கல்லறைத் தோட்டத்து ஜெய கீதங்கள்

3 comments

“யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் உம்மிடம்தானே உள்ளன… யாரிடம் செல்வோம் இறைவா…” இந்தப் பாடல் எங்கள் ஊரில் எந்த வீட்டில் கேட்கிறதோ அந்த வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பதனை உறுதிசெய்து கொள்ளலாம். துக்க வேளைகளில் தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொள்ள இயற்றப்பட்ட ஒரு பாடலை முழுக்க முழுக்க சாவு வீட்டுப் பாடலாக மாற்றிய பெருமை சென்னையின் தமிழ் கத்தோலிக்கர்களையே சேரும். இந்தப் பாடலை கத்தோலிக்க ஒப்பாரியென்றே சொல்லலாம். அந்தளவிற்கு மனதைப் பிசைய கூடியது. பாடலைக் கேட்கும்போது செத்தது யாரென்றே தெரியாமல் இருந்தாலும் நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். துக்கத்திற்குத்தான் எவ்வளவு சக்தி? ஆனால் பாருங்கள், மனதை உருக்கும் வரிகளைக்கொண்ட இந்தப் பாடலை ராக தாளத்தோடு பாட மாட்டார்கள், பாடவும் கூடாது. அடித்தொண்டையில் இருந்து இழுத்து… இழுத்து… கட்டைக் குரலில், கிட்டத்தட்ட பள்ளிக்கூடங்களில் ஐந்தாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் குரல்வளத்தோடு மிகவும் மெதுவாகப் பாட வேண்டும் என்கிற பண்பாட்டை உருவாக்கி வைத்திருந்தார்கள். யாரவது தப்பித்தவறி சுருதி சேர்த்து நல்ல குரலில் பாடிவிட்டால் அவரைச் சாபப் பார்வை பார்த்து அமைதியாக்கிவிடுவார்கள். கலாச்சாரம் முக்கியம்.

தமிழ் கத்தோலிக்க சாவு வீடுகள் சுவாரஸ்யங்களும் விசித்திரங்களும் நிறைந்தவை. மறக்கவியலாத ஹிந்து மதச் சடங்குகளும் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மத வழிபாட்டு முறைகளும் ஒன்றோடொன்று கலந்து ஜுகல் பந்தி நடத்தும் மேடையாக அவை திகழ்கின்றன. ஒரு பக்கம் இறந்தவருக்கு மலர் மாலை, காமாட்சி விளக்கு (காமாட்சிக்குப் பதில் மாதா பொறித்த விளக்குகளும் உண்டு), இன்னொரு பக்கம் கலர் கலராக மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கப்பட்டு, மணம் வீசும் சாவு ஊதுபத்திகள் கொளுத்தப்பட்டிருக்கும். இறந்தவர் கைகளில் ஜெபமாலை சுற்றப்பட்டு தலைமாட்டில் வெண்கலச் சிலுவை நிறுத்தப்பட்டிருக்கும். ஐஸ் பாக்ஸ் வருவதற்கு முன்பெல்லாம் மரண வாடையை விரட்ட அவ்வப்போது ஒடைக்கலோன் (Eau de cologne) தெளிப்பார்கள். சாவுக்கு வருபவர்கள் கையில் மாலையோடு கூடவே மெழுகுவர்த்தியும் கடையில் கிடைக்கும் மலிவு விலை ஒடைக்கலோனும் வாங்கிவருவார்கள். சிறுவயதில் இருந்தே இந்த வாசனைகள்தான் மரணம் என்கிற குறியீட்டை எனக்குள் ஏற்படுத்திக்கொண்டிருப்பவை. அந்த வாசனை எங்கிருந்து வந்தாலும் இன்றுவரை என் மூக்கு அதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடும். கூடவே சில மரண நினைவுகளையும். 

இப்படித்தான் நங்கள் குடியிருந்த ஒரு வாடகை வீட்டில் கீழே இந்த மரண வாடை அடிக்கடி வர, நாங்கள் அதைத் தேடிப் போக, அது ஹவுஸ் ஓனர் துபாயிலிருந்து வாங்கிவந்த புது வாசனைத் திரவியம் என்று தெரிந்துகொண்டோம். ஒடைக்கலோனும் மாலையில் கட்டும் பன்னீர் ரோஜாக்களும் சேர்ந்த வாசனை அது. அப்படியே அச்சு மாறாமல் பச்சையாக சாவு வீட்டின் காம்பினேஷன் வாசனை. தன் உடலின்மீது வீசப்போகும் வாசனை எவ்வளவு பெரிய விஷயம்? ஒரு மனிதனுக்கு ஒரு செண்ட்டை தேர்வுசெய்யும் அறிவு கொஞ்சமாவது வேண்டாமா? அந்த செண்ட் பாட்டில் தீர அவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆனது. எங்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வருவதற்கும்.

சாவு வாசனை ஒரு பக்கமென்றால் சென்னை கத்தோலிக்க சாவு வீடுகளுக்கு வருபவர்களின் வாசனை அதற்குமேல் இருக்கும். செண்ட் அடித்துக்கொண்டு சர்ச்சுக்குப் போகும் அதே பழக்கம் சாவு வீட்டிற்கு வரும்போதும் தொடரும். பிணத்தின் மேல்தான் வாடை அடிக்குமென்றாலும், இழவுக்கு வருகிற மனிதர்கள், பயத்தில் தங்கள் மேல் அதிகமாக வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு வருவார்கள். மரணம் மக்களை குழப்பத்திற்குத் தள்ளும் வல்லமை படைத்தது. வருங்காலப் பிணங்களுக்கு நிகழ்காலப் பிணங்களைக் கண்டு பயம். மரணத்தைப் பற்றி பேசும்போது எவ்வளவு தத்துவமாகப் பேசுகிறேன் பாருங்கள். மரணம் நம்மை இப்படியொரு மனச்சுழலுக்குள் தள்ளுகிறது. இப்பொழுதுகூட பாருங்கள். கல்லறையைப் பற்றி எழுத வந்துவிட்டு மரண நினைவுகளில் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறேன்.

