Editor’s Picks

0 comment

டேவிட் அட்டன்பரோவின் ‘A Life on Our Planet’ ஆவணப்படத்தைப் பார்த்தேன். தற்சமயம் அவருக்கு 93 வயதாகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மனித குலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அதன் நேரடி விளைவான இயற்கைச் சீரழிவுக்கும் சாட்சியாக வாழ்ந்தவர். அவர் தன்னுடைய வாழ்வின் சாரத்தை ஒரு வாக்குமூலமாகத் திரட்டி இந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்கிறார்.

இதுகாறும் இந்த உலகம் ஐந்து மாபெரும் அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. கடைசியாக நிகழ்ந்த அழித்தொழிப்பை ‘டைனோசர் காலம்’ என்கிறோம். பல பில்லியன் ஆண்டுகளாக எத்தனையோ சவால்களைச் சந்தித்து பிழைத்திருந்த உயிர்களையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டிய அனுபவத் திரட்டாக உருவாகியிருந்த அவற்றின் உயிர்வாழும் பண்புகளையும் ஒரே மூச்சில் இல்லாமலாக்குவதில் இயற்கைக்குத் தயக்கமே இருந்ததில்லை. அந்தப் பேரழிவைச் சமன்படுத்திக்கொண்டு மீண்டும் புத்துயிர் பூணுவதற்கு அறுபத்து ஐந்து மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது காலம். இந்தச் சமயத்தில்தான் சீரான பருவநிலை மாற்றங்கள் உருவாகின. பருவங்களுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் மனித இனம் தோன்றியது. விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டது. நாகரீக வளர்ச்சி பெருகியது.

https://www.crisp-magazine.com/wp-content/uploads/2020/10/David-Attenborough-A-life-on-our-planet-feature.jpg

இன்றைக்கு இயற்கைக்கு எதிராக நாம் மேற்கொள்கிற காரியங்களை இதே வேகத்தில் தொடர்வோமெனில் இன்னும் நூறு ஆண்டுகளில் ஆறாவது பேரழிவு நிகழ்ந்துவிடும் என எச்சரிக்கிறார் அட்டன்பரோ. உலகின் இரண்டு துருவங்களிலும் பனிப்பாறைகளே இருக்காது. கடலின் நீர்மட்டம் தாறுமாறாக உயர்ந்துவிடும். அடிக்கடி எரிமலைகள் கொப்பளிக்கும். நிலம் நடுங்கும். கடந்த எண்பது ஆண்டுகளுக்குள் உலகின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் கூடியிருக்கிறது எனில் நாம் எத்தனை மூர்க்கத்துடன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதற்குமுன், இங்ஙனம் வெப்பநிலை கூடுவதற்கு பத்தாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

‘இன்னமும் காலம் தாழ்ந்துவிடவில்லை. இப்போது சுதாரித்துக்கொண்டாலும் உலகை மீட்க முடியும்’ என நம்பிக்கையூட்டும் அட்டன்பரோ, அதற்கான ஆதாரமாக, செர்னோபில் அணு உலை விபத்தின் பொருட்டு கைவிடப்பட்ட நகரத்தை உதாரணம் காட்டுகிறார். கதிர்வீச்சின் பின்விளைவுகளுக்கு அஞ்சி உக்ரெய்னிலுள்ள பிப்யாட் நகரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இன்றைக்கும் அந்த நகரில் ஆள் நடமாட்டமே இல்லை. மனிதத் தவறினாலும் நம் கவனக்குறைவாலும் நிகழ்ந்த பெருவிபத்து. நமது அக்கறையின்மைக்கும் பொறுப்பற்ற கயமைத்தனத்திற்கும் சான்று. எப்பேர்ப்பட்ட சுயநலக் கிருமிகள் நாம்!

https://i.inews.co.uk/content/uploads/2020/09/PRI_166631214.jpg

ஆனால், அந்த நகரத்தை இயற்கை கைவிடவில்லை. வெறும் முப்பது ஆண்டுகளில் அந்த நகரமே அடர்க்காடாக செழித்தோங்கி இன்றைக்கு பல்லுயிர் ஓம்புகிறது. மற்ற பிரதேசங்களில் காணக்கிடைக்காத அரிய வன விலங்குகளைப் பார்க்க முடிகிறது. இயற்கையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிவிட்டதற்கான துயர அடையாளமாக அங்கே எஞ்சியிருக்கும் சிதிலமடைந்த கட்டிடங்களில் வரிக்குதிரைகள் உலாவுகின்றன. சிதறிக்கிடக்கும் புத்தகங்களின் பழுப்பேறிய தாள்களை செந்நாய்கள் முகர்ந்து பார்க்கின்றன. பறவைகள் முயங்கிய வேகத்தில் ஒரு மரக்கிளை ஒடிந்து விழுகிறது. அதன் அதிர்வில் ஒட்டுமொத்தக் காடும் சிலிர்க்கிறது. அணு உலையிலிருந்து கசிந்த அபாயகரமான கதிர்வீச்சை மீறி, பத்து அணுகுண்டு வீச்சுகளுக்குச் சமமானதாகக் கருதப்படும் கதிரியக்கத்தை மீறி, ஒரு வனாந்திரம் உயிர்கொண்டிருக்கிறது, முப்பதே ஆண்டுகளில்!

