கதை சொல்கிற இதயம் – எட்கர் ஆலன் போ

by இல. சுபத்ரா
0 comment

அது உண்மைதான்! ஆமாம், நான் நோயுற்றிருக்கிறேன், மிக மோசமாக. ஆனால் நான் மனம் பிறழ்ந்துவிட்டேன் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் பைத்தியம் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் புத்திசுவாதீனத்துடன் இருப்பதை உங்களால் காண முடியவில்லையா? நான் பைத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லையா? உண்மையைச் சொல்வதானால், நோய்மையே என் புத்தியையும் உணர்வுகளையும் புலன்களையும் கூர்மையாக்கி பலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, எனது செவியுணர்வு மிகுந்த பலம் பெற்றிருக்கிறது. இதற்கு முன் கேட்டேயிராத சப்தங்களை என்னால் கேட்க முடிந்தது. சொர்க்கத்திலும் நரகத்திலும் ஒலிக்கிற சப்தங்களைக் கேட்க முடிந்தது.

கேளுங்கள்! கவனியுங்கள், அது எப்படி நடந்தது என்பதை  உங்களுக்குச் சொல்கிறேன். எனது புத்தி எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவும் கேட்கவும் முடியும். 

அந்த எண்ணம் என் மனத்தில் எப்படி வேரூன்றியது என்பதை என்னால் சொல்லவே முடியாது. நான் அதைச் செய்ததற்கு குறிப்பிட்ட காரணமும் இல்லை. அந்த முதியவரை நான் வெறுக்கவில்லை. அவரை நேசிக்கக்கூடச் செய்தேன். அவர் ஒருபோதும் என்னை வருத்தப்படுத்தியதில்லை. அவருடைய பணமும் எனக்கு வேண்டியிருக்கவில்லை. அவரது கண்தான் காரணம் என நினைக்கிறேன். அவரது கண் ஒரு பிணந்தின்னிக் கழுகின் கண்ணை ஒத்திருந்தது. விலங்கொன்று மடியும்போது அதைக் கண்டபடியே காத்திருந்து பின் பிணத்தின்மேல் பாய்ந்து  பல கூறாகச் சிதைத்து உண்கிற பயங்கரமான பறவைகளில் ஒன்றின் கண். தனது கழுகுக் கண்ணுடன் அந்த முதியவர் என்னைப் பார்த்தபோது என் தண்டுவடத்தில் மேலும் கீழும் தணுப்பு பாய்ந்தது. என் ரத்தம்கூட ஜில்லிட்டுவிட்டது. எனவே நான் முடிவு செய்தேன், அந்த முதியவனைக் கொன்று எப்போதைக்குமாக அந்தக் கண்ணை மூடிவிட வேண்டுமென முடிவு செய்தேன். 

நீங்கள் என்னை ஒரு பைத்தியம் என்று நினைக்கிறீர்கள். இல்லையா? ஒரு பைத்தியத்தால் ஒருபோதும் திட்டமிட முடியாது. ஆனால் நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டும். அந்த ஒரு வாரம் முழுவதும் நான் அந்த முதியவரிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நட்புடனும் ஆதுரத்துடனும் அன்புடனும் பழகினேன். 

ஒவ்வொரு இரவும் பன்னிரெண்டு மணிவாக்கில் அவரது கதவைத் திறந்தேன். போதுமான அளவு அது திறந்ததும் கையையும் அதன்பிறகு தலையையும் உள்ளே விட்டேன். வெளிச்சம் வெளிச்செல்லாதபடி துணியால் மூடிய விளக்கொன்றை கையில் வைத்திருந்தேன். அடுத்து அங்கேயே அமைதியாக நின்றிருந்தேன். பிறகு, கவனமாக, அவரது கண்ணில் மட்டும் சிறிய ஒற்றை ஒளிக்கீற்று விழும்படி அந்தத் துணியைச் சற்றே விலக்கினேன். ஏழு இரவுகள் தொடர்ந்து நான் இதைச் செய்தேன், ஏழு நீண்ட இரவுகள், ஒவ்வொரு இரவும் நடுச்சாமத்தில். எப்போதும் அந்தக் கண் மூடியே இருந்ததால் என்னால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் நான் அந்த முதியவரைக் கொல்ல விரும்பவில்லை. அந்தக் கண்தான், கொடூரமான அந்தக் கண்தான் என் இலக்கு. 

