கலை என்றால் என்ன? – லேவ் தல்ஸ்தோய்

1 comment

தல்ஸ்தோய் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் ‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பில் ஒரு ஆக்கத்தை வழங்கினார். எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து, பதினைந்து வருடங்கள் பல வடிவங்களில் எழுதி, இறுதியிலும் முடிவான வடிவமென்று தனக்கு முழுவதும் திருப்தியில்லாத ஒன்றையே அளித்தார். அவ்வாக்கத்திற்கு இன்றளவில் இரண்டு ஆங்கில வடிவங்கள் உள்ளன. இவற்றை வாசித்ததும் புரிபடுவது – எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து எவையெல்லாம் நல்ல கலைகளல்ல என்பதையே தல்ஸ்தோய் தன் பார்வையில் நிறுவியுள்ளார் என்பதே.

‘கலை என்றால் என்ன?’ எனும் தலைப்பின் கீழுள்ள புத்தக வடிவம் சில அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் சில நூறு பக்கங்களில் ஒரே பெரிய கட்டுரை. அதைச் சுருக்கி, ‘சிறு கட்டுரை’யாக்குவது அபத்தம். சோம்பேறிகளின் வசதிற்கேற்ப மூலத்தைச் சுருக்கி முகநூல் பதிவாக்கும் செயல். அப்பணியையே இங்கு செய்ய முனைந்துள்ளேன். முன்பின் தொடர்பு துறந்து பிய்த்தெடுத்தாலும் பொதுவான பொருள் மாறுபடாதிருக்கும் என நான் கருதும் சிற்சில பகுதிகளை மட்டும் தொகுத்து இக்கட்டுரையில் வழங்கியுள்ளேன். முன்பசிக்கு என்றே கொள்ள வேண்டும். வாசித்ததும் கலை பற்றி தெளிவுகளைவிட மேலதிகச் சந்தேகங்களையே கிளப்பி விட்டிருக்குமானால் வெற்றியே. புத்தகத்தின் ஆங்கில வடிவையோ அல்லது தமிழில் வெளியாகும் முழு வடிவையோ நாடுவதற்கு இக்கட்டுரை உங்களுக்கு வழிகோலியிருக்கும்.

https://histrf.ru/uploads/media/artworks/0001/49/thumb_48190_artworks_original.jpeg

இது வரிக்கு வரி ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு செய்யப்பட்ட மொழியாக்கம் அல்ல. அவ்வாறு செய்வதற்கான மொழி நிபுணத்துவமும் முனைப்பும் என்னிடம் இல்லை. மேற்சொன்ன இரண்டு ஆங்கில வடிவங்களையும் சில துணை நூல்களையும் வாசித்து, கலை பற்றி தல்ஸ்தோய் கொண்டிருந்த கருத்துகளின் சாரத்தையே இக்கட்டுரையில் வழங்கியுள்ளேன்.

வழக்கம் போல பூச்செண்டுகளை தல்ஸ்தோயிடமும் செங்கற்களை என்னிடமும் அனுப்பி வையுங்கள். இனி தல்ஸ்தோய்…

*

ஒவ்வொரு பாலேயும் சர்க்கஸும் இசைநாடகமும் கண்காட்சியும் ஓவியமும் கச்சேரியும் புத்தகப் பதிப்பும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பைக் கோருகின்றது. அதுவும் கட்டாயப்படுத்தப்பட்டு, பெரும்பாலும் புண்படுத்துகிற கீழ்மையான இடுபணிகளாய்.

https://images.fineartamerica.com/images-medium-large/leo-tolstoy-1828-1910-russian-writer-everett.jpg

கலைஞர்களே இப்பணியாவற்றையும் செய்துகொள்வார்கள் எனின் நன்றே. ஆனால், இல்லை. அவர்களுக்கு கலையை உருவாக்குவதற்கு மட்டுமின்றி, தங்கள் சொகுசான இருத்தலுக்கும் இப்பணியாட்களின் உதவி தேவை. அகடெமிக்களுக்கும் அரங்கங்களுக்கும் மில்லியன்களில் செலவழிக்கப்படும் இந்நாட்டில், கலைஞர்கள் இவ்வுழைப்பைச் செல்வந்தர்களின் ஆதரவு, அரசாங்க மான்யம் என்று எவ்வகையிலாவது மற்றவர்களிடம் கோரி, பெற்றும் விடுவார்கள். மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் ‘அரசாங்க மான்யம்’ உருவாவதற்கோ ஒரு பசுமாடு விற்கப்பட்டிருக்கும். விற்றவனோ கலை அளிக்கவிருக்கும் அழகியற் உணர்சிகளை ஒருபோதும் அனுபவிக்கப் போவதில்லை.

