்ணாடி மூலமாக அத்தகைய இடர்கள் பேருருக் கொண்டபடி இருக்கின்றன. என்றோ ஒருநாள் அவை நம்மீது ஊர்கையில் அதன் வெம்மை தாங்கவொண்ணாது இறந்திருப்போம் என்றே அஞ்சுகிறோம். ஆனால், சில நேரங்களில் பேரிடர்கள் நம்மை ஆண்டு அலைக்கழித்து கடந்து சென்றுவிடுகின்றன. நாம் நல்வாய்ப்பாக அல்லது கெடுவாய்ப்பாக அதன் முத்திரைகளைச் சுமந்தபடி தினமும் அதன் வலிகளை எண்ணியபடி மீண்டும் தொடர்ந்து வாழ்கிறோம்.

2

ஒரு முழுமையான கதையை அப்படியே சொல்வதைவிட கதைகுறித்த அனுபவத்தை எழுதுவதில் எப்போதும் எழும் ஒரு சிக்கல் இருக்கிறது. எங்கிருந்து துவங்குவது என்பதுதான் அது. எந்தப் புள்ளியிலிருந்து துவங்கினாலும் ஒரு அழகிய மையம் துலங்கி வரும் சிறப்பு அதற்குண்டு என்பதாலேயே, இறுக்கிப் பிடித்து கூறுமுறைக்கு ஒரு வரிசையைத் தேர்ந்தெடுக்க முனையும் போது நழுவிக்கொண்டே இருக்கிறது அதன் நீர்மை.

சிறைக்கதவுகளுக்கு அப்பால் இருக்கும் உலகு குறித்த பிரயாசைகள், கவலைகள் ஏதுமில்லாமல் வற்றி உலர்ந்துவிட்டிருக்கிற சூழலில் நிலைத்திருக்க வேண்டிய அவசியம் டானியல் ஹோல்டனுக்கு. இருந்தபோதும் அவன் நிகழ்த்தாத ஒரு தீச்செயல் பற்றிய அவசங்கள் அவனைக் குற்றவாளியாகத் தேர்வுசெய்து அவனது இளமையைக் காவு வாங்கியிருக்கிறது. இது சிறைவாசத்தின் நிமித்தம். இருபதாண்டுகளுக்குப் பிறகு மரபியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால் அவன் பிழையற்றவன் என்று முடிவுசெய்ய அறிவியல் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. நீண்ட சிறைக்கதவுகளையும் திறந்துவிடுகிறது.

முதன்மையாக எதிர்நோக்கி விழிபூத்திருப்பது அவனது குடும்பம். அவன் சிறைக்கு வெளியே வந்ததும் மொத்தக் குடும்பமும் அவனைச் சந்திக்கும் நீள்சட்டகம் நினைவிலேயே இருக்கிறது. மொத்தக் குடும்பத்தின் மனவெடையும் ஒருபுறம் நிற்க, இவன் இலகுவான எடையுடன் தராசின் மறுபுறத்தில் நின்று மெளனத் தவிப்பு கொள்வது போலிருக்கிறது அந்தச் சட்டகம். அவன் சகோதரி அமந்தா, குடும்பத் தொகையில் இருந்து விடுபட்ட எலக்ட்ரான் போல அவனிடம் சென்று அணைத்துக்கொள்கிறாள். அவனைச் சமன்பாட்டில் வைக்க அதுவே தேவை.

முன்பு அவனது சிங்காதனமும் கழிவுபீடமும் ஒரே அறையாக இருந்திருக்கிறது. அங்கிருந்து அவன் பொதுவாழ்வின் பாதைக்கு வரும்போது வேறுலகைக் காண்கிறான். இரு தசாப்தங்கள் கழித்து விழிநிறைக்கும் விசும்பின் விரிவைக் காண்கிறான். தனது வெளிப்பிரவேசத்தின் முதல் வாரமே ஏகப்பட்ட உணர்வுக் கொந்தளிப்புகள் நாடக மேடைகளின் மத்தியில் அவனை நிறுத்துகிறது. வியந்து விண்மீன் பார்க்கையில் கால்களில் நெருஞ்சி தைக்கிறது. பாதாளத்தின் நாகச் சுழல்களின் புதிரைக் காண்கையில் தலையில் குட்டு விழுகிறது. சூரிய அஸ்தமனத்தை பார்க்க யத்தனிக்கும் போது கொடு இரைச்சல் காதைக் கிழிக்கிறது. தனக்குத் தொடர்பற்ற வேறொரு காலத்தில் அவனது திகைப்பு தனியொருவனின் புது மொழியாகிறது. அடர்மழையை வியக்கும் வளர்ச்சியடைந்த மதலை எத்தனை அபூர்வமானவன்.