அதையடுத்து ஒவ்வொரு காலையும் நான் அவரது அறைக்குச் சென்று மிகவும் ஆதரவான நட்பான குரலில், முந்தைய இரவு நன்றாக உறங்கினாரா என்று கேட்டேன். ஒவ்வொரு இரவும் சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு நான் அவர் உறங்குவதை நோட்டமிட்டேன் என்பதை அவரால் கணிக்கவே முடியவில்லை.

எட்டாம் நாள் இரவு முந்தைய இரவுகளை விடவும் அதிக கவனத்துடன் கதவைத் திறந்தேன். கடிகார முள்கூட என் கையைவிட வேகமாக நகர்ந்திருக்கும். முன்னெப்போதும் இல்லாதபடி மிகவும் பலமாக உணர்ந்தேன். அப்போது என் வெற்றி எனக்கு உறுதியாகிவிட்டது. 

நான் வந்திருக்கிறேன் என்பது பற்றி கனவில்கூட எண்ணாதபடி அந்த முதியவர் அங்கே படுத்திருந்தார். திடீரென அவர் அசைந்தார். நான் பயந்திருப்பேன் என நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் இல்லை. அவரது அறையின் இருள் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருந்தது. கதவு திறந்திருப்பதை அவரால் காண முடியாது என எனக்குத் தெரியும். தொடர்ந்து மெதுவாகவும் மென்மையாகவும் கதவைத் தள்ளினேன். தலையை உள்ளே நுழைத்தேன். மூடப்பட்ட விளக்கோடு கையை நுழைத்தேன். திடீரென படுக்கையில் எழுந்து நேராக அமர்ந்த முதியவர், ”யாரது??!” என்று கூச்சலிட்டார்.

நான் அசையாமல் நின்றேன். முழுதாக ஒரு மணி நேரம் நான் அசையவேயில்லை. போலவே அவர் படுக்கையில் படுத்தது போன்ற ஒலியும் எனக்குக் கேட்கவில்லை. கவனத்துடன் அமைதியாக அங்கேயே அமர்ந்திருந்தார். பிறகு அந்த முதியவர் பயத்தினால் எழுப்பிய மெல்லிய ஒலியை நான் கேட்டேன். இப்போது அவர் மிகுந்த அச்சத்துடன் படுக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. நான் அங்கே இருப்பதை அவர் அறிந்துகொண்டார் என்பதும் எனக்குத் தெரிந்துவிட்டது. அவர் என்னைக் காணவில்லை. என் ஒலியைக் கேட்கவில்லை. ஆனால் அவரால் என்னை உணர முடிந்தது. இப்போது மரணம் அங்கே நின்று கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது.

சிறிய, மிகச் சிறிய ஒளி அந்த கழுகுக் கண்ணின் மீது படும்படி மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக துணியை விலக்கினேன்! அது திறந்திருந்தது – அகலமாக, அகலமாகத் திறந்திருந்தது, அது என்னை நேராக நோக்கியதும் என் கோபம் ஏறியது. அந்த முதியவரின் முகத்தை என்னால் காண முடியவில்லை. அந்தக் கண் மட்டும்தான், அந்த நீலக் கண். எனது உடலில் இருந்த ரத்தம் பனி போல் ஆகியது.

