மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 5): மொழிபெயர்ந்த மழை

by ஆத்மார்த்தி
1 comment

தமிழ்த் திரையுலகத்தின் பிரதிபிம்ப நிலமே தெலுங்குத் திரையுலகம். தமிழைவிட வணிகப் படங்கள் மீதான வாஞ்சை பெருகி ஒளிரும் மொழி தெலுங்கு. இன்னொரு புறம் தீவிரமான கலைப்பற்றுதலுடனான படங்களுக்கும் குறைவிருக்காது. இங்கே எம்.ஜி.ஆர் ஆளவந்தார் என்றால் அங்கே என்.டி.ராமராவ். இன்றைக்கு ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக மாறி இருக்கிறது டோலிவுட். இந்தியாவின் பிராந்திய மொழிகளில் செல்வாக்கான மொழி தெலுங்கு. சினிமா அக்கட தேசத்தில் அடிக்சன். அதீதமும் இயல்புமாகப் பெருக்கெடுக்கும் செலுலாய்ட் வெள்ளம் தெலுங்கு சினிமா. இசையைப் பொறுத்தவரை பல மேதைகளைக் கண்ட பூமி அது. டி.சலபதி ராவ், கே.வி.மகாதேவன், எஸ்.ராஜேஸ்வரராவ், பெண்டியால நாகேஷ்வரராவ், செல்லப்பிள்ளா சத்யம், சக்ரவர்த்தி, ராஜன்-நாகேந்திரா, எம்.எஸ்.விஸ்வநாதன், ராஜ்- கோட்டி, ரமேஷ் நாயுடு, ஜே.வி.ராகவலு, ஜீ.கே.வெங்கடேஷ், ஷ்யாம், சங்கர்கணேஷ்  டி.ராஜேந்தர், கே.ஜே.ஜாய், ஏ.ஏராஜ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிவாஜி ராஜா, பப்பி லஹரி, லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால், விஞ்சமூரி சீதாதேவி, பானுமதி ராமகிருஷ்ணா, வந்தேமாதரம் ஸ்ரீனிவாஸ், சந்திரபோஸ், கீரவாணி, ரவிந்த்ர ஜெயின், வித்யாசாகர், ராஜேந்திர ப்ரசாத், வம்ஸி, ஹம்ஸலேகா, ஆர்.டி.பர்மன், ஆனந்த் மிலிந்த், மாதவப்பெடி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.வி.க்ருஷ்ண ரெட்டி, பரத்வாஜ், சந்தீப் சவுதா என்று பலரும் தங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்துகிற திரைப்பட இசைப்பேழைகளை தெலுங்கில் உருவாக்கியுள்ளனர்.

இரண்டு மொழிகளுக்கு இடையே உள்ள பந்தம் மிக நெருக்கமானது. ஓர் நிலத்தில் வெற்றியடைகிற படத்தை நேரடியாக மீவுரு செய்தோ அல்லது டப்பிங் செய்தோ வெளியிடுவது நெடுங்காலமாய் நடப்பில் இருக்கிற வழக்கம்தான். நடிக நடிகையர் தொடங்கி பாடகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் என இரண்டு மொழிகளிலும் ஒருங்கே பரபரப்பாய் இயங்கி வருபவர்கள் நிறைய பேர் உண்டு. அந்த வகையில் இசையமைப்பாளர்களைப் பொறுத்தவரை கே.வி.மகாதேவன் தெலுங்கு, தமிழ் என இரண்டிலும் ஒருசேர முன்னணியில் இருந்தார். அவ்வப்போது பலரும் தமிழில் அல்லது தெலுங்கில் ஒரு சில படங்களை இசையமைத்தபடி அடுத்த மொழியில் பெருங்கவனம் செலுத்திவந்தார்கள். இளையராஜா தமிழுக்கு அடுத்தபடியாகத் தெலுங்கில்தான் அதிகப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் பிறமொழிகளில் இருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டிருக்கின்றன. நேரடி தெலுங்குப் படங்களாகவே அவர் இசையமைப்பில் 120 படங்கள் வெளியாகி இருக்கக்கூடும்.

உச்ச நடிகரான சிரஞ்சீவி நடித்த 13 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ராஜா. இயக்குநர் வம்ஸி இயக்கிய 11 படங்கள் இளையராஜா இசையமைப்பில் உண்டானவை. அப்போதைய உச்ச நட்சத்திரம் என்.டி.ராமராவ் நடிப்பில் உருவான படம் யுகாந்தர். இளையராஜா இசையமைத்த ஒரே ராமராவ் படம் இதுமட்டுமே. ஹிந்தியில் பெரும் பிரபலப் படமான ‘டான்’ தெலுங்கில் யுகாந்தர் ஆனது. இந்தப் படத்தில் ராஜா இசையமைத்த நா பருவம் நீ கோசம் பாடல் பின்னாளில் ‘ராம் லட்சுமண்’ என்ற கமல் படத்தில் வாலிபமே வா வா என்று தமிழுக்கு வந்தது. தமிழில் டான்- “பில்லா” என்றானபோது அதற்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கோதண்டராமி ரெட்டி, கே.ராகவேந்திர ராவ், ராமநாயுடு ரவிராஜா, ஃபிநி ஷெட்டி, கே.விஸ்வநாத், வம்ஸி, ராம்கோபால் வர்மா, ஈவீவீ சத்யநாராயணா, மோகன் காந்தி, சிங்கீதம் சீனிவாசராவ், யெண்டமூரி வீரேந்திரநாத், தாசரி நாராயணராவ், கீதா கிருஷ்ணா, கிருஷ்ண வம்ஸி, குணசேகர், ஐ.வி.சசி, ப்ரதாப் போத்தன், மணிவண்ணன், மணிரத்னம், ஃபாஸில், ப்ரியதர்சன், அசோக்குமார், பாலுமகேந்திரா, ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, சுரேஷ் கிருஷ்ணா, கௌதம் மேனன், ப்ரகாஷ் ராஜ் ஆகியோர் இளையராஜாவின் தெலுங்குப் படங்களை இயக்கியவர்கள்.

