Editor’s Picks

0 comment

1

ஆண்டன் செகாவ் தனது நாற்பத்து நான்காவது வயதில் காச நோயால் இறந்த போது அறுநூற்று சொச்சம் சிறுகதைகளை எழுதி வெளியிட்டிருந்தார். தொடக்க காலத்தில் நகைச்சுவைத் துணுக்குகளை மட்டுமே பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தவர், தனது இருபத்து ஆறாவது வயதிற்குள்ளாகவே நானூறு கதைகளை எழுதிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பெருநகரத்தின் காதலற்ற மனிதர்களும் பணக்காரச் சீமாட்டிகளும் ஏமாற்றுக்காரர்களுமே அவரது பிரதான கதாபாத்திரங்கள். நுண் சித்தரிப்புகள் ஊடாக நம்பகத்தன்மை மிகுந்த புறச்சூழலை உருவாக்கி அதில் கதை மாந்தர்களின் மனவோட்டங்களை வலிந்து திணிக்காமல் கூர்ந்து அவதானித்தபடியே மானுடத்தின் மகத்தான அகத்தேடலை நிகழ்த்துகிறார். மானுட இயல்பை ஆராய்வது குறித்த செகாவின் மாளாத தாகமே அவர் எட்டாயிரம் கதாபாத்திரங்களைப் படைக்க உந்துசக்தியாக இருந்திருக்கிறது.

செகாவ் கதைகளின் சிறப்பம்சமே அவற்றின் கட்டுமானம்தான். இவான் துர்கனேவ் கோலோச்சிய காலகட்டத்தில் எழுதத் துவங்கிய செகாவ், அதுகாறும் நிலவி வந்த மரபான கூறுமுறைகளைப் புறந்தள்ளினார். கட்டமைப்பைத் திருத்தி எழுதினார். கதையடுக்குகளின் சமநிலைகளைக் குலைத்தார். சிக்கல்களைத் தோற்றுவித்து, அவை இட்டுச் செல்லும் அதிதீவிர கணங்களினால் உருப்பெற்று, தன் போக்கில் திரண்டெழுவதே அவர் கதாபாத்திரங்களின் மைய இயல்பு. உணர்ச்சியற்ற நடையில் வாழ்வை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் நம்பிக்கையின்மையின் கவிஞனான செகாவ், மனித மனத்தை குறிப்பிட்ட வரையறைக்குள் வகுத்துவிட இயலாத முடிவுறா தன்மையையும் அறிந்தவராவார். மருத்துவர் செகாவ், ஓர் எழுத்தாளனாக, மனிதர்களின் நம்பிக்கைச் சுடரை ஒரு கேலிப் புன்னகையுடன் மென்மையாக அணைத்துவிடுகிறார்.

யதார்த்தை மீறி செகாவ் எதையுமே எழுதுவதில்லை. ஒரு புகைப்படக் கலைஞனைப் போல நிதர்சனத்தைப் பதிவு செய்வதை மட்டுமே கால் நூற்றாண்டாக தலையாயப் பணியாகக் கொண்டிருந்தார். வாசகனைப் புன்னைகைக்க வைக்கும் புகைப்படக் கலைஞன். சூழ்நிலைகளின் சூத்ரதாரி. 1890கள் வரை நையாண்டிக் கதைகளையே பிரதானமாக எழுதியவர். பின்னர், அவற்றில் இருந்து விடுபட்டு விதியின் குரூரக் கைகளில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும் கதை மாந்தர்களை உடைய நாடகங்களையும் சிறுகதைகளையும் படைத்தார். ஒற்றைப் புள்ளியில் உச்சம் கொள்ளும் – இருவேறு யதார்த்தங்கள் மோதுகையில் நிகழும் நகைமுரணை வெற்றிகரமாகக் கையாண்டார். 1900க்குப் பிறகு எழுதப்பட்ட செகாவின் அந்திமக்கால சிறுகதைகள் அத்தனையும் ஓர் உச்ச கணத்தில் சட்டென்று முடிவுறும் இசைக்கோர்வையைப் போலவே நிறைவுறுகின்றன.

செகாவின் பெரும்பாலான கதைகளை இரு வகையான கூறுமுறைகளுக்குள் வகைப்படுத்திவிடலாம். ஒன்று – புறச்சூழ்நிலைகளின் பாதிப்பினால் எவ்வித மெனக்கெடலுமின்றி உருவாகும் சமூகக் காரணிகளை எள்ளல் வழியாகவும் கசப்புணர்வின் வழியாகவும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்வது. மற்றொன்று – மனிதனின் அடிப்படை இயல்புகளாக சமூகம் கருதுபவற்றை புறச்சூழலில் பொருத்தி அந்த எளிய மனிதர்களின் எதிர்வினையை ஓர் உளவியல் நிபுணனுக்குரிய நேர்த்தியுடன் பதிவு செய்வது.

