“அதுதான் நமது வழி”: Master and Man

1 comment

1895-இல் எழுதப்பட்ட “மாஸ்டர் அண்ட் மேன்”, தல்ஸ்தோயின் நீண்ட சிறுகதைகளில் ஒன்று. வல்லிக்கண்ணன் “இரண்டு பேர்” என்ற தலைப்பில் அக்கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குற்றவுணர்ச்சி, மன்னிப்பு, மீட்சி என்று விரியும் தல்ஸ்தோயின் படைப்புலகத்தை ஒட்டிய புனைவுதான் இக்கதை என்றாலும், தடையற்ற இலட்சியத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு கதையின் மேல்தளத்தில் நகர்கிறது. உட்தளத்தில் கதை ஒரு நில உரிமையாளருக்கும், அவரிடம் தொடர்ச்சியாக வேலைபார்த்து வரும் ஊழியருக்கும் இடையிலான உறவுகளின் தன்மையை ஆராய்கிறது.

ரஷ்ய நிலப்பிரபுத்துவத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் ஏற்கும் மறுக்கும் தொழிலாளியின் அலைச்சலுடன் விரிவாக விவாதிக்கிறார். நிலப்பிரபுத்துவம் வளர்த்துவிட்ட மனநிலையில் இருந்தே கதை அலசப்படுகிறது.

வசீலி ஆண்ட்ரியேவிச் என்ற வியாபாரிக்கும், அவனிடம் வேலைபார்க்கும் நிகிடா என்ற விவசாயி இருவருமே கதையின் பிரதான பாத்திரங்கள். உண்மையில் இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள்தான் கதை. சுரண்டலும் விழுங்களும் ஒரு மார்க்சிய பிரச்சார முற்போக்கு கதைக்கு போதுமானது. தல்ஸ்தோய் அவ்வாறான மேற்பூச்சுகளை அனாயசமாகத் தாண்டித் துடைத்துக் கடந்து, மனதின் இடைவெளிகளின் ஆழத்துக்குள் செல்கிறார்.

https://bloximages.chicago2.vip.townnews.com/madison.com/content/tncms/assets/v3/editorial/6/9b/69b33663-f7cb-50c7-97d8-854defed3705/5c2a93a2bd0e9.image.jpg?resize=1200%2C951

நிகிடா தேர்ந்த தேர்ச்சிகொண்ட தொழிலாளி. நீண்டகாலமாக அடிமட்ட வேலைகளை செய்துவருகிறார். நல்ல தொழிலாளியாக இருந்தாலும், குழப்படிக்காரர்; இடைக்கிடையே குடிவெறி அவரைப் பற்றிக்கொள்ளும். குடித்தே அனைத்தையும் இழந்துவிடுவார். வீட்டுக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை. அவர் வீட்டுக்கு தினமும் வரவேண்டும் என்று அவரது மனைவி எதிர்பார்ப்பதும் இல்லை. மனைவிக்கு இன்னுமொரு ஆடவனுடன் தொடர்பு இருப்பது அதற்குரிய காரணம். இருந்தும், தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மனைவியிடமே கொடுத்துவிடுவார். அதுபற்றி அவருக்கு கவலையும் இல்லை.

நிகிடா உடல் உழைப்பைச் செலுத்தி உழைக்கும் அளவுக்கு வசீலி ஆண்ட்ரியேவிச்சினால் ஊதியம் வழங்கப்படுவதில்லை. நம்பிக்கையற்ற முறையில் நயவஞ்சகமாக நிகிடா ஏமாற்றப்படுகிறார். அவரது ஊதியம் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப அவருக்கு வழங்கப்படுகிறது. வசீலி ஆண்ட்ரியேவிச் தன்னை ஏமாற்றுகிறார் என்பது நிகிடாவுக்கு நன்கு தெரியும். ஆனால், 19ஆம் நூற்றாண்டில் இன்னும் எஞ்சியிருக்கும் விவசாயிகளின் அடிபணிந்த மனநிலையுடன், அவர் தனது அதிர்ஷ்டமற்ற விதியை ஏற்றுக்கொள்கிறார்.

