உமையொருபாகன்

0 comment

“இழுத்து உள்ள விட்றா அவன”. காலுக்குக் கீழே நீரின் கலங்கலாக குரல் ஒலித்தது. எட்டிப் பார்த்தேன். முங்கி எழுந்த பளபளப்பு உடலுடன் எனக்குப் பின்னால் பார்த்து ஜெயராம் அண்ணா கத்திக்கொண்டிருந்தான். முகத்தில் நீர் வழிவுடன் ஒரு சிரிப்பும் இருந்தது. 

அப்போதுதான் எங்கிருக்கிறேன் என்கிற உணர்வு வந்தது. கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தேன். சுவரில் என்றால் சுவர் நுனியில். அத்தனை நேரம் எப்படி விழாமல் இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. ஏதொவொன்று என்னைக் கீழே விழாமல் தடுத்திருக்கிறது.

பின்னால் திரும்ப நினைத்தேன். உடல் இரும்பாலானது போல கெட்டியாக இருந்தது. தலையை மட்டும் திருப்பிப் பார்த்தேன். ஈர உடலுடன் இரு கைகளையும் மேலே தூக்கியவாறு என்னைத் தள்ளிவிடும் பாவனையில் முத்தரசன் இருந்தான். கண்கள் நீர் வெளிச்சத்தில் மின்னின. நான் திரும்புவதற்காக அதுவரை காத்திருந்தவன் பின் அலட்சியமாக கைகளைத் தொங்கவிட்டு, “பாவம், விடு மாப்ள. பய ஒடம்பு செத்துப் போயி ஒக்காந்திருக்கான். தெளிஞ்சு வரட்டும்” எனக் கூறிவிட்டு அருகிலிருக்கும் இரும்பு ஏணி நோக்கிச் சென்றான். கணுக்காலைச் சுற்றி சீவிவிட்ட மாதிரி இருந்த முடிகளிலிருந்து நீர் வழிந்து ஏணிப்படியில் ஊறிப் பரவியது. வேகமாக ஏறி மோட்டர் ரூமின் உச்சிக்குச் சென்றவன் அதே வேகத்தில் “தட்” என இரு கைகளையும் பலமாகத் தட்டிக்கொண்டு நீருக்குள் சொருக்கடித்தான். நீர் தன் பங்கிற்கு அவனை உள்ளே விட்டு நுரையெழுப்பியது.

என்னால் கிணற்றிலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. நீரை நிறைத்திருந்த உடல்கள் கை கால்களை அசைத்து துள்ளிக்கொண்டிருந்தன. ஏதோ பெயர் தெரியாத மிருகங்கள் என ஒரு நிமிடம் எண்ணிக்கொண்டேன். சிரிப்பாக வந்தது. உள்ளிருக்கும் யாருக்கும் அப்படித் தோன்றுவதில்லையா? இதோ நிமிடத்திற்கு ஒருமுறை மேலே வந்து நடராஜ் திரும்ப குதிக்கிறான். அவன் கண்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை எதுவும் தெரியாது. ஏறி நிற்கும் ஒவ்வொரு நொடியும் உள்ளே குதிக்கச் சொல்லும் உடல் கொண்டவனால் எதையும் பார்க்க முடியாது போல. எனக்குச் செய்ய எதுவுமில்லை.

அந்த நினைப்பே ஒருவிதமான கிளர்ச்சியை அளித்தது. பூமியை மேலிருந்து பார்க்கும் கடவுளாக நினைத்துக்கொண்டேன். உற்சாகமாக இருந்தது. அம்மா சொல்லியிருக்கிறாள். மொட்டை மலையிலிருந்து பெருமாள் நம்மை அப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று. ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை அங்கு கூட்டிக்கொண்டு செல்வாள். அங்கங்கு நின்று மூச்சு வாங்கி அவளைப் பிடித்துக்கொண்டுதான் ஏறுவேன். “நல்லா வேண்டிக்கோ. கைகாலுக்கு பலம் தா சாமீண்ணு” எனச் சொல்வாள். கும்பிட்டுவிட்டு மலை இறங்கும் போது குதூகலமாக இருக்கும். மழைபெய்து முடிந்திருந்தால் அங்கங்கு பள்ளங்களில் தேங்கியிருக்கும் நீரில் குதித்து நீரைத் தெறிக்கவிட்டுக்கொண்டே செல்வேன்.