கதாபாத்திரங்களின் வெவ்வேறு மனநிலைகளைச் சித்தரிப்பதில் மேதையான செகாவ் ஒரு தேர்ந்த ஆய்வாளனாக மனச்சிடுக்குகளின் ஆழம் வரை ஊடுருவி அதன் ஊடுபாவானைகளைத் துல்லியமாக வெளிக்கொணர்கிறார். ‘ஓர் எழுத்தாளனின் பணி தீர்வுகளை முன்வைப்பதல்ல. கேள்விகளை எழுப்புவது மட்டுமே’ என்று கூறும் செகாவ் மனத்துள் கனிந்து மலர்ந்தவராகிறார்.

தீர்க்கதரிசிகளாக அறியப்பட்ட தல்ஸ்தோயும் தாஸ்தாயேவ்ஸ்கியும் மனித குலத்தின் வீழ்ச்சியை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது செகாவ் மனித வாழ்வின் அபத்தங்களைச் சுட்டிக்காட்டினார். நீதி போதனைக் கதைகளால் சலிப்புற்றுத் தேங்கிக் கிடந்த ருஷ்யக் குட்டையில் கல்லெறிந்தார். வரலாற்றின் புழுதிப் பக்கங்களில் பிறர் உழன்று கொண்டிருக்கையில் தனி மனிதனை முன் நிறுத்தும் மென்சோகக் கதைகளாக எழுதிக் குவித்தார். தல்ஸ்தோய் மனிதர்கள் மீது பெரும்நம்பிக்கை உடையவராக இருக்கிறார். செகாவ் சந்தேகிக்கிறார். வாழ்க்கை என்பது கடவுள் தன்மையற்ற அவிழ்க்கவியலாத மர்ம முடிச்சுகளைக் கொண்டதாக உணர்கிறார். ஒருவன் நல்லவனாக வாழ்வதால் மட்டுமே துன்பங்களில் இருந்தும் அவனுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்தும் தப்பிவிட முடியாது என்கிறார். அதே சமயம் சராசரிகளை நேரடியான மொழியில் அங்கதச்சுவையுடன் சாடுகிறார்.

சலிப்பும் தனிமையும்தான் செகாவ் கதைகளின் ஆதாரப்புள்ளி. மரணம் கூட அபத்தமான ஒன்றாகவே சித்தரிக்கப்படுகிறது. அவரவர் இயலாமையின் மீதான சலிப்பு. பகட்டாகவும் பொய்யாகவும் நடிக்க வேண்டியதன் கழிவிரக்கம். அவநம்பிக்கை மீது கட்டி எழுப்பப்பட்ட உறவுகளின் புறக்கணிப்பு. அடையாளமின்மை தரும் சோர்வு. தினசரி வாழ்வின் மீது செகாவ் உருவாக்கும் குவிமையம் அபாரமானது. அவர் தனது கதைகளில் குரலை உயர்த்துவதே இல்லை. பெண்களின் அக உணர்வுகளை தல்ஸ்தோயைக் காட்டிலும் மேலதிகமாக விவரித்திருக்கும் செகாவ், அடங்கிய குரலிலேயே ஒரு சொல் கூட வீணடிக்காது மனத்தை அவதானிக்கிறார். நாய்க்காரச் சீமாட்டி, பச்சோந்தி உள்ளிட்ட செகாவின் புகழ்பெற்ற பல கதைகளில் பல்வேறு வகையான நாய்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. அவை கவ்விச் செல்லும் எலும்புத் துண்டுகள் கூட மனிதனை பொறாமை கொள்ளச் செய்கின்றன. தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விசுவாசச் சுமையை உதறிவிட்டு வன்மத்தில் இளைப்பாறுகின்றன. தன்னை அறிந்துவிட்ட ருசியில் திளைக்கின்றன.

