தோடுடையாள்

3 comments

“அப்பா, அப்பா, நீங்களும் நம்ம கோயில் நம்பூதிரி மாதி பூணூல் போட்ருக்கியோ, ஆனா, ஏன் கோயில்ல பூஜைல்லாம் பண்ண மாட்டுக்கியோ?” அய்யண்ணனின் தோள் மீது சாய்ந்தவாறு கேட்டாள் சுபத்திரை. அவளது கருங்கூந்தல் நீண்டு பூச்சூடிய பின்னலாக ஆடியாடி அவரது பெரிய தொப்பையின் மீது விழுவதும் போவதுமாக இருந்தது. ஒரு கணம் கண்மூடி அவளது மெல்லிய கைகளைத் தன் கழுத்தோடு இழுத்துப் பிடித்து முத்தமிட்டார் அய்யண்ணன்.

“அந்த பூணூல் வேற, இது வேற மக்ளே. அப்பால்லாம் பூஜ பண்ண முடியாது பாத்துக்கோ. சாமிக்கு மத்த எல்லாமே அப்பாதான செய்யேன், பின்ன என்னா?” என்று சொல்லியவாறு தன் மார்பில் கைவைத்து தொட்டுக் கும்பிட்டார். 

“அது ஏம்ப்பா? நீங்க தேவாரம்லாம் காணாமச் சொல்லுவியோல்லா?”

“அது சரிதாம் மக்ளே, ஆனா, ம்ம்… எப்பிடிச் சொல்ல? அது…” என்று ஒரு கணம் யோசித்தார். சட்டென அவரை விட்டு விலகி நின்றாள் சுபத்திரை. திரும்பிப் பார்த்து அவளை நோக்கிக் கையை நீட்டிய அய்யண்ணன் வெடுக்கென கையை மடக்கித் திரும்பி உட்கார்ந்தார். புறவாசலில் இருந்து ஈரக் கூந்தலை உலர்த்தியவாறு வந்த உமையம்மை இருவரையும் ஒரு கணம் நோட்டம் விட்டுவிட்டு தன் அறைக்குள் சென்றாள். 

தன் அம்மா சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்ட சுபத்திரை மெல்லக் கைநீட்டி ஒரு விரலால் அப்பாவின் தோளைத் தட்டினாள். 

அய்யண்ணன் திரும்பிப் பார்த்து என்னவெனக் கண்ணால் கேட்க, அவள் தன் கைகளை மடக்கி கேள்விக்குப் பதிலெங்கே என்பதைப் போலப் பார்த்தாள். அய்யண்ணன் செல்லமாக கண்களைச் சுருக்கி, பிறகு சொல்வதாகச் சொல்லிவிட்டு, கையூன்றி தன் எடைமிக்க உடலைத் தூக்கி ‘நமச்சிவாய, நமச்சிவாய’ என்றவாறு எழுந்தார். வாசலுக்குச் சென்று வெளியே எட்டிப் பார்த்தவர், “நேரமாச்சு பாத்துக்கோ, பிள்ள சட்டுன்னு கெளம்பு, ஒன்ன மாதவியத்த வீட்ல வுட்டுட்டு அப்பா கோயிலுக்குப் போறேன். நேத்தைக்கே அந்த சட்டம்பி மணியம்பிள்ளை ஒருவாடு ஏசுனான்” என்றார். 

சுபத்திரை அம்மாவின் அறைக்குள் சென்றாள். அம்மாவும் மகளும் ஒப்பனை செய்து வெளியே வருவதற்குள் இவர் குளித்து முடித்து பூஜை செய்து தயாராக இருக்க வேண்டும். 

அவசர அவசரமாக குளித்துவிட்டு புழக்கடை கொடியில் தொங்கவிடப்பட்டிருந்த, துவைத்திருந்தாலும் அழுக்கேறியதாகத் தெரிந்த, வேட்டியைக் கட்டிக்கொண்டு வந்து மைய அறையின் தெற்குச் சுவரோடு இருந்த சாமி மாடத்தின் முன் வந்துநின்றார். கண் மூடி முனகியவாறு திருநீறை அள்ளி உள்ளங்கையில் வைத்து மூன்று விரல்களை அதில் அழுத்தித் தேய்த்து நெற்றியில் நீண்ட பட்டைகளாக இழுத்தார். மார்பிலும் கைகளின் மேற்பகுதிகளிலும் அதே போல பட்டையணிந்து மீண்டும் கண் மூடி நின்றவர், “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி…..” என்று மனம்விட்டுப் பாட ஆரம்பித்தார். 

“எத்தன தடவ சொல்லது ஒமக்கு? நேரத்துக்கு போணும்னு. தோடு, மத்ததுன்னு ஆரம்பிக்காரு, ஒம்ம பாட்டு எழவு ஒன்னுதான் கொற இப்போ” என்று கத்தியவாறு அவர் முன் வந்து தன் இடுப்பில் கைகளை ஊன்றி நின்றாள் உமையம்மை. கோவத்தில் சிவந்த கண்கள் பொசுக்கிவிடும் கங்குகளாகக் கனன்றன. 

