யானை போம் வழியில் வாலும் போம்!

3 comments

எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் புத்தம் வீடு நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன் திடீரென அலைபேசியில் கேட்டார்- ஓர்மை எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று. அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கணிதம் பயிற்றியவர். எல்லா அர்த்தத்திலும் பாண்டிச்சேரியில் எமக்கொரு சரணாலயம். செம்மூதாய் கி.ரா., ஃபிரெஞ்சுப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் சு..வெங்கட சுப்புராய நாயக்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோரது நண்பர். சிறந்த நவீன இலக்கிய வாசகர். நானறிய 5000 புத்தகங்கள் வைத்திருப்பவர். வாசித்துக்கொண்டும், வாங்கிக்கொண்டும், வழங்கிக்கொண்டும் இருப்பவர்.

தமிழாசிரியராக இருந்திருந்தால் என்னிடம் ஓர்மை எனும் சொல்லுக்குப் பொருள் கேட்டிருக்க மாட்டார். இதை நான் வஞ்சப் புகழ்ச்சியாக எழுதவில்லை. எனக்கு ஓர்மை என்ற சொல் தாய்ப்பாலுடன் புத்தியில் புகுந்த சொற்களில் ஒன்று. ஒருவேளை 270 நாட்கள் கருவில் கிடந்தபோதே கேட்டிருக்கலாம். அஃதென்ன அபிமன்யுவுக்கு மாத்திரமே கர்ப்பத்தில் இருந்த காலத்தில் போர் அணிகள் கற்க முடியுமா என்ன? கணபதியாபிள்ளை மகனுக்கு முடியாதா?

இன்றும் எம்மூரில் எல்லோரும் அன்றாடம் பத்துமுறையாவது பயன்படுத்தும் சொல் ஓர்மை.

  1. என்னை ஒங்களுக்கு ஓர்மை இல்லையா? நல்ல சீராப் போச்சு!”
  2. ஒசரவௌ உமையம்மை வீட்டுக் கல்யாணத்திலே பாத்தம்லா! ஓர்மை இல்லையா?”
  3. ஓர்மை இருக்கா, தாழக்குடி பரதேசியா பிள்ளை வீட்டுக் கல்யாணத்திலே பக்கத்திலே உக்காந்து சாப்பிட்டது? நாரங்கா பச்சடி ரெண்டாமது கேட்டு வாங்கித் தின்னேளே!”
  4. எலே! இன்னைக்கு பொன்னம்மைக்கு மகளுக்கு சடங்குல்லா போகாண்டாமா? ஓர்மை இல்லாம இப்பிடி சூம்படஞ்சு கெடந்து உறங்குகே!”
  5. முருகா! தெக்குத்தெருப் பக்கம் போனேன்னா மூக்கம்மை வீட்டுல எனக்கு நாளைக்கு அம்பது பப்படம் வேணும்னு சொல்லீரு என்னா? ஓர்மையாட்டுச் சொல்லு…. நாளைக்கு ஒடுக்கத்திய வெள்ளி… சாப்பிடச்சில பப்படம் இல்லேன்னா ஒனக்கு அருமப் பெரியப்பா அறுத்துக் கிழிச்சிருவாருப்போ…
  6. போன புதனாழ்ச்ச அஞ்சு ரூவா வாங்கீட்டுப் போனது ஓர்மை இல்லையா? இப்பம் திரும்பயும் வந்து காசுகேட்டு நிக்கே?
  7. எலே! ஒரு காரியம் சொல்லி அனுப்புனா ஓர்மை இருக்குமா இருக்காதா? மெனக்கெட்டு மூணு மட்டம் சொன்னேன் கோட்டயம் சர்க்கரைன்னு கேட்டு வாங்குன்னு… நீ என்னன்னா மண்டை வெல்லம் வாங்கீட்டு வந்து நிக்கே!”

மூன்று மட்டம் என்றால் இங்கு மூன்று முறை, மூன்று தரம், மூன்று தடவை என்று பொருள். மட்டமான எழுத்து என்று இழிவுப்பொருளில் சொல்வதல்ல. மட்டமாகத் தலையசைத்து வைத்தேன் என்றால் சரியென்றும் இல்லாமல் தவறென்றும் இல்லாமல் மையமாகத் தலையசைத்தேன் என்று பொருள். வீடு கட்டும்போது, தரைக்குத் தளம் போடும்போது, “ஏ! மட்டம் பாத்துக்கோ!” என்பார் பெரிய கொத்தனார். இங்கு மட்டம் என்றால் நிரப்பு, Level என்று பொருள். இரசமட்டம் எனும் சொல் கருத்தில் கொள்க!

மொழி என்பது இதுதான் ஐயா! அது பாடப் புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டிருப்பவை மட்டுமே அல்ல அல்லது ஆசிரியர்கள் உரைத்த பொருள் மாத்திரமே அல்ல.

