மனதின் பாடல் – ஜே.கிருஷ்ணமூர்த்தி – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்

0 comment

அறிதல் என்பது ஒரு கொள்கையின் பலனாய் ஏற்படும். அனுபவம் என்பது வேறு. இந்த வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவிப்பதற்கு, கொள்கையைப் பற்றிக்கொண்டு நிற்பது ஒரு தடை என்பது தெளிவானது. ஒன்றின் உண்மையைக் கண்டுபிடிக்க கொள்கையினால் இயலாது. நேரடியான அனுபவத்தால்தான் முடியும். பல்வேறு வல்லுநர்கள் தத்தம் சிந்தனைகளே சரியானவை என்று அறைகூவும் இவ்வுலகிலே, முரண்பாடுகள் நிறைந்த உலகிலே, – கொள்கை தேவையில்லை. நேரடியான அனுபவமே மிக்க அவசியம். இவ்வளவு குழப்பத்துக்கும் இவ்வளவு துன்பத்துக்கும் அடிப்படையான உண்மை எது என்பதை சாமானிய மக்களாகிய நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஆதலால், கொள்கை அவசியமா, உண்மையை அனுபவித்தறிய அது உதவுமா என்பதை நாம் விசாரம் செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

உலகம் இருவிதக் கட்சிகளாகப் பிரிந்து நிற்பதைக் காண்கின்றோம். ஒருசாரார் மக்களின் சூழ்நிலையை மாற்றுவதே முக்கியம், சூழ்நிலையே மனித வாழ்க்கையின் ஆதாரம், சூழ்நிலையை மாற்றினால் மனித சமூகம் மாறும் என்று நம்புகிறார்கள். மற்றொரு சாரார் ஆன்மீக வாழ்க்கையே முக்கியம் என்று நம்புகிறார்கள். இடதுசாரிக் கட்சியினர் சூழ்நிலையை மாற்றினால் மனிதனைப் புதுப்பிக்கலாம் என்று நம்புகிறார்கள். மனிதனின் ஆன்மார்த்த வாழ்க்கையை மாற்றுவதே அடிப்படையான மாறுதலை உண்டாக்க வல்லது என்று சிலர் நம்புகிறார்கள்.

நீங்களும் நானும் இதன் உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்த உண்மை பொதிந்து இருக்கிறதா, நமது வாழ்க்கை சரிவர உள்ளதா என்பதை ஆராய வேண்டும். சூழ்நிலையே முக்கியம் என்று கூறும் சில ஆராய்ச்சியாளர்களின், ஆன்மீக வாழ்க்கைதான் முக்கியம் என்று கூறும் மற்றவர்களின் கூற்றுகளில் உள்ள உண்மையை நாம் அறியவேண்டும். நம்பிக்கையினால் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அனுபவிப்பதை நிர்ணயிக்க நம்பிக்கை பயன்படாது. சூழ்நிலை, ஆன்மீகநிலை – இவ்விரண்டில் எதற்குச் சிறந்த இடம் தருவோம்? எப்படி இதனைக் கண்டுபிடிப்போம்?

ஓயாமல் படிப்பதனால் அல்ல, இடதுசாரி அல்லது வலதுசாரிக்கட்சி மேதாவியைப் பின்பற்றுவதால் அல்ல, சமுதாயத்தின் லௌகீக வாழ்க்கையை நம்புவோரைப் பின்பற்றியோ அல்லது அவர்களது நூல்களையும் திறமையுள்ள அறிவையும் ஆராய்ச்சி செய்தோ, அல்லது ஆன்மீக வாழ்க்கையே முக்கியம் என்று சொல்வோரைப் பின்பற்றியோ, அவர்கள் மறைநூல்களைப் படித்தோ, இந்த உண்மையைக் கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இதையோ, அதையோ, ஏதோ ஒன்றை நம்புவதனாலேயே உண்மையைக் கண்டுபிடித்துவிட முடியாது.

அப்படியிருந்தும் நம்மில் பலர் நம்பிக்கையில் அகப்பட்டு நிலையான புத்தி இல்லாதவராய் இருக்கிறோம். ஒரு சமயம் ஒருவிதம் எண்ணுகிறோம், இன்னொரு சமயம் வேறுவிதம் எண்ணுகிறோம். நமக்கு ஒரு நிலையான எண்ணம் இல்லை. ஒரே நிலையில் நிற்கும் வல்லுநர்களின் மனம் எவ்வளவு குழப்பத்தில் உள்ளதோ, அவ்வளவு குழப்பம் நமக்கும் உண்டு. எதையும் சரி என்று நம்மால் தீர்மானமாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையோ அதையோ ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற முடியவில்லை. ஏனெனில் இரண்டும் குழப்பத்துக்கே கொண்டு விடுகின்றன. ஒருவரைப் பின்பற்றி வாழ்வதோ, ஒரு சித்தாந்தத்தை ஒப்புக்கொள்வதோ, சமூக வாழ்க்கைக்குக் கேடு விளைவிக்கின்றது. ஒரு தலைவனையோ குருவையோ பின்பற்றி நடத்தல் சமுதாயத்தையே சீரழியச் செய்கிறது. இங்கும் போகமுடியாமல், அங்கும் போகமுடியாமல், இருதலைக்கொள்ளி எறும்புபோல் எங்கு போவதென்று தெரியாமல் தவிக்கும் நாம், இதன் உண்மையை எந்த அறிஞரையும் பின்பற்றாமல் நாமே கண்டுபிடித்தாக வேண்டும்.

இந்த நிலையில் என்ன செய்யப்போகிறீர்கள்? இதுவே இக்காலத்தில் நமக்கு வாய்த்த முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் சூழ்நிலையை மாற்றும் வேலையில் தங்கள் முழு எண்ணத்தையும் திறமையையும் சக்திகளையும் ஈடுபடுத்திச் செயல்படுபவர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு சூழ்நிலையை மாற்றுவதாலேயே தனிமனிதன் புது வாழ்க்கையை அடைவான் என்று நம்புகிறார்கள். இதற்கு மாறாக, நம்பிக்கை, மத நெறி, மதக் கோட்பாடு ஆகியவைகளை மேலும் மேலும் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். இவ்விரண்டு சாரார்களுக்கும் இடையே பலமான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும். எந்தக் கட்சியில் சேருவோம் என்ற தீர்மானம் அல்ல. கட்சி வித்தியாசத்தினால் நிலைமை மாறுவதில்லை.

இந்த மாதிரி விஷயங்களின் உண்மை என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், நமது சொந்த விருப்பு வெறுப்புகளை நம்புவதிலும் பயனில்லை என்பதும் தெளிவு. அவை உண்மையைக் கண்டுபிடிக்க உதவமாட்டா.

மதம்சார்ந்த வாழ்க்கை நிறைந்த ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவராய் நீங்கள் இருந்தால் ஆன்மாதான் முக்கியம் என்று சொல்லுவீர்கள். வேறு சூழ்நிலையில் வாழ்ந்தவராயிருந்தால் சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையே முதலிடம் பெற வேண்டும் என்பீர்கள்.

ஆகவே, அறிவைத் திரட்டுவதில் நோக்கமுள்ளவரும் சில பல சித்தாந்தங்கள், நிதர்சனங்கள், வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்கள் போன்றவற்றைச் சாராமலும் இருக்கும் சாமானிய மக்களாகிய நீங்களும் நானும் இந்த நிலைமையின் உண்மையை அறிவது எவ்வாறு? இது உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான பிரச்சனை அல்லவா?

இனி நாம் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை, இப்பிரச்சனையில் உண்மையைக் கண்டறிவதில்தான் பொருந்தி இருக்கும். நம்பக்கூடியது எது, நம்பக்கூடாதது எது என்ற பிரச்சனை அல்ல அது. ஒன்றை நம்புவதாலோ, அல்லது நம்பாததாலோ, அதன் உண்மையைக் கண்டுபிடிப்பது இயலாது. நம்பிக்கை என்பது மன இயல்புகளைச் சுயேச்சையாய் இருக்க விடாமல் ஒருவிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

ஆகையால் முதலில் நமது மத வாழ்க்கையின் கட்டிலிருந்து விடுபட்டால் ஒழிய, இதன் உண்மை விளங்காது. உலக வாழ்க்கையின் கட்டிலிருந்து விடுபடாவிட்டாலும் இதன் உண்மையைக் கண்டுபிடிக்க இயலாது. வெறும் நம்பிக்கையால் பயன் ஏதுமில்லை. சமுதாயத்தின் லௌகீக வாழ்க்கையே முக்கியம் என்று நினைக்கும் கட்டுப்பாடு, ஆன்மீக வாழ்க்கையே முக்கியம் என்று நினைக்கும் கட்டுப்பாடு ஆகிய இந்த இரண்டிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டினுடைய உண்மையையும் அறிய முடியும். இது தெளிவானது அல்லவா? ஒன்றின் உண்மையைக் கண்டுபிடிக்க அதனை ஆராய முற்படும்போது, ஏற்கனவே நமது விருப்பு வெறுப்பை ஒட்டி ஏற்றுக்கொண்ட முடிவு ஒன்றும் இல்லாமல், புதுமை உணர்ச்சியுடன் நெருங்கிப் பார்க்க வேண்டும்.