இளையராஜா தெலுங்கில் 1978ம் ஆண்டு முதல் இசையமைக்கிறார். எண்பதுகளில் அவரது இசையமைப்பில் உருவான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் டூயட் பாடல்களாக அமைந்தன. தமிழில் ஏற்கனவே வெளியாகி பிரபலமான பல பாடல்களை தெலுங்கில் தன் படங்களில் மீவுரு செய்திருக்கிறார். அவரது இசையமைப்பில் எண்பது சதவீதப் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார் என்பது சுவையான தகவல்தான். அவரோடு இணைந்து எஸ்.ஜானகி, கே.எஸ்.சித்ரா ஆகிய இருவரும் நிறைய டூயட்டுகளைப் பாடினர். தெலுங்குத் திரையுலகத்தில் எண்பதுகளின் திரைப்பாடல் தேவை என்பதே டூயட் பாடல்கள் மட்டும்தான். அநேக படங்களில் எல்லாப் பாடல்களுமே டூயட் சாங்க்ஸ் மட்டுமாகவே இடம்பெற்றன. அவற்றைப் பாடுவதற்கு எஸ்.பி.பி – ஜானகி, பிறகு எஸ்.பி.பி – சித்ரா என இரண்டு பாடக இணை மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது. பெரிய அளவில் பாடல்களின் கட்டுமானம், அமைப்பு ஆகியவற்றில் எந்தவித வித்தியாசங்களையும் எதிர்பார்க்காத இந்தத் தன்மை தெலுங்குத் திரையுலகின் இயல்பு சார்ந்தது. 1995ம் ஆண்டுக்குப் பின்னால் இளையராஜா உருவாக்கிய தெலுங்குத் திரைப்பாடல்களில் இந்த விஷயங்கள் மாற்றமடைந்தன. நிறைய பாடகர்கள் பாடிய வகைவகையான பாடல்கள் சூழல்களின் விளைவாக உருவாக்கப்பட்ட பாட்டுகளாக அமைந்தன.

https://connect-images.viago.io/w_771,c_scale,e_sharpen:70,q_95/ad6a5aa05eb0b6a18bfa2e6ce7f64a1266dad93fc059c4cbb89aff0e24a797af

இளையராஜா தமிழில் எண்ணிலடங்காத படங்களுக்கு இசையமைத்துக்கொண்டே பிறமொழிகளிலும் இசையமைத்தார். ஒருபுறம் கே.விஸ்வநாத் படங்கள் இசை, பாடல், கலை போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டன. அவற்றில் தன் இசைத்திறன், தெலுங்கு நிலத்தின் இசைநுகர்வு, எண்பதுகள் காலகட்டத்தின் இசை விருப்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாடல்களை உருவாக்கிய ராஜா, இன்னொரு புறம் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் மொத்தம் 13 படங்களுக்கு இசையமைத்தார். பெருமளவு படங்களின் அநேக பாடல்கள் பிரபலமடைந்தன.

கே.விஸ்வநாத் இயக்கிய சாகர சங்கமம் படத்துக்காக சிறந்த இசையமைப்புக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த ஒரே ஒரு தெலுங்குப் படமான ருத்ரவீணாவில் சிரஞ்சீவி நாயகனாக நடித்தார். அந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ராஜா பெற்றார். சீதாலோக சிலுகா (1981), ருத்ரவீணா (1988), ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி (1990), ராமராஜ்யம் (2011), எட்டோ வெளிப் போயிந்தி மனசு (2012) என ஐந்து முறை தன் தெலுங்குப் படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றிருக்கிறார். 1990ம் ஆண்டு பொப்பிலி ராஜா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருது ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

தன் தமிழ்ப் பாடல்களை ராஜா தெலுங்கில் மீவுரு செய்தது போலவே பல இளையராஜாவின் தமிழ்ப் பாடல்களை, தான் இசையமைக்கிற படங்களில் தெலுங்கு இசையமைப்பாளர் ஜே.வி.ராகவலு இடம்பெறச் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி தெலுங்கு தெரியாதவர்களிடமும்கூட மிகவும் செல்வாக்குப் பெற்ற கீதகோவிந்தம் என்ற படத்தில் இடம்பெற்ற இங்கேம் இங்கேம் இங்கேம் காவாலே என்ற பாடல் கோபி சுந்தர் இசையமைத்தது. இளையராஜா இசையமைத்த கோழிகூவுது தமிழ்ப்படம் தெலுங்கில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. தமிழில் சாகாவரப் பாடலான பூவே இளைய பூவே என்ற பாடல் நுவ்வே லேத நவ்வை என்று ஆரம்பித்தது. எஸ்.பி.பி பாடிய இந்தப் பாடல் அப்போது அடைந்த பிரபலத்தைவிட பலமடங்கு புகழை அதிலிருந்து வார்த்தெடுக்கப்பட்ட கீதகோவிந்தம் படத்தின் ‘இங்கேம் இங்கேம்’ பாடலில் அடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் சரி. தமிழில் தகர்க்க முடியாத இசையுருவாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இளையராஜா தெலுங்கில் என்னென்ன படங்களில் எம்மாதிரியான பாடல்களை உருவாக்கினார் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