செகாவின் கதாபாத்திரங்கள் பெருங்குற்றவாளிகள் அல்ல. பதற்ற சூழ்நிலைகளின் விளைவால் தடுமாறுபவர்கள். கஞ்சத்தனம் உடையவர்கள். சின்னப் பொய் ஒன்றைச் சொல்லியதற்கு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள். உயரதிகாரியின் முதுகில் தும்மியதற்கே இன்னுயிரை இழப்பவர்கள். உணர்சிகரமான மனிதர்கள். ‘எல்லாம் தனக்கு எதிரானதாகாவே இருக்கின்றன’ எனப் புலம்புபவர்கள். தற்கொலை செய்து கொள்ளச் சென்றவன் காப்பாற்றப்பட்டு கூட்டத்தால் அடித்தே கொல்லப்படுகிறான். இளம் பெண்கள் சொற்ப விலைக்கு சந்தையில் விற்கப்படுகிறார்கள். குடிகாரர்கள் தங்களது அடுத்த மதுக் கோப்பையைப் பருக இயலாது சரிந்து விழுகையில் பரிகாசம் செய்யப்படுகிறார்கள். ஜார் ஆட்சியில் ஜமீன்தார்களின் அதிகாராமும் பண பலமும் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. செகாவின் கதைகளில் காதலிப்பவர் அனைவரும் திருப்தியற்றே அலைகிறார்கள். இளம் பருவத்துக் காதலை அபத்தமானதாக உணர்பவர்கள். காதலர்கள் சூழ்நிலைகள் காரணமாக பிரிய நேர்கிறது அல்லது அக்காதல் திருமணத்தில் முடிந்து காதலின் மயக்கம் அறுந்து கசக்கிறது. விரக்தி அடையச் செய்கிறது.

செகாவ் தனது கதாபாத்திரங்களை கருணையுடன் அணுகுகிறார். அவர்கள் மீது பச்சாதாபமும் பிரியமும் கொள்கிறார். ‘நண்பர்களே, இப்படி வாழ்வது அவமானகரமானது’ என உண்மையான அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறார். தனது கதை மாந்தர்கள் மீது செகாவ் எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைப்பது இல்லை. ‘அன்ன கரினீனா’வில் அவளது தவறுக்காக அன்னாவை தண்டிக்கும் தல்ஸ்தோய் போலல்லாது The Lady With A Dog சிறுகதையில் ‘தனது’ அன்னாவை செகாவ் கனிவுடனேயே கடக்கிறார். அவரது கதாபாத்திரங்கள் எவருமே எத்தகைய சூழ்நிலைகளிலும் தத்தம் குணாதிசியங்களை மாற்றிக் கொள்வதேயில்லை. சூழ்நிலைக்குத் தக்க செயல்களை மட்டும் நிகழ்த்தி விட்டு அச்சூழ்நிலை வேண்டுகிற அக மாற்றங்களை கவனமாக தவிர்த்து விடுகிறார்கள். இறுதிவரைக்குமே எவரும் திருந்தி பண்படுவதில்லை. வாழ்க்கை அவர்கள் மூலமாக பெரும் மாற்றங்கள் ஏதுமின்றி வெறுமனே கடக்கிறது.

செகாவின் சமகால சிறுகதை ஆசிரியரான மாப்பசான் புறக்கட்டுமானத்தில் வல்லவராக விளங்கினார். ஆனால் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை, போர்ச் சூழலில் கூட , வகுப்பதில் பகுத்து ஆராய்வதில் மாப்பசானின் திறன் எல்லைக்குட்பட்டது. செகாவின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டவுடன் அவை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாது மொழியிலும் சிறுகதை வடிவத்திலும் அசாத்தியமான மாற்றங்களைத் தோற்றுவித்தன. அதுவரை பிரச்சனைகளை விவாதிக்கும் – அவற்றை தீர்க்கக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் ஆராயும் ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற அதிபுத்திசாலிகளையே விரும்பிய ஐரோப்பிய மனமானது செகாவின் எளிய அழுத்தமான கூறல்முறை கொண்ட, பிரச்சனைகளை பயத்துடனேயே அணுகும், அவற்றின் முன் மன்றாடும், தோற்றுப் போகும் சாதாரணர்களை வாரி அணைத்துக் கொண்டது.

ஜேம்ஸ் ஜாய்ஸும் ரேமண்ட் கார்வரும் ‘செகாவியர்கள்’. ஜாய்ஸினால் மனசாட்சி உத்வேகத்துடன் செயலாற்றும் தருணங்களை அதன் வெவ்வேறு பாவனைகளை கோடிட்டுக் காட்ட முடிகிறது. அதன் அடிநாதமாக விளங்கும் கண்ணுக்குப் புலப்படாத சிக்கல்களைத் துல்லியமாக விவரிப்பதில் ஜாய்ஸும் திகைத்து நின்றுவிடுகிறார். செகாவ் இதில் விற்பன்னர். கார்வரின் அனைத்து கதைகளும் ஏதேனும் ஒரு வகையில் செகாவிடமிருந்து கடன் பெறப்பட்டவையே. செகாவின்றி கேத்தரின் மேன்ஸ்பீல்டும் ஹெமிங்வேயும் தனித்து இயங்க முடியாது. தனது இறப்பிற்குப் பிறகும், உலக சிறுகதை இலக்கியத்தில் தீவிர பாதிப்பை செலுத்திய செகாவின் நிழலிலிருந்து விலகி, ஒரு புது அலையை கால்வினோவும் போர்ஹேஸும் உருவாக்க ஐம்பதாண்டு காலம் தேவைப்பட்டது.