அவரைவிடச் சற்று உயரமான தோற்றம், வயதால் வளைந்து தளர்ந்த உடல். வெண்சங்கைப் போன்ற பளபளக்கும் நிறமும் தோலும், எப்போதும் சுற்றியிருக்கும் பட்டுச் சேலையும் வாசனைகளும், கூடவே நீண்ட கருமையேற்றப்பட்ட கூந்தலில் நிறைந்து வழிந்த மல்லிகைச் சரமும், கழுத்திலிருந்து கீழாகச் சுருண்டு நீண்டு சென்ற தங்கச் சங்கிலிகளும். இவை போக, தளர்ந்து உள்ளொடுங்கிப் போயிருந்த மார்பின் மீது திருமலை நாயக்கர் பரிசாகக் கொடுத்த வெண்முத்துகள் பதித்த ஆரம் வேறு தனித்து சொலித்தது. கண்களைச் சுற்றி விரிந்து சென்ற கருவளையங்களை மறைக்க முயன்ற மஞ்சள் பூச்சு அப்பட்டமாகத் தெரிந்தது. இமைகளின் மேலும் கீழும் தீட்டிய மெல்லிய மைக்கோடுகள் நீண்டு சென்று பக்கவாட்டில் ஒன்றுசேர்ந்து சுருங்கிய தோலினூடே இரு இலைகளாக மலர்ந்து நின்றன. எப்போதும் குதப்பும் வெற்றிலையால் உதட்டுச் சாயம் நிரந்தரமானதைப் போலவிருந்தது. வளைந்த காதுகளில் சிவப்புக் கற்கள் பதித்த தங்கத்தோடு. மையத்தில் வைரம் போல சொலித்த ஒற்றை வெண்முத்து. பதினைந்து வயதில் திரண்டு நின்றபோது இதே கோவிலின் ஆருத்ரா மண்டபத்தில் வைத்து நடந்த பொட்டுக்கட்டு நிகழ்ச்சியில் அவளது அத்தையின் கையால் போட்டுவிடப்பட்ட தோடு. சற்று தொலைவில் நின்று பார்த்தால் அவளை அடையாளம் கண்டுகொள்ளும் முன் அவளது தோடு நம்மை வரவேற்பதாய் சொலிக்கும். அந்தத் தெருவின் ஒவ்வொரு வீட்டுப் பெண்ணிற்கும் இதே போல அந்தரங்கமான தோடு இருக்கத்தான் செய்தது. 

ஸ்ரீ இந்திரம் மகாதேவர் ஆலயத்தின் தேவதாசிகளுக்கென கோவிலின் தெற்குப்புறத் தெருவை ஒதுக்கிக் கொடுத்தவர் திருமலை நாயக்கர் என்று பேச்சு உண்டு. வயது வந்தது தொட்டு அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வும் அக்கோவில், அதன் தெய்வங்களுக்கான சேவைகளுக்காகத்தான்.

கோவில் உட்புறப் பிரகாரங்ளையும் சந்நிதி மண்டபங்களையும் சுத்தம் செய்தல், மடப்பள்ளிக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்துக் கொடுத்தல், பூசைகளுக்குப் பிறகு சட்டுவங்களையும், உருளைகளையும் சுத்தம் செய்தல், பூக்கட்டிப் பண்டாரங்களோடு சேர்ந்து சரம் கோர்த்தல், ஆரம் கட்டுதல் இப்படிப்பட்ட அடிப்படைச் சேவைகள் தாண்டி இன்னும் சில பணிகளும் இருந்தன. சில பூசைகளில் ஓங்கி ஒலிக்கும் மந்திர உச்சாடனங்களில் இவர்களது குரல் பின்பாட்டாக ஒலிக்கும். சில குறிப்பிட்ட சடங்குகளை இவர்கள் மாத்திரமே செய்தார்கள். இதெல்லாம் போக, தேவதாசிகள் மூலம் பொலிந்து விளங்கிய கலைகளும் இருந்தன. இசையும், நாட்டியமும், நாடகமும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் சிறந்து விளங்கினர். கோவில் திருவிழாக்களிலும் அரண்மனை வைபவங்களிலும் வேறு எவருக்கும் இல்லாத மரியாதையும் கவனிப்பும் இவர்களுக்குத்தான். 

மணியம் பிள்ளை அடிக்கடி விளையாட்டாகச் சொல்வார், “வேலக்காரியும் வீட்டுக்காரியும் நல்லொரு கலாக்காரியா வந்து அமஞ்சிட்டா கேக்கவா வேணும்? பின்ன, குடுத்து வச்சவோல்லா? பட்டுச்சீல என்னா? பவளமல்லி என்னா? தங்கமும் வைடூரியமும் என்னா? நம்ம இங்க கெடந்து எவ்வளவு முக்குனாலும் காணிக்க தேற மாட்டுக்கு!”

மறுபடியும் அய்யண்ணனின் முன் வந்துநின்ற உமையம்மை பெருமூச்சு வாங்க எரிச்சலில் கத்தினாள்.

