அன்று காலை நாங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை அடையும்போது மணி ஆறு முப்பது ஆகியிருந்தது. நான்கு மணிக்கே எழுந்ததன் பலனால் அவ்வளவு சீக்கிரம் செல்ல முடிந்தது. பேருந்தைவிட்டு இறங்கும்போது அம்மாவுக்குக் கால்கள் மரத்துப் போய்விட்டதாகச் சொன்னாள். நீரின் மீது நடப்பதைப் போல கவனமெடுத்து ஓரொரு அடியாய் வைத்தாள். பேருந்து நிலையத்திலேயே இருந்த டீக்கடையில் எங்கள் இருவருக்கும் காபி வாங்கிக் கொடுத்துவிட்டு அப்பா டீ குடித்தார். காபியை வட்டாவில் ஊற்றிக் குடித்தவுடனே அம்மா புடவைக்குப் பின்னே இடதுகரத்தை வளைத்து அடிமுதுகில் சொறிந்துகொள்ளத் துவங்கினாள். அம்மாவுக்குச் சூடாக ஏதாவது குடித்தால் உடனே வியர்த்துவிடும், உடல் வியர்த்தவுடனே அரிக்கத் துவங்கிவிடும். எங்களுக்கு அது பழகியிருந்தாலும் டீக்கடையில் நின்றிருந்தவர்கள் அம்மாவை வித்தியாசமாகப் பார்த்தது எனக்குச் சங்கடமாக இருந்தது. டீக்கடையை விட்டு நகர்ந்ததும் சரியாக நாங்கள் நின்ற இடத்திலிருந்து எதிரே இருந்த தடத்தில் திருநாகேஸ்வரம் செல்லும் நகரப் பேருந்து ஒன்று தயாராக இருந்தது. அதில் ஏறி முத்துப்பிள்ளை மண்டபம் நிறுத்தத்தில் இறங்கினோம்.

தூய இருதய மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தவுடன் அங்கு பல வகையான நோயாளிகள் இருந்தார்கள். கைகளில் பாதிப்பாதி கரைந்த விரல்களைக் கொண்டவர்கள், வெள்ளையாய் செதில் செதிலாய்த் தோலுரிந்தவர்கள், முழங்காலில் வழியும் சீழோடு வரும் குருதியைப் பஞ்சுகொண்டு துடைப்பவர்கள், மூக்கு உள்ளடங்கி முகமிழந்துகொண்டிருப்பவர்கள், அங்கங்களில் தடிப்புத் தடிப்பாய் வீக்கமடைந்தவர்கள், தோல் முழுக்கச் சிராய்ப்படைந்ததைப் போல சிவப்படைந்த தோல் கொண்டவர்கள் எனப் பார்வையின் எந்தத் திசையிலும் தொழுநோயாளிகளாகவே இருந்தனர். அம்மா அவர்களைப் பார்த்தவுடனே நடுங்கும் கரங்களால் புடவை முந்தானையைச் சுருட்டி ஒரு பந்துபோல ஆக்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டாள். 

அப்பா வரவேற்பறையில் இருந்த செவிலியரிடம் சென்று விசாரித்துக்கொண்டிருந்தார்.  

”சொக்காயி, என்ன இந்த கெதிக்கு கொண்டாந்து உட்டுட்டியே.. நான் யாருக்கு எந்த தீம்பும் செய்யிலியே.. கடவுளே வடக்கமலயானே.. என் மூணு புள்ளையும் தெவச்சி நிக்குமே ஐயோ”. சன்னமான ஒலியில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா, கண்ணிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. 

மெதுவான குரலில், “அழுவாதம்மா..” என்றேன். அங்கிருந்த நோயாளிகளும், மருந்துகளின் வாசமும், அப்போதுதான் துடைக்கப்பட்டிருந்த தரையிலிருந்து பினாயில் வாடையும் குடலைச் சுழற்றி பதற்றத்தை அதிகரித்தது. எங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஒருவருக்கு வலது கரத்தில் மூன்று விரல்கள் இல்லாமல் அதில் துணி சுற்றப்பட்டிருந்தது. அவருக்குப் பக்கத்திலிருந்த பெண்மணி அவரின் கைக்கு நேராக ஒரு அட்டையை வைத்து விசிறிக்கொண்டே இருந்தாள். அம்மாவின் பார்வை அவர்களின் பக்கம் சென்று மீண்டது.

செவிலியிடம் விசாரித்துவிட்டு அப்பா எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். “பழிகார பாவி.. என்ன இந்த கெதிக்கி ஆளாக்கிட்டானே பாவி.” அப்பாவைக் கண்டவுடன் அழுகையிலிருந்து விடுபட்டு ஆத்திர முணுமுணுப்புகளாய் வந்தன வார்த்தைகள்.  

எங்களுக்கு முன்னிருந்த ஒரு சில டோக்கன்களிலேயே மருத்துவரைப் பார்ப்பதற்கு எங்கள் முறை வந்தது. வெள்ளை கோட்டும் முகக்கண்ணாடியும் அணிந்து வந்த சற்றே வயதான மேரி மாதா போல இருந்தார் அந்த டாக்டர். அப்பா விபரங்களைச் சொன்னதும் டாக்டரிடமிருந்து சன்னமான ஒலியில்  உதிர்ந்தன சொற்கள்.

“ஒரு வருஷமா இப்படி இருக்குன்னு சொல்றீங்க? முன்னாடியே இங்க வந்திருக்கலாமே? பாவம், ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க போல..” எனச் சொல்லிக்கொண்டே பேப்பரில் எழுதத் துவங்கினார். டாக்டருக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தில் ஆட்டுமந்தைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த இயேசுவின் கையில் ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி இருந்தது. அதிலேயே நிலைகுத்தியிருந்த அம்மாவின் கண்கள் நிரம்பித் தளும்பி நின்றன. 

“இப்போ ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்திருவோம்.. வர்ற ரிசல்ட் வெச்சு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. இப்போ சில மாத்திரைகள் எழுதித் தரேன்.. அடுத்த வாரம் வாங்க.. ஃபாரீன்ல இருந்து ஒரு ஸ்பெஷலிஸ்ட் வர்றாரு.. கவலைப்படாதீங்க. குணப்படுத்திடலாம்” என டாக்டர் கூறியதும் அம்மாவுக்கு நெடுநாட்களுக்குப் பின் கண்களில் நீர்ப்படலத்திற்கு நடுவில் சின்னஞ்சிறிய ஒளிகள் மின்னின.

இரத்தப் பரிசோதனை செய்வதற்காக அம்மாவின் கை நரம்பிலிருந்து செவிலி இரத்தம் எடுக்கும்போது அம்மா பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள். இதற்கு முன் காய்ச்சலோ, வலியோ எந்த உடல்நோவையும் இரண்டொரு நாளுக்கு மேல் பொருட்படுத்தி பழக்கமில்லாத அம்மாவுக்கு இப்போது உடலில் எது பட்டாலும் வலிக்கச் செய்யுமோ என்ற அச்சம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.  

