கழுதையின் வாயில்

0 comment

விஜயா பதிப்பகம் சார்பில் வழங்கப்படும் ‘ஜெயகாந்தன் விருது’ பெற்ற இராஜேந்திர சோழனுக்கு வாழ்த்துகள்.

*

கோர்ட் விவகாரங்கள் அவனுக்குப் புதுசு என்று சொல்ல முடியாது. வண்டி ஓட்ட ஆரம்பித்த புதிதில் அவனுக்கு அதுபற்றி கொஞ்சம் பயமாக இருந்தது. முதல் தடவையாக கோர்ட்டுக்கு போக நேர்ந்தபோது அவன் உள்ளே நுழையவே பயந்தான். கனத்த பூட்சுகள் சிமெண்ட் தரையிலே நறநறத்து கறுக்முறுக்கென்று ஒலிக்க எஸ்கார்ட் போலீஸுகள் வராந்தாவிலே நடப்பதும், குழம்பிப் போன முகங்களும் வாழ்க்கையின் இறுதிக் கணக்கைத் தீர்த்துமுடித்து பாவ புண்ணியத் தீர்ப்பை எதிர்கொள்வது போல் திகிலடைந்த முகங்களும், கலவரமடைந்த கண்களும் காண அவன் ஒரு மாதிரியான அச்சம் கொண்டான். எங்க போவது… யாரை விசாரிப்பது… என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினான். என்ன கேட்பார்களோ… என்ன சொல்ல வேண்டுமோ, பயத்தால் எதையாவது உளறிவைத்து எக்கச்சக்கமாய் எதிலும் மாட்டிக் கொள்வோமோ… அப்படி ஒரு காப்ரா.

அப்புறம் அது அவனுக்கு ரொம்பப் பழக்கமாகி விட்டது. வாடிக்கையான நிகழ்ச்சியாகி விட்டது. இதனால் ஒன்றும் தலை போய்விடாது. ஏதாவது ஃபைன் போடுவான், கட்ட வேண்டும் அவ்வளவுதான் என்று சொல்லுவான். ஃபைன் கூட இவ்வளவு அவ்வளவுதான் என்று ஒரு வரையறை கிடையாது. வாயில் வந்ததை உளறி வைப்பான்கள். அந்த நேரத்தில் பணம் புரட்ட கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பதைத் தவிர கோர்ட் ஒன்றும் நியாயக் கணக்கு ஸ்தலமல்ல என்பான். ‘சட்டமாவது மண்ணாங்கட்டியாவது. எவன்னா இளிச்சவாயனையும் தல காஞ்சவனையும் புடிச்சு உள்ள வக்யதாம்பா இந்தச் சட்டம். வசதி இருந்தாப் போதும். இந்தப் போலீஸ், கோர்ட், வக்கல், சட்டப் புஸ்தகம் எல்லாம் சொன்னபடி ஆடும்’ என்பது அவனுடைய அபிப்பிராயம்.

ராத்திரியில் ஜன சஞ்சாரமேயற்று சந்தடியடங்கி வெறிச்சிட்ட ரோடில் ஒன்வே டிராபிக்கை மீறிப் போவதும், பேபி டாக்ஸியில் அர்ஜண்டு சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருதி நாலு பேராய் ஏற்றிக்கொண்டு போவதும், காக்கிச் சொக்காயை உடம்பில் போடாமலிருப்பதும், சொக்காய் போட்டிருந்தாலும் பில்லையை அதில் மாட்டாமல் ஜேபியில் வைத்திருப்பதும் எந்த விதத்தில் தப்பு என்பது அவனுக்குத் தெரியவில்லை. கேட்டால் ‘நான் மட்டுமா இப்பிடி? எல்லா டிரைவருங்களுமே இப்பிடிதான். எவனால சட்ட பிரகாரம் நடக்க முடியுது?’ என்று சிரிப்பான். ‘புத்தர் இந்தக் காலத்துல அடையார் ஆலமரத்துங் கீழ தவம் பண்ணியிருந்தார்னா எவனாவது ஃபைன் கட்டாத டாக்ஸி டிரைவரா பாத்து அவன் கிட்ட ஒரு பத்து பைசா வாங்கிம் வந்துடுன்னுதான் சொல்லியிருப்பாரு – யசோதகிட்ட.’

ஆனாலும் அவன் இந்தத் தடவை கோர்ட்டுக்கு போக நேர்ந்ததை, தன் கொழுப்புதான் என்று சொல்லிக்கொண்டான். யாரிடமாவது சொன்னால்கூட ‘ஒனக்கு இதுவும் வோணும், இன்னமும் வோணும்’ என்றார்கள். சிலர் ‘அடப்பாவமே!’ என்று அனுதாபப்பட்டார்கள். சிலர் சிரித்தார்கள். அவனுக்கும் வெட்கப்பட்டுக்கொண்டு வெளியில் சொல்லிக்கொள்ள ஒரு மாதிரியாக இருந்தது.

நடந்தது இதுதான். போன மூணாவது மாசம், செப்டம்பர் கடைசி என்று அவனுக்கு ஞாபகம். சார்ஜ் ஷீட்டை பார்த்தால் தெரியும். சாயங்காலம் நாலு மணியிருக்கும். ரெண்டு பக்கமும் சவாரிக்காக நோட்டம் விட்டபடியே வண்டியை மெல்ல உருட்டிக்கொண்டிருந்தான், தேனாம்பேட்டையில் நந்தனத்துக்கு ரோடு பிரிகிறதே அந்தப் பகுதியில்.

