எடுப்பார் கைப்பிள்ளை – லேவ் தல்ஸ்தோய்

by எஸ்.கயல்
7 comments

ஒருமுறை, அல்யோஷாவின் அம்மா, பால் நிறைந்த பானை ஒன்றை மத குருவின் மனைவியிடம் தரச் சொல்லி அவனிடம் கொடுத்து அனுப்பிய போது அவன் எதிலோ இடறி விழுந்து அதை உடைத்துவிட்டான். இதனால் அவனுடைய அம்மாவிடம் இருந்து அவனுக்கு நல்ல அடி கிட்டியதோடு கிராமத்திலிருந்த சிறுவர்கள் அவனை, “பானை! பானை!” என்று கிண்டலடிக்கத் துவங்கினர். இப்படித்தான் இந்தச் “செல்லப் பெயர்” அவனை வந்தடைந்தது.

அல்யோஷா, ஒடிசலான உடலும், பறவைகளின் சிறகுகளைப் போல வெளியே நீட்டிக்கொண்டு தனியாகத் தொங்கும் காதுகளும், பெரிய மூக்கும் கொண்டவன்.

“அல்யோஷாவின் மூக்கு, குச்சியின் மீதிருக்கும் சுரை போன்றது” என்று சிறுவர்கள் அதையும் எப்போதும் கிண்டல் அடித்தார்கள்.

அல்யோஷா வாழ்ந்த கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. ஆனால் படிப்பது எழுதுவது போன்ற விஷயங்கள் அவனுக்கு எளிதானதாக இல்லை. அத்துடன் கற்றுக்கொள்வதற்கு அவனுக்கு நேரமில்லை. அவனுடைய அண்ணன் ஒரு வியாபாரியுடன் நகரத்தில் வசித்துவந்ததால் தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய அப்பாவுக்கு உதவிவந்தான் அல்யோஷா. அவனுக்கு ஆறு வயது இருக்கும்போதே தம் குடும்பத்துக்குச் சொந்தமான பசுவையும் ஆடுகளையும் மேய்ச்சல் நிலத்தில் தன் தங்கையுடன் இருந்து பார்த்துக்கொள்வான். அவன் வளர்ந்து பெரியவனாவதற்கு பல காலம் முன்பே தம் குதிரைகளை இரவும் பகலுமாக கவனித்துக்கொண்டான். தன் பனிரெண்டு வயதுமுதல் உழவுவேலை செய்து குதிரை வண்டியும் ஓட்டினான். இந்த அத்தனை வேலைகளையும் தினந்தோறும் செய்யும் அளவுக்கு அவனுடைய உடலில் வலிமை இல்லை. ஆனால் அவனிடம் வேறொன்று இருந்தது – எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் அவனுடைய குணம். மற்ற சிறுவர்கள் அவனைப் பார்த்து கிண்டலடித்துச் சிரிக்கும் போது அவன் அமைதியாகவோ அல்லது தன்னை நினைத்து தானும் சிரித்துக்கொண்டோ இருப்பான். அவனுடைய அப்பா அவனை சபிக்கும்போது அமைதியாக நின்று கவனித்துக்கொண்டிருப்பான். சிரிப்பதும் சபிப்பதும் முடிந்தபின் அவர்கள் அவனை மறுபடி உதாசீனம் செய்யத் துவங்கும்போது, தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்ட இடத்தில் இருந்து தொடர்வான்.

அல்யோஷாவுக்குப் பத்தொன்பது வயதான போது அவனுடைய அண்ணன் ராணுவத்தில் சேர்க்கப்பட்டான். அண்ணனுக்குப் பதிலாக அல்யோஷாவை அந்த வியாபாரியின் வீட்டில் பணியாளாகச் சேர்ப்பற்கான ஏற்பாடுகளை அவனுடைய அப்பா செய்தார். அண்ணனின் பழைய காலணிகள், அப்பாவின் தொப்பி, அங்கி ஆகியவற்றுடன் நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். தன் புதிய ஆடைகளைக் கண்டு அல்யோஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அந்த வியாபாரியோ அவனுடைய தோற்றத்தைப் பார்த்து கடும் அதிருப்தி அடைந்தார்.