டாக்டரின் நம்பிக்கையான பேச்சும் முடிவில் அவர் அம்மாவுக்காக கண்களை மூடிச் செய்த பிரார்த்தனையும் எனக்கும் அப்பாவுக்கும் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. பேருந்தில் ஏறியதுமே அம்மா அப்பாவின் தோளில் சாய்ந்து அயர்ந்து உறங்கிவிட்டார். 

சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அறுவடை முடிந்த ஒரு நாளில் இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பா அம்மாவிடம் சொன்னார்- “இந்த தடவ வயல உழுவாம முச்சூடும் பருத்தி போட்டுருவோம்.. தின்னண்டியூர் பஞ்சுகாருகிட்ட வெதைக்கு சொல்லி வச்சிட்டேன்..” 

சொல்லிவிட்டு அம்மாவின் பதிலை எதிர்பார்த்திருந்தார் அப்பா. உறியில் தொங்கிக்கொண்டிருந்த மோர்ப் பானையை எடுத்து சாதத்தில் ஊற்றியபடியே, “வெர நெல்லுதான் இருக்கே? பாளம் பாளமா வெடிச்சி கெடந்தப்பயே உள்ளங்கையால அள்ளி எறைக்காத கொறையா தண்ணி பாச்சிலியா? இப்பதான் தண்ணி நல்லா வருதே?” தூங்கிக்கொண்டிருந்த தம்பி விழித்துக்கொள்ளக்கூடாதென்ற கவனத்துடன் மெலிதாகச் சொன்னாள் அம்மா.

“நடவ நட்டு ராக்கண்ணு பகல்கண்ணு முழிச்சு இப்ப அரப்பு அரத்து என்னா பலன கண்டோம்? பெரியவன காலேஜி சேக்கனும்.. சொச்ச கடன அடைக்கினும்.. நானும் என் காலம் முடியறதுக்குள்ள ஒரு ஊட்ட கட்டி ஒட்டிப்புடனும்.. நாலு காசு வேணும்னுதான் பருத்தி போடுவோம்கிறன்.. நாளைக்கி வித்து நானா வட வாங்கி திங்கப்போறன்?” அப்பாவின் குரல் ஆத்திரமும் ஆற்றாமையுமாக மேலெழுந்தது. சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது மேலும் எதாவது பேசினால் சாப்பிடாமல் எழுந்துவிடுவார் என்று அம்மா அதற்கு மேல் பதில் எதுவும் சொல்லவில்லை. அரைத் தூக்கத்தில் இருந்த தம்பி திடுக்கிட்டு எழுந்து தலையைச் சொறிந்தான். அம்மா அவனைத் தட்டிக்கொடுத்துப் படுக்க வைத்தாள்.  

அம்மாவுக்கு இந்த முறை பருத்தி போடுவதில் உடன்பாடு இல்லை. இரண்டு மாதத்துக்கு முன்பு அய்யனார் கோவில் பனைமரத்தடியில் அம்மா மூர்ச்சையாகி விழுந்த அன்று மாயவரம் நாராயணன் டாக்டர் பரிசோதித்துவிட்டு அம்மாவுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகச் சொன்னார். அதிலிருந்து வெயிலில் நீண்டநேரம் நிற்காமலும், கடுமையான வேலைகள் எதுவும் செய்யாமலும் இருந்தாள். அதுவும் ஒரு வாரம் மட்டுமே அம்மாவால் அப்படி இருக்க முடிந்தது. அறுவடை நெருங்க நெருங்க எல்லாவற்றையும் தன் மேற்பார்வையில் பார்த்தால்தான் அம்மாவுக்குத் திருப்தியாக இருக்கும். அறுவடையின் கடைசித் தினம் களத்தில் நெல் தூற்றிக்கொண்டிருக்கும் போது அம்மாவுக்குப் படபடவென வந்து மயங்கிவிட ஆலமரத்தடி வேரில் தலைசாய்த்துப் படுக்க வைக்கப்பட்டார்.   

ஒருபுறம் பார்த்தால், பருத்தி நெல்லைவிட இருமடங்கு உழைப்பைக் கோரக்கூடியது. அதிலும் பனம்பள்ளி ஆடு மாடுகளிடமிருந்து பருத்தியைக் காப்பாற்றுவதற்குள் தொண்டை ஈரம் முற்றிலும் உலர்ந்து நாக்கு வெளியில் வந்துவிடும். இன்னொருபுறம் ஏற்கனவே பருத்தி போட்டதில்தான் வீட்டுக்கு கிரைண்டர் வாங்கியது, சீர்காழி கூட்டுறவு சொசைட்டியில் மூன்று வருடமாய் அடகில் இருந்த இரண்டு பவுன் தோடை மீட்டது எல்லாம் நடந்தது. பருத்தி போட்டால் தற்போது அய்யனார் குளமும் நிறைந்திருக்கிறது, டீசல் எஞ்சினிலும் நல்ல தண்ணீர் சப்ளை இருக்கிறது, கூடுதல் மகசூல் எடுக்க முடியும்தான்.

டீவி பார்ப்பதற்காக பிள்ளைகள் வீடு வீடாக அலைகிறார்கள். ஒரு டீவி வாங்கலாம், இந்தப் புகையிலிருந்து தப்பி ஒரு கேஸ் அடுப்பு வாங்கலாம் என யோசனைகள் பறந்துகொண்டிருந்தாலும் உடல்நலத்தை நினைத்து அப்பாவிடம் சரி எனச் சொல்லத் தயங்கினாள் அம்மா.

அப்பா பருத்திதான் போடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஐம்பதாயிரம் முதலோடு நான்கு மாதம் பருத்தியுடனே கிடந்தால் நிச்சயம் ஒன்றுக்கு மூன்றாய் பலனை எடுத்துவிடலாம். திருநன்றியூர் பஞ்சு வியாபாரியிடம் பருத்தி விதைகளை வாங்கி வந்தார் அப்பா. மறுநாள் கீழ்நோக்குநாள் என்பதால், “நாளைக்கு ஊனுனா நல்லா இருக்கும்” என்று காலண்டரைப் பார்த்துக்கொண்டே அப்பா சொல்ல, அன்றிரவே விதைகளைச் சாணிப்பாலில் ஊற வைத்தார் அம்மா. ஒரு பொருள் வாங்குவதற்கான யோசனையில் இருக்கும் வரைதான் அம்மா அதற்குச் சம்பந்தம் இல்லாதவளாக இருப்பாள். அது வீட்டுக்குள் வந்தவுடன் அது அம்மாவினுடையதாக மாறிவிடும். பருத்திவிதை சாணிப்பாலில் நன்றாக ஊறியிருந்ததால் மறுநாளே வயலை மண்வெட்டியால் செத்திவிட்டு பார் கிழிக்கத் தொடங்கியிருந்தார் அப்பா. நடவு நட்ட வயல் என்பதால் நிலத்தை மட்டம் செய்யும் பணி தேவையற்றுப் போனது. இல்லாவிட்டால் மட்டப்படுத்த வேண்டியிருந்திருக்கும். அதற்கான செலவு இப்போது மிச்சம்தான் என்பதில் அம்மாவுக்கு ஒரு சிறிய ஆறுதல்.