நீங்களும் நானும், நமது பழைய எண்ணங்களின் கட்டிலிருந்தும் சூழ்நிலையின் கட்டிலிருந்தும் விடுபட்டால்தான் உண்மையைக் காணமுடியும். இது முடியுமா, வாழ்க்கை என்பது வயிற்றுப் பிழைப்பை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதா, அல்லது சரியான புது வாழ்க்கை என்பது நமது மன நிலையினால், அக வாழ்க்கையினால் உருவாக்கப்படுவதா? பொறுப்புடனும் அக்கறையுடனும் வாழ விரும்பும் ஒவ்வொருவனும் இதைக் குறித்த உண்மையைக் கண்டுபிடித்தாக வேண்டும் – இது வெளிப்படையான விஷயம். ஏனெனில் அவனது எல்லா செயல்களும் இதனை ஒட்டியிருக்கும். அந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு அவன் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்து தன்செயலில் தன்னைத்தானே உணரவேண்டும்.

உங்கள் வாழ்க்கை சூழ்நிலையையும் சமூகப் பொருளாதாரத்தையுமே சார்ந்து உள்ளதா? பெரும்பாலோர்க்கு அப்படித்தான் உள்ளது எனத் தெரிகிறது! நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும், சூழ்நிலையால் தானா உருவாக்கப்படுகின்றன? சூழ்நிலையின் தூண்டுதல் முடிவுபெறும் இடம் எங்கே? இதை ஒருவன் கண்டுபிடிக்க தனது செயல், எண்ணம், உணர்ச்சி ஆகிய இவை அனைத்தையும் ஆராய வேண்டும். அதாவது தன்னறிவு வேண்டும். அது புத்தக அறிவு அல்ல. பல்வேறு இடங்களிலிருந்தும் பெறக்கூடிய அறிவும் அல்ல. தன்னையே அறியும் அறிவே அது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் எந்த நிலையில் வாழ்கின்றோமோ, அந்தந்த நிலையில் நம்மை நாமே அறியும அறிவுதான் தன்னறிவு. அந்த அறிவைத்தான் நாம் பெறல் வேண்டும்.

சூழ்நிலை என்பதற்கும் ஆன்மீக நிலை என்று சொல்லும் ஒரு எண்ணத்திற்கும் எத்தகைய தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை அறியும் தன்னறிவில்தான் உண்மை உள்ளது அல்லவா? நேற்றும் அதற்கு முந்தைய தினங்களிலும் நாம் காண்பது என்ன? வாழ்க்கை என்பது பிறருடன் தொடர்பு அல்லது சம்பந்தம் கொண்டது என்பதாகும். இருப்பதும் பிறருடன்தான் வாழ்வதும் பிறருடன்தான், – அப்பேர்ப்பட்ட தொடர்பில் உண்மையை அறிபவன், பொருளாதார வாழ்க்கை முக்கியமா அல்லவா என்பதைத் தெரிந்து கொள்வான். நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு வாழ்வதனால் அல்ல. அப்போதைக்கப்போது தொடர்பை நேராக அறியும் அனுபவமே இந்தப் பிரச்சனையின் உண்மையைக் காட்ட வல்லது.

உண்மையை அறிய தன்னறிவே முக்கியம். தன்னுள் ஒவ்வொரு எண்ணமும் உணர்ச்சியும் எவ்வாறு எழுகின்றது என்பதை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ச்சியையும் அவ்வாறு தெளிவாக உணர்வதற்கு, இது சரி இது தப்பு என்று முடிவிற்கு வரும் மனப்பான்மை உதவாது. சரி, தப்பு என்று தீர்மானிக்காமல் ஒவ்வொரு எண்ணத்தையும் உணர்ச்சியையும் கடைசி வரை ஆராய்வோமானால், அது சூழ்நிலைக்கு மாறான உறுதியா, அல்லது பொருளாதாரக் கூக்குரலின் எதிரொலியா, அன்றி அதற்கு வேறு ஆதாரம், மூலம் ஏதாவது உண்டா என்பது காணக்கிடைக்கும்.

சரி, தப்பு என்று தீர்மானிக்காத தன்னுணர்வின் மூலம் நம்மை நாமே அறிய ஆரம்பிக்கின்றோம். நாம் என்பது என்ன? தொடர்புகொள்ளும் சூழ்நிலையினால் ஏற்பட்ட பல்வேறு தூண்டுதல்களுக்கு பதில்போல் கிளம்பும் பல்வேறு எழுச்சிகளைத்தான் ‘நாம்’ என்று சொல்லிக்கொள்கிறோம். ஆகையால், ‘தொடர்’பின் தன்மையை அறிவதே முக்கியப் பிரச்சனையாகி விடுகிறது. நமக்கும் சொத்துக்கும் உள்ளதும் நமக்கும் மற்ற மக்களுக்கும் உள்ளதும், நமக்கும் நம் கருத்துகளுக்கும் உள்ளதுமான சம்பந்தம் என்ற தொடர்பு. இது சரி இது தப்பு என்று நினைக்க ஆரம்பித்தோமானால், அத்தொடர்பின் தன்மையை அறிய இயலாது. ஒன்றின் உண்மையை அறியமுற்படும் போதும், அதைப்பற்றி முன்னதாகவே ஒரு தீர்ப்பு செய்துவிடுவது பயனில்லை.

உங்கள் குழந்தையை, உங்கள் பிள்ளையை, நீங்கள் அறிய விரும்பினால், அவன் விளையாடும்போதும், படிக்கும்போதும், அதனுடைய பல்வேறு மனோநிலைகளிலே, அதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அப்படித்தான் நம்மையே நாம் அறியக்கூடும். இது சரி, இது தப்பு என்று ஏற்கனவே ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது வெகு கடினம். அப்படித் தீர்மானம் செய்துவிடுவது, உள்ள நிலைமையிலிருந்து தப்பித்துக்கொண்டு வெளியேறும் மனப்பான்மையாகும். உள்ளதை உள்ளபடி பார்ப்பதற்கு மனம் மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவதும், சரி தப்பு என்று தீர்மானிப்பதும் கவனக் குறைவை உண்டாக்குகின்றது. தப்பு கண்டுபிடிப்பது, ஒன்றை அறிவதாவது, ஒரு மனிதனின் மேலோ, ஒரு குழந்தையின் மேலோ, தப்பு கண்டுபிடித்தல் மிக எளிது; ஆனால் அவனை அறிந்துகொள்வது கடினம். அறிவதற்கு அக்கறையும் கவனமும் வேண்டும்.

நம்மை நாமே, எப்படியிருக்கின்றோமோ அப்படியே, அறிந்துகொள்ள வேண்டியதுதான் நமது பிரச்சனை. நாம் ஒவ்வொருவரும் சூழ்நிலையால் மட்டும் ஆக்கப்பட்டவர் அல்ல. அதனுடன் கலந்த வேறொன்றாகவும் இருக்கின்றோம். அந்த வேறொன்று, நம்பிக்கையினால் ஏற்பட்ட பொருள் அல்ல. அதனை நாம் கண்டுபிடிக்கவேண்டும், அனுபவிக்கவேண்டும். அதற்கு நம்பிக்கை தடையாக உள்ளது. ஆதலால் நாம் எவ்வாறு உள்ளோமோ அவ்வாறு உள்ளபடியே அறிந்துகொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்ய நாம் பிரிந்து தனியாய் இருப்பதால் இயலாது. தொடர்பில் தான்முடியும்.