வழக்கமான சாயங்கால நேரப் பரபரப்பு. டாக்ஸிகள், பஸ்கள், ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இடது பக்கம் அந்த பஸ் ஸ்டாப். எப்போதும் போல நல்ல கூட்டம். கல்லூரி மாணவிகளும் மாணவர்களும், ஆபீஸ் தொழிலாளர்களும், கலர்களும்…

பராக்கு பார்த்தமாதிரி ஓட்டிக்கொண்டு வந்தவன் ஓரம் ஒதுங்கினான். ‘புஸ்’ஸென்று சீறிக்கொண்டு வந்தது ஒரு பஸ். தமிழக அரசுப் போக்குவரத்து. நின்றது. நின்றதை உணருமுன்பே ஓடியது. அதற்குள் இந்தண்டைப் பக்கமிருந்து நாலைந்து பிதுங்கி வெளியே வந்து விழுந்தன. இந்தண்டைப் பக்கம் நாலைந்து உள்ளே புகுந்து திணிய சிலது தொத்திக்கொண்டன.

அந்த தொத்தலில் ஒரு பெண். பெண்-வயசுப் பெண். ரோஸ் தாவணி, வெள்ளைப் பாவாடை – ஆபீஸில் வேலை செய்கிறவளாகவோ, கல்லூரி மாணவியாகவோ இருக்கலாம். சட்டென்று கைப்பிடியை விட்டு ஏறும் முயற்சியிலிருந்து விலகி, நழுவி ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே தடுமாறினாள். ஒரு காலை தாங்கலாக வைத்து, ரோட்டில் நின்றாள். பார்த்தான்.

‘பாவம்! செருப்பு அறுத்துக்னா போலருக்குது…’

வண்டி அவனறியாமல் தேங்கியது. அவன் கவனம் பூராவும் அவளை அப்பியது. அவள் சுற்றும்முற்றும் பார்த்து தலையைக் குனிந்தாள். பட்டையை ஒட்ட வைக்கமுடியுமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டவள் போல எடுத்து பொருத்திப் பார்த்தாள். பின்பு, கையிலெடுத்துக் கொள்ள அசிங்கப்பட்டவள் போல அப்படியே அறுந்த வாக்கிலேயே காலை நுழைத்து இலாவகமாய், தொத்தலாய், எப்படியோ ஒருவாறு நடந்து பிளாட்பாரத்தை அடைந்து ஓர் ஓரமாய் ஒதுங்குவதைக் கண்டான்.

பெண் அழகு. சின்ன கச்சிதமான உருவம். அதிகம் விதரணை படியாத முகம். கொஞ்சம் மலங்க விழிக்கும் கண்கள். உடம்பை ஒட்டின உடுப்பு. தோள், மார்பு, இடுப்பு, அதற்கும் கீழே எல்லாம் அளவாய், திட்டமாய்… கணக்காய் செய்து வைத்தா மாதிரி. கன்றிச் சிவந்துபோன அவளது முகத்தில் தெளிவற்ற நிராதரவைக் காண அவன் கரைந்தான்.

‘அடடா! என்ன அழகான மொகம்… பாவம் முன்ன பின்ன இந்தமாரி எங்கியும் அனுபவப்பட்டிருக்காது போலக்குது… எப்படியிருக்க வேண்டிய மொகம்… பச்சங்… என்னா போறாத நேரமோ அவளுக்கு… படுவாவிப் பசங்க! எங்க! லேடீஸ் ஏர்றாங்களேன்னு கொஞ்சம் ஒதுங்கி வழி வுட்டாத்தான… அப்பதான் இடிச்சிக்னு ஏர்றானுங்க… எருமாடாட்டம். எவன் மெறிச்சிக்னு ஏர்னானோ…’

அவன் காலைப் பார்த்தான். செருப்பு ஹவாய் இல்லை. ஸ்பாஞ்ச் லெதர். மேலே தோல்பட்டை வைத்து தைத்தது. ஹைஹீல் – இடது கால்பட்டை தான் அறுத்துக்கொண்டிருந்தது. சின்ன செருப்பு – சின்ன காலில் படுகிற சின்ன செருப்பு. இப்போது ஒரு ஆணியிருந்தால் போதும் அவளுக்கு. எப்படியாவது வீடு போய்ச் சேர்ந்துவிடுவாள். ஒரே ஒரு ஆணி… எங்கேயிருக்கும் ஆணி…? வண்டியில் எப்போதோ போட்டு வைத்த ஆணி, அவன் ஞாபகத்துக்கு வந்தது. அவனுக்குள் ஆசைகள் கிளர்ந்தன.

‘ஹலோ மிஸ், ஒண்ணும் தப்பா நெனச்சுக்காதீங்க. இப்படி காட்டுங்க’ என்று சொல்லி செருப்பை வாங்கவேண்டும் ஆணி அடித்துக் கொடுக்க வேண்டும். அழகாய், ஸ்மூத்தாய், பாதத்தில் உறுத்தாமல். இப்ப போட்டுப் பாருங்க என்று சொல்ல வேண்டும். முதலில் அவள் புரியாமல் விழிப்பாள். பின்பு பெருமூச்சு நிம்மதியில் வெளிவரும். ஆதுரத்துடன் சிரிப்பாள். நன்றி பூரிக்க நிமிர்ந்து பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் ‘ரொம்பா தேங்ஸ்’ என்பாள். ஐயோ… ஐயோ… அது ஒன்று போதுமே… ஆயுசு பூராவுக்கும் அந்த நினைப்பிலேயே வாழ்ந்து விடலாமே… ஜன்மத்துக்கும் மறக்க முடியுமா அதை. அவளால் மட்டும் முடியுமா…