“செம்யோனைப் போன்ற ஒரு இளைஞனை அழைத்து வருவீர்கள் என்று நினைத்தேன்” என்றபடி அந்த வியாபாரி அல்யோஷாவைக் கவனமாக ஆராய்ந்தார். “ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு அழுமூஞ்சியை என்னிடம் அழைத்து வந்திருக்கிறீர்கள். இவன் எந்த வேலையையாவது சிறப்பாகச் செய்வானா?” என்று கேட்டார்.

“எல்லா வேலைகளையும் இவனால் செய்ய முடியும். குதிரைக்குச் சேணம் பூட்டி நீங்கள் எங்கு போக விரும்புகிறீர்களோ இவன் உங்களை அங்கு அழைத்துச் செல்வான். வேலை செய்வதில் தீராத ஆவல் கொண்டவன். பார்வைக்குத்தான் பூச்சி போல இருப்பான். ஆனால் உண்மையில் ஒரு இரும்புக் கம்பி போல உறுதியானவன்.”

“அது வெளிப்படையாகவே தெரிகிறது. நீ சொன்ன மற்ற விஷயங்களைப் பற்றி நான் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்.

“எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் எதிர்த்துப் பேசாமல் சொன்ன வேலையைச் செய்வான். வேலை செய்வது என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.”

“நல்லது. இதற்குமேல் நான் என்ன சொல்வது? இவனை இங்கு விட்டுச் செல்.”

ஆகவே, அல்யோஷா அந்த வியாபாரியுடைய வீட்டில் வாழத் துவங்கினான்.

*

வியாபாரியின் குடும்பம் அவ்வளவு பெரியதொன்றும் இல்லை. வியாபாரியின் அம்மா, மனைவி, மூன்று குழந்தைகள் ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர். தொடக்கப்பள்ளிக் கல்வி மட்டுமே பயின்றிருந்த மூத்த மகன் திருமணமாகி  வியாபாரியுடன் தொழில்புரிந்து வந்தான். அவருடைய இன்னொரு மகன், படிப்பாளி வகையறா, உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த பின் சிலகாலம் பல்கலைக்கழகத்தில் இருந்தான். ஆனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இப்போது வீட்டில்தான் இருக்கிறான். வியாபாரிக்கு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகளும் இருக்கிறாள்.

பார்வைக்குப் படு கிராமத்தானாகவும் மோசமாக உடை உடுத்தியும் இருந்த அல்யோஷாவை முதலில் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் நல்ல பழக்கவழக்கங்கள் சிறிதும் இல்லை. கிராமத்தில் கூப்பிடுவது போல எல்லோரையும் முறைவைத்து கூப்பிட்டுக்கொண்டிருந்தான். ஆனால், வெகு சீக்கிரமே அவனுடைய வழிமுறைகளுக்கு அவர்கள் பழகிப் போனார்கள். அவனுடைய அண்ணனைவிட அவன் சிறந்த பணியாளாகவும், எதாவது கேட்டால் எப்போதும் உடனே பதில் கூறுபவனாகவும் இருந்தான். என்ன வேலை கொடுத்தாலும் விருப்பத்துடனும் வேகமாகவும் செய்தான். வேலை செய்வதை எப்போதும் நிறுத்தாதவனாக, ஒரு வேலையை முடித்து இன்னொன்று என்று போய்க்கொண்டே இருந்தான். அவனுடைய வீட்டில் நடந்ததைப் போலவே இந்த வியாபாரியுடைய வீட்டிலும் எல்லா வேலையும் அல்யோஷாவுக்கே தரப்பட்டது. அவன் அதிகமாக வேலை செய்யச் செய்ய இன்னும் அதிகமான வேலைகளை அவன்மீது குவித்தார்கள். அந்த வீட்டின் எஜமானியம்மாள், அவளுடைய வயதான மாமியார், மகள், இளைய மகன், வியாபாரியின் குமாஸ்தா, சமையல்காரி என அனைவரும் அவனை இங்குமங்கும் அனுப்பி, தங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அத்தனை உத்தரவுகளும் இட்டு, அவற்றை செய்யச் சொல்லி ஏவுவார்கள். “ஏய்! ஓடு, இதைச் செய்” அல்லது “அல்யோஷா இதை இப்போதே சீர்படுத்து” அல்லது “ஏய்! மறந்துவிட்டாயா? இங்கே பார், மறக்காதே” என்பவைதான் அவன் காதுகளில் ஒலித்த ஒரே விஷயம். அல்யோஷா ஓடினான், சீர்படுத்தினான், பார்த்தான், மறக்காது இருந்தான். எல்லாவற்றையும் செய்து முடித்து அவற்றின் இடையே புன்னகைத்துக்கொண்டும் இருந்தான்.