ஏராளமான கேள்விகளை என்னிடம் தந்திருக்கிறார்கள். கேள்வி கேட்பது சுலபம். யாரும் கேட்கலாம். சரியான கேள்வியை சிரத்தையுடன் கேட்டால்தான், சரியான விடை பெறக்கூடும். இதோ பல கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாம் என்று எண்ணுகிறேன். பிரச்சனையைத் தீர்க்க விரும்புவோர், சரியான முறையில் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பிரச்சனை அல்லது நெருக்கடியைத் தீர்க்கக் கேள்வி கேட்கிறீர்கள். விடையை எதிர்பார்க்கிறீர்கள். தந்த விடையைப் பெறுவதற்கு சரியானபடி செவி சாய்க்க வேண்டும். இது ஒரு சித்திரத்தைப் பார்த்து, அதன் அழகை அனுபவிப்பது போல. அதனை அறிந்து அனுபவிக்க சிரமப்பட வேண்டியது இல்லை.

சித்திரத்தின் முன் நின்று சித்திரத்தின் முழுமையும் ஈடுபட்டு, அதன் பொருளை, அதன் அழகைப் பருகுவது போலாகும். உங்களுக்கு அனுபவம் உண்டோ, இல்லையோ, அறியேன். நவீன அப்ஸ்ராக்ட் ஓவியங்கள் சில உண்டு. அவற்றைப் பார்க்கும்போது, உடனே அவைகளைக் கண்டனம் செய்கிறோம். இது என்ன அலங்கோலமாக இருக்கின்றது என்று ஏசுகிறோம். காரணம் என்னவென்றால், நமக்கும் பழக்கம் எல்லாம் காலங்காலமான மரபான கலைகளின் அழகை அறிவதில்தான் இருந்து வருக்கிறது. அதே உரைகல்லை இதற்கும் உபயோகிக்கிறோம். அத்தகைய ஓவியங்களைப் பார்த்து அவற்றின் அழகை அனுபவிக்க வழி ஒன்றுண்டு.

எப்படி எனில், பார்த்த உடனே பழிக்காமல், அதன் பொருள் எதுவாயினும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருத்தல். அதற்கான கவனத்துடன் பார்ப்பது, அப்பொழுதுதான் அந்தச் சித்திரங்கள் தமது முழுச் சரித்திரத்தையும் தாமே சொல்லக் கேட்பீர்கள். இப்படித்தான் நாம் எப்பொருளினுடைய மெய்ப்பொருளையும் அறிதல் கூடும். உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும் –  பயனற்ற எதையும் ஏற்றுக்கொள்வதல்ல. மேலே சொன்ன மனோநிலையில் நின்று சரியானபடி காது கொடுத்தீர்களானால் உங்கள் கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும்.

நமது உள்ளத்தில், மேலாகத் தோன்றும் பகுதியும், அடியில் மறைந்துள்ள பகுதியும் உண்டு. தோன்றும் உள்ளத்தால் உண்மையை அறிவது கடினம்.  ஏனெனில் அது பல்வேறு பிரச்சனைகளால் கலக்கப்பட்டு, குழப்பம் நிறைந்துள்ளது. பலவாறு பிளவுபட்டுள்ளது. ஆனால் உள்மனம் கலங்காதது. தோன்றும் உள்ளத்தைக் காட்டிலும், உண்மையை ஏற்றுக்கொள்ள மிகுந்த ஆவல் கொண்டது. உண்மையை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை, அந்த உள்மனத்துக்கு நீங்கள் அளிக்கவேண்டும். அப்பொழுது உங்களுடைய கேள்விகளுக்குத் தக்க விடைகளை சிரமம் இல்லாமல் பெறுவீர்கள். சொல்லப்போனால், உண்மையை அறிய முயற்சி ஏதும் வேண்டாம். ஒரு பிரச்சனையைத் தீர்க்க, ஒருவன் அதை நினைத்து நினைத்து, மனதை சதா குழப்பிக்கொண்ட இருப்பதில் பயனில்லை. நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையுடன் விடையை கவனித்துக் கேளுங்கள்; சொந்த அபிப்பிராயங்களையோ முடிவுகளையோ, நிலைநாட்டுவதற்காகக் கேளாதீர்கள்.

கேள்வி: ‘இறந்தகாலம்’- அதாவது மரபின் வாசனைகள் ஒரேயடியாய் மறையக்கூடுமா? எந்தச் சந்தர்ப்பத்திலும் அவைகள் படிப்படியாய், காலக்கிரமத்தில் தான் மறைய வேண்டுமா?

கிருஷ்ணமூர்த்தி: இறந்த காலத்தில் விளைவே நாம். நமது எண்ணங்கள் நேற்றும் அதற்கு முந்தைய ஆயிரக்கணக்கான நாள்களுமாக, நாம் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்தும் ஏற்பட்டவை. நாம் காலத்தினால் உருவாக்கப்பட்டவர்கள். கடந்த பல்லாயிரம் அனுபவங்கள், நிகழ்ச்சிகள், கணநேரங்கள், இவற்றின் கூட்டு விளைவே நமது இன்றைய மனப்பான்மைகளும் மன எழுச்சிகளும். நம்மில் பெரும்பாலானோருக்கு நிகழ்காலம் என்பது உண்மையிலேயே இறந்த காலம்தான். இது மறுக்க முடியாத உண்மை. நீங்களும், மன எழுச்சிகளும் இறந்த காலத்தின் விளைவுகளே. கேள்வி கேட்பவர் அறிய விரும்புவது என்னவென்றால், இந்த இறந்த காலம் முழுமையையும் உடனே ஒரு கணத்தில் அழிக்க முடியுமா அல்லது அது காலக்கிரமத்தில், நாளடைவில்தான் அழிக்கக் கூடுமா? அதற்கு காலம் தேவையா – என்பதே.

தொகுத்த இறந்த காலத்திலிருந்தும் மனது பூரணமாய் இப்போது, நிகழ்காலத்தில், விடுபட ‘காலம்’ வேண்டுமா? (அந்த விடுதலை காலப்போக்கில் தான் நேரிடுமா?) என்பது கேள்வி. கேள்வி என்ன என்பதை அறியவேண்டுவது முக்கியம். நாம் ஒவ்வொருவரும் இறந்த காலத்தில் சதா மாறிமாறி அடைந்த கணக்கற்ற அனுபவங்களால் ஆக்கப்பட்டவர்கள். இறந்த காலத்தின் பயனாக உருவான மனோநிலையை அழித்துவிட காலத்தின் போக்கு இல்லாமல் சாத்தியமாகுமா என்பதே கேள்வி. கேள்வி இப்பொழுது தெளிவாக உள்ளதா?

எதை இங்கு ‘இறந்த காலம்’ என்று குறிப்பிடுகின்றோம்? கடிகாரம் காட்டும் இறந்த காலத்தை அல்ல, அதைப் பற்றிப் பேசவில்லை. சென்று போன விநாடி, நிமிசத்தைப் பற்றி அல்ல. அது தீர்ந்துவிட்டது. ஆனால் நாம் குறிப்பிடும் இறந்த காலம் எதுவென்றால், ஒன்றன்பின் ஒன்றாய் அடைந்த அனுபவங்களின் சேர்க்கை, எழுந்த எழுச்சிகளின் தொகுதி, நிலைத்த நினைவுகள், அனுசரித்த சம்பிரதாயங்கள், பெற்ற அறிவுகள் –  இவை போன்ற கணக்கற்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும், எழுச்சிகளும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பண்டக சாலையாகிய நமது உள்மனமே தான்.

இத்தகைய அடிப்படை மனோநிலை இருக்கும் வரை உண்மையை அறிய முடியாது. காலத்தின் விளைவான ஒன்றால் காலத்துடன் தொடர்புகொள்ளாத ஒன்றை அறிய முடியாது. காலத்தின் பயனான மனோநிலையிலிருந்து உடனே விடுபட முடியுமா? இக்கணத்தில் அந்த நிலை இல்லாமல் மறைய முடியுமா? இல்லை, பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவைகளை நீண்ட நேரம் செய்த பிறகே அத்தகைய விடுதலை ஏற்படுமா – என்பதை அறிய விரும்புகிறார் கேள்வியைக் கேட்ட நண்பர். கேள்வியில் இருக்கும் கஷ்டத்தை உற்று கவனியுங்கள்

மனமே அடிப்படை நிலை. மனமே காலத்தின் விளைவு. மனமே இறந்த காலம். அது வருங்காலம் ஆகாது. ஆனால் வருங்காலத்தில் அது தன் தோற்றத்தைப் புகுத்த வல்லது. நிகழ்காலத்தின் வழியாக வருங்காலத்தை நாடுகிறது. மனத்தின் வருங்கால, நிகழ்கால, இறந்தகாலச் செயல்கள் எதுவாயினும், மனம் ‘காலம்’ என்ற வலையில் சிக்குண்டு கிடக்கிறது. அத்தகைய மனம் அடியோடு மறையக்கூடுமா, மனப்போக்கு முடிவுக்கு வரக்கூடுமா? நமது மனோநிலையில் பல்வேறு அடுக்குகள் உண்டு. அந்த அடுக்குகள் ஒன்றொடொன்று தொடர்புகொண்டு, ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு உள்ளன. நமது முழு மனமும் அனுபவத்தை அடைகிறது. அந்த அனுபவங்களுக்கும் பெயர்கொடுத்து அவைகளை எல்லாம் நினைவுத் தொகுதிகளால் ஞாபக வடிவமாய் சேர்த்து வைத்துள்ளது. இதுதானே மனப்போக்கு. இதையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்வது மிகக் கஷ்டமான காரியமா?