ஏதாவது முக்கியமான காரியம் மறந்து போனால், “அப்படி ஒனக்கு என்ன ஓர்மைக்கேடு?” என்பார்கள்.

ஒருவனை விமர்சனமாக, “அவனொரு ஓர்மை கெட்டவன்லா!” என்பார்கள். “ஒனக்குச் சொன்னது ஒன்னும் ஓர்மையிலே நிக்காது!” என்பார்கள்.

எனவே, இப்போது உம் ஓர்மையில் நாம் விதைக்க நினைத்த சொல் ஓர்மை. 2020-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இருமுறை போனேன். மும்பையில் இருந்து கோவைக்கு வாழ வந்த கடந்த முப்பதாண்டுகளில் இரண்டு ஆண்டுகள் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் போயிருக்கிறேன். சில ஆண்டுகளில் இருமுறைகூட. இது நாய் சந்தைக்குப் போவது போல் அல்ல. புத்தகங்கள் வாங்க. நான் அதிகமும் முனைந்து புத்தகங்கள் தேடும் அரங்குகள் சாகித்ய அகாதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட், தஞ்சாவூர் சரசுவதி மகால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஏஷியன் எஜுகேஷனல் சர்வீசஸ் முதலானவை. அதற்காகப் பிற நவீன இலக்கியப் புத்தகங்கள் கிடைக்கும் அரங்குகளுக்குப் போவதில்லை என்பதல்ல. காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், சந்தியா பதிப்பகம், யாவரும் பதிப்பகம், நற்றிணை, டிஸ்கவரி புக் பேலஸ், NCBH, ..சி. நூலகம், விடியல் பதிப்பகம், பாரதி புத்தக நிலையம், கிழக்குப் பதிப்பகம், எதிர், கருப்புப் பிரதிகள், புலம், வம்சி, உமா பதிப்பகம், அகநி முதலியன. சில பதிப்பகங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு தனிப்பட்ட காழ்ப்பு, பகை காரணம் இல்லை. கோவை விஜயா பதிப்பகம் கிழமைக்கு நான்கு முறை உள்ளூரில் போகும் இடம். சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருந்தால் அரங்குகளில் கறங்காத நேரம் தவிர்த்து, தமிழினி அரங்கில் அமர்ந்திருப்பேன்.

இந்த ஆண்டில் பழநியப்பா பிரதர்ஸ் நோக்கி நடந்தபோது இளைஞர் ஒருவர் வழிமறித்து வணக்கம் சொன்னார். அவரது பெரியம்மையும் உடனிருந்தார். சந்தியா பதிப்பகத்தில் அவரது கவிதை நூலொன்று வெளியிடப்பட இருப்பதாகவும் நான் அரங்கினுள் இருப்பதறிந்து தமிழினியில் போய்த் தேடியதாகவும் சொன்னார். புத்தகக் கண்காட்சிக்குப் போவதில் இஃதோர் போனஸ். சில புத்தகங்கள் வெளியிடலாம். அந்தப் புத்தகங்கள் விலையில்லாமல் கிடைக்கும். குறுக்கு வெட்டிய நண்பரின் இயற்பெயர் அறியேன். அதற்குமுன் பார்த்ததும் இல்லை. சாமான்யன் என்ற பெயரில் எழுதுகிறவர். அன்று நான் வெளியிட்ட புத்தகம் – கவிதைத் தொகுப்பு – மயிர் வெட்டி. நண்பர்கள் பவா. செல்லத்துரை, ஷைலஜா, பாமரன், சந்தியா பதிப்பக நடராஜன் முதலானோர் இருந்தோம். ஓர்மையுடன் இவ்வளவும் எழுதக் காரணம், அந்தத் தொகுப்பைப் பின்னால் நான் வாசித்தபோது, எனக்குப் பிடித்த கவிதை ஒன்று இங்கு மேற்கோள் சொல்லப் பொருத்தமாக இருக்கும் என்பதால்.

கவிதைத் தொகுப்பின் தலைப்பு மயிர் வெட்டி. கவிஞரின் பெயர் சாமான்யன். நான் சொல்லப்புகும் கவிதையின் தலைப்பு ‘கனவான்களே’. கவிதை கீழ்வருமாறு.