ஓடியோடி வேலை செய்து, தன்னுடைய அண்ணனின் காலணியை சீக்கிரமே பழுதாக்கி விட்டான். கந்தலாகக் கிழிந்திருந்த அதை அணிந்து வெறும் கால்கள் வெளியே நீட்டியபடி அவன் நடந்ததற்காக அந்த வியாபாரி அவனைக் கடுமையாகத் திட்டினார். சந்தையில் புதிய காலணிகள் வாங்கிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார். புத்தம் புதிய அந்தக் காலணிகள் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன. ஆனால் அவனுடைய பாதம் முன்பு இருந்ததைப் போலவே பழையதாக இருந்தது. அன்று மாலைக்குள் அவன் ஓடிய ஓட்டத்தில் அவை வலித்ததால் அவனுக்கு அவற்றின் மீது கோபம் ஏற்பட்டது. கூலியை வசூலிப்பதற்காக தன் அப்பா இங்கு வரும்போது புதிய காலணிக்கான விலையை எஜமானன் அவனுடைய கூலியிலிருந்து கழித்ததற்காக மிகவும் கோபப்படுவார் என்று அவன் பயந்தான்.

குளிர் பருவத்தில் விடியும் முன் எழுந்து விறகுகளை வெட்டி, தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கி, பசுக்களுக்கும் குதிரைகளுக்கும் தீவனமும் தண்ணீரும் வைப்பான். அதற்குப் பிறகு, அடுப்பைப் பற்ற வைப்பான். காலணிகள், அங்கிகள் ஆகியவற்றின் அழுக்கை நீக்கி, தேநீர்க் கெண்டிகளை வெளியே எடுத்து அவற்றைத் துடைத்து பளபளப்பாக்குவான். பிறகு கடையில் இருந்து பொருட்களை வெளியே எடுத்து வைப்பதற்காக குமாஸ்தா அவனை அழைப்பார் அல்லது சமையல்காரி மாவு பிசைந்து தரவும் பாத்திரங்களைக் கழுவவும் உத்தரவு பிறப்பிப்பார். அதற்குப் பிறகு யாருக்காவது எதாவது சேதி சொல்ல நகரத்துக்கோ, வியாபாரியின் மகளைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக பள்ளிக்கோ அனுப்பப்படுவான் அல்லது விளக்கில் ஊற்றும் எண்ணெய் வாங்கி வருவதற்காகவோ அல்லது எஜமானனின் வயதான அம்மாவுக்காக ஏதாவது வாங்கி வருவதற்காகவோ அவன் செல்ல வேண்டும்.

“நீ ஒரு தண்டக் கருமம்! இவ்வளவு நேரம் எங்கே ஊர் சுற்றிக்கொண்டிருந்தாய்?” என்று ஒருவர் மாற்றி ஒருவர் அவனிடம் கேட்பார்கள் அல்லது “நீ ஏன் போகிறாய்? உனக்காக அல்யோஷா ஓடுவான். அல்யோஷா, அல்யோஷா!” என்று தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்வார்கள். அல்யோஷாவும் ஓடுவான்.

அல்யோஷா இந்த ஓட்டத்தின் இடையேதான் எப்போதும் தன் சிற்றுண்டியை உண்ணுவான். இரவு உணவுக்கு பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வரமாட்டான். மற்றவர்களோடு ஒருநாளும் உணவு உட்கொள்ள வராததற்காக சமையல்காரி அவனிடம் கோபித்துக்கொள்வதுண்டு. ஆனால் அவனுக்காக பரிதாபப்பட்டு மாலை நேர சிற்றுண்டியிலும், இரவு உணவிலும் எதையாவது அவனுக்காகத் தனியே எடுத்துவைத்து சூடாகத் தருவாள்.