மன உணர்ச்சி, விவேக ஞானம் என்பது என்ன? வாழ்க்கையை அனுபவித்து உணருகிறோம். அனுபவ உணர்ச்சிகளுக்கும் பெயரைத் தருகிறோம். அந்தப் பெயர்களின் மூலம் அனுபவங்களை ஞாபக வடிவமாய் மாற்றி, படிப்படியாக நமது உள்ளத்தில் அடுக்கி வைத்துள்ளோம். காலத்தினால் உருவாக்கப்பட்ட மனம் படிப்படையாக ஆராய்ந்து மேலே கூறிய அடிப்படை நிலையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியுமா அல்லது காலத்தின் வலையிலிருந்து உடனே, இக்கணத்தில், பூரணமாக விடுபட்டு, உண்மையை நேரடியாகப் பார்க்க முடியுமா?

இதைக் கண்டுபிடிப்போம். உங்களுக்கு இதில் உண்மையில் அக்கறை உண்டா? இது மிக முக்கியமான பிரச்சனையாகும், காலத்தின் சார்பின்றி நமது அடிப்படை மனோநிலையிலிருந்தும் விடுபட்டு, நாம் வாழ்க்கையை உடனே புதுப்பிக்கக்கூடும் என்பதை இதோ விளக்கிக் காட்டுகிறேன். இதில் உங்களுக்கு அக்கறை, கவனம் இருக்குமானால் தொடர்ந்து சொல்லுகிறேன், கேளுங்கள்.

உளவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் சொல்வது, இவ்வாறு அடிப்படை மனோநிலையிலிருந்தும் விடுபட, நமது மனத்தில்எழும் ஒவ்வொரு எழுச்சியையும் ஒவ்வொரு எண்ணக்கோவையையும் ஒவ்வொரு தடையையும் ஒவ்வொரு அடைப்பையும் சோதிக்க வேண்டும். அத்தகைய சோதனைக்கு காலம் அவசியமே என்பது தெளிவு. சோதிப்பவன் சோதனை செய்யப்படும் பொருளை நன்கு அறியவேண்டும். சோதிக்கப்படும் பொருளை தவறாக மதிக்கக்கூடாது. தான் ஆராய்ச்சி செய்யும் பொருளை விபரீதமாகக் காணுவான் என்றால், தப்பான எண்ணங்களைப் பெற்று, புதியதோர் அடிப்படை மனோநிலையை ஏற்படுத்திக்கொள்வான்.

உங்களுக்கு இது புரிகின்றதா? ஆராய்ச்சி செய்பவன் தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கொஞ்சமும் வேறுபாடின்றி அறிந்துகொள்ள வேண்டும். ஆராய்ச்சி வழியில் அவன் ஒரு அடி கூடப் பிசகக்கூடாது. ஒரு அடி தவறினாலும், ஒரு தவறான முடிவுக்கு வந்தாலும், ஆராய்ச்சிக்குப் புறம்பான முறையில் வேறொரு விதத்தில் மனப்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்கிறான். இதில் இன்னொரு பிரச்சனை எழுகின்றது. ஆராய்ச்சி செய்பவனும் ஆராய்ச்சி செய்யப்படும் பொருளும் ஒன்றா அல்லது வேறுவேறா என்பது, ஆராய்ச்சி செய்யப்படுவதும் ஆராய்ச்சி செய்பவனும் தொடர்புகொண்ட ஒரே அனுபவமல்லவா? நண்பர்களே, உங்களுக்கு இதில் அக்கறை ஏற்பட்டுள்ளதா என்பதில் எனக்கு நிச்சயம் இல்லை. இருந்தாலும் நான் தொடர்ந்து பேசப் போகிறேன்.

உண்மையிலேயே அனுபவமும் அனுபவிப்பவனும், இரண்டும், வெவ்வேறு பொருள்கள் அல்ல. தொடர்புள்ள ஒரே தோற்றமாகும். ஆகையால் நான் ஆராய்ச்சி செய்வதில் கஷ்டம் ஏற்படுகிறது – இதைக் கவனிப்போம். நமது உள்ளம் முழுமையும் ஆராய்ந்து அதலிருந்தும் விடுபடுவது என்பது இயலாத காரியம். ஏனெனில் ஆராய்பவன் யார்? அவன் ஆராயும் பொருளிலிருந்தும் பிரிவுபடாதவன். தன்னைப் பிரித்துக்கொண்டாலும் தான் அதிலிருந்தும் பிரிய முடியாதவன். அப்பொருளின் ஒரு பாகமாகத்தான் நிற்கிறான். உதாரணமாக, எனக்கு ஒரு எண்ணம் அல்லது உணர்ச்சி ஏற்படுகிறது. கோபம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கோபத்தை ஆராய்பவன், கோபத்தின் ஒரு அம்சமாகத்தான் இருக்கிறான். தானும் தன்னால் ஆராயப்படும் கோபமும் ஒன்றாக இருக்கிறது. அதைப் பிரிக்க முடியாது; தொடர்புள்ள ஒரே தோற்றம், வெவ்வேறு சக்திகளல்ல, இருதனி நிலைகள் அல்ல.

ஆகையால் நமது உள்ளமாகிய புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப்பார்த்து ஒவ்வொரு எண்ணத்தையும் எழுச்சியையும் ஆராய்வது என்பது மகா கடினமான காரியம். மிகவும் நீண்ட பிரயத்தனம் அல்லவா? ஆதலால் இந்த முறையைக் கையாண்டு நமது அடிப்படை மனப்பான்மையிலிருந்தும் விடுவித்துக்கொள்ள முடியாது. வழி அதுவல்ல. வேறு நேரான, எளிய வழி ஒன்று இருக்க வேண்டும். அதைத்தான் நீங்களும் நானும் கண்டுபிடிக்கப் போகிறோம். கண்டு பிடிப்பதற்குப் பொய்யானதை அறவே நீக்க வேண்டும். அதைப் பற்றிக்கொண்டே நிற்கலாகாது. மன ஆராய்ச்சி முறையைக் கைவிடல் வேண்டும். எப்படி ஒரு ஊருக்கும் போகாது என்று நீங்களாகக் கண்ட ஒரு வழியைப் பின்பற்ற மாட்டீர்களோ, அதைப்போல் பயனற்றதாகத் தெரிந்த இந்த ஆராய்ச்சி முறையைக் கையாள மாட்டீர்கள். அது உங்களை விட்டு விலகிவிடும்.

பிறகு இருப்பது என்ன? ஆராய்ச்சி செய்வதே என்பதே உங்கள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறதல்லவா? உற்று நோக்குபவனும் நோக்கப்படுவதும் இணைக்கப்பட்ட ஒரே தோற்றமாகையால், ஒன்றை உற்று நோக்குவதனாலும் நோக்கும் பொருளை ஆராய்ச்சி செய்வதனாலும், நோக்குபவன் தன் மனப்பான்மையிலிருந்தும் விடுபட இயலாது. இது உண்மையானால் – எதார்த்தம் இதுதான் – அந்த முறையைக் கைவிடுவீர்களல்லவா? இது எல்லாம் உங்களுக்குப் புரிகின்றதோ, என்னவோ, அறியேன். பேச்சளவில் அல்லாமல், உண்மையிலேயே இது தவறான வழி என்று உணர்ந்தால்,ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிடுவீர்கள். அவ்வளவுதான். சார், இதைத் தயவுசெய்து தொடர்ந்து கவனியுங்கள். எவ்வளவு வேகமாக உங்கள் மனப்பான்மையிலிருந்து விடுபடுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். (ஆராய்ச்சி செய்யும்) அந்த வழி சரியானதல்ல என்று அறிந்த உடனே என்ன நேரிடுகின்றது? கூர்ந்து கவனிப்பதும் அலசிப் பார்ப்பதும் முடிவு கட்டுவதும் ஆராய்ச்சி செய்வதுமே பழக்கமாய் இருக்கும் மனோநிலை என்னவாகிறது?