நிகிடா இறுதியாகக் குடித்தபோது தனது மேல் சட்டையையும், தோல் பூட்ஸ்களையும் தொலைத்துவிட்டதால், அதன் பின்னர் குடிப்பதில்லை என்ற சபதத்தை எடுத்து வைராக்கியமாக காப்பாற்றி வருகிறார். அவர் தன்னளவில் மகிழ்ச்சியானவர். அவர் வாழும் இயற்கை உலகில் அமைதியாக இருக்கிறார். பண்ணையில் வளர்த்து பராமரிக்கும் விலங்குகளை உளமார நேசிக்கிறார். மேலும் அனைத்து சிக்கனங்களையும் மகிழ்ச்சியுடன் அதன் இருப்புடன் எடுத்துக்கொள்கிறார்.

https://payload.cargocollective.com/1/2/88505/7931751/03-Alexander-Alexeieff-Tolstoy.jpg

வசீலி ஆண்ட்ரியேவிச், நிகிடாவுக்கு முற்றிலும் நேர் எதிரானவர். ஆண்ட்ரியேவிச் தொடர்ந்து வியாபர வாழ்க்கையில் வெற்றி பெற தந்திரங்களை மோசடியாகச் செய்பவர். நிகிடா தனது நலிந்த வாழ்க்கையின் சிறிய இன்பங்களை அனுபவிப்பதில் திருப்தி அடைகிறார். நிகிடாவோ, ஆண்ட்ரியேவிச்சோ எந்த வகையிலும் இந்தக் கதையில் ஒருவருக்கு ஒருவர் எதிரி அல்ல. அந்த எதிர் பாத்திரம் ரஷ்ய வானிலையாக இருக்கிறது. கொடூரமாகக் கொட்டும் குளிர்கால புயல்தான் வாஸிலி ஆண்ட்ரீவிச்சின் அனைத்து திட்டங்களையும் பாழ்படுத்தி நாசம் செய்கிறது.

எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் இரண்டு ஆண்கள் ஒருவரது விருப்பதால் மேலும் இக்கட்டுக்குள் சென்று வீழ்கிறார்கள். அந்த இக்கட்டுக்குள் இருந்துதான், வாழ்க்கை நோக்கிய கேள்விகள் எழுந்து சூழ்கின்றன.

ஆண்ட்ரியேவிச் அவசரமாக முடிக்க வேண்டிய வியாபாரத்திற்கு நிகிடாவுடன் இரவில் குதிரை வண்டியில் கிளம்புகிறார். வழியெங்கும் எலும்புகளை ஊடுருவி நடுங்கச் செய்யும் பனி கொடூரமாகக் கொட்டுகிறது. காற்று வேகமாக வீசுகிறது. இந்தத் தடைகளை மீறி ஆண்ட்ரியேவிச் சென்றாலே தோப்பு ஒன்றை மிகுந்த மலிவு விலையில் தந்திரமாக வாங்கிக்கொள்ள முடியும்.

விரைவாகச் செல்ல, நல்ல பாதை இருந்தும் குறுக்குப் பாதையைத் தேர்வு செய்கிறார் ஆண்ட்ரியேவிச். நிகிடாவின் விருப்பத் தேர்வு அதுவல்ல என்றாலும் அமைதியாக அதனை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அந்த வழியே சென்று சிறிது தூரத்தில் வழிதவறி திகைத்து நிற்கிறார்கள். அந்த நேரத்தில் ரஷ்யாவில், தேசிய நெடுஞ்சாலை போன்ற சாலைகள் எதுவும் இல்லை. உண்மையில், நகர்ப்புறங்களில் கூட மிகச் சில நடைபாதைச் சாலைகளே இருப்பதாக ஊகிக்க இயல்கிறது. பயணிகள் குளிர்காலத்தில் சரியாகச் சென்றுகொண்டு இருக்கிறோமோ என்பதை அறிய இருக்கும் ஒரே வழி, சாலையின் திசையைக் குறிக்கும் மரக் குற்றிகளின் வழிகாட்டுதல்களை நாடுவதுதான். பல பகுதிகளில் பனிப்பொழிவு, அவர்கள் இருவரும் செல்லும்போது அதிகரித்து வருகின்றன. அவை இந்தக் குறிப்பான்களை முழுமையாக மூடிவிட்டன. ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்து தரக்கூடிய புதைகுழியில் கூட நிகிடா மாட்டிக்கொள்கிறான்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Tolstoy_ploughing.jpg/1200px-Tolstoy_ploughing.jpg

