நீண்ட காத்திருப்பு – லேவ் தல்ஸ்தோய்

by ஜான்ஸி ராணி
2 comments

இவான் டிமிட்ரிச் அக்சியோனோவ் என்ற இளம் வணிகன் விளாடிமிர் நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரு கடைகளும் ஒரு வீடும் சொந்தமாக இருந்தது.

அக்சியோனோவ் வெளிர்நிற சுருண்ட தலைமுடியுடன் அழகாக இருந்தான். பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவனாகவும் கொண்டாட்டம் நிரம்பியவனாகவும் இருந்தான். இளவயதில் குடிப்பழக்கமுடையவனாக, அதீதமாக குடித்தால் கலகம் செய்பவனாக இருந்தபோதிலும், திருமணமான பின் எப்போதாவது ஒருமுறை குடிப்பதைத் தவிர்த்து குடிப்பழக்கத்தை கைவிட்டிருந்தான்.

அப்போது கோடைகாலம். நீஜ்னி பொருட்காட்சிக்குப் புறப்பட்டுச் செல்வதற்காக தன் குடும்பத்தினரிடம் விடைபெறும் சமயம், “இவான் டிமிட்ரிச், இன்று கிளம்ப வேண்டாம். நான் உன்னைப் பற்றிய கெட்ட கனவொன்றைக் கண்டேன்” என அவனுடைய மனைவி கூறினாள்.

அக்சியோனோவ் சிரித்தபடி, “நான் கண்காட்சிக்குப் போனால் மனம் போனபடி களியாட்டத்தில் ஈடுபடுவேனென நீ பயப்படுகிறாய்” என்றான்.

“நான் எதற்காக பயப்படுகிறேன் எனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் கெட்ட கனவொன்றைக் கண்டேன் என்பதுதான். நீ நகரத்திலிருந்து திரும்பியவுடன் தொப்பியைக் கழட்டும்போது, உனது தலைமுடி நரைத்திருப்பதாகக் கனவு கண்டேன்” என்று அவன் மனைவி பதில் கூறினாள்.

அக்சியோனோவ் சிரித்தபடி, “அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி. என்னுடைய எல்லா சரக்குகளையும் விற்றுவிட்டு உனக்குச் சந்தையிலிருந்து சில பரிசுகளை வாங்கி வருகிறேனா இல்லையா பார்” என்றான்.

தன் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

பயணத்தின் பாதி வழியில் தனக்கு அறிமுகமான வணிகர் ஒருவரைச் சந்தித்தான். இருவரும் ஒரே விடுதியில் அன்றிரவு தங்கினர். இரண்டு பேரும் இணைந்து கொஞ்சம் தேநீர் அருந்திய பிறகு அருகருகேயான அறைகளில் உறங்கச் சென்றனர்.

தாமதமாக உறங்குவதென்பது அக்சியோனோவின் பழக்கமல்ல. குளிர்ச்சியான காலைப் பொழுதில் பயணத்தைத் தொடரும் பொருட்டு தன் வண்டியோட்டியை எழுப்பி, குதிரைகளைப் பூட்டச் செய்தான்.

விடுதியின் பின்புற குடிலில் தங்கியிருந்த விடுதி உரிமையாளரை நோக்கிச் சென்று, வாடகையை அளித்த பின் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.

ஏறத்தாழ இருபத்தைந்து மைல்களைக் கடந்த பிறகு குதிரைகளுக்கு உணவளிக்கும் பொருட்டு நின்றான். சிறிது நேரம் விடுதியின் நடைவழியில் ஓய்வெடுத்த அக்சியோனோவ், பின் முகப்பு அறையில் நுழைந்து, சமோவர் ஒன்றைச் சூடாக்க உத்தரவிட்டபடி, தன்னுடைய கிட்டாரை எடுத்து வாசிக்கத் துவங்கினான்.

மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்று மணி அடித்தபடி திடுமென வந்தது. இரு வீரர்கள் பின்தொடர அதிகாரி ஒருவர் அதிலிருந்து இறங்கினார். அக்சியோனோவிடம் அவன் யாரெனவும் எங்கிருந்து வந்தானெனவும் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அக்சியோனோவ் முழுமையான பதில்களை அளித்தான். “என்னுடன் தேநீர் அருந்த மாட்டீர்களா?” என வினவினான். ஆனால் அந்த அதிகாரி, “நேற்றிரவு எங்கிருந்தாய்? நீ தனியாக இருந்தாயா அல்லது சக வணிகனுடனா? அந்த மற்றொரு வணிகனை இன்று காலை பார்த்தாயா? நீ ஏன் விடியலில் விடுதியை விட்டுப் புறப்பட்டாய்?” என்று தொடர்ந்து குறுக்கு விசாரணை செய்தார்.

இந்தக் கேள்விகளெல்லாம் தன்னிடம் ஏன் கேட்கப்படுகின்றன என அக்சியோனோவிற்கு திகைப்பாக இருந்த போதிலும் நடந்தவற்றையெல்லாம் விவரித்ததுடன், “நான் திருடனோ கொள்ளைக்காரனோ அல்ல. எதற்காக என்னை இவ்வாறு குறுக்கு விசாரணை செய்கீறீர்கள்? என் வியாபாரத்திற்காக நான் என் வழியில் பயணிக்கிறேன். என்னைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை” என்றும் சொன்னான்.

“நான் இந்த மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி. நேற்றிரவு உன்னுடன் இருந்த அந்த வியாபாரி கழுத்து அறுபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளான். உன் உடைமைகளைப் பரிசோதனையிட வேண்டும்” என்று வீரர்களை அழைத்தபடி அவர் கூறினார்.

அவர்கள் உள்ளே நுழைந்து அக்சியோனோவின் பயண மூட்டைகளைச் சோதனையிட்டனர். திடீரென அவன் பையிலிருந்து கத்தி ஒன்றை எடுத்த அதிகாரி, “இது யாருடைய கத்தி?” என அதிகாரத் தோரணையுடன் சத்தமிட்டார்.

அக்சியோனோவ் தன் பையிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தக்கறை படிந்த கத்தியைக் கண்டு வெலவெலத்தான்.

“இந்தக் கத்தியில் இரத்தம் எப்படி வந்தது?”

அக்சியோனோவ் பதிலளிக்க முயன்றான். ஆனால், “எனக்குத் தெரியவில்லை.. என்னுடையதில்லை”, என வார்த்தைகள் வெளிவராமல் திக்கினான்.

“இன்று காலை அந்த வணிகன் கழுத்து அறுபட்டு படுக்கையில் கிடந்தான். இதனை செய்திருக்கக்கூடியவன் நீ மட்டுமே. விடுதியறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. அங்கு வேறு எவருமில்லை. இங்கே உன் பையில் இந்த இரத்தக் கறையுடைய கத்தி உள்ளது. உன் முகமும் நடவடிக்கையும் உன்னைக் காட்டிக்கொடுக்கின்றன. ம்… சொல்.. எப்படி அவனைக் கொன்றாய்? எவ்வளவு பணத்தைக் கொள்ளையடித்தாய்?” என்று அதிகாரி வினவினார்.

தான் கொலை செய்யவில்லையென்றும், சேர்ந்து தேநீர் அருந்திய பின் அவ்வணிகனைப் பார்க்கவில்லை என்றும் தன் சொந்தப் பணமான எட்டாயிரம் ரூபிள் தவிர்த்து வேறு பணமில்லை என்றும், அந்தக் கத்தி தன்னுடையதில்லை என்றும் அக்சியோனோவ் சத்தியம் செய்தான். ஆனால், குற்றம் செய்தவனைப் போல பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய குரல் உடைந்தும் முகம் வெளிறியும் இருந்தது.

அக்சியோனோவின் கால்களைக் கட்டி வண்டியில் போடுமாறு காவல் அதிகாரி வீரர்களிடம் கட்டளையிட்டார். அவர்கள் அவனை வண்டியுள் எறிந்த போது அவன் தன்னை சிலுவையிட்டுக்கொண்டு அழுதான். அவன் பணமும் சரக்குகளும் அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அருகிலிருந்த நகரத்தில் சிறை வைக்கப்பட்டான். விளாடிமிரில் அவன் குணநலனைப் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. வணிகர்களும் அந்நகரத்தில் வசிப்பவர்களும், அவன் முன்னர் குடித்துவிட்டு நேரத்தை வீணடிப்பவனாக இருந்த போதிலும் நல்லவன்தான் என்றனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. ரைஸான் நகரத்தின் வணிகனைக் கொலை செய்து, அவனுடைய இருபதாயிரம் ரூபிள் பணத்தைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டான்.