மனம் சூனியமாய், வெறுமையாய், வெட்டவெளியாய் இருக்கிறது என்கிறீர்கள். அந்த வெட்டவெளியில் இன்னும் சற்று ஆழத்தில் புகுந்து பாருங்கள். இதுவரை அறிந்தது பொய் என்று தள்ளிய உடனே, மனத்தில் ஏற்பட்ட மாறுதல் என்ன? எதனைத் தள்ளிவிட்டீர்கள்? ஒரு மனப்பான்மையை ஆதாரமாகக் கொண்ட பொய்யானதொரு மனப்போக்கை உதறித் தள்ளிவிட்டீர்கள் அல்லவா? ஒரேயடியில் அதனை முழுதும் அகற்றி விட்டீர்கள். பொய்யென்று நீங்கள் உணர்ந்த ஆராய்ச்சி முறையையும் அதனுள் அடங்கிய அனைத்தையும் நீங்கிய உடனே, உங்கள் மனம் ‘நேற்று’ என்று சொல்லப்படும் இறந்த காலத்திலிருந்தும் விடுபடுகிறது. காலத்தின் வலையிலிருந்தும் விடுதலையடைந்து, அந்த அடிப்படையான மனப்பான்மையை உடனே நீக்கிவிடுகின்றது. சார், நாம் இதையே வேறுவிதமாகவும் விளக்கக்கூடும். எண்ணம் என்பது காலத்தின் விளைவாகும் அல்லவா? சமுதாய, மத சமபந்தமான வாழ்க்கையால் தூண்டப்பட்டதும் சூழ்நிலையால் ஆக்கப்பட்டதும் ஆனது எண்ணம். இந்த எண்ணம் காலத்திலிருந்தும் பிரிய முடியுமா? காலத்தின் போக்கில் சிக்காமல் எண்ணம் நிற்க முடியுமா?

எண்ணத்தை அடக்கலாம், உருவாக்கலாம். அப்படிச் செய்யும் போதெல்லாம் மனம் காலத்தால் கட்டுண்டதாய்க் கிடக்கிறது. இதுதான் நமக்குள்ள கஷ்டம். இந்தச் சிக்கலிலிருந்து ஆயிரக்கணக்கான நேற்றைய தினங்களிலிருந்து தோன்றியதும் காலத்திலிருந்தும் உண்டானதுமாகிய மனம் எவ்வாறு உடனே இக்கணத்தில் விடுபடும்? அது முடியுமா? அவ்வாறு விடுபட உங்களால் முடியும். நாளை அல்ல. இதோ இந்த நிமிசத்தில், இப்பொழுதே பொய்யென்று உணருகின்ற அந்த நேரத்தில்தான், அது முடியும். ஆராய்ச்சியின் போக்கு முழுவதும் நிற்க வேண்டும் – பலாத்காரத்தினால் அல்ல. ஆனால் பொய்யான முறையைப் பொய்யென்று உணர்வதால் அந்தக் கணத்திலே இறந்த காலத்திலிருந்தும் உங்கள் மனம் பூரண விடுதலை பெற்றுவிடுகின்றது. இறந்த காலம் என்றால் என்ன என்பதை அறியமாட்டீர்கள் என்பதல்ல, அதன் கருத்து, இறந்த காலத்துடன் நேரடியான தொடர்பு ஒன்றும் உங்கள் மனதில் இருக்காது. ஆதலால் அதிலிருந்தும் இந்த நிமிசத்தில் விடுபடமுடியும். இவ்வாறு இறந்த காலத்திலிருந்து பூரண சுதந்திரம் பெறுவோமானால் – கடிகாரம் காட்டும் இறந்த காலம் அல்ல – மனோ நிலையில் ஏற்படும் ஞாபக வடிவமான இறந்தகாலம் – அது ஒன்றே உண்மையை அறிவதற்கான வழியாகும்.

இதனை வெகு சுலபமாய் அறிந்துகொள்ள வழி உண்டு. ஏதாயினும் ஒன்றை அறிவதற்கு நம் மனோநிலை எப்படியிருக்க வேண்டும்? உங்கள் குழந்தையையோ, மற்றொருவரையோ, அறிய வேண்டுமானால் உங்கள் மனோ நிலை எப்படியிருக்கும்? உங்கள் மனம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்காது. தப்பு கண்டுபிடித்துக்கொண்டு இருக்காது. சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டு இருக்காது. உங்கள் எண்ணத்தின் போக்கை நிறுத்திக்கொண்டு, ஆழ்ந்த கவனத்துடன் இருப்பீர்கள், அல்லவா? உங்கள் மனது செயலற்றதாய் முழு உணர்வோடு எல்லாவற்றையும் சாவதானமாய் கவனித்துக்கொண்டிருக்கும். அத்தகைய கவனம் காலத்துடன் தொடர்பு கொண்டதல்ல. அந்நிலையில் யாதொரு செய்கையுமில்லாமல் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள். பூரண கவனத்துடன் இருக்கிறீர்கள். இந்த நிலையில்தான் உண்மை அறிவு ஏற்படுகிறது.

மனம் குழம்பி ஆராய்ச்சியில் அலைந்து, அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது உண்மையை அறிய முடியாது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆழ்ந்த ஆவல் இருக்கும்போது மனம் சலனமற்றது நிம்மதியாய் இருக்கும் என்பது எவரும் அறியக்கூடியதே. இது நான் சொல்லி நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படியான விசயமல்ல. நீங்களாக உங்கள் அனுபவத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும், ஒன்று நீங்கள் பார்க்கலாம். எவ்வளவுக்கெவ்வளவு மனம் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு விளக்கமான அறிவு குறைகிறது. சில அனுபவங்கள், சில நிகழ்ச்சிகள், இவை புலனாகலாம். ஆனால், ஆராய்ச்சியின் மூலம் உள்ளத்தை முழுவதும் காலி செய்ய முடியாது. ஆராய்ச்சி முறை தவறு, பொய்யானது என்று உணர்ந்தால்தான் மனம் காலியாகும். பொய்யைப் பொய் என்று உணர்ந்த பொழுதில் உண்மையை அறிய ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் அடிப்படை மனோ நிலையிலிருந்து உங்களை விடுவிக்க வல்லது உண்மைதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். எண்ணங்களின் போக்கினால் ஆகியது ஆராய்ச்சி. எண்ணங்களின் போக்கிலிருந்தும் விடுபட வேண்டும். அப்படி விடுபடும் நிலையை அடைவதே உண்மையான ‘தியானம்’ என்று சொல்லலாம். இது வேறு ஒரு பிரச்சனை. இதைப்பற்றி மற்றொரு சமயம் பேசுவோம்.

கேள்வி: எனது உள்ளம் மலர்வதற்கு குருவின் அன்பு என்று சொல்லக்கூடிய சூரியவெளிச்சம் தேவை. உணவு, உடை, இருப்பிடம், ஒருவனுக்கு எப்படி வாழ்க்கைத் தேவைகளோ, அப்படித்தானே ஒருவனுக்கு உள்ளத் தேவையும்? மனோநிலை சம்பந்தமான தேவைகளை எல்லாம் நீங்கள் கண்டனம் செய்கிறீர்கள் போலிருக்கிறது. இதன் உண்மை எதுவோ?

கிருஷ்ணமூர்த்தி: உங்கள் பலருக்கு ஒவ்வொரு விதமான குரு இருக்கிறார் அல்லவா? இமய மலையிலோ, அல்லது இங்கோ, அங்கோ, ஒரு குரு இருக்கிறார். அவர் உங்களுக்கு ஏதோ ஒருவகையான வழிகாட்டி அல்லவா? அத்தகைய ஒருவர் உங்களுக்கு ஏன் வேண்டும்? நாளை கழித்து மறுநாள் உங்களுக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டினால் ஒழிய, லௌகீக காரியங்களுக்கு குரு தேவையில்லை என்பது வெளிப்படையே. உங்களது உள்ளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவல்லவோ அவர் உங்களுக்கு வேண்டும்? நீங்கள் நினைக்கிறீர்கள் – “என் மனம் கலக்கம் அடைந்துள்ளது. எப்படி இவ்வுலகில் வாழ்வது என்று தெரியவில்லை. வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகள் பல, குழப்பமும் கொடுமையும் சாவும் அழிவும் தாழ்வும் குலைவும் – எல்லாம் உள்ளன. இவைகளின் இடையே அகப்பட்ட எனக்கு இன்னது செய்வது என்று வழி காட்டக்கூடிய ஒருவர் தேவை.”