இன்றைய மோசமான நிலையிலிருந்து உலகை மீட்டு இயற்கையைத் தக்கவைப்பதற்கான சில வழிமுறைகளைச் சொல்கிறார் அட்டன்பரோ. சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவும் சில விஷயங்கள் நடைமுறையில் ஒவ்வாதவையாகவும் உள்ளன. மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் பெண்கள் நீண்டகாலம் கல்வி கற்க வேண்டும் எனச் சொன்னது சுவாரஸ்யமான அவதானிப்பாக இருந்தது. எல்லோரையும் கட்டாய சைவ உணவுப்பழக்கத்திற்கு மாறச் சொல்வதெல்லாம் மேட்டிமை மனோபாவத்தில் சேர்த்தி. நிலக்கரி, இயற்கை எரிவளி, யுரேனியம் போன்றவற்றிக்கு மாற்றாக புதுப்பிக்கக்கூடிய வளங்களான சூரிய ஒளி, காற்று, புவிவெப்ப ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகனைத்துக்குமான மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியுமா என்ன? அதுவோர் இலட்சியக் கனவு மட்டுமே.

https://static01.nyt.com/images/2020/01/15/arts/15sevenworlds/merlin_166931232_9c9e8e46-d923-413d-9e2c-359666f0d8f5-superJumbo.jpg

மனிதர்களாகிய நாம், பிற உயிரிகளை அலட்சியமாக அணுகக் காரணம், அவற்றுக்கென ஆளுமைப் பண்புகள் இல்லை எனக் கருதுவதனால்தான். அவற்றால் நம்மைப் போன்று புன்னகைக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், வலியை உணரும்போதும் துன்புறும்போதும் நாம் கண்ணீர் விடுவதைப் போலவே விலங்குகளும் வருந்தி அழுகின்றன. சோகத்தில் ஆழ்ந்து தனிமையில் வாடுகின்றன. இயற்கையைப் பேணாததைக் குறிப்புணர்த்தும் விதமாக குற்றஞ்சாட்டுகிற பார்வையுடன் நம்மை ஏறிட்டு நோக்குகின்றன. துயரமே வாழ்வின் மூலாதாரம். என் வலியின் மூலமாகவே என் இருப்பை நிரூபிக்கிறேன், இல்லையா? அந்த வலியுணர்ச்சியை வெளிப்படுத்துகிற எந்தவோர் உயிரிக்கும் இந்த உலகில் வாழ்வதற்கான சம உரிமை உண்டு. அந்த உயிரிகளை அழிப்பதற்கான முன்னெடுப்புகளை நீண்டகாலத்திற்கு இயற்கை பொறுத்துக்கொள்ளாது. அதன் பொன்விதி ஒன்றே ஒன்றுதான்.

“நீ செழித்தோங்கும் போது உன்னைச் சுற்றியுள்ள மற்ற உயிர்களும் விருத்தியடையும். நீ அழிக்க முற்படும்போது நீயே அழிவாய்.”

*

ஒழுங்கின் அல்லது கச்சிதத்தின் மேற்பூச்சுகளுக்கு அடியில் பதுங்கியிருக்கும் பூதாகரங்கள் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும் போது, அதனை எதிர்பார்க்காததும் அவற்றைச் சந்திக்கத் தயார்படுத்திக்கொள்ளாததுமான நயத்தின் சமத்காரங்கள் குலைகின்றன. சீரமைவின் சரிவில் நடுநடுங்கிச் சாகின்றன. வழமையான நேர்க்கோட்டிலிருந்து ஒரு சின்ன விலகலை மேற்கொண்டாலே குடும்பமும் நட்பும் ஒன்றுகூடி கூப்பாடு போடுகிறது. அப்படிப்பட்ட சூழலில், காலங்காலமாக நாம் பழக்கப்படுத்தியிருக்கும் நடைமுறை வாழ்வின் புளுத்துப்போன அட்டவணையில், நீங்கள் இடைவெட்டிப் புகுந்து ஓர் அத்துமீறலை நிகழ்த்தினால் என்னவாகும்? எல்லோருக்கும் தீக்கங்கு கண்ணில்பட்டது போல உறுத்தும். அப்போது அவர்தம் மனத்தின் அந்தகாரத்தில் எரிநட்சத்திரங்கள் வீழ்கின்றன. உங்களது தீர்க்கத்தை எண்ணி சலசலத்துப் பொருமுகின்றன.

அவஸ்தைகளை கூட்டியவாறே எல்லோரும் உங்களை நெருக்கித் தள்ளுகையில் நீங்கள் அடக்கிவைக்க நினைத்ததும் ஊறலெடுக்கும். உள்ளுள் நுரைக்கும் விபரீத எண்ணங்களின் உந்துதலானது எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக்கொண்டு விலகிச் செல்லுமாறு உங்களை நிர்பந்திக்கும். அந்த விபரீத எண்ணமே உங்களது தனித்துவம் என்றுணர்ந்த பிறகும் அதைக் கட்டுப்படுத்தி இல்லாமலாக்கச் சொன்னால் எப்படி? அத்தகைய விநோதத்தில் இருந்து திமிறுவதே உங்கள் ஆளுமை. இதைப் புரிந்துகொள்ளவோ திறந்த மனதுடன் அணுகவோ மேற்கத்திய உளவியல் சிகிச்சை முறையில் கருவிகள் இல்லை. இயல்பானது அல்லது முரணானது என்கிற இருமைக்குள் அது எல்லாவற்றையும் அடைத்து வைக்கிறது. உங்களது விலகலை சிக்கலாகப் பார்க்கிறது. அதற்கு ‘சிகிச்சை’ அளித்து குணப்படுத்துவதென்பது உங்களைக் கொல்வதற்கான மறைமுக முயற்சிதான்.

https://video-images.vice.com/_uncategorized/1557853506081-SWALLOW-Photo-Credit-Anna-Kooris.jpeg

இயக்குநர் Carlo Mirabella-Davis-க்கு Swallow (2020) முதல் படம். தன்னை அறிகிற தேடலில் உண்டாகும் இரணங்களை மிகவும் அணுக்கமாகப் படமாக்கியிருக்கிறார். காட்சிச் சட்டகங்களிலும் நிதானமாக நகர்கிற காட்சிகளின் இடையே திடீரென விழுகிற வெட்டுகளிலும் பக்குவப்பட்ட தேர்ச்சி மிளிர்கிறது. படத்தின் வண்ணங்களில் ஒருவித மிடுக்கான தோரணை சிலுப்பியபடி இருந்தது. சூழலுக்கேற்ற மனநிலையை வெற்றிகரமாக உண்டாக்கித் தருவதில் அது உதவியிருக்கிறது. படத்தின் கதாநாயகி ஹேலி பென்னட்டைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். எல்லா கோணங்களிலும் அழகி. அந்த அழகு அவரது நடிப்பாற்றாலால் மெருகேறியது.