செருப்பை வாங்கி அடித்துக் கொடுக்க ஒருவேளை அவள் சம்மதிக்க மறுத்தாலும் மறுப்பாள். காட்டுங்க நானே அடிச்சிக்கிறேன் என்று ஆணிக்காக கையேந்துவாள். ஒரு தமிழ்ப் பெண் தன் பாதரட்சையை ஒரு தமிழ் மகன் தொடச் சம்மதிப்பாளா? ஆனால் கொடுக்கலாமா அவளிடம்? அவளுக்கு எங்கிருந்து தெரியும் இதெல்லாம். அடிக்கிறேன் என்று சொல்லி கையில் போட்டுக்கொண்டாலும் போட்டுக் கொள்வாள். சிகப்பான விரல், இரத்தம் கட்டிவிடாதா? துடிப்பதைப் பார்த்துக்கொண்டு எப்படி சும்மாயிருக்க முடியும்? நாம் தான் வாங்கி அடித்துக் கொடுக்க வேண்டும். இதில் என்ன குறைந்துவிடப் போகிறோம் நாம்…

அவன் சும்மாயிருந்திருக்கலாம், வயசுக் கோளாறுதான். வண்டியை ஆஃப் பண்ணிவிட்டான். முன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். சொக்காயை இழுத்துவிட்டுக் கொண்டான். டோரைத் திறந்து கீழே இறங்கி தொண்டையைக் கனைத்து சரிப்படுத்திக் கொண்டான். ஏங்க… என்று அழைக்க அவள் பக்கம் கையை நீட்டப் போகிற சமயம்…

தடதடவென நெஞ்சை கிடுகிடுக்க வைக்கிறதொரு சத்தம். பின்னால் மோட்டார் சைக்கிள். அவன் அதிர்ச்சியடைந்து நின்றான். அசையக்கூடத் தோன்றவில்லை. அவனை கடந்து ரெண்டு தப்படி வரை முன்சென்ற சார்ஜண்ட், மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவனை நோக்கி வந்தான்.

நோ பார்க்கிங் ப்ளேசில் வண்டியை நிறுத்துவது குற்றம். கேஸ் புக் பண்ணியாகிறது. சார்ஜ் ஷீட்டை கார்பன் வைத்து சரசரவென்று எழுதித் தள்ளினான் சார்ஜண்ட். அவன் நிலைகுலைந்து செய்ய எதுவுமில்லை என்பது போல பரிதாபகரமாய் நின்றான். எல்லோரும் அவனையே பார்த்தார்கள். சிலர், காட்சிப் பொருளாக, சிலர் ஏதும் புரியாமல், சிலர் அனுதாபத்துடன். அந்தப் பெண்ணும் கும்பலோடு கும்பலாக அவனைப் பார்க்கிறாள். எல்லார் மாதிரியும் அனுதாபத்துடன். பாவம் என்ற தோரணை. மூணாம் நபருக்காக இரக்கப்படுவது மாதிரி.

அவளுக்குத் தெரியுமா அவன் எதற்காக வண்டியை நிறுத்தினான் என்று? தெரிந்தால்… அதை நினைத்துப் பார்க்கவே அவனது உடம்பு சில்லிடுகிறது. சிலிர்க்கிறது. ஜிவுஜிவு என்று எலும்பு நரம்பெல்லாம் எதுவோ ஏறுகிற மாதிரி. துடித்துப் போய் விடமாட்டாளா அவள். நமக்கு ஹெல்ப் பண்ண வந்த ஒருத்தருக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று. ஆனால் எப்படி தெரியப்போகிறது அவளுக்கு? யார் சொல்லப் போகிறார்கள் அவளுக்கு…?

பிரயோசனம் இல்லை. கேசை எழுதி முடித்து கையெழுத்து வாங்கி கிழித்துக் கொடுத்துவிட்டான் சார்ஜண்ட். இவன் தயங்க ‘வண்டியை அப்பால் எடு’ என்ற அதிகாரக் குரல் அவனை ஸ்டியரிங் கட்டையைப் பிடிக்க வைக்கிறது.

விலங்கு பூட்டிய குற்றவாளி மாதிரி நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அவன், தான் உண்டு, ரோடு உண்டு என்று பேசாமல் விட்டுக்கொண்டு வந்துவிட்டான்.

அப்புறம் அதைப்பற்றி அவன் எத்தனையோ முறை நினைத்துப் பார்த்திருக்கிறான். காணாத கனவெல்லாம் கண்டிருக்கிறான். சில சமயம் கண்கள் பிரகாசிக்க அவனையறியாது சிரிப்பு நெளியும். சில சமயம் சோர்வு தட்டும். என்ன இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று தோன்றும். அப்புறம் மறுபடியும் எப்பொழுதாவது அந்த நம்பிக்கை பிறக்கும்.

அவளை எங்கேயாவது பார்க்கவேண்டும். உனக்கு உபகாரம் பண்ண வந்து எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டும். அவள் நெஞ்சுருகிப்போய், ‘அப்படியா!’ என்ற ஆச்சர்யத்தால் கண்களை அகல விரிப்பாள். ஆமா ஆமா என்று தலையாட்டும்போது அவனுக்குப் பெருமை பிடிபடாது. நெஞ்செல்லாம் பூரிக்கும். அப்புறம் அவளோடு சந்திப்பு ஏற்படும். பஸ் ஸ்டாப்பில், பார்க்கில், பீச்சில் எல்லாம் சந்திப்பான். கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்ட பிறகு அவள் மாமா என்று அழைப்பாள் -அவன் அவளை அப்படியே குண்டுக் கட்டாகத் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவான். அப்படியே தோளோடு அணைத்தபடியே பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு எல்லோரையும் தெனாவட்டாகப் பார்த்தபடியே வண்டியை ஓட்டுவான். இப்படி யோசிக்கும்போது அவனுக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்துவிட்டது. ஆமாம்! அவள் மாமா என்று அழைப்பாளா, இல்லை அண்ணா என்று அழைப்பது மாதிரி தெரிந்தால் ‘அ’ என்று வாயைத் திறக்குமுன்பே குடுகுடுவென்று ஓடிப்போய் அவள் வாயைக் கெட்டியாக இறுக்க மூடிவிட்டு, ‘ஐயோ அப்படிக் கூட்டுடாத. எனக்கு ஏற்கனவே மூணு தங்கச்சி இருக்குது’ என்று சொல்லிவிட வேண்டும்.