*

அதனால்தான் ஒரு சமுதாயம் ஆதரித்து கலை என்று உருவாக்கி அளிப்பவையெல்லாமே நிஜமாகவே கலைதானா, அவ்வாறுதானென்றால் அவ்வகைக் கலையெல்லாமே நம் சமுதாயம் கருதுவதுபோல சிறப்பானதுதானா, முக்கியமானதுதானா என அதற்கெனத் தியாகங்களைக் கட்டாயமாக்குவதற்கு முன் இவற்றையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகின்றது. இவற்றை ஒவ்வொரு மனசாட்சியுள்ள கலைஞனும் அறிந்துகொள்வதும் அதிமுக்கியமாகிறது. ஏனெனில், தாம் செய்வது அனைத்திற்குமே பொருள் உண்டு என்றறிகையிலேயே மனோதிடம் பெறுவான். அது தன்னைச் சுற்றி இயங்கும் ஒரு சிறுகுழுவின் வெறியால் தனக்குள் உருவாகும் போலியான மனோதிடமல்ல என்பதையும் அறிந்துகொள்வான். தன் சொகுசான வாழ்விற்கென, தான் மற்றவர்களிடம் கோரும் உதவிகளுக்குப் பிரதியாகவே தன் ஆக்கங்கள் அமையும் என்பதையும் உணர்வான். இதனாலேயே மேற்படி கேள்விகளுக்கான பதில்கள் நம் காலத்திற்கு மிக அவசியமாகின்றது.

கலை என்பது என்ன? அதற்கு மனிதகுலம் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து வாழ்வையும் உழைப்பையும் ஏன் நல்லிணக்கத்தையுமே கட்டாயக் காவாய்க் கொடுக்கிறது?

*

இதுநாள்வரை கலாரசிகர்கள் தங்கள் மதிப்பீடுகளுக்காக நம்பியிருந்த கலை விமர்சனங்களும் இப்போதெல்லாம் முரண்பாடான முடிவுகளையே கொடுக்கின்றன. எத்தனை முரண்பாடு என்றால் கலா விமர்சகர்கள் எவற்றையெல்லாம் கலை அல்ல என்கிறார்கள் என்பவற்றைக் கவனித்து நீக்கிவிட்டால் கிட்டத்தட்ட எதுவுமே கலை என எஞ்சாது.

https://i.pinimg.com/originals/fa/f5/46/faf5463458c9eb882ef286e5d9273101.jpg
காலையில் எழுந்ததும் எழுத்து

பலவகை இறைமையியலாளர்கள் போல கலைஞர்களும் ஒருவரையொருவர் இல்லாமலடித்துக் கொள்கிறார்கள். …நாவல் எழுத்திலோ இயற்கையாளர்கள், உளவியலாளர்கள், இயல்பியலாளர்கள் ஒருவருக்கொருவரை நிராகரித்துக்கொள்வார்கள். இயல், இசை, ஓவியம் அனைத்திலும் இதே நிலைதான். இதனால் எண்ணற்ற மனித வாழ்க்கையையும் உழைப்பையும் கோரி, பலவாறு நேசத்தினை உதாசீனப்படுத்தும் ‘கலை’ எனும் விஷயமே எதுவென்று தெளிவாகப் புரிபடாத ஒன்றாகிவிட்டது. மட்டுமின்றி, அதன் இரசிகர்களுக்கிடையே முரண்பாடான புரிதல்களில் சிக்கி, இன்னதென்று எளிதில் புரிந்துகொள்ள முடியாததாகி, குறிப்பாக இத்தனை தியாகங்களை அர்பணிப்பதற்கு அவசியமாகின்ற நல்ல பயனுள்ள கலை எது என்பதும் புரியாமலாகி விட்டது.

*

எது மக்களுக்கு அல்லது மக்களின் ஒரு சாராருக்கு இன்பமளிக்கிறதோ அதுவே கலை என்பது அழகைச் சார்ந்திருக்கும் கலையின் விளக்கமாகும்.

மனிதனின் எவ்வகைச் செயல்பாட்டினையும் விளக்க அதன் பொருளையும் தனிச்சிறப்பையும் புரிந்துகொள்வது அவசியம். இதற்கு முதலில் அந்த இன்பத்தைத் தாண்டிய செயல்பாட்டையும் அது சார்ந்துள்ள காரண காரியங்களையும் ஆராய்வது அவசியமாகிறது.

மனித காரியங்களுக்கு இன்பமே முழுமுதற் காரணமென்பது தவறான விளக்கமாகும். இவ்வாறு கலையை விளக்கியதால்தான் குழப்பங்கள் நேர்ந்தன. உதாரணமாக உணவு உண்பதினால் வரும் இன்பத்தை மட்டுமே நோக்கினால் உணவின் அவசியத்தையும் தனிச்சிறப்பையும் மறந்துவிடுவோம். சுவை தரும் இன்பம் அதன் ஊட்டச்சத்தைச் சார்ந்தது அல்ல. எனவே மிளகு, பாலாடை, மது என்று நமக்கு பழக்கமான உணவுதான் உலகிலேயே சிறந்த உணவு என்று கொள்ளுதல் மடமை.

