தீர்த்த யாத்திரை

2 comments

வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கையில் விளக்குடன் நின்ற சின்னக்காவைக் கண்டதும் படபடப்பு கூடியது. சங்கரி கிளம்பியிருப்பாளா?   

ஒரு மாதமாய்ப் பேசி, விவாதித்து, சண்டைபோட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவான திட்டம். காலையில் பத்து மணிக்கெல்லாம் சிவன்மலை அடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து மலையேறி கோயிலுக்குப் போவது, மாலை மாற்றி தாலி கட்டிக்கொள்வது என்றும் முடிவு. அதன்பிறகு கரூர் வரைக்கும் பேருந்துப் பயணம். சதாப்தி ரயிலில் கும்பகோணமோ மயிலாடுதுறையோ செல்வது. அப்படித்தான் திட்டம். ஒரு வாரத்துக்குப்பின் நிலைமையை அறிந்து ஊர் திரும்புவது. 

வியாழக்கிழமை என்று உறுதியானதும் உற்சாகத்தில் துள்ளினாள். சிவன்மலை எனத் தேர்ந்தெடுத்தது அவள்தான். சிறிதும் பயமோ தயக்கமோ இருக்கவில்லை. திருப்பூரிலிருந்தே ஒன்றாகச் செல்ல வேண்டாம் என்பதையும் அவளேதான் சொன்னாள். ‘ஒன்பதரைக்கு நீ நேரா சிவன்மலைக்கே வந்துரு. பஸ் ஸ்டாப் பக்கத்துல எளநிக் கடையில நில்லு. பத்து மணிக்கு காங்கேயத்துக்கு வர்ற திருமுருகன் பஸ்ல நான் வந்துருவேன். சொதப்பிராதே’ என்று எச்சரித்திருந்தாள்.

போகத்தான் வேண்டுமா? இதெல்லாம் தேவைதானா? அவள் உறுதியாக வந்துவிடுவாள். அதில் சந்தேகமேயில்லை. நான்தான் இப்போது தடுமாறுகிறேன். கூடாது. என்னை நம்பி வந்துநிற்பாள். எதுவானாலும் அங்கே போய்விடவேண்டும். அவளிடம் பேசலாம். பிறகு முடிவுசெய்யலாம். 

குளித்துத் தயாரானேன். ‘சிதம்பரத்துல ஆபிஸ் வேலை. ரெண்டு நாளாகும்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டபோது சின்னக்கா என் முகத்தை உற்றுப் பார்த்தாள். ‘சொல்லவேயில்லை? திடீர்னு கௌம்பறே?’ என்றவளுக்குப் பதில் சொல்லவில்லை. சங்கரி வீட்டில் இல்லை என்றால் முதலில் இவளிடம்தான் கேட்பார்கள். அதற்குள் அவளைத் திருப்பி அனுப்பிவிடவேண்டும். பேருந்து நிலையத்துக்குச் செல்லும் எட்டாம் நம்பர் பஸ்ஸில் ஓடிப்போய் ஏறினேன். நெஞ்சு படபடத்தது. என்ன காரியம் செய்ய நினைத்தேன்? அவளைக் கட்டிக்கொண்டு வந்து இந்த வாசலில் நிற்கப்போகிறேனா? என்னைவிட மூத்தவள். விதவை. சின்னக்காவுக்குத் தீவிரமாய் வரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரம். என்ன அசட்டுத்தனம்?

எல்லாவற்றையும் நிறுத்தவேண்டும். எதுவும் நடக்கக்கூடாது. எதையாவது சொல்லி சமாதானப்படுத்தலாம். ஆனால் இந்த நேரத்தில் அவள் வீட்டுக்குப் போவது சரியாக வராது. நகரப் பேருந்து நிலையத்தில் இறங்கித் தேடினேன். கண்ணில்படவில்லை என்றதும் பதற்றம் கூடியது. வியர்த்தது. ஓரிடத்தில் நிற்கமுடியாமல் தவித்தேன்.   

ஒருமணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்ட சிவன்மலை பேருந்தில் ஏறிக்கொண்டபோது பயம் தொண்டையை அடைத்தது. செய்ய நினைத்த காரியத்தின் கடும் விளைவுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாய் என்னை நிலைகுலையச் செய்தன. நான்தான் அசடு. இவளாவது யோசிக்க வேண்டாமா? என்னவோ பேசினோம், பழகினோம். அத்தோடு விடாமல் இப்படித் தாலிகட்டிக்கொள்வதென்று உளறினால் அதையும் நம்பி கிளம்பி வந்துவிடுவதா? எரிச்சலும் கோபமுமாய் இளம்வெயிலில் பளபளத்திருந்த வெம்பரப்பையும் அதில் ஒளியுடன் நின்ற வேலாமரங்களையும் வெறித்திருந்தேன். 

தொலைவில் சிவன்மலை தென்பட்டது. உச்சியில் நின்ற கோபுரம், வழி மண்டபங்களுடன் மேலேறிய படிகள் என கம்பீரமாய் நின்றது. இளநீர்க் கடை அருகே அவள் நிற்கக்கூடும். இதற்கு முன்பே இருவரும் வந்ததுண்டு. ஒவ்வொரு முறையும் பிடிவாதமாய் படியேறச் செய்வாள். சுலபத்தில் ஏற முடியாத படிகள். மூச்சுவாங்கும். முழங்கால்கள் வலியெடுக்கும். 

சிவன்மலை நிறுத்தம் நெருங்கியது. கண்களை மூடிக்கொண்டேன். இரண்டொருவர் இறங்கியபின் பேருந்து புறப்பட்டது. நான் இறங்கவில்லை. கண்திறந்து பார்க்கவுமில்லை. அவள் நிச்சயம் தயாராக வந்திருப்பாள். இறங்கிப் போனால் அவ்வளவுதான். என்ன சொன்னாலும் விடமாட்டாள். அவளைப் பார்த்தபிறகு இதே உறுதியுடன் என்னால் இருக்கமுடியாது. பார்க்காமல் பேசாமல் இருப்பதுதான் இப்போது சரியாக வரும்.

காங்கேயம் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். புறப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்த திருப்பூர் பேருந்தில் ஓடிச்சென்று தாவி ஏறினேன். மூச்சிரைக்க ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்தபோது பயம் சற்றே மட்டுப்பட்டது. கொஞ்சநேரம் காத்திருப்பாள். பிறகு அவளும் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவாள். அடுத்தமுறை சந்திக்கும்போது திட்டுவாள். கத்துவாள். சமாதானப்படுத்திவிடலாம். மன்னித்துவிடுவாள். தாலி கட்டிக்கொண்டு வந்தபின் ஏற்பட உள்ள அவமானங்களைவிட இதுவொன்றும் பெரிதல்ல. இரண்டு பேருக்குள்ளாக முடிந்துவிடும். 

வீட்டுக்குத் திரும்பினால் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனவே நேராக அலுவலகத்தை அடைந்தேன். அப்போதுதான் திறந்திருந்தார்கள். மின்விசிறியைப் போட்டுக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தபோது கால்கள் வலிக்கத்தொடங்கின. 

வெகுநாட்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த பழைய கோப்பை எடுத்து குறிப்புகளை எழுதுவதில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியவில்லை. மதியம் நாலரை மணிக்கு அலுவலக உதவியாளர் வந்து என்னைப் பார்க்க வரவேற்பறையில் பெண் ஒருத்தி காத்திருப்பதாகச் சொன்னான்.

பதறி அடித்துக்கொண்டு விரைந்தேன். கையில் பையுடன் ஓரமாக நின்றிருந்தாள். அங்கே நின்று அவளுடன் பேசுவது சரியாக வராது என்ற எண்ணத்துடன் தலையை அசைத்து உடன்வரும்படி கீழே அழைத்துச் சென்றேன். வளாகத்தின் பின்பகுதியில் மரங்கள் அடர்ந்த சிறிய பூங்கா. 

வேப்பமரத்தடியில் நின்றதும் எதிரில் வந்து முகத்தை ஏறிட்டாள். கண்ணில் நீர்முட்ட அவள் உதடுகள் துடித்தன. “ஏன்டா இப்பிடிப் பண்ணினே?”

நான் சுற்றுமுற்றும் பதற்றத்துடன் பார்த்தேன். யாரும் இதைப் பார்த்துவிட்டால் பிரச்சனைதான்.

“அழறத நிறுத்து. காலையில சொன்னபடி கௌம்ப முடியலை. உங்கிட்ட சொல்லலாம்னு வந்தேன். அதுக்குள்ள நீ கௌம்பிட்டே.”