எனது கேட்கும் திறன் அசாதாரணமாக வலிமை பெற்றுவிட்டது என உங்களுக்குச் சொன்னேன்தானே? இப்போது எனக்கு சுவரினூடாக ஒலிக்கிற கடிகார ஒலியைப் போன்ற துரிதமான மெல்லிய தாழ்ந்த ஒலி கேட்டது. முதியவரின் இதயத்துடிப்பின் ஒலிதான் அது. நான் அமைதியாக நிற்க முயன்றேன். ஆனால் சத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. உண்மையில் அந்த முதியவர் ரொம்பவும் பயந்திருக்க வேண்டும். சப்தம் அதிகரிக்க அதிகரிக்க எனது கோபமும் அதீதமாகி அதிக வலியைத் தந்தது. ஆனால் அது கோபத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று. அந்த அமைதியான இரவில் இருளும் நிசப்தமும் நிறைந்த படுக்கை அறையில் என் கோபம் பயமாக மாறியது – அவ்வளவு சப்தமாக இருக்கின்ற அந்த ஒலியை நிச்சயம் யாரேனும் கேட்டுவிடக் கூடும் என்கிற பயம். இப்போது நேரம் வந்துவிட்டது! “சாவு! செத்துப்போ!” என்று கூச்சலிட்டபடியே நான் அறைக்குள் பாய்ந்தேன்.  நான் மேலே பாய்ந்ததும் பயத்தில் சப்தமாகக் கத்திய அவரது தலைக்கு மேல் போர்வையைச் சேர்த்துப் பிடித்து அழுத்தினேன். இன்னும் அவரது இதயம் துடித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் வெற்றி அருகே இருப்பதை அறிந்து நான் புன்னகைத்தேன். தொடர்ந்து பல நிமிடங்களுக்கு அந்த இதயம் துடித்துக்கொண்டிருந்தது. ஆனால் இறுதியாக அந்தத் துடிப்பு நின்றது. முதியவர் இறந்துவிட்டார். போர்வையை விலக்கிவிட்டு அவரது இதயத்தின் மேல் காதை வைத்துப் பார்த்தேன். எந்தச் சத்தமும் இல்லை. ஆமாம். அவர் இறந்துவிட்டார்! ஒரு கல் போல இறந்துவிட்டார். இனி ஒருபோதும் அவரது கண்கள் என்னைத் தொந்தரவு செய்யப்போவதில்லை!

நான் பைத்தியம் என்றா சொல்கிறீர்கள்? யாரும் காணாத இடத்தில் அந்த உடலை நான் மறைத்ததை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். முதலில் தலையை வெட்டினேன், அடுத்ததாக கைகள், அடுத்து கால்கள். ஒரு துளி ரத்தம்கூட தரையில் விழாதபடிக்கு கவனமாக இருந்தேன். தரைத்தளத்தின் மூன்று பலகைகளை நீக்கி உடலின் பாகங்களை அதனடியில் போட்டேன். அந்தப் பலகைகள் எப்போதேனும் நகர்த்தப்பட்டிருக்கலாம் என  எந்தவொரு மனிதனின் கண்ணும் ஒருபோதும் கண்டறிய முடியாதபடிக்கு மீண்டும் அவற்றை அங்கேயே பொருத்தினேன்.

நான் இந்த வேலையை முடித்தபோது யாரோ கதவருகே வந்ததைக் கேட்டேன். அப்போது அதிகாலை நான்கு மணியாகிருந்தது, ஆனாலும் இருட்டாகவே இருந்தது. எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் கீழே சென்று கதவைத் திறந்தேன். அங்கே மூன்று பேர் இருந்தார்கள், மூன்று காவல்துறை அதிகாரிகள். அண்டை வீட்டார் யாரோ முதியவரின் கூச்சலைக் கேட்டு போலீஸுக்கு தகவல் தந்திருக்கிறார். விசாரணை நடத்தி வீட்டைப் பரிசோதிப்பதற்காக அந்த மூன்று பேரும் வந்திருக்கிறார்கள்.