நான் சொற்களை விதைப்பவன் அல்லன்

மேலும் விளைவிப்பவனும் அல்லன்

கனவான்களே

எனக்கு சொற்களை செரைக்க மட்டுமே தெரியும்

எனவே நான் வந்துசேரும் இடமானது, ஓர்மை எனும் சொல்லை நான் விதைக்கவில்லை, விளைவிப்பவன் இல்லை, சமூகப் புழக்கத்தில் கிடப்பதை எடுத்துக் கழுவித் துடைத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

எல்லாம் சரி! ஓர்மை என்றால் என்ன என்று – உங்கள் காலைப் பற்றிப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் – தமிழ்ப் பேராசிரியர்களிடம் வினவி விடாதீர்கள்! அவர்கள் உடனே ஓர்மை வட்டார வழக்குச் சொல் என்றும் வடசேரி கனக மூலம் சந்தையில் கூறுகட்டி விற்கிறார்கள் என்றும் சொல்லி வைப்பார்கள் துணிந்து. அல்லது மலையாளம் என்பார்கள். மலையாளத்தில் கண்டந்தடிக்கு முண்டந்தடி என்றொரு வழக்காறு உண்டு. அப்படி என்றால் திண்டுக்கு முண்டு என்று பொருள்.

ஓர்மை சொல்ல நயமுள்ள, கவிதைகளில் புனைய இசைவுள்ள சொல். கூர்மை, சீர்மை என்பன போல. ஒன்றை ஒருமை என்று குறிப்பது போல, ஓர்மை என்றும் குறிக்கலாம்தானே- அதிலென்ன சிறப்பு எனக் கொளல் ஆகா. எவரும் ஒரு மொழியறிஞர் இந்தச் சொல்லைத் தாம் கண்டதும் கேட்டதும் இல்லை என்பதால் திரிசொல், திசைச்சொல், வடசொல், அயற்சொல் என்று கூறி நம்மை டாஸ்மாக் கடைக்கு ஆற்றுப்படுத்திவிடவும் கூடும்.

எதற்கும் இருக்கட்டும் என்றெண்ணி, பேராசிரியர் அருளி அவர்களின் அயற்சொல் அகராதியும் பார்த்தேன். அதில் ஓர்மை எனும் சொல் இல்லை. எனவே அது உருது, பாரசீகம், சீனம், யப்பானியம், சிங்களம், அரபி, இலத்தீன், கிரேக்கம், எபிரேய மொழிச் சொல் இல்லை எனத் தேர்ந்தேன்.

சென்னைப் பல்கலைக்கழகம் 1922-ல் வெளியிட்ட Tamil Lexicon ஏறத்தாழ ஒன்றேகால் இலட்சம் சொற்களைக் கொண்டது. ஏழு பாகங்கள் கொண்ட இப்பேரகராதியின் 627-ம் பக்கத்தில் எமக்கு ஓர்மை எனும் சொல் கிட்டியது. அகராதி தரும் பொருளை அப்படியே கீழே தருகிறேன்.

ஓர்மை – 1. Unity, ஒற்றுமை

2. Fortitude, Bravery, Intrepidity, துணிவு

3. Pomp, Parade, As of a Festival, ஆடம்பரம்.

ஆயாசமாக இருந்தது எனக்கு. ஓர்மை எனும் சொல்லுக்கு நாம் கருதி வந்த பொருள் இல்லை. பேரகராதி தந்துள்ள பொருள்கள் ஒற்றுமை, துணிவு, ஆடம்பரம் எனும் எந்தப் பொருளும் நாங்கள் அன்று பயன்படுத்திய, இன்று பயன்படுத்துகிற, நாளையும் பயன்படுத்தப் போகிற பொருளுக்குப் பொருத்தமாக இல்லை. 1920-களில் பத்து இலட்சம் மக்கள் அன்றாடம் பயன்படுத்திய சொல். பேரகராதியின் விடுபடல்களில் ஒன்றாக இருக்கலாமே அல்லாது, பேரகராதி தொகுக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு ஓர்மை எனும் சொல் நாங்கள் புழங்கிய பொருளில் ஆளப்படத் துவங்கப்பட்டிருக்காது என்பதில் மனம் பற்றி நின்றது.

மலையாளத்தில் ஒரு சொலவம் உண்டு, பக்ஷியைப் பிடிக்கான் மரம் முறிக்கும் போல என்று. அர்த்தம், பட்சியைப் பிடிக்க மரத்தை வெட்டுவார் போலும் என்பதாகும். ஆக லெக்சிகன் கைகொடுக்கவில்லை.

ஓர்மம் என்றொரு சொல்லுண்டு ஆங்கே பதிவில். Fortutude, Courage, Bravery, மனோதிடம் என்று பொருள் தரப்பட்டுள்ளது. ஓர்மித்தல் என்றொரு சொல்லும் காணக் கிடைத்தது. To be courageous, Daring, Brave, Valiant, Adventurous, மனம் திடப்படுதல் என்று பொருளும் தரப்பட்டுள்ளது.