இரண்டு பக்கமும் முளைக்குச்சி அடிக்கப்பட்டு இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றின் வரிசைக்கிரமத்தில் மூன்றடிக்கு ஒரு குழி என்று தோண்டப்பட்டது. அம்மாவும் நானும் தம்பிகளும் விதைகளைப் போட்டபடியே சென்றோம். விதைத்த நான்காம் நாள், மண்ணை முட்டிக்கொண்டு விதைகள் எல்லாம் முளைத்திருந்ததைப் பார்த்தபோதே பிரசவ வார்டுக்குள் பார்வையிட வந்தவளைப் போல அகம் மகிழ்ந்து இருந்தாள் அம்மா. முளைக்காத பழுதுவிதைகளுக்கு மாற்றாக வீட்டில் ஏற்கனவே தயாராக முளைக்க வைக்கப்பட்டிருந்த விதைகளை ஊன்றினோம். வழக்கமாக மற்றவர்கள் விதை முளைக்காத இடத்தில் அடையாளத்திற்காக ஒரு தாள் சுற்றப்பட்ட குச்சியைச் சொருகி வைப்பார்கள். ஆனால், அம்மாவுக்கு இந்தப் பாத்தியில் இத்தனையாவது வரிசையில் இந்த விதை முளைக்கவில்லை என்பது துல்லியமாகத் தெரியும். மண்ணின் ஒவ்வொரு அசைவும் அம்மாவுக்கு அத்துப்படி. ஒருமுறை அம்மாவின் அப்பா என்னிடம் சொன்னார், “ஒங்க அம்மாளுக்கு நெலத்தோட ரேகை எல்லாமே அத்துப்புடிடா தம்பி” என்று. அந்த வார்த்தையின் அர்த்தத்தைப் பலமுறை கண்ணாரப் பார்த்திருக்கிறேன். 

ஏழாம் நாள் தண்ணீர் வைக்கும்போது அப்பா உடனிருந்ததால் அம்மாவுக்கு வேலைப்பளு ஒன்றும் தெரியவில்லை. அடுத்த முறை தண்ணீர் வைக்கும் பதினைந்தாம் நாள் அப்பா உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட, நாங்களும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டோம். அம்மா தானே டீசல் எஞ்சினை ஸ்டார்ட் செய்து, டீசல் வாங்கிவர ஆள்பிடித்து அனுப்பி, ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் போவதை உறுதிப்படுத்தி தனியொரு ஆளாக நின்று நீர் பாய்ச்சினார். தண்ணீர் வைத்த கையோடு செடிகளுக்கு யூரியா அடியுரம் வைப்பதற்கு ஒரே ஒரு ஆளை துணைக்கு வைத்துக்கொண்டு இரண்டு ஏக்கர் நிலம் முழுவதற்கும் அரைநாளில் உரம் இட்டு முடித்தார். அடுத்தடுத்த நாட்களில் களைவெட்ட ஆட்களுக்கு சொல்லி, ஆட்களுக்கு டீ, வடை வாங்கி வருவதில் இருந்து, சரியாக வெட்டப்படாத களைகளைத் தேடித் தேடி தானே வெட்டியது வரை பணி குவிந்து ஏற்படும் வலியில், ”வெலா எலும்ப கழட்டி எட்டத்துல எறிஞ்சிடலாம் போல்ருக்குடி யம்மா..“ என அடிக்கடி சொல்வாள். ஆனால் மறுநாளே வளர்ச்சியடைந்த செடிகளைப் பார்க்கும்போது வலிகள் இருந்ததே அம்மாவுக்கு மறந்துபோய்விடும்.

”பருத்திச் செடிய பாக்குறப்ப பால்குடி புள்ளைவோல பாக்குறமேறி இருக்கு.. ஒடம்பு வலியாவுது ஒன்னாவுது” என்பார். தொண்டையில் எச்சில் திரண்டால்கூட அந்த ஈரத்தையும் பருத்தி வேரில்தான் துப்புவாள் அம்மா.

தினமும் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திலேயே வயலுக்குச் சென்றுவிட வேண்டும் இல்லையென்றால் கால்நடைகள் பருத்தியில் வாய்வைத்து பட்ட கஷ்டங்களையெல்லாம் மென்று தின்றுவிடும். மாடுகளை மேய விட்டுவிட்டு ஆலமரத்தடியில் துண்டை விரித்து கண்ணயர்ந்தோ, கோவில் மண்டபத்தில் ஆடுபுலி ஆட்டம் ஆடியபடியோ, ஈச்சம் பழம் பொறுக்கவோ மேய்ப்பர்கள் சென்றுவிட்ட கவனிப்பற்ற நேரத்தில் வயலில் இருக்கும் பலனை நோக்கி நாக்கை நீட்ட முனையும் கால்நடைகளை நான்கு புறத்திலிருந்தும் குரல்வளை கிழிய சத்தம் எழுப்பி ஓடி ஓடி விரட்ட வேண்டும். அப்படி ஓடும்போது நீர்முள்ளுக்கும், நெருஞ்சி முள்ளுக்கும் உள்ளங்காலின் இரத்தக்காவு கொடுக்க வேண்டியிருக்கும். 

இது தவிர பருத்தியின் மிகப்பெரும் எதிரிகள் புழுக்களும் பூச்சிகளும்தான். இலை நிறத்திலேயே இருக்கும் புழுக்களும், இளஞ்சிவப்பு நிறப் பூச்சிகளும் பருத்தியை அழிக்கக்கூடியது. இதற்குத் தெளிப்பான் முறையில் ரோக்கர் மருந்து அடித்த பிறகும்கூட இவற்றின் அட்டகாசம் முற்றிலுமாகக் குறையாது அதிலும் வயல்வெளிகளைச் சுற்றிலும் மரங்கள் இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். எங்கள் வயலைச் சுற்றிலுமிருந்த நுணா, வேலி கருவை, பூவரச மரங்களால் ஏகப்பட்ட பூச்சிகள் பருத்திக்கு வரத்துவங்கின. பருத்திக்கு வந்த துயர் எங்கள் அம்மா மீது படர்ந்தது வாழ்க்கையில் எங்களுக்கு விழுந்த பெரும் அடி! பூச்சியடித்த செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவுக்கு வலது கரத்தில் ஊசி குத்துவதைப் போலத் தோன்ற அந்த இடத்தை அப்போதைக்குத் தேய்த்துவிட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். 