வம்ஸி இயக்கிய டிடக்டிவ் நாரதா படத்தில் ஆபேரி ராகத்தில் அமையப்பெற்ற குதூகலமான டூயட் பாடல் இது. எஸ்.பி.பாலுவும் கே.எஸ்.சித்ராவும் சேர்ந்து பாடிய பாடல். தூறல்கூடிப் பெருமழையாகாத சில்சிலீர்க் கால மனமகிழ்தலைக் கானமாக்கினாற் போல் அமைந்திருந்தது இந்தப் பாடல். இண்டர்லூட் இசைக்கோர்வைகளில் அடுத்தடுத்த எதிர்பாராமையை இசைகொண்டு பூர்த்திசெய்தார் ராஜா. பின்னணி ஆழத்தில் ஒலித்து நகரும் தாள இசை மிகையும் குறையுமற்ற சரிநிகர் சமானமாய் ஒலித்தது வசீகரம். முதல்முறை போலவே எப்போதும் ஒலிக்கும் காதல் பஜன் இந்தப் பாடல்.

https://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2019/11/30/w900X450/06JAN2014DIN04_22-02-2014_17_0_1.jpg

சிவரஞ்சனி என்பது சோகச் சாய்வுள்ள ராகம். இந்த ராகத்தை அடிப்படையாக்கி காலத்தால் அழியாத பல பாடல்களை உருவாக்கியவர் இளையராஜா. ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ என்ற வைதேகி காத்திருந்தாள் படப்பாடல் அவற்றின் உச்சம். ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே‘ என்ற ராசாவின் மனசிலே படப்பாடல் தமிழ் மனங்களின் மறவா கானமாய் ஒலிக்கிறது. ‘உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே’ என்ற கே.ஜே.யேசுதாஸ் – மஞ்சுளா குருராஜ் பாடிய நல்லவனுக்கு நல்லவன் படப்பாட்டு இன்னுமோர் சிவரஞ்சனி ராகப் பூமாலை. ‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி‘ என்ற பாடல் சிவரஞ்சனி ராகத்தில் அமையப்பெற்ற இன்னுமோர் மனங்கொத்திப் பாட்டு. சக்கரைத் தேவன் படத்தில் இடம்பெற்றது. ராஜா இந்த ராகத்தைக் கொண்டு சோகமும் ஆனந்தமும் ஒருமிக்கிற பாடல்களையும் புனைந்தார். அவற்றில் ஒன்று, ‘வள்ளி வள்ளி என வந்தான்‘ என்ற தெய்வ வாக்கு படப்பாடல்.

அந்த சிவரஞ்சனி ராகத்தில், தான் இசையமைத்த அத்தனை பாடல்களுக்கும் மேலுயர் வைரமாக ஒரு பாடலை இழைத்துச் செதுக்கி உருவேற்றினார் இளையராஜா. தமிழில் அல்ல தெலுங்கில். அந்தப் பாடல் அந்த ஆண்டு வந்த அத்தனை பாடல்களையும் வென்றடித்தது.

அக்கினேனி நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜூனா நாயகனாகவும் கிரிஜா நாயகியாகவும் நடிக்க மணிரத்னம் இயக்கிய ஒரே தெலுங்குப் படமான கீதாஞ்சலி ஒரு ம்யூசிகல் சூப்பர் டூப்பர். இந்தப் படம் காதலின் அழியாத செல்லுலாய்ட் கல்வெட்டெனவே இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மணிரத்னம் பாணி என்ற ஒன்று அதற்கு முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு இந்தப் படத்தில்தான் அமைந்தது. இந்தப் படத்தின் பின்னணி இசையிலும் பாடல்களிலும் இரசிகர்களை ஆனமட்டும் அயர்த்தினார் இளையராஜா. எண்பதுகளில் வெளியான வகைமை மிகுந்த திரையிசை ஆல்பங்களில் ஒன்றென இன்றளவும் போற்றப்படுவது கீதாஞ்சலி படப்பேழை. தமிழில் இதயத்தைத் திருடாதே என்ற பேரில் வெளியாகி தெலுங்குக்குக் குறைவற்ற பெருவெற்றியைப் பெற்றது. கண்களை மூடி தமிழ்மனம் கண்ட படங்களில் முதன்மையானது இதயத்தைத் திருடாதே. தெலுங்கில் எல்லாப் பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடினார். தமிழில் பாடியவர் மனோ.

கீதாஞ்சலியின் சிவரஞ்சனி ராகப் பாடலான ஓ ப்ரியா ப்ரியா ஓர் அற்புதம். வெடூரி எழுதிய பாடலுக்கு குரல் தந்தவர்கள் பாலுவும் சித்ராவும். இந்தப் பாடலின் இசையமைப்பு தீர்க்கமான இசைக் கோட்பாடு ஒன்றை நிறுவி அதிலிருந்து வழுவாமல் இயங்குவது இதன் நேர்த்தி. தொடக்க இசை, இணைப்பிசை, மத்திமத்தில் பெருகும் இறுதிச் சரணம் வரையிலான இடையிசை, பூர்த்தி இசை என நான்கு துண்டுகளாக்கிப் பார்த்தால் ஒன்று மற்றதை நெருக்காமல் அளவாகவும் பலமாகவும் ஒலித்தடங்குவதை உணர்கையில் வியப்பூட்டுகிறது. தனித்தனி இழைகளாகப் பகுத்து ஒலிக்கச் செய்தால் ஒரு அருகமைத் தன்மையும் அதே நேரம் வேறுபட்டு ஒலிக்கும் இயல்பும் ஒருங்கே நிகழ்வது இரசிக்க வைக்கிறது. இதனைப் பாடிய இரண்டு குரல்களும் ராகத்தினூடே முழுவதுமாய்க் கரைந்து உச்சபட்ச சோகத்தை நேர்த்திப் பார்க்க, இசையின் வலிமையான கோர்வைகளின் கலந்தொலி நிகழ்தல் மூலமாய் அதனை மேலாண்மை செய்து மிகப்பலமாய் ஊன்றச் செய்தது முழுமையான அனுபவமாய் நிகழ்ந்தது. முடிந்து முடிந்து தொடங்கும் சுழல்தன்மை இந்தப் பாடலை வழமைக்கும் விநோதத்துக்கும் இடையிலான புள்ளியில் நிற்கச் செய்தது. மொத்தத்தில் தென்னிந்திய மனங்களின் காதல் ஆற்றாமையைத் தனக்குள் பதியனிட்டு, தேவைப்படுகையிலெல்லாம் மனமூடல் மலர்களைத் தோற்றுவிக்கிற வல்லமை வனமாய் இந்தப் பாடல் இன்றளவும் ஒலிக்கிறது.