உணர்வுகளின் பெருஞ்சாலையில் கவலைகளும் பேரங்களும் அச்சங்களும் கனரக வாகனங்களாக விரைந்துகொண்டிருக்கின்றன. டானியலுக்கு நடைபயில அவை வாய்ப்பு தரப்போவதில்லை. நேரடியாக விரைந்து கற்றாக வேண்டும் இந்த விரிசிறையை. டானியலை இன்னமும் கொலைகாரன் என்றே ஆழ்மனதில் கட்டியம் சொல்லிப் பதிந்து வைத்திருக்கிறது அந்த வாழ்நிலத்தின் கூட்டு மனம். குறிப்பாக வன்புணர்வுக்கு உட்பட்டு கொலையுண்டிருந்த ஹன்னா டீன் என்பவளின் குடும்பம் அதைத் தீவிரமாக நம்பிக்கொண்டே இருக்கிறது.

அவர்களது வாழ்நாள் எதிர்பார்ப்பு டானியலின் மரணதண்டனை நிறைவேற்றம். இழந்தவர்களின் மனதிற்கு நீதியின் தருக்கத்தை ஆராயும் வாய்ப்போ மனநிலையோ இருப்பதில்லை. அவர்கள் வலிக்கு மருந்து வேண்டும் என்று காலம் கடந்த கதறலுடன் இருப்பவர்கள். தழும்பு இருக்கும்தான் என்ற போதும் குறைந்தபட்சம் கொலைகாரனைத் தூக்கிற்கு அனுப்பும் களிம்பு தங்கள் மகளின் மரணத்திற்குத் தகும் என்ற கற்பிதம் தேவையாக மாறி ஆழப்பதிந்திருக்கிறது. டி.என்.ஏ.வின் அறிவியல் டானியலுக்கு நம்பிக்கை ஊட்டும் ஆதரவுக்கரம் நீட்டுகின்றது. பலமுறை அவனது மரணத்தை மாதிரி செய்து காத்திருப்பவர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை ஆற்றுப்படுத்தவோ மரபுச்சுருளின் நீளம் போதவில்லை.

அயர்வுடன் கைகளைப் பிசைந்தபடி நடந்துகொண்டிருந்த நாட்கள் டானியலின் வெளியேற்றத்திற்குப் பின்னர் செய்வதறியா பரபரப்பிற்குள்ளாகி விடுகிறது. அவனைப் பார்க்கும் ஒவ்வொரு கண்களும் வெவ்வேறு அர்த்தத்தைப் பிழிந்துகொள்கின்றன. அவனை நெற்றிச் சுருக்கங்களுடன் பலரும் எதிர்கொள்கின்றனர். டானியல் ஒரு விசித்திர பிறவி என்பது போல சுயபடம் எடுத்துக்கொள்ள முனையும் காதல் இணை ஒன்று காட்டப்படுகிறது. கொந்தளிப்புடன் எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவனது சொந்த குடும்பத்திலேயே கடந்த இருபதாண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களின் தலைகீழ் பார்வை, அவனை பிரபலம் என்று பார்த்து ஆட்டோகிராஃப் வாங்காத குறையாய் வியப்பவர்களும் உண்டு. அவனைப் பார்த்ததும் தனது உடலைத் தரவேண்டும் என்று யோசித்து வைத்திருந்த முடிதிருத்துபவள் ஒருத்தி வந்து போகிறாள். அர்த்தமிழந்த நாற்களத்தில் விதிகளற்று நகர்ந்துகொண்டிருக்கும் அத்தனைச் சாதாரண காய்களையும் டானியல் தனது வெளியேற்றத்தினால் தானே அறியாமல் சிதறடித்தும் சீண்டியும் விடுகிறான்.

ஒவ்வொரு கதவு திறக்கப்படும் போதும் அது இன்னொரு மூடிய பெரிய கதவிற்கு முன்பு சென்று முடிகிறது. இப்படி முடிவற்ற கதவுகளாய் நீளும் அபத்தத்திற்குச் சாவிகள் தேடும் பணிக்கு வாழ்க்கை என்ற பெயரொட்டு இடப்பட்டிருக்கிறது.