செகாவின் கதைகளில் ஒரு வாசகன் தனது கற்பனையால் விரிவாக்கிக் கொள்ளத்தக்க தருணங்கள் மிகமிகக் குறைவே. பூடகமான மொழியையும் உள்ளடுக்குகளையும் உருவாக்க அவர் முனையவே இல்லை. ஆனால், மனதின் பிரம்மாண்டத்தை பறவைக் கோணத்தின் அவசரகதியில் அள்ளிவிடத் துடிக்கும் எழுத்தாளார்கள் நடுவே, நெரிசல் மிகுந்த தெருவில் நிதானமாக நடந்தபடியே அங்கே எதிர்ப்படும் மனிதர்களின் இயல்பை நுட்பமாக விவரிக்கிறார் செகாவ். கனவுகளுக்கும் நிஜ வாழ்வின் ஏக்கங்களுக்குமான மோதலையும் குரூரத்தன்மையையும் பிரதிபலிக்கிறார். உண்மையை எதிர்கொள்ள அஞ்சி கனவுகளையே உணவாக உட்கொள்பவர்களை திறந்த மனதுடன் அணுகுகிறார். ‘கும்பல் மனநிலையை’ பரிகசிக்கிறார். எத்தீர்வையும் முன்னிலைப்படுத்தாது மாந்தர்தம் அக உலகில் சடுதியில் நுழைந்து வெளியேறுகிறார். எளிமையாக வாழ்வதன் அவசியத்தையும் ஆன்மாவின் துயரத்தையும் உலக இலக்கியத்திற்கான கொடையாக விட்டுச்செல்கிறார்.

2

உயிரணுக்கள் கூட்டு சேர்ந்து உடல் உருவாவதைப் போல எண்ணங்களின் தொகுப்புதான் மனம். உண்மையும் கற்பனையும் கலந்தே அந்த மனம் செயல்படுகிறது. என் மனத்துள் நெய்யப்படும் அந்தக் கலவையின் விகிதாச்சாரம் மாறுபடுவதற்கேற்ப பிறர் பார்வையில் நான் படைப்பாளியாகவோ பைத்தியக்காரனாகவோ தென்படக்கூடும். கற்பனையின் எல்லையை வகுப்பது எப்படி? ஓர் எண்ணம் தோன்றும் போதே அதில் கொஞ்சம் கற்பனையையும் தன்னியல்பில் சேர்த்துவிடுகிறதே இந்த மனம்? அப்படியானால், என் உடல் மட்டுமே முற்றுணரப்பட்ட உண்மை. அந்த உண்மையிலிருந்து விலக யத்தனிப்பதே என் மனம். உடலை விழிப்புநிலையின் துயர் எனக் கொள்வோமானால் மனத்தை மயக்கநிலையின் அருள் எனலாம்.

என் கடந்தகாலம், என் உணர்ச்சிகள், என் விருப்பங்கள் போன்றவற்றின் அனுபவக் கணக்காகச் சிறைப்பட்டிருக்கும் மனத்தில் உருவாகும் கற்பனை என்பது வெறும் ஜோடனைதான். என் நினைவுகளிலும் அனுபவங்களிலும் உண்மையுடன் முயங்கியிருக்கும் கற்பிதங்களின் குறுக்கீட்டை விலக்கிப் பார்த்து பிரித்தறிய முடியாது எனும் பட்சத்தில் பொய்யாய் பழங்கதையாய் முடிந்துபோன உடலின் பயண ஏட்டில் புதிதாய் எதையுமே புகுத்த முடியாதே? என்னுடைய இன்றைய கற்பனை என்பது பழமையைப் புதுப்பித்தல்தானே ஒழிய புதுமையைச் சேகரம் செய்தல் அல்ல என்றாகி விடுகிறது.