கடிதங்களை வாசிக்கும் தல்ஸ்தோய்

அதைப்போலவே, அழகோ இன்பம் தருவதோ மட்டும் கலை ஆகிவிடா. அவ்வாறு கருதுவது சுவையையே ஊட்டமாகக் கருதும் காட்டுமிராண்டித்தனம் ஆகும். உணவு உண்பதே சுவைக்காகத்தான் என்று நினைப்பதற்கு ஒப்பாகும் கலையைப் பயனில்லா இன்பமாகக் கருதுவது. உணவை ஊட்டத்திற்கு உண்ணத் தொடங்கும்போதுதான் சுவையின் சிறையிலிருந்து விடுபடுவோம். கலையிலும் அவ்வாறே. அழகையும் இன்பத்தையும் மீறி யோசித்தால் மட்டுமே கலையைப் புரிந்துகொள்ள முடியும். அழகையோ இன்பத்தையோ கலையின் நோக்கமாகக் கொண்டோமெனில், கலை ஏன் சிலருக்கு மட்டும் இன்பம் அளிக்கிறது என்ற கேள்விக்கு மனோதத்துவம், உடலியல், தத்துவம், வரலாறு என்று எங்கும் பதில் தேடி அலைவோம்.

கலை என்பது என்ன, ஏன் கலையை உருவாக்குவதில் எண்ணற்ற நேரமும் உழைப்பும் உயிர்களுமே தியாகம் செய்யப்படுகின்றன என்ற கேள்விகளுக்குப் பதில் கூறவே, தற்போதைய அழகியல் துறையானது, ‘கலையின் இலக்கு அழகு. அழகு இன்பத்தால் அறியப்படுகிறது. எனவே கலை தரும் இன்பம் இன்றியமையாதது’ என்றெல்லாம் விளக்கங்கள் கொடுத்து வருகிறது. இவ்வாறு கூறுவது கலையின் விளக்கம் அன்று. கலைக்காக செய்யப்பட்ட தியாகங்களை நியாயப்படுத்தும் தந்திரம் ஆகும். அழகை அஸ்திவாரமாய் கொண்டு கட்டப்பட்ட கலையைப் பற்றிய கணக்கிலடங்கா ஏடுகளும் கலையைப் பற்றிய சரியான விளக்கத்தை இந்நாள்வரை கொடுக்கவில்லை என்பதே இன்றைய விசித்திர உண்மையாகும்.

*

கலையை இன்பத்தோடு இணைத்து, மனித வாழ்வின் குறிக்கோளுடன் இணைக்காமலிருப்பதே அனைத்து விளக்கங்களும் குறைகள் கொண்டதாய் இருப்பதற்கு காரணமாகும்.

கலையை இன்பத்தின் வழியாக கருதுவதைத் துறந்து மனித வாழ்வின் நிலையாகக் கருதினால் மட்டுமே முழுவதுமாக விளக்க முடியும். இவ்வாறு பார்த்தோமெனில் கலை என்பது மக்களிடத்தில் ஒற்றுமையை விளைவிக்கும் வழி என்பது புரியும். கலையின் எவ்வகை ஆக்கத்திலும் படைப்பாளனுக்கும் ஏற்பவனுக்கும் இடையே ஒருவிதமான தொடர்பு உருவாகிறது. எண்ணங்களையும் அனுபவங்களையும் பிறருடன் பகிரும் பேச்சுவார்த்தைகள் மக்களை ஒன்றுபடுத்துவது போலவே கலையும் மக்களை ஒருமைப்படுத்துகிறது. பேசும் சொற்கள் மக்களின் எண்ணங்களைப் பகிர உதவுகின்றன. கலையோ மக்களின் உணர்வுகளைப் பகிரும் மேடையாகிறது. படைப்பாளியின் உணர்வுகளை படைப்பின் மூலம் கிரகிப்பவரும் அவ்வுணர்வுகளை உணரக்கூடும் என்பதே கலையின் அடித்தளமாகும்.

https://i.pinimg.com/564x/4b/29/70/4b297097cc8d6a3ebeccacae22ec056a.jpg

மேற்கண்ட விளக்கத்தை வலியுறுத்த எளிமையான உதாரணங்களைக் காண்போம். ஒருவன் சிரிக்கும்போது அதைக் கேட்பவனும் மகிழ்கிறான். அழும்போது பார்ப்பவனும் துன்பத்தை உணருகிறான். உடலசைவால், குரலால் மனிதன் வெளிக்காட்டும் உணர்வு அருகிலிருப்போருக்கும் பரவிவிடுகிறது. ஒருவனின் வேதனை அருகிலிருப்போரை பாதிக்கிறது. ஒருவர் ஒன்றின்மேல் கொண்ட மதிப்பு, மரியாதை, பயம் அடுத்தவருக்கும் பரவுகிறது. இவ்வாறு பரவும் உணர்ச்சிகளே கலையின் அடிப்படையாகும். ஆனால் பார்வையால் மட்டும் பரவுவது கலையாகா. கொட்டாவி பார்க்கையில் பரவுகிறது, அது கலையா? ஒருவன் அழுதால் அதைப் பார்த்து பிறருக்கும் வருத்தம் நேர்ந்தால் அது கலையா? இல்லை.

ஒருவன், தான் அனுபவித்ததை பிறருக்கும் பகிரும் பொருட்டு மீண்டும் அனுபவித்துப் படைக்கும் படைப்பு கலையாகும்.