ஆனால் அதற்கப்புறம் அவன் அவளைப் பார்க்கவில்லை.

கோர்ட் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. அதிகாரம் கால் பூட்சுகளில் தன் மிடுக்கைக் காட்டி நடைபோட்டுக்கொண்டிருந்தது. கறுப்புக் கோட்டு தொழிலாளர்கள் சட்ட புஸ்தகங்களுடனும் கேஸ் கட்டுகளுடனும் வராந்தாவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்கள். சாட்சிகளும் சம்மன்களும் சம்பந்தப்பட்டவர்களும் ஆங்காங்கே நின்று கசமுசத்துக்கொண்டிருந்தார்கள். பழக்கமுள்ளவர்கள் டீ குடிக்க வந்தவர்கள் மாதிரி பேசிக்கொண்டிருந்தார்கள். புதுசாய் வந்தவர்களின் முகங்கள் அப்பட்டமாய் எழுதி ஒட்டிவைத்த மாதிரி தெரிந்தன. குழப்பமும் திகிலும் தாண்டவமாடுகிற அவர்களையே ஒருமாதிரி பார்த்தபடி போன வாரம் வாங்கிய சம்மனோடு ஆஜராகியிருந்தான் அவன். சாவதானமாக ஒருபக்கம் ஒதுங்கி கடியாரத்தைப் பார்த்தபடி சீக்கிரம் ஆரம்பித்துவிடுவார்களா… அல்லது அதற்குள் எங்காவது ஒரு சவாரி போய் வந்துவிட முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். ‘வண்டிய வேற சும்மா போட்டு வந்துகிது, கால நேரம்…’ முனகிக்கொண்டான்.

‘தம்பி!’ என்று யாரோ அழைப்பது பின்னாலிருந்து கேட்டது. அவனுக்குப் பழக்கமான குரல். திரும்பினான்.

திருவொற்றியூரில் அவன் குடியிருக்கிற பகுதியில் மூணாவது வீட்டில் எரு முட்டை தட்டி வியாபாரம் பண்ணுகிற அம்மாள். கண் கலங்க நின்றுகொண்டிருந்தாள்.

ஆச்சர்யத்தோடு ‘என்னங்க?’ என்றான். ‘நீங்க எங்க இங்கே?’ என்ற கேள்வி அவன் கண்களில் வெளிப்பட்டது.

‘உனக்குத் தெரியாதாப்பா.. எம் பையன கூடம் புடிச்சி போட்டுக்னு வந்துட்டாங்க…’ சொல்லும்போதே அவள் அழுதாள். அழக்கூடாது என்று அவள் நினைத்திருந்தாலும் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. உடம்பு நடுங்கியது.

‘உங்க பையன கூடமா!’ என்றான் அவன். அவனுக்கு ஏதோ கொஞ்சம் தெரியும்.

ரெண்டு வாரம் முந்தி இருள் கவிந்த ஒரு இராத்திரியில் போலீஸ் வேன் ஒன்று வந்தது. ரயில்வே குவார்ட்டர்ஸ் பக்கம் ஸ்லீப்பர் கட்டைகள் எதுவோ திருடு போய்விட்டதாம். கிளப்பிக்கொண்டு போன ஆட்கள் இந்தப் பக்கமாகத்தான் ஓடி வந்தார்கள் என்று அங்கே கிடந்த நாலைந்து பேரைத் தூக்கி வேனில் போட்டுக்கொண்டு போய்விட்டார்கள். ‘ஆனா இவங்க பையனக் கூடமா…தனக்குத் தெரியாதே!… நல்ல பையனாச்சே. எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போவ மாட்டானே… சாதாரணாய் மத்த வயசுப் பசங்கள் மாதிரி கிதாப்பாகக்கூட பேச மாட்டானே… அவனையா…’ என்று நினைத்தான்.

‘எனக்கு தெரியாதுங்க. இப்ப நீங்க சொல்லித்தான் தெரியுது.’

‘ஆமாம்பா…’ என்று ஆற்றமாட்டாமல் தலையை ஆட்டினாள் அவள். வறண்டு உலர்ந்த முகத்தில் துயரம் தொண்டையை இறுக்குவது பிரதிபலித்தது. கரகரத்த குரலில் ‘இன்னைக்கு விசாரணை…’ என்றாள். ‘என்னா ஆவுமோ… எனக்கு பயமா இருக்குது. ஆரு இருக்கிறா நமக்கு…’

அந்த அம்மாளை அந்தக் கோலத்தில் பார்க்க அவனுக்கு எப்படியோ இருந்தது. பாவம் இவளுக்கா இப்படி ஒரு நிலைமை வர வேண்டும்! அந்தக் குடும்பத்தைப் பற்றி அவனுக்குத் தெரியும். தந்தையில்லாத குடும்பம் அது. எரு முட்டை தட்டி விற்றுவருகிற வருமானம்தான் சாப்பாட்டுக்கு. கஷ்ட ஜீவனம். பையன் அன்றாடக் கூலிக்குப் போனான். ஆனால் தினத்துக்கும் வேலை கிடைக்காது. கம்பெனி வாயிலில் போய் கால் கடுக்க பத்து நாளைக்கு நின்றுகொண்டிருந்தால் ரெண்டு நாளைக்குக் கிடைக்கும். அப்புறம் பத்து நாளைக்குக் கிடைக்காது.