முதல்நாள் சாதாரண பூச்சிக்கடிதான் என்று கடிபட்ட இடத்தில் உப்புக்கரைசலைத் தேய்த்தும் தண்டிப்பு குறையாததால் தேங்காய் எண்ணெயில் குழைத்த மஞ்சள், சுண்ணாம்பு என வீட்டு வைத்தியத்திலெல்லாம் கட்டுப்படாததால் உள்ளூர் மாடி டாக்டரின் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொள்ள வீக்கம் குறைந்தது. ஆனால், நாள்பட நாள்பட கடித்த இடத்தில் அரிப்பு அதிகரிக்கத் துவங்கியது. அரிப்பென்றால் நிறைசூலியின் வயிற்றில் ஏற்படும் நமைச்சலைப் போல நூறு மடங்கு அரிப்பு, ஆயிரம் சொரசொரப்பான புழுக்கள் உடல் முழுதும் ஒரே நேரத்தில் ஊர்வதைப் போன்ற அசௌகரியம் சொறிந்த நகங்களில் குருதித்தடம் படும்படியாகச் சொறிந்துகொள்வார் அம்மா. அதே நகம் உடம்பில் பட்டு அந்த இடத்தில் நமைச்சல் அரிப்பாக உருமாறும், மீண்டும் வேறொரு இடம். இப்படி நாளடைவில் உடல் முழுவதும் தோல் தடித்தும், செதிலுதிர்ந்தும் படர்தாமரை போல மேனியெங்கும் பரவத் தொடங்கியது. சிலர் அக்கி என்றார்கள், சிலர் படை என்றார்கள். பார்ப்பவர்கள் எல்லாம் வைத்தியர்கள் ஆனார்கள்.

வீட்டு வைத்தியம், பலனின்றிப் போகவே தோல் வியாதிக்கு நாட்டு மருந்துதான் உகந்தது என்று சிலர் சொன்னதன் பேரில் சீர்காழியில் ஒரு நாட்டு மருத்துவரிடம் சென்றார்கள். கத்திரிக்காய், கருவாடு, பால் விட்ட காபி, டீ, மீன் என அரிப்பு ஏற்படுத்தும் எதையும் உணவிலிருந்து தவிர்த்தார்கள். நாட்டு மருத்துவர், உடல் முழுவதும் பூசிக்கொள்ள ஒரு எண்ணெயும், உணவுக்கு முன்- பின் சாப்பிட மாத்திரை உருண்டைகளும் கொடுத்தார். அவர் கொடுத்த மருந்து எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. மாறாக, கோடை வெயிலில் அலைச்சலே அம்மாவுக்கு மேலதிகத் துன்பத்தைக் கொடுத்தது. அதும் வரும் வழியிலேயே அப்பாவிடம் ஆத்திரமாக வார்த்தைகளில் வெடிக்கும்.   

“நல்ல ஆசுபத்திரிக்கு அழைச்சிக்கிட்டுப் போனா காசு செலவாயிடும்னு சும்மா பேருக்கு எதுக்கு இப்புடி அலைய வச்சி என்னை லோல்பட வைக்கிற?”

அன்றைக்கு இனி நாட்டு மருத்துவம் வேண்டாம் என்று முடிவுசெய்தார் அப்பா. மூன்று மாதத்தில் பருத்திக்காய் வெடிக்கத் துவங்கி பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்தது. தன் இயலாமையையும் மீறி அம்மா வயலுக்கு வந்தாள், “செடியில வெடிப்பு காயி ஒன்னு உடாம எடுங்கடி அம்மாளுவோளா.. ஒங்களுக்கு புண்ணியமா போவும்” என்று வரப்பில் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருப்பார்.

வயல் வேலை நடந்துகொண்டிருக்கும் போது அரைமணி நேரம் சேர்ந்தார் போல் அம்மாவால் ஓரிடத்தில் ஓய்வாக உட்கார முடியாது. மனம் கேட்காமல் தானும் இறங்கி ஒவ்வொரு செடியிலும் பார்த்து பஞ்சு எடுத்து மடியில் கட்டிக்கொள்வார். பஞ்சு எடுத்தபின் அடுத்த நான்கு மாதத்துக்கு அடுப்பெரிக்க பருத்திக் குச்சிகள் கிடைத்தன என்றாலும் அடுப்படிக்குச் செல்வது அம்மாவுக்குக் கொடுங்கனவாகவே இருந்தது.  

சமைக்கும்போது அடுப்பின் அனல் உடலில் பட்டாலே வியர்வையுடன் அரிக்கத் துவங்கிவிடும். சமைத்து முடிப்பதற்குள் நெருப்பில் நின்று வந்தவளாகத் துடிப்பார். காபியோ, சாப்பாடோ கேட்டுவிட்டு, “ஏன்தான் கேட்டோமோ?” என்றாகிவிடும். வேண்டாம் என்று சொல்வதற்கு எங்களுக்கும் அப்போது அத்தனை மனமுதிர்ச்சி இல்லை. புடவை மறைத்த இடங்களைத் தவிர கைகளிலும் கழுத்திலும் காலிலும் கழுத்திலும் இருப்பதைப் பார்ப்பவர்களின் கேள்விகள் எல்லாவற்றையும்விட உச்ச வேதனையாக இருக்கும் அம்மாவுக்கு. 

அம்மாவின் இந்த நிலையைப் பார்க்கையில் ஊர்க்காரர்களும் உறவினர்களும் அருவருப்பாக முகத்தை வைத்துக்கொள்வார்கள். எங்கள் அத்தையின் மாமியார் இறந்துபோனார். அந்த இழவுக்குச் சென்றிருந்தபோது இறந்தவருக்கு அருகில் அத்தை உள்ளிட்ட நெருக்கமான உறவுப்பெண்கள் வட்டமிட்டுக் கூடி ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். அம்மாவும் அந்தக் கூட்டத்தில் அழுவதற்குச் சென்றதும் அம்மாவைத் தொட்டு அழவேண்டி வருமென, துக்க வீடென்றுகூடப் பாராமல் ஒவ்வொருவராக விலகிப் போனார்கள். அடிக்கடி அந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லித் துடிப்பார். இதற்காகவே அம்மா ஊரில் உறவில் நடக்கும் எந்த விசேஷங்களுக்கும் போவதில்லை. தவிர்க்க முடியாது செல்ல வேண்டியிருந்தால் பேருந்து பயணத்தில் வியர்வைக் கசகசப்பு, வெக்கை எல்லாம் சேர்த்து அரிப்பு அதிகமாகிவிடும். ஒரு கட்டத்தில் கையில் எது கிடைத்தாலும் அதைக்கொண்டு சொறிந்துகொள்வார். இராத்திரியில் உறக்கத்தின் நடுவில் ‘பரக்..ப்ரக்’ என்ற சத்தம் கேட்கும். அம்மா விசிறி மட்டையைக்கொண்டு சொறிந்தபடி உறக்கமின்றிக் கிடப்பாள். கிட்டத்தட்ட விடியும்போதுதான் உறக்கமே வரும்.