விரக்தியிலிருந்த அவன் மனைவி எதை நம்புவதெனத் தெரியாதிருந்தாள். அவள் குழந்தைகள் மிக சிறியவர்களாக இருந்தனர். அதிலொன்று தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தை. அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தன் கணவன் எங்கு சிறைவைக்கப்பட்டிருந்தானோ அந்த நகரத்திற்குச் சென்றாள். அவனைக் காண்பதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் மிகவும் கெஞ்சிக் கேட்ட பிறகு அவனிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். தன் கணவன் சிறை உடையில், சங்கிலிகள் பிணைக்கப்பட்டு, திருடர்களுடனும் குற்றவாளிகளுடனும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு கீழே விழுந்தவள், நீண்ட நேரத்திற்கு சுயநினைவு கொள்ளவில்லை. பிறகு குழந்தைகளை தன்னிடம் இழுத்துக்கொண்டு அவனருகில் அமர்ந்தாள். வீட்டு விஷயங்களை அவனுக்குத் தெரிவித்தவள், அவனுக்கு என்ன நிகழ்ந்ததென வினவினாள். அனைத்தையும் அவளுக்கு உரைத்தான். “நாம் இப்போது என்ன செய்வது?” எனக் கேட்டாள்.

“குற்றம் புரியாத அப்பாவி ஒருவன் இறப்பதை அனுமதிக்க வேண்டாமென பேரரசரிடம் விண்ணப்பம் அளிப்போம்.”

பேரரசரிடம் விண்ணப்பம் அளித்ததாகவும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சொன்னாள். அக்சியோனோவ் பதில் கூறவில்லை, ஆனால் மனம் தளர்ந்தவனாக இருந்தான். பிறகு அவள், “இதன் காரணமாகத்தான் உன்னுடைய தலைமுடி நரைத்தது போல நான் கனவு கண்டேன். உனக்கு நினைவிருக்கிறதா? நீ அன்று புறப்பட்டிருக்கவே கூடாது” என்றாள். அவள், அவன் தலைமுடியைக் கோதியவாறு, “அன்பே வன்யா, உன் மனைவியிடம் உண்மையைச் சொல். அந்தக் கொலையை நீ செய்தாயா?” எனக் கேட்டாள்.

“எனவே நீயும் என் மீது சந்தேகம் கொள்கிறாய்!” என்ற அக்சியோனோவ், முகத்தை தன் கைகளால்  மறைத்துக்கொண்டு, விம்மி அழத் துவங்கினான். பின் வீரன் ஒருவன் வந்து அவனுடைய மனைவியும் குழந்தைகளும் சென்றுவிட வேண்டுமென்றான். அக்சியோனோவ் தன் குடும்பத்தினருக்கு இறுதி விடை கொடுத்தான்.

அவர்கள் சென்ற பிறகு, அவ்வுரையாடலை நினைத்துப் பார்த்த போது, தன் மனைவியும் தன்னைச் சந்தேகப்படுவதைப் பற்றி எண்ணியவுடன், “கடவுள் மட்டுமே உண்மையை அறிவார். நாம் இனி அவரிடம் மட்டுமே முறையிட வேண்டும். அவரிடமிருந்து மட்டுமே கருணையை எதிர்பார்க்க வேண்டும்” என தனக்குத்தானே பேசிக்கொண்டான் அக்சியோனோவ்.

அக்சியோனோவ், பிறகு எந்த மனுவும் எழுதவில்லை. எல்லா நம்பிக்கைகளையும் கைவிட்டு, கடவுளிடம் மட்டுமே பிரார்த்தனை செய்தான்.

