மகாலட்சுமி

1 comment

1938ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது அந்நகரத்திலேயும் அரசாங்கத்திலேயும் அதிக செல்வாக்குப் பெற்றவராக இருந்தார் சிவஞானம் பிள்ளை. நிலப்பிரபு வேறு. எந்தவிதக் கவலையும் கிடையாது. பெயருக்கேற்றாற் போலவே அவர் பக்திமான் என்பது புதுச்சேரி மக்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம்.

ஆனாலும் அவருக்குள் இடைவிடாது துன்புறுத்திக்கொண்டிருக்கும் பெரிய கவலையும் ஒன்று உண்டு. அது அவர் மகள் மகாலட்சுமியைப் பற்றியது. அம்மா இல்லாமல் வளர்கிறவள். இந்தக் கவலை மற்றவர்களுக்குத் தெரியாது.

மகாலட்சுமிக்கு வயது பதினெட்டுக்குள்தான் இருக்கும். நல்ல சிகப்பு, கனிவான கண்கள், சாந்தமே உருக்கொண்ட முகம், குளித்து முழுகித் திருநீறு பூசி வந்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். அப்படியொரு அழகு, களை. சிறு வயதிலிருந்தே பாடங்களைத் தாண்டியும் படிப்பார்வம் உண்டு. எப்போதும் புத்தகங்களோடுதான் பொழுது போகும். வெளியுலகப் பழக்கங்கள், ஏற்றத் தாழ்வுகள், பாகுபாடுகள் பற்றியெல்லாம் அவளுக்கு எதுவும் தெரியாது. எதுவும் அவள் கடைப்பிடிப்பதும் இல்லை. அந்த வயதிலேயே அவள் ஆன்மீக நூல்களை அதிகம் படித்தாள். பண்டைய இலக்கிய மகளிரின் கற்பு வாழ்க்கை நெறிகளைத் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பதிலும், எப்போது பார்த்தாலும் சம்பிரதாயம், கலாச்சாரம், தமிழ்ப் பண்பு, இந்து சமூகம், தூய வாழ்க்கை என்று எதையாவது பேசிக்கொண்டிருப்பதிலும் காலத்தைக் கடத்தி வந்தாள். இப்படியாக, தான் படித்த நூல்களின் கதை மாந்தர்களைப் போலவே தன்னையும் கருதிக்கொண்டு, தான் ஒரு மணிமேகலையைப் போலவோ, கௌந்தியடிகளைப் போலவோ ஆகி இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டாள். ஆனாலும் இயல்பாகவே உள்ள பிடிவாத குணங்களும், இரத்தத்திலேயே கலந்துவிட்ட மிடுக்கும் அவளை விட்டு விலகுவதாயில்லை.

ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது அவளுக்கு வயது பதினான்கு. அந்தச் சமயத்தில்தான் அவள் தாய் இறந்துவிட்டாள். அதே வருடம் அவளும் பூப்பெய்தி விட்டாள்.

அதன்பிறகு அவள் பள்ளிக்கே செல்லவில்லை. தந்தை எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. அவள் இப்படி கர்நாடகமாக நடந்துகொண்டது அவள் தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்றாலும், அவள் தன் நிலைப்பாட்டிற்கு ஏதேதோ காரணம் கற்பித்தாள். வயதுவந்த பெண்கள் வீட்டு வாயிலைத் தாண்டுவது தமிழ்ப் பண்பாட்டுக்கு அடுக்காது என்றாள். இந்து சமயம் இதற்கு இடங்கொடுக்காது என்றாள். மற்றவர்கள் எல்லாம் படிக்கவில்லையா என்றால், அவர்களைப் போல் நானும் கெட்டுப்போக வேண்டுமா என்று பதிலிறுத்தாள்.

இந்தக் காலத்தில் போயும் போயும் நமக்கு இப்படி ஒரு மகள் பிறக்க வேண்டுமா என்று சிவஞானம் தமக்குள் குறைப்பட்டு அலுத்துக்கொண்டார். சின்ன வயதிலிருந்தே அவள் குணத்தை நன்கறிந்த அவர் அதற்குமேல் எதுவும் வற்புறுத்தாமல் அவள் இஷ்டத்துக்கே விட்டுவிட்டார்.

மகாலட்சுமி வீட்டிலேயே கிடந்தாள். அதில் அலுப்போ சலிப்போ அடைந்தவள் போல் தெரியவில்லை. தினம் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்வாள். ஈரத்தலையை அள்ளிச் செருகி பூஜை அறைக்குள் நுழைந்துவிடுவாள். எவ்வளவு நேரம் பூஜையோ! வெளியே வரும்போது கண்கள் மலர் இதழில் மேவிய வண்டுகள் போல ஜொலிக்கும். நெற்றியில் நீறும் குங்குமமும் துலங்கும். அப்பழுக்கற்ற மேனியில் மெல்லிய வாயில் புடவை பளிச்சிடும். காதோரங்களிலோ நக இடுக்குகளிலோ துளி அழுக்கு காண முடியாது. எல்லாம் தும்பைப்பூவைப் போல் வெண்பளிங்காய்த் துலங்க மெல்ல நடந்து வருவாள். அதற்குள் காபி தயாராகி இருக்கும். காபி தந்தைக்காகத்தான். அவள் காபிகூட குடிப்பதில்லை.

வேலைக்காரியிடமிருந்து காபியை வாங்கிக்கொண்டு அதற்குப் பிறகு தந்தையைப் போய் எழுப்புவாள். பின்பு இந்த வேலையைக்கூட அவள் வேலைக்காரியிடமே விட்டுவிட்டாள். கம்ப இராமாயணம், பாரதம், தேவாரம், திருவாசகம் என்று எதையாவது பாராயணம் செய்துகொண்டிருப்பாள். இல்லாவிட்டால் தபசில் அமர்ந்த யோகியைப் போல் தியானம் செய்துகொண்டிருப்பாள். இதையெல்லாம் கண்ட சிவஞானத்திற்கு டாக்டரிடம் காட்டலாமா என்றுகூடத் தோன்றியது. ஆனால் அவள் என்ன சொல்வாளோ…!

அவள் ஆகார வகைகளில்கூட வரவர கண்டிப்புடன் நடந்துகொண்டாள். காலையில் வெறும் எலுமிச்சம் பழச்சாறு, எதாவது சில பழங்கள். மத்தியானத்தில் ஒரு வேளை அளவான சைவ உணவு. இரவில் வெறும் பால் மட்டும். இதற்குமேல் வேறு எதையும் அவள் சாப்பிடுவதில்லை. தந்தை ஆசையோடு வாங்கிவரும் பிஸ்கோத்துகளையும் உயர்ந்த ரக சாக்லேட்டுகளையும்கூட அவள் கையாலும் தொடுவதில்லை. அதற்கு அவள் சொல்லும் காரணம் அதில் முட்டை கலந்திருக்குமாம்…! முட்டை சைவ உணவு இல்லையே…!

‘தமிழ் தழைத்தோங்க வேண்டுமானால், முதலில் சைவம் தழைத்தோங்க வேண்டும். சைவமும் தமிழும் தழைத்தோங்குக என்றுதானே ஆன்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள். சைவம் தழைத்து, தமிழ் தழைத்தால்தானே தமிழ்ப் பண்பாடு தழைக்க முடியும்? அதை விட்டு இப்படி அசைவமெல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருந்தால்…?’

இப்படி அவள் ஆரம்பிப்பாள். சிவஞானம் தலை தலையென்று அடித்துக்கொள்ள வேண்டியதுதான். அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. சலிப்பு ஒருபுறம். அனுதாபம் ஒருபுறம். அவர் வேதனைப்பட்டார்.

அசைவமில்லாமல் ஒரு வேளைகூட அவருக்குச் சோறு இறங்காது. இரண்டு பேருக்கும் இரண்டு சமையல் செய்ய வேண்டியதாயிருந்தது. இதுவொன்றும் பெரிய விஷயமில்லை. சமையலுக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும் இருக்கிற இரண்டு பேரும் இப்படி ஆளுக்கு ஒரு திசையில் இருந்தால்… வீட்டில் ஒரு கலகலப்போ சந்தோஷமோ கிடையாது. எந்த நேரமும் அவள் புத்தகங்களில் மூழ்கிக் கிடப்பாள். பெரும்பாலான நேரங்களில் பூசை அறைக்குள் புகுந்துகொள்வாள். சரியாகச் சாப்பிடுவதும் கிடையாது. அப்பாவுக்கு, சிவஞானம் பிள்ளைக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று யாராவது வந்தால் போனால்கூட ஒரு மரியாதைக்காவது வெளியே வந்து ‘வாங்க’ என்று அழைக்கமாட்டாள். பெரும்பாலும் வெளியவே தலைகாட்ட மாட்டாள். வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் வேலைக்காரியை அழைத்துக்கொண்டு கடற்கரையோரம் இருக்கும் ஜகதீஸ்வரியம்மன் கோவிலுக்குப் போய் வருவதோடு சரி. இவ்வளவு பெரிய வீட்டில் இந்த மாதிரி சந்நியாச வாழ்க்கை வாழும் மகளை நினைத்து அவர் பெருமூச்செறிந்தார்.

என்றாலும் இதுபற்றியெல்லாம் அவள் கொஞ்சம்கூட பொருட்படுத்திக்கொள்ளவில்லை. அவளுடைய காரியங்களுக்கு இடையூறு வராமல், தான் கடைப்பிடித்து வரும் நெறிமுறைகளுக்கு குந்தகம் ஏற்படாமல் இருந்தால் சரிதான் என்று நினைத்தாள். தான் செய்வதெல்லாம் சரியென்றே அவளுக்குத் தோன்றியது. தான் எவ்வளவோ படிக்கிறோம், மற்றவர்களுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் தனக்குத் தெரிகின்றன. தான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறோம், சராசரி மனிதர்கள் அண்ட முடியாத உன்னத வாழ்க்கை வாழ்கிறோம், இதன் மூலம் இந்த உலகத்திலேயே யாரும் நிகரில்லாத மிக உன்னதமான ஒன்றைச் சாதிக்கப் போகிறோம் என்று திடமாக நம்பி வந்தாள். அதற்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக எழும் சபலங்களையும் பிசிர் அறுத்து தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டு வந்தாள். பருவத்தின் உணர்ச்சிகள் அவளிடம் தலைதூக்கவில்லை. அவள் தலைதூக்க விடவில்லை அல்லது அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அதைவிட மேலான வாழ்க்கையில் அவளுக்குப் பித்து இருந்தது. தன்னையே மறந்தாள். கனவிலேயே மிதந்தாள். 

சிவஞானம் பிள்ளைக்கு இதுவே பெரிய மன உளைச்சலாக இருந்தது. அவளை மாற்றவே முடியாதா…? தெரிந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள். ‘சீக்கிரம் ஒரு கலியாணத்தைப் பண்ணி விடுங்கள்… எல்லாம் தானாய் சரியாய்ப் போயிடும்.’

[2]

மீனாட்சி சுந்தரம் இன்னும் வாலிபத்தைக் கடக்காத இளைஞன்தான். ஆனால் வாலிப உள்ளங்களில் துள்ளும் உற்சாகத்தின் பிரதிபலிப்பையோ களிப்பையோ அவன் முகத்தில் காண முடியாது. சோகம் படிந்த முகம். சற்று உள்ளடங்கிய கண்கள். வாழ்க்கையில் ஏதோ பெரிய ஒன்றை இழந்துவிட்டது போல் நிரந்தரமான வாட்டம் குடிகொண்டிருக்கும். நடை கூட தளர்வுதான். எதிலும் பரபரப்போ வேகமோ காண முடியாது. இருபது வயதில் அவன் பிரேமாவைக் காதலித்தான். இருபத்தி இரண்டு வயதுவரை அந்தக் காதல் தொடர்ந்தது. இப்போதுகூட அவன் பிரேமாவைக் காதலிக்கிறான்.

ஆனால் பிரேமாவுக்குத் திருமணமாகிவிட்டது. அவள் முன்பின் அறியாத யாரோ ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டாள். கண நேரம் மணமேடையில் அமர்ந்து கழுத்தை வளைத்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை கிடைத்துவிட்டது. அந்தக் குற்றத்தைக்கூட அவள் நிர்பந்தத்தின் பேரிலேயே செய்தாள். 

அதற்குப் பிறகு மீனாட்சி சுந்தரத்தின் கனவுகள் தவிடு பொடியாகி விட்டன. எல்லாம் சிதறி தூள்தூளாகி விட்டபிறகு எதுவுமே மிஞ்சவில்லை. வாழ்க்கை கனமாகியது, இருண்டு துயருற்றது.

பிரேமாவுக்கு சட்டுபுட்டென்று திருமணம் நடந்ததில் மீனாட்சி சுந்தரத்தின் தந்தைக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. பையன் எப்படியாவது பிரேமாவின் பிரேமையிலிருந்து மீண்டால் போதும் என்றிருந்தார் அவர். எதிலும் சுவாரஸ்யமற்றுத் திரியும் தன் மகனைக் காண அவருக்கு என்னவோ போல இருந்தது. பின்னர் புதுச்சேரியிலேயே மிகப் பிரபலமான சிவஞானம் பிள்ளைக்கு சம்பந்தியாக ஆகும் வாய்ப்பு நெருங்குவதைக் கண்டு அவர் சந்தோஷம் தாங்காமல் புல்லரித்துப் போய்விட்டார்.

வறுமைக்கும் பணிவுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு போலும். தன்னுடைய மகளின் குணத்துக்கு வரக்கூடியவன் இல்லாதவனாகவும் வாயில்லாப் பூச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த சிவஞானம் பிள்ளை, மீனாட்சி சுந்தரத்தைத் தேடிப் பிடித்ததில் ஆச்சர்யமில்லை.

இருவருக்குமே விருப்பமில்லாத அந்தத் திருமணம் நல்லதோர் நன்னாளில் எல்லோருக்கும் திருப்திகரமான முறையில் நடந்தேறியது. வந்த உறவினர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். மாப்பிள்ளை பெண் வீட்டோடு இருந்துவிட வேண்டுமென்பது திருமணத்துக்கு முன்பே ஏற்கப்பட்ட ஒப்பந்தம். சுந்தரம் இங்கேயே இருந்தான். நாள் நட்சத்திரம் கூடி வராத காரணத்தால் சாந்தி முகூர்த்தம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இது குறித்து மகாலட்சுமிக்கு மெத்த சந்தோஷம். சுந்தரம்கூட இதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

[3]

சித்ரா பௌர்ணமி. நிலவு தண்ணொளியைப் பொழிந்துகொண்டிருந்தது. தோட்டத்தில் வேலியோர மிருந்த வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கியிருந்தன. நறுமணம் கலந்த மெல்லிய இளங்காற்று தோட்டமுழுதும் வீசிப் புத்துணர்ச்சியளித்தது. பசும்புற்களின் வாசமும் கலந்திருந்தது. சுந்தரம் அங்கிருந்த சிமெண்டு பெஞ்சின் மேல் அமர்ந்திருந்தான். தெள்ளிய வானில் சாரிசாரியாய் திரளும் மேகக் கூட்டங்களையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். இந்தச் சூழலை லட்சுமியும் இரசிக்கவேண்டும் என்று விரும்பியோ என்னவோ ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் உள்ளிருப்பவளை நோக்கி ‘லட்சுமி… லட்சுமி’ என்று பரிவோடு அழைத்தான். அவன் அப்படி அழைப்பது அதுதான் முதல் தடவை.