3

வன்புணர்வுக்குள்ளாகி கொலையுண்ட ஹன்னா டீனின் அன்னை இருபதாண்டிற்கு முன்பு ஹன்னா உயிருடன் இருந்த போது எப்படி இருந்ததோ அதே நிலையில் அவளது அறையை இன்றும் பராமரித்து வருகிறாள். அவ்வறையின் காலம் ஓவியத்தின் தாளமுடியாத நிறப்பளுவைப் போன்று இருக்கிறது. அது தன் வதைக்கான நினைவூட்டு, தனது சங்கிலிகளில் இருந்து, தான் தவறியும் வெளியேறிவிடக்கூடாது என்பதற்கான நிர்ணயம் அதில் இருக்கிறது. அகம் கொள்ளும் அமைதி பற்றிய பயத்தினால் சுற்றி எழுப்பிக்கொண்டிருக்கும் தற்சிறை அது. டானியல் சிறையில் காலக்கயிறினை மடித்து மடித்து சிறியதாக்க எத்தனிக்க அவனுக்கு எதிர்சொல் போல ஹன்னாவின் தாய் காலரதத்தை இழுத்து ஓரிடத்தில் இருபதாண்டுகளாய் ஆடாமல் நிலைக்க வைக்கிறாள்.

இந்தப் பெருவெளியும் புவியும் கூட ஒரு எதேச்சையான நிகழ்வுதான் என்றொரு எண்ணம் இருக்கிறது. இந்த நிகழ்தகவுத்தன்மையே ஊழ், அறம், விளைவுகள், வரலாறு என்று பெரும் சந்தர்ப்பங்களுக்கு அடிப்படை அலகாகிறது. இதுவே தத்துவத்திற்கு திகில்தன்மை அளிக்கிறது.  இவற்றிற்கு பெருமிதம் சேர்ப்பதாக அத்தனை தனிமனித வாழ்வும் நொய்ந்து அழிவதும் வளர்ந்து பெருகுவதும் நிகழ்கிறது. இதனிடையில் எந்தப் பணியிலும் ஈடுபடுத்திக் கொள்ளாமல் தற்கட்டு கொண்டு மனதை அசைவு கொள்ளாமல் நிறுத்தி சாந்தமாக அமரும் ஆற்றல்கொண்டவர்களே உண்மையில் அரிமாசனத்தை அறிந்தவர்கள்.

சிறைக்குள் காலத்தை ஒரு பந்தாக்கி உருட்டி விளையாடலாம், அது மீண்டும் மீண்டும் எறிபவனை நோக்கியே வந்துநின்று பழிக்கும். காலத்தை ஒரு வரலாற்றுத் தொடராகக் கொண்டால் சிறைக்குள் அதன் அபத்தம் எத்தகையதாக இருக்கும்? ஒவ்வொரு மணித்துளியும் அநேகமாக ஒத்தவை! வெள்ளைப் பக்கங்களாலான தன்வரலாற்று புத்தகம் என்பது எத்தனை பதற்றத்தைத் தரும்? ஏதேனும் ஒரிரு பக்கங்களில் நிறைந்திருக்கும் துர்சம்பவங்கள் இன்னும் அளவில் பெருகி பெருவலியை உருவாக்கக்கூடும். சரி, சிறைக்குள் காலத்தை மாயை ஆக்கிப் பார்க்கலாம், காலத்தை சில மடங்குகளாக மடக்கி மடக்கி அதன் நீளத்தைக் குறைக்க முனையலாம், புனைவுகளுக்குத் தன்னை ஒப்பளிப்பதன் மூலம் கால அனுபவத்தைச் சுருக்கிக்கொண்டிருப்பதாக ஒரு தன்னுணர்வை உருவாக்கலாம். இதைத்தான் ஹோல்டன் செய்து வருகிறான், தான் வெளிவருவது குறித்து அதீத நம்பிக்கைகள் அவனுக்கிருந்ததில்லை, அதற்கான பிரயாசையும் இல்லை. நீர்வழிப் படூவும் புனை போலவும் அதே சமயத்தில் காலநதியை சுழித்துச் சுழித்து தன்னால் முடிந்தவரை அதைச் சின்னதாக்கிப் பார்ப்பதும் என்று சிறைவாசத்தைக் கழிக்கிறான் அவன்.