விடுமுறைக் காலங்களிலும் அதற்குப் பின்னும் அல்யோஷாவுக்கு இன்னும் அதிக வேலை இருக்கும். விடுமுறை நாட்களில் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். ஏனெனில் அப்போது எல்லோரும் அவனுக்கு அன்பளிப்பு தருவார்கள். வழக்கமாக கிடைக்கும் அந்த அன்பளிப்பு பெருந்தொகை ஒன்றும் கிடையாது. அறுபது கொபெக்ஸ்தான். ஆனால் அது அவனுடைய சொந்தப் பணம். அதை அவன் விருப்பப்படி செலவு செய்யலாம். தன்னுடைய கூலியின் மீது எப்பொழுதும் அவனுடைய பார்வை பட்டதே இல்லை. ஏனெனில் அந்தக் கூலியை அவனுடைய அப்பா வியாபாரியிடமிருந்து வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார். அவனுக்கென அவர் தருவது, அண்ணனுடைய காலணிகளை மிகச் சீக்கிரமே பழுதாக்கியதற்காக கடுமையான சொற்கள் மட்டுமே.

மொத்தமாக இரண்டு ரூபில்ஸ் அன்பளிப்புப் பணம் சேர்ந்த பிறகு ஒரு சிகப்பு நிறக் கம்பளியை சமையல்காரியின் ஆலோசனைப்படி வாங்கினான். முதன் முதலில் அதை அணிந்துகொண்டு தன்னைப் பார்த்துக்கொண்ட போது வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த அவன், சமையலறையில் அப்படியே வாயைப் பிளந்தபடி, ஆச்சரியத்தில் தொண்டை அடைக்க நின்றுவிட்டான்.

அல்யோஷா மிகக் குறைவாகவே பேசுவான். அவன் பேசினாலும் மிக அவசியமான  ஒன்றைப் பற்றிய அதி விரைவான, இரத்தினச் சுருக்கமான பேச்சாகவே அது இருக்கும். எதையாவது செய்யச் சொன்னாலோ அல்லது செய்ய முடியுமா என்று கேட்டாலோ எப்போதும் கொஞ்சமும் தயக்கமின்றி, “என்னால் செய்ய முடியும்” என்று பதில் சொல்வான். உடனடியாக அந்த வேலையில் ஈடுபட்டு அதை முடிப்பான்.

அல்யோஷாவுக்கு எப்படி பிரார்த்தனை செய்வது என்பது சுத்தமாகத் தெரியவில்லை. ஒருமுறை அவனுடைய அம்மா அவனுக்கு அதற்குரிய சொற்களைக் கற்றுத் தந்தாள். ஆனால் அவள் அதை சொல்லும் போதே அவன் மறந்துவிட்டான். ஆனாலும் காலையும் மாலையும் அவன் தினமும் பிரார்த்தனை செய்தான். தன்னுடைய கைகளால் அப்படியே இயல்பாக ஒரு சிலுவை இட்டுக்கொள்வான்.

*

அல்யோஷா இதே போல ஒன்றரை வருடங்கள் வாழ்ந்தான். பிறகு இரண்டாவது வருடத்தின் பிற்பகுதியில் அவன் வாழ்வில் இதுவரை நிகழந்திராத அனுபவம் அவனுக்கு ஏற்பட்டது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தேவைப்படும் ஒன்றுக்காக ஏற்படும் உறவுகள் மட்டுமின்றி, முற்றிலும் வேறு வகையான உறவுகளும் உலகில் இருக்கின்றன என்பதை அந்த அனுபவத்தின் வாயிலாக முதல்முறையாகக் கண்டுபிடித்து மலைத்துப் போனான்.  காலணிகளைத் தூய்மைப்படுத்துவது, எதையாவது வாங்கி வர கடைகளுக்கு அனுப்புவது, குதிரைகளுக்குச் சேணம் பூட்டச் செய்வது போன்ற வேலைகளை ஒருவரைச் செய்விப்பதற்காக இன்னொருவர் ஏற்படுத்திக்கொள்ளும் உறவாக அது இல்லை.