கில்லர் என்ற படம், ஃபாஸில் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்தது. இதில் ப்ரியா பிரியத்தமா ராகாலு என்ற பாடலை மனோ – சித்ரா இணைந்து பாடினர். உதய ரவிச்சந்திரிகா ராகத்தில் அமைந்த விநோதமான டூயட் பாடல் இது. மிக இரம்மியமான இராப்பொழுதின் ஆழ்தலை இந்தப் பாடலின் வழியே அழகுற இசைத்தார் ராஜா. பாடல் முடிகையில் ஒலிக்கிற பல்லவியின் துணையோசைகளென கைதட்டல்களும் உப குரல்களுமாய்ப் பெருகியது பேரழகு.

https://timesofindia.indiatimes.com/thumb/msid-17840734,width-1200,height-900,resizemode-4/.jpg
இயக்குநர் வம்ஸி

வம்ஸி இயக்கிய மஹரிஷி படத்தில் ரிஷிவனி ராகத்தில் இளையராஜா இசையமைத்த பாடல் சுமம் ப்ரதி சுமம் சுமம் வனம் ப்ரதி வனம் வனம். காட்டின் நடுவே சலசலத்தோடும் பெயரற்ற நதியின் ஆரவாரத்தை இசைத்தாற் போலவொரு பாடல். சொல்ல முடியாத காதல் ஏக்கத்தை கனவும் நனவும் சரிவர புரிந்தேகாத குழப்பகால மனமொழிதலாய்ப் பாடினாற் போன்றதொரு பாடல். எத்தனை முறை கேட்டாலும் ஈரம் குறையாத பாடல். தித்திப்பு சலிக்காத கானம். இன்றளவும் முப்பத்து இரண்டாண்டுகளாக ஒலித்தும் சலித்திடாத மகாதவ கானாம்ருதம்.

வம்ஸிக்கும் இளையராஜாவுக்கும் இடையே நிகழ்ந்த இசைப்புரிதல் அபாரமான பல பாடல்களைப் பெற்றுத்தந்தது. பானுப்ரியா சுமன் சரத்பாபுவுடன் சுபலேக சுதாகரும் நடித்த வெற்றிப்படம் சிதாரா. எல்லாப் பாடல்களுமே இனிப்புக் கடை ஷோகேஸ் வகைகளாய் ஈர்க்கும். அதில் ஜிலிபிலி பலுகுல என்ற பாடல் எஸ்.பி.பாலுவும் ஜானகியும் சேர்ந்து பாடிய அற்புத டூயட்களில் ஒன்று. கேட்டவரைக் கரைத்து தூள் தூளாக்கித் தன் பையில் போட்டுக்கொள்ளும் வல்லமை இந்தப் பாடலுக்கு உண்டு. தமிழில், ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது என்று பெண்குரல் சோகத் தூறலாக உருவாக்கிய அதே ட்யூனை எடுத்து சந்தோஷ ஜீராவில் முக்கியெடுத்த ஆனந்த ஜாமூனாக மாற்றி அயர்த்தினார் இளையராஜா. இதன் தொடக்கமே ஆயிரம் நிலவுகள் ஒருங்கே ஒளிர்ந்த பரவசத்தில் தொடங்கும். படர்க்கையில் எங்கோ தூரத்தில் ஒலிக்கும் தாள இசையாக உடனொலிக் கோர்வைகள் ஐஸ்கட்டி மழையாய்ப் பொழியும். செல்திசையெங்கும் பூக்களைத் தன்மீது தூவிக்கொண்டு நகரும் இதன் ஒலிநடை அத்தனை ஈர்ப்போடு ஒலிக்கும். இண்டர்லூட்களை பொறுத்தவரை தீராக்கடனாளியாகவே கேட்பவர்களை மாற்றிக்கொள்கிற வசியவேலை தெரிந்தவர் ராஜா. இந்தப் பாடலில் அது நிகழ்ந்தவிதம் கச்சிதம். மனதின் நாட்பட்ட நோய்மையைக் குணமாக்கிவிடுகிற வீரிய மூலிகையின் நறுமண வருகையாகவே நிகழ்ந்தேறும் சிதாராவின் ஜிலிபிலி.

இதே படத்தில் கேட்பவர் ஊனுயிர் சகலமும் உருக்கியெடுக்கும் வண்ணம், தூரத்தில் நான் கண்ட உன் முகம் என்று தமிழில் நிழல்கள் படத்தில் இடம்பெற்ற சோக ஸ்கோர் ஒன்றைத் தெலுங்கில் மீநிகழ்வு செய்தார் ராஜா. அந்தப் பாடலைத் தெலுங்கில் கேட்கும்போது அதன் நடையில் இலேசாய் அதிகரித்திருக்கும் நடைவேகம் காரணமாக சிறு ஆவேச மனோபாவத்தை விரித்தவண்ணம் ஒலித்தடங்குவது இன்னும் சிறப்பாயிற்று. உச்சபட்சமாக, பாடல் பூர்த்தியாகிற இடத்தை ஜானகி எடுத்தாண்ட விதம் பன்மடங்கு சிறப்பு.

