பாலகுமாரனின் உடையார் நாவலில் ஒரு அழகான இடம் உண்டு. ராஜராஜன் இறந்து விடுகிறான், தந்தையிடம், சற்றே பிணக்கு கொண்ட ராஜேந்திரன், இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வருகிறான். அங்கே அந்தப் பிணக்கைப் பற்றி நேரடியாக எதுவும் சொல்லாமல் ராஜ ராஜனின் மனைவி, பஞ்சவன் மாதேவி பாத்திரத்தின் மூலம் அதை கொணர்ந்திருப்பார் பாலா. அதில், பஞ்சவன் மாதேவி, ராஜேந்திரனிடம் கேட்கிறாள், “அப்பனே , இந்த வீட்டுக்கு நீ மூத்தவன் ஆனாயா” என்று, ராஜேந்திரன் “இல்லை அம்மா இந்த வீட்டுக்கும் நாட்டுக்கும் அவரே என்றும் மூத்தவர்” என்று உடைந்து அழுகிறான். தமிழகத்தின் இந்த இரு மாபெரும் மன்னர்களுக்கிடையேயான உறவு, எப்போதும் சுமூகமாக இருந்ததில்லை என்ற ஊகம் உண்டு. அதை உருசுப்படுத்த நம்மிடம் மேலதிகத் தகவல்கள் இல்லை. ராஜராஜன் நீண்டகாலம் இளவரசுப் பட்டத்தில் இருந்தே ஆட்சிக்கு வந்தவன். ராஜேந்திரனுக்கும் அப்படியே வாய்த்தது. ராஜேந்திரன், இளவரசனாக இருந்த காலகட்டத்தில், ராஜ ராஜனுக்கும் அவனுக்குமிடையே எந்த வகையான உரையாடல்கள் இருந்தன என்பதெல்லாம் நமக்கு தெரியவே தெரியாது. இவர்கள் என்றில்லை, மிகப் பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள், ஏன் உலக அளவிலேயே கூட அப்படித்தான். பாபர் நாமாவில் பாபர், ஹுமாயூனுக்கு சில அறிவுரைகள் வழங்குகிறார் என்று படித்த ஞாபகம் உள்ளது.

Hadrian Statue