சாவு வீடுகளுக்கு வருபவர்களின் தோரணைகளை எல்லாம் ஆய்வுக்குட்படுத்தி எழுதினால் ஒரு நாவலையே முடித்துவிடலாம். சென்னை கத்தோலிக்கர்கள் சாவு வீட்டிற்குச் செல்லும்போதுகூட இரசனையோடு டிரஸ் செய்துகொண்டு போவார்கள். என் அப்பாவையே எடுத்துக்கொள்வோம். ஒரு திருமண நிகழ்விற்கு எப்படி ஆயத்தமாவாரோ கிட்டத்தட்ட அதேமுறைதான் சாவு வீட்டிற்குப் போகும்போதும் பின்பற்றப்படும். எவ்வளவு அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும் அதை உணர்ச்சிவயப்பட்டு கேட்டுவிட்டு, பொறுமையாக முகச்சவரம் செய்துகொண்டு, குளித்துவிட்டு, ஆபீசுக்குப் போவதைப்போல டிப் டாப்பாக உடையணிந்து, பாலிஷ் போட்ட ஷூவை அணிந்துகொண்டுதான் செல்வார். இப்போது வயதாகிவிட்ட காரணத்தினால் சாவு வீட்டிற்குப் போகும்போது மீசைமுடிக்கு டையும் அடித்துவிட்டுப் போகிறார்.

சென்னையின் கிறிஸ்தவர்கள் சாவை அனுஷ்டிக்கும் விதமே அலாதியானது. அவர்கள் வெளியே இங்கிலீஸ்காரர்களைப் போல பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் தமிழர்களைப் போல வியாகுலப்படுபவர்கள். ஆனால் பாருங்கள், எல்லோர் மரணத்திற்கும் கண்ணீர் வந்துவிடாது. செத்தவர்கள் உறவினர்கள் என்றாலும் நம்முடனான வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் எப்படிப் பயணித்தார்கள் என்பதைப் பொறுத்தே கண்ணில் நீர் பொங்குவதும், ஒரு சொட்டுகூட காணாமல் இருப்பதும். மோசமான மாமியார் செத்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அந்த மருமகள் என்ன செய்ய முடியும்? கடன் வாங்கி ஏமாற்றிய உறவினர் சாவில் எங்கிருந்து கண்ணீர் வரும்? இங்கேதான் தமிழர் கலாச்சாரம் புகுந்து விளையாடும். சாவுக்கு வரும் மனிதர்களுக்கு செத்தவர்கள் எப்படிச் செத்தார்கள் என்பதைவிட முக்கியம், சுற்றியிருந்தவர்கள் எப்படி அழுதார்கள் என்பதே.

“அவள பாத்தியாடி.. புருஷன் செத்ததுக்கு அழக்கூட கஷ்டப்படறா..”

“ஒரு சொட்டு தண்ணி வரல அவ கண்ணுல.. அவ்ளோ அழுத்தம் அவளுக்கு..”

“கண்ணுல தண்ணியே வரல. சும்மா கண்ணைப் பிதுக்கிப் பிதுக்கித் தொடைக்குறான் பாரு..”

இதுபோல எவ்வளவு கேட்டிருப்போம்? இதுபோன்ற நூதன சிக்கல்களைத் தீர்ப்பதற்கே சாவு வீடுகளில் ஒப்பாரி முக்கிய அங்கமாகிறது. அதுவே கிறிஸ்தவ வீடுகளில் உன்னத மரண சங்கீதமாக ஒலிக்கிறது.

எங்கள் ஊரில் யாராவது இறந்துவிட்டால் ஷாமைனா பந்தலுக்குச் சொல்லுகிறார்களோ இல்லையோ முதலில் ஊர்ப் பெரியவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள். இங்கே ஊர், ஊர் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது மத்திய சென்னைக்கும் வடசென்னைக்கும் நடுவே பார்டரில் அமைந்திருக்கும் எங்கள் சேரியை. அதிகமான கிறிஸ்தவ ஆதி திராவிடப் பூர்வகுடி மக்கள் வசிக்கும் சேரி. அந்த விளக்கத்தை இங்கே கொடுப்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஊர்ப் பெரியவர் என்றால் பெரும்பாலும் மிகவும் வயதான பெண்மணியாகத்தான் இருக்கும். அவர் தன் கையில் ஒரு நைந்துபோன சின்ன ஜெபப் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி சாவு வீடு நோக்கிவர, அவருக்காக வழிமேல் விழிவைத்து காத்திருப்பார்கள். அந்தப் புத்தகத்தில் சர்வேஸ்வரனாகிய இயேசுவின் கருணையையும் மன்னிப்பையும் வேண்டி ஜெபமும் மரித்த விசுவாசிகளின் பாவப் பொறுத்தல்களுக்காகவும் அவர்களின் ஆன்ம இளைப்பாறலுக்காகவும் சகல பரிசுத்தர்கள், சம்மனசுகள், புனிதர்களை நோக்கிய மன்றாட்டுகளும் தொடங்கும். மாதாவின் இடைவிடாத சகாயத்தை நோக்கிய ஜெபமாலைகள். அனைத்து ஜெபங்களும் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகாலம் பழமையானவை. சம்ஸ்கிருதமும் பழங்காலத்து தூய தமிழ்ச் சொற்களும் ஒன்றுசேர்ந்த விந்தையான கலவையது. எளிதில் விளங்கிக்கொள்ள இயலாதது.