மாறாக ஒருவருடனான உறவுக்கு அவசியமே அற்ற இன்னொருவர், ஒருவருக்குப் பணிவிடை செய்யவும், அன்பாக நடந்து கொள்ளவும் விரும்புவதால் மட்டுமே உருவாகிய உறவாக அது இருந்தது. தான் அத்தகைய ஒருவராக இருக்கிறோம் என்பதையும்கூட அல்யோஷா அப்போதுதான் கண்டுபிடித்தான். இவை அனைத்தையும் அவன் சமையல் வேலை செய்த உஸ்டிஞ்சா  மூலமாகவே உணர்ந்தான்.

இளம் பெண்ணான உஸ்டிஞ்சா ஒரு அநாதை. அல்யோஷாவைப் போலவே அவளும் கடுமையான உழைப்பாளி. அவள் அல்யோஷாவுக்காக அனுதாபப்பட்டாள். தன் வாழ்நாளில் முதன்முறையாக தான் செய்யும் வேலைக்காக இல்லாமல் தானே ஒருவருக்குத் தேவைப்படுவதை அவன் உணர்ந்தான். அவனுடைய அம்மா அவனிடம் கனிவாக நடந்துகொண்ட போதோ, அவனுக்காகப் பரிதாபப்பட்ட போதோ அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், அது மிக இயற்கையான ஒன்றாக அவனுக்குத் தெரிந்தது. அது, தானே தனக்காக அனுதாபம் கொள்வது போன்றது என நினைத்தான்.

ஆனால் தனக்கு முற்றிலும் அந்நியரான உஸ்டிஞ்சா‌வும் தன்மீது பரிவு காட்டுவதை மிக சீக்கிரமே அவன் உணர்ந்துகொண்டான். அவள் எப்போதுமே ஒரு பானையில் வெண்ணை இட்ட தினைக் கஞ்சியை அவனுக்காக எடுத்து வைத்திருப்பாள். அவன் சாப்பிடும் போது தன் முகவாயை தன் முட்டிக்கை மீது தாங்கியபடி அவன் பக்கத்தில் அமர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டு இருப்பாள். அவன் அவளை நிமிர்ந்து பார்க்கும்போது அவள் புன்னகை புரிவாள். பதிலுக்கு இவனும் முறுவலிப்பான்.

இவை அனைத்தும் முதலில் மிகப் புதிதாகவும் மிக விசித்திரமாகவும் இருக்க, அல்யோஷா பயந்து போனான். அது தன் வேலையை, சேவையை, தொந்திரவு செய்வதாக அவன் நினைத்தாலும் மிக மகிழ்ச்சியாக இருந்தான். எப்போதாவது தலைகுனிய நேரும்போது உஸ்டிஞ்சா சீராக்கித் தந்த தன்னுடைய காற்சட்டை கண்ணில்படும். அப்போதெல்லாம் அவன் தன் தலையைக் குலுக்கியபடி புன்னகை செய்வான். அவன் வேலை செய்துகொண்டிருக்கும் போதோ, அல்லது எதையாவது வாங்குவதற்கு எங்காவது அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதோ அடிக்கடி அவனுக்கு உஸ்டிண்ஜாவின் நினைவு வரும். அவன் அன்புடன் “உஸ்டிஞ்சா!” என முணுமுணுப்பான். உஸ்டிஞ்சா தன்னால் முடிந்தவரை அவனுக்கு உதவினாள். அவனும் அவளுக்கு உதவி செய்தான்.