அவனுக்குச் சின்னது ரெண்டு பெண் குழந்தைகளும், ஒரு பையனும். எல்லாம் சின்னதுகள். விவரம் தெரியாததுகள். பெரியவள் மட்டும் கொஞ்சம் துடிக்க இருப்பாள். யார் வீட்டிலாவது ஏனபானம் துலக்க, தண்ணி மொண்டு ஊற்ற என்று கூப்பிட்டால் போய் சொன்ன வேலையைச் செய்துவிட்டு கிண்ணத்தில் சோறு வாங்கி வருவாள். மற்ற நேரங்களில் தாய்க்கு ஒத்தாசையாக சாணி மெறிப்பாள். வைக்கோல் கூளம் பொறுக்குவாள். அந்த அம்மாளாகட்டும், ஒரு நாளைக்காவது வம்புதும்புக்குப் போயோ சத்தம் போட்டுப் பேசியோ பார்த்ததில்லை அவன். இரவிக்கை போடாத நொடிந்த தேகத்தில் ஒரு சாயம் போன கிழிசலை சுற்றிக்கொண்டு தலைக்கு எண்ணெய்கூட இல்லாமல் போன புருஷனை நினைத்தோ, இந்தப் புள்ளைகளின் எதிர்காலம் எப்படி ஆவுமோ என்றோ எப்போதும் விசனந் தோய்ந்தவளாகக் காட்சியளிப்பாள்.

அதைவிடக் கொடூரமாக இருந்தது இப்போது அவளைப் பார்ப்பதற்கு. ‘எப்படிங்க புடிச்சாங்க? எனக்கு எதுவும் பூரா தெரியாதுங்களே’ என்றான் அவன். அப்படித் தெரிந்து கொள்ளாமலிருந்ததற்கு துக்கமடைபவன் போல விசனத்துடன் இருந்தது அவன் குரல்.

அவள் நீர் வழிந்த, ஒட்டிப்போன கன்னங்களை முந்தானையால் துடைத்துக்கொண்டு, தொளை அடைந்துபோன மூக்கை உறிஞ்சினாள். அவளைப் பார்க்காமலிருக்க அவன் பிரயாசை செய்தான். எங்கோ பார்த்தான். வராந்தாவிலும், மரத்து நிழலிலும் கும்பல் அதிகரித்திருந்தது. நிழல் சோம்பியிருந்தது. காரணம் புரியாத வருத்தம் எங்கும் நிறைந்திருப்பது போலவும் எதுவோ பெரிசான நிகழ்வை எதிர்கொள்ள உலகம் காத்துக் கிடப்பது போலவும் ஒரு வறட்சியான அமைதி நிலவியது.

அவள் சொன்னாள், “அன்னைக்கி ராத்திரி எப்பவும்போல நான் சாப்டுட்டு புள்ளைங்களோட உள்ள படுத்துக்னனா… இவன் வழக்கமா படுக்கறா மாதிரி திண்ணையில படுத்துக்னுகிறான். கூட அந்த கோபாலு, முனுசாமி அந்த புள்ளைங்கல்லாம்கூட திண்ணையிலதான் பேச்சோட தொணையா படுத்துக்கினு இருந்துருக்குதுங்க. ரெண்டாவது ஆட்டம் முடிஞ்சி கொஞ்ச நேரம் கழிச்சி, சர்ருன்னு லைட்ட போட்டுக்குக்னு போலீஸ் லாரி வந்து வூட்டு எதுருக்க நின்னு இருக்குது. ரெண்டு மூன்று போலீஸ்காருங்க எறங்கி வந்து ‘டாய் எழுந்திரிங்கடா’ன்னு அடிச்சி எழுப்பியிருக்காங்க. இதுங்க அலறி அடிச்சிக்னு எழுந்திருச்சிருக்குதுங்க. புடிச்சி நெட்டித்தள்ளி ‘திருட்டுக் கழுதைங்களா வண்டில ஏறுங்கடான்’னு சொல்லி துராகரம் பண்ணி யிருக்காங்க. இதுங்க எதுக்கு சார், என்னத்துக்கு சார், நாங்க ஒரு தப்பும் பண்ணலியே, பேசாமதான் தூங்கினு இருந்தம்ன்னதுக்கு ‘யாருகிட்ட கத அடிக்கறீங்க? மரியாதை ஏறுங்கடா வண்டிலன்னு’ சொல்லி அடிச்சி இழுத்துப் போயிருக்காங்க.

“ரயில்வே டேஷன்ல திருடிக்னு வந்தவங்க இந்தப் பக்கமாதான் ஓடியாந்தாங்களாம். இவனுங்கதான் திருடிக்னு வந்து ஒண்ணுந் தெரியாத மாதிரி படுத்துக்னு இருக்கானுங்கண்ணு இவனுங்கள அடிச்சி அதாகுதம் பண்ணியிருக்காங்க. ‘இல்ல சார், இது எங்க ஊடு சார். நாங்க எப்பவும் இங்கதான் சார் படுக்கறது. சத்தியமா எங்களுக்கு எதுவுமே தெரியாது சார். இந்தப் பக்கமாவும் ஆரும் ஓடியாரல்ல சார்’ன்னு அதுங்க எவ்வளவோ சொல்லிப் பாத்து இருக்குதுங்க. வுடல, அப்புறம் கதவ இடிக்க, அலறி அடிச்சின்னு நான் வெளிய வந்து பார்த்தா எனக்கு ஒண்ணும் புரியல. போலீஸ்காருங்க கைல தடி வச்சிக்னு நிக்கறாங்க. போலீஸ் லாரி நிக்கிது. எப்படி தம்பி இருக்கும்… நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்… நான் அவன் அம்மாங்க, எம் புள்ளதாங்க அவன். அதுங்க பக்கத்து வூட்டுப் புள்ளைங்க… எதுவும் அந்த மாரி செய்யாதுங்க. சந்தேகமாருந்தா அதுங்க வூட்டுலல்லாம் கூடம் எழுப்பி சொல்லச் சொல்றங்க… அப்பிடீன்னு எவ்வளவோ அழுது… காலுல கூடம் வுழுந்து கும்புட்டம்பா. ஐயா நாங்க நாங்கன்னு… அவங்க எதுவும் கேக்காம அந்தப் புள்ளைங்க வூட்ட கூடம் எழுப்பிக் கேக்காம எல்லாம் அங்க வந்து பேசிக்கோன்னு தூக்கிப் போட்டுக்னு வந்துட்டாங்க. குய்யோ மொறையோன்னு நான் அழ உள்ள படுத்துருந்த புள்ளைங்க எழுந்துக்னு அண்ணா… அண்ணா… ன்னு அதுங்க ஒரு பக்கம் அழ…