அந்தப் பெண்மணி தன் முதிர்ந்த இதழ்களைத் திறந்து மந்திரம் சொல்வதைப்போல அதை உச்சரிக்கும் வேளையில், இருகை கூப்பி, கண்கள் மூடி பக்தியாக அதைக் கேட்கும்போது மரணம் என்பது நமக்குப் புலப்படாத- மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட- அதிகம் வருத்திக்கொள்ளக்கூடாத சமாச்சாரம் என்று மனது தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்ளும். அந்தப் பெண்மணி தன் ஜெபங்களைச் செய்துமுடித்ததும் இளம் ஜெப ஆர்வலர்கள் அவரோடு சேர்ந்து பாடல்களைப் பாட ஆரம்பிப்பார்கள். அந்தப் பாடலை மேலே சொன்னபடி இழுத்து, கட்டையாக, ஒரு பெரும் சோகத்தோடு பாடும்போது அது அந்த மரணத்தைக் கண்டு துக்கம் கொள்ளாதவர்களையும் விக்கி விக்கி அழச்செய்யும். கண்களில் நீர் திரளச்செய்யும்.

“தாயே …தாயே தீர் தனிலே சுத்தமாய்

நேய ஆத்துமங்கள் நீர் பந்தம் பார்த்தருள்

தீயில் வெந்து தீய்ந்து கொந்தேங்கிறார்

வாய் விட்டழுது உன்னையே பார்க்கிறார்

தாயாம் உந்த நின் தயவதைக் கேட்கிறார்

அல்லல் நீக்கி அவர் ஆறுதல் ஆகுவீர்.”

இந்தப் பாடல்தான் மிகவும் கடைசியாக பாடப்படும் பாடல். உச்சகட்ட அழுகையைக் கொண்டுவரும் பாடல். இதில் ‘தீ’ என்பது உத்திரிய ஸ்தலத்தைக் குறிக்கும். கிறிஸ்தவ நம்பிக்கையின்படி இறந்தவர்கள் பாவம் செய்திருப்பார்களேயானால் அவர்கள் இறந்தபின்னே ஏழு நாட்களுக்கு உத்திரிய ஸ்தல நெருப்பில் வாடுவார்கள். ஏழாம் நாள் அவர்களுக்கு இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அங்கே இருந்து மாதா அவர்களைக் காப்பாற்றவே இந்தப் பாடல். இது பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் பாடப்படும். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை எல்லோரும் பாவிகள். பாவம் செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டாலும் பாவிதான். கிறிஸ்தவத்தைப் போல மனிதனைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கும் மதம் இந்த உலகில் இல்லை. ஆனாலும் பாருங்கள், உலகில் மிகப்பெரிய பாவங்களைச் செய்தவர்களில் கிறிஸ்தவர்கள் அதிகம். அதிலும் சாதி பார்க்கும் இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு இந்தக் குற்றவுணர்ச்சி எல்லாம் எங்கே போய் சொருகிக்கொள்ளும் என்றுதான் தெரியவில்லை.

இந்தக் கடைசிப் பாடலைப் பாடியதும், அழாதவர்கள் எல்லாம் அழுததும், சரியாக அந்த நேரத்தில் இறந்தவரின் பங்கைச் சேர்ந்த பாதிரியார் எண்ட்ரி கொடுப்பார். பங்கு என்றால் இறந்தவரின் பூர்விகத் தேவாலயம் என்று பொருள். பாதிரியார் வந்து புனித நீரைத் தெளித்து மந்திரித்துவிட்டபின் ஹிந்து மத வழிவந்த சடங்குகள் தொடரும். தண்ணீர் ஊற்றி, பிறந்த கொடி போட்டு, இன்னும் கொஞ்சம் சமாச்சாரங்கள் செய்து, அழகாக வடிவமைக்கப்பட்ட சவப்பெட்டியில் உடலை ஏற்றுவார்கள்.

இங்கே இரண்டு அழகான விஷயங்களைப் பற்றி எழுத நினைக்கிறேன். கிறிஸ்தவத்தை அதீதமாக விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால், சாவை தீட்டு என்று ஒதுக்காத அற்புதமான பண்பு கிறிஸ்தவத்தில் இருக்கிறது. குறிப்பாக, எந்தப் பாதிரியார் ஞான ஸ்நானமும் திருமணமும் செய்துவைக்கிறாரோ அவரே இறுதிச் சடங்கும் செய்வார். அதில் எந்தப் பாகுபாடுமில்லை. அவரைப் பொறுத்தவரை பிறப்பு, இறப்பு எல்லாமே ஒரு மாயச்சுழல்தான். அங்கே தீட்டு என்கிற பேச்சிற்கே இடமில்லை.