‘சேலஞ்’ என்ற படம். எது தேவையோ அதுவே இசை என்ற விகிதத்தில் அமையப்பெற்ற சிரஞ்சீவி நடித்த படம். இதில் ஐந்து டூயட்டுகள் இடம்பெற்றன. இந்துவதன சுந்தரவன என்ற பாடல் அமோகமாய் ஹிட் அடித்தது. மெருப்பு தாடி படத்தில் சந்தமாமா எனத் தொடங்கும் பாலு – ஜானகி டூயட் பாடல், அந்திப்பொழுதின் விசித்திர ஏகாந்தத்தைக் குரலாக்கித் தந்த பாடலமுது. இந்தப் படம் மேற்கத்திய கௌபாய் வகைமைக் கதை கொண்ட படம். பின்னணி இசையையும் பாடல்களையும் ஜாலியான மெட்டெடுப்போடு நிகழ்த்தினார் ராஜா.

வம்ஸி இயக்கத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இன்னொன்று ஆலாபனா. மோகன் – பானுப்ரியா நடித்த இந்தப் படம் தமிழில் சலங்கையில் ஒரு சங்கீதம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. ப்ரியதமா தமா சங்கீதம் என்று ஆரம்பிக்கிற எஸ்.ஜானகி பாடல் இலேசான மதுக்கிறக்கத்தோடு ஒலிக்கும் ஸோலோ பாடல். இதன் ஹம்மிங் தோரணங்களை பாலு தன் குரலால் மெருகேற்றினார். எப்போது கேட்டாலும் தன் புத்தம்புதிய தன்மையை இழந்துவிடாமல் இருப்பது இந்தப் பாடலின் நிரந்தர சிறப்பென்று சொல்லத் தோன்றுகிறது. தமிழில் இதே போல சில பாடல்களை பிற்பாடு இசைத்தளித்தார் இளையராஜா. அவற்றில் முதன்மையானதாக பி.வாசு இயக்கத்தில் உருவான சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் இடம்பெற்ற இப்ப சாத்து நடை சாத்து பாடலைக் குறிப்பிடலாம். இந்தப் படத்தின் பாடல்வானம் என்று பாலு பாடிய ஆவேசமந்தா ஆலாபனேதே என்ற சோலோ பாடலைச் சொல்லமுடியும். திருத்தமான எந்தவிதமான சிடுக்கும் சிக்கலும் அற்ற ப்ளெயின் மெலடி. தமிழில், யாரோடு யாரோ நீ எந்த ஊரோ என்று நல்ல பிரபலமானது. இது நம்ம பூமி படத்தில் இடம்பெற்ற வானமழை போலே புதுப்பாடல்கள் என்ற பாடலும் இலேசாய் இதனை நினைவுபடுத்தும். அழகான தாலாட்டு. கேட்கச் சலிக்காத இன்னுமோர் பாட்டு கலிசே ப்ரதி சந்தயாலோ என்ற பாடல். பாலு – ஜானகி இருவரின் குழைதலில் மனம் மயக்கித்தரும் மாயப்பாடல்.

https://thefederal.com/file/2020/08/Untitled-design-2020-08-16T133752.002.jpg

வம்ஸி என்றாலே வள்ளலாக மாறி அள்ளித்தருவது இளையராஜாவின் ஆந்திர வாடிக்கையாகவே அமைந்திருக்கிறது. ப்ரேமிஞ்சு பெல்லடு அப்படியொரு ஆல்பம். படத்தின் எல்லாப் பாடல்களுமே தேனில் முக்கி எடுத்த பலாச்சுளை என்றால் அது க்ளிஷே ஆகிவிடும் அபாயமிருப்பதால் கை நிறைய தேனள்ளிப் பருகினாற் போன்றதொரு கணம் என்றால் கொஞ்சம் புதுசாய்த் தொனிக்கும் எனத் தோன்றுகிறது. பாலு ஜானகி இருவரும் மொத்தமிருக்கும் ஐந்து பாடல்களில் நான்கு டூயட்டுகளைப் பாடினார்கள். ஒரே ஒரு டூயட்டை சைலஜாவுடன் பாடினார் பாலு. நிரந்தரமு வசந்தமுலே என்ற பாடல் ஜானகியும் பாலுவும் குரலுளி கொண்டு இழைத்தெடுத்த கானச்சிற்பம். இன்றைக்கெல்லாம் ஒலித்துக்கொண்டே இருந்தாலும் சலிக்காது. இதன் மைய இசைப்பொழிவு அப்படியே அதிகாலை நேரமே புதிதான ராகமே என்ற மீண்டும் ஒரு காதல் கதை படப்பாடலை நினைவுறுத்தியபடி நகரும். ஒய்யாரி கோதாரம்மா என்ற பாடல் இன்னொரு மழையின் வேறொரு தேன் தூறல். கோபெம்மா சேத்திலோ கோரு முத்தா என்ற பாடல், தொடக்கம் முதலே வேக இசைத் தோரணமாய் மனதில் இனித்தொலிக்கும். ஈ சைத்ர வீணா தமிழில் பெரும் கவனம் ஈர்த்த ஓ வெண்ணிலாவே வா ஓடிவா பாடலின் மகிழ்மறுவுரு. கேட்பவரைக் கரைத்து காணாமல் அடிக்கும் வல்லமையான கானம்.