லட்சுமி அந்த நேரத்தில்கூட கண்மூடி பிரார்த்தனையிலிருந்தாள். அவன் தன்னை அழைப்பது திருவாசக உச்சாடனங்களிடையேயும் அவளுக்குத் தெளிவாகக் கேட்டது. அவளுக்குக் கசப்பாகவும் அதே சமயம் விசித்திரமாகவும் இருந்தது. நடுவில் எழுந்திருக்க அவளுக்கு விருப்பம் இல்லை. மீண்டும் தோட்டப் பக்கமிருந்து குரல் எழுந்தது. ஆனாலும் அவள் வெகுநேரம் கழித்து, பிரார்த்தனை முடிந்த பிறகுதான் தோட்டத்துக்குச் சென்றாள். அவன் வானை அண்ணாந்து நோக்கியபடியே அமர்ந்திருந்தான். அவளும் இதுவரை அவனிடம் எதுவும் பேசியதில்லை.

‘வா லட்சுமி. இப்படி வந்து உட்கார்.’

அவள் கீழே புல்தரையில் அமர்ந்துகொண்டாள். நிலவொளியில் முகம் மிகப் பொலிவோடு துலங்கியது. சருமத்தில் சந்தனத்தைக் குழைத்துப் பூசினாற் போன்ற ஒரு மெருகும் மெதுமெதுப்பும் தென்பட்டது. ஆன்மீக நூல்களைப் படித்துத் தெளிந்ததால் பிரகாசிக்கும் அறிவும், அதன் காரணமாய் நெஞ்சின் அடித்தளத்தில் மறைந்து கிடந்த அகம்பாவமும் கண்களில் வெளிப்பட்டாலும், சாந்தம் தவழும் அந்த முகம் அருகில் பார்ப்பதற்கு வசீகரமாகவே இருந்தது. அவன் அவளையே பார்த்தான். அவளை ஊடுருவி அவள் எண்ணங்களை ஏதாவது தெரிந்துகொள்ள முடியுமா என்பதுபோல் பார்த்தான்.

லட்சமி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘லட்சுமி! என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’

‘எனக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ…! அதெல்லாம் எனக்குத் தெரியாது. பொதுவா இந்தக் கல்யாணத்தையே நான் விரும்பல…’

‘அப்படியா…?’

‘ஆமா, அப்பா வற்புறுத்தினார். அதன் பேரில்தான் எல்லாம் நடந்தது’. அவள் உணர்ச்சியில்லாமல் ஒவ்வொரு வார்த்தையாய் உதிர்த்தாள்.

‘உன்னைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அவங்கவங்களுக்கு ஒவ்வொரு விதமான ஆசை. தோ பார்! நான் மட்டும் என்ன…? உத்தமன்னு சொல்லலே. உங்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடறேன். அதுதான் நல்லது. ஒரு காலத்துல நானும் ஒரு பொண்ணைக் காதலிச்சேன். அவளும் நானும் ஒருத்தரை ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பினோம். என்னிட்ட எவ்வளவோ குறைகள் இருந்தாலும் என்னை அவ உயிரா நேசிச்சா. ஆனா எங்க கல்யாணம் நடக்க…’

அவன் கூறி வந்த விஷயங்கள் அவள் செவிகளில் பளீர் பளீரென அறைவதைப் போலிருந்தன. கொஞ்சங்கூட தூய்மையற்ற பரிசுத்தமில்லாத ஒருவனைக் கொண்டுவந்து வைத்து தன்னுடைய இலட்சிய வாழ்வை எல்லோரும் நாசம் செய்துவிட்டதாய் வெதும்பினாள். தனக்குக் களங்கம் உண்டாக்கப் புறப்பட்ட காலனைப் போல் அவன் தோற்றம் அவளுக்கு அச்சமூட்டியது. அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சுந்தரம் அவளைக் கவனிக்கவில்லை. அவன் பழைய வாழ்வில், இலயித்து மூழ்கியபடி கனவு காண்பவனைப் போல் பேசிக்கொண்டிருந்தான். 

‘அது பெரிய துரதிர்ஷ்டம்தான். நானும் அதையெல்லாம் மறந்திடணும்னுதான் முயற்சி பண்றேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும். அதனால என்ன இவன் இப்படி இருக்கறானேன்னு நெனக்காதே. உன்கிட்ட உண்மையைச் சொல்றேன். அவளை இழந்துவிட்ட பிற்பாடு இலேசா குடிக்க ஆரம்பிச்சேன். இல்லாட்டி நேரங்காலம் தெரியாம சீட்டாட்டத்தில் இறங்கிடுவேன். இதெல்லாம் தப்புன்னே நான் நெனைக்கிறதில்லை. மனசு ஆறுதலுக்காகத்தான். இப்ப அதெல்லாங்கூட எதுவும் கிடையாது…’

அவள் முன்னைவிட அருவருப்புடன் அவனைப் பார்த்தாள். முகம் எரிச்சலால் கன்றிச் சிவந்தது. கண்கள் கோபமாய் குறுகிக் கூர்ந்தன. உடம்பு கொதித்தது. ஜீவ நாடிகள் அறுந்தாற்போல நரம்புகள் துடித்துக்கொண்டிருந்தன.

‘உங்க அப்பாகூட உன்னைப் பத்தி நிறைய சொல்லியிருக்காரு லட்சுமி. நீ எதையும் தப்பா எடுத்துக்கொள்ளக்கூடாது. இதெல்லாம் உலகத்திலே ரொம்ப அற்பம். எதுக்கு இவ்வளவும் மனம் திறந்து சொல்றேன்னா ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சிக்னாதான் நல்லது. பின்னாலே எந்தச் சங்கடமும் இருக்காது பார். என்ன நான் சொல்றது சரிதானே…?’

லட்சுமி எதுவுமே சொல்லவில்லை. விருட்டென எழுந்தாள். உள்ளத்தில் தணலாய்த் தகித்திருந்த கோபக்கினி தணியவோ என்னவோ அழுகையும் பீறிட்டுக்கொண்டு வந்தது. விம்மி வரும் அழுகையை உதட்டைக் கடித்து தாக்குப் பிடித்துக்கொண்டு விடுவிடுவென்று உள்ளே ஓடினாள். பூசை அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

கறுத்த மேகங்கள் நிலவை மூடி மறைத்தன. எங்கும் மங்கிய இருள் சூழ்ந்தது. சுந்தரம் தனியே அமர்ந்திருந்தான். அவள் போக்கு எதுவும் அவனுக்குப் பிடிபடவில்லை. இதையெல்லாம் ஏன் அவளிடம் சொன்னோம், இத்தனை நாள் இருந்ததைப் போலவே இருந்து விட்டிருக்கலாமே என்று வருந்தினான். இரவு உணவுக்குப் பின்னாலும் மறுநாளும்கூட அவன் லட்சுமியிடம் பேசவேயில்லை. அவள் அவன் முகத்தில் விழிக்கக்கூட விரும்பாதவள் போல் நடந்துகொண்டாள். முதலில் அதைப்பற்றிக் கொஞ்சம் கவலைப்பட்ட சுந்தரம் பிறகு எதைப் பற்றியுமே கவலைப்படவில்லை. 

வேளாவேளைக்கு சாப்பிட்டுவிட்டு வெளியே போய் விடுவான். எங்கு போகிறான், என்ன செய்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. தான் இப்படிச் சுற்றுவதையும், இல்லறத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பதையும் அவனே நன்கு உணர்ந்திருந்தான். எல்லாவற்றையும்விட இதுதான் அவனுக்குப் பிடித்திருந்தது. நடுவில் எதுவுமே நடவாத மாதிரி, கலியாணத்தைக்கூட மறந்தவள் மாதிரி மகாலட்சுமி எப்போதும் போலவேயிருந்தாள்.

தான் மிகப் பிரயாசையுடன் கடைப்பிடித்து வந்த ஆசாரங்களையும் நெறிகளையும் யாரோ இடையில் குழிதோண்டிப் புதைக்கப் புறப்பட்டது போலவும், அதிலிருந்து தான் தெய்வாதீனமாகத் தப்பிவிட்டது போலவும் இனி தனக்கு எவ்வித இடையூறும் நேராதெனவும் லட்சுமி  நினைத்துக்கொண்டாள். யாருமில்லாவிட்டால் மாலை நேரங்களில் தோட்டத்தில் மெல்ல உலாவுவாள். பூவாசத்தில்  நறுமணம் கமழும் காற்றை சுவாசித்தவாறு, ஈரம் படிந்த புல்தரையில் நடந்துகொண்டிருப்பாள். சில சமயம் தோட்டத்துக்கு அப்பால் சூரியன் மறையும் அந்தி வானையும் வானில் குழையும் வண்ண விசித்திரங்களையும் கண்டு ஆழ்ந்து போய் அமர்ந்திருப்பாள்.

சிவஞானம் பிள்ளை திருமணத்துக்குப் பிறகு மகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தம்பதியர் இருவருக்குமிடையே மனத்தடை எழுந்து நிற்பதைக்கூட அவர் புரிந்துகொள்ளவில்லை. உறவே இல்லை என்பதும் தெரிந்திருக்கவில்லை. மாப்பிள்ளை வீடு தங்காமல் வெளியில் சுற்றுவது மட்டும் தெரிந்தது. வீடு, தொழில், நிலபுலன்களைக் கவனிக்காமல் சுற்றுகிறாரே என்று அவருக்குக் கவலை. புது மாப்பிள்ளையை எதுவும் சொல்வதற்கில்லை. போகப்போக சரியாகிவிடும். தான் இருக்கும்போதே இதன் நீக்குப்போக்குகளை எல்லாம் கற்றுக்கொடுத்து தயாராக்கி விட்டால்தானே! அப்புறம் யார் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

[4]

அன்று மாலை சிவஞானம் உள்ஹாலில் அமர்ந்து கணக்குவழக்குகளைப் பரிசீலனை செய்துகொண்டிருந்தார். வீட்டில் யாரும் இல்லை. சுந்தரம் மூன்று மணிக்கே வெளியே கிளம்பிப்போய்விட்டான். சற்று முன்புதான் லட்சுமி வேலைக்காரியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போய் விட்டாள்.

யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

யாராயிருக்கும் என்று எண்ணியபடி எழுதிக்கொண்டிருந்த பேனாவை மேசை மேலேயே வைத்துவிட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தார்.

கதவோடு சேர்ந்து விழாத குறையாக சுந்தரம் தள்ளாடிக்கொண்டிருந்தான். அன்று ஏனோ அவனுக்கிருந்த மனநிலையில் சற்று அதிகமாகவே குடித்துவிட்டான். ‘குப்’பென்று வீசிய மதுவின் நெடி சிவஞானத்தைத் திக்குமுக்காட வைத்தது. எத்தனையோ முறை அரசாங்க விருந்துகளில் கலந்துகொண்ட போதிலும் ஒருபோதும் அவர் அதைத் தொட்டதில்லை.

அவனது தள்ளாட்டத்தைக் கண்டு அவருக்கு கடும் கோபம் வந்தது. குடிக்காரனைத் தனக்கு மருமகனாக்கிக் கொண்ட மடத்தனம் அவரை வெறியனாக்கிவிட்டது.

‘பொறுக்கி ராஸ்கல்! இது எத்தின நாளாடா? அறிவு கெட்டவனே! தெருவில அலைய வேண்டிய நாய்ங்களையெல்லாம் நடுவீட்டிலே வைக்கலாம்னு நெனச்சேன் பாரு. அது என் தப்பு. என் புத்தியெ செருப்பால அடிச்சுக்கணும்’ என்று பளார் பளார் என அவன் கன்னங்களில் அறைந்து விட்டார்.

அவன் எதுவும் பேசவில்லை. நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு படுத்துவிட்டான்.

கொஞ்சநேரம் கழித்து மகாலட்சுமி வந்தாள். அப்பாவுக்குப் பிரசாதம் கொடுத்தாள். சுந்தரத்தின் நடத்தையைப் பற்றி அவளுக்குத் தெரிந்தால் மனம் புண்படுமே என்று சிவஞானம் மகளிடம் எதுவும் சொல்லவில்லை. அவள் தன் கணவனைப் பற்றியோ, எங்கே போனான், சாப்பிட்டானா இல்லையா என்பது பற்றியோ எப்போதுமே அக்கறை எடுத்துக்கொண்டதுமில்லை. எப்போதையும் போலவே அவள் பாலருந்திவிட்டுப் புராணத்தில் ஆழ்ந்தாள்.

விடியற்காலை மணி ஒன்பது. சுந்தரம் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. வெளியே பகல் நேர இயக்கத்தின் சந்தடி. உடல் கொதித்துகொண்டிருந்தது. மண்டை கனத்தது. இரவு சாப்பிடாமலே படுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது. யாரும் எழுப்பவில்லை. சூடாக ஒரு கப் காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது.

யாரையும் கூப்பிட அவனுக்கு இஷ்டமில்லை. யாரும் கவனித்ததாகவும் தெரியவில்லை. இரவு மாமனார் பேசிய பேச்சுகளையும் அத்துமீறி கை நீட்டியதையும் தெளிவான நிலையில் நினைத்துப்பார்க்கவும் எரிச்சலைத் தந்தது. வேதனையுடனே எழுந்தான். சட்டையை மாட்டிக்கொண்டு காபி ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டான். காபி குடித்த பிறகு கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. சிவஞானம் தகாத வார்த்தைகளையெல்லாம் வீசி, தன்னைத் திட்டியதையும் அடித்ததையும் நினைக்க மிகுந்த அவமானமாயிருந்தது. திரும்பவும் வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை. வேலைக்காரி வெந்நீர் வைத்துவிட்டுக் காத்துக்கொண்டிருந்தாள். அவன் குளித்து முடித்துத் திரும்பும்போது ஹாலில் மாமனார் அமர்ந்திருந்தார்.

கூட யார் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். சிவஞானம் இவனைச் சுட்டெரிப்பதைப்போல் பார்த்தார். ஒருகணம் அவரது பார்வையை நேராகச் சந்தித்த சுந்தரம் அவரது பார்வையின் வெம்மை தாளாமல் தலையைக் குனிந்துகொண்டே வந்துவிட்டான். லட்சுமி பூஜை அறைக்குள் புகுந்துவிட்டிருந்தாள்.

அறைக்கு வந்த சுந்தரம் பேசாமல் கட்டிலிலேயே அமர்ந்தான்.  எதுவும் தோன்றவில்லை வேலைக்காரி டிபன் சாப்பிட அழைத்தாள்.  அவனுக்கு வெளியே தலைகாட்டவே அசிங்கமாய் இருந்தது. மீண்டும் ஒருமுறை ஹாலைக் கடந்து போய் மாமனார் கண்ணில்பட அவன் விரும்பவில்லை. டிபனை அறைக்கே கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டான். பசி அதிகம் இருந்த போதிலும் இரண்டு இட்டிலிகளுக்கு மேல் தின்னப் பிடிக்கவில்லை.

மத்தியானம் வரைக்கும் அறையை விட்டு வெளியே வராமல் உள்ளேயே படுத்துக்கொண்டிருந்தான். யாரும் இவனோடு பேசவோ இவனைப் பற்றி அக்கறை கொள்ளவோ விரும்பாததுபோல் தோன்றியது. சிறிது நேரத்தில் சிவஞானம் காரிலேறி வெளியே புறப்படும் சப்தம் கேட்டது.

அவர் போய்விட்ட பிறகு இவன் ‘லட்சுமி… லட்சுமி’ என்று அழைத்தான். வெகுநேரம் அழைத்தும் பதில் இல்லை. ஒருவேளை குளிக்கிறாளோ என்னவோ என்று நினைத்தான். வேலைக்காரி வந்து மதிய சாப்பாட்டிற்கு அழைத்தாள். ‘அம்மா குளிக்கிறாங்களா?’ என்று கேட்டான்.