தன் வாழ்க்கை பற்றிய அத்தனை விஷயங்களையும் அவள் அவனிடம் கூறினாள். மிகச் சிறிய வயதிலேயே அநாதையானது, வயதான ஒரு உறவுக்காரப் பெண் அவளுக்கு அடைக்கலம் தந்தது, பிறகு வேலை செய்வதற்காக உஸ்டிஞ்சாவை அவளே இந்த நகரத்துக்கு அனுப்பியது, வியாபாரியின் மகன்  தன் ஆசைக்கு அவளை இணங்க வைக்க முயற்சி செய்தது, அவள் அவனைச் சினந்து கண்டித்தது என எல்லாவற்றையும் சொன்னாள்.

பேசுவதென்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை. அவள் பேசுவதைக் கேட்பது அவனுக்கு மிகப் பிடித்திருந்தது. வீட்டு வேலைக்காக நகரத்துக்கு வந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சமையல் பணிப்பெண்களைத் திருமணம் செய்துகொள்வது அங்கு வழக்கமாக ‌நடக்கும் ஒன்று என்பதை மற்ற பல விஷயங்களோடு சேர்த்து அவன் கேள்விப்பட்டிருந்தான். ஒருமுறை அவனுடைய பெற்றோர் அவனுக்குச் சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடுவார்களா என்று அவள் கேட்டாள். தனக்கு அது குறித்துத் தெரியாது என்று பதிலளித்தவன், தன் கிராமத்தில் இருந்த யார் மீதும் தனக்கு விருப்பமில்லை என்றான்.

“ஏன் நீ வேறு யாரையாவது பார்த்து வைத்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம். அது நீதான். உனக்கு சம்மதமா?”

“ஏய், அல்யோஷா! எவ்வளவு தந்திரமாக என்னிடம் இதைக் கேட்டுவிட்டாய்?” தன் கையில் இருந்த அகப்பையை விளையாட்டாய் அவன் முதுகில் விலங்கிடுவது போல வைத்தபடி கேட்டாள்.

ஈஸ்டருக்கு முன்பு அல்யோஷாவின் அப்பா தன் மகனின் கூலிப் பணத்தைப் பெறுவதற்காக மீண்டும் வந்தார். அல்யோஷா உஸ்டிண்ஜாவைத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருப்பது வியாபாரியின் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. அவளுக்கு அதில் கொஞ்சமும் மனமகிழ்ச்சி இல்லை. “அவள் பிள்ளைத்தாய்ச்சி ஆகிவிடுவாள். அப்புறம் இங்கு எப்படி நன்றாக வேலை செய்வாள்?” என்று தன் கணவனிடம் குறைபட்டுக்கொண்டாள்.

அல்யோஷாவின் கூலித் தொகையை எண்ணிய வியாபாரி அதை அவன் அப்பாவிடம் தந்தார்.

“உங்களுக்கு முழு திருப்தி தரும்படி என் மகன் வேலை செய்கிறானா?” என்று கேட்ட முதியவர், “அவன் அடக்க ஒடுக்கமானவன், நீங்கள் எந்த வேலை சொன்னாலும் செய்வான் என்று சொன்னேனே” என்றார்.

“அடக்க ஒடுக்கமானவனோ இல்லையோ, அவன் முட்டாள்தனமாக ஒரு விஷயம் செய்திருக்கிறான். சமையல்காரியைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறான். திருமணம் ஆனவர்களை நான் இங்கு வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை. அது எங்களுக்குச் சரிவராது.”

“என்ன, அந்த முட்டாள் பயல்! எப்படிப்பட்ட ஒரு முட்டாள் இவன்!  இப்படி ஒரு மடத்தனமான வேலையைச் செய்ய அவனுக்கு எப்படித் தோன்றியது? ஆனால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். அர்த்தமற்ற இந்த விஷயங்களை எல்லாம் நான் அவனை மறக்கச் செய்கிறேன்.”

நேராக சமையலறைக்குச் சென்றவர் அங்கிருந்த மேஜைக்கு அருகே அமர்ந்து தன்னுடைய மகனுக்காகக் காத்திருந்தார். அல்யோஷா வழக்கம் போல எதோ அவசர வேலையாக எங்கோ ஓடிக்கொண்டிருந்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே மூச்சிறைக்க அங்கு வந்து சேர்ந்தான்.