அதை அவள் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. “சரி பரவால்லே. அதான் இப்ப வந்துட்டேன்ல. கௌம்பு. போலாம்.”

கைகால்களில் நடுக்கம் பரவப் பேச்செழாது நின்றேன். கண்களில் உறுதியுடன் என் முகத்தையே உற்றுப் பார்த்திருந்தாள். பயம் எழுந்தது.

“மெரட்டறியா?” சற்றே குரலுயர்த்தி அதட்ட முயன்றேன். பலவீனமாக ஒலித்தது.

சீற்றத்துடன் காறி உமிழ்ந்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டாள். “எதுக்குடா மெரட்டணும்? இந்த நிமிஷம் நான் நெனச்சா உன்னை உண்டு இல்லேன்னு பண்ணிட முடியும். ஆனா என்னால அதப் பண்ண முடியாது. இப்ப இங்க வந்து நின்னப்பகூட நீ ஆபிஸ்ல இருக்கக்கூடாதுன்னு நெனச்சுட்டேதான் வந்தேன். என்னவோ ஒரு பயத்துல பதட்டத்துல வரமுடியாமப் போயிருக்கும். என்னை நேர்ல பாத்து சொல்ல முடியாம எங்கியாவது போயிருப்பேன்னெல்லாம் நெனச்சுதான் வந்தேன். உண்மையில நீ இங்க இல்லாம இருக்கணும்னு நெனச்சேன்.” என் முகத்திலிருந்து அவள் பார்வை விலகவேயில்லை. உதடுகளைக் கவ்வி அழுகையைக் கட்டுப்படுத்தினாள். 

“ஆனா உனக்கு அப்பிடி எதுவுமே இல்ல. நீ பாட்டுக்கு எப்பவும்போல உக்காந்திருக்கே. என்னைப் பத்தி எந்த யோசனையும் இல்லை. கடங்காரா… என்னைப் பத்தி இந்த நிமிஷம்வரைக்கும் நீ யோசிக்கவேயில்லை. படுபாவி…”

தலையைக் குனிந்தபடியே நின்றேன். பதில் எழவில்லை.

“நீ சரின்னு சொல்லித்தானே கௌம்பி வந்தேன். தைரியம் இல்லேன்னா முடியாதுன்னு சொல்லிருக்க வேண்டிதுதானே? எதுக்கு இப்பிடி ஆசை காட்டி தெருவுல நிக்க வெச்சிருக்கே…” அவள் என் முகத்தைப் பார்த்தபடியேதான் கேட்கிறாள். ஆனால் என் பார்வை அவளைத் தவிர்த்தது. அங்குமிங்குமாய் திரும்பிப் பார்த்தபடியே நின்றேன். யாரும் வரக்கூடாது, இதைப் பார்த்துவிடக்கூடாது என்பதில்தான் என் கவனம் இருந்தது. 

“உன்னைச் சொல்லித் தப்பில்லை. நீயெல்லாம் ஒரு மனுஷன்னு நீ சொன்னதையும் கேட்டுட்டு வந்திருக்கேன் பாரு, என் மேலதான் தப்பு.” கண்ணீரைத் துடைத்தபடியே தலைகுனிந்தாள். 

“அப்பிடியெல்லாம் இல்லை சங்கு…” சமாதானமாய் என்னவோ சொல்ல நினைத்து பேசத் தொடங்கியதும் சீற்றத்துடன் தலை நிமிர்த்தினாள். 

“வாயை மூடறா… இன்னொரு தடவை அப்பிடிச் சொன்னே செருப்பு பிஞ்சிடும். செய்யறதையும் செஞ்சுட்டு கொஞ்ச வரியா நீ…”

அவசரமாய் நான் கையை உயர்த்தினேன். “ஓகே. நான் ஒன்னும் சொல்லலை. ப்ளீஸ், சத்தம் போடாதே.”

“அவ்வளவு பயம் இருக்கில்லை? அப்பறம் எதுக்குடா என்கிட்ட பெரிய இவனாட்டமா வசனம் பேசினே… ராஸ்கல்…” பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். 

“தப்புதான். ஒத்துக்கறேன். நீ இப்ப வீட்டுக்குப் போயேன். அப்பறமா பேசிக்கலாம்.”

கிண்டலாக சிரித்தாள். “எப்ப? இன்னொரு தடவை படுத்து எந்திரிச்சதுக்கு அப்பறமா?”