இந்தக் கிணற்றிக்கு கடவுள் நான் என எனக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டேன். அதை உன்னிப்பாக ஒவ்வொரு பகுதியாக பார்க்க ஆரம்பித்தேன். கிணற்றின் மேற்சுவர் இடைவெளி பெரிய கற்களால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு கிழவனின் பல்வரிசை போல இருந்தன. துரைச்சாமி தாத்தாவின் பற்கள் அப்படித்தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் கீழே பார்த்தால் கற்கள் சிறிய அளவில், ஆனால், நெருக்கமாக இருந்தன. அவற்றின் அடிவரிசை தண்ணீரின் தொடர்ந்த அலைகளால் கருமை கொண்டு அடர்பச்சையாக இருந்தது. பாஸ்கரய்யா ஞாபகம் வந்தார். இடைவெளி இல்லாத நெருக்கமான பற்கள் அவருடையவை. சாஸ்தா கோவில் தைத்திருவிழா அன்று சுற்றிலும் ஆட்கள் நெருக்கியிருக்க ஒரு கட்டு அடிக்கரும்பை உரித்துக் காட்டியவர்.

மீண்டும் ஒரு நிமிடம் மேற்சுவரைப் பார்க்கும் போது திகைத்து விட்டேன். கூட்டமான கிழட்டு முகங்களின் சிரிப்பாக அவை தெரிந்தன. அதற்குக் கீழே அப்பாக்களின் முகவரிசை. உடனே எண்ணம் நீர்ப்பரப்பின் உள்ளே சென்றது. அங்கு சுவர் எப்படி இருக்கும்? கற்களே இல்லாத ஒற்றை வழுவழுப்பாகவா? பிறந்த குழந்தையின் ஈறுகளைப் போல. ஒரு நிமிடம் தலை சுற்றியது. உறுதியாக சுவரைப் பிடித்துக்கொண்டேன். 

அசைய நினைக்கையில் காலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. கால் கனத்து மரக்கட்டையானது போல உணர்ந்தேன். சிறிது நேரம் அசைக்காமல் விட்டாலே என் கால் மரத்துவிடும். மிலிட்டரி ராஜ் மாமா பார்க்கும் போதெல்லாம் சொல்வார். “மருமவனே, நுனிக்கால் நடையால்ல இருக்கு. அழுத்தி வெச்சு நடக்கணும். மண்ண அறிஞ்ச காலுதான் மாமரத்து வேரா நிக்கும். வெளங்குதா?” அம்மாவோ “அண்ணே, நெனப்பு மண்ணுல இருந்தாத்தான காலு தரையில ஊணும்? ஆகாசத்த பாக்குற கண்ணுல்ல வாச்சுருக்கு? மொத்த பலத்தையும் ஆண்டவன் கண்ணுல வச்சுப்போட்டு ஒடம்ப ஒன்னுமில்லாம ஆக்கிட்டானே?” என அங்கலாய்ப்பாள்.

காலை மெதுவாக அசைத்துக்கொண்டே கவனத்தைத் திருப்பி உள்ளே விளையாடுபவர்களைப் பார்த்தேன். ஜெயராம் அண்ணன் ஓரிடத்தில் முங்கி மறுமுனையில் மேலே வந்தான்.

“லேய், அந்த மரியதாஸ் பய போக்கே சரியில்ல. நம்ம மண்டகப்படித் தெருப்பக்கம் லாந்திக்கிட்டிருக்கான். அந்தால சாரதா என்னப் பாத்ததும் விருட்டுன்னு வீட்டுக்குள்ள ஓடிட்டா. இவன் அசையாம நிக்கான். என்னடான்னு கேட்டா தாயளி ஏத்தமா பதிலு சொல்லுதான். ஒருநா வெச்சு உரிச்சுவுடனும்.”

“அவென் எவனுக்கும் பயருதான் இல்ல மாப்ள. ஸ்கூலுல வாத்திக கூட நின்னு கொடிக்கவுற அவந்தான கட்டியவுக்கான். அந்த மெதப்பு அவனுக்கு. அவன் ஆரம்பிக்க அவன் பூலப் புடுச்சுட்டுல்ல தமிழ்த்தாய் வாழ்த்தும் ஜனகனமனவும் பாடுதோம்.”

“அந்தப் பகுமான மயிரெல்லாம் ஸ்கூலோட இருக்கணும். ஊருக்குள்ள அத நீட்டுனா கொட்ட கலங்கிரும் பாத்துக்க.”

கைகளின் அசைவில் அலைகள் எழுந்து அவனைத் தழுவிக்கொண்டன. அது பத்தாதது போல கைகள் மேலும் நீரை அள்ளி தன் புறங்கழுத்திலும் மார்பிலும் தெளித்துக்கொண்டன. மேலிருந்து பார்க்கையில் தன்னைத்தானே வாரி அணைத்துக் கொள்பவன் போலத் தெரிந்தான். அசைவிக்கேற்ப அவன் தசைகள் புடைத்தெழுந்து இறங்கின.

மீண்டும் ஒருமுறை முங்கி எழுந்தான். நீர் வழியும் தலையை வேகமாக உதறி துளிகளாக்கிச் சிதறடித்தான். ஒவ்வொரு அசைவிலும் கண்ணுக்குத் தெரியாத துள்ளல் அவனில் வெளிப்பட்டது. பாஸ்கரய்யாவுடன் காட்டுக்குச் சென்று திரும்பும் மாருதி தெருமுனை வந்ததும் இதே போலத்தான் துள்ளும். பொறுக்க முடியாமல் வீடுவரை வந்து ஒருமுறை சுழன்று மீண்டும் சென்று அவர் கூடவே நடந்துவரும்.