அன்றும் அதேபோல வீங்கிய கண்களுடன், உடல் சோர்வோடு தாமதமாக எழுந்த அம்மா நேரமாகிவிட்டதை அறிந்து பதறி எழுந்து சமைக்கத் தொடங்கினாள். முற்பகல் பதினோரு மணிக்குச் சாப்பிட உட்கார்ந்தார் அப்பா. குழம்பை ஊற்றிச் சாதத்தைப் பிசைந்து வாயில் வைத்தவருக்கு உப்பு, காரம் எதுவுமின்றி இருக்க, காலால் குழம்புக் கிண்ணத்தை உதைத்துவிட்டபடியே, ”வாயில வைக்க யோக்கித மயிரு இல்ல.. த்த்தூ..” என்று துப்ப.. அரிகால் படிக்கு அருகில் உட்கார்ந்திருந்த அம்மாவுக்கு உச்சந்தலைமுடியைப் பிடித்து வெடுக்கென இழுத்ததைப் போல ஆத்திரம் படீரென்று வெடித்தது. தன் பக்கத்தில் உருண்டு வந்து சிந்திக்கிடந்த குழம்போடிருந்த கிண்ணத்தைத் தூக்கிச் சுவரில் ஓங்கி அடித்தாள் அம்மா. குழம்பின் துளிகள் சுவரில் பட்டுத் தெறித்தன. “குந்த முடியாம குனிய முடியாம ரேகமே புண்ணாயி கெடக்குறன்.. கம்னேட்டி பயலே.. ருசிபசியா ஆக்கிப் போடுலன்னா உன் திமுற என்கிட்ட வந்து காட்டுற? ஒடம்பு சரியில்லன்னு நான் படுத்துட்டா பச்சத்தண்ணி மொண்டு குடுக்க வழிய காணும்.. என் மேல கொழம்பயா தூக்கி அடிக்கிற?” என்று சொல்லியபடி சோற்றுப் பானையைத் தூக்கித் தெருவில் போட்டாள். எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் இருந்து சத்தம் கேட்டுவந்து எட்டிப் பார்த்தார்கள் ஜனங்கள். அம்மாவை எத்தாக உதைக்க வேண்டுமென்று தோன்றினாலும் அம்மாவின் கோபாவேசத்தைப் பார்த்த அப்பாவுக்கு உடல்நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஒருநாளும் இல்லாமல் அன்றிருந்த அம்மாவை இவ்வளவு கோபத்துடன் அவர் பார்த்ததே இல்லை. 

ஒருநாளில் இரண்டுவேளை குளிக்கும் வழக்கமுடையவர் அம்மா. குளியல் என்றாலே மிகுந்த பிரயாசையுடன் குறைந்தபட்சம் ஐந்து அன்னக்கூடை குளிர்ந்த தண்ணீரை மேலே ஊற்றிக்கொண்டு நீராடுவார். உடம்பு முழுக்க இப்படி ஏற்பட்டதிலிருந்து குளிப்பது குறைந்துபோனது. அப்படியே குளித்தாலும் பட்டும் படாமல் வெந்நீரை ஊற்றிக்கொள்ள நேர்ந்தது. குளிக்கும்போது அரிப்பு இருந்து சொறிந்த இடத்தில் தோல் வழண்டு பெயர்ந்துவிடும். உடலைத் துடைக்கும்போது புண்ணில் ஊசி குத்துவதாக வலி உயிர்போகும். இதனாலேயே பல நாட்கள் குளிக்காமலேயே இருந்தார் அம்மா. 

நாட்டு மருத்துவத்தில் நம்பிக்கையிழந்ததால், மயிலாடுதுறையில் தோல்நோய் நிபுணர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார் அப்பா. 

தினமும் கைநிறைய மாத்திரைகள், ஊசி, ஆயின்மெண்ட் என மருந்தும் கையுமாகவே இருப்பார் அம்மா. சில நாட்களில் அம்மாவுக்கு உடலில் பல இடங்களிலும் செதில்கள் பெயர்ந்து பரவலாக இருந்தது. அந்த இடங்களில் இருந்து நிணநீர் வடியத் தொடங்கி புண்ணாகிப் போனது. டாக்டரிடம் விசாரித்ததில் புண்ணாகி நீர் வடிந்தால்தான் முற்றிலும் குணமாகும் என்று கூறிவிட்டார். கோடையின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க அம்மாவின் உடல் முழுவதும் இரணமாகிப் போனது. இரவில் மின்சாரம் நின்று போனால் அம்மா பெருங்குரலெடுத்துக் கத்துவாள். நாங்கள் திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்து எழுந்துகொள்வோம். எரிச்சல் அதிகமாக அதிகமாக, புரண்டுப் புரண்டு கத்தும் அம்மாவைப் பயத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம். தம்பிகள் என்னைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். வலி தாங்காத அம்மா கத்திக் கதற, சின்ன தம்பி அரண்டு அழத் தொடங்கிவிடுவான். அம்மாவின் சத்தம் சற்று வடிந்து கண்ணை இழுக்கும்போது நடு ராத்திரியில் திடீரென மறுபடியும் கேவல் ஒலி காதைக் கிழிக்கும். “சொக்காயி என்னை இப்புடி இது பாடாப் படுத்துதேடி சொக்காயி.. என் ஒடம்பு ரணத்த பாத்துமா ஒனக்கு மனம் எறங்கல… பாக்க கண்ணு இல்லாம போயிட்டாடி ஒனக்கு?” என்று தெருவாசலைப் பார்த்துக்கொண்டு முகத்தில் ஓங்கி அடித்துக்கொண்டு ஆத்திரம் கொப்பளிக்கக் கத்துவார். பார்க்கும் எங்களுக்கு அச்சம் அடிவயிற்றைச் சுருட்டி உள்ளிழுக்கச் செய்யும்.  

காலையில் நாங்கள் எழுந்து பார்க்கும்போது உறங்கிக்கொண்டிருப்பாள் அம்மா. எங்களைப் பள்ளிக்கூடம் கிளப்புவது, சமைப்பது என அப்பாவே எங்களைப் பார்த்துக்கொண்டதால் அம்மாவுக்கு அடுப்படியில் இருந்து சற்றே விலகியிருக்க முடிந்தது. நீர் வடிந்து கொழகொழவென புண்ணான இடங்களில் துணிபட்டால் மேலும் வலிபொறுக்க முடியாமல் அந்நாட்களில் அப்பாவின் வெள்ளை வேட்டியைப் போர்த்தியே அம்மா படுத்திருப்பார். வீட்டுக்குள் ஒருவித வீச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பா எங்களைக் கொல்லைப்புற அடுப்புக்குப் பக்கத்திலேயே இருத்தி சாப்பிடச் செய்வார். அடுத்தடுத்து கொல்லைப்புறத்திலேயே அப்பாவும் நாங்களும் படுத்துறங்கத் துவங்கினோம். ஒரு கட்டத்தில் வீட்டுக்குள் நுழைந்தாலே, “வெளில போங்கடா.. வெளில போங்கடா” என்று அம்மா கையில் கிடைத்ததை எடுத்து எங்கள் மீது வீசிக் கடுமையாகக் கத்துவாள். 

சோழச்சக்கர நல்லூரில் கண்டக்டர் விசில் அடித்ததும் உணர்வுவந்து திடுக்கிட்டு எழுந்தேன். கன்னங்களில் கண்ணீர் கோடாக ஓடியிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் அம்மா குலதெய்வம் படத்திற்கு முன் எதுவுமே பேசாமல் நீண்ட நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அம்மாவின் அமைதி எங்களின் சமநிலையைக் குலைப்பதாக இருந்தது. அன்று முழுவதும் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தது மேலும் பதற்றமடையச் செய்தது.