ஒன்றும் சொல்லாமல் நின்றேன். உள்ளங்கால்கள் கூசின.

“இங்க வந்து பத்து நிமிஷம் நிக்கறதுக்கு இப்பிடி நடுங்கறே.  காலையிலேர்ந்து சொன்ன இடத்துலயே நின்னுட்டிருந்தேன். நீ வரமாட்டேன்னு என்னால யோசிக்கவே முடியலை. எப்பிடியும் வருவேன்னுதான் எல்லாத்தையும் சகிச்சுட்டு நின்னேன். இப்ப என்ன பண்றது நான்?”

அழுகை கொப்புளித்து வெடித்தது. வாயை மூடிக்கொண்டாள். 

“அதுதான் சொல்றேன். வீட்டுக்குப் போ. அப்பறமா பேசிக்கலாம்” இரண்டடி நகர்ந்தேன். இங்கிருந்து அவள் புறப்பட்டால் போதும் என்ற அவசரம்.

“நீ இரு. எனக்குத் தெரியும். நானே போய்க்குவேன்”. அழுகை அவள் பேச்சை நிறுத்தியது. கண்ணீரைத் துடைத்தவாறே கமறலுடன் கேட்டாள். “நீ வீட்டுக்குப் போறப்ப உங்க சின்னக்கா என்னை மாதிரி அநாதையா வாசல்ல நின்னா என்னடா பண்ணுவே?”

பதிலற்று நின்றவனைப் பொருட்படுத்தாமல் பையை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு நடந்தாள். 

அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

*

விடிவிளக்கின் மங்கலான வெளிச்சம். கண்களை மூடாது கூரையை வெறித்துக் கிடந்தேன். சிலுசிலுவென வேப்பமரக் காற்று. தடதடத்து மறைந்தது ரயிலோசை. விடிய விடிய இப்படித் தூங்காமல்தான் கிடப்பேனா? எல்லாம் முடிந்துவிட்டது. 

சங்கரி தைரியமானவள். இப்படிச் செய்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. அலுவலக வளாகத்திலிருந்து அன்று மாலை அழுத கண்களுடன் போகும்போது இப்படியொரு முடிவை எடுப்பாளென்று நான் சற்றும் யோசிக்கவில்லை.  

மீண்டும் அவளைப் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம். ஆனால் அப்போது அவளைச் சந்திக்கும் துணிச்சல் இருக்கவில்லை. இரண்டொரு நாள் போகட்டும். அதன் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அன்றிரவே மைசூருக்குப் புறப்பட்டுப் போய்விட்டேன். 

நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று காலையில்தான் ஊர் திரும்பினேன்.

புலர்காலையில் மந்தமான வெளிச்சம். இலேசான குளிர். தெருமுனையில் திரும்பும்போதே வயிறு கலங்கியது. சீக்கிரமாகவே சங்கரியைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மறுபடி எழுந்தது. கோபம் தணிந்திருக்குமா? சின்னக்காவிடம் எதுவும் சொல்லியிருப்பாளா? வாய்ப்பில்லை. வாசலில் வெளிச்சம் இல்லை. இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லையா? புழக்கடையில் விளக்கெரிந்தது. வீட்டை நெருங்கி நின்றேன். 

தயக்கத்துடன் கதவைத் தட்டியதும் வாசலில் விளக்கெரிந்தது. சின்னக்காதான் கதவைத் திறந்தாள். என்னைக் கண்டதுமே அழத்தொடங்கினாள். 

“என்னாச்சுக்கா? எதுக்கு இப்பிடி அழறே?” பதற்றத்துடன் கேட்கும்போதே கால்கள் நடுங்கின. என்னவோ தவறாக நடந்திருக்கிறது. அம்மா எங்கே? உள்ளே எட்டிப் பார்த்தேன்.

“எங்கடா போய்த் தொலைஞ்சே? ஒரு போன் பண்ண மாட்டியா… கடங்காரா… அவ போயிட்டாடா. என்னடா பண்ணினே நீ?” என் சட்டையைப் பிடித்திருந்த கை இறுகியது. குரலைத் தணித்தபடியே என் முகத்தை வெறித்தாள்.

“சங்கரி…” சொல்லி முடிப்பதற்குள் அம்மா வெளியில் வருவதைக் கண்டேன். சட்டென்று அக்கா விலகினாள். 

“யாரது பெரியவனா?” அம்மா வளைந்த முதுகுடன் தலையை நிமிர்த்தினாள்.