ஆக என் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. தமிழ் அறிஞர்களை ஓர்த்தால் பாம்பின் வாய்த் தேரை போலவும் இருந்தது. மறுபடியும் மலையாளப் பழமொழியே ஓர்மை வந்தது, காக்கை குளிச்சால் கொக்காகீல்லா என்று. பொருளாவது, காகம் குளித்தாலும் கொக்கு ஆகாது என்பது. நமது கேள்வி, காகம் எதற்குக் கொக்காக வேண்டும்? காகம் காக்கையாகவே இருந்தால் என்ன கேடு? இந்தி கற்றால்தான் இந்தியனா? தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளம், குஜராத்தி, ராஜஸ்தானி, பிகாரி என 24 மொழிகள் மட்டுமே பேச, படிக்க, எழுதத் தெரிந்தால் இந்தியன் இல்லையா?

பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்த எழுத்தாளரும் தேர்ந்த வாசகரும் கலை இரசிகருமான வே.நாகராஜன் என்ற வேனா ஆதியில் கும்பகோணத்தில் தி.ஜானகிராமனின் தெருவாசி. நண்பர். சிறுகதை ஆசிரியர். எனது குருக்கன்மாரில் ஒருவர். அவர் என்னை அடிக்கடி, “டேய் சுப்பிரமணியம்! You are a die hard species” என்பார். தமிழில் சொன்னால், அடித்துக் கொன்றாலும் சாகாத உயிரினம்.

பேரகராதியுடன் எனது தேடலை ஒப்புக்கொடுக்க நான் தயாராக இல்லை. எனவே, ஓர்மை எனும் சொல்லுக்கு எம்மனோர் உத்தேசித்த பொருளை ஈழம் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றியது.

மானிப்பாய் அகராதி என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாண அகராதி இருக்கிறது என்னிடம். சந்திரசேகரப் பண்டிதரும் சரவணமுத்துப் பிள்ளையும் தொகுத்தது. முதற்பதிப்பு 1842-ல் வெளியானது. ஈழத்தின் கொடை. மொத்தம் 58,500 சொற்களின் பதிவு. அவற்றுள் தேடினேன் ஓர்மை எனும் சொல்லை. ஓர்மை எனும் சொல் தரப்பட்டிருந்தது. அவன் தம்பி அங்கதன் என்னுமாப்போல, துணிவு என்ற பொருள் மட்டுமே இருந்தது. என்றாலும் தொடர்புடைய வேறு சில சொற்கள் இருந்தன.

ஓர்தல் – ஆராய்தல், தெளிதல்

ஓர்வு – ஆடூஉக்குணம் நான்கினுள் ஒன்று. (பண்டு ஆடூஉ என்றால் ஆண் என்றும் மகடூஉ என்றால் பெண் என்றும் புழக்கத்தில் இருந்தன. பேராசிரியர் தாயம்மாள் அறவாணனின் சிறப்பான 600 பக்க நூலின் தலைப்பு ‘மகடூஉ முன்னிலை’. சங்க இலக்கியம் பேணிப் பாதுகாத்த பெண்கள் பற்றிய நூல்) ஆடூஉக்குணம் நான்கு என்பன ஓர்மம், கருமம் முடிக்கும் துணிவு, பொதுக்கட்டுதல், பொறுமை என்பன.

சரி, ஓர்மம் என்றால் என்ன? யாழ்ப்பாண அகராதி சொல்கிறது.

ஓர்மம் – மனத்திடன்

ஓர்மிப்பு – மனத்திடன்

ஓர்வு – ஆராய்வு.

நம் கதை, தொட்டும் பட்டினி எனவாயிற்று.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருஞ்சொல் அகராதி ஒன்றைத் தொகுத்து வருகிறது. முதன்மைப் பதிப்பாசிரியராகப் பேராசிரியர் தா.வே.வீராசாமி இருந்தார். அவரை 1980 வாக்கில் மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்து இரண்டு நாட்கள் உரையாடி இருக்கிறேன். அந்த அறிவு அனுபவத்தை விரிவாக இப்போது கூறப் புகவில்லை.

பெருஞ்சொல் அகராதி, 1988 முதல் எனக்குத் தெரிந்து 7 தொகுதிகள் வந்துள்ளன. வில் தொடங்கி ஙொ வரை. அவற்றுள்ளும் மூன்றாம் தொகுதியை நான் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். தொகுதிகள் 8, 9, 10 முதலானவை வந்துவிட்டனவா எனத் தெரியவில்லை. அரசுகள் தமிழ் வளர்ப்பது கையிலே காசு வாயிலே தமிழ் எனும் தோதில். தற்சமயம் துணைவேந்தர்களின் சந்தை மதிப்பு என்ன என்று விசாரிக்க வேண்டும். பேராசிரியப் பணிக்கான சந்தை மதிப்பு அறுபது இலக்கம் என்மனார் புலவ!

பெருஞ்சொல் அகராதியின் பதிவுகள் பின்வருமாறு.