நான் அந்த அதிகாரிகளை வீட்டினுள்ளே வருமாறு அழைத்தேன். ஏதோ கனவு கண்டு நான் எழுப்பிய சப்தம்தான் அது என்றேன். முதியவர் வெளியே சென்றிருக்கிறார் என்றேன். ஊரில் இருக்கிற ஒரு நண்பரைக் காண்பதற்காக அவர் சென்றிருப்பதாகச் சொன்னேன். நன்றாகச் சோதிக்கும்படி கூறி அவர்களை வீடு முழுவதும் அழைத்துச் சென்றேன். இறுதியாக முதியவரின் படுக்கையறையை நோக்கி அவர்களை வழிநடத்தினேன். ஏதோவொரு விளையாட்டில் ஈடுபட்டிருப்பதைப் போல, அவர்களை சற்று அங்கே அமரும்படியும் உரையாடும்படியும் கூறினேன். 

சகஜமான பதட்டமற்ற என் தொனி அவர்களை என் கதைகளை நம்பச் செய்தது. எனவே அவர்கள் அங்கே அமர்ந்து என்னுடன் நட்பாக உரையாடினார்கள். அதே தொனியில் நான் அவர்களுக்குப் பதிலளித்த போதும் சட்டென்று அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிடக் கூடாதா என ஆசைப்பட்டேன். எனக்கு தலை வலித்தது, காதுகளில் வித்தியாசமான ஓசை கேட்கத் தொடங்கியது. நான் நிறையவும் வேகமாகவும் பேசினேன். இப்போது சப்தம் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. ஆனால் அவர்கள் இன்னமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென, அந்தச் சத்தம் என் காதுகளில் மட்டுமோ என் தலைக்குள் மட்டுமோ ஒலிக்கவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். அந்த நொடியே நான் அமைதியாகி இருக்க வேண்டும். நான் இன்னும் அதிகமாகவும் சப்தமாகவும் பேசினேன். அந்தச் சப்தமும் அதிகமாகிக்கொண்டே சென்றது. சுவரினூடாக ஒலிக்கிற கடிகார ஒலி போன்ற துரிதமான மெல்லிய தாழ்ந்த ஒலி அது. எனக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒலி. அது மேலும் மேலும் உரத்துக்கொண்டே சென்றது. ஏன் இந்த மனிதர்கள் இன்னமும் கிளம்பாமல் இருக்கிறார்கள்? உரத்து, இன்னும் உரத்து. எழுந்துகொண்ட நான் அறையைச் சுற்றிலும் நடந்தேன். அந்த பயங்கரமான ஒலியை மட்டுப்படுத்தும் விதமாக நாற்காலிகளை தரையில் இழுத்து அதிக சப்தம் எழுப்பினேன். அதைவிடச் சப்தமாகப் பேசினேன். ஆனால் இன்னும் அந்த மனிதர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள், பேசுகிறார்கள், புன்னகைக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அந்த ஒலி கேட்கவில்லையோ??

இல்லை! அவர்களுக்குக் கேட்டது. எனக்கு அது நிச்சயம் தெரிந்தது. அவர்களுக்குத் தெரிந்துவிட்டது! இப்போது அவர்கள்தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது சிரிப்பாலும் அந்த சத்தத்தாலும் நான் தாங்கமுடியாத அளவிற்குத் துயருற்றேன். உரத்து, உரத்து, உரத்து! திடீரென இனி என்னால் அதைத் தாங்கவே முடியாதென்றாகியது. பலகைகளைச் சுட்டியபடியே நான் கத்தினேன், “ஆமாம்! ஆமாம், நான் அவரைக் கொன்றுவிட்டேன். இந்தப் பலகைகளை எடுத்தால் நீங்கள் அதைப் பார்க்க முடியும்! நான் அவரைக் கொன்றுவிட்டேன். ஆனால் அந்த இதயம் ஏன் துடிப்பதை நிறுத்தவே மாட்டேன் என்கிறது?! அது ஏன் நிற்க மாட்டேன் என்கிறது!?”

*

ஆங்கில மூலம்: https://www.poemuseum.org/the-tell-tale-heart