பல வகையான பிம்பங்களைக் கட்டமைத்தும் ஒருங்கிணைத்தும் என்னைப் பற்றி பன்னெடுங்காலமாய் நினைத்துக்கொண்டிருப்பதையே நான் என்றென்றைக்கும் அசைபோட விரும்புகிறேன். அந்தச் சுகத்தின் இன்ப இலயிப்பில் ஒத்திசைந்து மயங்கிக் கிடக்கிறேன். கற்பனையின் புதுப்புது சாத்தியங்களைத் தளர்த்திக்கொண்டு பழக்கப்பட்ட பிரமையில் ஆழ்ந்திருப்பதும் குலாவுவதும் மூச்சுவிடுவது போல ஆகிவிட்டது. என்னைச் சுக்குநூறாக உடைத்து இத்தகைய மந்த நிலையிலிருந்து வெளியேற எனக்குத் தயக்கமாகவும் மலைப்பாகவும் இருக்கிறது. ஏனெனில், என்னுடைய பகற்கனவுகளுடன்தான் நான் வாழ்கிறேன். அவை என்னுடைய செல்லப் பிராணிகள். அவற்றின் மயிர் அடர்ந்த கழுத்துப் பகுதியை நான் சொரிந்து கொடுக்கிறேன். அவை சிணுங்கியும் முனகியும் என் முகமெங்கும் இதமாக நக்குகின்றன.

நம்முடைய பலவீனங்களின் பொருட்டு நாம் தவறவிட்ட பொக்கிஷத் தருணங்களெல்லாம் நம் மனத்தின் மூலையில் ஏக்கங்களாக படிந்திருக்கின்றன. பலவீனங்களை மீறிச்சென்று அந்தத் தருணங்களை – அவை நிகழ்ந்த போதே – தன்வசப்படுத்தியிருக்கச் சாத்தியமுள்ள வெவ்வேறு வழிகளை மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்து சமாதானமடைகிறோம். காலவோட்டத்தை வென்றுவிட்ட பாவனையில் களிப்புறுகிறோம். கற்பனையை நிஜத்துடன் குழப்பிக்கொண்டு எப்போது உளமாற நம்பத் தொடங்கினோம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மறந்துவிடுகிறது. சில சமயங்களில் அவை மாயை என அறிந்தே அவற்றிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். பொய்யைப் பொய்யென மறந்தபின்னர் அதுவொரு வலுவான பார்வையாக நிலைபெற்று புறக்காரணிகளுடன் தன்னைப் பொருத்திக்கொள்கிறது. நம்முள் இரண்டறக் கலக்கிறது. அதன்பிறகு, அதுவே நம்மை வளர்த்தெடுக்கிறது.

ஒரே விதமான கற்பனையை அல்லது ஒரே நிகழ்வை நாள்தோறும் மனத்தினுள் நிகழ்த்திப் பார்த்தாலும் அது சலிப்பதில்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஏனெனில், பல பத்தாண்டுகளானாலும் அந்தக் கற்பனையில் நமக்கு வயதாவதில்லை. நமது வசதிக்கேற்ப அந்தக் கற்பனையின் சூழலையும் மனிதர்களையும் மாற்றியமைத்தாலும் நமது பொலிவும் இளமையும் காலத்தில் உறைந்துவிட்டது போல, கண்ணாடியில் படம் பிடித்ததைப் போல, புன்முறுவல் செய்கிறது. தன்னுணர்வின் இலங்குதலில் அதனுள் நம் ஆளுமை பெருவடிவம் எடுக்கின்றது. அவ்வெண்ணம் அளிக்கின்ற கிளர்ச்சியில் ஒளிந்திருக்கிறது மனத்தின் சூட்சமம்.