‘இல்லை. ஹால்ல உட்கார்ந்திருக்காங்க’ என்றாள்.

ஹாலிலேயே உட்கார்ந்திருந்தும் தன்னுடைய இத்தனை குரலுக்கும் அவள் பதிலே தரவில்லை என்பதை நினைக்க அவனுக்கு வேதனையாக இருந்தது.

‘சாப்பாடு வேண்டாம்’ என்று சொல்லி வேலைக்காரியை அனுப்பிவிட்டான். சிறிது நேரத்தில்  யாரிடமும் எதுவும் சொல்லாமல் கையில் பையுடன் அறையை விட்டு வெளியே வந்தான். வெளியேறி வந்தவன் வீட்டையும் முன்புற கேட்டையும் தெருவையும் ஊரையும் தாண்டி வெகுதூரம் போய்விட்டான்.

[5]

சுமார் நான்கு ஆண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன. சென்ற கோடையில் சிவஞானம் இறந்துவிட்டார். வீட்டை விட்டுப்போன சுந்தரம் திரும்ப வரவேயில்லை. மகாலட்சுமி மட்டும் பங்களாவில் தனியாக இருந்தாள். தந்தை இறந்து போனதைப் பற்றிக்கூட அவள் வெகுவாக கவலைப்படவில்லை. இடையில் நடந்த நிகழ்வுகள் அவளுடைய தூய்மையான வாழ்வின் நிம்மதியைக் குலைத்துவிட்டதுபோல் அதுதான் அவளுக்கு வேதனையை அளித்தது. கழுத்தில் தாலிச்சரடு புழுவைப்போல் நெளிந்து அருவருப்பு மூட்டியது.

வயது 22தான். ஆனாலும் தனித்திருப்பது அவளுக்கு சுகமாயிருந்தது. தந்தை இறந்தபிறகு எல்லா வேலைக்காரர்களையும் நீக்கிவிட்டு அவசியத்துக்கு ஒரு வேலைக்காரியையும் கார் டிரைவரையும் மட்டும் வைத்துக்கொண்டாள்.  

உறவினர்களுக்கும், ஏன் சுந்தரத்தின் தந்தைக்கும்கூட சொத்துக்களின்மேல் ஒரு கண் இருந்தது. அதை மேற்பார்வை செய்கிறோம் என்று நெருங்கிவர முயன்றவர்களை லட்சுமி தன் இயல்புப்படி கிட்ட அண்டவே விடவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்று தான் கற்றதைப் போல எல்லோரையும் தூரவே நிறுத்தினாள். நிலபுலன்கள் குத்தகைக்குப் போயின. இரண்டு ஏஜென்சிகளையும் பெட்ரோல் பங்குகளையும் விற்று பணத்தை வங்கியில் வைத்துவிட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விஷயங்களையும் மறந்துவிட கடவுளை வேண்டினாள். முழுநேரமும் பிரார்த்தனையிலேயே ஈடுபட்டிருந்தாள். ஆன்மபலம் அவளுக்குள் திடமாக வளர்ந்து வந்தது. அழகின் இரசனையைக்கூட அவள் வெறுத்தாள்.

உலக ஆசாபாசங்களை விட்டு விலகினாள். தன் நிலை மாறவும் ஞான ஒளியைப் பெறவும் சன்மார்க்க நிலையை அடையவும் அவள் இறைவனை வேண்டினாள். ஒளிமங்கிய அறையில் வெகுநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பாள். தன் உணவைக்கூட வரவர குறைத்துக்கொண்டாள். மதியத்தில் ஒருவேளை சாப்பாட்டைக்கூட தவிர்த்துவிட்டாள். சதா சர்வகாலமும் ஹிந்து தர்மத்தின் சம்பிரதாயங்களையும் நீதி நியமங்களையும் தெய்வீக மணம் கமழும் இலக்கியங்களையும் மேலும் மேலும் ஆழ்ந்து கற்றாள். பழம் பண்பாட்டின் புதிய தூதுவராகப் பிரசன்னமாகியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

அவள் உடம்பு நாளுக்கு நாள் இளைத்து மெலிந்தாலும் அதில் மெருகும் பளபளப்பும் கூடி,  முகத்தில் ஆழ்ந்த அமைதி குடிகொண்டது. வீடு எப்போதும் சந்தடியற்றுக் கிடந்தது. தோட்டம் கவனிப்பாரற்றுப் பாழடைந்து போய்விட்டது. புதிதாக வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது மனிதர்கள் வாழும் பங்களாவைப் போலவே தோன்றாது. மரங்களிலிருந்து உதிர்ந்த இலைச் சருகுகளும் நீரின்றி வாடி வதங்கிய கொடிகளும் மலர்வதையே மறந்த மலர்ச் செடிகளும் வறண்டு இருளடைந்த தோற்றந் தரும்.

நடுப்பகல் இரண்டு மணியிருக்கும். நல்ல வெயில் காய்ந்துகொண்டிருந்தது. பறவைகளும் வெளியே வர பயந்து, கூட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தன. தோட்டம் அமைதியாக இருந்தது. பங்களாவும் அப்படியே! வேலைக்காரி பின்கட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

திடீரென படபடவென வெளியே கலவர ஓசை கேட்டது. சென்ற நான்கு தினங்களாகவே இப்படிச் சத்தம் கேட்பது சகஜமாக இருந்தாலும் பட்டப்பலில் இப்படிக் கேட்டதில்லை. மகாலட்சுமி திடுக்கிட்டு நிமிர்ந்து புத்தகத்தை மூடினாள். பிறகு சிறிது யோசித்து இன்னும் மனம் திடம் பெறவில்லை, படிப்பில் ஆழ்ந்த கவனம் இருந்தால் புற ஒலிதான் கேட்குமா என்று புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள். மனத்தை நிலைப்படுத்திப் படிக்க ஆரம்பித்தாலும் திடீர் திடீரென திட்டுத்திட்டாக உரத்த குரலொலிகள் காதில் விழாமலில்லை.

‘தட்… தட்… தட்…’

சத்தம் மிக அருகில் கேட்டது. யாரோ தெருக்கதவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த ஓசை அவளையும் மீறி இந்த உலகத்துக்கே அவளை முற்றிலும் கொண்டுவந்தது.

ஒரு விநாடி அவள் பதற்றமடைந்தாள். பிறகு மிக அமைதியாக புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்தாள். பின் கட்டுக்கு சத்தம் போடாமல் நடந்துசென்று வேலைக்காரியை அழைத்தாள். பதிலில்லை.

அறையில் அவளைக் காணவில்லை. தோட்டக் கதவும் வெளிப்பக்கம் தாழ் போட்டிருந்தது. எங்கு போய்விட்டாள்?

தன்னை இலேசாக பயம் கவ்வுவதை உணர்ந்தாள். வெளியே கூக்குரல்கள். அதைத் தொடர்ந்து கதவு தட்டப்படுகிறது. வீட்டில் அவள் மட்டும் தனியாக இருக்கிறாள். ‘தெய்வமே இது என்ன சோதனை! எனக்கு மன தைரியத்தையும், ஆன்ம பலத்தையும் தா! என்னைத் துன்பங்களிலிருந்து காப்பாற்ற உன்னைத் தவிர வேறு யாருமில்லை.’

தட… தட… தட…! ‘யார் உள்ளே?’

மீண்டும் கதவு தட்டப்பட்டது. அந்தக் குரல் எங்கோ கேட்ட குரல். அவள் பதில் கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். உள்ளே யாருமேயில்லை என்று வெளியேயிருப்பவனுக்குத் தோன்றும்படி அமைதியாக இருந்துவிட்டால்…

ஆனால் அப்படியிருக்க முடியவில்லை.

கதவு தொடர்ந்து தட்டப்பட்டது. ‘சீக்கிரம் கதவைத் திறங்க. இங்கே நான் உயிருக்கு போராடிக்கிட்டிருக்கேன்.’

குரல் மிகப் பீதியுடன் ஒலித்தது. உண்மையிலேயே உயிருக்கு மன்றாடியது… தான் உள்ளேயிருப்பது வெளியே தட்டுபவனுக்குத் தெரிந்துவிட்டிருக்குமா? கதவைத் திறப்பதா வேண்டாமா… இன்னும் அவள் ஒரு முடிவுக்கு வரவில்லை.

‘ம்… சீக்கிரம் திறங்க. கொஞ்சகூட ஆபத்தை உணராதவங்களா இருக்கீங்களே. தயவுசெய்து…ம்.’

‘யாரது?’ என்று கேட்க அவளுக்குத் துணிவில்லை. சத்தம் காட்டாமல் அடியெடுத்து தெருப்பக்க அறைக்குள் நுழைந்து பார்வை புகுமளவுக்கு ஜன்னலைத் திறந்து பார்த்தாள்.

வெளியே…!

சுந்தரம் தனது வலது கையால் வேட்டியை முழுங்கால் வரை தூக்கிச் சுருட்டி இடது தொடையிலே வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தான். அந்த இடம் சிகப்பாயிருந்தது. இரத்தம் கசிந்து வழிந்துகொண்டிருந்தது.

அவள் திடுக்கிட்டாள். சடக்கென்று ஜன்னலை இழுத்து மூடிக்கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டாள். அவள் ஆண்டவனை என்னென்னவோ வேண்டினாள். அப்போது அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவன் எங்கிருந்து வந்தான்? தெய்வமே! எனக்கு ஒரு வழியைக் காட்டு!

‘நான் இப்படியே கத்திக் கத்தி சாக வேண்டியதுதானா? உங்களுக்கு இரக்கமேயில்லையா?’ குரல்.

‘இறைவா! நீதான் என்னைக் காப்பாற்றவேண்டும்’ என்று முனகியபடியே சென்று அவள் தாழ்ப்பாளைத் திறந்தாள். புயலைப்போல் சரக்கென்று ஒரு காலைத் தாங்கியபடியே உள்ளே வந்த சுந்தரம் அதே வேகத்தில் கதவைத் தாழ் போட்டவாறு பெருமூச்சுவிட்டான்.

அவள் அதைவிட வேகமாய் பூசை அறைக்குள் நுழைந்து தாழ் போட்டுக்கொண்டு பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் இப்படி ஓடி ஓடி பிரார்த்தனை செய்வது ஏன் என்பது அவளுக்கே நன்றாகப் புரிந்தது.

சன்னலைத் திறந்து பார்த்ததிலிருந்தே அவள் மனம் ஒரு நிலையில் இல்லை. அவளையறியாமலேயே அவன்பால் பரிவும் இரக்கமும் உண்டாவதை அவளால் அணை போட முடியவில்லை. அவன் பக்கத்தில் தனியாக நின்ற ஒரு கணம்… அதை அவள் அடியோடு வெறுத்தாள்.

‘ஆண்டவனே, என்னைக் காப்பாற்று! இத்தனை காலமாய் அளித்து வந்த மனத்திண்மையை இப்போதும் எனக்குத் தா! என் மனதை சபல புத்திகளில் சிதறவிடாதே! நீயே உலகில் உண்மையானவன்! நீயே எல்லாவற்றையும் காத்து இரட்சிக்கவல்லவன்! என்னைக் கடைத்தேற்ற கடமைப்பட்டவனும் நீயே…’ பிரார்த்தனை தொடர்ந்துகொண்டேயிருந்தது.

சுதந்தரம் ஹாலில் வந்து அமர்ந்தான். அவள் பூஜை அறைக்குள் ஓடிவிட்டாள் என்பது அவனுக்குத் தெரிந்ததுதான். இந்த வீட்டின் மருமகப்பிள்ளையாக ஒரு காலத்தில் இருந்ததைப் பற்றியோ தனக்கு மனைவியாக வாய்த்த மகாலட்சுமியைப் பற்றியோ அவன் எதுவும் உரிமை கோர எண்ணவில்லை. காயத்திலிருந்து இரத்தம் சொட்டியது. கட்டுப்போட எதுவும் இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

வீடு முன்பிருந்ததைப் போலவேதான் இருந்தது. சிவஞானம் பிள்ளை இறந்துவிட்டதெல்லாம் அவனுக்குத் தெரியும். ஹாலிலிருந்த ஸ்டூலில் ஏதேதோ புத்தங்கள் அடுக்கியிருந்தன. அவற்றைப் பார்த்து விரக்தியோடு சிரித்துக்கொண்டான். கொடியில் தொங்கிய கொஞ்சம் பழசாகிப்போன புடவை ஒன்றை இழுத்துக் கிழித்தான்.

உள்ளே பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவளின் காதுகளில் கிழிசல் சத்தம் தெளிவாக விழுந்தது. அந்தச் சத்தத்தை அவள் அடியோடு வெறுத்தாள். அதை மறந்து வேகமாக வேண்டத் தொடங்கினாள். பழக்கத்தின் காரணமாய் வாயிலிருந்து வேண்டுதல் வார்த்தைகள் முணுமுணுத்து வெளிவந்தன. ‘காக்க காக்க கனகவேல் காக்க’. மனம் அதில் பதியவில்லை.  

துணியைக் கிழித்தபின் புடவையை மீண்டும் கொடியில் போடும் சத்தமும் காலடி ஓசையும் பிரம்பு நாற்காலியில் அமர்ந்ததால் ஏற்பட்ட நெக்குறும் ஓசைகளையும் அவள் துல்லியமாகவே உணர்ந்தாள். இத்தனை கால கட்டுப்பாட்டுக்குப் பின்னும் மனம் இப்படியெல்லாம் பரிதவிக்கிறதே என்று வெகுவாக வேதனைப்பட்டாள். என்ன செய்வதென்று எதுவும் அவளுக்குத் தோன்றவில்லை. எதிரேயிருந்த ஆண்டாள் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். குத்துவிளக்கிலிருந்து செம்பிரகாசமாய் சுடர் விட்டெரியும் தீபத்தைப் பார்த்தாள். புகைந்து எரிந்து சாம்பலாகி உதிரும் வத்தித் துணுக்குகளைப் பார்த்தாள். நடுங்கும் விரல்களுடனே திருநீற்றினை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, மண்டியிட்டுத் தலைகுனிந்து கண்களை மூடிக்கொண்டாள். எவ்வளவு நேரமோ?

அவன் எழுந்து நடக்கும் ஓசை கேட்டது. கதவுத் தாழ்ப்பாள் திறக்கப்பட்டது. வேகமாக கதவு இழுத்து சாத்தப்படும் சப்தமும் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து ஓடி ஜன்னலைத் திறந்து பார்த்தாள். சுந்தரம் நிதானமாய் ஒரு காலைத் தாங்கித் தாங்கி நடந்தபடியே கேட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தான்.

அவள் திரும்பி ஹாலுக்கு வந்தாள். கொடியில் துணிகள் அலங்கோலமாய்க் கிடந்தன. கிழிந்த புடவையும் அதில் தொங்கியது. வழவழப்பான சிமெண்ட் தரையெங்கும் இரத்தத் துளிகள் சிந்திக் காய்ந்து போயிருந்தன. அவற்றைப் பார்த்து தலையை உலுப்பிக்கொண்டாள். இரு கைகளாலும் நெற்றிப்பொட்டை அமுக்கியபடி அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து தோட்டக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து வேலைக்காரி வந்தாள்.

‘எங்க போயிருந்த கொஞ்சம் முன்னாடி?’ லட்சுமி கோபத்துடன் கேட்டாள்.

‘இங்கதாம்மா இருந்தேன். தோட்டத்துக்குப் போய் வந்தேன்.’