நரியைப் (ஓநாய்) பார்த்து பயந்த சிறுவன், தான் அனுபவித்த பயத்தைப் பிறருக்குப் பகிரும் பொருட்டு – சூழ்நிலை, அவனது மனநிலை, காடு, நரியின் உருவம், அதன் நடை, இயக்கம், நரிக்கும் அவனுக்கும் இருந்த இடைவெளி ஆகியவற்றை விவரிக்கையில் அந்தப் பயத்தை மீண்டும் தன்னுள் அனுபவிப்பதோடு கேட்பவரையும் அனுபவிக்க வைக்கிறான். இதுவே கலையாகும். நரியை நேரில் பார்க்காவிட்டாலும் அதைக் கற்பனை செய்துபார்த்து அதனால் தோன்றும் பயத்தைப் பிறரிடத்தில் உருவாக்குவதும் கலைதான். மனிதன் நிஜத்திலோ கற்பனையிலோ அனுபவித்த உணர்வை பிறரும் உணரும் வகையில் வெளியிடுவது கலையாகும்.

உணர்வுகள் விதவிதமானவையாய், பலமானதாய், வலுவற்றதாய், குறிப்பிடத்தக்கதாய், சாதாரணமானதாய், நல்லதாய், கெட்டதாய் எவ்விதமாக இருந்தாலும் அது பார்ப்போரை / படிப்போரை / கேட்போரை பாதித்தால் அது கலையாகும். நாடகத்தில் பார்க்கும் கடவுட்பக்தி, நாவலில் படிக்கும் காதலர்களின் பரவசம், ஓவியத்தில் காணும் கிளர்ச்சி, இசையில் கேட்கும் படையின் எழுச்சி, நாட்டியத்தில் காணும் கேளிக்கை, நகைச்சுவையில் உணரும் வேடிக்கை, தாலாட்டின் அமைதி இவையனைத்தும் கலையே. படைப்பாளி அனுபவித்ததை பார்ப்போரும் கேட்போரும் உணர்ந்தால் அது கலை.

https://cdni.rbth.com/rbthmedia/images/all/2016/07/07/tolstoy/8.jpg

கலையாக்கம் என்பது ஒரு மனிதன் – தான் அனுபவித்ததை வெவ்வேறு அறிகுறிகள் / சின்னங்கள் மூலம் பிறரையும் அனுபவிக்கச் செய்வதாகும். கலை என்பது மனோதத்துவ நிபுணர்கள் கூறுவது போல் ஏதோ மர்மமான பொருளின் அழகின் கடவுளின் வெளிப்பாடு அல்ல. உடலியலாளார்கள் சொல்வது போல மிகுதியான சக்தியைச் செலவிடும் விளையாட்டும் அல்ல. உணர்வுகளின் சின்ன வெளிப்பாடும் அல்ல. இன்பம் தரும் பொருளும் அல்ல. அது மனித வாழ்கைக்குத் தேவையான தொடர்புக்கான வழியாகும். இத்தொடர்பின் மூலமே தனிமனித உயர்வும் மனித சமூகத்தின் உயர்வும் அடைய முடியும்.

சொற்கள் மூலமாக எண்ணங்களைப் புரிந்துகொள்ளும் திறன் படைத்ததால், மனிதனால் பிறருடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் செயல்பாடுகளில் பங்கேற்பதைத் தவிர, தன் எண்ணங்களையும் காலங்கள் கடந்தும் பிறருடன் பகிர முடிகிறது. அதுபோலவே, கலையின் மூலம், காலத்தாலும் இடத்தாலும் பிரிந்த பிறரின் உணர்வுகளை உணர முடியும் திறனால், மனிதனால் தன்னுடைய உணர்வுகளையும் காலங்கள் கடந்து பிறருக்கு உணரவைக்க முடிகின்றது.

காலத்தால் பிரிந்த பிறருடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் விலங்குகள் போன்றவர்கள் அல்லது வெளியுலகத் தொடர்பில்லாமல் தனியறையில் வளர்ந்த காஸ்பர் ஹவுஸர் போன்றவர்கள். அதேபோல், கலையினால் பாதிக்கப்படாதவர்கள் காட்டுமிராண்டிகளாகவும் பகையுணர்ச்சியும் கோபமும் கொண்டவர்களாகவும் இருப்பர். எனவே கலை வாய்ப்பேச்சைப் போல் இன்றியமையாததாகும். பரவலானதாகும்.

வாய்ப்பேச்சு என்பது மேடைப்பேச்சு, புத்தகம் போன்றவற்றால் மட்டுமன்றி, ஒருவரோடொருவர் கொள்ளும் உரையாடலாலும் எண்ணங்களைப் பரப்புவது போல், கலை வாழ்க்கையில் நிறைந்திருந்தாலும் ஒருசில வெளிப்பாடுகளையே கலை என்று கொண்டாடுகிறோம்.