இரத்தப் பரிசோதனையின் முடிவு என்னவாக வரும் என்ற குழப்பம் மறுநாளிலிருந்து அம்மாவின் மனதில் நெடுநெடுவென வளரத் தொடங்கியது. நாளுக்கு நாள் அழுதழுது முகம் வீங்கியது. “யாரு வுட்ட வாசாக்கோ.. எவ வயித்தெறிச்சலோ என் காலடிய சுத்துதே.. இன்னொருத்தவங்க கைய எதிர்பாக்காம வாழனும்னு நெனப்பனே என் கையா கரஞ்சி போவுனும்? என் குடும்பம் கேப்பாரு பாப்பாரு இல்லாம பொய்டுமே” என்று மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள் அம்மா.

அப்பா அம்மாவிடம் வந்து, “தொழுநோய் ஆஸ்பத்திரிதான் அது. அதுக்காக ஒனக்கு அப்புடி இருக்கும்னா நெனைக்கனும்? எம்மானோ எடத்துல வைத்தியம் பாத்துட்டோம். யாரக் கேட்டாலும் அந்த ஆஸ்பத்திரிய சொன்னாங்க.. கடவுளு மேல பாரத்தப் போட்டுட்டு வைத்தியம் பாப்போம். எல்லாம் சரியா போயிடும்” என்று சொன்னதில் அம்மா சற்று மனச்சமாதானம் அடைந்தாள்.

கொல்லைப்புறத்தில் தனியே அமர்ந்திருந்தேன். இரண்டாவது தம்பி வந்தான். எப்போதும் அம்மாவின் அருகில் தூங்குகிறவன். அம்மா சோறூட்டி விட்டால் சாப்பிடுகிறவன். அம்மாவுக்கு இப்படி ஆனதில் இருந்து ஏக்கம் பீடித்துப் போயிருந்தான்.

“பெரியவனெ, அம்மாவுக்கு எப்பதான்டா இதல்லாம் சரியாகும்?” என்று கேட்டான். “சீக்கிரமா சரியாயிடும்டா”. சொல்லும்போதே உள்ளூர ஆஸ்பத்திரியில் பார்த்த முகங்களும், கரங்களும் நினைவில் எழுந்தன. அம்மாவும் அப்படி இருப்பதைப் போல பிம்பம் மண்டைக்குள் தோன்றும்போதெல்லாம் தலையை உதறிக்கொண்டேன். 

அம்மாவுக்குப் பூரணமாக குணமானால் குடும்பத்தோடு பழனிக்கு நடந்தே வருவதாக அப்பா வேண்டிக்கொண்டார். குலதெய்வத்திடமும் ஊர்ப் பிள்ளையாரிடமும் தினமும் காலையில் எழுந்து நானும் தம்பிகளும் வேண்டிக்கொள்வோம்.

அன்றைக்கு நெடுநாட்கள் கழித்து அம்மா எங்கள் எல்லோரையும் உட்கார வைத்து சாதத்தில் குழம்பு ஊற்றி உருண்டை பிசைந்து சாப்பிடக் கொடுத்தார். இடையில் அம்மாவின் கையால் சாப்பிடாமல் மூன்று மாதம் அப்பா பரிமாறியே சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். மூன்று மாதத்திற்கு முன் அம்மாவைப் பார்க்க வந்த உறவுக்காரக் கிழவி ஒருத்தி அம்மாவைப் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணிடம், “இந்தக் கையால மாவரைச்சு, இந்தக் கையால சமையல் செஞ்சு இந்தப் புள்ளைவளுக்கு போடுறாளே.. அதுவோளுக்கும் அப்புடி ஆயிட்டுதுன்னா என்னாடியம்மா பண்ணுவா.. கொஞ்சமாவது ரோசன வேண்டாம் ஒரு குடுத்தனக்காரிக்கி?” என்றிருக்கிறார். இந்த விஷயம் அம்மாவுக்கு எட்டியதும் அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினாள். பின் கண்களைத் துடைத்துக்கொண்டு, “என் கையால செஞ்சி என் புள்ளைவோளுக்கு எதுவும் ஆவாது. என் மனசறிஞ்சு யாருக்கும் எந்த கெடுதியிம் பண்ணுனவ இல்ல நான்.. என் புள்ளைவோளுக்கு ஒன்னும் ஆவாது மகமாயி.. என் புள்ளைவோளுக்கு எதும் ஆவக்கூடாது” என்று தேம்பினாள். 

மறுநாள் செவ்வாய்க்கிழமை அப்பாவும் அம்மாவும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றார்கள். தையல்நாயகி சந்நிதி முன் நின்று அம்மா அப்பாவிடம், “சாமிய கும்புட்டுட்டு நேரா அந்த ஆஸ்பத்திரிக்கு போயிடுவோமா?” என்றார்.

“இன்னும் அஞ்சி நாளு இருக்கே.. அஞ்சி நாள் கழிச்சிப் போவோம்” என அப்பா சொல்ல, ”முடிவு என்னாவா வேணும்னாலும் இருக்கட்டும். இந்த அஞ்சி நாளு நான் அங்கியே இருந்துக்கிறேனே.. அந்த டாக்டரம்மா கிட்ட சொல்லிட்டு அங்க இருக்குற செடி கொடிக்கி தண்ணி ஊத்தி.. கூட்டிப் பெருக்கிக்கிட்டு.. குடுக்கறத தின்னுகிட்டு இருந்துக்கிறேனே.”

அதுவரைக்கும் எந்த நிலையிலுமே அழாத அப்பா முகத்தை மூடிக்கொண்டு அழுதார். அம்மா அதற்குப் பிறகு அப்பாவிடம் கேட்கவில்லை.

தூய இருதய மருத்துவமனைக்கு அடுத்த வாரம் சென்றோம். சில வெளிநாட்டு மருத்துவர்கள் வந்திருந்தார்கள். பூச்சிக்கடியால் உண்டான தோல் வியாதிக்கு அப்பாவிடம் ஆங்கிலத்தில் ஏதோ பெயர் சொன்னார்கள். சிகிச்சை துவங்கியது. அம்மா இதுநாள் வரைக்கும் கட்டிக்கொண்டிருந்த பூனம் புடவைகளையோ, பாலியஸ்டர் புடவைகளையோ இனி ஒருபோதும் கட்டக்கூடாது என்று டாக்டர்கள் அம்மாவிடம் அறிவுறுத்தினார்கள். 

மூன்று நாட்களுக்குப் பிறகு அம்மாவுக்கு அப்பா நான்கு புதுப்புடவைகள் எடுத்து வந்திருந்தார். அம்மா அந்தப் புடவைகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஊசி போடுவதற்காக உள்ளே நுழைந்த செவிலி, ”என்ன ஸாரி மா அது?” என்று கேட்க, அதற்கு அப்பா “சுத்தமான பருத்திப் பொடவ பாப்பா” என்று அவரிடம் பதில் சொன்னார். பிறந்த குழந்தையின் தலைமுடியைப் போல மிகுந்த மென்மையுடன் இருந்த புடவைகளைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, எதையோ நினைத்து புடவையில் முகம் புதைத்து கதறி அழத்தொடங்கினாள்.

36 comments

iniththan June 25, 2021 - 2:36 pm

சிறப்பானதொரு கதை. வாழ்த்துக்கள் செந்தில் ஜெகன்நாதன். நன்றி தமிழினி….