*

அ.மாதவையாவின் ‘முத்துமீனாட்சி’ நாவலை வாசித்தேன். தமிழில் தொடர்கதை வடிவில் வெளியான முதல் நாவல். பிராமண சமூகத்தில் புரையோடிப் போயிருந்த மூட பழக்கவழக்கங்களையும் புராதன ஆச்சாரங்களையும் பால்ய விவாக நடைமுறையையும் கடுமையாகச் சாடிவிட்டு பெண் கல்வியை வலியுறுத்திய ஆக்கம். ‘சாவித்திரி சரித்திரம்’ என்ற பெயரில் 1892ம் ஆண்டு எழுதப்பட்டு, ஆறு அத்தியாயங்கள் மட்டுமே பிரசுரமாகியிருந்த சமயத்தில், பல்வேறு தரப்பிலிருந்தும் வெகுண்டெழுந்த அழுத்தம் காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டது. ‘த ஹிண்டு’ உள்ளிட்ட ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்நாவலுக்கு எதிரான களத்தில் முன்னின்றுள்ளன. இத்தகைய சலசலப்புகள் ஓய்ந்த பின்னர் பத்து ஆண்டுகள் கழித்தே அ.மாதவையாவால் முழுமையான நாவலை புத்தகமாக அச்சிட முடிந்தது.

பால்ய விவாகமும் விதவைக் கோலம் பூண்டுவிட்ட பெண்களின் தலைமுடியைச் சிரைக்கிற வழக்கமும் இன்றைக்கு காலாவதியாகி விட்டன. இந்நாவலின் பேசுபொருளும் கருத்துத் தளமும் கடந்தகால சமூகக் கட்டமைப்பின் வடுவாக மட்டுமே தற்போது எஞ்சி நிற்கிறது. ஆனாலும், இந்நாவலின் இலக்கியத் தகுதி குறைந்துவிடவில்லை. நூறாண்டுகளுக்குப் பிறகும் வாசிப்புக்கு உகந்ததாகவே இருக்கிறது. முதற்காரணம், இக்கதையின் மொழிநடை. நவீன தமிழில் புழக்கத்தில் இல்லாத சொற்களை வாசித்துக் கடக்கையிலும் திக்கித் தடுமாற வேண்டிய அவசியமேற்படவில்லை. கதை விவரணையிலும் கதாபாத்திரங்களின் மன அவசங்களைக் கூராய்ந்து அறிகிற துடியிலும் அவ்வளவு வேகம்! மாதவையாவின் கட்டுப்பாடற்ற சொற்பிரயோகங்களில் சத்திய ஆவேசம் தெறிக்கிறது. ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டு போய் உச்சத்தில் நிலைகொள்கிறது.

இதுபோன்ற சீர்திருத்தப் படைப்புகளில் தன்னைமீறி ஊடுருவி விடக்கூடிய பிரச்சாரத் தொனியை முற்றிலுமாக களைந்திருக்கிறார் என்பது இரண்டாவது காரணம். அதில் மன்றாட்டு பாவனைகள் ஏதுமில்லை. வாசிப்பவரின் நெஞ்சைக் கீறி கண்ணீர் உகுக்கச் செய்யும் மலினமான தந்திரங்கள் இல்லை. ஆனால், அவர்கள் ஈடுபடுகிற அதமக் காரியங்களைக் குறித்து அறியுந்தோறும் மனம் குமட்டிக்கொண்டே இருந்தது. அவமானத்திற்குரியதும் சீர்கேடானதுமான சாத்திரங்களிலிருந்து இன்றைக்கு விடுபட்டு விட்டோம் என்றறிய ஆசுவாசமாகவும்!

பதிமூன்று வயது முத்துமீனாட்சியை முப்பது வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அவனுக்கு ஏற்கனவே மணமாகி முதல் தாரத்தின் மூலமாக இரண்டு குழந்தைகளும் உண்டு. அவள் இன்னமும் ருதுவாகவில்லை. இலந்தை இலையை தயிரில் கலந்துகொடுத்து அவளை சீக்கிரத்தில் பூப்படையச் செய்யும் மாமியாரின் முயற்சி பலனளிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். பதற்றமும் நடுக்கமுமாக தவித்துக்கொண்டிருப்பவளை முதலிரவுக்குத் தயார்படுத்தி குரூரமாக துன்புறுத்துகிற காட்சியை தமிழிலக்கியத்தின் முக்கியமான பகுதிகளுள் ஒன்று என்றே சொல்வேன்.

மகனுக்குப் பார்க்கச் சென்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு விடும் தந்தையில் தொடங்கி கணவனுடன் கூடியிருக்க மாமியாரின் அருளை வேண்டி நிற்கிற மாட்டுப்பெண் வரை மாதவையாவின் சீற்றப் பார்வையிலிருந்து எவருமே தப்புவதில்லை. ஓரிரு வரிகளுக்குள்ளாகவே அந்தந்த கதாபாத்திரங்களின் கோட்டுச் சித்திரத்தை கச்சிதமான முறையில் வழங்கிவிட முடிவதால் எதையும் இழுவையாக்காமல் தவிர்க்க முடிந்திருக்கிறது. இந்த நாவலில் இடம்பெறுகிற பெண்கள் எவருமே அழகிகள் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. மையக் கதாபாத்திரமான முத்துமீனாட்சியே சராசரி அழகுக்கும் குறைவான சாதாரண பெண்தான். அவளுக்கு சொறியும் சிரங்கும் வருகிறது. உடல் பொதுபொதுவென ஊதிப்பெருத்ததால் நடக்கும்போது தொடைகள் உராய்ந்து இரத்தக் கசிவு உண்டாகிறது. பேதி நோய்க்கு ஆட்பட்டு, உடல் வதங்கி, தலைமயிரெல்லாம் கொட்டிப் போய், காலப்போக்கில் அவலட்சணமாகவும் ஆகிவிடுகிறாள். கதாநாயகியை அழகியாக சித்தரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழின் மூன்றாவது நாவலிலேயே மாதவையா தீர்மானித்திருப்பது வியப்பிற்குரியதுதான்!