“நீ விவேகமுள்ளவன் என நினைத்தேன். ஆனால் நீ என்ன மடத்தனம் செய்ய நினைத்து இருக்கிறாய்?” என்றபடி அவனுடைய தந்தை அவனை வரவேற்றார்.

“நான் எதுவும் செய்யவில்லை.”

“எதுவும் செய்யவில்லை என்பதற்கு என்ன அர்த்தம்? நீ திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து இருக்கிறாய். அதற்கான நேரம் வரும்போது நான் முடிவுசெய்யும் ஒரு பெண்ணை நானே உனக்குத் திருமணம் செய்து வைப்பேன். மது விடுதிகளில் குடித்துக் களியாட்டமிட்டு, விரும்பியவருடன் படுக்கும் வேசியை இல்லை.”

இதே ரீதியில் அவனுடைய அப்பா நிறைய பேசினார். அமைதியாக அங்கு நின்றுகொண்டிருந்த அல்யோஷா பெருமூச்சுவிட்டான். ஒரு வழியாக அவர் பேசி முடித்தபோது அவன் அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“ஆகவே நான் இதை இனி மறந்து விடுகிறேன்” என்றான்.

அங்கிருந்து வெளியேறியபடியே, “அதை உடனடியாகச் செய்” என்று சுருக்கமாகச் சொன்னார் முதியவர்.

அவர் பேசிய அனைத்தையும் சமையல் அறைக் கதவின் பின்புறம் இருந்தபடி உஸ்டிஞ்சா கவனித்துக்கொண்டிருந்தாள். அவர் அங்கிருந்து சென்ற பிறகு அல்யோஷா அவளிடம், “நாம் நினைத்தது நடக்காது. அப்பா பேசுவதை நீ கேட்டாயா? அவர் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார். நம் திருமணத்தை நடக்க  விடமாட்டார்” என்றான்.

உணவுக்கறை படாது ஆடைகளைப் பாதுகாக்கும் மேலுடையுடன் இருந்த உஸ்டிஞ்சா சத்தமில்லாமல் அழுதாள். அல்யோஷா தன் நாக்கை உச்சு கொட்டினான். “அவருடைய பேச்சுக்கு நான் எப்படி கீழ்ப்படியாமல் இருக்க முடியும்? இங்கே பார். நாம் இவை அனைத்தையும் மறந்து விட வேண்டும்.”

கடையின் கதவுகளை அடைப்பதற்கு அவனை மாலை நேரத்தில் அழைத்த வியாபாரியின் மனைவி, “நீ திருமணம் செய்துகொள்வது போன்ற அபத்தங்களை எல்லாம் உன் அப்பாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம். நிச்சயமாக. நான் அதை மறந்துவிட்டேன்” என்று வேகமாக பதில் சொல்லி வழக்கப்படி புன்னகைத்த அல்யோஷா, பிறகு உடனே அழத்துவங்கினான்.

*

அல்யோஷா அதற்குப் பிறகு உஸ்டிஞ்சாவிடம் திருமணப் பேச்சை எப்போதுமே எடுக்கவில்லை. முன் போலவே அவன் வாழ்க்கை தொடர்ந்தது.

உண்ணாவிரதக் காலத்தின்போது ஒருநாள் காலை, கூரையின் மீது இருந்த பனியை அகற்றுவதற்காக குமாஸ்தா அல்யோஷாவைக் கூப்பிட்டு அனுப்பினார். கைகளையும் முழங்கால்களையும் தரைமீது ஊன்றி கூரை மீது ஏறிய அவன், அங்கிருந்த பனியை மண்வெட்டி கொண்டு சுத்தமாக அகற்றினான். நீர்க் கால்வாய்க்கு அருகே உறைந்து போயிருந்த பனியை உடைக்கத் துவங்கிய போது அவனுடைய பாதங்கள் சறுக்கவும் மண்வெட்டியுடன் தலைகுப்புறக் கீழே விழுந்தான். விழுந்தவன் பனியின் மீது விழாமல் துரதிர்ஷ்டவசமாக இரும்புக் கம்பித் தடுப்புடன் இருந்த நுழைவாயில் ஒன்றின்மீது விழுந்தான். உஸ்டிஞ்சா அவனை நோக்கி ஓடினாள். வியாபாரியின் மகள் அவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.