தமிழில் ஒலித்ததற்கும் தெலுங்குப் பிரதிக்கும் இரண்டு வித்தியாசங்கள். ஒன்று, பாடலின் ஒட்டுமொத்தத் தொனி மேலதிக சோகச் சாய்வோடு தமிழில் ஒலித்தாற் போல் தெலுங்கில் இல்லை. அடுத்த வித்தியாசம் என்னவெனில் தமிழ்ப் பதிப்பில் ஓங்கி ஒலித்த ஷெனாய் இசை தெலுங்கில் இல்லை. கொண்டபல்லி என்ற பாடல் கே.கே.யும் சாதனா சர்கமும் இணைந்து பாடிய பாடல். நின்னுசூடாக்கா நேனுண்டலேனு படத்தில் இடம்பெற்றது. மலையாளத்தில் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தில் கொடமஞ்ஞின் என்ற பாடல் இதே பல்லவியிசை ஓர்மையோடு அமைந்திருந்தது.

தனது புதிய வார்ப்புகள் படத்தை கொத்த ஜீவிதலு எனத் தெலுங்கில் மீவுரு செய்தார் பாரதிராஜா. பாரதிராஜா – இளையராஜா இணைந்த இன்னுமோர் படம். சுகாசினி – ஹரிப்ரசாத் நடித்த இதன் பாடல்கள் மூன்றுமே தமிழிலிருந்து எடுத்தாளப்பட்டவை. ‘இது எப்படி இருக்கு‘ என்ற படத்துக்காக இசையமைத்த ‘எங்கும் நிறைந்த‘ என்ற பாடலை கொத்த ஜீவிதலுவுக்காக பொங்கி பொரலே அந்தலென்னு பொங்கி பொரலே என மீவுரு செய்தார் இளையராஜா. பி.சுசீலா பாடிய சோகப் பாடல் மனசே வெள்ளனே. தமிழில் இதயம் போகுதே என்ற பாடலின் தெலுங்கு வடிவம்தான் இந்தப் பாடலானது. தம்தன நம்தன தாளம் வரும் பாடலை ஜென்சி – வசந்தா இணைந்து பாடினர்.

சீதலோக சிலுகா தமிழில் பெரும் வெற்றிபெற்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு வடிவம். ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து‘ பாடலை அலலு கலலு என இளையராஜாவும் வாணி ஜெயராமும் தெலுங்கில் பாடினர். இந்தப் பாடல் நிறையும் இடம் அபாரமான தொனியில் நிகழ்ந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சாகர சங்கமமே பாடல் மென் தாளமும் மெல்லச் சாய்ந்தோடுகிற நதியலை குரலுமாய்க் கவர்ந்தது.

ப்ரதாப் போத்தன், பானுச்சந்தர், அருணா முச்செர்லா நடித்த படம் பூல பல்லாகி. 1982இல் வெளிவந்தது. பாவன லோகத்தை என்ற பாடல் ராஜேஸ்வர ராவ் எழுதியது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி இணைந்து பாடிய கிறங்கடிக்கும் டூயட் பாடல். இனிமை என்றெல்லாம் சாதாரணமாய்க் கடந்துவிட முடியாத அசரடிக்கும் ஐஸ்க்ரீம் பாடல். மித வேகமும் முழு விரைதலும் மாறி மாறிக் கிறங்கடிக்கும் பாட்டு. இதே படத்துக்காக எஸ்.ஜானகி பாடிய இன்னொரு பாடல், ஈ இண்டிலோ தீபமை என்ற பாடல்.

https://www.christiantoday.co.in/files/original/thumbnail/1/85/18535.jpg

ஜானகியும் பாலுவும் சேர்ந்து நூற்றுக்கணக்கான அதிசயங்களை பாட்டில் உருக்கொண்டு வந்திருப்பது நிஜம். இளையராஜாவின் இசையுருவாக்கத்தில் அப்படியான பாடல்கள் தெலுங்குத் திரையுலகின் மறக்க முடியாத பல பாடல்களாக உலவுகின்றன. தர்ஜா தொங்கா படத்தில் இடம்பெற்ற நாலோ சினுகுலதோ அப்படியொரு பாடல். மேற்கத்தியத் தொடக்கம் மிக மெல்லிய சாய்வோடு இந்தியத்தன்மை மிகும் சரணங்களினூடாகப் பயணித்து நிறையும் சிறுமுரணழகுப் பாடல் இது. சரணத்துக்கு முந்தைய இணைப்பிசை மெல்லிய மனமுரணாக விரிய அதைப் பெற்றுக்கொள்கிற சரண இசையானது நின்றொலிக்கும் தாள இசையாய்ப் பெருக்கெடுக்கும். இதற்கடுத்த பல்லவியும் அதன் பின்னதான இரண்டாம் சரண இணைப்பிசையும் இன்னொரு நம்ப முடியாத வியப்பின் இசைவடிவாகச் சென்றுசேரும். உற்சாகத்தின் மெல்லிய விகசித்தலை இந்தப் பாடலின் மைய இழைதலாகக் கொண்டு இசையமைத்தார் ராஜா. எஸ்.பி.பி – எஸ்.ஜானகி பாடிய அழகான மெலடி பாடல் தொலிசோப்பு செலி ராசினா சுபலேகா. சோபன் பாபு, அம்பிகா நடிப்பில் ராஜ்குமார் என்ற படத்துக்காக உருவாக்கப்பட்டது.

சுசீலா – பாலு இருவரும் பாடிய பாடல் ஜானகி கனகலலேடு. இன்னுமோர் மெல்லிசைப் பாடல் இது. எவேவோ கலலு என்ற மெல்லிசைப் பாடல் அபூர்வமான பெண்குரல் சோலோக்களில் ஒன்று. ஜ்வாலா என்ற படத்திற்காக இதனைப் பாடியவர் எஸ்.ஜானகி. தமிழில் பெரிய வெற்றியடைந்த படமான நான் பாடும் பாடல் தெலுங்கில் மாங்கல்ய பந்தம் என்று மறு உருவாக்கம் செய்யப்பட்டது. சுமன், சுகாசினி, சரத்பாபு, சந்திரமோகன் ஆகியோர் நடித்த இதில் நீவே தேவி நீவே என்ற பாடல் தமிழிலிருந்து எடுக்கப்பட்டு சிறுபிசிறுமற்ற தெலுங்குப் பிரதியாக உருவானது. கமல்ஹாசன் நடித்த ஒக ராதா இதாரு கிருஷ்ணலு தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட படங்களில் ஒன்று. கமல் தன் சொந்தக் குரலில் தெலுங்கில் ஒரு பாடல் பாடினார்.