அரங்குகளில் பார்ப்பவையையும் பாடல்களையும் கண்காட்சிகளையும் கட்டிடங்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் கதைகளையும் மட்டுமே கலை என்கிறோம். பிறரிடம் நம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள இவை சில வழிகளே ஆகும்.

https://cdni.rbth.com/rbthmedia/images/2017.09/article/59b25d9185600a2eb240f4d9.jpg

தாலாட்டுப் பாடல்களில், விகட வேடிக்கைகளில், அலங்காரங்களில், உடைகளில், மதச் சடங்குகளில் என்று மனித வாழ்வில் கலை எங்கும் விரவிக்கிடக்கிறது. இவை அனைத்தும் கலையென்றாலும் இவற்றிலும் சிலவற்றையே ஏதேதோ காரணங்களுக்காக தனிப்படுத்தி முக்கியத்துவம் கொடுத்து கலை என்று பெயரிடுகிறோம்.

இவ்வாறு தரப்படும் முக்கியத்துவம் அனைத்து மக்களாலும் மத உணர்வைத் தூண்டும் கலையாக்கங்களுக்குத் தரப்படுகிறது. சாக்ரெடிஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் போன்றோர் கலையை இவ்வாறே பார்த்தனர். ஹீப்ரூ தீர்க்கதரிசிகளும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் கூட இவ்வாறே கருதினர்.

சில மதத் தலைவர்கள், முந்தைய கிறித்தவர்கள், ரிபப்ளிக் என்ற ஆக்கத்தில் பிளாட்டோ, கடுமையான இஸ்லாமியர்கள், பௌத்த பிக்குகள் போன்றோர் கலையையே நிராகரித்துள்ளனர். இவ்வாறு நிராகரித்தோர் கலையை இன்பம் தரும் பொருளாய்ப் பார்க்காமல் ஒருவரின் இசைவின்றி அவர்களை பாதிக்கும் ஆபத்தாகப் பார்க்கின்றனர். பேச்சுவார்த்தையை உள்வாங்காமல் இருக்க முடியும். கலையின் பாதிப்பை உணராமல் இருக்க இயலாது. எனவே கலையை அழித்தால்தான் அழிவிலிருந்து தப்பிக்க முடியும் என்பது இவர்களது வாதம்.

கலையை நிராகரிப்பது பிழையாகும். நிராகரிக்க முடியாததை நிராகரிப்பதாகும். கலை ஒருவரோடொருவர் உணர்வுநிலையில் தொடர்புகொள்ளும் மேடை. இத்தகைய தொடர்பு இல்லாவிட்டால் மனித இனம் தழைக்க இயலாது. அதேபோல் இன்பம் தருவதே கலை என்று கருதும் இன்றைய ஐரோப்பிய எண்ணமும் பிழையானது.

மனித மனத்தை மாசுபடுத்தும் பொருள்கள் கலையில் இருக்கும் என்ற பயம் முன்பு இருந்தது. இப்போதோ கலை தரும் ஏதோ ஒருவகை இன்பம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் கண்டதும் கலையாகக் கருதப்படுகிறது. முதல் பயத்தை விட இரண்டாம் பயமே அதிக தீங்கிழைப்பதால் அதுவே ஆபத்தானதாகும்.

*

அறிவியலும் கலையும் என்றுமே நுரையீரலும் இருதயமும் போல ஒட்டி உறவாடும் துறைகள். ஒன்று கோணினாலும் அடுத்தது சரியாகச் செயல்பட முடியாது.

உண்மையான அறிவியல் என்பது சமுதாயம் ஒரு காலகட்டத்தில் எவற்றை முக்கியமானவை எனக் கருதுகிறதோ அவற்றைப் பற்றிய உண்மைகளையும் அறிவையும் ஆய்ந்தறிந்து மனிதச் சிந்தைப் புலத்தினுள் புழங்கச் செய்வதற்கே செயல்படும். கலை இந்த உண்மைகளை அறிவு நிலையிலிருந்து உணர்வுநிலைக்குக் கடத்திச் செல்கிறது. அதனால், அறிவியல் பிழையான பாதையில் சென்றால், கலையினதும் அவ்வாறே ஆகிவிடும். அறிவியல் நங்கூரத்தை எடுத்துச் செல்லும் சிறு படகாய் செயல்பட்டு மதம் காட்டும் பாதையில் செல்லும். கலை பெரும் படகில் உள்ள கயிறுருளையாகச் செயல்பட்டு நங்கூரத்தை நோக்கிப் படகைச் செலுத்தும். அறிவியலின் பிழையான செயல்பாடு, கலையின் தவிர்க்க முடியாத பிழையான செயல்பாட்டைக் கோரிவிடும்.

https://media.wnyc.org/i/800/0/l/85/1/tolstoy.jpg

கலை பலவகையான உணர்வுகளைக் கடத்த வல்லது. இருந்தும், நாம் அதை நமக்கு முக்கியமான உணர்வுகள் எவை எனத் தோன்றுகிறதோ அவற்றை மட்டுமே கடத்த வல்லதாய்க் கொள்கிறோம். அறிவியல் என்பதும் பொதுவில் அனைத்து வகையான அறிதல்களையும் கடத்த வல்லதே. ஆனாலும் அறிவியல் எனும் சொல்லையும் நாம் முக்கியமானவை எனக் கருதும் அறிதல்களைக் கடத்த வல்லது எனும் மிகக் குறுகலான பொருளிலேயே கொள்கிறோம்.