அதைவிட விசேஷமொன்று இருக்கிறது. அது இன்னும் சுவாரஸ்யமானதும்கூட. இறந்தவர்களை பெட்டியில் வைத்ததும் மிலிட்டரி டிரம்ஸ் வாத்திய இசை ஒலிக்கத் துவங்கும். காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு அவர்களின் பழக்கத்தை இந்தியக் கிறிஸ்தவர்கள் சுவீகரித்ததன் ஒரு பரிமாணம் இது. பேண்ட் வாத்தியத்துடன் இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து கிளம்பி நேராக இறந்தவரின் பங்கிற்குச் செல்லும். அங்கே எல்லா ஏற்பாடுகளும் அதற்குள் செய்யப்பட்டிருக்கும். வீட்டிற்கு வந்து மந்திரித்துச் சென்ற பாதிரியார் அங்கே சென்று திருப்பலியை நிறைவேற்றுவார். சாதாரண வேளைகளில் ஒரு கிறிஸ்தவப் பூசை எப்படி நடக்குமோ அப்படியே நடக்கும். இறந்தவரின் உடல் பலிபீடத்தின் முன்பு வைக்கப்பட்டு திருப்பலி நிறைவேறும். வேறெந்த மாற்றமும் இருக்காது. அதுகூடப் பரவாயில்லை. அங்கிருந்து சவப்பெட்டியை அப்புறப்படுத்திய கையோடு, அரைமணி நேர வித்தியாசத்தில், அதே இடத்தில் திருமணப் பூசை நடக்கும். பிரார்த்தனையும் குழந்தைக்கு ஞான ஸ்நானமும் திருமணங்களும் இறுதிச் சடங்கும் ஒரே இடத்தில் நடைபெறும். தீட்டு, அசுத்தம் என்கிற பேச்சுக்கே அங்கே இடமில்லை. சிலுவையில் இரத்தம் சொட்டச் சொட்ட உயிரற்று தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் முன்னால் பிறப்பும் இறப்பும் எல்லாமும் சமம்.

இதைத்தான் அழகான விஷயம் என்று சொன்னேன். அங்கேதான் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது. இறந்துபோன இயேசு உயிர்தெழுந்தது போல், இறந்துபோன தங்கள் உறவினர்களும் ஒருநாள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவார்கள் என்கிற நம்பிக்கையை கிறிஸ்தவம் விதைக்கிறது. மரணம் எனும் துக்கத்தைச் சமன் செய்யக்கூடிய விஷயம்தான் மறுவாழ்வு என்கிற நம்பிக்கைத் திணிப்பு.

https://sriramv.files.wordpress.com/2017/04/img_1951.jpg

வாழ்ந்தோம், செத்தோம், அடுத்து? இந்த ‘அடுத்து’ என்கிற ஆகப்பெரிய கேள்விதானே மனிதனைப் பித்தனாக மாற்றக்கூடியது? மனிதர்கள் பித்துப்பிடித்துத் திரியாமல் வாழ்வில் பிடிப்போடு இருக்க மனிதனே கொண்டு வந்ததுதானே இந்த இம்மையும் மறுமையும் சொர்க்கமும் நரகமும்? கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அது மோட்சமும் நரகமும். மோட்சமோ நரகமோ எதற்குச் செல்ல வேண்டுமென்றாலும் முதலில் கல்லறைக்குச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் சிஸ்டம். ஆக, கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல, தொடக்கம். சர்ச்சில் நடந்தது இறுதிச் சடங்கல்ல. கல்லறைப் பயணத்தின் தொடக்கம்.

இறந்தவர், சர்ச்சில் இருந்து தனி வண்டியில் கல்லறைத் தோட்டத்திற்குப் பயணப்படுவார். உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு பெரிய தனியார் பேருந்தை ஏற்பாடுசெய்து அதிலே ஏற்றிவிடுவார்கள். ஆண், பெண் என்று எந்தப் பேதமுமில்லாமல் கல்லறைக்குப் புறப்படுவார்கள் .

கல்லறை, எல்லோருக்கும் ஒன்றல்ல. வசிக்கும் பகுதிக்கு ஏற்றாற்போல் கல்லறைகள் மாறுபடும். அதன்படி, எங்கள் கல்லறைதான் சென்னையிலேயே மிகப் பழமையானது. 1760-களில் உருவாக்கப்பட்டது. செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில், பல்லவன் சாலையில், பாடிகார்ட் முனீஸ்வரன் கோவிலுக்குப் பக்கத்தில், சின்ன வழியொன்று போகும். அதன்வழியே சென்றால் பழைய காலத்துப் பேய்ப் படங்களிலும் இந்தக் காலத்து ரௌடிப் படங்களிலும் காட்டப்படும் ஒரு கல்லறைத் தோட்டத்தின் நுழைவுவாயில் வரும். மெட்ராஸ் மாகாணத்தில் வாழ்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்காகவும் இராணுவ வீரர்களுக்காகவும் துரை துரையம்மாக்களுக்காகவும் எழுப்பப்பட்ட முக்கியமான கல்லறைத் தோட்டம். சென்னைக் கோட்டையில் ஆங்கிலேயர்கள் குடியேறியபின் அவர்கள் கட்டிய முதல் தேவாலயம் புனித மேரி தேவாலயம். அது இன்றும் கோட்டையின் உள்ளே உள்ளது. அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுக்காக உருவானதுதான் பார்க் டவுன் கொய்யாத்தோப்புப் பகுதியில் இருந்த முதல் கல்லறைத் தோட்டம்.