சிறைக்கு வெளியேயான கதை நிகழ்வின் இடையிடையே கூட டானியலுக்குச் சிறைவாசத்தின் நினைவுகள் வந்துபோகின்றன. கூழாங்கற்களை கால்சராயில் போட்டு வைத்துக்கொண்டு திரியும் சிறுவன் அவ்வப்போது அதைக் கைவிட்டுத் தடவித்தடவிப் பார்த்துக்கொள்வதைப் போல டானியல் தன் சிறைவாசம் பற்றி அவ்வப்போது மீள்நினைவு கொள்கிறான். அதிலிருந்து பெற்ற வலி, கற்றல், மனநிலை என எதுவும் இங்கு பொருந்துவதில்லை. இங்கிருக்கும் ஓர் இயந்திர ஓட்டத்தின் போக்கினைத் தானும் சுவீகரித்துக்கொண்டாக வேண்டும்.

இங்கு மனிதர்கள் பொய்த்தாலும் வானமாவது காட்சி தருகிறது. வானத்தினை உறைந்த கூரைக்கடலாக கற்பனை செய்து கொள்ளலாம், மேகப் பொழிவினை ஏற்று நனைந்து தூயகடல் மூழ்கல் என்று பிதற்றிக் கொள்ளலாம். சிறையில் வானம் கூட பார்க்க முடியாது. அருகறையில் இருந்த ஒற்றை நண்பன் பெர்வின் சில ஆண்டுகள் வரை துணை வந்து மரணமேடை ஏறிவிட்டான். மற்றபடி அங்கு சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. இதை உணர்ந்துதான் டானியல் தனது பத்திரிக்கைச் சந்திப்பின் போது, “எனது வாழ்வின் இந்த திடீர் தலைகீழ் திருப்பங்களை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வதென்று எனக்குப் புரியவில்லை, இருந்தாலும் நான் இதற்கு எதிரானவன் இல்லை என்றும் மட்டும் தீர்க்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறான்.

4

குழந்தை முதலில் தலை நிமிர்த்தி விசும்பினைக் காண்கையில் அங்கு பரவி வரும் முகிற்கூட்டங்களைப் பார்த்து பூனைக்குட்டி என்கிறது. இயல்பிலேயே தான் அறிந்ததை எல்லாவற்றிலும் பொருத்திப் போட்டு புரிந்துகொள்ளும் பண்பு மானுடத்தின் வேர்களில் ஒளிவிடுகிறது. ஆனால் வளர்ச்சியுறும்தோறும் அந்தரங்கத்தை மறைக்க வேண்டிய தேவையை மானுடத்தின் மீது சமூகவியல் கட்டுப்பாடுகள் அள்ளிப்போடுகின்றன. அங்கே அது தன் அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் போதிய அளவு அதற்குப் பக்குவப்பட்டிருக்காத நாம், உணர்வுகளின் கைப்பிடிக்குள் சிக்குண்டு நமக்கு வழங்கப்படுவதை அப்படியே நம்பிக்கொள்கிறோம். அதில் ஒருவனின் குழந்தைமை நசுங்கிக் கிழிந்து கந்தலாவதை நாம் பொருட்படுத்துவதே இல்லை. தவறிழைக்காதவனுக்கு வழங்கப்படும் தண்டனை நீதிக்கொலை கூட அல்ல, சிசுக்கொலை!

அசிங்கத்தை விட அழகே அதீத வலியைத் தருகிறது. சக மனிதனிடம் நிலைகொண்டிருக்கும் சத்தியமும் துல்லியமும் அழகும் யாரையும் சீண்டக்கூடியது. அதை எப்படியாவது சிதைத்து மலவுருண்டைகளை வாரி வீசி அழகின்மையில் தள்ளிவிட வேண்டும் என்ற தீவிரம் அருகமை மனங்களுக்குள் எப்படியோ திரண்டுவிடுகிறது. சக மனிதன் மீது மனிதத்தன்மையற்ற காரியங்களை பிரயோகித்துப் பார்க்கும் பிராணிக்குத்தானே மனிதன் என்று பெயர்? அவற்றின் எதிரலைகளைக் கடந்தும் கசங்கி மிதிபட்டு மிச்சமிருக்கும் ஒரு மலர் அன்னனுக்கு இன்னும் தன்மையை தன் மூளைகளில் பதிந்து வைத்துக்கொண்டு வாழ்க்கையைக் கடந்தாக வேண்டிய நிலை.