“அன்னைக்கி ராத்திரி பூரா ஆரு தூங்கனா… பாவிங்க எதியிமே காதுல வாங்கிக்காம வந்துட்டாங்க. பொழுது விடிஞ்சி நம்ப மாரிமுத்து மேஸ்திரி இல்ல, அவர் போய் ஜாமீன்ல இட்டும் வர்ரதுக்கு கேட்டதுக்குகூடம் வுடமாட்டன்னீட்டாங்களாம்… ஜாமீனுல வுடற கேசு இல்லியாம் இதல்லாம்… ஏம்பா… ஒனக்குத் தெரியாதா… அவனாப்பா அந்த மாரி தொழிலுக்கல்லாம் போறவன். அந்த மாதிரி ஆளுன்னு தெரிஞ்சாகூடம் சாவற வரிக்கும் அவங்களோட சவகாசம் வக்ய மாட்டானே அவன். அந்த மாதிரி புள்ளைவள புடிச்சி கேஸ் போட்டுட்டு அன்னைக்கி ஆளுக்கு ரெண்டாயிரம் எடுத்தாந்துருங்க கேஸ் இல்லாம உட்டுடலாம்னு சொல்லியிருக்கிறாங்க சில போலீஸ்காரங்க. நம்பள மாதிரி இருக்கறவங்கல்லாம் எங்கருந்துபா போறது திடீர்னு ரெண்டாயிரத்துக்கு.”

கோர்ட் உள்ளில் கூட்டம் அதிகமாகியது. பெஞ்சில் நிறைய பேர் உட்கார்ந்து கசமுசத்தார்கள். கூண்டுகள் காலியாக நின்றன. திடீரென பேச்சு தடைப்படுவதை உணர்ந்து அவள் பக்கம் திரும்பினான். அவள் கண்களிலிருந்து மளமளவென்று பெருகியது. அவன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டான். ‘நல்லவர்களுக்கெல்லாம் இப்படி வந்து நேர வேண்டுமென்று எங்கேதான் எழுதி வைத்திருக்கிறதோ’ என்று நினைத்தான்.

‘நான் எவ்வளவோ தூரம் சொன்னம்பா அழுது பொரண்டு பொலம்பி. கல் நெஞ்சக்காரங்களுக்கூடம் மனசு எளவிட்டிருக்கும். ஆனா அவங்க எளவவேயில்ல..’ அழுகைக்கிடையே சொன்னாள், ‘அவன் இல்லாம வூடு எப்படி கிது தெரியுமா. பசங்க எல்லாம் அண்ணனை எங்கமா காணம், அண்ணன ஏம்மா புடிச்சிக்னு போனாங்க, எப்பமா வுடுவாங்கன்னு ஆளுக்கு ஒண்ணா கேக்குதுங்க… நான் அதுங்களுக்கு என்னான்னுபா பதுல் சொல்றது…’

அதற்கு மேல் அவளால் பேச முடியாது என்பதை உணர்ந்த அவன் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினான். அந்த அம்மாள் முந்தானையால் வாயை அமுத்தியிருந்தாள். வெறுமையோடிய கழுத்தில் மார்பு எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. மூச்சு இழுத்து வாங்கியது. எவ்வளவு பூஞ்சையான மனசு அவளுக்கு. பெத்த பாசம். எந்த அளவுக்கு தன்னால் அதை உணர முடியும் என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

எதுவும் பேசாது மௌனமாக இருந்தான். மனம் இறுகிப்போய் உணர்ச்சியற்று எதையும் ஏற்க இயலாததைப் போல இருந்தது. அந்த அம்மாள் கண்களை ஒற்றிக்கொண்டு கேட்டாள். ‘ஏம்பா, பத்து மணிக்குதான கோர்ட்டு?’

‘ஆமா…!’

‘இப்ப பையன பாக்க முடியாதா… போலீஸ்காரங்களுக்கு துட்டு குடுத்தினா பாக்க வுடுவாங்க. எதுனா நாஸ்தா கீஸ்தா வாங்கிப் போய் குடுக்கலாம்னு சொன்னாரு நம்ம மேஸ்திரி. நாஸ்தா கூடம் எடுத்தாந்து இருக்கேன்.’ அவள் இடது அக்குளில் முந்தானையால் மூடிச் சுருட்டி வைத்திருந்த அழுக்குப் பையைக் காட்டினாள். ‘யாருன்னா ஒனக்குத் தெரியுமா பாரேன். அரிசி உண்டன்னா ஆசை ஆசையா துன்னுவாம்பா அவன். செகதலா பாட்டிகிட்ட வாங்கறது’. அவள் கண்களில் கொஞ்சம் பிரகாசம் வெளிப்பட்டது. பிறகு பழையபடியே சோகம் ததும்பும் குரலில், ‘பத்து நாளு… புள்ள என்னாத்த சாப்பிடுதோ என்னுமாயிருக்குதோ…’ என்று ஏங்கினாள்.