“ஒம்மட்டதான் கேக்கேன். காலங்காத்தால என்ன நீக்கம்பு வந்துட்டு? செனம் கெளம்பி இருக்க முடியாதா ஒமக்கு? பண்டி நெறைய அமுக்கிட்டுதான கெடக்கீரு? பின்ன, என்னான்னு கேக்கேன்? எல்லா சப்பு சவுறும் நாந்தா பாக்கணும். எந் தலையெழுத்து!” சற்று நின்றவள் மீண்டும் அவரை நோக்கி, “பொட்டப் பிள்ளைட்ட அப்படி என்னத்த கொஞ்ச வேண்டிக் கெடக்குன்னு கேக்கேன்?” என்று கேட்டாள். 

அவர் அசைவற்றிருக்க அவள்,  “ஏட்டி, ஒன்ட்ட ஒருதடவ சொன்னா மனசுலாகாதா? இடுப்பு ஒயரம் வந்தாச்சி, செல்லம் கொஞ்சுகா, செல்லம்!” என்று சுபத்திரையைப் பார்த்து முறைத்தாள். 

உமையம்மையின் பார்வையைத் தவிர்த்து பதிலேதும் பேசாமல் நகர்ந்து சென்று வீட்டு வாசல் கதவோரம் நின்றார் அய்யண்ணன். சரியாக அச்சமயம் உள்நுழைந்த பக்கத்து வீட்டு கிருஷ்ணம்மை நடப்பதைச் சட்டென உணர்ந்து ஒரு கணம் அய்யண்ணனின் அருகே நின்று அவர் முகத்தைப் பார்த்தாள். உமையம்மை பூஜை மாடத்தின் முன் நின்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தாள். சுபத்திரை ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு உள்நுழைந்த கிருஷ்ணம்மையைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

மெதுவாக உமையம்மையின் அருகே சென்று நின்றவள், “எக்கா, என்ன காலங்காத்தாலயே ஆரம்பிச்சாச்சா? செனம் கெளம்பு, தெப்பத்துக்கு இன்னிக்கிதான கணக்கு பாக்கா? எனக்கு வேற காலைலயே ஒருமாறி இருக்கு, கழியாம ஆயிரக் கூடாது பாத்துக்கோ” என்று அவர்களுக்குள்ளாக கேட்கும்படி கேட்டாள். 

உமையம்மை திரும்பியபோது அவளது முகம் வாடியிருந்தது. “என்ன? என்ன சொன்ன?”

“அதான், சித்திரத் திருழா வருகுல்லா? தெப்பத்துக்கு நம்மதான ஆடணும், அதுக்கு யார் யாருன்னு கணக்கு பாக்கப் போறாளாம்” என்றாள் கிருஷ்ணம்மை. 

“ஓ, ஆமா, கணக்கு பாக்கணும்லா?” என்று தனக்குத்தானே சொல்லியவாறு அசையாமல் நின்றாள் உமையம்மை. சுபத்திரை இருவரும் பேசுவதைக் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தாள். 

“எக்கா, என்ன ஆச்சி? ஏன் ஒருமாறியா இருக்க நீ? சோமில்லயா?”

உமையம்மையிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. கிருஷ்ணம்மை சுபத்திரையை அருகில் அழைத்து, “அம்மா அப்பா சண்ட போட்டாளா?” என்று கேட்டாள்.

சுபத்திரை மீண்டும் கண் சிமிட்டிவிட்டு அப்பாவை நோக்கி ஓடினாள். 

“எக்கா, முடியாட்டி நீ வேண்ணா கெடந்து ஒறங்கு, மணியம் பிள்ளைட்ட நாஞ் சொல்லுகேன் என்னா?” என்று கிருஷ்ணம்மை கேட்க, சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்து முறைத்தாள் உமையம்மை.

“என்னப் பாத்தா ஒங்களுக்கெல்லாம் எளக்காரமாப் போச்சு, என்னா? நேத்து வந்தவ நீ, என்னப் போய் கெடந்து ஒறங்கச் சொல்லுகியாட்டி?” என்று கத்திவிட்டாள். 

பயத்தில் ஓரடி பின்னகர்ந்த கிருஷ்ணம்மை, “எக்கா, என்னக்கா இப்பிடிப் பேசுக? நா ஒனக்காகத்தான கேட்டேன்?” என்று அழுவதைப் போல் கேட்டாள். 

எங்கோவிருந்து அப்போதுதான் வந்ததைப் போலத் திடுக்கிட்டு, “வாடி, வா.. எப்ப வந்த, நேரமாச்சா? போவமா?” என்று அவளது கையைப் பிடித்து கேட்டாள் உமையம்மை. ஒன்றும் புரியாமல் கலங்கிய கண்ணைத் துடைத்தவாறு யோசித்து நின்றாள் கிருஷ்ணம்மை.