‘இந்தத் துணியெல்லாம் எடுத்து வெளியே போட்டுட்டு, இதெல்லாம் சுத்தமாக் கழுவு. நல்லா தண்ணிய ஊத்திக் கழுவு.’

இதைச் சொல்லிவிட்டு அவள் எழுந்தாள். ஜன்னலோரம் போய் நின்றாள். பக்கவாட்டில் இருந்த வேப்பமரம் இரும்பில் செய்ததைப் போல் அசைவற்று நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்க்க அவளுக்குத் திருப்தியாய் இருந்தது.

[6]

மகாலட்சுமி அம்மையாரை இப்போது புதுச்சேரியில் ஏறக்குறைய எல்லோருக்குமே தெரியும். தன் நிலபுலன்களையெல்லாம் தேவஸ்தானங்களுக்கும் திருப்பணிகளுக்கும் வழங்கிவிட்டாள். சொந்தத்தில் தனக்கு என்றிருந்த அந்த வீட்டையும், ஒரு காணி நிலத்தையும், காரையும் தவிர இப்போது அவளுக்கு எதுவும் இல்லை. அவள் பெயர் சராசரி ஜனங்களின் வாய்களில்கூட அடிபட ஆரம்பித்தது.

ஆன்மீக உரை, சன்மார்க்கப் பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாது கலந்துகொண்டாள். அவள் சொற்பொழிவைக் கேட்க ஏராளமான ஜனங்களும் காத்துக் கிடந்தார்கள். அத்தனை பேருக்கும் முன்பாக அவள் பிரசங்கம் செய்தாள். வயது 27தான். ஆபரணங்களே அணியாத, சாந்தமான முகத்தில் துலங்கும் பரந்த நெற்றியில் பட்டையாகத் திருநீறு துலங்க, தோளை இழுத்து மூடிய வெள்ளைப்புடவையின் முந்தானையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு பேசுவாள். குரல் கணீரென்று ஒலிக்கும். மேடையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள்கூட அசைவற்று கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

தனக்கு ஆன்மீகத்தில் இருக்கும் ஈடுபாட்டையும் தன்னுடைய பேச்சைக் கேட்கத் திரளும் மக்கள் கூட்டத்தையும் நோக்க அவளுக்குத் தன்மீதே ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இதை, இதுதான் தன் வாழ்வு, இதுதான் தன் இலட்சியம் என்பதாக முடிவு செய்துகொண்டாள்.

அன்று முத்தியால்பேட்டை ஈஸ்வரன் கோவில் உற்சவத்தில் பேசிவிட்டுத் திரும்புகையில் இரவு மணி பத்துக்குமேல் ஆகியிருந்தது. தெருவில் ஜன சந்தடி ஓய்ந்து கரைந்துகொண்டிருந்தது. கடைகளை எல்லாம் கட்டிக்கொண்டிருந்தார்கள். ‘கீங்… கீங்… கீங்கீங்…’ என்று ஹாரன் அடித்தபடியே வேகமாய் திரும்பி, வளைந்து ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென்று கிறீச்சிட்டு நின்றது. பின் சீட்டில் கண்ணை மூடி அமர்ந்திருந்த லட்சுமி குலுங்கி எழுந்தாள். டிரைவர் கதவைத் திறந்து இறங்கிக்கொண்டிருந்தார்.

‘என்ன?’

‘ஒண்ணும் இல்லிங்கம்மா… யாரோ ஆளு கண்ணு தெரியாதவன் போல இருக்கு.’

‘ஆளா…’ அவள் கொஞ்சம் திகிலுடனேயே கேட்டாள்.

டிரைவர் தூக்கி நிறுத்திய ஆளுக்கு வயது நாற்பதுக்கு மேலிருக்கும். முகமெல்லாம் அம்மை வடுக்கள். எலும்புந்தோலுமாய் இருந்தான். கண்கள் தோண்டியெடுத்ததைப் போல் அவிந்து போயிருந்தன. இடதுகையில் ஒரு கிண்ணத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்தான். கீழே கிடந்த தடியை எடுத்துக்கொடுத்து ‘பத்திரமா போ பெரியவரே’ என்றான் டிரைவர்.

அப்போது எங்கிருந்தோ பதறி அலறியபடியே ஓடி வந்தாள் ஒருத்தி. இடுப்பில் குழந்தை. பரபரப்போடு அதைக் கீழே இறக்கிவிட்டு அந்த ஆளைத் தாங்கி அணைத்தபடி ‘என்னா ஆச்சு! எங்கனா அடிகிடி பட்டுதா? அந்த மொடக்குல இருந்து பார்த்துட்டு ஓடியாறேன். உன்னை யாரு இந்த மாதிரியெல்லாம் எழுந்து நடமாடச் சொன்னது. பேசாம குந்திக்னு இருக்கிறதானே. நான் எதுக்கு இருக்கிறேன் குத்துக்கல்லாட்டம்? ஏய்யா… பாத்து ஓட்டக்கூடாது… நல்லகாலம் ஒண்ணும் அடிபடல.’

அவள் குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த ஆளைத் தாங்குதலாக முழுங்கையைப் பிடித்து அழைத்துச் சென்றுவிட்டாள்.

டிரைவர் ஏறி அமர்ந்து காரைக் கிளப்பினான். 

மகாலட்சுமி நடந்த நிகழ்விலிருந்து விடுபட வெகு நேரம் ஆயிற்று. ‘மெதுவா பார்த்து வரக்கூடாது’ என்றாள் டிரைவரிடம்.

‘பாத்துதாம்மா வந்தேன். அதனாலதான் அவன் தப்பிச்சான். இல்லாட்டி போயிட்டிருக்கும்மா.’

‘அந்தப் பொண்ணு சம்சாரமாயிருக்குமா?’ கொஞ்சம்கூட யோசிக்காமல் இந்தக் கேள்வியை அவள் கேட்டு விட்டாள்.  ஏன் அப்படிக் கேட்டோம் என்று அவளுக்கே தெளிவு ஏற்படவில்லை. அப்படி ஒரு கேள்வியைக் கேட்பதாக நினைத்தோமா? திடீரென்று வந்த கேள்வியா? ஏன் வந்தது? அப்படிக் கேட்டதற்கு அவள் மிக எரிச்சலடைந்தவளைப்போல் இருந்தாள். 

இரவு சாப்பிடவில்லை. அன்று மட்டும் பிரார்த்தனை வெகுநேரம் நீடித்தது. இடையிடையே பழைய சம்பவங்கள் ஏதாவது நினைவுக்கு வந்து அழுத்தியது. அப்போதெல்லாம் மிகவேகமாகத் திருமுறைகளைப் படித்தாள். உறங்கப் போகவே அவளுக்குப் பயமாயிருந்தது. புத்தகத்தை மூடினாலே தன் பலத்தை இழப்பதுபோல் உணர்ந்தாள்.

பொழுது மிகவும் சோர்வுடனே விடிந்தது. வழக்கம் போல் எழுந்து எல்லாக் கடமைகளையும் முடித்துக்கொண்டு மீண்டும் பூசை அறைக்குள்ளேயே நுழைந்தாள். அங்கே அவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு அந்த தலைச்சுற்றலிலிருந்து மீள வெகுநேரம் முயற்சி செய்தாள்.  இயலவில்லை. எழுந்து வந்து ஹாலில் படுக்கையை விரித்துப் படுத்தவள் சில நிமிடங்களிலேயே உறங்கிக் போய்விட்டாள்.

நண்பகல் கடந்த பிறகுதான் அவள் எழுந்தாள். பங்களா வழக்கம் போலவே அமைதியில் மூழ்கியிருந்தது. வெளியே வெய்யில் கண்ணைக் கூச வைத்தது. காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை. வயிறு காலியாகக் கிடப்பதால் எரிச்சலெடுத்தது. இப்பொழுதுகூட எதுவும் சா£ப்பிடுவோமா அல்லது இப்படியே புலன்களை ஒடுங்க வைத்துக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

‘முனியம்மா’ என்று வேலைக்காரியை அழைத்தாள். பதில் இல்லை. கலக்கத்துடன் எழுந்து வந்து வாசல் பக்கத்து தூணைப் பற்றித் தாங்கி நின்றாள். வாளியிலிருந்த நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்றாள்.

பின்பக்கம் அறையில் கசமுசா என்று பேச்சுச் சப்தம்… ஆடைகளின் நெகிழ்வும் சலசலசப்பும் கேட்டது. அவள் ஆச்சரியத்துடன் மீண்டும் ‘முனியம்மா…’ என்றாள்.

‘தோ வந்துட்டேம்மா…’ என்று குரல் கொடுத்தபடி அரக்கப்பறக்க வெளியே வந்தாள் முனியம்மா. அவளும் தூங்கி எழுந்தவள் மாதிரியிருந்தாள். ஆனால் கண்களில் அப்படி எதுவும் தெரியவில்லை. ஆடை அலங்கோலமாய்க் கசங்கிக் கிடந்தது. அவசரத்தில் வாரிச் செருகிக்கொண்டு வந்ததுபோல் தோன்றியது. கலவரத்துடன் அவள்.

‘தூங்கறிங்கன்னு பார்த்தம்மா. எப்ப எழுந்தீங்க?’

‘இப்பதான். உள்ள யாரு?’

‘யாருமில்லையே! நான்தாம்மா’ கண்களில் திகில் பரவியது.

‘ஏதோ சத்தம் கேட்டது. சாப்பாடு எடுத்துட்டு வா’ என்று திரும்பி நடந்தாள்.

சன்னல் வழியாக அடுத்த அறையில் கண்ட காட்சி அவளைத் திடுக்கிட வைத்தது. டிரைவர் இவளைக் கண்டு சரக்கென்று கதவோரம் மூலையில் பதுங்கிக்கொண்டான். முனியம்மாவின் அறையில் அவனுக்கென்ன வேலை? அதுவும் திருட்டுத்தனமாய்?

கொஞ்ச நேரத்துக்குள் என்னென்னமோ யோசித்துவிட்டாள் லட்சுமி. திடீரென ‘முனியம்மா…’ என்று அருவருப்போடு அழைத்தாள்.

‘எங்க போற?’

‘கை கழுவிக்னு சாப்பாடு எடுத்து வாரம்மா.’

‘போய் முதல்ல தல குளிச்சிட்டு வந்து அப்புறம் எதையும் தொடு.’

முனியம்மா நிலைகுலைந்து போய்விட்டாள். உடனே அங்கிருந்து நகர்ந்தாள். அவளுக்கு நெஞ்சு படபடத்தது.

லட்சுமி தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் வேலையிலிருந்து ஒழித்துவிட்டால் என்ன என்று தோன்றியது. ஆனால் எப்படியும் தனக்கு ஒரு வேலைக்காரி அவசியம். இவளை விட்டால் இவளைப் போல உண்மையான ஒருத்தியைத் தேடிப் பிடிப்பதும் முடியாது. டிரைவரை மட்டும் வேண்டுமானால் நிறுத்திவிட்டு யாராவது வயசான ஆளாகப் பார்த்து போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆகட்டும், சீக்கிரம் ஒரு டிரைவரைத் தேடிக்கொண்டு இவனை அனுப்பிவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள்.

முனியம்மா கொண்டு வந்த சிறிய அளவு பொங்கலும் அவளுக்கு இறங்கவில்லை. வயிறு என்னமோ பசித்தது. அருவருப்பு… யாரையும் நிமிர்ந்து நோக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. எழுந்து கை கழுவிக்கொண்டு இரண்டு பழங்களை மட்டும் உரித்துச் சாப்பிட்டுவிட்டு, அபிராமி அந்தாதியை விரித்துக்கொண்டு அமர்ந்தாள். படிக்க யத்தனித்தாலும் பயன் தரவில்லை.

முனியம்மாள் விதவை. ஏறக்குறைய முப்பது வயதுக்குக் கிட்ட இருக்கும். ஆனால் பார்வைக்கு அவ்வளவு உயர்த்தி நினைக்கத் தோன்றாது. டிரைவர் நல்ல வாலிபம். இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. இது என்ன நாராசமோ! அளவுக்கு அதிகமாகவே நினைத்து நினைத்து இதை வெறுத்தாள்.

அப்படி அடிக்கடி நினைத்து வெறுக்காவிட்டால் அதன்மேல் சிந்தை படர்வதுபோல அவளுக்குப் பிரமை தட்டியது. அதிலிருந்து விடுபட பூஜை அறைதான் அவளுக்கு அடைக்கலம் தந்தது.

[7]

புதுசேரியைத் தவிர அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் அவள் பெயர் பரவ ஆரம்பித்தது. பத்திரிகைகள் பாராட்டின. ஜனங்கள் உயர்வாகப் பேசிக்கொண்டார்கள். பிரசங்கங்களுக்குப் போனால், பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து விபூதி வாங்கி அணிந்து செல்லும் கூட்டம் சாரிசாரியாக வந்தது. மணமானவர்களும் கன்னிப் பெண்களும் குழந்தைகளும் முதிய பெண்மணிகளும் காலில் விழுந்து வணங்குவார்கள்.

அதையெல்லாம் கண்டு இவளுக்குப் புல்லரிக்கும். இந்த 28 வயதிலேயே இவ்வளவு புகழ் தேடிக்கொண்டோமே என்று நினைப்பாள். தனக்குள் கர்வம் கூடாது! மேலும் மேலும் பக்தி சிரத்தையோடு நடந்துகொள்ள வேண்டும், இன்னும் ஆழ்ந்து படிக்கவேண்டும் என்று சொல்லிக் கொள்வாள். அகம்பாவத்துக்கு ஆட்படாத தன்மையும் இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாய் நினைக்கும் மனப்பக்குவத்தையும் இறைவன் இன்னும் தனக்கு அளிக்கவில்லையே என்று அதற்காக பிரார்த்தனை புரிவாள்.  சொற்பொழிவுகளில் சத்தியவான் சாவித்திரியைப் பற்றி பேசுவாள். கண்ணகியை, காரைக்கால் அம்மையை விதந்தோதுவாள். தமிழ்ப் பெண்கள் உலகிலேயே தலைசிறந்த கற்புடையவர்கள். அவர்களுக்கு அது உயிரைவிட மேலானது என்று உதாரணம் காட்டுவாள். ஒருமுலை அரிந்த திருமா பத்தினியின் உக்கிரம் மதுரையை எரித்த கதை சொல்வாள். புனிதவதி கணவனை வாழ்த்திவிட்டுப் பேயுருக்கொண்டு தலையால் நடந்து திருவாலங்காடு ஈசனடி சேர்ந்த கதை சொல்வாள்.

அன்று மாலை வில்லியனூர் பக்கத்தில் ஏதோ ஒரு சிற்றூரில் கும்பாபிஷேகம் என்று அம்மையாரை அழைத்திருந்தார்கள். சொற்பொழிவாற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றி ஒரு தொகுப்பைத் தயார்செய்து கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

அந்திச்சூரியன் மேற்கில் இறங்கியது. பறவைகளெல்லாம் கூட்டை அடைந்துகொண்டிருந்தன. வயல்களில் வேலை செய்த உழவர்களும் பெண்களும் வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள். தெருவில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. கார் ரெட்டிச்சாவடியைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வீட்டெதிரிலேயே அவள் கண்ட காட்சி கண்களை அகல விரியச் செய்தது.

ஒரு குடிசை வீட்டெதிரே சுந்தரம் தோளில் குழந்தையுடன் அதற்குப் பராக்கு காட்டிக்கொண்டு நின்றிருந்தான். நீர் தெளித்த வாசலில் பெண்மணி ஒருத்தி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். குழந்தை எதையும் பார்க்காமல் தாயிடம் போகத் தாவியது. சுந்தரம் அதைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். தாய் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தபடியே என்னவோ சொன்னாள்.