“ம்… முரளிதாம்மா” சின்னக்கா பையை வாங்கிக்கொண்டு உள்ளே போனாள்.

“வேலை முடிஞ்சுதாப்பா? எடையில ஒருநா போன் பண்ணிருந்தா தேவலை. சரி உள்ள போ.” தளர்ந்த அவளது குரலைக் கேட்டதும் கையைப் பற்றிக்கொண்டேன்.

“சங்கரி போனதுலேர்ந்து இவ இப்பிடித்தான் அழுதுட்டே கெடக்கறா. பாவம். சின்ன வயசு” அம்மா பின்கட்டுக்கு நடந்தாள். அறைக்குள் சென்று கதவைச் சாத்தினேன். ஜன்னலருகே கண்ணீருடன் நின்ற சின்னக்கா திரும்பி என்னைப் பார்த்தாள். 

“எங்க போயிருந்தே?” இறுகின குரல். 

“சிதம்பரத்துல ஆபிஸ் வேலை.”

“அன்னிக்கு நீ அவளைப் பாக்கலியா?”

“பாத்தேன். சொல்லிட்டுதான் போனேன்.” உள்ளுக்குள்ளிருந்த நடுக்கம் குரலில் தலைகாட்டத் தொடங்கியது. 

அவள் அழுதாள். குமுறலுடன் தரையில் சரிந்து உட்கார்ந்தாள்.

“என்னாச்சுக்கா? சங்கரி…” அருகில் அமர்ந்து அவள் தோளைப் பற்றினேன்.

விலுக்கென தலையை உயர்த்தியவள் ஆவேசத்துடன் முறைத்தாள். “உனக்குத் தெரியாது?”

பலவீனமாய் தலையாட்டினேன். “மைசூர் போற அன்னிக்கு உங்கிட்டயும் சொல்லிட்டுத்தானே போனேன். எதுக்கு என் மேல சந்தேகப்படறே? என்னாச்சுன்னு சொல்லேன்.”

தலைமுடியை ஒதுக்கிக்கொண்டு முகத்தைத் துடைத்தாள். கைவிரல் மோதிரத்தைக் கழற்றி மாட்டியபடி பேசாமலிருந்தாள். உடலின் நடுக்கம் இன்னும் குறையாமலிருக்கவே முழங்கால்களை சேர்த்துக் கட்டிக்கொண்டேன். 

“தூக்குப் போட்டுட்டா…” சொல்லி முடிப்பதற்குள் அழுகை இடறியது.

வயிற்றுக்குள் கலக்கம். வியர்வை பெருகி வழிய எழுந்தேன். என்னால் நிற்க முடியவில்லை. கழிவறைக்கு ஓடினேன். உடலிலிருந்து அனைத்துமே அவசரமாய் வெளியேற வாயைப் பொத்தியபடி அழத் தொடங்கினேன்.

“போன சனிக்கிழமை காலையிலே ஏழு மணி வரைக்கும் எழுந்திருக்கலயேன்னு அவங்கம்மா கதவைத் தெறந்து பாத்துருக்காங்க. தொங்கிட்டு இருந்திருக்கா. அதுக்கு ஒரு நாள் முன்னாடி அவங்கம்மா ஸ்கூல்லேர்ந்து சாயங்காலம் வரும்போது இவ வீட்ல இருக்கலையாம். ஆறு மணிக்கு மேலதான் வந்திருக்கா. கையில பை இருந்துச்சாம். எங்க போனேன்னு கேட்டப்பா இவ சரியா பதில் சொல்லலை. ராத்திரி அவங்கப்பா வந்ததுக்கப்பறமா மறுபடியும் கேட்டிருக்காங்க. பெரிய சண்டைபோல. மறுநாள் முழுக்க ரூமுக்குள்ளயே அடைஞ்சு கெடந்திருக்கா. சாப்பிடலை. யாரோடவும் பேசலை. அதோட சரி. ஏன் எதுக்குன்னு எந்த விபரமும் தெரியலை. எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வெச்சுட்டு போய்ச் சேந்துட்டா. நல்லவேளையா விஷயத்தை வெளிய விடாம சீக்கிரமே எரிச்சுட்டாங்க. வீட்டுக்கு நான் போனபோது அவங்கம்மா சரியாப் பேசலை. படத்துல மாலை போட்டு கீழே விளக்கு வெச்சிருந்தாங்க. பாத்துட்டு வெளிய வந்தேன். அப்பதான் அவங்கப்பா நீ வர்லையான்னு உன்னைப் பத்தி கேட்டார். ஊருக்குப் போயிருக்கேன்னு சொன்னப்ப அவர் தலையாட்டிட்டார்.”