அய்யண்ணன் அந்த வீட்டிற்கு வந்துசேர்ந்து பத்து வருடங்கள் இருக்கும். நினைவு தெரிந்ததிலிருந்து சுபத்திரை அவரை அப்பாவென்றுதான் அழைக்கிறாள். அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் அந்த ஊரில் இருந்தவர்களுக்கும் அதைப் பற்றி பெரிதாக அக்கறையில்லை என்றாலும் அய்யண்ணன் அதையொரு பெரிய பாக்கியமாக நினைத்தார். உண்மையில் அவர் பெயர் என்ன, எங்கிருந்து வந்தார், ஏன் இங்கிருக்கிறார் என எதுவும் யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும், ஸ்ரீ இந்திரத்தின் ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் அவர் இருப்பார். கோவிலின் ஒவ்வொரு தூணும் அவரை அறியும். மொத்த ஊரின் சில்லறை வேலைகளுக்கான மொத்தக் குத்தகைக்காரர் போல கம்பீரமாகத் திரிவார். அவர் வந்த பிறகுதான் சுபத்திரை வந்ததாக உறுதியாக நம்பியவர்களும் இருந்தார்கள்.  கோவிலில் கிடைக்கும் உண்டக்கட்டியைத் தேவதாசி வீதியின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு கொடுத்து அவர்கள் கொடுக்கும் சில்லறைகளை வாங்கிக்கொள்வார். அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் கதைகளையும் கேட்டு அவர்களது கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்துக் கொடுத்து ஆசுவாசமாக ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் மல்லாந்து கிடப்பார். ஆனால், ஒரு வீட்டுக் கதை இன்னொரு வீட்டிற்குச் செல்லாது என்பது மட்டும் உறுதி.

மாதவியத்தை வீட்டிற்குச் செல்லும் வழியில் சுபத்திரை அய்யண்ணனிடம் கேட்டாள், “அப்பா, நீங்க அந்தப் பாட்டு பாடுனா மட்டும் அம்மா கத்துகா, ஏம்ப்பா?”

“எந்தப் பாட்டு?”

“அதாம்பா, இன்னிக்கி பாடுனியோல்லா? தோடுடைய செவியன்னு.”

அய்யண்ணன் அதுவரை அதைக் கவனிக்கவில்லை. கடந்த சில நாட்களாக அவள் அடிக்கடி எரிந்து விழுவதும் கத்துவதும் காரணமில்லாமலேயே என்றுதான் நினைத்திருந்தார். சுபத்திரை அப்படிக் கேட்டதும் அவர் ஒரு கணம் நின்று யோசித்தார். 

“அப்பா, அப்பா.”

“அது, ஒண்ணுல்ல மக்ளே, அம்ம எதாம் யோசனைல கத்திருப்பா. செரி, பிள்ள போயி நல்லா பாட்டும் மந்திரமும் படி, என்னா?”

“செரிப்பா.”

திரும்பிச் செல்லும் வழியில் அய்யண்ணன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். உமையம்மைக்கு எத்தனை வயதாகியிருக்கும்? தோடில்லாமல் அவள் முகத்தை எப்படிப் பார்க்கப் போகிறோம்? தான் நினைப்பது சரிதானா? அப்படியிருந்தால் அவளை எப்படி சரிசெய்வது? அவள் முன் நின்று முகம் பார்த்து பேசக்கூட முடியாதே? என்ன செய்யலாம்? ஆமாம், சுபத்திரைக்கு என்ன வயதிருக்கும்? முட்டாள், என்ன யோசிக்கிறாய் நீ? எதற்குத்தான் இப்படியெல்லாம் உருவாக்கி வைத்தார்களோ? உபயோகம் இருக்கும் வரைதான் மதிப்பு மரியாதை எல்லாம், இல்லையா? பிறகு, எல்லாம் வெறும் சதைப் பிண்டம்தானா? ச்சீ.

மடப்பள்ளியின் அருகே இருந்த கிணற்றின் அருகே உச்சிகால நைவேத்தியம் முடிந்த உருளிகளை ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து அடுக்கினர் கோவில் பணியாளர்கள். கிருஷ்ணம்மை நீர் இறைத்து ஒரு பெரிய போணியில் ஊற்றிக்கொண்டிருந்தாள். கிணற்றருகே இருந்த வில்வ மரத்தடியில் கால் குவித்து உட்கார்ந்து முகத்தைக் கைகளில் தாங்கியபடி இருந்தாள் உமையம்மை. 

“எக்கா, எந்தக் கோட்டைய புடிக்க இவ்ளோ யோசன? எப்பிடி, நமக்கும் எதாம் பங்கு உண்டுமா? ஏய் எக்கா, ஒன்ட்டதான் கேக்கேன்?” என்று ஒரு கை நீரள்ளித் தெளித்தாள் கிருஷ்ணம்மை.

உமையம்மையிடம் எவ்விதச் சலனமுமில்லை. நீரிறைப்பதை நிறுத்திவிட்டு அவளருகே சென்று உட்கார்ந்தாள் கிருஷ்ணம்மை. அவள் வந்து அமர்ந்ததும் அவளுக்குத் தெரியவில்லை. முகத்தைத் தாங்கிய கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. விரல்கள் மெல்ல அசைந்து தோடுகளைத் தடவிக்கொண்டிருந்தன. 