காரின் ஓட்டத்தில் எதுவும் காதில் விழவில்லை. கார் அவர்களையும் கடந்துவிட்டது. லட்சுமி அந்த சிறிது நேரத்துக்குள்ளேயே என்னென்னவோ நினைத்தவளாய் ‘டிரைவர்! நிறுத்து’ என்றாள்.

கார் சிறிது தூரம் ஓடி ஒதுக்குப்புறமாய் நின்றது.

கார் நின்ற பிறகு அவள்  குழம்பினாள், ஏன் நிறுத்தச் சொன்னோம்… ‘சரி போ.’

டிரைவர் ஒன்றும் புரியாமல் ஸ்டார்ட் செய்தான்.

அந்த ஊருக்கு வேறு ஏதாவது வழியிருந்து அந்த வழியாக வந்திருக்கக் கூடாதா… நான் எப்போதும் போல கண்ணை மூடிக்கொண்டு வந்திருக்கக்கூடாதா… இதெல்லாம் என்ன? இதுதான் விதியா?

அவள் மனம் எங்கோ போவது அவளுக்குத் தெரிந்தது. விழித்துக்கொண்டாள். அதைப் பார்த்து தன் மனம் ஏன் பதற்றமடைய வேண்டும்? இன்னும் பக்குவடையவில்லை. தொடர்ந்த முயற்சிகளையெல்லாம் இதுபோன்ற ஏதாவது சம்பவங்கள் அடிக்கடி சிதற அடித்துக்கொண்டு வருகின்றன. இனிமேல் எதையும் கண்ணாலேயே பார்க்கக்கூடாது. பார்த்தாலும் சிந்தையால் தொடரலாகாது.

அப்படி அவள் நினைத்துத் தன்னை உறுதிசெய்து கொள்ள முனைந்தாலும் அது அவளால் முடியவில்லை. அன்றைய கூட்டத்தில் அவளால் சரியாக பேசக்கூட முடியவில்லை. மயக்கம் வருவதைப் போலிருந்தது. திருவிழாக் கோலமும் சுற்றுப்புறமும் பிரகாசமான விளக்குகளும் அவளுக்குப் புறம்பாயிருந்தன. தலை வலிக்கிறது என்று காரணம் கூறி சீக்கிரமாகவே தன் பேச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பிவிட்டாள்.

காரை விட்டு இறங்கிய வேகத்தில் விடுவிடுவென நடந்து கை கால்களைச் சுத்தி செய்து முகம் கழுவி பூசை அறைக்குச் சென்ற பிறகுதான் கொஞ்சம் நிம்மதி தோன்றியது. அமைதியாக எரியும் குத்துவிளக்கின் பிரகாசத்தில் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தபின் அவளது உதடுகள் இறுகியிருந்தாலும் இலேசாக துடித்துக்கொண்டிருந்தன. ‘அன்னையாகிய பின்னும் கன்னியாய் நின்ற அகிலாண்டேஸ்வரி…’

[8]

தேவையான அளவுக்கு இன்னும் தன்னுள் அருள் நிறையாததை லட்சுமி தெளிவாகவே உணர்ந்தாள். அப்படி பலவீனம் ஏற்படும் போதெல்லாம் ஆறாம் திருமுறையில் ஆழ்வதை அதிகமாக விரும்பினாள். பிற நூல்கள் கொஞ்சமாய் சலிப்பு தட்டுவதுபோல் இருந்தன. அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் ஜனங்கள் மத்தியில் இருப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினாள்.  அப்படியிருப்பது அவளுக்கு மிகவும் பாதுகாப்பாயிருப்பதுபோல் தோன்றியது. அதை அடைக்கலமாகவும் ஆறுதலாகவும் நினைத்தாள்.

திருவாமாத்தூரில் அப்பர் சுவாமிகள் ஸ்தலத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தாள். அங்கே அவளுக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் காண பெரும் ஆச்சரியமாய் இருந்தது. அந்த அளவுக்கு வெளி உலகத்தில் தனக்குப் புகழ் இருக்கிறதா என்று அவளே வியந்தாள். இன்னும் வெகுவாகக் கனிய வேண்டும். தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம், சிதறும் மன ஓட்டங்களையெல்லாம் ஒழுங்கு செய்துகொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டாள். ‘ஆண்டவனே! இந்த ஜனங்களெல்லாம் மதிக்குமளவுக்கு மேலும் மேலும் எனக்குப் பரிசுத்தத்தைக் கொடு. என்னை அப்படியே ஆட்கொள்வாய்! நீயே எல்லாமும் என அர்ப்பணித்துக்கொள்வேன்’ என்று மனத்துள் வேண்டியபடியே காரை விட்டு இறங்கினாள்.

ஒருபுறம் ஜனத்திரள் நிறைந்திருக்க நடுவிலிருந்த இடைவெளி வழியே அவளை கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு தர்மகர்த்தாக்கள் ஒதுங்கி நின்றனர். சந்நிதியில் நின்று ‘வானாகி வளியாகி ஒளியாகி…’ பாடினாள். பக்தி ரசம் பொழிந்தது. ஜனங்கள் வாயடைத்து மெய்மறந்து நின்றார்கள். பாடி முடித்த பிறகு குருக்கள் பூஜை செய்தார். தீப ஆராதனை செய்யும்போது அவள் கரம் கூப்பித் தொழுதாள். சுற்றித் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களும் பக்தி கோஷம் எழுப்பித் தொழுதார்கள். பின்பு ஒவ்வொருவராய் வந்து காலில் விழுந்து நமஸ்கரித்து விபூதி வாங்கி இட்டுக்கொண்டு சென்றார்கள். அதுவரை எல்லாம் திருப்திகரமாகவே முடிந்தது.  அதற்குப்பிறகு நடந்த நிகழ்ச்சிதான் அவளைக் கலக்கிவிட்டது.

சொற்பொழிவை ஆரம்பித்து வைக்க எழுந்த தலைவர் ‘மகாலட்சுமி தேவியாரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள். அவர்களைப் போல ஒருவரை இந்தக் காலத்தில் காண்பதே அபூர்வம். அவ்வளவு தெய்வீகத்தன்மை வாய்ந்தவர். ஆசார அனுஷ்டானங்களை பிரசங்கம் செய்வதோடு வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறார். அரிசி உணவைச் சாப்பிடுவதேயில்லை. எவ்வளவோ சொத்துகள் இருந்தும் அனைத்தையும் தரும காரியங்களுக்காகவே தானம் செய்தார்கள். திருமணமானவராயிருந்த போதும்கூட இல்லறத்தை வெறுத்து துறவறத்தை மேற்கொண்டார்கள்…’

அந்தக் கடைசி வார்த்தைகளில்தான் மகாலட்சுமி குழம்பிப்போய்விட்டாள். எவ்வளவோ தெளிவோடும் புத்துணர்ச்சியோடும் இருந்தவளை, அடியில் குழம்பிக் கிடக்கும் சேற்றுப் படுகையைக் கலக்கி மேலே கொண்டுவந்துவிட்டதைப் போல் ஆக்கிவிட்டது. பழைய சம்பவங்கள் நினைவின் மேலெழுந்து மிதந்தன. அதை அடியில் அமுக்க அவள் பிரயாசைப்பட்டுக்கொண்டிருந்தாள். சீக்கிரம் அவர் பேச்சை முடிக்கமாட்டாரா என்று தோன்றியது. ‘வளவள’வென்று அவர் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்.

மகாலட்சுமி மிக எச்சரிக்கையாக, தான் சொற்பொழிவாற்ற வேண்டிய விஷயங்களே குறியாக, அவசியமற்ற எண்ணங்கள் அரித்துக்கொண்டிருப்பதிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தாள். அவர் நிறுத்தவேண்டியதுதான் பாக்கி, இவள் எழுந்து மடமடவென்று ஆரம்பித்துவிடுவாள். திருவதிகையில் அப்பர் அருளிய முதல் பதிகத்தைப் பாடி ஆரம்பித்தாள். ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்…’

அது காலை நிகழ்ச்சி. இரவும்கூட நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால் மகாலட்சுமிக்கு மதியம் வரைக்கும்தான் புரோகிராம். கீற்றுக்கொட்டகை வேய்ந்த விசாலமான பந்தலெங்கும் மக்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அவள் பிரசங்கத்தைக் கேட்க ஆவலோடிருந்தார்கள். பக்திரசம் புரிபடாத கைக்குழந்தைகள் தாய்மார்களின் மடியில் இருப்புகொள்ளாமல் ராகாலாபனை செய்துகொண்டிருந்தன.

மகாலட்சுமி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்ப மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. பன்னிரெண்டு மணிக்குள் முடிய வேண்டியது, எப்படி எப்படியோ காலதாமதமாகி அவளை மூன்று மணிக்குத்தான் விட்டார்கள். தர்மகர்த்தாக்கள் கரம் கூப்பி நன்றி தெரிவித்து வழியனுப்ப லட்சுமி காரிலேரி புறப்பட்டாள்.

[9]

மாலை வெயில் சுள்ளென்று உறைத்தது. வானில் திட்டுத் திட்டாக கருமேகங்களும் ஊர்ந்துகொண்டிருந்தன. சாலை நெடுகிலும் வளர்ந்திருந்த மரங்கள் இருபுறமும் நிழல் பரப்பியிருந்தன.  பக்கவாட்டில் தெரிந்த கொல்லைப்புறங்களில் குடியானவப் பெண்களும் ஆண்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.  அவர்களின் குழந்தைகள் சாலையோர மரங்களில் கட்டிவிடப்பட்ட தூளிகளில் உறங்கிக்கொண்டிருந்தன. சில இடங்களில், அடர்ந்த மரங்களின்கீழ் சிறுபிள்ளைகள் காலை அகலப் பரப்பி மணல் வைத்தும் கூட்டாஞ்சோறு ஆக்கியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். காரில் அமர்ந்திருந்த லட்சுமியின் பார்வை எல்லாவற்றின் மேலும் சலனமற்றுப் படிந்து ஓடியது. முகவாயை உள்ளங்கையால் தாங்கியபடி கழுத்தை வெளிப்பக்கம் திருப்பியிருந்தாள் அவள்.

போகிற போக்கில், குளத்தைச் சுற்றிப் படர்ந்து வளர்ந்து நிழல் பரப்பியிருந்த ஆலமரங்களில் ஒன்றின்கீழ் குடியானவப் பெண்ணொருத்தி அமர்ந்திருப்பதைக் கண்டாள் லட்சுமி. அவள் இளம்பெண். அவள் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தான் ஒரு வாலிபன். அவன் உடம்பில் சட்டை ஏதும் இல்லை. உருண்டு திரண்ட தோள்களும், பரந்து விரிந்த மார்பும் திறந்து கிடந்தன. அவள் குனிந்து அவன் தலையில் விரலை விட்டு நெருடிப் பேன் பார்த்து நசுக்கிக்கொண்டிருந்தாள்.

தன்னை மறந்து ஒருகணம் அந்தக் காட்சியிலேயே ஆட்பட்டுப் போன லட்சுமி வெடுக்கென்று கழுத்தைத் திருப்பிக்கொண்டாள். பார்வையை வேறுபுறம் செலுத்தியபோதும் வேறெதுவும் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. அந்தக் காட்சி அப்பட்டமாய்ப் பதிந்துவிட்டது. கார் சிறிது தூரம் சென்றுவிட்ட பிறகு மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தாள். தூரத்தில் மரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாகியதாய் மனத்தில் பிரமை தட்டியது. உடனே திருமுறையை எடுத்து மெல்ல முணுமுணுத்துப் படித்துக்கொண்டு வந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும் ஏனோ அவள் மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.

கனவேகமாக, காரின் அடியிலிருந்து வெளியேறி ஓடும் தார்ச்சாலை தெரிந்தது. வெறிச்சென்ற சாலையின் இருபுறமும் வளர்ந்திருந்த மரங்கள் தூரத்தில் ஒன்றுசேர்வது போல் தோன்றியது. அதற்கும் அப்பால் அந்திக் கதிரவனைக் கரு மேகங்கள் மூடிமறைப்பதும், சாரிசாரியாக மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்வதும் தெரிந்தது. சிறிது நேரத்தில் மழை வந்துவிடும் போலிருக்கிறது. விண்ணும் மண்ணும் இணையும். பிரகிருதியும் ஜீவனும்…

லட்சுமி திரும்பி மீண்டும் புத்தகத்தைப் பிரித்தாள். எல்லாம் ஏற்கெனவே பலமுறை படித்துப் படித்துப் பழகிப் போனவை. பார்க்காமலேகூட படிக்கலாம் என்றுதான் தோன்றியது. பார்க்காமலே அவ்வுடல்கள்… உடனே ‘சீ இது என்ன சபலம்…’ என்று உள்ளூறவே சீறிக்கொண்டாள்.

‘கூற்றைப் புன்தோல், உதிரக் கட்டளை, நாற்றப் பிண்டம், நான்முழத்து ஒன்பது பீற்றல் துண்டம், பேய்ச்சுரைத் தோற்றம், ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்’

சிறிது நேரத்தில் பொட்டுப் பொட்டென்று தூறல் விழுந்தது. சுற்றும் முற்றும் வெளிச்சத்தையே காணோம். வானம் கறுத்து இருண்டுபோய்விட்டது. எங்கிருந்தோ பொங்கியெழுந்ததுபோல் குளுமையான காற்று வேகமாக வீசியது. இலேசாக சாரலும் வீசியது. 

எதிரே நீண்டு கிடந்த சாலையும் மரங்களும்கூட இருளில் கறுத்துப்போய்விட்டன. முன்பக்கத்து விளக்குகளைப் போட்டுக்கொண்டு கார் ஓடியது. தனது கதவுகளின் கண்ணாடியை உயர்த்திவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தாள் மகாலட்சுமி.

காரின் உள்ளே இருளாயிருந்தது. வெளியேயும் இருள்தான். முன்புறம் பிரகாசிக்கும் விளக்கு காரின் முன்னே பளபளத்துப் பெய்துகொண்டே, வரவேற்பளித்துப் போகும் மழையைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. உருவந் தெரியாத இருளில் உட்கார்ந்திருந்த லட்சுமி இலேசாய்க் கிறக்கமடைந்திருந்தாள். தேவையில்லாமல் அந்த நேரத்தில் சுந்தரத்தைப் பற்றி நினைத்தாள். உடனே தலையை ஆட்டிக் கொண்டாள்.

தான் செய்து வருவதெல்லாம் சரிதானா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டாள். எல்லாம் சரிதான். இதுபோல எவளாலும் கட்டுத்திட்டமாய் வாழமுடியாது. எவளுக்கும் அவ்வளவு ஞானம் கூடவில்லை என்றே கருதினாள். பக்தி என்பதே நாட்டில் முன்போல இல்லை என்று எண்ணினாள். அதில் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டது.  அதனால் எண்ணங்கள் இலேசாகி மிதந்தன. எதிரே கார் ஓட்டுவதிலேயே கவனமாயிருக்கும் டிரைவரைப் பார்த்தாள். சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தபோது இருளிலும் அவனது உரம் பாய்ந்த பிடரியும், சட்டைக் காலரும், அகன்ற தோளும் தெரிந்தது. வலிமையான கரங்கள் ஸ்டீயரிங் வீலை லாவகமாகப் பற்றியிருந்தன.

முன்பொரு சமயம் அவனை வேலையை விட்டு நிறுத்திவிட நினைத்தது நினைவுக்கு வந்தது.