என் முகத்தையே குறுகுறுவென பார்த்தபடி அழுகையும் குமுறலுமாய் அவள் சொல்லிக்கொண்டிருந்த போது எதுவுமே செவியில் விழாததுபோல முருங்கை மரத்தில் அடைந்திருந்த தடித்த கம்பளிப்பூச்சிகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எதுக்கு இப்பிடிப் பண்ணினான்னே தெரியலடா”. அக்கா என் முகத்தைப் பார்த்துக் கதறினாள். 

கண்ணில் நீர் வழிய எதுவும் சொல்லாமல் நின்றேன்.

அழுவதற்குக் கண்ணீர் இல்லை. கண்கள் காந்தின. காலையிலிருந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்னென்னவோ யோசனைகள். அச்சம். உடலை நடுங்கச் செய்யும் பதற்றம். யாரிடமும் எதுவும் சொல்லியிருப்பாளா? அவள் வீட்டுக்குப் போகும் எண்ணத்தைக் கைவிட்டேன். யாரையும் பார்க்கும் துணிச்சல் இல்லை. 

படுத்துக் கிடக்கிறேன். தூக்கம் இல்லை. கண்ணை மூடினால் அந்தரத்தில் கால்கள் அசைகின்றன. ஒரு பறவையைப் போல்  கைகள் காற்றில் மிதக்க, சொடுக்கி இழுபடும் கால்களில் கொலுசுகளின் மினுக்கம். 

நீண்ட பகல் முடிந்தபோது பதற்றம் கூடியது. இருட்டு கவியும் வேளையில் பயம் பெருக விளக்கைப் பொருத்தினேன். இப்போதும் அணைக்காமல்தான்  படுத்திருக்கிறேன். ஜன்னலுக்கு வெளியே பார்க்கக்கூடாது என்று நினைத்தபோதும் பார்வை மீண்டும் மீண்டும் எதையோ எதிர்பார்த்து இருட்டையே வெறிக்கிறது. 

மறுபடி சந்தித்துப் பேசுவேன் என்று எதிர்பார்த்தாயா? பேசியிருந்தால் உயிருடன் இருந்திருப்பாய். நிச்சயமாய் இப்படியொரு முடிவை எடுத்திருக்கமாட்டாய். ஊருக்குப் போகாமல் உன்னெதிரில் வந்து  நின்றிருந்தால் கோபம், ஆத்திரம் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்திருப்பாய். அதோடு முடிந்திருக்கும். யாரிடமும் சொல்ல முடியாமல் உனக்குள் பொத்திவைத்துத் தாளமுடியாமல் உன்னையே மாய்த்துக்கொண்டாய்.

எப்படி உன்னால் முடிந்தது? கட்டிலுக்கு நேர் மேலேதான் அந்த மின்விசிறி. அதே கட்டில்தான். வியர்வையும் மயக்கமுமாய் மடிமேல் படுத்துக் கிடந்த அதே அறை. நைலான் புடவையில் சுருக்கிட்டு கழுத்தில் மாட்டிக்கொண்டு மின்விசிறியில் தொங்குவதென்பது அத்தனை எளிதா? அத்தனை உறுதியா? கையில் வளையல்களோ கழுத்தில் சங்கிலியோ இல்லை. ஆனால் தொங்கிய கால்களில் கொலுசுகள். 

கன்னத்தைக் கிள்ளியபடியே சிரிக்கிறாள். ‘உனக்குக் கொலுசு போட்டுட்டா புடிக்குமே.’