பாரதிராஜாவின் ஆராதனா சிரஞ்சீவி சுகாசினி நடித்த படம். ‘அடி ஆத்தாடி இள மனசொன்னு’, ‘பொடி நடையா போறவரே’, ‘கொடியிலே மல்லிகைப்பூ’ ஆகிய பாடல்கள் தெலுங்கில் பெயர்ந்தன. ஸ்ரீ வெண்ணெலாவும் ஆச்சார்ய ஆத்ரேயாவும் பாடல்களை எழுதினர். பாலுவும் ஜானகியும் பாடினர். தெலுங்கிலும் எல்லாப் பாடல்களுமே நல்ல பிரபலத்தை அடைந்தன. கீதா கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சங்கீர்த்தனா என்கிற படம்தான் பிற்காலத்தில் ‘தெய்வ வாக்கு’ என்று எடுக்கப்பட்டதன் தெலுங்கு மூலம். நடுவே தமிழில் ‘என் பாடல் உனக்காக‘ என்ற பேரில் டப்பிங்கும் செய்யப்பட்டது. நாகார்ஜூனா – ரம்யா கிருஷ்ணன் நடித்த படமிது. தமிழில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதினார். மனசே பாடெனுலே என்ற பாடல் பாலு குரலில் இனித்தது.

இதி ஸ்வாதி ஜல்லு ஜேசுதாஸ் – ஜானகி பாடிய டூயட். கிருஷ்ணா நாயகனாகவும் ராதா நாயகியாகவும் நடிக்க பாரதிராஜா இயக்கிய ஜமதக்னி படப்பாடல். நாகார்ஜூனா – ஸ்ரீதேவி நடித்த ஆகரி போராட்டம் படத்தில் எதிர்பாராத ஒரு பாடலை இசைத்தார் இளையராஜா. மேலோட்டமாய்க் கேட்கையில் மற்றொரு வணிக-நிர்பந்த-சினிமாப் பாடல் போலத்தான் தோன்றும். இந்தப் பாடல் தன்னைத்தானே மற்ற பாடல்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் கொண்டதை உன்னிப்பாகக் கேட்கும்போது எளிதாக உணரமுடியும். தெல்ல சீரக்கு தகதிமி தகஜனு என ஆரம்பிக்கும் அப்பாடலைப் பாடியவர்கள் லதா மங்கேஷ்கரும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும்.  

அஷோக் குமார் இயக்கத்தில் கார்த்திக் – ஷோபனா இணைந்து நடித்த படம் அபிநந்தனா. இதன் தமிழ் டப்பிங் பதிப்பு காதல் கீதம் என்ற பேரில் வந்தது.  இதன் எல்லாப் பாடல்களுமே தேன்பாகுத் தூறல் துளிகள். ப்ரேம லேதனி என்ற பாடல் பாலுவின் ஒரு சோலோ. கேட்டால் கரைந்து காணாமற் போகவேண்டியதுதான். வேறு மார்க்கமற்ற மயக்கம் இந்தப் பாடல். இதன் இணைப்பிசைத் தாரைகள் கண்கலங்கச் செய்யும். இடையிசை இழைதல்கள் அகந்தையைப் புறந்தள்ளி மனதை நீவிச் சமன் செய்யும். மழையோடு உடனுதிர் மலர்களாய் இந்தப் படத்தின் பாடல்கள் அமைந்தன.

https://pbs.twimg.com/media/EevRjkHWAAEtDB2.jpg
இளையராஜாவும் ஆர்.டி.பர்மனும்

ரங்குலலோ கலவோ என்ற டூயட்டை ஜானகியும் பாலுவும் சேர்ந்து பாடினர். தொடக்கத்திலேயே இருபுற பேட்ஸ்மேன்களும் ஆளுக்கு மூன்று சிக்ஸர் அடித்தாற் போல் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துக்கொண்டு தொடங்கும். அத்தனை தேவலோகத் தேனின்பக் குரல்கொண்டு சிணுங்கியபடி ஒரு பாடலைத் தொடங்க முடியுமா என்று வியக்க வைத்தபிறகுதான் பாடலுக்குள் செல்வர் பாலுவும் ஜானகியும். இந்த உலகம் கண்ட அத்தனை கொஞ்சல் மொழிதல்களையும் அடித்துத் திருத்தி தன்னை எழுதிக்கொள்ளும் இந்தப் பாடல். கேட்பவர் மனதைத் திருடிப் பறக்கும் மாயப்பறவையின் வான் விரிதல்களெனவே இதன் நகர்திசை நிரவல்கள் நிகழ்ந்தேறும். இந்தப் படத்தின் தவிர்க்க முடியாத இன்னொரு பாடல், எதுதா நீவே என்று ஆரம்பிக்கும் பாலுவின் சோலோ பாடல். வெஸ்டர்ன் இசைப்பரவலோடு அமைந்த மென்மெல்லிசைப் பாடல். அந்தரங்கமான குழைதலும் சரிதலும் வேறு வழியற்ற சரணடைவுமாக, தன் குரலில் பாலு செய்த அத்தனை ஆச்சர்யங்களையும் தன்னுள் ஆழ்த்தியபடி வேறொரு வனமலராய்ப் பூக்கும் இந்தப் பாடல். இதன் பலமான இடையிசை கொண்டு கேட்பனுபவத்தை இதற்குமுன் நிகழாப் புதியதென்று ஆக்கினார் ராஜா. ‘வாழ்வா சாவா விடை சொல்ல நீ வா‘ எனத் தமிழ் பேசுகிற இதன் டப்பிங் வடிவமும் கேட்கையில் இனிக்கும், கேட்ட மனம் திகைக்கும். இதே படத்தில் அமைந்திருக்கும் அதே நீவு அதே நேனு என்ற பாடல் இன்னுமொரு தோகைத் தாமரை. தமிழில், தேவதை இளம் தேவி என ஏற்கனவே இசைத்த பாடலை தெலுங்கில் மன்ச்சி குரிசே என்று மீவுரு செய்தார் இளையராஜா.