தல்ஸ்தோய், மனித சமூக உறவுகளின் தன்மையை இந்த நெருக்கடியில் இருந்து சித்தரிக்கிறார். ஆண்ட்ரியேவிச் தொடர்ந்து பயணத்தைத் தொடர உறுதியாக இருக்கிறார். ஆனால், அது அவரையும் நிகிடாவையும் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் நிரம்பியது. வர்த்தகம் செய்யும் ஆசை அவரை மோசமாகத் தூண்டிக்கொண்டு இருக்கிறது. அவரது தடையற்ற இலட்சியம் அதுதான். மறுபுறம் நிகிடா, தனது எஜமானருக்கு மட்டுமே சேவை செய்ய முற்படுகிறார். ஆனால், அது முட்டாள்தனமானது என்பது அவருக்குத் தெரியும். இருந்தும் செய்யவே விரும்புகிறார்.

அவர்கள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குப் பயணிக்கிறார்கள், தங்கள் இறுதி இலக்கான ‘கோர்யாச்சினை’ நாடுகிறார்கள். வழி தவறியபோது ஒரு நடுத்தர குடும்பத்தின் வீட்டிற்கு வரவேற்கப்படுகிறார்கள். புயல் அதிகமாக இருப்பதால் அங்கு இரவு தங்கிவிட்டுச் செல்லும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆண்ட்ரியேவிச் அதனை மறுக்கிறான். அவர்கள் மீண்டும் புறப்படுகிறார்கள், மீண்டும் அவர்கள் தொலைந்து போகிறார்கள். இந்தக் கதை தொடர்கையில், ஆண்ட்ரியேவிச் மேலும் மேலும் வெறித்தனமாகிக்கொண்டிருக்கிறான். தன்னிடம் தெரிவுகள் இல்லாமல் துவண்டு போகும்போது, நிகிடா கொடுக்கும் தெரிவுகளை மௌனமாக ஏற்றுக்கொள்கிறார். இருந்தும் ஒரு கட்டத்தில் அவரது இலக்கு மீதான வெறித்தனம் நிகிடாவின் மரணத்தை உந்தும் முடிவை எடுக்கிறது.

மிகப்பலம் பொருந்திய சம்பவங்கள் இதன் பின்னர்தான் வருகின்றன. நாடகீயத்தனம் கொண்ட தருணங்களால் நிறைந்தாலும், இருளில் ஒளி வீசி மீட்சியடையும் சித்தரிப்புகள் அங்கேதான் நிகழ்கிறன. ‘ஆன்னா காரனீனா’ போலவே, இந்தக் கதையும் சர்வ வல்லமையுள்ள பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. அதாவது, ஆசிரியர் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் மன வித்தியாசத்திலும் ஆளுமையிலும் சிந்தனை ஓட்டங்கள் ஊடாக மனதை அசைபோடல் போன்ற உத்திகள் மூலம் கதையை உந்துகிறார்.

https://187011.selcdn.ru/thumbnails/photos/2017/01/23/rlconiwfu66hslcs_1024.jpg
தி மாஸ்டர்