இதே ஜெயராஜ் அண்ணா வகுப்பில் இருக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அண்ணா என்னைவிட ஆறு வயது மூத்தவன். வகுப்பறையைத் தாண்டி செல்லும் போது ஜன்னல் வழியாக எப்போதும் அவன் உருவம் தெரியும். ஒரு தடவை பார்த்த போது கைகளை மார்பின் குறுக்காகக் கட்டி நின்றுகொண்டு மேலே கூரையைப் பார்த்து உத்தரத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக பிய்த்து எடுத்து சொல்லிக்கொண்டிருந்தான். “தி.. தி அவுட்டர் லேயர் லேயர் இஸ் கால்டு …..” வாக்கியத்தை முடிப்பதற்குள் அருகில் நின்றிருந்த பெருமாள் வாத்தியார் பிரம்பால் விளாச ஆரம்பித்தார்.

வெகு நேரமாக சுவரைப் பிடித்திருக்க வேண்டும். தோள்பட்டையின் வலி தெரிய கைகளைத் தளர்த்தினேன். வலது கையால் தோள்மூட்டை அழுத்த மெல்லிய வலி எழுந்து உடலை நிறைத்தது. ஒரு வாரமாக இருந்த காய்ச்சல் இறங்கி உடல்வலியும் நாக்கசப்பும் மட்டும் மிச்சம் இருந்தது. முந்தைய நாள் இரவு முழுக்க ஆனந்தன்தான் உடலை அழுத்திவிட்டான். வீட்டிலிருக்கத்தான் நினைத்தேன். பாஸ்கரய்யா எல்லாரையும் தோப்புக்கு கூட்டி வந்துவிட்டார். அவர் சொல்லை யாராலும் மீற முடியாது. அம்மாவும் மறுபேச்சின்றி சரியெனச் சொல்லிவிட்டாள்.

“டேய் பாலு, நம்ம பிரதமரு பேரு என்னடா?” ஜெயராம் அண்ணன் மோட்டார் குழாயைப் பிடித்தவாறு மேலே பார்த்துக் கேட்டான்.

“நரசிம்ம ராவ்” என்றேன். 

“ஆங். அவந்தான். அவெம் பேருதான் நெனப்புக்கு வரல. பக்கத்துல முத்துகணேசனை எழுப்பி வுட்டுட்டாரு. அவென் எங்கிட்ட சொல்றான்னு முணுமுணுக்கான். குலாம் சாருக்கு காது மந்தமாச்சே. பலக்க சொல்லுலேங்குறாரு. என்னைய நிமிண்டுதான். நாம என்னத்த கண்டோம்? ராமகிருஷ்ணா தேட்டருல என்ன படமுன்னு கேட்டா சொல்லுவேன். இந்த வாரம் பாண்டித்துரை படம் போடுதான் மாப்ள. போவமா? பிரபு-குஷ்பு படம். கறவைக்கேத்த மயிலை பாத்துக்க. நிக்கவெச்சு கறந்துருவான்.”

“நல்ல ஆளக் கேட்டாரு போ. முத்துகணேசனுக்கு கெளக்க மேக்க தெரியாது. ஆனா ஒந்தம்பி பாலு சூட்டிப்புக்காரன்டா. குண்டு குண்டா உருட்டி உருட்டி எளுதுதான். வார்த்தை வருத புத்தி உள்ளவன் பாத்துக்க.”

“புத்தி இருந்து எதுக்கு? மேலுகாலு சொணங்கில்ல கெடக்கு. எல்லாம் அந்த ஆனந்தன் சகவாசந்தான். எந்நேரமும் கக்கத்துல சொமந்துட்டுல்ல திரியுதான். இன்னும் மொள கொடுக்கது மட்டுந்தான் பாக்கி.”

“ஆனந்தனா?”

“ஆமடா. இந்நேத்து ஆரம்பிச்சதில்ல. இந்தா இவென் இம்புட்டுக்காண்டு இருந்தப்ப இருந்தே இந்தக் கூத்துதான். சித்தி திருணையில உக்கார வெச்சுட்டு உள்ளாற வேலன்னு போனா வாறவரைக்கும் பிடிப்பிள்ளையாரா அங்கனையே இருப்பான். என்னத்த பிறாக்கு பாக்கான்னு தெரியாது. கையிலுருக்குத சுஸ்யத்துல எறும்பு மொய்க்க ஆரம்பிச்சுடும். மேக்காப்பய கணக்கா உறஞ்சுபோயி கெடப்பான். யாரு தூக்குனாலும் கல்லாட்டம் கூடவே போவான். மேலுகாலு கோந்தாட்டம் ஒட்டிக்கிடக்கும். எங்கய்யா பாக்குறப்போ எல்லாம் மெரட்டுவாரு. “லேய், அசமந்தக் கழுத. எந்திரிடா”-ம்பாரு. தாத்தா கிட்டயும் சொல்லி அங்கலாப்பாரு. அப்பனில்லாதவன் தாட்டியா இருக்காண்டமா, இப்படி சமஞ்ச புள்ளையா அசையாம கெடக்கானே, பெட்டையாப் பொறந்திருக்கனும்னு சொல்லுவாரு.