I’m Thinking of Ending Things (2020, Netflix) படத்தில் இடம்பெறுகிற ஜேக்கின் எண்ணங்கள் யாவும் விநோதக் கற்பனைகளின் சங்கமமாக அமைந்திருக்கின்றன. வேறொரு இணையுலகின் நுண்ணிய கட்டமைப்பில் அவனது ஆற்றாமைகளும் தோல்விகளும் சௌகரியங்களாக பரிணமிப்பதிலுள்ள முழுமையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவனது வாழ்வின் ஒவ்வொரு கண்ணியையும் கோர்த்துக்கொண்டே சென்றதில் எதிர்பாராமையும் நிறைவும் ஒருங்கே நெசவு கொள்கின்றன. நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மனத்தின் ஏதோவோர் இடுக்கில் புகுந்து எங்கோ வெளியேறுகிற துண்டுத் துண்டான எண்ணங்களிலும் அறுபடாத தொடர்ச்சியின் பிணைப்பிருப்பதை – அதன் விந்தையை – தத்துவத் தேட்டத்துடன் அணுகியிருக்கிறார்கள். கார் வைப்பரின் ஒலியை வைத்தே திகிலூட்ட முடிந்திருக்கிறது. திரைப்படக் கலையில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய கால விளையாட்டை அனாயசமாகக் கையாண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக, கற்பனையின் வழி உண்மையைக் கண்டறிய முனைந்ததில் அடங்கியிருக்கிறது இந்தப் படத்தின் மேதைமை!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றது. நேற்றைக்கு எதைச் செய்தோமோ அதைத்தான் இன்றைக்குச் செய்துகொண்டிருக்கிறோம். நாளைக்கும் அதையே தொடர்வோம். காலத்தின் ஊடாக பயணப்படுவதாக மனிதர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், இருக்கின்ற இடத்திலேயே தான் நாம் நிலைபெற்று நிற்கின்றோம். காலம்தான் நம்மைத் தாண்டிச் செல்கிறது. பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வாழ்வும் கடந்துவிடுகிறது. எல்லா நாளும் ஒன்றுதான் எனும்போது இன்றைக்கே வாழ்வை முடித்துக்கொண்டால் தான் என்ன? I’m thinking of ending things!

3

56 பகுப்புகள் வழியாக ஐஸ்லாந்து நாட்டின் தற்காலச் சித்திரத்தைத் தருகிறது Echo (2019) திரைப்படம். படத்தில் காட்டப்படுகிற அத்தனை சம்பவங்களும் கிறிஸ்துமஸ் வாரத்தில் நிகழ்கின்றன. எந்தச் சம்பவத்திற்கும் ஒன்றுடனொன்று தொடர்பில்லை. முதலும் முடிவுமற்றதொரு சிறுகதையின் நடுப்பகுதி போல சில காட்சிகள் அமைந்திருக்கின்றன. நாம் பயணிக்கையில் கடந்துசெல்கிற காட்சித் துண்டுகள் போன்றும் ஓர் ஓவியத்தை நெடுநேரம் வெறித்துப் பார்ப்பது போன்றும் சில காட்சிகள் இழைந்திருக்கின்றன. ஆனால், எந்தத் தருணமும் அதன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்கவில்லை. ஒவ்வொரு சிறிய பகுதியும் அதன் நோக்கத்தை எடுத்தியம்பிய பின்னர் பல்லனுபவத் தொடர்ச்சியின் நுண்பொருளாகின்றது. தன்னை உணர்த்திவிட்ட நிறைவில் முழுமையில் ஐக்கியமாகிறது.

இதையொரு பொதிவுப் படம் எனலாம். எளிமையானவற்றைக் கொண்டு நிரப்பி சிக்கலானவற்றை உருவாக்குதல். படத்தின் முதற்காட்சியில் பனிமலையை நோக்கி சீரான இடைவெளியில் நடந்துகொண்டிருக்கும் உதிரி மனிதர்களைக் காட்டுகிறார்கள். அதன்பிறகான காட்சிகளில் இடம்பெறுகிற கதாபாத்திரங்கள் எல்லோருமே அடுத்து எடுத்துவைக்க வேண்டிய அடி பற்றின கவலையில்தான் தோய்ந்திருக்கிறார்கள். கடந்தகாலத் துயரிலிருந்து விடுபட்டால் போதுமானது என நினைக்கிறார்கள். தொடர்பற்று இருத்தலே சுகம். இறுகின பிடியைத் தளர்த்துவதே விடுதலை.

ஆனால், அவர்களுக்கு முகம் காட்டி நின்றிருக்கும் துன்பத்தைக் கண்ணுற்று அதிலேயே ஆழ்ந்துவிடுகிற போதெல்லாம் அதன் பின்னால் மறைந்திருக்கும் பேருண்மையை உணரத் தவறிவிடுகிறார்கள். Missing the big picture! நுண்மையை அறிந்த அகத்திற்கு பிரபஞ்ச இயக்கத்தின் முழுமை சித்திக்கவில்லை. அவர்கள் அறியாமலேயே ஒரு மாபெரும் சக்தி அவர்களை நகர்த்திக்கொண்டு செல்கிறது. அரசியலும் அதிகாரமும்தான் அந்தச் சக்திகள். எளிய மனிதர்களின் இருப்பையும் அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்தையும் இறுதி நிலையையும் தீர்மானித்து ஆட்டுவிக்கும் சர்வகாரணிகள்.