‘அடுத்த வாரத்துல இருந்து வேற ஆள் போட்டுக்கப் போறேன். நீ நின்னுடு’ என்றாள் லட்சுமி.

இதைக் கேட்டு திகைத்துப் போய் பதிலொன்றும் சொல்லத் தோன்றாமல் கொஞ்ச நேரம் நின்றிருந்தான். அதன் பிறகு ‘ஏம்மா’ என்று தயங்கிக் கேட்டான்.

காரணத்தை என்னவென்று சொல்வது? லட்சுமி சிறிது நேரம் யோசனையிலாழ்ந்தாள்.

‘காரணமெல்லாம் கேக்க வேணாம். பிடிக்கலேன்னா நிறுத்திட வேண்டியதுதானே’ என்றாள்.

அவன் கண்கள் கலவரமடைந்தன. நெற்றி சுருங்கியது. கூனிக் குறுகிப் பணிவாக நின்றபடி ‘அம்மா…’ என்றான். அதற்குள் அவனுக்குத் தொண்டை அடைத்தது. ‘எனக்கு இன்னும் கலியாணம் ஆவலேம்மா. ஆனா தனி ஆளு இல்லே… அப்பா அம்மா இருக்காங்க. மூணு தங்கச்சி இருக்குது. ரெண்டு தம்பிங்க இருக்கானுங்க. எல்லாரையும் என் சம்பாதனையிலதாங்கம்மா காப்பாத்தணும். வேற வருமானமில்ல… தங்கச்சிங்களை கட்டிக் கொடுக்கணும்.  நீங்க திடுதிப்னு நிறுத்திட்டீங்கன்னா நான் எங்கம்மா போவேன்? வேலை கெடைக்கறது இந்தக் காலத்துல என்னா அவ்வளவு சுளுவாவா இருக்கு… வேண்டாம்னு சொல்லாதீங்கம்மா…’ என்று சின்னப் பிள்ளையைப் போல அவன் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டான்.

என்ன இவ்வளவு பெரிய ஆண்பிள்ளை இப்படி அழுகிறானே என்று அவளுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. என்ன செய்வதென்று புரியாமல் கொஞ்ச நேரம் கழித்து அவனை ஒரு மாதிரியாய்ப் பார்த்தாள்.

அந்தப் பார்வையைக் கண்ட அவன், ‘இனிமே அந்த மாதிரி எந்தத் தப்பும் செய்ய மாட்டேம்மா’ என்று சொல்லிவிட்டு சொக்காயைத் தூக்கி கண்களைத் துடைத்துக்கொண்டான்.

அதற்குமேல் லட்சுமி கொஞ்சம் யோசித்து, ‘கொஞ்ச நாளைக்கு வேணுமானா இங்கியே ஓட்டு. எப்பிடியும் நான் வேற ஆள்தான் போட்டுக்கப் போறேன். உனக்கு வேணுமானா நானே நல்ல இடத்துல வேலை வாங்கித் தர்றேன்’ என்று சொன்னாள்.

‘சரிங்கம்மா’ என்று தலையை ஆட்டிவிட்டு நகர்ந்தான் அவன்.

இருளில் ஆழ்ந்திருந்த லட்சுமி திடுக்கிட்டு விழித்துக்கொண்டவளைப் போல் குலுங்கி நிமிர்ந்தாள். தனக்கு ஏன் இந்நினைவெல்லாம் தோன்றுகிறது. அந்தச் சம்பவத்துக்கு இப்போது என்ன வந்தது? அவள் தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் கேட்டுக்கொண்டாள். அன்றிலிருந்தே அவனைக் காணும்போது பரிவும் இரக்கமும் உண்டாவதை உணர்ந்தாள். ஒரு இளைஞன்மேல் மட்டும் அதிகப்படியான பரிவு ஏன் உண்டாக வேண்டும்?

அவன் தாயிடம் பழகுவதுபோல இயல்புடன் பழகுகிறான். பக்தியுடனும். கேவலம் அந்த டிரைவரிடம்… டிரைவர் கேவலமா… அப்படியானால் அவனைவிட உயர்ந்தவனாயிருந்தால்…! ஐயோ ஜெகதீஸ்வரி! இந்த நினைப்பெல்லாம் ஏன் எனக்கு கொடுக்கிறாய்?  இந்த மழை ஓயாதா! இந்த இருள் விலகாதா! எப்போதோ ஒருமுறை மின்னும் மின்னலை சாசுவதமாய் பிரகாசிக்கச் செய்ய உன்னால் முடியாதா…! 

எப்படியோ நிம்மதி குலைந்தது. அவள் கண்களைத் திறக்கவே பயந்தாள். மூடினாலும் பயமாயிருந்தது. பங்களாவை நெருங்கியதும் கார் நின்றது. மழை அப்போதும் விடவில்லை. கொட்டிக்கொண்டேயிருந்தது. டிரைவர் முதலில் இறங்கி காரைத் திறந்துவிட்டான். மகாலட்சுமியால் எழுந்திருக்க முடியவில்லை. அதிகம் சோர்ந்து போயிருந்தாள். தலை சுற்றுவது போலிருந்தது.  ஒரு காலை எடுத்துக் கீழே வைத்து மறுகாலையும் எடுத்து வைக்கும்போது அவள் தள்ளாடினாள். மழை தரதரவென்று ஊற்றிக்கொண்டிருந்தது. சாயப் போன அவளை ஆபத்துக்குதவியாய் சட்டென்று தாங்கிக்கொண்டான் டிரைவர்.  மழையிலும் அவனுக்கு உடம்பு நடுங்கியது. தனது உடம்பில் படாமல், கைகளில் மட்டும் தெய்வ விக்கிரகத்தைத் தாங்கியிருப்பதே போல் பிடித்திருந்தவன் ‘முனியம்மா…’ என்று பங்களா அதிரக் கத்தினான்.

உள்ளேயிருந்து கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தாள் அவள். 

‘இந்தா இந்தா மொதல்ல அம்மாவப் புடி. வுழுந்துடப் பார்த்தாங்க’ என்று அவளை முனியம்மாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு ‘காரை ஷெட்டுல வுட்டுட்டு வரேன். உள்ளே கூட்டிக்னு போ’ என்று காரில் ஏறி அமர்ந்தான்.

தலையிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட அவளை உள்ளே அழைத்துவந்த முனியம்மா ஹாலுக்கு வந்து லைட்டைப் போட்டு ‘என்னம்மா?’ என்றாள்.

நிற்கக்கூட முடியாதபடி தடுமாறிய மகாலட்சுமி ‘ஒண்ணுமில்ல. என்ன விடு. புடவையெ எடுத்தா. படுக்கையைத் தட்டிப் போடு. சாப்பாடு எதுவும் வேணாம். அலமாரியில தைலம் இருக்கும் எடு’ என்று கொணங்கொணவென்று பேசிவிட்டு தன் அறைக்குச் சென்றாள்.

ஈரப் புடவையை அவிழ்த்து எறிந்துவிட்டு வேறு புடவை மாற்றிக்கொண்டாள். துண்டை எடுத்து தலையை நன்றாகத் துவட்டிக்கொண்டாள். இதற்குள் முனியம்மா தட்டிப் போட்ட படுக்கையில் சாய்ந்து சுருண்டாள் லட்சுமி.

முனியம்மா ஈரத்துணிகளையெல்லாம் எடுத்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோது ‘அம்மா எப்படி இருக்காங்க! உடம்புக்கு என்னவாம்?’ என்று கேட்டபடியே டிரைவர் வந்ததை லட்சுமி உணர்ந்தாள். அதற்கு முனியம்மா ஏதோ பதில் சொல்வதும் தெரிந்தது. பிறகு அவர்களுக்குள் ஏதோ குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். டிரைவரை இங்கேயே தங்கச் சொன்னால் என்ன என்று எண்ணினாள். எதற்கு என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. ஏதோ விபரீதப்போக்கில் தான் உழல்வதாய் அவள் உணர்ந்தாள். உடனே ‘டிரைவரை வீட்டுக்குப் போகச் சொல்லிவிடு’ என்று உள்ளிருந்தபடியே குரல் கொடுத்துவிட்டாள்.

அன்று இரவு பூஜை செய்யவில்லை. படுக்கையில் படுத்தபடியே ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்தாள் மனக் குழப்பத்தில். அடைமழையில் காரில் வந்ததும் இறங்கும்போது தன்னை டிரைவர் தாங்கிப்பிடித்ததும் ஒரு கணம் புல்லரித்தது… ஆனால் ‘ஆண்டவனே! எனக்கு ஏன் இப்படித் தோன்றுகிறது? இந்த நீசத்தனமான எண்ணங்களையெல்லாம் வேர் அறுக்க மாட்டாயா?’ என்று வேண்டிக்கொண்டாள்.

காலையில் எழுந்திருக்கும்போது ஜுரம் கொஞ்சம் அதிகமானது போல் தோன்றியது. இருந்தாலும் வெந்நீர் வைக்கச் சொல்லி வழக்கம்போலவே குளித்து பூசையெல்லாம் செய்தாள். புத்தகம் கொஞ்ச நேரம் படிக்க நினைத்தாள். ஆனால் எழுத்தைக் கண்ணால் பார்க்க முடியவில்லை, கண்களிலிருந்து மளமளவென்று நீர் வடிந்தது. தலை பாரமாக இருக்கவே கட்டிலிலேயே படுத்துக்கொண்டாள். தன் உடம்பு அதிகம் இளைத்துப் போய்விட்டதையும், எதையும் தாங்கமுடியாமலிருப்பதையும், சீக்கிரமே களைப்படைந்து போய்விடுவதையும் அவள் நன்றாக உணர்ந்தாள். அதற்காக அவள் கவலைப்படவில்லை. இப்போதுதான் சரியான மனப்பக்குவம் கிடைக்கும் என்று நம்பினாள்.

‘நாலாவது வீட்டுல ஒரு டாக்டர் இருக்காரு. அவரன்னா போய் கூப்டுக்னு வரட்டுமாமா?’ என்று கேட்டாள் முனியம்மா.

‘எதுவும் வேண்டாம்’என்று சொல்லிவிட்டு கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்தவளைப் போலப் படுத்துவிட்டாள்.

மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு அவள் சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுத்துவிட்டாள். வெந்நீரில் வாயைக் கொப்பளித்துக்கொண்டு முனியம்மாவின் உதவியுடன் கட்டிலில் சென்று படுத்தாள். இனியும் சும்மாயிருப்பது நல்லதல்ல என்று நினைத்த முனியம்மா எஜமானியின் உத்தரவை எதிர்பாராமலே போய் டாக்டரை அழைத்து வந்துவிட்டாள்.

[10]

டாக்டரை ஸ்டெதஸ்கோப் இல்லாமல் பார்த்தால், டாக்டருக்குப் படித்தவர் மாதிரியே தெரியாது. ஏதோ இராணுவ வீரரைப் போல இருப்பார். இளைஞர். நோயைக் கண்டோ, நோயாளிகளைக் கண்டோ எப்போதும் இவர் இரக்கப்பட்டதில்லை. தன்னைக் கண்டு எப்பேற்பட்ட நோயும் பறந்துவிடும் என்பதிலும், என்ன நோயாளியாக இருந்தாலும் எழுந்து விடுவான் என்பதிலும் அவருக்குத் திடமான நம்பிக்கை. நாலாவது வீட்டிலேயே இருப்பதால் மகாலட்சுமி அம்மையாரைப் பற்றி அனைத்தும் அவருக்குத் தெரியும். உற்சாகமாய் விசிலடித்தபடியே முனியம்மா பின்தொடர வந்தார்.

மகாலட்சுமியையே சிறிது நேரம் பார்த்தார். சிரித்துக்கொண்டே ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டி முனியம்மாவிடம் கொடுத்து நெஞ்சில் வைக்கச் சொன்னார். கொஞ்ச நேரம் கழித்து அதை எடுத்து பைக்குள் திணித்தபடி, உள்ளேயிருந்து சில மாத்திரைகள் எடுத்தார். இன்ஜெக்ஷன் சிரிஞ்சையும் எடுத்துக்கொண்டார்.

‘ஊசி போடலாமா?’ என்றார்.

மகாலட்சுமி மறுப்பு சொல்லவில்லை.

அவர் ஊசி போட்டு முடித்தபின், மாத்திரைகளைக் கொடுத்து சாப்பிடவேண்டிய முறைகளைச் சொல்லி விளக்கிவிட்டு ‘வீட்டிலேயேதான் இருப்பேன். எப்ப வேணுமானாலும் வந்து கூப்பிடு’ என்று முனியம்மாவிடம் சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

அவர் போனதும் ‘உன்னை யார் கூப்பிட்டு வரச் சொன்னது டாக்டர? இதெல்லாம் என்ன வேலை’ என்று வேலைக்காரியிடம் கடிந்துகொண்டாள் லட்சுமி.

டாக்டர் வந்தபோதும் ஊசி போட்டபோதும் தனக்கு விருப்பமில்லாமலிருந்தும்கூட ஏன் சும்மாயிருந்தோம்! வேண்டாமென்று சொல்லியிருக்கலாமே! புத்தியே நிதானம் இல்லாமல் இருக்கிறது என்று அலுத்துக்கொண்டாள்.

பிறகு டிரைவர் வந்தான். பொழுது போகும்வரைக்கும் இங்கேயே இருந்தான். அம்மாதான் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்களே என்ற துணிச்சலிலோ என்னவோ முனியம்மாவுடன் கூச்சமற்று விளையாடிக்கொண்டிருந்தான்.

அறைக்குள்ளிருந்த லட்சுமிக்கு சரசங்கள் எல்லாம் தெளிவாய்க் கேட்டன. உற்று கேட்டாள். ஏன் அதைக் கேட்க வேண்டும்? புத்தி கெட்டு ஏன் இதையெல்லாம் கூர்மையாய்க் கேட்கத் தோன்றுகிறது? இன்னும் என்னுடைய உணர்ச்சிகள் எல்லாருடையதையும் போல அற்பமாகவே இருக்கிறதே என்றும் நினைத்தாள். அதற்காக பிரார்த்திக்கவும் ஆரம்பித்தாள்.

பொழுது சாயும் சமயம் ஜூர வேகம் அதிகரித்தது. வயிற்றிலே வேறு எதுவும் கிடையாது. அவள் பிரக்ஞை இழந்து பிதற்ற ஆரம்பித்தாள். முனியம்மா பதறிப்போய் ஓடி வந்து அம்மா… அம்மா… என்று அழைத்தாள். பதிலில்லாமல் போகவே பயந்துபோய் ‘அலமாரில தைலம் இருக்கு. உள்ளங் கால்ல தேய்ச்சிக்னு இரு; நான் போய் டாக்டரைக் கூட்டிக்னு வரேன்’ என்று வெளியே ஓடினான் முனியம்மா. டிரைவர் தைலத்தை கைகளில் ஊற்றி லட்சுமியின் பாதங்களிலும் கணுக்கால்களிலும் சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டிருந்தான். மாறி மாறித் தேய்க்கும்போதே அவள் இலேசாக விழித்தாள். ஒன்றும் புரியாமல் உற்று நோக்கினாள்.

‘நான்தாம்மா டிரைவர். நீங்க பெனாத்தவே பயந்துபோய் முனியம்மா டாக்டரைக் கூட்டியாரப் போயிருக்கு. அதான் தேய்க்கச் சொல்லிட்டுப் போச்சு’ என்றான்.