“ஒருநா உரமூட்டைய வண்டியில ஏத்தி விட்டிட்டு அந்தால வந்த ஆனந்தன் கூப்புட்டதும் கையைத் தூக்கி எடுங்கறான். அப்பயிருந்து இந்தக் கோலந்தான். காடுகரையெல்லாம் கூட்டித் திரியுதான். குதுர ஏறுன அய்யனார் கணக்குத்தான். பாஸ்கரய்யா கூப்புட்டு கேட்டாரு. “ஐயா, அத்தனை ஆட்டத்தையும் உள்ளாற ஆடிப் பாக்குற ஆளு அவுக. அந்த வேகத்துக்கு கையிகாலு ஈடு கொடுக்காதுல்ல”ன்னு ஆனந்தன் சொல்றான். முட்டாப்பய என்னத்தையாவது ஒளறுவான். இவனையும் சிறுசுதானன்னு யாருங் கண்டுக்கல்ல. இப்ப வயசு எட்டாச்சு, இன்னும் வுட்டபாடில்ல.”

திரும்பி ஆனந்தன் எங்கிருக்கிறான் எனத் தேடினேன். ஆனந்தன் பேரைக் கேட்டதும் அவன் கைகளும் தோள்களும்தான் ஞாபகத்திற்கு வரும். ஒருமுறை என்னைத் தோளில் வைத்துக்கொண்டே வயல்களினூடாக சுந்தரபாண்டியம் வரை திருவிழாவிற்கு கூட்டிப்போனான். தன்னுடைய பழுப்பு வேட்டி முடிப்பிலிருந்து சில்லறைக் காசுகளை எடுத்து கலர் காத்தாடி வாங்கித் தந்தான். வரும் வழியில் சட்டையில்லாத வெற்று புஜத்தின் மேலே அமர்ந்து கையை உயர்த்தி வேகமாக காத்தாடியை சுழல விட்டுக்கொண்டு வெகுநேரம் கழித்து வீடு வந்துசேர்ந்தேன்.

மறுநாள் பகலெல்லாம் தூங்கிக்கொண்டிருந்தேன். காலை சாப்பாட்டிற்காக அம்மா என்னை வலிந்து எழுப்ப அப்போது முன் திண்ணையில் முழுவேகத்தில் தேங்காய்களைத் தொலித்துக் கொண்டிருந்தான். அருகில் உரித்த மட்டைகள் குவியலாகக் கிடந்தது.

உட்கார்ந்திருந்த கிணற்றுச் சுவரில் கால்களை மெல்ல தேய்த்துக்கொண்டேன். கற்களுக்கிடையிலிருந்த கெட்டி மண்கலவையின் துகள்கள் உதிர்ந்து நீரில் விழுந்தன. “தட்” என சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். காய்ந்த தென்னையோலைகளை வெட்டித்தள்ளி மரத்திலிருந்து ஆனந்தன் இறங்கிக்கொண்டிருந்தான்.

எழுந்து அவனை நோக்கிச் சென்றேன். கிணற்றை ஒட்டிய குடிசையின் முன்னாலிருந்து புகை எழுந்துகொண்டிருந்தது. அம்மாவின் கைகள் அரிவாள்மனையின் இருபக்கமும் அசைய பிங்க் நிற கறித்துண்டுகள் பெரிய அலுமினியத் தட்டில் நிறைந்தன. அருகில் வனஜா பெரியம்மாள் பெரிய பாத்திரத்தில் கரண்டியை வைத்து கிண்டிக்கொண்டு இருந்தாள்.

“அக்கா, சாப்பாட்ட குழைய விடுங்க. பச்சரிசி சாதம் பசையா இருந்தாத்தான் பாஸ்கர் பாவாவுக்குப் பிடிக்கும்.” அம்மா சொன்னாள்.

“ஆமா அந்த வக்கனயெளவுதான் தெரியுமே. உங்க பாவாவுக்கு கிண்டிக் கிண்டி வருஷம் பதினஞ்சு ஓடிப்போச்சு. வந்தப்ப இருந்த காடுகரையில பாதிதான் பாக்கி. இப்ப கொஞ்ச நேரத்துல உள்ள ஊத்திக்கிட்டு வந்துருவாரு. அந்த வேக்காட்டுச்சூடு போதும். உள்ள மிச்சத்தயும் வித்துப்பொசுக்கி அழிக்க. என் தலைக்கிறுக்கல் அப்படி. ந்தா… அந்த தூக்குவாளிய எடுத்தா.”