டானியலுக்கென வாழ்வின் பெருங்கடலைக் கடக்க சில துடுப்புகள் இருக்கின்றன. தன் தாய், சக உதரி, இன்னும் சிலர். ஆயினும், தான் அவர்களுக்கு எத்தனை பாரம் என்ற நிதர்சனம் அவனை அலைக்கழிக்காமல் இல்லை. முதல் வார வெளியுலகின் வாழ்க்கையே அவன் இருபதாண்டுகள் சிறையில் கழித்த அனுபவங்களை விட பன்மடங்கு அதிகமானவை. அதன் எடையைத் தாங்கிக் கொள்வதை விட அதன் கணிப்பிற்குள் அகப்படாத தன்மை அவனைப் படுத்துகின்றன. பொது உலகு பேசிப் பழகும் சொற்களை மழலையுதடுகள் போலவே அவனும் மெல்ல உச்சரித்துப் பார்க்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. சொல்லில் நின்று வியத்தல்.

துயில்களின் நடுவே ஏற்படும் விழிப்புத் தீவுகளிலும், தான் அந்நியன் என்ற உண்மை அறைகிறது. தாந்தேவிற்கு வழிகாட்டி தேவதையாக வந்த பீற்றிக்ஸைப் போல இவனுக்கு முன் டானி தோற்றமளிக்கிறாள். அவளது அன்பும் கள்ளமற்று தோன்றும் பண்பும் அவனை அதுவரை கொள்ளாத சிலிர்ப்பிற்குள் தள்ளுகிறது. சட்டென நடுங்கும் அவன் மனதினுள் அனல்விதை கீறலிட்டுப் புதைந்து கொள்கிறது. அவள் ஸ்பரிசம் தனக்கே தன்னை வேறொருவனாய் காட்டும் மாயத்தை வியக்கிறான். பிடிமானம் என்பது இப்படியானதுதான் என்று அவனைக் குழப்புகிறது. ஹார்மோன் மந்திரங்கள்.

“நீ எப்போது உன் மனதில் இயேசுவை ஏற்கவிருக்கிறாய்?” என்று அவள் கேட்க, “உள்ளிருக்கும் கன்ஃபூசியஸும், புத்தரும் அப்படி இயேசுவை உள்ளே நான் ஏற்பதற்கு எந்தவோர் ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை, ஆனால் நீட்சே கொஞ்சம் முனகுவார், பார்த்துக்கலாம்” என்கிறான். வலியுணர் நரம்புகளில் தொடர்ந்து விழுந்த சாட்டை விளாற்றின் பிறகும் அவனுக்குள் குழந்தைமை மிச்சமிருப்பதன் சான்றாக ஆங்காங்கே மிளிர்கிறது அவனது நகைச்சுவை உணர்வு. அது சிலருக்குப் புரியாமல் கூடப் போகலாம், ஆனால் தன்னை மீட்டு வைத்திருக்கும் மணிக்கோர்வை அது என்பது தெரிந்திருக்கக்கூடும் அவனுக்கு.

அந்தக் குழந்தைமையை அடையாளம் கண்டு பாராட்ட டானியும் தவறவில்லை. அவனுடன் அக அணுக்கம் கொள்கிறாள். அதைத் தன் கணவன் டெட்டியிடமும் மறைக்காமல் முன்வைக்கிறாள். அங்கிருந்து மெல்ல துவங்கும் (டெட்டி – டானி இணையின்) விரிசலை அமேரிக்க தொலைத்தொடர்களில் இத்தனை நுட்பமாக வேறெங்கும் கண்டதில்லை என்று  திண்ணமாகச் சொல்லாம்.

5

டானியலைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளே இப்படைப்பில் நிறைந்திருக்கிறது. சுவாரஸ்யத்தை கூட்டவேண்டும் என்று மெனக்கெட்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விலகி வேறு கூறுமுறைகளை முயற்சிக்கின்ற சிறுபிள்ளைத்தனம் நிகழவே இல்லை. வெற்றிடங்களில் கூட இலகுவான எழுத்து தென்படவில்லை. தொடர்ந்து ஒரே தாளத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்கிறது. சில அத்தியாயங்கள் ஒரு சிறுகதையின் வடிவ கச்சிதத்தைக் கொண்டிருக்கின்றன. அப்படி அமைந்திருக்கின்ற ஓர் அத்தியாயத்தை சித்தரிக்கிறேன்.