நிகிடாவை தன்னத்தனியே பனியில் உறைந்து மரணிக்கவிட்டு ஆண்ட்ரியேவிச் குதிரையில் ஏறிச்செல்கிறான். அப்போது நிகிடாவைப் பற்றி அவனுக்கு வரும் எண்ணங்கள் அவன் வாழத் தகுதியற்றவன், இறப்பதால் நட்டம் ஒன்றுமில்லை. நான் அப்படியல்ல, உயர்ந்தவன் – எனது வாழ்க்கை முக்கியம் என்பதாக இருக்கிறது. அதற்காக அவன் குற்றவுணர்ச்சி கொள்ளவில்லை. மிக நியாயமான விடயமாகவே ஆண்ட்ரியேவிச்சுக்குத் தோன்றுகிறது. பனியில் இருந்து மீண்டும் தப்ப முடியாமல் திட்டங்கள் பிழைத்து மறுபடியும் நிகிடா இருக்கும் இடம்வரும்போது அவனுக்குள் ஏற்படும் ஒரு திடீர் உந்துதல் அவனை அவனுக்குள் கண்டடைய வைத்து புதிய மீட்சிக்கு இட்டுச்செல்கிறது. தனியாக குதிரையில் பயணிக்கும்போது அவனைப் பீடித்த மகா பயங்கரமான பயம், இப்போது இல்லை. தனியே தப்பித்து செல்லும்போது அவன் அடைந்த அனுபவங்கள் அவனது அகத்தை முற்றிலும் புரட்டிவிடுகிறது. ஏறக்குறைய பனியில் உறைந்து இறக்கும் நிலையை அது அளித்திருந்தது.

இப்போது குற்றுயிராகத் தவிக்கும் நிகிடாவுக்கு தன் உடலிலிருந்து வெப்பத்தை வழங்கி காப்பாற்ற முனைகிறான். அவனது கண்களில் நீர் வழிகிறது. தொண்டை அடைக்கிறது. அப்போது அவன் அடையும் ஆனந்தம் இதுவரை அவன் அனுபவித்திராத ஒன்றாக இருக்கிறது. “அதுதான் நமது வழி” என்று தனக்குள் கூறி  மகிழ்ந்துகொள்கிறான். பக்தியும், இரக்கமும் மேலிட்ட உணர்ச்சியாக அந்த ஆனந்த உணர்வு இருக்கின்றது. இதுவரை அவன் அறிந்திராத சூட்சுமம் நிறைந்தது என்பது மட்டும் புரிகிறது. தன் உடலிலிருந்து அனைத்து வெப்பத்தையும் இழந்து மீட்பை ஆனந்தமாக ஆண்ட்ரியேவிச் அடைகிறான். மகிழ்வான மரணம் அவனைத் தழுவிக்கொள்கிறது.

லேவ் தல்ஸ்தோய் நமக்கு அளிப்பது என்னவென்றால், மனிதர்கள் எதிரெதிர் பக்கங்களில் இரண்டு பேர்களாக எப்போதும் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து சுவைப்பவர் ஒருவர், தனது எஜமானின் விருப்பத்தை ஏற்று அதைத் தலைவிதியாக ஏற்றுக்கொள்பவர் மற்றவர். இருவருமே தங்களைக் கட்டுப்படுத்த முடியாது, தங்களுக்குள் தங்களை அழித்தவாறே இருக்கிறார்கள். இந்த இருதுருவ வாழ்கையின் உள்ளே புதைந்திருக்கும் சமன்பாடுகளை அலசிப்பார்க்கும் கதையாக ‘மாஸ்டர் அண்ட் மேன்’ இருக்கிறது. மன்னிப்பு என்பதே பெரிய விடுதலை. தல்ஸ்தோய் மன்னிப்பு மீது அதிகம் நாட்டம் கொண்டவாராக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் ஆன்மீக வெளிச்சத்தை அவரது கதைகளில் யாரோ ஒரு பாத்திரம் அடைந்துவிடுகிறது. தன் எஜமானனை நிகிடா மன்னித்தானா என்பதற்கு நேரடியாக விடையில்லை. ஆனால், இறக்கும்வரை அவன் எல்லோரையும் மன்னித்துக்கொண்டே இருக்கிறான்.

1 comment

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:16 pm

[…] “அதுதான் நமது வழி”: Master and Man – அனோஜன் பாலகிருஷ்ணன் […]

Comments are closed.