புகைக்கூட்டத்திற்கு நடுவே இருவரும் சமைத்துக்கொண்டிருந்தனர். காய்ந்த தென்னையோலைகள் மண்ணில் இழுபட மட்டைகளை இழுத்துவந்து முற்றத்தில் போட்டான் ஆனந்தன். முடியில்லா முன்னெற்றியில் வியர்வை துளிர்த்திருக்க வெயில் பட்டு மின்னியது. மடித்துக் கட்டிய வேட்டி முடிச்சை தளர்த்தி கால்களுக்கிடையில் விட்டு அழுத்தி குத்த வைத்து அமர்ந்தான். நரைத்த முன்கைகளுக்கடியில் நரம்பு ஓட்டங்கள் புடைத்துத் தெரிந்தன.

வெட்டுக் கோடுகள் ரேகைகளுக்கு இணையாக நிறைந்திருக்கும் கைகள் ஆனந்தனுடையது. அந்தக் கைகளின் உறுதியை மட்டுமல்ல அதன் கதகதப்பையும் அறிந்துள்ளேன். நேற்றிரவு முழுவதும் அந்தக் கைகள்தான் என்னை வருடிக்கொண்டிருந்தன. 

முடக்குவாதமாக இருக்குமோவென அம்மா மிகவும் பயந்துவிட்டாள். என்னால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. அதேசமயம் உள்ளிருந்து ஒன்று குடைந்துகொண்டேயிருந்தது. உடம்பு புரண்டுகொண்டும் அதனால் ஏற்படும் வலியை உணர்ந்துகொண்டும் இருந்தது ஒரு வார காலமும். பகலில் அம்மா ரசம் பிசைந்து கஞ்சியாக்கி ஊட்டினாள். மூன்று வேளையும் சிவகிரியிலிருந்து வேலப்பன் மாமா கொடுத்தனுப்பிய தைலத்தை தேய்த்துவிட்டாள். 

இரவுகளில் வலி இன்னும் அதிகரித்தது. அசதியில் தூங்கும் சிறுபொழுதுகளின் கனவுகளிலும் வலி தொடர்ந்துவந்தது. வியர்த்து கண்விழித்துப் பார்த்தேன். விசாலமான அந்த அறையின் மூலையில் போடப்பட்டிருந்த என் கட்டிலிற்கு அருகில் சுவரை ஒட்டி சிம்னி விளக்கு கொளுத்தப்பட்டு சன்னமான வெளிச்சம் சூழ்ந்திருந்தது.

சுவரை ஒட்டிய வாசலின் வெளிப்பகுதியில் ஒரு துண்டு விரிப்பு கசங்கியிருக்க அதிலிருந்து ஆனந்தன் எழுந்து அருகில் வந்தான். “உறங்குங்க சின்னியா”என்றான். அவனது கனத்த கை என் கால்களை அழுத்திவிட்டது.

“ரொம்ப கடுக்குது” என்றேன். குடைச்சலைத் தாங்க முடியவில்லை.

“பயறாதீங்க. பயந்தான் பாதி வலி.”

வலியால் கண்கள் பொங்கிக் கலங்க அதில் ஆனந்தனின் முகம் உருகியது போலத் தெரிந்தது. அதன் பிறகு என்னால் அடக்க முடியவில்லை. தொண்டையிலிருந்து விசும்பல் ஒலி எழ கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருந்தது. “இப்படியே செத்துடலான்னு தோணுது. இந்த அவஸ்தையோட போயிடும். எல்லாரும் சிரிக்கிறதுக்கே இந்தக் கையும் காலும் சாமி கொடுத்துருக்கு.”

எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். விளக்கின் ஒளியசைவில் அவன் முகம் துணி நலுங்கியது போல அசைந்தது. அடியிலிருந்து வேறொரு முகம் எழுந்துவருவது போலத் தோன்றியது.

“குட்டி, சாமி குடுக்கது எதுன்னு இப்ப விளங்காது. நான் இந்த வீட்டுக்கு வர்றப்போ உன் வயசு. அந்தால பூசாரிப்பட்டியில இருந்து நடந்தே வந்தேன். அப்பாரு பனங்கள்ளு இறக்கும்போ விளுந்து போயிட்டாரு. அவரு போன ஒரு மாசத்துல அம்மாவும் வுட்டுப் போயிட்டா. சுத்தி ஆளுக எல்லாம் ஓரோன்னு சொன்னாங்க. இன்னொருத்தங்கூட போயிட்டா…. அது இதுன்னு. அவளையும் ஒன்னுஞ் சொல்லுகதுக்கில்ல. கஞ்சிக்கு வழியில்லாத ஒத்த பொம்பள என்ன செஞ்சிருக்க முடியும்? ஆக மொத்தம் நான் தனியா ஒத்தையா நின்னது மட்டும் நெசம்முன்னு புரிஞ்சது. ஊருல இருக்கவும் புடிக்கல. எதப் பத்தியும் யோசிக்காம மேக்க பாத்து நடக்க ஆரம்பிச்சேன். 