‘அதுக்காக இப்பிடி செய்வியா?’ நான் முகம் திருப்புகிறேன். அருகில் வந்தமர்கிறாய். தலை கோதுகிறாய். நான் கண்களைத் திறக்கவில்லை. திறந்தால் மறைந்து போவாய். நீ போகக்கூடாது. உன்னைப் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும். ‘எம்மேல அவ்ளோ ஆசையா?’ நெருங்கி அமர்ந்து கைவிரல்களைச் சேர்த்துப் பற்றிக்கொள்கிறாய். உள்ளங்கையை வருடுகிறாய். ‘எப்பிடி இவ்வளவு மெத்துன்னு இருக்கு, பொம்பளைங்க கைமாதிரி.’ கன்னத்தில் ஒட்டிக்கொண்டு கண் மூடுகிறாய். விரல்களை மெல்ல கீழிறக்கி தொண்டைக்குழியில் நிறுத்துகிறாய். எதுவோ நெருடுகிறது. நைலான் புடவையின் முடிச்சு. பதற்றத்துடன் முடிச்சை அவிழ்க்க முயல்கிறேன். விரல்களில் நடுக்கம். மேலும் மேலும் இறுகும் முடிச்சு உன் தொண்டையை அழுத்துகிறது. அழுதபடியே முடிச்சை அவிழ்க்க ஆவேசத்துடன் முனைகிறேன். ஆனால் அது மேலும் இறுகுகிறது.

நீ இப்படிச் செய்திருக்கவேண்டாம் சங்கரி. கொஞ்சம் பொறுத்திருக்கலாம். உடனடியாக உன்னைக் கட்டிக்கொண்டிருக்க முடியாதுதான். ஆனால் அதற்காக இப்படி உன்னை மாய்த்துக்கொண்டிருக்க வேண்டாம். 

மணமாகி இரண்டு வருடங்களுக்குள்ளாக கணவனை இழந்து திரும்பிய நாட்களைப் பற்றி எத்தனை முறை பேசியிருக்கிறாய். ‘சமயத்துல அவரோட முகமே  எனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது முரளி. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கூட இருந்திருக்கேன். ஆனால் இன்னிக்கும் யோசிச்சா நம்ப முடியலை. கல்யாணம் ஆச்சு. அழைச்சிட்டுப் போனாங்க. ஒரு வாரம் அந்தமான் போயிருந்தது தெரியும். அப்பறம் காலையில ஆபிஸ் கௌம்பி போவார். ரெண்டுநாள் மூணுநாள்னு ஊர்ல இருக்கமாட்டார். இன்ஸ்பெக்சன், டூர்னு பேச்சு வரும். திடீர்னு ஒருநாள் ஒரு போன் வருது. பாண்டிச்சேரி பக்கத்துல ஆக்ஸிடென்ட். எல்லாரும் அழறாங்க. எனக்கு ஒன்னுமே புரியலை. அடுத்த நாள் சாயங்காலம் வெள்ளைப் பொட்டலமா வாசல்ல வெச்சு மஞ்சநீர் தெளிச்சாங்க. அவ்ளோதான். அன்னிக்கு ராத்திரிகூட அசந்து தூங்கிட்டேன். இங்க வந்ததுக்கு அப்பறமாத்தான் ஒவ்வொன்னாப் புரிய ஆரம்பிச்சுது…”

‘எம் மேல அவ்ளோ ஆசையா முரளி. அப்பிடின்னா வா நீயும் இதுக்குள்ள வந்துரு…’ வெகு சுலபமாக நைலான் புடவையின் சுருக்கைத் தளர்த்தி என் தலையில் மாட்டுகிறாய். ‘சரியா கழுத்துல நிக்குதா? இப்ப மேல நின்னு குதிச்சா இது கழுத்தை இறுக்கிடும். பயமா இருக்கா?’ உன் சிரிப்பு எனக்கு அச்சம் தந்தது. ‘அவ்ளோ பயமா… அப்பிடின்னா மரியாதையா நான் சொன்னபடி செஞ்சிருக்கலாமில்ல? ஏன்டா ஏமாத்தினே?’

இன்னொரு திருமணத்துக்காக உன் அப்பாவும் அம்மாவும் பேச்செடுத்தபோது உனக்குத்தான் எத்தனை குதூகலம்?  ‘உன்னைத்தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னா ஒத்துப்பாங்க. ஒன்னும் சொல்லமாட்டாங்க. நீதான் உங்க வீட்ல பேசணும்’ என்று சொன்னபோதாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். என் நிலைமை சரியில்லை, வாய்ப்பில்லை என்பதை உறுதியாகத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதையும் செய்யத் திராணியின்றி உன்னைப் பலி கொடுத்திருக்கிறேன். 