அவன் கொஞ்சம் யோசித்தான். பிறகு அவளுக்கு நம்பிக்கையூட்டும் குரலில், ‘இருங்க, தோ வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்தான். அங்கிருக்கிற கான்ஸ்டபிள்களில் ஒருவனை விசாரித்தான்.

‘அக்யூஸ்டயெல்லாம் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல கொண்டுக்னு வருவாங்க. அப்ப பாக்கலாம்.’

பத்து நிமிஷம் சோகத்திலேயே ஊறி உறைந்தது.

எங்கோ லாக்-அப்பின் கனத்த பூட்டுகள் திறக்கும் ஓசை கேட்டது. கம்பிக் கதவுகள் கிரீச்சிட்டன. பூட்ஸுகள் ஒலியெழுப்புதலின் சப்தம் தொடர்ந்தது. ரெண்டு பக்கமும் தோளில் சாற்றிய துப்பாக்கிகளுடன் மர்டர் கேசுகளும் கொள்ளைகளும் நடுவே வருகின்றன. பின்னால் தெஃப்டு கேஸ். சொக்காயில்லாத உடம்புகள் சோமன், ஆஃப் டிரௌசர். வயது வித்தியாசம் பார்க்காமல், இணை இணையாய்ப் பிணைத்து, கைதிகள் வரிசையாக அழைத்து வரப்படுகிறார்கள். கோர்ட் உள்ளில் நீள வாட்டமாய் இருக்கும் தரையோடு கட்டிய கைதிக் கூண்டுகளில் அமர்த்தப்படுகிறார்கள்.

தாயின் கண்கள் ஆவலோடு நோக்குகின்றன. சுவர் ஓரம் சாய்ந்து நின்று வரிசைக்குப் பின்னால், பார்வையைத் தாவ விடுகிறாள்.

‘அதோ… நம்ப பசங்க வர்றாங்க’, அவள் ஆவலை அடக்க மாட்டாமல் சொன்னாள்.

அவளுக்குப் பீறிக்கொண்டு வந்தது. அண்டை வீட்டுப் பசங்கள் ரெண்டு பேரும் ஒரு பிணை; பின்னால் அவளோட மகனும் யாரோ முகந் தெரியாத ஆளும் ஒரு பிணை. அவன் வத்தலாய் உலர்ந்து சொரத்து இல்லாதவனைப் போல், யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் கூசியவனாய் விலங்கோடு, இடதுகையில் இரும்பு விலங்கோடு இன்னொருவனுக்கு ஈடுகட்டி நடந்து வந்துகொண்டிருக்கிறான். அம்மா அவனைப் பார்க்கிறாள். பக்கத்திலேயேதான் அவனை அழைத்துப் போகிறார்கள்.

‘தம்பீ…’-அவள்.

மகன் நிமிர்கிறான். பிசுபிசுத்து இருண்ட முகம் மேலும் இருள்கிறது. அதிர்ச்சியடைந்தவனைப் போலப் பார்க்கிறான். முகத்தில் குழப்பம் கவ்வுகிறது. முன்னே இழுக்கும் கரத்தைத் தொடர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போய் உள்ளே மறைகிறான்.

தாய் சுவர்ப் பக்கம் திரும்பிக்கொண்டு குனிந்தாள். விலங்கிடப்பட்ட மகன் தன் தாயைப் பார்க்கிற கோலமும், தன் மகன் விலங்கிடப்பட்டிருப்பதை தாய் பார்க்கிற கோலமும் எப்படியிருக்கும் என்று அவன் இதற்குமுன் அறிந்ததில்லை.

அவன் குற்றவாளிகளுக்குக் காவலாக வந்த கான்ஸ்டபிள்களின் பின்னாலேயே நடந்தான். அவனைத் தனியே அழைத்துப் பேசி பாக்கெட்டில் கைவிட்டுத் தள்ள வேண்டியதைத் தள்ளி தெம்போடு தாயின் அருகில் வந்தான்.

‘சொல்லியிருக்கறேன். இதோ இப்ப வுடுவாங்க…’

தாய் வாசற்படியைப் பார்த்தாள். கொஞ்ச நேரத்தில் பையன் போலீஸ் பாதுகாப்போடு வெளியே வந்தான். கையில் விலங்கில்லா விட்டாலும் போலீஸ்காரன் கை விலங்காய்ப் பிடித்திருந்தது.

அவளுடைய கண்கள் வெளிச்சம் கொண்டன. கூடவே ஆற்றமாட்டாமையும் துயரமும் பொங்கின. அவள் பேசவில்லை. எல்லாவற்றுக்கும் அழுகையே மிஞ்ச அவள் அடக்கமாட்டாமல் குமுறினாள். பையனை வாஞ்சையோடு தோளைப் பிடித்துத் தடவி அணைத்து வராந்தா ஓரம் அழைத்துச் சென்றாள்.

‘வுடுங்க சார். எங்கியும் ஓடிட மாட்டான். நாங்கல்லாம் இல்ல…’ என்று சொன்ன பிறகு போலீஸ்காரன் கொஞ்சம் பிடியை நழுவவிட்டு ஓரமாய் ஒதுங்கினான்.

தாயும் மகனும் சில அடிக்கு அப்பால் தனியே குந்தினார்கள். தாய் தலையை வருடி, தோளை வருடி பையிலிருந்ததை எடுத்து அவனிடத்திலே கொடுத்துவிட்டு குமுறிக் குமுறி அழுதாள். பையன் கண்களில் நீர் தேங்கிக் கொட்டியது.