பின்பு லாலி தலைமையிலான ஃபிரெஞ்சுப் படைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அந்த இடத்தில் சுற்றுச்சுவர்களை எழுப்ப, அங்கிருந்து மாற்றப்பட்டு பக்கத்திலிருந்த தீவிற்கு இடம் மாறியது கல்லறை. அதுவே இப்பொழுதிருக்கும் புனித மேரி கல்லறை. அதே கல்லறைத் தோட்டத்தின் இன்னொரு பகுதியில் முதல் உலகப்போரில் இறந்தவர்களின் கல்லறைகளும் இருக்கின்றன. அப்படியே இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால், அதன் கடைசிப் பகுதியில் இருப்பதுதான் எங்கள் பரம்பரைக் கல்லறைத் தோட்டம். “உத்திரிய மாதா கல்லறை” என்று ஊர் மக்கள் அதை அழைப்பார்கள். பல வெள்ளைக்காரத் துரைகளோடு சென்னையின் பூர்வகுடி மக்களும் ஒன்றோடொன்றாக கலந்திருப்பார்கள். செத்தபின்பு என்னடா சாதியும் மதமும்? வைட் டவுனில் வாழ்ந்த ஆங்கிலேயனும் ப்ளாக் டவுனில் வாழ்ந்த பூர்வகுடி ஆதி திராவிடனும் அருகருகே ஈஷிக்கொண்டே படுத்திருக்கிறார்கள். பி அண்ட் சி மில்லில் மேஸ்திரி வேலை பார்த்த என் கொள்ளுத் தாத்தனும் அவரை வேலை வாங்கிய வேற்றினத்தவனும் ஒரே கல்லறையில். ஆனால் பாருங்கள், வெள்ளையனோடுகூட எங்களுக்கு ஒரே கல்லறையில் இடம் கிடைத்துவிடுகிறது. மதம் மாறிய சொந்தத் தமிழனோ கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ ரெட்டியார், கிறிஸ்தவப் பிள்ளை என்று தனித்தனி கல்லறைகளில் புரண்டுகொண்டிருக்கிறான்.

கல்லறையைப் பற்றி பேசும்போது அரசியல் எதற்கு என்கிற கேள்வி எழலாம். சாவிலும் இறுதிச் சடங்கிலும் இல்லாத அரசியலா? இந்தியாவைப் பொறுத்தவரை பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லாவற்றிலும் அரசியல் ஒன்றறக் கலந்திருக்கிறது.

சாதியப் படிநிலைபடி ஹிந்துக்களுக்கு இரட்டைச் சுடுகாடு என்றால் இந்தியக் கிறிஸ்தவத்திலோ கல்லறைக்குள்ளேயே சுவர் எழுப்பிப் பாகுபாடு உண்டு. ‘இந்தக் கோட்டைத் தாண்டி நீ வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’. செத்தபிறகு யார் வரப்போகிறார்கள்? முட்டாள் ஜென்மங்கள்.

ஆனால், இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் உத்திரிய மாதா கல்லறை அத்தகையது அல்ல. அது சமத்துவமானது. இனப் பாகுபாடு, நிறப் பாகுபாடு, சாதிப் பாகுபாடு கலைந்தது. கிட்டத்தட்ட அந்தக் காலத்து மெட்ராஸ் எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது. ஆங்கிலேயர்களும் கறுப்பர்களும் அமைதியாக இணைந்து வாழ்ந்ததுபோல.

https://venkatarangan.com/blog/wp-content/uploads/2017/10/Island-Grounds-Walk-Aug2017-L.jpg

இந்த இடத்தில் ஏனோ நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் வரிகள் சட்டென்று ஞாபகத்திற்கு வருகின்றன.

“சாதியில் மேலோர் என்றும்

தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு

தொல்லையின்றியே தூங்கிடும் வீடு

உலகினிலே இதுதான்

நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே..”

மருதகாசியாரின் வரிகள் எவ்வளவு உன்னதமானவை..! தொண்ணூறுகளில் வடசென்னை சாவு வீடுகளிலும் கானா கச்சேரிகளிலும் இந்தப் பாடல் ஒலிக்காத நாளில்லை.

சிறுவயதில், சில முக்கிய தினங்களில், கல்லறைக்கு பெற்றோர் அழைத்துச் செல்லும்போது பக் பக் என்று இருக்கும். அந்தளவுக்கு கல்லறையின் தோற்றம் இருக்கும். காதிக் (Gothic) கட்டிடக்கலையின் தொன்மங்கள் அங்கே அதிகமாகக் காணப்பட்டதன் விளைவு. அதுவும் கல்லறையின் நுழைவாயிலே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். கறுப்பு க்ரானைட், சலவைக் கற்களில் ஆங்காங்கே அழும் தேவதைகள், ஒவ்வொரு கல்லறையின் மீதும் நிற்கும் துக்கமான பெண் என நுழைவுவாயிலில் இருந்து துவங்கும் ஆங்கிலக் கல்லறைகள் நம்மை கிலி கொள்ளச்செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம். அதிலும் என் வீட்டின் சோம்பேறிகள் சாயங்காலம் நான்கு மணிக்குத்தான் கல்லறைக்குச் செல்வார்கள். அந்தி சாயும் வேளையில், கிட்டத்தட்ட இருட்டும் நேரத்தில், அந்த ஆங்கிலேயர்களின் பயமுறுத்தும் கல்லறைகளைக் கடந்து செல்லும்போது கிடுகிடுவென்று படர்ந்திருக்கும் ஓணான் கொடி செடிகள் காலில் சுற்றிக்கொள்ளும். ‘ஈவில் டெட்’ படத்தில் வருமே? அதுபோல… அதிலிருந்து விடுபட்டு எங்களின் பரம்பரை கல்லறையை நெருங்குவதென்பதே மிக மிக ஆபத்தான செயலாகத்தான் தெரியும். அதுவும் அந்த மங்கலான வெளிச்சத்தில் எங்கள் தமிழ்க் கல்லறைகளின் மேல் சொருகப்பட்டிருக்கும் சிலுவைகள் பயமுறுத்தும். கூடவே, அந்த ஓணான் கொடி செடிகளின் மேல் வீசும் ஒருவித வாசனை, எனக்குப் பிணங்களின் வாசனை என்று மனதில் பதிந்துவிட்டது. அதனாலேயே கல்லறைக்குப் போவது என்றால் அத்தனை பயம்.