நீங்கள் குருவை வேண்டுவதும் குருவைத் தேடிச் செல்வதும் இதற்காகத்தானே! நீங்கள் சொல்வது – “என் மனம் குழம்பியுள்ளது. இந்தக் குழப்பத்தைப் போக்கித் தெளிவை உண்டாக்கவல்ல குரு ஒருவர் வேண்டும்” – என்பது அல்லவா? இத்தகைய உங்கள் தேவை உள்ளத் தேவையேயாகும். உங்கள் பிரதமரை குருவாக நீங்கள் பாவிப்பது இல்லை. ஏனெனில், அவர் உங்கள் சமூக வாழ்க்கையின் பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்பவர். உங்களுடைய உடல் சம்பந்தமான தேவைகளுக்கு அவரை நோக்குகிறீர்கள். உங்கள் மனம் சம்பந்தமான தேவைகளுக்கு குருவை நோக்குகிறீர்கள்.

இனி, ‘தேவை’ என்ற வார்த்தையின் கருத்து என்ன? எனக்கு சூரிய வெளிச்சம் தேவை. உணவு, உடை, இருப்பிடம் இவை தேவை. அதே மாதிரி குருவும் ஒரு தேவையா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல, என் உள்ளேயும் என்னைச் சுற்றி வெளியேயும் தோன்றும், இந்தச் சங்கடமான கோளாறான நிலையை யார் உண்டாக்கினார்கள் என்பதை நான் கண்டுபிடித்தாக வேண்டும். இந்தக் குழப்பத்திற்கு உண்மையில் நான்தான் பொறுப்பு என்று உணர்ந்தால், அதைத் தீர்க்கக் கூடியவனும் நானாகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால் இந்தக் குழப்பத்தின் உண்மையை நான் உணர்ந்தாக வேண்டும்.

ஆனால் சாதாரணமாய் குருவைத் தேடிச் செல்வது எதற்காக? குழப்பத்திலிருந்து அவர் நம்மை விடுவிப்பார் என்பதற்காக, அல்லது ஒரு வழிகாட்டுவார் என்பதற்கோ, அல்லது என்ன செய்தால் குழப்பம் நீங்கும் என்பதற்கு முறை கற்றுக்கொடுப்பார் என்பதற்காகவோ தான் அல்லது இப்படியும் இருக்கலாம் – ‘இந்த உலகம் பொய், நான் மெய்ப்பொருளைக் காணவேண்டும்’ என்று நீங்கள் நினைக்க, குருவானவர், ‘நான் மெய்பொருளைக் கண்டுபிடித்திருக்கிறேன்’ என்று சொல்ல, அவர்தான் உண்மையைக் காட்ட வல்லவர் என்று அவரிடம் போகிறீர்கள்.

மற்றொருவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தபோதிலும், அவரால் நமது குழப்பம் தெளிவடையுமா? நமது வாழ்க்கையில் உள்ள தொடர்பில் குழப்பம் உள்ளது. ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்பு, சமூகத் தொடர்பு, பொருளுடன் தொடர்பு ஆகிய பல்வகைத் தொடர்புகளை நாம் அறியவேண்டும். நமது தொடர்பின் உண்மையை மற்றொருவர் நமக்கு உணர்த்த முடியுமா? இப்படி, அப்படி என்று ஒருவர் குறிப்பிட்டாலும், காட்டினாலும், என்னுடைய தொடர்பை நானாகத்தானே உணருதல் வேண்டும். என்னுடைய நிலை என்ன என்பது எனக்குத் தானே தெரிய வேண்டும்? சார், உங்களுக்கு இந்த விசயத்தில் அக்கறை உண்டா? மற்ற எதையோ எவரையோ நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு இதில் சிரத்தை இல்லை என்றே நான் எண்ண வேண்டியிருக்கிறது.

கேள்வியைக் கேட்ட உங்களுக்கு அதன் விடைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற ஆவல் இல்லை என்று தெரிகிறது. குருவும் குழப்பமும் என்ற பிரச்சனையில் உங்களுக்கு அதிக அக்கறையில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. உண்மையில், குருவின் சொல் உங்களுக்கு துரும்பு மாத்திரமே. குரு உபதேசிப்பதும், நீங்கள் அதற்கு காது கொடுப்பதும் ஒரு பழக்கம் மாத்திரமே. குருவிடம் செல்வது பழக்க வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. ஆகையால் உங்களுக்கு வாழ்க்கை முக்கியமில்லை. வாழ்க்கை புதுமையும் உயிரும் உள்ளதாய் இல்லை. உங்கள் அகத்தின் நிலையை முகத்தில் காண்கிறேன். இந்தக் கேள்வியில் உங்களுக்கு சரியான அக்கறையில்லை. குருவைத்தேடி அலைவதான முயற்சியை உறுதிப்படுத்துவதற்கோ, அல்லது குரு அவசியம் என்ற கொள்கையை பலப்படுத்துவதற்கோ தான் நான் சொல்வதைக் கேட்கிறீர்கள். இந்த மனப்பான்மை உள்ளவரையில் உண்மையைக் காணமுடியாது. உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் உணர வேண்டியது ஒன்றுண்டு. ‘குரு ஒருவர் எனக்குத் தேவை என்று நான் ஏன் எண்ணுகிறேன்’ என்று உள்ளம் முழுவதும் அலசிப்பார்த்துக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆதலால் அன்பர்களே, இந்தக் கேள்வியில் பல விசயங்கள் அடங்கியுள்ளன. “உண்மை அசைவற்றது. நிலையானது. ஒரு குரு அதனிடம் நம்மைக் கூட்டிச் செல்லக்கூடும்” என்று எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது! ரயில்வே ஸ்டேசனுக்குப் போக உங்களுக்கு வழி ஒருவர் சொல்வது போல உண்மையிருக்கும் இடத்துக்கும் ஒரு வழி காட்டுவார் என்று நினைக்கிறீர்கள். உண்மை ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் பொருளாயிருந்தால் அது சாத்தியமே. உண்மை அப்படி ஒரு நிலையில் நிற்பதா? அப்படி அது இருப்பதுதான் உங்களுக்கு இஷ்டம். அது ஒரே நிலையில் இருந்தால் உங்களுக்கு ரொம்பத் திருப்திதான். ஏனெனில், அது இன்னதுதான் என்று சொல்லி விடலாம். அதை விடாமல் பிடித்துக்கொள்ளலாம். ஆதலால் உங்களுக்கு வேண்டியது உங்களுடைய திருப்திதான். நீங்கள் வேண்டுவது பத்திரமாக இருக்கத்தான், குருவின் உறுதிமொழியை வேண்டுகிறீர்கள்.

“நீங்கள் செய்வது சரி, அதுதான் வழி” என்று அவர் உங்களைத் தட்டிக்கொடுக்க வேண்டும். அதனால் உங்கள் மனம், உணர்ச்சி இவற்றில் ஒரு திருப்தி ஏற்படல் வேண்டும். இதுதான் உங்கள் நோக்கம். அதனால்தான் உங்களுக்குத் திருப்தியைத் தவறாமல் அளிக்கவல்ல குருவை நாடுகிறீர்கள். இதனால் எவ்வளவு சீடர்கள் உண்டோ, அவ்வளவு குருமார்களும் ஏற்படுகிறார்கள். நீங்கள் தேடுவது ‘உண்மை’யை அல்ல, ஆனால், ‘திருப்தி’யைத்தான். எவர் எல்லாரைக் காட்டிலும் உங்களுக்கு அதிக திருப்தியைக் கொடுக்க வல்லவரோ அவரைக் குருவாக ஏற்றுக்கொள்கின்றீர்கள். அத்தகைய திருப்தி, உடல் சம்பந்தமாய் இருக்கலாம் அல்லது உள்ளம் சம்பந்தமாக இருக்கலாம். அவரது சன்னிதானத்தில் உங்களுக்கு அதிக அமைதியும் சாந்தியும் ஏற்படுகிறது உங்களை அவர் அறிந்துகொண்டார் என்ற உணர்ச்சி உண்டாகிறது.