ஒரு காலகட்டத்தில் மதச் சிந்தனை கட்டமைத்து வைத்திருக்கும் மன நிலையைப் பொறுத்தே கலை கடத்தும் உணர்வுகள், அறிவியல் கடத்தும் அறிதல்கள் இவற்றின் முக்கியத்துவத் தரவரிசை அமைகிறது. அதாவது, ஒரு காலகட்டத்தில் ஒரு சமுதாயத்தில் மக்களால் தங்கள் வாழ்வின் நோக்கம் எதுவென்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளதோ அதனைப் பொறுத்தே மேற்படி தரவரிசை அமைகிறது.

*

‘கலை கலைக்கு மட்டுமே’ எனும் கோட்பாடு எப்பொருள்களெல்லாம் நம்மைச் சுகப்படுத்துகிறதோ அவையெல்லாம் கலை என்று வரையறுத்துக்கொள்கிறதே, அதுபோலவே, எவையெல்லாம் நமக்கு ஈடுபாடு அளிக்கவல்லதோ அவையெல்லாம் அறிவியல் என்று ‘அறிவியல் அறிவியலுக்கே’ எனும் கோட்பாடு வகுத்துக்கொள்கிறது.

இதனால் அறிவியலின் ஒரு பகுதி, மனிதர்கள் எவ்வகையில் வாழ்ந்தால் தங்கள் வாழ்வின் பயனை ஈந்துவார்கள் என்று ஆராய்வதை விட்டு, இருக்கும் தவறான வாழ்க்கைப் பாதைகள் எவ்வாறு சட்டமைப்புகளுக்கு ஏற்றது, மாற்றத்தக்கதல்ல என்று பிரகடனப்படுத்துகிறது. மற்றொரு பகுதியான பரிசோதனை அறிவியலோ எளிய ஆர்வப் புரிதல்களிலும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உயர்த்துவதிலும் ஈடுபடுகிறது.

https://i.pinimg.com/originals/cd/7e/cd/cd7ecd8789112e5bbe8d1d5bbf8ba96e.jpg

முதல் தவறான பகுதி, மக்களின் சிந்தையைக் குழப்பி, தவறான பாதைகளுக்கு இட்டுச்செல்வது மட்டுமில்லாமல் தன்னுடைய இருத்தலால் உண்மையான அறிவியல் எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது. இதன் ஊறு எவனொருவன் வாழ்வின் உண்மையான கேள்விகளை ஆராயத் தொடங்குகிறானோ, அவனால் நேரடியாக அதைச் செய்ய முடியாமல், முதலில் ஆண்டாண்டு காலமாக மனிதப் புத்திக்கூர்மையினால் ஒவ்வொரு கேள்வியைச் சுற்றியும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள இவ்வகையான தவறான கட்டுக்கோப்புகளைத் தகர்த்தெறிந்துவிட்டே தொடங்க முடியும் என்றாகிறது.

இரண்டாவது பகுதியைப் பற்றி புதிய அறிவியல் புலமே பெருமிதம் கொண்டுள்ளது. அப்பகுதியே உண்மையான அறிவியல் என்றும் பலரால் கருதப்படுகிறது. இந்த இரண்டாவது அறிவியல் பகுதியின் மறைமுக ஊறு, முக்கியமான விஷயங்களை விட்டு அவசியமற்ற விஷயங்களின் மேல் மக்களின் கவனத்தைத் திருப்பிவிடுகிறது. நேரடி ஊறு, முதல் அறிவியல் பகுதி பரிந்துரைக்கும் தவறான கட்டுக்கோப்பையும் நோக்கையும் ஏற்றுக்கொள்வதன் மூலம், இரண்டாவது பகுதியின் பெரும்பாலான தொழில்நுட்ப முன்னேற்றச் சாதனைகளும் மனித குலத்தின் நலனுக்கன்றி கேட்டிற்கே வழிகோலுகிறது.

*

கலை சார்ந்து நான் எதைச் செய்ய முனைந்தேனோ அதையே அறிவியல் சார்ந்தும் செய்வார்கள் என்று நம்ப வேண்டும். அறிவியல் அறிவியலுக்காகவே எனும் கருத்தாக்கத்தின் பிழையை மக்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். கிறித்துவ போதனைகள் அவற்றின் உண்மையான பொருளில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும். இந்தப் போதனைகளைக் கொண்டே நாம் பெருமைகொள்ளும் அனைத்து அறிவுத்துறைத் தேட்டங்களும் சேகரங்களும் மறுபரிசீலனை செய்யப்படவும் வேண்டும். மக்களுக்குப் பரிசோதனைகள் வாயிலாகப் பெறப்படும் அறிவு இரண்டாம்பட்சமானது, மதிப்பற்றது என்பதையும் மதம், அறம், சமூகம் வழங்கும் அறிவுத்தேட்டங்களே முதன்மையானவை – முக்கியமானவை என்பதையும் அத்தகைய அறிவுத்துறைகள் மேட்டுக்குடிகளால் மட்டுமே வழிநடத்தப்பட விட்டுவைக்கப்பட வேண்டியவை அல்ல என்பதையும் அனைவரும் சுதந்திரமாக இயங்குவதற்கு அவை பிரதானமானவை என்றும் உண்மையை விரும்புபவர்கள் மேட்டுக்குடியுடன் அனைத்திலும் ஒத்துப்போக மாட்டார்கள் என்றும் எதிராகச் செயல்படுபவர்களே அறிவியல் வாழ்க்கைப் பாதையில் உண்மையாக முன்னகர்கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டும்.