“காலதூரம் எதப் பத்தியும் நெனப்பில்ல அப்போ. ஒடம்பு ஓயுற வர நடந்தேன். அடித்தொண்ட அடைக்கிறப்பத்தான் தாகமும் பசியும் பாறாங்கல்லா புறமுதுக அழுத்துறது தெரிஞ்சது. கோபுலாபுரம் தாண்டுனப்போ இங்கயிருந்து எல்லையம்மன் கோவில் மேளச் சத்தம் கூப்டுச்சு. எட்டு வெக்க தெம்பில்லாம காலு மண்ணுல ஒரச சத்தம் வந்த தெச பாத்து நடந்தேன். பாதையில் நம்ம வூடு வந்தது. உள்ளயிருந்து பொங்கச்சோறு வாசனை வர பெரிய தேக்சாவை ரெண்டாளுக தூக்கிட்டு வெளிய வந்தவக பக்கத்து தெருவுல இருந்த கோயிலுக்கு எடுத்துப் போனாக. உள்ளாற இருந்து புகைவாட வர முத்தத்துல ரெண்டு மூணு கல்லடுப்புல குழம்புக கொதிச்சுட்டு கெடந்தது. 

“பக்கனயே கிடுகி போட்டு சனங்க சாப்டுக்கிட்டு இருந்தாக. எப்படி ஒக்காந்தேன் சாப்டேன்னு ஞாபகமில்ல. இப்ப யோசிச்சா  நெனப்பிருக்கதெல்லாம் குனிஞ்ச வாக்கில இருந்த என் முன்னாடி சேலைக சரசரன்னு கேக்க அங்கிட்டு இங்கிட்டுமா ஓடி பரிமாறுன கால்களும் குழம்பூத்துன வளையல்கள் போட்ட கைகளுந்தான். சாப்புட்டு முன்னாடி வந்தப்போ சாய் நாற்காலில அட்டணக்கால் போட்டு ஒங்க தாத்தாவோட அப்பாரு இருந்தாரு.

“என்ன பாத்து என்னடான்னாரு. நான் ஒன்னுஞ்சொல்லல. உள்ளாற முடிவாயிட்டேன். இனிமே இங்கதான்னு. அப்ப தெரியாது ஊர் பெரியகாரியாளு அவருதான்னு. ‘அம்மாவோட மேளச் சத்தங்கேட்டு இங்க வந்தேன். அவளோட சோறு உள்ள போன தெம்புல பேசுதேன். அந்தச் சோறு பொங்கியாற எடந்தான் என் இருப்பு’ன்னு சொல்லிட்டு விறுவிறு உள்ள நடந்துபோயி பந்தியில இருந்த இலைகளை எடுத்து கூடையில போட ஆரம்பிச்சேன். ஆச்சு அம்பது அறுவது வருஷம். ஒருநா கூட பசி எடுக்காம சோத்த வாய்க்கு கொண்டு போனதில்ல. இப்ப தோணுது பசிதான் இந்த ஒடம்புன்னு. பசியாக்கும் என் தெய்வத்தை எனக்கு காட்டுனது. தெனம் இலை முன்னாடி ஒக்காறப்போ வருத நெனப்பு ஒன்னுதான். மிச்ச காலத்துக்கும் பசி இந்த ஒடம்புல இருந்தாப் போதும் வேறொன்னும் வேண்டான்னாக்கும். இப்ப எங்க ஆத்தா அம்மா மொகங்க என்னன்னு கூட ஞாபகமில்ல. அதாக்கும் மனுஷனோட சீவிதப்போக்கு. நாம அத கணக்குப்போட முடியாது. ஒன்னும் வெசனப்படாதீக. பேசாம கண்ண மூடுங்க”

எனக்கு ஏதோ புரிந்தது மாதிரி தெரிந்தது. கண்ணை மூட மனதில் ஆனந்தன் காட்சிகளாக ஓடினான். இலையெடுக்கிறான், தேங்காய் தொலிக்கிறான், உரலில் உளுந்து உடைக்கிறான், காய வைத்து கதிரடித்த கம்மந்தட்டைகளின் மணிகளைச் சேர்த்து மூட்டையாக்கி எடுத்து வருகிறான். அவன் உடல்வலிமை அனைத்தும் வெவ்வேறு பொருட்களாகி சமயலறைக்குள் சென்றபடியே இருந்தது. எப்போது தூங்கினேனென்று தெரியவில்லை. வாசல் பக்கமிருந்து ஆனந்தன் ஒலி கேட்டது. “அம்மா, யாரு வந்துருக்கான்னு பாருங்க” என்றான். ஈரக்கையை சேலையில் துடைத்துக்கொண்டே சிரித்த முகத்தோடு “வாங்க, வாங்க” என்றபடியே வாசல் பக்கம் அம்மா சென்றாள்.