நாம் யார்? நமது இருப்பின் பெறுமதிதான் என்ன? நாம் வெறும் எதிரொலிப்பு. நம்மை நமது உணர்வுகள் வீங்க அந்தச் சக்திகள் புரட்டியெடுத்தாலும் அவை இழுத்துச் செல்கிற திசைகளிலெல்லாம் மறுபேச்சின்றி ஓங்கரிக்கிற எதிரொலிப்புகள். நமக்கு முழுமை கைகூடாதது தான் கேடா? நம்மிடம் எஞ்சியிருப்பதை அவர்கள் பறித்துக்கொள்ளாமல் இருந்தாலே போதாதா?

4

நமக்கு பாரப்பாசின் கதை தெரியும். இயேசுவிற்குப் பதிலாக விடுவிக்கப்பட்டவன். உலகனைத்துக்குமான பாவத்தைச் சுமக்கப் போகிறவரின் இன்னுயிருக்கு ஈடாக ஒரு பாவியின் வாழ்க்கையை தராசில் நிறுத்தும் போதே அங்கே இன்னொரு காவியம் பிறந்துவிட்டது. தேவகுமாரன் அவனைப் பார்க்கிறார். அக்கணத்தின் தீவிரம் புரியாமல் அவன் இளித்துக்கொண்டிருக்கிறான். அவருக்குப் பரிவுணர்ச்சி மேலோங்கியிருக்க வேண்டும். தன்னுடைய பாரத்தைத் தாங்கும் திராணியுள்ளவனா இவன்? காலத்தை கடன்வாங்கிச் செல்பவன் எதை திருப்பித் தருவான்? யூதாசைக் காட்டிலும் பரிதாபத்திற்குரியவன் பாரப்பாஸ் தானே?

அந்த உணர்ச்சிகரமான பார்வையின் தாக்கம் அவனை அசைக்கும் முன்னமே ஒரு விபத்தின் அவகாசத்திற்குள் மற்றதெல்லாம் நடந்துவிடுகின்றன. ஆனால், அங்கிருந்து விலகும்போதே அவனுள்ளுள் எதுவோ சில்லிட்டது. இன்னதென்று விளக்க முடியாத நெருடல் அவன் நெஞ்சில் இடறியது. தன்னை நூறு வழிகளில் உடைத்த பிறகே இனி அவனால் மீள முடியும். மீண்ட பிறகும் வாழ முடியாது என்பதுதான் இதிலுள்ள நகைமுரண். தன்னுடைய மரணத்திலேயே தனக்கு மீட்சி இருக்கிறது என்பதை கூடிய விரைவில் பாரப்பாஸ் கண்டுகொள்வான். நிம்மதி பெருமூச்செறிவான்.

Life for Life (1991) என்கிற Krzysztof Zanussi-யின் படமும் பாரப்பாஸின் கதையை ஒத்ததுதான். ஆனால், மூலக்கதையில் இல்லாத உள்ளடுக்குகளும் சிக்கலான முடிச்சுகளும் கொண்டது. மாக்ஸிமிலியன் கோல்பே (Maximilian Kolbe) எனும் பாதிரியின் உண்மைக் கதையும் கூட. யூத வதைமுகாமிலிருந்து ஜேன் தப்பித்துச் செல்கிறான். அவனைச் சிறைபிடிக்க முடியாத ஆத்திரத்தில் அவனுக்குப் பதிலாக பத்து யூதர்களைப் பட்டினியிட்டுக் கொல்ல நாஜிக்கள் தீர்மானிக்கிறார்கள்.

முகாமிலுள்ள கைதிகளை வரிசையில் நிற்க வைத்து – கிழவர்கள், இளைஞர்கள், நோயாளிகள் என கலவையாக – அந்த பத்து நபர்களைத் தேர்வு செய்கிறார்கள். மற்ற அனைவரும் தங்கள் விதியை ஏற்றுக்கொண்டு அமைதியாக தலைகுனிந்து நின்றிருக்கையில் அவர்களுள் ஒருவன் மட்டும் தன்னுடைய குடும்பத்தை நினைத்து கதறுகிறான். அதைக் காணச் சகியாது அவனுக்குப் பதிலாக அந்தத் தண்டனையை தனக்கு அளிக்குமாறு கோல்பே மன்றாடுகிறார். இதற்குமுன் இப்படியொரு வேண்டுகோளை நாஜிக்களிடம் எவருமே முன்வைத்ததில்லை. ஒருகணம் விக்கித்துப் போகிறார்கள். பின்னர், அழுதவனை விடுவித்துவிட்டு கோல்பேயை பாதாள அறையில் அடைக்கிறார்கள்.