ஆனால் வளரிளம் பருவத்தில் இந்தப் பயம் ஒருநாள் காணாமல் போனது. அதற்கு முக்கியக் காரணம் என் தந்தையின் குடும்பம். அதிலும் குறிப்பாக, அவரின் உறவினர் பட்டாளம். அவர்களைப் போல மரணத்தை அவ்வளவு ஜாலியாக கையாண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. மரணம் குறித்த என் பயங்களைப் போக்கியவர்கள் இவர்கள்தான். மரணத்தில் அப்படியென்ன ஜாலி வேண்டியிருக்கிறது? எந்த டி.என்.ஏ என்ன செய்தது, எந்த ஜீன் எதனோடு கலந்தது என்று தெரியாது. ஆனால், ஆகச்சிறந்த ஜெனெடிக் வகையறாக்கள் என் தந்தையின் குடும்பத்தில் இருந்தனர். மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லாத காலத்திலேயே ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நூறு வயதுவரை வாழ்ந்தார்கள். அவர்களின் சராசரி ஆயுட்காலம் 80. கடைசியாக, மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோன சின்ன தாத்தாவுக்கு அதிகாரப்பூர்வமாக 102 வயது. பெரியவர்களில் பெரும்பாலும் யாருக்குமே சர்க்கரை நோயோ இதயப் பிரச்சனைகளோ கொலஸ்ட்ராலோ இருந்ததில்லை. பொதுவாக, மூப்பின் காரணமாகவே அவர்கள் இறந்தார்கள் .

திடீரென ஒருநாள் கீழே விழுவார்கள். பின்னே படுத்தப் படுக்கையாகி சில வருடங்களுக்கு அப்படியே நீடிப்பார்கள். ஒருநாள் சட்டென்று இழுத்துக்கொள்ள இப்பவோ அப்பவோ என்றிருக்கும். ஆனாலும் ஒன்றும் ஆகாது. அந்த மனிதர்களை விண்ணுலகிற்கு அனுப்ப இவர்கள் படும் பிரயத்தனத்தைச் சொல்லி மாளாது. முதலில் பங்கு பாதிரியாரை அழைத்து, கடைசி ஜெபத்தைச் சொல்லி, மந்திரிக்கச் சொல்வார்கள். அன்று அதிக நம்பிக்கையோடு இருப்பார்கள். ஆனால் பெரியவர் அதையும் தாண்டிவிடுவார். மனம் தளராத கூட்டம் பால் ஊற்றிப் பார்க்கும். பின்பு இளநீர் தருவார்கள். இழுத்துக்கொண்டிருப்பது பெண்ணாக இருந்தால் தங்கத்தைத் தரையில் தேய்த்து ஊற்றுவார்கள். அடுத்தக் கட்டமாக, வீட்டு மண்ணைத் தேய்த்து நீரில் கரைத்து ஊற்றுவார்கள். பொன்னாசை, மண்ணாசை நீங்கி, பிறவிக் கடலைக் கடப்பார்கள் என்கிற நம்பிக்கை. நினைக்கும்போது மிக வருத்தமாக இருந்தாலும் இதுவே அவர்களின் வழக்கமாக பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது மனிதாபிமானமா இல்லையா என்கிற விவாதத்துக்குள் தற்சமயம் நான் செல்லவில்லை.

இவையெல்லாம் செய்தபின்னும் இன்னும் இழுத்துக்கொண்டிருந்தால் அவர்களைச் சுற்றி ஊர்ப் பெரியவர்கள் உட்கார்ந்துகொண்டு ஜெபிக்க ஆரம்பிப்பார்கள். விடிய விடிய மாதா பாடல்கள் பாடப்படும். அந்தச் சமயங்களில் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அத்தைகளும் சித்திகளும் கறுப்புக் காபியை குண்டாக்களில் காசி (காய்ச்சி) விடிய விடிய கதை பேசிக்கொண்டே அதைக் குடிப்பார்கள். இழுத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களின் கதைகள் விவாதிக்கப்படும். அவர்களின் காதல்கள், கள்ளக் காதல்கள், திருட்டுத்தனங்கள், நல்ல தருணங்கள் என்று எல்லாவற்றையும் பேசி இரவு முழுவதும் கலகலவென்று சிரித்துக்கொண்டிருப்பார்கள். ஆவி பிரியும் நேரத்தில் மீண்டும் சோகமாகி ஜெபத்துக்குள் சென்றுவிடுவது அவர்களின் வழக்கம்.

மீண்டும் மேலே சொன்ன அதே கதைதான். பங்கிலிருந்து கல்லறைக்குச் செல்லும் வழியில் இந்தச் சிரிப்புச் சத்தம் ஆரம்பமாகும். பின்பு கல்லறைக்குப் போனதும் அங்கே பள்ளம் தோண்டும் ஆட்களை வம்பிழுப்பார்கள்.

“என்ன நீ ஒழுங்காவே வேலை செய்ய மாட்ற போல? நீ சரியா கல்லறைய பாத்துக்கலேன்னு எங்கம்மா கனவுல வந்து சொல்றாங்க?” 