உங்கள் கஷ்டங்களைப் போக்கவல்ல ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தாயையோ, தகப்பனையோ வேண்டுகிறீர்கள். சார், நீங்கள் எப்போழுதாவது ஒரு மரத்தின் அடியில் அமைதியுடன் அமர்ந்தது உண்டா? அங்கும்தான் சாந்தி நிலவுகிறது. அந்த இடத்திலும் உங்களை நன்கு அறியப்படுவதான உணர்ச்சி பெறுவீர்கள். அதாவது அமைதி நிறைந்த ஒருவர் பக்கத்தில் இருக்கும்போது நீங்களும் அமைதியைப் பெறுகிறீர்கள். இந்த அமைதிக்குக் காரணம் அந்த மனுசர்தான் என்று கருதி அவர் கழுத்தில் ஒரு மாலையைப் போடுகிறீர்கள். உங்கள் வேலைக்காரனுக்கோ ஒரு உதை கொடுக்கிறீர்கள். எனக்கு ஒரு குரு தேவை என்று சொல்லும்போது இவ்வளவும் அதில் அடங்கியுள்ளதல்லவா? எந்த குரு நீங்கள் வாழ்க்கையிலிருந்தும் தப்பித்து ஓடுவதற்கு உறுதியான மார்க்கத்தை உங்களுக்குக் காட்டுகிறாரோ, அந்த குருவே உங்களுக்குத் தேவையாகிறார்.

ஒருவனுக்குத் தான் வாழும் வாழ்க்கைத் தொடர்பில்தான் குழப்பம் இருக்கிறது. இதன் உண்மையை உணர மற்றொருவர் எதற்காக? நீங்கள் உடனே கேட்கலாம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எங்களுக்கு குருவாகத் தானே நீங்கள் இருக்கிறீர்கள்?” என்று. ஆனால் உங்களுடைய குரு என்ற நிலையில் நான் இல்லை. ஏனெனில், முதலாவதாக, நான் உங்களுக்கு ‘திருப்தியை’க் கொடுக்க முன்வரவில்லை. நாளுக்கு நாள், நிமிசத்துக்கு நிமிசம், நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை எடுத்துச் சொல்லவில்லை. உங்களுக்கு ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறேன். அதை ஏற்றுக்கொள்வதோ, விட்டுவிடுவதோ, உங்களைப் பொருத்தது. எனக்காக அல்ல, உங்களிடம் நான் வேண்டுவது ஒன்றுமேயில்லை. உங்கள் புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ, உங்கள் பூசனைகளோ, தெய்வங்களோ, ஒன்றையும் நான் உரிமையாய்க் கேட்கவில்லை.

இதுதான் உண்மை என்று ஒன்றைச் சொல்லுகிறேன். நீங்கள் அதை எடுத்துக்கொண்டாலும் சரி, விட்டுவிட்டாலும் சரி, உங்களில் அனேகர், இதனால் திருப்தி ஏற்படாததால், இதை விட்டுவிடத்தான் போகிறீர்கள். ஆனால் எவனொருவன் உண்மையை அடைய உண்மையான சிரத்தையுடன் இருக்கிறானோ, அவனுக்கு இதில் பசியாற்றும் உணவு கிடைக்கலாம். அது என்னவெனில், வாழ்க்கைத் தொடர்பிலேதான் குழப்பம் ஏற்படுவதால் நாம் அந்தத் தொடர்பை உணரவேண்டும் என்னும் உண்மையே.

வாழ்க்கையின் தொடர்பை உணர வேண்டுமானால், அதனை உதறித் தள்ளாமல், அதனை விட்டு நீங்காமல், அதனை முழுவதும் அறிந்துகொள்ள, நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் தொடர்பின் முழு உண்மையும் நமக்கு வெளியாகும். உண்மை வெகுதூரத்துக்கு அப்பால் இல்லை. பக்கத்தில் இருக்கிறது. ஒவ்வொரு இலையின் அடியிலும் ஒவ்வொரு புன்சிரிப்பிலும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியிலும் ஒருவருடைய பேச்சிலும் உணர்ச்சிகளிலும் எண்ணங்களிலும் உண்மை இருக்கிறது. ஆனால் மறைந்து நிற்கிறது. அதன் திரையை நீக்கிப் பார்க்க வேண்டும். பொய் இன்னது என்று கண்டுபிடித்தலே திரையை நீக்குவதாகும். பொய்யாகிய திரை இன்னதென்று அறிந்த அந்தக் கணமே அத்திரை அகலும். அப்போது தானாகவே உண்மை தோன்றும்.

உண்மை என்பது நிமிசத்துக்கு நிமிசம் புத்துயிருடன் தோன்றுவதாகும். அது கண்டறியப்பட வேண்டிய பொருள். நம்பப்பட வேண்டியது அல்ல. இன்னார் வாக்கில் இவ்விதம் தோன்றியது என்று திருப்பிச் சொல்லக்கூடியதும் அல்ல. இதுதான் என்று ஒரு விதியினுள் அடக்கிக் காட்டக்கூடியதும் அல்ல. ஆனால் உங்கள் மனமும் இதயமும் எதற்கும் நயந்து கொடுக்கக்கூடிய பண்புடனும் விழிப்புடனும் உண்மையைக் காண்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். வெகுவேகமாய் உண்மையைப் பின்தொடரக் கூடிய மனப்பான்மையில் நம்மில், துரதிருஷ்டவசமாய், பலருக்கு விருப்பமில்லை. மந்திரங்கள் என்ன, பூசை புனஸ்காரங்கள் என்ன, இன்னும் எத்தனையோ பிற வழிகளில் தாலாட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருக்க விரும்புகிறீர்கள்.

நமது முழு கவனத்தையும் செலுத்துவதற்கான ஒரு சூழ்நிலை, ஏகாந்தம், நமக்கு வேண்டியது உண்மைதான். ஏகாந்த நிலையை நாடவோ, அன்றி அதைவிட்டு ஓடவோ, முயற்சி செய்வதில் பயனில்லை. ஆனால் நமது முழு கவனத்தையும் செலுத்தும்படியான ஏகாந்த நிலை எப்பொழுது ஏற்படுகின்றதென்றால், நாம் கஷ்டத்தில் அகப்பட்டு, ஒரு நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான், அந்த நேரத்தில் நமக்கு உதவி செய்யக்கூடிய ஒரு நண்பன் இருந்தால், அவரிடம் சென்று அவர் உதவியை நாடுகின்றோம். அத்தகைய நண்பரை குருவெனறு பாவிப்பதே சிறுபிள்ளைத்தனம் அல்லவா? தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு செல்லும் குழந்தையின் மனப்பான்மையே அது.

நமக்குக் கஷ்டம் நேரிட்ட சமயத்தில் வேறொருவருடைய உதவியை நாடுவதே இயற்கைத் தூண்டல். அது தாயாக இருக்கலாம், தகப்பனாக இருக்கலாம் அல்லது ஒரு ஞான பிதா என்று கருதும் குருநாதராக இருக்கலாம். குருநாதர், விசயம் தெரிந்தவராயிருந்தால், உங்களுடைய தொடர்புகளிலே, உங்கள் செயலிலே, உங்களை அறிந்துகொள்ளும்படியே சொல்லுவார். குருநாதரைப் பார்க்கிலும் உங்களுக்கு முக்கியமானவர் நீங்களேதான். என்னைக் காட்டிலும் உங்களுக்கு முக்கியமானவர் நீங்களே. உங்கள் பிரச்சனை, உங்கள் வாழ்க்கை, உங்கள் துக்கம், உங்கள் கஷ்டம், உங்கள் போராட்டங்கள் – இவற்றையல்லவா நீங்கள் கவனிக்க வேண்டும்? குருநாதரோ, நானோ, இன்னும் மற்றெவரோ முக்தராக இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன பயன்? குருநாதரை வணங்கி நிற்பது, உங்களை நீங்களே அறிந்துகொள்ளத் தடையாக உள்ளது. இதில் ஒரு விசேச உண்மை அடங்கியிருக்கிறது.

எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நபருக்கு உங்கள் மரியாதையை செலுத்துக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு மற்றவர்களுக்கு அதைச் செலுத்த மறுக்கிறீர்கள். பணிவுடன் குருவை வணங்குபவன், தன் வேலைக்காரனை எட்டி உதைக்கிறான். இத்தகைய வணக்கத்தில் என்ன அர்த்தம் இருக்கிறது? இவை யாவும் உலகில் நடைபெறும் விசயங்களே என்று நான் அறிவேன். இவைகளைக் கேட்பதில் உங்களில் பலருக்கு விருப்பம் இல்லை என்பதையும் அறிவேன். ஏனெனில் புண்பட்ட உங்கள் மனம் ஆறுதலை வேண்டுகிறது. துன்பங்களில் சிக்குண்டு அல்லற்படும் உங்கள் மனம் கேட்பது என்னவென்றால், “இந்தத் துன்பத்தினின்றும் தப்பிக்க வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் – அதற்கு ஏதாவது நம்பகமும் தஞ்சமும் கொண்ட உறுதிமொழி சொல்லுங்கள்” என்பதே. சார், எது செய்தாலும் பயனில்லை என்று அறிந்த மனமே, உண்மையை உள்ளபடி அறியவல்லது. எதனாலும் திருப்தியடையாத மனமே உண்மைக் கடலில் குதிக்கும். நம்பிக்கை என்னும் ஊன்றுகோலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டும், கௌரவ அந்தஸ்தைக் கோரும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டும், திருப்தியில் நிலைத்து நின்றுகொண்டும் உள்ள மனம் உண்மையை அறியாது.

வாழ்க்கையின் தொடர்பில்தான் நீங்கள் மலர்ச்சி அடைவீர்கள். அன்பில்தான் உங்கள் உள்ளம் மலரும். வாக்குவாதத்திலோ, எதிர்ப்பிலோ அல்ல. ஆனால் நம்முடைய இதயக் கமலங்கள் வாடிவிட்டன. நம்முடைய மனத்தினால் உண்டாக்கப்பட்டவைகளை எல்லாம் போட்டு இதய உள்ளத்தை நிரப்பி வைத்துள்ளோம். அதனால்தான் மற்றவர்கள் தங்கள் மனத்தினால் உண்டாக்கிய பொருள்களையும் கூடத் தேடிப் பெற்று அவற்றையும் நமது மனதில் நிரப்பிவைக்க அலைகிறோம். நம் முன்னே அன்பு இல்லை. அதனால் குருவினடத்திலோ, மற்றவர்களிடத்தோ அதனைக் காண முயலுகிறோம். அன்பை அவ்வாறு கண்டுபிடிக்க இயலாது. விலைகொடுத்து வாங்க முடியாது. நம்மை நாமே வருத்தி வாட்டிக்கொள்வதனாலும் பெறமுடியாது. ‘நான்’ என்பது இல்லாத நேத்தில் அன்பு வந்து தோன்றுகிறது. திருப்தியையோ, கஷ்டத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு போகும் வழியையோ தேடும்போதும், வாழ்க்கைத் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தை உணர முற்படாமல் முகத்தைத் திருப்பும்போதும், ‘நான்’ என்னும் அகந்தையையே உறுதிப்படுத்துகிறீர்கள். அதனால் அன்பை ஒட்டாமல் செய்து விடுகின்றீர்கள்.

இன்னும் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டுமா அல்லது இதுவே போதுமா? உங்களுக்கு களைப்பு ஏற்படவில்லையா? இல்லை? அன்பர்களே, நீங்கள் என்னுடைய பேச்சினாலும் குரலினாலும் மயக்கமடைந்து விட்டீர்களா என்ன? இதுவரை நாம் பேசின பேச்சும், இந்த இரண்டு கேள்விகளுக்கு முன்னும் பின்னும் கூறிய  வார்த்தைகளும், உங்கள் மனத்தைக் கலக்கவில்லையா? உங்களுக்கு அதிக கலக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் உங்களிடம் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். உங்களுக்கு ஓய்ச்சல் உண்டாகாவிட்டால், உங்கள் மனம் கலங்காவிட்டால், நீங்கள் எதற்காக இங்கே உட்கார்ந்து இருக்கவேண்டும்? நண்பர்களே, நீங்களும் நானும் இங்கு செய்ய முயற்சிக்கும் காரியம் என்ன என்பதைப் பற்றித் தெளிவான சிந்தனை கொள்ளல் வேண்டும். உங்களில் பலர் சொல்லலாம் –

“இது எல்லாம் எனக்குத் தெரியாதா? சங்கரரும் புத்தரும் ஏனையோரும் இதைத்தானே சொன்னார்கள்?” என்று. இப்படிச் சொல்வது நீங்கள் எவ்வளவு படித்திருக்கின்றீர்கள் என்பதைக் காட்டுகிறது. நுனிப்புல் மேய்ந்தவர்களாய் இங்கு கேட்டவற்றை உங்கள் மனம் என்னும் பீரோவின் ஒரு பகுதியில் போட்டுவைத்து, மறந்துவிடப் போகிறீர்கள். நீங்கள் கேட்டவற்றை அவ்வாறு அப்புறப்படுத்தி விடுவது ரொம்பவும் வசதியானது. பேச்சளவில் மாத்திரம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தைக் கலக்கும் அளவில், பேச்சில் அடங்கியுள்ள கருத்தை அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அன்பர்களே, சாந்தியை அடையப் பெரிதும் தேடவேண்டும். நீங்களும் நானும் இங்கு செய்யப் புகந்தது, நமது மனத்தையும், இதயத்தையும் நன்கு தேடிப்பார்த்து, உண்மை எது, பொய் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான்.

அவ்வாறு கண்டுபிடிக்கும் வேலையில் சக்தி செலவாகிறது. உயிர்ச்சக்தி தேவையாக இருக்கிறது. நிலத்தைத் தோண்டும்போது களைப்புண்டாவது போல, இந்த வேலையிலும் களைப்புண்டாகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நீங்கள் கேட்டுக் கேட்டுப் பழக்கமடைந்திருக்கிறீர்கள். மற்றவர் பாடும் பாட்டைக் கேட்டுத் தலையாட்டுபவர் போல இருக்கிறீர்கள். ஆகையால் உங்களுக்குக் களைப்பு இல்லை. விளையாட்டைப் பார்ப்பவர்க்கு களைப்பு எப்படி ஏற்படும்? ஆடுபவர்களுக்கு அல்லவா அது உண்டாகும்? ஆனால் நானோ வற்புறுத்திக்கொண்டே வந்துள்ளேன். நான் ஆடுபவனும் அல்ல, நீங்கள் பார்த்து ஆனந்திப்பவர்களும் அல்ல. நான் பாடும் ஒரு பாட்டைக் கேட்கவும் நீங்கள் இங்கு வரவில்லை. பிறருடைய பாட்டைக் கேட்பதற்கு அல்ல. நம்முடைய உள்ளத்தில் பாட்டைக் கண்டுபிடிக்க இங்கு முயலுகிறோம். பிறருடைய பாட்டையே கேட்கும் வழக்கமுடைய உங்கள் உள்ளம், காலியாக உள்ளது. பிறருடைய பாட்டால் அதை நிரப்புகிறபடியால் அது காலியாகத்தான் இருக்கும். அது உங்கள் பாட்டு அல்ல. உங்கள் இதயம், கிராமபோன் இசைத்தட்டின் பாட்டால் நிரம்பியது. மனோநிலைக்கு ஏற்றவாறு மாற்றி வைத்துக்கொள்ளுகிறீர்கள். பாடுபவர்கள் நீங்கள் அல்ல.

பெருந்துயரமும் சங்கடமும் நிறைந்த நேரத்தில் நாம்தான் பாடும் பாடகர்களாக இருக்கவேண்டும் – நாம் ஒவ்வொருவரும் தான். மனத்தின் செயலால் ஆக்கப்பட்டு, பொருள்கள் நிறைந்த உள்ளத்தைக் காலி செய்து அவைகளிலிருந்தும் விடுபட்டு, நமது பாட்டால் நமது வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய மனத்தினால் ஆக்கப்படும் பொருள்கள் யாவை என்று அறியவேண்டும். அவை பொய்யென்று உணரவேண்டும். அப்பொழுதுதான் அவைகளுக்கு நமது உள்ளத்தில் இடம் தரமாட்டோம். உங்கள் உள்ளத்தில் இப்போது இருப்பதைப் போல், எரிந்து போன சாம்பல் குவியல் நிறைந்து இல்லாமல், எப்பொழுது உள்ளம் காலியாக இருக்குமோ, எப்பொழுது அமைதியாக இருக்குமோ, அப்பொழுது உங்கள் உள்ளத்திலிருந்து ஒரு பாட்டு எழும். அந்தப் பாட்டை, அழிப்பதற்கோ, குலைப்பதற்கோ, எதனாலும் இயலாது. ஏனென்றால் அது மனத்தின் செயலால் கட்டப்பட்ட ஒரு பாட்டு அல்ல.

*

கல்கத்தா உரைகள், ஜனவரி 23, 1949