மரபைச் சுட்டிக்காட்டி தங்களது அடாவடித்தனமான செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் சனாதனிகளுக்கு மரபிலிருந்தே உதாரணங்களை எடுத்துக்காட்டி அவர்கள் வாயை அடைக்கிறார். காலம் மாறிக்கொண்டிருக்கிறது, நாம் கற்காலத்திற்குத் திரும்ப முடியாது என வாதிடுகிறார். முத்துமீனாட்சி கல்வி பயிலத் தொடங்குகிறாள். தன் கைப்பட கடிதங்கள் எழுதுகிறாள். அவள் பிழைத்துக்கொள்வாள்.

தொடராக வெளியான சமயத்தில் தடைசெய்யப்பட்ட ஆக்கத்தை பத்தாண்டுகள் கழித்து நூலாக வெளியிட்ட போது பெரிய அளவில் எதிர்ப்புகள் வரவில்லை என்பதை மாதவையா முன்னுரையில் குறிப்பட்டிருக்கிறார். வெறும் பத்தாண்டுகளில் பெண்கல்வி குறித்த விழிப்புணர்வு கூடியிருந்திருக்கிறது. இந்த நாவலை த ஹிண்டு பத்திரிகை பாராட்டுகிறது. 1924ம் ஆண்டில் இதன் இரண்டாம் பதிப்பு வெளியாகி பலரது கவனத்தையும் பெறுகிறது.

அ.மாதவையாவின் வாழ்க்கைச் சரித சுருக்கத்தை அளிப்பதோடு அவரது பணிகளையும் முன்னிறுத்தும் விதமாக இந்நூலின் தொகுப்பாசிரியரான கால.சுப்ரமணியம் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அதில் இடம்பெற்றிருந்த ஒரு தகவல் என் கவனத்தைக் கவர்ந்தது. தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட பாடல் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசை வென்றவர் அ.மாதவையா. இரண்டாவது பரிசு பாரதிக்கு! பாரதி எழுதிய பாடல் இன்றைக்கும் நினைவுகூரப்படுகிறது. ஆனால், மாதவையா இயற்றிய பாடலின் பிரதி கிடைக்கவில்லை. அவரது மற்ற ஆக்கங்களையேனும் காலந்தாழ்த்தாது கொண்டாடுவோம்.

*

கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கான புறவய அடித்தளம் ஏற்படுத்திக்கொடுத்து, பின்னர் கதையின் மையத்தில் பிரச்சனையை அணுகி விவாதித்து முடிவு நோக்கி நகரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மரபான சிறுகதைக் கட்டமைப்பைச் சீர்குலைத்து மாற்றியமைத்தவர்களில் முன்னோடி ஜேம்ஸ் ஜாய்ஸ். கதையின் ஆரம்ப வரிகளிலேயே மோதல் அல்லது முரண்பாடுகளின் சாராம்சத்தைத் தொடங்கிவிடுபவரான ஜாய்ஸ் எந்தவொரு கதையிலும் தீர்வை மட்டும் முன்வைப்பதே இல்லை. டி.எஸ்.எலியட்டால் “பத்தொன்பதாம் நூற்றாண்டினை துவம்சம் செய்த மனிதன்” என புகழப்பட்ட ஜாய்ஸ் உரைநடையில் கவித்துவ உச்சங்களை தனது தனித்துவமான கதைகூறும் உத்திகளால் சாத்தியப்படுத்தியவர்.

Epiphany எனும் கருத்தாக்கத்தினை ஜேம்ஸ் ஜாய்ஸ் “டப்ளினர்ஸ்” கதைகளில் மிகத் தீவிரமாக கையாள்கிறார். விவிலியம் முதல் சமகால இலக்கியம் வரை எடுத்துக்காட்டுகளை அகழ்ந்தெடுத்து எப்பிஃபனிக்கு சிற்சில மாற்றங்களுடன் பல்வேறு விளக்கங்கள் வழங்கப்படும் நிலையில், நவீன விமர்சகர்கள் ஜாய்ஸின் கதைகளைக் கொண்டு விளக்குகையில் “தரிசனத்தைக் கண்டுகொள்ளும் தருணம்” என்கிறார்கள். ஜாய்ஸ் இதனை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் மேற்கூறிய விளக்கத்தையே சற்று மாற்றி பணிவான தொனியில் “எப்பிஃபனி என்பது அறிதலின் கணம் மட்டுமே” என்கிறார். இன்று இக்கதைகளை வாசிக்கையில் ஜாய்ஸும் மற்ற விமர்சகர்களைப் போலவே தனது கதைகளின் தளம் உருவாக்கிய கருத்தாக்கம் குறித்து மிகையான எண்ணம் கொண்டிருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

‘த டெட்’ கதையைத் தவிர பிற கதைகள் அனைத்தும் குறு மனப்பதிவுகளாகவே எஞ்சி நிற்கின்றன. எப்பிஃபனி என்பதன் அடிப்படை அர்த்தம் தோற்றங்கள் என்பதாகவே இருக்கிறது. கணநேரத் தோற்றங்கள் என்பதிலிருந்து அறிதலாக உருமாறும் சாத்தியங்கள் இக்கதைகளில் இல்லை. ‘அரபி’, ‘எவலின்’ போன்ற கதைகளில் மையக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவர்களை எவ்வித தரிசனத்திற்கோ அறிதலுக்கோ இட்டுச் செல்வதில்லை. மாறாக திகைப்பிற்கும் குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகிறார்கள். தோல்வியை ஒப்புக்கொள்வதில் குழப்பங்களும் எதிர்காலம் பற்றிய தயக்கங்களும் ஆக்கிரமிக்கின்றன.