கணிதம், வானியல், இயற்பியல், ரசாயனம், உயிரியல், தொழில்நுட்பம், மருத்துவவியல் போன்றவை கற்கப்படலாம். மதம், நீதித்துறை, சமூகம் சார்ந்த ஏமாற்றுத்தனங்களில் இருந்து மக்களை அக்கல்வி விடுவிக்கும் என்றால், அல்லது, ஒரு குடி மட்டுமின்றி அனைத்துக் குடியினரின் நலத்திற்கும் அவை பணிசெய்யும் என்றால்.

இவ்வாறு நடந்தால் மட்டுமே அறிவியல் தற்போது இருக்கும் நிலையைத் துறக்கும். ஒருபக்கம் காலவதியாகிவிட்ட அமைப்புகளைக் கட்டிக்காப்பதற்கான குதர்க்கங்களும் மற்றொரு புறம் வடிவமற்ற கூளமாக கொஞ்சத்தைத் தவிர அனைத்துமே தேவையற்றவை என்றான பலவித அறிவுச்சேகரங்களும் என்றிருக்கும் இன்றைய அறிவியல், தன் நிலையை விடுத்து ஒரே ஒத்திசைவான, உயிரோட்டமான, முழுமையாக பகுத்தாய்ந்த குறிக்கோளுடன் அனைத்து மக்களுக்கும் புரியுமாறு மாற வேண்டும். மாறி, மக்களின் சிந்தைப் புலத்தில் இன்றைய மதச்சிந்தனைப் புலங்கள் தெளிவிக்கும் உண்மைகளை ஊட்ட வேண்டும்.

அப்போதுதான் அறிவியலை என்றுமே சார்ந்துள்ள கலை என்பது எதுவாக இருக்க வேண்டுமோ அவ்வாறு இருக்க இயலும் – அதாவது மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு அறிவியலைப் போலவே முக்கியமான உயிர் அங்கமாக.

கலை என்பது கேளிக்கையோ ஆறுதலோ வேடிக்கையோ அல்ல. கலை உன்னதமான ஒன்று. கலை மனித வாழ்வின் ஓர் அங்கம், மக்களின் நியாயமான உணர்வுகளை (consciousness) உணர்ச்சிகளாக (feelings) மாற்றவல்லது. இன்றைய காலகட்டத்தில் பொதுவான மதவுணர்வு என்பது மனிதனின் சகோதரத்துவ உணர்வே. கூடி வாழ்தலின் நல்லுணர்வே. இந்த உணர்வை எவ்வாறு வாழ்க்கையில் பிரயோகிப்பது என்பதையே உண்மையான அறிவியல் சுட்டிக்காட்ட வேண்டும். கலை நோக்கமானது, இந்த உணர்வுகளை மனித உணர்வுகளாக மாற்றி கடத்த வேண்டும்.

கலை எதிர்கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது. உண்மையான அறிவியலின் துணைகொண்டு வழிநடத்தப்படும் நிஜமான கலை உருவாக்க வேண்டியது மனிதனின் அமைதியான கூட்டுவாழ்வை. இன்று அத்தகைய வாழ்வானது சட்டமன்றம், காவல்துறை, பொதுநல இயக்கங்கள், பணி பரிசீலனைகள் போன்ற வெளிக்காரணிகளால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்வாழ்வு மனிதனின் சுதந்திரமான மகிழ்வான செயல்பாட்டினால் உருவாக்கப்பட வேண்டும். கலை வன்முறையை ஒழிக்க வேண்டும். கலை மட்டுமே அதைச் செய்ய முடியும்.

https://stagevoices.com/wp-content/uploads/2018/03/Gorky.jpg
தல்ஸ்தோயும் மாக்சிம் கார்க்கியும்

வன்முறை, தண்டனை (இன்றைய வாழ்க்கைமுறை இவற்றையே பெரும்பாலும் சார்ந்துள்ளதன்றோ?) இவற்றிற்கு அஞ்ச வேண்டாமல் மனிதகுலம் கூடிவாழ்வதை ஏதுசெய்யும் அனைத்தையும் இன்று கலையே அளித்துள்ளது. மதச் சின்னங்கள் சார்ந்த பழக்கவழக்கங்களை, பெற்றோரை, குழந்தைகளை, மனைவியரை, உறவினரை, அந்நியரை, அயல்நாட்டினரை நடத்தும் வழிமுறையை, முதியோரை, உயர்பதவியினரை, விரோதிகளை, மிருகங்களை, துயருற்றவரை நடத்தும் வழிமுறையை – வன்முறையின்றி கலையால் மட்டுமே மாற்றவல்ல வழிமுறைகளால் இவற்றை கோடிக்கணக்கான மனிதர்கள் பல தலைமுறைகளாக கையாண்டிருக்கிறார்கள் – கலை மூலம் கடத்த முடியும் என்றால் அதே கலையால் தற்கால மதச் சிந்தனையுடன் ஒத்துப்போகும் வேறுபல புதிய பழக்கவழக்கங்களையும் கடத்த முடியும்.