வரசுடோச்சுடு படத்திலும் எல்லாப் பாடல்களும் கேட்பதற்கு இனிமையானவை. தமிழில் பெரிய ஹிட் ஆன ஜிஞ்சனக்கு ஜெனக்கு பாடலை அதே தொடக்கத்தோடு தெலுங்கில் இடமளித்தார். சுசீலா – பாலு இருவரும் பாடினர். தமிழைவிட கூடுதல் கிறக்கச் சாய்வோடு ஒலித்தது அந்தப் பாடல். “குத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்” என்ற அன்னக்கிளி பாடல் இதில் மீவுரு செய்யப்பட்டது. சித்ராவும் சைலஜாவும் பாடினர். பழைய பாடலின் ஃப்யூஷன் வெர்ஷன் என்று மெச்சத்தக்க அளவில் கவர்ந்தது. நீ அந்தம் நா ப்ரேம கீதம் என்ற சித்ரா – பாலு பாடிய டூயட் பாடல் மெலிதான சோக ஈர்ப்போடு ஒலித்தது. வெங்கடேஷ் – சுகாசினி நடிப்பில் இந்தப் படம் வணிக வெற்றியையும் பெற்றது. ஈனாடே ஏதோ அய்யிந்தி சித்ராவும் பாலுவும் பாடிய பாடல். இதே படம் இந்தியில் லவ் என்ற பேரில் சல்மான் கான் – ரேவதி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டபோது, தெலுங்கின் அதே பாடல்களை அடிப்படையாக்கி, இந்தி இசையமைப்பாளர்கள் ஆனந்த் – மிலிந்த் இசையமைத்தபோது, சாத்தியா துனே க்யா கியா என்ற பெயரில் அகில இந்தியாவைக் கலக்கியது. கோபால்ராவ் காரி அப்பாயி படத்தில் இடம்பெற்ற ராவே மோகினி என்ற பாடலானது தமிழில் ‘ராஜமோகினி’ என்று பாடியது.

இளையராஜாவின் ஆகச்சிறந்த பத்து தெலுங்குப் படங்கள்- அவற்றின் தமிழ்ப் பதிப்புகள் என இவற்றைச் சொல்லலாம். ஸ்வாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து), சாகரசங்கமம் (சலங்கை ஒலி), அபிநந்தனா (காதல் கீதம்), கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), அன்வேஷனா (பாடும் பறவைகள்), சிவா (உதயம்), இந்த்ருடு சந்த்ருடு (இந்திரன் சந்திரன்), ப்ரேமா (அன்புச்சின்னம்), கோபால்ராவ் காரி அப்பாயி (காதல் ஓய்வதில்லை), ஜெகலோக வீருடு அதிலோக சுந்தரி (காதல் தேவதை).

சொந்தக் குரலில் வெகுசில பாடல்களையே தெலுங்கில் பாடியிருக்கிறார் இளையராஜா. பின்னணி இசையிலும் பாடல்கள் இசையிலும் தமிழில் இயங்கிய அதே அளவு தெலுங்கிலும் இளையராஜா இசையமைத்தார் என்று சொல்வதற்கில்லை. வேற்றுமொழி, வேறுநிலம், தனிப்பட்ட இரசிகர்கள், வேறுபட்ட திரைமொழி என்று பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு நோக்குகையில், ராஜா இசையமைத்த படங்கள்- அவற்றின் பாடல்கள் என எல்லாவற்றையும் கணக்கில்கொண்டால் தெலுங்கு மொழி சினிமாவும் அதன் இரசிகர்களும் இளையராஜா மீது பெரும்பிரியம் கொண்டிருப்பது நிதர்சனம். இளையராஜா இசையை வகைமைப்படுத்த விழைகையில் தமிழுக்கு அடுத்த இடத்தை அவரது தெலுங்குத் திரையிசைக்குத்தான் நம்மால் வழங்க முடியும்.

அந்த வகையில் ஒரு பெருமழைக்கு அடுத்த மழையாக தனிப்பதிலாகட்டும், ஒரே மழையின் உள்மழையாய் இணைவதிலாகட்டும், தெலுங்குத் திரையிசை சரித்திரத்தில் மறுக்க முடியாத- அழுத்தமும் திருத்தமுமாய் எழுதப்பட வேண்டிய- பல பாடல்களை இசைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

-மேலும் பூக்கும்..

*

முந்தைய பகுதிகள்:

1. இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்
2. ராஜா பாடிய பாடல்கள்
3. வழித்தடங்களும் வரைபடங்களும்
4. மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்கள்

1 comment

Karpagavalli January 25, 2021 - 3:57 pm

மிக அருமையான விமர்சனம் அண்ணா. இசைஞானி இளையராஜா அவர்களின் தமிழ் பட பாடல்களையும் அதன் தெலுங்கு பட டப்பிங் பாடல்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் எழுதியுள்ளீர்கள் அண்ணா. மகிழ்ச்சி வாழ்த்துகள் அண்ணா.

Comments are closed.