ஆக, இக்கதைகளின் வழியாக உண்மையிலேயே ஜாய்ஸ் எதைச் சுட்டிக் காட்ட முனைகிறார்? 1905 முதல் 1914 வரை பல்வேறு இடைவெளிகளில் எழுதப்பட்ட இப்பதினைந்து கதைகளும் சராசரி மனிதர்களின் தினசரி தோல்விகள் மீதே அதீத கவனம்கொள்கின்றன. ‘அரபி’ சிறுகதையில் அச்சிறுவனுக்கு ஏற்படும் கசப்பான வாழ்வனுபமானது அவனை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்துகிறது. அரபி தனது சூழல் மீது கட்டுப்பாடோ தன்னுணர்வோ அற்றவனாக இருக்கிறான். அவனால் இயன்றதெல்லாம் ஆத்திரத்தோடு அச்சூழலிலிருந்து வெளியேறுவது மட்டுமே. இங்கே ‘விழிப்புணர்வு’ என்பது அரபிக்கு நிகழவில்லை. ஒரு தருணத்தின் கணநேர மனவெழுச்சிகூட பதிவு செய்யப்படாது கதை சட்டென்று முற்றுப்பெறுகிறது.

நாடகாசிரியர் இப்ஸன்-ஐ ஆதர்சமாகக்கொண்டு இயங்கிய ஜாய்ஸ் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மானுடத் தருணங்களும் தனி மனிதனின் வாழ்வில் அர்த்தமற்றதாகவே இருக்க முடியும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அத்தருணங்கள் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் இரகசியங்களை மனிதன் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்துகொண்டாலும் உணராவிட்டாலும் அதனால் வாழ்வில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்கிறார். ஜாய்ஸின் டப்ளினர்ஸ் கதைகளைப் பொறுத்தமட்டில் எப்பிஃபனி என்பது ‘அறிதலை உள்ளடக்கிய திறக்கப்படாத தருணங்கள்’ என வகுத்துக்கொள்ளலாம்.

வசந்த காலத்தில் தொடங்கும் முதல் கதை குழந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிக்கிறது. அடுத்தடுத்த கதைகளில் சீரான இடைவெளியில் பருவங்களும் காலங்களும் வளர்ந்து தேய்வதை வாசகர்கள் கண்டுகொள்ளலாம். இத்தொகுதியின் இறுதிக் கதையான ‘த டெட்’ குளிர்காலத்தைத் தெரிவுசெய்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் அடுத்த கதையில் இடம்பெறப்போகும் வேறொரு கதாபாத்திரத்தின் பெயரை கோடிட்டுக் காட்டுகிறது.

சார்லஸ் பார்னெலின் மரணத்திற்குப் பிறகு ஐரிஷ் விடுதலை குறித்தும் ஒருமைப்பாடு பற்றியும் அதுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் வலுவிழந்தன. பெரும் உத்வேகத்துடன் ஒன்று திரண்டெழுந்த ஐரிஷ் தேசியவாதம், பண்பாட்டுத் தத்தளிப்பில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த ஐரிஷ் மக்களை தங்களது சுய அடையாளம் குறித்த தேடல் நோக்கி ஸ்திரப்படுத்தியது. அக்கொந்தளிப்பான காலகட்டத்தில் எழுதப்பட்ட டப்ளினர்ஸ், டப்ளின் நகரத்தை ஒரு கலாச்சார மையமாக உருவகித்து செயல்களமாக ஆக்குகிறது. டப்ளின் வாழ்க்கையை சிதைவுற்றதாகவும் மீட்சியற்றதாகவும் விவரிக்கும் ஜாய்ஸ், கணங்களின் தீவிரத்தைக் கையாள்வதில் தவறிவிடுகிறார்.

பதின்வயதுகளில் மத நம்பிக்கையாளராக வளர்த்தெடுக்கப்பட்ட ஜாய்ஸ் பள்ளியை விட்டு வெளியேறும் போதே மதம் மீதான பற்றுகளை இழந்துவிடுகிறார். மக்களது அதீத குற்றவுணர்ச்சிக்கும் மகிழ்ச்சியற்ற திருமண உறவுகளுக்கும் மதம்தான் முக்கியக் காரணி எனத் தீர்க்கமாக நம்பினார். ஜாய்ஸ் தனது சுயசரிதைத் தன்மை மிகுந்த கதைகளில் கத்தோலிக்க மதம் மீதான ஐயப்பாடுகளையும் விமர்சனங்களையும் கறாராக முன்வைக்கிறார். டப்ளின் நகரத்து வீதிகள், துறைமுகங்கள், மக்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றின் மீது விசேஷ கவனம் கொள்ளும் ஜாய்ஸ், அந்நகரத்து வெவ்வேறு சமூகப் பின்னணி கொண்ட மக்களது மனவோட்டங்களை நுண்மையுடன் அணுகுவதில்லை. சார்லஸ் டிக்கன்ஸின் லண்டன் நகரத்திற்கு ஒரு மாற்று குறைவாகவே காட்சியளிக்கிறது டப்ளின்.

மொழிநடையிலும் வெளிப்பாட்டு முறையிலும் பல வகையான உத்திகளை பின்னாட்களில் தனது படைப்புகளில் ஜாய்ஸ் கையாள்வதற்கு டப்ளினர்ஸ் ஒரு அடித்தளமாக அமைந்தது. இக்கதைகளின் சில கதாபாத்திரங்கள் யுலிசிஸ் நாவலிலும் இடம்பெறுகின்றன. அவை பெரும்பாலும் ஜாய்ஸிற்கு நெருக்கமானவர்களின் சாயலில் உருப்பெற்றவை. இன்றைக்கு டப்ளினர்ஸ் வாசிக்கப்படுவதற்கு அதன் கவித்துவமான மொழியும் காட்சியின்பமுமே பிரதான காரணங்களாக இருக்க முடியுமென நம்புகிறேன். டப்ளினர்ஸ் தொகுதியை வெளியிடுவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்கள் கதைகளில் இடம்பெறும் கடைகளுக்கு ஜாய்ஸ் நிஜப்பெயரையே பயன்படுத்தியிருப்பதை ஆட்சேபித்து பின்வாங்கின. இறுதியாக 1914ல் வெளியிடப்பட்ட போது இத்தொகுதிக்கென பிரத்யேகமாக எழுதப்பட்ட சில கதைகள் சேர்க்கப்படவில்லை. அவை எப்போதும் வெளியாகவே இல்லை.