காலங்காலமாக செண்ட்ரல் கல்லறையைப் பராமரிப்பவர்கள் எங்கள் தூரத்து உறவினர்கள்தான். ‘கல்றகார்’ என்றுதான் அவர்களை அழைப்பார்கள். இதுவரை இதையெல்லாம் நான் யாரிடமும் சொன்னதில்லை. ஒருவகை எலைட் மனநிலையோடுதான் அலைந்துகொண்டிருந்தேன். சமூக நீதி குறித்துப் பேச ஆரம்பித்ததிலிருந்து அந்தப் பொய் ஒப்பனைகள் எல்லாம் கலைந்துவிட்டன. இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.

முதலாம் உலகப் போரில் மாய்ந்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம், சென்னை.

இன்னுமொரு முக்கியமான விஷயம். கல்லறைத் தோட்டத்தில் அவரவர் குடும்பத்திற்கென்று நிலம் இருக்கிறது. நூறாண்டுக்கு முன்பு எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன்படி, ‘அலெக்சாண்டர் குடும்பத்து கல்லறை நிலம்’, ‘ஐசாக் குடும்ப நிலம்’ என்று ஆங்காங்கே நிலங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் செத்தாலும் அந்த 200 சதுர அடி இடத்திற்குள்தான் புதைத்துக்கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஜனத்தொகை அதிகம் என்பதால் ஒருகட்டத்துக்கு மேல் அங்கே இடமில்லாமல் போக, ஏற்கனவே இருக்கும் கல்லறைகளைத் தோண்டி ஒருவர்மீது ஒருவரைப் புதைக்கும் நிலை வந்துவிட்டது.

குறிப்பாக, எனது பயம் விலகிய நாளைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.

என் பாட்டி செத்துப்போய் இரண்டு வருடங்கள் கழித்து தாத்தா இறந்துவிடவே பாட்டியின் கல்லறையைத் தோண்டி அங்கே தாத்தாவை வைக்க கல்றகார் முயன்றுகொண்டிருந்தார். அங்கே வந்த என் சித்தப்பா உணர்ச்சி மிகுதியில், “எங்கப்பாவுக்கு நான்தான் குழி தோண்டுவேன்” என்று கத்திக்கொண்டே மம்பட்டியைப் பிடித்துத் தோண்ட ஆரம்பிக்க, உள்ளேயிருந்து பாட்டியின் புடவையும் எலும்பும் தெரிய, “ஐயோ …சாமி!!” என்று அவர் அலறிக்கொண்டே ஓட, இளவட்டங்கள் எல்லாம் அதைப் பரிகாசம் செய்து சிரிக்க, கல்லறையே கலகலவென்றானது.

அடுத்த வருடம் இன்னொரு பெரிய தலை விழ, கல்றகார் பினாத்த ஆரம்பித்துவிட்டார். “இங்க எடம் குறைச்சலா இருக்கு. கொஞ்ச நாளிக்கு யாரும் சாவாம பாத்துக்கோங்க.. சொல்லிட்டேன்”. என் குடும்பம் இதையும் சிரித்தே கடந்தது.

ஒரு பக்கம் புதைக்கும் பணி நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் குடும்பச் சண்டைகள் ஓடும். இன்னொரு பக்கம், ஏதோ எழும்பூர் ம்யூஸியத்திற்கு வந்ததுபோல, கல்லறைகளைச் சுற்றிப் பார்க்க ஒரு குரூப் கிளம்பும். அதற்கு நான் வைத்த பெயர் விண்டோ ஷாப்பிங்.

ஒரு விசித்திர கும்பல் குழிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, “கை தெரியுது பார்.. அது மண்ட ஓடு” என்று ஆய்வுகள் செய்துகொண்டிருக்கும். இதெல்லாம் நடக்கும்போது அங்கே அமர்ந்து இளைப்பாறுவதெல்லாம் அங்கிருக்கும் கல்லறைகள் மேல்தான். ஸ்டார் பக்ஸ் காபி ஷாப் சோபாவில் உட்காருவதுபோல ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். கீழே இருப்பவன் என்ன நினைப்பான் என்கிற லஜ்ஜையே யாருக்கும் இருக்காது.

https://cdn.theculturetrip.com/wp-content/uploads/2017/12/1280px-company_rule_government_hse_fort_stgeorge2-1024x714.jpg

எனக்கோ வெள்ளைக்காரர்களின் கல்லறைகளைச் சுற்றிப் பார்ப்பதுதான் வேலை. எத்தனை அழகிய வேலைப்பாடுகள்! அவற்றில் அந்த மனிதர்கள் எப்படி இறந்தார்கள் என்று எழுதியிருப்பார்கள். அங்கே இளைஞர்களின் கல்லறைகள்தான் அதிகம். இந்தியத் துணைக்கண்டத்தின் பிரத்யேக நோயில் இறந்தவர்கள், எம்டன் போட்ட குண்டில் இறந்த சிப்பாய்கள், இந்தியாவிற்கு வரும்வழியில் கப்பலிலேயே இறந்தவர்கள், ஜார்ஜ் கோட்டைக்கருகே கடலில் நீச்சல் பழகிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரி சுறா மீன் தாக்கி மரணம் என்று கல்லறையின் தலைக்கற்களில் வரலாறு இன்னும் சாகாமல் இருக்கிறது. 

கல்லறைப் பணிகள் முடிந்தபின்பு உறவினர்கள் அழைக்கப்படுவார்கள். பாதிரியார் ஜெபம் சொல்ல ஆரம்பிப்பார். ஆமாம், அதே பாதிரியார்தான். ஒரு சாவு விழுந்தால் அதன் சடங்குகள் நிமித்தம் பாதிரியாரைச் சாவடிக்காமல் விடமாட்டார்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். கொலை செய்யும் பக்திநிலை கொண்டவர்கள்.