டானியல் ஹோல்டனின் தாய் தனது சமையலறையில் நொய்ந்திருக்கும் பொருட்களைக் காண்கிறாள். அவள் விடியல் இன்னொரு பார மணித்திவலைகளின் பெருக்காக முன் நீண்டிருக்கிறது. தன் கணவருடனும் இதர பிள்ளைகளுடனும் கொண்டிருக்க வேண்டிய அணுக்கத்தின் மீது விரவி நிற்கும் மெல்லிய மனக்கசப்பிற்கு தானும் ஒரு காரணம் என்பது புரிந்தாலும் அந்தத் தோற்றத்தை வீசி எறிந்துவிட்டு எல்லோருடனும் சகஜம் பேண விரும்பாத நாட்களில் ஒன்றாகவே நீள்கிறது. டானியலைக் கொலைபாதகன் என சாட்சி சொன்ன அதே நபர் (ட்ரே வில்லியம்ஸ்) இன்றும் இன்னொரு கொலைக்கும் டானியலைப் பிணைக்க முயன்று தன் மடமையால் போலீசில் சிக்கிவிட்டிருக்கிறான். அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளியேறி இருக்கிறான்.

எதார்த்தமாக பல்பொருள் அங்காடியின் விரிவில் அவள் தேமே என்று தன் தள்ளுவண்டியில் பொருட்களை நிறைத்துக்கொண்டிருக்கத் தொடங்கிய போது எதிரில் ட்ரே தனக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறான். அன்னையுள்ளம் பதைத்துவிடுகிறது. ஒருபாதகமும் அறியாத தன் மகனை சிக்க வைத்த ஒரு கணக்காக அவனை நேரில் சென்று காறியுமிழ்ந்து கிழிக்கவும் முடியாது, அவனைக் குற்றவாளி என்று தற்போது சுற்றி வரும் காவல்துறையை நினைத்து ஆசுவாசம் கொள்ளவும் முடியாது.

அவளுக்குப் போதவில்லை. அவனை நேருக்கு நேர் கொண்டு பார்க்கும் துணிவும் தன் அகவையில் இல்லை. அடுக்குகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மறைவுகளின் இடுக்குகளில் இருந்தபடி அவனைப் பின்தொடர்ந்து செல்கிறாள். அவன் தனது பொருட்களை வைத்துவிட்டு நகர்ந்து தொலைவு சென்றதும் அவள் மனம் திடீரென்று எதையோ கண்டடைந்துவிட்டது.

விரைந்து அணுகி அவ்விடம் செல்கிறாள். அவன் வருகிறானா என்று விழிபார்த்தபடி இருக்க அவனைப் பழிவாங்க ஒரு செய்முறையைக் கண்டடைந்துவிட்ட தீர்க்கம் அவள் விழிகளில் மின்னுகிறது. அவன் வாங்கி வைத்திருக்கும் முட்டைக்கலத்தைத் திறக்கிறாள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் அதன் ஒருங்கினைப் பார்க்கிறாள். சட்டென அவன் வருவதற்குள் அத்தனை முட்டைகளையும் ஒவ்வொன்றாய் உடைத்து சின்னாபின்னமாக்குகிறாள். எத்தனை பெருமிதம்! உடனடியாக அங்கிருந்து விரைந்து வெளியேறுகிறாள்.

அவன் அங்கு வந்து நடத்தப்பட்டிருக்கும் கோலத்தைப் பார்த்து யாரென்று அறிந்துகொள்ள இங்குமங்கும் ஓடுகிறான். இவள் எல்லாவற்றையும் விடுத்து விட்டு தனது மனம் போதிய பழிவாங்கலைச் செய்துவிட்டதான பாவனையை அணிந்துகொண்டு விரைந்து வெளியேறிவிட்டிருக்கிறாள். அவள் முகத்தில் பெருமிதம் நிறைந்து வழிகிறது.

இப்படியாக சில அத்தியாயங்கள் கச்சிதமான வடிவமைப்பினாலும் யதார்த்தத்தை தண்டவாளங்களாய் கொண்டு ஓடும் பிரம்மாண்ட இரயிலின் சத்தம் போன்ற பரபரப்புடனும் விரிகின்றன.