1882ம் ஆண்டு டப்ளின் புறநகரில் பிறந்த ஜேம்ஸ் ஜாய்ஸ் பள்ளிக்காலத்தில் தீவிர கத்தோலிக்கர்களால் வளர்க்கப்பட்டார். அரபி சிறுகதையின் தொடக்கத்தில் Christian Brothers பள்ளிக்குச் செல்லும் அப்பெயரற்ற சிறுவன் ஜாய்ஸின் இலக்கிய வடிவமே. கல்லூரிப் பருவத்தில் மதம் குறித்த நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யத்தொடங்குகிறார். ஒரு கத்தோலிக்கனாக வாழும்படி மரணப்படுக்கையில் இருந்த அவரது தாயார் கேட்டுக்கொண்டபோது மறுத்துவிடும் ஜாய்ஸ், தாயாரின் இறப்பிற்குப் பிறகு அதனாலேயே கடும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். அக்குற்றவுணர்வே ஸ்டீபனின் குற்றவுணர்வாக யுலிசிஸ் நாவலில் உருமாறியிருக்கிறது. 1900 முதல் 1903 வரை உரைநடை பத்திகள் மட்டுமே எழுதியவர், அவற்றை Epiphanies என அழைக்கத் தொடங்கினார். விவிலியத்தில் வேர்கொண்டிருக்கும் அச்சொல் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உத்தியாக நிலைகொண்டது.

டப்ளின் இலக்கிய சங்கத்தின் உறுப்பினரானவர், மருத்துவம் படிக்கத் தொடங்கினார். 1902ம் ஆண்டு மருத்துவம் படித்துக்கொண்டிருக்கையிலேயே பாரீஸ் கிளம்பிச் சென்றார். அங்கு சில காலம் இலக்கியம் பயின்றவர், டப்ளின் திரும்பி நூலகங்களில் இலக்கியம் வாசித்தார். மது விடுதிகளிலும் வேசிகளுடனும் பெரும்பாலான பொழுதுகளைக் கழித்தவர், சட்டக் கல்லூரியிலும் சேர்ந்தார். 1904ம் வருடம் நோராவைச் சந்தித்தார். அதே ஆண்டு டப்ளினர்ஸ் தொகுதியின் முதல் கதையான ‘தி சிஸ்டர்ஸ்’ ஜாய்ஸின் புனைப்பெயரில் வெளியானது. நோரவிற்கும் ஜாய்ஸிற்கும் ஜார்ஜியோ, லூசியா என இரு குழந்தைகள் பிறந்தனர். வாடகை தராததால் ஜாய்ஸின் குடும்பம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது. ‘A Painful Case’ கதையை எழுதினார். எக்சைல்ஸ் எனும் ஒரே ஒரு நாடகமும் சில கவிதைகளும் எழுதியுள்ள ஜாய்ஸ், 1914ம் ஆண்டு டப்ளினர்ஸ் தொகுதியிலுள்ள பதினைந்து சிறுகதைகளையும் எழுதி முடித்தார்.

சுயசரிதை தன்மை உடைய தனது முதல் நாவலான A Portrait of the Artist as a Young Man-ஐ அடுத்த சில மாதங்களிலேயே எழுதியவர், யுலிசிஸ் மற்றும் பின்னிகன்ஸ் வேக் ஆகிய இரு நாவல்களை எழுதி முடிக்க தனது மீதி வாழ்நாள் முழுவதையும் எடுத்துக்கொண்டார். யுலிசிஸ் வெளியான காலத்தில் டி.எச்.லாரன்ஸ் போன்றோரால் முழுமையாக வாசிக்கப்படாமலேயே (“I am sorry, but I am one of the people who can’t read Ulysses.”) கடுமையாக நிராகரிக்கப்பட்ட போதும் இன்றைக்கு ஆங்கில இலக்கியத்தின் க்ளாசிக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. ‘Quark’ உட்பட புகழ்பெற்ற சில புதிய வார்த்தைகளையும் உருவாக்கிய ஜாய்ஸ், 1941ம் வருடம் தனது 59வது வயதில் ஜூரிச் நகரத்தில் மரணமடைந்தார். டைம்ஸ் பத்திரிக்கை 1999ம் ஆண்டு வெளியிட்ட இருபதாம் நூற்றாண்டின் 100 அதிமுக்கியமான மனிதர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் பெயரையும் சேர்த்து கௌரவித்தது. யுலிசிஸ் நாயகன் லியோபால்ட் ப்ளூமின் பெயரால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 16ம் தேதி ப்ளூம்ஸ் தினமாக ஜாய்ஸ் இரசிகர்களாலும் இலக்கிய ஆர்வலர்களாலும் கொண்டாடப்படுகிறது.

‘டப்ளினர்ஸ்’ சிறுகதைத் தொகுப்பை ‘டப்ளின் நகரத்தார்‘ என்னும் தலைப்பில் க.ரத்னம் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

*

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘Tenet‘ – a turtle turned upside down.

ஒரு தியரியை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் சில சிக்கல்கள் உண்டு. புதிர்ப்போட்டியின் கட்டங்களை நிரப்பிய பிறகு, ‘ச்சீ அவ்வளவுதானா?’ எனத் தோன்றிவிடுவதைப் போல அவற்றின் மீதான பிரமிப்புகள் உடனடியாக சரிந்துவிடுகின்றன. இந்தப் போதாமையை மீறிச்செல்ல வேண்டுமெனில் அதன் மையக்கருவானது அறிவியலைத் தாண்டிய மனித உணர்வுகளில் நிலைகொண்டிருக்க வேண்டும். உலகெங்கிலுமுள்ள பல்வேறு மேதைகளும் அறிவியல் புனைவை அங்ஙனமே அணுகியிருக்கிறார்கள். ஓர் அடிப்படை விதியாக, Human factor இல்லாத எந்தக் கலையும் அறிவியல் புனைவும் நீண்டகால நோக்கில் எடுபடுவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதைச் சரியாகக் கையாளாத படைப்புகளின் உடனடி விளைவுகள் குழந்தைத்தனமானவையே என்கிற மேலான புரிதல் வேண்டும்.

https://www.mensjournal.com/wp-content/uploads/2019/12/tenet-nolan-main-1345.jpg?quality=86&strip=all