கட்டிலில் படுத்திருந்த நான் திரும்பிப் பார்த்தேன். ஆனந்தனின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லையம்மன் நின்றாள். இருவருமாக உள்ளே வர ஆனந்தனைக் கூட்டிவந்து அறை நடுவில் போட்டு வைத்திருந்த முழு வாழையிலையில் அமர வைத்தாள். அம்மா, பெரியம்மா, பாட்டி எல்லோரும் சுற்றி அமர்ந்து பரிமாறினர். அந்த அரையிருளிலும் அவர்களது தங்கநிற வளையல்கள் விளக்கொளி பட்டு மின்னியது. குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து என்னைப் பார்த்து “வா குட்டி, ஒரு வாய் சாப்பிடு” என்று கையை நீட்டினான். பதறி முழித்துக்கொண்டேன். கட்டிலின் அருகிலிருந்த மரச்சட்டத்தில் தலைக்கு இரு கைகளையும் வைத்து அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.

ஆனந்தன் மீண்டும் ஒருமுறை தென்னையோலைகளை உதறினான். கையளவு இருந்த வளைந்த வெட்டுமுனை கொண்ட கத்தியால் ஓலைகளைக் கீறினான். உள்ளிருந்த ஓலை நரம்புகள் எழுந்து அவன் கைகளுக்கு வந்தன. அப்போதுதான் அது ஈர்க்குச்சிகள் எனத் தெரிந்துகொண்டேன். கைகள் சீராக ஒவ்வொரு ஓலையாகக் கீறிக்கொண்டிருந்தன.

“சின்னியா, வயிறு பசிக்கா? எளனி குடிக்கீயளா?”

நான் வேண்டாமெனத் தலையாட்டினேன். அருகில் கருங்கல் மேலிருந்த பொடிக்கற்களைத் தட்டிவிட்டு மண்ணை ஊதிவிட அதில் நான் அமர்ந்துகொண்டேன்.

எங்களுக்குப் பின்னால் கிணற்றில் தண்ணீர் சிதறும் ஒலியும் கூச்சல்களும் கேட்டன. பக்கத்துக் காட்டின் வேலியைத் தாண்டி பாஸ்கரய்யா வந்துகொண்டிருந்தார். உயரத்தூக்கி மடித்துக் கட்டப்பட்டிருந்த கைலிக்கு உள்ளே சட்டை சொருகப்பட்டிருக்க மேல் பட்டன்கள் எவையும் போடப்படவில்லை. வியர்வை உறிஞ்சப்பட்டு அங்கங்கு சட்டையில் சிறிய வட்டங்களாகத் தெரிந்தன. ஒருகணம் நின்று சிவந்த கண்களால் என்னைப் பார்த்துவிட்டு கடந்து கிணறை நோக்கிச் சென்றார்.

ஆனந்தன் உடலில் எந்த மாற்றமும் இல்லாமல் ஈர்க்குகளை எடுத்துக்கொண்டிருந்தான். “தட்டீர்” என்ற ஒலியுடன் அவரின் நெடிய உருவம் நீருக்குள் விழும் ஒலி கேட்டது. என் உடல் மெல்ல நடுங்கியது. ஆனந்தனின் கால்களை ஒட்டி நெருங்கி அமர்ந்துகொண்டேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டு கைகள் நிறைந்த குச்சிகளை அடியில் தட்டி ஒரே அளவாக்கிக் கட்டி ஓரமாக வைத்துவிட்டு எழுந்தான். வீட்டு முற்றத்தைப் பெருக்கும் துடைப்பமாக அக்குச்சிகள் மாறியிருந்தன.

“பாலு, இங்கண வா”. அம்மா அழைத்தாள்.

உருட்டுக் கரண்டியால் வெந்துகொண்டிருந்த கறியை அழுத்தி மேலெழுந்த மஞ்சள் நீரை அள்ளி டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள்.

“இந்தாக் குடி. தெம்பு கெடைக்கும்”

கொதிக்கும் சூப்புத்தண்ணியை பிடித்த வேகத்தில் கீழே வைத்துவிட்டேன். பின்னர் விளிம்பை மட்டும் பிடித்துத் தூக்கி தூணருகில் வைத்துவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்துகொண்டேன். கறி வேகும் சட்டியையும் டம்ளரையும் மாறி மாறிப் பார்த்தேன். புயலுக்கும் பெருமூச்சுக்குமான வித்தியாசம். வனஜா பெரியம்மா இப்படித்தான் பெருமூச்சுவிடுவாள். சமையலறையில் இருப்பவர்களின் மொத்தப் பெருமூச்சையும் சேர்த்தால் ஒருவேளை புயலாக இருக்குமோ?