ஓர்மக்காரன் – துணிவு மிக்கவன்

ஓர்மம் – திடம்

ஓர்மித்தல் – மனத் திடப்படுதல்

ஓர்மிப்பு – திடம்

ஓர்மை – ஒற்றுமை, துணிவு, ஆடம்பரம், நினைப்பு

காக்க காக்க கனகவேல் காக்க என்றிருந்தது எனக்கு. நான்காவது பொருளாகவேனும் ஓர்மை எனும் சொல்லுக்கு நினைப்பு என்ற பொருள் நம்மை ஆசுவாசப்படுத்தியது. நினைப்பு என்றால் ஞாபகம், நினைவு. அஃதே எமது ஓர்மைக்கான பொருள். ஓர்மை என்ற சொல்லின் பொருளாக நினைப்பு என்று கொண்டதற்கு ஆதாரமாக இராட்லர் அகராதி (1834-1837) காட்டப்பட்டுள்ளது. நானதைக் கண்டதும் இல்லை, ஒம்மாண அம்மாச்சா இதற்குமுன் கேட்டதும் இல்லை.

பெருவெள்ளத்தில் தத்தளித்து இழுக்கப்பட்டு ஆற்றோடு மிதந்து போகிறவனுக்கு ஆற்றங்கரையோரத்துக் கோரைப்புல் கொத்தாகக் கைக்குக் கிட்டியது போலிருந்தது. ஆகா! ஓர்மை எனும் சொல், வட்டார வழக்கு எனும் வசையில் இருந்து விடுபட்ட ஆனந்தம். ஆக அறுதியிட்டு இப்போது என்னால் நின்று கொடுக்க இயலும். ஓர்மை என்றால் நினைவு, ஞாபகம். நெய்யேறியால் அப்பம் கேடு வரீல்லா என்பார் மலையாளத்தில். அதாவது நெய் சற்று கூடிப்போனாலும் அப்பத்துக்கு ஒரு கேடும் இல்லை என்பது பொருள். எனவே ஓர்மை என்ற சொல்லுக்கு ஒற்றுமை, துணிவு, ஆடம்பரம் எனும் அர்த்தங்கள் தாண்டி நினைவு என்ற பொருளும் சேர்ந்தால் மொழிக்குள் எதுவும் கெட்டுப் போகாது. அப்பம் கேடு வராது!

எனக்குப் பெருமிதமாக இருக்கிறது, சில நூறு ஆண்டுகளாக ஓர்மை எனும் சொல்லை நினைப்பு, ஞாபகம் அல்லது நியாபகம் எனும் பொருளில் கையாண்டு வருகிறோம் என்பதில். கீழடி, மண்ணடி, வேப்பமூடு, புங்கமூடு என்று தோண்டுகிறவர்கள் மொழிக்குள் ஒரு பிரதேசத்தில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் சொற்களை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கிறோமே என்பதில் வருத்தமும் உண்டு.

நூறாண்டுகளுக்கு முன்பு என் அப்பாவின் வகுப்புத் தோழர் மா.இளைய பெருமாள். அஃதாவது தாழக்குடி மாணிக்கவாசகம் பிள்ளை மகன் இளைய பெருமாள். கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். என் அப்பா ஐந்தாம் வகுப்பில் தோற்று வடக்கு மலைக்குப் புல்லறுக்கவும், விறகு சுமக்கவும், மரச்சீனி வாங்கவும், மாடு மேய்க்கவும் போய் ஓர்நேர் சம்சாரியாக உயர்வு பெற்றவர். மா. இளைய பெருமாள் சிலப்பதிகாரத்தை மலையாளத்தில் பெயர்த்தவர். அவரது அம்மா இறந்து போக, மாணிக்கவாசகம் பிள்ளை இரண்டாம் தாரம் கட்டி அவரின் இரு மகன்களும் என்னுடன் தாழக்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 9, 10, 11-ல் வாசித்தனர் என்பது உபரிச் செய்தி.

பேராசிரியர் மா. இளையபெருமாள் பன்னரிய பலபாடு பட்டுத் தொகுத்து வைத்திருந்த மலையாளம் – தமிழ் அகராதி அவர் இறந்து பல ஆண்டுகள் சென்றும் வெளியாகவில்லை. அவர் சேகரித்த சொற்களை உள்ளடக்கி, மேலும் தொகுத்து, மலையாளம் – தமிழ் அகராதி ஒன்று கேரளப் பல்கலைக்கழக வெளியீடாக 2016-ம் ஆண்டில் முதற்பதிப்பு கண்டது. அதன் படியொன்று என்னிடம் உண்டு.