நோலனின் பெரும்பாலான படங்கள் வெறும் பகட்டான உத்திகளை நம்பி எடுக்கப்பட்டவை. தன்னுடைய தியரிகளை டீகோடிங் செய்யத் தூண்டுவதே அவரது தலையாய நோக்கம். மொழியில் முறுக்கு பிழிந்து சிற்றிதழ்வாசிகள் மோஸ்தர் காட்டுவதைத்தான் அவர் தன்னுடைய திரைமொழியில் செய்கிறார். அவரது ‘இன்சப்ஷன்’ படத்தையே எடுத்துக்கொள்வோம். கனவுக்குள் கனவுக்குள் கனவு என்கிற கருதுகோளைப் புரிந்துகொண்ட பிறகு அதில் எஞ்சியது என்ன? நம்மை ‘இண்டலெக்ச்சுவலாக’ உணரச்செய்து தற்காலிகமாக கிளுகிளுப்பூட்டியதற்கு அப்பால் அந்தப் படத்தில் அவர் சாதித்தது என்ன?

சராசரிக்கும் கீழான இயக்குநர் எனக் கருதப்பட வேண்டியவர் நோலன். அவர் இயக்கிய படங்களிலேயே மிகவும் மோசமான படம் டெனட். ‘டன்கிர்க்’ தவிர்த்து, அவரது முந்தைய படங்களில் ஒரு குறிப்பிட்ட தியரிக்குண்டான அவசியமாவது இருந்தது. இந்தப் படத்தில் அதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. இதுவொரு சாதாரண ஜேம்ஸ் பாண்ட் வகையறா திரைப்படம். உலகைக் காப்பாற்ற ரஷ்ய வில்லனைத் தடுக்க வேண்டும். இந்த அரதப்பழசான கதையை வைத்துக்கொண்டு பார்வையாளர்களின் முகத்திற்கு நேராகவே மூக்கில் குத்தியிருக்கலாம். அப்படி சுலபமாகச் செய்துமுடித்திருக்கக்கூடிய வழிமுறையை விட்டுவிட்டு டேபிளை உடைத்து, யூ டர்ன் எல்லாம் அடித்து…. ஏன் சார்?

https://hips.hearstapps.com/hmg-prod.s3.amazonaws.com/images/tenet-elizabeth-debicki-kat-kenneth-branagh-sator-1598964677.jpeg

1. படத்தின் இதயமாக உள்ள காலக்கோட்பாட்டு அம்சத்தைப் பிடுங்கி எறிந்தாலும் சரி, பொருத்திப் பார்க்க முயன்றாலும் சரி, அது சவம் போலத்தான் கிடக்கப்போகிறது. அந்த தியரியை புரிந்துகொள்ள மெனக்கெடவில்லை எனினும் பார்வையாளர்களுக்கு எந்தவிதமான நட்டமுமில்லை. ஏனெனில், படத்தின் அடிப்படை கட்டமைப்பும் கதாபாத்திர குணாதிசியங்களை எழுதியிருக்கின்ற விதமும் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது.

2. காலத்தை முன்பின்னாக வளைத்து இணைவொத்த உலகங்களின் (parallel worlds) இயங்குமுறையை டார்க் தொடரிலேயே சலிக்கச் சலிக்கப் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தில் அதைத் தாண்டி புதிதாக எதுவுமில்லை. அதனால், ராபர்ட் பாட்டின்சனோ வாஷிங்டனோ ‘beginning’ அல்லது ‘end’ பற்றி பேசிக்கொள்ளும் போது அலுப்பாக இருக்கிறது. இப்படத்தின் இறுதியில், ‘this is the end of a beautiful friendship’ என்று, இங்கிரிட் பெர்க்மன் நடித்த காஸப்ளாங்கா படத்தின் வசனத்தை வேறு உல்டா பண்ணியிருக்கிறார்கள். Tribute-ஆ? Poor writing-ஆ?

3. சீரான இடைவெளியில் இயற்பியல் விதிகளைப் பற்றி பாடமெடுத்து திகிலூட்டுகிறார்கள். Inverted entropy, Hypo-center, Grandfather paradox, Temporal pincer movement போன்ற சிக்கலான இயற்பியல் விதிகளையும் தத்துவங்களையும் ஒற்றை வசனங்களில் அனாயசமாக கடந்துசெல்கிறார்கள். அவற்றைப் பின்தொடர இயல்கிறது எனினும் காட்சி ஊடகத்தின் நோக்கம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு வகுப்பெடுப்பதல்ல. குறைவாகச் சொல்லி அதிகமாக ‘காட்டப்படுவதே’ நல்ல திரைப்படத்திற்கான இலக்கணம்.

4. இந்தப் படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் கோட்பாடு குறித்து இயக்குநருக்கே தெளிவின்மை இருந்திருக்க வேண்டும். அதன் விளைவாக சில தர்க்கப் பிழைகளும் விடுபடல்களும் மலிந்துவிட்டிருக்கின்றன. உதாரணமாக, காலத்தைத் ‘திருப்பி’ கடந்தகாலத்திற்குள் நுழையும்போது மூச்சுவிடுவதற்குச் சிரமமாக இருக்கும் என்பதால் செயற்கை வாயு மூலமாகவே அந்தத் தலைகீழ் உலகில் சுவாசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், பல காட்சிகளில்- நீலும் ப்ரொட்டகானிஸ்ட்டும் வாகனத்திற்குள் அமர்ந்திருக்கும்போது- செயற்கை வாயுவின் உதவியின்றி சாதாரணமாகவே மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏதும் படத்தில் இல்லை.

https://nofilmschool.com/sites/default/files/styles/facebook/public/tenet_bts.png?itok=FGi1ehzC

5. நோலனிடம் கலையம்சங்களை எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில், ஒரு வணிகத் திரைப்படத்திற்குரிய குறைந்தபட்ச சவால்களைக்கூட நோலன் சந்திக்கவில்லை, பூர்த்திசெய்யவில்லை.

6. பின்னணி இசையில் ஹான்ஸ் ஸிம்மரின் சாயல் இருந்தாலும் இப்படத்தின் முதல் பாசிட்டிவ் விஷயம் இசை மட்டுமே.