அதைக் கேட்ட லட்சுமி அவ்வளவு பெரிய பங்களாவில் தானும் டிரைவரும் மட்டும் தனியே இருக்கிறோம் என்று நினைத்தாள். தனியாயிருந்தாலென்ன? ஏன் இப்படியெல்லாம் கவனம் செலுத்தி இதைப் பற்றியே எண்ணும்படி தோன்றுகிறது? கால்களை அவனிடம் கொடுத்துவிட்டு லட்சுமி கண்களை மூடியிருந்தாள். தேய்ப்பு இதமாக இருந்தது. அவனைப் பக்கத்தில் அழைத்து இறுக்கிக்கொண்டால்கூட…

‘ஆண்டவா! பிறந்து மண்மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்து, சிற்றின்பத்தின்மேல் மயலாகி பறந்து உழன்றே, தடுமாறி பொன் தேடவே பணித்தாய் இறைவா…’

அவள் வெடுக்கென்று காலை உதறிக்கொண்டாள். அவன் பயந்து நடுங்கியபடி காலை விட்டு அப்பால் சென்றான்.

‘வெளியே போ’ என்று கத்தினாள். அவன் அங்கே நின்றால்கூட ஏதாவது நடந்துவிடும் என்று பயந்தாள். அவள் மேலேயே அவளுக்குத் துளியும் நம்பிக்கையில்லை.

அப்போது குஷியாய் விசிலடித்தபடியே டாக்டர் முனியம்மா பின்தொடர உள்ளே நுழைந்தார். கூனிக் குறுகி மிரண்டு நிற்கும் டிரைவரைப் பார்த்துச் சிரித்தபடியே ஸ்டெதஸ்கோப்பை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு அடுத்த பக்கத்தை முனியம்மாவிடம் கொடுத்தார்.

பிறகு ஊசி போட்டுவிட்டு தினமும் தானே வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு விசிலடித்தபடியே புறப்பட்டுப் போனார் டாக்டர்.  

லட்சுமிக்கு சற்றுமுன் ஏன் இப்படிக் கத்தினோம் என்று அவமானமாயிருந்தது. தன் பலவீனத்தைத் தானே இப்படி வெளிக்காட்டிக்கொண்டதை நினைத்து வருந்தினாள்.  

‘காமமே பிறவிக்கு வித்தாகும், காமமே அவத்தையில் காக்கச் செய்திடும், காமமே நரகெல்லாம் காணியாக்குமே.’

அவளுக்கு ஒரு வழி தோன்றியது. டிரைவரை அழைத்து, ‘ஒரு நாலைந்து நாளைக்கு நீ லீவ் எடுத்துக்கோ, சொல்லி அனுப்பும்போது வந்து சேர்ந்தா போதும். லீவுக்கு சம்பளமும் போட்டுத் தந்துடறேன், நீ போ’ என்றாள். அவன் இருப்பதால் எழும் சபலங்களை இதன்மூலம் ஒழித்துவிடலாம் என்று நினைத்தாள். இரண்டு நாளாக சரியாக பூஜை செய்யாததற்காகவும், நடந்துவிட்ட தனது கேவலமான போக்குக்காகவும்,  மன்னிப்பு கேட்டு அவள் வெகுநேரம் பிரார்த்தனை செய்தாள். 

தினம் டாக்டர் வந்து பார்த்துக்கொண்டு போனார். அவளுக்கு அதில் அக்கறையே இல்லை. ‘ஆண்டவனே! என் தவறுகளுக்கு என்னை மன்னித்துவிடு. மேலும் எனக்கு ஆத்ம பலம் தா…’

அறையில் மகாலட்சுமி படுத்திருந்தாள். உடம்பு சரியில்லாதிருந்த போதிலும் பிரயாசையுடன் எழுந்து வழக்கம் போலவே வெந்நீர் வைக்கச் சொல்லி குளித்து சிறிது நேரம் பூஜை செய்துவிட்டு வந்து படுத்திருந்தாள். கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் புரட்டிக்கொண்டிருந்தாள். அதில் மனம் ஆழவில்லை. வெளியே இளம் வெயில் சூடேறிக்கொண்டு வந்த போதிலும் காற்று சிலுசிலுவென்று வீசியது. அறையில் குளிர்ச்சி நிலவியது. போர்வையை இடுப்பு வரை இழுத்து விட்டுக்கொண்டாள். அப்படியும் குளிரெடுப்பதாகவே தோன்றியது. யாராவது பக்கத்தில் இருந்தால் தேவலாம் போலிருந்தது.

டிரைவரை ஏன் திடுமென்று லீவு கொடுத்து அனுப்பிவிட்டோம் என்று நினைத்தாள். அவன் இருந்தாலும் கையை காலைப் பிடித்துவிடுவான். சூடு பறக்கத் தேய்த்துவிடுவான்… உடனே தான் எங்கோ நழுவி விழுவதாக அவளுக்குத் தோன்றியது. ‘ஆண்டவனே! என்ன இது? இந்தக் குளிரைத் தாங்கும் சக்தியைக்கூட எனக்கு அளிக்கக்கூடாதா? உண்மையிலேயே குளிர்கிறதா… அல்லது எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா… ஏன் இப்படியெல்லாம் எண்ணங்கள்? ஏன் இந்தத் தடுமாற்றம்? மனம் கொஞ்சம்கூட வளர்ச்சியடையவில்லை. முன்பு இருந்த மாதிரியேதான் இருக்கிறோம்’ என்பதை நினைக்கும்போது அவளுக்குப் பயமாக இருந்தது.

கழுத்துவரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படிக்க முயன்றாள். முடியவில்லை. திடுமென்று ‘முனியம்மா’ என்று அழைத்தாள்.

‘என்னம்மா…’

‘ஒரு டம்ளர் வெந்நீர் கொண்டு வா.’

வெந்நீரைக் குடித்த பிறகும்கூட அவளுக்கு ஒன்றும் தாங்கவில்லை. சிதறி ஓடும் எண்ணங்களை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை எடுத்து முழுமூச்சோடு சத்தம் போட்டு படிக்க ஆரம்பித்தாள். ‘தோடுடைய செவியன் விடையேறி ஒரு தூவெண் மதி சூடி’ குரல் எழவில்லை. இதயம் படபபடவென்று துடித்தது. விரல்கள் நடுங்கின. வியர்வை முத்து முத்தாய் அரும்புகட்டி நின்றது. உடம்பு கணகணவென்று இருந்தது. புத்தகத்தைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். தனக்கு ஏதோ கேடுகாலம் வந்துவிட்டதாகவும் தனக்குள் யாரோ புகுந்துகொண்டு தன்னை வதைப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.  டிரைவருக்கு லீவு கொடுத்து அனுப்பியதுகூட தன் பலவீனம்தான். தனக்கு ஆன்ம பலம் கிடைக்காதா? இவ்வளவு படித்தும் என்ன பயன்? வழி தெரியாத இருளின் உள்ளே மாட்டிக்கொண்டு தவிப்பதைப் போலல்லவா இருக்கிறது! துணைக்கு யாருமில்லை… ஆண்டவனே என்னைக் காப்பாற்று…! நீதான் என்னைக் கரையேற்ற வேண்டும்…!

முனியம்மா டாக்டரின் வரவை எதிர்பார்த்து அறைக்கு வெளியே காத்துக் கிடந்தாள். சிறிது நேரத்தில் உற்சாகமாய் விசிலடித்தபடியே வந்தார் டாக்டர். முனியம்மா எழுந்து சென்று தோல் பையை வாங்க கையை நீட்டினாள்.

டாக்டர் சிரித்து, ‘வேண்டாம். நீ இங்கேயே இரு. கூப்பிடும்போது உள்ளே வந்தால் போதும்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தார். கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

டாக்டரின் வரவைக் கண்ட மகாலட்சுமி கொஞ்சம் தெம்பு வரப்பெற்றவளாய், தலையைத் தூக்கி உடம்பைப் பின்னுக்கு இழுத்து படுத்த நிலையிலிலேயே கட்டிலில் சாய்ந்துகொண்டாள். கதவைத் தாழ் போட்டுவிட்டு வந்தது அவளுக்குத் தெரியாது.  கட்டிலின் பக்கத்திலிருந்த பீரோ கதவை மறைத்தது.

டாக்டர் புன்சிரிப்புடனே தோல் பையை ஸ்டூல் மேல் வைத்துவிட்டு கட்டிலிலேயே சென்று அமர்ந்தார். அதைப் பார்த்து லட்சுமி திகைத்தாள். ஒதுங்கிப் படுத்துக்கொண்டாள். டாக்டர் அவளையே சிறிதுநேரம் உற்றுப்பார்த்து இலேசாய்ச் சிரித்தார். அந்தச் சிரிப்பையும் அந்தக் கண்களையும் பார்த்த லட்சுமி இலேசாக பயமடைந்தாள். ‘ஆண்டவனே என்ன இது! இத்தனை நாள் இல்லாமல் இன்று புதிதாக… இதைப் பார்த்து எனக்கு ஏன் பயம் தோன்றவேண்டும்… எனக்கு சக்தியே இல்லையா… என் பலமெல்லாம் எங்கே போய்விட்டது? அவர் ஏன் இப்படிப் பார்க்க வேண்டும்? ஆண்டவனே எனக்கு இதய சுத்தியைக் கொடு…! இதய பலத்தைத் தா…’

தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அந்தக் கண்களைக் கண்டு எந்தவித பலவீனமும் தோன்றாதவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு எப்போதும் போலவே சர்வசாதாரணமாய் இருக்க வெகுவாகப் பாடுபட்டாள்.

டாக்டர் மெல்ல அவள் கையிலிருந்து புத்தகத்தை இழுத்து பக்கத்தில் இருந்த மேஜையின் மேல் எட்டிப்போட்டார். பின்பு அவள் கையைப் பிடித்துப் பார்த்தார். கன்னத்தில் புறங்கை வைத்துப் பார்த்தார்.  

‘நீருள் குளிப்பினும் காமம் சுடுமே, குன்றேறி ஒழிப்பினும் காமம் சுடுமே…’

நெற்றியில் உள்ளங்கையை வைத்துப் பார்த்தார். வெடுக்கென்று சற்றும் எதிர்பாராத வகையில் அவளை அப்படியே வாரியெடுத்து அணைத்து கன்னத்திலும் கழுத்திலும் இதழ்களிலும் மாறிமாறி முத்தங்களைச் சொரிந்தார்.

அவள் வெகுவேகமாய் தலையை உலுப்பிக்கொண்டு திக்கித் திணறி ‘ஐயோ… ஆண்டவனே… வேண்டாம்… இல்லை…’ என்று ஏதேதோ முனகினாள்.

டாக்டர் எதையும் பொருட்படுத்தவில்லை. அவளை நெஞ்சோடு சேர்த்து இறுக்கினார். மெதுமெதுப்பான அவளது மார்பகங்களுக்கு இடையே தாலி நாணல் டாக்டரின் நெஞ்சில் உறுத்தியது. பக்குவமாக அதை இழுத்து பின்னுக்கு நகர்த்திவிட்டபடி, டாக்டர் மீண்டும் அணைத்துக்கொண்டார். இடைவெளி விடாமல், இறுக்கமாக.

லட்சுமிக்கு ‘தப…தப…’ என்று வியர்த்துக் கொட்டியது. அதிலிருந்து அவளால் விலக முடியவில்லை. விலகத் தோன்றவில்லை. இருந்த நிலையிலேயே ‘ஆண்டவனே… என்ன இதெல்லாம்… இதற்குத்தானா இவ்வளவும்… இது நடைபெறாமல் தடுத்திருக்கவே முடியாதா… எனக்கு எதுவுமே தோன்றவில்லையே… ஒன்றுமே செய்ய முடியவில்லையே… இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றமாட்டாயா… ஐயோ…’

டாக்டர் அவளை அப்படியே தூக்கித் தரையில் வைத்து சுவரோடு சாய்த்து நிறுத்தி, சுவரிலேயே பதியும்படி அணைத்து நெருங்கினார். ‘ஆண்டவனே… ஐயோ! இவ்வளவுதானா… ஜன்னல் கதவும்கூட திறந்து கிடக்கிறதே…’

டாக்டர் சாவகாசமாய்ச் சிரித்துக்கொண்டு அவள் பிடியை விடாமல் நெருக்கியபடியே இரண்டு அடி அவளையும் சேர்த்து தள்ளிக்கொண்டே சன்னல் ஓரம் சென்று கதவைச் சாத்தினார். பிறகு அப்படியே நெக்கித் தள்ளிக்கொண்டு கட்டிலோரம் கொண்டு வந்தார். தன் மேலேயே தனக்கு ஏற்பட்ட கோபத்தாலும், அதற்குமேல் ஒன்றும் முடியாது என்ற தோல்வியினாலும் வெறிகொண்டவள் போல் லட்சுமி, டாக்டரின் கழுத்தைக் கைபோட்டு வளைத்து இறுக்கிக்கொண்டு ஆண்டவனே… என்று முணுமுணுத்தாள்.

டாக்டர் அவளைக் கட்டிலில் சாய்த்துக் கிடத்தி, தானும் சாய்ந்தார். அவருடைய ஷுக்கள் கட்டிலின் அடியில் கழற்றிவிடப்பட்டன.

ஜன்னல் சாத்தப்பட்டதைக் கண்டு திகைப்படைந்த முனியம்மா ஒன்றும் புரியாமல் வெளியே நின்றுகொண்டிருந்தாள்.

வெகுநேரம் கழித்து டாக்டர் மட்டும் எழுந்து வெளியே வந்தார். முனியம்மாவைப் பார்த்து இலேசாய் சிரித்தபடியே ‘ஒரு கிளாஸ் தண்ணி கொண்டுவா’ என்றார்.

தண்ணீரை வாங்கி மடக்மடக்கென்று குடித்துவிட்டு, பையை எடுத்துக்கொண்டு, டக்..டக்.. என பூட்ஸ் ஒலியெழுப்ப முனியம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியேறினார் டாக்டர். அவர் போனபின் அறைக்குள் போன முனியம்மா அப்படியே திடுக்கிட்டுப் போய் நின்றுவிட்டாள். கட்டிலில் கிடந்த மகாலட்சுமி வதங்கிய கீரைத் தண்டைப்போல் கிடந்தாள். 

‘அம்மா…’ என்று பதறினாள் முனியம்மா.

அது கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல் கேட்டது. அந்தக் குரலில் இருந்த பதற்றம் அவளுக்கும் எல்லாம் தெரிந்துவிட்டதைப் போல் தோன்றியது அந்த ஒரு விநாடி பூமியே இரண்டாகப் பிளந்து தன் உயிரை விழுங்கிவிடாதா என்று லட்சுமி நினைத்தாள். சற்று முன்னாடியே, அப்போதே தன் உயிர் போய்விட்டிருக்கக் கூடாதா என்று நினைத்தாள். அவள் முன்னே கேவலம் ஒரு சிற்றெறும்பைப் போலாகிவிட்டதை உணர்ந்து வெந்து புழுங்கினாள். கிழித்துப் போட்ட நாரைப்போல் கிடந்தாள்.

‘அம்மா… அம்மா…’

லட்சுமி மெல்ல கண்ணைத் திறந்தாள். உலகமே இருண்டு கிடந்தது. எதையும் அவள் பார்க்க விரும்பவில்லை. பார்க்கக் கூசியது.

அம்மா கண் விழித்ததைக் கண்டு தெம்பு வரப்பெற்றவளாய் முனியம்மா சற்று மகிழ்ச்சி அடைந்தாள்.