இந்த விஷயத்தை தற்சமயம் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜேன் கேள்விப்படுகிறான். ஓர் அந்நியனுக்காக எந்த மடையனாவது தன்னுயிரை இழக்கச் சம்மதிப்பானா? இது ஏதாவதொரு பாதிரியை புனிதராக்க முயற்சிக்கும் திருச்சபையின் தந்திரங்களுள் ஒன்றாகவோ கட்டுக்கதையாகவோ தான் இருக்க வேண்டும் என்றே அவன் நம்ப விரும்புகிறான். விசுவாசத்திற்கும் சந்தேகங்களுக்கும் இடையே அல்லாடுகிறான். அவனுக்காக பத்து பேர் செத்துப் போயிருக்கிறார்கள் என்கிற குற்றவுணர்ச்சி அவனிடத்து சிறிதும் இல்லை. ஆனால், தான் அறியாத ஒருவனுக்காக இன்னொருவன் தன்னுயிரை ஈந்தான் என்கிற மேன்மை அவனை வதைக்கிறது. அத்தகைய தியாகத்தின் முன் ஜேன் குறுகிப் போகிறான். எத்துணை உயர்வாக வாழ்ந்தாலும் அதை ஈடுசெய்ய இயலுமா?

சாவதற்காக கோல்பே முன்வருகிற காட்சியை எவரோ தூரத்திலிருந்து வேடிக்கை பார்ப்பது போல எடுத்திருக்கிறார்கள். அந்த அற்புத தருணத்திற்கு சாட்சியாக மட்டுமே விதிக்கப்பட்டது போல எதுவும் செய்வதறியாது நாம் திகைத்துவிடுகிறோம். ஒன்றை விலக்கி வைத்து அதனை அணுக்கமாக உணரச் செய்யும் உத்தி. அந்தக் காட்சியில் கோல்பே பேசுவதுகூட சன்னமாகத்தான் ஒலிக்கிறது. ஆனால், நம் மனம் ஓர்மையடைகிறது. கூர்மை கொள்கிறது. அன்பின் ஆற்றலை அறிந்துவிட்ட சிலிர்ப்பில் மேலெழும்பி விம்முகிறது.

பாதிரியாரின் கதையானாலும் எல்லோருடைய விசுவாசத்தையும் இப்படம் சந்தேகிக்கிறது. கேள்விக்குட்படுத்துகிறது. இயேசுவை சந்தேகிக்கும் தோமாவைப் போல! கதையின் பார்வைக் கோணங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் இப்படத்திற்கு பல்குரல்தன்மை வாய்த்திருக்கிறது. அவரவர் நியாயங்களும் கோபாவேசங்களும் முட்டி மோதுகின்றன. மின்னிப் புடைக்கின்றன. ‘ஹிட்லரின் கொலை பாதகச் செயல்களை கிறித்தவத் திருச்சபை கண்டிக்கவில்லையே?’ என ஓர் இடதுசாரி கேட்கிறார். ‘உண்மைதான். ஆனால், யூதர்களைக் காப்பாற்றுவதற்காக செத்துப்போன நூற்றுக்கணக்கான பாதிரிகளின் உயிர்த்தியாகத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடாது’ என்றொரு போதகர் பதில் தருகிறார்.

மனதின் எதிர்பார்ப்புகளையும் நடைமுறையிலுள்ள நாடகீய முரண்களையும் அபத்தங்களையும் நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கோல்பேயால் காப்பாற்றப்பட்டவன் இன்றைக்கு நல்ல நிலைமையில்தான் இருக்க வேண்டும் என்றெண்ணி, அந்த முகாமில் அவருடன் சிறைவைக்கப்பட்டு, தற்சமயம் பணக்காரனாகிவிட்ட ஒவ்வொரு யூதனையும் கண்டுபிடித்து விசாரித்துக்கொண்டிருப்பார்கள். கோல்பேயின் இன்னுயிர்த் தியாகம் வீணாகிவிடக் கூடாது என்ற நப்பாசையும் அதற்கு கைம்மாறாக அவன் வாழ்ந்து காட்டியிருக்க வேண்டாமா என்கிற எதிர்பார்ப்பும்தான் காரணம். ஆனால், அந்த யூதனோ, வரிசையில் காத்திருக்கப் பொறுமையின்றி, செஞ்சிலுவை சங்கத்து உணவுப் பொட்டலத்தை தட்டிப்பறித்துச் சாப்பிட்டுவிட்டு வாந்தியெடுத்துக்கொண்டிருப்பான்.

நல்ல படம். முக்கியமான இயக்குநர்.