டானியும் டெட்டியும் பிரிந்திருக்கையில் அவளது வெளியேற்றத்தைத் தாங்க முடியாமல் தன் இல்லத்தை அவளுக்கு அளித்துவிட்டு, தன்னை அவ்வளவாக விரும்பாத அமந்தாவிற்கு முன்பு பொருத்திக் கொள்ளத் தயாராகும் அத்தியாயமும், ஹன்னா டீனின் கல்லறைக்குச் சென்று மலர்வைத்து வழமை போல் அமைதி கோலம் பூண்டிருக்கும் டானியலைப் பழிவாங்கும் உணர்வின்படியும் வெறுப்பின்பாலும் இரணப்படுத்தி சிறுநீர் கழிக்கும் அத்தியாயமும் கூட தன்னளவில் வீரியத்துடன் நிற்கும் கதைமுழுமைக்கு உதாரணங்கள்.

இந்தத் தொடரின் இசைக்கோர்வை டானியலின் உளப்பிரதிபலிப்பை கடனாக எடுத்தாண்டிருக்கிறது. பறவையின் மெல்லிய சிறகசைவுகளை காற்று நடனமாக்கி தன்னைத் தானே ரசித்துக் கொள்வதன் அடக்கம் இந்த இசையில் இருக்கிறது. கோட்டோவியத்திற்குள் மட்டுமே தீற்றலிடப்படும் வர்ணம் ஒருபோதும் கிஞ்சித்தும் கோட்டைவிட்டு வெளியே வந்துவிடவில்லை.

ஒரு காட்சியில், டானியல் தன் தாயுடன் சுற்றுலா செல்கிறான், அப்போது கடற்கரையில் மெல்ல குழந்தையாகி விரிவின் முன் சிறுமைகொண்டு இயற்கையின் அங்கமாகிறான். கடலில் மூழ்கி எழுவதை, பின்னணி இசை அலைவடிவிலேயே அணுகி பிரமிப்பு ஏற்படுத்துகிறது. ஒரு மதபோதகர் சொல்கிறார்: “நான் பலமுறை குற்றவாளிகளுக்கு இசையை ஒலிக்கவிடுவதுண்டு. சொல்லப்போனால், அதை மட்டுமே செய்வதும் உண்டு. ஒப்பீட்டளவில் வார்த்தைகள் வலுவற்றவை.” எப்பேர்ப்பட்ட உண்மை.

புழுதியில் வீசப்பட்ட நல்வீணை என்றோ ஒருநாள் ஸ்வரம் எழுப்புகையில் மானுடம் ஒற்றைச் செவிகொண்டு கேட்டு கேவல் எழுப்பும்.

டானியலே மையம் எனக் கூறினேன். அதற்கடுத்த நிலையில் தன்னகத்தே அற்புதமான இலக்கியமாக உருவாகி வந்திருப்பது டெட்டி – டானி இணையின் பாத்திர படைப்புதான்.

வன்விலங்குகள் கூரியபற்களை இழந்து, தன் விஷ ஆற்றலை இழந்து, வல்லிய உகிர்களை இழந்து மனிதனானதும் அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. அவனைப் பாதுகாக்கவும் பிறரிடம் சண்டையிடவும் ஒருங்கே அன்பு என்ற கேடயம் கிடைத்தது. தான் இன்னும் விலங்குதான் எனினும் மேம்பட்டவன் என்று பறைசாற்றிக்கொள்ளும் விதமாக ‘சமூக விலங்கு’ என்று அடையாளம் இட்டுக்கொண்டான்.

டானியல் அரிதாய் தன்னுள் தேக்கி வைத்திருக்கும் வலிப்பெருக்கினை கோபத்தினால் வெளிக்காட்டும் தருணங்கள் உண்டு. ஆனால், தன்னிலை மீறி டெட்டியின் கழுத்தினை நெறித்து அவனை முற்றிலும் நிலைகுலையச் செய்தும் வெட்க வைத்தும் தன்னுள் இருக்கும் விலங்கினை ஆடியில் பார்த்துக்கொள்ளும் காட்சி உண்டு. அதை எதிர்கொள்ள முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் தவிக்கும் டெட்டி கதாபாத்திர படைப்பு இலக்கியத் தரமானது.