‘வெந்நீர் போடட்டாம்மா குளிக்க…’

[11]

பொழுது விடியும்போது மகாலட்சுமி அங்கில்லை. நேற்று பகல் முழுதும் அவள் படாத துயரம் கிடையாது. இரவு வந்தபோது கவிழ்ந்து வந்த இருள் நரகத்தை நினைவூட்டியது. இத்தனை காலமாகக் காத்துவந்த தன் பரிசுத்தம் எல்லாம் இப்படி ஒரு நொடியில் தவிடுபொடியாகிவிடும் என்று அவள்  கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அன்று முழுதும் வீட்டிலே இருப்புகொள்ளவில்லை. ஒன்று செத்துத் தொலைய வேண்டும், அல்லது யார் கண்ணிலும் படாமல் எங்காவது மறைந்துவிடவேண்டும் என்று தோன்றியது.

தற்கொலை செய்துகொள்ளலாமா… என்று தோன்றியது. பிறகு தன் சவத்தின் மூலம் தன் இழிவு ஊர் பூராவும் தெரிந்துவிடுமே என்று நினைத்தாள். தன் உடலின் ஒரு துளி இரத்தம்கூட தரையில் சிந்தாமல், ஒரு துண்டு சதைகூட மண்ணில் மக்கி அழுகாமல் சாவதற்கு ஏதாவது வழி தோன்றாதா… என்று எண்ணிணாள். இந்தப் பாவ மூட்டையோடு யார் முகத்தில் விழிப்பது? இத்தனை காலப் பெருமையும் புகழும் என்ன ஆவது…

இரவு நடுச்சாமத்துக்குப் பிறகு அவள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள். புறப்படும் முன்போ மாலையிலோகூட அவள் பூஜை செய்யவில்லை. தெய்வ விக்கிரகங்களைப் பார்க்கவே கசந்தது. தான் இத்தனை காலமாய்ப் படித்து வந்த புத்தங்களையெல்லாம் எடுத்து தாறுமாறாக வீசியெறிந்தாள். முந்தானையால் முக்காடு போட்டு பெரும்பகுதி முகத்தை மறைத்துக்கொண்டு விடுவிடுவென நடந்தாள்.

வழி நெடுக நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது. யாராவது தெரிந்தவர்கள் கண்ணில் பட்டுவிடுமோ என்ற பயம்தான் அதிகம் மேலோங்கி நின்றது. ரயில் நிலையம் வந்தாள். அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வண்டியொன்றில் டிக்கெட் எடுத்து ஏறி அமர்ந்துவிட்டாள். எங்கே போகிறோம், ஏன் என்பது பற்றி எதுவும் அவளுக்கே தெரியவில்லை. வண்டி ஜங்ஷனைத் தாண்டியபிறகு தலைமுக்காடை எடுத்துவிட்டாள். இனிமேல் யாருக்கும் தெரியாது என்று கொஞ்சம் நிம்மதி தோன்றியது.

புரட்டாசி மாதம். நிலவு தெள்ளிய ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தது. வயல் வரப்புகளின் ஓரம் ரயில் ஓடிக்கொண்டிருந்தது. வயல்களில் பயிர்கள் பசுமை தட்டி வளர்ந்திருந்தன. பனி ஈரத்தில் குளிச்சியுள்ள அவை விறைத்துக்கொண்டிருப்பது போலிருந்தன. வாய்க்கால்களில் சலசலத்து ஓடும் நீர் நிலவொளியில் பளபளத்தது. கறுத்து நின்றிருந்த மரங்களின் சாரிகளுக்கு மேலே சாம்பல் மேகங்கள் ஊர்ந்தன. லட்சுமி வெளியே நோக்கியபடி ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள்.

தான் வளர்ந்ததை நினைத்தாள். கருத்து தெரிந்த நாள் முதல் அப்பாவின் செல்லத்தில் வளர்ந்ததும், பள்ளிக்கூடம் போகாமல் பிடிவாதம் பிடித்து வீட்டிலேயே தங்கியதும், வலுக்கட்டாயமாக தான் மேற்கொண்ட தவ வாழ்க்கையும், அதில் ஓரளவு வெற்றிகொண்ட போதிலும், தான் அதற்கு முற்றிலும் தகுதியில்லாதவளாகி விட்டதை எண்ணித் தலையை உலுப்பிக்கொண்டாள்.

சுந்தரம் கட்டிய தாலி இன்னும் அப்படியே இருக்கிறது. எல்லாப் பெண்களையும் போல அவளும் வயதுக்கு வந்தாள். சீரும் சிறப்புமாக மஞ்சள் நீர் சுற்றினார்கள். எல்லோருக்கும் போலவே அவளுக்குக் கலியாணமும் நடந்தது. அது பாழாகிப் போய்விட்டது. புனிதவதி எப்படி காரைக்கால் அம்மையார் ஆனார்?

திருமணத்தைப் பாழடிக்காமல் இருந்திருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள். எதுவும் விளங்கவில்லை… அம்மைத் தழும்பேறிய பிச்சைக்காரனும், ஆலமரத்தடி இளம்பெண்ணும் ஞாபகத்துக்கு வந்தார்கள். முனியம்மாவும் டிரைவரும்கூட முறை மீறி எப்படியோ சந்தோஷமாயிருந்தார்கள். தானும் அப்படியே இருந்திருக்கலாம். இதனால் என்ன இலாபம்? ஜனங்களுக்கு மத்தியில் பெயரும் புகழுமாய் இருந்தோமே… ஆனால் அப்படியிருந்ததால் தனக்கு என்ன சுகம் கிடைத்தது… அதிலும்தான் முழுமையான வெற்றி கிடைத்ததா… தனக்கு வேண்டாத வழியில் தகாத இச்சையில் மனதை அலைக்கழிய விட்டு, தன் வாழ்வையே பாழ்படுத்திக்கொண்டதாய் நினைத்தாள்.

உதயக்கதிரவன் செம்பிழம்பாய் பார்க்கும்போது அவள் புதுச்சேரியை விட்டு நூறு மைல்களுக்கு அப்பால் தெற்கே போய்விட்டாள். ஒரு சிறு ஸ்டேஷனில் வண்டி நின்றபோது கீழே இறங்கினாள். இறங்கிய பிறகு என்ன செய்வது, எங்கே போவது என்று புரியவில்லை. குறிக்கோள் இல்லாமல் புறப்பட்டு வந்திருந்தாளானாலும் தான் ஏதோ நிம்மதியாய் இருப்பதைப்போல் அவளுக்குத் தோன்றியது.

இத்தனை நாளாக அணு அணுவாய் அனுஷ்டித்து வந்த நியதிகளும், எந்நேரமும் என்ன நேர்ந்துவிடுமோ என்று நெஞ்சைப் பிசைந்து வந்த திகிலும் இப்போது இல்லை. தன்னையறிந்தவர்கள் யாரும் இங்கே இல்லை என்பதை நினைக்கும் போது அவளுக்கு வெகு நிம்மதியாய் இருந்தது.

அங்கிருந்து அவள் போக்குக்கு நடக்க ஆரம்பித்தாள். தண்டவாளம் ஓரமாயிருந்த ஒற்றையடிப்பாதை வழியாகவே நடந்துகொண்டிருந்தாள். சூரியன் தன் செவ்வட்டத்தைக் களைந்து நிர்வாணமாய் மேலெழுந்து வந்தான். வெயில் சுள்ளென்று உறைத்தது. இரவெல்லாம் தூக்கமில்லாததால் கண்கள் எரிச்சலெடுத்தன. தலை கலைந்து கிடந்தது. காலெல்லாம் செம்மண் புழுதி. வியர்த்து கசகசத்தது.

அவள் வெகுதூரம் நடந்து போய்க்கொண்டிருந்தாள். கால்கள் களைத்தன. வயிறு பசித்தது. தொண்டை இறுகி அடைத்தது. சோர்வு மேலிட்டது. போகும் வழியில் சற்று தூரத்தில் ரயில் பாதையோரம் வயல்கள் பசுமை பரப்பி நின்றன. சிறு குடிசை ஒன்றும் சில பூவரச மரங்களும் தெரிந்தன. நேரே அவள் அதை நோக்கி நடந்தாள். மரத்தை நெருங்கியதும், புல் தரையில் பரவியிருந்த நிழலில் சாய்ந்தாள். கண்கள் செருகிக்கொண்டு போயின.

யாரோ அவளைத் தட்டி எழுப்புவது போலிருந்தது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள். கண்கள் காந்தின. எதிரே ஒரு குடியானவப் பெண் இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்தாள். பக்கத்தில் ஒரு ஆளும் இருப்பது தெரிந்தது. கண்களை இமைத்துவிட்டுக்கொண்டு அவர்களை உற்று நோக்கினாள். பஞ்சடைந்த கண்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

‘என்னா ஊரும்மா?’

அந்தப் பெண் கேட்டாள். லட்சுமிக்கு அது தெளிவாய்க் கேட்டது. ஆனால் எந்த ஊரைச் சொல்வது? சங்கடப்பட்டவளாய் பேசாமலிருந்தாள். ‘பாவம் பசி போலருக்குதே…’ என்று அவள் குழந்தையைக் கணவனிடம் கொடுத்துவிட்டு லட்சுமியைத் தூக்கி நிறுத்தினாள். மெல்ல கொட்டகையருகில் அழைத்துப் போய் செம்பிலிருந்த நீரைக் குடிக்க வைத்தாள். தொண்டையில் நீர் இறங்கிய பிறகு லட்சுமிக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது.

‘அடப் பாவமே… ஏந்தே இம்மா நேரமா இங்க இருந்தியே. நீ பாக்கவேயில்லியா… நான் வல்லன்னா இவங்க இன்னும் இங்கியே கெடந்திருக்க வேண்டிதுதான்’ என்றாள்.

‘நான் பாக்கலமே! நான் அந்த கோடில ஏரு ஓட்டிக்னு இருந்தேன். நீ சோறு எடுத்தாந்து குரல் கொடுத்தப்பதான் இந்தப் பக்கமே திரும்பனேன்’ என்றான்.

‘என்ன ஊரோ தெரியல…’ என்று முணுமுணுத்தாள் பெண்.

‘சரி அப்பறம் விசாரிச்சுக்கலாம். எதியாவது கொஞ்சம் சாப்பிடச் சொல்லு. என்னா கொண்டாந்த பழையதா… கூழா…’

‘கூழுதான் தே! ஏது பழையது, ராத்திரியேதான் திட்டமா போயிடுச்சே. பசங்ககூட கூழுதான் குடிச்சுட்டுப் போச்சிங்க.’

‘சரி. எதையாவது குடு. கூழு சாப்பிடுவாங்களோ என்னமோ…’

எல்லாம் லட்சுமிக்கு விவரமாகவே கேட்டன. அவள் லட்சுமியை ‘அம்மா… அம்மா…’ என்று பரிவோடு அழைத்தாள். ‘கையைக் கழுவிக்கோங்க. கொஞ்சூண்டு கூழாவது குடிங்க’ என்று அவளை அழைத்து அமர வைத்தாள் படிமானமாக.

லட்சுமி எழுந்தாள். பல் துலக்கணும் என்று சைகை பண்ணிவிட்டு செம்புநீரால் வாயைக் கொப்பளித்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

‘எதுல குடுக்கப் போற. ரெண்டு எலன்னா பறிக்கட்டுமா?’

‘கரைச்சிட்டதை எப்பிடி எலையல ஊத்த முடியும்?’ என்று சோடதாலையில் கூழை நிரப்பிக்கொடுத்தாள்.

லட்சுமி வாங்கி நிதானமாய்க் குடித்தாள். தொட்டுக்கொள்ள நாரத்தை ஊறுகாய் இருந்தது. அவள் குடித்து முடித்தபிறகு வாலிபனும் குடித்தான். பெண்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டார்கள். ஏதோ அவளுக்கும் கொஞ்சம் புரிந்தது.

சாப்பிட்டு முடித்த பாத்திரங்களையெல்லாம் கிணற்றில் இறங்கி கழுவி எடுத்துக்கொண்டு ‘நான் இவங்களை வூட்டுக்கு இட்டும்போறேன்’ என்று கணவனிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.

‘காட்டும்மா, குழந்தையை நான் தூக்கிக்கிறேன்’ என்று குழந்தையை வாங்கி தன் தோளில் சாத்திக்கொண்டு பின்னால் நடந்தாள் லட்சுமி.

அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாழும் ஊர்ப்பகுதி. தண்டவாளத்தை ஒட்டினாற்போல் கலைசலாய் கிடக்கும் சில குடிசைகள். முன்புறம் வேம்பு, முருங்கை மரத்துக்குப் பக்கத்திலிருக்கும் குடிசையில்தான் அந்தக் குடும்பம் இருந்தது.

குடிசை பனையோலையில் வேயப்பட்டிருந்தது. தரை சுத்தமாக சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது. முருங்கை மரத்துக்குக் கீழ் கிடந்த பெரிய சாலும் தண்ணீர்ப் பானைகளும் பழுப்படைந்து கிடந்தன. பின்னால் தோட்டம் இல்லை. எல்லாப் பழக்கமும் முன்புறமேதான்.

குடிசை போதுமானதாயிருந்தது. பளபளக்கும் பாத்திரங்கள் எதுவும் இல்லை. ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. அழுக்குக் காவியேறிய துணிமணிகளும், கந்தல் பாய்களும், எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய கந்தல் துணி மூட்டைகளும் மட்டுமே கிடந்தன.

லட்சுமியை அழைத்து வந்த பெண் அவளை அன்போடும் மரியாதையோடும் உபசரித்தாள். மதியம் பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகள் வந்தன. ஒன்பது வயதிலும், ஆறு வயதிலும் இரண்டு பையன்களும் நான்கு வயதில் பேர் சேர்க்காத பெண் குழந்தையும் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளிடம் வாஞ்சையோடும் பிரியத்தோடும் பழகினாள் லட்சுமி. அதற்குப் பிறகு அதை விட்டு எங்கேயும் போகவில்லை.

இப்போதும் அவள் அங்கேயேதான் இருக்கிறாள். வேம்படியில் அவளுக்கென்று தனியே ஒரு சிறு குடிசை. குடியானவப் பெண்களுடன் பகல் நேரங்களில் வயல்வெளிகளுக்குப் போய்விடுகிறாள். பொழுதெல்லாம் அவர்களோடு வேலை செய்கிறாள். பொழுது சாய்ந்தபின் வீடு திரும்புகிறாள். பிள்ளைகளையெல்லாம் கூட்டி வைத்து கல்வி போதிக்கிறாள். நேரம் கிடைக்கிறபோது முதியவர்களுக்கும் கற்றுத்தருகிறாள். வேலையில்லாத நாட்களில் புதிதாக வாங்கிய இராட்டையை வைத்து நூற்றுக்கொண்டிருக்கிறாள். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.

அந்தச் சிற்றூர் எந்த ஜில்லாவில் இருக்கிறது என்பதைப் பற்றிக்கூட அவள் தெரிந்துகொள்ள விருப்பப்படவில்லை. புதுச்சேரி எங்கிருக்கிறதோ… ஒரு காலத்தில் அந்த வாழ்வுதான் எப்படியிருந்தது… பழைய நினைவுகள் நெஞ்சத்திலே ஓடி அடங்கும்போது, கழுத்தில் புரளும் தாலியை எடுத்துப் பார்த்துக்கொள்வாள். ஆனால் யாரும் அதைப்பற்றி எதுவும் கேட்டு அவள் துயரைக் கீற விரும்புவதில்லை. மலர்ந்த முகத்தாலும் இன்சொல்லாலும் நற்பண்புகளாலும் அவள் அவ்வூரார்க்கு இணக்கமாகவும் மரியாதைக்குரியவளாகவும் ஆகிப்போனாள்.

1 comment

Kasturi G October 20, 2021 - 6:17 pm

Esoteric story.
well written. Salutations to the Author
Good luck

Comments are closed.