“எக்கா, எக்கா. வா, வேலைய முடிப்பம், தெப்பக் கணக்குக்குப் போகாண்டாமா?”

சட்டென கிருஷ்ணம்மையை திரும்பிப் பார்த்தவள் வெடுக்கென்று எழுந்து நின்றாள். “வேல கெடக்கு, வேல கெடக்கு.” என்றவாறு கிணற்றடியை நோக்கிச் செல்ல கால்வைத்தவள் அப்படியே வழுக்கிப் பின்னால் சாய்ந்தாள். 

“எம்மா ஏம்புள்ள” என்று கத்திய கிருஷ்ணம்மை பின்னிருந்து அவளைத் தாங்கிப் பிடிக்க, மயங்கிச் சரிந்தாள் உமையம்மை.

அன்றிரவு சிதம்பர மண்டபத்தில் ஆரவாரமும் சிரிப்பொலியும் வானைத் தொட, வரிசையாய் வந்துநின்ற அத்தனை தேவதாசியரும் வண்ண வண்ணப் பட்டுகளில் முழுதணி கோலத்தில் தெய்வாம்சம் நிறைந்து நின்றனர். மண்டபத்தின் முன்பகுதியில் சிறுமியரும் இளம் பெண்களும் அமர்ந்திருக்க, அவர்களின் பின் ஊர்ப் பொதுமக்கள் நிறைந்திருக்க, சுற்றிலும் நின்று ஆடியும் சீழ்க்கையடித்தும் இருந்த ஆடவர் முகங்களிலெல்லாம் ஏதோ பார்க்காததைப் பார்த்ததைப் போல பிரகாசம். தேவதாசிகளைப் பார்த்து சமிக்ஞை செய்வதும் பூக்களை எறிவதும் தங்களுக்குள்ளாக அரட்டையடித்துக் கும்மாளமிடுவதுமாக இருந்தனர். மண்டபத்தின் பக்கவாட்டு மேலறைகளில் அமர்ந்திருந்த அரச குடும்பத்துப் பெண்களும் அவர்களது அணுக்கச் சேடியரும் ஒவ்வொரு தேவதாசியையும் கூர்ந்து பார்த்து ஏதேதோ பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். 

கோவில் மணி கணீரென அடிக்க ஆரம்பித்தது. பன்னிரு முறை அடித்து ஓய்ந்ததும் மக்கள் கூட்டம் மீண்டும் சலசலக்க, மணியம் பிள்ளை மண்டபத்தின் முன் வந்து நிகழ்ச்சியை அறிவித்தார். பின் நடன நிகழ்ச்சி ஆரம்பித்தது. தேவதாசியர் குழுக்களாக வந்து ஆடிச் செல்ல, மக்கள் மெய்மறந்து இரசித்திருக்க, மேல்மாடத்துக் கண்கள் மதிப்பிட்டு குறுகி விரிய கடைசிக் குழுவில் நின்றிருந்த உமையம்மையின் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. அவளையறியாமல் அவள் கண்கள் கண்ணீர் விட்டபடியே இருந்தன. கண் மை குழம்பிப் போக, முகப்பூச்செல்லாம் ஈரத்தில் அழிந்து வழிய அவளது நிஜ முகம் வெட்கி இருண்டு வெளிவந்தபடியிருந்தது. கிருஷ்ணம்மை அவளது கையைப் பிடித்து ஆறுதலாய் நின்றாள்.  எத்தனை மேடைகளைப் பார்த்த கால்களிவை? எத்தனை மாலைகளை வாங்கிக் கனத்த தோள்களிவை? எத்தனை கொட்டாரங்கள்? எத்தனை அந்தப்புரங்கள்? எத்தனை பட்டயங்கள்? இந்த நொடி நடுங்கி விழத்துடிக்கும் இந்த உடல் ஏன் இப்படி நாற்றமடிக்கிறது? அப்படியே திரும்பி ஓடிவிடலாமா? மண்டபத்திற்குச் சென்று அவமானப்படுவதைவிட காணாமல் போய்விடுவது மேல்தான் இல்லையா? அதெப்படி ஓடிவிட முடியும்? சுபத்திரை வாழ்க்கை என்ன ஆகும்? இத்தனை வருடத் தெய்வ சேவைக்கும் கலை உன்னதங்களுக்கும் இழுக்காகி விடுமே! என்ன ஆனாலும் சரி, மகாதேவன் பார்த்துக்கொள்ளட்டும்!

தங்கள் குழுவை அழைத்தபோது, தான் சென்று எல்லோரையும் வணங்கி நின்றது ஒரு கனவாகத்தான் நடந்தது உமையம்மைக்கு. ஏதேதோ எண்ணங்கள் வந்து சூழ்ந்துகொள்ள சுற்றிலும் பார்த்தவள் கண்களை மூடி மகாதேவரை நினைத்தாள். அய்யண்ணனின் முகம் வந்து அவளது கண்களை உற்றுப் பார்த்தன. எவ்வளவு முயன்றாலும் மகாதேவரின் முகம் கண்ணில் வரவில்லை. அய்யண்ணனின் அப்பாவி முகம் இப்போது இன்னும் தீர்க்கமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. கண்களைத் திறந்தபோது குழுவோடு சேர்ந்து அபிநயம் கூட்டி ஆடிக்கொண்டிருந்தாள் உமையம்மை. 