Karthick Pugazhendhi June 26, 2021 - 1:01 am

கண்ணைக் கலங்கடிக்கிற உணர்வோட்டமான எழுத்து! பிரமாதம் பிரமாதம்…

வாசு June 26, 2021 - 6:15 am

தமிழ் நிலத்தின் சிறந்த கதை சொல்லி ஒருவரை இந்தக் கதை அடையாளம் காட்டி இருக்கிறது. வாழ்த்துகள்

முருகப்பன் July 1, 2021 - 8:23 am

கிராமங்களில் வாழும் பெண்கள் குடும்பம், விவசாயம், கணவனின் அதிகாரம், குழந்தைகளின் தேவை, சமையல் என காலை கண் விழித்தது முதல் உறங்கச் செல்லும் வரையயிலான ஓய்வறியா உழைப்பு, கதையிம் ஒவ்வொரு நகரிலும் ஓடுகின்றது. கதையாசிரியருக்கு வாழ்த்துகள்.

Muthusubramanian S June 26, 2021 - 9:56 am

அருமை. நீண்ட நாளுக்குப்பிறகு நல்லதொரு வாசிப்பு

ஸிந்துஜா June 26, 2021 - 11:17 am

திறமையாகவும் கூர்மையாகவும் செதுக்கப்பட்டிருக்கும் எழுத்து. வாழ்த்துகிறேன்.

உமா June 26, 2021 - 2:05 pm

ரொம்ப நெகிழ்ச்சிய மனசில் பதிய வச்சுடுச்சு செந்தில் , வாழ்த்துகள் தம்பி❤️

Saranya June 26, 2021 - 3:31 pm

மிக அருமை…
நான் என்னை அந்த பையனாக நினைத்து கொண்டேன்.அம்மாவை மருத்துவமனையில் தனியாக விட்டு வந்த மாதிரி இருக்கு. கதை முடிந்ததா? அவுங்களுக்கு சரி ஆனதா? மனம் கனக்கிறது.

அகிலன் June 26, 2021 - 4:34 pm

நோயின் வலி நோவறிந்தவரே அறிவர். படிப்பவர் மணமெங்கும் வலியைக் கடத்தும் கதை. யதார்த்தத்தின் உச்ச வெளிப்பாடு. வாழ்த்துகள்!

Ganesh Kumar June 26, 2021 - 4:43 pm

It’s a good writing flow & story

Dhakshina Moorthy June 27, 2021 - 4:30 pm

அற்புதமான கதைங்க செம….

வளநாடு சேசு June 27, 2021 - 8:28 pm

பருத்திக் காடு, பேருந்துப் பயணம், அவளது அடுக்களை என எல்லா இடங்களிலும் அம்மாவைப் பார்த்துக் கொண்டே வருகிறேன். மருத்துவமனையின் ஓர் அறையில் பருத்திப் புடவையில் முகம் புதைத்து அழத் தொடங்கிய அம்மாவினைப் பார்க்கிற போது, ஏனோ மனம் தாளாமல் துடிக்கிறது.

நல்ல உருவாக்கம். வாழ்த்துகள் செந்தில் ஜெகந்நாதன்.!
கோகுலுக்கு நன்றி..

Packirisamy June 28, 2021 - 8:08 pm

இந்த கதையின் மூலம் உங்கள் அம்மாவிடம் நான்
பேசிய அந்த நாட்கள். என் கண் முன்னே வந்து சென்றது .அருமை அன்னா.

பெரியவன் ஜவகர் June 28, 2021 - 4:02 pm

அற்புதம்..இயல்பான நடையில் உவமைகளோடு வார்த்தை ஜாலம் புரிந்துள்ளார்..வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதாலேயே இன்றைய தலைமுறை பலவகையில் வாழ்வியலை படிக்கமுடியாதவர்களாக ஆகிவிட்டனர்..மழையை ரசிக்கவும் தென்றலை உணரவும் வெயிலின் அருமை புரியவும் எனக்குள்ள புத்தக வாசிப்பே காரணம்..அதை மீட்டெடுக்க இது போன்ற கதைகள் இன்னும் நிறைய இவர் எழுத வாழ்த்துகள்..!!

ushadeepan June 29, 2021 - 7:22 am

அம்மாவைப்பற்றி எத்தனையோ கதைகள் வந்திருக்கின்றன.எல்லாமும் படித்து முடித்தவுடன் மனதை என்றவோ செய்து கொண்டகருக்கும்.ஆனால் இந்தக் கதை உள்ளத்தைப் பிழிந்து எடுத்துவிட்டது. அவ்வளவு கஷ்ட நிலையிலும் அவர்களின் மனதில் ஊன்றிச் செழித்திருக்கும் நன்னெறிகள்…எப்படியேனும் சொஸ்தப்படுத்திவிட வேண்டும் என்று அலையும் தந்தை, அம்மாவின் உடல்நிலை,நோவு கருதி மனதுக்குள் அழுது துடிக்கும் மகன்கள், அத்தனை நோவிலும் தன்வேலையில் சுணங்காது கடமையாற்றும் தாய், தெய்வம் நம்மைக் காப்பாற்றும்,எல்லாத் துயரங்களிலிருந்தும் மீள்வோம் என்று கோயில் கோயிலாய் சென்று செய்யும் இறை வழிபாட்டு நம்பிக்கை, நெல்லுக்கு பதில் பருத்தி போட்டு ஒன்றுக்கு மூன்று காசு பார்த்து கடன் அடைக்கவும், சாவதற்குள ஒரு வீடு சொந்தமாக்கவும்,அந்தப் பணத்தை வைத்து மனைவிக்கு வைத்தியம் பார்த்து குணமாக்கிவிடலாம் என்கிற அசையாத நம்பிக்கை கொண்ட தந்தையும், ஏழ்மையே வாழ்க்கையாகிவிட்ட வீடுகளில் கோபமும் தாபமும் சர்வ சகஜம் என்பதை இயல்பாய் உணர்த்தும் காட்சிகளும்…இவையெல்லாவற்றையும் மீறிய குடும்பப் பாசமும் நெஞ்சை உருக்கி நிலை தடுமாற வைத்து விடுகின்றன. எனக்கு என் வாழ்க்கையின இளமைக்காலச் சம்பவங்களும்,தாய் தந்தையர் பட்ட கஷ்டங்களும்,வீட்டின் வறுமையும்,தரித்திரமும், இறை நம்பிக்கை அற்றுப் போகும் அளவுக்கான தொடர்ச்சியான ஊழ்வினைகளும் அடுக்கடுக்காய் ஞாபகம் வந்து என்னை உலுக்கி எடுத்துவிட்டன. கண்ணீரோடேயே நான் படித்த கதை. இக்கதையும் உண்மைச் சம்பவமாயிருப்பின் அவர்கள் ஒரு காலப் பொழுதில் நல் நிலையை எய்துவார்கள். சக்கரங்கள் நிற்பதில்லை…

விக்னேஸ்வரி சுரேஷ் June 29, 2021 - 9:27 am

தெளிந்த நீரோட்டம் போன்றதொரு எழுத்து. திரு.செந்தில் ஜெகன்நாதனுக்கு வாழ்த்துகள். நன்றி, கோகுல்.