அக்சியோனோவிற்கு கசையடி தண்டனை அளிக்கப்பட்டு சுரங்கத்திற்கு அனுப்பப்பட வேண்டுமென தீர்ப்பு சொல்லப்பட்டது. அதனால் சவுக்கால் அடிக்கப்பட்டு, காயங்கள் ஆறிய பிறகு, மற்ற கைதிகளுடன் சைபீரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

சைபீரியாவில் இருபத்தியாறு ஆண்டுகள் கைதியாக வாழ்ந்தான் அக்சியோனோவ். அவனது தலைமுடி பனியைப் போல வெண்மையானது, நீளமாக வளர்ந்த அவனது தாடி மெலிந்தும் நரைத்தும் இருந்தது. அவனது அத்தனை களிப்பும் காணாமல் போனது. அவன் நின்றான், மெதுவாக நடந்தான், சிறிதளவே பேசினான், ஒரு போதும் சிரிக்காத அவன், அடிக்கடி பிரார்த்தனை செய்தான்.

சிறையில் ‘பூட்ஸ்’ தைக்கக் கற்றுக்கொண்டு கொஞ்சம் பணம் சம்பாதித்து ‘புனிதர்களின் வாழ்க்கை’ எனும் புத்தகத்தை வாங்கினான் அக்சியோனோவ். சிறையில் போதிய வெளிச்சம் இருந்த போது இப்புத்தகத்தைப் படித்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் சிறை தேவாலயத்தில் பாடங்களை வாசித்தான். அவனது குரல் அப்போதும் நன்றாக இருந்தபடியால் பாடகர்கள் குழுவில் பாடினான்.

சிறை அதிகாரிகளுக்கு அக்சியோனோவின் சாந்தம் பிடித்திருந்தது. அவனது சக சிறைவாசிகள் அவன் மீது மரியாதை செலுத்தினர். ‘தாத்தா’ என்றும் ‘புனிதர்’ என்றும் விளித்தனர். அவர்கள் எதன் பொருட்டாவது சிறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமெனில் அக்சியோனோவை தங்கள் பிரதிநிதியாக்கினர். அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் அவ்விஷயங்களை நேர் செய்யவும் தீர்ப்பளிக்கவும் அவனிடம் வந்தனர்.

அக்சியோனோவிற்கு அவன் வீட்டிலிருந்து எந்தச் செய்தியும் எட்டவில்லை. அவன் மனைவியும் குழந்தைகளும் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை.

ஒருநாள் புதிய குற்றாவாளிகள் கொண்ட கும்பல் ஒன்று சிறைக்கு வந்தது. மாலை வேளையில் புதியவர்களைச் சுற்றிக்கொண்ட பழைய கைதிகள், அவர்கள் எந்த நகரம் அல்லது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எதற்காக தண்டனை பெற்றவர்கள் என்றும் வினவினர். மற்றவர்களுடன் அக்சியோனோவும் புதியவர்களின் அருகில் அமர்ந்து, தளர்ந்த கீழ் நோக்கிய பார்வையுடன் அவர்கள் சொல்வதை கவனித்தான்.

புதிய கைதிகளிடையே நரைத்த குறுந்தாடியுடன் உயரமாகவும் வலுவாகவும் இருந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவன், தான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.

“நல்லது நண்பர்களே! பனிச்சறுக்கு வண்டியில் கட்டப்பட்டிருந்த குதிரை ஒன்றை எடுத்ததற்காக, ‘திருடினேன்’ என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டேன். நான் விரைந்து வீட்டிற்குச் செல்லவே அதை எடுத்தேன் என்றும், பிறகு அதனை அவிழ்த்துவிட்டேன் என்றும் கூறினேன். அத்துடன் வண்டியோட்டி என் நண்பன்தான். ஆகவே, “இதெல்லாம் சரி” என்று நான் கூற, “இல்லை, நீ திருடினாய்” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், நான் எங்கே எவ்வாறு திருடினேன் என அவர்களால் சொல்ல முடியவில்லை. முன்பு ஒரு சமயம் நான் மெய்யாகவே தவறு செய்தேன். நியாயமாக நீண்ட காலத்திற்கு முன்னரே இங்கு வந்திருக்க வேண்டியவன். ஆனால் அப்போது நான் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதோ ஒன்றுமில்லாததற்கு இங்கு வந்துள்ளேன்.. ஓஹ்.. உங்களிடம் நான் சொல்வதெல்லாம் பொய்கள். இதற்குமுன் சைபீரியாவிற்கு வந்துள்ளேன். எனினும், நீண்ட நாள் தங்கவில்லை.”

“நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என யாரோ கேட்டார்கள்.

“விளாடிமிரிலிருந்து வந்துள்ளேன். என் குடும்பத்தினர் அந்நகரத்தைச் சேர்ந்தவர்கள். என் பெயர் மகர், சிம்யோனரிச் எனவும் அழைப்பர்.”

அக்சியோனோவ் தன் தலையை நிமிர்த்தி, “சிம்யோனரிச், உனக்கு விளாடிமிர் நகரத்தைச் சேர்ந்த அக்சியோனோவ் வணிகர்களைப் பற்றி எதுவும் தெரியுமா? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? எனக்குச் சொல்” என்று கேட்டான்.

“ஆம், எனக்குத் தெரியும். அக்சியோனோவ் குடும்பத்தினர் பணக்காரர்கள். அவர்களின் தந்தை நம்மைப் போன்ற பாவியாக சைபீரியாவில் இருக்கின்றார் போலும்! அது சரி தாத்தா, நீங்கள் எதனால் இங்கு வந்தீர்கள்?”

அக்சியோனோவ் தன் துரதிர்ஷ்டம் குறித்து பேச விரும்பவில்லை. “நான் செய்த பாவத்திற்கு இருபத்தியாறு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன்” எனப் பெருமூச்சுடன் சொன்னான்.

“என்ன பாவங்கள்?” என வினவினான் மகர் சிம்யோனரிச்.

“ஹூம்.. நான் அதற்குத் தகுந்தவனாக இருந்திருக்க வேண்டும்” என்பதை மட்டும் சொன்னான் அக்சியோனோவ். அதற்கு மேல் கூறி இருக்கமாட்டான். ஆனால், அவனுடன் இருந்தவர்கள், அக்சியோனோவ் சைபீரியாவிற்கு வந்த கதையையும், வணிகனை யாரோ ஒருவன் கொன்றுவிட்டு அக்சியோனோவின் பொருட்களிடையே கத்தியைப் போட்டு வைத்தான் என்பதையும், அக்சியோனோவ் அநியாயமாக தண்டிக்கப்பட்டதையும் புதியவர்களிடம் கூறினார்கள்.

மகர் சிம்யோனரிச் இதைக் கேட்டபோது, அக்சியோனோவை நோக்கி, “ஓ… இது உண்மையில் விசித்திரமானது! ஆனால், தாத்தா, உங்களுக்குத்தான் எத்தனை வயதாகிவிட்டது!” என்று அடக்கமுடியாத சிரிப்புடன் கூறினான்.

அவன் எதற்கு இத்தகைய வியப்படைந்தான் எனவும் இதற்கு முன் அக்சியோனோவை எங்கே கண்டான் எனவும் வினவிய போது மகர் சிம்யோனரிச் பதிலளிக்கவில்லை. “இங்கே நாம் சந்திக்க வேண்டுமென்பது விந்தையானது!” என்று மட்டும் கூறினான்.

இதைக் கேட்ட அக்சியோனோவிற்கு, ஒருவேளை அந்த வணிகனைக் கொன்றவனை இவன் அறிந்திருக்கக் கூடுமோவென ஆவல் தோன்றியது. “சிம்யோனரிச், இந்த விவகாரத்தைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கக்கூடும் அல்லது என்னை முன்பு சந்தித்திருக்கக் கூடுமோ?”

“உலகமே வதந்திகளால் நிரம்பியுள்ள போது நானென்ன செய்ய முடியும்? ஆனால் அது நீண்ட காலத்திற்கு முன் என்பதால், கேள்விப்பட்டதை நான் மறந்துவிட்டேன்.”

“ஒருவேளை அந்த வணிகனைக் கொலை செய்தது யாரென்று நீ கேள்விப்பட்டிருக்கலாம்” என அக்சியோனோவ் கேட்டான்.