திருமலை நாயக்கர் படைகொண்டு வந்து வெற்றிகொண்ட இரவில் இதே மண்டபத்தில் தான் ஆடிய நடனமும், பின் துச்சாதனன் துகிலுரிய இளைய யாதவனை வேண்டி கைகூப்பி அழுது நின்ற திரௌபதியாக நின்ற தன் கோலமும் அவளுள் எழுந்து வந்தன. ஆடிக் களைத்து விருந்து மண்டபத்தில் முதல் வாய் அன்னமெடுத்து வைக்கப்போன கணத்தில் நாயக்கர் அழைப்பதாகத் தகவல் வர, மொத்த மண்டபமும் அவளைக் கட்டி முத்தமிட, ஒயிலாகப் பாய்ந்து சென்றாள் உமையம்மை. யாருக்குக் கிடைக்கும் அப்படியொரு பரிசு? அப்படியொரு பாராட்டு? நாயக்கரே தன் தலைதொட்டு ஆசி வழங்கிய அந்த நொடியை அவள் எப்படி மறக்க முடியும்?

நினைவு திரும்பிய போது மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க தன் குழுவோடு சேர்ந்து மொத்த மண்டபத்தையும் வணங்கி நின்றாள் உமையம்மை. 

அடுத்தநாள் அதிகாலை வந்த கிருஷ்ணம்மை, “எக்கா, இப்பிடி ஆயிட்டேக்கா!” என்று உமையம்மையைக் கட்டிக்கொண்டு அழுதாள். “எனக்கு கைதொட்டு சொல்லிக் கொடுத்ததே நீதானக்கா? நீயில்லாம நா எப்பிடி அங்க போயி ஆடுவேன்? மகாதேவா, இப்பிடிப் பண்ணாத, எங்க உயிரு, ஒடம்பெல்லாம் ஒனக்குத்தான? ஒன்ன விட்டா எங்களுக்கு யாரிருக்கா? மகாதேவா.” 

இப்படித்தான் நடக்குமென எதிர்பார்த்தவளாய் அசைவற்று நின்றாள் உமையம்மை. என்னவென்று தெரிந்தும் தெரியாமலும் அம்மையைக் கட்டிக்கொண்டு அழுதாள் சுபத்திரை. திண்ணையில் சாய்ந்திருந்து ஸ்ரீ இந்திர கோபுரத்தை வெறித்துக்கொண்டிருந்தார் அய்யண்ணன். 

சற்று நேரத்தில் அவிழ்ந்த கூந்தலை வாரி முடித்துக்கொண்டு கிருஷ்ணம்மை வெளியேற, நிலை குத்திய கண்களுடன் கட்டிலில் கிடந்த உமையம்மையை சுபத்திரை, “அம்மா, அம்மா” என தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தாள். 

தெப்பத் திருவிழாவின் துவக்க மணியோசை கேட்டபோது அய்யண்ணன் வீட்டைவிட்டு வெளிவந்து பார்ப்பதும் உள்ளே செல்வதுமாக மாறி மாறி நடந்துகொண்டிருந்தார். சுபத்திரை அம்மாவின் கட்டிலின் அருகேயே உட்கார்ந்து அவள் முகத்தையே ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் கண்கள் திறந்தால், தெப்பத்திற்குப் போகலாம். அம்மாவையும் அழைத்துக்கொண்டு போகத்தான் ஆசை. ஆனால், படுத்த படுக்கையாகக் கிடக்கிறாளே! இந்தத் தெப்பம் இல்லாவிட்டால் என்ன? மார்கழித் திருவிழாவில் ஆடலாமே? அம்மாவிற்கு ஏன் புரியவில்லை? இதைவிடப் பத்து மடங்கு பெரிய திருவிழா அல்லவா அது? பத்து நாளும் நம் நடனமும் நாடகமும்தானே? அம்மாவைப் போல யார் நடித்துவிட முடியும்? இல்லை, யார்தான் ஆடிவிட முடியும்? 

மெல்லக் கண்திறந்த உமையம்மை சுபத்திரையின் தலையை வருடி, “அப்பா..அப்பா…” என்றாள். சுபத்திரை விரைந்தோடி அய்யண்ணன் கையைப் பிடித்து உள்ளழைத்து வர, அய்யண்ணன் கண்கலங்கி நின்று உமையம்மையைப் பார்த்தார். அவளது முகம் வெளிறிப் போய் அவளல்லாமல் வேறு யாரோ போலவிருந்தாள். 

அவரைப் பார்த்து கண்ணசைத்து, “பிள்ள..தெப்பம்..” என்று சொன்னாள் உமையம்மை. சுபத்திரையின் முகத்தில் கைவைத்து முத்தமிட வந்தவள் வெப்ராளம் பொங்கி வர, முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள். அய்யண்ணனும் சுபத்திரையும் அவளது கைகளைப் பிடித்து தடவிக் கொடுக்க, அவளது அழுகை நீண்டு சென்று பின் மெல்ல அடங்கியது. 