அவன் தூர நின்று பார்த்தான். கான்ஸ்டபிளிடம் ‘இது ரொம்ப அக்ரமம் சார்’ என்றான்.

‘நீங்க அங்கியே சரிக்கட்டிட்டு இருக்கணும், புடிக்கும்போதே… இனிமே என்ன பண்ண முடியும்?…’

‘ஏன் முடியாது? கேஸ் ப்ரூவ் ஆவ வேணாமா…!’

‘அவங்க ப்ரூவ் பண்ணிக்குவாங்க. ப்ரூவ் ஆவலண்ணா தள்ளுபடி பண்ணிடுவாங்க. எப்பிடிப் பாத்தாலும் அதுவரிக்கும உள்ளதான் இருக்கணம். வெளியே வுடமாட்டாங்க. என்னா பண்றது… பையன் நல்லவனா கூடம் இருக்கலாம். ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்குதே… ஆப்டான்னா ஆப்டதுதான்… என்னா ஒரு மூணு வருஷம் போடுவாங்க.’

அவன் அந்தக் கான்ஸ்டபிளை வெறுப்போடு பார்த்தான். மூணு வருஷம், அஞ்சி வருஷம்… தொழில்ரீதியில் வேண்டுமானால் அவருக்குப் பழக்கப்பட்டுபோய் ரொம்ப சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் அந்தத் தாய்க்கு…

‘இந்த மாதிரி அப்பாவிங்களுக்கு விமோசனமே கெடையாதா’ என்றான்.

‘வேணும்னா ஒரு நல்ல வக்கீலா பாத்து ஜாமின் எடுத்துக்னு வழக்காடி வேணா ஜெயிக்கலாம்’ என்றான் போலீஸ்காரன்.

அவன் தாய் பக்கமாகத் திரும்பினான். தாய் பலகாரப் பொட்டலத்தை அவன் மடியில் வைத்து எதிரே குத்துக்காலிட்டு குந்தியிருந்தாள். பையன் தானாக எடுத்துச் சாப்பிடவில்லை. பொட்டலத்திலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவன் கைகளில் வைத்து அழுத்த, நேரம் போதாத அவசரத்தோடு அவன் பரிதாபகரமாக கொமுக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவசரத்தோடும் ஆவேசத்தோடும் உள்ளே முழுங்கிக்கொண்டிருந்தான்.

‘சீக்கிரம் ஆவட்டும். ஜட்ஜு வந்துருவாரு’ என்ற கான்ஸ்ட பிளின் அதட்டல் பையனை மேலும் திணற வைத்தது. கண்கள் பிதுங்கிக் கலங்கின.

நின்று நிதானமாய், பிரியமாய் ஆற அமரக்கூட சாப்பிட முடியாமல் அரக்கப்பரக்கத் தின்னும் மகனைக் காணச் சகியாமல் தாய் பார்த்துப் பார்த்துப் பொருமினாள். வாஞ்சையை மீறிய ஆற்றாமை அவள் கண்களில் நீரைப் பெருகியிருக்கலாம். அவள் அழுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. அவனும் வாயில் நிறைந்த அரிசி உண்டையோடு அழுதான்.

சட்டென்று ஒரே நிசப்தம். சகல சத்தங்களும் ஸ்தம்பித்தன. கோர்ட் சேவகன் கட்டியம் கூறி பாரா கொடுக்க, உள்ளே ஜட்ஜ் வந்து ஆசனத்தில் அமர்கிறார்.

‘என்னாமா… இன்னுமா? ஜட்ஜ் ஐயா வந்துட்டாரு!’

‘இருக்கட்டும் சார். இந்த கேஸெல்லாம் கடசீலேதான விசாரிப்பாங்க. அதுக்குள்ள ஏன் அவரசப்படுத்தறீங்க’. துட்டு குடுத்த தெம்பில் கொஞ்சம் உரிமையோட கேட்டுக்கொண்டான் அவன்.

‘போதுமாடா… இன்னும் ஒண்ணு, ஒண்ணே ஒண்ணு, தோ இது மட்டும்…’ தாய் மகனின் தலையை ஒரு கையால் பிடித்து பொட்டலத்திலிருந்து எடுத்து வாயிலேயே ஊட்டப் போகிறாள். பையன் தடுத்து முடியாது என்று திணறித் தலையை ஆட்டுகிறான். தாய் கான்ஸ்டபிளுக்காக தலையை நிமிர்த்தி, ‘கொஞ்சம் இருங்க ஐயா! ஒரு டீ குடிச்சிடட்டும். ஏம் தம்பி ஒரு டீ… வேணா கொஞ்சம் பாத்துக்கிறீங்களா? நான் போய் ஒரு டீ வாங்கியாந்துறேன்…’

இவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. அந்தக் கொஞ்ச நேர சந்திப்பிலும் ஒரு இடைவெட்டு விழ விரும்பாத அவன், ‘நீங்க இங்கியே இருங்கம்மா… நான் போய் வாங்கியாந்துடறேன். இங்க எதிர்க்கதான் இருக்குது கட. வேற எதுனா வேணுமா?’ என்று கேட்டபடியே வெளியே புறப்பட்டான்.

திரும்பி வரும்போது அவன் டீ க்ளாசுடன் கொஞ்சம் தின்பண்டங்களோடும் வந்தான்.

‘நீ மகராசனாயிருப்பப்பா’ என்று சொல்லும் தாயின் கலங்கிய கண்களைக் காண இவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு கர்சீப்பை எடுத்தான். கோர்ட் சேவகன் உள்ளே இவன் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது. ‘காளிதாசன்… காளிதாசன்…’