‘எல்லாமே அப்பதான் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு. எனக்குன்னு ஒருத்தர். அம்மா அப்பாவைத் தவிர இன்னொரு ஆள். ஒரு குடும்பம். சின்னச் சின்னதா சந்தோஷம், கோபம், சமாதானம்னு அந்த சந்தோஷம் என்னன்னு பூரணமா தெரியக்கூட இல்லை. அதுக்குள்ள அவர் இல்லை. எனக்கு என்னன்னே புரியறதுக்குள்ள இங்க வந்தாச்சு. சிரிக்க முடியலை. சாப்பிட முடியலை. காலார நடக்க முடியலை. சாதாரணமாவே இருக்க முடியலை. எல்லாரும் குசுகுசுன்னு பேசிக்கறாங்க. உத்து உத்து பாக்கறாங்க.  என்னால என்ன பண்ண முடியும்? நானும் செத்துப் போகணுமா?’ இத்தனை ஆவேசம் எதற்கு?

‘கட்டினவன் போயிட்டான்னா அதுக்காக நான் இருக்கற காலம் வரைக்கும் இப்படியே வேஷம் போட்டுட்டு முடங்கிக் கிடக்கணுமா? முடியாது.’ 

உன்னை முடக்கிவிட்டேன். சாவை நோக்கித் தள்ளிவிட்டேன். உன் தைரியத்தை, எதற்கும் தயங்காத திடத்தை, நொறுக்கிவிட்டேன். என் மீதான அளப்பரிய அன்புக்கும் நம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட பரிசைத் தந்திருக்கிறேன்…

‘எப்பவும் எங்கூட இருப்பேன்னு சொன்னேல்ல? இப்ப பயமா இருக்குன்னு சொன்னா எப்பிடி? ஒன்னுமில்லை. நான் சொல்லித் தரேன். ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சிரும்’. என் கழுத்தைத் தணித்து புடவையின் சுருக்கை இறுக்குகிறாய். நான் பேசாமல் நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். 

புடவையின் சுருக்கைச் சரிபார்த்துவிட்டு என் முகம் பார்த்துச் சிரிக்கிறாய். வழக்கமான உன் சிரிப்பல்ல அது. கட்டிலின் மேலேற்றி நிறுத்துகிறாய். ‘இப்பவே எதுக்குடா இப்பிடிப் பொணம் மாதிரி கையை வெச்சிருக்கே, படவா’ தோளில் செல்லமாய் அடிக்கிறாய். 

கழுத்தில் சுருக்குடன் கட்டிலின் மேல் நான் நிற்க கீழே இறங்கி இடுப்பில் கைவைத்தபடி உத்தரத்தைப் பார்க்கிறாய். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிசெய்கிறாய். 

‘என்னைவிட நீ கொஞ்சம் எடை அதிகம். அதுனால சட்டுன்னு இறுக்கிடும். அதுனால பயந்துராத. பக்கத்துலயேதான் இருக்கேன்’. காதில் சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தமிடுகிறாய். 

‘எனக்கு இல்லையா?’ கன்னத்தைத் திருப்பிக் காட்டுகிறாய்.  உதடுகளின் அருகே வந்து நீயே ஒத்திக்கொள்கிறாய். 

‘உனக்கு சரியான பயம். நடுங்கறே பாரு.’ சிரித்தபடியே பின்னால் நகர்கிறாய். நான் கண்களை மூடிக்கொள்கிறேன். இப்போது நான் கட்டிலிலிருந்து குதிக்கவேண்டும். 

‘வேண்டாமே சங்கு’ எனச் சொல்ல நினைத்தபோதே முதுகை நெட்டித் தள்ளுகிறாய். ஒரு நொடியில் உடல்மொத்தமும் காற்றில் எகிறித் துள்ளி இறங்கியது. புடவையின் முடிச்சு இறுகி, கழுத்தை இறுக்கியது. உதறும் கைகளுடன் துடிக்கும் கால்களுடன் அந்தரத்தில் அசைந்தபோது புடவையைப் பற்றி இன்னும் மேலே இழுக்கிறாய்.

‘அன்னிக்கு மட்டும் கோயிலுக்கு வந்திருந்தா வீணா இப்பிடி உயிரை விட்டிருக்க வேண்டாம் முரளி.’

2 comments

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் – vishnupuramguests2021 November 24, 2021 - 2:28 pm

[…] தீர்த்தயாத்திரை -நாவல் பகுதி […]

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன் November 25, 2021 - 3:21 pm

[…] தீர்த்தயாத்திரை -நாவல் பகுதி […]

Comments are closed.