மீண்டும் “தட்” என்ற ஒலி கேட்டது. கூட்டமாக நீரில் குதிக்கிறார்கள். அனைவரின் கூச்சல் ஒலியும் சேர்ந்து புரியாத பாஷையாக கேட்டது. இவ்வளவு சத்தம் கேட்குமா என ஆச்சரியமாக இருந்தது. கிணற்றுச் சுவரில் தெரிந்த முகங்கள் நினைவுக்கு வந்தன. அவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்களோ?

“பாலு எங்கடா?” பாஸ்கரய்யாவின் ஒலி தனியாக கேட்டது.

“மாமா, விடுங்க உடம்பு முடியாம கெடக்கான். கொஞ்சந் தேறட்டும்” முத்தரசன் சொன்னான்.

“என்னத்த முடியல. பொண்டுகப் பய. இப்ப வளைக்கலன்னா அப்பறம் சுரத்து செத்து இப்படியே இருந்துக்குவான். இருக்குற அடுப்படிப் பொம்பளயாளுக பத்தாதா?”

என் உடல் முழுதும் குளிர்ந்துவிட்டது. மெல்ல அங்கிருந்து எழுந்து தோட்டத்துப் பக்கம் பார்த்தேன். அங்கு ஆனந்தன் சிதறிக்கிடந்த ஓலையிலைகளை ஈக்குமாரால் பெருக்கிக்கொண்டிருந்தான். என் காலகள் வேகமெடுத்தன. வியர்வை வழிய அவன் முன் நின்றேன்.

“ஆனந்தா, என்னைய தூக்கிட்டுப் போ. பாஸ்கரய்யா புடிக்க வர்றாரு. தண்ணில முக்கப் பாக்காங்க.” தொடர்ந்து மூச்சு வாங்க, விட்டுவிட்டே குரல் வந்தது.

ஆனந்தன் என் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்தான். அதிலிருந்த உறுதி எனக்கு வியப்பாக இருந்தது. வெடிப்பாக குரல் எழுந்தது. “பாஸ்கரய்யா, சின்னியா இங்க இருக்காரு.” அப்படியே உறைந்துவிட்டேன். அவன்தானா சொன்னது என அப்போதும் நம்ப முடியவில்லை.

ஆனால் கண்களில் எப்போதிருக்கும் அதே பாவனைதான் இருந்தது. “குதிச்சுத்தான் ஆகணும் குட்டி. வேற வழியில்ல. எல்லாக் காலமும் ஓடிக்கிட்டேயிருக்க முடியாது” என்றவன் மெல்லிய குரலில் “அப்பாவாச் சொல்லுதேன்” என்றான். அவன் முகம் கனவில் சோற்றுருண்டையை என் முன் நீட்டிய அதே முகமாகத் தெரிந்தது.

பின்னாலிருந்து ஓடிவந்த பாஸ்கரய்யா ஈரவுடலுடன் அப்படியே என்னைத் தூக்கினார். ஈரம் பட்டு என் உடல் இலேசாக சிலிர்த்துக்கொண்டது. கிணற்றுத் தண்ணீர் அவரிலிருந்த சாராய வாடையை இன்னும் அதிகமாகக் காட்டியது. எந்த எதிர்ப்பும் என்னுடலில் எழவில்லை. ஆனந்தனின் முகத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன்.

“வாடா மவனே” கழுத்துக்கு மேலாகத் தூக்கிக்கொண்டு கிணறு நோக்கி ஓடினார். அவருடைய முள் தாடி என் விலாவில் பட கூச்சத்தில் எனக்குச் சிரிப்பு வந்தது. என்னையறியாமல் நான் சிரித்திருக்க வேண்டும். குடிசையின் தூணைப் பிடித்திருந்த அம்மா அண்ணாந்து என்னைப் பார்த்து திரும்பச் சிரித்தாள்.

பாஸ்கரய்யா கிணற்றுச்சுவர் விளிம்பில் நின்றுகொண்டு என் தோள்மூட்டுக்கடியில் கைகளை நுழைத்துத் தூக்கி என்னை வீசினார். கீழே அண்ணன்களின் கூச்சலொலி கேட்டுக்கொண்டிருக்க அவர்களை நோக்கிச் செல்லும் என்னை சுவரில் அமர்ந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன். 

கடைசிவரை எப்போதும் என்னால் நீச்சல் பழக முடியவில்லை. என் கைகளும் கால்களும் அதை ஏற்கவில்லை. ஆனால் அன்று முழுதும் நீந்திக்கொண்டும் அதே சமயம் என்னை மேலிருந்து பார்த்துக்கொண்டும் இருந்தேன். வினோதமாக சமையலறையிலிருந்து வீட்டிலிருக்கும் அனைவரையும் பார்க்கும் ஆனந்தனாக அப்போது என்னை உணர்ந்தேன்.