மகர் சிம்யோனரிச் சிரித்தபடி, “வேறு எவனோ கத்தியை அங்கே மறைத்து வைத்திருந்தானெனில், ‘பிடிபடும்வரை அவன் திருடனில்லை’ என்ற சொலவடைக்கேற்ப, யாருடைய பையில் கத்தி இருந்ததெனக் கண்டுபிடிக்கப்பட்டதோ அவன்தான் கொலைகாரனாக இருக்க வேண்டும். உங்கள் தலைக்கடியில் இருந்த பையில் வேறு யாரும் கத்தியை எப்படி ஒளித்துவைக்க முடியும்? நிச்சயம் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டிருக்கும்” என்று பதில் சொன்னான்.

இதனைக் கேட்ட போது இவன்தான் அவ்வணிகனைக் கொலை செய்தவன் என உறுதியாக எண்ணினான் அக்சியோனோவ். அவன் எழுந்து சென்றுவிட்டான். அக்சியோனோவ் அன்றிரவு முழுதும் விழித்தே இருந்தான். மிகுந்த வருத்தமுற்ற அவனுக்கு பல்வேறு காட்சிகள் மனதில் தோன்றின. பொருட்காட்சிக்கு அவன் புறப்படும் போதிருந்த அவன் மனைவி பற்றிய மனப்படிமம் தோன்றியது. அவளுடைய முகமும் கண்களும் அவனுக்கு முன் இருந்தது. அவள் பேசுவதையும் சிரிப்பதையும் கேட்டான். அப்போது சின்னஞ் சிறியவர்களாக இருந்த அவனுடைய குழந்தைகளைக் கண்டான். ஒருவன், சிறிய மேலாடை அணிந்தவன். மற்றொருவன் அவளிடம் பாலருந்தும் பாலகன். அப்போது இளமையானவனாகவும் கொண்டாட்டம் நிரம்பியவனாகவும் இருந்த தன்னை நினைத்துக்கொண்டான். கைது செய்யப்படும் போது, எத்தனை சுதந்திரமானவனாக அந்த விடுதியின் முகப்பில் அமர்ந்து கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தான் என்பதையும் நினைத்துப் பார்த்தான். மக்களும் அதிகாரியும் சுற்றி நின்றிருக்க, கசையடி தண்டனை நிகழ்ந்த இடத்தையும், சங்கிலிகள், கைதிகள், இருபத்தியாறு வருடச் சிறை வாழ்க்கை, முன்கூட்டிய முதுமை என தன் மனதில் அனைத்தையும் கண்டான். தற்கொலை செய்துகொள்ளத்தக்க மன உளைச்சலை இவ்வெண்ணங்கள் தோற்றுவித்தன.

“இவை எல்லாமே அந்தக் கெட்டவனால் நிகழ்ந்தது” என அக்சியோனோவ் நினைத்தான். தான் இறக்க நேர்ந்தாலும் பரவாயில்லை, அவனைப் பழி தீர்க்க வேண்டுமென்ற அளவிற்கு மகர் சிம்யோனரிச்சின் மேல் கோபம் எழுந்தது. இரவு முழுவதும் பிரார்த்தனைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்த போதிலும் அவன் மனம் அமைதி கொள்ளவில்லை. பகலில் மகர் சிம்யோனரிச்சின் அருகில் செல்லவில்லை, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இரண்டு வார காலம் இவ்விதமாக கழிந்தது. அக்சியோனோவினால் இரவில் தூங்கவே முடியவில்லை. இது குறித்து என்ன செய்வதென்று அறியாத துயரில் இருந்தான்.

ஒருநாள், இரவு நேரத்தில் அவன் சிறைக்குள் நடந்துகொண்டிருந்த போது, கைதிகள் படுத்துக்கொள்ளும் தட்டடுக்கின் அடிப்புறத்தில் இருந்து மண் வெளிவருவதைக் கண்டான். அது என்னவெனப் பார்ப்பதற்காக நின்றான். திடுமென மகர் சிம்யோனரிச் தட்டடுக்கின் அடிப்புறத்திலிருந்து வந்து அக்சியோனோவை பயந்த முகத்துடன் நோக்கினான். அவனைப் பாராமல் கடந்து விடலாம் என அக்சியோனோவ் நினைத்தான். ஆனால் மகர் சிம்யோனரிச் அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு, சுவருக்குக் கீழே குழி ஒன்றைத் தோண்டியுள்ளதாகவும் தினமும் கைதிகள் வேலை செய்ய அனுப்பப்படும் சமயம், மண்ணை பூட்ஸுக்குள் போட்டுக்கொண்டு போய் சாலையில் கொட்டுவதாகவும் கூறினான்.