நான் மலையாளம் பேசுவேன், பேசினால் புரிந்துகொள்வேன். ஆனால் எழுத வாசிக்கத் தெரியாது. சினிமாப் பெயர், கடைப் பெயர், ஊர்ப்பெயர் என எழுத்துக் கூட்டி வாசிப்பேன். என் மனைவி திருவனந்தபுரத்துக்காரி. பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைக்கும், மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளைக்கும், கேரளப் பல்கலைக்கழக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த விநாயகப் பெருமாளுக்கும், கேரளத்துத் தமிழ்க் கவிஞர் சண்முக சுப்பையாவுக்கும் உறவினர். கவிஞர் சண்முக சுப்பையா நகுலன், காசியபன், ஆ.மாதவன், நீல.பத்மநாபன் ஆகியோரின் நண்பர். மேலும் என் மனைவி புத்தம் வீடு, அநாதை, மானீ முதலாய நாவல்களை எழுதிய மூத்த தமிழ் எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசனின் மாணவி. திருவனந்தபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ஹெப்சிபா ஜேசுதாசன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். பேராசிரியர் ஜேசுதாசன் கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர். அவருடைய மாணவர்களே கவிஞர் ராஜமார்த்தாண்டன், திறனாய்வாளர் வேதசகாயகுமார் ஆகியோர். அவர் காலத்தில்தான், தலைகீழ் விகிதங்கள் எழுதி முடித்த கையோடு, 1978-ல் அந்தக் கல்லூரித் தமிழ்த்துறை எனக்கொரு வரவேற்பு அளித்தது. அன்று என்னை வாழ்த்த வந்திருந்தவர்கள் நகுலன், ஆ.மாதவன், நீல.பத்மநாபன், ஆங்கிலத்துறைப் பேராசிரியரும் கவிஞருமான ஐயப்ப பணிக்கர்.

என் மனைவியிடம் மலையாளம் – தமிழ் அகராதியில் ஓர்மை எனும் சொல்லைத் தேடச் சொன்னேன்.

செந்தமிழ் என்பதே கொடு மலையாளம். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, கொடு மலையாளக் குடியிருப்புடையேன் என்பார். அவர் வாழ்ந்திருந்தது ஆலப்புழை எனும் ஊரில். இன்றைய மலையாளச் சொற்கள் பெரும்பாலும் பழந்தமிழ்ச் சொற்களே! எடுத்துக்காட்டு அங்காடி, அங்கணம், வாவு, களிறு, உறக்கம், சோறு என்மனார் புலவ. தமிழின் சில சொற்களை மலையாளத்தில் தேடிப் போவதென்பது தப்புக்காய் பொறுக்குவதல்ல. தமிழின் ஆதி வேர்களை ஹரப்பா, மொகஞ்சதாரோ என்று தேடும்போது அண்டை மலைப்பகுதியில் தேட மாட்டோமா?

மலையாளம் – தமிழ் அகராதி 2016-ல் முதற்பதிப்பு கண்டது. கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறை 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவது. இத்துறையின் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள் மு.இராகவையங்கார் (1945-1951), எஸ்.வையாபுரிப்பிள்ளை (1951-1954), வ.அய்.சுப்பிரமணியம் (1954-1966), மா.இளையபெருமாள் (1974-1984), க.சுப்பிரமணியம் (1984-1988), கி.நாச்சிமுத்து போன்றவர்கள்.

பேராசிரியர் க.சுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில் நான் கேரளப் பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்பட்டேன். கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகத்துக்கும். தமிழ்நாட்டில் பாரதியார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் தவிர மற்றெவரும் நம்மைப் பொருட்படுத்தியதில்லை. சில பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்களுக்கு நாம் வேளாளனாகப் பிறந்ததில் உவப்பில்லை. மலையாளப் பழமொழி சொல்வது போல, பூச்சைக்கு எந்து காரியம் பொன்னுருக்குந்த எடத்து? என்று எண்ணியிருப்பார்கள் போலும். பொருள், பொன் உருக்கும் இடத்தில் பூனைக்கு என்ன வேலை? என்பது.

வேலி தாண்டி மேய்ந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். மறுபடியும் மலையாளம் – தமிழ் அகராதிக்குத் திரும்பினால், அது ஏறத்தாழ 22,000 சொற்களைக் கொண்டது. மலையாளம் – தமிழ் அகராதியில் ஓர்மை எனும் சொல் பதிவில் இருந்தது. பேருவகை எய்தியது உள்ளம். ஓர்மை எனும் தமிழ்ச்சொல் மலையாளத்தில் ஓர்ம்ம என்று உச்சரிக்கப்படும். அவர்களுக்குப் பேச்சு மொழியே எழுத்து மொழியும்.