முகத்தைத் துடைத்துக்கொண்டு பெருமூச்சோடு, “போய்ட்டு வாங்க” என்றாள்.

தெப்பமும், ராஜவரிசையும் முடிந்து ஊரும் கோவிலும் பழைய நிலைக்கு வந்தன. தேவதாசித் தெருவின் அத்தனை வீடுகளும் பரபரப்பாக இருக்க, உமையம்மையின் வீடு அமைதியில் உறைந்தது.  கிருஷ்ணம்மையின் வீட்டு முன் வந்து நிற்கும் பல்லக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது. உமையம்மை வீட்டிற்குத் தினசரி வந்துசெல்லும் அவளை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. மாதவியும் தன்னைச் சரியாகக் கண்டுகொள்வதில்லை என்று அம்மையிடம் வந்து அழுதாள் சுபத்திரை. 

உமையம்மை பயந்து தவித்திருந்த அந்த நாளும் கடைசியில் வந்துசேர்ந்தது. 

கோவில் ஆருத்ரா மண்டபத்தைச் சுற்றிலும் அத்தனை தேவதாசியரும் அமர்ந்திருக்க, மேடையாகப் போடப்பட்டிருந்த ஒற்றைப் பலகையின் மீது ஒரு பட்டுத்துணி போடப்பட்டிருந்தது. அதன் முன் தாம்பாளங்களில் பழங்களும், பூக்களும், நூல் சேலைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிவப்புத்துணிப் பொட்டலம் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மண்டப மணியடிக்க, இரு தேவதாசியர் கைப்பிடிக்க, மெல்ல நடந்து வந்தார் ஊரின் முதிய தேவதாசி ஆச்சி. அவர் வந்து தாம்பாளங்களின் மீது நீர் தெளித்து பூத்தூவி சில மந்திரங்களை முணுமுணுக்க சுற்றியிருந்த அத்தனை தேவதாசியர் முகங்களும் சட்டெனக் கலங்கின. அவர் தன் சேலையின் முந்தானையைக் கிழித்து தன் இடது கையில் சுற்றிக்கொண்டு தலையசைக்க, நாதஸ்வரமும் மேளமும் இசைக்க மண்டபத்தின் உள்ளிருந்து வெளிவந்தாள் உமையம்மை. அருகே மணப்பெண் தோழி போல கிருஷ்ணம்மையும் மாதவியும். முழுதணிக் கோலத்தில் தன் முதல் பட்டுடுத்தி நிறைந்து நின்று வணங்கினாள் உமையம்மை. அவளது முகம் யாரையும் பார்க்க விரும்பாமல் மீண்டும் மீண்டும் அவளது காலடியை நோக்கித் தாழ்ந்தது. ஆச்சி கையசைக்க தோழியர் இருவரும் கைத்தாங்கலாக உமையம்மையை அந்தப் பலகையில் உட்கார வைத்தபோது மொத்த மண்டபமும் குலவையொலியில் அதிர்ந்தது. குலவையின் ஊடே ஒவ்வொரு தேவதாசியின் விம்மலும், உடைந்த அழுகையும் பீறிட்டு வந்தது. ஆச்சி ஒரு மாலையை எடுத்து உமையம்மையின் கழுத்தில் சூடி, அவளது தலையில் கைவைத்து ஆசி வணங்கினாள். உமையம்மை ஆச்சியின் கால்தொட்டு வணங்கினாள். 

பின் திடீரென, மொத்தக் கூட்டமும் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பிக்க, சன்னதம் வந்ததைப் போல ஆடத் தொடங்கினாள் ஆச்சி. மூன்று சுற்று ஆடி வந்தவள், உமையம்மையின் தலையைப் பிடித்து பூக்களைப் பறித்து எறிந்தாள். உமையம்மை அசையாமல் சிலையாக இருந்தாள். மீண்டும் சுற்றி வந்த ஆச்சி, “சாந்தி, சாந்தி, சாந்தி” என்று மும்முறை கூறிவிட்டு உமையம்மையின் காதருகே சென்று அவளது தோடைக் கழற்றினாள். நிமிர்ந்து ஆச்சியைப் பார்த்த உமையம்மை ஒரு நொடி துகில் விலகிய திரௌபதியாகத் தெரிந்தாள். ஆச்சி இரு தோடுகளையும் கழற்றி உமையம்மையின் கால்மாட்டில் போட, அருகிருந்த தேவதாசி ஒருத்தி ஒரு சுத்தியலை நீட்டினாள். ஆச்சி அதை வாங்கி உமையம்மையின் முகத்தை நோக்கியவாறே ஓங்கியறைந்து அந்தத் தோடுகளை உடைத்தாள். மொத்த மண்டபமும் “சாந்தி, சாந்தி, சாந்தி” எனத் தொடர்ந்து முனகிக்கொண்டிருக்க, இரு தாசியர் வந்து உமையம்மையைத் தூக்கி எழுப்பி நிறுத்தினர். அவள் சுயநினைவின்றி ஒப்புக்கொடுத்து நிற்க, தாசியர் அவளது முந்தானையைத் தூக்கி விரித்துப் பிடிக்க, அந்தச் சிவப்புத் துணிப் பொட்டலத்தை எடுத்து முந்தானைக்குள் வைத்தாள் ஆச்சி. உமையம்மையை மெல்ல நடத்திக் கூட்டிச்சென்றனர். ஸ்ரீ இந்திரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியிருந்தது. பின், மூன்று முறை மணியடிக்க எல்லோரும் கலைந்து சென்றனர்.