“முதியவரே, நீங்கள் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். நீங்களும் வெளியே தப்பிக்கலாம். நீங்கள் உளறினால், என்னைக் கொன்று விடுவார்கள். ஆனால் அதற்கு முன்னமே நான் உங்களைக் கொன்று விடுவேன்.”

தன் எதிரியைக் கண்ட அக்சியோனோவ் கோபத்தில் நடுங்கினான். தன் கைகளை விடுவித்தபடி, “தப்பிக்கும் எண்ணம் எனக்கில்லை. நீ என்னைக் கொல்லத் தேவையில்லை. நீண்ட காலத்திற்கு முன்பே நீ என்னைக் கொன்றுவிட்டாய்! நான் உன்னைக் காட்டிக் கொடுப்பதும் கொடுக்காததும் கடவுள் என்னை வழிநடத்துவதைப் பொறுத்தது” என்றான்.

அடுத்த நாள், கைதிகளை வெளியில் வேலைக்காக அனுப்பிய போது, கைதிகளுள் யாரோ ஒருவன் பூட்ஸுக்குள் மண் நிரப்பிக் கொட்டுகிறான் என்பதைக் காவல் வீரர்கள் கண்டுபிடித்தனர். சிறைச்சாலையைச் சோதனையிட்ட போது சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆளுநர் வந்தார், யார் குழி தோண்டியதெனக் கண்டுபிடிக்க அனைத்து கைதிகளிடமும் விசாரணை செய்தார். தங்களுக்கு எதுவும் தெரியாதென எல்லோரும் சொன்னார்கள். அதைப் பற்றித் தெரிந்தவர்கள், மகர் சிம்யோனரிச் கசையடித் தண்டனையால் இறக்கக்கூடுமென காட்டிக் கொடுக்காமல் இருந்தனர். அக்சியோனோவ் நியாயவான் என்று அறிந்திருந்ததால் கவர்னர் அவனிடம், “நீங்கள் நேர்மையானவர் முதியவரே, கடவுள் சாட்சியாகக் கூறுங்கள், யார் குழி தோண்டியது?” எனக் கேட்டார்.

அக்சியோனோவைப் பாராமல் ஆளுநரை நோக்கியபடி கவலையற்றவனாக நின்றான் மகர் சிம்யோனரிச். அக்சியோனோவ், உதடுகளும் கைகளும் நடுங்க, ஒரு வார்த்தைகூட சொல்லாமல் நீண்ட நேரம் நின்றபடி இருந்தான். “என் வாழ்வைக் கெடுத்தவனை நான் ஏன் காப்பாற்ற வேண்டும்? நான் துயரம் கொண்டதற்கு அவனும் அனுபவிக்கட்டும். ஆனால் நான் கூறினால் அவன் கசையடியால் இறக்க நேரிடும். ஒருவேளை, நான் அவனை தவறாகச் சந்தேகப்படுகிறேனா, கடைசியில் இதனால் எனக்கென்ன நன்மை விளையும்?” என தனக்குள் எண்ணிக்கொண்டான்.

“முதியவரே, உண்மையைக் கூறுங்கள். சுவரின் அடியில் யார் தோண்டிக்கொண்டிருந்தார்கள்?” என ஆளுநர் மீண்டும் கேட்டார்.

அக்சியோனோவ் மகர் சிம்யோனரிச்சை ஒரு பார்வை பார்த்தார். “என்னால் சொல்ல இயலாது ஐயா. நான் கூற வேண்டுமென்பது கடவுளின் விருப்பமாக இல்லை! நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் உங்களுக்குக் கட்டுப்பட்டவன்” என்றான்.

ஆளுநர் எவ்வளவு முயற்சி செய்த போதிலும், அக்சியோனோவ் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லையாதலால் இவ்விஷயத்தை அப்படியே விடவேண்டியதாயிற்று. அன்றிரவு அக்சியோனோவ் தனது படுக்கையில் கண்ணயரும் நேரத்தில், அவனருகில் சத்தமின்றி ஒருவன் வந்து அமர்ந்தான். இருட்டைக் கூர்ந்து நோக்கி அது மகர் என அக்சியோனோவ் கண்டுகொண்டான்.