அகப்பயணம் சிடுக்குகள் நிறைந்தது. அதன் வனாந்திரங்களைக் களையும் முயற்சியின் போதெல்லாம் அகப்பேய்கள் விழித்துக்கொள்ளக்கூடும். பல அத்தியாயங்களுக்குப் பிறகு டெட்டியைத் தாக்கிய தனது பிழையறிதலை யார் முன்னும் வைக்கத் தயாரான நிலைக்கு வந்துசேர்ந்து விடுகிறான் டானியல் என்பது இந்தக் கதை தரும் ஆறுதல் வரிசைகளுள் ஒன்று. ஒற்றைக் கொலை நிகழ்ந்ததும் அங்கு வந்து குடிகொள்ளும் அரசியல் வேதாளங்கள் பற்றின பல திடுக்கிடும் விவரிப்புகளும் இதில் கவனிக்கப்பட வேண்டியவை.

6

முப்பது அத்தியாயங்களில் அநேகமாக அத்தியாயத்திற்கு ஒரு தருணத்திலேனும் சிலிர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. முற்றாகப் பார்த்துவிட்ட பின் ஒருமாதம் கழித்து மீள்நினைவு செய்கையில் பத்து பதினைந்து அற்புத தருணங்களை நிரைவருவித்து கண்ணீரில் முற்றுப்புள்ளி இட்டுக்கொள்கிறது உள்ளம். முதல் அத்தியாயத்தில் சிறையிலிருந்து வெளிவரும் டானியல் கடைசிவரை அப்படியே இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது. போலவே, அவனது உள்ளம் இன்னும் சீர்மை கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. புறத்தின் கதையாடல்களையும் உளவியலையும் வைத்து ஒருவனின் அகத்தை அத்தனை தெளிவாக முன்வைத்துவிட இவர்களால் முடிந்திருக்கிறது.

தஸ்தயேவ்ஸ்கி புரட்சியாளராய் தவறாக அடையாளம் செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தது வரலாறு. அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு வேழத்தின் பாதமென நசுக்கும் செயற்கையான சைபீரிய கொடுமைகளையும் அதீத வலியையும் பட்டறிந்தவர்.  அதன் பின்னர், தனது மரணத்தை அருகாமை வரை சென்று பார்த்துவிட்டு வந்தார். அத்தீயிலிருந்தே அவரது மகோன்னத படைப்புகளான குற்றமும் தண்டனையும், அசடன், கரமாஸவ் சகோதரர்கள் எனப் பலவும் பிறந்தன.

In 'Rectify,' Life After Prison and the Chance to Be Reborn - The ...

அவர் இலட்சக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் புலம்பலோடு நின்றுவிடவில்லை. மனிதனின் நிலையிலிருந்து தேவ நிலைக்கு ஏறத் துணிந்தார். உள இருளின் ஆழங்களுக்குச் சென்று சொற்களைக் கீறிக் கீறி அக்னி ஏற்றி ஒளி கோர்த்துப் பார்த்தவர் தஸ்தயேவ்ஸ்கி. மதங்கொண்டு எதிர்வரும் யானையின் மத்தகத்தில் முத்தமிட நினைக்கும் சிறுகுருவி. இரணவேதனையையும் உட்புண்களையும் எச்சில் விழுங்கும் மிடறில் ஆற்றிவிட நினைக்கும் பிள்ளைத்தனம். வாள்களின் கூர்மையை மடித்து விளையாட்டுக் கப்பல் செய்யத் திமிரும் விரல்கள். போரில் வீழ்ந்த நெஞ்சின் மீது குதிரைக் குளம்படிகள் ஏறியோட புற்தரையின் வனப்பில் கவனம்கொள்ளும் கவிமனம்.

ஒருவகையில், டானியல் ஹோல்டனும் தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திர நிலையில் வைத்து பொருத்திப் பார்க்கப்பட வேண்டியவன்தான். அவன் தனது வாழ்வை அலங்காரமின்றி சுருக்கமாக எழுதிக்கொள்ள நினைக்கிறான். அவனது சுற்றமும் சூழலும் தானாய் உள்வந்து வெளியேறி அவனது படைப்பை காவியமாக நிகழ்த்தித் தந்துவிட்டுப் போகின்றன என்பது இன்னும் பொருத்தம். அவனது கதை அடைக்கலத் தோளாய் யாருக்கோ சாய்ந்துகொள்ள இடம்தரும். அவனது ஏற்பு யாரையோ உளமுருக்கி கண்ணீர் சிந்த வைக்கும். அவனது மெளனம் யாரையோ சலனமுறுத்தும்.