நொந்துபோன பாதிரியார் ஜெபம் சொல்லும்போதுதான் யாராவது ஜோக் சொல்வார்கள். மீண்டும் சிரிப்புச் சத்தம் மேலெழும். பெரியவர்கள் யாராவது, “ஏய்.. சும்மா இருக்க மாட்டிங்களா?” என்று அதட்டியதும்தான் துக்கமும் அமைதியும் திரும்பும்.

என் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் அதிகமாக சிரிப்பதும் மகிழ்வதும் கல்லறையில்தான். அவர்களுக்கு கல்லறை ஒருவிதமான சுதந்திர உணர்வைக் கொடுக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை கல்லறைத் தோட்டத்தின் ஆறடிக்குள் முடங்குவதென்பது ரயில் பெட்டியின் கோச்சில் தங்கள் பர்த்தில் படுப்பது போல. கண்ணை மூடித் திறந்தால் ஊர் வந்துவிடும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அது அவர்களை வாழ்க்கை முழுவதும் மகிழ்வாக வைத்திருக்கிறது.

நம்பிக்கை இல்லாத நானோ என் உடலைத் தானமாகக் கொடுக்குமாறு எழுதி வைத்துவிட்டேன். மத ரீதியில் இவ்வளவு ரொமாண்டிசைஸ் செய்யப்படும் கல்லறையில் நான் அடங்க மாட்டேன். எனக்கு அடக்கம் பிடிக்காது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. இயற்கையைப் பொறுத்தவரை இரண்டுமே ஒரே இடத்திற்குச் செல்லும் வெவ்வேறு பயண முறைகள். அவ்வளவுதான்.

இதோ, பாதிரியார் அழைத்துவிட்டார். மண்ணைத் தூவி கல்லறை மூடப்படுகிறது. “யாரிடம் செல்வோம் இறைவா…” என்கிற பாடல் மீண்டும் பாடப்படுகிறது. தூரத்தில் ஆட்டுக்கூட்டம் ஒன்று கல்லறையின் மேல் தூவப்படும் மலர்களை உண்பதற்கு காத்து நிற்கின்றது. நமக்கோ வீடு திரும்ப வேண்டும்.

3 comments

Parthiban Rathinavelu December 24, 2020 - 12:35 am

பொதுவாக கல்லறைகள் என்றால் நினைவில் வருவது பேய்ப்படங்களே. அதுவும் ‘Omen’ படத்தில் வரும் பழங்கால gothic structure கல்லரைகள், அதன் முகப்புகள் எல்லாம் ஒரு மயிர்கூச்சரிப்பை தரும். ஆனால் பாருங்கள் இக்கட்டுரையில் ஷாலின் ஒரு ‘ஜுகல் பந்தி’ நடத்தியுள்ளார். சென்னை கத்தோலிக்கர்களின் இறப்பு, அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் பின் சென்னையின் பழமையான ஒரு கல்லறை பற்றிய வரலாற்றுப் பின்னணியுடன் விவரிப்பு.

சென்னைக் கத்தோலிக்கர்களுடைய ஆங்கிலேய பிணைப்பும், இந்த மண்ணோடான வாழ்வியலுமே ஒரு fusion இசை போன்றது. இது தமிழகத்தின் மற்ற இடங்களுக்கு பொருந்துமா? எனத் தெரியவில்லை. ஆனால் சற்றேரக்குறைய ஆங்கிலோ இந்தியர் கலாச்சாரத்துடன் கச்சிதமாக பொருந்திப் போகிறது.
இதன் நிகழ்வுகளுடன் எனக்கு சில நேரடியான அனுபவங்கள் உண்டு.

என் இளம் வயதில் ஒரு ஆங்கிலோ இந்தியக் கல்லறையின் மிக அருகில் நான் வசித்த காலத்திற்கு இந்தக் கட்டுரை அழைத்துச் சென்று விட்டது. எனக்கு கல்லறைகள் பற்றி பயம் கிடையாது. மாறாக அது சம்மனசுகள் உலவும் நந்தவனம். பனிபொழியும் டிசம்பர் அமாவாசை இருளிலும், பவுர்ணமி ஒளியிலும் கல்லறையின் அழகை ரசித்தவன். அது போல கடும் கோடையின் மதியங்கள் நான் ஓய்வெடுக்கும் வாசஸ்தலம் அது.

நவம்பர் 2 அன்று வரும் கல்லறைத் திருநாள் கொண்டாட்டத்தின் இறுதியில் முன்னிரவு சுமார் ஏழு மணிக்கு ஒரு சதுர கி.மீ பரப்பளவு உள்ள மாபெரும் அந்த ஆங்கிலோ இந்தியர் கல்லறை முழுமையும் மெழுகுவர்த்தி ஒளியில் வாசனாதி திரவிய புகையுடன் தரும் சர் ரியலிச காட்சியை பார்த்து அனுபவித்தர்களால் மட்டுமே உணர முடியும்.

ஷாலின் எழுதுகிறாரா அல்லது கண்களால் காண்பவற்றை மூளை மெமரி செல்களில் பதிவிட்டு பின் தேவைப்படும் பொழுது விரல்களின் வழியாக வரைந்து விடுகிறாறோ என்று ஒரு சந்தேகம் உள்ளது. An unimaginable capturing of emotions and landscape sketches in her writing.
வாழ்த்துக்கள் ஷாலின்.

Palani December 28, 2020 - 2:50 pm

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!!

Karthikeyan September 9, 2021 - 8:15 am

அற்புதம்.

Comments are closed.