“இன்னும் என்னிடம் உனக்கென்னதான் வேண்டும்? இங்கு எதற்கு வந்திருக்கிறாய்?” என்று அக்சியோனோவ் கேட்டான்.

மகர் சிம்யோனரிச் அமைதியாக இருந்தான். அக்சியோனோவ் எழுந்து அமர்ந்து, “உனக்கு என்ன வேண்டும்? இங்கிருந்து செல், இல்லையெனில் நான் காவலாளியை அழைப்பேன்” என்றான்.

மகர் சிம்யோனரிச் அக்சியோனோவிற்கு மிக அருகே குனிந்து, “இவான் டிமிட்ரிச், என்னை மன்னியுங்கள்!” என முணுமுணுத்தான்.

“எதன் பொருட்டு?” என வினவினான் அக்சியோனோவ்.

“வணிகனைக் கொன்று அந்தக் கத்தியை உங்கள் பையில் மறைத்து வைத்தது நான்தான். உங்களையும் கொல்ல நினைத்தேன். அந்தச் சமயத்தில் வெளியில் ஏதோ சத்தம் கேட்டதால் கத்தியை மறைத்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாகத் தப்பித்தேன்.”

“இதைப் பேசுவதற்கு உனக்கு எத்தனை சுலபமாக இருக்கிறது! ஆனால், இருபத்தியாறு வருடங்களாக உன்னால் நான் பெருந்துயரமுற்றேன். நான் இனி எங்கே செல்வேன்? என் மனைவி இறந்துவிட்டாள். என் குழந்தைகள் என்னை மறந்துவிட்டார்கள். நான் போவதற்கு இடமேயில்லை.”

மகர் சிம்யோனரிச் எழவில்லை. தன் தலையைத் தரையில் மோதியபடி, “இவான் டிமிட்ரிச், என்னை மன்னியுங்கள்!” என அழுதான். “என்னை சவுக்கால் அடித்த போதுகூட தாங்கிக்கொண்டேன். ஆனால் உங்களை இப்போது இப்படி பார்ப்பதைத்தான் தாங்க முடியவில்லை. இருந்தபோதிலும், நீங்கள் என்மேல் இரக்கம் கொண்டு காட்டிக்கொடுக்கவில்லை. கிறிஸ்துவின் பெயரால், என்னை மன்னியுங்கள், நான் பாதகன்!” அவன் விம்மத் துவங்கினான்.

அக்சியோனோவும் அவனுடைய விம்மலைக் கேட்டு அழத்தொடங்கினான்.

“கடவுள் உன்னை மன்னிப்பார்” என்றான். “நான் உன்னை விட நூறு மடங்கு மோசமானவனாக இருக்கக்கூடும்.” இவ்வார்த்தைகளைக் கூறிய பின் வீட்டிற்கான ஏக்கம் மறைந்து, அவனுடைய மனம் இலேசானது. இவ்விஷயங்களுக்குப் பிறகு, சிறையை விட்டு வெளியே செல்வதற்கு அவன் விருப்பங்கொள்ளவில்லை. ஆனால், தன் இறுதி நேரத்திற்காக காத்திருந்திருந்தான்.

தன்னை அக்சியோனோவ் மன்னித்து விட்ட பிறகும், தன்னுடைய குற்றத்தை மகர் சிம்யோனரிச் ஒப்புக்கொண்டான். அக்சியோனோவின் விடுதலைக்கான ஆணை வந்தபோது அவன் ஏற்கெனவே இறந்திருந்தான்.

*

ஆங்கில மூலம்: The Long Exile by Leo Tolstoy

2 comments

புத்தகக்குறி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020 November 22, 2020 - 4:14 pm

[…] நீண்ட காத்திருப்பு – லேவ் தல்ஸ்தோய் – ஜான்ஸி ராணி […]

Kulashekar T November 24, 2020 - 5:24 am

Crime and punishment.. self realisation becomes the real freedom.

Comments are closed.