ஓர்ம்ம எனும் சொல்லுக்குத் தமிழில் தரப்பட்டுள்ள பொருள் – நினைவு, எண்ணம், சிந்தனை. ஓர்ம்மக் குறிப்பு என்றொரு சொல் பட்டியலிடப்பட்டுள்ளது. பொருள் – நினைவுக்குறிப்பு, நாட்குறிப்பு. ஓர்ம்மைக்கு வேண்டி என்ற சொல்லின் பொருள் – ஞாபகத்திற்காக, நினைவுக்காக. ஓர்மக் கேடு என்றால் மறதி, நினைவின்மை. அஃதென்ன ஓர்மக்கேடு என்று கேட்டால், அதுதான் ஓர்மைக்கேடு. கதி – கதிகேடு, சுகம் – சுகக்கேடு, இதம் – இதக்கேடு, பதம் – பதக்கேடு என்பன சில எடுத்துக்காட்டுகள்.

மலையாளத்தில் பரத்சந்திரன் ஐ.பி.எஸ். என்றொரு திரைப்படம். சுரேஷ்கோபி நாயகனாக அபிநயித்தது. அரசியல் – காவல்துறை – குற்றம் சார்ந்த திரில்லர் படம். நெடுங்காலம் கொட்டகைகளில் ஓடியது. அதில் சுரேஷ்கோபி பேசிய வசனம் மிகவும் பிரசித்தம்.

ஓர்ம்மயுண்டோ ஈ முகம்? என்பது வசனம். இந்த முகம் நினைவில் உண்டா என்பது பொருள். நண்பரை, உறவினரை காணாது இருந்து கண்டபோது அந்த வசனத்தை சிரிப்புடன் பேசுவார்கள், ஓர்ம்மயுண்டோ ஈ முகம்? என்று.

எனது நண்பர், நான்காண்டுகள் முன்பு 58 வயதில் இறந்தவர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கோவைக்கிளையின் மாத்ரு பூமி மலையாள நாளிதழ் ஆசிரியர், விகடகவி விஜயகுமார் குன்னிசேரி, என்னைப் பார்த்தவுடன் கேட்பார், ஓர்ம்மயுண்டோ ஈ முகம்? என்று.

எனவே எனக்கும் தீர்க்கமாய் போத்தியமாயிற்று, ஓர்மை எனும் பழந்தமிழ்ச்சொல், சகலவிதமான உரிமையுடனும் ஞாபகம், நினைவு என்ற பொருளில் இன்னும் மலையாளத்தில் செல்வாக்குடன் வாழ்கிறது என்பது.

ஓர்ம்ம உண்டெங்கில் உலக்க மேல் கிடக்காம் என்பதோர் மலையாளப் பழஞ்சொல். உலக்கை என்றால் அறிவீர்கள்தானே! தான் படுத்திருப்பது உலக்கை மேல் என்ற நினைப்பு இருக்குமானால் அதன் மேலும் படுக்கலாம் என்பது பொருள். படுத்திருப்பது உலக்கை மேல் என்ற ஓர்மை இருக்குமானால் அதன்மீதுகூட படுக்கலாம். நாம் செய்யும் காரியம் இன்னது என்பதை நினைப்பில் கொள்வோமானால், எந்தக் காரியமும் செய்யத் துணியலாம்.

தமிழின் சில சொற்களைப் பழந்தமிழ் நூல்களில் தேடுவது எனக்கு எப்போதும் உற்சாகமான வேலை. தொலைக்காட்சிப் பெட்டிகளில் சினிமா, சீரியல், பட்டிமன்றங்கள், உரையரங்கங்கள் பார்த்து நான் சமயம் களைவதில்லை.

ஓர்மை, ஓர்ப்பு, ஓர்ந்து, ஓர்த்து, ஓராது போன்ற சொற்களைத் தேடியபோது, நாலடியாரில் எந்தத் தடயமும் இல்லை. திருவாசகத்தின் முதற்பகுதி சிவபுராணம். அதில், ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே என்றொரு வரி வரும். சிவபுராணத்தின் 95 அடிகளில் இதுவும் ஒன்று. சட்டப் பேராசிரியர், வக்கீல் பிள்ளை என்றழைக்கப்பட்ட கா.சு.பிள்ளை உரை எழுதி இருக்கிறார். ஆய்ந்தறியாதார் உள்ளத்தில் இருந்தாலும் அவர்கட்குப் புலனாகாத சோதியே! என்று. நினைத்தும் பாராதவர் உள்ளத்தில் இருந்தாலும் அவர்கட்குப் புலனாகாத சோதியே என்று நான் உரை எழுதினாலும் தகும்தானே!

மெய்யுணர்தல் அதிகாரத்துக் குறள்,

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா

பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு

என்கிறது. சிந்தித்துத் தெளிந்து மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்துகொண்டால், உறுதியாக மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராய வேண்டியதில்லை என்பது பேராசிரியர் சிற்பி உரை. இதில் சிந்தித்து என்பதனை நினைத்துப் பார்த்து, எண்ணிப் பார்த்து என்று கொண்டாலும் குறையொன்றும் இல்லை நிறைமூர்த்தி கண்ணா!