“அல்யோஷா, அதிக அடிபட்டுவிட்டதா?”

“ஆமாம். ஆனால் அது பரவாயில்லை… பரவாயில்லை.”

அவன் எழுந்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனால் எழ முடியவில்லை. புன்னகை பூக்க மட்டுமே முடிந்தது. யாரோ வந்து தோட்டக்காரருக்குச் சொந்தமான விடுதிக்கு அவனைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு பணியாளர் அவனைப் பரிசோதித்து அவனுக்கு எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டார்.

“எல்லா இடத்திலும் அடிபட்டிருக்கிறது” என்று அல்யோஷா பதில் சொன்னான்.

“ஆனால் அதொன்றும் பரவாயில்லை… பரவாயில்லை. எஜமானன்தான் சிறிது கோபப்படுவார். அப்பாவிற்குத் தகவல் சொல்ல வேண்டும்.”

அல்யோஷா இரண்டு மூன்று நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தான். பிறகு மூன்றாவது நாள் அவர்கள் ஒரு பாதிரியைக் கூப்பிட்டார்கள்.

“நீ செத்துவிடமாட்டாய் தானே?”என்று கேட்டாள் உஸ்டிஞ்சா.

“நாம் காலத்துக்கும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கப் போவதில்லை. இது எப்படியும் நிகழ வேண்டிய ஒன்றுதான்” என்று வழக்கப்படி வேகமாக பதில் கூறினான்.

“இனிய உஸ்டிஞ்சா! நன்றி. என்மீது பரிவு காட்டியதற்கு நன்றி. நாம் திருமணம் செய்துகொள்ள அவர்கள் அனுமதிக்காததும் நன்மைக்கே. ஏனெனில் அதனால் எதுவும் நடந்திருக்கப் போவதில்லை. இப்போது எல்லாம் சரியாக இருக்கிறது” என்றான்.

பாதிரியாருடன் சேர்ந்து அவனும் பிரார்த்தனை செய்தான். ஆனால் அந்தப் பிரார்த்தனை அவனுடைய கைகளாலும் மனதாலும் மட்டுமே செய்யப்பட்டது. தான் இங்கு நன்மை செய்தால், கட்டளைகளுக்கு அடிபணிந்தால், யார் மனதையும் புண்படுத்தாது இருந்தால், பிறகு அங்கு தனக்கு எல்லாம் நல்லதாக நடக்கும் என்று தன் மனதுக்குள் நினைத்தான்.

அவன் அதிகம் பேசவில்லை. குடிப்பதற்கு ஏதாவது தருமாறு கேட்டவன், எதோ யோசனையுடன் புன்னகைத்தான். பிறகு எதற்கோ வியப்படைந்தது போலத் தோன்றிய அவன், தன் உடலை நீட்டி இறந்து போனான்.

*

ஆங்கில மூலம்: Alyosha, the pot by Leo Tolstoy

7 comments

Ramasamy Masilamani November 21, 2020 - 9:50 pm

அருமை , நண்பர் கயல் அவர்களே. நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அன்பும்.

Renuga November 22, 2020 - 2:23 am

Awesome story translated in tamil. Superb

M.M.Bysel November 22, 2020 - 7:11 am

படிப்பதற்கு தடையில்லாத ஓட்டம்.கதாபாத்திரத்திற்கு பங்கம் வராத வகையிலிருக்கும் கதை

நா.வே.அருள் November 22, 2020 - 8:58 am

அருமையான கதையும் மொழிபெயர்ப்பும்.

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 234| 9 நவ. 2020 November 22, 2020 - 9:30 am

[…] எடுப்பார் கைப்பிள்ளை – லேவ் தல்ஸ்தோய… – எஸ்.கயல் […]

Williams November 22, 2020 - 7:38 pm

அய்யோ.. இன்று உருப்படியான வேலை.. உருக்கமான இந்தக் கதையைப் படித்தது ?

Maarani November 26, 2020 - 2:43 pm

சிறப்பாக இருக்கிறது
வாழ்த்துகள்

Comments are closed.