“மக்ளே, சாப்பிட்டியா? அப்பா எதாம் வாங்கித் தந்தாளா?” வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கோவிலைப் பார்த்திருந்த சுபத்திரையிடம் கேட்டாள் மாதவி. 

மெல்லத் தலையாட்டினாள் சுபத்திரை. 

“அம்மா எப்பிடியிருக்கா மக்கா? எதும் மாத்தம் உண்டுமா?” 

சுபத்திரை இல்லையெனத் தலையாட்ட, “என்னத்த சொல்ல? நம்ம தலையெழுத்து அப்பிடி. அத்த வாறேன் மக்ளே. எதாம் வேணும்னா அத்த வீட்டுக்கு வா, என்னா?” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் மாதவி. 

சிவப்புத் துணிப் பொட்டலத்தோடு அன்று மாலை வீட்டில் இருவர் கைத்தாங்கலாகக் கொண்டுவந்து போட்டதுதான். அசைவற்ற உடலாக, குரலற்ற உருவாக, வெறும் மூச்சும் ஈரமும் தாங்கிக் கிடந்தாள் உமையம்மை. தோடற்ற அவளது வெற்றுக் காதுகளில் சொருகியிருந்த தென்னங் குச்சிகள் காய்ந்து சருகாகிவிட்டிருந்தன. உயிரற்ற கண்கள் பெரும்பாலும் பூஜை மாடத்தை வெறித்துப் பார்த்தபடியிருந்தன. அய்யண்ணன் தாங்கிப் பிடித்திருக்க, சுபத்திரை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றும் கஞ்சி உள்ளும் புறமும் வழிந்தது. கோவில் வைத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பது யாருக்கும் புரியவில்லை. உமையம்மை இருந்ததையே அந்த வீதி மறந்துவிட்டதைப் போலிருந்தது. அய்யண்ணனும் சுபத்திரையும் உமையம்மையை இருத்திப் பிடித்து வைத்திருந்தனர். இல்லை, அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை, திருமலை நாயக்கருடன் அவளது தனி உலகில் அவள் நன்றாகவும் இருக்கலாம். 

சுபத்திரை இசையிலும் நாட்டியத்திலும் கவனம் வைத்து மாதவியின் அருகாமையில் மலர ஆரம்பித்தாள். 

மார்கழித் திருவிழா கொடியேறியது. இசை வகுப்பிற்குச் சென்ற சுபத்திரையைக் காணாது திண்ணையில் வந்து காத்திருந்தார் அய்யண்ணன். நீண்ட நேரமாகியும் அவள் வராததால் போய்ப் பார்த்து வரலாமென கதவைப் பூட்டிக் கிளம்பியபோது மாதவி பரபரத்து ஓடி வந்தாள். பயந்து போன அய்யண்ணன் திகைத்து நிற்க, அவரை விலக்கித் தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள் மாதவி. நேராக உமையம்மையின் படுக்கையின் அருகே சென்று நின்றாள். அதே நிலை குத்திய கண்கள். 

“எக்கா, எக்கா, இங்க பாரு, இனிப்பு கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு உமையம்மையின் வாயில் சிறிது வெல்லத்தைப் போட்டாள். 

“எக்கா, என்னன்னு கேக்க மாட்டியா?” 

உமையம்மையிடம் எந்த அசைவுமில்லை. 

“என்னம்மா ஆச்சி?” என்று பதறி நின்றார் அய்யண்ணன். 

“எக்கா, எந்திரிக்கா,  சுபத்திரைக்கு பொட்டுக்கட்ட நேரம் வந்தாச்சு. எங்க வச்சிருக்க ஓம் மகளுக்கத் தோட?” என்று கேட்டாள் மாதவி. 

மகிழ்ச்சியில் படபடத்து ஓடிச்சென்று பூஜை மாடத்தின் அருகே நின்று வணங்கி திருநீறெடுத்து தன் நெற்றியில் பூசிவிட்டு உள்ளங்கையில் சிறிது எடுத்து திரும்பினாள். அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. கட்டிலில் எழுந்து உட்கார்ந்து தன் சேலை முந்தானையிலிருந்த ஒரு முடிச்சை அவிழ்த்துக்கொண்டிருந்தாள் உமையம்மை.

“வேல கெடக்கு. வேல கெடக்கு.”

3 comments

Comments are closed.