மலையாளத்தில் சர்வ சாதாரணமாகக் கேட்பார்கள் – எடோ! தான் என்னை ஓர்த்தெங்கிலும் அதைச் செய்துகூடே! என்று. அடேய்! நீ என்னை நினைத்தாவது அதைச் செய்யக்கூடாதா? என்பது பொருள். ஞான் பலப்போழும் தன்னை ஓர்த்திற்றுண்டு என்பார்கள். நான் பல பொழுதும் உன்னை நினைப்பதுண்டு என்பது பொருள்.

செங்கோன்மை அதிகாரத்துக் குறள் –

‘ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை

என்று பேசும். குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, இன்னார் இனியார் என்று பாராது, ஒரு பக்கம் சாராது, தண்டனை வழங்குவதே நீதி எனப்படும் என்பது கவிஞர் சிற்பி உரை.

இதில் ஓர்ந்து எனும் சொல்லுக்கு ஆராய்ந்து எனப் பொருள் பெறப்படும். ஆராய்ந்து என்பதற்குப் பதிலாக எண்ணி, நினைத்து, ஞாபகப்படுத்தி எனப் பயன்படுத்திப் பாருங்கள்.

ஓர்ந்து என்பதை ஆராய்ந்து என்றும் ஓர்த்து என்பதை சிந்தித்து என்றும் பொருள் கொள்வதை நாம் மறுக்கவில்லை. ஆனால் ஓர்மை என்ற சொல்லை ஆதாரமாகக் கொண்ட இச்சொற்களுக்கு சிந்தித்து, நினைத்து, எண்ணி எனப் பொருள் கொண்டாலும் தவறில்லை.

அகநானூற்றில் ஈழத்துப் பூதன் தேவனார் பாடல் வரி, பாங்கர்ப் பருவாய்ப் பல்லி பாடு ஓர்ந்து என்று பேசும். பக்கத்தில் கேட்ட பல்லியின் ஓசையை நினைத்து என்று பொருள் சொல்லலாம்.

ஓர்த்தது என்றொரு சொல் கிடக்கிறது கலித்தொகையில். மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார் ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து வேட்டதே கண்டாய் கனா என்பார். ஓர்த்தது என்றால் நினைத்தது என்று பொருள் சொல்கிறார்கள். வேட்டது என்றால் விரும்பியது என்று பொருள். நினைத்ததை இசைக்கும் பறை போல, நின் நெஞ்சத்தில் விரும்பியதைக் கனவாகக் கண்டாய் என்பது பொருள்.

ஆதலால் விருப்பு, வெறுப்பு இன்றி யோசித்துப் பார்க்கும் வேளையில், ஓர்மை என்ற சொல்லுக்கு 1) ஒற்றுமை, 2) துணிவு, 3) ஆடம்பரம், 4) நினைப்பு என்று பொருள் கொளல் இயல்பானது என்று புரிகிறது.

அவற்றுள் ஓர்மைக்கு நினைவு, ஞாபகம் எனும் பொருளை கன்னியாகுமரி மாவட்டமும், கேரளமும் தங்குதடையின்றிப் பயன்படுத்துகிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆன போகுந்த வழியே வாலும் போகும் என்பார் மலையாளத்தில். யானை போகின்ற வழியில் அதன் வாலும் போகும் என்பது பொருள். தமிழ் போகும் வழியில் நாமும் போவோம்!

3 comments

அகிலா February 28, 2021 - 8:57 am

அருமையான உரை. ஒரு சொல்லுக்கு, அதுவும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் அதிகம் அறியப்படாத ஒரு சொல்லுக்கு, அது மனிதர்களுடன் கொண்டிருக்கும் வளமையான உறவை, ஒரு வரலாற்றையே சுட்டிக்காட்டிவிட்டீர்கள். இனி இது ஓர்மையில் இருக்கும்..

அசோகன் இ February 28, 2021 - 9:56 am

அருமை நிதர்சனம் நன்று அண்ணாச்சி வணக்கம்

PARTHIBAN M February 28, 2021 - 11:07 am

ஆகா..ஒரு சொல்லுக்கு பல மேற்கோள்கள் தங்களால் மட்டுமே இயலும்..❤️.அதிலும் சங்க இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் உங்களின் ஓர்மை ஆற்றலுக்கு கட்டியம் பாடுகிறது.❤️.Die hard species என்பது சாலப்பொருத்தம்.❤️…2014.ல் வெளிவந்த மலையாளத் திரைப்படம்” ஓர்மை உண்டோ ஈ முகம்”..வினீத் சீனிவாசன் நடித்தது..கதையின் நாயகிக்கு short term memory loss…❤️….வளர்க மூவா தமிழாய்.

Comments are closed.