7. இரண்டாவது, எலிசபெத் டெபிக்கி. ஆறடி மூன்றங்குல உயரத்தில் நெடுநெடுவென நடமாடும் விளக்குக் கம்பம் போலிருக்கிறார். அந்த உயரமும் போதாமல் படம் முழுக்க ஹீல்ஸ் அணிந்துகொண்டு திரிகிறார். விண்ணேவிய ஏவுகணை போல அவர் கடலில் டைவ் அடிக்கிற காட்சியை என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

*

சமகால இயக்குநர்களுள் மிகவும் புத்திசாலித்தனமான இயக்குநர் யோர்கோஸ் லன்திமோஸ். (Yorgos Lanthimos) அவர் சமீபத்தில் இயக்கிய குறும்படமான ‘Nimic’-இலும் அவரது மேதைமை புலப்படுகிறது. ஒரு சிந்தனையை விரித்தெடுத்து அதைப் படமாக முன்னெடுப்பதிலுள்ள கூர்மை, எட்டுத் திக்கிலும் சுழல்கிற அசாத்தியமான காமெரா கோணங்கள், எங்கே வெட்டி எங்கே முயங்குகிறது என்றறியாத வகையில் வயலினுக்கும் அதை மீட்டுகிற கைகளுக்குமான உறவைப் போன்ற படத்தொகுப்பு என பத்து நிமிடக் குறும்படத்தில் அவ்வளவு கச்சிதம், முழுமை. Mubi தளத்தில் காணக் கிடைக்கிறது.

https://i.ytimg.com/vi/lo4a6DpKXyE/maxresdefault.jpg

*

ஆஸ்கருக்கான வெளிநாட்டுப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் வரிசையைப் பார்வையிட்டேன். இரண்டு இயக்குநர்களின் பெயர்கள் மட்டுமே நமக்குப் பரிச்சயமானவை. ஒருவர், மஜித் மஜிதி. மற்றொருவர், லிஜோ யோஸ் பெல்லிசேரி. இந்தியாவின் சார்பில் அவர் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படத்தை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கத் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டத்தக்க முடிவு. அந்தப் படத்தை ஆஸ்கருக்கான ‘மெட்டீரியல்’ என வகுக்கலாம். The Lunch box படம் வெளியானபோது, அதை அனுப்பி வைத்திருந்தால், அப்போதே நாம் ஆஸ்கரை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், ஈரான் பட விழாக்களுக்குத் தோதுபடும் உப்புசப்பில்லாத The Good Road படத்தைத் தேரந்தெடுத்து அந்த நல்வாய்ப்பைப் பறித்திருந்தார்கள். இந்தத் தெரிவு குறித்து இயக்குநர் அனுராக் கஷ்யபும் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார். இந்த முறையாவது இந்தியத் தேர்வுக் குழுவினர் சுதாரித்துக்கொண்டார்களே என்கிற அளவில் மகிழ்ச்சி.

https://www.thehindu.com/entertainment/movies/7guhlj/article30036805.ece/ALTERNATES/LANDSCAPE_1200/Copy-of-FILM-STILL-4

ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் நாகரீகக் கூட்டத்தின் ஒழுங்கமைவைக் குலைக்க ஓர் எருமை போதுமானதாக இருக்கிறது. நாம் அடக்கி வைத்திருந்த அசலான உணர்ச்சிகள் அத்தனையும் சடுதியில் கொப்பளித்து ஆர்ப்பரிக்கையில், அவற்றைக் கண்டுகொண்ட விழிப்பில், ஆற்றொழுக்கிற்கு இசைந்து கொடுப்பதா அல்லது கரையேறத் துடிப்பதா? நமது சமூகக் கட்டுமானங்கள் எவ்வளவு பலவீனமான அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்த போது ஒரு விதத்தில் ஆசுவாசமாகவும் இருந்தது. பதற்றங்கள் எல்லாம் ஒழுங்கிற்கே அவசியப்படும். தறிகெட்டோடும் பித்து நிலைக்கு எட்டுத் திக்கும் விடுதலையே.

இத்தனை கூர்மையான ஒலி அமைப்பையும் அதன் அச்சமூட்டுகிற ஓங்காரங்களுக்கு ஈடுகொடுத்து ஒத்திசைந்திருக்கும் படத்தொகுப்பையும் வேறெந்த இந்தியப் படத்திலும் சமீபத்தில் பார்க்கவில்லை. எருமையைப் பற்றி நமக்கொரு பிம்பம் இருக்கிறது. அதை எப்படியெல்லாம் உருமாற்றி எடுத்திருக்கிறார்கள் எனப் படம் நெடுக வியந்தவாறே இருந்தேன். ஒரு போருக்கான ஆரவாரப் பெருங்கூச்சலுடன், எருமையைத் துரத்திக்கொண்டு ஓடும் வெறிகொண்ட கூட்டத்தைக் காட்டும் இடைவேளைக் காட்சியை, உலகின் எந்த மூலையிலும் ‘எங்களது படம்’ என்கிற பெருமிதத்துடன் திரையிட்டுக் காட்டலாம்.

https://images-na.ssl-images-amazon.com/images/I/91t1KOnSZpL._RI_.jpg

இந்த மாதிரியான கதைக்களங்களில் ஏற்பட்டுவிடக்கூடிய சிக்கல்களும் இல்லாமல் இல்லை. ஒரே ட்ராக்கில் சென்று அலுப்பூட்டிவிடக்கூடாது என்பதற்காக துணைக் கதாபாத்திரங்களை அசடுகளாக சித்தரிப்பது, சுவாரஸ்யத்திற்காகத் திணிக்கப்பட்ட நகைச்சுவை வசனங்கள் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். அப்புறம், கிளைமாக்ஸிற்குப் பிந்தி வரும் ஆதி மனிதக் கூட்டம். இயக்குநரின் நோக்கமும் அவர் குறிப்புணர்த்த விரும்பும் செய்தியும் ஏற்கனவே பட்டவர்த்தனமாக புரிந்துவிட்ட பிறகு மேலதிக கோனார் விளக்கங்கள் தேவையில்லை. பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தின் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருங்கள் லிஜோ.

வாழ்த்துகள்!