கலையரசன் June 29, 2021 - 12:54 pm

என் அம்மாவிற்கும் சிறு வயதில் இலங்கையில் ஏதோ வண்டு கடித்து விட்டது….அது பிற்காலத்தில் 50 வயதில் அதன் ஆக்ரோசத்தை காட்டி ஆட்டு ஆட்டு என வாட்டி எடுத்து விட்டது என் அம்மாவை….
பாக்காத மருத்துவமில்லை போகாத கோயிலில்லை…
கண்டவரெல்லாம் சொல்லும் மருந்தை போட்டோம்…குணமாகும் திரும்பவும் கெதிக்கும்…இதன் பக்க விளைவு கிட்ணி பழுதடைந்து விட்டது…
பின் சில மாதங்கள் சில நேரங்களில் மனப்பிரழ்வு ஏற்படும்..,எங்களையே மறந்து புலம்பிக் கொண்டிருப்பார்…பின் ஒரு இருண்ட நாளில் இயற்கை எய்தினார்….

இக்கதை நிசமான கதை… மனதை குழைத்து விட்டது….
யாருக்கும் போல நோய் வந்து விடாக் கூடாது…

விஜயராமன் June 29, 2021 - 1:08 pm

இந்த கதையில் வரும் சம்பவங்களில் 90 சதவீதம் என் குடும்பத்தில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த தொகுப்பு என்னை என் கடந்த காலத்திற்கு இழுத்து சென்று விட்டது

T.Joe June 30, 2021 - 5:54 am

Story super

Rabiya Sirajdeen June 30, 2021 - 12:03 pm

ம்…நோவினையை விட உதாசினங்களால் ஏற்படும் வேதனையையும் மன உளைச்சலையும் தத்ரூபமாக காட்சிப்படுத்திட்டிங்க..
தீர்க்க முடியாதது எதுவும் இல்லை.. என்னும் நம்பிக்கை ஒளியை ஊட்டும் டாக்டரின் வலிமையான வரிகள்..ஒளிமையாக எதிர்க்கொள்ள வைக்கும் சிறப்பான சிந்தனை வரிகள் அருமை… ????

க.அருண் June 30, 2021 - 7:21 pm

தாயின் அழுகுரலும்
தந்தையின் பரிதவிப்பும்
அண்ணனின் அரவணைப்பும்
தம்பியின் எதிர்பார்ப்பும்
விவசாயத்தின் தோலுரிப்பும்
நோயின் விரிவாக்கமும்
தூய இருதயமும் பரிசுத்த வார்த்தையுடைய மருத்துவமனையும் மனசாட்சியில்லாத சுற்றமும் உறவும்
இறைநம்பிக்கையும்
இல்லற கோபதாபங்களையும்
படம்பிடித்து காட்டுகிறது
மனதை பதம்பார்த்து நிற்கிறது

V Chandrasekaran June 30, 2021 - 8:53 pm

அற்புதமான சிறுகதை ஒரு சிறு குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வை இயல்பாக எழுதி இருக்கிறீர்கள்.

Ammu Raghav June 30, 2021 - 9:28 pm

அம்மாவின் வலிகளை வார்த்தைகளில் கடத்தும் வலிமையான எழுத்து. ஒரு நல்ல சிறுகதையை வாசித்த திருப்தியான உணர்வைக் கொடுத்தது. வாழ்த்துகள் செந்தில்?

செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” - ஒரு பார்வை » Vimarsanam Web July 1, 2021 - 3:07 pm

[…] ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான செந்தில் ஜெகன்நாதனின்  “மழைக்கண்” சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் […]

சூர்ய பிரசாத் July 2, 2021 - 12:34 pm

அருமையான சிறுகதை. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். பேரன்புடன் சூர்யா (மயிலாடுதுறை).

Ilayabharathi July 2, 2021 - 12:58 pm

தாயின் அவழ நிலை, வைத்தீஸ்வரன் கோவிலில் சொன்ன அந்த ஒரு வார்த்தை அப்பாவின் மனதை துண்டு துண்டாக்கியது போன்றே என்னுடைய மனதும் கனத்தது,உன்னுடைய வரிகளில் பிரமித்தேன், கதையின் முடிவு என்னமோ ஏதோ என்று எண்ணினேன்,மகிழ்ச்சி அருமையான பதிவு!,ஒவ்வொரு தாயும் நினைக்கக்கூடிய நினைவுகள், தன் குடும்பத்தை சுற்றியே காணப்படும் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்.தாய்மையே என்றும் முதன்மை,உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்லை ,மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Manimozhi lingam July 7, 2021 - 2:43 pm

கடைசி வரியைப் படிக்க இயலவில்லை
கண்ணீர் மறைத்தது.

மிகச் சிறப்பு பா
வாழ்த்துக்கள்

S.Senthil Kumar July 9, 2021 - 4:33 pm

அற்ப்புதமான சிறுகதை ஆசிரியர் டெல்டா பகுதியை சார்ந்தவர் போல எங்கள் ஊர் வட்டார வழக்கு கதைக்கு வழுவுட்டுகிறது. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து உழைப்பே பிரதானமாக பாவித்து வாழும் மனிதருக்கு இவ்வளவு துயரம் எதனால் என்பதை இந்த கதை ஒவ்வொருவர் யும் யோசிக்கவைகிறது.

செந்தில் ஜெகன்நாதனின் “மழைக்கண்” - சிறுகதை ஒரு பார்வை » Vimarsanam Web July 12, 2021 - 11:05 am

[…] ஜூன் 2021- ஆம் இதழில் வெளியான செந்தில் ஜெகன்நாதனின்  “மழைக்கண்” சிறுகதை குறித்து அம்மு ராகவ்-வின் […]

Kasturi G October 18, 2021 - 10:02 pm

Very well written story on Hansen’s disease.
one comforting fact is that there has a a huge reduction in the incidence of the disease in India. I am making this observation as a person who have worked with stalwarts in the field of Leprology during the period 1971 to 1973 as part of reserarch team at JIMPER , Pondicherry where there was a ongoing programme on finding ways and means of controlling the spread of the disease and also finding a pathway to discover a vaccine with United States Publilic Health services funded PL-480 research programme on “Role of Arthropodes in the transmission of Leprosy”.

A vaccine developed by A I M S , New Delhi named MIP is said to be generally effective. Notable Leprologist with whom i am assoicated with Dr Balasubramanian , Dr B S Bedi [ JIPMER], Dr Sankar Manja , Sister Mary Regina of Rawathan Kuppm Leprosy centre, Pondy and Dr Claire Vellut a spinster Leprologist from Belgium working at Polambakkam centre [ near Madurantakam ]
Good luck to the author.
As a story it is good .
Thanks

Sugesh Shankaralingam November 6, 2021 - 5:08 pm

சிறப்பான கதை.
சிறந்த கதையாடல்.
கதையின் களத்திற்கே அழைத்துச்செல்கிறது.
கதையின் விவரங்கள் அருமை

Geetha Karthik netha March 12, 2022 - 7:20 pm

வார்த்தையே வரல…. 🙂

Comments are closed.