புனித உருவங்களின், யூகரிஸ்டுகளின், அரசன் எனும் மனிதனின் மேன்மையை உணர்வதை, நட்பிற்கு இழைத்த துரோகத்தின் அவமானத்தை, கொடியின்பால் விசுவாசத்தை, அவமதிப்பிற்கு பழிவாங்குவதன் அவசியத்தை, தேவாலயங்கள் எழும்புவதற்கு தன் உழைப்பை அளிப்பதன் தேவையை, சுயமரியாதையை, நாட்டின் புகழைக் காக்க வேண்டிய கடமையை – இவற்றையெல்லாம் கலை என்பது மனிதர்களிடம் எழுப்பிக் கடத்த முடியுமென்றால் பின் அதே கலையால் தனிமனிதனின் கௌரவத்தின்பால் மதிப்பையும் அனைத்து மிருகங்களின் வாழ்வையும் எழுப்ப முடியும். சொகுசுகளை அனுபவித்தல், வன்முறை பழிதீர்த்தல், சிலருக்கு மிகத்தேவை என்பவற்றை ஒருவன் களிப்பிற்கெனப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அவமானத்தையும் கலையால் எழுப்ப முடியும். மனிதர்கள் தங்களைப் பொருட்டாது தியாகங்கள் செய்து விருப்போடும் மகிழ்வோடும் அடுத்தவர்களுக்குப் பணிசெய்வதையும் கலையால் தட்டியெழுப்ப முடியும்.

https://i.pinimg.com/564x/9b/bc/31/9bbc316ac90ba347430cde8f0405da7a.jpg

சமூகத்தின் வாய்த்த சிலரிடம் இருக்கும் நற்பண்புகளெனும் சகோதரத்துவமும் அண்டையரிடம் அன்பு பாராட்டுவதும் அனைவராலும் வெளிப்படுத்த முடிந்த இயல்பானச் செயல்பாடு என்றாக கலை வழிகோல வேண்டும். இதே சகோதரத்துவத்தையும் அன்பையும் மதம் சார்ந்த கலை கற்பனையான நிபந்தனைகளின் துணைகொண்டு மனிதர்கள் அனுபவிக்க வழிகோலலாம். மதம் சார்ந்த கலை மனங்களில் ரயில் பாதைகளை இடட்டும், அதன்மீது உண்மையான கலை வெளிக்கொணரும் மனித இயல்புகள் தன்னிச்சையாகப் பயணிக்கட்டும். மனிதகுலத்தினை ஒருங்கிணைக்க வேண்டிய கல்வி என்று பல்வேறு வகையான மனிதர்களை ஒரே உணர்வின் மூலம் ஒன்றுபடுத்துவதையும் பிரிவினையை ஒழிப்பதையுமே முழுமையான மனிதர்களின் கலை வழங்க வேண்டும். வழங்கி, பகுத்தறிதலில் இல்லை வாழ்க்கை – அதை வாழ்வதிலேயே உள்ளது என்பதையும் வாழ்வின் தடைகளைக் களைந்து பொதுவாகக் கூடிவாழ்தலிலேயே ஆனந்தம் உள்ளது என்பதையும் காட்டட்டும்.

மனிதர்களின் நல்வாழ்வு ஒற்றுமையிலேயே, அவர்களிடத்தே இன்று நிலவும் வன்முறையின் இடத்தில் நாம் அனைவரும் வாழ்வின் உயரிய இலக்காகக் கொள்ளும் அன்பெனும் இறைவனின் ஆட்சியை நிலைநாட்டுவதே ஆகிய உண்மைகளை பகுத்தறிவின் எல்லையிலிருந்து உணர்வுகளின் எல்லைக்குள் கடத்துவதே இக்காலத்தில் கலையின் குறிக்கோள் என்பதாகும்.

வருங்காலத்தில் அறிவியல் ஒருக்கால் இன்னமும் புதிய விழுமியங்களை கலைக்கு திறந்துகொடுக்கலாம், கலையும் அவற்றை மெய்யாக்கிக் கவனப்படுத்தலாம். ஆனால், நம் காலத்தில் கலையின் குறிக்கோள் தெளிவானது, திடமானது. கிறித்துவக் கலை என்பதின் பணி மனிதகுலத்தின் சகோதரத்துவத்தை மெய்யாக்கி உணர்த்துவதே.

*

ஆங்கில மூலம்:What is Art?’ by Leo Tolstoy.

1 comment

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:15 pm

[…] கலை என்றால் என்ன? – லேவ் தல்ஸ்தோய் – அருண் நரசிம்மன் […]

Comments are closed.